31.5.06

சூரியன் 87

மாதவன் இரவு எந்த நேரத்தில் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே விழித்துவிடுவார்.

எந்த ஊரில் இருக்க நேர்ந்தாலும் எழுந்ததுமே அவர் செய்யும் முதல் வேலை படுக்கையருகில் ஒரு பெட்ஷீட்டை விரித்து பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்வரை யோகாசனம் செய்வது..

மும்பையிலிருந்த காலத்தில் கற்றதை கடந்த பத்தாண்டுகாலமாக விடாமல் செய்து வருவதுதான் அவருடைய இளமையான தோற்றத்தின் ரகசியம்.

அன்றும் காலையில் எழுந்ததும் தன்னுடைய வழக்கத்தை விடாமல் கட்டிலில் கிடந்த விரிப்பை தரையில் விரித்து அடுத்த இருபது நிமிடங்கள் கண்களை மூடி தன்னுடைய முழுக்கவனத்தையும் தான் செய்யவிருந்த ஆசனங்களில் செலுத்தலானார்.

ஆசனங்களின் இறுதியில் தரையிலேயே படுத்து பத்து நிமிடம் கால் பாதத்திலிருந்து நெற்றி வரை அங்கமங்கமாக ரிலாக்ஸ் செய்யும்  சவாசனத்துடன் முடித்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் எழுந்தார்.

இன்று அவருடைய வாழ்க்கையின் புது அத்தியாயம் துவங்கவிருந்தது. அடுத்த நான்காண்டுகள் அவரை நம்பியிருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் தலைவராக செயலாற்றப்போகிறவர்.

அவர் அன்றுமுதல் எடுக்கவிருக்கும் ஒவ்வொரு முடிவும், பேசவிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இந்த குடும்பங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

நாடு முழுவதும் ஆயிரம் கிளைகளுக்கு மேல் கொண்டிருந்த அந்த தனியார் வங்கியின் முதல்வர் பதவி என்ற அந்தஸ்த்து அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கப்போகிறது.

சவாசனத்தை முடித்துக்கொண்டு எழுந்தவர் நேரே குளியலறைக்குள் சென்று காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தபோது மணி ஆறு என்றது சுவர்க்கடிகாரம்.

கையோடு கொண்டுவந்திருந்த வாக்கிங் காலணியையும் அரைக்கால் நிஜார் மற்றும் டீ ஷர்ட்டை அணிந்துக்கொண்டு வெளியேறினார்.

ஹோட்டல் லாபியில் ரிசப்ஷனில் இருந்தவர்களின் காலை வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அருகில் பூங்கா ஏதும் உள்ளதா என்று விசாரித்தார்.

‘It is not like Bombay Sir.. You may have to drive down to the Beach for clean air.. Otherwise you can cross the road and walk on the side lanes..’  

இதுதான் இங்க தொல்லை.. மும்பையில் என்றால் மூலைக்கு மூலை விசாலமான பூங்காக்கள் காலையில் நடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.. அழகான பூங்காவைச் சுற்றி பிரத்தியேக கான்க்ரீட் பாதைகள் நடப்பவர்களுக்கென அமைக்கப்பட்டிருப்பதை  நினைத்தவாறு சாலையில் இறங்கி இடமும் வலமும் பார்த்தார்.

காலை நேரத்தில் வாகனங்கள் அவ்வளவாக இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த சாலையைக் கடந்து அடுத்தடுத்து இருந்த சந்துகளில் அடுத்த அரைமணி நேரம் வேகமாக வியர்வை பெருக்கெடுத்து ஒழுகும் வரை நடந்தார்..

பூங்கா இல்லையென்றாலும் வாகனங்களின் ஓசையும், புகையும் இல்லாதிருக்கவே நிம்மதியுடன் கால்வீசி நடக்க முடிந்தது..

இன்னைக்கி ராத்திரி பேங்க் கார இங்கவே விட்டுட்டு போகச் சொல்லணும்.. நாளைலருந்து சரோவையும் கூட்டிக்கிட்டு பீச்சுக்கு போய் நடக்கலாம்.. என்ற முடிவுடன் மீண்டும் சாலையைக் கடந்து ஹோட்டலுக்குள் நுழைந்து ரிசப்ஷனில் இருந்த இளம் பெண்ணிடம், ‘தாங்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்.. இட் வாஸ் நைஸ்..’ என்று புன்னகையுடன் கூறிவிட்டு அறையை சென்றடைந்தார்..

அவர் அறைக்குள் நுழையவும் சரோஜா படுக்கையிலிருந்து எழவும் சரியாக இருந்தது. அவர்களுடைய அறையிலிருந்து வத்ஸலாவின் அறையை கனெக்ட் செய்யும் கதவும் திறந்திருக்க வத்ஸ்லா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்..

‘Hi everybody.. First day first show in Chennai..’ என்றார் புன்னகையுடன்..

‘ஆமா நேத்துலருந்து சீனி என்னான்னு கவலையோடருக்கேன்.. நீங்க வேற.. ஒங்களுக்கு ஒங்க ஆஃபீச விட்டா வேறன்னெ கவலை..’ என்ற தன் மனைவியை நெருங்கி அவருடைய தோள்களைப் பிடித்தார் மாதவன்.

‘சரோ.. He is not a child anymore.. Don’t bother. He will take care of himself.. ரெண்டு மூனு நாளைக்கு அவனெப் பத்தி கவலப் படாம இரு.. I will send the car back after reaching my office.. நீங்க ரெண்டு பேரும் ஸ்பென்சர் பளாசா போங்க.. வேணுங்கறத வாங்குங்க.. இந்த ஓட்டல்லருந்து போனா போறுண்டான்னு இருக்கு.. இந்த வார கடைசிக்குள்ள பெசண்ட் நகர் வீட்டுக்கு போயிரணும்.. அங்க போனதுக்கப்புறம் சீனி வந்தா போறும்.. Let him enjoy Mumbai and that girl’s company..’

என்னாச்சி இந்த மனுஷனுக்கு என்பதுபோல் அவரைப் பார்த்த சரோஜா அவருடைய கைகளை லேசாக விலக்கிவிட்டு படுக்கையிலிருந்து இறங்கி குளியலறையை நோக்கி நடந்தார்.

‘நீங்க மொதல்ல சூடா ரெண்டு காப்பி கொண்டு வரச்சொல்லுங்க.. ஒங்களுக்குத்தான் காலைல காப்பி, டீ ஒன்னும் வேணாம்.. டம்ளர், டம்ளரா பச்ச தண்ணிய குடிப்பீங்க.. எனக்கும் வத்சுவுக்கும் காலைல எழுந்ததும் சிவகாமி மாமி காப்பிய குடிக்கலன்னா தலையே வெடிக்கிறா மாதிரி இருக்கும்..’

மாதவன் சரி என்று தலையை அசைத்தவாறு அறையிலிருந்த ஸ்பீக்கர் ஃபோனிலிருந்த ரூம் சர்வீஸ் பொத்தானை அழுத்தியதும், எதிர்முனையிலிருந்து ‘குட் மார்னிங் மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் மாதவன்..’ என்ற தேனொழுகும் குரலில் காலை வணக்கம் ஒலிக்க புன்னகையுடன் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘send me a pot of strong Chennai coffee please. No cookies.’ என்றார்.

மும்பை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காலை காப்பி என்றால் நிச்சயம் குக்கி எனப்படும் இனிப்பு பிஸ்கட்டுகள் நிச்சயம் இருக்கும்.. சென்னையில் எப்படியோ.. எதற்கும் சொல்லிவைப்போம் என்றுதான் ‘No cookies’ என்றார்.

‘Yes Sir.. in five minutes Sir.’ என்ற பதிலுடன் இணைப்பு துண்டிக்கப்பட மாதவன் எழுந்து தன் கைப்பையிலிருந்த மின்சார ஷேவரை எடுத்து படுக்கையருகிலிருந்த ப்ளக்கில் சொருகி தலைமாட்டிலிருந்த பெல்ஜியம் கண்ணாடியைப் பார்த்தவாறு சவரம் செய்யத் துவங்கினார்.

அவர் சவரம் செய்து முடிக்கவும் சரோஜா குளியலறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. சற்றும் தாமதியாமல் குளியலறைக்குள் நுழைந்த மாதவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தார்..

பால்கனியில் அமர்ந்து காப்பிக் கப்பை உறிஞ்சிக்கொண்டிருந்த மனைவியையும் மகளையும் அமைதியாகப் பார்த்தார்..

கிழக்கு திசையிலிருந்து கடற்கரை காற்று மெலிதாக வீச.. காலை நேர சென்னை மும்பையிலிருந்து வெகுவாய் மாறுபட்டிருந்ததை உணர முடிந்தது..

மும்பையில் இந்த நேரத்திலேயே சாலைகளை அடைத்துக்கொண்டு வாகனங்கள் கரும்புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்..

அதனுடன் ஒப்பிடும்போது சென்னை ஒரு மோட்சம் என்று நினைத்தார்..

‘கையில டவல வச்சிக்கிட்டு என்ன யோசிக்கிறீங்க.. டைம் ஆவலையா? ப்ரேக் ஃபாஸ்ட் இங்கருந்தே ஆர்டர் பண்லாமா இல்ல ரெஸ்டாரண்ட் போலாமா?’ என்ற மனைவியின் குரல் அவரை திடுக்கிட வைத்தது..

‘என்ன சரோ..?’ என்றவரை வியப்புடன் பார்த்து சிரித்தாள் சரோஜா..

‘என்ன டாட் காலைலயே கனவா?’  என்றார் வத்ஸலா பால்கனியிலிருந்து..

மாதவன் புன்னகையுடன், ‘சேச்சே.. மும்பைய நினைச்சி பார்த்தேன். இந்த நேரத்துலயே அங்க எப்படியிருக்கும் ட்ராஃபிக்னு நினைச்சி பார்த்தேன்.. Compared to Mumbai Chennai is a heaven இல்ல?’

‘பின்னே இல்லையா.. ஊரா அது? எப்ப பாத்தாலும் பரபரன்னு.. ச்சே.. போறும்பா..’ என்று சலித்துக்கொண்ட தன் தாயைப் பார்த்து, ‘அம்மா.. வேணாம்.. ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னத மறந்துராத..’ என்றாள் வத்ஸலா கேலியுடன்..

சரோஜா திரும்பி தன் மகளை முறைத்தாள்.. ‘என்னடி சொன்னேன்? எல்லாம் நம்ம சீனிக்காகத்தான்.. அவந்தான் அந்த பொண்ண விட்டுட்டு வரமாட்டேன்னு நின்னானே.. அவனுக்காகத்தான் அப்படி சொன்னேன்.. ஒரு எடத்துக்கு நிம்மதியா போ முடியுமா, வர முடியுமா? கார் இருந்துதுன்னுதான் பேரு.. ஒரு நாளாவது என்னால ட்ரைவ் பண்ண முடிஞ்சிருக்கா.. ஸ்டீரிங்க புடிச்சே பத்து வருஷத்துக்கு மேலாவுது..’

வத்ஸ்லா சிரித்தாள். ‘சரிம்மா.. அதுக்குன்னு இங்க டிரைவ் பண்ணப் போறியா என்ன? அங்கயாவது டிராஃபிக்ல வண்டிங்கதான் இருக்கும்.. இங்க  பாரு.. நடுரோட்ல அந்த மாடு சாவகாசமா நடக்கறத..’

சரோஜா, ‘நிஜமாவா சொல்றே?’ என்றவாறு எம்பிப் பார்க்க கீழே சாலையில் வாகனங்கள் செல்வதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு பசுமாடும் அதன் கன்றும் சாலையின் நடுவே அசைபோட்டவாறு செல்வதைப் பார்த்து, ‘என்னடி இது கொடுமையாருக்கு.. மெட்றாஸ் இத்தன வருஷத்துக்கப்புறமும் மாறவே இல்லடி.. இருந்தாலும் பாறேன்.. யாராவது அந்த ரெண்டையும் மைண்ட் பன்றாங்களான்னு..’ என்றாள் வியப்புடன்..

அவர்களுக்கு பின்னால் நின்ற மாதவன், ‘That’s what Chennai is.. Everyone and everything will coexist without too much of  fuss.. ஆனா ஒன்னு.. வத்ஸ் சொல்றா மாதிரி வண்டி ஓட்டி பாக்கலாங்கற விஷப் பரீட்சை இப்போதைக்கு வேணாம்.. ரெண்டு, மூனு மாசம் போவட்டும்.. பாக்கலாம்..’ என்றவாறு அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு விரைந்து சென்று திறக்க, ‘Good Morning Sir. Welcome to Chennai once again’ என்று புன்னகையுடன் நின்ற தன்னுடைய காரியதரிசியைப் பார்த்து அகண்ட புன்னகையுடன்.. ‘Thank you, Mr Subodh.. Good Morning. Come in..’ என்றார்.

அவனோ, ‘No sir. I will wait in the lobby. I just wanted to inform you that I am here to take you to the Office. I did not want to call you over the house phone. That’s why I came up..’ என்றவாறு விடைபெற்று செல்ல அறைக்கதவை அடைத்துவிட்டு ரூம் சர்வீசை அழைத்து காலை உணவை அறைக்கு கொண்டு வர உத்தரவிட்டார்..

‘நான் ரெண்டு இட்லி மட்டும் சாப்ட்டுட்டு ஓடறேன். மொதல் நாளே லேட்டா போனா நல்லாருக்காது.. இன்னைக்கி ஃபுல் டே நா பிசியாருப்பேன்னு நினைக்கிறேன்.. நான் போனதும் கார அனுப்பறேன்.. நீங்க ஒங்க ப்ளான் ப்ரகாரம் செய்ங்க.. நான் சாயந்திரம் ஃப்ரீயாவும்போது கூப்டறேன்..’

சரோஜாவும் வத்ஸலாவும் அவரைப் பார்த்து சரியென்று தலையை அசைக்க மாதவன் உடைமாற்றிக்கொண்டு புறப்பட்டார்..

தொடரும்..

30.5.06

சூரியன் 86

ஆலப்புழை-சென்னை விரைவு வண்டி சென்னை வந்தடையும் நேரம் காலை 5.45 மணி என்று நந்தக்குமாருக்கு தெரியும்.

காலை ஐந்து மணிக்கு செல் ஃபோனில் அலாரம் வைத்துவிட்டு படுத்தவன் அதற்கு அரைமணி முன்பே உறக்கம் கலைந்து எழுந்தான். வண்டி ஏதோ ஸ்டேஷனில் நிற்பது தெரியவே தன்னுடைய படுக்கையைவிட்டு இறங்கி சட்டைப் பையிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துக்கொண்டு ஜன்னல் வழியே தெரிகிறதா என்று பார்த்தான்.

குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தால் இது ஒரு ரோதனை.. ஜன்னலுக்கு வெளியே எல்லாமே மங்கலாகத்தான் தெரியும். தலை முடியை சரிசெய்துக்கொண்டு வாசலை நோக்கி விரைந்து சென்று பார்த்தான். வண்டி அரக்கோணத்தை விட்டு புறப்பட்டுக்கொண்டிருந்தது. ‘இங்கருந்து ஒரு மணி நேரம் சார். வண்டி ஷார்ப்பா அஞ்சே முக்காலுக்கு செண்ட்ரல் போயிரும்.’ என்ற கோச் அட்டெண்டரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன்னுடைய படுக்கைக்கு திரும்பி வந்தான்..

ஸ்டேஷனுக்கு முரளிதரன் வரும் விஷயத்தை நளினியிடம் வேண்டுமென்றுதான் கூறாமல் மறைத்திருந்தான். ‘அவனெ எந்துனா விளிச்செ.. அவனெ எனிக்கி தீர இஷ்டல்லான்னு அறியில்லே..’ என்று வாக்குவாதம் செய்வாள் என்று நினைத்துத்தான் அதை அவளிடமிருந்து மறைத்திருந்தான்.

அவர்களிருவரும் தங்குவதற்கு முரளிதான் ஏற்பாடு செய்திருந்தான். ‘ரூம் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு வரை பரவால்லை முரளி.. அநேகமா ஒரு வாரம் இருப்போம்.. சீப்பான ஓட்டல்ல ரூம் போட்டா நளினி திட்டுனாலும் திட்டுவா..’ என்று ஏற்கனவே கூறியிருந்தான். பதிலுக்கு, ‘நீ எப்படா பொண்டாட்டி தாசனானே..’ என்று முரளி கிண்டலடித்ததைப் பொருட்படுத்தாமல், ‘எடோ தான் கல்யாணம் களிச்சிட்டில்லல்லோ.. நீ என்ன வேணும்னாலும் பேசுவேடா..’ என்றது நினைவுக்கு வர அவனையுமறியாமல்  உதடுகளில் புன்னகை தவழ்ந்தது...

முரளிதரனும் நந்துவுக்கும் இடையிலிருந்த பழக்கம் ஒரு வருடமா, இரண்டு வருடமா.. பதினைந்து வருட பழக்கமாயிற்றே.. மார்க்சிய சித்தாந்தங்களில் ஊறித் திளைத்திருந்த முரளி நந்துவின் மானசீக குரு என்றால் மிகையாகாது..

‘இங்க பார் நந்து.. நீ ரெண்டுல ஒன்னு தீர்மானம் செஞ்சிரணும்.. யூனியனா.. ப்ரோமோஷனான்னு.. நளினிக்கு என்னெ அடியோட புடிக்காதுன்னு ஒனக்கு தெரியும்.. நீ என்னோட சேர்ந்து யூனியன், கீனியன்னு அலையறேன்னு தெரிஞ்சா அவளுக்கு என் மேலருக்கற கோவம் ஜாஸ்தியாயிரும்.. ஒன்னெ எங்கிட்டருந்து முழுசுமா பிரிக்கறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வா.. இப்பவே சொல்லிட்டேன்.. அவளுக்கு நீ ஒரு சக்சஸ்ஃபுல் ஆஃபீசரா வரணும்னுதான் ஆசை.. அதனால ஒனக்கு யூனியன் சரிபட்டு வராது.. என்ன சொல்றே?’

முரளியிடம் பழகவாரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் அவன் தன்னிடம் அடிக்கடி பேசிய வார்த்தைகள் இவை.. அவனும் நளினியும் கோவையில் இருந்த வெவ்வேறு கிளைகளில் கடை நிலை அதிகாரிகளாக பதவி உயர்வுபெற்று அமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து தன்னுடைய கிளை மேலாளரைப் பகைத்துக்கொண்டு தண்டனை மாற்றத்தில் (punishment transfer) நந்துவின் கிளைக்கு மாற்றப்பட்டவன் முரளி..

அடுத்த ஐந்தாண்டுகளில் நந்துவின் பாதை அடியோடு மாறிப் போனதற்கு மூலகாரணமே முரளிதான் என்பது நளினியின் அசைக்கமுடியாத எண்ணம்.

‘அவனும் அவெண்ட தாடியும்.. அவன்டெ மொகத்த பார்த்தால அவன் ஒன்னுக்கும் ஒதவாதவன்னு ஒங்களுக்கு தெரியலையா நந்து.. அவன்கூட போயி சவகாசம் வச்சீங்க.. அப்புறம் ஒங்க காரியரே நாசமா போயிரும்.. சொல்லிட்டேன்..’

ஆனால் முரளிதரனிடம் ஒரு வசீகரம் இருந்தது.. அவனுடன் நெருங்கி பழகிய எவருமே அவனை பகைத்துக்கொண்டு விலகிச் சென்றதில்லை.. ஆண்கள் மட்டுமல்லாமல் அவன் பணிபுரிந்த கிளையிலிருந்த மற்ற பெண்களும்கூட அவனுடைய வசீகரப் பார்வையில்.. ‘டேய்.. நீ பொண்ணா பொறந்திருக்கணுண்டா.. ஒங் கண்ணுல அப்படியொரு கவர்ச்சி இருக்கு..’ என்று பல சக நண்பர்கள் கூறுவதை நந்து கேட்டிருக்கிறான்..

உண்மைதான். நந்துவுக்கும் அது தோன்றியிருக்கிறது.. அத்துடன் அவன் வைத்திருந்த அந்த டிசைனர் தாடியும் மீசையும்.. அவனை நந்து பார்த்த நாள் முதலாகவே அவனை தாடி மீசையுடந்தான் பார்த்த ஞாபகம்.. ‘எதுக்குடா இது.. இந்த சின்ன வயசில.. சாமியார் மாதிரி..’ என்று நந்து பலமுறை கேட்டிருக்கிறான்.

‘இதுக்கு பின்னால ஒரு ரகசியம் இருக்குடா.. அது ஒனக்கெதுக்கு..’

‘என்ன லவ் ஃபெய்லியரா.. யார்றா அது?’

அப்போதெல்லாம் முரளி சிரித்து மழுப்பிவிடுவான்.. ஆனாலும் இருவரும் சேர்ந்து மது அருந்தும் வேளைகளில் அவன் போதையின் உச்சியில் பழைய மலையாளப் படத்தில் சத்யன் காதல் தோல்வியில் பாடிய பாடலை முனுமுனுப்பதைக் கேட்டிருக்கிறான்..

‘புரிஞ்சும் புரியாமலும் இருக்கற பருவத்துல வர காதல் இருக்கே.. அதுலருக்கற சுகமெல்லாம்.. ஒங்கள மாதிரி, வேலை.. அந்தஸ்த்துன்னு பாத்து வர்ற காதல்ல இல்லடா..’ என்பான் சம்பந்தமில்லாமல்..

நந்தக்குமார் வலியுறுத்தி கேட்டால் மழுப்பி வேறு விஷயத்திற்கு தாவிவிடுவான்..

இவன் மனசுல என்னமோ வேதனை இருக்கு.. சொல்ல மாட்டேங்குறான்.. என்று நினைத்துக்கொண்டு அதை அப்படியே விட்டுவிடுவான் நந்து..

முரளியின் குடும்ப சூழலைப் பற்றி அவ்வப்போது அவன் சொல்வதை வைத்து அவனை நம்பி திருமணத்திற்கு தயாராகவிருந்த இரண்டு தங்கைகள்.. படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களென  ஒரு பெரிய குடும்பமே இருந்தது என்றும் கேள்விப்பட்டிருந்தான்..

அத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய குடும்ப பாரத்தைக் குறித்து அவனிடமோ அல்லது வேறு எவரிடமோ முரளி ஒரு நாளும் புலம்பியதில்லை என்பதையும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறான்..

மாதத்தின் முதல் நாளன்றே சம்பளத்தின் பெரும் பகுதியை சென்னைக்கு அனுப்பிவிடுவான் என்பதும் நந்துவுக்குத் தெரியும்..

‘ஏன் நீங்களுந்தான் ஒங்க தம்பி, தங்கைங்கள படிக்க வச்சீங்க.. அதுக்காக இப்படியா தாடிய வச்சிக்கிட்டு நா தியாகம் பண்றேன்னு காட்டிக்கிட்டீங்க? அவன் ஒரு குறிக்கோளில்லாத ஆளுங்க.. யூனியன்னு சொல்லிக்கிட்டு எல்லாரையும் கெடுக்கறதுதான் அவன் வேலை.. அவனெ விட்டு தள்ளியே நில்லுங்க.. இல்லன்னா அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க..’ என்று நளினி அவனை எச்சரித்தபோதெல்லாம் நந்துவுக்கு அவன் மேலிருந்த பற்று அதிகரித்தது..

நளினி கோவையிலிருந்து பதவி உயர்வு பெற்று கேரளத்திலிருந்த ஒரு கிளைக்கு துணை மேலாளராக சென்றபோது நந்து அவளுடன் செல்ல மறுத்து கோவையிலேயே தங்குவதென தீர்மானித்து நளினியிடம் கூறியதும் அன்று மாலையே அவள் முரளியை தொலைப்பேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தாள் என்பதை முரளி சிரித்துக்கொண்டே அவனிடம் கூறியபோது நந்து ஆத்திரமடைய, ‘டேய் நந்து.. எனக்கிப்படி ஒரு ஆள் இருந்திருந்தா ஒருவேளை நானும் இப்படி ஆயிருக்க மாட்டேனோ என்னவோ.. நளினிக்கு ஒம்மேலருக்கற அன்பெ பாக்கும்போது பொறாமையாருக்குடா.. நீ ஏன் கோபப்படறே.. பேசாம அவ கூடவே போ.. அதான் ஒனக்கு நல்லது..’ என்று அறிவுறுத்திய உண்மையான நண்பன் அவன்..

அதன்பிறகு நளினி அப்போது எச். ஆர் இலாகாவிற்கு தலைவராயிருந்தவரைப் பிடித்து நந்துவுக்கும் அவளுடைய கிளை இருந்த ஊரிலேயே இருந்த வேறொரு கிளைக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்க வேறு வழியின்றி முரளியை விட்டு கேரளம் சென்றதை இப்போது நினைத்துப் பார்த்தான்..

இருப்பினும் முரளியுடனான தொடர்பு விட்டுப்போகாமல் இருக்க நந்துவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட துவங்கினான்.

அவனுடைய போக்கை முதலில் கவனிக்க தவறிய நளினி அவன் பணிபுரிந்த மேலாளர் ஒருமுறை அவரிடம் அவனைப் பற்றி புகார் கூற நளினி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெகுண்டெழுந்தாள்.. ஆனால் நந்துவின் போக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாததுடன் அவனுடைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடைய அவர்களிருவருடைய தாம்பத்திய வாழ்க்கையும் தடம்புரண்டு போனது..

‘ஹ¥ம்.. இப்பருக்கற இந்த நிலமைக்கும் நானுந்தான் காரணம்.. அவளெ மட்டும் சொல்லி என்ன பண்றது?’ என்று மனதுக்குள் நினைத்தவாறு தன்னுடைய பெர்த்திலிருந்து இறங்கி தன்னுடைய பற்பசை.. பிரஷ் வைத்திருந்த பையை தேடி எடுத்து திறந்தான்..

‘எங்க வரைக்கும் வந்திருக்கு நந்து..’

கையில் பிரஷ்ஷ¤டன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. ‘அரக்கோணம் கழிஞ்சு.. அடுத்து ச்செலப்போ பெரம்பூராயிருக்கிம்.. அரைமணியில செண்ட்ரல் எத்துவாயிருக்கிம்.. ஞான் போயி பல் தேய்ச்சிட்டு வராம்.. இறங்கிய வழிக்கு ஒரு மெட்றாஸ் காப்பி குடிக்கணும்.. ஸ்ட்ராங்கா ஒரு காப்பி குடிச்சி எத்தன வருஷமாச்சிடி.. கோயம்புத்தூர்லருக்கும்போது குடிச்சதுன்னு நினைக்கிறேன்..’

நளினி அவனைப் பார்த்தாள்.. இந்த குழந்தைத்தனம் மட்டும் இன்னும் இவனிடமிருந்து போகவில்லை.. ஆமாம். நந்து சொன்னா மாதிரி தமிழ் நாட்டுக் காப்பிக்கே ஒரு தனி ருசிதான்.. இறங்கனதும் குடிச்சிர வேண்டியதுதான்..

‘நானும் வரேன்..’ என்றவாறு பெர்த்திலிருந்த அவளும் இறங்கி இருவருமே சேர்ந்து பல் தேய்த்துவிட்டு திரும்பி இறங்குவதற்கு தயாராக உடைமாற்ற சுற்றிலுமிருந்த பயணிகள் எழுந்து அந்த இடமே பரபரப்பானது..

அடுத்த அரைமணியில் சென்னை செண்ட்ரல் நிலையம் வந்தடைய பிளாட்பாரத்தில் வந்திறங்கியதுமே புன்னகையுடன் தங்களை வரவேற்ற முரளியைப் பார்த்ததும் பொங்கி வந்த கோபத்துடன் விடுவிடுவென நந்துவை பொருட்படுத்தாமல் நளினி முன்னேறிச் செல்ல நந்து அவள் பின்னால் ஓட முரளி ஒரு விஷம புன்னகையுடன் அவர்கள் பின்னே சாவகாசமாக நடந்தான்..

சென்னை கம கம காப்பியை வாங்கிப் பருக சரவணா பவன் ரெஸ்டாரண்டில் காத்திருந்த நீஈஈஈண்ட க்யூ வரிசையைக்  கவனிக்கும் மனநிலையில் நந்துவோ, நளினியோ இருக்கவில்லையே..


தொடரும்..

29.5.06

சூரியன் 85

ஜோ அப்போல்லோ மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தனா அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.சி.யூ வார்டை நோக்கி நடந்தான்.

சவக்குழிக்குள் இறக்குவதற்கு முன்பு இறுதியாக சவப்பெட்டியை மூடுவதற்குமுன் சவமாய் கிடந்த கமலியைப் பார்த்தவர்களுள் ஜோவும் ஒருவன். கமலியின் அமைதியான, அழகான முகம் வழி நெடுக அவன் கண்முன் தெரிய கலங்கிய கண்கள் பாதையை மறைக்க எப்படித்தான் எந்த விபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் தன்னால் இருபது கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தைக் கடக்க முடிந்தது என்று மனதுக்குள் நினைத்தவாறே வார்டை நோக்கி நடந்தவன் தன் எதிரில் வந்த மருத்துவர் மீது மோதிக்கொள்ள அவர் அவனை ஏற்கனவே சந்தித்திருந்ததால் புன்னகையுடன், ‘ஏதோ நினைவில இருக்கீங்க போலருக்கு?’ என்றார்.

திடுக்கிட்டு அவரை நிமிர்ந்து பார்த்த ஜோ, ‘I am sorry Doctor. I am coming from a funeral. I was thinking about that...’ என்றான்

மருத்துவர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். ‘Yes, I know. Miss Vandana told me about that.’

ஜோ வியப்புடன், ‘அவங்க எப்படியிருக்காங்க டாக்டர், நான் போய் பார்க்கலாமா?’ என்றான்.

‘Yes. She has made a substantial recovery. She is OK now. You can go and see her. But don’t tire her too much. She needs some rest.’

‘OK. Doctor, I won’t talk much.’

மருத்துவர் அவனைக் கடந்து செல்ல ஜோ உடனே வந்தனா இருந்த அறையை நோக்கி விரைந்தான்.

அதிக கவன பகுதியினுள் இருந்த மெல்லிய விளக்கொளியில்  அறைக்குள்ளிருந்த ஒவ்வொரு படுக்கைகளை சுற்றிலும் வெண்மையான திரைகள் மறைத்திருந்ததைக் கண்ட ஜோ வந்தனா படுத்திருந்த கட்டிலைக் கண்டுபிடிக்க முடியாமல் ஒரு நொடி திணறி நின்றான்.

‘உங்களுக்கு யார பாக்கணும் மிஸ்டர்?’ என்ற மெல்லிய குரல் ஒரு பகுதியிலிருந்து வரவே கண்களை சுருக்கிக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.

அழகான புன்னகையுடன் அமர்ந்திருந்த நர்சிடம், ‘மிஸ் வந்தனா’ என்று இழுத்தான்.

‘பெட் நம்பர் எட்டு.. அந்த கோடியில இருக்கு. நீங்க மட்டுந்தான வந்திருக்கீங்க?’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்.

‘அவங்க இப்ப நார்மலாத்தான் இருக்காங்க. ஆனா அதிக நேரம் பேசிக்கிட்டிருக்காதீங்க. மேக்ஸிமம் பத்து நிமிஷம்’

ஜோ சரி என்று தலையையசைத்துவிட்டு நர்ஸ் கூறிய திசையை நோக்கி நடந்தான்.

வந்தனா தன்னுடைய மிடுக்கு நடைக்கு மிகவும் பெயர் பெற்றவர் என்பது அவனுக்கு தெரியும். மடிப்பு கலையாத சேலையுடனும், தோள்வரை குலுங்கும் பாப் தலையுடனும் அவர் அலுவலகத்தில் நடந்து செல்வதே தனியழகு என்று பலர் கூற கேள்விப்பட்டிருந்த ஜோவுக்கு அவர் களையிழந்த முகத்துடன் கட்டிலில் கண்களை மூடியவாறு கிடந்த கோலம் மனதை என்னவோ செய்ய கால்மாட்டில் தயங்கி நின்றான்.

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் அடுத்த சில நிமிடங்களில் கண்களைத் திறந்த வந்தனா அவனை அடையாளம் கண்டுக்கொண்டு மெலிதாக புன்னகைத்தார். ‘Thank you so much Mr.Joe’

ஜோ சங்கடத்துடன் நெளிந்தான். வந்தனா நிலையில் இருந்து பார்த்தால் அவன் ஒரு கடைநிலை அதிகாரி. அவனுடைய வங்கியின் எச்.ஆர் தலைவர் அவர். அவருடைய ஜி.எம் பதவி ஏழாவது கிரேட் என்றால் அவனிருந்ததோ முதல் க்ரேட்.. அவர்களுடைய பதவியில் அத்தனை இடைவெளியிருந்தது.. இருந்தும் அவர் தன்னை மிஸ்டர் என்று மரியாதையுடன் அழைத்தது அவனை வியப்பில் ழ்த்தியது. அதுதான் வந்தனாவின் தனித்தன்மை என்று ஏற்கனவே அவன் அறிந்திருந்திருந்தான்.

‘நான் ஒன்னும் பெரிசா செஞ்சிரலை மேடம். நீங்க மயங்கி விழுந்தப்போ நான் அங்க இருந்ததால என்னெ நம்ம சி.எம் சார் ஒடனே ஒங்களோட அனுப்பி வச்சார்.’

வந்தனா யாசத்துடன் தலையை அசைத்தார். ‘ஃப்யூனரல் முடிஞ்சிருச்சா?’

‘ஆமாம் மேடம். ஐநூறு பேருக்கும் மேல வந்திருந்தாங்க. எங்க சர்ச்சில இப்படியொரு ஃப்யூனரல் மாஸ் நடந்து நான் பார்த்ததே இல்லைன்னு ஃபாதரே எங்கிட்ட சொன்னார்னா பாத்துக்கங்களேன்.. மாணிக்கவேல் சார்க்குன்னு அவ்வளவு மதிப்பு இருக்கு மேடம் நம்ம பேங்க்ல..’

‘தெரியும்’ என்பதுபோல தலையை மெள்ள அசைத்த வந்தனா.. ‘ராணி இப்படி இருக்காங்க?’

ஜோ ஒரு நொடி என்ன சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றான். அவனுக்கு அவனுடைய மேலாளரின் மனைவியைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும் அவருக்கு வந்தனாவைக் கண்டால் அரவே பிடிக்காது என்பதை அன்றுதான் அவன் நேரில் கண்டான். வந்தனாவை மருத்துவமனையில் சேர்க்க அவன் புறப்பட்டுக்கொண்டு செல்லும் நேரத்திலும், ‘எம் பொண்ணெ எங்கிட்டருந்து பிரிச்சிட்டு இந்த சிறுக்கி நடிக்கறத பார்த்தீங்களாய்யா..’ என்று உரத்த குரலில் அழுததை அவன் இப்போது நினைத்துப் பார்த்தான். அத்தகையவரைப் பற்றி கவலைப்படும் வந்தனாவை ஒரு புது மரியாதையுடன் பார்த்தான்.

‘அவங்க பரவாயில்லை மேடம். நீங்க அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. உங்கள ரொம்ப டென்ஷனாக்க வேண்டாம்னு சொல்லித்தான் டாக்டர் என்னெ உள்ள விட்டாங்க. ஒங்களுக்கு வீட்லருந்து ஏதாவது கொண்டுவரணுமான்னு சொன்னீங்கன்னா நா போய் கொண்டு வரேன்.’ என்றான் பணிவுடன்.

வந்தனா அவனை தன்னருகில் வரும்படி சைகை செய்யவே அவன்  படுக்கையருகில் இருந்த இருக்கையில் சென்றமர்ந்தான். ‘சொல்லுங்க மேடம்.’

வந்தனா தலையணையருகில் இருந்த கைப்பையை திறந்து பார்க்குமாறு சைகை காட்டவே அவன் தயக்கத்துடன் அதை எடுத்து திறந்து அவரிடமே காட்டினான்.

வந்தனா புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘உள்ளருக்கற மொபைல எடுத்துக்குங்க. வெளியே வராண்டாவிலருந்து என்னோட பி.ஏவுக்கு ஃபோன் பண்ணி காலைல என்னெ இங்க வந்து மீட் பண்ண சொல்லுங்க.. தேவிகான்னு செல்லுல இருக்கும்.. அது போறும்.. she will take care of my needs. Then you can go home. மாணிக்க வேல்கிட்ட என்னெ பத்தி ஒன்னும் கவலைப்படவேண்டாம்னு சொல்லிருங்க.. I will call him when I return home on Tuesday..’

படுக்கையிலிருந்த நேரத்திலும் தெளிவாக சிந்தித்து தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாமல் நின்று நிதானித்து பேசியவரை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஜோ சுதாரித்துக்கொண்டு, ‘சரி மேடம்’ என்ற கைப்பையிலிருந்த செல் ஃபோனை எடுத்துக்கொண்டு கைப்பையை மூடி எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

‘நம்ம புது சேர்மன் சென்னைக்கு வந்திட்டாரான்னு தெரியுமா மிஸ்டர்.ஜோ?’ என்று வந்தனா தொடர்ந்து கேட்க அவன் பதிலளிக்கும் முன்பு அங்கு வந்த நர்ஸ்.. ‘ப்ளீஸ் மேடம். Don’t strain yourself..’ என்றவாறு ஜோவை நோக்கினார். ‘மிஸ்டர்.. if you don’t mind..’

ஜோ புரிந்துக்கொண்டு நகர நர்ஸ் வந்தனாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவளுடைய இருக்கையை நோக்கி சென்றாள்.

ஜோ வெளியே சென்று வந்தனாவின் காரியதரிசிக்கு ஃபோன் செய்து தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு விவரத்தை சுருக்கமாகக் கூறினான். அவர் பதட்டத்துடன், ‘என்ன மிஸ்டர் ஜோ காலைல நடந்துருக்கு.. சாவகாசமா இப்ப சொல்றீங்க. மேடம் இப்ப எப்படியிருக்காங்க?’ என்று கோபப்பட ஜோ பொறுமையுடன் நிலமையை விளக்கிவிட்டு இந்த நேரத்தில் வந்தாலும் யாரையும் வந்தனா மேடத்தை சந்திக்க விடமாட்டார்கள் என்றும் காலையில் வந்தால் போதும் என்றான். பிறகு திரும்பிச்சென்று வந்தனாவை சந்திக்க முடியாமல் நர்சிடமே செல் ஃபோனை கொடுத்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி விரைந்தான். அவன் வாகனத்தை நெருங்கவும் அவனுடைய செல்ஃபோன் சிணுங்கவே எடுத்து திரையைப் பார்த்தான். அவனுக்கு பழக்கமில்லாத எண்.. யாராயிருக்கும் என்ற யோசனையுடன், ‘ஹலோ.. ஜோ ஹியர்.’ என்றான்.

‘ஜோ.. நாந்தான் முரளி பேசறேன்.’

ஜோ சலிப்புடன் இவன் எங்க இந்த நேரத்துல, பேசினா விடமாட்டானே..

அன்று முழுவதும் நடந்திருந்த நிகழ்ச்சிகள் அவனுடைய உடலையும் உள்ளத்தையும் ஏற்கனவே சோர்வடையச் செய்திருந்தன. வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தால் போதுமென்றிருந்தது. அவன் மருத்துவமனையிலிருந்து வீட்டை சென்றடையவே எப்படியும் அரைமணி நேரத்திற்கும் கூடுதலாகும். இந்த நேரத்தில் இவன் வேறு..

‘என்ன ஜோ பதிலையே காணோம்.. எங்கருக்கீங்க?’

ஜோ தான் இருந்த இடத்தையும் வந்தனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயத்தையும் சுருக்கமாகக் கூறினான். சில நொடிகள் எதிர்முனையிலிருந்து பதில் வராமல் இருக்கவே செல் ஃபோனில் தன் கால்சட்டைப்பையிலிருந்த ஹேண்ட் ஃப்ரீ கேபிளை எடுத்து இணைத்து மற்றொரு முனையை காதில் செருகிக்கொண்டு செல்ஃபோனை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.  வாகனத்தை முடுக்கி சாலையில் இறங்கினான்.

‘என்ன முரளி.. ஷாக்காயிட்டீங்களா? சீரியசா ஒன்னுமில்லை.. மேடத்துக்கு ஏற்கனவே ப்ளட் ப்ரஷர் இருந்திருக்கு.. அது நம்ம மாணிக்க வேல் சாரோட டாட்டர் திடீர்னு இறந்துட்டாங்கன்னு கேட்டதும் அது ஜாஸ்தியாயிருக்கு.. மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க..’

‘என்ன ஜோ.. ஒரே ஷாக்கான நியூசா சொல்றீங்க? நம்ம நந்தக்குமார் பகல்ல கூப்ட்டு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை.. என்ன ஆச்சி.. அந்த பொண்ணு ரொம்ப சின்ன வயசுன்னு கேள்விப்பட்டிருக்கேனே..’

ஜோ பேசிக்கொண்டே தான் சென்னை அண்ணாசாலை போக்குவரத்து சந்திப்பில் நிற்பதையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவலர் தான் பேசுவதையே கவனிப்பதையும் கண்டதும் பேசுவதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு தலையைக் குனிந்துக்கொண்டான். சந்திப்பைக் கடந்து சிறிது தூரம் சென்றதும், ‘ஹலோ சாரி முரளி. டிராஃபிக் சிக்னல்ல கான்ஸ்டபிள்  நான் பேசிக்கிட்டிருக்கறத கவனிச்சிட்டு என்னையே பார்த்தார். இந்த நேரத்துல அவர்கிட்ட மாட்டிக்கிட்டா வேலை கெட்டுப் போயிருமேன்னுதான் நீங்க பேசினப்போ சும்மா இருக்க வேண்டியதா போச்சி.. சொல்லுங்க என்ன விஷயமா கூப்ட்டீங்க?’ என்றான்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு மறுமொழியிலிருந்து பதில் வந்தது.. ‘ஒன்னுமில்லை ஜோ.. நாளைக்கு நம்ம புது சேர்மன் வராறே.. நம்ம சக்திய காட்றா மாதிரி ஒரு லஞ்ச் டைம் டெமோ வச்சா என்னென்னு.. ஒரு ஐடியா..ஆனா மேடம் இப்பருக்கற சூழ்நிலையில இது எந்த அளவுக்கு சரியாயிருக்கும்னு தெரியலை.. நாளைக்கி நம்ம நந்தக்குமார் வந்ததும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்.. குட்நைட் ஜோ.. நாளைக்கு தேவைன்னா கூப்டறேன்..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை செலுத்துவதில் கவனம் செலுத்த முயன்றாலும் இந்த முரளி ப்ளான் பண்ணிருக்கற டெமோவுக்கு இப்ப என்ன அவசியம்? அதுக்கு என்னெ எதுக்கு கூப்ட்டான்.. ? நாந்த்தான் எந்த வம்பு தும்பும் வேணாம்னுட்டு ஒதுங்கி இருக்கேனே... என்பதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை..

தொடரும்..

25.5.06

சூரியன் 84

‘என்ன இருந்தாலும் நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாதுய்யா.’

மாணிக்கவேல் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தார்.

சீராக மூச்சுவிட முடியாமல் கட்டிலில் படுத்திருந்த தன் தந்தை அந்த நிலையிலும் தன் மருமகளைப் பற்றி கவலைப்படுவதை நினைத்து 'அழுவதா, சிரிப்பதான்னு தெரியலையே' என்று நினைத்தார்.

தன்னைத் திருமணம் செய்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து ஒரு மாதம் நிறைவேறுவதற்குள் படுத்த படுக்கையாக இருந்த அவருடைய தாய் மரித்துப்போக அந்த இழப்பில் துளி அக்கறையும் காட்டாமல் இருந்தவள் ராணி.

‘நல்ல வேளைங்க.. இப்படியே இழுத்துக்கிட்டே இருந்து என் உயிர வாங்காம போய் சேர்ந்தாளே மகராசி..’ என்று சலிப்புடன் அக்கம்பக்கத்துக்காரர்களிடம் ராணி வாய்விட்டு கூறியதை கேட்டபோது தான் தவறு செய்துவிட்டோமோ என்று முதன்முதலாக உணர்ந்தார் அவர்.

அதன் பிறகு தன் மனைவியின் இழப்பைத் தாங்கிக்கொள்ள இயலாமல் உடலும் மனமும் சோர்ந்துபோயிருந்த தன் தந்தையை தான் வீட்டில் இல்லாத சமயங்களில் மனம் நோக ராணி பேசுகிறாள் என்று வேலையாட்கள் மூலமாக அறிந்தபோது வெகுண்டெழுந்தாலும் அவருடைய கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல் அவள் அலட்சியப்படுத்தியபோது முன்பின் தெரியாத ஒரு பெண்ணை வெறும் அவள் சார்ந்திருந்த மதத்திற்காக திருமணம் செய்துக்கொண்டது எத்தனை முட்டாள்தனம் என்பதை முழுவதுமாக உணர்ந்தார்.

‘அதெல்லாம் ஒன்னுமில்லேடா.. எந்த வீட்லதான் இந்த பிரச்சினை இல்லே? ஏன், ஒங்கண்ணன்மார் ரெண்டு பேர்க்கும் தெரிஞ்ச எடம், சொந்த எடம்னுதான முடிச்சோம்? அவளுங்க மட்டும் ஒங்கம்மா படுக்கையில விழுந்தப்போ பார்த்தாளுங்களா என்ன? ராணி அவளுங்களவிட மோசமும்னு நா சொல்லமாட்டேன். படபடன்னு பேசினாலும் எனக்கு வேண்டியதையெல்லாம் செஞ்சிக்கிட்டுத்தானடா இருக்கா? நீ வீணா எதையாவது நினைச்சி கவலப்படாத.’

மாணிக்கவேல் வருத்தப்பட்டு அவரிடம் சென்று கேட்டபோதெல்லாம் இப்படி பேசியே தன்னுடைய  வாயை அடைத்துவிட்டதை நினைத்துப் பார்த்தார்.

ராணியின் நடவடிக்கை தான் சென்னையை விட்டு மாற்றலாகி சென்றவுடன் மிகவும் மோசமாகி தன்னுடைய தந்தை ஒரு பணியாளையும் விட கேவலமாக நடத்தப்படுகிறார் என்பதை தற்செயலாக கேள்விப்பட்டபோதுதான் ஆவேசமடைந்து நேரே புறப்பட்டு சென்று ராணி வளர்ந்த கன்னியர் மடத்தலைவியையும் அவருடைய திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியாரையும் சந்தித்து பேசினார்.

அவருடைய மனத்தாங்கலை உண்மையான பச்சாதபத்துடன் செவிமடுத்த இருவருமே உடனே புறப்பட்டு அவருடைய இல்லத்திற்கு வந்து ராணியைச் சந்தித்து அறிவுரைக் கூறினர். மாணிக்கவேலின் தந்தையையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆனால் அவர்கள் வந்துசென்ற சில வாரங்களிலேயே ராணி தன் போக்கிலேயே செல்லவாரம்பிக்க செய்வதறியாது திகைத்து நின்றார் மாணிக்கவேல்.

அப்போதும், ‘என்னப்பா ராணி ஒங்கள நல்லா பாத்துக்கறாளா?’ என்று கேட்டால், ‘ஆமாப்பா.. நல்லா பாத்துக்கறா. நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே..’ என்று எங்கே தான் வருத்தப்படப்போகிறேனோ என்பதை தன்னிடம் மறைத்தவர்தானே இவர் என்ற எண்ணத்துடன் தன் தந்தையையே பார்த்தார்.

‘நா இப்ப என்ன பண்ணணும்னு நீங்க சொல்றீங்கப்பா?’

‘சாவு வீட்ல வச்சி அவள அனுப்பியிருக்கக் கூடாதுன்னு சொல்றேன்.. கமலி அவளோடயும் குழந்தைதானடா? இப்படி எல்லார் முன்னாலயும் வச்சி அவள அவமானப்படுத்தறா மாதிரி வீட்ட விட்டு அனுப்பியிருக்கணுமான்னுதான் கேக்கறேன்..’

மாணிக்கவேல் சலிப்புடன் அறையிலிருந்த தன் மகன் சந்தோஷையும் ஊரிலிருந்து வந்திருந்த தன் சகோதரர்களையும் பார்த்தார்.  மூத்தவர்கள் இருவரும் ‘இதில் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள்’ என்ற முகபாவனையுடன் அமர்ந்திருக்க அவருக்கு நேர் இளையவனும் அவனுடைய மனைவியும் அவருடைய தந்தை கூறியதை ஆமோதிப்பதுபோல அவரைப் பார்த்தனர். அவர்கள் இருவருமே ராணிக்கு மிக நெருக்கமான தம்பதியர் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.

‘நீ என்னடா சொல்றே?’ என்றார் மாணிக்க வேல் தன் இளைய சகோதரனைப் பார்த்து.

‘அப்பா சொல்றது சரின்னுதான் தோனுதுண்ணே.. அண்ணியோட கொணம்தான் ஆதியிலிருந்தே நமக்கு தெரியுமே.. படபடன்னு பேசுவாங்களேயொழிய மனசுல ஒன்னும் வச்சிக்க மாட்டாங்கண்ணே.. என்னையும் இவளையும் பேசாத பேச்சா? ‘ஒங்க ரெண்டு பேருக்கும் இனியும் தண்ட சோறு போட என்னால முடியாது’ன்னு எங்க ஃபேக்டரி ஸ்ட்ரைக்குலருக்கும்போது விரட்டியடிச்சவங்கதானேண்ணே.. அப்புறம் ஒரே வாரத்துல நாங்க குடியிருந்த எடம் வரைக்கும் வந்து எங்களுக்கு உதவுனத எங்களால எப்படிண்ணே மறக்க முடியும்? அவங்க நினைச்சிருந்தா அப்பாவ என்னால வச்சி பாக்க முடியாது எங்கயாவது முதியோர் இல்லத்துல கொண்டு சேத்திருங்கன்னு ஒத்தக்கால்ல நின்னிருந்தா ஒங்களால என்ன செஞ்சிருக்க முடியும்? ஆனா அவங்க அப்படி சொல்லலேல்லே? திட்டிக்கிட்டேன்னாலும் அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் செஞ்சிக்கிட்டுத்தான இருந்தாங்க?’

மாணிக்க வேல் அதிசயத்துடன் தன் சகோதரனைப் பார்த்தார். அவளுக்கு அப்படியொரு எண்ணம் வேற இருந்துதா? இருக்கும்.. இவனே கூட அப்படியொரு யோசனைய சொல்லியிருப்பான். தையல் வேல செஞ்சி இவனையும் இவன் தம்பியையும் படிக்க வச்சி, ஆளாக்கி ஒரு வேலையையும் வாங்கிக்குடுத்த என்னையே எதுத்துக்கிட்டு போனவன்கதானடா நீயும் ஒன் தம்பியும்.. நீ 'எம் பொண்ணு மாதிரி நினைச்சிக்கிட்டிருக்கே'ன்னு சொன்னவ இறந்த செய்திய கேட்டு உள்ளூர்லயே இருந்தும் வீட்டுக்கு வராம ஒன் ட்யூட்டி முடிஞ்சி கோவிலுக்கு வந்தவன்தானே நீ.. ஒந்தம்பி ஊர்ல இருந்தும் வீட்டுக்கும் வரலே.. கல்லறைக்கும் வரல.. நீ என்னடான்னா ஒங்க அண்ணிக்கு பரிஞ்சிக்கிட்டு வரே..

‘என்னண்ணே பேசாம இருக்கீங்க? நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?’

மாணிக்க வேல் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தவாறு தலை குனிந்து நின்றிருந்த தன் மகனைப் பார்த்தார். அவனுடைய முகத்தில் கப்பி நின்ற சோகம் அவருக்கு புரிந்தது..

‘சந்தோஷ்.. நீ என்னப்பா சொல்றே?’

சந்தோஷ் தலையை நிமிர்ந்து அவரை பார்த்தான். ‘அம்மாவ மறுபடியும் கூப்டுக்கலாம்ப்பா.. ஃபாதர் கூட போகும்போது கூட எங்கிட்ட ‘அப்பாக்கிட்ட சொல்லுடா.. நான் இனி வாயே திறக்க மாட்டேண்டா.. என்னெ அனுப்ப வேணாம்னு சொல்லுடா’ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்கப்பா.. நீங்கதான்..’

மேலே தொடரமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுத தன் மகனைக் காணச் சகியாமல் எழுந்துச் சென்று அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு தன் தந்தையின் கட்டிலருகில் சென்று, ‘நான் போய் அவள திரும்ப கூட்டிக்கிட்டு வந்தா ஒங்களுக்கு சந்தோஷமாப்பா?’ என்றார்.

தூக்க மருந்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமலிருந்த றுமுகச்சாமி கண்களை லேசாகத் திறந்து தன் மகனைப் பார்த்து ‘ஆமாண்டா..’ என்று முனுமுனுத்தார்.

கண்களை மீண்டும் மூடி உறக்கத்திற்கு திரும்பிச்சென்ற தன் தந்தையையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கவேல் மெள்ள திரும்பி சந்தோஷைப் பார்த்தார்.. ‘சித்தப்பாவ கூட்டிக்கிட்டு போ.. மதர் அனுப்பினா கூட்டிக்கிட்டு வா.. போ..’

அறையிலிருந்த அனைவருமே வியப்புடன் அவரைப் பார்க்க அதை பொருட்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறி தன் படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டார் மாணிக்கவேல்..

****

‘எலேய் ராசேந்திரா நம்ம குடியே முளுகிப்போச்சி.. அங்க எவ கூட கொஞ்சிக்கிட்டிருக்கே?’

செவிப்பறையைக் கிழித்துக்கொண்டு ஒலித்த தன் தந்தையின் குரலைக் கேட்ட ராசேந்திரன் ஒலிவாங்கியை சற்று தள்ளிப் பிடித்தான்.

‘என்னப்பா சொல்றீங்க? என்னாச்சி?’

ரத்தினவேல் எதிர்மு¨னையில் பூகம்பமாய் வெடித்தார். ‘எலேய், ஒம் மாமனார் வந்துட்டு இப்பத்தாண்டா எறங்கி போறான்.. அந்த பேங்க் மேனேஜர்கிட்ட போயி நாம ரெண்ட் பேரும் கொடுத்த ஜாமீன விலக்குனா அவன் ஹோட்டல் கணக்க நிறுத்திருவான், செக்கெல்லாம் திரும்பிப்போகும், அதுக்கப்புறம் ஹோட்டலுக்கு ஒரு பயலும் சரக்கு சப்ளை பண்ண மாட்டான்னு சொன்னே. ஆனா அந்த பேங்கு மேனேசர் என்னடான்னா இவன்கிட்டவே போயி எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டான்.

அவன் கம்பெனி ஷேரையெல்லாம் அந்த சேட்டுப்பயகிட்ட வித்துருவோம். ஹோட்டல் கைமாறுனதும் மறுபடியும் நாம போய் சேர்ந்துக்கலாம்னு சொன்னே.. என்ன ஆச்சி? அந்த சேட்டு பய இவங்கிட்டயே போயி நீ வாங்கிக்கறியான்னு பேரம் பேசியிருக்கான்.. நீ என்னத்தடா ஒளுங்கா செஞ்சிருக்கே? தெனத்துக்கும் ஒரு பொம்பளன்னு அலைஞ்சிக்கிட்டிருக்கறத தவிர வேற என்னத்த செஞ்சிருக்கே?’

ராசேந்திரன் கையில் பிடித்திருந்த ஒலிவாங்கியையே ஒரு நொடி குழப்பத்துடன் பார்த்தான். என்ன சொல்றார் இவர்? நாம போட்ட ஒவ்வொரு திட்டத்தையும் படிக்காத முட்டாள் நம்ம மாமனார் எப்படி இவ்வளவு ஈசியா ஒடச்சி போடுறான்? எல்லாம் அந்த அதிபுத்திசாலி வக்கீலாத்தான் இருக்கும்.. அவனும் அந்த சுந்தரம் பயலும் சேர்ந்து செய்யற வேலைதான் எல்லாம்..

பற்களை கடித்துக்கொண்டு எதிர்முனையிலிருந்து வந்த வசவு வார்த்தைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு..

ராசாத்தியம்மா.. சை.. பேசாம அவள நம்ம கைக்குள்ளயே வச்சிருந்திருக்கலாம். ‘அவ எப்ப கோச்சிக்கிட்டு அவ அப்பன் வீட்டுக்கு போனாளோ அப்பவே நம்ம கையிலருந்த துருப்பு சீட்டு
போயிருச்சிறா முட்டாப் பயலே.. அவ அப்பனோட சொத்துக்குத்தானடா பாக்க சகிக்காம இருந்த அவ மூஞ்சியையும் மறந்துபோயி கட்டுனே.. அவ மூஞ்சி முக்கியமில்ல.. அவளுக்கு வரப்போற சொத்துதாண்டா முக்கியம் எத்தன தடவ சொல்லியிருப்பேன்.. பொறுத்து போடா.. சொத்து முழுசும் கைக்கு வரட்டும் அப்புறம் வச்சிக்கலாம்னு படிச்சி, படிச்சி சொன்னேனே’ன்னு அப்பா சொன்னப்பவே கேட்டிருக்கணும்..

புத்திக்கெட்டு போய் அவ வீட்ட விட்டு போறேன்னு பயமுறுத்தினப்போக்கூட இவ எங்க போப்போறான்னு நினைச்சேன். சரி.. போனவ.. என்னெ மன்னிச்சிருங்க ராசேந்திரன், இனி ஒங்க விஷயத்துல நா தலையிடமாட்டேன்னு எத்தன லெட்டர், எத்தன ஃபோன்.. எல்லாம் அந்த பம்பாய் மூதேவி பண்ண வேலை.. அவ அழகுல மயங்கிப்போயி.. சே.. எல்லாம் எம் புத்திய சொல்லணும்.. இப்ப அவளும் இருக்கறத சுருட்டிக்கிட்டு போயி..

‘லேய் என்ன நா பேசறது காதுல விழுதா இல்லையா? என்ன பேச்சையே காணோம்.. மேக்கொண்டு என்ன பண்றதா உத்தேசம்?’

ராசேந்திரன் என்ன பதிலளித்து சமாளிக்கலாம் என்று யோசித்தான். இப்போதைக்கு எதையாவது கூறி விஷயத்தை தள்ளி போடுவோம். பிறகு தன் சகாக்களுடன் கூடிப்பேசி ஒரு முடிவெடுப்போம் என்று நினைத்து, ‘அப்பா, பதட்டப்படாம இருங்க. நீங்க நெனக்கிறா மாதிரி அவர் அவ்வளவு ஈசியா தப்பிச்சிர முடியாது. நா நாளைக்கே நம்ம வக்கீல பார்த்து பேசிட்டு ஒங்களுக்கு ஃபோன் பண்றேன்..’ என்றான்.

எதிர்முனையிலிருந்து கேலிச் சிரிப்பு பதிலாக வந்தது.. ‘எலேய்.. நீ சின்னப் பொடிப்பயன்னு நிரூபிச்சிட்டே.. இனி ஒன்னெ நம்பி ஒன்னும் பலனில்லே.. நானே கோதாவுல இறங்கினாத்தான் சரிவரும்னு நெனக்கேன்.. இன்னைக்கே பொறப்பட்டு வரேன்.. காலைல எளுந்திரிச்சதும் எவ பின்னாலயாவது ஓடிராத.. வீட்டுலயே இரு.. என்ன? வந்து பேசிக்கலாம்.. நீ ஒன் வக்கீல் பயலுக்கு ஃபோன் போட்டு காலைல பத்து, பதினோரு மணிக்கு வரச்சொல்லி வை.. என்னலே வெளங்குதா?’

‘சரிப்பா.’ என்று இணைப்பைத் துண்டித்த ராசேந்திரன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவைக் கடந்திருந்தது. தன் எதிரில் குடிபோதையில் தள்ளாடியவாறு அமர்ந்திருந்த தன் சகாக்களைப் பார்த்தான். இவனுங்க இருக்கற நிலமையில என்னத்த டிஸ்கஸ் பண்றது.. விரட்டியடிச்சிட்டு போய் படுப்போம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.

தொடரும்..

24.5.06

சூரியன் 83

‘எத்தனை பெரிய பிரச்சினையானாலும் உன்ன சுத்தி இருக்கறவங்களோட ஹெல்ப் இருந்தா ஈசியா சமாளிச்சிரலாம். You can’t do everything on your own. அத நீ புரிஞ்சிக்கிட்டா போறும்.’

அன்று காலை புவனாவின் தந்தை தனபால் சாமி கூறிய  அறிவுரையை நினைத்துப் பார்த்தாள் ரம்யா.

உண்மைதான். இத புரிஞ்சிக்காமத்தான் அவசரப்பட்டு யாரும் தேவையில்லைன்னு நினைச்சி வீட்ட விட்டு வெளியே போனேன். கடைசியில என்ன நடந்தது? வீட்டு விஷயம் வெளிய தெரிஞ்சி அவமானப்பட்டதுதான் மிச்சம்.

எனக்கு மட்டுமா? பாவம் அம்மா. அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டு ரெண்டு நாளா என்ன அவஸ்தைப் பட்டாங்களோ. அப்பாவ பார்த்தாலும் பாவமாத்தான் இருந்துது. அவர் ஹால்ல ஒக்காந்து தனபால் சாமி அங்கிளோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அவஸ்தைப் பட்டதத்தான் பாத்தமே..

அப்பா நமக்கு தெரியாம என்னமோ செஞ்சிருக்கார் போல. அதான்
அந்த அங்கிள் துருவி, துருவி கேட்டதும் எழுந்து ரூமுக்கு போய்ட்டார். கீழ எறங்கி வந்தப்பவும் அப்பா மூஞ்சில களையே இல்லையே.. என்ன பிரச்சினை? என்னாலதானா?

நானாவது அப்பா கோபப்பட்டப்போ பேசாம இருந்திருக்கலாம். தப்பே என் பேர்ல வச்சிக்கிட்டு எல்லார் மேலயும் கோபப்பட்டு என்ன பிரயோசனம்?

அப்பா சொன்னா மாதிரி இது சங்கர் வீட்டுக்கு தெரிஞ்சிருந்தா எவ்வளவு பிரச்சினையாயிருக்கும்? ஏந்தான் என் புத்தி அப்படி போச்சிதோ..

அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே வாரிச் சுருட்டிக்கொண்டு  எழுந்தாள் . ‘ரம்யா, நாந்தான் அப்பா.. கதவ திற..’

பரபரப்புடன் எழுந்து துப்பட்டாவை போட்டுக்கொண்டு கதவைத் திறந்தாள். எதிரே நின்ற தன் தந்தையையும் தாயையும் பார்த்தாள். ‘என்னப்பா?’

‘உங்கிட்ட அப்பா கோவிச்சிக்கிட்டதுதான் தப்புதான் ரம்யா..’

தன் தந்தையின் முகத்தில் கடுகடுப்பையும், குரலில் எரிச்சலையுமே கண்டிருந்த ரம்யாவுக்கு அவருடைய முகத்திலிருந்த குற்ற உணர்வையும், குரலில் இருந்த பாசத்தையும் கண்டதும் நிலைகுலைந்து போனாள். திரும்பி ஓடிப்போய் கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள்.அவளையுமறியாமல் கண்கள் கலங்கி லேசாக விசும்ப ஆரம்பித்தாள்.

இதை எதிர்பார்க்காத சுசீந்தரா தன்னுடைய கணவனைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்து தன் மகளருகில் சென்றமர்ந்தாள். ‘ஏய் ரம்யா.. எதுக்கு அழறே..? அப்பாவும் நானும் மனம்விட்டு உங்கிட்ட பேசணும்னுதான் வந்திருக்கோம். கண்ண துடச்சிக்கிட்டு உம் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நாங்க பார்த்த மாப்பிள்ளைய பிடிக்கலையா சொல்லு.. நிச்சயம் ஆனாலும் பரவாயில்லைன்னு நிறுத்திரலாம்.’

பாபு சுரேஷ் தன் மனைவியை வியப்புடன் பார்த்தார். அட! இவளுக்கு இப்படியெல்லாம் கூட பேச வருதே.. நாந்தான் இவங்க ரெண்டு பேரோட அருமையையும் புரிஞ்சிக்காமயே இருந்துட்டேன் போலருக்கு..

ரம்யாவின் அறைக்குள் நுழைந்த பாபு அப்போதுதான் முதல் முறையாக அறைக்குள் நுழைந்தவரைப் போல அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டார்.

உண்மையிலேயே கடந்த ஐந்தாறு வருடங்களில் இப்போதுதான் அந்த அறைக்குள் முதல் முறையாக நுழைகிறார் என்பதை அவரே உணர்ந்து ஒரு குற்ற உணர்வு மேலிட, ‘ரம்யா.. சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப அழகா வச்சிருக்கே உன் ரூமை..’ என்றார் தன் மகளைப் பார்த்து.

ரம்யாவும் சுசீந்தராவும் வியப்பு மேலிட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு என்ன தோன்றியதோ குபீரென்று இருவரும் சிரிக்க பாபு சுரேஷ் விஷயம் புரியாமல் அவர்களையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு அவரும் சிரிப்பில் கலந்துக்கொள்ள சட்டென்று அந்த அறைக்குள் சந்தோஷம் பரவி மூவர் மனதையும் லேசாக்கியது.

சிரிப்பினூடே பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ரம்யா தன் தந்தையைப் பார்த்தாள். ‘I am really sorryப்பா. வேணும்னு ப்ளான் பண்ணி செய்யலை.. ஏதோ ஒங்கள பனிஷ் பண்றதா நினைச்சிக்கிட்டு இப்படியொரு முட்டாள்தனமான காரியத்த செஞ்சிட்டேன்.. என்னெ மன்னிச்சிருங்க டாட்.’

அவளுடைய குரலில் இருந்த உண்மையான குற்ற உணர்வை புரிந்துக்கொண்ட பாபு அவளருகில் சென்று அமர்ந்தார். ‘இல்ல ரம்யா.. நாந்தான் உங்கிட்டயும் உங்கம்மாக்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கணும்.. தினம் பத்து மணி நேரம் பாக்கற வேலையில நா காட்டுன அக்கறைய மீதி பதினாலு மணி நேரம் வாழ வேண்டிய வாழ்க்கைய மறந்துபோனேன்னு நினைக்கறப்போ நா எவ்வளவு பெரிய ஃபூலாருந்திருக்கேன்.. I have been an idiot to ignore my family.. I am sorryடா..’

ரம்யா புன்னகையுடன் தன் தாயைப் பார்த்தாள். சுசீந்தராவோ இந்த மனுஷனெ எந்த அளவுக்கு நம்பலாம்னு தெரியலையே.. என்ற குழப்பத்தில் மவுனமாக இருந்தாள்..

பாபு தன் மகளையும் மனைவியையும் பார்த்தார். ரம்யாவை தேடுவதற்கு சேதுமாதவனின் உதவியை நாடியதும் அவர் அனுப்பிய ஆட்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டதையும் இவர்களிடம் இனியும் மறைப்பது சரிதானா என்று நினைத்தார்.  அந்த புவனா வழியாகவோ அல்லது தனபால் சாமி வழியாகவோ தெரிவதைவிட நாமே இவர்களிடம் கூறிவிடுவதுதான் நல்லது என்று நினைத்து ‘அப்பா இன்னொரு முட்டாள்தனமும் பண்ணிருக்கேன் ரம்யா. அத உங்கிட்ட சொல்லிரணும்னுதான் உன் ரூமுக்கு வந்தேன்.’

ரம்யா அதிர்ச்சியுடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்றீங்க?’

பாபு சுரேஷ் அன்று காலையில் தான் சேதுமாதவனை தொடர்புகொண்டதிலிருந்து தனபால்சாமி இதுகுறித்து தன்னை  துளைத்தெடுத்ததுவரை ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.

தன்னுடைய மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் இனி தன்னை தன் மகளோ என்ன குறை கூறினாலும் பொறுமையுடன் கேட்பதற்கு தயாராக தலை குனிந்து காத்திருந்தார்.

அவருடைய பேச்சின் துவக்கத்தில் பொங்கி வந்த கோபம் அவர் கூறி முடித்தபோது தன் மனதிலிருந்து அடியோடு மறைந்துபோயிருந்ததை உணர்ந்த ரம்யா தன்னுடைய தந்தையின் அருகில் நகர்ந்து அவருடைய தோளில் கைவைத்தாள்.

‘நீங்க செஞ்சது சரியோ தப்போ, ஆனா என் அப்பாங்கற  ஸ்தானத்திலிருந்து இத நீங்க செஞ்சீங்கன்னு நினைக்கும்போது தப்பா தோனலைப்பா. அதுவுமில்லாம நீங்க செஞ்சதுக்கு மூல காரணமே நாந்தானேப்பா.. நா மட்டும் இந்த முட்டாத்தனமான காரியத்த செய்யலேன்னா.. போயும் போயும் ஒங்களுக்கு சுத்தமா புடிக்காத அந்த ஆள்கிட்ட போயி உதவி கேட்டிருப்பீங்களா?’

சே.. என்ன மனுஷன் இவர்.. சொந்த பொண்ண கண்டுபிடிச்சி குடுங்கன்னு ஆஃபீஸ்லருக்கற ஒருத்தர்கிட்ட போய் கேட்டு அந்தாள் அனுப்பின அடியாள்ங்கக் கிட்ட வயசுக்கு வந்த, கல்யாணம் பேசி முடிச்சப் பொண்ணோட ஃபோட்டோவ கொடுத்து தேடச்சொல்லி.. அந்த பயல்க போலீஸ்ல மாட்டி.. இதுமட்டும் பேப்பர்ல, கீப்பர்ல வந்திருந்தா என்னாவறது?

ரம்யா என்னடான்னா அதையெல்லாம் மறந்துட்டு அப்பன் தோள்ல கைய்ய போட்டுக்கிட்டு உருகுறா? நல்ல பொண்ணு, நல்ல அப்பன்.. ஏதோ இந்த மட்டுக்கும் சொன்னாரே..

‘என்ன சுசீ.. நீ ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறே..?’ என்ற கணவரை எரிச்சலுடன் பார்த்தாள். ‘நா என்னத்த சொல்றது.. அதான் நீங்களே முட்டாள்தனமும்னு ஒத்துக்கிட்டீங்களே..’என்றாள். ‘சரிங்க.. நீங்க செஞ்சிட்டீங்க. ஆனா இது மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க காதுல விழுந்தா என்னாவறதுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தீங்களா?’

பாபு சுரேஷ் தன் மனைவியைப் பார்த்தார். ‘நீ சொல்றது சரிதான் சுசீ. ஆனா இதையெல்லாம் யோசிச்சி பாக்கற மனநிலையில நா அப்ப இல்லடி.. நாந்தான் ஒரு மூர்க்கனா இருந்தேனே..’

ஆமா.. இருபத்திநாலு மணி நேரத்துல மாறிட்டீங்களாக்கும். இதுக்கு பின்னால என்ன மாயம் இருக்கோ யார் கண்டா.. ஒங்கக் கூட இருபத்தஞ்சு வருஷமா குடும்பம் நடத்தியிருக்கேனே.. அப்பல்லாம் மாறாத நீங்களா இப்ப மாறப்போறீங்க.. பார்ப்போம்.. இந்த குணம் எத்தனை நாளைக்குன்னு..

‘நீ மனசுக்குள்ள நினைக்கறது புரியுது சுசீ.’ என்ற தன் கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சுசீந்தரா.

‘என்ன சொல்றீங்க?’

‘என்னடா இவன்.. திடீர்னு நல்லவனாயிட்டா மாதிரி தெரியுதே.. இது நிஜந்தானா..? இல்லே இதுக்கு பின்னால ஏதாவது விஷயம் இருக்கான்னுதானே யோசிக்கறே?’

சுசீந்தரா பதில் பேச வாய் வராமல் தன் கணவனையே பார்த்தாள்.

ரம்யா குறுக்கிட்டு, ‘சேச்சே இல்லப்பா.. அம்மாவுக்கு அப்படியெல்லாம் கூட நினைக்க தெரியாதுப்பா.. என்னம்மா, நா சொல்றது சரிதானே..’ என்றாள் புன்னகையுடன்..

‘ஆமாமா.. எனக்கு அப்படியெல்லாம் கூட நினைக்கத் தைரியம் இருக்கா என்ன? நில்லுன்னா நிக்கணும்.. ஒக்கார்னா ஒக்காரணும்.. அதத்தான இந்த வீட்டுல இத்தன வருஷமா செஞ்சிக்கிட்டிருக்கேன்.. ஒங்கப்பா இப்ப திருந்திட்டேன்னு சொல்றார்.. சரின்னு நம்பிக்கறேன்.. நாளைக்கே பழயைபடி வேதாளம் மாதிரி முருங்க மரத்துல ஏறுவேம்பார்.. அதுக்கும் சரிங்கன்னு ஆமாம் போடணும்..’ சலிப்புடன் பேசிய சுசீந்தராவிடம் நகர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றினாள் ரம்யா..

‘என்னம்மா நீ.. அப்பாவே இறங்கி வந்து மன்னிப்பு கேக்கறப்போ பெருந்தன்மையா சரின்னு ஏத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கறத விட்டுட்டு நீ பழையபடி வீம்பு பண்ணா என்ன அர்த்தம்..? போறும்மா.. சின்ன வயசிலருந்து இந்த அம்மாவும் அப்பாவும் எப்பத்தான் சிரிச்சி பேசுவாங்களோன்னு ஏங்கிக்கிட்டிருக்கற என்னெ இனியும் ஏமாத்தாம திருந்தும்மா.. திருந்திட்டேன்னு சொல்ற அப்பாவ சந்தேகப்படாம ஏத்துக்கப் பார்.. இல்லேன்னா இந்த கல்யாணமும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. நா எங்கயாவது ஹாஸ்டல பாத்துக்கிட்டு போறேன்..’ என்றாள் ரம்யா..

பதறிப்போன சுசீந்தரா.. ‘ஏய், ஏய்.. என்னைய சொல்லிட்டு நீ மறுபடியும் முருங்க மரத்துல ஏறிக்காத.. இப்ப என்ன? ஒங்கப்பா திருந்திட்டார்.. அவ்வளவுதானே.. சரி.. அவர் திருந்திட்டார்.. நானும் திருந்தணும்.. வீட்டுல சண்டை சச்சரவுன்னு ஒன்னும் இருக்கக்கூடாது.. அதானே.. சரி.. நா ஒத்துக்கறேன்.. இனிமே என்னால இந்த வீட்டுல சண்டையே வராது.. சரியா..?’ என்று ரம்யாவின் வலது கைமேல் தன் கையை வைத்து.. ‘ப்ராமிஸ்..’ என்று புன்னகைக்க ரம்யா சிரிப்புடன்.. ‘ப்ராமிஸ்’ என்றாள் பதிலுக்கு..

பிறகு திரும்பி தன் தந்தையை நோக்கி தன்னுடைய இடது கரத்தை நீட்டினாள். ‘நீங்க என்ன சொல்றீங்கப்பா?’ என்றாள்  ‘No more arguments.. No more fights.. என்ன சரியா?’

பாபு சுரேஷ் கலங்கி நின்ற தன் கண்களை துடைத்துக்கொண்டு.. ‘Yes I agree.. No more fights!’ என்றார் புன்னகையுடன்.

பிறகு எழுந்து நின்று.. ‘ நாளைலருந்து அப்பா ஒரு வாரத்துக்கு லீவு போட்டுரலாம்னு பாக்கேன்.. பதினோரு மணி போல மூனு பேருமா ஷாப்பிங் போலாம்.. மாப்பிள்ளைக்கு சூட் எடுக்கணும்.. அவரும் அவரோட தங்கையும் நம்ம கூட வரேன்னு சொல்லியிருக்காங்க. அம்மாவும் பொண்ணுமா டிஸ்கஸ் பண்ணி என்னென்ன வேணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வைங்க.. ஏய் சுசீ பசிக்குது. ஏதாச்சும் செஞ்சிருக்கியா’  என்றவாறு வெளியேற..

'நீங்க போய் டைனிங் டேபிள்ல ஒக்காருங்க. நா இவள கூட்டிக்கிட்டு வரேன்.' என்ற சுசீந்தரா.. ‘என்னாச்சிடி ஒங்கப்பாவுக்கு.. என்னால இன்னும் நம்ப முடியலைடி..’ என்றாள் சிரிப்புடன்.

தொடரும்..




23.5.06

சூரியன் 82

ரவி குளித்துமுடித்த தலையுடன் குளியலறையிலிருந்து படுக்கையறைக்குள் நுழைந்தான்.

மஞ்சு படுக்கையில்  படுத்துக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தது மெல்லிய ஒளியில் தெரிந்தது.

படுக்கையறைக்கு தெற்கே திறந்திருந்த பால்கணி வழியாக குளிர்ந்த காற்றுடன் பத்து மாடிகளுக்குக் கீழே சாலையில் அந்த நேரத்திலும் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஒலி லேசாய் கேட்டது.

ரவியின் கண்களுக்கு வெளியே பால்கணி வாசல் வழியாக வானம் மேகங்கள் ஏதும் இல்லாமல் நீலமாக, நட்சத்திரக் குவியலுடன் சட்டம் இடப்பட்ட சித்திரத்தைப் போல, அழகாகத் தெரிந்தது.

நேற்று இதே நேரத்தில் எதிர்காலத்தில் முற்றிலுமாக நம்பிக்கையிழந்து தவித்துக்கொண்டிருந்த தனக்கு இருபத்திநான்கு மணிநேரத்தில் மீண்டும் ஒரு புது வாழ்வு, ஒரு புது அத்தியாயம், ஒரு புது வாசல் திறக்கப்பட்டிருந்ததை நினைத்துப்பார்த்தான்..

தலையைத் துவட்டிக்கொண்டே படுக்கையறையிலிருந்து குட்டி மேசைக்கருகே சென்று நேரத்தைப் பார்த்தான்.  நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

அன்று மாலை கமலியின் இறுதி யாத்திரையில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ‘மனமும் உடம்பும் சோர்ந்துபோயிருக்குங்க. இப்படியே மைலாப்பூர் பீச்சு பக்கம் போங்க.  மெரீனா வேணாம். கூட்டமாருக்கும்.. இப்படியே பீச்சு மணல்ல இருட்டற வரைக்கும் படுத்திருக்கணும் போலருக்கு..’ என்று மஞ்சு கூற அதுவும் நல்லதுக்குத்தான் என்று வண்டியை கடற்கரை நோக்கி திருப்பினான் ரவி.

மஞ்சு நினைத்தது போலவே சாந்தோம் தேவாலயத்திற்கு பின்னாலிருந்த கடற்கரையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அன்று மாதத்தில் முதல் ஞாயிறானதால் இங்கிருந்து பார்த்தாலே மெரீனா விளக்குகளால் ஜொலிப்பது தெரிந்தது..

நேரம் ஏழு மணியைக் கடந்திருந்ததால் சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வருவோரைத் தவிர கடற்கரையிலும் அதனையொட்டியிருந்த சாலையிலும் கூட்டம் அவ்வளவாக இல்லாத அந்த அமைதி அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.

என்றைக்குமில்லாமல் மஞ்சு அவனுடைய கரங்களை வலிய வந்து பற்றிக்கொண்டு கடல் மணலில் நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தான். நினைத்தபோதே இவளை நான் எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வும் தலைதூக்கியது.

கடற்கரை மணலில் கால்கள் புதையுற தொலைதூரத்தில் நடுக்கடலில் பிம்பமாய் தெரிந்த கப்பல்களைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்தோம் என்ற நினைவேயில்லாமல், மவுனமாய் நடந்தது அவர்களுடைய இருவருடைய மனப்பாரத்தையுமே வெகுவாய் குறைத்ததாக உணர்ந்தனர்.

‘சாவற வயசாங்க அது? அந்த பொண்ணோட மொகத்த பார்த்தீங்களா? எவ்வளவு அமைதி, சாந்தம்.. அந்த உதடுகள்ல லேசான ஒரு புன்சிரிப்பு.. எத்தன அழகான கொழந்தைங்க அது? மூளையில ரத்த நாளங்கள் வெடிச்சிருந்தா அந்த கொழந்தை என்ன வேதனைய அனுபவிச்சிருக்கும்? அம்மா தூக்க மாத்திரைய போட்டுக்கிட்டு ஒரு ரூம்ல.. பெஞ்சாதியோட படுக்க போற நேரத்துல சண்டைய போட்டுக்கிட்டு அப்பா ஒரு ரூம்ல.. யாருக்கும் வேண்டாம வயசான தாத்தா ஒரு ரூம்ல.. தங்கச்சியோட வேதனைய தலைவலின்னு நெனச்சிக்கிட்டு காப்பிய போட்டு குடுத்துட்டு திரும்பிப் போன அண்ணன்.. வீட்டுக்குள்ள எல்லாரும் இருந்தும்.. அவசரத் தேவைன்னு வந்தப்போ யாரும் இல்லாத அனாதையா.. என்ன கொடுமைங்க.. ஆனாலும் அந்த மொகத்துல எத்தனை அமைதி.. எப்படீங்க?’

ரவி அவள் தன் மனதிலிருந்த வேதனைகளையெல்லாம் கொட்டி தீர்த்துவிடட்டும் என்று அமைதியாய் அவளுடைய உள்ளங்கையை அழுத்திக்கொடுத்தான் பதில் பேசாமல்..

மஞ்சு அமைதியாய் முகம் மறைக்கும் அந்த மெல்லிருட்டில் விசும்புவது தெரிந்தும் ரவி மவுனமாகவே இருந்தான்.

மஞ்சுவை மாதிரி எங்களுக்கு இடையிலும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால்.. ஒருவேளை நான் வேலை, வேலையென்று ஓடிக்கொண்டிருக்க மாட்டேனோ.. எதிர்பாராமல் வந்த அந்த எண்ணம் அவனையே திடுக்கிட வைத்தது.

‘ரவி.. நமக்கு கமலிய மாதிரி ஒரு குழந்தையிருந்திருந்தா..?

அவன் நினைத்ததையே மஞ்சுவும் வாய்விட்டு கூற திடுக்கிட்டு அவளைப்பார்த்தான்.. அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல அவளுடைய கரத்தை லேசாக அழுத்தினான்.

‘நான் சாயந்திரம் சொன்னதப் பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா ரவி?’

மேசைக்கு சற்று மேலே சுவரில் பொருத்தப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரவி திடுக்கிட்டு மஞ்சுவை திரும்பிப்பார்த்தான்.

‘எதப்பத்தி மஞ்சு?’

மஞ்சு படுக்கையில் படுத்தவாறே திரும்பி அவனைப் பார்த்தாள். ‘முதல்ல இங்க வந்து படுங்க. சொல்றேன்.’

ரவி புன்னகையுடன் தன் கையிலிருந்த துவாலையை இருக்கையில் போட்டுவிட்டு படுக்கையில் ஏறி அவளருகில் படுத்தான்.

இருவரும் அருகருகே ஒரே படுக்கையில் படுத்து எத்தனை வருடங்களாகிவிட்டன என்று நினைத்தான் .

ரவியுடனான தன்னுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதிலிருந்தே அவனுடன் ஒரே படுக்கையில் படுப்பதை நிறுத்திவிட்டாள் மஞ்சு. அவர்களுடைய குடியிருப்பில் ஒரேமாதிரியான இரண்டு படுக்கையறைகளை அமைத்தது இதற்காகத்தானோ என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாகவே தனித்தனி அறையில் உறங்கினர்.

அந்த ஏற்பாடு ரவிக்கும் சாதகமாகவே இருந்தது. அவன் தனக்கு தோன்றிய நேரத்தில் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவள் செய்து வைத்திருந்த இரவு உணவையும் அவன் புறக்கணிக்கவே அவள் அவனுக்கென சமைத்துவைத்து காத்திருப்பதையும் நிறுத்திவிட்டு அவள் உண்டு முடிந்ததும் அடுத்த குடியிருப்பிலிருந்த மாமியுடன் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கமாகிப் போனது..

நாளடைவில் அவன் வீட்டுக்கு வருவதும் வாரத்தில் இரண்டோ மூன்றோ நாட்கள் என்ற நிலையையடைந்தபோதுதான் இனியும் தான் இந்த வீட்டில் இருந்து பயனில்லை என்று அவள் வெளியேறினாள்.

‘சாயந்திரம் நீ ஏதோ ஒரு மூடுல என்னவெல்லாமோ பேசினீயே.. சரி உன் மனப்பாரம் கொஞ்சம் கொறயட்டும்னுதான்  நானும் பேசாம இருந்தேன். இப்ப சொல்லு.. நீ எத நினைச்சிப் பார்த்தீங்களான்னு கேக்கறே?’

மஞ்சு திரும்பி அவனைப் பார்த்தாள். ‘கமலி மாதிரி நமக்கு ஒரு கொழந்தை இருந்தா எப்படியிருக்கும்னு கேட்டேனே?’

ரவிக்கும் அப்படியொரு சிந்தனை அன்று மாலை கமலியின் உடலைப் பார்த்ததுமே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். தங்களுக்கிடையில் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தை வேண்டுமென்பதை மஞ்சு அவனை விட்டு பிரிந்ததுமே அவனுக்கு தோன்றியது..

ஆனால் இப்போது.. தன்னுடைய அலுவலக வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்திலா?

‘இப்ப ஆஃபீஸ்லருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததும் இதப் பத்தி யோசிக்கலாமே மஞ்சு..’
மஞ்சு பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்  ரவி. அவனுடைய பதில் அவளுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

‘நா எதுக்கு சொல்றேன்னா...’

மஞ்சு திரும்பி அவனுடைய வாயைப் பொத்தினாள். ‘புரியுதுங்க.. ஒங்க வேதனை புரியுது.. நீங்க என்னோட யோசனை ஒதுக்கித் தள்ளாம.. சரிங்கறா மாதிரி பேசினதே போறுங்க.. நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். இப்ப இருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் இதப்பத்தி யோசிக்கலாம்கறது சரிதான். இவ்வளவு காலம் காத்திருந்திட்டோம்.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே..’

கொஞ்ச நாளா? இந்த என்க்வயரி முடிஞ்சி.. அதுக்கப்புறம் என்ன டிசிஷன் ஆவுதோ.. இதுல புது சேர்மன் வேற.. அவர் எப்படி பட்டவரோ.. பழைய சேர்மனே கண்டினியூ பண்ணியிருந்தா அவன் பிசினஸ் பண்றதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கறது தெரியும். அவார்ட் கொடுத்த அவர் கையாலயே நிச்சயம் பனிஷ்மெண்ட் குடுத்திருக்க மாட்டார்..

இந்த புது சேர்மனும் அவனுடைய வங்கியிலேயே முன்பு பணிபுரிந்தவர்தான் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவன் வங்கியில் சேர்ந்து ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தபோது அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்ததால் அவருடன் பணிபுரிந்த அனுபவம் அவனுக்கில்லை..

எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது..

‘நீங்க எதையாவது நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதேள் ரவி.. நீங்க செஞ்சிருக்கிறது வெறும் ப்ரொசீஜரல் மிஸ்டேக்ஸ்தான். சாதாரணமா ஒரு மேனேஜர் பிசினஸ் பண்றப்போ எடுக்கக்கூடிய நியாயமான ரிஸ்க்கதான் நீங்க எடுத்துருக்கேள். சில முட்டாள்தனமான காரியங்களும் செஞ்சிருக்கேள் இல்லேன்னு சொல்லலே.. ஆனா அதற்கான வேலிட் ரீசன்சும் இருக்கறதாத்தான் நான் ஃபீல் பண்றேன். அதனால ஒங்கள என்க்வயரிலருந்து கம்ப்ளீட்டா விடுவிக்க முடியலைன்னாலும்.. நிச்சயமா பெரிய பாதகம் ஏற்படாமல் பாத்துக்க முடியும்னு நா நம்பறேன்.. ஒங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும். அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்..’

வழக்கறிஞர் நாராயணசாமிக்கு இதிலிருந்த நம்பிக்கை தனக்கும் இன்னமும் ஏற்படாமலிருப்பதை ரவி நினைத்துப் பார்த்தான். இதற்குக் காரணம் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லாதிருந்ததுதான்.

‘நமக்கு இறைவன் தந்திருக்கற அதிகாரத்தை நமக்கு நண்பர்களை ஏற்படுத்திக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கணும் ரவி.. நீங்க அப்படி செஞ்சிருந்தீங்கன்னா நீங்க மேனேஜரா இருந்த ப்ராஞ்சுக்குள்ளவே போறதுக்கு  இப்ப தயங்குவீங்களா?’

அவனுடைய துன்பநேரத்தில் தரவாக வந்த ஃபிலிப் சுந்தரத்தின் அறிவுரை எத்தனை உண்மையானது? அவன் நண்பர்களை சம்பாதிக்காதது மட்டுமல்ல.. விரோதிகளையுமல்லவா சம்பாதித்திருந்தான்?

‘என்ன ரவி யோசிக்கிறீங்க? இந்த என்க்வயரிய எப்படி ஃபேஸ் பண்றதுன்னா? நா இருக்கேன் ரவி.. நாம ரெண்டு பேருமா சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்.. கவலைய தூர தூக்கி வச்சிட்டு தூங்குங்க..’ என்றவாறு மஞ்சு அவனை இறுக அணைத்துக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பார்க்காத ரவியின் கண்கள் கலங்கி தலையணையை நனைத்தது..

தொடரும்..






22.5.06

சூரியன் 81

ஏ.சி. கோச்சில் பயணம் செய்வதே ஒரு தனி சுகம்தான். மிதமான குளிரும் மெலிதாக கேட்கும் தடக், தடக் என்ற ஓசையும் தாலாட்டுவதுபோடுவதுபோல இருந்தது.

ஆயினும் உறக்கம் வராமல் நெடுநேரம் விழித்துக்கொண்டிருந்தாள் நளினி. மூன்றடுக்கு படுக்கைகளைக் கொண்ட அந்த ஏ.சி கோச்சில் நடுவில் இருந்த படுக்கைகளில் எதிரும் புதிருமாக அவளும் நந்தக்குமாரும் படுத்திருந்தனர்.

நந்துவுக்கு என்ன களைப்போ வண்டி பாலக்காட்டை தாண்டியவுடனே படுக்கையைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டான். நளினியின் பக்கத்து இருக்கை இரண்டையும் நந்துவின் இருக்கையை அடுத்திருந்த இரண்டையும் ஆக்கிரமித்துக்கொண்ட மாணவிகளின் குழு நள்ளிரவுவரை தங்களுடைய ஹாஸ்டல் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டிருக்க நளினியும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டாள். அவளுடைய அந்தக்கால அனுபவங்களை அம்மாணவிகள் மிகவும் ரசிக்கவே பேச்சு ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு போக நேரம் போனதே தெரியாமல் இருந்தது.

‘என்னங்கம்மா இது.. நாங்க தூங்க வேணாமா?’  என்று அடுத்த பகுதியிலிருந்த ஒரு பெரியவர்  வந்து கேட்கும்வரை அரட்டையடித்துக்கொண்டிருந்த மாணவிகள் ஒருவரயொருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்திக்கொண்டு படுக்கையில் விழ நளினியும் தன்னுடைய படுக்கையை விரித்து படுத்தாள்.

ஆனால் கடந்தகால நிகழ்வுகள் அவளை உறங்கவிடாமல் தடுத்தன.

எதிர் படுக்கையில் படுத்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நந்தகுமாரைப் பார்த்தாள். ‘இவங்கிட்ட என்னத்தெ பார்த்து நா காதல் வசப்பட்டேன். முகத்த மூடிக்கிட்டுருக்கற தாடிக்கு பின்னால எதையோ ஒன்ன பார்த்துதான மயங்கிப்போனேன்? அது இப்ப எங்க போச்சி? இல்லே நாந்தான் அத மறந்துப்போனேனா? எதுவாருந்தாலும் போறும் இந்த போலி வாழ்க்கை. பேசாம கேரளாவுலருந்து சென்னைக்கே மாற்றம் கேட்டா என்ன? நாம சென்னையில ப்ரொபேஷனரி ஆபீசரா இருந்தப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்?

அது மட்டுமா, தமிழ்நாட்டு கஸ்டமர்ஸ் எவ்வளவு மரியாதையா, அன்பா நடந்துக்குவாங்க? அதுவும் ஒரு லேடி ஆஃபீசர்னாலே ஒரு தனி மரியாதைதான். என்னம்மா, எப்படீம்மாருக்கீங்கன்னு எவ்வளவு அன்பா, மரியாதையா.. கேரளாவுல அந்த மரியாதையே இருக்காதே.. என்னவோ நாம அவங்களுக்கு சேவை பண்றதுக்குன்னே அவதாரம் எடுத்து வந்தா மாதிரி என்ன அலட்சியமா நம்மள ட்ரீட் பண்ணுவானுங்க? தமிழ்நாட்டுல வேலை செய்யற சந்தர்ப்பம் கிடைக்கறவரைக்கும் இந்த வித்தியாசமே தெரியாம இருந்துதே.. இங்க ஒரு ரெண்டு வருஷம் வேலை செஞ்சிட்டு திரும்பி கேரளாவுக்கு போனாத்தான தெரியுது இந்த வித்தியாசம்?

நந்துவுக்கும் சென்னை மாற்றம் ஒருவேளை ஒரு நல்ல மாற்றத்த ஏற்படுத்துனாலும் ஏற்படுத்தும். கேரளாவுல இருக்கறவரைக்கும் ஃப்ரெண்ட்சோட சேர்ந்துக்கிட்டு தினமும் குடிச்சி, குடிச்சித்தான் அவன் கொணமே மாறிப்போச்சி. சென்னையில வந்தா அது நடக்காதே..

Yes.. Both of us should start a fresh chapter in our life.. புது சூழ்நிலையில.. புது நண்பர்கள் மத்தியில.. வந்தனா மேடத்தோட கைடன்ஸ்ல..

என்ன, அந்த சசிய நினைச்சாத்தான் பயமாருக்கு. அவனோட இன்ஃப்லூயன்ஸ்ல இவர் மறுபடியும் யூனியன் கீனியன்னு தீவிரமாயிடுவாரோன்னு பயமாத்தான் இருக்கு...

வண்டி ஏதோ ஸ்டேஷனில் நின்று புறப்படுவது தெரிந்தது. நளினி கண்களை இறுக மூடி உறங்க முயற்சித்தாள்.

****

சிலுவை நாடாரின் சொகுசு வாகனம் இருட்டைக் கிழித்துக்கொண்டு சென்னையை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது.

வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராசம்மாள் காரினுள் குழந்தைக்காக எரிந்துக்கொண்டிருந்த மெல்லிய ஊதா நிறவிளக்கொளி கண்களை உறுத்தாமலிருக்க ஒரு கைத்துவாலையால் முகத்தை மூடிக்கொண்டு உறங்க முயற்சித்து தோற்றுப்போனாள்..

துவாலையை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு மூடியிருந்த ஜன்னல் வழியே பின்னோக்கி விரைந்தோடிக்கொண்டிருக்கும் விளக்குக் கம்பங்களை, எதிரிலிருந்து கண்ணைக் கூசவைக்கும் விளக்கொளியுடன் வந்து மறைந்த வாகனங்களை, அந்த நள்ளிரவு நேரத்திலும் படுபிசியாகவிருந்த சாலையோர உணவகங்களை, பெட்டிக்கடைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்..

தன்னுடைய வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து வேறொரு அத்தியாயம் துவங்கவிருப்பதை உணர்ந்தாள்..

முதல்ல இந்த ராசம்மாள்ன்ற பேரை மாத்தணும்... சும்மா இல்ல.. சட்டபூர்வமா.. அதுக்குன்னு ஏதாவது ப்ரொசீஜர் இருக்கும்.. நாளைக்கு வக்கீல பாக்கறப்போ கேக்கணும்.. ஒலகம் முழுசும் இருநூத்துக்கும் மேல ப்ராஞ்சஸ், ஃப்ரான்சயீஸ்னு இருக்கற கம்பெனியோட எம்.டியோட பேரு இந்தமாதிரி பட்டிக்காட்டுத்தனமா.. ராஜீன்னு வச்சிக்கலாம்.. பொதுவா.. கூப்டறதுக்கு சின்னதா.. அம்மாவுக்கு ஒருவேளை புடிக்காம போலாம்.. அதப் பாத்தா முடியாது.. இனிமேலாவது நமக்கு எது புடிக்குதோ அதத்தான் செய்யணும்..

ராசேந்திரன டைவோர்ஸ் பண்றதுக்கூடத்தான் அம்மாவுக்கு புடிக்கலே.. அதுக்காக அவன்கூடவே வாழ்ந்துர முடியுமா? செல்வமும் என்ன சொல்வானோ தெரியல.. நேத்துக்கு அவன்கிட்ட பேசினப்பக் கூட சொல்லல.. ஏன்? ஃபோன்ல சொல்ல வேணாம்னு தோனிச்சி.. நாளைக்கு நேர்ல சொல்லும்போது சொல்லணும்.. அவனும் ஒருவேளை 'எதுக்கு இப்ப திடீர்னு? யோசிச்சி செய்யே'ன்னு சொல்லுவான்.

செல்வம் எப்பவுமே அப்படித்தான். எடுத்தோம் கவுத்தோம்னு எதையுமே செய்ய மாட்டான். ஏன், பேசறதுக்கே ஒருதரத்துக்கு மூனுதரம் யோசிப்பான். 'நான் ராசேந்திரனத்தான் விரும்பறேன் செல்வம்'னு நா சொன்னப்போ மட்டும் உடனே சட்டுன்னு 'சரி ராசம்மா. உன் விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்புமும்'ன்னு சொன்னானே.. ஏன்?

அன்னைக்கி மட்டும் 'வேணாம் ராசம்மா.. நல்லா யோசிச்சி செய்'யின்னு சொல்லியிருந்தான்னா ஒருவேளை இந்த கல்யாணமே நடந்திருக்காதோ.. கல்யாணத்துக்கு முன்னமே ராசேந்திரனைப் பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டேனே அத செல்வத்துக்கிட்ட சொல்லி அவனெ விசாரிச்சி சொல்லணும்னு ஏன் எனக்கு தோனாம போச்சி?

சின்ன வயசிலருந்தே நான் கருப்பு அதனாலத்தான் எனக்கு யாரும் ஃப்ரெண்ட்சே அமையமாட்டேங்குறாங்கன்னு யோசிச்சி, யோசிச்சிதான் என்னையுமறியாம இந்த ஒடம்பு நிறத்துமேல ஒரு மோகமே வந்திருச்சின்னு நினைக்கிறேன். மதுரையில காலேஜ்ல என் கூட படிச்ச அந்த சவுராஷ்டிரா சாதிய சேர்ந்த பசங்களோட அந்த கலர்.. அதுதான் என்னெ ரொம்பவும் பாதிச்சிருந்ததுன்னு நினைக்கிறேன்.. நான் அழகுல, லட்சணத்துல அவங்களவிட குறைவா என்ன? இருந்தாலும் கேவலம் இந்த வெள்ள தோலுக்கு ஆசைப்பட்டுத்தான அவளுங்களையே இந்த ஆம்பளப் பசங்க மொச்சிக்கிட்டு அலைஞ்சாய்ங்க.. கறுப்புத் தோல வச்சிக்கிட்டு வெள்ள தோலுக்கு அலைஞ்ச அந்த பசங்கதான் நானும் வெறும் வெள்ள தோலுக்கு ஆசைப்பட்டு அந்த ராசேந்திரன கட்டுனதுக்கு காரணம்..

‘நம்ம செல்வம் தங்கம்மாதிரிம்மா.. சொக்கத் தங்கம். அவந்தான் ராசம்மா ஒன் கொணத்துக்கு ஏத்தவன்.. தோலோட நெறத்த பாக்காம அவன நீ கட்டிக்கிட்டா காலத்துக்கும் ஒன்னெ தலையில வச்சி கொண்டாடுவான்..’ அத்தே (செல்வத்தின் தாய்) எத்தன தடவ கெஞ்சியிருப்பாய்ங்க..

‘ச்சீய்.. அவன் வேலைக்காரண்டி.. வயித்துக்கு பொங்கி திங்க வகையில்லாம எடுபிடிப் பயலா வந்தவனா ஒனக்கு புருசனா வர்றது..? ஒனக்கு மூள, கீள பிசகிப்போச்சாடி..? நீ படிச்ச படிப்பென்ன.. சரக்கு எடுத்து போடற அவன் எங்க.. அவன் மூஞ்சியும் மொகரையும்.’ ராசாத்தியம்மாள் பேசிய பேச்சு அன்று நான் இருந்த மனநிலைக்கு தேனாக இனித்தது. ‘நான் நினைச்சதேயேத்தாம்மா நீயும் நினைச்சிருக்கே.. இந்த அப்பாதான் தேவையில்லாம என்னெத்தையோ அந்த அத்த கிட்ட சொல்லிக்குடுத்து அவிய என்னெ போன ரெண்டு மாசமா தொளைச்சி எடுக்கிறாய்ங்க.. நீதான் அப்பாக்கிட்ட பேசி ராசேந்திரன முடிக்கணும்மா..’

‘என்னம்மா ஒறக்கம் வரமாட்டேங்குதாக்கும்..’

ராசம்மாள் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து மந்திரச்சாமியைப் பார்த்தாள். அவனுக்கும் செல்வத்துக்கும் ஒரே வயது இருக்கும். செல்வம் வந்து சேர்ந்த அடுத்த வருடமே அவளுடைய தந்தையிடம் ஓட்டலில் எடுபிடி வேலைக்கு வந்து சேர்ந்தவந்தான். இருபது வருடங்கள் குடும்பத்தில் ஒருவனாய்..

‘ஆமா மந்திரம்.. என்னமோ நினைப்பு.. தூங்க முடியலை..’

மந்திரச்சாமி ரியர்வ்யூ கண்ணாடியில் பின் இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்த குட்டி எஜமானியைப் பார்த்தான். எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவள்.. ‘டேய் செல்வம்.. அந்த ராசேந்திரன் பயல வீட்டுக்குள்ள விட்டே அவன் ஒன்னெ வெரட்டுறதுலத்தாண்டா குறியாயிருப்பான். பக்குவமா சொல்லி ராசம்மாள ஒன் வழிக்கு கொண்டு வரத விட்டுட்டு அவ சொன்னான்னு அந்த களவாணிப்பய அப்பங்கிட்ட போயி பேசறேன்னு மொதலாளிக்கிட்டு சொல்றிய.. இது நல்லாவாருக்கு?’

செல்வமும் அவனும் ஒரே வயதினர் என்பது மட்டுமல்ல ஒரே நேரத்தில் நாடாரிடம் வேலைக்கு வந்தவர்கள். செல்வம் உறவினன் என்பதுமட்டும்தான் அவர்கள் இருவருக்கிடையில் இருந்த வேறுபாடு..

‘இன்னும் எவ்வளவு நேரம் மந்திரம். ஆறு, ஆறரைக்குள்ள போயிருவியா?’

மந்திரச்சாமி சாலையிலிருந்து கண்களை எடுத்து ரியர்வ்யூ கண்ணாடியைப் பார்த்தான். ‘ஆயிரும்மா.. இன்னைக்கி ஞாயித்துக்கிழமையாச்சே.. அதான் கொஞ்சம் டிராஃபிக்காருக்கு..’

‘ஆமா, இல்லேன்னா இவரு பறந்து போயிருவாரு.. லேய்.. வளவளன்னு பேசாம.. செயல்ல ஒன் வேகத்த காட்டுலே..’ முன் இருக்கையில் அமர்ந்திருந்த நாடார் கண்களைத் திறக்காமலே எரிந்துவிழ மந்திரச்சாமி வாயை மூடிக்கொண்டான்..

ராசம்மாள் புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டு சரிந்து அமர்ந்தாள்..

மந்திரச்சாமி முதலாளியின் மேலிருந்த கோபத்தை ஆக்ஸிலரேட்டரில் காட்ட வாகனம் சீறிப் பாய்ந்தது.


தொடரும்..



19.5.06

சூரியன் 80

இடம்: கோல்டன் ட்ராகன், தாஜ் ஹோட்டல் சென்னை.

சென்னை மாநகரத்தின் மேல் மட்ட அதிகாரிகளும், செல்வந்த குடிகாரர்களும் நள்ளிரவு நேரத்தில் காணப்படும் பணக்காரத்தனமான உலகம்..

இது இந்தியாதானா என்று நினைக்க வைக்கும் ஆடம்பரம். கண்களைக் கிறங்கடிக்கும் மெல்லிய விளக்கொளி.. ..

பாலு மகேந்திரா படத்தில் வருவதுபோன்ற இருட்டு, குடித்து மகிழும் குடிமகன்களின் முகம் பிறருக்கு சரியாக தெரியக்கூடாது என்பதை நினைவில் வைத்து அமைத்தது போலிருந்தது..

மனதை மயக்கும் இந்த சூழலில் மாதவன் இருப்பு கொள்ளாமல் வெய்ட்டரை விரலைச் சொடுக்கி அழைத்தார். தன் முன்னே இருந்த மெனுவில் இருந்த உயர் ரக மேலை நாட்டு சரக்கை காண்பித்து ‘Get me one fast.. plain..’ என்றார்.

நட்சத்திர ஹோட்டலில் fast என்ற சொல்லுக்கு அரை மணி நேரம் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. முக்கியமாக மும்பை ஹோட்டல்களில்..

ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் பேரர் அவர் கேட்டதை ice cubes சகிதம் கொண்டு வந்து தன் முன்னே வைத்ததும்.. ‘Hi! It’s a pleasant surprise.. You’ve floored me!’ என்றார் உண்மையான சந்தோஷத்துடன்.

மேல் மட்ட குடிமகன் ஒருவரிடமிருந்து இத்தகயை பாராட்டை எதிர்பார்க்காத பேரர் வெட்கப் புன்னகையுடன் ‘Thank you Sir’ என்றவாறு வந்த சுவடு தெரியாமல் மறைய மாதவன் வாசலை பார்த்தவாறே உறிஞ்சத் துவங்கினார்..

மதுவின் soothing taste நுனி நாவில் பட்டதும் மாலையில் அனுபவைத்த மன இறுக்கம் லேசாக குறைவது போலிருந்தது..

சற்று முன் சேதுமாதவனுடன் தொலைப்பேசியில் பேசியதை நினைத்துப் பார்த்தார். What a cunning guy.. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கறது மாதிரி.. ஏர்போர்ட்டுக்கு வந்து அவமானப்பட்டு போயும் ஒன்னுமே நடக்காத மாதிரி பேசறார்னா இதுக்கு பின்னால வேற ஏதோ ப்ளான் இருக்குன்னுதான அர்த்தம்?

அது என்ன இருந்தாலும் கண்டுபிடிக்கணும்.. அது நிறைவேற முடியாம பார்த்துக்கணும்..

மங்கலான இருட்டில் வாசலில் இருவர் வந்து அறை முழுவதையும் பார்ப்பது தெரியவே எழுந்து அவர்களை நோக்கி நடந்தார். பிலிப் சுந்தரத்தின் முகம் முதலில் தெரியவர அகன்ற புன்னகையுடன் 'மிஸ்டர் பிலிப் திஸ் வே..' என்று தான் அமர்ந்திருந்த மேசையை நோக்கி கைகாட்டியவாறு அவரையும் அவருடன் வந்திருந்த சுந்தரலிங்கத்தையும் தன்னுடன் அழைத்து சென்றார்.

இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் மாதவன் அமர்ந்தார்.

இருவரும் அவர் முன் இருந்த கோப்பையை பார்ப்பதை உணர்ந்த மாதவன், ‘what would you like to have gentlemen?’ என்றார்.

இருவரும் தயக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிலிப் சுந்தரம், ‘Sir, both of us don’t...’ என்று இழுக்க.. மாதவன் ஓசையெழுப்பாமல் சிரித்தார். ‘Don’t worry, I understand’

பிறகு பேரரை அழைத்து, ‘Two fruit juices please..’ என்றவர் சுந்தரலிங்கத்தை பார்த்தார். ‘It’s OK for you, No?’

இருவரும் ஆமாம் என்று தலையை அசைக்க பேரரை பார்த்து, ‘Yes.. get two’ என்றார்.

‘Anything else Sir’ என்று பவ்யத்துடன் தயங்கி நின்ற பேரரிடம், ‘Nothing more for now. I’ll you tell you later.’ என்று அனுப்பிவிட்டு தன் முன்னே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார்..

‘Don’t mistake me. How do you manage being a teetotaler?’

பிலிப் சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். சுந்தரலிங்கம், ‘சென்னையில அது ஒரு பெரிய சங்கடமா தெரியலை சார். எந்த ஒரு பார்ட்டிக்கு போனாலும் எங்கள மாதிரியும் சிலபேர் இருப்பாங்க. மும்பை மாதிரி இங்க எங்கள மாதிரி ஆளுங்கள வினோதமா பாக்கவும் மாட்டாங்க.. So we never felt left out..’

பிலிப் சுந்தரமும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார்.

‘Is it? That’s strange!’ என்றார் மாதவன் வியப்புடன். ‘நான் சென்னையிலருந்து போயி பதினைஞ்சு வருஷத்துக்கு மேல ஆவுது. நா இருக்கறப்போ இந்த ரூம் weekendsல கூட ல்மோஸ்ட் ஹாஃப் எம்ப்டியா இருக்கும். ஆனா இப்ப பாருங்க.. I just managed to get this table.. அதுவும் இந்த நேரத்துல.. சென்னை உண்மையிலயே ரொம்பவும் மாறிப் போயிருச்சி.. ஆனாலும் ஒங்கள மாதிரி ஆளுங்களும் இருக்கத்தான் செய்றாங்க.. It’s really strange..’

நம்மள விநோத பிறவிங்கன்னு சொல்லாம சொல்றார் பாருங்க என்பதுபோல் திரும்பி தன் நண்பரைப் பார்த்தார் சுந்தரலிங்கம்..

‘ஒங்க பழைய சேர்மன் ஏன் திடீர்னு ராஜிநாம செஞ்சார். Was there any specific reason?’
சட்டென்று எதிர்பாராத நேரத்தில் வந்து விழுந்த கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் இருவரும் விழிக்க.. ‘Sir, I have the answer for your question’ என்ற குரல் இடைமறித்தது.  மூவரும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து தங்களுடைய மேசைக்கருகே நின்ற சேதுமாதவனைப் பார்த்தனர்.

பேச்சு மும்முரத்தில் அவர் வந்ததை மூவருமே கவனிக்க தவறிவிட்டனர். சேதுமாதவன் அவர்கள் அமர்ந்திருந்த மேசையில் மாதவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமராமல் அடுத்து 'reserved’ என்ற மேசையருகில் இருந்த ஒரு இருக்கையை அலட்சியமாக தன்னருகே இழுத்து அமர அறை வாசலில் நின்றிருந்த ஹோட்டல் அதிகாரி அவசர, அவசரமாக வந்து, ‘Sir, please. It is reserved for a group. They may come in any minute now.’ என்று கிசுகிசுத்தார். ஆனால் அதை கேட்டும் கேட்காததுபோல் சேது அலட்சியத்துடன் கைகளை அசைத்தார் ‘Go and find out someother chair for them.. I am not leaving.’

அவருடைய இந்த அநாகரீக செயலால் திடுக்கிட்ட மற்ற மூவரும் சிறிது நேரம் என்ன பேசுவதென தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

ஆனால் அவர்களை சட்டைசெய்யாத சேதுமாதவன் பேரரை நோக்கி கையை அசைத்து அருகில் வந்ததும், ‘A Scotch on rocks. Plain water. Large.. Quick’ என்றார் அதிகாரத்துடன்.

அவர் ஏற்கனவே அரை போதையில் இருப்பதை உணர்ந்த பேரர் மறுபேச்சு பேசாமல் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர் கேட்டதை கொண்டுவந்து வைத்தான்.

இதை எதிர்பார்க்காத சேதுமாதவன் தன் பர்சை எடுத்து ஆடம்பரமாக ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை உருவி பேரரின் கையில் திணித்தார்.. ‘Keep this.. Don’t leave this table. Whatever we order.. deliver it fast..’ சங்கடத்துடன் அவர் நீட்டியதைப் பெற்றுக்கொண்ட பேரர் நகர, ‘Hey wait.. Ask your captain to come.’ என்றார்..

அவர் என்ன செய்கிறார் என்பது விளங்காமல் மாதவனும் உடன் இருந்தவர்களும் விழிக்க அருகில் வந்து நின்ற ஹோட்டல் அதிகாரியிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார் ‘The entire bill of the evening.. Bill it on our Bank, Is it clear?’

அவர் நீட்டிய அட்டையைப் பெற்றுக்கொண்டு, ‘Yes Sir.’ என்றவாறு அதிகாரி நகர சேதுமாதவன் மாதவனை பார்த்து புன்னகைத்தார்.

மாதவனுக்கு சேதுமாதவனின் நடத்தையில் முற்றிலும் விருப்பம் இல்ல¨யென்றாலும் முதல் நாளாயிற்றே என்ன செய்வது என தெரியாமல் மவுனமாக இருந்தார். இருப்பினும் அவருக்கு கீழ் பணிபுரிந்த மற்ற இரு அதிகாரிகளின் முன்னால் மவுனமாக இருந்தால் சேதுமாதவனின் நடத்தையை அங்கீகரிப்பதுபோலாகிவிடுமே என்ற நினைப்பில் தன்னுடைய பர்சை திறந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து சேதுமாதவனிடம் நீட்டினார்.

பிறகு, ‘I just don’t approve of your action Mr.Sedhu. This is my outing. I only called you.. I would only pay for it. Is that clear?’ என்றார் அடிக்குரலில்.. ‘Call the captain now and tell him to ignore what you told him..’

சேதுமாதவன் மாதவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லையென்பது வெளிறிப்போன அவருடைய முகத்திலிருந்தே தெரிந்தது.

மறுபேச்சில்லாமல் மாதவன் நீட்டிய பணத்தை பெற்றுக்கொண்டு ‘Yes Sir’ என்றவாறு அவர் எழுந்து கேப்டனை நோக்கி செல்ல  பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்..

சேதுமாதவன் மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்து பேசாமல் இருக்க சில நிமிடங்கள் சங்கடமான ஒரு அமைதி அங்கு நிலவியது.

மாதவன் குரலை சரிசெய்வதுபோல் செருமிக்கொண்டு பேரரை அழைத்து, ‘Repeat for both of us.. ’ என்றார் புன்னகையுடன். ‘Now tell me Mr.Sethu, why did your Chairman leave?’

சேதுமாதவன் கோப்பையிலிருந்த மதுவை குடித்து முடித்து கைகளால காலி கோப்பையை உருட்டிக்கொண்டிருந்தார். மாதவனும் மற்ற இருவரும் அவராக பேசட்டும் என காத்திருந்தனர்.

சேதுமாதவன் நிமிர்ந்து பிலிப், சுந்தரலிங்கம் ஜோடியை அடிக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு மாதவனை நோக்கி திரும்பினார்.

‘He was an autocrat. He thought he could simply steamroll me. That’s where he went wrong.’

மாதவன் வியப்புடன் தன் முன் அமர்ந்திருந்த மற்ற இரு அதிகாரிகளையும் பார்த்தார். ‘What do you mean steamrolling you? Why should he? He was the Chairman, you were his No.2!’

சேதுமாதவன் ஆணவத்துடன் மேசையில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தார். ‘I was never No.2 for him.. In fact it was he.. When he realized that most of the Board members were behind me.. He left.’

அடப்பாவி, என்ன அபாண்டமா பேசறான் என்று நினைத்த சுந்தரலிங்கம் தான் இதை எதிர்த்து பேசினால் என்ன என்று வாயை திறக்க பிலிப் சுந்தரம் அவருடைய கைகளை மேசைக்கடியில் பிடித்து அழுத்தி வேண்டாம் என்று உணர்த்தினார்.

ஆனால் மாதவன் பிலிப் சுந்தரத்தின் செய்கையை கவனிக்க தவறவில்லை..

அவருடைய இதழ்களில் மர்மமான புன்னகையொன்று தவழ, ‘Why can’t we order food?’ என்றார். ‘It is almost midnight.. closing time for the bars in Chennai!’

தொடரும்..








18.5.06

சூரியன் 79

‘சரி ராசம்மா.. நான் உடனே பொறப்பட்டு வரேன். மாமாவை கவலப்படவேணாம்னு சொல்லு.’

இணைப்பைத் துண்டித்த செல்வராகவன் எதுக்கு இப்ப வக்கீல் வீட்டுக்கு என்று நினைத்தான். ஒரு வேள நேத்து மாமா ஃபோன்ல சொன்ன விஷயமா இருக்குமோ.. சரி நாளைக்கு போனா தெரிஞ்சிரப் போவுது என்று அதை ஒதுக்கி வைத்தான்.

பிறகு,  தன் மனைவி செல்வியை அழைத்தான். எதிர் முனையில் நீண்ட நேரம் அடித்துக்கொண்டிருந்ததே தவிர யாரும் எடுத்தபாடில்லை.

எரிச்சலுடன் செல்வியின் செல் ஃபோன் எண்ணை டயல் செய்தான். இரண்டும் மூன்று முறை மணியடிக்க, ‘ஏன் எடுக்க மாட்டேங்குறா?’ என்ற முனகலுடன் துண்டிக்க முனைய, ‘என்னங்க என்ன விஷயம்? ஏன் மொபைல்ல கூப்டறீங்க?’ என்று குரல் வந்தது.

‘நீ வெளியில போறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டியதுதானே.. நான் வீட்டு நம்பர இவ்வளவு நேரம் சுத்திக்கிட்டிருந்தேன்.’ என்றான் எரிச்சலுடன்.

எதிர்முனையிலிருந்து சூடாக பதில் வந்தது. ‘ஏன் என்ன விஷயம்? திடீர்னு அம்மா வீட்லருந்து ஃபோன் வந்துது. நாளைக்கு அம்மாவும் அப்பாவும் வராங்களாம். அதான் வீட்ல ஒன்னுமில்லையேன்னு பஜாருக்கு வந்தேன். சொல்ல மறந்துபோச்சி. இப்ப எதுக்கு வீட்டுக்கு ஃபோன் செஞ்சீங்க?’

‘நா இன்னைக்கி அவசரமா சென்னைக்கி புறப்பட்டு போணும். மாமா கிட்டருந்து ஃபோன் வந்துது. அதான் ஒரு ரெண்டு நாளைக்கு வேண்டியத பேக் செஞ்சி வையின்னு சொல்லலாம்னு வீட்டுக்கு ஃபோன் செஞ்சேன். ரிங் போய்ட்டேருக்கே தவிர யாரும் எடுத்த பாடா காணோம். அதான் ஒன் செல்லுக்கு ஃபோன் செஞ்சேன். நீ வீட்டுக்கு போனதும் பேக் செஞ்சி வைக்கிறியா?’ என்ற செல்வம் தன் மேசைக்கு முன் வந்து நின்ற சிப்பந்தியை நோக்கி என்ன என்பதுபோல் சைகை செய்தான்.

‘ஐயா நேத்தைக்கே வரவேண்டிய ஜீனி லோடு இன்னும் வரலைங்க.. அதான் ஞாபகப்படுத்தலாம்னு..’ என்று தலையைச் சொறிந்துக்கொண்டு நிற்க , ‘சரி நீங்க போங்க.. நான் ஏற்பாடு பண்றேன்.’ என்று அனுப்பி வைத்துவிட்டு, ‘ஏய் என்ன சத்தத்தையே காணோம்.. லைன்ல இருக்கியா இல்லையா?’ என்றான் மனைவியிடம்.

‘இங்கதான் இருக்கேன். அது சரி.. இப்ப திடீர்னு என்ன சென்னைக்கு.. என்னவாம் ஒங்க மாமாவுக்கு?’

செல்வியின் குரலில் இருந்த கேலி அவனுக்கு தெளிவாகப் புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல், ‘ஏதாவது  அவசரமான சோலியாருக்கும்லே.. இல்லாட்டி ஃபோன் செஞ்சி கூப்டுவாகளா? நீ தொணதொணங்காம பேக் செஞ்சி வையி.  ராத்திரியே பொறப்பட்டு போனாத்தான் சரியாயிருக்கும். நீ வாங்குன வரைக்கும் போறும்னு நிறுத்திட்டு வீட்டுக்கு போ.. ஒங்கம்மா என்ன என்னைக்கும் வராத விருந்தாளியா?’ என்றான்.

‘ஏஞ்சொல்ல மாட்டீங்க? ஒங்களுக்கு ஒங்க மாமன் குடும்பந்தான முக்கியம்? எங்கம்மா, அப்பான்னா எப்பவும் எளக்காரந்தான?’

செல்வம் பார்த்தான். ஊருக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் எதற்கு வீண் வம்பு என்று நினைத்தான். ‘ஏய் அம்மா செல்வி.. போறும்.. நா சும்மா விளையாட்டுக்குச் சொன்னத நீ வம்புக்குன்னாலும் பெருசாக்கிறாத. மிஞ்சிப் போனா ரெண்டு நா வேலையாத்தான் இருக்கும் ஒங்கம்மாவ ஒரு வாரம் இருந்துட்டு போச்சொல்லு.. நா வந்ததுக்கப்புறம் போனாப் போறும்.. நீ வெரசா வீட்டுக்கு போயி நாஞ்சொன்னத செய்யி.. நா இன்னும் அரைமணியில அங்க இருப்பேன்.’ என்று இணைப்பைத் துண்டிக்க இருந்தவனை செல்வியின் குரல் தடுத்து நிறுத்தியது.

‘ஏங்க, நீங்க கார எடுத்துக்கிட்டு போய்ட்டா நாளைக்கு அம்மா, அப்பாவ கூப்ட ஸ்டேஷனுக்கு எப்படி பேறதாம்?’

செல்வத்துக்கு எரிச்சல் வந்தது. ‘அதுக்கென்ன செய்யணுங்கற?நம்ம டிராவல்ஸ்ல சொன்னா ஒரு வண்டிய அனுப்பிட்டுப் போறாங்க. இத நா சொல்லித்தரணுமாக்கும்?’

‘நா சும்மாத்தான கேக்கேன். எதுக்கு இப்ப நீங்க எரிஞ்சி விளறிய?’ என்று எதிர் முனையில் அதே எரிச்சலுடன் குரல் வர செல்வம் அமைதியானான்.

‘சரி, சரி. ஆரம்பிச்சிராத. வாங்க வேண்டியத முடிச்சிக்கிட்டு வீடு போய் சேர்..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.

தன்னுடைய தாய் மாமன் தயவில் இரண்டு வருடங்களுக்கு முன்  SM (சிலுவை மாணிக்கம் என்ற பெயரின் சுருக்கம்) Sweets and Snacks என்ற பெயரில் திருநெல்வேலியில் சிறியதாக ஒரு இனிப்பு கடையைத் துவக்கிய செல்வ ரத்தினம் என்ற செல்வம் தன்னுடயை அயரா உழைப்பாலும் வணிக சாதுரியத்தாலும் மளமளவென வளர்ந்து இன்று திருநெல்வேலியில் மூன்றும் செல்வியின் சொந்த ஊராகிய அம்பா சமுத்திரத்தில் ஒரு கிளையென ஒரு முழுமையான உணவகமாக பெருக்கியிருந்தான்.

இளம் வயதில் தன் தந்தையை இழந்து தாயுடன் ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாமல் நின்ற சமயத்தில் கைகொடுத்து வளர்த்து ஆளாக்கிய தன்னுடைய தாய் மாமனுக்கு இன்றும் விசுவாசமாய் இருந்தான் செல்வம்.

ராசம்மாள்-ராசேந்திரன் திருமணத்திற்குப் பிறகு சம்பந்தியின் பேச்சை தட்டமுடியாமல், ‘ஒன்ன வெளிய அனுப்பறதுக்கு இந்த மாமனுக்கு மனசில்லடா செல்வம். ஆனா மருமகப்பயன்னுருக்கற அந்த மிருகத்த எதிர்த்துக்கிட்டு என்னால ஒன்னும் செய்யமுடியலடா.. நீ போயிரு.. இந்த கம்பெனிக்கு நீ ஒன் ஒடம்ப ச்செருப்பா தேய்ச்சிப்போட்ட.. அத இந்த மாமன் மறக்கவே மாட்டேண்டா.. நீ தைரியமா அம்மாவ கூப்டுக்கிட்டு போ.. தின்னவேலில்ல எனக்கு தெரிஞ்சவரோட கடை ஒன்னெ நமக்கு தெரிஞ்ச பயலுக யாருக்காச்சும் உபயோகப்படும்னு வாங்கி போட்டிருந்தேன். அது நீதாங்கறது எனக்கு இன்னவரைக்கு தெரியாம இருந்திச்சி பாரு.. நீ அத எடுத்து நடத்துலே.. மாமா வேணுங்கற முதல தரேன்.. நீ எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒளச்சதுக்கு நா சம்பளம்னு இன்ன வரைக்கும் ஒன்னுமே தரலையேடான்னு அடிக்கடி சொல்வேனில்லே.. இதுதான் அதுன்னு நினைச்சிக்கடா..’ என்று தழுதழுத்த குரலுடன் தன்னை தட்டிக்கொடுத்து வழியனுப்பி வைத்ததை அவன் மறக்கவேயில்லை.

அவருடைய நிறுவனத்திலிருந்து வெளியே வந்தபிறகும் அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தான். அவர் எப்போது கூப்பிட்டாலும் கையிலிருந்தது எந்த வேலையாயிருந்தாலும் ஓடிவிடுவான்.

ராசம்மாளை ராசேந்திரன் கேவலமாக நடத்துகிறான் என்று கேள்விப்பட்டவுடனே அவனை வெட்டி சாய்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று கிளம்பியவனை சமாதானப்படுத்தி நிறுத்தியவளே ராசம்மாள்தான். ‘நீ இப்படி மளுங்கி, மளுங்கி போறதாலத்தான் பிள்ள அவன் அந்த எகிறு எகிறுறான். நீ மட்டும் ஒரு வார்த்த சொல்லு பிள்ள, அவன வெட்டிட்டு செயிலுக்கு போனாலும் பரவால்லைன்னுட்டு வெட்டி போடறேன். இப்படி இவன் கிட்ட அடிபட்டு மிதிபட்டு சாகவா பிள்ள மாமா அவ்வளவு பணத்த கொட்டி இவனுக்கு கட்டி வச்சாக?’

அப்போதெல்லாம் கண்ணீருக்கிடையே அவனைப் பார்த்த பார்வையை காணச் சகியாமல் பஸ் ஏறி திருநெல்வேலிக்கு வந்துவிடுவான்.

அந்த கவலையை மறக்க அவனுக்கு இருந்த ஒரே வழி அவன் துவங்கியிருந்த உணவகம்தான். அதிலேயே ஒரு வெறியுடன் ஒன்றிப்போனான்.

‘செல்வம். என்னலே இது? ஒளைக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? நீ இப்படியே போனேன்னு வச்சிக்க.. நீ நடத்திக்கிட்டிருக்கற ஸ்வீட் ஸ்டால் ஒரு வேளை ஹோட்டலா மாற வாய்ப்பிருக்கு. ஆனா அத அனுபவிக்க ஒனக்குத்தான் குடுத்து வச்சிருக்காது.. சொல்லிட்டன். பேசாம நா ஒருத்திய பாத்துக் குடுக்கேன், கட்டிக்கோ. அப்பத்தான் ராத்திரியான கடைய மூடிட்டு வீட்டுக்கு போணும்னாவது ஒனக்கு தோணும்.’ என்று சிலுவை மாணிக்க நாடார் அவனைக் கட்டாயப்படுத்தி கட்டி வைத்தவள்தான் இந்த செல்வி..

பஞ்சைப் பனாதையாட்டமா வந்து நின்னவ இப்ப என்னடான்னா என்னையவேல்லே குறுக்குக் கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கா. ‘டேய் செல்வம். நீதான் படிறா படிறான்னு நா தலபாடா அடிச்சும் படிக்காம சின்ன வயசுலயே கடை, கன்னின்னு நின்னுட்ட.. ஒனக்கு வரவளாவது படிச்சிருக்கட்டுமேன்னுட்டுத்தான் பி.ஏ படிச்சி டீச்சர் வேல பாக்கற பொண்ண பாத்திருக்கேன்.. வேண்டாம்னு அளும்பு பண்ணாம சரின்னு சொல்லு.. பொண்ணு பாக்கறதுக்கு சுமாரா இருந்தாலும் நல்ல வாயாடி பொண்ணாட்டமாருக்குடா.. வாயடிச்சாலே புத்திசாலின்னுதான் அர்த்தம். ஒன் கட கணக்கு வளக்க பாத்துக்க சம்பளமில்லாம ஒரு ளும் கெடச்சா மாதிரி இருக்குமில்லே.. என்ன நா சொல்றது?’

வாயாடின்னு நீங்க சர்வ சாதாரண்மா சொல்லிட்டீயளே.. வாயா அது.. ஏ அப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சுந்தரம் தன்னுடைய மேலாளரை அழைத்தான். ‘நா மெட்றாஸ் வரைக்கும் போணும்.. டிரைவர கூப்ட்டு கார  கடைக்கு முன்னால கொண்டு வரச்சொல்லுங்க. அப்புறம் அந்த ஜீனி மண்டிய கூப்ட்டு லோட் இன்னும் வரலைன்னு கேளுங்க. நா அநேகமா ரெண்டு நாள்ல வந்துருவேன். இடையில ஏதும் கேக்கணும்னா செல்லுக்கு போன் போடுங்க.’

அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டையடைந்த செல்வம் சாவகாசமாக சோபாவில் அமர்ந்து செல் ஃபோனில் வாயாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து எரிச்சலைடந்தான்.

‘ஏய் செல்வி. என்ன இது? நா என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே? என் பெட்டிய அடுக்கினியா இல்லையா?’

‘அதெல்லாம் அப்பவே ரெடியாயிருக்கு.’ என்று  கேலியுடன் பதில் வர செல்வம் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான். என்ன கொளுப்பு இவளுக்கு என்று நினைத்தான்.

சரி இவளிடம் வம்பு செய்துக்கொண்டிருந்தால் தன்னுடைய நேரம்தான் வீணாகும் என்று நினைத்த செல்வம் குளிச்சிட்டு கிளம்பற வழிய பாப்போம் என்று முனகியவாறு தன்னுடைய அறையை நோக்கி நடந்தான்.

குளித்து முடித்து செல்வி அடுக்கி வைத்திருந்த பெட்டியை திறந்து ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய பயணத்திற்கு தேவையான எல்லாமே இருக்க திருப்தியுடன் பெட்டியை மூடி கையில் பிடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

‘சரி ராசம்மா. இதோ செல்வம் புறப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கார்..’ என்ற செல்வி தொலைப்பேசியில் பேசுவதைக் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.

இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்த செல்வி, ‘என்னங்க.. நீங்க என்னமோ மாமா கூப்டறாகனீங்க.. ஒங்க மாமன் பொண்ணு என்னடான்னா அத்தான் பொறப்பட்டுட்டாரான்னு ரெண்டுதரம் ஃபோன் பண்றா.. என்ன நடக்குது எனக்கு தெரியாம?’ என்றாள் விஷமத்துடன்..

செல்வம் எரிச்சலுடன், ‘ஏன் அதையும் அவகிட்டவே  கேக்கறதுதான?’ என்றான்.

‘அவ கிட்ட கேக்கறது இருக்கட்டும். நீங்க ஏன் மாமா கூப்ட்டார்னு சொன்னீங்க?’ என்ற எதிர் கேள்வி கேட்டவளை செல்வம்  எரிச்சலுடன் பார்க்க, ‘ராசம்மா ராசேந்திரன டைவோர்ஸ் செய்ய போறாளாமே?’ என்றாள் செல்வி படு கேஷ¤வலாக..

பிறகு அதிர்ச்சியுடன் கையிலிருந்த பெட்டியை தவறவிட்ட செல்வத்தைப் பார்த்து, ‘வக்கீல் வீட்டுக்கு அதாங்க ஒங்க ஃப்ரெண்ட் இருக்காரே மோகன், அவர் வீட்டுக்கு துணையா போகத்தான் ஒங்கள வரச்சொல்லியிருக்கா.. ஏன் ஒங்கக்கிட்ட அவ சொல்லலையா இல்லே தெரியாத மாதிரி எங்கிட்ட நடிக்கிறீங்களா?’ என்றாள் கேலியுடன்..

தொடரும்..