29.9.06

சூரியன் 127

தன்னுடைய மடிக் கணினியில் தான் தயாரித்து வைத்திருந்த குறு அறிக்கையை (Brief Report) உரக்க வாசித்தான் ரவி பிரபாகர்.

எதிரில் அமர்ந்திருந்த மஞ்சு அவன் வாசித்து முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தாள்.

அவன் நடந்தவற்றை விவரித்த விதம், தான் செய்தது தவறுதான் என்றாலும் அதை எந்தவித உள்நோக்கத்துடனும் செய்யவில்லை என்பதை நாசுக்காக, அதே சமயம் தெளிவாக கூறியிருந்த பாங்கு.. மஞ்சுவிற்கு பிடித்திருந்தது..

ரவி வாசித்து முடித்ததும் உண்மையான மகிழ்ச்சி முகத்தில் தெரிய அவனுடைய கரங்களைப் பற்றி குலுக்கினாள். ‘ரொம்ப நல்லாருக்கு ரவி.. அரை மணி நேரத்துக்குள்ள எவ்வளவு அழகா தயாரிச்சிட்டீங்க.. You are really superb Ravi.. I am proud of you..’

இதை எதிர்பாராத ரவி வெட்கத்துடன் அவளைப் பார்த்தான். ‘ஏய் உண்மையாவா சொல்றே.. இல்ல வஞ்சகப் புகழ்ச்சியா?’

மஞ்சு பொய்க்கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கினாள்.. ‘சீ.. இதான வேண்டாங்கறது.. நா எதுக்கு வஞ்சகப் புகழ்ச்சியா பேசணும்.. I really mean it.. You deserve a free and frank enquiry Ravi.. பக்கத்துவீட்டு மாமா வந்ததும் நான் இதத்தான் அவர்கிட்ட கேக்கப் போறேன்.. அவர் இந்த விஷயத்துல பயங்கர கில்லாடின்னு மாமி பல தடவ சொல்லியிருக்காங்க.. அதனாலதான் நான் மாமாவ கெஞ்சி, கூத்தாடி இதுக்கு சம்மதிக்க வச்சேன்..’

அவளுடைய குரலிலிருந்த உண்மையான, அப்பழுக்கில்லாத கரிசனம் அவனுடைய கண்களை குளமாக்கியது.. இப்படியொரு வைரம் என் பக்கத்துல இருந்திருக்கு.. கண்டுக்காம.. இடியட்டாட்டம் இவள ட்ரீட் பண்ணிருக்கேனே.. How stupid!

‘என்ன ரவி என்னையே பாக்கீங்க? பாராட்டறதாருந்தா பாராட்டிருங்க..’ என்றாள் மஞ்சு கேலியுடன்..

ரவி மேசையின் குறுக்கே கரங்கள நீட்டி அவளுடைய இரண்டு கரங்களையும் பாசத்துடன் பற்றினான்... ‘உண்மையா சொல்றேன் மஞ்சு.. இனி எனக்கு என்ன ஆனாலும் ஒன்னெ மட்டும் இழக்கவே மாட்டேன்.. I was a fool to ignore you for once.. I won’t do that again.. Promise..’

மஞ்சு பதற்றத்துடன் அவனைப் பார்த்தாள்.. ‘ஏய்.. என்ன இது சின்ன பிள்ளையாட்டம்? இப்ப அதுவா முக்கியம்? நாம கொண்டு வந்த எல்லா டாக்குமெண்ட்ஸையும் கரெக்டா லிஸ்ட பண்ணிருக்கமான்னு பாக்க வேணாம்? நீங்க எழுதியிருக்கற ரிப்போர்ட்ல இருக்கறா மாதிரியே கோர்வையா டாக்குமெண்ட்சையும் அரேஞ் பண்ண வேணாமா? நீங்க அதப்பாருங்க.. நா சமையல பாக்கறேன்.. சோறு மட்டும்தான் ரெடியாருக்கு.. You carry on.. அரை மணியில சாப்பாடு ரெடியாயிரும்.. இப்பவே மணி மூனாயிருச்சி..’

இருக்கையிலிருந்து எழுந்து சமையலறையை நோக்கிச் சென்ற தன் மனைவியையே பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘ஏய் மஞ்சு முதல்ல எனக்கு காப்பி போட்டு குடு.. அப்பத்தான் சுருசுருப்பா வேலையாவும்..’ என்றான்.

சமையலறை வாசலில் நின்று திரும்பி அவனைப் பார்த்த மஞ்சு சிரித்தாள்.. ‘ஐஸ் வைக்கும்போதே நெனச்சேன்.. இதோ கொண்டு வரேன்.. நீங்க உங்க வேலைய கண்டினியூ பண்ணுங்க..’

அவள் தலை மறைந்ததும் தன் எதிரிலிருந்த அனைத்து ஆவணங்களையும் அதன் மேல் குறித்திருந்த எண்கள் படி வரிசைப் படுத்தி தான் தயாரித்திருந்த அறிக்கையினுடன் ஒப்பிடத் துவங்கினான்..

அடுத்த அரை மணியில் நேரம் போவதே தெரியாமல் அவனுடைய வேலையில் மூழ்கிப்போக சமையலறையில் பம்பரமாய் சுழன்று பகலுணவு வேலையை முடித்தாள் மஞ்சு..

***

‘மாப்பிள்ளை எதுக்கு மெட்றாஸ்ல இன்னும் நாலு நாளைக்கு தங்கணுமாம்.. கேட்டியா?’

சமையலறையில் வேலையாய் இருந்த செல்வி அங்கிருந்தே பதிலளித்தாள். ‘வேறென்ன? எல்லாம் அந்த ராசம்மா வேலைதான்.. அவங்களுக்கும் அவங்க புருசனுக்கும் ஒத்து போலையாம்.. விவாகரத்து செஞ்சிக்கப் போறாங்களாம்.. அதுக்கு வக்கீல பார்த்து ஏதோ ஏற்பாடு பண்ணணுமாம்.. அதான்..’

செல்வியின் தாயார் ரத்தினம்மாள் நிமிர்ந்து சமையலறையைப் பார்த்தாள். ‘அதுக்கு மாப்பிள்ளை எதுக்கு?’

செல்வி புன்னகையுடன் சமையல்கட்டிலிருந்து வெளியேறி தன் தாயைப் பார்த்தாள். ‘ஒருவேளை இவர கட்டிக்கலாம்னு ப்ளானோ என்னவோ..’ என்றாள் கேலியுடன்.

ரத்தினம்மாள் பதற்றத்துடன் தன் மகளைப் பார்த்தாள். ‘ஏய் என்ன ஒளர்றே? ரொம்ப சாவகாசமா சொல்றே?’

செல்வி வாய்விட்டு சிரித்தாள்.. ‘ச்சீ.. சும்மா சொன்னேம்மா.. அந்த அளவுக்கு விட்டுருவேனா?’

‘நல்ல வேடிக்கைடி.. இது வேடிக்கையான விஷயமா? சரி.. அதிருக்கட்டும்.. உண்மைய சொல்லு.. மாப்பிள்ளை இன்னும் அந்த பொண்ணையே நினைச்சிக்கிட்டிருக்காரா என்ன? ஒங்கிட்ட நல்லபடியாத்தான நடந்துக்கறார்?’

செல்வி தன் தாயருகில் வந்து அமர்ந்தாள். ‘அம்மா இவர் எப்படியோ அந்த ராசி அக்கா அந்த மாதிரி பெண் இல்ல.. அவங்க ரேஞ்சே தனி.. செல்வம் அத்தாந்தான் அவங்கள விரும்புனாரே தவிர அவங்க இவர விரும்பினதே இல்லையாம்.. அதுவுமில்லாம சிலுவை மாணிக்கம் மாமா ரொம்பவும் நல்லவர்மா.. அவர் நிச்சயமா இப்படியெல்லாம் நடக்க விடவே மாட்டார்.. ஒனக்கு தெரியுமா அத்தான் இங்க நடத்தற கடை என் பேர்லதான் மாமா ரிஜிஸ்தர் பண்ணி குடுத்தார்.. அந்த நன்றி எனக்கு எப்பவுமே இருக்கு.. இவர் எத்தன நாள் அங்கருந்தாலும் நீங்க நினைக்கறா மாதிரி ஒன்னுமே நடக்காது.. ராசியக்கா புருஷன் இருக்காரே அவரும் சரி அவரோட அப்பாவும் சரி.. சரியான ஃப்ராடுங்க.. அந்த ஆளோட ராசியக்கா ஒரு வருசம் குடும்பம் நடத்துனதே ஆச்சரியம்தான்..’

ரத்தினம்மாள் வியப்புடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி சொல்றே.. ஏன், எதுக்கு அப்படி சொல்றே?’

செல்வி குரலை இறக்கி, ‘அந்தாளுக்கு சினிமா நடிகைங்க சவகாசமெல்லாம் இருக்காம்.. தொடர்ந்து மாசக் கணக்கா அவளுக பின்னாலயே சுத்திக்கிட்டிருப்பாராம்.. வீட்டுக்கே வரமாட்டாராம்..’

ரத்தினம்மாளின் முகம் அருவருப்புடன் சுருங்கியது.. ‘ச்சீ.. உண்மையாவா?’

செல்வி எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். ‘ஆமாம்மா.. ராசியக்காவா இருக்கப் போயி பொருத்துக்கிட்டு இருந்திருக்காங்க.. நானாருந்தா...’

‘நீயாருந்தா?’

‘அந்தாளயும் அந்த சிறுக்கியையும் ஒரே வெட்டா வெட்டிப்போட்டுருப்பேன்..’

‘வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருப்பியாக்கும்.. போடி இவளே.. வேலையப் பாரு..’

சற்று நேரம் இருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கிப் போக அந்த இடம் அமைதியாய் போனது..

அதைக் கலைப்பதுபோல் தொலைப்பேசி ஒலிக்க கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடி எடுத்தாள் செல்வி..

‘செல்வி நா ராசம்மா பேசறேன்..’

வியப்புடன் ஒலிவாங்கியை பொத்திக்கொண்டு தன் தாயைப் பார்த்தாள், ‘அம்மா ராசியக்கா..’ என்று வாயை அசைத்தாள்.

‘சொல்லுங்கக்கா.. ஒங்களுக்கு நூறாயுசு.. சொல்லுங்க..’

‘நூறாயுசா.. எனக்கா.. அப்ப என்னெ பத்தி  சித்தியும் நீயும் ஏதோ பேசிக்கிட்டிருந்திருக்கீங்க.. சொல்லு என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?’

செல்வி வாய்விட்டு சிரித்தாள்.. ‘இல்லக்கா.. சும்மாத்தான்.. செல்வம் அத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூப்ட்டு ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாலஞ்சி நாள் ஆகும்னு சொன்னாங்க.. அதப்பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்.. நீங்க சொல்லுங்க..’

எதிர் முனையில் எப்படி சொல்வதென தயக்கத்தில் ராசம்மாள் சில விநாடிகள் தயங்க, ‘என்னக்கா சத்தத்தையே காணோம்.. ஏதாவது சீரியசான விஷயமா.. எப்படி சொல்றதுன்னு யோசிக்கறாப்பல இருக்கு?’

ராசம்மாளின் சிரிப்பொலி தொலைப்பேசி வழியாக செல்வியின் செவிகளை நிறைத்தது.. ‘ஏய் செல்வி இருந்தாலும் நீ பயங்கரமான ஆள்தான்.. என் வேலைய ஈசியாக்கிட்டே.. நா இப்ப சொல்றத கவனமா கேட்டுட்டு.. யோசிச்சி ஒன் முடிவ சொல்லு.. என்ன?’

செல்வி திரும்பி தன் தாயைப் பார்த்தாள்.. ‘என்னவாம்?’ என்ற கேள்விக்கு தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு.. ‘என்ன விஷயமாருந்தாலும் தயங்காம சொல்லுங்கக்கா..’ என்றாள்.

அடுத்த சிலநிமிடங்கள் ராசம்மாள் சொல்வதை தடை செய்யாமல் கேட்டுக் கொண்டு நிற்க ரத்தினம்மாள் விவரம் புரியாமல் எழுந்து சென்று தன் மகளுக்கருகில் நின்று ஒட்டுக் கேட்க முயன்றாள்..

‘என்ன நா சொன்னது விளங்கிச்சா.. இந்த நேரத்துல நீயும் செல்வமும் எங்கூடவே இருந்தா நல்லதுன்னு நினைக்கேன்.. நம்ம கம்பெனியில ராசேந்திரன் இருந்த இடத்துல செல்வம் இருக்கணும்னு அப்பாவுக்கும் நினைக்கார். ஒன் பேர்லருக்கற கடைய இப்ப என்ன மார்க்கெட் நிலவரமோ அந்த வெல குடுத்து நம்ம கம்பெனி வாங்கிக்கிரும். நீ அந்த பணத்த நம்ம கம்பெனியில இன்வெஸ்ட் பண்றதானா பண்ணலாம்.. இல்ல வேறெங்கயாவது பேங்க்ல போட்டு வச்சிக்கறதானாலும் வச்சிக்கலாம்.. ஒன்னோட படிப்புக்கு ஏத்த பொசிஷனா நானே நம்ம கம்பெனியில ஒனக்கு போட்டு தாரன்.. இப்ப ஏதும் சொல்ல வேணாம்.. ஆற அமர யோசிச்சி சித்திக்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லு.. என்ன? நா வச்சிடறேன்..’

செல்வி அமைதியாகிப் போன ஒலிவாங்கியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அதை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்.

‘என்னடி.. என்ன அப்படி மலைச்சிப் போயி நிக்கறே.. என்னவாம்?’

‘ஒன்னுமில்லம்மா.. என்னெ கொஞ்சம் யோசிக்க விடுங்க.. அப்புறமா சொல்றேன்.. இப்ப வேலைய பார்ப்போம்..’ என்றவாறு செல்வி சமையலறையை நோக்கி செல்ல ரத்தினம்மாள் என்னாச்சி இவளுக்கு என்று அவளையே பார்த்தாள்..

தொடரும்..


25.9.06

சூரியன் 126

மாதவன் வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் முடிவுற்றதும் நேரே தன்னுடைய அறைக்கு திரும்பி கடந்த ஒரு மணி நேரமாக வங்கியின் கடந்த மூன்றாண்டு கால பொருளாதார அறிக்கைகளை ஆராய்ந்துக்கொண்டிருந்தார்.

தனக்கு முன்பு இருந்த முதல்வர் வர்த்தகம் செய்வதில் படு சூரராக இருந்திருக்கிறார் என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்கு ஈடாக வர்த்தகத்தை நடத்திச் செல்வதே சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தார்.

அதுதான் தன்னுடைய முதல் இலக்கு என்று குறித்துக்கொண்டார். நல்ல வேளையாக அவர் பதவியேற்ற நேரம் புது நிதியாண்டு துவங்கி நாற்பத்தைந்து நாட்களே கடந்திருந்தன. எதிர் வரும் வருடத்திற்கென முந்தைய முதல்வர் குறித்திருந்த இலக்கை நிதியாண்டின் அரையாண்டிற்குள்ளாகவே அடைந்தால் மட்டுமே அவருடைய கடந்த வருட வெற்றியை தம்மால் முறியடிக்க முடியும் என்று நினைத்தார்.

அடுத்து அதற்கு தாம் என்னென்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கலானார்.

முதல் முதலாக அவருக்கு தேவைப்பட்டது தனக்கு வங்கியின் வர்த்தகத்தைக் குறித்து உடனடியான (Instant)  அதே சமயம் நம்பத் தகுந்த (Dependable) புள்ளி விவரங்கள்..

அவருக்கு முன்னாலிருந்த அறிக்கைகளின் மென் நகல்கள் (Soft copy) கிடைத்தால் அதை தன்னுடைய மடிக்கணினியில் சேர்த்துக்கொள்ளலாமே என்று நினைத்த மாதவான் காரியதரிசி சுபோத்தை இண்டர்காமில் அழைத்தார்.

அவருடைய தேவையை கேட்ட சுபோத் சங்கடத்துடன் நெளிந்தான்.

‘என்ன சுபோத்.. If you don’t have it tell me so.. Don’t feel embarrassed..’

சுபோத் தயக்கத்துடன், ‘Yes Sir, I don’t have it.’ என்றான்.

‘Will anyone in the Bank have it? EDP? Or Accounts?’

‘No Sir.. Our computerisation is not uptodate. We still collect data either over phone or by emails from the branches.’

‘Phones and emails?’ என்று சிரித்தார் மாதவன். ‘Which century are you living in? You don’t have a centralised banking software where the data is available at HO at the day-end?’

‘No Sir.. We don’t have.. We used to gather data through the weekly Friday Statements received from the branches, tabulate it  in the format required by our earlier Chairman and present to him. He never required that in softcopy.. That’s why..’

மாதவன் பதில் பேசாமல் அவனையே பார்த்தார் சிறிது நேரம்.. ‘OK that’s it then.. No use in worrying about something which is not there.. Well.. you do one thing.. take all these reports.. feed it in your PC.. prepare a spread sheet and give it me in a floppy..’

சுபோத்துக்கு அவர் கூறியது பாதிதான் புரிந்தது என்றாலும் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு அவருடைய மேசையின் மீதிருந்த அறிக்கைகள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு நகர மாதவன் அவனை தடுத்து நிறுத்தினார்.

‘Subodh, do we have central Server in our building which anyone in the building could access?’

சுபோத் ஒன்றும் விளங்காமல் விழிக்க மாதவன் வாய்விட்டுச் சிரித்தார். முதலில் இவனை மாற்ற வேண்டும்..

‘It appears you are hearing this concept for the first time in your life.. Am I right Subodh?’

சுபோத் பரிதாபமாக தலையை அசைக்க.. ‘சரி நீங்க போய் நான் செய்த காரியத்த செஞ்சிக்கிட்டு வாங்க.. And find out whether anyone who has some knowledge about computers in this building and ask him to come to my cabin.. Fast..’

‘Sir, shall I send the head of EDP?’

சரி என்று மாதவன் தலையை அசைக்க தப்பித்தால் போதும் என்று சுபோத் தலைமறைவானான்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்த EDP தலைவரைப் பார்த்தான். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

மாதவன் சற்று முன் சுபோத்திடம் கேட்ட அதே கேள்விகளை அவரிடமும் கேட்டார்.

அவர் தயக்கத்துடன், ‘Sir I might require at least ten minutes to explain what we do here. Could you spare Sir?’ என மாதவன் தன் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றைக் காண்பித்தார்.

அந்த இளைஞர் அடுத்த பத்து நிமிடங்களில் சுருக்கமாக, அதே சமயம் கோர்வையாக வங்கியில் இருந்த கணினி மயமாக்கலை விவரித்த விதம் மாதவனுக்கு மிகவும் பிடித்தது.. Poor Guy.. He deserves a break.. என்று மனதுக்குள் நினைத்தார்.

‘OK Mr...?’

‘Siva Sir.. Sivaramakrishnan.. I am a MCA.. Banking Officer only.. But just like Fernando Sir.. I took up to learing computer myself.. I did my MCA through distance education..’

அவர் கேட்காமலே வந்து விழுந்த விவரங்களைக் கேட்ட மாதவன், ‘You said something about one Mr.Fernando.. Is he the Principal of our Training College?’

‘Yes Sir.. அவரே தான்.. சீனியர் லெவல்ல இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ்ல அவர் மட்டும் தான் இதுல இண்ட்ரஸ்ட் இருக்கறவர்.. ஆனால் அவர் எவ்வளவு முயற்சி பண்ணியும் மேலருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ் யாருமே சப்போர்ட் பண்ணாததுனால மேற்கொண்டு ஒன்னும் செய்ய முடியல சார்..’

மாதவனுக்கு முழுவதும் புரிந்தது.. So.. that’s where I should start.. Carryout massive computerisation.. That’s the need of the hour.. I should first start with the HO..

தன் எதிரில் நின்ற இளைஞரைப் பார்த்தார்.. அவருடைய முகத்திலிருந்த எதிர்பார்ப்பு மாதவனுக்கு புரிந்தது.. இவராவது தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றி வைப்பாரா என்ற அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானித்தார்.

‘ஓக்கே.. சிவா.. I am going to give you a free hand.. If you want to take the help of Mr.Fernando.. go to the Training College and sit with him.. I will give you two weeks.. Come back with a comprehensive, cost effective project to set up a hundred node LAN in our building.. We should be able to start with the automation of at least ten to fifteen percent of our operation in this building.. Find out whether any suitable software is available in the market and give me the total cost to set up such a system in our building..’

அவர் பேசப் பேச சிவராமகிருஷ்ணனின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் அவரையும் தொற்றிக்கொள்ள புன்னகையுடன் எழுந்து சென்று அவரைத் தோளில் தட்டிக்கொடுத்து.. ‘Go ahead.. But keep this secret.. No one other than Mr.Fernando should know anything about this assignment.. Is that clear?’ என்றார்.

‘Yes Sir.. I will be careful Sir..’ என்றவாறு மகிழ்ச்சியுடன் அவர் விடைபெற்று செல்ல.. Yes.. At least I could do something positive today.. after a dreadful day... என்றவாறு தன் இருக்கைக்கு திரும்பி சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய செல்qபோனை எடுத்து தன் மகளுக்கு டயல் செய்தார்..

****

சோமசுந்தரத்தின் ராஜிநாமாவை தலைமையகத்திலிருந்த தன்னுடைய நண்பர் வழியாக கேள்விப்பட்ட பாபு சுரேஷ் ஒரு நிமிடம் தன்னையே நம்பமுடியாமல் தன்னுடைய செல்qபோன் திரையைப் பார்த்தார், ‘என்ன சாம் சொல்றீங்க? ஏன் என்ன காரணம்?’ என்றார்..

‘சரியா தெரியல சார்.. போர்ட் மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்த நம்ம ஏ.ஜி.எம் தான் சொன்னார்.  சார் போர்ட்லருந்து ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் ஆறுமாசம் இருக்கற சமயத்துல எதுக்கு திடீர்னு இந்த டிசிஷன்னு யாருக்குமே புரியல.. அதான் ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேக்கலாம்னுதான் கூப்ட்டேன்.. இப்பத்தான் தெரியுது ஒங்களுக்கும் இது தெரியாதுன்னு.. வச்சிடறேன் சார்..’

தான் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். அவருடைய மனைவியும் மகளும் திருமண பர்சேசுக்காக சென்றிருக்கவே அமைதியாய் இருந்த வீட்டில் அவரால் நிதானமாக சிந்திக்க முடிந்தது.

சோமசுந்தரத்தின் ராஜிநாமாவின் பின்னால் என்ன இருக்கிறது? இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோதுகூட மனிதர் இதைப் பற்றி கோடிட்டுக்கூட காட்டவில்லையே..

அப்படியொரு எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் எதற்காக இன்று காலையில் தன்னை மனித வள இலாக்காவிற்கு தலைவராக்க வேண்டும்?

எங்கயோ இடிக்குதே..

இது ஒருவேளை அந்த நாடாருடைய வேலையாக இருக்குமோ.. இருக்கும்.. காலையில் சேர்மனின் காபினில் வைத்து டாக்டர் தன்னை பரிந்துரைத்தபோதே அவருடைய முகம் முற்றிலுமாக மாறிப்போனதை கவனிக்க தவறவில்லை அவர்..

அவருடைய வேலையாகத்தான் இருக்கும். ஒருவேளை டாக்டருடைய ஆட்களை சேர்க்கும் திட்டம் அவருக்கு தெரிந்திருக்குமோ..

டாக்டர் அவரைக் கலந்தாலோசிக்காமலா இந்த திட்டத்தை வகுத்திருப்பார்? இருக்காது.. அவர் தலைகீழாக நின்றாலும், எத்தனைத்தான் ரகசியமாக வைத்திருந்தாலும் அந்த நாடாருடைய கழுகுக் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது என்று வங்கியின் எல்லா அதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தது..

ஆகவே அது காரணமாயிருக்க முடியாது..

வேறென்ன?

சை.. இன்னும் சற்று நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கிளம்பி வந்தது தவறாகப் போய்விட்டது..

சோமசுந்தரம்தான் தன்னுடைய பாதுகாவலர் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவர் இயக்குனர் குழுவில் இல்லாதது தம்மை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறதோ என்று நினைத்து கலங்கினார் பாபு சுரேஷ்..

நான்கைந்து வருடங்களுக்கு முன் சோமசுந்தரத்தின் மருத்துவமனைக்கு அவர் நியதிகளை மீறி கடனளித்த விவரத்தை, ஏற்கனவே ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விவரத்தை, மீண்டும் ஆராய்ந்து தன் மீது பாய்வார்களோ என்ற அச்சம் அவரை வெகுவாக கலக்க.. சோமசுந்தரத்தை தொலைப்பேசியில் அழைத்தாலென்ன என்ற ஆலோசனையுடன் ஹாலின் மறுகோடியிலிருந்த தொலைப்பேசியை நோக்கி நடந்தார்..

அதற்கெனவே காத்திருந்ததுபோல தொலைப்பேசி ஒலிக்க பதற்றத்துடன் சென்று எடுத்தார். ‘என்ன சம்பந்தி இந்த நேரத்துல வீட்ல இருக்கீங்க?’ என்ற குரல் அவரை திடுக்கிட வைத்தது..

சமாளித்துக்கொண்டு, ‘சொல்லுங்க சம்பந்தி.. நான் இன்னையிலருந்து ஒரு வாரத்துக்கு லீவ் போட்டுருக்கேன்.. கல்யாண பர்சேசெல்லாம் இருக்கில்லையா, அதான்.. சொல்லுங்க..’ என்றார்..

‘அவசரமா ஒன்னுமில்ல.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. அதான் ஒங்கள கூப்ட்டேன்..’

இதென்னடா சோதனை என்று நினைத்த பாபு சுரேஷ்.. ‘என்ன சொல்லுங்க?’ என்றார்.

‘ஒங்க பேங்க பத்தி ஒரு நியூஸ் பேப்பர் சைட்ல வந்திருக்காம். என் பையந்தான் ஃபோன் பண்ணி சொன்னான்.. அதான் ஒங்களுக்கு சொல்லலாம்னு கூப்ட்டேன்.. யாரோ சோமசுந்தரமாமே ஒங்க போர்ட் மெம்பராம்.. ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில லோன் வாங்கிட்டு கட்டாமயே இருக்காராம்..’

ஓ! அதான் விஷயமா? அவருக்கும் அந்த விஷயம் தெரிந்துதானிருந்தது.. ஏதோ ஒரு கடனை அடைக்கத்தான் புதிதாய் பணிக்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுவருவதாக சோமசுந்தரம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர.. இதுதான் அதுவா?

‘சரிங்க சம்பந்தி.. இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப நன்றி..’ என்றவர் உடனே இணைப்பைத் துண்டித்தால் நன்றாயிருக்காதே என்று நினைத்து, ‘கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது..?’ என்றார்..

தொடரும்..


21.9.06

சூரியன் 125

‘How do you feel Madam?’

வந்தனா தன் எதிரில் நின்றிருந்த நந்தக்குமாரைப் பார்த்து புன்னகைத்தாள். ‘Fine Mr.Nandakumar. Thanks to you and Nalini.’

நந்தக்குமார் சங்கடத்துடன் நெளிந்தான். ‘என்ன மேடம் என்னெ போயி மிஸ்டர்னெல்லாம் அட்றெஸ் பண்றீங்க? நான் வெறும் ஸ்கேல் டூ ஆஃபீசர்தான் மேடம்.’

சமையல்கட்டில் வேலையாய் இருந்த நளினிக்கு நந்தக்குமாரின் சங்கடம் வேடிக்கையாக இருந்தது. தன்னிடம் எப்படி ஆட்டம் போடுவான்? ஒரு வாரத்துக்கு அவஸ்தைப்படட்டும்..

வந்தனா கட்டிலின் தலைமாட்டில் நளினி அமைத்திருந்த தலையணையில் சாய்ந்தவாறு நந்துவையும் சமையலறையில் படு மும்முரமாய் வேலையிலிருந்த அவனுடைய மனைவியையும் பார்த்தாள்.

‘நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்னு நினைக்கேன். அதான் ரெண்டு பேரும் ஒரே மாதிரியா நினைக்கீங்க.’

நந்தக்குமாருக்கு இத்தகைய புகழ்ச்சி பழக்கமில்லாததால் சங்கடத்துடன் சமையலறையைப் பார்த்தான். நளினி திரும்பி அவனைப் பார்த்தாள். ‘என்ன நந்து, மேடம் சொல்றது சரிதானே.. We are made for each otherதானே?’  

வந்தனா அவளுடைய குரலில் தொனித்த கேலியை கவனித்தாள். இருப்பினும் சமையலறையிலிருந்த நளினிக்கு கேட்கும் அளவுக்கு குரலையெழுப்பி பேசமுடியாமல் தடுமாறினாள்.

‘மேடம் don’t strain yourself.’

வந்தனா சரியென்று தலையை அசைத்துவிட்டு தலையணையில் சாய்ந்து ஆயாசத்துடன் கண்களை மூடினாள். What’s happening to me? Why do I feel so tired? ரெண்டு நாளைக்கு முன்னால இருந்த வந்தனாவா நான்? கமலி.. நீ இருந்தா எனக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்குமாடி.. பாவி மவளே.. இப்படி அநியாயமா என்னெ புலம்ப வச்சிட்டு போய்ட்டியேடி.. நா எப்படி ஒன்னெ மறந்துட்டு இருக்கப் போறேன்...

அவளையுமறியாமல் கண்கள் கலங்கி ஓரமாய் கண்ணீர் வடிய அதைப் பார்த்த நந்தக்குமார் பதறிப்போய் சமையலறையை நோக்கி விரைந்தான். ‘ஏய்.. மேடம் கரையுன்னு.. போய் எந்தான்னு ச்சோய்க்கி..’

நளினி புன்னகையுடன் வேண்டாம் என்று தலையை அசைத்தாள். ‘மேடத்த டிஸ்டர்ப் செய்யேண்டா.. Leave her alone for sometime.. மேடம் மறுபடியும் பழைய நிலமைக்கு வர்றதுக்கு எப்படியும் ரெண்டு மூனு நாள் ஆவும்.. முன்ன பின்னெ பாக்காத எனக்கே  ஆக்குட்டியோட மரணம் பாதிச்சிருக்கே நந்து.. எந்தொரு செளந்தர்யம்?  குட்டியோட பெஸ்ட் ஃப்ரெண்டாத்றெ மேடம்.. எப்படி மறக்க முடியும் நந்து? சேட்டன் போய்ட்டு ஹோட்டல் ரூம் வெக்கேட் செய்துட்டு சாதனங்களோட இங்கோட்டு வா.. போக்கோ..’

நந்து சங்கடத்துடன் அவளைப் பார்த்தான். ‘அது வேணோ நளினி.. மேடத்தோட நாம ரெண்டு பேரும் தாமசிக்கறது சரியானோ?’

நளினி வியப்புடன் அவனைப் பார்த்தாள். ‘பின்னே.. அங்கனெ பறஞ்சிட்டல்ல மேடத்த டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வந்தது? இப்ப எந்தாயி?’

நந்தக்குமார் அவளையும் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த வந்தனாவையும் மாறி, மாறி பார்த்தான். ‘அதுக்கில்ல நளினி.. மேடத்தோட சிஸ்டர்ஸ் உண்டுல்லே.. அவரெ விளிச்சி பறஞ்சாலோ.. எதுக்கு சொல்றேன்னா அப்புறம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சி வந்து நம்மள ஏதாச்சும் சொன்னா? அதுகொண்டான ஆலோய்க்கன.’

நளினிக்கும் அவனுடைய பேச்சிலிருந்த நியாயம் விளங்கியது. உறவினர்கள் எப்போதுமே அப்படித்தானே.. தேவைப்படும் நேரத்தில் அருகில் இருக்க மாட்டார்கள்.. ஆனால் அவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டால் போதும்... ‘எங்களுக்கு சொல்லாம ஒங்கள யாருங்க பாக்க சொன்னா?’ என்று சண்டைக்கு வருவார்கள்..

இருப்பினும் வந்தனா மேடத்திற்கு தன்னுடைய சகோதரனையோ, சகோதரிகளையோ துணைக்கு அழக்க வேண்டும் என்று தோன்றியிருந்தால் தங்களிடம் கூறியிருப்பார்களே.. ஒருவேளை எதற்கு அவர்களை சிரமப்படுத்த வேண்டும்.. இது சாதாரண நோய்தானே என்று நினைத்திருக்கலாம்..

‘சரியான நந்து.. பட்சே இப்போ மேடத்திடத்து இத பறயாம் பற்றோ.. பின்னே நோக்காம்.. நந்து போயி வெக்கேட் செய்துட்டு வா..’ என்று அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு சமையல் வேலையை முடிக்கும் நோக்கில் சமையலறையை நோக்கி விரைய வந்தனாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

‘எந்தா மேடம்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.

‘இங்க வா.. வந்து ஒக்கார்.’ என்று வந்தனா சைகை செய்ய நளினி, ‘ஒரு நிமிஷம் மேடம்..’ என்று சமையலறையில் கொதித்துக்கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தை மூடி இறக்கி வைத்துவிட்டு ஸ்டவ்வை அனைத்துவிட்டு திரும்பி படுக்கைக்கு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து வந்தனாவின் கரங்களைப் பற்றினாள். ‘என்ன மேடம்..?’

வந்தனா படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயல நளினி அவளை அப்படியே அணைத்து தூக்கி தலைமாட்டில் தலையணையை வைத்து அமர்த்தினாள்.

‘தாங்ஸ் நளினி.. நீ மட்டும் சமயத்துல வரலன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு என்னெ விட்டுருக்க மாட்டார் அந்த டாக்டர். அந்த இருட்டு பிடிச்ச ரூம்லருந்து வந்ததிலிருந்தே எனக்கு தேவலைன்னு தோனுது.. It was really a nightmare..’

நளினி ஆதரவுடன் வந்தனாவின் கரங்களைப் பற்றி அழுத்தினாள்.. ‘இப்பத்தான் வந்துட்டீங்களே மேடம்.. Don’t worry.. You will be alright in no time..’

‘Yes I should.. I’ve got lot of things to do.. புது சேர்மன் வேற ஜாய்ன் பண்ணிருப்பார். அங்க என்ன நடக்குதோ ஏது நடக்குதோ தெரியல.. அந்த சேது வேற எதையாச்சும் குட்டைய குழப்பிக்கிட்டிருப்பார்.. இந்த கமலி குட்டியோட சாவு என் வாழ்க்கையையே புரட்டி போட்டிருச்சி நளினி.. I do not know what I am going to do.. I miss her terribly Nalini.. I miss her very much..’

அவளுடைய கரங்களில் அப்படியே கவிழ்ந்து வந்தனா அழ செய்வதறியாது கலங்கிப் போனாள் நளினி..

******

தனக்கு மிகவும் பழக்கமான பத்திரிகை நிரூபருக்கு ஃபோன் செய்துவிட்டு காத்திருந்த ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய பிரத்தியேக தொலைப்பேசி சிணுங்கியதும் உடனே எடுத்து, ‘ஃபிலிப் ஹியர்.’ என்றார்.

‘சார் நாந்தான்..’ என்று மறுமுனையிலிருந்து குரல் வந்ததும்.. ‘சொல்லுங்க, யார் செஞ்ச வேலை இது..’ என்றார் சற்றே கோபத்துடன்.

எதிர் முனையிலிருந்த தயக்கம் அவருடைய கோபத்தை மேலும் கூட்டவே.. ‘என்ன சார் சைலண்டாய்ட்டீங்க? எதுவாருந்தாலும் சொல்லுங்க.’ என்றார்.

‘சார்.. ஒங்க எச்.ஆர் ஹெட் இருக்காங்க இல்ல..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனால் அடுத்த நொடியே அதெப்படி ஹாஸ்பிட்டல்லருக்கற வந்தனா இந்த காரியத்தை செய்திருக்க முடியும் என்று தோன்றியது.. ‘என்ன சொல்றீங்க.. வந்தனா நேத்தைக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயி இன்னும் அங்கதான் இருக்காங்க.. அவங்க எப்படிங்க.. என்ன சொல்றீங்க நீங்க..?’

‘அவங்கன்னா அவங்க இல்ல சார்..’

ஃபிலிப் எரிச்சலுடன், ‘என்ன சார் சொல்ல வரீங்க..? தெளிவா சொல்லுங்க..’

‘சார் நா சுருக்கமா சொல்றேன்.. நான் சொல்றத முழுசையும் கேட்டுட்டு அப்புறமா சொல்லுங்க.. இப்படி இடையில கேள்வி கேட்டா என்னால தெளிவா சொல்ல முடியாது.. ப்ளீஸ்..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு அவருடைய பதற்றம் புரிந்தது. ‘ சரி சொல்லுங்க.. வந்தனா மேடம் பெயர யூஸ் பண்ணி யாரோ இந்த காரியத்த செஞ்சிருக்காங்கன்னு நினைக்கேன்.. சொல்லுங்க.. யார் ஒங்க Press ஃப்ரெண்ட காண்டாக்ட் பண்ணது?’

‘சொல்றேன் சார்.. இன்னைக்கி காலைல பதினோரு மணி இருக்கும் சார்..’ என்று துவங்கி வந்தனா மேடத்தின் காரியதரிசி தன்னுடைய பத்திரிகை நண்பரை அழைத்து அவர் மறுத்தும் வற்புறுத்தி சேர்மனின் காரியதரிசிக்கு ஃபேக்ஸ் செய்ய வைத்ததை சுருக்கமாக கூறி முடிக்க ஃபிலிப் சுந்தரத்திற்கு நடந்தது என்ன என்று விளங்கியது.

‘வந்தனா மேடத்தோட பி.ஏ அவங்க பெயர் என்னன்னு சொன்னாங்களாமா.. கேட்டீங்களா?’

‘பேர் ஏதும் சொல்லலையாம் சார்..ஆனா அது ஒரு மேல் (Male)னு மட்டும் சொன்னார். அவங்களுக்கு ஒரு பி.ஏ தான சார்.. அவர கூப்ட்டு கேளுங்களேன்.. நான் வச்சிடறேன் சார்.. நாந்தான் இந்த விஷயத்த ஒங்கக்கிட்ட சொன்னேன்னு எங்க எடிட்டருக்கு தெரிஞ்சா பிரச்சினையாயிரும் சார்.. நீங்க ஒரு உதவி கேட்டா மாதிரி நானும் இந்த உதவிய கேக்கேன்..’ என்ற கோரிக்கையுடன் இணைப்பு துண்டிக்கப்பட ஃபிலிப் சுந்தரம் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

வந்தனாவின் காரியதரிசி பெண்ணாய் இருக்க யார் அவருடைய பொசிஷனை உபயோகித்து இதை செய்திருக்க முடியும்?

சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய இண்டர்காமை சுழற்றி, ‘சுபோத்.. ப்ளீஸ் கம் டு மை கேபின்.. ஃபாஸ்ட்..’ என்றார்.

‘சார்.. சேர்மன் ஒரு சின்ன அசைன்மெண்ட் குடுத்துருக்கார். அத முடிச்சிட்டு வந்தா போறுமா?’

ஃபிலிப் சுந்தரத்திற்கு வேறு வழி தெரியவில்லை.. புது சேர்மன் குடுத்த வேலை கிடக்கட்டும் நீங்க இங்க வாங்க.. என்று கூறவா முடியும்? ‘Ok.. But make it fast.. It is urgent.’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்கவும் அவருடைய பிரத்தியேக தொலைப்பேசி அலறவும் சரியாக இருந்தது.

எதிர்முனையிலிருந்து சிலுவை மாணிக்கம் நாடாரின் குரல் ஒலிக்க என்னடா இது ரோதனை என்ற நினைப்புடன், ‘சொல்லுங்க சார்?’ என்றார்.


தொடரும்..

19.9.06

சூரியன் 124

கல்லறைக்குச் சென்று திரும்பிய மாணிக்கவேல் நேரே தன்னுடைய தந்தையின் அறைக்குச் சென்றார்.

மனமும் உடலும் சோர்ந்து போய் ஒரு உயிரற்ற உடலைப் போல் கட்டிலில் கிடந்த தன் தந்தையை பார்த்து வேதனையுடன் என்ன செய்வதென தெரியாமல் சிலையாய் நின்றார்.

‘என்னப்பா தூக்கம் வரமாட்டேங்குதா? இஞ்செக்ஷன் போட்டுட்டுத்தானே போனேன்?’

அரைதூக்கத்திலிருந்த ஆறுமுகச்சாமிக்கு தன் மகனின் குரல் கேட்டும் கண் விழித்து அவனுடைய வேதனை ததும்பிய முகத்தைப் பார்க்க விரும்பாமல் உறங்குவதுபோல் பாவனை செய்தார்.

மாணிக்கவேலுக்கு புரிந்தது. இனிமேலும் அங்கு நின்று அவரை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல் வாசலை நோக்கி மெள்ள நகர்ந்தார்.

‘ஒங்கூட பொறந்தவனுங்கல்லாம் போய்ட்டானுவளாடா?’

சட்டென்று நின்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தார். ‘கல்லறையிலிருந்து வந்ததுமே எல்லாரும் கெளம்பி போயாச்சிப்பா. அவங்க வந்ததே நான் எதிர்பார்க்காதது. இதுல இன்னும் ஒரு வாரம் இருந்து பத்தாம் நாள் சடங்கு முடிஞ்சதும் போங்கன்னு எப்படி சொல்றதுன்னு நானும் ஒன்னும் சொல்லல.’

பதிலுக்கு கட்டிலிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு மட்டுமே வந்தது. தனக்கு முதுகுப்புறத்தைக் காட்டியவாறு திரும்பிப் படுத்த தன் தந்தையைப் பார்த்தவாறு சற்று நேரம் நின்றிருந்த மாணிக்கவேல், ‘ஒங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரவாப்பா?’ என்றார் மிருதுவாக.

சில நொடிகள் வரை பதில் வராமலிருக்கவே திரும்பி வாசலை நோக்கி நகர்ந்தார். அவர் வாசலை நெருங்கவும் கையில் சூடான பாலுடன் ராணி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

எதிரில் வந்தவள் மேல் மோதாமல் சட்டென்று ஒதுங்கி நின்று தன் மனைவியை வியப்புடன் பார்த்தார். ‘யாருக்கு? அப்பாவுக்கா?’

ராணி அவரைப் பார்ப்பதை தவிர்த்து தன் மாமனாரைப் பார்த்தாள். ‘ஆமாங்க. மாமா காலையிலருந்து ஒன்னும் சாப்பிடலையே. அதான்.. நீங்க போங்க. நான் ஹார்லிக்ஸ் கலந்து குடுத்துட்டு வரேன். ஃபாதரும் மதரும் ஒங்கக் கிட்ட சொல்லிட்டு போலாம்னு நிக்காங்க.’ என்றவாறு தன் மாமனாரின் கட்டிலை நோக்கி நகர்ந்த மனைவியைப் பார்த்தவாறே அறையை விட்டு வெளியேறி கூடத்தில் நின்றிருந்த பாதிரியாரையும் கன்னியர் மடத் தலைவியையும் நெருங்கினார்.

‘ராணியோட மாற்றம் எங்களுக்கு ரொம்பவும் திருப்தியாருக்கு மாணிக்கம். நீங்க என்ன நினைக்கிறீங்க?’

மாணிக்கவேல் பதிலளிக்காமல் அருகில் நின்றிருந்த தன் மகனைப் பார்த்தார். அவருக்கென்னவோ ராணியின் திடீர் மனமாற்றத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவளுடைய நடத்தை செயற்கையாகவே தோன்றியது. இருப்பினும் தன் மகனுக்காக அதை நம்பத் தயாராக இருந்தார். ‘நீ என்ன சொல்றே?’ என்பதுபோல் இருந்தது அவருடைய பார்வை.

‘ஆமாப்பா.. ஃபாதர் சொன்னா மாதிரி அம்மா இனி தாத்தாவ நல்லாவே பாத்துப்பாங்க. கமலியோட மரணம் அவங்கள மாத்திரிச்சிப்பா. அம்மா இங்க நம்மளோடயே இருக்கட்டும்பா..’

சரி என்பதுபோல் தலையை அசைத்த மாணிக்க வேல் பாதிரியாரின் கரங்களைப் பற்றி, ‘தாங்க்யூ ஃபாதர். நீங்க வந்திருந்தது எனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப ஆறுதலாருந்தது.’ என்றார். பிறகு கன்னியர் மடத் தலைவியையும் உடன் நின்றிருந்த கன்னியர்களையும் பார்த்தார். ‘ரொம்ப தாங்க்ஸ் மதர். நீங்க சொன்ன அறிவுரைதான் ராணிய மாத்திருச்சின்னு நினைக்கேன். தாங்க் யூ ஃபார் ஆல் யுவர் ப்ரேயர்ஸ்.. கமலியோட ஆத்மா சாந்தியடைய ப்ரே பண்ணுங்க...’

பாதிரியாரும் கன்னியர்களும் விடைபெற்றுக் கொண்டு செல்ல சந்தோஷ் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தான்.

அவன் திரும்பி வரும் வரை காத்திருந்த மாணிக்கவேல் அவன் வந்ததும், ‘என் கூட வா’ என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாளிட்டார்.

வியப்புடன் தன்னைப் பார்த்த மகனை தன் கட்டிலுக்கருகில் கிடந்த இருக்கையில் அமரும்படி சைகைக் காட்டினார்.

‘என்ன டாட்.. எதுக்கு கதவ மூடுனீங்க? என்ன விஷயம்?’

‘சொல்றேன்.’ என்றவாறு கட்டிலில் அமர்ந்தார் மாணிக்கவேல். ‘ஒங்கம்மாவ பத்தித்தான்.’

சந்தோஷ் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். ‘என்னப்பா அம்மாவுக்கென்ன? நீங்க அவங்கள இன்னும் நம்பல.. இல்லே?’

மாணிக்கவேல் ஆமாம் என்று தலையை அசைத்தார். ‘You are right Santhosh. I am unable to believe that she could change so fast. In one night! I can’t believe that!’

சந்தோஷ¤க்கும் அந்த குழப்பம் இல்லாமல் இல்லை. ராணியின் நடத்தையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதுபோல் அவனுக்கும் தோன்றத்தான் செய்தது. ஆயினும் அவள் மாறாவிட்டாலும் அவளைத் தன் தாயாய் ஏற்றுக்கொண்டு மன்னித்துவிட அவன் தயாராக இருந்தான்.

‘என்ன டாட் நீங்க? நம்ம மாறினாத்தான் இங்க இருக்க முடியுங்கற நினைப்பும் அம்மாவ மாத்தியிருக்கலாமில்லே.. நீங்க சொன்னா மாதிரி அம்மா மாறலன்னாலும் நா அவங்கள அப்படியே ஏத்துக்க தயாரா இருக்கேன். அவங்க இங்க இருக்கறது தாத்தாவுக்கும் நல்லதுதானேப்பா.. அவங்கள பாத்துக்கறதுக்கும் ஒரு ஆள் வேணுமே?’

‘தாத்தாவ பாத்துக்கறதுக்கும் ஒரு ள் வேணுமே?’ அந்த வார்த்தைகளிலிருந்த irony அவரை சிந்திக்க வைத்தது. அதுக்குத்தான நான் அவள இங்க வச்சிக்கறதுக்கு தயங்கறேன்? இவன் இப்ப இருக்கற மனநிலையில நான் என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க போறதில்லை. ரெண்டு மூனு நாள் போகட்டும், பார்ப்போம் என்ற முடிவுடன் தன் மகனைப் பார்த்தார்.

‘சரி சந்தோஷ்.. அம்மா இருக்கட்டும்.. அவ மாறினாளோ இல்லையோ நீ சொல்றா மாதிரி தாத்தாவ பாத்துக்கறதுக்கும் ஒரு ஆள் வேணுமே..’ என்றார்.

தன்னுடைய பதிலில் மகிழ்வடைந்த தன் மகனைப் பார்த்தார். ‘ஆனா அவ தாத்தாவ எப்படி பார்த்துக்கறாங்கறத நீயும் கவனிச்சிக்கணும்.. என்ன?’

சந்தோஷ் வியப்புடன் அவரைப் பார்த்தான். ‘என்னப்பா மீன் பன்றீங்க? What do you think that she would do to him?’

மாணிக்கவேல் கட்டிலில் இருந்து எழுந்து தன் மகனை நெருங்கி அவனுடைய தோளில் கை வைத்தார். ‘ஒங்கம்மா என்ன வேணும்னாலும் செய்வா சந்தோஷ்.. If only I know what she is up to..!’

சந்தோஷ் அப்போதும் விளங்காமல் தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் கையில் காலி தம்ளருடன் நின்றிருந்த ராணியின் உதடுகளில் ஒரு வக்கிரப் புன்னகை தவழ்ந்தது. ‘இருங்க வச்சிக்கறேன்..’ என்றவாறு அவள் சமையல்கட்டை நோக்கி நகர அறைக் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்த மாணிக்கவேல் தன் மனைவி செல்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தார்.

*******

‘சொல்லுங்க நான் செல்விதான் பேசறேன்.’

செல்வம் தன் மனைவியின் குரலில் இருந்த அலட்சியத்தை உணராமல் இல்லை. இருப்பினும் கோபப்படாமல், ‘மாமா, மாமி நல்லபடியா வந்து சேந்தாங்களா? நீ ஸ்டேஷனுக்கு போனியா?’

‘அது சரி.. எங்களப் பத்தியெல்லாம் ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா என்ன? ஆச்சரியமாருக்கு?’

‘ஏய் எதுக்கு அப்படி சொல்றே?’

‘பின்னே.. இப்ப நேரம் என்ன? காலையில வந்து சேர்ந்தவங்களப் பத்தி கேக்கணும்னா நீங்க மெட்றாசுக்கு போய் சேர்ந்ததுமில்ல கேட்டிருக்கணும்..? நீங்க பாட்டுக்கு சாவகாசமா சாயந்திரம் நாலு மணிக்கி கூப்ட்டா.. நா வேற என்ன சொல்றது? சரி எதுக்கு கூப்ட்டிங்க? இன்னும் நாலு நாள் இருக்கணும் போலருக்குன்னு சொல்லத்தான?’

செல்வத்துக்கு கோபம் பொங்கி வந்தாலும் செல்வியின் சமயோசிதமான கேள்வியைக் கேட்டதும் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அதெப்படி எப்பவும் நான் மனசுல என்ன நினைக்கிறேன்னு கரெக்டா அப்படியே சொல்றா  என்று தோன்றியது. ‘ஆமாம். அதுக்கும்தான் கூப்டேன்.. வச்சிடறேன்.’ எதிர்முனையிலிருந்து பதில் வருவதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த ராசம்மாளைப் பார்த்தான்.

‘எதுக்கு இப்ப சட்டுன்னு டிஸ்கனெக்ட் பண்ணே? நீ செல்விக்கு இப்படி பயப்படுவேன்னு நா நெனச்சிக்கூட பாக்கல செல்வம். அவ பதிலுக்கு எதுக்கு இன்னும் நாலு நா தங்கணும்னு கேப்பான்னுதான கட் பண்ணே?’

ஆமாம் என்று தலையை அசைத்தான் செல்வம்.

‘ஏன்? சொல்ல வேண்டியதுதான? எதுக்கு பயப்படறே?’

செல்வம் தயக்கத்துடன் அவளுடைய பார்வையைத் தவிர்த்து தன் எதிரிலிரிருந்த கோப்பை படிப்பதுபோல் பாவனை செய்தான்.

ராசம்மாள் எழுந்து சாலையை நோக்கியிருந்த ஜன்னலை நெருங்கி அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். ‘இங்க பார் செல்வம்.. நா அவருக்கெதிரா நடத்தப்போற போராட்டத்துல எனக்கு தளபதியா நிக்கப் போறது நீதான். அதுக்கு செல்வி சம்மதிக்கணும். அதுக்கு நீ இப்படி நடந்துக்கிட்டா சரிவராது. இப்ப நீ செஞ்ச முட்டாள்தனமான காரியத்துக்கப்புறம் நா எப்படி செல்விக்கிட்ட பேசறது? நா சொல்ல வேண்டியத நீயே பக்குவமா அவ கிட்ட சொல்றத விட்டுட்டு..’

‘சாரி ராசி.. செல்வியோட வாய்க்கு பயந்துதான்..’

ராசம்மாள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவளையுமறியாமல் அவளுடைய உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. இவன் மட்டும் தனக்கு கணவனாக வந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு புயல் வீசியிருக்காதே என்று நினைத்தாள்...

தொடரும்..




8.9.06

சூரியன் 123

அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஆவணங்களின் நகல்களை உணவு மேசையில் விரித்து வைத்துவிட்டு தனக்கென கொண்டு வந்திருந்த சூடான காப்பி கோப்பையுடன் தன் பின்னால் நின்றுக்கொண்டிருந்த தன் மனைவி மஞ்சுவைப் பார்த்தான் ரவி பிரபாகர்.

‘என்ன ரவி வந்தவுடனேயே ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?’ புன்னகயுடன் தன் கையிலிருந்த காப்பி கோப்பைகளுள் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு அவனெதிரில் அமர்ந்தாள் மஞ்சு.

‘ஆமா மஞ்சு இப்பவே ஸ்டார்ட் பண்ணாதான் அடுத்த வீட்டு வக்கீல் அங்கிள் ராத்திரி வர்றதுக்குள்ள இதையெல்லாம் டேட் வாரியா சார்ட் பண்ணி முடிக்க முடியும். எங்க ஹெட் ஆஃபீஸ்லருக்கற ஆளுங்க சார்ஜஸ்ச ஃப்ரேம் பண்றதுல கில்லாடிங்க. ஏன் நானே எத்தனெ இன்க்வயரிஸ் நடத்தியிருக்கேன்? அதனால அவங்க சார்ஜ் ஷீட்ல எந்த ஆர்டர்ல சார்ஜஸ வரிசைப் படுத்தியிருக்காங்களோ அதே ஆர்டர்ல நம்ம எக்சிபிட்சையும் ப்ரெசண்ட் பண்ணணும்.. ஒவ்வொரு சார்ஜையும் கவுண்டர் (Counter) பண்றதுக்கு என்னெல்லாம் எவிடென்ஸ சப்மிட் பண்ணணும்னு இப்பவே லிஸ்ட் பண்ணி அதே ஆர்டர்ல நம்மகிட்டருக்கற எவிடென்ச அரேஞ்ச் பண்ணணும்.. ஒனக்கு இப்ப ஏதாச்சும் அர்ஜெண்டா வேலையிருக்கா? இல்லன்னா நீயும் ஒக்காரு.. ஒரு ரெண்டு மணி நேரத்துல அரேஞ்ச் பண்ணி முடிச்சிட்டு என் லேப் டாப்ல ப்ரீஃபா ஒரு சப்மிஷன் ரெடி பண்ணி வச்சிரலாம்னு நினைக்கேன். என்ன சொல்றே?’

மஞ்சு அவன் குரலில் இருந்த பிசினஸ் லைக் பாணியை வெகுவாக ரசித்தாள். இந்த ரவியைத்தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அழகான ஆண்மைத்தனமான உருவத்திலும் முகத்திலும் மட்டும் மயங்கியா இவனை பார்த்த மாத்திரத்திலேயே கணவனாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தாள்? இந்த இரண்டுக்கும் பின்னால் அவளைக் கவர்ந்திழுத்தது அந்த மூளைதானே.. பார்த்த மாத்திரத்திலேயே தன்னைக் கவர்ந்திழுத்த அந்த அறிவு செறிந்த கூர்மையான பார்வை, முதிர்ச்சி மிகுந்த அவனுடைய பேச்சு.. அதற்கு பின்னால் லேசாக தொனித்த ஆணவம், தனக்கு எல்லாம் தெரியும் என்று என்பதை உணர்த்திய அந்த சற்றே அதிகப்படியான தன்னம்பிக்கை.. அதுவும் ஒருவகையில் அவனுடைய ஆண்மைத்தனத்தைக் கூட்டியதாகத்தான் நினைத்தாள்.. அதாலும்தான் அவள் ஈர்க்கப்பட்டாள்.. ஆனால் அதுவே அவனுக்கு சறுக்கு பாறையாக அமைந்துவிடும் என்று அவள் நினைத்தாளா என்ன?

‘ஏய் என்ன யோசிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கே.. ஆர் யூ ஃப்ரீ ர் நாட்?’

மஞ்சு திடுக்கிட்டு, ‘எ...என்ன சொன்னீங்க?’ என்றாள் ஒன்றும் விளங்காமல்..

ரவி மெலிதாக புன்னகைத்தான். ‘என்ன ஏதாச்சும் ஃப்ளாஷ் பேக்கா.. நல்லதா இருக்காதே.. நான் ஒனக்கு சந்தோஷத்த குடுத்த நாட்கள் ஒன்னோ ரெண்டோ..’

மஞ்சு அவசர, அவசரமாக தலையை அசைத்தாள்.. ‘சேச்சே.. என்ன ரவி நீங்க? சரி நீங்க என்ன கேட்டீங்க? நா ஃப்ரீயான்னா? ஆமா இப்ப ஃப்ரீதான்.. சொல்லுங்க என்ன பண்ணணும்?’

ரவி தன்னை நோக்கி அவள் நீட்டிய இரு கரங்களையும் பற்றினான்.. ‘அதிருக்கட்டும் மஞ்சு.. இப்ப சொல்லு.. நீ திரும்பி வரணும்னு எடுத்த முடிவு ஒனக்கு சந்தோஷத்த குடுத்துருக்கா? Do you think I deserve a woman like you.. ஹ¥ம்?’

மஞ்சுவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிப்போனது. தன் கரங்களைப் பற்றியிருந்த ரவியின் கரங்களின் மேல் கவிந்துக்கொண்டாள்..

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையிலிருந்த கனத்த மவுனம் அவர்கள் இருவரையுமே பாரமாய் அழுத்தியது.

சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு தலை நிமிர்ந்த மஞ்சு, ‘தயவு செஞ்சி இந்த மாதிரி இனி பேசாதீங்க ரவி. நான் பிரிஞ்சி போகணும்னு மனசார நினைச்சதே இல்லை. அன்னைக்கி இருந்த மன நிலையில அப்படி செய்யணும்னு தோனிச்சி. அவ்வளவுதான்.’ என்றாள். ‘இப்ப அதையெல்லாம் பேசி நம்ம சந்தோஷத்த கெடுத்துக்க வேணாம் ரவி.. நமக்கு முன்னாலருக்கற இந்த பிரச்சினைய மட்டும் பார்ப்போம். ராத்திரி வக்கீல் மாமா வர்றதுக்குள்ள நாம பிரீஃபா ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணணும்னு நீங்க தானே சொன்னீங்க? அதுக்கு நான் என்ன செய்யணும்.. சொல்லுங்க.’

ரவியும் அவள் கூறியதுதான் சரி என்று தீர்மானித்து தன் முன்னாலிருந்த ஆவணங்களில் ஒரு பகுதியை அவளிருந்த திசையில் தள்ளினான். ‘இந்த பேப்பர்ஸ நீ டேட் வாரியா சார்ட் பண்ணிக் குடு.. நா இத படிச்சி குறிப்பெடுக்கிறேன்.’

அடுத்த சில மணி நேரம் இருவரும் தங்கள் அலுவலில் மூழ்கிப்போயினர்..

***

மைதிலி சென்று வெகு நேரமாகியும் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே இருந்த சீனிவாசன் சோபாவின் விளிம்பிற்கு நகர்ந்து மெள்ள எழுந்து நிற்க முயன்று தோற்றுப் போய் மீண்டும் சோபாவில் விழ சமயலறையிலிருந்து அவனையே கவலையுடன் கவனித்துக்கொண்டிருந்த சிவகாமி மாமி ஓடிவந்தாள்.

‘டேய்.. டேய்.. என்ன பண்றே.. என்னெ கூப்ட்டா என்ன?’

சீனி எரிச்சலுடன் அவளுடைய கரங்களைத் தட்டிவிட்டான். ‘என்னெ விட்ருங்கோ மாமி.. எதுக்கு என்னெ சின்னை பிள்ளை மாதிரி ட்ரீட் பண்றீங்க? நீங்க போய் ஒங்க வேலைய பாருங்க. நா மேனேஜ் பண்ணிக்கறேன்.’

மாமி விடவில்லை. ‘டேய்.. நா ஒன்னும் அந்த பொண்ணு இல்லை.. நீ சொன்னதும் கோச்சிக்கறதுக்கு.. பேசாம வாயடிக்காம வா.. கொண்டு போய் ஒங்கப்பா ரூம்ல விடறேன்.. நீ இன்னும் ஒரு வாரத்துக்காச்சியும் மாடிக்கு போமுடியாது. சொல்றத கேளு.. வா..’ என்றவாறு அவனை வற்புறுத்தி அவனுடைய சங்கோஜத்தை பொருட்படுத்தாமல் அப்படியே கைத்தாங்கலாக மாதவனின் அறைக்குள் கொண்டு சென்று படுக்கையில் அமர்த்திவிட்டு, ‘மோர் சாதம் கலக்கி கொண்டாரேன்.. குடிச்சிட்டு படு..’ என்றாள்.

‘அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. பசியில்லை.. ராத்திரி பாக்கலாம்.’

மாமி அவன் கூறியதைப் பொருட்படுத்தாமல் அடுத்த சில நொடிகளிலேயே மோர் சாதத்துடன் வந்து நிற்க சீனி படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டு உறங்குவதுபோல் பாவனை செய்தான்.

‘இங்க பார் சீனி.. நீ இத்துனூண்டு இருந்தப்பலருந்து எனக்கு தெரியும்.. நீ எந்த நேரத்துல என்ன பண்ணுவே.. என்ன பேசுவேன்னு ஒங்கம்மாளவிட நேக்கு நன்னா தெரியும். மரியாதையா நீயா எழுந்து இத குடிச்சிட்டா.. நாம் பாட்டுக்கு போய் என் வேலைய பார்ப்பேன்.. இல்லன்னா இப்பவே ஒங்கம்மாவுக்கு ஃபோன் போட்டு நீ வந்து இவனெ கூட்டிண்டு போடிம்மான்னுருவேன்.. அப்புறம் நீ அந்த மைதிலிய சுத்தமா மறந்துர வேண்டியதுதான்.. சொல்லிட்டேன்..’

சீனிக்கு அவளுடைய வார்த்தைகளிலிருந்த வாஸ்தவம் புரிந்தாலும் எழுந்து அமராமல் கண்களை மட்டும் திறந்து மாமியைப் பார்த்தான். ‘மாமி நா ஒன்னு கேட்டா ஸ்ட்ரெய்டா பதில் சொல்வீங்களா?’

மாமி வியப்புடன் அவனைப் பார்த்தாள். பிறகு புன்னகையுடன், ‘அப்படி கேளு.. என்ன கேக்கப் போறே?’ என்றாள்..

‘என்னால மைதிலிக்கு ஏதாச்சும் நல்ல செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? உண்மைய சொல்லுங்க.’

மாமியின் முகம் சட்டென்று மாறிப்போனது. ‘எதுக்குடா இப்ப இந்த கேள்விய கேக்கறே? இது அந்த பொண்ணோட பழகுறதுக்கு முன்னாலல்லே தோனியிருக்கணும்?’

சீனி சோகத்துடன் தலையை அசைத்தான். ‘நீங்க சொல்றது சரிதான் மாமி.. எப்போ மைதிலி என்னெவிட அதிகம் படிச்சவள்னு எனக்கு தெரிஞ்சிதோ அப்பவே அவளோட ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிருக்கணும்.. அம்மாவும், வத்சும் இத சொன்னப்பல்லாம் கோபப்பட்டிருக்கேனே தவிர அதுலருந்த உண்மைய நான் புரிஞ்சிக்கவேயில்ல மாமி.. இப்போ எனக்கு தோனுது.. அதுவும் மைதிலியோட அப்பா மைதிலிய எங்களுக்கு விட்டுக் கொடுத்துடேன் ஃபோன்ல கெஞ்சினப்போ.. ஒன்னால எம் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சிக்குடுக்க முடியாது சீனின்னு அந்த அங்கிள் எங்கிட்ட சொன்னப்போ.. அவர் சொன்னது நெஜம்தான் மாமி.. I am a waste.. misfit.. மைதிலிக்கு என்னால நல்லதா எதையுமே செய்ய முடியாது மாமி...’ மேலே தொடர முடியாமல் குரல் நடுங்க.. உதடுகளைக் கடித்து துக்கத்தை விழுங்க அவன் படும் பாட்டை பார்த்துக்கொண்டு நிற்க முடியாமல் சிவகாமி மாமி பொங்கி வந்த அழுகையை அடக்க முயன்று தோற்றுப்போய் அறையை விட்டு வெளியேறி வாசலில் சற்று நேரம் நின்றாள்..

சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்த சீனிவாசன், ‘மாமி..’ என்றான்.. ‘அம்மாவுக்கு உடனே ஃபோன் செஞ்சி வரச் சொல்லுங்களேன்.. நான் உடனே சென்னைக்கு போயிரலாம்னு பாக்கேன்.’

அறை வாசலில் நின்றிருந்த மாமி அறைக்குள் நுழைந்து அவனை நெருங்கினாள். ‘எதுக்குடா சீனி அவசரப்படறே? மைதிலியோட அப்பா என்ன சொன்னா என்ன, மைதிலிதானே நோக்கு முக்கியம்? அவளாண்ட ஒரு வார்த்த சொல்லிக்காம நீ புறப்பட்டு போறது நல்லாருக்காடா? நீ செய்யறது சரின்னே வச்சிக்கோ.. அவள கூப்ட்டு சொல்லிட்டு போறதுதான மொற? ஒங்கம்மாவ கூப்ட்டு வேணும்னா யோசன கேளு.. ஆனா திடுதிடுப்புன்னு இந்த மாதிரி முடிவு எடுக்காத.. ஒங் கொணம் தெரிஞ்சித்தான் சொல்றேன்.. ஒன்னால அவள மறந்துட்டு இருந்துர முடியாதுன்னு நேக்குத்தாண்டா தெரியும்..’

சீனிவாசன் என்ன பதில் பேசுவதென மவுனமாய் அமர்ந்திருக்க சிவகாமி மாமி அவனை நெருங்க அவனுடைய முடியை பாசத்துடன் கோதிவிட்டாள். ‘டேய் சீனி.. என்ன முடிவெடுக்கணும்னு ஆற அமர யோசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு. நா மைதிலிய ஃபோன்ல கூப்ட்ட சாயந்தரமா ஆத்துப் பக்கம் வாடிம்மான்னு சொல்றேன்.. அவ வரட்டும்.. நீங்க ரெண்டு பேருமா ஒக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ.. இப்ப சாப்டு.. நா குடிக்க ஜலம் கொண்டாரேன்..’

அடுத்த நொடியில் கையில் குளிர்ந்த நீருடன் மாமி திரும்பி வர தன் முன்னே இருந்த மேர் கரைசலைக் குடித்துவிட்டு ஆயாசத்துடன் படுக்கையில் சாய்ந்தான் சீனிவாசன்..

அவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்ற மாமி ஒரு நீண்ட பெருமூச்சுடன் சமையற்கட்டை நோக்கி செல்லும் வழியில் ஹாலில் தொலைப்பேசி ஸ்டாண்டில் இருந்த தொலைப்பேசி குறிப்பேட்டில் இருந்த மைதிலியின் செல் ஃபோனுக்கு டயல் செய்து காத்திருந்தாள்..

தொடரும்..