25.5.07

நாளை நமதே - 4

'கங்கிராஸ்டி ப்ரியா'

ஏதோ நினைவாக இருந்த ப்ரியா திடுக்கிட்டு தன் தாயைப் பார்த்தாள்.

'என்னத்தடி யோசிச்சிண்டுருக்கே... ஏன் ஒரு மாதிரியா இருக்கே... நீ எதிர்பார்த்த மார்க்தான் வந்துருக்குல்லே...' என்றாள் மாலதி.

ப்ச்... என்றாள் ப்ரியா சுவாரஸ்யமில்லாமல்... 'என்னம்மா பிரயோசனம்? யூனிவர்சிட்டியில நிச்சயம் கிடைக்கப் போறதில்ல...'

மாலதி வியப்புடன் தன் மகளைப் பார்த்தாள். 'ஏன் அப்படி சொல்றே... நீதான் 290 வாங்கியிருக்கே இல்ல?'

'நீ ஒன்னும்மா... ராங்க் லிஸ்ட் வர்றப்ப பார்.... நாம என்ன SCயா BCயா? பாய்ண்ட் ஃபை மார்க்ல கூட சீட் கிடைக்காம போயிரும்..'

மாலதிக்கு ப்ரியா சொல்ல வந்தது புரிந்தாலும் ஆதரவாக, 'போட்டும் விடு... கவர்ன்மெண்ட் காலேஜ் இல்லன்னா செல்ஃப் ஃபைனான்ஸ் காலேஜ்... அதான் இருநூறுக்கு மேல இருக்கே... மெட்றாஸ்லயே எத்தன இருக்கு? எதுலயாச்சும் ஒன்னுல கிடைக்காமயா போயிரப் போவுது? என்ன அடிஷனலா கேப்பிட்டேஷன்னு ஏதாச்சும் கேப்பான்... குடுத்துட்டா போச்சி....' என்றாள்.

ப்ரியா ஓரக்கண்ணால் தன் தாயைப் பார்த்தாள்... என்ன ஈசியா சொல்றா பார்.... அந்த ஆள்கிட்டருந்து கறந்துறலாம்னு நினைக்கறா போலருக்கு...

மாலதிக்கு தன் மகளுடைய பார்வையின் பொருள் விளங்கத்தான் செய்தது.... இருப்பினும் மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாமல் டி.வியை ஆன் செய்தாள்...

மாலதியையும் ப்ரியாவையும் பார்த்தால் தாய்-மகள் என்று இனம் கண்டுக்கொள்வது சிரமம். 'ஒங்க ரெண்டு பேரையும் பாத்தா அக்கா-தங்கை மாதிரிதான் தெரியுது.' இது வழக்கமாக கேட்கும் பல்லவி... ஆனால் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அவளுக்கு...

அவளுடைய அலுவலக நண்பிகள் சற்று மேலே போய், 'மாலதி நீங்க ஒங்க பொண்ணோட சேந்து போகாம இருக்கறதுதான் நல்லது. ஒங்க நிஜ வயசு தெரியுது.' என்பார்கள்.

'என்ன பண்றது? எனக்கு கல்யாணம் ஆகறப்போ எனக்கு பதினெட்டு முடிஞ்சி ஒன்னோ ரெண்டோ மாசந்தான்...' என்று சலித்துக்கொள்வாள்..

அப்பாவுக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு நினைப்பு. அவராவே 'இன்னைக்கோ நாளைக்கோ நான் செத்துப் போயிருவேன்' என்று கற்பனை செய்துக்கொண்டு 'அதுக்குள்ள மாலதிக்கி ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துட்டா நல்லதுன்னு நேக்கு படறது.' என்று சொல்லி சொல்லியே அவளுடைய தாயை மிரட்டி திருமணம் முடித்து வைத்தார்.

ஆனால் என்ன நடந்தது? மாலதியின் திருமணம் முடிந்து அடுத்த பத்தாவது மாதமே ப்ரியா பிறந்து... அவள் யூகேஜி தாண்டி முதல் வகுப்புக்குள் நுழையும் வரை உயிரோடு இருந்தார் அப்பா. ஆனால் மாலதியின் அம்மாதான் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மண்டையைப் போட்டா.

ஆற அமர அமர்ந்து முடிக்கும் திருமணங்களே அடுத்து வரும் சில வருடங்களில் நிலைகுலைந்துப் போக மாப்பிள்ளை பார்ப்பதிலிருந்து மணவறை வரை ஆறே மாதத்தில் முடிக்கப் பட்ட திருமணமாயிற்றே...

சந்தேகம்.... தேகம் முழுவதும் சந்தேகம்... கருவிலிருந்ததையே தன் குழந்தையில்லை என்று மறுக்கும் அளவுக்கு சந்தேகம் அவளுடைய கணவனுக்கு...

மாலதிக்கு தன்னுடைய அழகில் எப்போதுமே கர்வம் உண்டு... அப்பாவைப் போலவே அகன்ற தோள்கள், ஐந்தடி ஏழங்குல உயரம்... இடுப்பு வரை நீண்ட கருகருவென்ற முடி... எல்லாவற்றிற்கும் மேலாக காண்பவர்களை மயக்குகின்ற கண்கள்....

மாலதிக்கு பள்ளிப் பருவத்திலேயே அனேக நண்பர்கள்.... கும்பகோணத்தில் அவளுடைய பள்ளி பெண்கள் பள்ளி என்றாலும்... அவளுடைய நண்பர்கள் என்னவோ அதே பகுதியிலிருந்த ஆண்கள் பள்ளி மாணவர்கள்தான்...

'ஏய் என்னடி இது ஆம்பிளை பிள்ளையாட்டம்? எதுக்கு எவனெவனோ ஒன்னெ ஃபோன்ல கூப்புடற அளவுக்கு வச்சிக்கறே? ஒன்னெ மாதிரிதான நம்ம காலனியிலருக்கற பொம்பளை பசங்களும் பழகறதுகள்? அவா ஆத்துல இப்படியா நடக்குது... இது நல்லா இல்லை... சொல்லிட்டேன்.. பின்னால வருத்தப்படாத.' என்பார் அவளுடைய அம்மா.

ஆனால் அதை கண்டுக்கொள்ள மாட்டாள் மாலதி. அவளுக்கு அதில் ஒரு இனம்தெரியாத மகிழ்ச்சி கிடைப்பதை உணர்ந்தாள். 'வேணாம்டி.. நீ செய்யறது நல்லால்லை... எவன் லெட்டர் குடுத்தாலும் பல்ல இளிச்சிக்கிட்டு வாங்கிக்கறே... எதுக்குடி? வந்தமா, படிச்சமா போனமான்னு இல்லாம...' என்பார்கள் நண்பிகள்...

'இதுலருக்கற கிக் ஒங்களுக்கு என்னடி தெரியும்... அவனவன் மாலதி, மாலதின்னு பைத்தியமா அலையறப்போ... ஒங்களுக்கெல்லாம் சொன்னா புரியாதுடி' என்பாள் பதிலுக்கு.

ஆனால் எந்த ஒரு சூழலிலும் தன்னை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தாள்.... பாக்க வச்சி ஏங்க வைக்கணும்... அதுலதான் கிக்கே....

பொம்பள சிரிச்சா போச்சி புகையில விரிச்சா போச்சிங்கறது பழைய மொழி.. .... பொம்பள சிரிச்சா மட்டும் ஒன்னும் போயிறாது... புகையில மாதிரி விரிஞ்சா.... அப்பத்தான் வம்பு... அதனால அதுலதான் நாம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்.... என்பது அவளுடைய புதுமொழி...

அவள் வயதுக்கு வந்ததிலிருந்து அவளுடைய அழகு மேலும் மெருகேற இவளை இப்படியே விட்டு வைத்தால் நிச்சயம் குடும்பத்திற்கு அவப்பெயரைக் கொண்டு வந்துவிடுவாள் என்பதை உணர்ந்தனர் மாலதியின் அப்பாவும் அம்மாவும்..

அதற்காக அவளுடைய தந்தை கையில் எடுத்த ஆயுதம்தான் மார்புவலி.... அப்படித்தான் நினைத்தாள் மாலதி... 'இங்க பார்ப்பா... நீ இப்பத்தைக்கெல்லாம் சாகமாட்ட... நீ நெஞ்சுவலின்னு சொல்றதெல்லாம் என்னெ கல்யாணம் பண்ணி அனுப்புறதுக்குத்தான்னு நேக்கு நன்னாவே தெரியும்... இதெல்லாம் அம்மா சொல்லிக்கொடுத்த ப்ளான்தானே....' என்பாள் மாலதி சிரித்தவாறு...

அதற்காகவே ஒருநாள் மாலைப் பொழுதில் தன்னுடைய மார்பைப் பிடித்துக்கொண்டு மூர்ச்சையாகி விழுவதைப் போல் நடித்தார் மாலதியின் தந்தை தன்னுடைய மனைவியிடமும் சொல்லாமல்... அவருடைய நடிப்பு அத்தனை தத்ரூபமாக இருந்ததோ என்னவோ மாலதியின் அம்மா மட்டுமல்ல அவளும் கூட பயந்துப்போனாள்...

நல்லவேளையாக ஏற்கனவே குடும்ப மருத்துவரிடம் கூறிவைத்திருந்தார். அவரும், 'சரி நல்ல காரியத்துக்காகத்தானே... நீ சொல்றபடியே நானும் நடிக்கிறேன்...' என்று ஒத்துக்கொண்டு, 'இங்க பார் மாலதி... மாமாவுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு... மாத்திரையும் சரியா சாப்பிடறதில்லை... இதுல ஒன்னெ பத்திய கவல வேற... எல்லாமா சேர்ந்து... இது மைல்ட் அட்டாக்தான்.. ஆனா மறுபடியும் இன்னொரு அட்டாக் வராம பாத்துக்கறது ஒங் கையிலதான் இருக்கு...' என்றார் நிஜமான கரிசனையுடன்...

'இப்ப நோக்கு திருப்திதானடி... எத்தன தரம் தலபாடா அடிச்சின்டேன்... என் கழுத்துலருக்கற தாலி எறங்காம இருக்கணும்னா ஒங் கழுத்துல தாலி ஏறியாவணும்... சொல்லிட்டன்.' என்றாள் அம்மா...

எத்தனை கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படம் பார்த்திருப்பாள்... அவருடைய படங்களில் ஒன்றிலிருந்த இந்த வசனம்தான் அவளுக்கு மிகவும் பிடித்தது.... சமயத்தில் கைகொடுத்தது!

வேறு வழியில்லாமல் மாலதி சம்மதிக்க அடுத்த சில மாதங்களில் அப்பாவின் பால்ய சிநேகிதர் வழியாக தஞ்சையிலிருந்து வந்த பையன்தான் வேணு....

வேணுவைப் பார்த்ததுமே இவன் சரியான கல்லுளிமங்கனாருப்பான் போலருக்கே என்று நினைத்தாள் மாலதி.. என்னமோ பாக்காததா பாத்துட்டா மாதிரி.. இவன் முழியே சரியில்லையே....

உண்மைதான். வேணு என்கிற வேணுகோபால் மாலதியைப் பார்த்ததுமே இத்தனை அழகான பெண்ணா என்று மலைத்துத்தான் போனான்.. அதே சமயம்... தனக்கு இவள் எந்தவிதத்திலும் உகந்தவள் அல்ல என்றும் நினைத்தான்... யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு கெளம்பும்மா என்று கிசுகிசுத்தான் தன் தாயிடம்...

ஆனால் விதி யாரைவிட்டது... 'எதுக்குடா யோசிக்கறது? பொண்ணு தங்க விக்கிரகம் மாதிரி இருக்கா... யோசிக்கிறானாம்..' என்றாள் அவனுடைய அம்மா.. மாலதிக்கு வேணுவைப் பிடித்ததோ இல்லையோ வருங்கால மாமியாரை சுத்தமாய் பிடிக்கவில்லை...

'நேக்கு இந்த பையனையும் பிடிக்கலை.. அந்த மாமியையும் பிடிக்கலை....' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுதான் மிச்சம்... அப்பாவும் அம்மாவும் மசியவில்லை... இவந்தான் மாப்பிள்ளை என்று பிடிவாதமாய் அடுத்த முகூர்த்தத்திலேயே முடித்து வைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார் அப்பா..

வாக்கப்பட்டு புகுந்த வீட்டில் வாழச் சென்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே 'இங்க பாக்காத, அங்க பாக்காத... கண்ணுல மையி எதுக்கு... சடையில குஞ்சம் வேணாமே' என்ற வேணுவையும் நின்னா குத்தாம் இருந்தா குத்தம் என்ற மாமியாரையும் அறவே பிடிக்காமல் போனது மாலதிக்கு....

'எனக்கு அங்க இருக்கப்பிடிக்கலப்பா... இனி நா இங்கதான்.. என்னெ திரும்பிப் போன்னு கம்பெல் பண்ணா... கிணத்துல குதிச்சிருவேன்...' என்று அவள் திரும்பி வந்தபோது அவர்கள் குடியிருந்த காலனியே வேடிக்கைப் பார்த்தது..

அப்பா அவளை திருமணம் செய்து வைக்க நெஞ்சு வலி என்று நடிக்கத்தான் செய்தார்... ஆனால் சரியாய் ஒரு மாதத்திற்குள் அவள் சுவரில் அடித்த பந்தாய் திரும்பிவந்தபோது அம்மா 'நெஞ்ச என்னவோ செய்யிதுங்க' என்று சரிந்து விழுந்து நிஜமாகவே மரித்துபோனாள்...

அதற்குப் பிறகும் மாலதி தன் மனதை மாற்றிக்கொள்வதாயில்லை... அடுத்த சில வாரங்களில் அவள் கருவுற்றிருப்பது தெரிந்ததும், 'இனியும் பிடிவாதம் பிடிக்காத மாலதி... நா வேணும்னா மாப்பிள்ளை கிட்ட பேசறேன்..' என்றார் அப்பா... அவள் மறுத்ததை பெரிதுபடுத்தாமல் அவரும் வேணுவை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.

'என்னப்பா என்ன சொல்றார் ஒங்க அருமை மாப்பிள்ளை?' என்றாள் மாலதி அவர் திரும்பி வந்ததும்...

'நீ செத்த நாளைக்கு எங்கூடவே இரு... நாந்தான் அவசரப்பட்டுட்டேன் போலருக்கு....'

அவருடைய குரலிலிருந்த சோகம் அவளை உசுப்பி விட அடுத்த நாளே அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வேணுவை தேடிப் போனாள்... 'என்ன சொன்னேள் அப்பாட்ட....?' என்றாள் ஆவேசத்துடன்..

வேணு அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு...'நா அவளோட சேந்து இருந்ததே ரெண்டு வாரம் கூட இருக்காதேன்னு சொன்னேன்...' என்றான் எகத்தாளமாக...

'ச்சீ...' என்று காறி உமிழ்ந்துவிட்டு வந்தவள்தான்... அடுத்த நாளே அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்துவிட்டு தன்னுடைய தந்தையுடன் சென்னையை நோக்கி பயணமானாள்....

பதினெட்டு வருசம்....

மாலதியின் வாழ்க்கையில் திருமணம் ஒருமுறைதான்...... ஆனால் உறவுகள்...... அதற்கு பஞ்சமிருக்கவில்லை... நாற்பது வயதிலும்.... மகளே வெறுக்கும் அளவுக்கு..... 'இதுல ஒன்னும் தப்புருக்கறதா எனக்கு படலை.... ஒன்னெ கரையேத்தணும்... அதான் என்னோட கோல்... அதுக்கப்புறம்... நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்...'

'அம்மா... எந்த லோகத்துலருக்கே... ஒன் செல்ஃபோன் ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டிருக்கு....'

மாலதி திடுக்கிட்டு டீப்பாயில் கிடந்த செஃல்போனை பார்த்தாள்.... பிறகு திரும்பி தன் மகளைப் பார்த்தாள்... ப்ரியா புரிந்துக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தாள்...

'சொல்லுங்கோ....' என்றாள் மாலதி செல்ஃபோனில்... 'ஆமா வந்துருச்சி... 290... முன்னூறுக்குதான்.. ஆனா கவர்ன்மெண்ட் காலேஜ்ல கிடைக்காதுங்கறா... என்னது? சரி... அதான் நானும் சொன்னேன்... அங்கிள் பாத்துப்பாருன்னு.... வீக் எண்டுல வாங்கோ...'

'இந்தாள் பணத்துல நா படிக்கணுமாக்கும்?' என்று முனுமுனுத்தாள் ப்ரியா படுக்கையில் விழுந்தவாறு... அவளையுமறியாமல் கண்கள் நிறைந்து கன்னத்தில் வழிந்தது....

தொடரும்...

4 comments:

said...

அருமையான எழுத்தாளருக்கு அல்வாத்துண்டு மாதிரியான அருமையான கதைக்களன். ஜமாயுங்கள். இனிவரும் நாட்கள் நம்முடையதே.

கதாபாத்திரங்களின் அணிவகுப்பு அட்டகாசமான ஆரம்பம்....

said...

வாங்க கிருஷ்ணா,

அருமையான கதைக்களன். //


அப்படி நினைத்துத்தான் இறங்கியிருக்கிறேன்...

படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்...

said...

good story saarvaal,

ellameh superah iruku... keep posting....

said...

வாங்க ஆணி,

keep posting.... //

முடிஞ்ச அளவுக்கு... வாரத்துல மூனு நாளாவது எழுதணும்னு ஆசைதான்...

பார்ப்போம்...:-)