31.10.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) 2

காட்சி: 2

பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
அம்பு என்கின்ற அம்புஜம் - பத்மநாப சாஸ்திரிகளின் மனைவி
நந்து - மகன்
பிந்து - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து - மருமகள் (நந்துவின் மனைவி)
கல்யாணத் தரகர்


(மாலை நேரம். சுவர் கடிகாரம் ஆறு முறை ஒலித்து அடங்குகிறது. அவசரம் அவசரமாக உள்ளே நுழையும் நந்து ஹாலில் டி.வி. பார்த்து கொண்டிருந்த தன் தாய் அம்புஜத்திடம் பேசுகிறான்.)

நந்து: அம்மா! அந்த புரோக்கர் மாமா வந்திண்டிருக்கார். நான் வீட்ல இல்லேன்னு சொல்லிடு. நான் மேலே பெட்ரூம்ல இருக்கேன். அந்த கழுத்தறுப்பு பிராமணன் போனதும் வரேன். (மாடியேறி ஓடுகிறான்)

அம்பு: (சிரிப்புடன்) அப்பனாட்டம் சரியான பயந்தாங்கொள்ளி.

பத்து: (மாடியிலிருந்து இறங்கி வருகிறார். கையில் வாக்கிங் ஸ்டிக்) ஏன்டி என் தலையை ஏன் உருட்டறே? நான்தான் பயந்தாங்கொள்ளி, ஒத்துக்கறேன். நீ உன் புள்ளய தைரிய சிகாமணியா வளர்த்திருக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு ...
உன் புள்ள எதுக்கு பிசாசைக் கண்டா மாதிரி ஓடறான்? ஏதாவது கடன்காரன் துரத்திக்கிட்டு வரானா? அந்த விஷயத்துல அவன் உன்னை மாதிரிதான். எங்கெல்லாம் கடன் கிடைக்குதுன்னு கேளு, புட்டு புட்டு வைப்பான். கடன் கார பய மவன். இப்படியே போனா மஞ்சக்கடுதாசி தான்.. நான் வாக்கிங் போயிட்டு வரேன். உனக்கெதாவது வாங்கணுமா?

(வாசல் வரை போனவர் வாசல் மணி ஒலிக்க, திரும்பி மனைவியைப் பார்க்கிறார்.)

பத்து: கடன்காரன் தான் போலிருக்குது. என்ன சொன்னான் உன் பிள்ளையாண்டான்? வீட்ல இல்லேன்னு சொல்ல சொல்லியிருப்பானே?

அம்பு: முதல்ல யாருன்னு பாருங்கோ. கொஞ்சம் விட்டா பேசிண்டே போவேளே? அந்த கல்யாணத் தரகாராயிருந்தா நந்து வீட்ல இல்லேன்னு சொல்லி அனுப்பி வைங்கோ.

(பத்மநாபன் கதவைத் திறக்கிறார். கல்யாணத் தரகர் அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு ஹாலில் நுழைகிறார்)

தரகர்: தள்ளுங்காணும். உங்க வீட்டு காலிங்பெல்லை அடிச்சே என் நடு விரல் தேஞ்சிடுச்சு. ஆத்துல நந்து இருக்கானா? இருக்கானா என்ன இருக்கானா? அதான் தெருக்கோடிலருந்து அவன் வீட்டுக்குள்ளாற ஓடுறத பாத்துட்டுதானே பின்னாலேயே ஓடி வரேன். கூப்பிடுங்கோ. மாடிக்கு ஓடிட்டானா?

(தரகர் மாடியேற முயல இடையில் புகுந்து மறிக்கிறார் பத்மநாபன்.)

பத்து: ஓய் எங்கே போறீர்? விட்டா அடுக்களை வரையிலும் போயிடுவீர் போல. நில்லும்யா. என்ன விஷயம், எதுக்கு நந்துவைத் தேடறீர்?

தரகர்: அதெல்லம் உம்மண்டை சொல்லப்படாது ஓய். அப்புறம் இந்த ஆம் ரெண்டுபட்டு போயிடும். எனக்கெதுக்கு அந்த பொல்லாப்பு? நீர் நந்துவைக் கூப்பிடும்.

(சிந்து சமையலறையிலிருந்து வெளியே வந்து தரகரைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல முயல்கிறாள். தரகர் துள்ளிக் கொண்டு அவள் பின்னே ஓடுகிறார். பத்மநாபன் தன் மனைவியைப் பார்த்து என்ன நடக்கிறது என்று சைகையால் பேசுகிறார். அம்புஜம் எனக்கென்ன தெரியும் என்று தலையை அசைக்கிறாள்)

தரகர்: ஏண்டிமா இது நோக்கே நல்லாருக்கா? நீயும் நந்துவும் சேர்ந்துண்டு இந்த ஏழை பிராமணனை இந்த பாடு படுத்தறேளே. நீ இந்தாத்துக்கு வரணும்னு எத்தனைப் பாடுபட்டிருக்கேன்? இப்படி அநியாயமா ஏமாத்தறேளே?

பத்து: ஓய் தரகரே இங்க வாரும். என்ன இது என்னென்னவோ பேத்தரீர்? எங்காத்து மருமக உம்மை ஏமாத்தறாளா? என்னய்யா சொல்றீர்?

தரகர்: உம்மாண்டை சொல்ல முடியாதுய்யா. நீர் நந்துவைக் கூப்பிடும். சொல்றேன்.

(மாடியைப் பார்த்தபடி உரத்த குரலில்)

நந்து, இன்னும் அஞ்சு எண்றதுக்குள்ளே நீ இறங்கி வரலைனா...(வலது கையை உயர்த்தியபடி) ஒண்ணு, ரெண்டு, மூணு...

(நந்து தட தடவென படிகட்டில் ஓடி வருகிறான். தரகரை அணுகி அவர் வாயைப் பொத்துகிறான்.)

நந்து: மாமா. என்னு இது சின்ன பசங்களாட்டமா, ஒண்ணு, ரெண்டுன்னுட்டு. டிரஸ் மாத்த போயிருந்தேன். வராமலேயா போயிடுவேன். இப்ப சொல்லுங்கோ. உங்களுக்கு என்ன வேணும்?

பத்து: நந்து என்னடாயிது? முதல்லே தரகரைப் பாத்துட்டு ஓடி ஓளிஞ்சே. இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ண போனேன்னு சொல்றே? என்ன பித்தலாட்டாம் இது?

நந்து: நீங்க சும்மா உங்க வேலைய பாத்துண்டு போங்கோ. இது எனக்கும் தரகர் மாமாவுக்கும் இடையில உள்ள ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங். நாங்களே தீத்துக்குறோம். நீங்க வேற இடையில புகுந்து குட்டைய குழப்பாதீங்கோ. என்ன மாமா சொல்றேள்?

தரகர்: அதானே. நீங்க எதுக்கு இதுலே மூக்கை நுழைக்கிறேள்? எங்கேயோ கிளம்பிண்டிருந்தேளே. போய்ட்டு வாங்கோ.

பத்து: எப்படியோ போங்கோ. நான் போறேன். அம்புஜம் நீயும் வரயா? அப்பிடியே பார்த்தசாரதி கோயில்ல இன்னைக்கி வாரியாரோட யாரோ சிஷ்யனாம், நல்லா பேசராராம், நம்ம நாராயணன், அதான்டி அந்த சொட்டத் தலையன் நம்பியோட மருமகன், சொன்னான். வாயேன். எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்.

அம்பு: (டி.வியிலிருந்து கண்ணெடுக்காமல்) நீங்கோ போயிட்டு வாங்கோ நான் கோலங்களை மிஸ் பண்ணமுடியாது. இன்னைக்கு அபி எப்பிடி அந்த தாதாவை டீல் பண்றான்னு காமிப்பான்.

பத்து: (சலிப்புடன்) ஆமா, இந்த ஆத்துலருக்கறவாளை டீல் பண்றதுக்கே நோக்கு தெரியலை. அதுல சீரியல்ல இருக்கறவா எப்படி டீல் பண்றான்னு பாத்து என்ன ஆவப் போறது? நல்ல அம்மா, நல்ல குடும்பம். (மருகளைப் பார்த்து) ஏம்மா சிந்து நோக்கு கறி கா ஏதாச்சும் வேணுமா? லிஸ்ட் தந்தா போறாது, பணமும் தரணும். எங்கிட்ட தம்படி பைசா இல்லை.

(சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து தன் கணவனைப் பார்க்கிறாள். என்ன சொல்ல என்று சைகையால் பேசுகிறாள். நந்து தலையை வேண்டாம் என்று அசைக்கிறான். சிந்து தன் மாமனாரைப் பார்த்து வேண்டாம் என்று தலையை அசைக்கிறாள்)

பத்து: அடடா. டைலாக்கே இல்லாம பாலசந்தர் சினிமால வர்றா மாதிரின்னாயிருக்கு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது? கறி கா ஒண்ணும் வேணாம். அவ்வளவு தானே. அதுக்கு ஏன் நீ நந்துவைப் பாத்து டான்ஸ் ஆடறே?

சிந்து: (தன் மாமனாரைப் பார்த்து தன் முகத்தை சுளிக்கிறாள்) நான் வேணாம்னு தானே சாடை காண்பிச்சேன். நான் டான்ஸ் ஆடறேன்னு சொல்றேளே மாமா (கண்ணைக் கசக்குகிறாள்).

அம்பு: ஏன்னா? உங்களுக்கு எத்தனை சொல்லியிருக்கேன் அவாளுக்கிடையில நீங்க மூக்கை நீட்டாதீங்கோன்னு. விவஸ்தையேயில்லைன்னா. சித்தேயிருங்கோ, நானும் வரேன்.

(அம்புஜம் பரபரவென்று எழுந்து உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வெளியே வந்து கணவருடன் வாசல் வழியே வெளியேறுகிறார்கள்)

சிந்து: அப்பாடா, நிம்மதி. (தன் கணவனைப் கண்ணால் சாடை செய்கிறாள். நந்து உடனே அவளை நோக்கி ஓடுகிறான். இருவரும் தரகருக்கு கேளாவண்ணம் உரையாடுகிறார்கள்) ஏன்னா உங்களுக்கு ஏதாவது இருக்கா? தரகர் மாமாவை ஏன் இழுத்தடிக்கிறேள்? கொடுக்கறதா பிராமிஸ் பண்ணதை குடுத்துருங்களேன். இல்லாட்டி ஏதாவது ஏடாகூடமா செஞ்சி வைக்க போறார். (சரி, சரி என்று நந்து தலையாட்டிக் கொண்டு தரகரைப் பார்க்கிறாரன்.)

நந்து: மாமா நான் எவ்வளவு செய்யணும்னு சொல்றேள்?

தரகர்: நந்து நீ கல்யாணம் முடிஞ்சவுடனே கொடுத்திருந்தியானா அஞ்சாயிரத்தோட போயிருக்கும். நீ கொடுக்கலைன்னு மாத்திரமில்லை, என்னை பலமுறை அலைய வச்சிட்டே. அதனால வட்டி, என்னோட மனக் கஷ்டம் எல்லாம் சேத்து ஐயாயிரத்து ஐநூறு குடுத்திரு நான் சந்தோஷமா போயிடறேன். என்ன சொல்றே?

நந்து: ஏன் மாமா, இது ரொம்ப ஓவரா தெரியலை?

தரகர்: பேசிட்டேயிருந்தேனா மீட்டர் ஏறிண்டே போகும் சொல்லிட்டேன்.

நந்து: என்ன மாமா ஒரேயடியா எகிர்றேள்?

தரகர்: பின்ன என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா? உனக்கு என் தந்திரத்தால கல்யாணமே நடந்துது. மறந்துட்டியா?

நந்து: ஐயோ மாமா, சத்தம் போடாதேள். பிந்து வர்ற நேரம்.

(அப்போது பிந்து உள்ளே நுழைகிறாள். பேயறைந்தால் போல் நந்துவும் சிந்துவும் விழிக்க இருவரையும் பார்த்து முறைக்கிறாள்)

பிந்து: என்னடா அண்ணா பிசாசை கிசாசைப் பாத்தியா, இப்பிடி பேய் முழி முழிக்கறே? (உரக்க சிரிக்கிறாள்)

சிந்து: (சுதாரித்துக்கொண்டு, பிந்துவை முறைக்கிறாள்) என்ன பிந்து அண்ணான்னு கொஞ்சம் கூட மரியாதையில்லாம, அதுவும் வேத்தாள் நிக்கறச்சே..

தரகர்: அம்மா சிந்து, நான் வேத்தாளில்லே, இந்த ஆத்தை பொறுத்தவரை. இவா ரெண்டு பேரையும் சிறிசுலேருந்தே நேக்கு பழக்கம். என்னடா நந்து? கேட்டுண்டேயிருக்கே. சொல்லேன்டா.

(நந்து தன் மனைவியைப் பார்த்து உள்ளே போ என்று சைகைக் காண்பிக்கிறான். சிந்து உள்ளே போகிறாள், மூவரையும் முறைத்து பார்த்தவண்ணம்.)

பிந்து: என்னடா அண்ணா, மன்னி பார்வையாலேயே என்னை எரிச்சிருவா போல. சொல்லி வை, நான் அதுக்கெல்லாம் அசர்ற ஆளில்லேன்னு. (தரகரைப் பார்க்கிறாள்) என்ன மாமா உங்களுக்கும் நந்துவுக்கும் ஏதாவது பிசினஸ்சா? அன்னைக்கி என்னடான்னா தெரு முனைல ரெண்டு பேரும் காரசாரமா பேசின்டிருந்தேள். இன்னைக்கி என்னன்னா வீட்ல யாருமில்லாத சமயத்துல அண்ணா-மன்னி கூட்டணியமைச்சு பேசிண்டிருக்கேள். அண்ணாவை நம்பாதீங்கோ, கவுத்துறுவான், சொல்லிட்டேன். (உள்ளே போகிறாள்.)

நந்து: (தரகரிடம்) மாமா நீங்க இப்ப போயிட்டு நாளைக்கு ஆபீஸ் பக்கம் வாங்களேன். நீங்க கேட்ட பணத்தைத் தந்துடறேன். கோவிச்சிக்காதீங்கோ. (உள்ளே போக முயற்சி செய்கிறான்)

தரகர்: பாத்தியா, சித்த நாழி முன்னாலதானே கேட்டேன். என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சியான்னு. ஞாயிற்றுக்கிழமைல எந்த ஆபீஸ் திறந்து வச்சிருக்கான்.

நந்து: (பின் தலையில் அடித்துக் கொள்கிறான்) சாரி மாமா. நாளைக்குன்னா மண்டே மாமா. இப்போ கூட குடுத்திருவேன். பிந்துக்கு மூக்குல வேத்துரும், அவளுக்கு தெரிஞ்சிடுச்சின்னா வேற விணையே வேணாம். ப்ளீஸ் மாமா இதான் லாஸ்ட்.

தரகர்: (நந்துவுக்கு மிக அருகில் சென்று) பர்சுல எவ்வளவு வச்சிருக்கே? நூறு, இருநூறு.. அத இங்க தள்ளு, மீதியை ஆபீஸ்ல வந்து வாங்கிக்கறேன்.

(நந்து மாடியைப் பார்க்கிறான். பிறகு பர்ஸை எடுத்து ஐந்தாறு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அதிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுக்க முயலுகிறான். தரகர் முழுவதையும் பிடித்துக் கொள்கிறார். நந்து விடாமல் அவர் கையைத் தன்னை நோக்கி இழுக்க இருவருக்கும் ஒரு மினி டக் ஆஃப் வார் நடக்கிறது. பிந்து கையில் டவலுடன் இறங்கி வருகிறாள் இதைப் பார்த்தவாறு..)

பிந்து: என்னடா அண்ணா? என்ன நடக்குது இங்கே? எதுக்கு மாமாவுக்கு பணம் குடுக்கறே? என்ன மாமா?

(நந்து கையை விலக்கிக் கொள்ள, முழு பணத்தையும் சட்டென்று தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். பிந்து இருவர் நடுவிலும் நின்று இருவரையும் மாறி மாறி பார்க்கிறாள்.)

தரகர்: நந்து, பிந்து (உள்ளே எட்டி பார்த்து) சிந்து நான் வரேன். (விட்டால் போதும் என்பதுபோல் விரைவாக வெளியேறுகிறார்)

(தரகர் போவதையே பார்த்துக் கொண்டிருக்கும் பிந்து அவர் போனதும் திரும்பி நந்துவைப் பார்க்கிறாள்)

பிந்து: இப்ப சொல்லு, எதுக்கு அவருக்கு பணம் குடுத்தே? அவர் கூட ஏதாவது பிசினஸ்சா? (கேலியுடன் சிரிக்கிறாள்) தரகர் கூட என்ன பிசினஸ் பண்ணமுடியும், தெரியாதா? நோக்கு இது தேவையா? மன்னிக்கு தெரியுமா, உன் பிசினஸ் விஷயம்? (உள்ளே திரும்பி, கையை குவித்து வாயில் வைத்துக்கொண்டு உரத்த குரலில் கூப்பிடுகிறாள்) மன்னி உங்க ஐடியா தானா இது?

நந்து: வேண்டாம் பிந்து, ஓவரா போகாதே. உன் வேலையைப் பாத்துண்டு போ (விரலை உயர்த்தி காண்பிக்கிறான்). எல்லாம் அப்பா குடுக்கற இடம். (சமையல் அறையை நோக்கி போகிறான்).

பிந்து: (அவன் பின்னாலேயே போகிறாள்) கோவிச்சிக்காதேடா அண்ணா சும்மா ஒரு தமாஷ¤க்குத்தானே சொன்னேன். இப்பிடி கோச்சுக்கறே? (டவலுடன் குளியறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறாள்)

(நந்து சமையல் கட்டில் நிற்கும் தன் மனைவி சிந்துவிடம் நெருங்கி சென்று அவள் தோளில் கை வைத்து தன்னை நோக்கித் திருப்புகிறான்.)

நந்து: ஏய், என்னாச்சி ஏன் உன் கண் கலங்கியிருக்கு? (சிந்துவின் கண்ணீரைத் துடைத்து விடுகிறான்) சீ லுசு. பிந்து சொன்னதுக்காக வருத்தப் படறியா? அவளை நான் பாத்துக்கறேன். நீ கவலைப் படாதே.

சிந்து: (நந்துவிடமிருந்து விலகிக் கொள்கிறாள்) தள்ளி நில்லுங்கோ. இதையும் உங்க தங்கை பாத்துட்டு ஏதாச்சும் சொல்லப் போறா. இருந்தாலும் உங்காத்துல அவளுக்கு ரொம்பத்தான் எடம் கொடுத்திருக்கேள். எங்காத்துல நான் ஒரு வார்த்தைப் பேசப்படாது, அப்பா வாயில போட்டனாம்பார். (நந்துவை நெருங்கி வந்து குரலை இறக்கி பேசுகிறாள்) என்னண்ணா இந்த தரகர் ஏதாச்சும் ஏடா கூடமா செஞ்சி வைக்கப் போறார். அவருக்கு குடுக்கறத குடுத்து தொலைச்சிருங்கோ. (குளியலறையைத் திறந்துக் கொண்டு பிந்து வெளியே வருவதைக் பார்த்துவிட்டு நந்துவைப் பிடித்து வெளியே தள்ளுகிறாள்) போய் அந்த ஹால்ல உக்காருங்கோ. மாமி வர்றதுகுள்ளே சமையலை முடிக்கணும்.

பிந்து: (தலையை துடைத்தபடி சமையலறைக்குள் நுழைகிறாள்) மன்னி காப்பி கிடைக்குமா?

சிந்து: (முறைப்புடன்) ஏன், நீயே போட்டுக்கயேன். எனக்கு ராத்திரி டிபனை முடிக்கணும். இந்தாத்துல தான் ஓரோருத்தருக்கு ஓரோரு டிபன்.

பிந்து: என்ன மன்னி கோபமா? நானும் அண்ணாவும் இப்படிதான் ஒருத்தரை ஒருத்தர் அப்பப்போ கலாய்ச்சிப்போம். அது மாதிரிதான் இன்னைக்கும். அதெல்லாம் அவனும் பெரிசா எடுத்துக்க மாட்டான், நானும் அப்படித்தான். உங்களுக்கு பழக்கமில்லாததாலதான் நீங்க ஃபீல் பண்றேள். ஓ கே. உங்களுக்கு கஷ்டமாயிருந்தால் நானே காப்பி கலந்துக்கறேன். அந்த டிகாக்ஷனை மட்டும் எடுத்துக் குடுங்க. (பிந்து கையை நீட்டுகிறாள்)

சிந்து: (பிந்துவின் கையைத் தள்ளிவிடுகிறாள்) சரி, சரி, நீ போய் ஹால்ல உக்கார். நான் கலந்து கொண்டு வரேன். (பிந்துவைப் பார்த்து புன்னகைக்கிறாள்).

பிந்து: தாங்க்ஸ். (ஹாலுக்கு போகிறாள். நந்துக்கு நேர் எதிர் சோபாவில் அமர்ந்து டி.வி.யை ஆன் செய்கிறாள்.)

நந்து: பிந்து, நீ மன்னிங்கற ரெஸ்பெக்ட் நீ குடுக்க மாட்டேங்கறேன்னு சிந்து ஃபீல் பண்றா. புரிஞ்சுக்கோ.

பிந்து: (டி.வி.யிலிருந்து கண் எடுக்காமல் பதில் சொல்கிறாள்) ஓகே, ஓகே, நான் மன்னிக்கிட்டே சாரி சொல்லிட்டேன். அம்மா எங்கே?

நந்து: அப்பாக்கூட பார்த்தசாரதி கோயிலுக்கு போயிருக்கா. நைனோ க்ளாக் ஆவும்னு நெனக்கிறேன்.

பிந்து: (ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கிறாள்) கோலங்களை விட்டுட்டு எப்படி போனா? ஆச்சரியமாயிருக்கே. (தொலைப் பேசி அடிக்கிறது. இருவரும் ஒருவரைப் பார்க்கின்றனர், ‘நீ எடு’ என்பது போல். சில நொடிகளுக்கு பிறகு, பிந்து எடுக்கிறாள்) ஹலோ, யாரு? ஒரு நிமிஷம். (ரிசீவரைப் பொத்திக்கொண்டு நந்துவைப் பார்க்கிறாள்) மன்னிக்குத்தான். கூப்பிடு. (ரிசீவரை பக்கத்து டேபிளில் வைத்து விட்டு சென்று சோபாவில் அமர்ந்து டி.வி. ஒலியைக் குறைக்கிறாள்)

நந்து: சிந்து உனக்கு ஃபோன். (உள்ளே திரும்பி உரக்க கத்துகிறான்.)

(சிந்து கையை சேலையில் துடைத்துக்கொண்டு வந்து ஃபோனை எடுக்கிறாள்.)

சிந்து: ஹலோ யாரு? ஹாய் அம்மா! எப்படியிருக்கே? நான் நல்லாயிருக்கேன்.

(பிந்து எழுந்து சமையலறைக்குள் போய் கலந்து வைத்திருந்த காப்பியை எடுத்துக் கொண்டு மாடியேறுகிறாள். சிந்து தொலைப்பேசியில் தொடர்ந்து பேசுகிறாள். நந்துவை அருகில் வரச் சொல்லி சிந்து சைகைக் காண்பிக்க நந்து எழுந்து அருகில் செல்கிறான்.)

நந்து: என்னவாம், என்ன சொல்றா?

சிந்து: (ரிசீவரை மூடிக் கொண்டு) எல்லாம் அந்த தரகர் விஷயம் தான். வீட்டுக்கு போன் பண்ணி காசு கேக்கறாராம். ஏதாவது பிரச்சினையான்னு அம்மா கேக்கறா. என்ன சொல்ல?

நந்து: (குரலை தாழ்த்தி பேசுகிறான்)பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு சொல்லு. காசு குடுக்க வேண்டாம். நான் மண்டே பாத்துக்கறேன். பிந்து வீட்ல இருக்கா, அப்புறமா பேசறேன் சொல்லிட்டு சட்டுன்னு வை. (மாடியை பார்க்கிறான்.)

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து

Image hosted by Photobucket.com
என் கற்பனையுலகத்துக்கு வருகைத் தரும் எல்லோருக்கும் என்னுடைய இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டி.பி.ஆர்.ஜோசஃப்

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)

நம்முடைய திருமணங்களில் மனப் பொருத்தம், குணப் பொருத்தம் என்பதை விட
ஜாதகப் பொருத்தத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கிற ஒவ்வொரு தோஷத்திற்கும் ஏதாவது விளைவுகளை கற்பித்துக்கொண்டு எத்தனையோ திருமணங்கள் தள்ளிப்போவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் இவற்றுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக, நகைச்சுவைக் கலந்து ஆராய முற்பட்டிருக்கிறேன். இது முழுமுழுக்க என் கற்பனை.

இச்சம்பவம் ஒரு பிராமணக்குடும்பத்தில் நடப்பதாய் எழுதப்பட்டிருந்தாலும் இது அந்த சமூகத்தினரையோ அல்லது வேறு யாரையுமோ குறி வைத்து எழுதப்பட்டதல்ல (இதை போலி டோண்டுவுக்கு கூறிக்கொள்கிறேன்) என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு ஐந்தாறு பதிவுகளுக்கு இந்நாடகம் தொடரும்.

(காட்சி -1)

பாத்திரங்கள்:

பத்து என்கின்ற பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
நந்து என்கின்ற நந்த கோபாலன் - மகன்
பிந்து என்கின்ற பிந்துளா - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து என்கின்ற சிந்துபைரவி - புது மருமகள் (நந்துவின் மனைவி)

(வீட்டின் முன் ஹாலில் அமர்ந்து நந்து ஹிந்து ஆங்கில தினத்தாளை வாசித்துக் கொண்டிருக்க அவனுடைய புது மனைவி சிந்து குளித்து முடித்த தலையுடன் ஆவி பறக்கும் காபியுடன் வந்து காபி டபராவைக் நந்துவிடம் கொடுக்கிறாள். ஹாலில் உள்ள நிலைக்கடிகாரத்தில் மணி எட்டு அடிக்கிறது.)

சிந்து: இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சிட்டு மசமசன்னு நிக்காம குளிச்சிட்டு வாங்கோ. உங்களோட தங்கை போய் பாத்ரூமுல நுழைஞ்சிட்டாள்னா அவ்வளவுதான். என்ன முறைக்கிறேள்? நான் தப்பா ஒண்ணும் சொல்லிடலையே.

நந்து: சீ சீ. நீ என்ன சொன்னாலும் கரெக்டாதான்டி சொல்வே. உன்னைப் போய் முறைப்பேனா? உனக்கு பின்னால நிக்கறாளே என் தங்கை, அவளைத்தான் முறைச்சிப் பார்த்தேன்.

(திடுக்கிட்டு திரும்பிய சிந்து தன் பின்னால் நின்றிருந்த பிந்துவின் மேல் மோத, பிந்து துள்ளிக் குதித்து பின் வாங்க, மாடியிலிருந்து அந்த கூட்டுக் குடும்ப தலைவர் பத்நாப சாஸ்திரிகள் இறங்கி வருகிறார்.)

பத்து: என்ன பிந்து மன்னிக் கூட காலங்கார்த்தாலயே போட்டியா? யம்மா சிந்து, நேக்கு காப்பி உண்டா. இல்லே எங்காத்துக்காரி எழுந்துக்கற வரைக்கும் காத்திருக்கணுமா?

பிந்து: அதெல்லாம் இருக்கட்டும். என்ன மன்னி காலங்கார்த்தாலேயே என்னை வம்புக்கு இழுக்கறேள்? ஆத்துல நுழைஞ்சி முழுசா ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள இங்க இருக்கறவங்களைப் பத்தி அவங்களுக்கு பின்னால கமெண்டா..

சிந்து: நான் உன் முன்னாலதானே நிக்கறேன். பின்னால பேசறேன்கறே?

(நந்து சிரிக்கிறான். பிந்து முறைக்கிறாள். பத்து முழிக்கிறார், விஷயம் புரியாமல்.)

பிந்து: என்ன ஜோக்கா? நல்லால்லை மன்னி சொல்லிட்டேன். டேய் அண்ணா, உன் ஆத்துக்காரிக் கிட்டே சொல்லிவை, என் கிட்டே மோத வேண்டாம்னு.

(பிந்து தோளில் டவலுடன் பாத்ரூம் நோக்கி போகிறாள்)

(பத்மநாபன் இறங்கி வந்து நந்து அமர்ந்திருந்த சோபாவில் முன்னாலிருந்த டீப்பாயில் அமர்ந்து நந்து படித்துக் கொண்டிருந்த பேப்பரின் பின்னாலிருந்த செய்தியை பெருங்குரலில் வாசிக்கிறார்.)

பத்து: “லாலு பிரசாத் இன்ட்ரடுயூசஸ் எர்த்தன் கப்ஸ் இன் Trains.” இது தேவையா, இல்லை தேவையாங்கறேன்! குடிச்சி முடிச்ச கப்பை பிளாட்பாரத்திலயே போட்டு வச்சிருவன்கள். போர வர்றவன்லாம் அதை மிதிச்சி காலை கிழிச்சிக்கிறதுக்கா? விவஸ்தைக் கெட்ட ஆளுங்கப்பா இந்த பொலிடிஷியன்ஸ். அதிலும் இந்த லாலு இருக்காரே..”

நந்து: அப்பா உங்களாண்டை எத்தனைத் தடவைச் சொல்லியிருக்கேன், ஒரு ஆள் பேப்பரைப் படிச்சிண்டிருக்கச்சே பின்னாலிருந்து படிக்காதேள்ன்னு. நீங்க சரியான...

பத்து: கம்ப்ளீட் பண்ணேன்டா. லூஸ்னு தானே சொல்ல போறே? சொல்லு. லூசு, டைட்டு.. என்ன வேணும்னாலும் சொல்லு. மனுஷன் ரிட்டையர்ட் ஆயிட்டா ஆத்துல ஒரு ரெஸ்பெக்ட்டும் கிடைக்காதுன்னு பிரஸ்டீஜ் பத்மநாபனே சொல்லியிருக்கார். நாப்பது வருஷம், அரசாங்க ஆபீஸ்லே குப்பையைக் கொட்டி ரிட்டையர்ட் ஆன இந்த பிட்சாத் ஹெட்கிளார்க் பத்மநாப சாஸ்திரிகள் எம்மாத்திரம்?

(மேலே தொடர்ந்து பத்திரிகையை வாசிப்பதில் குறியாயிருந்த தந்தையிடம் முழு பத்திரிகையையும் நீட்டுகிறான் நந்து)

நந்து: இந்தாங்கோ, நீங்களே படியுங்கோ. நான் ஆபீஸ்ல படிச்சிக்கிறேன். சிந்து என் பேன்ட், ஷர்ட் அயர்ன் பண்ணி வாங்கி வச்சிருக்கியா? நான் ஷேவ் பண்ணிட்டு வரேன். பிந்து வெளியே வந்ததும் கூப்பிடு.

(மாடியேறி போகிறான். சிந்து காலி டபராவை எடுத்துக் கொண்டு கிச்சன் பக்கம் போகிறாள்)

பத்து: (பேப்பரைப் பார்த்தவாறு முனுமுனுக்கிறார்) ஆமா, ஆபீஸ்ல பேப்பர் படிக்கறதைத் தவிர வேற என்ன பண்றேள்? (சிந்துவைப் பார்த்து) என்ன சிந்து, காப்பி கேட்டேனே கிடைக்குமா?

(மாடியேறிக்கொண்டிருந்த நந்து மாடிப் படியில் நின்று தன் தந்தையைத் திரும்பி பார்க்கிறான்)

நந்து: என்ன முனகுறேள்?

பத்து: (திடுக்கிட்டு தலையைத் தூக்கி நந்துவைப் பார்க்கிறார்) நோக்கு கேட்டுடுத்தா? இருந்தாலும் பாம்பு காதுடா நோக்கு. நான் முனகுனது சரிதானே.

நந்து: என்ன சரி? நீங்க முப்பது வருஷமா ஆபீஸ்ல செய்ததை சொல்றேளா? காலங்கார்த்தால... பேப்பரைப் படிக்கறத விட்டுட்டு வம்படிக்காதேள்.. (போகிறான்)

பத்து: சரிடாப்பா.. சிந்து காப்பி கேட்டேனே?

சிந்து: (சலிப்புடன்) இதோ கொண்டு வரேன்.

பத்து: ஹூம். இப்பவே சலிச்சுக்கறா. இன்னும் ரெண்டு மாசம் போனா என்ன செய்வாளோ? ஈஸ்வரா.. (செய்தித் தாளை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டு வாசிக்கிறார்)

சிந்து: (திரும்பிப் பார்த்து) நான் என்ன சொல்லிட்டேன்? காபி கேட்டேள். இதோ கொண்டு வரேன்னுதானே சொன்னேன்?

பத்து: (பேப்பரை விலக்காமல்) நான் உன்னை ஒண்ணும் சொல்லலையே.

சிந்து: அதானே பார்த்தேன். (உள்ளே போகிறாள்)

(தொடரும்)

29.10.05

சிறகுகள் முளைத்து..(சிறுகதை)

“அப்பா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தன் முன்னால் வந்து நின்ற மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார் ராகவன்.

“இப்பவா? சாயந்திரம் பார்க்கலாம்.” ராகவன் அலுவலகத்திற்கு புறப்படும் அவசரத்திலிருந்தார்.

“சாவி, டிஃபன் எடுத்து வை. டைமாயிருச்சி.” தன் மனைவி சாவித்திரி எப்போதும் போல் அன்றும் தாமதம் செய்துவிடக்கூடாது என்ற சிந்தனை அவருக்கு. ‘இன்னும் ஒரு வாரத்தில் கம்பெனியின் வருடாந்திர ஜெனரல் பாடி மீட்டிங் இருப்பதால் நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு. நாளைக்கு சீக்கிரமே வந்திடுங்க ராகவன்’ என்று நேற்று அவருடைய பொதுமேலாளர் அவரிடம் சொல்லியிருந்தார்.

இன்னமும் நின்றுக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, “எனிதிங் சீரியஸ் பிரசாந்த்?” என்றவாறு உடை மாற்றத் துவங்கினார்.

“யெஸ் டாட். இட் ஈஸ் சீரியஸ்.”

“சரி. சுருக்கமா சொல்லு.”

“டாட். நான் தனியா போக முடிவு செஞ்சிருக்கேன். ஆஃபீஸ் பக்கத்திலேயே ரூம் பாத்திருக்கேன்.”

ஷுவும் சாக்ஸ¤மாக கட்டிலில் அமர்ந்தவர் திடுக்கிட்டு நிமிர்ந்து மகனைப் பார்த்தார். “வாட்? என்ன சொல்றே?” என்றவர் அவனை மேலே பேசவிடாமல் கையை உயர்த்தி தடுத்தார். “ஒகே, ஓகே, இட் ஈஸ் சீரியஸ். சோ, சாயந்திரம் பேசலாம். லீவ் மி அலோன் நவ். ப்ளீஸ். எனக்கு இன்னைக்கி ஒரு முக்கியமான வேலையிருக்கு. ஐ டோன்ட் வான்ட் டு பி டிஸ்ட்ராக்டட்.”

பரபரப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்தவர் மனைவியைக் காணாமல் “சாவித்திரி நான் சாப்பாட்டை ஆஃபீஸ்ல பாத்துக்கறேன். எனக்கு நேரமாச்சு.” என்றவாறு மனைவியின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறி போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி ஸ்டார்ட் செய்து புறப்பட்டு போனார்.

தன் மகனின் இந்த முடிவுக்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை யோசித்து பார்க்க முடியாதபடி சாலையில் வழக்கத்திற்கும் கூடுதலாக வாகன நெரிசல் இருந்ததால் வாகனத்தை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

நாட்டின் பல பாகங்களிலும் கிளைகளுடன் பரந்து விரிந்திருந்த அந்த கம்பெனியின் சென்னை பிராந்திய அலுவலகத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு மிக அதிகளவிலான பொறுப்புகள் இருந்தன. அதுவுமல்லாமல் இன்னும் சிலநாட்களுள் நடக்கவிருந்த ஜெனரல் பாடி மீட்டிங்கின் பொறுப்பாளராக அவர் நியமிக்கப் பட்டிருந்ததால் அவருக்கிருந்த வேலைப் பளு இன்னும் கூடியிருந்தது கடந்த சில நாட்களாக.

அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில் பங்குகொள்ள வேண்டியிருந்ததால் வீட்டில் அன்று காலை தன் மகனுடன் நடந்த உரையாடலையும் மாலையில் அவனை சந்திப்பதாக சொன்னதையும் மறந்தே போனார்.

அன்று மாலை ஏழு மணியளவில் வீட்டிலிருந்து தொலைப் பேசி என்று அவருடைய உதவியாளர் அறிவித்த போதுகூட ‘அப்புறம் திருப்பி கூப்பிடறேன்னு சொல்லிடுங்கோ’ என்று மறுத்துவிட்டார். அவருடைய அந்த செயல் எத்தனை எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தபோகின்றன என்பதை அறியாதவராய்.

“ஓகே, ராகவன் இன்னைக்கி ராத்திரியெல்லாம் நாம உக்காந்தாலும் ஏ.ஜி.எம் வேலைகள் முடிய போறதில்லை. சோ, நாளைக்கு பார்க்கலாம். குட் நைட்.” என்று களைப்புடன் இரவு பத்து மணியளவில் பொதுமேலாளர் கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததும் அலுவலகத்திலிருந்த எல்லோரும் பரபரப்புடன் கிளம்ப ராகவனுக்கு அப்போதுதான் வீட்டில் அன்று காலையில் நடந்தவை நினைவுக்கு வந்தன. “மை காட் பிரசாந்தை மீட் பண்றேன்னு சொல்லியிருந்தேனே..” என்ற பரபரப்புடன் புறப்பட்டு அடுத்த அரை மணியில் தன் வீட்டையடைந்தார்.

காரை போர்டிகோவில் விட்டு விட்டு இறங்கியவர் வீட்டினுள் இன்னும் விளக்கு அணைக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். சாதாரணமாக அவருடைய மணைவி அவர் வரும் வரைக் காத்திருந்து அவர் கண்டதில்லை.

ஆனால் இன்றோ சாவித்திரி டைனிங் டேபிளிலேயே அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கைப்பெட்டியை சோபாவில் வீசியெறிந்த ராகவன் டைனிங் டேபிளை நெருங்கி மனைவியின் தோளைத் தொட்டார். திடுக்கிட்டு எழுந்த சாவித்திரி கோபத்துடன் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

“என்ன சாவி, ஏன் இன்னும் தூங்காம இருக்கே?”

“எப்பிடிங்க தூக்கம் வரும்? அதான் ஊர்ல இல்லாத ஒரு பிள்ளைய பெத்து வச்சிருக்கீங்களே?”

“இங்க பார் சாவி. எனக்கு பசி உயிர் போகுது. முதல்ல சாப்பாட்டை எடுத்து வை நான் கை கழுவிக்கிட்டு வரேன். முடிச்சிட்டு பேசலாம்.”

“ஆமாம். உங்களுக்கு உங்க சாப்பாடு, தூக்கம், இரண்டுமில்லேனா உங்க ஆஃபீஸ். வேற என்ன தெரியும் உங்களுக்கு?” முனுமுனுப்புடன் உணவு பரிமாறிய மனைவியைப் பொருட்படுத்தாமல் அவர் உண்டு முடித்து வாஷ்பேசினில் கை கழுவிக்கொண்டு சோபாவில் சென்றமர்ந்து மனைவியை அழைத்தார்.

“வா, இங்க வந்து உக்காரு. விஷயத்தை சொல்லு.”

“என்னத்த சொல்ல?” என்றவாறு சலிப்புடன் வந்தமர்ந்த சாவித்திரி கையிலிருந்த பேப்பரை அவர் கையில் கொடுத்தாள். “உங்க பிள்ளை லெட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு போயிட்டான். ஏங்கிட்ட கூட சொல்லிக்கலை.”

“நீ எங்க போயிருந்தே?”

“நான் எங்க போக? வீட்டுக்குள்ளாறத்தானிருந்தேன். நான் சமையல்கட்டுல இருந்தப்போ இந்த காய்தத்தை டைனிங் டேபிள்ல வச்சிட்டு போயிருக்கான்.”

“நீ ஏன் இதை உடனே எனக்கு போன் பண்ணி சொல்லலே?”

“சும்மாயிருங்க வயித்தெரிச்சலை கிளப்பாம. ஆறு மணிக்கு போன் பண்ணா உங்க பி.ஏ. எடுத்துட்டு ‘சார் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கார், இருங்க கூப்பிடறேன்’னு போனான். பிறகு வந்து நீங்க கூப்பிடுவீங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டான். என்ன மீட்டிங்கோ, என்ன எழவோ. வீடே பத்தியெரிஞ்சாலும் உங்க பாழாப்போன மீட்டிங் தானே உங்களுக்கு முக்கியம்.”

“சரி, சரி ஒப்பாரி வைக்காதே. என்ன எழுதியிருக்கான் இந்த லெட்டர்லே நீ படிச்சியா?” என்றார் லெட்டரைப் பிரித்தவாறே. பிறகு தான் தன்னுடைய கேள்வி முட்டாள் தனமானது என்பதை உணர்ந்தார்.

“என்னத்தைப் படிக்கிறது? அவன் நான் படிக்கக்கூடாதுன்னு தானே இங்கிலீஸ்லே எழுதியிருக்கான்? எல்லாம் திமிரு. என்னைக்காவது என்னை அவன் கால் தூசுக்கு மதிச்சிருக்கானா? எல்லாம் நீங்க குடுக்கற எடம்.”

“இங்க பார் சாவி. மணி இப்பவே 12.00. நீ போய் படு. காலைல பேசிக்கலாம். எங்க போயிருப்பான். காலைல நான் போகும் போதே சொன்னான் ‘நான் தனியோ போகப்போறேன்’னு. உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் ‘கம்பெனிக்கு பக்கத்திலேயே ரூம் பார்த்திருக்கேன்’னு சொன்னான். நாளைக்கு போன் பண்ணி பேசிக்கலாம். நீ போய் படு.”

“அது சரி. அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் திட்டம் போட்டீங்களா. நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கி. இதைப் புரிஞ்சிக்காம இவ்வளவு நேரம் மனசைப் போட்டு வருத்திக்கிட்டு... மகராசனா போய் தூங்குங்க. நீங்களாச்சி உங்க பிள்ளையாச்சி.. நான் எதுக்கு நடுவுல..” தூக்கக் கலக்கத்தில் தனக்குள்ளே பேசிக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கிச் செல்லும் தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் மாடியேறி தன் படுக்கையறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு படுக்கையை ஒட்டியிருந்த டேபிளிலமர்ந்து மகனின் கடிதத்தைப் பிரித்தார்.

‘டியர் டாட்..

நான் இன்று காலையில் உங்களிடம் சொன்னதைப் பற்றி யோசிக்க உங்களுக்கு இன்று முழுவதும் நேரம் கிடைத்திருக்காதென்று எனக்கு தெரியும். இன்னைக்கி மட்டுமல்ல டாட், என்னைக்குமே என்னுடைய உணர்ச்சிகளை புரிஞ்சிக்க உங்களுக்கு நேரம் கிடைச்சதில்லையே.

நான் காலேஜ் முடிக்கற வரைக்கும் என்னை ஹாஸ்டல்ல போட்டீங்க.. போட்டுட்டீங்க டாட்.. அதான் சரியான வார்த்தை. என்ன ஹாஸ்டல்ல சேர்த்தீங்கன்னு கூட என்னால சொல்ல முடியலை. போட்டுட்டீங்க, ஒரு பொருளைப் போடற மாதிரி - லைக் ஸ்டோரிங் குட்ஸ் இன் எ குடெளன். என்னை நீங்க ஹாஸ்டல்ல இருந்த போது எப்பவாவது ஒரு நாள் சடங்குக்காக போன் பண்றது என்கிறதைத் தவிர வேற என்ன செஞ்சிருக்கீங்க?

நீங்க ஒரு அப்பாவா நான் கேட்காமலேயே என்னுடைய தேவைக்கும் அதிகமா பணத்தை மாசாமாசம் அனுப்பி வச்சீங்க. ஆனா அதுவல்ல நான் எதிர்பார்த்தது. பாசம் டாட், பாசம். நான் உங்களைப் பார்க்கணும்னு வீட்டுக்கு போன் பண்ணப்பல்லாம் நீங்க பம்பாய் போயிருக்கீங்க, கல்கட்டா போயிருக்கீங்கன்னுதான் அம்மா சொல்வாங்களே தவிர ஒரு முறைக் கூட நீங்க வீட்ல இருந்ததா நான் கேட்டதில்லையே. பாவம் அம்மா, அதனால தானோ என்னவோ ஏறக்குறைய ஒரு சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

போன அஞ்சாறு மாசமா நான் வீட்ல இருந்து அவங்கக்கிட்ட பட்ட பாடு இருக்கே ஹாஸ்டலே மேல் போலிருக்கேன்னு என்ன நினைக்க வச்சுருச்சு. சாரி, டாட். இனிமேலும் என்னால வீட்ல இருக்க முடியாதுன்னு தான் இந்த முடிவெடுத்தேன்.

நீங்க என்னைக்கு வேலைப் பளுவிலிருந்து விடுபடறீங்களோ அன்னைக்கு மறுபடியும் வீட்டுக்கு வர்றதைப் பற்றி யோசிக்கலாம். பை டாட்.

நீங்க காலைல எங்கிட்ட சொன்னதையே இப்ப நான் உங்கக்கிட்ட சொல்றேன் டாட், “ஜஸ்ட் லீவ் மி அலோன்.” என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணாதீங்க.

ஒன் மோர் திங் டாட். நான் நீங்க நினைக்கிறா மாதிரி சென்னையில இல்லே. அந்த வேலையை இன்னைக்கிதான் ரிசைன் பண்ணேன். நார்த்துக்கு போறேன் டாட். எங்கேன்னு கேக்காதீங்க. நானா எப்போ உங்களுக்கு சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்றேன். ஐ ஃபீல் லைக் எ ·ப்ரீ பேர்ட், லேர்னிங் டு ஃப்ளை. பை டாட். ஆல் தி பெஸ்ட்.. ஐ ஃபீல் ஸாரி ஃபார் மம். டெல் ஹர் தட் ஐ வில் ஆல்வேஸ் லவ் ஹர்.’

கடிதத்தைப் படித்து முடித்த ராகவன் பெருமூச்சுடன் அதை மடித்து டேபிளில் வைத்துவிட்டு லைட்டை அணைத்தார்.

படுக்கையில் படுத்து வெகு நேரம் உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தார்.

********************

27.10.05

திரை (சிறுகதை)

“என்ன ராமு டிசைட் பண்ணியிருக்கே?”

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ராமு திடுக்கிட்டு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.

“என்னடா கேட்டே?”

“இல்ல, ரொம்ப நேரமா விட்டத்தையே பார்த்துக்கிட்டிருக்கியே.. ஏதாவது முடிவு பண்ணிட்டயோன்னு கேட்டேன்.”

“இல்லடா. என்ன முடிவு பண்றதுன்னு தெரியாம குழம்பிப் போயிருக்கேன். நீயே ஒரு யோசனை சொல்லேன் முருகேஷ்.”

முருகேஷ் நண்பனைப் பார்த்து புன்னகைத்தான். “இதுல என்னோட யோசனை எதுக்குடா? நம்ம ஆஃபீஸ்லயே நீதான் சொலுஷன் எக்ஸ்பர்ட். நம்ம கணேசன் சார் கூட பல தடவை நீ சஜ்ஜஸ்ட் பண்ற முடிவைத்தான் எடுப்பாரு.. நீ என்னோட யோசனையைக் கேக்கறே?”

“அது வேற, இது வேறடா. ஆஃபீஸ் விஷயத்துல நம்ம மூளையை மட்டும்தான் இன்வால்வ் பண்றோம். நம்ம அறிவு, பயிற்சி, அனுபவம், ஃபாஸ்ட் ஹிஸ்டரி ன்னு எல்லாத்தையும் யூஸ் பண்ணி டிசிஷன் எடுக்கறோம். அதுல உணர்ச்சிகளுக்கு எந்த விதமான ரோலுமில்லை. ஆனா இது அப்படியில்லையே.. நான் எடுக்கற முடிவு என்னை மாத்திரமா பாதிக்கும்? என் குடும்பத்தையே பாதிக்குமே. கல்யாணத்துக்கு ரெடியா நிக்கற என் தங்கையோட வாழ்க்கையக்கூட பாதிக்க வாய்ப்பிருக்கே. அதான் யோசிச்சி, யோசிச்சி ஒண்ணும் பிடிபடாம.. போறும்டா இந்த வேதனை.. காதல், மண்ணாங்கட்டின்னு இந்த நாலு வருஷத்துல எனக்கு கிடைச்ச எல்லா வெற்றிகளையும் இன்னைக்கி நடந்த சம்பவம் ஒண்ணுமில்லாம ஆக்குனது மட்டுமில்லாம ஆஃபீஸ்ல எனக்கிருந்த மதிப்பையும் ரொம்பவும் பாதிச்சிட்டது முருகேஷ்” நண்பனின் குரலில் தெரிந்த நடுக்கம் முருகேஷை வெகுவாக பாதித்தது.

அவனுடைய நண்பர் குழுவிலேயே மிகத் திறமையான, அனுபவமிக்கவன் என்று பெயரெடுத்தவன் ராமு. பார்க்க சுமாராயிருந்தாலும், அவனுடைய அதிகப்படியான திறமை அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு அநேக பெண் நண்பர்களை ( அட்மைரர்ஸ் என்பதுதான் சரி) ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அப்படியொரு அட்மைரராக ராமுக்கு அறிமுகமானவள்தான் சுகந்தி. முருகேஷ¤ம் அவளும் ஒரே நேரத்தில் அந்த அலுவலகத்தில் மென்பொருள் டெவலப்பர்சாக சேர்ந்தபோது ராமுவின் டீமில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டார்கள். முதல் ஆறு மாதத்திலேயே ராமுவும் முருகேஷ¤ம் நல்ல நண்பர்களானார்கள் (ஒரே அறையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாயிருந்திருக்கலாம்).

ஆரம்ப முதலே சுகந்திக்கு ராமு என்றால் ஒரு ஹீரோவொர்ஷிப் இருந்ததை முருகேஷ் உணர்ந்திருக்கிறான். இது விஷயமாக முருகேஷ் அவனை அவர்களிருவரும் தனித்திருந்த மாலைப் பொழுதுகளில் கேலி செய்திருக்கிறான்.

அப்போதெல்லாம் ‘அதெல்லாம் உன் கற்பனைடா’ என்று ராமு ஒதுக்கிவிடுவான்.

முருகேஷ¤ம் சுகந்தியும் பயிற்சி முடிந்து வேறொரு ‘லைவ்’ ப்ராஜக்ட் டீமில் சேர்க்கப்பட்ட அன்று சுகந்தி “மிஸ்டர் ராமு, நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். வில் யூ பி ஃப்ரீ இன் தி ஈவ்னிங் டுடே?” என்று கேட்டபோது ராமுவால் தவிர்க்க முடியவில்லை.

அன்று மாலை அலுவலக நேரம் முடிந்து இருவரும் தனித்தனியாக புறப்பட்டு மெரீனா கடற்கரையில் சந்தித்தனர்.

வாரநாளானதாலும் மாலையுமில்லாமல் இரவுமில்லாத நேரமாயிருந்ததாலும் கூட்டம் வெகுவாய் குறைந்திருந்தது. இருவரும் காந்தி சிலையில் சந்தித்து பேசிக்கொண்டே மெதுவாய் நடந்தனர்.

சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு சுகந்தி தன் உள்ளத்திலிருப்பதை ராமுவிடம் சுருக்கமாகக் கூறினாள்.

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்ட ராமு ஒன்றும் பேசாமலிருந்தான்.

“என்ன ராமு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறீங்க?”

ராமு அவளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். “நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியலைங்க. அதான் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிக்கிட்டிருக்கேன். உங்கள நான் இதுவரைக்கும் ஒரு அலுவலக சக ஊழியராத்தான் பார்த்திருக்கிறேன். இப்போ திடீர்னு... இப்படியொரு எண்ணம் உங்க மனசுல ஏற்படுறதுக்கு நான் எந்த வகையிலாவது காரணமாயிருந்திருக்கேனான்னு யோசிச்சி பார்க்கிறேன். மே பி. ஐ டோண்ட் நோ. அப்படி ஏதாவது வகையில நான் காரணமாயிருந்திருந்தா ஐ ஆம் சாரி. இப்படிபட்ட ஒரு உறவை ஏற்படுத்திக்கற நிலையிலே நான் இப்போ இல்லை. என்ன மன்னிச்சிருங்க சுகந்தி. என்னை இதுக்குமேல ஒண்ணும் கேட்காதீங்க, ப்ளீஸ்.”

சுகந்தி இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

‘என்னிடம் என்ன இல்லை? பார்க்கப்போனால் இவன் எனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லை.’ அவளுக்கு சட்டென்று தன் மீதே கோபம் வந்தது. தன்னுடைய அழகால் கவரப்பட்டு அந்த அலுவலகத்திலேயே பலரும் தன்னுடைய நட்புக்காக முயற்சி செய்தும் அதை தவிர்த்திருக்கிறாள். ஆனாலும் இவனை அலுவலகத்தில் பார்க்கும்போதெல்லாம் தன் மனதில் ஏற்படும் ஒரு இணம் புரியாத உணர்வு.. இவனோடு பேசும்போதெல்லாம் தனக்கு கிடைக்கும் ஒரு சந்தோஷம்.. பலமுறை இந்த உணர்வுகளோடு அவள் போராடியிருக்கிறாள்.

ஆரம்பத்தில் இது ஒரு தற்காலிக உணர்வுதான் என்று அலட்சியப்படுத்த முயன்றிருக்கிறாள். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவனை ஒரு நாள் பார்க்கவில்லையென்றாலும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்தபோதுதான் அவனிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அவளுக்கென்று இருந்த ஒரே உறவான தாயும் கடந்த ஆண்டு மரித்தபின் உலகில் தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்த சுகந்தி ராமுவை சந்தித்த பிறகுதான் தன்னுடைய வாழ்வில் ஒரு அர்த்தத்தை உணர ஆரம்பித்தாள். தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திய உடனே அவன் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்வான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவனுடைய நிராகரிப்பை அவள் முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.

“உங்களுக்கு நேரமாகலையா சுகந்தி?”

தன் நினைவுகளில் ஆழ்ந்திருந்த சுகந்தி ராமுவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு ‘என்ன சொன்னீங்க’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருப்பதைப் பார்த்த ராமு ஒரு கணம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போனான். தன்னுடைய உள்ளத்திலிருப்பதை அவளிடம் எப்படி சொல்வது? ‘நானும் உன் மேல் அளவுக்கதிகமான அன்பை வைத்துவிட்டு இப்போது மறக்கமுடியாமல் தடுமாறுகிறேன் என்று எப்படி சொல்ல? எல்லாம் அந்த முருகேஷால் வந்த வினை. கடந்த மூன்று மாதங்களில் தினமும் ஒரு முறையாவது அவளைப் பற்றி அவனிடம் கூறாமலிருந்ததில்லை. ‘சுகந்திக்கு உன் மேல் பயங்கர மதிப்பு ராமு. நீ என்ன சொன்னாலும் அது அவளுக்கு வேத வாக்கு போலத்தான். நீ வேணும்னா ஏதாச்சும் சொல்லிப்பாரேன். அடுத்த நிமிஷமே அதை செஞ்சிட்டுதான் மறுவேலை பார்ப்பா. அப்படியொரு கண்மூடித்தனமான மதிப்பு.’ என்றான் ஒரு நாள்.

அப்போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் ‘போடா, நீயா ஏதாவது கற்பனைப் பண்ணிக்கிட்டு..’ என்று தட்டிக்கழித்துவிடுவான். ஆனால் நாளடைவில் சுகந்தியின் அமைதியான நடவடிக்கை, அவளுடைய அபிரிமிதமான கிரகிப்புத்திறன், எந்த வேலை கொடுத்தாலும் சட்டென புரிந்துக்கொண்டு கச்சிதமாய் முடித்துக்கொடுக்கும் சாமர்த்தியம் எல்லாம் அவனையுமறியாமல் அவளிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை.. தன்னுடைய வருமானத்தை மட்டுமே நம்பி ஊரில் காத்திருந்த தன் தாய், திருமண நிச்சயம் முடிந்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் தன்னுடைய திருமணத்திற்கான பணத்துடன் வருவான் என தனக்காகக் காத்திருக்கும் தன் தங்கை, தன்னையும் விட புத்திக்கூர்மையுடன் மேற்படிப்புக்கு தயாராய் நிற்கும் தன் +2 படிக்கும் தம்பி.. தன்னுடைய கடமைகளின் சுமை ராமுவை காதல், கல்யாணம் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் கட்டிப்போட்டிருந்தன. அதையெல்லாம் இவளிடம் கூறி புரியவைக்க முடியுமா? ‘காத்திருக்கும் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு வருகிறேன், காத்திரு’ என்று இவளிடம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே அவள் தயாராயிருந்தாலும் எத்தனைக் காலம் காத்திருப்பாள்? அவனுக்கே தெரியாமலிருந்த அந்த கால அளவை அவளுக்கெப்படி சொல்லி புரியவைப்பது? அதற்கு ஒரே வழி தன்னுடைய உணர்வுகளை அவளிடமிருந்து மறைப்பதுதான் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தான்.

ஆனாலும் இதோ இவளுடைய கண்ணீர் தன்னுடைய மன உறுதியைக் கறைத்துவிடுமோ என்ற அச்சத்தில் முகத்தை திருப்பிக் கொண்ட ராமு, “இல்ல, உங்க ஹாஸ்டல்ல நீங்க லேட்டா போனா ஏதாவது சொல்வாங்களேன்னுதான் கேட்டேன். நான் வேணா உங்களுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சிக் கொடுத்துட்டு போறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் மறுப்பதற்குள் அந்த வழியே வந்து ஆட்டோவை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பி பார்த்தான்.

அவள் ஒன்றும் பேசாமல் ஆட்டோவில் ஏறிக்கொண்டு டிரைவரிடம் “மைலாப்பூர் போங்க” என்றாள்.

சீறிக்கொண்டு புறப்பட்ட ஆட்டோ அந்திமாலை நேர வாகன நெரிசலில் கலந்து கரைந்து போகும்வரை பார்த்துக் கொண்டிருந்த ராமு ஒரு நீண்ட பெருமூச்சுடன் அருகிலேயேயிருந்த தன் அறையை நோக்கி நடந்தான்.

நேற்று தான் சொன்னதை சுகந்தி சரியாக புரிந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இன்று அவள் அலுவலகத்தில் நடந்துகொண்ட முறை.. இதை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய முடியாமல் குழம்பினான்.

“என்ன ராமு, flashback ஆ?”

திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு திரும்பிய ராமு, “ஆமாடா.. இந்த பொண்ணு இப்படி முட்டாள்தனமான காரியத்தை செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைடா.. நேத்து பீச்சிலே நான் சொன்னதைக் கேட்டுட்டு கோவிச்சிக்கிட்டு போனாலும், புத்திசாலிப் பொண்ணு, புரிஞ்சிக்குவான்னுதான் நெனச்சேன். ஆனா விஷயம் இப்படி முடியும்னு நான் நினைக்கவேயில்லை:”

“சரி, இன்றைக்கு என்னதான் நடந்தது? அதைச் சொல்லேன்.”

“சுகந்தி என் மேல கம்ப்ளைண்ட் பண்ணிட்டாடா?”

“என்னது, கம்ப்ளைண்ட்டா? யார்கிட்ட?”

“நம்ம கணேசன் சார்கிட்ட.”

“என்னன்னு? விவரமாத்தான் சொல்லேன்?”

“கணேசன் சார் இன்னைக்கி அவரோட அறைக்கு கூப்பிட்டனுப்பிச்சாரு. நானும் ஏதோ ரொட்டீன் அசைன்மெண்ட் சம்பந்தமாத்தான் டிஸ்கஸ் பண்ண கூப்பிடறார்னு நெனச்சி போனேன்.”

“சரி.”

“அங்கே போறேன்.. அவரோட அறையில சுகந்தியும் இருந்தா. சரி அவளும் இந்த அசைன்மெண்ட்ல இருப்பா போலிருக்குன்னு நானும் ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலை. ரெண்டு பேரையும் பொதுவா பாத்து ஸ்மைல் பண்ணிட்டு, சொல்லுங்க சார்னு உக்கார்ந்தேன்.”

“ஹ¤ம்.”

“அப்புறம்தான் கவனிச்சேன். சுகந்தி கண்ணெல்லாம் சிவந்து... ராத்திரி முழுசும் அழுதிருப்பாங்கன்னு நெனக்கிறேன். பார்க்கவே பாவமாயிருந்தது...”

“சரி, விஷயத்துக்கு வா. சார் ஏதாச்சும் உன்னைக் கேட்டாரா? அத சொல்லு.”

“ஆமாடா. எடுத்தவுடனே ‘நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நெனைக்கலே ராமு. எவ்வளவு சீனியர் நீங்க, உங்க கீழே ட்ரெய்னிங்காக போஸ்ட் பண்ணியிருக்கிற லேடி மெம்பர்கிட்ட இப்படியா நடந்துக்கறது?’ன்னு கேட்டுட்டாருடா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம ஒரு நிமிஷம் திகைச்சு போயிட்டேன். அப்புறம் சுதாரிச்சிக்கிட்டு ‘நான் என்ன பண்ணேன்னு இவங்க சொன்னதை சொன்னீங்கன்னா பரவாயில்லை.’ன்னு மெதுவா கேட்டேன்.”

“சார் என்ன சொன்னார்?”

“அவர் எங்க சொன்னார்? அதுக்குள்ள சுகந்தி மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை... கொஞ்ச நேரத்துல சமாளிச்சிக்கிட்டு ‘சார் நான் இவர் மேல கொடுத்த கம்ப்ளைண்ட்டை வித்ட்ரா பண்ணிக்கறேன். என்னை மன்னிச்சிருங்க சார்’னு சொல்லிட்டு சட்டுன்னு எழுந்து போயிட்டாங்க முருகு.. எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தோம்.. அப்புறம் சார் டேபிள்ல கிடந்த லெட்டரை எடுத்து என்கிட்ட கொடுத்து இதை படிங்கன்னு கொடுத்தார்...”

“லெட்டரா? என்ன லெட்டர்?”

“சுகந்தியோட ராஜினாமா லெட்டர்?”

“என்னது, ராஜினாமாவா? ஏன், எதுக்காம்?”

“அதான் முருகு.. என்னோட பிஹேவியர்தான் காரணமாம்!”

“உன் பிஹேவியரா? விளக்கமாதான் சொல்லேன்?”

“அந்த லெட்டர்ல அவங்க அப்படித்தான் எழுதியிருந்தாங்க.”

“என்னன்னு?”

“நான் ஆரம்பமுதலே அவங்கள பொருட்படுத்தலையாம். அவங்க எது செய்தாலும் நான் அப்ரிஷியேட் பண்றதில்லையாம். ஆண் ட்ரெய்னீஸ்க்கு கொடுத்த இம்ப்பார்ட்டன்ஸ் பெண் ட்ரெய்னீஸ்க்கு, முக்கியமா அவங்களுக்கு நான் கொடுக்கலையாம். அதனால அவங்களால சரியா ஜாப் நாலெட்ஜ வளர்த்துக்க முடியலையாம். இன்னும் என்னென்னமோ குழந்தைத் தனமா எழுதிட்டு கடைசியில இப்படிப்பட்ட அட்மாஸ்ஃபியர்ல வொர்க் பண்ணமுடியாதுங்கற சூழ்நிலை ஏற்பட்டுட்டதால தனக்கு தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்யறதைத் தவிர வேறு வழி தெரியலைன்னு அந்த லெட்டர்ல எழுதியிருந்தாங்கடா..”

“சரி, அதுக்கு நீ என்ன சொன்னே சார்கிட்ட?”

“இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க ராமுன்னு சார் என்னைக் கேட்டார்.”

“நீ என்ன சொன்னே?”

ராமு நண்பனைப் பார்த்து சோகத்துடன் சிரித்தான். “நான் என்னத்த சொல்றது? இதுல எழுதியிருக்கறதுக்கும் நிசத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை சார். நீங்க வேணும்னா ஒரு அஃபிஷியல் என்க்வ்யரி ஆர்டர் பண்ணுங்க.. இஃப் யூ ·பைண்ட் மி கில்டி ஐ ம் ரெடி டு ஃபேஸ் எனி ஆக்ஷன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“சார் இதுக்கு ஒண்ணும் சொல்லலையா? அவர் இதை நம்பிட்டாரா என்ன?”

“சார் அப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ‘ஓகே ராம். நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் ஜி.எம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்’னு சொல்லிட்டு லெட்டரை எடுத்துக்கிட்டு அவர் ஜி.எம் கேபினுக்கு போயிட்டார். நான் எழுந்து வந்துட்டேன்.”

“இது எப்ப நடந்தது? நான் கவனிக்கவேயில்லையே!”

“நீ அந்த ப்ரொஜக்ட் க்ரூப் டிஸ்கஷன்ல இருந்தேயில்ல அப்பத்தான்.. ஒரு பதினோரு மணியிருக்கும். அத்தோட இந்த விஷயம் முடியல முருகு. இன்னும் கேளு.”

“பிறகு? ஜி.எம் உன்னை கூப்பிட்டு ஏதாவது கேட்டாரா?”

“ஜி.எம் மா? அதெல்லாமில்லே.”

“பின்னே?”

“நான் சங்கர் சார் கேபினை விட்டு வெளியே வந்து காரிடார்ல நின்னுக்கிட்டு ஒரு சிகரெட் பிடிச்சிக்கிட்டிருந்தேன். நம்ம டீம்ல இருக்கற வசந்தி வந்து ‘சார் உங்ககிட்டே ஒரு விஷயம்..னு’ இழுத்தாங்க.. இதென்னடா புது குழப்பம்னு ஒண்ணும் புரியாம ‘என்ன சொல்லுங்க’ன்னு கேட்டேன். அவங்க சுற்றும் முற்றும் பார்த்துட்டு ‘சுகந்தியால உங்களை மறக்க முடியலை சார். தயவு செய்து அவளைத் தற்கொலை செஞ்சுக்கற நிலைக்கு ஆளாக்கிறாதீங்க’ன்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போயிட்டாங்க. நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.”

“ஐயையோ, அப்புறம்?”

“அப்படியே எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டிருந்தேன்னு தெரியலை. கணேசன் சார் ஜி.எம் ரூம்லருந்து திரும்பி வந்து நான் நின்னுக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு என் கிட்டே வந்து என்னுடைய தோளை ஆறுதலா தட்டிக் கொடுத்துட்டு ‘நத்திங் டு வொரி ராமு. ஜி.எம் நான் பாத்துக்கறேன். சுகந்தியோட ட்ரெய்னிங் பீரியட் முடிஞ்சதும் அவங்களை டிஸ்மிஸ் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டார்னு சொல்லிட்டு போயிட்டார்.”

“அடப்பாவமே. அந்த பொண்ணுக்கு யாருமே இல்லையாமே ராமு. லேடீஸ் ஹாஸ்டல்லதான் ஸ்டே பண்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப திடீர்னு டிஸ்மிஸ் பண்ணிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க.. பாவம்டா ராமு.. ஒண்ணு பண்ணேன்..”

“என்ன?”

“ஜி எம் கிட்ட நீயே பேசி இதை சுமுகமா முடிக்கப் பாறேன்.”

“எப்படிடா? கம்ப்ளைண்ட் குடுத்தது சுகந்தி. நான் போய் சொன்னா ஜி.எம் கேப்பாரா?”

“நீ சொன்னா கண்டிப்பா கேப்பார். சுகந்தியை வேணும்னா டைடல் பார்க் ஆஃபீஸ் ப்ராஜக்ட் டீம்ல சேர்த்துர சொல்லி ரெக்கமண்ட் பண்ணேன். ஜி.எம்முக்கு உன் மேல எப்பவுமே ரெஸ்பக்ட் உண்டு ராமு. ப்ளீஸ் ட்ரை பண்ணு ராமு. அந்த பொண்ணோட பாவம் நம்ம மேல விழவேண்டாம்டா..”

வெகு நேரம் ஒன்றும் மறுமொழி கூறாமலிருந்த ராமு ஒரு பெருமூச்சுடன் தன் நண்பனைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தது போல் புன்னகைத்தான். “ஓகே நீ சொல்றது சரிதான். வசந்தி சொன்னா மாதிரி சுகந்தி ஏதாவது எமோஷனலா செஞ்சுக்கறதுக்கு முன்னாடி இதுக்கு ஒரு சுமுகமான முடிவைக் கண்டுபிடிக்கணும். இல்லன்னா என்னாலயும் இந்த ஆஃபீஸ்ல நிம்மதியா கண்டின்யூ பண்ணமுடியாது. உன் அட்வைசுக்கு தாங்க்ஸ்டா முருகு”

இத்தனை விரைவில் நண்பன் ஒத்துக்கொள்வான் என நினைத்து பார்க்காத முருகேஷ் அதி சந்தோஷத்துடன், “தாங்க்ஸ் ராமு. நீ எடுத்த முடிவுதாண்டா சரி.” என்றான். பிறகு சற்றே தயக்கத்துடன் தன் நண்பனைப் பார்த்தான்.. “ராமு நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்காம பதில் சொல்வியா.. ப்ளீஸ்..”

ராமு சட்டென்று நண்பனைத் திரும்பி பார்த்து ‘நீ என்ன கேக்க வரேன்னு தெரியும்’ என்கின்ற பாவனையில் புன்னகைத்தான்.. ஆனால் அதில் ஒரு சோகம் கலந்திருந்ததைக் காண முடிந்தது.

“நீ நினைக்கிறது சரிதான் முருகு.. என்னையுமறியாம அவளை நானும் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்... ஆனா.. என் குடும்பம் இப்ப இருக்கற சூழ்நிலையில.... என்னோட உணர்ச்சிகளுக்கு திரைபோட்டு மறைக்கறதைத் தவிர எனக்கு...”

எங்கே தன் கண்களில் துளிர்க்கவாரம்பித்த கண்ணீரை நண்பன் பார்த்துவிடுவானோ என்ற அச்சத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்ட ராமுவை நெருங்கி தோளைத் தொட்டு ‘ஐ அண்டர்ஸ்டாண்ட்’ என்றான் முருகேஷ்.

***************

22.10.05

இறுதி நாள் (சிறுகதை)

சாலையோர உணவகத்தில் பகலுணவருந்திய சுவை நாவிலிருந்து இன்னும் மாறாத நிலையில் அடுத்த வேளை உணவிற்கு கவலைப்பட ஆரம்பித்தார் அந்த எழுபது வயதிலும் நடை தளராத வாலிபர்.

அந்த சந்தையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் அந்த ‘வாலிபரை’ அறியாதவர் எவருமில்லை. அவருடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாதென்பதால் எல்லோரும் அவரை ‘பெரியவரே’ என்றுதான் அழைப்பது வழக்கம். அப்போதெல்லாம் ‘இங்க பார், எம்பேரு ‘ராஜப்பார்ட் ரங்கசாமி’; ‘பெரியவருல்லே’ புரிஞ்சுதா?’ என்று பொய்க்கோபத்துடன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வருகையில் பொய்பயத்துடன் சிறுவர் முதல் பெரியவர் வரை ஓடி தப்பிப்பது வழக்கம்.

‘ராஜப்பார்ட் ரங்கசாமி’ உண்மையிலேயே நல்லதொரு நாடக நடிகாராயிருந்திருக்க வேண்டும். இந்த எழுபது வயதிலும் அவர் குரலெடுத்து பாடினால் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடும். 1950 களில் பிரபலாமாயிருந்த நாடக, சினிமா நடிகர்களின் வசனங்களைப் பேசி, பாடி, நடித்து, ஒரு குட்டி நாடகத்தையே நடத்திவிடுவார், வாரச்சந்தை நாட்களில்.

வாரத்தில் ஒரு நாள் பரபரப்பாகிவிடும் அந்த சந்தைநாளில் இத்தகைய குட்டி நாடகங்கள் நடத்தி அதைக் காண வருபவர்கள் மூலமாக கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே அடுத்து வரும் ஏழு நாட்களையும் ஓட்டிவிடுவாரேயொழிய யாரிடத்திலும் தானம் கேட்டு தொல்லை செய்யமாட்டார்.

இரவில் அவர் படுப்பதற்கு வசதியாக தன் கடையின் முன்பு ஒரு கட்டிலையும் பழைய துணிகளாலான படுக்கையையும் ஏற்படுத்தி கொடுத்திருந்தான் மாணிக்கவேல். அவரைப் பார்க்கும் போதெல்லாம் யாருமில்லா அனாதையாய் கிராமத்தில் மரித்த தன் தாய்வழி தாத்தாவின் நினைவு அவனுக்கு வரும்.

மாணிக்கவேலுக்கும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாததால் அவரைத் தன்னுடனே வந்து தங்கிக்கொள்ள பலமுறைக் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம், “வேண்டாம்டா மாணிக்கம், உனக்குன்னு சொந்தம்னு யாராவது வரும்போ என்னை என்ன செய்வே? மறுபடியும் நான் இதே எடத்துக்கு தானே திரும்பனும்? நா இப்பிடியே இருந்துட்டு போறேன். என்னை உட்டுடு.” என்று அவர் மறுத்தாலும் இன்றும் கடையை மூடுகின்ற நேரத்தில் அவரைப் பார்த்து “வந்துடுங்க தாத்தா, பனி வேற கொட்டுதே.” என்றான்.

அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தவர் அவனைப் பார்த்து சோகமாய் புன்னகைத்தார். “நீயும் இதே கேள்வியை எத்தனை முறைதான் கேப்பே, நானும் அதே பதிலை எத்தனை முறைதான் சொல்வேன்? இன்னைக்கென்னவோ உன்னோட வந்தா என்னான்னு தோணுதுறா. வா போலாம்.”

எதிர்பாராமல் வந்த அந்த அவருடைய சம்மதம் அவனை பரபரப்பாக்கியது. “இதோ ஒரு நிமிஷம் தாத்தா.” என்றவன் சரசரவென பலகைகளை எடுத்து அடுக்கி தன் கடையை மூடி பூட்டினான். பக்கத்திலிருந்த கடையினுள் எட்டிப் பார்த்து, “அண்ணே, ‘ராஜபார்ட்’ தாத்தாவை நான் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன். நீங்க கடைய மூடும் போது வெளிலைட்டை போட்டுட்டு போங்கண்ணே. அப்பத்தான் இங்க களவாணிப் பயலுக யாராச்சும் வந்தாலும் வெளீல நிக்கற தாணாக்காரவுகளுக்கு தெரியும்.” என்று வேண்டுகோள் விடுத்தான்.

“அட, என்னாடா மாய்மாலம் பண்ணே, ராஜபார்ட் இன்னைக்கி ஒத்துக்கிச்சு? நீ கூட்டிக்கிட்டு போ, எவன் இங்கன வந்து களவாடப் போறான்? இன்னைக்கி ஒரு நாளைக்கு அதுக்கு நல்ல சாப்பாடு வாங்கி குடுடா, முடிஞ்சா ஒரு ரவுண்டு கலக்கல் வாங்கி ஊத்து.” பக்கத்து கடையிலிருந்து குரல் மட்டும் வந்தது.

“சரிண்ணே. வாங்க தாத்தா.”

தினமும் வீடு திரும்பும் வழியிலேயே சாலையோரத்திலிருந்த கடையில் இரவு உணவை முடித்துக் கொண்டு, பஸ் பிடித்து வீடு செல்வது அவனுடைய வழக்கம். ஆனால் இன்று அப்படி செய்யாமல் “இதெல்லாம் எதுக்குடா மாணிக்கம்?” என்றவரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஆட்டோ பிடித்து டவுணிலுள்ள பெரிய ஓட்டலில் இரண்டு பிரியாணி பாக்கெட்டும், அருகிலிருந்த ஒயின் ஷாப்பில் ஒசத்தியான சரக்கில் ஒரு பாதி குப்பியையும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தான்.

இருவரும் கை, கால் கழுவிக்கொண்டு உணவருந்தியபோது உணர்ச்சி மேலிட்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கிய ராஜபார்ட்டைப் பார்த்து சிரித்தான் மாணிக்கம்.

“இதெல்லாம் சாப்பிட்டு எம்புட்டு நாளாவுது? இப்பெல்லாம் எனக்கு சாதா சாப்பாடே சீரணமாரதில்லேடா. இதுலே சாராயம் வேற. என்னவோ போ, உன் ஆசையை கெடுப்பானே, ஊத்து கொஞ்சமா..”

“சும்மா குடிங்க தாத்தா, என்னைக்கோ ஒரு நாளைக்கு தானே. தெனைக்கிமா பண்ணப்போறோம்?”

வயதின் மூப்போ, சரக்கின் காரமோ இரண்டு ரவுண்டிலேயே நிலைதடுமாறி பழைய நினைவுகளில் மூழ்கி குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்த ராஜபார்ட்டை சமாதானம் செய்து உறங்க செய்துவிட்டு, இடத்தைச் சுத்தம் செய்து அவன் படுக்கையை விரித்து ‘அப்பனே சாமி, இந்த தாத்தாவுக்கு நிம்மதியைக் குடுப்பா’ என்ற போதையுடன் கூடிய முனகலுடன் மாணிக்கவேல் படுக்கையில் விழவும் அருகிலிருந்த பூங்கா மணிகூண்டில் பன்னிரண்டு முறை மணியடிக்கவும் சரியாயிருந்தது.

உண்ட உணவும் குடித்த சரக்கும் படுத்தமாத்திரலேயே அயர்ந்து உறங்கிப் போனதுமல்லாமல் தினமும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துமுடித்து முதல் பஸ்ஸிலேயே புறப்பட்டுவிடும் அவன் அன்று காலைவெயில் முகத்தில் படும் வரை எழுந்திருக்கவில்லை.

“டேய் மாணிக்கம், என்னாச்சி இன்னைக்கி? உடம்பு கிடம்பு சரியில்லையா.” என்ற பக்கத்து வீட்டு பாட்டியின் குரல் கேட்டு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தவன் பக்கத்திலிருந்த படுக்கை காலியாயிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான். “பாட்டி இங்கன ஒரு வயசானவரு படுத்து கிடந்தாரே பாத்தீங்களா?”

“யாரு, ராத்திரி உங்கூட வந்த ஆளா? அதோ அங்க கக்கூஸ¤க்கிட்ட விழுந்து கிடக்கிறானே! வயசாயிருச்சேன்னு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமே தண்ணியடிச்சிட்டு.. எங்கருந்துடா புடிச்சிக்கினு வந்தே? போய் பாரு. எழுப்பி கூட்டிக்கினு போ. இனிமே அந்தாள இங்கன கூட்டிக்கிட்டு வராதே சொல்லிப்புட்டேன்.”

“என்னாது, என்னாத்தா சொல்றே? அவிரு ரொம்ப நல்லவராச்சே!” என்றவாறு பதறிப்போய் ஓடிப் போய் அந்த காலனியின் பொதுக்கழிவறையை நெருங்கி அங்கு குழுமியிருந்த சிறு கூட்டத்தை விலக்கிக் கொண்டு புகுந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனை என்னவோ செய்ய “ஐயோ தாத்தா அநியாயமா உங்கள கொன்னுட்டேனே” என்று குரலெடுத்து அழுதான்.

இவனுக்கென்று யாருமில்லையென்று இதுவரைத் தங்களிடம் கூறி வந்தவன் இந்த கிழத்தை எங்கிருந்து பிடித்தான் என்று சுற்றிலும் கூடியிருந்தவர் அவனை வேடிக்கைப் பார்க்க, ‘என்னுடைய கடைசி நாளை சந்தோஷமாக்குனதுக்கு உனக்கு ரொம்ப நன்றிடா மாணிக்கம்’ என்று அவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது அவருடைய விரிந்து திறந்திருந்த உதடுகள்.

*****************

21.10.05

விடியலை நோக்கி...

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர்.

அவளுக்கு அடுத்த சீட்டில் யாரும் இல்லாததால் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினாள். கலைந்திருந்த சேலையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து குடித்தாள்.

பஸ் புறப்பட இன்னும் பத்தோ, இருபதோ நிமிடங்கள் இருக்கும் என்று நினைத்தவள், இறங்கி போய் ஏதாவது சாப்பிட வாங்கலாம் என்று எழ முயன்ற போது சரவணன் அவசர, அவசரமாய் ஓடி வருவது தெரிந்து மீண்டும் அமர்ந்துக் கொண்டாள். அவன் பார்வையில் தான் பட்டுவிடக் கூடாது என்ற முனைப்போடு தலையை சன்னலைவிடக் கீழே தாழ்த்திக் கொண்டாள்.

போதும். கடந்த இரண்டு வருடமாய் வாழ்ந்த போலி வாழ்க்கையை இனியும் தொடர அவள் தயாராயில்லை. சரவணனைக் குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை. அவன் ஒரு வாயில்லாப் பூச்சி. அம்மாப் பிள்ளை. அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சாது. அப்படி ஒரு தாய்க்கு இப்படி ஒரு பிள்ளையா என்று பல முறை அவள் வியந்ததுண்டு.

அவனுடைய தாயின் வக்கிரப் புத்தியை அவன் புரிந்துக் கொண்டதேயில்லை. அல்லது புரியாதது போல் நடித்தானோ!

கல்யாணம் முடிந்து, பிறந்து வளர்ந்த சென்னையை விட்டு தூத்துக்குடி மாதிரி ஒரு பட்டிக்காட்டுக்கு வாழ வந்ததே ஒரு பெரிய முட்டாள்தனம். எல்லாவற்றிற்கும் அண்ணாவும் எப்படியாவது இந்தச் சனியன் ஒழிந்துப் போனால் போதுமென்று கொஞ்ச நாளாகவே கருவிக் கொண்டிருந்த அண்ணியும்தான் காரணம். இப்போது வருத்தப்பட்டு என்ன பலன்?

மாப்பிள்ளை வீட்டாரின் விலாசம் தெரிந்தவுடனே நமக்குப் புரிந்திருக்க வேண்டும். நம். 09, குறுக்குத் தெரு, மட்டக்கடை! இடத்தின் பெயரும் தன் கணவரின் கோழைத்தனமும், மாமியாரின் குணாதியசமும் ... .. என்ன பொருத்தமான சேர்க்கை!

குறுக்குப் புத்தியும் மட்டமான சிந்தனைகளும்!

போதும். அவளுக்கு இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை. தன்னால் எப்படி இரண்டு வருடங்கள் பொறுத்துக் கொள்ள முடிந்தது என்று!

ஓட்டுனர் வண்டியில் ஏறி புறப்பட தயாராவதை உணர்ந்தவள் தலையை லேசாகத் தூக்கி சரவணன் போய்விட்டானா என்று பார்த்தாள். ஒவ்வொரு பஸ்சாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தவன் தன் பஸ்சை நோக்கி வருவதைப் பார்த்துப் பதறிப்போய் குழந்தையைக் கிடத்தியிருந்த சீட்டில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

சரவணன் பஸ்சில் ஏறும் முன்பு வண்டியை எடுக்க வேண்டுமே கடவுளே என்று மனதிற்குள்ளேயே பிரார்த்தித்தாள். கடவுள் அவள் பிரார்த்தனையைக் கேட்டிருக்கவேண்டும். சரவணன் வண்டியை நெருங்கவும், ஓட்டுனர் பஸ்சை நகர்த்தவும் சரியாயிருந்தது.

‘அப்பாடா’ என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் தலைநிமிர்ந்தாள், பஸ் இன்னும் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை உணராதவளாய். அவள் தலையை நிமிரவும் சரவணன் அவளைப் பார்த்துவிட்டான். ‘சரோ, சரோ’ என்று பெரும் குரல் எழுப்பியவாறு வண்டியின் பின்னே ஓடிவர ஆரம்பித்தான். வண்டியில் இருந்த எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் ஓடி வந்து அவள் இருந்த இருக்கையின் சன்னலருகே வந்து அவளைக் கெஞ்ச ஆரம்பித்தான், “சரோ, போகாத. ப்ளீஸ், நான் சொல்றதக் கேளு. வண்டியை விட்டு இறங்கு”.

வண்டியிலிருந்த எல்லோரும் அவளைத் திரும்பி பார்க்க, அவளுக்கு மானம் போனது. ‘புத்திக் கெட்ட மணுஷன். வீட்டில வாங்குன மாதம் போறாதுன்னு இங்க வேற வந்து.. சே!’ என்று மனதிற்குள் அவனை சபிக்கத் துவங்கினாள்.

சரவணன் ஓடி வருவதை எட்டிப் பார்த்த ஓட்டுனரும் வண்டியை நிறுத்த அவன் ஓடி வந்து முன்பக்கக் கதவைத் திறக்க முயற்சித்தான். “என்ன சார் பிரச்சினை? யார் நீங்க?” என்றான் நடத்துனர் கதவைத் திறக்காமல்.

“சார், நான் அதோ உக்காந்திருக்கற லேடியோட புருஷன். வீட்ல கொஞ்சம் பிரச்சினை. அவங்க வீட்ல யாருமில்லாத நேரம் பார்த்து கிளம்பி வந்துட்டாங்க. தயவு செய்து அவங்களை கொஞ்சம் இறக்கிவிட்ருங்க.”

அவன் கெஞ்சுவதைப் பார்த்த நடத்துனர் அவள் பக்கம் திரும்பி, “என்னம்மா, இரங்கிக்கிறீங்களா?” என்றார்.

முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த சரோஜா “இல்லீங்க, நான் இரங்கலை. நீங்க வண்டியை எடுங்க” என்றாள் தீர்மானமாக.

சரவணன் அவள் இருந்த ஜன்னலருகே வந்து கெஞ்ச ஆரம்பித்தான். “சரோ ப்ளீஸ், பிரச்சினை பண்ணாம இறங்கி வா. வீட்லப் போய் பேசிக்கலாம்”

அவள் கோபத்துடன் ‘முடியாது’ என்று தலையை அசைத்து ஓட்டுனரிடம், “சார் நீங்க வண்டியை எடுங்க. நான் இரங்கறதாயில்லை” என்றாள்.

இருவரையும் மாறி, மாறிப் பார்த்த ஓட்டுனர் வண்டியை மெல்ல எடுத்தான். வண்டியிலுள்ள எல்லோரும் தன்னையே பார்ப்பதை சட்டை செய்யாமல் விழித்தெழுந்து அழும் குழந்தையை சமாதானப் படுத்தலானாள். வண்டியின் வேகம் கூடுவதை கவனித்த சரவணன் சலிப்புடன் நின்று விட்டான்.

வண்டியில் இருந்த பயணிகளும் நடந்து முடிந்த நாடகத்தை அசை போட்டவாறு அவரவர் சிந்தனையில் ஆழ்ந்துப் போயினர்.

********

பஸ் முன்னோக்கி ஓட அவளுடைய எண்ணங்கள் பின்னோக்கி ஓடத் தொடங்கின.

அவள் முதல் முதலாய் தன் மாமியார் வீட்டு வாசலை மிதித்த நாளை நினைத்துப் பார்த்தாள். நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து அவளை மாமியார் வீட்டுக்கு குடி புக அனுப்பி வைத்த அண்ணன் குடிபுகுந்த வீட்டாரின் பூர்வீகத்தை விசாரிக்காமல் விட்டதுதான் அவளுடைய துரதிஷ்டம்.

அண்ணாவுக்கு திடீரென்று உடல் சுகமில்லாமல் போனதால் அவளைப் புகுந்த வீட்டில் கொண்டுவிட அம்மாவும் அண்ணியும் மட்டும் தான் அவளுடன் வந்தார்கள். புதுமணத் தம்பதியர் வீட்டு வாசலில் வந்து இறங்கியவுடனே தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தனர் அவளுடைய கணவர் குடும்பத்தார். கல்யாணத்தின்போது அவர்கள் குடும்பத்தாரை சரியாகக் கவனிக்கவில்லையாம். அவள் கூட வந்த அம்மாவையும் அண்ணியையும் மட்டு மரியாதையில்லாமல் ஆளுக்கொரு பக்கம் பொரிந்துத் தள்ள ஆரம்பித்தனர்.

அம்மா ஒரு பாவம். வாழ்க்கையில் எந்தவித இன்பத்தையும் அனுபவிக்காதவள். பேருக்கு ஒரு கணவன். ஒரு வேலையும் செய்யத் துப்பில்லாத, முழுச் சோம்பேறியான, ஒரு கவலையும் இல்லாத மனிதன்.

சரோஜாவின் தாத்தா தான் அவர்களுக்கு எல்லாமாக இருந்தார். அவருடைய உதவியுடன் அண்ணாவும் அவளும் பத்தாவது வரை படிக்க முடிந்தது. அண்ணாவோட அதிர்ஷ்டம் படித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது. அவர்களுடைய வீட்டில் செழிப்பும் வந்தது. அவளையும் அம்மாவையும் அவன் நன்றாகக் கவனித்துக் கொண்டான். அப்பாவைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. அவனுடைய உதாசீனத்தை சகிக்க முடியாமல் ஒரு நாள் அவர் வீட்டை விட்டே போய்விட்டார். அம்மா அவரைக் கண்டுப் பிடிக்க பலவாறு முயன்று பார்த்தாள். ஒன்றும் பலனளிக்காமல் போகவே சோர்ந்துப் போய் விட்டாள். அன்றிலிருந்து அம்மா அதிர்ந்து ஒரு வார்த்தைப் பேசி அவள் கேட்டதில்லை. கணவன்தான் இருந்தும் இல்லாமல் போய்விட்டானே பிறகு இந்த பொட்டும் பூவும் எதற்கு என்று தானே தனக்கு விதவைக் கோலத்தைக் கொடுத்துக் கொண்டாள். சரோஜா எத்தனைச் சொல்லியும் கேட்கவில்லை.

அண்ணா அலுவலகத்தில் தன்னுடன் வேலைப் பார்த்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என்று வந்து நின்ற போதும் ‘சரோ இருக்கிறாளேடா. அவளுடைய கல்யாணத்தை முடிச்சிட்டு போறாதா’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் கேட்காமல் ஒரு நாள் மாலையும் கழுத்துமாய் அண்ணியுடன் வந்து நின்றபோது அவள் ஒன்றும் எதிர்த்துப் பேசவில்லை.

சாதுவாய் வந்த அண்ணி மூன்றே மாதத்தில் அவளை ஒரு வேலைக்காரி ஸ்தானத்தில் கொண்டு நிறுத்தியபோதோ அல்லது அதைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் அம்மாவை ‘அனுசரித்துப் போயேம்மா’ என்று அண்ணா சொன்ன போதோ அவள் ஒன்றும் கவலைப்படவில்லை. சரோஜாவிடம் ‘நீ ஒண்ணும் கவலைப் படாதேடி. வேற வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு. அண்ணியைப் பகைச்சுக்காதே. அவ தயவில்லாட்டி உனக்கு ஒண்ணும் செய்ய மாட்டான் ஒங்க அண்ணன்’ என்று அவள் வாயையும் கட்டிப்போட்ட சாதுவான, மிருதுவான பூ போன்றவள் அவளுடைய அம்மா.

அவளைப் போய் ‘ஏம்மா, உனக்கு அறிவிருக்கா? புதுசா கல்யாணமானப் பொண்ணை புகுந்த வீட்டுக்கு கூட்டி வந்து விட தாலியறுத்தவ நீ வந்திருக்கியே. தள்ளி நில்லு.’ என்று வார்த்தைகளை கொதிநீராய் வீசிய போதும் அவள் ஒன்றும் பேசவில்லை. முகம் சிவந்துப் போன தன் கையைப் பிடித்து ‘பொறுமையாயிரு’ என்று சாடைக் காட்டியதை இப்போது சரோஜா நினைத்துப் பார்த்தாள்.

அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாமான்கள் போதாது என்றும் கட்டில், மெத்தை, பீரோ எல்லாம் தந்தால் தான் ஆயிற்று என்று அம்மாவை நச்சரித்ததையும் அவளுடையக் கணவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் அவளால் தாங்க முடியவில்லை. இத்தனை நடந்தும் ஒன்றும் நடக்காததுப் போல் பார்த்துக் கொண்டிருந்த அண்ணியிடம் ஒன்றும் கேட்கமுடியாமல் தன் கழுத்தில் கிடந்த மூன்று சவரன் சங்கிலியை அடுத்த நாளே விற்று அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் போனாள் அம்மா.

அத்தோடு அடங்கியதா அவர்களுடைய பேராசை? ஆடிச் சீர், தலைத் தீபாவளிச் சீர், தலைப்பிரவசம், காதுக் குத்து என தொட்டதுக்கெல்லாம் அவளைச் சித்திரவதைச் செய்ததையும் அவளால் மறக்கவா முடியும்?

தலைப் பிரவசத்துக்கு போன இடத்தில் அண்ணியின் குத்தல் பேச்சும் ‘போதும்மா, உனக்கு செய்ய இனிமே என்னால முடியாதும்மா’ என சொல்லாமல் சொன்ன அண்ணாவின் பார்வையும் அவளைக் கூணிக் குறுகச் செய்தாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டாள். ‘என் கடமை எல்லாம் முடிந்து விட்டது இனி உன் பாடு உன் கணவர் வீட்டார் பாடு’ என்று ஒதுங்கிக் கொண்டான் அண்ணா அன்றோடு. மூன்று மாத கைக்குழந்தையுடன் அவள் மாமியார் வீட்டில் வந்து இறங்கியவுடன் அவளுக்கும் அம்மாவுக்கும் கிடைத்த வரவேற்பு! “ஏண்டி தரித்திரம் புடிச்சவளே. பொம்பிளைப் பிள்ளையைப் பெத்ததே பாவம். அதுல ஒரு குத்துமணி பவுண் கூட போடாம தூக்கிக்கிட்டு வந்துட்டியாக்கும்.”

கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி போன முறைக் கட்டில், பீரோ என்று வாங்கிப் போட்ட அம்மா இப்போது ஒன்றும் செய்ய இயலாமல் மெளனமாய் நின்றதும் அவளை வீட்டினுள் கூட ஏற்றாமல் அப்படியே ஊர் திரும்ப தன் மாமியார் நிற்பந்தித்ததையும்... எப்படி மறக்க முடியும்?

அன்று அம்மா மனம் கசிந்து கண்ணீர் விட்டபடி அவளிடமிருந்து விடைபெற்று சென்றதை நினைத்து அன்று தான் வெகுநேரம் அழுதும் அதை ஒரு பொருட்டாக மதிக்காத தன் கணவன் குடும்பத்தை இப்போது நினைத்தாலும் பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் அடி வயிற்றிலிருந்து எழும்பி வந்தது.

அதற்குப் பிறகு எப்போதாவது வரும் அம்மாவின் கடிதம் என்பதோடு அம்மா, அண்ணா என்ற உறவுகள் நின்றுப் போயின.

அவளை என்ன செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட மாமியார் கொடுமையின் உச்சிக்கே போக ஆரம்பித்தாள்.

மாமியார் எத்தனைக் கேவலமாய் பேசினாலும், நடத்தினாலும் அதையெல்லாம் கண்டும் காணாதவனாக நடித்த கணவனை அவளும் முழுவதுமாய் புறக்கணிக்க துவங்கியபோதுதான் பிரச்சினைப் பூதாகரமாய் வெடித்தது.

“ஏய் நீ இல்லாட்டி என்னடி? ஏம் புள்ளக்கி ஜோடி சேர இந்த ஊர்ல பொம்பளயேயில்லன்னு நினைச்சியா? மவள, உன் கண் முன்னாடிய ஏம் புள்ளய இன்னொருத்தியோட இன்னும் ஒரு மாசத்துல சேர்த்து வைக்கல, என் பேரையே மாத்திக்கறேன்” என்று மாமியார் ஊர் கூட்டி சபதம் போட்டதுடன் நிற்காமல் பத்து நாளைக்குள்ளேயே அவளுடைய உறவுக்கார பெண் ஒருத்தியை வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்திய போதுதான் ‘இனியும் இங்கிருப்பதில் பயனில்லை’ என்று முடிவெடுத்தாள் சரோஜா.

அவள் படித்தது பத்தாவதுவரைத்தான் என்றாலும் சென்னையில் ஒரு வேலைக் கிடைக்காமலா போய்விடும்? அண்ணா வீட்டிலிருந்துக் கொண்டு அவமானப் பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தனியாக இருக்க முடியாதா என்ன? போகத்தான் வேண்டும் என்று முடிவெடுத்தவள் கடைசி முறையாக ஒரு முறை தன் கணவனுடன் பேசிப் பார்ப்பதென முடிவெடுத்தாள்.

ஒரு நாள் மாமியாரில்லாத நேரத்தில் கணவனிடம், “இங்க பாருங்க, உங்க அம்மாவும் நானும் இந்த வீட்டில் இனி சேர்ந்து இருக்க முடியாது. நாம தனியா போயிடலாம். நீங்க உங்க அம்மாவுக்கு என்ன குடுத்தாலும் நான் ஒண்ணும் கேட்க மாட்டேன். அவங்களுக்குக் குடுத்தது போக எனக்கு குடுக்கறத வச்சி நான் குடும்பம் நடத்திக்குவேன். என்ன சொல்றீங்க?” என்று நயமாக பேசினாள். பலனில்லை.

“அதெப்படி முடியும் சரோ? அம்மாவுக்கு என்னை விட்டா யார் இருக்கா? தனியா போற பேச்செல்லாம் வேண்டாம்.” என்று ஒரேப் பிடியாக மறுத்துவிட்டான்.

தன்னுடைய அம்மாவை எதிர்த்துக் கொண்டு அவனால் அந்த ஊரில் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியாது என்று அவன் அஞ்சுகிறான் என்பதைப் புரிந்துக் கொண்டவள் தான் பிரிந்து போவதுதான் இந்த நரகத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருக்கலானாள்.

இன்றைக்குத்தான் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுடைய மாமியார் கோவில்பட்டியில் உறவினர் திருமணம் என்று வீட்டில் அவள் கொண்டு வைத்திருந்த பெண்ணையும் கூட்டிக்கொண்டு காலையிலேயே புறப்பட்டாள். “ஊர்ல நடக்கற விஷயத்துக் கெல்லாம் உன்னையக் கூட்டிக் கிட்டு போய் இவளத் தான் என் பையனுக்குக் கட்டி வைக்கப் போறேன், முதல்ல கட்டி வச்ச சிறுக்கி ஒண்ணுத்துக்கும் துப்பில்லன்னு சொன்னாத்தான நாள ஒரு நாளைக்கி உங்க கல்யாணம் நடக்குறப்போ ஒரு பயலும் வந்து பிரச்சினைன்னு பண்ண மாட்டான்.” என்று புறப்படுகையில் வீட்டு வாசலில் நின்று ஊருக்கே கேட்குமாறு கூவிய போதும் ஒன்றும் பேசாமல் அவளுடைய கணவன் சைக்கிளில் ஏறி வேலைக்குச் சென்ற போதுதான் அவள் தீர்மானித்தாள் ‘இன்னைக்குத்தான் நாம புறப்பட்டுப் போகவேண்டிய நாள்’ என்று.

மாமியாரும் கணவனும் புறப்பட்டு போனதும் சமயலை முடித்து சாப்பிட்டாள். கணவனுக்கு மாலை மற்றும் இரவுக்கு வேண்டிய உணவைத் தயாரித்து மூடி வைத்தாள். பிரிந்து போகும்போது கூட தன் கணவனுடைய தேவைகளைப் பற்றி தான் கவலைப் படுவதை நினைத்துப் பார்த்தாள் வேதனையுடன். அவன் நல்லவன்தான். அவளை ஒரு முறைக் கூட அதிர்ந்து பேசியதேயில்லை என்பதையும் நினைத்துப் பார்த்தாள். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தன் தாய்க்கு பயந்து கொண்டு தன் மனைவி, மகளுடைய தேவைகளைப் புறக்கணிப்பான்? மாமியார் ஒரு வயசுக்கு வந்த பெண்ணைத் தன் மனைவிக்கு போட்டியாக வீட்டில் கொண்டு வைத்தபோதாவது அவன் தன் தாயை எதிர்ப்பான் என்று எதிர்பார்த்தாள். அவனுடைய கோழைத்தனமான மெளனம் தன் தாயின் கேவலமான திட்டத்திற்கும் சம்மதம் என்பது போலிருந்தது. அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சமையல் பாத்திரங்களை கழுவி சமையலறையில் அடுக்கி வைத்தாள். வீட்டைக் கூட்டி குப்பையை வெளியே கொட்டினாள். தன்னுடைய முடிவில், அதைச் செயல் படுத்த தான் போட்ட திட்டத்தில் ஏதாவது ஓட்டை இருக்கிறதாவென நிதானமாக அமர்ந்து யோசித்துப் பார்த்தாள்.

மாமியார் வீட்டுக்கு திரும்ப எப்படியும் இரவு 9.00 மணியாகிவிடும். தன் மகனிடம் தன்னை அழைக்க பஸ் ஸ்டான்டுக்கு வரவேண்டும் என்று அவள் காலையில் சொல்லிக் கொண்டிருந்ததை அவள் சமையலறையிலிருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தாள். கணவனுக்கு அன்று பகல் ஷிப்ட்தான் என்றாலும் சிறிது நாளாகவே தன் தாயின் தொல்லை தாங்காமல் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இரண்டு முறை தன் கணவனோடு பஸ்சில் போயிருக்கிறாள். இரவு 7.00 மணிக்கு புறப்பட்டால் சென்னைக்கு காலை 8.00 மணிக்குள் போய் சேர்ந்துவிடும். அண்ணாவும் அண்ணியும் காலை 8.00 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவார்கள். குழந்தைகளும் அவர்கள் பின்னாலேயே பள்ளிக்கு புறப்பட்டு போய்விடுவார்கள். அம்மா மட்டும் தனியாக இருப்பாள். ஒரே நாளில் ஒரு சிறிய வீட்டை அடுத்த வீட்டில் குடியிருக்கும் புரோக்கர் மாமா உதவியுடன் வாடகைக்கு பிடித்துவிடலாம். அம்மாதான் முதலில் முரண்டு பிடிப்பாள். சமாளித்துக் கொள்ளலாம். அண்ணாவோ அண்ணியோ தன் விஷயத்தில் தலையிடமாட்டார்கள் என்று நினைத்தாள். அண்ணி சனியன் தலை விட்டது என்று கைகழுவி விடுவாள்.

கணவன் தன் தாய்க்கு தெரியாமல் அவள் கைச் செலவுக்கென்று கொடுத்த பணத்திலிருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை கணக்குப் பார்த்தாள். ஐயாயிரம் இருந்தது. பஸ் டிக்கட்டிற்கு வேண்டிய பணத்தை ஹான்ட்பேக்கில் வைத்துக் கொண்டு மீதியை துணிமணி வைக்கும் பெட்டியில் அடியில் வைத்தாள். அதுதான் அவளுடைய எதிர்கால வாழ்க்கைப் பயணத்திற்கு மூலதனம். இரண்டு வாரத்திற்குள் ஒரு வேலை கிடைத்துவிடும். கிடைத்துவிட வேண்டும். அண்ணா, அண்ணி, கணவன் என்று யாருடைய தயவுமில்லாமல் வாழ்ந்துக் காட்ட வேண்டும்.

தன்னுடைய துணிமணிகளை தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த சூட்கேசுக்குள் அடுக்கி வைத்தாள். தன் கணவனுடைய வீட்டிலுள்ள பொருட்கள் ஒன்றையும் எடுக்கக்கூடாது என்பதில் வெகு கவனமாயிருந்தாள். இல்லையென்றால் பாவிகள் திருட்டுப் பட்டம் கட்டவும் தயங்கமாட்டார்கள் என்பதை அவள் புரிந்து வைத்திருந்தாள்.

குழந்தையைக் குளிப்பாட்டி அவளுக்கு வேண்டிய உணவு, உடைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மணியைப் பார்த்தாள். மதியம் 3.00 மணி. குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. 6.00 மணிக்கு புறப்பட்டால் போதும். டிக்கட் எடுத்துக் கொண்டு பஸ்சில் ஏறும் வரை யார் கண்ணிலும் படக்கூடாது. பிடிபட்டால் தன் கதி அதோகதிதான் என்று அவளுக்குத் தெரியும். ஓடுகாலி என்ற பட்டத்துடன் வீட்டிற்குள்ளேயே போட்டு பூட்டிவிடவும் தயங்க மாட்டாள் தன் மாமியார் என்பதும் அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நாள் போவது போல் தோன்றியது.

ஆறு மணி அடித்ததும் பரபரப்பானாள். வீட்டைப் பூட்டினாள். சாவியை பக்கத்து வீட்டில் கொடுக்க முடியாது. நல்ல வேளை, அவளிருந்தது ஒரு தனி வீடு. சுற்றிலும் நிறைய வீடுகள் இருந்தாலும் அவளுடைய மாமியாரின் குணம் மிகவும் பிரபலமானதால் யாரும் தலையிடமாட்டார்கள். கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டு சாவியை கதவிற்குக் கீழே நிலைப் படி இடுக்கில் சொருகி வைத்தாள். அவள் கணவனிடம் தனி சாவியிருந்ததால் அவனுக்கு அது தேவைப் படாது. அவன்தான் முதலில் வருவான். வீட்டைத் திறந்ததும் நிலைப்படியில் இருந்து விழும் சாவியைப் பார்ப்பான். பிரச்சினையைப் புரிந்துக் கொண்டு அவன் அவள் பின்னால் வருவதற்குள் அவளுடைய பஸ் புறப்பட்டுவிடவேண்டும்.

பெட்டியை ஒரு கையிலும் குழந்தையை ஒரு கையிலும் தூக்கிக் கொண்டு தெரு முனையிலுள்ள ஆட்டோ ஸ்டான்டை நோக்கி வேகமாய் நடந்தாள். நல்ல காலம், ஆட்டோவில் ஏறும் வரை யாரும் பார்க்கவில்லை.

பழைய பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கி புதிய பேருந்து நிறுத்ததிற்கு செல்லும் பஸ்சில் ஏறி பெண்கள் சீட்டில் இடமிருந்தும் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டாள். சீட்டில் அமர்ந்தால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம்.

நல்ல வேளை, வண்டியிலும் கூட்டம் நிறைந்து வழிந்ததால் ‘வெளியிலிருந்து யாரும் நம்மளைப் பார்க்கமுடியாது’ என்று நிம்மதி அடைந்தாள். புதிய பேருந்து நிறுத்தம் வெகு அருகில்தானிருந்தது. பத்து நிமிட ஓட்டத்துக்குப் பிறகு வண்டி நின்றவுடன் கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி பெட்டியை எடுத்த்க் கொண்டு தூத்துக்குடி பேருந்து நிற்கும் நிலைக்குச் சென்று சீட்டைப் பெற்றுக் கொண்டாள். அவளுடைய வண்டி வரும்வரை யார் கண்ணிலும் படாமல் பதட்டத்துடன் அவதிப்பட்டதையும், வண்டி புறப்பட இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் தான் அகப்பட்டுக் கொண்டிருப்போம் என்பதையும் இப்போது நினைத்தாலும் அவள் உடல் நடுங்கியது.

***

வண்டி மதுரையைக் கடந்துவிட்டதை உணர்ந்தவள், இனி யாரும் தன்னை வந்து பிடிக்க முடியாது என்ற நிம்மதி பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தாள்.

அந்த தூத்துக்குடி டு சென்னை பேருந்து ‘நானிருக்கிறேன். உன்னைப் பத்திரமாய் நான் கொண்டு சேர்க்கிறேன், கவலைப்படாதே’ என்பது போல் வேகமாய் முன்னேறியது...

விடியலை நோக்கி.

**********************************

17.10.05

மரண வாக்குமூலம் (சிறுகதை)

கோவில் தர்மகர்த்தா ஏகாம்பரம் வீடு என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இல்லை.

ஆகவே, சிதம்பரம் பஸ்சிலிருந்து இறங்கி ஊருக்குள் நுழைந்து அவருடைய பெயர் சொல்லி விசாரித்தபோது அவனை எல்லோரும் ஏற இறங்க பார்த்தார்கள்.

அதில் ஒருவர் அவனை அதிசயமாய் பார்த்து “நீங்க அவுகளுக்கு என்ன வேணும். உறவா?” என்று கேட்க

“இல்லையே! ஏன் கேக்கறீங்க?” என்றான் ஆச்சரியத்துடன்.

“இல்ல.. தர்மகர்த்தாவை பேர் சொல்லி கேக்கறீங்களேன்னுதான்...”

அவனுக்கு சிரிப்பு வந்தது. ஏகாம்பரம் மாமாவைப் பத்தி அப்பா கதை கதையாய் சொல்ல கேட்டிருக்கிறான்.

“ஏகாம்பரம் சின்ன வயசுல ‘கடவுள் இல்லை. கடவுளை நம்பாதே’ன்னு பெரியார் கட்சியில சேர்ந்துக்கிட்டு ஊர் ஊரா போய் பிரச்சாரம் பண்ணுவான். ‘கல்யாணம் பண்ணிவச்சாத்தான் படவா உருப்படுவான்’னு இழுத்துக்கொண்டு போய் அவனோட அப்பா எந்த நேரத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சாரோ ஆள் அடையாளமே தெரியாம மாறிப் போயிட்டான்.”

அப்பா ‘மாறி போயிட்டான்’னு சொன்னது இதைத் தானிருக்கும் என்று நினைத்துக்கொண்ட சிதம்பரம் ‘தர்மகர்த்தா’வின் வீட்டை அடைந்தபோது வீட்டின் முன் ஒரு பெரிய கும்பலே நிற்பதைப் பார்த்து திகைத்து நின்றான்.

“என்ன தம்பி நீங்க யாரைப் பார்க்கணும்?” தன்னை விசாரித்த வேலையாளை அலட்சியமாய் பார்த்த சிதம்பரம் “தர்மகர்த்தாவைத் தான் பார்க்கணும்.” என்றான் எகத்தாளமாய்.

“நான் அவுக தம்பிதான். நீங்க யாருன்னு சொன்னா தேவலை. அண்ணா பூஜைல இருக்காக. நன்கொடைன்னா கணக்கு பிள்ளைய பார்த்தா போறும்.”

சிதம்பரம் அவரை திகைத்துப் போய் பார்த்தான். ஏகாம்பரம் மாமாவுக்கு தம்பி இருப்பதை அப்பா சொல்லவேயில்லையே. தர்மகர்த்தாவென்றால் பெரிய வசதிபடைத்தவராயிருக்க வேண்டுமே. காவியேறிய சட்டையும் முழங்காலிலேயே நின்றுபோன வேட்டியுமாய் தன் அருகில் நின்றவரை மீண்டும் ஒருமுறை பார்த்தவன், ‘இவர் அவருக்கு தம்பியா?’ என்று யோசித்தான்.

“என்ன தம்பி ஒண்ணும் சொல்லாம...”

“என் பேரு சிதம்பரம். சென்னை பட்டாபி ஐயர் வீட்ல இருந்து வரேன். நான் வர்றத ஏகாம்பரம் மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன்னு அப்பா சொன்னார்.”

“ஓ நீங்கதானா அது? மன்னிச்சிக்குங்க தம்பி. உங்களுக்காகத்தான் அண்ணா காத்திட்டிருக்கார். வாங்க ..” என்று பரபரப்பானவர் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுவாசலில் குழுமியிருந்தவர்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டு உள்ளே போனார்.

தெருவிலிருந்து பார்த்ததற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வீடு உள்ளே வெகு விசாலமாயிருந்தது. நடுவில் பரந்து கிடந்த முற்றத்தை சுற்றி நான்கு புறமும் அமைந்திருந்த விசாலமான அறைகளுள் ஒன்றினுள் சிதம்பரத்தை அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு வீட்டின் ஒரு மூலையிலிருந்த பூஜையறையினுள் சென்று திரும்பி வந்து, “அண்ணா பூஜையில் இருக்கார். ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும் தம்பி. நீங்க இருங்க. காப்பி கொண்டு வரச் சொல்லியிருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியே போனவரையே பார்த்த சிதம்பரம் தனக்கு மிக அருகில் கொலுசு சப்தம் கேட்கவே சட்டென்று திரும்பி பார்த்தான்.

மூச்சுக்காற்று தன் மேல் படும் அளவுக்கு நெருங்கி நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை பார்த்தவன் தன்னையுமறியாமல் எழுந்து நின்றான்.

“என்ன பயந்துட்டீங்களா? சித்தப்பா, விருந்தாளி வந்திருக்காக, ஒரு காப்பி போட்டு கொண்டு குடுன்னார். நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளி யாருடான்னு பார்க்க வந்தேன். நீங்க உக்காருங்க. காப்பியும் வந்துரும், அப்பாவும் வந்துருவாரு.”

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் ‘சிலுங், சிலுங்’கென்ற கொலுசு ஒலிக்க சென்று மறைந்தவளையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் பூஜையறையிலிருந்து வெளியே வந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ‘தர்மகர்த்தா’ ஏகாம்பரத்தை கவனிக்க தவறிவிட்டான்.

“வாங்க தம்பி. பயணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா?”

திடுக்கிட்டு திரும்பிய சிதம்பரம் அவரைப் பார்த்து ஒரு நிமிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான்.

“என்ன தம்பி... திகைச்சுபோனா மாதிரி இருக்கு? சிவந்தி ஏதும் குத்தலா சொல்லிட்டாளா? அவ விளையாட்டுத்தனமா ஏதாவது சொல்லியிருந்தா மனசுல வச்சிக்காதீங்க.. தாயில்லாப்பெண். கொஞ்சம் செல்லம் குடுத்துட்டேன்...”

ஏகாம்பரம் முற்றத்தின் குறுக்கே கடந்து எதிர் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த முக்கால் கை சட்டையை அணிந்துக்கொண்டு அவனெதிரிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவனையும் அமருமாறு சைகைக் காண்பித்தார்.

தன்னெதிரில் வந்தமர்ந்த ஏகாம்பரத்தின் கம்பீரமான தோற்றத்தால் கவரப்பட்டவனாய் என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் தடுமாறிப்போன சிதம்பரம் சுதாரித்துக்கொண்டு அவரைப் பார்த்து அடக்கத்துடன் புன்னகைத்தான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க டாட்டர் திடீர்னு வந்து கேட்டதுல கொஞ்சம்...”

அவனுடைய தடுமாற்றத்தை கண்டுகொள்ளாதவராய் உள்ளே திரும்பி குரல் எழுப்பினார். “ஏய் சிவந்தி! ஒரு காப்பி கொண்டுவர இத்தனை நாழியா? வெரசா வா.. என்ன நீ?”

உள்புற அறைகளில் ஒன்றிலிருந்து வந்த சிவந்தி அவனை நோக்கி புன்னகைத்தவாறு வந்து காப்பி டபராவைக் கொடுத்துவிட்டு திரும்பி செல்ல அவளை நோக்கி சென்ற தன் பார்வையை வெகு சிரமப்பட்டு தவிர்த்து ஆவி பறக்கும் காப்பி டபராவை அருகிலிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு ஏகாம்பரத்தை நோக்கி திரும்பினான்.

“அப்பா உங்கள ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்க..”

“ரொம்ப நன்றி தம்பி. வீட்டுல பட்டாபி அண்ணா, அண்ணி எல்லாரும் செளக்கியம் தானே?”

“அம்மா காலமாயி ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது..”

“அப்படியா? எனக்கு தெரிவிக்கவேயில்லையே?” சட்டென்று மெளனமாகிப்போன ஏகாம்பரம் அவன் காப்பியை உறிஞ்சிக் குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

காலி காப்பி டபராவை குறு மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்த சிதம்பரம் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல வந்து தயங்குவதை உணர்ந்த ஏகாம்பரம், “என்ன தம்பி.. சொல்லுங்க. ஏதாவது முக்கியமான விஷயமா வந்தீங்களா? அண்ணாவும் ஃபோன்ல நீங்க வர்றீகன்னு தான் சொன்னாகளே தவிர என்ன விஷயம்னு சொல்லலே..”

சிதம்பரம் தயக்கத்துடன் அவரை ஏறெடுத்துப் பார்த்தான், “நான் சொல்றதை நீங்க தவறா எடுத்துக்கக்கூடாது..”

“எதுவானாலும் சொல்லுங்க தம்பி.. நான் என்னால முடிஞ்சதுனா செய்யப் போறேன்.. சும்மா சொல்லுங்க..”

சிதம்பரம் தன் தோளில் தொங்கிய துணிப்பையிலிருந்து நான்காய் மடித்து வைத்திருந்த செய்தித்தாள் ஒன்றை எடுத்து பிரித்து அதில் நாற்புறமும் பென்சிலால் வளைத்திருந்த செய்தியை அவரிடம் காண்பித்து அவர் அதைப் படித்து முடிக்கும் வரை அவரையே பார்த்து காத்திருந்தான்.

செய்தியைப் படித்து முடித்து விட்டு எந்த சலனமுமில்லாமல் அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு எழுந்து நின்ற ஏகாம்பரம் சுவரில் தொங்கிய வெளிர் மஞ்சள் துண்டையெடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார்.

“தம்பி. நீங்க பட்டாபி அண்ணாவோட மகனா வந்துருக்கீங்க. ஒரு ரெண்டு, மூனு நாள் இருந்து ஊரைச் சுற்றி பார்த்துட்டு பட்டணம் போய் சேருங்க. அதான் உங்களுக்கு நல்லது. அத விட்டுட்டு பத்திரிகைல போட்ருக்கறதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக்கிட்டு உங்க நேரத்தை வீணாக்காதீங்க. என்ன நா சொல்றது?”

அவருடையை குரலிலிருந்த முரட்டுத்தனத்தை முற்றிலும் எதிர்பார்க்காத சிதம்பரம் என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி ஒன்றும் பேசாதிருந்தான்.

ஏகாம்பரம் வீட்டினுள் திரும்பி தன் மகளை அழைத்தார். “சிவந்தி, தம்பிக்கு குளிக்க தண்ணி விளாவிட்டு காப்பி பலகாரம் குடு. நா பஞ்சாயத்து ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்”

சிதம்பரத்தை மீண்டும் ஒரு முறை அமைதியாய் பார்த்தவர் முகத்தில் சற்று முன்பிருந்த கோபம் முற்றிலுமாய் மறைந்திருந்ததை பார்த்து அதிசயித்து போனான். “நீங்க குளிச்சி சாப்டு ஓய்வெடுங்க தம்பி. நீங்க வெளியே எங்காச்சும் போவணும்னா சுடலை வெளியிலேத்தான் இருப்பான். என்னைவிட அஞ்சு வயசு சின்னவன். கல்யாணம் காச்சின்னு ஒண்ணும் பண்ணிக்கலை. ஊர்ல எல்லா எடமும் தெரியும், கோயில் அப்புறம் அத சுத்தியிருக்கற மண்டபம் இதெல்லாம் எந்த ராசா காலத்துல கட்டுனது, எப்ப புதுப்பிச்சதுன்னு எல்லா சரித்திரமும் அவனுக்கு அத்துப்படி. நான் சாயங்காலமா உங்கள பாக்கறேன்.”

வாசல் வரைக்கும் போனவர் அவனை ஒரு முறை திரும்பி பார்த்தார். “அப்புறம் நா சொன்னது ஞாபகமிருக்கட்டும். அனாவசியமா எதப்பத்தியும் கவலைப்படாதீங்க. ரெண்டு நா சந்தோஷமா இருந்துட்டு போங்க. நீங்க வீட்டுக்கு ஒரே புள்ளன்னு தெரியும். அதனாலதான் சொல்றேன்.”

அவர் குரலில் மீண்டும் தொனித்த எச்சரிக்கை அச்சுறுத்த அவருடைய பார்வையைத் தவிர்த்தவாறு எழுந்து நின்று அவர் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் சிதம்பரம்.

“அப்பா சொன்னா மாதிரி சுடு தண்ணி காய போட்டிருக்கேன். அதோ அந்த ரூம்ல போய் துணியை மாத்திக்கிட்டு வாங்க.” என்று தன் பின்னால் வந்து நின்ற சிவந்தி காண்பித்த அறையை நோக்கி நடந்தவன் அங்கு தான் கொண்டு வந்த பெட்டி மற்றும் காமிரா அடங்கிய கைப்பை கியவை சுவர் அலமாரியில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான்.

அவன் பின்னாலேயே அந்த அறைக்குள் நுழைந்த சிவந்தி மின் விளக்கு மற்றும் மின்விசிறி கியவற்றை இயக்கிவிட்டு அறையின் மையத்தில் இடப்பட்டிருந்த கட்டிலை தட்டி சுத்தப்படுத்திவிட்டு தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனைக் குறும்புடன் பார்த்து புன்னகைத்தாள்.

“நீங்க ஏதாச்சும் பத்திரிகைல ரிப்போர்ட்டரா இருக்கீங்களா?”

பெட்டியை திறந்து தன் வேட்டி, டவலை எடுத்துக்கொண்டு நிமிர்ந்த சிதம்பரம் அவளைக் குழப்பத்துடன் பார்த்தான். “ஏன் கேக்கறீங்க?”

“இல்ல காமிரா, செய்தித்தாள் சகிதமா வந்திருக்கீங்களே. அதான்..”

“உங்க அப்பா கிட்ட பேசுனத ஒட்டு கேட்டிட்டிருந்தீங்களா?”

“ஆமான்னு வச்சுக்கங்களேன்..”

“அது தப்பில்லையா..”

அவன் குரலில் ஒலித்த கேலியை கண்டு கொள்ளாதவளாய், “இதுல என்னங்க தப்பு? நீங்க ஒண்ணும் ரகசியமா பேசலையே. அதுவுமில்லாம இந்த பழங்கால வீட்டுல கூடத்துலருந்து பேசினா எல்லா ரூமுக்கும் ஸ்பஷ்டமா கேக்கும். சொல்லுங்க நீங்க எந்த பத்திரிகைலருந்து வந்துருக்கீங்க?”

“நான் ஒரு ஃப்ரீலான்சர். சமூகத்துல நடக்கற அவலங்கள அலசி எழுதி எந்த பத்திரிகை அதை வெளியிடுவாங்கன்னு தோனணுதோ அதுக்கு அனுப்புவேன். அது வெளி வர வரைக்கும் எத்தனைப் பத்திரிகைக்கு அனுப்பணுமோ அத்தனைக்கும் அனுப்பிக்கிட்டேயிருப்பேன்.” சிதம்பரம் தன் பர்ஸிலிருந்த விசிட்டிங் கார்டில் ஒன்றையெடுத்து அவளிடம் நீட்டினான்.

‘சிதம்பரம் எம்.ஏ., ஜர்னலிஸ்ட்’ என்று மெல்லிய குரலில் அதை வாசித்த சிவந்தி அவனைப் பார்த்து குறும்புடன் புன்னகைத்தாள்.

“சபாஷ். இப்போ எதுக்காக இங்க வந்திருக்கீங்க?”

“அதான் ஒட்டு கேட்டீங்கல்ல?”

“நான் அப்பா சொன்னதைத்தானே கேட்டேன்? நீங்க அப்பாகிட்ட காண்பிச்சதை பாக்கலையே? அதைக் காண்பிங்க, படிச்சிட்டு உங்க விசிட் சக்ஸஸ் ஆகுமா இல்லையான்னு சொல்றேன்.”

வேண்டாம் என்று தலையை அசைத்த சிதம்பரம், “இங்க குளிக்க பாத்ரூம் இருக்கா, இல்ல..”

அவனுடைய நிராகரிப்பை பெரிதுபடுத்தாத சிவந்தி அவன் முன்னால் நடந்து கொல்லைப் புறத்திலிருந்த வாணம் பார்த்த குளியலறையை காண்பித்துவிட்டு, “குளிச்சிட்டு வாங்க, தோசை வார்த்து வைக்கறேன்” என்றவாறு சமையலறையுள் நுழைந்தாள்.

அவன் குளித்துவிட்டு வந்து கூடத்திலிருந்த இருக்கையில் அமர சிவந்தி கையில் இலையுடன் வந்து, “சமையல்கட்டுல ஒரு சின்ன மேசையிருக்கு. அதுல சாப்பிடறீங்களா, இல்ல இங்கேயே பாய் போடவா?” என்றாள்.

“உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லைனா சமையல் கட்டுலயே இலையை போடுங்க.”

அவளைத் தொடர்ந்து நுழைந்தவன் சகல வசதிகளுடன் பளிச்சென்றிருந்த சமையலறையைப் ச்சரியத்துடன் பார்த்தான்.

“வாவ்.. சூப்பரா வச்சிருக்கீங்களே. இந்த வீட்டுக்குள்ள இத்தனை அல்ட்ரா மாடர்ன் கிச்சனா? அதுவும் இத்தனை க்ளீனா.. குட். ஐ ம் இம்ப்ரஸ்ட்.”

அவனைப் பார்த்து முதல் முறையாய் வெட்கத்துடன் புன்னகைத்த சிவந்தி, “தாங்க்ஸ்” என்றாள்.

சமையலறையின் ஓரமாய் இருந்த அந்த சிறிய மேசையருகிலிருந்த மர நாற்காலியில் அமர்ந்து சிவந்தி சுடச்சுட பரிமாறிய தோசையும் அவனுக்கு பிடித்தமான தக்காளி சட்டினியும் அவனுடைய பசியைத் தூண்ட வழக்கத்திற்கு மேலாகவே சாப்பிட்டுவிட்டான்.

“பரவாயில்லையே. சிட்டியிலருக்கறவங்க டையட்டுன்னு சொல்லிக்கிட்டு காலைல ஒண்ணும் சாப்பிடாமயே வயித்த காயப் போட்டுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அதுல சேத்தியில்லையோ. ரொம்ப நாள் கழிச்சி என் சமையலை ருசிச்சி சாப்பிட ஒரு ஆள் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். தாங்க்ஸ். சொல்லுங்க, மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்?”

அவள் தன்னை கேலி செய்கிறாளோ என்ற ஐயத்துடன் அவளைப் பார்த்த சிதம்பரம், “ஐயோ. அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நேத்தைக்கு ஏழு மணிக்கு வழியில சாப்பிட்டது. அதான் கொஞ்சம் அதிகமா..” என இழுக்க..

சிவந்தி கலகலவென உரக்க சிரித்தாள்.

“அதாவது பசியில ருசியெல்லாம் யார் பார்த்தான்னு சொல்றீங்க.. அப்படித்தானே..”

“சேச்சே. அப்படி சொல்ல வரலீங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி சட்டினியும் ஒரு காரணம்.”

“ஓகே, ஓகே. நான் தப்பா நினைக்கல. இப்போ சொல்லுங்க. மதியத்துக்கு சாம்பார் வச்சி உருளைக்கிழங்கு பொரியல், சுட்ட அப்பளம், ரசம், மோர்.. போதுமா, இல்ல..” அவளுடைய குரலில் தொனித்தது கேலியா இல்லை கரிசனமா என்று முடிவெடுக்க முடியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருக்க ஏகாம்பரத்தின் சகோதரர் சுடலைமுத்து சமையலறை வாசலில் வந்து நின்று அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“என்ன தம்பி சிவந்தி ஏதாச்சும் வம்பு பண்றாளா? அவ சமையலைப் போலவே அவளுடைய வம்பும் விசேஷமாயிருக்கும். ரெண்டு நாள்தானே பொறுத்துக்குங்க..”

“என்ன சித்தப்பு நீங்க? நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்?”

சுடலைமுத்து அவளைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்தார். “நா உன்னைத் தப்பா சொல்வேனா. தம்பிக்கு உன் கிண்டல் புதுசில்லையா? அவர் தப்பா எடுத்துக்கிட்டா? விருந்தாளியாச்சே.”

சிதம்பரம் சிவந்தி கொண்டு வந்து வைத்த பாத்திரத்தில் கை அலம்பிக்கொண்டு அவள் தந்த கைத்துவாலையை தவிர்த்து தன் கையுலிருந்த கைக்குட்டையால் கைகளைத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். “ நீங்க கவலைப் படாதீங்க. சிவந்தி சொன்னதை நான் தப்பாவே எடுத்துக்கலை. சொல்லுங்க, இந்த ஊர்ல பாக்கறதுக்கு என்ன இருக்கு?”

“தம்பி நீங்க பட்டணத்துலருந்து வர்றீங்க. நீங்க பார்க்காதது ஒண்ணும் இங்க இருக்கும்னு எனக்கு தோனலை. ஆனாலும் இங்கருக்கற சிவன் கோயில் ரொம்பவும் பிரசித்தமானது. ஆயிரம் வருஷங்களுக்கு மேலாச்சுதுன்னு சொல்லுவாக. கோயில ஒட்டி நிக்கற நூறு கால் மண்டபமும் நீங்க பார்க்கணும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல். முழுசா கொண்டு வந்து செதுக்கதுன்னு சொல்லுவாக. அதையும் பாக்கலாம். மத்தபடி பெருசா இந்த ஊர்ல விசேசம்னு பெருசா ஒன்னுமில்லை.”

அவர் ராகம் போட்டு பேசும் விதம் சிதம்பரத்துக்கு வேடிக்கையாயிருந்தது. ஆனாலும் அவருடைய எளிமை அவனை வெகுவாகக் கவர்ந்தது.

அவரைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தான். “சரி, சொல்லுவாக, சொல்லுவாகன்னு சொல்றீங்களே, யாரைச் சொல்றீங்க?”

அவர் வெட்கத்துடன் பேசாமல் தலையைக் கவிழ்ந்துகொள்ள சிவந்தி படபடத்தாள். “பாத்தீங்களா சித்தப்பு, நான் கிண்டலடிக்கிறேன்னு விசனப்பட்டீங்களே, இப்ப பாருங்க இவரு வயசு வித்தியாசம் பாக்காம உங்களையே கிண்டலடிக்கறார்.”

சிதம்பரம் இருவரையும் பார்த்து பொதுவாய் இல்லை என்று தலையசைத்தான். “நோ நோ. அப்படியில்லை. சும்மா தமாஷாத்தான் கேட்டேன். சாரி அங்கிள். வாங்க உங்க கோயிலை பாக்கலாம். வரேன் சிவந்தி.”

“பகல் சாப்பாட்டுக்கு வந்திரணும். சித்தப்பா அவரைக் கண்டிப்பா கூட்டிக்கிட்டு வாங்க.” சிவந்தி சிதம்பரம் அறையிலிருந்த காமிராவை மட்டும் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்தாள். கூடவே சென்று வழியனுப்பிவிட்டு திரும்பி வந்தவள் சிதம்பரத்தின் தோள்பை கட்டிலின் மேல் கிடப்பதைப் பார்த்துவிட்டு அவன் மறந்திருப்பானோ என்ற எண்ணத்தில் அதை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஆனால் சிவந்தி வாசலை அடைந்தபோது இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற டாடா சுமோவின் பின்புறத்தைத் தான் காண முடிந்தது. வாகனம் தெருக்கோடி முனை சென்று திரும்பும் வரை நின்றிருந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

அவர்கள் இருவரும் திரும்பி வருவதற்குள் பகலுணவு வேலைகளை முடித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு சமையலறையை நோக்கி விரைந்தவள் சிதம்பரத்தின் தோள்பையை அவனுடைய அறையில் வைத்துவிட்டு கொல்லைப்புறத்தில் தென்னை ஓலைகளை முடைந்துக்கொண்டிருந்த வேலாயியை அழைத்து சமையலுக்கு தேவையான காய் கறிகளை நறுக்க பணித்துவிட்டு அரிசியைக் களைந்து குக்கரில் இட்டு காஸ் அடுப்பில் வைத்தாள்.

சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சிதம்பரத்தின் அறையை நோக்கி ஓடிய சிவந்தி அவனுடைய தோள்பையை துழாவி காலையில் அவன் அவளுடைய தந்தையிடம் காண்பித்த செய்தித்தாளைத் தேடி எடுத்து வெளிக்கூடத்திலிருந்த தன் தந்தையின் சாய்வு நாற்காலியிலமர்ந்து அதைப் பிரித்தாள்.

எடுத்த எடுப்பிலேயே பென்சிலால் வளைத்து ‘ஹெள கேன் திஸ் ஹாப்பன்?’ என்று பெரிதாய் எழுதியிருந்த பகுதியை வாசிக்க துவங்குமுன் வாசலை ஒருமுறை பார்த்தாள். ‘நல்ல வேளை, யாருமில்ல. கடகடன்னு படிச்சிரணும். ஏதோ நம்ம ஊரைப் பத்தித்தான் போலிருக்குது.’ என்று தனக்குள் கூறியவாறு வாசிக்க துவங்கியவளின் முகம் படித்து முடித்தவுடன் வெளிறிப் போனது.

படித்து முடித்து வெகு நேரம் வரை சிலையாய் சமைந்து போன சிவந்தியை சமையலறையிலிருந்து வந்த குக்கரின் விசில் ஒலி திடுக்கிட வைத்தது. பரபரப்புடன் எழுந்து சமையலறையினுள் ஓடியவள் சுறு சுறுவென சுழன்று சமையல் வேலையில் ஈடுபட்டாலும் மனம் சற்று முன் செய்தித்தாளில் படித்ததையே சுற்றி வந்தது.

சிவந்திக்கு தன் தாய் மரணப்படுக்கையில் இருந்தபோது தன்னிடம் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

சென்னையில் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் தாய் மரண படுக்கையிலிருக்கிறாள் என்று கல்லூரி ஹாஸ்டலில் தன் இளைய தந்தை சுடலை வந்து நின்றபோது அதிர்ச்சியில் உறைந்து போனாள் சிவந்தி.

நல்ல திடகாத்திரமான உடல்நிலையுடன் தன்னை வழியனுப்பி வைத்தவளுக்கு வந்து ஒருமாதம் கூட நிறைவேறாத நிலையில் அப்படியென்ன நேர்ந்திருக்க இயலும் என்று வழி நெடுக அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முடியாமல் சுடலை சித்தப்பு தடுமாறியதிலிருந்து ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிந்தது அவளால்.

வீடுவந்து சேர்ந்தவுடன் நேரே தன் தாயின் படுக்கையறைக்கு சென்றவள் அவளுடைய தோற்றத்தைக்கண்டு முற்றிலுமாய் அதிர்ந்துபோனாள். “என்னப்பா நடந்திச்சி? ஏன் எனக்கு முன்கூட்டியே சொல்லலை?” என்று அழுகையுடன் கேட்ட கேள்விக்கு, “எனக்கு ஒண்ணும் தெரியலைடா.. அம்மா எதையோ சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுட்டான்னு சொல்றார் டாக்டர். ரெண்டே நாள்ல உங்கம்மா இப்பிடியாயிட்டா. நீயே அவ கிட்ட கேட்டு சொல்லு. அவளுக்கு நா என்ன குறை வச்சேன், எதுக்கு இப்படி பண்ணான்னே தெரியலையே. ஊர்ல நா தலை நிமிந்து நடக்க முடியாம பண்ணிட்டாளே’ என்று தன் தாயின் உடல்நிலையை விட தன் மானமே பெரிது என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிய தன் தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவந்தி.

“என்னம்மா சொல்றார் அப்பா? நீ என்னத்த சாப்பிட்ட?”

பதில் பேசாமல் தன்னை நோக்கி மகளை இழுத்த சிவந்தியின் தாய் மெல்லிய குரலில், “உங்கப்பா போயிட்டாரான்னு பார். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.” என்றாள்.

தன் தாயை ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள் சிவந்தி. “என்னம்மா சொல்றே? அப்பாவுக்கு தெரியகூடாத அப்பிடி என்ன ரகசியத்தை சொல்லப்போற?”

“நீ முதல்ல போய் பாத்துட்டு வா. நா ரொம்ப நாழி பேசமுடியாது. சீக்கிரம் போ.”

தன் தாயின் முகத்தில் தென்பட்ட உறுதியைப் பார்த்து கலங்கிய சிவந்தி விரைவாய் வெளியேறி தன் தந்தை வீட்டிலில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திரும்பினாள்.

“இப்ப சொல்லு. என்ன விஷயம்?”

தன் தாய் அன்று திக்கித்திணறி கூறி முடித்ததை இப்போது மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து பார்த்தாள் சிவந்தி.

அதற்கு பிறகு அவளுடைய தாய் பேசவேயில்லை. தன் மகள் வருவதற்காகவே காத்திருந்தவள் போல் அன்று இரவே மரித்துப்போனாள்.

ஈமச்சடங்குகள் முடியும் வரை தன் தாயின் செய்கையையும் அதற்காக அவள் தன்னிடம் கூறிய காரணத்தையும் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த சிவந்தி மூன்றாம் நாள் தான் கல்லூரிக்கு திரும்ப முடிவு செய்திருப்பதாக தன் தந்தையிடம் அறிவித்தாள்.

“நீ என்னடா சொல்றே? எல்லாம் முடிஞ்சி முழுசா மூணு நாள் கூட ஆவலை, யாராச்சும் கேட்டா என்ன சொல்வாங்க?” என்ற மறுத்த தன் தந்தையை உற்றுப் பார்த்தாள் சிவந்தி.

“நீங்களாப்பா ஊருக்கு பயப்படுறீங்க? நீங்க யாருப்பா? இந்த ஊருக்கே தலைவர்! கோயில் தர்மகர்த்தா! உங்க வீட்ல நடக்கறத கேள்வி கேட்க இங்க யாருக்குப்பா தெம்பிருக்கு?”

“நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன். நீ என்ன பேசறே?”

“நான் என்ன பேசறேனா? ஏம்பா அம்மா ஏன் செய்யக்கூடாத காரியத்தை செஞ்சிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியாது?”

தன் மகளின் முகத்திலும் குரலிலிமிருந்த கோபத்தைக் கண்ட ஏகாம்பரம் தன் மகளை கைநீட்டி அணைத்துக்கொள்ள முயன்றார். அவர் கைகளைத் தட்டி விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு பின்னால் நகர்ந்து சென்ற சிவந்தியை பிடித்து தன் பக்கம் திருப்பியவர், “இப்போ எதுவும் கேட்காத சிவந்தி. நீ போகணும்னு நினைச்சா போ. நா தடுக்கலை. நீயா எதையாவது கற்பனைப் பண்ணிகிட்டு வார்த்தையை வளக்காத. எனக்கு பிடிக்காது.”

தன் தந்தையின் குரலில் இருந்த உறுதியை கவனித்த சிவந்தி இனி அவரிடம் பேசி பயனில்லையென்று தீர்மானித்தவளாய் சுடலை சித்தப்பு தடுத்தும் கேளாமல் தன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.

சரியாய் ஒரு மாதம் கழித்து அவளுடைய கல்லூரி விடுதிக்கு வந்த கடிதம் அவளுடைய தாய் மரணப்படுக்கையில் அவளிடம் கூறியதை உறுதிப்படுத்தியது. அக்கடிதம் யாருடைய கையொப்பமுமில்லாமல் இருந்ததால் அவளால் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று.

அன்றிலிருந்து அவளுடைய கல்லூரி படிப்பு முடியும்வரை ஊருக்கு செல்வதை அவள் முடிந்தவரை தவிர்க்க துவங்கினாள்.

அவளுடைய இந்த நடவடிக்கை ஏகாம்பரத்தை குழப்பினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னுடைய இரட்டை வாழ்க்கையைத் தொடரலானார். தன் அண்ணாவுக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்டுவிட்ட விரிசலை கண்டும் காணாதவராய் காலம்தான் இதை சரி செய்யமுடியும் என்று விட்டுவிட்டார் சுடலைமுத்து. அவருக்கு தன் அண்ணாவின் மறுபக்கம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாதவராய் மெளனியாய் போனார்.

கல்லூரி படிப்பு முடிந்து வீடு திரும்பிய சிவந்தி தன் தந்தையின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சித்தப்பு மூலமாக அறிந்து ஆறுதலடைந்து தன் தாயின் மரணத்தையும் அதன் காரணத்தையும் தன் மனதிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு சகஜமாய் வலம் வரலானாள்.

காலத்தின் போக்கில் முற்றிலுமாய் ஆறிப்போயிருந்த ரணம் இதோ இன்று படித்த செய்தி மூலம் மீண்டும் திறந்துகொண்டதை உணர்ந்தாள் சிவந்தி.

சமையலை முடித்துவிட்டு வேலாயியை அழைத்து சமையலறையை சுத்தம் செய்ய பணித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கூடத்தில் வந்து அமர்ந்து சிதம்பரத்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வந்து சேர்ந்த சிதம்பரம் வரும்போதே அவள் முகத்தைப் பார்த்துவிட்டு தான் போன பிறகு அவள் அந்த செய்தியை வாசித்திருப்பாள் என்பதை உணர்ந்துகொண்டான்.

இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் அவளைப் பார்த்து புன்னகைத்தான். “என்னங்க, சாப்பாடு ரெடியா? உங்க ஊர் வெயில் என் எனர்ஜியை கம்ப்ளீட்டா உறிஞ்சிட்டது. சாப்பிட்டா சரியா போயிடும்னு நினைக்கறேன். வீட்டுக்கு வந்த விருந்தாளி இப்படி கேக்கக் கூடாதுதான். இருந்தாலும் என்ன செய்ய? சாப்பிடலாமா?”

அவனைப் பார்த்து அவனுடைய சிரிப்பால் கவரப்பட்டு அவளும் சிரித்தவாறு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். “சித்தப்பு எங்கே? உங்க கூட வரலையா?”

“இல்லீங்க. அவர் கொஞ்சம் வேலையிருக்குன்னு கோயில்லயே தங்கிட்டார். நான் வந்து இறங்கிக்கிட்டு வண்டியை திருப்பி அனுப்பிச்சிருக்கேன். டிரைவர் போய் உங்க அப்பாவை பிக்கப் பண்ணிட்டு அப்படியே போய் உங்க அங்கிளையும் கூட்டிக்கிட்டு வருவார்னு நினைக்கறேன். அவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கப்புறம் சாப்பிடலாம். அவசரமில்லை.” சிதம்பரம் தன் அறைக்கு திரும்பி உடை மாற்ற ஆரம்பித்தான்.

சிவந்தி சமையலறையிலிருந்த மேசையில் இலையைக் கழுவி போட்டு உணவு பாத்திரங்களை பரப்பி வைத்திவிட்டு அவனுடைய அறை வாசலில் நின்று அவனை அழைத்தாள். “நீங்க வாங்க, நாம சாப்பிடலாம். அப்பா வீட்டுக்கு வந்தாத்தான் நிச்சயம். சித்தப்புக்கு வெத்தலையும், கோயில்ல கிடைக்கற குளிர்ந்த மோருமே போறும். பசிக்கவே பசிக்காது. நாங்க மூணு பேரும் சேர்ந்து சாப்பிட்டு எத்தனையோ மாசமாயிருச்சு.”

“அப்படின்னா ஒகே. நாம கிச்சன்லயே மார்னிங் சாப்பிட்டா மாதிரி சாப்பிடலாம். கை கால் கழுவிக்கிட்டு வந்திடறேன்.”

சிதம்பரம் கைகால் அலம்பிக்கொள்ள கொல்லை பக்கம் செல்ல சிவந்தி சமையலறையிலிருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்தாள்.

“குட். சாம்பார், ரசம்னு வாசம் பயங்கரமா தூக்குதே. இப்ப எனக்கு இறந்து போன எங்கம்மா ஞாபகம் வருது.” என்றவாறு வந்தமர்ந்த சிதம்பரம் அவள் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரைப் பார்த்து திடுக்கிட்டான்.

“என்னங்க? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?”

சிவந்தி ‘இல்லை’ என்று தலையசைத்தாள். “எனக்கும் அம்மா ஞாபகம் வந்திருச்சி, அதான்.... நீங்க சாப்பிடுங்க.”

சிதம்பரம் ஆதரவுடன் அவள் கரத்தைப் பிடித்து அழுத்தினான். “இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்கம்மா எப்படி இறந்தாங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”

உணவு பரிமாறுவதில் தீவிரமாயிருந்த சிவந்தி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். “முதல்ல நீங்க சாப்பிடுங்க. அப்புறமா சொல்றேன். எனக்கும் உங்க கிட்ட கொஞ்சம் பேசவேண்டியிருக்குது.”

அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துக்கொண்டவன்போல் சிதம்பரம் மெளனமாய் சாப்பிட்டு முடித்தான். சிவந்தி பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரும் வரை சிதம்பரம் தன் இருக்கையிலமர்ந்து காத்திருந்தான்.

“நாம இங்கேயே அமர்ந்து பேசறதுல உங்களுக்கு ஆட்சேபனையில்லேல்லே” கைகளைத் துடைத்தவாறே தன் அருகில் வந்தமர்ந்த சிவந்தியைப் பார்த்து ‘இல்லை’ என தலையசைத்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சிவந்தி அவனைப் பார்த்து, “நா உங்க பேக்லருந்த செய்தித்தாளைப் படிச்சேன். தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றாள்.

“இட் ஸ் ஓகே. நீங்க படிக்கணும்னுதான் நான் பேக்கை இங்கேயே வச்சிட்டு போனேன். உங்களுக்கு இங்க நடக்கற அசிங்கங்கள் தெரியாதுன்னு நினைக்கறேன். ஆம் ஐ கரெக்ட்?”

“ஓரளவுக்கு, எஸ்.”

“அப்படீன்னா. உங்களுக்கு தெரியும், ஆனா முழுசா இல்ல? ஈஸ் தட் இட்?”

“ஆமா.”

“உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”

“மூணு வருஷத்துக்கு முன்னால அம்மா அவளோட மரண படுக்கைல ஒரு தாய் தன் மககிட்ட இந்த விஷயத்த எந்த அளவுக்கு நாசூக்கா சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொன்னா. அத கேட்டதும் எனக்கு மூர்க்கத்தனமான கோபம் வந்திச்சி. ஆனா சுடலை சித்தப்பு ‘நீ கல்யாணமாகி வேற வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு. உங்கம்மாவாலேயே தீர்க்க முடியாத பிரச்சினையில நீ தலையிட்டு ஒண்ணும் ஆகபோறதில்லே. நீ காலேஜுக்கு போய் உன் படிப்பைப் பாரு. உங்கம்மாவோட மரணத்துக்கு என்ன காரணம்னு அண்ணாவுக்கு தெரியாம இல்ல. கொஞ்சம் கொஞ்சமா இந்த கூட்டத்திலருந்து விலகிடுவாரு. அதுக்கு நா பொறுப்பு’ன்னு சொன்னதால நான் பேசாம ஹாஸ்டலுக்கு போயிட்டேன். நான் படிப்பு முடிஞ்சி திரும்ம்பி வந்து மூணு மாசம் ஆகப்போகுது. சித்தப்பு சொன்னதிலேருந்து அப்பா அந்த மிராசுதார் கூட்டத்த விட்டு விலகிட்டதாத்தான் நினச்சுக்கிட்டிருந்தேன். ஆனா அப்பா உங்கள மிரட்டுனத கேட்டதுலருந்து எனக்கு அப்பா இன்னும் திருந்தலன்னு உறுதியாயிருச்சி. இப்ப நீங்க என்ன செய்யறதா இருக்கீங்க?”

சிவந்தி சொல்லி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த சிதம்பரம் அவளுடைய நேரடியான கேள்வியை எதிர்பாராததால் என்ன பதில் சொல்வது என்று சிறிது நேரம் யோசிக்கலானான்.

“என்ன சிதம்பரம் சைலண்டாயிட்டீங்க?”

“உங்கப்பா காலையில என்ன இண்டைரக்டா வார்ன் பண்ணதென்னவோ உண்மைதான். ஆனா அதுக்கெல்லாம் மசியற ஆள் நானில்லே. ஆனா அதே சமயம் உங்க சித்தப்பா என்னோட கோயில்ல இருந்தப்போ ஒரு விஷயம் சொன்னார். அதப்பத்தி தான் யோசிக்கறேன்.”

சிவந்தி வியப்புடன் அவனைப் பார்த்தாள். இவன் பயந்து போய் பின்வாங்குகிறானோ? வீரமெல்லாம் பேச்சில்தான் போலும்.

“சித்தப்பு அப்பிடியென்ன சொல்லிச்சி?”

சிதம்பரம் யோசனையுடன் அவளை பார்த்தான். இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் ஒன்றும் பேசாமலிருந்தான்.

சிவந்திக்கு அவனுடைய மெளனம் எரிச்சலைத் தந்தது.

“என்ன சிதம்பரம்?”

“இல்ல.. உங்ககிட்ட சொல்லாம அவாய்ட் பண்ணமுடியுமான்னு பார்த்தேன்..”

“அப்படியென்ன விஷயம் எங்கிட்டகூட சொல்ல முடியாம?”

“ஓகே. சொல்லிடறேன். ஆனா அதை நீங்க எப்படி எடுத்துக்க போறீங்கன்னுதான் யோசிக்கறேன்.”

“ரொம்ப யோசிக்காம சொல்லுங்க. ப்ளீஸ்..”

சிவந்தியின் குரலில் இருந்த கோபம் சிதம்பரத்துக்கு புரிந்தது. அவளுடைய இந்த கோபத்துக்குதான் அவன் பயந்தான். அவள் கோபத்தில் ஏதாவது செய்ய போக விஷயம் விபரீதத்தில் முடிந்து விடுமோ என்று அஞ்சினான்.

“சிதம்பரம். ப்ளீஸ். ஐ ம் லூசிங் பேஷன்ஸ்.”

“ஒகே. டோண்ட் கெட் அப்செட். சொல்றேன். உங்க அப்பா உங்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்றதுல மும்முரமாயிருக்காராம். இன்னும் ஒண்ணு அல்லது இரண்டு மாசத்துல முடிஞ்சிருமாம். இந்த நேரத்துல அண்ணா விஷயம் வெளியே வந்து போலீஸ் கீலிஸ்னு பிரச்சினை பப்ளிஷ் ஆச்சுனா உங்க வாழ்க்கை பாழாயிடுமோன்னு உங்க சித்தப்பா பயப்படறார்.”

சிவந்தி கோபத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் உதடுகள் துடிக்க தடுமாறினாள். சட்டென்று எழுந்து சென்று சமையலறையிலிருந்த சன்னல் வழியாக தோட்டத்தில் தென்னங்கீற்றுகளை கீறிக்கொண்டிருந்த வேலாயியை பார்த்துக்கொண்டு நின்றாள். இந்த வீட்டுக்காக சிறிதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருந்த அவளும் தன் தந்தையால் பாதிக்கப் பட்டவள் என்பதை நினைத்தபோது சிவந்தியின் கண்கள் கண்ணீரால் நிறைந்து அவளுடைய பார்வையை மறைத்தது.

“உங்கப்பாவும் அந்த பாழாப்போன மிராசுதாரும் வேற சில பெரிய மனுஷங்களும் சேர்ந்துக்கிட்டு இந்த ஊர்ல சமைஞ்ச பொண்ணுங்கள சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுபவிச்சிக்கிட்டுருக்காங்க சிவந்தி. இப்படியொரு விஷயத்தை வேலாயியோட அப்பா என்கிட்ட வந்து சொல்லி கதறியழுதப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைடி. அதான் போய் சேர்ந்துரலாம்னு முடிவு செஞ்சிட்டேன்...” அம்மா மரணப் படுக்கையிலிருந்து ஹீனக்குரலில் தன்னிடம் கூறியதை இப்போது நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

சிவந்தியின் கோபம் சிதம்பரத்தை வெகுவாக அச்சுறுத்தியது. ‘சிவந்தியும் அவளுடைய அப்பாவைப் போலத்தான் தம்பி. கோபம் வந்த என்ன செய்வா, எப்படி செய்வான்னே சொல்லமுடியாது. அவ அம்மா இறந்து மூணுநாள் கூட ஆகாத சமயத்துல அண்ணாகிட்ட ஆவேசத்தோட இந்த விஷயத்தைப் பத்தி பேச முயற்சி பண்ணவ தான் தம்பி சிவந்தி. நா மட்டும் இடையில நுழைஞ்சி அவளை சமாதான படுத்தியிருக்கலைன அப்பவே இந்த விஷயம் விபரீதமா போயிருக்கணும். அவ கல்யாணம் செஞ்சி போயிரணும். அப்புறம் தான் இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதுவரைக்கும் நீங்க இத பெரிசு பண்றதில்லேன்னு எனக்கு சத்தியம் பண்ணனும் தம்பி’ என்று தன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்ட அவளுடைய இளைய தந்தையை நினைத்து பார்த்த சிதம்பரம் இவளிடம் இதை கூறியது எத்தனை மடத்தனம் என்று நினனத்தான்.

தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த சிவந்தியின் பின்னால் ஓசைப் படாமல் போய் நின்ற சிதம்பரம் சன்னல் வழியே தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான். ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கரங்களிலிருந்த லாவகம் ஒரு கணம் அவனையும் கட்டிப்போட இருவரும் மெளனமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிதம்பரத்தின் மூச்சுக்காற்று சிவந்தியின் தோள்களை வருட திடுக்கிட்டு திரும்பி மிக அருகில் நின்றுக்கொண்டிருந்த அவன்மேல் சரிந்துவிட அவளுடைய தோள்களைப் மிருதுவாய் பிடித்து அழைத்துப் போய் இருக்கையிலமர்த்திவிட்டு அருகிலேயே தன் இருக்கையையும் நகர்த்தி அமர்ந்தான்.

“ஐ ம் சாரி சிவந்தி. இதுக்குத்தான் உங்க கிட்ட சொல்றதுக்கு நான் தயங்கினேன். ப்ளீஸ் டோண்ட் கெட் எக்சைட்டட். இட் ஈஸ் நாட் கோயிங் டு சால்வ் த பிராப்ளம்.”

இரண்டு கண்களும் கோபத்தில் தீப்பிழம்பாய் ஜொலிக்க தன்னைப் பார்த்த அவளுடைய பார்வையில் ஒரு நிமிடம் மிகவும் அரண்டு போனான் சிதம்பரம்.

“ஹ¤ஸ் ப்ராப்ளம் மிஸ்டர் சிதம்பரம்? ஹ¤ஸ் ப்ராப்ளம் ஈஸ் திஸ்? டு யு நோ ஒன் திங்? அதோ தோட்டத்துல தென்னம் ஓலைய கீறிக்கிட்டிருக்காளே அந்த பதினைஞ்சு வயசு பொண்ணு, அவ வயசுக்கு வந்த முதல் மூனு மாசத்துல எங்கப்பா தலைமயில இருக்கற அந்த பெரிய மனுஷங்க கூட்டம் சீட்டு போட்டு சீரழிச்சிட்டது. அவள பார்க்கும்போதெல்லாம் என் மனசு படற வேதனைய உங்களபோல ஆண்களால புரிஞ்சிக்க முடியாது சிதம்பரம். எங்க சித்தப்புவையும் சேர்த்துதான் சொல்றேன். அதனாலதான் தன்னுடைய அண்ணன் மகளோட கல்யாணம் அவருக்கு பெரிசா போயிருச்சி.”

அவளுடைய நியாயமான கோபத்தைப் பார்த்து அவளை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த அவனுடைய மெளனம் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது.

“என்ன சிதம்பரம் நா சொன்னதுக்கு மறு பதில் பேசமுடியாம வாயடைச்சி போயிட்டீங்க போலருக்கு? நீங்க வெளியே போறதுக்கு முன்னால சொன்னதென்ன, இப்ப நீங்க பேசறதென்ன? என்னோட கல்யாணத்த சாக்கா வச்சிக்கிட்டு இந்த விஷயத்தை மூடி மறைக்க நா சம்மதிக்க மாட்டேன்.”

இருக்கையிலிருந்த எழ முயன்றவளின் கையைப் பிடித்து இருத்திய சிதம்பரம் அவளைப் பார்த்து கெஞ்சினான். “ப்ளீஸ் சிவந்தி. கூல் டெளன்.”

சிவந்தியின் குரலைக் கேட்டு தோட்டத்திலிருந்து ஓடி வந்த வேலாயி சிதம்பரத்தைப் பார்த்து தயங்கி நின்றாள். “என்னாச்சிம்மா..” என்று அறையில் நுழைய முயன்றவளை தன் பார்வையாலேயே தடுத்தி நிறுத்தி ‘நீ போ’ என்று சைகைக் காண்பித்தான் சிதம்பரம்.

போக மனமில்லாமல் தயங்கி தயங்கி சென்றவள் சென்று மறையும் வரை மெளனமாயிருந்த சிதம்பரம் எழுந்து சென்று ஒரு டம்ளரில் குடிநீர் கொண்டு வந்து “டேக் திஸ்.” என்று அவள் கையில் திணித்தான். அவள் ஒரே மூச்சில் குடித்து முடித்து மேசையில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

“ஐ ம் சாரி. ஐ காட் எமோஷனல்.”

“ஐ அண்டர்ஸ்டாண்ட். ஆனா இந்த எமோஷன் நம்ம ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடாது. வீ வில் ஹாவ்டு மூவ் கேர்ஃபுல்லி. இந்த நேரத்துல நீங்க அவசரப்பட்டு எடுக்கற ஒவ்வொரு முடிவும் விஷயத்த சிக்கலாக்குமே தவிர முடிவுக்கு கொண்டுவராது. நா உங்க சித்தப்பாக்கிட்ட பேசுனதுலருந்து சொல்றேன். இப்போ உங்கப்பா அல்மோஸ்ட் அந்த கும்பல் கிட்ட ஒரு ப்ரிசனர் மாதிரி மாட்டிக்கிட்டாருன்னும் பத்திரிகைல வந்திருக்கறா மாதிரி போன மாசம் நடந்த அந்த இளம் பெண்ணோட மரணத்துல உங்க அப்பாவை மாட்டி விடற சதித்திட்டம் அந்த மிராசுதார் தலைமைல ரெடியாயிருக்குன்னு சுடலை அங்கிள் நினைக்கிறார்.”

சிவந்தி மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்டாள். “இங்க பாருங்க சிதம்பரம். செஞ்ச தப்புக்கு மாட்டிக்கிடாதவங்க செய்யாத தப்புக்கு மாட்டிக்கிடுவாங்க. அத தான் டிலேய்ட் ஜஸ்டிஸ்னு சொல்றோம். லெட் ஹிம் கெட் காட். ஹ¤ கேர்ஸ்? இதனால என் கல்யாணம் தள்ளிப் போனாலோ இல்ல நடக்காமவே போனாலோ எனக்கு கவலையில்லே. திஸ் ஈஸ் தி டைம் டு நெய்ல் திஸ் கேங். வித் ஆர் வித்தவுட் யுவர் ஹெல்ப். என்ன சொல்றீங்க?”

“டேய்.. உன்னாண்ட என்னடா சொன்னேன்? என் பொண்ணுகிட்ட இல்லாததெல்லாம் சொல்லி அவ மனசையே கெடுத்திட்டியேடா ராஸ்கல்” என்ற பெருங்குரலுடன் அவர்களிருந்த அறையினுள் நுழைந்து சிதம்பரத்தின் சட்டையை சேர்த்து பிடித்து அடிக்க எத்தனித்த ஏகாம்பரத்தின் கையை எட்டிப் பிடித்தாள் சிவந்தி.

“அப்பா. என்ன இது மிருகம் மாதிரி நடந்துக்கறீங்க? அவர் சட்டையை விடுங்க.”

சிவந்தியின் கண்களில் தெரிந்த அதீத கோபம் ஒரு கணம் ஏகாம்பரத்தையே திடுக்கிட வைத்தது. முரட்டுத்தனமாய் இறுகியிருந்த சிதம்பரத்தின் சட்டையைப் பிடித்திருந்த தன் தந்தையின் கைகளை பிடுங்கி விலக்கிய சிவந்தி, “நீங்க உங்க அறைக்கு போங்க சிதம்பரம். ஐ அப்பாலஜைஸ் ஃபார் ஹிஸ் இண்டீசண்ட் பிஹேவியர். ஐ அம் சாரி.”

சட்டையை சரி செய்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறிய சிதம்பரத்தை மறித்து நின்ற தன் வேலையாட்களை ஏகாம்பரம் தன் பார்வையால் தடுத்து நிறுத்தினார். அறையை விட்டு வெளியேறிய சிதம்பரம் அறை வாசலில் வேலையாட்களின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்ள முயன்ற வேலாயியைப் பார்த்து சோகத்துடன் புன்னகைத்தவாறு தன் அறைக்கு விரைந்து சென்று தன்னுடைய விலையுயர்ந்த காமிரா உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றான்.

“அம்மா உங்களுக்கு ஒண்ணும் கலையே? நான் தான் நீங்க போட்ட சத்தத்தைப் பாத்துட்டு பதறிப்போய் ஐயாவை கூட்டிட்டு வந்தேன்.” என்று ஓடி வந்து தன் கரத்தைப் பற்றிய வேலாயியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உச்சக்குரலில் கத்தினாள் சிவந்தி.

“பாத்தீங்களாப்பா இவ விசுவாசத்தை? இவளோட விஷயத்தைக் கேட்டுத்தாம்ப்பா நம்ம அம்மா..” என்றவளின் வாயைப் பொத்தி முரட்டுத் தனமாய் தள்ளினார் ஏகாம்பரம். பிறகு திரும்பி வேலையாட்களைப் பார்த்து கூச்சலிட்டார். “டேய், என்ன பாத்துக்கிட்டு நிக்கறீங்க? அந்த பட்டணத்து தம்பிய ஊர விட்டுக்கிளப்புங்கடா. போங்க.. ஏய் வேலாயி என்ன பேய் முளி முளிச்சிக்கிட்டு நிக்கறே? போய் தோட்டத்துல கெடக்குற வேலைய பாரு. ஓடு”

அவருடைய கோபத்தின் காரணம் புரியாமல் திகைத்து கலைந்த வேலையாள் கூட்டம் மறைந்ததும் தன் மகளைப் பார்த்து பல்லைக் கடித்தார் ஏகாம்பரம். “ஏய் கடைசித் தடவையா சொல்றேன். ஒழுங்கா அடங்கியிருந்தீன்னா நல்ல எடம் பாத்து கல்யாணத்த முடிச்சி வப்பேன். அதில்லாம இந்த மாதிரி பட்டணத்து பசங்க பேச்சைக் கேட்டு ஆட நெனச்சே உங்கம்மா போன பாதையிலேயே அனுப்பி வச்சிருவேன். சொல்லிட்டேன்.”

தன் தந்தையின் திடீர் ஆவேசத்தை முற்றிலும் எதிர்பார்க்காத சிவந்தி மூர்க்கத்தனமாய் அவர் தள்ளியதும் நிலைகுலைந்துபோய் கீழே விழாமலிருக்க மேசையைப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ‘

உங்கம்மா போன பாதையிலேயே உன்னையும் அனுப்பி வச்சிருவேன்...’ என்ற வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன.

அதே சமயம் வேலையாட்களின் கும்பல் சிதம்பரத்தை ஒன்றும் செய்துவிடாமலிருக்க வேண்டுமே என்ற சிந்தனையில் தன் தந்தையின் வழியிலேயே சென்று அவன் சென்னை திரும்பி செல்ல வழி செய்ய வேண்டியதுதான் தன்னுடைய முதல் கடமை என்று தீர்மானித்தவளாய் அவரைப் பார்த்தாள். “அப்பா, நான் செஞ்சது தப்புதான். இதுல அவருக்கு ஒரு சம்பந்தமுமில்லை. அவரை திருப்பியனுப்ப வேண்டியது என் பொறுப்பு. நம்ம ஆளுங்கள பிரச்சினை எதுவும் பண்ணாம போகச் சொல்லுங்க.”

சிவந்தியின் திடீர் மனமாற்றம் அவருக்கு வியப்பை ஏற்படுத்தியதால் அவளை சந்தேகமாய் பார்த்தார், இவள் வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பாளோ என்ற எண்ணத்துடன்.

அவருடைய பார்வையிலிருந்த ஐயத்தை உணர்ந்த சிவந்தி அவரை நெருங்கி கையைப் பிடித்து, “என்னை நம்புங்கப்பா. நா இனி இதைப்பத்தி ஒண்ணும் பேசமாட்டேன். சிதம்பரத்தை வழியனுப்பிட்டு வர என்னை போகவிடுங்க.” என்று கெஞ்சினாள்.

“சரி. ஆனா ஓண்ணு. நீ வழியனுப்ப போகவேண்டாம். சுடலை போகட்டும். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா கார்ல போறத ஊர்ல வேற யாரும் பாத்துட்டா வேற விணையே வேணாம்.” என்றவர் அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறி சிதம்பரம் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்த வேலையாட்களிடம் கலைந்து செல்ல பணித்தார், “டேய் யாராவது போய் நம்ம சுடலையை கூட்டிக்கிட்டு வாங்க. அந்த பையனோட பெட்டி பையையெல்லாம் வண்டியில எடுத்துவச்சிட்டு எல்லாரும் போங்க. சீக்கிரம்.”

நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிப் பேசும் தர்மகர்த்தா ஐயாவின் மன நிலை மீண்டும் மாறி வேறு ஏதாவது கட்டளையிடுவாரோ என்ற கலவரத்தில் வேலையாட்கள் கலையாமல் நிற்க, “என்ன முளிச்சிக்கிட்டு நிக்கறீங்க? சொன்னது புரியலே? சீக்கிரம் போங்க. கடைசி பஸ் போறதுக்குள்ளே தம்பி ஸ்டாண்டுக்கு போய்ச்சேரணும்..” என்று ஏகாம்பரம் கூச்சலிட அலறியடித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் கலைந்து ஓடியது அந்தக் கும்பல்.

ஏகாம்பரம் சிதம்பரத்தின் அறையினுள் எட்டிப் பார்த்தார். சிதம்பரம் உடைத்தெறியப்பட்ட தன் காமிராவை வெறித்து நோக்கிக்கொண்டிருப்பதை கண்டு ஒரு நிமிடம் அவனுக்காக பரிதாபப்பட்டார். ‘முட்டாள். தான் காலையில் கூறியபடி கேட்டு நடந்திருந்தால் இந்த பிரச்சினையை சந்தித்திருக்க வேண்டாமே. விருந்தாளியாய் வந்தவன் வில்லங்கமாய் மாறினால் பார்த்துக்கொண்டிருக்க நாங்க என்ன பேடிப்பயலுவளா?’ என்று மனதுக்குள் ஓடிய எண்ணங்களை மறைத்துக்கொண்டு, “என்ன தம்பி யோசிக்கறீங்க? அந்த காமிராக்குள்ள என்னத்த புடிச்சி வச்சிருந்தீங்க? நம்ம ஆளுங்க முரடன்களாச்சே. நம்ம கிராமத்துக்கெதிரா எதையாச்சும் புடிச்சி வச்சிருப்பீங்கன்னு நினெச்சிருப்பானுங்க. அதான் ஒடைச்சி சின்னாபின்னாம ஆக்கிட்டானுங்க. இது பட்டணமில்லே தம்பி. நீங்க நம்ம பட்டாபியோட மவனாப் போயிட்டீங்க. இல்லேன்னா அந்த காமிரா மாதிரி நீங்களும் ஆகிப்போயிருப்பீங்க. தப்பிச்சோம்னு நினெச்சி சந்தோஷப்பட்டுக்கிட்டு ஊர் போய் சேருங்க. பட்டாபிய நா விசாரிச்சதா சொல்லுங்க.”

சிதம்பரம் அவர் பேசியதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் காமிராவை கைப்பையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு பெட்டியை கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அறையின் குறுக்கே வழிமறித்தாற்போல் நின்ற ஏகாம்பரத்தை ஒருவித ஏளனத்துடன் பார்த்துவிட்டு அவரை ஒதுங்கிக்கொள்ள கையை அசைத்தான்.

“தம்பிக்கு என்னுடைய அந்தஸ்த்து இன்னும் புரியல போலிருக்கு. பேசாம வண்டியில உக்காருங்க. சுடலை வந்ததும்தான் வண்டி நகரும். என்ன நா சொல்றது?”

“எனக்கு யார் துணையும் தேவையில்லை. உங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்ச எனக்கு திருப்பி போகவும் வழி தெரியும்.”

“தெரியும். தெரியும். ஏன் தெரியாது? தம்பிக்கு தான் எல்லாம் தெரியுமே, பெரியவங்களை மதிக்கணும், அவங்க சொல்றத கேக்கணும்கறத தவிர. எடக்கு பண்ணாம வண்டியில போயி உக்காருங்க. நா சொன்னா சொன்னதுதான். தனியா போகணும்னு நெனச்சா ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டீக. சொல்லிட்டேன். இதோ சுடலை வந்துட்டான். போங்க.”

சிதம்பரம் அவரோடு போராடி பலனில்லை என்பதை உணர்ந்தவனாய் புறப்பட தயாராகி எதிரே வந்துக்கொண்டிருந்த சுடலைமுத்துவைப் பார்த்து ஒரு வரண்ட புன்னகையை உதிர்த்தான். முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் அவனை நோக்கி சென்ற சுடலை அவனிடமிருந்த பெட்டியை பெற்று அருகிலிருந்த வேலையாளிடம் கொடுத்துவிட்டு ஏகாம்பரத்தின் முதுகின் பின்னால் கலவரத்துடன் தன்னைப் பார்த்தவாறு நின்ற சிவந்தியைப் பார்த்து தலையசைத்து விட்டு, “வாங்க தம்பி” என்றவாறு வண்டியை நோக்கி நடக்க அவன் பின்னால் சிதம்பரம் ஒன்றும் பேசாமல் நடந்தான்.

ஏகாம்பரம் திரும்பி தன் பின்னால் நின்றிருந்த சிவந்தியைப் பார்த்து முறைத்தார். “என்னம்மா தம்பியை வழியனுப்ப வந்தீங்களோ? உன்னைப் பார்க்கக் கூட தைரியம் இல்லாம ஓடறானே, பார்த்திங்கல்ல? பிறகென்ன, போயி வேலைய பாருங்க. வேலையில்லேன்னா போயி, அடம் பிடிச்சி ஒரு கம்ப்யூட்டர் பொட்டி வாங்கினீயே, அத போயி தட்டிக்கிட்டிரு. அறிவாவது வளரும்.”

எகத்தாளத்துடன் பேசிவிட்டு செல்லும் தன் தந்தையையே வெறுப்புடன் பார்த்தவாறு நின்ற சிவந்தி சட்டென்று மின்னலென தன் மனதில் ஓடிய முடிவுடன் விரைந்து தன் அறையை நோக்கி ஓடினாள்.

அறையில் கணினி மேசையிலிருந்த, காலையில் சிதம்பரம் தன்னிடம் கொடுத்த, விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்தாள். அதில் அவனுடைய வீட்டு தொலைப்பேசி எண், கைத்தொலைப்பேசி எண் மற்றும் அவனுடைய மின்னஞ்சல் விலாசம் இருந்ததை கண்டு மகிழ்ந்து கணினில்கு உயிரூட்டி அதன் முன் அமர்ந்தாள்.

‘இந்த கிராமத்துல எனக்கு தெரியாம ஏதாவது நடந்துருமோ அதையுந்தான் பார்ப்போமே’ என்று சற்றுமுன் தன்னிடம் சவால் விட்ட தன் தந்தையும் குறுக்கிட்டு நிறுத்த இயலாத மின்னஞ்சல்தான் அவருக்கு பாடம் புகட்ட சரியான வழி என்ற முடிவுக்கு வந்தவளாய், பெறுநர் பகுதியில் சிதம்பரத்தின் மின்னஞ்சல் விலாசத்துடன் துவங்கி பரபரவென்று தன் மனதில் உள்ளவற்றையில்லாம் கொட்டித் தீர்த்தாள்.

‘உங்மா போன பாதையிலேயே உன்னையும் அனுப்பிச்சிருவேன்..’ அப்படியென்றால், தன் தாயின் அகால மரணத்திற்கு காரணம்... தன் தந்தையா?... நினைக்க நினைக்க அவளுடைய அடிவயிற்றிலிருந்த புறப்பட்டு எழுந்த ஆவேசத்தில் வார்த்தைகள் உணர்ச்சியுடன் வந்து விழுந்தன.

கணினியின் அருகிலிருந்த தொலைப்பேசி இணைப்பை கணினியில் பிணைத்து இண்டெர்நெட் தொடர்பை ஏற்படுத்தி தான் எழுதி முடித்த மின் அஞ்சலை அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டாள். மனதில் ஒரு இணம் புரியாத நிறைவு எழுந்து அவளை மகிழ்வித்தது.

சுவர் கடிகார்த்தைப் பார்த்தாள். விசிட்டிங்கார்டிலிருந்த சிதம்பரத்தின் கைத்தொலைப்பேசியின் எண்ணைச் சுழற்றினாள். சிதம்பரம் எடுத்தவுடன், “ நான் சிவந்தி. ஊர் போய் சேர்ந்ததும் என்னுடைய ஈமெய்ல படிங்க.” என்று அவசரமாய் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

படபடக்கும் நெஞ்சுடன் அறையை விட்டு வெளியேறி கூடத்தில் தன் தந்தையோ வேறு யாராவதோ இருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்ல வேளை யாரையும் காணவில்லை. வேலாயிமட்டும் கொல்லைப் புறத்திலிருந்து தயங்கி, தயங்கி தன்னை நோக்கி வருவது தெரிந்தது.

கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன் வந்து சிவந்தியின் காலில் விழுந்தாள் வேலாயி. “என்ன மன்னிச்சிருங்கம்மா. ஐயா இப்படி நடந்துக்குவாருன்னு நான் நெனச்சுப் பாக்கல. அந்த பட்டணத்து ஐயாதான் உங்கள ஏதாச்சும் பண்ணிட்டாரோன்னு நெனச்சு நம்ம ஐயாவ போயி கூட்டியாந்துட்டேம்மா. புத்திக்கெட்டவ, விவரம் தெரியாம செஞ்சிப்போட்டேம்மா. என்ன மன்னிச்சிருங்க”

“ஏய் எழுந்திரு. உம்மேல எனக்கு எந்த வருத்தமுமில்ல. போய் வேலையைப் பாரு.” கண்களைத் துடைத்துக் கொண்டு செல்லும் அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த சிவந்தி இவளைப் போன்ற அபலைப் பெண்களைக் காப்பாற்றவும் தன் தாயின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கவும் தான் எடுத்த முடிவுதான் சரியானது என்ற திருப்தியுடன் தன் தந்தையின் அறையை நோக்கி நடந்தாள்.

***

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் தன் கைத்தொலைப்பேசி சிணுங்க எடுத்து காதில் வைத்தவன் சிவந்தியின் குரல் கேட்டு மகிழ்ந்தான்.ஆனால் அவள் அவசர அவசரமாக கூறிய செய்தி அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவள் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சத்தையாவது அவளிடம் தொலைப்பேசியில் கேட்டாலென்ன என்று நினைத்து அவளுடைய வீட்டு தொலைப்பேசி நம்பரை அழைக்கலாமென்றால் அந்த நேரத்தில் அவளுடைய தந்தை வீட்டில் இருந்து அதனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வருமோ என்று அஞ்சி அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

“யார் தம்பி போன்ல?” என்ற பேருந்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த சுடலைமுத்துவிடம் “என் நண்பன், சென்னையிலிருந்து..” என்று பதிலளித்து விட்டு இருக்கையிலமர்ந்து கண்ணை மூடியவன் களைப்பு மோலோங்கி கண்களை அழுத்த அப்படியே உறங்கிப் போனான்.

பேருந்து புறப்படும் நேரத்தில் தான் கையைசைத்தும் கண்டுக் கொள்ளாமலிருந்த சிதம்பரத்தின் நடத்தை மனதைப் புண்படுத்த அதே சோகத்துடன் வண்டியிலேறி வீடு திரும்ப மனமில்லாமல் கால்நடையாய் கோயில் வளாகத்தில் போய் அமர்ந்தார் சுடலைமுத்து. அன்று காலை முதல் நடந்த சம்பவங்கள் அவரை வெகுவாய் பாதித்திருந்தது.

தன் சகோதரர் ஏகாம்பரமும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பஞ்சநாதன் மற்றும் ஊரிலேயே பெரிய மிராசுதார் வேந்தைய கவுண்டர் தலைமையில் பெரியமனுஷக் கூட்டம் அந்த ஊர் இளம் பெண்களை சூரையாடி கொட்டமடித்து வருவது தெரிந்திருந்தும் தன்னால் ஒன்றும் செய்யவியலா கோழைத்தனத்தை நினைத்து பல மாதங்களாய் அவர் வேதனைப் பட்டதுண்டு. அதைத் தட்டிக்கேட்கத் துணிந்த தன் மனைவியையே விஷம் கொடுத்துக் கொல்லவும் துணிந்த தன் சகோதரன் தன்னை ஒழித்துக்கட்ட துளியும் தயங்கான் என்பதையும் அறிந்திருந்தார் அவர். அதே சமயம் தானுமில்லாமல்போனால் சிவந்தி தனிமையில் என்ன பாடுபடுவாளோ என்ற நினைப்பில் ஏகாம்பரத்தின் அவலங்களை கண்டும் காணாத நடைப்பிணமானார் அவர்.

தன் தாய் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று நினைத்திருக்கும் சிவந்திக்கு தன் தந்தையே தன் தாயைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்தால் அவள் என்ன செய்வாளோ என்ற அச்சமும் இப்போது அவரை வாட்டியெடுக்கத் துவங்கியது.

சிவந்தியை இந்த சூழ்நிலையில் தனியாய் விட்டு வந்தது தவறு என்ற நினைவுக்கு வர எழுந்து வீடு நோக்கி விரைவாய் நடக்கலானார் நடந்து முடிந்திருந்த பயங்கரத்தை அறிதாவராய்.

***

வீடு வந்து சேர்ந்தவுடன் நேரே தன் அறைக்குள் ஓடிப்போய் கணினியில் மூழ்கிப்போன சிதம்பரத்தின் செயல் அவனுடைய தந்தை பட்டாபி ஐயரை வியப்பில் ஆழ்த்த அவன் பின்னால் அறைக்குள் நுழைந்தார். “என்னாடாயிது வந்ததும் வராததுமா கம்ப்யூட்டரை நோண்டறே? என்னாச்சி? ஊருக்கு போனியே வர ரெண்டு, மூணு நாளாவும் நெனச்சா ஒரே நாள்ல வந்து நிக்கறே. ஊர்ல ஏகாம்பரம் இல்லையா?”

“அப்பா ப்ளீஸ் லீவ் மி அலோன். கொஞ்ச நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணாதேள். அப்புறமா சொல்றேன்.”

சிவந்தியின் மின்னஞ்சலைத் திறந்து உணர்ச்சிபூர்வமாய் வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்தில் திக்குமுக்காடிப் போன சிதம்பரம் அந்தக் கடைசி இரண்டு வரிகளில் சிலையாய் உறைந்து போய் வெகு நேரம் அமர்ந்திருந்தான் ஹாலிலிருந்த தொலைப்பேசி அலறும்வரை.

“டேய் சிதம்பரம் ஊர்ல என்னடா நடந்தது? ஏகாம்பரம் உன்னை தொலைச்சுட்டுதான் மறுவேலைன்னு கத்தறான்.” என்ற தந்தையின் அலறலைக் கேட்டு ஹாலுக்கு ஓடி அவர் கையிலிருந்த ஒலிவாங்கியை பிடுங்கி காதில் வைத்தான்.

“டேய் படவா, என் பொண்ணோட சாவுக்கு உன்னையும் உங்கப்பனையும் காவு வாங்காம விடமாட்டாண்டா இந்த ஏகாம்பரம். தூக்குக்கே போனாலும் சரி.” என்று கூக்குரலிடும் குரலை இடையிலேயே துண்டித்து படபடப்புடன் மார்பைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்த தன் தந்தையை நெருங்கி அவர் கரங்களைப் பற்றினான். “நீ கவலைப் படாதேப்பா. நீ நண்பன்னு நினைச்சிக்கிட்டிருக்கற ஏகாம்பரம் ஒரு அயோக்கியன். என் கிட்ட இருக்கற சிவந்தியோட மரணவாக்குமூலமே போதும் அவனை தூக்கிலேத்த. டோண்ட் ஒர்ரி. ஹி காண்ட் டு எனிதிங் டு அஸ். நீ வேணும்னா டெல்லிக்கு போய் அண்ணா கூட ஒரு மாசம் இருந்துட்டு வா. இங்க நான் பாத்துக்கறேன்.”

அலங்க மலங்க மகனைப் பார்த்து விழித்தார் பட்டாபி. “நீ என்னடா பாவி சொல்றே, சிவந்தியோட மரணவாக்குமூலமா? அப்படீன்னா அவ... அவ அம்மா மாதிரியே..”

“இல்லப்பா. அவ அம்மா கொலையுண்டா. சிவந்தி தன் தாயோட கொலைக்கும், தன் தந்தையால சீரழிக்கப் பட்ட பல சின்ன பொண்களோட வாழ்க்கைக்கும் சேத்து பழிவாங்கற மாதிரி தன் உயிரையே மாச்சுக்கிட்டாப்பா. ஷி ஹாஸ் சாக்ரிஃபைஸ்ட் ஹெர் ஓன் லைஃப் டு சீக் ரிவெஞ்.. ஷி ஈஸ் க்ரேட் டாட், ஷி ஈஸ் க்ரேட். எனக்கு இன்னைக்கு நிறைய வேலையிருக்கு டாட். நீங்க கவலைப் படாம ரெஸ்ட் எடுங்க. நான் நேரே கமிஷனர் ஆஃபீஸ்க்கு போய் சிவந்தியோட வாக்குமூலத்தைக் குடுத்திட்டு அங்கிருந்து நேரே பத்திரிகை ஆஃபீஸ்க்கு போய்ட்டு வரேன். அந்த கும்பல்ல ஒருத்தன் கூட தப்பிச்சிரக் கூடாது.”

அவசர அவசரமாய் குளித்து உடை மாற்றிக்கொண்டு தன் இரு சக்கர வாகனத்திலேறி ஓடும் மகனை தன் இருக்கையிலிருந்தே கவனித்த பட்டாபி சுவரில் தொங்கிக்கொண்டிருந்த, சில வருடங்களுக்கு முன்பு தானும் தன் நண்பன் ஏகாம்பரமும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்தார். ‘அடப்பாவி, உன்ன போய் நண்பன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே.. என்று முணுமுணுத்தார்.

****

‘எங்கம்மாவோட மரணம் தற்கொலைன்னுதான் நா இதுவரை நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா அதுக்கும் காரணம் எங்கப்பாதான் இன்னைக்கி தெரிஞ்சிக்கிட்டேன். இதுவரை எங்கப்பா ஒரு காமுகன்னு தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா கொலை செய்யவும் தயங்கமாட்டார்னு நினைச்சதுக்கப்புறம்தான் அவரை என் உயிரைப் பணயம் வச்சே பழிவாங்கணும்னு தோணிச்சி. அதான் அவருடைய படுக்கையறையிலேயே தூக்கு போட்டுக்கப் போறேன். இது தான் என் மரண வாக்குமூலம். என்னுடைய தற்கொலைக்கு என் தந்தையின் கொலைமிரட்டல் தான் காரணம். அவளால சீரழிக்கப் பட்ட எத்தனையோ இளம் பெண்களில் என் வீட்டு வேலைக்காரி வேலாயியும் ஒருத்தி. இதுக்கெல்லாவற்றிற்கும் என் சித்தப்பு சுடலைமுத்துவும் உயிர்சாட்சி.’ என்று முடித்திருந்த மின்னஞ்சலைப் படித்து முடித்து சிதம்பரத்தை நிமிர்ந்து பார்த்த அவனுடைய பத்திரிகையின் நிர்வாகியும் ஆசிரியருமான எஸ்.ஏ.பி, “ஃபண்டாஸ்டிக் சிதம்பரம். இதுவரைக்கும் நீ எங்களுக்கு குடுத்த இன்வெஸ்டிகேஷன் மேட்டர்லயே இதுதான் சூப்பர். இத வச்சிக்கிட்டு கமிஷனர் ஆக்ஷன் எடுக்கல, அவரை எப்படி எடுக்க வைக்கிறதுன்னு எனக்கு தெர்¢யும். நீ அப்பாவைக்கூட்டிக்கிட்டு கொஞ்ச நாள் டெல்லி போய்ட்டு வா.”

“வேணாம் சார். எனக்கொண்ணும் பயமில்லே. அப்பாவை வேணும்னா ஃப்ளைட் புடிச்சி இன்னைக்கே அனுப்பி வச்சிடறேன்.”

“உனக்கு வேண்டாம்னு படலாம். ஆனா எங்க பத்திரிகைக்கு நீ இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும். அதான் சொல்றேன். லீட் ஆர்ட்டிக்கிள எழுதிக்குடுத்துட்டு ஓடு. ஒண்ணும் பேசாத.”

ஒரு சில நொடிகள் ஆசிரியரின் முகத்தேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்த சிதம்பரம், “ஆஸ் யூ விஷ் சார். பட் ஐ வில் பி ஹியர் எனி டைம் யூ வாண்ட்.” என்றவாறு சிரியர் காண்பித்த கணினியின் முன் அமர்ந்து எழுதத் துவங்கினான்.

**************