31.7.06

சூரியன் 133

‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா?’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க கார சாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலமும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...

அதே நேரத்தில் சென்னையின் மறு கோடியில்...

இடம்: சென்னை நிரூபர் சங்க அலுவலகம். சென்னையில் பிரபலமாயிருந்த எல்லா பத்திரிகையின் நிருபர்களும் குழுமியிருந்தனர்.

‘என்ன சார் திடீர்னு ஃபோன்ல கூப்ட்டு இன்னைக்கி முக்கியமான ஒருத்தர மீட் பண்ணப்போறோம்னு சொன்னீங்க? இங்க வந்தா யாரையும் காணோம்?’ என்ற ஹிந்து பத்திரிகையின் நிரூபரைப் பார்த்தார் சங்கத் தலைவர்.

‘ஆமாம். யார் சார் வற்ரா?’ என்றார் தினமலர் நிரூபர்.

‘சொல்றேன்.’ என்றார் தலைவர். ‘மெட்றாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷன்னு ஒரு NBFC இருக்குல்லே.. அதான் சார் கொஞ்ச நாளா நியூஸ்ல அடிபட்டுருக்குதே அந்த கம்பெனி.’

குழுமியிருந்த நிரூபர்களுக்கு விளங்கியது. அந்த நிறுவனத்தில் வைப்பு நிதி செய்திருந்த பல வாடிக்கையாளர்களும் தங்களுடைய பணம் திருப்பி கிடைக்கவில்லையென்பதை கடந்த சில மாதங்களாக ஏறத்தாழ எல்லா பத்திரிகைகளுக்கும் புகாராக எழுதிக்கொண்டிருந்தனர் என்பதால் அந்த நிறுவனத்தின் பெயர் இந்த எதிர்மறையான காரணத்துக்காக சென்னையிலிருந்த பலருக்கும் தெரிந்திருந்தது.

‘அந்த கம்பெனியில டைரக்டரா இருந்து நேத்து ரிசைன் செஞ்ச ஒருத்தரத்தான் நாம இன்னைக்கி மீட் பண்ணப் போறோம். I think it will create a storm tomorrow.’ என்ற தலைவர் எழுந்து நின்று தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘Come.. I think he has come.’

அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய அரசு அதிகாரியாகவிருந்து ஓய்வுபெற்று பிறகு கடந்த இரண்டாண்டுகளாக மதறாஸ் க்ரெடிட் கார்ப்பரேஷனில் இயக்குனராக இருந்து விலகிய மகாலிங்கம் என்பவரை தலைவர் வரவேற்று அழைத்துவர கூட்டம் துவங்கியது.

முந்தைய நாள் நடந்த இயக்குனர் கூட்டத்தில் நடந்த விவாதங்களையும் நிறுவனத்தின் பொது மேலாளர் சமர்பித்த அறிக்கையின் சாராம்சத்தையும் எடுத்துரைத்த மகாலிங்கம் தான் அடுத்து செயல்படுத்தவிருந்த திட்டத்தை விளக்கலானார்.

‘அந்த கம்பெனியோட சேர்மனோட பேச்சை நம்பித்தான் நானும் போர்ட்ல சேர்ந்தேன். ஆனா நேத்துதான் அந்த கம்பெனியோட ஃபண்ட்ஸ் பொசிஷன் சரியில்லங்கறது எனக்கு தெரிஞ்சிது. அத்தோட கம்பெனியோட போர்ட் மெம்பர்சே கம்பெனியிலருந்து கடனா வாங்குன தொகைய திருப்பி கட்டாம இருக்காங்கங்கறதும் சேர்மனோட மகனும் மருமகனுமே சேந்துக்கிட்டு கம்பெனி ஃபண்ட்ஸ போர்ட் மெம்பர்சுக்கே தெரியாம க்ரூப் கம்பெனிங்களுக்கு டைவர்ட் செஞ்சிருக்கறதும் தெரிஞ்சிது. கம்பெனியோட டெப்பாசிட்டர்சுக்கு ஆறு மாசத்துக்கு மேல வட்டியக்கூட சரிவர குடுக்க முடியாம இருக்கறதுக்கு இதுதான் காரணம்னும் இனியும் ஆறு மாசத்துக்கு குடுக்க முடியாத நிலையில கம்பெனி இருக்கும்னும் கூட தெரிஞ்சிக்கிட்டேன். நாற்பது வருசத்துக்கும் மேல கவர்ன்மெண்ட்ல சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இந்த மாதிரி கம்பெனியில டைரக்டரா இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேர கெடுத்துக்க வேணாமேன்னுதான் ரிசைன் செய்யணும்னு டிசைட் பண்ணேன்.’

நிரூபர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘சரி சார். அத எதுக்கு எங்கள கூப்ட்டு சொல்றீங்க?’ என்றார் தினத்தந்தி நிரூபர்.

மகாலிங்கத்தின் முகத்தில் சட்டென்று ஏற்பட்ட மாற்றம் குழுமியிருந்தவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. எல்லோரும் அவரையே பார்த்தனர்.

‘நான் ரிசைன் செஞ்சது பெரிய நியூஸ் இல்லைதான். ஆனா இப்ப நான் சொல்லப்போறதுக்கு நிச்சயம் நியூஸ் வேல்யூ இருக்கு.’

‘நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க. அதுக்கு நியூஸ் வேல்யூ இருக்கா இல்லையாங்கறத நாங்க முடிவு பண்றோம்.’ என்றார் நக்கீரன் பத்திரிகை நிரூபர். அரசு பதவியிலிருந்த காலத்தில் தங்களுடைய பத்திரிகையை சற்றும் மதிக்காமலிருந்த அவர் மீது ஏற்கனவே கோபம் இருந்தது அந்த பத்திரிகை நிரூபருக்கு.

‘சொல்றேன்.’ என்றவர் தான் திட்டமிட்டிருந்ததை விளக்கினார். ‘நேத்து மீட்டிங்லருந்து வெளிநடப்பு செஞ்சதுமே சென்னையிலருந்த எல்லா ப்ராஞ்சுக்கும் நேரடியா போயி டெப்பாசிட் அமவுண்ட்டுக்காக காத்துக்கிட்டிருந்தவங்களையெல்லாம் மீட் பண்ணேன். இந்த மாதிரி தமிழ்நாட்ல இந்த கம்பெனியோட பிராஞ்சுகள்ல டெப்பாசிட் செஞ்சி போன ஆறு மாசமா பணம் திருப்பி கிடைக்காம இருக்கற எல்லாரையும் ஒன்னா சேர்த்து கம்பெனிக்கு எதிரா ஆக்ஷன் எடுக்கச் சொல்லி ஒரு மூவ்மெண்ட நடத்துனா என்னன்னு தோனிச்சி.. முதலமைச்சரயும் வர்த்தக மற்றும் தொழிலமைச்சர்கள சந்திக்கவும் டிசைட் செஞ்சிருக்கோம். இன்னும் ஒரு வாரத்துல தமிழ்நாட்டுல இந்த கம்பெனியில முதலீடு செஞ்சி ஏமாற்றப்பட்டிருக்கற எல்லா டெப்பாசிட்டர்சோட டீட்டெய்லயும் கலெக்ட் பண்றதுக்கு ஒங்களாலதான் ஹெல்ப் பண்ணமுடியும். அதுக்குத்தான் ஒங்க கூட்டத்த கூட்டச் சொல்லி ஒங்க தலைவர்கிட்ட கேட்டுக்கிட்டேன். அவரும் உடனே ஒத்துக்கிட்டு ஷார்ட் நோட்டீஸ்ல இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கார். The ball is in your court now. My mission will succeed only if you give a decent covering in your papers.’

அவர் இதுவரை குறிப்பிட்டதிலிருந்தே அந்த செய்திக்கு எத்தகைய வரவேற்பு இருக்கக்கூடும் என்பதை கணித்திருந்த நிரூபர்கள் பரபரவென குறிப்பெடுப்பதில் முனைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கேள்விகள் அறையின் எல்லா திசையிலிருந்தும் கிளம்பின.

‘சார் உங்களத்தவிர அந்த போர்ட்ல எல்லா மெம்பர்சும் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாம இருக்காங்கன்னு சொன்னீங்க. அதுல சில டைரக்டர்சோட பேரையாவது சொல்ல முடியுமா?’

‘அதென்ன சில பேர்? எல்லார் பேரையும் சொல்றேன். அந்த கம்பெனியில எனக்கு விசுவாசமானவங்க சொன்னதுலருந்து கிடைச்சத கொண்டு வந்திருக்கேன். எல்லாரோட பேரும் பேப்பர்ல வரணுங்கறதுதான் என்னோட வேண்டுகோள். மார்கெட்ல பெரிய மனுசங்க மாதிரி நடக்கற இவங்களோட சுயரூபம் எல்லாருக்கும் தெரியட்டும்.’ என்றவாறு அவர் பட்டியலிட்ட ஒவ்வொரு பெயரும் குழுமியிருந்த நிரூபர்களின் முகத்தில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த கூட்டம் சூடுபிடித்தது.

****

‘தெரியாமத்தான் கேக்கேன். ஒடம்பு சரியில்லாம அந்தம்மா ஆஸ்பத்திரியிலருக்கறப்போ அவங்கள எதுக்கு மாத்தறீங்க? என்னய்யா ஃபிலிப், என்ன பேசாம இருக்கீரு? சொல்லும்.. இப்ப இதுக்கு என்ன அவசரம்?’

ஃபிலிப் சுந்தரத்திற்கும் ஏன் இந்த அவசரம் என்று விளங்காததால் இதை பரிந்துரைத்த சோமசுந்தரத்தைப் பார்த்தார்.

சோமசுந்தரம் சேர்மனைப் பார்த்தார்.

அன்றுதான் பொறுப்பேற்றிருந்த மாதவனோ தன்னுடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார். முதல் நாளே பிரச்சினையில் சிக்கிக்கொண்டோமே. இந்த டாக்டருக்கும் நாடாருக்கும் இடையில இருக்கற ஈகோ க்ளாஷ்ல நம்மளையும் அறியாம மாட்டிக்கிட்டோம்னு நினைக்கேன். We will have to handle this situation carefully. இப்ப நாடாருக்கு பயந்து விசயத்த reconsider செய்ய முடிவெடுத்தா அனாவசியமா டாக்டர பகைச்சிக்கறா மாதிரி ஆயிரும். முடிவெடுக்கும்போது தீர யோசிக்காம முடிவெடுத்துட்டு எடுத்த முடிவ நாமளே சட்டுன்னு மாத்திக்கறதுங்கறதும் ஒரு நல்ல ஆரம்பமா இருக்க முடியாது...ஆனா அதே சமயம் நாடாரோட கேள்வியிலயும் நியாயம் இருக்கு..

அத்தோட இங்கருக்கற சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல யாருக்குமே இந்த முடிவுல இஷ்டம் இல்லாத மாதிரியும் இருக்கு. நம்ம ரூம்ல இருந்தப்போ ஒத்துக்கிட்ட ஃபிலிப் சுந்தரத்தோட முகத்துலயும் இந்த டிசிஷனுக்கு ஃபேவரபிளான ஒப்பீனியன் தெரியல..

How am I going to handle this decision?

தனக்கு அருகில் வலதுபுறத்தில் அமர்ந்திருந்த சேதுமாதவனை ஓரக்கண்ணால் பார்த்தார். அவர் உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை. தனக்கு இடப்புறத்தில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தின் முகத்திலும் ஒரு கலவரம் தெரிந்ததை உணர்ந்த மாதவன் இடது ஓரத்தில் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரத்தை பார்த்து, ‘என்ன மிஸ்டர் ஃபிலிப் ஒங்க ஒப்பீனியன் என்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் கேபின்ல இத டாக்டர் ப்ரொப்போஸ் செஞ்சப்போ ஒங்களுக்கும் இதுல சம்மதம் இருக்குன்னுல்ல நினைச்சேன்?’ என்றார். இப்படியொரு கேள்வியை கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று அவருக்கு தோன்றினாலும் இதனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர தனக்கு இன்னும் சற்று நேரம் கிடைக்குமே என்று நினைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்திருந்ததுக்கும் மேலாக இதைக் கையாண்ட ஃபிலிப் சுந்தரத்தின் நேர்த்தி அவரை கவர்ந்தது.

‘சார் நீங்க கேக்கறது நியாயந்தான். மிஸ். வந்தனா இப்ப இருக்கற சூழ்நிலையில இந்த டிசிஷன் கொஞ்சம் ஹார்ஷாத்தான் தெரியும். அதனாலதான் நாடார் சாரும் இது தேவைதானா நினைக்கறாங்க. ஆனா எனக்கென்னவோ இந்த மாற்றம் தேவைதான்னு படுது. நம்ம பேங்க்ல எப்பவும் நடக்கற ஆன்யுவல் ப்ரொமோஷன் டிரான்ஸ்ஃபர் சீசன் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பமாகப்போகுது. அதுக்குள்ள எல்லா ஆஃபீசர்சோட பெரஃபார்மன்ஸ் ரிவ்யூ ரிச்சுவல முடிக்கணும். நேரம் காலம் பாக்காம நம்ம எச்.ஆர் டிவிஷன் ஒர்க் பண்ண வேண்டிய நேரம் இது. அத்தோட இந்தியா முழுசும் ஏறக்குறைய பத்து செண்டர்ஸ்ல ப்ரொமோஷன் டெஸ்ட் நடத்தி, இண்டர்வ்யூ செஞ்சி முடிக்க வேண்டிய பொறுப்பு எச்.ஆர் ஹெட்டுக்குத்தான். இப்ப மிஸ் வந்தனா இருக்கற நிலமையில அவங்களால இந்த பொறுப்ப ஏத்து நடத்தமுடியுமான்னு சந்தேகம்தான். அப்படி பாக்கறப்போ அதுக்கு தேவையான தகுதி முழுசும் மிஸ்டர் பாபு சுரேஷ¤க்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். அத்தோட அவர் ஏற்கனவே ஹெட் ஆஃபீஸ்ல ஒர்க் செஞ்சவர். I think he is the most suitable replacement for Ms. Vandana.’

மாதவனை மட்டுமல்லாமல் சோமசுந்தரம் ஏன் நாடாரையும் கூட அவருடைய வாதம் கட்டிப்போட்டது. ‘வேய் நீரு லேசுபட்ட ஆள் இல்லைங்காணும்.. ஒம்ம பத்தி நான் எஸ்டிமேட் போட்டு வச்சது சரியாத்தான் இருக்கு.. ஹ¥ம் பொளச்சிப்பீரு.’என்று மனதுக்குள் நினைத்த நாடார் தனக்கும் சேர்மனுக்கும் இடையில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தை சந்தேகத்துடன் பார்த்தார்.

‘என்னய்யா டாக்டர் இத மனசுல வச்சித்தான் நீரு அந்த பாபுவ சிபாரிசு செஞ்சீரா இல்ல வேற ஏதாச்சும் அஜெண்டா இருக்கா?’ என்றார் நக்கலாக.

டேய்.. நாடார் என்ன நக்கலா? என்று மனதுக்குள் கறுவிய சோமசுந்தரம், ‘என்ன நாடார் எதுக்கு உங்களுக்கு வீண் சந்தேகம்? இவர் சொன்னத மனசுல வச்சித்தான் இந்த முடிவுக்கு வந்தேன். சொல்லப்போனா மிஸ்டர் ஃபிலிப் சுந்தரம் என்கிட்ட வந்து இந்த விஷயத்த ப்ரொபோஸ் செஞ்சப்போ எனக்கும் இந்த நேரத்துல இது தேவைதானான்னு கூட தோனிச்சி. என்ன மிஸ்டர் ஃபிலிப்?’ என்றார் தன்னுடைய கேள்வி நாடாரின் மனத்தில் மட்டுமல்லாமல் அறையிலிருந்த அனைவருடைய மனத்திலும் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை உணர்ந்தவராய்.

‘என்னய்யா டாக்டர் சொல்றீரு? ஃபிலிப் சுந்தரந்தான் இத ஒம்ம கிட்ட வந்து சொன்னாரா?’ என்றார் நாடார் அதிர்ந்துபோய்.

அவர் மட்டுமல்ல அறையிலிருந்த அனைவருமே அவரை அப்படித்தான் பார்த்தனர். மாதவனைத் தவிர. இது சோமசுந்தரத்தின் அபாண்டம் என்பது அவருக்கு உடனே புரிந்தது. இந்த ஃபிலிப் சுந்தரம் நாடாரின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்க வேண்டும். ஆகவே தனக்கும் முன்னால் அவரை சிக்கலுக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடந்தான் டாக்டர் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

தனக்கு அருகிலிருந்த இரு மூத்த அதிகாரிகளையும் பார்த்தார் மாதவன். சேது மாதவனுக்கு சுந்தரலிங்கத்தையும் ஃபிலிப் சுந்தரத்தையும் அரவே பிடிக்காது என்பதை அவர் ஏற்கனவே நேரில் கண்டிருந்ததால் அவருடைய முகத்தில் தெரிந்த ஒருவகை வக்கிரமமான சந்தோஷம் அவரை வியப்படையச் செய்யவில்லை. ஆனால் சுந்தரலிங்கத்தின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள முடியாமல் சற்று தடுமாறித்தான் போனார். இவரிடம்தான் நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். சேதுமாதவன் தனக்கு நேரிடையான எதிரி என்றால் இந்த ஃபிலிப் சுந்தரம் தனக்கு வலதுகரமாக திகழ வேண்டியவர் என்பதை முடிவு செய்தார்.

ஆகவே அவரை காப்பாற்றும் எண்ணத்தில் நாடாரைப் பார்த்தார். ‘மிஸ்டர் நாடார். இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுருங்க. நான் பாத்துக்கறேன். நாம அடுத்த அஜெண்டாவுக்கு போலாம்.’ என்று விஷயத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அந்த நேரத்தில் பரபரப்புடன் அறைக்குள் நுழைந்த அவருடைய காரியதரிசி அவருடைய பெயருக்கு வந்திருந்த அறிக்கையொன்றை கொடுத்துவிட்டு நகர மாதவன் தன் முன் வைக்கப்பட்ட Fax செய்தியை வேகமாக தனக்குள் வாசித்தார்.

பிறகு தனக்கு எதிரே அமர்ந்திருந்த டாக்டர் சோமசுந்தரத்தை நோக்கி அதை நகர்த்தினார்.

அதை எடுத்து வாசித்த சோமசுந்தரத்தின் முகம் போன போக்கைக் கண்டு அறையிலிருந்த அனைவருமே திகைக்க  அவர் எழுந்து வேகமாக அறையிலிருந்து வெளியேறினார்.

‘என்ன சார் என்ன இருக்கு அந்த பேப்பர்ல.. எதுக்கு டாக்டர் எழுந்து போறார்?’ என்ற நாடாரைப் பார்த்தார் மாதவன்.

‘அவர் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கார் மிஸ்டர் நாடார். அதான்..’ என்ற மாதவன் தன் அதிகாரிகளைப் பார்த்தார். ‘I think we may have to suspend the meeting.. நாடார் என் கேபினுக்கு வாங்க விவரமா சொல்றேன்.’ என்றவாறு எழுந்து தன்னுடைய காரியதரிசியை மேசையில் கிடந்த Fax அறிக்கையை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வரும்படி பணித்தவாறு வெளியேற நாடார் அவரை தொடர்ந்தார்.

அவர் சென்றதும் மேசையில் கிடந்த அறிக்கையை எடுத்து வேகமாக ஒரு முறை வாசித்த சேதுமாதவன் மற்ற இருவருக்கும் காட்டாமல் சேர்மனின் காரியதரிசியிடம் நீட்ட சுபோத் அதைப் பெற்றுக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

சேதுமாதவன் கலவரமான முகத்துடன் வெளியேற சுந்தரலிங்கமும் ஃபிலிப் சுந்தரமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்..

தொடரும்..





24.7.06

சூரியன் 112

ஆடிட் கமிட்டி முடிந்ததும் அறையை விட்டு வெளியேறுவதில் குறியாயிருந்தார் ஃபிலிப் சுந்தரம்.

நாடாரும் அவரைத் தொடர்ந்து சற்று நேரத்தில் சோமசுந்தரமும் அவரவர் சொந்த அலுவல்கள் காரணமாக கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சேதுமாதவனின் குடைச்சல் தாங்கமுடியாததாகிப் போனது.

ரிசர்வ் வங்கியின் இயக்குனரான சாம்பசிவத்தின் நடத்தையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

வங்கியின் கணினி இலாக்காவின் (EDP) வருடாந்தர ஆய்வறிக்கையில் தணிக்கையாளர்கள் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளுக்கு ஃபிலிப் சுந்தரத்தையே பொறுப்பாக்கி அவரை துளைத்தெடுத்துவிட்டனர் இருவரும்.

வங்கியின் இயக்குனர் குழு அங்கத்தினர்களில் ஒருவரான ராஜகோபாலன் நாயர் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு வாய்மூடி அமர்ந்திருந்தது சேதுமாதவனுக்கு தெம்பையளிக்க எல்லை மீறிச் செல்ல துவங்கினார்.

‘மிஸ்டர் ஃபிலிப் நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் கமிட்டி ஒத்துக்கப்போறதில்ல. இந்த டிப்பார்ட்மெண்டே ஒங்க கண்ட்ரோல்லதான் இருக்கு. நான் பலதடவ இந்த டிப்பார்ட்மெண்ட்ட ஒங்கக்கிட்டருந்து எடுத்து உங்கள மாதிரியே ஒரு சி.ஜி.எம் தலைமையிலயோ அல்லது தனியா ஒரு ஜி.எம் தலைமையிலயோ ஃபார்ம் பண்லாம்னு சொல்லியும் நீங்க அதுக்கு ஒத்துக்கல. அப்படி நாம செஞ்சிருந்தா இந்த டிப்பார்ட்மெண்டோட ஃபங்க்ஷன்ஸ சரிவர கவனிச்சிக்கறதுக்கு ஒரு ஆள் இருந்திருப்பார். இந்த மாதிரி சீரியஸ் அட்வேர்ஸ் கமெண்ட்சும் வந்திருக்காது. இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?’

ஃபிலிப் சுந்தரத்திற்கோ அடக்க முடியாத கோபம் பொங்கி வந்தது. உண்மையில் இந்த EDP இலாக்காவை கணினி இலாக்கா என்று பெயர் மாற்றம் செய்து அதை தனியான இலாக்காவாக அமைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததுடன் கடந்த சில மாதங்களில் இலாக்கா தலைவர் பொறுப்பில் அமர்த்த டி.ஜி.எம் பதவியிலிருந்த பல அதிகாரிகளுடைய பெயரை சோமசுந்தரத்திற்கு பரிந்துரை செய்து கடிதங்கள் எழுதியிருந்தார்.

ஒவ்வொரு அதிகாரியையும் சில்லறை காரணங்களைக் காரணம் காட்டி நிராகரிப்பதிலேயே குறியாயிருந்த சோமசுந்தரம் இப்போது கமிட்டி உறுப்பினர்கள் முன்னர் தன்னை குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று விளங்காமல் இவ்விஷயத்தைக் குறித்து முழுவதும் அறிந்தும் தன்னுடைய உதவிக்கு வராத சுந்தரலிங்கத்தை சற்றே எரிச்சலுடன் பார்த்தார் ஃபிலிப்.

சுந்தரலிங்கத்தின் பிரச்சினையே இதுதான். தன் உள்மனதில் சரியென்று தோன்றும் விஷயங்களைக் கூட வெளியே சொல்ல தயங்குவார்.. ஒவ்வொன்றையும் மனதுக்குள் போட்டு பல முறை உருட்டி, பிரட்டி அவருடைய கருத்தை வெளியே சொல்வதற்குள் பிரச்சினையே தன்னுடைய முடிவைத் தேடிக்கொள்ளும்.

‘என்ன மிஸ்டர் ஃபிலிப், எம்.டியோட குற்றச்சாட்டுகளுக்கு ஒங்க பதில் என்ன?’ என்றார் ராஜகோபாலன் நாயர் பந்தாவாக ஏதோ இதுவரை நடந்த சம்பாஷனையை நன்கு புரிந்துக்கொண்டவர்போல்.

இந்த ராஜகோபாலன் நாயர் வேறு இடையில்.. என்று நினைத்தார் ஃபிலிப் சுந்தரம்.. ஒரு மூட்டைப்பூச்சியைப் போல் அவ்வப்போது நேரம் காலம் தெரியாமல் கடித்து குதறுவார். காலால் மிதித்து அழிக்கவும் மனம் வராது தூசு என்று நினைத்து தட்டிவுடவும் முடியாது. எந்த நேரத்தில் என்ன பேசுவார், யார் பக்கம் சாய்வார் என்றே கணிக்க முடியாத ரெண்டுங்கெட்டான் மனிதர். அவருக்கு வங்கியில் பெரிதாக ஒன்றும் முதலீடு இல்லையென்றாலும் சோமசுந்தரத்தின் அடியாட்களைப் போலத்தான். அவருடைய தயவால் இயக்குனர் குழுவில் இருப்பவர்.

ஃபிலிப் சுந்தரம் அவரை ஏறெடுத்தும் பாராமல் அவருடைய கேள்விக்கு பதிலளித்தார். ‘சார்.. இத பலமுறை எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங்க்ஸ்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கோம். அது எம்.டிக்கும் தெரியும். அடுத்த டிட் கமிட்டி மீட்டிங்ல இதப்பத்தி தனியா பிரத்தியேகமா ஒரு ப்ரொப்போசல் வைக்கிறேன்னு உறுதியா சொல்றேன்.’

அதை எதிர்த்து சோமசுந்தரம் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் ரிசர்வ் வங்கி இயக்குனர் அமர்ந்திருந்த இருக்கையின் அருகிலிருந்த தொலைப்பேசி சிணுங்க அவர் எடுத்து, ‘யெஸ் சாம்பசிவம்’ என்றார். பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு, ‘ஒக்கே.. மானேஜ்மெண்ட் கமிட்டி மெம்பர்ஸ் வந்துட்டாங்களாம். செக்கரட்டரி மீட்டிங் முடிஞ்சிருச்சான்னு கேக்கறார். அதனால, இப்ப மிஸ்டர் ஃபிலிப் சொன்ன க்ளாரிஃபிக்கேஷனோட இந்த மீட்டிங்க முடிச்சிக்கலாம். One more thing Mr.Philip. Please prepare a detailed report on the follow up actions taken by the department on this ISO Audit report and place it before the next ACB. Is that clear?’

புரிகிறது என்று ஃபிலிப் தலையை அசைக்க அன்றைய ஆடிட் கமிட்டி கூட்டம் முடிவுக்கு வந்தது.

******

கூட்டம் முடிந்ததுமே அறையை விட்டு வெளியேறிய ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய சக அதிகாரிகளுக்காக காத்திராமல் அடுத்து துவங்கவிருந்த மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்திற்கான கோப்புகளை எடுக்க தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்தார். சாதாரணமாக எச்.ஆர் இலாக்காவின் தலைவர் மிஸ் வந்தனாதான் இதற்கு பொறுப்பு. அன்று அவர் விடுப்பிலிருந்ததால் அவருடைய நேரடி அதிகாரியான ஃபிலிப் சுந்தரத்தின் தலையில் இப்பொறுப்பு விழுந்திருந்தது.

அவர் தன்னுடைய அறை வாயிலை அடையவும் வாயிலிலிருந்த வரவேற்பறையில் காத்திருந்த பாபு சுரேஷ் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்.

அவரைக் கண்டதும்தான் சற்று முன் சேர்மன் அறையில் நிகழ்ந்த சம்பாஷனை  நினைவுக்கு வர, ‘வாங்க பாபு.. உள்ள வாங்க..’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து தனுடைய இருக்கையில் அமர்ந்தார்.

அப்போதும் இருக்கையில் அமராமல் தயங்கி நின்றவரைப் பார்த்து புன்னகைத்தார். ‘என்ன பாபு.. You are going to be the part of the HO Team.. இங்கல்லாம் ஜி.எம் ராங்க்ல இருக்கறவங்க ஒக்கார சொல்லணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. வந்தோமோ, ஒக்காந்தோமோ, பேச வந்தத பேசிட்டு ஓடுனாமோன்னு இருப்பாங்க.. நீங்கதான் ஏற்கனவே HOவில இருந்திருக்கீங்க இல்லே.. அப்புறமென்ன.. ஒக்காருங்க.. என்ன விஷயம்?’

பாபு சுரேஷ் உடனே அமர்ந்து, ‘சார்.. இன்னைக்கி காலைல சேர்மன் சேம்பர்ல நடந்த விஷயமாத்தான்..’ என்று தயங்க ஃபிலிப் சுந்தரம் அவரை வியப்புடன் பார்த்தார்.

‘தயங்காம சொல்லுங்க. அதுல பேசறதுக்கு என்ன இருக்கு? இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.சி தொடங்கப் போவுது. நான் என்னோட ஃபைல்ஸ எடுத்துக்கிட்டு போலாம்னுதான் வந்தேன். இன்னைய மீட்டிங்ல டாக்டர் சொன்ன ப்ரொப்போசல ஓரலா சொல்றேன்.. நாடார் மட்டுந்தான் ஏதாச்சும் சொன்னா சொல்வாருனு நினைக்கேன். மத்தபடி ப்ராப்ளம் ஏதும் இருக்காது. மீட்டிங் முடிஞ்சதும் ஒங்க போஸ்டிங் ஆர்டர அடிச்சிற வேண்டியதுதான். என்ன, இது மாதவன் சாருக்கு  இது ஃபர்ஸ்ட் எம்.சிங்கறதால மீட்டிங் முடிய கொஞ்சம் லேட்டாவும். அதுவரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்கணும்னு இல்லே... ஒங்க பிராஞ்சுக்கு போலாம். ஏதாச்சும் தேவைன்னா நான் ஃபோன் பண்றேன்.. மீட்டிங்குக்கு நேரமாச்சு.. வேற ஏதும் இல்லைன்னா அப்புறம் பாக்கலாம்.. இங்கதான இனி இருக்க போறீங்க?’ என்றவாறு மேசையிலிருந்த கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு அவர் எழுந்து நிற்க வேறு வழியில்லாமல் பாபு சுரேஷ¤ம் எழுந்து நின்றார்.

இருப்பினும் அவருடைய நடத்தையில் இருந்த தயக்கத்தையுணர்ந்த ஃபிலிப் சுந்தரம், ‘என்ன மிஸ்டர் பாபு ஏதோ சொல்ல வந்து தயங்கறாப்பல இருக்கு? Whatever it is.. come out with it..’ என்றவாறை வாயிலை நோக்கி நடந்தார்.

அவரைத் தொடர்ந்த பாபு, ‘சார் டாக்டர் சொன்ன போஸ்ட்ல வர்றதுக்குத்தான் கொஞ்சம் தயக்கமாருக்கு.. மத்தபடி இங்க வர்றதுக்கு எனக்கு விருப்பம்தான்..’ என ஃபிலிப் சுந்தரம் அப்படியே நின்று அவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.

‘What are you trying to say Mr.Babu? Does it mean Dr.Somasundaram has recommended your name without you asking for it? Is that it?’

அவருடைய நேரடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப்போனார் பாபு சுரேஷ்.. ‘அப்படி இல்ல சார்..’ என்று தயங்க.. ஃபிலிப் சுந்தரத்தின் செல் ஃபோன் அலறியது. கம்பெனி செக்கரட்டரி!

எடுத்து மறுமுனையிலிருந்து அவர் பேச முயலுவதற்கு முன், ‘Yes, I am on the way..’ என்று இணைப்பைத் துண்டித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்.

‘I am sorry Mr.Babu.. I have to go.. I will think about what you said.. Bye.. நீங்க எதுக்கும் மீட்டிங் முடியறவரைக்கும் போர்ட் ரூமுக்கு வெளிய வெய்ட் பண்ணுங்க..’

தன்னுடைய மறுமொழிக்கு காத்திராமல் பரபரப்புடன் லிஃப்ட்டை நோக்கி ஒட்டமும் நடையுமாக சென்றவரையே பார்த்தவாறு மெள்ள நடந்தார் பாபு சுரேஷ்..

********

‘என்னய்யா.. இப்பல்லாம் ஒங்கள மாதிரி அதிகாரிகளுக்காக கமிட்டி மெம்பர்ஸ் காத்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கு.’ ஃபிலிப் சுந்தரம் மேல் மூச்சு வாங்க அறைக்குள் நுழையவும் நாடாருடைய கேலிப் பேச்சு காதில் விழ திடுக்கிட்டு தன்னுடைய புது சேர்மனைப் பார்த்தார்.

‘பாத்தீங்களா சார்.. இன்றைக்கு எம்.சி யோட கன்வீனரே இவர்தான்.. ஒங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மீட்டிங்னு தெரிஞ்சும் லேட்டா வர்றத பாருங்க..’ என்ற நாடாரை புன்னகையுடன் பார்த்தார் புது சேர்மன் மாதவன்.

‘போட்டும் சார்.. அவர்தான ஏ.சி.பிக்கும் கன்வீனர் போலருக்கு? மிஸ் வந்தனா இல்லாம இவர் நடத்தற முதல் எம்.சி போலருக்கு. அதான்.. என்ன மிஸ்டர் ஃபிலிப் நான் சொல்றது சரிதானே..?’

ஃபிலிப் சுந்தரம் தனக்கு பரிந்துக்கொண்டு வந்த மாதவனை நன்றியுடன் பார்த்தவாறு தன் இருக்கையில் அமர்ந்து சேது மாதவனையும் சுந்தரலிங்கத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தார்.

சேதுமாதவன் முகம் கண்ணாடி போன்றது. ஆத்திரமானாலும், மகிழ்ச்சியானாலும் அப்படியே தெரிந்துவிடும். 'நான் ஏன் மேன் என் ஃபீலிங்ச மறைக்கணும்?' என்பதுபோன்ற நிலை அவருடையது. ஆனால் சுந்தரலிங்கம் அப்படியல்ல. தான் நினைப்பது சரிதானா தவறானதா என்ற முடிவுக்கு வரவே நேரம் போதாது.. அதுவும்  இத்தகைய உயர்மட்ட கூட்டங்களுக்கு வரும் நேரத்தில் அவர் முகமூடி ஒன்றை அணிந்து வருவாரோ என்ற விதத்தில் இருக்கும் அவருடைய உணர்ச்சியற்ற முகம்..

‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா?’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க காரசாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...

தொடரும்..

22.7.06

மு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)

(தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

கவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா?

செந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..

கவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு? டேய் நீ தேறிட்டடா..

செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..

கவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.

(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள்   ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)

மு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).

(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே? (பல்லைக் கடிக்கிறார்)

செந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)

கவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..

மு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க? நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ?

கவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..

செந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..

கவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..

(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)

கவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..

(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா?

மு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா?

கவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா? வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..?’ என்கிறார்)

(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)

மு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பார்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..

கவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா.  வாய்லயே நொளையமட்டேங்குது

மு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...

மு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..

கவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..

(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம்? (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)

மு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா? அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா? அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..

(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)

(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)

கவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா?

செந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)

(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே?

கவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா? செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)

(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சிரிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)

செந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா?

(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)

கவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)

(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)

மு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா? பிறகு என்ன எழுதுவீர்கள்?

கவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..

மு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம்? இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க?

கவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).

(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)

(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்த தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர்  இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து  மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)

நிறைவு.

21.7.06

மு.கவுடன் சந்திப்பு (நகைச்சுவை)

கவுண்டரும் செந்திலும் முதலமைச்சரை பேட்டி காண தயாரகிறார்கள்.

கவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)

செந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா?

கவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..

கவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி? டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா?

செந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..

கவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா? நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு  சொல்லு.. என்ன ரெடியா?

செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)

கவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா?

செந்: இருக்கு

கவு: மைக்?

செந்: இருக்கு

(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)

கவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா?

செந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க? அத மறப்பனா? இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்?

கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..

செந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது? அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..

கவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா? ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு  கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது? நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..

கவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது? ச்சை..  

(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)

கவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா? என்ன அதே ரிக்ஷவா?

செந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..

கவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல?

செந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.

கவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..

(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி  காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க?’ என்கிறார் அதிகாரத்துடன்.)

கவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க? நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)

கவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்..? கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..

செந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..

கவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது? எறங்குடா..

(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா?  கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..

செந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..

கவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல?

செந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல?

கவு: (முறைக்கிறார்) யாரு? நீயி? எல்லாம் என் நேரம்டா..

(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)

கவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின? இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது? ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க? இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

நாளை நிறைவு பெறும்..

சூரியன் 111

‘சார் ஒங்கள பாக்கறதுக்கு கொச்சியிலருந்து நந்தக்குமாரும் அவரோட ஒய்ஃப் மிசஸ் நளினியும் வந்துக்கிட்டிருக்காங்க. இப்பத்தான் ஒங்க வீட்டுக்கு வழி கேட்டு அவர் ஃபோன் செஞ்சார்.. இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்கருப்பாங்கன்னு நினைக்கேன்..’

மாணிக்க வேல் சுவர் கடிகாரத்தைப் பார்த்தார். முட்கள் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தன.. ‘ஓக்கே ஜோ.. அவர பார்த்து ரொம்ப நாளாச்சி. வரட்டும்.. தாங்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்..’ என்று இணைப்பைத் துண்டிக்க முயல எதிர் முனையிலிருந்து ஜோ, ‘சார் ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா சார்?’ என்று கேட்க மாணிக்க வேல், ‘தாங்ஸ் ஜோ.. வி வில் மேனேஜ். நீங்க ஆஃபீஸ் போங்க. வேணும்னா கூப்டறேன்..’ என்று கூறிவிட்டு ‘சந்தோஷ்’ என்றவாறு தன் மனைவியின் அறை வாயிலை அடைந்தார்.

அறைக்குள் அவர் கண்ட காட்சி அவரை சில நிமிடங்கள் திகைக்க வைத்தது.

சந்தோஷ் கட்டிலில் அமர்ந்திருக்க அவனுடைய தோளில் சாய்ந்தவாறு அவருடைய மனைவி கண்ணீர் வடிப்பது தெரிந்தது.

என்ன செய்வதென தெரியாமல் சில நொடிகள் நின்றுவிட்டு தன்னுடைய அறைக்கு திரும்பிய மாணிக்கவேல் கட்டிலருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

முந்தைய நாள் இரவு சந்தோஷ¤ம் அவருடைய சகோதரர்களும் ராணியை இறுதியாக ஒருமுறை திருந்தி வாழ வாய்ப்பளிக்கலாம் என்று வற்புறுத்தியபோது மனமில்லாமல், சந்தோஷ¤டைய சந்தோஷத்துக்காக மட்டுமே சம்மதித்தார்.

சற்று முன் அவருடைய தந்தை 'ராணி நல்லவந்தான்டா..' என்றும் காலப்போக்கில் நிச்சயம் அவள் மனம் மாறிவிடுவாள் என்றும் பரிந்துரைத்தபோதுகூட அவருடைய மனம் இளகவில்லை.

ஆனால் சற்று முன் அந்த அறையில் அவர் கண்ட காட்சி அவருடைய மனதில் லேசாக ஒரு மாற்றத்தை, ராணிக்கு ஆதரவாக, உணர்ந்தார்.

கமலியோட திடீர் மரணம் தன்னுடைய மனைவியை அடியோடு மாற்றிவிடாதா என்ற ஏக்கம் அவரையுமறியாமல் அவருடைய அடி மனதில் இருந்திருக்கிறதுபோலும். அதுதான் இப்போது தான் கண்ட காட்சியைப் பற்றி இந்த அளவுக்கு சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார்.

சரி.. பார்ப்போம்..

ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தவர் குளித்து உடை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தார்.

நடு ஹாலில் நடுநாயகமாக, மேசைமீது கமலியின் புகைப்படத்தையும் அதன் முன்னே இரு மெழுகுதிரிகளையும் ஏற்றி  வைத்திருப்பதையும் அதன் அருகே தரையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தன் மனைவியையும் பார்த்தார்.

அவரையுமறியாமல் நேரே சென்று ராணியின் தலைமுடியை ஆதரவாக தடவ திடுக்கிட்டு நிமிர்ந்த ராணி சடாரென்று எழுந்து அவரைக் கட்டி அணைத்துக்கொண்டு அழ அந்த அறையில் அமர்ந்திருந்த மாணிக்கவேலின் சகோதரர்கள் மற்றும் சந்தோஷ் திடுக்கிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

அவருடைய சகோதரர்கள் கேலி புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதை பார்த்த சந்தோஷ் வேதனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

நல்ல வேளையாக வாசலில் மணி அடித்தது.

மாணிக்கவேல் தன் மனைவியை விட்டு விலக, ராணி மீண்டும் தன் மகளுடைய புகைப்படம் வைக்கப்பட்டிருந்த மேசைக்கு அருகிலேயே தரையில் அமர்ந்தாள்.

சந்தோஷ் வாசற்கதவைத் திறந்து தனக்கு முன்பின் பரிச்சயமில்லாத இருவர் நிற்பதைப் பார்த்து திகைத்து நிற்க, ‘சந்தோஷ் அவங்கள உள்ள கூட்டிக்கிட்டு வா’ என்ற தன்னுடைய தந்தையின் குரலைக் கேட்டு கதவை விரியத்திறந்து அவர்களை உள்ளே அழைத்தான்.

‘எப்படி இருக்கீங்க சார்? எனக்கு நேத்து ஃபோன்ல கேட்டதும் கஷ்டமாயிருச்சி. இது என் வைஃப் நளினி.’ என்ற மலையாளம் கலந்த தமிழில் நந்தக்குமார் விசாரிக்க மாணிக்கவேல் இருவரையும் அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்தியவாறே தன்னுடைய சகோதரர்களைப் பார்த்தார். அவர்கள் அவருடைய பார்வையின் பொருளை புரிந்துக்கொண்டு எழுந்து மாடியை நோக்கி நகர்ந்தனர்.

நந்தக்குமார் சோஃபாவில் அமர நளினி நகர்ந்து கமலியின் புகைப்படத்தை காண மேசையை நெருங்கினாள். கமலியின் குழந்தை முகமும் உதடுகளில் பூத்திருந்த புன்னகையும் நளினியின் மனதை வெகுவாக பாதிக்க அவளும் அப்படியே தரையில் அமர்ந்து அருகில் தலைகுனிந்து அமர்ந்திருந்த ராணியின் கரங்களை ஆதரவுடன் பற்றினாள்.

ராணி தலைநிமிர்ந்து ததும்பி நின்ற கண்ணீரினூடே அவளைப் பார்த்து விசும்ப செய்வதறியாது திகைத்துப்போனாள் நளினி.

அருகிலேயே நின்றிருந்த சந்தோஷ் தன்னுடைய தாய் திடீரென்று ஏதும் வில்லங்கமாய் பேசிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அவர்களிருவரிடையேயும் அமர்ந்து தன் தாயின் தோளின்மீது கையை வைத்து அழுத்தினான்.

‘She is not well aunty. Please excuse her.’ என்று நளினியிடம் கூறிவிட்டு, ‘அம்மா மதரும் சிஸ்டர்சும் பதினோரு மணிக்கு மேலதான் வருவோம்னு சொல்லியிருக்காங்க. ஃபாதர் வந்து இங்கயே பூசை வைக்கறேன்னு சொல்லியிருக்காங்க. நான் அவங்க வர்றதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்யணும். அதனால நீங்க ஒங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்கம்மா, ப்ளீஸ்’ என்று கெஞ்சினான்.

ராணி என்ன நினைத்தாளோ நளினியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு மறுபதில் பேசாமல் மெள்ள எழுந்து தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.

நளினியும் எழுந்து கமலியின் புகைப்படத்தை தொட்டு வணங்கிவிட்டு நந்தக்குமார் அமர்ந்திருந்த சோஃபாவில் சென்றமர்ந்தாள். சிறிது நேர விசாரனைக்குப்பிறகு இருவரும் எழுந்து மாணிக்கவேலிடமும் சந்தோஷிடமும் விடைபெற்றுகொண்டு சென்றனர்.

அவர்களை வழியனுப்பிவிட்டு திரும்பிய மாணிக்கவேல் தன் மகனை நெருங்கி அவனுடைய தோள்களைப் பற்றினார். ‘தாங்க்யூடா சந்தோஷ்.. நீ சொன்னா மாதிரி அம்மாவ திருப்பி கூப்டது நல்லதுன்னுதான் தோனுது.. She needs a break. I think she will change for good.’

தன் தந்தையின் மனமாறுதலை முற்றிலும் எதிர்பார்க்காத சந்தோஷ் மகிழ்ச்சியுடன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘Yes Dad. கமலியோட சாவு அம்மாவ நிறையவே பாதிச்சிருக்குப்பா. அவங்க நிச்சயம் மாறிடுவாங்க.’

‘Let us hope so!’

மாணிக்கவேல் தன்னுடைய அறையை நோக்கி நகர அவருடைய சகோதரர்கள் மாடியிலிருந்து இறங்கி வந்தனர்.

சந்தோஷ¤ம் அவர்களுடைய துணையுடன் பாதிரியார் வந்து வழிபாடு நடத்த வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க துவங்கினான்.

******

‘Sorry Miss. Vandana, You may have to stay in the hospital for a few more days.. I would have discharged you today but for the high B.P.’

வந்தனாவுக்கு இப்போதே இறங்கி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் என்ன செய்ய?

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அதுபோலல்லவா இருக்கிறது இந்த ரத்த கொதிப்பு!

உடம்புக்குள்ள எங்க இருக்கு, இல்ல அது இருக்கா இல்லையான்னு கூட தெரியாத ஒன்னு, மனசு. முளைய கட்டுப்படுத்தி ஒரு காரியத்த வெற்றிகரமா செய்து முடிக்கற நம்மால இந்த பாழாப் போன மனச ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவர முடியலையே.. அது மட்டும் முடிஞ்சா இந்த ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்திரலாமே..

‘நான் இங்க இன்னும் ரெண்டு நாளைக்கு கூட இருக்கறதுனால பி.பி நார்மல் லெவலுக்கு வரும்னு எனக்கு தோனலை டாக்டர். Please don’t think that I am trying to act smart. ஆனா டாக்டர், நாள் முழுக்க பரபரப்பாருக்கற எனக்கு இந்த ஒரு நாள் படுத்தபடியே இருக்கறதுக்கே கஷ்டமாருக்கு. உடம்பு அசதியாத்தான் இருக்கு டாக்டர், இல்லேங்கலே.. ஆனா மனசு restlessஆ இருக்கே .’

மருத்துவர் அவள் கூறியதன் பொருளை உணர்ந்தவராய், ‘Shall I put you on sedatives? You would be able to sleep well.’ என்றார்.

வந்தனா வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

‘As you wish.’ என்றவாறு நகர்ந்தவரை, ‘Doctor one second’ என்று தடுத்து நிறுத்தினாள் வந்தனா.

‘Yes? Tell me!’

வந்தனா தயக்கத்துடன், ‘If you could allow me to go home I promise you I will take the sedatives and take complete rest. I promise.’ என்றாள்.

மருத்துவர் சற்று யோசித்தார். ‘ஆனா ஒங்கள பாத்துக்கறதுக்கு வீட்ல யாரும் இல்லேன்னு ஒங்கள அட்மிட் செய்ய வந்த ஜெண்டில்மேன் சொன்னாரே.. If something happens.. who will take the responsibility?’

வந்தனாவால் பதில் பேசமுடியவில்லை. ஆயாசத்துடன் மீண்டும் கட்டிலில் விழுந்து கண்களை மூட மருத்துவர் அடுத்த கட்டிலை நோக்கி நகர்ந்தார்.

அவர் தன்னுடைய நோயாளிகளின் ஆய்வை முடித்துக்கொண்டு ICU வார்டை விட்டு வெளியேறவும் நந்தக்குமாரும் நளினியும் வரவும் சரியாக இருந்தது. அவர் அவர்களை பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல நந்தக்குமார் அவரை பின்தொடர்ந்து சென்று, ‘டாக்டர்’ என்றான்.

‘Yes?’ என்று அவர் திரும்பி அவனை பார்த்தார்.

‘Doctor I am Nandakumar, we have come from Kerala to meet Madam Vandana. The nurse is not allowing us to meet her. If you could kindly...’

மருத்துவர் அவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, ‘Come, I will speak to the nurse..’ என்றவாறு அவனுடன் சேர்ந்து வார்டை நோக்கி நடந்தார். ‘Are you her relative?’

‘No doctor. But we know her for a quite a long time.. I work in the same Bank.’

மருத்துவர் வார்டுக்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நர்சிடம், ‘இவங்க ரெண்டு பேரையும் மிஸ்.வந்தனாவ பார்க்க பெர்மிட் பண்ணுங்க. But for not more than five minutes, OK?’ என்று கூறிவிட்டு நந்தக்குமாரையும் நளினியையும் பார்த்தார். ‘She is OK now but for high BP. It is not much but she needs complete rest. I have to retain her for a few more days as I am told she has no one to take care of her at home.’

நளினி குறுக்கிட்டு, ‘I will take care of her Doctor. We are anyway planning to stay in Chennai for a week.’ என்றாள்.

மருத்துவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘Is it? Let me see.. Come..’

வந்தனாவின் படுக்கையை நோக்கி மருத்துவர் செல்ல நந்தக்குமாரும் நளினியும் அவரைப் பின்தொடர்ந்தனர்..

தொடரும்..

20.7.06

சூரியன் 110

ராசம்மாவும் செல்வமும் அவர்களுடைய சட்ட ஆலோசகரும் நண்பருமான  வழக்கறிஞர் மோகனுடைய வீட்டையடைந்தபோது அவர் தன்னுடைய உதவியாளர்களுடன் ஆலோசனையிலிருக்கவே இருவரும் அவருடைய வரவேற்பறையில் அமர்ந்தனர்.

செல்வம் தன் கையோடு கொண்டு வந்திருந்த கோப்பில் ஆழ்ந்துபோக சற்று நேரம்வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த ராசம்மா தன்னருகில் அமர்ந்திருந்த செல்வத்தை தொட்டாள்.

திடுக்கிட்டு திரும்பிய செல்வம் என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினான்.

‘மொதல்ல ஒரு பர்சனல் விஷயம் அங்கிள்கிட்ட கேக்கலாம்னு பாக்கேன்.’

‘பர்சனல் விஷயமா? என்ன கேக்கப் போற? விவாகரத்து விஷயமா?’

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள் ராசம்மா. ‘அதுவுந்தான் பேசணும்.. ஆனா அதுக்கு முன்னால இந்த பட்டிக்காட்டு பேர மாத்த என்ன செய்யணும்னு கேக்கணும்.’

செல்வம் வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘பேர மாத்தணுமா? அப்படின்னா?’

ராசம்மா புன்னகைத்தாள். ‘அதான் செல்வம். ராசம்மாங்கற பேர மாத்தி ராஜி இல்லன்னா ராசின்னு மாத்திக்கலாம்னு பாக்கேன்.’

செல்வம் இது இப்ப தேவைதானா என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

புரிந்துக்கொண்டு ‘தேவைதான்’ என்றாள் ராசம்மா சீரியசாக. ‘பேர் செலக்ஷன் எப்படியிருக்கு. அத மட்டும் சொல்லு.’

செல்வம் பதில் கூறுவதற்குமுன் தன்னுடைய அறையிலிருந்த புன்னகையுடன் வெளியே வந்த மோகன் அவர்களைப் பார்த்ததும், ‘சாரிம்மா.. இன்னைக்கி முக்கியமான கேஸ் ஒன்னு கோர்ட்டுக்கு வருது. அதான் டிஸ்கஷன்..’ என்றார். ‘எப்படிம்மா இருக்கே? என்ன செல்வம். ஒன்ன பாத்து ரொம்ப நாளாச்சே.. உள்ள வாங்க..’

செல்வமும் ராசம்மாளும் பிந்தொடர தன் அறைக்கு திரும்பிய மோகன் தன் இருக்கையிலமர்ந்து அவர்கள் இருவரும் அவரவர் இருக்கையில் அமரும்வரை காத்திருந்தார்.

‘சொல்லுங்க.’ என்றவாறு ராசம்மாளைப் பார்த்தார். ‘நாடார் கூப்ட்டு நீங்க ரெண்டுபேரும் வரீங்கன்னு சொன்னதும் எனக்கு ஒன்னும் புரியல.. என்ன விஷயம்?’

ராசம்மா செல்வத்தைப் பார்த்தாள். அவன் நீயே சொல்லு என்பதுபோல் சைகை செய்ய, ‘அங்கிள் நான் வந்துருக்கற விஷயம் கொஞ்சம் சீரியசான விஷயம். கொஞ்ச விளக்கமா சொல்ல வேண்டியிருக்கும்னு நினைக்கேன். Are you free uncle?’ என்றாள் செல்லம்மா.

மோகன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பிறகு தன்னுடைய இண்டர்காமில் தன்னுடைய உதவியாளரை அழைத்தார். ‘சுந்தர் நீங்க ஒங்க அசிஸ்டெண்ட்சோட கோர்ட்டுக்கு போயிருங்க. எனக்கு வெய்ட் பண்ண வேணாம். நம்ம செட்டியார் கேஸ்ல அட்ஜர்ன்மெண்ட் கேட்டு பாருங்க. கிடைக்கலன்னா இன்னைக்கி கடைசி செஷன்க்கு டிஃபர் பண்ண சொல்லிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க..’ என்றார்.

பிறகு தனக்கு முன்னாலிருந்த கேஸ் கட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரையும் பார்த்தார். ‘சொல்லுங்க.’

செல்வம் ராசம்மாள் அன்று காலையில் தன்னிடம் கூறியவற்றை சுருக்கமாக கூறிமுடித்தான். ‘இனியும் ராசேந்திரனோட வாழறதுல அர்த்தமில்லன்னு ராசம்மா நினைக்கறா. அதான் மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் ராசேந்திரன்கிட்டருந்து விவாகரத்து வேணுங்கறதுல பிடிவாதமா இருக்கா.’

ராசம்மாள் குறுக்கிட்டு, ‘அது பிடிவாதம் இல்ல செல்வம். உறுதியான, நியாயமான முடிவு. அவர் எனக்கு இந்த ஒரு வருசமா செஞ்சிக்கிட்டிருக்கற துரோகத்துக்கு ஏத்த முடிவு.’ என மோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார்.

அவளுக்கும் ராசேந்திரனுக்கு திருமணம் என்ற பேச்சு வந்ததுமே மோகன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றவர் அவர். நாடாரிடமும் செல்வத்திடமும் பலமுறை வேண்டிக் கேட்டார். ‘இது சரியா வரவே வராது நாடார். எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி செஞ்சா எப்படி? அவன பத்தி நா இதுவரைக்கும் கேட்டது எதுவுமே சரியில்லை. வீட்ல தங்க கம்பியாட்டம் செல்வம் இருக்கும்போது எதுக்கு இந்த விஷப்பரீட்சை?’ என்றார்.

‘என்ன மோகன் நீங்க? எனக்கு தெரியாததா? இவ தான் சின்ன பிள்ளையாட்டமா பிடிவாதம் பிடிக்கான்னா.. இவ அம்மாவும் சேந்துக்கிட்டில்ல நிக்கா? எவ்வளவோ சொல்லி பாத்தாச்சி. அந்த பய தொலி நிறத்துலல்ல சொக்கிப்போய் நிக்காக ஆத்தாளும் பொண்ணும்? எப்படியோ போங்க.. பட்டாத்தான் தெரியும்னு விட்டுப்போட்டேன். நீங்களும் இத மறந்துருங்க. நீங்க இப்படி பேசினீங்கன்னு அந்த பய காதுல விழுந்துதுன்னா ஒங்களுக்கு எதிரா நம்ம ராசம்மாவையே திருப்பிவிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. என்ன நடந்தாலும் ஒங்கள நா இழக்க தயாராயில்ல மோகன்.’ என்ற நாடாரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அன்று வாயை மூடிக்கொண்டவர்தான் மோகன்.

இந்த முடிவுக்கு ராசம்மாள் வருவாள் என்பது அவருக்கு தெரிந்திருந்ததுதான். ஆனால் அதற்கு இத்தனைக் காலம் பிடித்ததே என்றுதான் நினைத்தார்.

‘எந்த க்ரவுண்ட்ல டிவோர்ஸ் கேக்கலாம்னு இருக்கேம்மா?’

‘Adultery, Desertion and Cruelty, Domestic violence ன்னு எல்லா அவய்லபிள் க்ரவுண்ட்லயும் கேக்கலாம்னு இருக்கேன் அங்கிள்.’

மோகனும் செல்வமும் வியப்புடன் அவளையே பார்த்தனர்.

பிறகு மோகனின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. ‘ரொம்ப தயாராத்தான் வந்துருக்க போலருக்கு. சரி. இதுக்கெல்லாம் எவிடென்ஸ் கேப்பாங்களேம்மா..’

ராசம்மாள் தலையை அசைத்தாள் தெரியும் என்றவாறு.

‘இருக்கு அங்கிள். ராசேந்திரன் இதுவரைக்கும் எத்தன பொம்பளைங்களோட extra marital relationship வச்சிருந்தார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்கு. அவங்கள்ல எத்தனை பேருக்கு, எவ்வளவு பணத்த நம்ம கம்பெனியிலருந்து செக் மூலமா குடுத்துருக்கார்ங்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் செல்வம் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள கண்டுபிடிச்சி குடுப்பார். Cruelty I mean Domestic violenceஐ நிரூபிக்கறதுக்கு என் பெர்சனல் டாக்டரே சாட்சி. நான் அவர்கிட்ட அப்பப்போ ட்ரீட்மெண்ட்  எடுத்திருக்கற விஷயத்த அப்பாக்கிட்ட கூட இதுவரைக்கும் சொன்னதில்ல. தேவைப்பட்டா அதையும் கோர்ட்ல சொல்றதுக்கு நான் தயார் அங்கிள். அப்புறம் போன ரெண்டு மாசமா நா பலதடவை முயற்சி செஞ்சும் என்னையோ என் மகனையோ வந்து பாக்காதது desertion இல்லாம வேறென்ன இருக்கமுடியும் அங்கிள்?’

மோகன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘நீ சொன்ன Adultery groundஐ ப்ரூஃப் செஞ்சாலே போறும்மா.. ராசேந்திரன் ஒன்னையும் குழந்தையையும் ரெண்டு மாசம் பாக்க வராம இருந்தத வச்சி Desertionனு சொல்ல முடியாது. அதுக்கு கொறஞ்சது மூனு வருசமாவது ஆயிருக்கணும். ஆனா இதெல்லாம் ராசேந்திரன் ஒன் டிவோர்ஸ் பெட்டிஷன அப்போஸ் செஞ்சாத்தான். அவர் இத எதுக்கலன்னா ம்யூச்சுவல் கன்செண்ட் க்ரவுண்ட்ல டிவோர்ஸ் வாங்கிரலாம். நான் அவர்கிட்ட சமாதானமா பேசி பாக்கேன். ஒத்துவரலைன்னா மிரட்டி பணிய வச்சிரலாம். அவர் ஒங்க கம்பெனி கணக்குலருந்து அளவுக்கும் மீறி கையாடல் செஞ்சிருக்கற விஷயம் நம்ம ஆடிட்டர் வழியா எனக்கு நல்லாவே தெரியும்.’

‘அது போறும் அங்கிள்.’ என்ற ராசம்மாள் தயக்கத்துடன் செல்வத்தைப் பார்த்தாள் நீ சொல்லேன் என்பதுபோல்.

செல்வம் புன்னகையுடன், ‘சார்.. ராசம்மாவுக்கு இப்பருக்கற பேர் பிடிக்கலையாம்..’
மோகன் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘அதனால?’

‘ஆமா அங்கிள்.. இந்த பேர மாத்தி ராசி இல்லன்னா ராஜின்னு வச்சிக்கலாம்னு பாக்கேன்.’ என்றாள் ராசம்மாள்.

மோகன் புன்னகையுடன், ‘புரியுதுமா. செஞ்சிரலாம். பெரிய ஃபார்மாலிட்டீஸ்னு ஒன்னுமில்லை. ஆனா அத டிவோர்ஸ் கிடைச்சதும் செஞ்சிக்கலாம். தேவையில்லாத கன்ஃப்யூஷன் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.’ என்றவாறு இருவரையும் பார்த்தார். ‘இவ்வளவுதானா இன்னும் வேற ஏதாவது இருக்கா? என்ன செல்வம்?’

‘இருக்கு அங்கிள்.’ என்றாள் ராசம்மாள்.

‘என்ன’ என்பதுபோல் அவளைப் பார்த்தார் மோகன்.

‘ராசேந்திரனும் மாமாவும் வித்த அவ்வளவு ஷேரையும் நான் வாங்கணும்னு இருக்கேன். அதுக்கு ஒங்க ஹெல்ப் வேணும்.’

மோகன் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தார். ‘என்னம்மா சொல்ற? நீ வாங்க போறியா?’

‘ஆமா அங்கிள். அதுக்கு தேவையான பணத்த  அப்பாகிட்டருந்துதான்  இப்போதைக்கு வாங்கப் போறேன்னாலும் அத கடனாத்தான் வாங்கப் போறேன். சோ, அதுக்கு தேவையான டாக்குமெண்ட்சையும் நீங்கதான் ப்ரிப்பேர் பண்ணணும். இந்த மாசத்துலருந்து எனக்கு கிடைக்கப்போற சம்பளத்துலருந்து அப்பாக்கிட்ட வாங்கன கடன அடைச்சிருவேன்.’

மோகன் வியப்புடன் பார்த்தார். ‘என்னம்மா இது புதிர் மேல புதிரா போடறே?’

'ஆமா அங்கிள். நாந்தான் இன்னையிலருந்து நம்ம கம்பெனியோட எம்.டி. மாசா மாசம் ஒரு லட்சம் சம்பளம்கற கண்டிசனோட..’ என்றவள் செல்வத்தைப் பார்க்க அவனோ, ‘என்னது ஒரு லட்சம் சம்பளமா?’ என்று போலியான அதிரிச்சியில் பார்க்க ராசம்மாளும் மோகனும் ஒரு சேர சிரித்தனர்.

தொடரும்..



17.7.06

சூரியன் 109

ரவியும் மஞ்சுவும் அவனுடைய பழைய அலுவலகத்தில் நுழைந்தபோது அவன் முற்றிலும் எதிர்பார்த்திராத வரவேற்பு கிடைத்தது.

அவனுக்கு பதிலாக கிளைக்கு பொறுப்பேற்றிருந்த மேலாளர் ரவிக்கு  பரிச்சயமில்லாதிருந்தவர் என்பதால் அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சி.ஜி.எம் ஃபிலிப் சுந்தரம் சற்று முன்பு தொலைப்பேசியில் அறிவுறுத்தியது நினைவுக்கு வர அவனையும் மஞ்சுவையும் புன்னகையுடன் வரவேற்று உபசரித்தார்.

‘ஒங்கள இதுக்கு முன்னால சந்திச்சிருக்கலன்னாலும் ஒங்களபத்தி இந்த மூனு மாசமா தெரிஞ்சிக்கிட்டேன் மிஸ்டர் ரவி. But don’t worry, my opinion about you is immaterial as far as this enquiry is concerned. We take so many risky decisions in our career as a branch manager. Some succeed, some fail. While successful decisions are noticed by only a very few wrong decisions are noticed by everyone. நானும் ஒங்கள மாதிரி எல்லாவித பிராஞ்சுகள்லயும் வேலை செஞ்சிருக்கேன். நீங்க இங்க செஞ்ச மாதிரி தப்புகளையும் செஞ்சிருக்கேன். கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் செஞ்ச எந்த தப்பாலயும் பேங்குக்கு நஷ்டம் ஏற்படல. அதனால எந்த என்க்வயரிலயும் மாட்டிக்கல. இருந்தாலும் இப்போதைய ஒங்க மனநிலை எனக்கு புரியுது மிஸ்டர் ரவி. அதனால ஒங்களுக்கு எந்த டாக்குமெண்ட்லாம் தேவைன்னு சொல்லுங்க.. நான் காப்பீஸ் எடுத்து வைக்கிறேன்.’

ரவி நன்றியுடன் அவரைப் பார்த்தான். தான் கையோடு கொண்டுவந்திருந்த லிஸ்ட்டை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அதை பெற்றுக்கொண்டு தன் முன்னாலிருந்த கோப்பில் வைத்துக்கொண்டார்.

ரவி சற்று தயக்கத்துடன், ‘இத்தோட நான் சில ஃபைல்சையும் இங்கயே ஒக்காந்து படிச்சி குறிப்பெடுத்துக்கறதுக்கு ஒங்க பர்மிஷன் வேணும். அதுக்கும் செப்பரேட்டா ஒரு ரிக்வெஸ்ட் எழுதி கொண்டு வந்திருக்கேன்.’ என மேலாளர் யோசனையுடன் அவனுடைய கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தார்.

இதைப் பற்றி சி.ஜி.எம் ஒன்றும் தன்னிடம் கூறவில்லையே என்று சிறிது நேரம் யோசித்தார்.

‘ஒங்களுக்கு ஏதும் சிரமம் இருந்தா நீங்க ஃபிலிப் சார கூப்ட்டு கேட்டுட்டு பெர்மிட் பண்ணா போறும். சார் இப்ப ஒருவேளை கமிட்டி மீட்டிங்ஸ்ல இருப்பார்னு நினைக்கிறேன். அதனால நீங்க கேட்டு வைங்க. நானும் மஞ்சுவும் அப்புறமா வரோம்..’ என்றவாறு ரவி எழுந்திருக்க மேலாளர் அவனை அமரும்படி சைகைக் காட்டினார்.

‘இந்த ஃபைல்ஸ் எல்லாமே ஒங்க என்க்வயரி சம்பந்தப்பட்டதா இருக்கும்னுதான் தோனுது. அதனால நீங்க படிக்கறதுக்கு இந்த ஃபைல்ஸ் எல்லாம் தரேன். ஆனா ஃபைல்ஸ்லருக்கற எந்த பேப்பரையும் நீங்க அதுலருந்து எடுத்துராம இருந்தா போறும்.’

ரவி மஞ்சுவைப் பார்த்தான். அவள் சரியென்பதுபோல் தலையை அசைத்தாள். ‘Don’t worry. I will not remove any paper from the files. I will simply read and record in this portable recorder. I hope you don’t mind.’

மேலாளர் புன்னகையுடன், ‘ரொம்ப ஹைடெக்கா இருக்கீங்க. சரி. ஃபைல்ச கொண்டுவந்து அடுத்த கேபின்ல வைக்க சொல்றேன். நீங்க படிச்சி முடிச்சதும் சொல்ங்க.’ என்றவாறு தன்னுடைய சிப்பந்தியை அழைக்க ரவியும் மஞ்சுவும் அவருக்கு நன்றி செலுத்திவிட்டு அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்து சற்று நேரத்தில் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட கோப்புகளை படிக்க ரம்பித்தனர்.

*******

சிவகாமி சீனிவாசனையும் மைதிலியையும் மாறி, மாறி பார்த்தாள்.

இவாக்குள்ள மறுபடியும் பிரச்சினை போலருக்கே. இவன் கால ஒடச்சிக்கிட்டு நிக்கற நேரத்துல இந்த பொண்ணோட ஆறுதலான பேச்சும் இல்லாம போனா இவன் மனசு ஒடஞ்சி போயிருவானே..

மைதிலியின் கலங்கிய கண்கள் அவளை என்னவோ செய்ய இதுக ரெண்டையும் செத்த நேரத்துக்கு தனியா விட்டுட்டு போவோம். ஒருக்கா ரெண்டும் பேசி ஏதாவது முடிவுக்கு வந்தாலும் வருங்க என்று நினைத்தாள்..

‘என்னடீம்மா வாடிப் போயிருக்கே? ரெண்டு இட்லியும் சட்னியும் சாப்ட்டு ஒரு வா காப்பியும் குடிச்சேன்னு வச்சிக்க, மொகம் தெளிச்சியாயிரும். சீனி.. நோக்கும் எடுத்து வைக்கவா?’

சீனி வேண்டாம் என்று தலையை அசைத்தான். ‘வேணாம் மாமி.. எனக்கு பசியில்லை. எனக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா போறும்னு தோணுது. நான் கீழ அப்பா ரூம்ல கொஞ்ச நேரம் படுக்கலாம்னு பாக்கறேன்.’

பிறகு திரும்பி மைதிலியைப் பார்த்தான்.

‘You look terribly tired yar.. பிரேக்ஃபாஸ்ட் ஒன்னும் செஞ்சிருக்கமாட்டேன்னு நினைக்கறேன். மாமி கையால சூடா ஒரு காப்பி குடிச்சிட்டு போ.. You will feel alright. Thanks for everything.’

சோபாவிலிருந்து எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் சோபாவிலேயே சோர்ந்து போய் விழுந்தவனை ஓடிவந்து பிடித்தாள் சிவகாமி மாமி. மைதிலி செய்வதறியாது அமர்ந்திருந்தாள்.

‘டேய், டேய்.. இப்ப என்ன அவசரம்? செத்த நேரம் அப்படியே ஒக்காந்து இவ கிட்ட பேசிண்டிரு. நா காப்பிய கலந்து கொண்டாரேன்..’ என்ற மாமி மைதிலியை பார்த்து இவனாண்ட பேசிண்டிரு என்று கண்ணால் சைகை காட்டியவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தாள்.

மைதிலி கண்களை மூடியவாறு சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்த சீனியையே பார்த்தாள். இவன் மனசுல என்னத்த நினைச்சிண்டு அந்த வார்த்தைய சொன்னான்? இவன மறக்கவும் முடியாம அவன் கேக்கறதுக்கு ஒத்துக்கவும் முடியாம நா படற அவஸ்தை இவனுக்கு தெரியுதா? எவ்வளவு ஈசியா I need time to sort out my lifeனு சொல்லிட்டான்.  அதுக்கு என்ன அர்த்தம்? இன்னைக்கி இது தெரியாம இங்கருந்து போப்படாது..

‘என்ன சீனி.. என் கேள்விக்கு நீ இன்னும் பதில் தரலை.’

சீனிவாசன் அவளை பார்த்தான். எங்கிட்டருந்து என்ன பதில நீ எதிர்பார்க்கறே? What do you want me to say? I want you to be with me, forever.. Can you do that? Will your parents agree to that? They can’t. I know that. That’s why I thought..

‘என்ன சீனி, என்ன யோசிக்கறே? I need time to sort out my lifeனு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்? என்னைய மறந்துட்டு சென்னைக்கே போயிரலாம்னா? நீ சென்னைக்கு போகத்தான் வேணும்.. I agree.. ஆனா என்னைய மறந்துரமுடியுமா ஒன்னால? முடியும்னா சொல்லு. We will part as friends.. முடியாம இருக்கறச்சே முடியும்னு நினைச்சிக்கிட்டு ஒன்னையே நீ டார்ச்சர் பண்ணிக்காத. வெக்கத்த விட்டு சொல்றேன் சீனி.  என்னாலயும் இந்த செப்பரேஷன தாங்க முடியும்னு தோணலை.. I will also come with you.. I don’t think it will be that difficult to get a job there. என்ன சொல்ற?’

சீனிவாசன் கண்களை மூடி அமர்ந்திருந்தான். She has decided to leave everything in her life for my sake. ஆனா அதுக்கு ஒத்துக்குறது சரியா? அவ அப்பா, அம்மாவால இந்த செப்பரேஷன தாங்கிக்க முடியுமா? நீ ஏன் மைதிலிய எங்களுக்கு விட்டுத் தரப்படாதுன்னு கேட்டாரே..

‘என்ன சீனி, ஏதாச்சும் சொல்லேன். இப்படியோ ஒக்காந்திருந்தா என்ன அர்த்தம்?’

சீனி கண்களை திறந்து அவளைப் பார்த்தான்.

அவனுடைய கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் மைதிலியை சங்கடப்படுத்தியது. எழுந்து அவனருகில் சென்றமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றினாள். இருவரும் அப்படியே மவுனமாய் அமர்ந்திருப்பதை பார்த்தவாறே சமையலறையிலிருந்து காப்பி கோப்பைகளுடன் வந்த சிவகாமி உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் கையிலிருந்த கோப்பைகளை அவர்களிடம் நீட்டினாள்.

‘டேய் சீனி.. முதல்ல காப்பிய குடி. ஒங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வர்றது சகஜம்தானடா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஒங்கம்மா கூப்ட்டாலும் கூப்டுவா. அவ இவ்வளவு நேரம் கூப்டாம இருந்ததே ஜாஸ்தி.’

இருவரும் மவுனமாக காப்பியை அருந்த சிவகாமி அவர்கள் இருவரையும் சில நொடிகள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.

ஜோடிப் பொருத்தம் நன்னாத்தான் இருக்கு. சரோஜாவுக்கும் இவா ரெண்டு பேரையும் சேர்த்துவச்சிட்டா என்னன்னு தோணும்னு நேக்கு தெரியும். ஆனா மாதவன் என்ன சொல்வானோன்னுதான் யோசிக்கறா போலருக்கு.

அதுக்கு முன்னால வத்ஸோட கல்யாணத்த முடிச்சிடணும். அது என்னடான்னா ஆம்பள மாதிரி பேண்டையும் சர்ட்டையும் போட்டுண்டு கல்யாணத்த பத்தன சிந்தனையே இல்லாம சுத்திக்கிட்டிருக்கு. மெட்றாஸ் போன நேரம் ஒரு வரண் குதிர்ந்து வந்தா நல்லாருக்கும்..

ஹ¥ம்.. நாம ஒன்னு நினைக்க பகவான் என்ன நெனச்சிண்டிருக்காரோ..

அவர்கள் மூவர் மவுனத்தையும் கலைப்பதுபோல் ஹாலில் இருந்த தொலைப்பேசி அலற மூவரும் திடுக்கிட்டு அதை பார்த்தனர்.

சிவகாமி சென்று எடுத்தாள். ‘யாரு சீனியா? இருக்கான். நீங்கள்ளாம் சேஃபா போய் சேர்ந்தேளோல்லியோ.. சரி.. இதோ வந்துண்டே இருக்கான்.’ ஒலி வாங்கியை கையால் பொத்திக்கொண்டு சீனியை பார்த்தாள். ‘டேய் ஒங்கம்மா.. ஒன்னால இங்க வரமுடியுமா?’

சீனிவாசன் சிரமப்பட்டு எழுந்து மைதிலியின் தோள்களை பற்றியவாறே தத்தி தத்தி வந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘Hi Ma.. How are you?’ என்றான்.

சிவகாமி மைதிலியைப் பார்த்து இங்க வா என்று சைகைக் காட்டி தன்னுடன் அழைத்து சென்றாள்..

‘இல்ல மாமி. I want to be here for three more weeks. நான் அப்பாவோட பி.ஏ கிட்ட சொல்லி இந்த வீட்ட இன்னும் ஒரு மாசத்துக்கு ரீட்டெய்ண் பண்ணிக்கறதுக்கு பர்மிஷன் வாங்கிக்கறேன். என்ன மம்மி? Yes, I need some time to think about my future. My friendship with Mythili.. ஆமாம் மம்மி.. Please give me this.. I want to be alone.. அப்பாக்கிட்ட சொல்லி நீதான் பர்மிஷன் வாங்கி தரணும்.. இந்த மாச கடைசியில மெட்றாஸ் வந்துருவேன்..’

எதிர்முனையில் சரோஜா சம்மதிக்க தயங்கியும் சீனிவாசன் பிடிவாதமாக நிற்கவே வேறு வழியில்லாமல் சம்மதிக்க அவன் நிம்மதியுடன் இணைப்பைத் துண்டித்தான்..

தொடரும்..



13.7.06

ஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)

ஒரு லொட, லொட சைக்கிள் ரிக்ஷ¡வில் கவுண்டரும் செந்திலும்..

செந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.

கவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.

ரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.

கவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..  

(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)

கவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)

செந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டரை பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது?

கவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..

செந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..

கவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப?

செந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..

கவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா? ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க  கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )

கவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க?

செந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)

(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)

செந்: வாங்கண்ணே.. பாத்தீங்களா? நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..

கவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற?.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற?

செந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு?.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )

கவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..

செந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா?

கவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா? போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..

கவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்ல வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..

(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ?’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)

கவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..

ஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)

செந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...

கவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான?

ஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..

செந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு? அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)

பேட்டி தொடர்கிறது..

ஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..

கவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா? (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா?

(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்று தலையை அசைக்கிறார்.)

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)

ஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)

பேட்டி தொடர்கிறது..

(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)

பேட்டியின் இறுதியில்..

மேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க

கவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது? அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல?

செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....

(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )



நிறைவு..




********