25.1.07

சூரியன் 169

சீனியை வைத்திருந்த இடத்திற்குச் சென்றடைந்த ரெபேரோ அவனைக் கண்டதுமே சலிப்புடன் உதட்டைச் சுழித்தார். அவன் அவரை நேரடியாக பார்த்த பார்வையிலேயே ‘இவன் ஒரு அப்பாவி’ என்பதை உணர்ந்தார். இவன் எப்படி? அடுத்ததாக அவனுடைய காலிருந்த மாவு கட்டைப் பார்த்தார்.

அவருடைய நேரம் வீணாவதை உணர்ந்த ரெபேரோ எரிச்சலுடன் தன்னுடைய அதிகாரிகளைப் பார்த்தார். ‘இதர் க்யா ஹோ ரஹா ஹை? Who is he? Why did you bring him here? He is not the guy yar.. What a waste of time..?’

அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் அவரையே குழப்பத்துடன் பார்த்தனர். தங்களுடைய கண்களுக்கு குற்றவாளியாக தெரியும் இந்த மதராஸி இவருக்கு மட்டும் எப்படி குற்றமற்றவனாகத் தெரிகிறார்?

‘சார்.. I think he is clever in presenting an innocent face.. He did not resist our arrest at all Sir.. He acted as if he was expecting us..’

ரெபேரோ தன்னுடன் பேசிய அதிகாரியை ஏளனத்துடன் பார்த்தார். ‘Did you retrieve the mobile phone from him?’

அதிகாரி அடிபட்டவர்போல் அவரையும் தன்னுடன் நின்றிருந்த மற்ற சக அதிகாரிகளையும் பார்த்தார். ச்சை.. நமக்கு ஏன் இது தோனாமல் போனது என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை.. அதே கோபத்துடன் சீனியை நெருங்கி அவனை கன்னத்தில் ஒரு அறை விட்டார். ‘நிக்காலோ..’ என்று உறுமினார்.

சீனிவாசன் அறை வாங்கிய வேதனையில் கண்களில் கண்ணீருடன் அவரைப் பார்த்தான். பதில் பேச முடியாமல் திணறினான்.

ரெபேரோ உறுமினார். ‘Don’t ask him.. I will tell you.. He does not have it with him.. He has lost it.. Am I right boy?’

சீனிவாசனுக்கு உயிர் வந்தது. நன்றியுடன் அவரைப் பார்த்தான். ஆமாம் என்று தலையை அசைத்தான்.

‘When did you lose it?’ என்றார் ரெபேரோ நேரடியாக அவனைப் பார்த்து. அவருடைய குரலிலிருந்த கனிவு குழுமியிருந்த விசாரனை அதிகாரிகளை சங்கடப்படுத்தியது. குற்றவாளியிடமிருந்து தகவலை வரவழைக்க அவர் செய்யும் தந்திரமோ இது என்ற நினைப்பில் ஒருவரையொருவர் பார்த்தனர்.

‘Two days back Sir..’ என்ற சீனிவாசன் கடந்த ஞாயிறன்று சயான் சந்திப்பில்  மயக்கமுற்று விழுந்ததையும் அப்போது தன்னுடைய செல் ஃபோன் தொலைந்துபோனதையும் விளக்கிவிட்டு அதற்கு சாட்சி தன்னுடைய தோழி என்று கூறலாமா என்று ஒரு நொடி சிந்தித்துவிட்டு அடுத்த நொடியே வேண்டாம்.. மைதிலியின் பெயரை இதில் இழுத்துவிடுவது நல்லதல்ல என்று தீர்மானித்தான்.

‘See..’ என்றார் ரெபேரோ தன் அதிகாரிகளைப் பார்த்து. ‘Get the contact number of the doctor who had treated him on that day and take his statement..’ பிறகு சடாரென்று திரும்பி சீனிவாசனைப் பார்த்தார். ‘Have you lodged any complaint with the police?’

இல்லை என்று தலையை அசைத்த சீனியைப் பார்த்து அனுதாபத்துடன் புன்னகைத்தார் ரெபேரோ.. ‘You appear to be an educated person.. You should have known that.. Had you reported the loss of your cell phone to the police my people would not have picked you up.. Anyway.. Please put it in writing and give it to my men..’ என்றார். ‘Do you have by any chance that MIME number of your cell phone at home or at least do you know what it is?’

சீனிவாசன் உற்சாகத்துடன் தலையை அசைத்தான். ‘Yes Sir.. I’ve it in my laptop.. I would have lodged a complaint on the same day but for this mishap.. I had to stay in the clinic for most part of the day yesterday..’

ரெபேரோ புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘Never mind.. These people would take a statement from you and drop you at your house.. Get the MIME number of your cell phone and hand it over to them.. You should be available anytime in case they need your assistance.. Is that clear?’

‘Yes Sir..’ என்றான் சீனிவாசன் உடனே.

‘You can go now..’ என்றவாறு ரெபேரோ வாசலை நோக்கி கண்சாடைக் காட்ட சீனிவாசன் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான்.

இத்தனை எளிதில் இந்த மதராசியை விடவேண்டுமா என்பதுபோல் அவரைப் பார்த்த தன்னுடைய அதிகாரிகளை கேலியுடன் பார்த்தார் ரெபேரோ.

‘You must have thought that you have solved the case.. Is it not?’ என்றார் ஒரு கேலிப் புன்னகையுடன். ‘Do you honestly think those guys would have used a Madrasi Brahmin for this? Stupid.. Take him to his house. Pass on the MIME number of his phone to the service provider and find out from which area the call came to our control room.. Quick.. I should get the details in the next half hour..’ என்றவாறு தன்னுடைய வாகனத்தை நோக்கி மிடுக்குடன் நடந்த ரெபேரோவையே பார்த்தான் சீனிவாசன் அவனுடைய கவனக்குறைவால் அவனுடைய குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தை உணராமல்..

******

எதிர்முனையிலிருந்த வந்த கவலையற்ற சிரிப்பு மைதிலியைக் கவலைக்கொள்ள வைத்தது.

கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியில் சீனியின் மனநிலை ஒருவேளை பாதிக்கப்பட்டிருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றியது.

தன் எதிரில் நின்ற ராஜகோபாலன் தன்னையே கேள்விக்குறியுடன் பார்ப்பதை பொருட்படுத்தாமல். ‘ஏய் சீனி.. விளையாடாதே.. நீ இப்போ எங்கருக்கே? யாரோட ஃபோன் இது?’ என்றாள் பதற்றத்துடன்.

‘வீட்லதான்.’

‘வீட்லயா? ஒன்னெ விட்டுட்டாளா, எப்படி?’

ராஜகோபாலன் ஒருவித நிம்மதி புன்னகையுடன் திரும்பிச் செல்வதைக் கவனித்த மைதிலி ‘என்னாச்சி சீனி, ஒன்னெ எதுக்காக போலீஸ் பிக்கப் பண்ணா? தெளிவா மொதல்லருந்து சொல்லு..’ என்றாள் வலுடன்.

‘சரி.. அதிருக்கட்டும். நான் சொல்லப் போறத கேளு முதல்ல. நா பாக்கறதுக்கு பிராமின் மாதிரி இருக்கேன் போலருக்கு.. ஒரு டாலண்டெட் போலீஸ் டிஜிபியே சொன்னார்னா பாத்துக்கயேன்.. So, after all you are going to marry only a Madrasi Brahmin..’ சமயசந்தர்ப்பம் தெரியாமல் சிரிக்கும் அவனுடைய கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று நினைத்தாள் மைதிலி.

அவளுடைய பதற்றத்தைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்த சீனியின் குரலைக் கேட்டவாறே அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் மைதிலி. சயான் சதுக்கத்துக்கருகே வாகனங்களின் மத்தியில் அவள் விட்டுவைத்திருந்த இரு சக்கர வாகனத்தை உடனே சென்று மீட்காவிட்டால் அதுவே தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதென்பதை உணர்ந்தவளாய். முடிந்தால் அதிலேயே சீனியைச் சென்று சந்தித்துவிட்டு வரவேண்டும் என்றும் நினைத்தாள்.

******

ஜோவும் சபரியும் சென்னைப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சென்றடைந்தபோது மாலை நான்கு மணியாகியிருந்தது.

ஃபிலிப் சுந்தரம் தன்னிடம் அளித்திருந்த அட்டையை வாயிலில் நின்றிருந்த காவலரிடம் காட்டி அவரை சந்திக்க விரும்புவதாக கூறினான்.

‘இப்படியே போயி ரைட் சைட்லருக்கற வராந்தாவுல போங்க. ஒரு நாலஞ்சி ரூம் தாண்டி ஒரு பெரிய ஹால் வரும். அங்கதான் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கு. வாசல்லருக்கற செண்ட்ரிகிட்ட இத குடுங்க. தனபால் சார் ஃப்ரீயாருந்தா பாக்கலாம். இல்லன்னா மீட்டிங் முடிஞ்சித்தான் பாக்க முடியும்.’

ஜோ தயக்கத்துடன் தன்னருகில் நின்றிருந்த சபரியைப் பார்த்தான். அவர் சரியென்று தலையை அசைக்க இருவரும் காவலர் கூறிய ஹாலையடைந்து வாசலில் நின்றிருந்தவரிடம் அட்டையைக் காட்டி தங்களுடைய வருகையின் நோக்கத்தை தெரிவித்தனர்.

அவர் யோசனையுடன் அட்டையையும் தன்னெதிரில் நின்றிருந்த இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘சார்.. மும்பையில நடந்த வெடிகுண்டுக சம்பந்தமா சிட்டி போலீஸ் ஆஃபீசர்ஸ் எல்லாரையும் கூட்டி வச்சி கமிஷனர் மேடம் முக்கியமான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்துக்கிட்டு இருக்காங்க. அதனால தனபால் சாரால ஒங்கள பாக்க முடியுமான்னு சந்தேகம்தான். கேட்டுச் சொல்றேன். நீங்க அந்த சேர்ல ஒக்காருங்க.’

சரியென்று தலையசைத்தவாறு சற்று தள்ளி அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அவர்கள் இருவரும் அமர்ந்து காத்திருந்தனர்.

உள்ளே சென்ற காவலர் திரும்பிவரவே கால் மணி நேரத்துக்கு மேலானது.

‘என்ன ஜோ, ஒன்னும் முடியாது போலருக்கே. நேரா போயி அந்த எஸ்.ஐ கிட்டயே பேசி பாக்கலாமா? இல்லன்னா நம்ம சீனியருக்கு யாரையாச்சும் தெரியுமான்னு கேக்கலாம். இங்க வெய்ட் பண்ணி ஆறு மணிக்கு மேல ஆயிருச்சின்னா அப்புறம் அந்த எஸ்.ஐய பார்த்தாலும் இன்னைக்கி ஒன்னும் முடியாமப் போயிரும். அதனாலத்தான் சொல்றேன்.’ என்றார் சபரி.

ஜோவுக்கும் அதுதான் சரியென்று தோன்றவே இருவரும் எழுந்து நிற்கவும் வாசலில் நின்றிருந்த காவலர் திரும்பிவரவும் சரியாக இருந்தது.

அவரைப் பார்த்ததுமே ஜோ ஆவலுடன் அவரை நெருங்கி, ‘என்ன சார் பார்க்க முடியுமா?’ என்றான்.

அவர் உதட்டைப் பிதுக்கியதும் சோர்ந்துப் போனான். ‘சாரிங்க.. சார் இன்னைக்கி பாக்க முடியாதுன்னு சொல்லிட்டார். வேணும்னா ராத்திரி எட்டு மணிக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.’ என்றவாறு அட்டையிலிருந்த ஒரு எண்ணைச் சுட்டிக்காட்டிய காவலரிடம் தலையை அசைத்துவிட்டு சபரியைப் பார்த்தான். ‘நம்ம ஸ்டேஷனுக்கே போய் பாக்கலாம் சார்.’

‘என்ன சார் எதுவும் கேஸ் விஷயமா?’ என்ற காவலரைப் பார்த்தனர் இருவரும்.

இவரிடமே வந்த விஷயத்தைக் கூறியிருக்கலாமோ என்று நினைத்த ஜோ, ‘ஆமாங்க.. எங்க பேங்க் மேனேஜர தேவையில்லாம அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்த விஷயமாத்தான் சார பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தோம்.’ என்றான்.

காவலர் சலிப்புடன் அவனைப் பார்த்தார். ‘என்ன சார் முதல்லயே எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொல்ல வேண்டாமா? என்ன விஷயம்னு சொல்லியிருந்தா ஒருவேள எஸ்.பி சார் ஒங்கள பார்த்திருப்பாரோ என்னமோ. இப்ப மறுபடியும் உள்ள போனா மேடம் திட்டுவாங்களோன்னு பயமாருக்கு சார். மத்த கமிஷனர்ங்க மாதிரியில்ல மேடம்.. மீட்டிங் நடந்துட்டுருக்கற நேரத்துல நாம உள்ள போனாலே திட்டுவாங்க. அதுல எஸ்.பி சார் வேற மேடத்துக்கு கைக்கு எட்டுற தூரத்துலயே ஒக்காந்திருக்காங்க. என்னயை என்னப் பண்ண சொல்றீங்க? எட்டு மணிக்கு மேல ஃபோன் போட்டு சொல்றதத் தவிர இப்போதைக்கு வேற வழியில்ல.. எல்லாம் ஒங்க நேரம். போங்க..’

ஜோ சபரியைப் பார்க்க, ‘சரி வாங்க.. பார்ப்போம்.’ என்றவாறு அவர் வாசலை நோக்கி நடக்க அவன் வேறு வழியில்லாமல் தன்னுடயை நேரத்தை நொந்துக்கொண்டு அவர் பின்னே நடந்தான்.

தொடரும்..















































24.1.07

சூரியன் 168

நந்தக்குமார் வியப்புடன் முரளியைப் பார்த்தான். ‘என்ன சொல்றே முரளி உன்னெ எதுக்காக ஆள் வச்சி அடிக்க நம்ம ஈ.டி முயற்சி பண்றார்னு நினைக்கறே? உங்கிட்ட அப்படின்னு யார் சொன்னா?’

முரளி கேலியுடன் சிரித்தான். ‘போன ஒரு வாரமாவே நம்ம ஈ.டி. சார் ரொம்பவும் டென்ஷனா இருக்கார் நந்து. முதல் காரணம் நம்ம புது சேர்மன் மாதவன் சார். அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாலருந்தே பெர்சனலா ஒத்துக்காதன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுக்காகவே மாதவன் சார் வெறுத்துப்போய் ரிசைன் பண்ணிட்டு போனார்னு நம்ம சுந்தரலிங்கம் சார் சொல்லி கேட்டுருக்கேன். அப்ப ரெண்டு பேரும் ஒரே பொசிஷன்ல இருந்திருக்காங்க. அத மனசுல வச்சிக்கிட்டு மாதவன் சார் சேர்மனா திரும்பியும் வராம இருக்கறதுக்கு இவர் படாத பாடு பட்டிருக்கார். ஆனா நம்ம டைரக்டர் ஒரு நாடார் இருக்காரில்ல.. அவருக்கும் இவர புடிக்காது. சோமசுந்தரத்துக்கும் இவர் சேர்மனானா என்னென்ன ஃப்ராடு பண்ணுவாரோன்னு நினைச்சிருப்பார் போல.. இவர் சொல்றத பெரிசு படுத்தாம மாதவன் சாரையே சேர்மனாக்கிட்டாங்க.’

‘சரி.. அதுக்கும் ஈ.டி ஒன்னெ அடிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’

முரளி சிரித்தான். ‘இருக்கு நந்து. பொறுமையா கேளு. மாதவன் சார் சேர்மனா சார்ஜ் எடுக்கற அன்னைக்கி ஏதாச்சும் லேபர் பிரச்சினை வந்தா நல்லாருக்கும்னு நினைச்சிருக்கார். இவருக்கேத்தா மாதிரி கல்கத்தாவுல நடந்த விஷயம்தான் ஒனக்கு தெரியுமே. அத சுமுகமா முடிக்கறதுக்கு அப்போ சார்ஜ்ல இருந்த சுந்தரலிங்கம் சார் என்னெ கூப்ட்டு ஏதாச்சும் செய்யேன் முரளின்னார். ஆனா ஈ.டி இடையில புகுந்து முரளி நீ கல்கத்தா போ ஆனா விஷயம் சுமுகமா முடியக்கூடாது. அதுக்கு என்ன செலவானாலும் நா தரேன்னார். ஆனா நானும் என் குடும்பமும் இந்த நிலைக்கு வந்திருக்கோம்னா அதுக்கு சுந்தரலிங்கம் சார் தான் காரணம். அவர் மட்டும் அன்னைக்கி எனக்கு வேலைய போட்டு குடுக்கலன்னா என் நிலைமை என்னாயிருக்கும்? அந்த நன்றி விசுவாசத்துக்கு மட்டுமில்ல நந்து எனக்கு இந்த ஈ.டிய எப்பவுமே புடிக்காது. வேலை ஆவற வரைக்கும் கால புடிப்பான். முடிஞ்சதும் கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டுருவான். மூர்த்தி சார் சேர்மனா இருந்தப்போ இவனெ வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தார். அந்த இடத்துல சுந்தரலிங்கம் சார் வந்தப்போ இவன் என்னெல்லாம் ஆட்டம் போட்டான்? நமக்கு ரெகுலரா கிடைச்சிக்கிட்டிருந்த ஓவர் டைம் கோட்டா எல்லாத்தையும் கெடுத்தவனாச்சே இவன். அதுமட்டுமா அஞ்சி வருசத்துக்குமேல ஒரே ஊர்ல வேலை செஞ்ச கிளார்க், பியூன் எல்லாரையும் 150 கிலோ மீட்டர் துரத்துக்கு அப்பால ஒரு அஞ்சி வருசம் வேலை செய்யணும்னு சொல்லி தூக்கியடிச்சவனாச்சே.. அந்த கடுப்பு எனக்கு. கல்கத்தாவுக்கு போயிவந்த  விஷயம்தான் ஒனக்கு தெரியுமே. அது சுமுகமா முடிஞ்ச விஷயத்தக்கூட நா இவர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லாம இருந்துட்டேன். அப்புறம் மாதவன் சார் சார்ஜ் எடுக்க வர்ற அன்னைக்கி காலைல நம்ம எச்.ஓ முன்னால ஒரு டெமோ பண்ண சொன்னார். ஆனா வாசகன் உட்பட இப்ப அது வேணுமா சார்னு சொன்னதால அதயும் இவர்கிட்ட சொல்லாமயே ட்ராப் பண்ணிட்டேன். அந்த கடுப்பு வேற. அத்தோட அன்னைக்கி சாயந்தரம் மாதவன் சாருக்கு ரிசெப்ஷன்  குடுத்தப்போ நம்ம வாசகன் ஈ.டி. முன்னாலயே சுந்தரலிங்கத்த பாராட்டி பேசியிருக்கார். எல்லாமா சேர்ந்து... இதுல என்ன தமாஷ் தெரியுமா? அவருக்கு அடியாளாருக்கற ரெண்டு பேருமே நம்ம ஊர் ஆளுங்க. அது அவருக்கு தெரியாது போலருக்கு.’

நந்தக்குமார் தன் காதுகளையே நம்பமுடியாமல் அமர்ந்திருந்தான். இத்தகைய சித்து விளையாட்டுகளெல்லாம் கேரள மார்க்சிஸ்ட் பார்ட்டியோட ட்ரேட் மார்க் என்றுதான் இதுவரை நினைத்திருந்தான். இப்போது இது தமிழ்நாட்டிலும் பரவ ஆரம்பித்துவிட்டதுபோலிருக்கிறது. என்ன இருந்தாலும் ஈ.டியும் சரி, முரளியும் சரி அவனைப் போன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் கேரளத்தைச் சார்ந்தவர்களாயிற்றே? பிறவிக் குணம் எப்படி மாறும்?

‘சரி முரளி. இப்ப அந்த நியூஸ் ஐட்டத்த நீ ஃபேக்ஸ் பண்ண விஷயம் யாருக்கும் தெரியாதில்ல. அத கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.அத்தோட உன் கிட்ட டிஸ்கஷன் பண்றதுக்கு இன்னொரு விஷயமும் இருக்கு. அதப்பத்தி பேசிட்டு போகலாம்னு வந்தா நீ என்னென்னவோ சொல்லி.. வந்த விஷயமே மறந்துபோச்சி.’

முரளி உரக்கச் சிரித்தான். ‘அந்த ஃபேக்ஸ் விஷயத்த நம்ம சுபோத் போட்டு உடைச்சிட்டான். பாவம் அவனெ குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லை. நம்ம ஃபிலிப் சார் ரொம்ப சாமர்த்தியமா அவன்கிட்டருந்து விஷயத்த வரவழைச்சிருக்கார். அது கெட்டக்கடும் நீ ஏதோ சொல்ல வந்தியே என்ன அது?’

‘எனக்கும் நளினிக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல ஆகியும் எங்களுக்கு இதுவரைக்கும் இஷ்யூ இல்லேன்னு ஒனக்கு தெரியுமில்ல?’

‘ஆமா அதுக்கென்ன இப்போ?’

நம்ம வந்தனா மேடத்துக்கிட்ட நளினி இதப்பத்தி  சொல்லியிருப்பாபோலருக்கு. மேடம் ஒடனே இங்க எனக்கு தெரிஞ்ச ஜைனக்காலஜி  டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட போனா கண்டிப்பா குழந்தை பிறக்கும். தேவைப்பட்டா டெஸ்ட் ட்யூப் பேபிம்பாங்களே அந்த மாதிரி கூட ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்களாம். அதுக்கு நான் எர்ணாகுளத்துல இருக்கேனேன்னு நளினி சொல்லியிருக்கா. அதுக்கென்ன நா இங்கயே ஏதாவது ஒரு பிராஞ்சில ஒன்னெ போடச் சொல்றேன்னு சொல்லி நம்ம பல்லாவரம் சி.எம் மாணிக்கவேல் சார்கிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டாங்க. நேத்து நம்ம ஃபிலிப் சார்கிட்டயும் பேசிட்டாங்க. அதத்தான் ஒங்கிட்ட சொல்லிட்டு அப்படி செய்யறதுனால நம்ம அசோசியேஷன் ஆக்ட்டிவிட்டீசுக்கு ஏதாச்சும் பிரச்சினை வந்துருமான்னு டிஸ்கஸ் பண்ணிட்டுப் போலாம்னு வந்தேன்.’

முரளி கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான் சிறிது நேரம். தன்னுடைய யோசனையில் அவனுக்கு உடன்பாடில்லை என்பது அவனுடைய மவுனத்திலிருந்து தெளிவாக விளங்கியது நந்துவுக்கு.

‘நீ மேனேஜ்மெண்ட் கிட்ட ஒரு ரிக்வெஸ்ட்டுன்னு போய்ட்டேன்னு வச்சிக்கோ. நீ சரண்டரான மாதிரிதான். ஆனா நளினிய நினைச்சாலும் பாவமாத்தான் இருக்கு. ஆனா ஒன்னு..’

நந்தக்குமார் ஆவலுடன், ‘என்ன முரளி சொல்லு.. ஏன் நிறுத்திட்டே?’ என்றான்.

‘நா சொல்றத தப்பா எடுத்துக்குவியோன்னு பயமா இருந்தது.. அதான் நிறுத்திட்டேன்.’

‘சேச்சே.. உன்னையா.. நிச்சயமா இல்லை. நீ சொல்ல வந்தத சொல்லிரு.. ப்ளீஸ்.’

முரளி தயக்கத்துடன் தன் நண்பனைப் பார்த்தான். ‘நளினி வேணும்னா டிரான்ஸ்ஃபர் கேக்கட்டும்.. ஆனா நீ போய் யாரையும் இதுக்காக பாக்கக் கூடாது. அது மட்டுமில்ல.. ஒனக்கும் டிரான்ஸ்ஃபர் வேணும்னும் யாரையும் போய் கேக்கக் கூடாது. என்ன சொல்றே?’

நந்தக்குமாருக்கும் தன்னுடைய மாற்றத்திற்காக வங்கியின் எந்தவொரு அதிகாரியுடைய தயவையும் நாடுவதில் விருப்பமில்லைதான். ஆனால் நளினி இதற்கு என்ன கூறுவாளோ என்ற யோசனையில் தன் நண்பனையே சில விநாடிகள் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

‘என்ன யோசிக்கறே நந்து? நான் உன்னோட நண்மைக்காகத்தான் சொல்றேன். நீ சென்னைக்கு வர்றது எனக்கும் ஒத்தாசையாத்தான் இருக்கும். இல்லேங்கல. ஆனா வந்தனா மேடம் மாதிரி இல்லை எல்லாரும். முக்கியமா நம்ம ஈ.டி. நீ இங்க வந்து ஜெனூயினா எதுக்காகவாவது நம்ம ரெண்டு யூனியன்சும் சேர்ந்து டெமோ பண்ணா இதுக்குத்தான் இவன் இங்க டிரான்ஸ்ஃபர் ஆயி வந்தான்னு சொன்னாலும் சொல்வான். சேர்மனும் புதுசு. ரெண்டு யூனியன் லீடர்சும் ஒரே இடத்துல இருந்தாத் தானேன்னு ஒன்னெ மறுபடியும் நார்த்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டா.. இப்பவாவது ஓவர் நைட் ஜர்னி போதும் சென்னைக்கு வர்றதுக்கு. அதனாலத்தான் சொல்றேன். நல்லா யோசிச்சி ஒரு முடிவுக்கு வா..’

நந்தக்குமாருக்கும் அவன் சொல்வது நியாயமாகத்தான் தெரிந்தது. அனாவசியமாக இங்கு மாற்றலாகி வந்து முரளியை மட்டும் சார்ந்திருப்பதை விட தனக்கு மிகவும் பழக்கமான மார்க்சிஸ்ட் தோழர்களின் நிழலில் நிற்பதே உசிதம் என தோன்றியது அவனுக்கு.

என்னதான் நண்பன் என்றாலும் முரளியின் தொழிற்சங்கத்திற்கும் அவனுடைய அதிகாரிகளின் சங்கத்திற்கும் நோக்கங்கள் வெவ்வேறானவை. தொழிலாளர்களின் சங்கம் போராட்டத்தில் இறங்கும் சமயங்களிலெல்லாம் அதிகாரிகளின் சங்கம் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதில்லையே. ஆனால் அவனும் சென்னையிலேயே இருக்கும்பட்சத்தில் முரளியின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் போய்விடக்கூடும்.

‘நீ சொல்றதும் சரிதான் முரளி. நளினிக்கிட்ட சொல்லி இத எப்படி புரிய வைக்கறதுன்னுதான் யோசிக்கறேன். உடனே இது ஒங்க ஃப்ரெண்ட் சொல்லிக்குடுத்த ஐடியாவான்னு கேட்டாலும் கேப்பா. இதுக்குத்தான் அவர பாக்க போனீங்களான்னும் கேட்பா..’

முரளி வாய்விட்டுச் சிரித்தான். ‘அதென்னவோ உண்மைதான்.. அதுக்குத்தாம்பா நான் தங்கச்சி, தம்பிங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதோட நிறுத்திக்கிட்டேன்.. இந்த மனைவி, குடும்பங்கறதெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சரிவராது.’

நந்தக்குமாரும் சிரித்தான். ‘சரி முரளி.. நா கெளம்பறேன்.. உன் அட்வைசுக்கு தாங்ஸ்.. வந்தனா மேடம் வீட்ல இப்ப இருக்கறதுனால நளினி பெருசா பிரச்சினை பண்ண மாட்டான்னு நினைக்கறேன்.. பாக்கலாம்.. பை..’


******

ராஜகோபலன் மைதிலி பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.

‘நா சொல்றனேன்னு தப்பா நினைக்காத மைதிலி. நீயும் நானும் கமிஷனர் ஆஃபீசுக்கு போயி சீனிவாசனப் பத்தி என்ன சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்லை. நீயும் அனாவசியமா இந்த சிக்கல்ல மாட்டிக்கறதுக்கு சான்ஸ் இருக்கு. உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்னு துருவி, துருவி கேக்கறதோட உன்னையே சந்தேகப்படவும் சான்ஸ் இருக்கு.. அதனால..’

மைதிலி சட்டென்று பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தாள். ‘நீங்க கூட இப்படி பேசுவீங்கன்னு நா எதிர்பார்க்கல அங்கிள். ஐ ம் சாரி.. ஒங்களுக்கு என் கூட வர விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. I will manage to bring him out on my own.. Thanks for your advice...’ என்றவாறு எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தாள்.

ராஜகோபாலன் பதறியவாறு எழுந்து அவள் பின்னால் ஓடினார். ‘மைதிலி நில்லு.. அவசரப்படாதே.. நான் ஒன் ஃப்யூச்சர மனசுல வச்சிக்கிட்டுத்தான் அப்படி சொன்னேன்..’

மைதிலி ஒரு நொடி நின்று அவரைத் திரும்பி பார்த்தாள். ‘சீனியில்லாம எனக்கு எந்த ஃப்யூச்சரும் இல்ல அங்கிள்.. Whether you are going to come with me or not I am going to go ahead..’

‘அதுக்கில்லம்மா.. நா சொல்றத கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. நீ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு.. போலீசப் பத்தி ஒனக்கு தெரியாது மைதிலி.. ஒன்னையும் அந்த பையனையும் சேர்த்து பேப்பர்லல்லாம் வர்ற மாதிரி செஞ்சிருவாங்க.. அப்புறம் ஒன்னையே நம்பிக்கிட்டிருக்கற ஒன் பேரண்ட்ஸ்.. அவங்கள கொஞ்சம் நினைச்சிப் பாரேன்..’

மைதிலி கோபத்துடன் மறுமொழி பேச முனைந்தவள் தன்னுடைய செல்ஃபோன் சினுங்க யாரென பார்த்தாள். அறிமுகமில்லாத எண்.. ‘Yes?’ என்றாள் தயக்கத்துடன்.

‘Hey.. Srini here.. where are you?’

மைதிலி திகைத்துப் போய், ‘ஏய்.. நீ எங்க இருக்கே..? நா ஒனக்கு என்ன ஆச்சிதோ ஏதாச்சிதோன்னு..’ அவளையுமறியாமல் குரல் உடைந்து விசும்ப எதிர் முனையில் சீனி எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிரிப்பதைக் கேட்டாள்..

தொடரும்..



19.1.07

சூரியன் 167

தன்னுடைய அறைக்கு திரும்பிய ஃபிலிப் சுந்தரம் வாயிலில் ஜோ பதற்றத்துடன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.

அட! இங்க இருக்கற பிரச்சினையில இவர மறந்தே போய்ட்டேனே? தூரத்திலிருந்து பார்த்தபோதே ஜோவின் முகம் களையிழந்து காணப்பட்டதைக் கவனித்தார். அவன் சென்ற காரியம் பலிதமாகவில்லை போலிருக்கிறது என்று நினைத்தவாறு அவனை நெருங்கி, ‘என்னாச்சி ஜோ.. அந்த எஸ்.ஐ ஏதாவது பிரச்சினை பண்றாரா?’ என்றார் ஆறுதலாக. ‘வாங்க.. உள்ள போயி பேசலாம். இங்க இருக்கற பிரச்சினையில ஒங்க விஷயம் மறந்தே போயிருச்சி. சொல்லுங்க.. என்ன நடந்தது?’

ஜோ அவர் தன்னுடைய இருக்கையில் அமரும்வரை காத்திருந்தான்.

அவன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த ஃபிலிப் சுந்தரம் புன்னகையுடன், ‘ஒக்காருங்க ஜோ.. You look terrible.. Sit down for a while..’ என்று தனக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் ஒன்றை சுட்டிக் காட்டினார்.

ஜோ இருக்கையில் அமர்ந்ததும் இண்டர்காம் வழியாக சுபோத்தை அழைத்தார் ஃபிலிப் சுந்தரம். ‘சுபோத் என் கேபினுக்கு உடனே வாங்க.’

‘நேத்து நம்ம சேர்மன பாக்க வந்த போலீஸ் ஆபீசர் என்ன ராங்க்ல இருக்கறவர்னு தெரிஞ்சிக்கிட்டா அவர் மூலமா ட்ரை பண்ணலாம்னு பாக்கேன். சேர்மன் திடிர்னு கிளம்பி மும்பை போய்ட்டார். திருப்பிவர எத்தன நாளாகும்னு தெரியல. சுபோத் வரட்டும் கேக்கலாம்.’

ஜோ சரி என்று தலையை அசைத்துவிட்டு மவுனமாய் அமர்ந்திருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் சுபோத் அறைக்குள் நுழைந்து ஜோவைப் பார்த்து சிநேகிதமாய் புன்னகைத்தான், ஜோவும் அவனும் பேட்ச் மேட்ஸ் என்பதால்..

‘சிட் டவுன் சுபோத். You must know Joe.. Am I right?’ என்றார் ஃபிலிப்.

‘Yes Sir.. We are from the same batch..’ என்றான் சுபோத் பணிவுடன். சற்று முன் சேதுமாதவன் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாய் கேட்டு பெற்ற சேர்மனின் நிரூபர் கூட்டத்திற்கான அறிக்கையைப் பற்றி கூறலாமா வேண்டாமா என்று சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான்.

‘மிஸ்டர் சுபோத்.. Yesterday evening some one from the Police Department came to meet our Chairman, no?’

எதற்கு இந்த கேள்வி என்பதுபோல் அவரைப் பார்த்தான் சுபோத். அதுவும் இதற்கு சம்பந்தமில்லாத ஜோ இருக்கும் நேரத்தில்!

‘Yes Sir.. His name is Dhanapal or something like that.. He is a SP Sir.’ என்றான் தயக்கத்துடன்.

‘I see..’ என்ற ஃபிலிப் சுந்தரம் தொடர்ந்து, ‘Do you have his contact number Subodh.. It should be there in his visiting card.. Could you please check up and tell me?’ என்று வினவ சுபோத் குழப்பத்துடன் இருவரையும் பார்த்தான்.

‘I did not keep it Sir.. I handed over the card he gave me to our Chairman.. I may have to check in his cabin.’

ஃபிலிப் சுந்தரம் யோசனையுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார். ‘Please Subodh.. நீங்க போய் சேர்மன் சாரோட கேபின செக் பண்ணிட்டு சொல்லுங்க.. I need those numbers urgently..’  

சுபோத் எழுந்து வாசலை நோக்கி விரைந்தான்.

‘மிஸ்டர் மாணிக்கவேலுவோட மிசஸ்க்கு என்ன ஆச்சின்னு சொன்னீங்க?’

‘அந்த எஸ்.ஐ எதையுமே ஒழுங்கா சொல்ல மாட்டேங்கறார் சார். மேடம் ஜீப்லருந்து குதிச்சி ஒடனப்போ எதிர்ல வந்த பஸ்சுல அடிபட்டு கோமா ஸ்டேஜ்ல இருக்காங்களாம். ஆனா எந்த ஹாஸ்ப்பிட்டல்னு சொல்ல மாட்டேங்கறார். அவங்க இதுவரைக்கும் கம்ப்ளெய்ண்ட்னு எதுவும் குடுக்கலேன்னு மட்டும் தெரியுது.’

ஃபிலிப் சுந்தரம் அவன் பேசியதை நம்பாதவர்போல் அவனையே பார்த்தார். ‘என்ன சொல்றீங்க ஜோ? எதுக்கு அவங்க அந்த மாதிரி இறங்கி ஓடணும்?’

‘அதான் சார் தெரியல. மேடம் வெறும் விட்னெஸ் மட்டும்தான். அப்படியிருக்கறப்ப எதுக்கு தப்பிக்க நினைச்சாங்கன்னு வக்கீலும் கேக்கறார். இதுல ஏதோ இருக்குன்னு மிஸ்டர் சபரியும் ஃபீல் பண்றார் சார்.’ என்றான் ஜோ சலிப்புடன். ‘இதுல இன்னைக்கி மும்பையில நடந்த பாம்ப் ப்ளாஸ்ட்ட சாக்கா வச்சி சார ரிமாண்ட் பண்றதுக்கும் சான்ஸ் இருக்குன்னு சொல்றார் நம்ம லாயர்.  டிஎஸ்பி, எஸ்.பி லெவல்ல மூவ் பண்ணி சார இதுவரைக்கும் அரெஸ்ட் பண்லன்னா என்க்வயரிக்கு கூட்டிக்கிட்டு வந்ததா சொல்லி அவர திருப்பி அனுப்ப சொல்லி அந்த எஸ்.ஐ.க்கு ப்ரெஷர் குடுக்கலாம்னு சொல்றார். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் சார்.’

ஃபிலிப் சுந்தரம் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தார். மாணிக்கவேலின் மீது எத்தனை பரிவும் பாசமும் இவருக்கு இருந்தால் இன்று நாள் முழுவதும் இதற்காக அலைந்திருப்பார். நாமும் எதையாவது செய்ய வேண்டும்.

அவருடைய இண்டர்காம் சினுங்கவே எடுத்தார். ‘என்ன சுபோத்.. கார்ட் கிடைச்சிதா?’

‘....’

‘இல்லையா? நல்லா பார்த்தீங்களா?’

‘.....’

‘சாருக்கா? நோ, நோ.. வேணாம்.. இந்த நேரத்துல அவர டிஸ்டர்ப் பண்ண வேணாம்..’ என்ற ஃபிலிப் சட்டென்று நினைவுக்கு வந்தவராய், ‘மிஸ்டர் சுபோத்... நம்ம ரிசப்ஷன்ல கூப்ட்டு அவர் அங்க ஏதாச்சும் கார்ட விட்டுட்டு போயிருக்காரான்னு கேளுங்க.. Some people do that.. Please find out.. பார்த்துட்டு உடனே என்னெ கூப்பிடுங்க..’

ஜோவுக்கு அவர் கூறாமலே விளங்கியது. எல்லாம் சாரோட நேரம்.. இல்லன்னா ஒரேயொரு வாரத்துல சாரோட மொத்த குடும்பமுமில்லே பாதிக்கப்பட்டிருக்கு.. முதல்ல கமலியோட எதிர்பாராத சாவு, அப்புறம் சாருக்கு உயிருக்குயிரா இருந்த அப்பாவோட கொலை.. அத பார்த்துட்டதால சந்தோஷ¤க்கு ஏற்பட்ட மனமுறிவு.. இப்போ மேடத்தோட ஆக்சிடெண்ட்.. வந்தா எல்லாம் ஒன்னாத்தான் வரும்போலருக்கு..

‘என்ன ஜோ யோசிக்கறீங்க?’

ஜோ நினைவுகளிலிருந்து மீண்டு அவரை நோக்கினான். ‘இல்ல சார்.. மாணிக்கம் சார் எனக்கு கூடப் பொறக்காத சகோதரன் மாதிரி எனக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்காங்க.. எனக்கு மட்டுமில்ல சார்.. எங்க ப்ராஞ்சிலருக்கற எல்லாருக்குமே சார்னா கடவுள் மாதிரி சார்.. அவங்களுக்கு போயி இப்படியொரு நிலமையான்னு யோசிச்சேன்.. மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு சார்.’

ஜோ ஆதரவாய் புன்னகைத்தார். ‘Don’t worry Joe..  உங்களுக்குத்தான் தெரியுமே, கர்த்தருக்கு யார ரொம்ப இஷ்டமோ அவங்களத்தான் அதிகமா சோதிப்பார்னு.. பார்ப்போம்.. இவர் இல்லன்னா வேற யாரும் இல்லாமயா போயிருவாங்க? யாருமே கிடைக்கலைன்னா நேரா கமிஷனர் ஆஃபீசுக்கு போவோம்.. There will be somebody to help us out.. ஒரு கதவை அடைத்த கர்த்தரே இன்னொரு கதவைத் திறப்பார்னும் பைபிள்ல இருக்கே.. Don’t lose hope..’

அவர் பேசி முடிக்கும் முன்பே சுபோத் பரபரப்புடன் கையில் ஒரு சிறிய அட்டையுடன் அறைக்குள் நுழைந்து கையிலிருந்ததை அவரிடம் நீட்டினான். ‘You are right Sir.. He has left this with the receptionist.’

ஃபிலிப் சுந்தரம் புன்னகையுடன் ஜோவைப் பார்த்தார். ‘பாத்தீங்களா ஜோ.. நா சொல்லி வாய மூடலை.. வழி திறந்திருச்சி பாருங்க.. நீங்க இந்த கார்ட எடுத்துக்கிட்டு நேரா நம்ம வக்கீல கூட்டிக்கிட்டு போங்க.. நா ஃபோன்ல பேசி அவர் அறிமுகமில்லாதவராச்சேன்னு நினைச்சி நோன்னு சொல்லிட்டா அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது. நேரா போய் பார்த்து பேசறதுதான் நல்லது. நீங்க நம்ம சேர்மன் ஆஃபீஸ்லருந்துதான் இந்த கார்ட் கிடைச்சிதுன்னு சொல்லுங்க.. அவர் முடியாதுன்னு சொல்லிட்டா மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்.. நம்பிக்கையோட போங்க.. ஆல் தி பெஸ்ட்.’ என்றவாறு அவனிடம் அந்த அட்டையை நீட்ட ஜோ எழுந்து நன்றி கூறிவிட்டு விடைபெற்றான்.

***

மும்பை பெருநகர காவல்துறையின் டிஜிபி வின்செண்ட் ரெபேரோ கோவாவைச் சார்ந்த கத்தோலிக்கர். காவல்துறையில் அவருக்கு அளித்திருந்த் பிரம்மாண்டமான பங்களாவை மறுத்து தன்னுடைய வயது முதிர்ந்த தாயுடன் வசிக்கவேண்டுமென்பதற்காகவே புறநகர் செம்பூரில் காலங்காலமாக வசித்து வருபவர். கட்டை பிரம்மச்சாரி. பக்திமான். கண்டிப்பானவர். நேர்மையானவர். எந்த அரசியல்வாதியின் தயவும் இல்லாமல் டிஜிபி பதவிக்கு உயர்த்தப்பெற்றவர். ஆகவே எவருடைய சிபாரிசுக்கோ உத்தரவுக்கோ செவிகொடாமல் இதுவரை தன்னுடைய பதவிக்கு கவுரவத்தை ஏற்படுத்தியவர்.

அவர் பதவியிர்லிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் அவருக்கு சவாலாக அமைந்தன அன்றைய குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள். முதன் முதலில் வயர்லெஸ் மூலமாக அதைக் குறித்து கேள்விப்பட்டதுமே அவர் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தரிசிக்கும் அன்னை மேரியை மனதில் நினைத்துக்கொண்டு.. Help me to solve this case within 24 hours Mother.. என்று மனதிற்குள் பிரார்த்திக்கொண்டு  தன்னுடைய துணை அதிகாரிகளுக்கு இட்ட முதல் கட்டளை.. ‘Find out whether there has been any information about the blast.. Someone would have called our control room..  I need that information.. Fast..’

அவர் நினைத்திருந்தது போலவே அடுத்த அரை மணியில் அவர் தேவைப்பட்டிருந்த தகவல் அவருடைய மேசையை அடைந்தது. மும்பையில் பிரபலமாயிருந்த மொபைல் தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனத்தின் துவக்க எண்ணைப் பார்த்தவர், ‘Find out from the Company the full address of this caller.. Quick..’ என்றார் கோபத்துடன்.. ‘We should pick up the person in the next half hour.. Inform the nearest police point over our secret lines.. His identity should not be revealed to anyone else.. Especially the Press.. Do you understand what I mean?’

அவருடைய கோபத்தை நன்றாகவே அறிந்திருந்த உதவியாளர்கள் அடுத்த அரைமணிக்குள்ளாகவே சீனிவாசனின் விலாசத்தைக் கண்டுபிடித்து அவனை அள்ளிக்கொண்டு அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை அடைந்தனர்.


தொடரும்..














































18.1.07

சூரியன் 166

சிவகாமி மாமி அழுகையினூடே பேசியதை நம்பமுடியாமல், ‘என்ன மாமி சொல்றேள், எதுக்காக அழறேள்?’ என்றாள் மைதிலி.

சாதாரணமாகவே பரபரப்புடன் இயங்கிவரும் மும்பை அன்று பகல் பல இடங்களில் குண்டுகள் வெடிக்க நகரம் முழுவதையுமே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டதை உணரமுடிந்தது அவளால்.

செம்பூரில் மருத்துவர் ராஜகோபாலனை சந்தித்துவிட்டு தன்னுடைய அலுவலகம் செல்ல உத்தேசித்திருந்த மைதிலி சயான் சதுக்கத்தையே அடைய முடியாமல் வாகன நெரிசல் நெட்டித்தள்ளியது.

இது போறாதென்று செம்பூர் நாக்காவிலிருந்து ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் காவல்துறையினரின் குழு கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்குள்ளும் தலையை புகுத்தி வாகனத்திலிருந்தவர்களை கேள்வி கேட்பதும் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறியவர்களை சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று  துருவித் துருவி விசாரிப்பதும்.. அதன் விளைவாக நீண்ட சர்ப்பமென வளைந்து காத்திருந்த வாகனங்களும்.. திரும்பி தன்னுடைய ஃப்ளாட்டுக்கே சென்றாலென்ன என்று அவள் யோசித்த நேரத்தில்தான் அவளுடைய செல் ஃபோன் சினுங்கியது.

ஏற்கனவே அவளைச் சுற்றிலும் நிறைந்திருந்த வாகனங்களில் அமர்ந்திருந்தவர்களின் பொறுமையற்ற ஹார்ன் ஒலி அவளுடைய காதுகளை கிழித்துவிடுவதுபோல் அலறிய வண்ணமிருந்தன. இதில் சிவகாமி எதிர்முனையில் அழுதவாறே பேச சீனிக்கு என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள் மைதிலி. மீண்டும் எங்காவது விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பானோ என்ற நினைப்பில், ‘என்ன சொல்றேள் மாமி, சீனிக்கு என்ன? அழுகைய நிறுத்திட்டு நிதானமா சொல்லுங்களேன்.’ என்றாள் சலிப்புடன்.

எதிர்முனையில் மாமி சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதை அவளால் உணரமுடிந்தது. அவளுடைய இரு சக்கர வாகனத்தை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாலையோரத்திலிருந்த கடையொன்றை அணுகி ஒரு காதை மூடிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாரானாள்.

‘செத்த நேரம் முன்னால போலீஸ் வந்து சீனிய கூட்டிக்கிட்டு போய்ட்டாடி.. என்ன ஏதுன்னு கேட்ட என்னை மிரட்டிட்டு போய்ட்டா.. நீ ஒடனே பொறப்பட்டு வாயேன்..’ மேற்கொண்டு பேச முடியாமல் சிவகாமி எதிர்முனையில் அழ ஆரம்பிக்க ஃபோனில் கேட்டதை நம்பமுடியாமல் திகைத்து நின்றாள் மைதிலி..

சீனியையா? போலீஸ் வந்து கூட்டிக்கிட்டு போய்ட்டாளா? எதுக்கு? என்னடாயிது புதுப் பிரச்சினை? ஒருவேளை இன்னைக்கி நடந்த பாம்ப் ப்ளாஸ்ட் காரணமாயிருக்குமோ? இந்த போலீசே ஒரு விவஸ்தையில்லாத ஜடங்களாச்சே... ஒன்னு நடந்துட்டாப் போறும்.. Panic reactionல என்ன செய்யறோம் ஏது செய்யறோம்கற விவஸ்தையே இல்லாம.. சந்தேகங்கற பேர்ல என்ன வேணும்னாலும் செய்யலாம் நினைப்பாளே.. இப்ப என்ன பண்ணப் போறேன்.. சீனிய எந்த ஸ்டேஷனுக்கு அழைச்சிண்டு போயிருப்பாளோ தெரியலையே.. அவனே கால ஒடச்சிண்டு நிக்கறான்.. இந்த நேரத்துல அவன் என்ன செஞ்சிருப்பான்னு நினைச்சிண்டு இந்த போலீஸ் அவனெ அழைச்சிண்டு போயி.. ச்சே! இப்ப என்ன செய்யலாம்.. நம்ம ப்ராஜக்ட் ஹெட்ட கூப்ட்டு அட்வைஸ் கேட்டா என்ன? சீச்சீ.. நாமளா போயி என் ஃப்ரெண்ட போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்குன்னு சொல்லி விளம்பரப்படுத்தணுமா என்ன?

ராஜகோபாலன் அங்கிள்?

Yes! அதான் சரி.. அவரையே கேப்போம்.. அவருக்கு டிபார்ட்மெண்ட்ல யாரையாச்சும் தெரிஞ்சிருக்கும். அத்தோட அவர்தானே சீனியையும் ட்ரீட் பண்ண டாக்டர்? போன ரெண்டு நாளா சீனி கால ஒடச்சிக்கிட்டு ஆத்துலயே இருந்த சமாச்சாரம் அவருக்கும்தானே தெரியும்? அத்தோட ஒரு நா முழுக்க அவரோட டிஸ்பென்சரியில இருந்துருக்கானே.. சீனிக்கும் இந்த ப்ளாஸ்டுக்கும் சம்பந்தமிருக்க சான்ஸ் இல்லேன்னுட்டு அவர் சொன்னா போலீஸ் ஒத்துக்குமே..

Yes.. that’s the only option available to me now.. ‘மாமி கவலைப்படாதேள்.. தோ.. நா இப்பவே சீனிய ட்ரீட் பண்ண டாக்டர் மூலமா ஏதாச்சும் செய்யறேன்.. சீனிய என்க்வயரிக்கு மட்டுந்தான் கூட்டிண்டு போயிருப்பா.. இன்னும் அரை மணி நேரத்துல ஒங்கள மறுபடியும் கூப்பிடறேன்.. நீங்க ஆத்துல ஃபோன் பக்கத்துலயே இருங்கோ.. சென்னையிலருந்து யாராச்சும் ஃபோன் பண்ண இந்த விஷயத்த சொல்லிராதேங்கோ.. அவா வேற தேவையில்லாம டென்ஷனாயிருவா.. என்ன நா சொல்றது புரிஞ்சிதா மாமி..?’

‘சாரிடிம்மா.. நா ஒனக்குத்தாண்டியம்மா மொதல்ல ஃபோன் பண்ணேன்.. ஆனா நீ எடுக்கவேயில்லையா அதான் செத்த நேரத்துக்கு முன்னாடி சரோஜா சீனிய கேட்டு போன் செஞ்சிருந்தா.. நா வேற வழியில்லாம அவகிட்ட எல்லாத்தையும் சொல்ல வேண்டியதா போச்சி.. அவா மூனு பேரும் இன்னைக்கே பொறப்பட்டு வந்துருவான்னு நினைக்கறேன்.. நீ ஒன்னால முடிஞ்சத செய்டீம்மா.. பாவம் கொழந்த.. ஏற்கனவே கால் வேதனை தாங்க முடியல மாமி ராத்திரியெல்லாம் தூங்காம அழுதுண்டிருந்தான்.. காலைல ஊர் முழுக்க வெடிகுண்டுன்னு கேட்டதும் ஐயோ மாமி மைதிலி எங்கருக்கான்னு தெரியலையேன்னு சொல்லிண்டிருந்தான்.. சொல்லி வாய மூடலை ஒரு பெரிய போலீஸ் கூட்டமே ஆத்துக்குள்ள நொழஞ்சி என்ன ஏதுன்னு கேக்கறதுக்குள்ளயே கோழிக் குஞ்ச அமுக்குனா மாதிரி அள்ளிக்கிட்டு போய்ட்டாடி..’ சிவகாமி மாமி மீண்டும் அழுகையைத் துவங்க.. ‘அழாதேள் மாமி.. நான் வச்சிடறேன்.. அரை மணி நேரத்துல கூப்பிடறேன்.’ என்றவாறு துண்டித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் மைதிலி.

ஹ¥ஹ¤ம்.. வாகனங்கள் நகரக்கூடிய அடையாளமே தென்படவில்லை. வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய வாகனத்தை எடுக்க வழியேயில்லை என்பதை உணர்ந்த மைதிலி அது எப்படியோ போகட்டும் என்ற நினைப்புடன் வாகனங்களுக்கிடையில் புகுந்து தான் வந்த வழியிலேயே விரைந்தாள்.

******

மாதவன் ஓட்டல் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், சரோஜா தன்னுடைய புகாரை அழுகையுடன் துவக்கிவிட அவளை சமாதானப்படுத்துவதற்குள் அவருக்கு போதும், போதும் என்றாகிவிட்டது.

‘நா எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேம்ப்பா.. அம்மா அழுகைய நிறுத்தவே மாட்டேங்குறாங்க.. நா மட்டும் மும்பையிலயே இருந்திருந்தா இது நடந்திருக்குமான்னு அப்பத்துலருந்து ஒரே கேள்விதான்.. I am fed up.. நீங்களே பேசிக்குங்க.. நா கீழ போயி கொஞ்ச நேரம் லாபியில இருந்துட்டு வரேன்.’ என்றவாறு வத்ஸ்லா கதவைத் திறந்துக்கொண்டு வெளியேற மாதவன் தன்னுடைய கைப்ப¨யை படுக்கையில் எறிந்துவிட்டு தன்னுடைய மனைவியை நெருங்கினார்.

சரோஜா அவருடைய கரங்களை தள்ளிவிட்டு, ‘எல்லாம் ஒங்களாலதான்.. நா அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்டேன் நானும் சீனியோட நிக்கறேன்னு.. நீங்க கேக்கலை.. சரி அவன மட்டும் அங்க விட்டுட்டு வரவேண்டாம்னு சொன்னேன்.. அதயும் கேக்கல.. இப்ப பாருங்க.. அவனே ஒரு குழந்த மாதிரி.. மகாராஷ்டிரா போலீச பத்தி நமக்கு தெரியாதாங்க.. எத்தன வருசந்தா நாம அங்க இருந்திருக்கட்டுமே இப்பவும் நம்மள மதராசின்னுதானே பிரிச்சி பாக்கறானுங்க? அவனெ என்ன செய்யறாங்களோ தெரியலையே.. படுபாவிப் பசங்க.. சந்தேகம்னு என்னென்ன கேள்விய கேட்டு அவன படுத்தறானுங்களோ.. அவனே சின்னதுக்கெல்லாம் டென்ஷனாயிருவான்.. அவனுக்குன்னு அங்க யாருங்க இருக்கா? இப்படி அனாதையா நிக்கறானே எம்புள்ள.. எல்லாம் எம்புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. நானும் ஒங்க பேச்ச கேட்டு ஒங்கக்கூட வந்தேன் பாருங்க.. என்னெ சொல்லணும்..’ என்று புலம்ப மாதவன் என்ன சொல்லி இவளை சமாதானப்படுத்துவேன் என்று கலங்கிப்போனார்.

இந்த களேபரத்தில் அவருடைய செல்·போன் சினுங்க யாரென்று பார்த்தார். சுபோத்!

‘என்னாச்சி சுபோத்.. Could you get the tickets?’ என்றார்.

‘.....’

‘Good.. send the tickets to the hotel immediately.. I’ll call you later.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.

‘இங்க பார். நம்ம மூனு பேருக்கும் எட்டு மணி ஃப்ளைட்டுல டிக்கட் கிடைச்சிருக்கு. நான் ஆஃபீஸ்லருந்து கெளம்பும்போதே நம்ம முகர்ஜி சாருக்கு ஃபோன் போட்டு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவருக்கு மினிஸ்டர் லெவல்ல ஆள் இருக்கு.. சீனிக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்குவார். நீ இங்கருந்து கவலைப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை.. ஏற்கனவே ஒனக்கு சிஸ்டாலிக் லெவல் ஜாஸ்தி.. அழுதுக்கிட்டேயிருந்தே.. அப்புறம் ஃப்ளைட்டுல ஏறுனதும் மயக்கம் வந்துரும்.. சொல்லிட்டேன்.. பேசாம நா ராத்திரியில போட்டுக்கற ஸ்லீப்பிங் டாப்ளட்ல ஒன்னெ போட்டுக்கிட்டு தூங்கப் பார்.. இன்னும் நாலு மணி நேரம் இருக்கு ஃப்ளைட்டுக்கு.. கொஞ்ச தூங்குனா ஒன் ப்ரஷர் லெவல் நார்மலுக்கு வந்துரும்.. Please take my advice.. சீனிக்கு ஒன்னும் ஆயிருக்காது..’ என்றவர் வத்ஸ்லா அந்த பொண்ணுக்கு ஃபோன் செஞ்சாளா?’ என்றார் நினைவுக்கு வந்தவராய்.

சரோஜா எரிச்சலுடன் அவரைப் பார்த்தாள். ‘ஒங்களுக்கு என்ன பைத்தியமா? அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி என்ன ஆவப் போவுது? அவ அப்பாவுக்கு ஏற்கனவே சீனிய கண்டா ஆகாது. இந்த லட்சணத்துல அவன் போலீஸ்ல அரெஸ்டாயிருக்கான்னு தெரிஞ்சா கேக்கவே வேணாம்.. நல்லா அட்வைஸ் பண்றீங்க.. நாந்தான் வத்ஸ்லா கிட்ட அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.’

ச்சே.. நமக்கு இது தோனலையே என்று நினைத்தார் மாதவன். நமக்கு ஆஃபீஸ்லதான் உருப்படியான ஐடியாஸ் வரும்போலருக்கு. வீட்டு விஷயத்துக்கு பொம்பளைங்கதான் லாயக்கு.. Let them handle the issue.. நாம பொறப்படறதுக்கு தேவையானத பார்ப்போம்..

மும்பையில் எத்தனை நாள் இருக்க வேண்டி வருமோ? அதுவரைக்கும் இந்த ரூம வச்சிக்கிட்டிருக்க முடியாது.. ஒருவேள சரோ அங்கயே நிக்கறேன்னு அடம் பிடிச்சாலும் பிடிப்பா.. வத்ஸ மட்டும் கூட்டிக்கிட்டு வர்றதுலயும் அர்த்தமில்லை..

சோ.. இந்த ரூம வெக்கேட் பண்றதுதான் சரி.. உடனே சுபோத்தை அழைத்து கூறினாலென்ன என்று நினைத்தவர் வேண்டாம்.. ஏர்போர்ட்டிலிருந்து அவனை அழைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தவராய் தன்னுடைய மகளை செல்ஃபோனில் அழைத்தார். ‘ஏய் வத்ஸ்.. என்ன நீ பாட்டுக்கு அங்க போய் ஒக்காந்துட்டே.. பேக் பண்ண வேணாமா.. அப்பா ரூம வெக்கேட் பண்ணிட்டு போயிரலாம்னு நினைக்கேன்.. மும்பையில எப்படி இருக்கோ நிலமை.. மேல வா.. வந்து பேக் பண்ண ஹெல்ப் பண்ணு.. அம்மாவா? She is alright now.. Come.. We have only about two hours time.. என்னது? டிக்கெட்ஸா.. ஆமா எய்ட்டோக்ளாக் ஃப்ளைட்டுக்கு கிடைச்சிருக்கு.. இன்னும் அரை மணி நேரத்துல டிக்கெட்ஸ் வந்துரும்.. நீ சீக்கிரம் வந்து சேர்.’

இணைப்பைத் துண்டித்து படுக்கைக்கு அருகிலிருந்த குறு மேசையில் ஃபோனை வைத்துவிட்டு அறையெங்கும் கிடந்த துணிகளை அடுக்கி அவரவர் பெட்டியில் வைப்பதில் தீவிரமானார் மாதவன்.


தொடரும்..

17.1.07

சூரியன் 165

மாதவனின் வாகனம் வங்கி வளாகத்தினின்று வெளியேற தன்னருகில் நின்றிருந்த சுபோத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘என்னாச்சி சுபோத். எதுக்காக சேர்மன் திடீர்னு கிளம்பி போறார்? Did he tell you anything?’

‘இல்லையே சார். சாரோட வீட்லருந்து ஃபோன் வந்தது. மேடம்னு நினைக்கேன். நான் உடனே சார்க்கு கனெக்ஷன் குடுத்தேன். கொஞ்ச நேரத்துல சார் இண்டர்காம்ல கூப்ட்டு இன்னைக்கி லாஸ்ட் ஃப்ளைட்ல மும்பைக்கு மூனு டிக்கட்ஸ் புக் பண்ணுங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஒங்கள கூப்ட சொன்னார். அவ்வளவுதான் சார் தெரியும். மும்பையில ஏதோ சீரியஸ் விஷயம்னு நினைக்கேன். சாரோட சன்னெ அங்க விட்டுட்டு வந்துருக்கார்னு மட்டும் தெரியும். அவருக்குத்தான் ஏதோ ஆயிருக்கணும். அதுக்கும் இன்னைக்கி பகல் நடந்த பாம் ப்ளாஸ்ட்டுக்கும் ஏதாச்சும் கனெக்ஷன் இருக்குமோன்னு தெரியல.’ என்ற சுபோத் ‘சாரி சார்.. நா போய் நம்ம டிராவல் ஏஜன்சிய கூப்பிடணும்.. ..’ என்றவாறு தன்னுடைய இருக்கையை நோக்கி விரைய ஃபிலிப் இன்னும் ஒரு மணி நேரத்தில் துவங்கவிருக்கும் ப்ரெஸ் மீட் நினைவுக்கு வர தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

செல்லும் வழியில் மாதவன் சற்றுமுன் கூறியது நினைவுக்கு வர ஈ.டி இருக்கும்போது நாம் பத்திரிகை நிரூபர்கள் சந்திப்பது சரியில்லையே என்பதும் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய அறைக்கு செல்வதைவிட முதலில் சுந்தரலிங்கம் அறைக்குச் சென்று மாதவன் புறப்பட்டுச் சென்ற விபரத்தை அவரிடம் தெரிவித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பதுதான் சரி என்று நினைத்த ஃபிலிப் உடனே அதை செயல்படுத்தும் விதமாக அவருடைய அறையை நோக்கி விரைந்தார்.

நல்லவேளையாக அவருடைய அறையில் வேறு யாரும் இருக்கவில்லை. அவர் பார்த்துக்கொண்டிருந்த கோப்பில் கையெழுத்திட்டு முடிக்கும்வரை காத்திருந்த ஃபிலிப் மாதவன் திடீரென்று புறப்பட்டுச் சென்ற விபரத்தைக் கூறிவிட்டு, ‘சார் சேர்மன் பாட்டுக்கு நீங்க ப்ரெஸ் பீப்பில நீங்க ஹேண்டில் பண்ணிருங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டார். சேர்மன் இல்லாத நேரத்துல ஈ.டி இருக்கறப்போ நா எப்படி சார்.. அதான்.. ஒங்கக் கிட்ட டிஸ்கஸ் பண்லாம்னு வந்தேன்.’ என்றார் தயக்கத்துடன்.

சுந்தரலிங்கம் பதில் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு கடந்த இரு நாட்களாகவே மாதவன் அளவுக்கு மீறி ஃபிலிப் சுந்தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றியது. மாதவனுக்கும் ஈ.டி சேதுமாதவனுக்கும் இடையிலிருந்த மனக்கசப்பும் ஆகவே அவரை மாதவன் சைட் லைன் செய்ய முயல்வதும் அவருக்கும் லேசாக தெரிந்திருந்துதானிருந்தது. ஆனால் சேதுமாதவனுக்கு அடுத்தபடியாக இருந்த தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மாதவன் ஃபிலிப் சுந்தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைத்தான் அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

முந்தைய சேர்மன் இருந்த காலத்தில் அவர் ஒரு அரை மணி நேரம் அலுவலகத்தைவிட்டு செல்வதானாலும் தன்னிடம் தெரிவிக்காமல் சென்றதில்லை என்பதை நினைத்துப்பார்த்தார். அவருக்கும் சேதுமாதவனை அவ்வளவாக பிடித்திருக்கவில்லை. ஆகவே அவருக்கு அடுத்தபடியாக அதிகார ஏணியில் இருந்த ஈ.டியை பொருட்படுத்தாமல் தான் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் சுந்தரலிங்கத்திடமே பொறுப்பை விட்டுச் செல்வது வழக்கம்.

அதில் சேதுமாதவனுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் சுந்தரலிங்கம் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருபவர் என்பதால் அதை அவ்வளவாக பொருட்படுத்தியதில்லை. சேர்மன் பதவியில் அமராமலே தனக்கு வேண்டியவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதில் சமர்த்தராயிற்றே அவர்!

‘என்ன சார்.. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டேனே?’

சுந்தரலிங்கம் அப்போதும் பதிலளிக்காமல் தனக்கு முன்னே இருந்த கோப்பையே பார்த்தவாறு அமர்ந்திருக்க என்னாயிற்று இவருக்கு என்று நினைத்தார் ஃபிலிப் சுந்தரம்.

நேற்றிலிருந்தே சுந்தரலிங்கத்தின் போக்கில் ஒரு லேசான மாற்றத்தை உணர்ந்திருந்தார் ஃபிலிப். இதற்கு என்ன காரணமாயிருக்கும்? ஒருவேளை நாம்தான் ஏதோ வகையில் அவரை புன்படுத்திவிட்டோமோ? எல்லாம் அந்த பாபு சுரேஷை எச்.ஆர் ஹெட்டாக நியமிக்க தான் சேர்மனிடம் பரிந்துரைத்ததுதான் காரணமாயிருக்கும்.

சுந்தரலிங்கம், ஃபிலிப் சுந்தரம் இருவருமே சி.ஜி.எம் ராங்கில்தான் இருந்தனர் என்றாலும் சுந்தரலிங்கத்தின் வயதையும் அவருடைய அனுபவத்தையும் கருத்தில்கொண்டு எப்போதுமே அவரை தன்னுடைய உயர் அதிகாரியாகத்தான் ஃபிலிப் சுந்தரம் கருதி வந்திருந்தார்.

அத்துடன் சோமசுந்தரத்துடன் ஒப்பிடுகையில் சுந்தரலிங்கம் நேர்மையானவர், கடவுள் நம்பிக்கையுடையவர், எவ்வித தீய குணங்களோ பழக்கங்களோ இல்லாதவர் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவேதான் முந்தைய சேர்மன் பதவியிலிருந்து விலகியபோது சேர்மன் பொறுப்பை யாருக்கு அளிப்பது என்று இயக்குனர் குழு அவரிடம் கேட்டபோது அதை சுந்தரலிங்கத்திடம் அளிக்குமாறு  பரிந்துரைத்தார்.

ஃபிலிப் சுந்தரம் தன்னைப் பரிந்துரைத்த விபரம் சுந்தரலிங்கத்திற்கும் தெரிந்திருந்தது. ஆகவேதான் புதிய சேர்மன் பதவியேற்கும் வரை வங்கியின் சேர்மன் பொறுப்பிலிருந்து அவர் எடுத்த எல்லா முடிவுகளையும் ஃபிலிப் சுந்தரத்துடன் கலந்தாலோசிக்காமல் அவர் எடுத்ததேயில்லை.

இவ்விருவருடைய கூட்டு செயல்பாடு சேதுமாதவனுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்தபடியாக ஜி.எம் பதவியிலிருந்த சகல அதிகாரிகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியிருந்ததை இருவருமே அறிந்திருந்தனர்.

அத்தகைய நெருக்கத்துடனிருந்த அவர்களுடைய நட்பில் பொறாமைக்கு இடமே இல்லை என்றுதான் ஃபிலிப் சுந்தரம் நினைத்திருந்தார். ஆனால் புதிய சேர்மன் பதவியேற்றதிலிருந்து அவர் பதவியேற்கும் வரை அப்பதவியிலிருந்த தன்னைக் கலந்தாலோசிக்காமல் இருப்பதுடன் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கிறாரே என்று நினைக்கிறாரோ?

அவருடைய இந்த எண்ணத்தை நிரூபிப்பதுபோலவே மாதவன் மும்பைக்கு செல்வதை அவரிடம் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றதும் அவருடைய இந்த ஈடுபாடில்லா நடத்தைக்குக் காரணமாயிருக்கலாம் என்று நினைத்தார் ஃபிலிப்.

இருப்பினும் அதை நாம் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்தவர் ‘சார் நீங்க ஏதோ அப்செட்டாருக்காப்பல இருக்கு. நா வேணும்னா ஒரு பத்து நிமிசம் கழிச்சி வரட்டுமா சார்?’ என்றார்.

சுந்தரலிங்கம் சரி என்பதுபோல் தலையை அசைக்க வேறு வழியில்லாமல் மெள்ள எழுந்து அறையை விட்டு வெளியேறினார் ஃபிலிப் சுந்தரம்.

சே! எத்தனை வருஷ பழக்கம்? இந்த பாழாப்பான ஈகோ இவரையுமா பீடிக்கவேண்டும். மாதவன் ஒருவேளை என்னைத் தவிர்த்திருந்தாலும் நானும் இப்படித்தான் மருகுவேனோ? யார் கண்டது?

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? இதை இப்படியே விட்டுவிட்டால் அன்றாட அலுவல்களைக் கூட சரிவர செய்து முடிக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னதான் சுந்தரலிங்கமும் அவரும் வங்கியின் இருவேறு பிரிவிற்கு தலைவர்களாயிருந்தாலும் இருவருடைய தினசரி அலுவல்களில் ஒருவரையொருவர் கலந்தாலோசிக்காமல் இருக்கவே முடியாது.

அத்துடன் வங்கியின் பல உயர்மட்டக் குழுக்களில் இவர்கள் இருவருமே அங்கத்தினர்களாக இருந்த நிலையில் சுந்தரலிங்கத்தின் இத்தகைய விட்டேத்தியான போக்கும் அக்குழுக்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிடக்கூடும். மாதவன் மும்பையிலிருந்து திரும்பியது இதை அவருக்கு உணர்த்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார் ஃபிலிப்.

******

காலையிலிருந்து தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லையென்ற எரிச்சலுடன் மூட் அவுட்டாகி தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் சேது மாதவன்.

அன்றைய தினம் அவருடைய பார்வைக்கும், ஒப்புதல்களுக்கும் வந்திருந்த அனைத்து கோப்புகளும் பரிசீலிக்கப்படாமல் அப்படியே அவருடைய மேசையில் குவிந்திருந்தும் அவற்றைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமர்ந்திருந்தார்.

அன்று மாலையில் புதிய வங்கி முதல்வர் முதல் முறையாக பத்திரிகை நிரூபர்களை சந்திக்கவிருப்பதாகவும் வங்கியின் ஈ.டி என்ற முறையில் அவரிடமிருந்து முதல்வருக்கும் ஏதாவது குறிப்புகள் உள்ளனவா என்று முதல்வரின் காரியதரிசி சுபோத் அவரை தயக்கத்துடன் இண்டர்காமில் தொடர்புகொண்டபோது ‘ask him to go to hell’ என்ற உறுமலுடன் இணைப்பைத் துண்டித்தார்.

இவன் ப்ரெஸ் ரிப்போர்ட்டர்ஸ் கிட்ட பேசினா என்ன பேசாட்டி எனக்கென்ன என்ற ரீதியில் சென்றது அவருடைய சிந்தனை. அன்று காலையில் சுந்தரலிங்கத்திடமும் ஃபிலிப் சுந்தரத்திடமும் அவர்டைய பாச்சா பலிக்காமல் நேரே மாதவனின் அறைக்குச் சென்று ரிசர்வ் வங்கியிலிருந்து வந்த கடிதத்தைப் பற்றி கேட்டு வரிடம் அவமானப்பட்டு திரும்பியதை நினைத்துப் பார்த்தார். அவரையுமறியாமல் கோபம் உச்சிக்கு ஏறி ஏற்கனவே மருந்து மாத்திரைக்கு மசியாமலிருந்த அவருடைய ரத்த அழுத்தம் மேலும் அதிகரித்ததை அவரால் உணர முடிந்தது.

அவருடைய சிந்தனையைக் கலைப்பதுபோல் இண்டர்காம் சினுங்க அதை எரிச்சலுடன் பார்த்தார். யார்றா இது நேரங்காலம் தெரியாம.. ஆயினும் அது தொடர்ந்து சினுங்கவே எடுத்து, ‘யார் மேன் இது? What do you want?’ என்று கடித்து குதறினார்.

எதிரில் பணிவுடன் சுந்தரலிங்கம். ‘Can I come down to your cabin.. It’s urgent.’என்ன வேணும் இவனுக்கு? ஒரு வேள மாதவன் லெட்டர இவன் வழியா குடுக்கலாம்னு நினைக்கறானோ?

‘Come’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். அந்த விஷயம் மட்டும் இல்லாம வேற ஏதாச்சும் பேசட்டும்.. கெளவன் களுத்த நெரிச்சிப்போடறேன்..

சுந்தரலிங்கம் அறைக்குள் நுழைந்ததும் நேரே விஷயத்துக்கு வந்தார்.

‘Mr.Sethu, do you know that Chairman left the office without meeting the press people?’

சேதுமாதவன் வியப்புடன் தன் எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘Is it? He didn’t inform me.. Did he inform you?’

சுந்தரலிங்கம் இல்லை என்று தலையை அசைத்தார். ‘No.. He didn’t tell me either. மிஸ்டர் ஃபிலிப் சொல்லித்தான் எனக்கே தெரியும்.’

சேதுமாதவன் அவரை அடிக்கண்ணால் பார்த்தார். இந்த ஆளோட வாய்ஸ்லருக்கற ஆதங்கத்தப்பார்த்தா... அட! இந்த ஆளுக்கும் ஈகோவா.. பரவாயில்லையே.. இதான் டைம்.. நம்ம வழிக்கு இந்த ஆள கொண்டு வர்றதுக்கு இதான் நல்ல சந்தர்ப்பம்.. இந்தாளோட ஈகோவ கொஞ்சம் தூண்டி விட்டுருவோம்.. எப்படி ரியாக்ட் பண்றான்னு பாக்கலாம்.

‘Is it.. How dare he.. என்ன நினைச்சிக்கிட்டிருக்கார்? அவருக்கு அடுத்தது நான்.. சரி என்கூட காலையிலயே தகராறு.. அதனால சொல்லாம இருக்கலாம். அவர் இருக்கற சீட்ல இருந்தவர் நீங்க.. ஒங்கக்கிட்ட  சொல்லாம.. ஒங்கள விட ஜூனியர் அவர்.. அவர்கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போனா என்ன அர்த்தம்? இத இப்படியே விடக்கூடாது லிங்கம் சார்.. இப்படியே விடக் கூடாது..’ என்ற சேது சட்டென்று நினைவுக்கு வந்தவராய், ‘சரி.. அப்போ அந்த ப்ரெஸ் மீட்?’ என்றார்.

சுந்தரலிங்கம் தங்கத்துடன், ‘அந்த ரெஸ்பான்சிபிளிட்டியையும் ஃபிலிப் கிட்டவே விட்டுட்டு போயிருக்காராம். ஃபிலிப் வந்து சொல்றார். நம்ம பி.ஆர்.வோ. ப்ரிப்பேர் பண்ண ப்ரீஃபையும் அவர்கிட்ட குடுத்து நீங்களே ஹேண்டில் பண்ணிருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாராம்.’ என்றார்.

சேது கோபத்துடன், ‘அதெப்படி சார்.. எப்பவும் இல்லாம..? சேர்மன் இல்லாத நேரத்துல நாந்தானே சாதாரணமா ப்ரெஸ் பியூப்பில மீட் பண்றது வழக்கம்? சரி.. எனக்கு முக்கியத்துவம் குடுக்கறதுக்கு அவருக்கு விருப்பமில்லேன்னு வச்சிக்குவம்.. சீனியாரிட்டி பிரகாரம் எனக்கப்புறம் நீங்க தானே?’ என்றார் சுந்தரலிங்கத்தை ஆழம் பார்க்கும் நோக்குடன்.

சுந்தரலிங்கமும் அவரை ஆமோதிப்பதுபோல் தலையை மெள்ள அசைக்க சேதுமாதவன் தொடர்ந்து, ‘சார்.. நா சொல்றாப்பல செய்ங்க. நீங்க சுபோத்த உடனே கூப்ட்டு சேர்மனுக்கு ப்ரிப்பேர் பண்ண ப்ரீஃபை இங்க அனுப்பச் சொல்லுங்க.. நானும் நீங்களுமா ஒக்காந்து அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்... Let both of us teach Philip a lesson.. We will completely ignore him.. Don’t invite him to the press meet.. Both of us will handle the press.. என்ன சொல்றீங்க?’ என்றார்..

பிறகு அவருக்கு மறுத்துப்பேச சந்தர்ப்பமளிக்காமல் இண்டர்காமில் தன்னுடைய காரியதரிசியை அழைத்து சுபோத்துக்கு இணைப்பு கொடுக்குமாறு பணித்து ஒலிவாங்கியை சுந்தரலிங்கத்திடம் கொடுக்க அவர் பலிகடா போல் அதை வாங்கி சற்று முன் சேதுமாதவன் அவரிடம் கூறியதை உடனடியாக கொண்டுவரும்படி முதல்வரின் காரியதரிசியைப் பணித்துவிட்டு அவரைப் பார்த்தார்.

சேதுமாதவனின் உதடுகளில் தவழ்ந்த புன்னகையின் பொருள் அவருக்கு விளங்கவில்லையோ அல்லது அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் அவர் இல்லையோ..

தொடரும்..

12.1.07

சூரியன் 164

சற்று நேரத்திற்கு முன் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கார், மாகிம், பாந்த்ரா, பையாந்தர், ஜோகேஸ்வரி, போரிவெலி, மாதுங்கா உள்ளிட்ட பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. இன்று நண்பகல் சில ஓடும் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு கார் ரயில் நிலையம் அருகே  வெடித்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரயில்களில் குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பு நடந்த ரயில்களையும் ரயில் நிலையங்களையும் ரயில்வே போலீஸாரும், மும்பை நகர போலீஸாரும் முற்றுகையிட்டு சீல் வைத்துள்ளனர். மீட்புப் பணிகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வேயின் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இடங்களுக்கு அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க் அறிவித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத்தை பரப்பும் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார் சிங்.

மும்பை நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மும்பைக்கு விரைகிறார்.
மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும், மும்பை குண்டுவெடிப்புச் சம்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று மகாராஷ்டிர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பந்தமான தகவல் தொலைபேசி வழியாக கிடைக்கப்பெற்றும் அதை காவல்துறை அலட்சியப்படுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால் முதல் குண்டு வெடிப்பைப்பற்றிய செய்தி கிடைக்கப்பெற்றவுடன்  தொலைபேசி செய்த நபரின் விவரத்தை சம்பந்தப்பட்ட செல்ஃபோன் சேவையாளரின் உதவியுடன் சேகரித்த காவல்துறையினர் மும்பை புறநகர் ஒன்றில் வசித்துவரும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

‘என்ன அக்கிரமம் பார்த்தியாடி? இதுக்கு ஒரு முடிவே இல்ல போலருக்கு.’  வானொலி பெட்டியை அணைத்த பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். ‘பக்கத்துலருக்கற க்ளினிக்குக்கு போய்ட்டு வரேன்னு காலையில போனவள எங்கடி இன்னும் காணம்? ஊர் கெடக்குற நிலமையில இவ அந்த பையனெ பாக்கறேன்னு அப்படியே போய்ட்டாளான்னு தெரியலையே.. அவ செல்லுக்கு கூப்ட்டு எங்கருக்கான்னு கேளுடி?’

‘ஏன் நீங்க கேளுங்களேன்?’ என குரல் வந்தது சமையலறையிலிருந்து.. ‘இப்பவும் அவகிட்ட பேசறதில்லேன்னு அடம் புடிக்காதேள். கூப்பிடுங்கோ.. நா செத்த வேலையாருக்கேன்.’

‘நேரம் பாத்து குத்திக் காட்டறதுல ஒனக்கு நிகர் நீயேதாண்டி.’ என  முனகியவாறே மைதிலியின் செல்ஃபோன் எண்ணை சுழற்றினார் பட்டாபி.

****

இன்னும் பத்து நிமிடங்களில் துவங்கவிருந்த பத்திரிகை நிரூபர்களின் கூட்டத்திற்கென தன்னுடைய காரியதரிசி தயாரித்தளித்திருந்த அறிக்கையையும் வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாரித்தளித்திருந்த நிரூபர்கள் அவரிடம் கேட்கக் கூடிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும்  அடங்கிய குறிப்பையும் வாசிப்பதில் ஆழ்ந்துப்போயிருந்த மாதவன் தன்னுடைய செல்ஃபோன் சிணுங்குவதைப் பார்த்தார்.

அவருடைய மனைவி சரோஜா!

இந்த நேரத்துல இவளுக்கு என்ன வேணும்? என்னத்தையாவது கேட்டு மூட் அவுட் பண்ணுவாளோன்னு தெரியலையே? எடுக்காம இருந்துட்டா என்ன? என்று எண்ணியவர் அது விடாமல் தொடர்ந்து அலறவே எடுத்து, ‘இப்ப ஒனக்கு என்ன வேணும்? இன்னும் பத்து நிமிசத்துல ப்ரெஸ் மீட்டிங்க் இருக்கு எனக்கு?’ என்றார் எரிச்சலுடன்.

எதிர்முனையில் தன்னுடைய மனைவியின் அழுகுரல் அவரை திடுக்கிட வைத்தது. ‘ஏய் என்னாச்சி... Bomb blast விஷயமா? சீனிக்கு ஒன்னும் ஆயிருக்காது..’

எதிர் முனையில் அவருடைய மகள் பேசுவது கேட்டது.

‘என்ன வத்ஸ் சொல்றே? நம்ம சீனியையா? ஏன்?’

‘.....’

‘என்னடா சொல்றே? அவனா? ஃபோன்லயா? ஒங்கிட்ட யார் சொன்னா? மாமியா?’

‘....’

‘என்னடி இது.. சரியா கேட்டியா? சரி, சரி.. தோ புறப்பட்டு வரேன். ஒங்கம்மாவ தைரியமா இருக்கச் சொல்லு..’என்றவர் நினைவுக்கு வந்தவராய். ‘ஏய் வத்ஸ், அந்த ஐயர் பொண்ணோட நம்பர் ஒங்கிட்ட இருக்கா.. இல்லன்னா அம்மாக்கிட்ட இருக்கும்.. அவள கூப்ட்டு என்னன்னு விசாரிக்கச் சொல்லு.. நானும் என் பழைய சேர்மன கூப்ட்டு விசாரிக்கச் சொல்றேன்.. ஒன்னும் ஆயிருக்காது.. சும்மா என்க்வயரிக்கு கூப்ட்டுருப்பாங்க..’

பரபரப்புடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த மாதவன் தன்னுடைய இண்டர்காம் வழியாக தன்னுடைய காரியதரிசியை அழைத்தார்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘சுபோத் please book three flight tickets to Mumbai.. I should get it in today’s flight. It’s urgent. Ask Philip to come to my cabin, fast.’ என்று கடகடவென உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

சரோஜா கூறியதுபோல அவளையும் சீனியுடன் விட்டுவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது அவருக்கு. சீனியின் போதைப் பழக்க விவரங்கள் இதன் மூலம் வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சமும் அவரை ஆட்கொண்டது.

சேச்சே.. அப்படியாகாது.. I should not allow that to happen.. I should do something.. சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய முந்தைய வங்கி தலைவருடைய செல்ஃபோனை எண்ணுக்கு டயல் செய்தார்.

‘Yes.. It’s Madhavan.. Sir I need your help.. My son has just now been arrested by the Mumbai Police.. It must be something to do with today’s bomb blast.. I am coming by the evening flight.. Could you please find out what actually prompted the Police to pick up my Son..’

‘.....’

‘Yes.. Sir.. He was alone there in the Bank’s flat.. If you could interfere and speak to your friends in the department..’

‘.....’

‘Thank you Sir.. I’ll get in touch as soon as I land in Mumabi.. Bye..’

அவர் இணைப்பைத் துண்டிக்கவும் ஃபிலிப் சுந்தரம் அறைக்குள் நுழயைவும் சரியாக இருந்தது.

‘I am sorry Philip.. I’ve got a bad news from Mumbai.. I am leaving.. You will have to take care of the Press people.. I’ll post you of the developments..’

மாதவன் தன்னுடைய கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி விரைய அதிர்ச்சியுடன் ஒட்டமும் நடையுமாய் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார் ஃபிலிப் சுந்தரம்.


தொடரும்..

11.1.07

சூரியன் 163

காவல்நிலையத்திலிருந்து அவர்களிருவரும் புறப்பட்ட வாகனம் வழக்கறிஞர் சபரியின் அலுவலகம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

இருவரும் அவரவர் சிந்தனையில் ழ்ந்திருக்க பகல் நேர நெரிசலில் ஊர்ந்துக்கொண்டிருந்த வாகனம் ஒரேயடியாக நின்றுவிட தன்னுடைய சிந்தனையிலிருந்து மீண்ட ஜோ எரிச்சலுடன் ஓட்டுனரைப் பார்த்தான். ‘என்னங்க என்னாச்சி?’

அவர்களுடைய வாகனத்திற்கு முன்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு..

வாகன ஓட்டி தன்னுடைய ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கி அருகிலிருந்த வாகனத்தைப் பார்த்தார். அதே நேரத்தில் அதிலிருந்த ஓட்டுனரும் திரும்பி அவரைப் பார்க்க, ‘என்ன சார்.. என்னவாம்? டிராஃபிக் பயங்கரமா இருக்கு?’

அவரும் சலிப்புடன், ‘தெரியல சார்.. பாம்பேய்ல ட்ரெய்ன்ல குண்டு வச்சிட்டாங்களாம்.. அஞ்சாறு எடத்துல குண்டு வெடிச்சி.. நிறைய பேர் போய்ட்டாங்களாம்.. போலீஸ் இங்கயும் வந்துருமோன்னு செண்ட்ரல் பக்கம் போற வண்டிங்களையெல்லாம் இங்கன திருப்பி விட்டுட்டாங்ய. அதான்.. இப்பத்தைக்கி நகர முடியாது போலருக்கு..’ என ஜோ அதிர்ச்சியுடன் திரும்பி சபரியைப் பார்த்தான்.

சபரி ஓட்டுனரைப் பார்த்தார். ‘டிரைவர் ரேடியோவ ஆன் பண்ணுங்க.. ஏதாச்சும் நியூஸ் சொல்றாங்களான்னு பாப்போம்.’

அடுத்த சில நிமிடங்களில் சென்னை வானொலியிலிருந்து வந்த செய்திக் குறிப்புகள் அவர்களிருவரும் சற்று முன் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்த, ‘இப்ப என்ன பண்ணலாம் சார்?’ என்றான் ஜோ..

சபரி தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘இன்னைக்கி கோர்ட்ல எனக்கு ஒன்னும் முக்கியமான வாய்தா இல்லை.. ஆனா இந்த களேபரத்துல ஒங்க சாரோட பிரச்சினைதான் சிக்கலாயிரும்னு நினைக்கேன். பந்தோபஸ்த்து அது இதுன்னு போலீஸ்க்கு ஏகப்பட்ட வேலையிருக்கும். இதுல வெறும் என்க்வயரிக்குன்னு கூட்டிக்கிட்டு வந்தவர அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன் செல்லுலயே வச்சிட்டாலும் வச்சிருவார் அந்த எஸ்.ஐ.. எமர்ஜென்சி சிச்சுவேஷன்னு காரணம் காட்டி மஜிஸ்திரேட்டுக்கு முன்னால ஆஜர் பண்றதையும் தள்ளிப் போட வாய்ப்பிருக்கு.. எல்லாம் அவர் நேரம்..’

ஜோவுக்கு ஆத்திரம் வந்தது. ‘இதென்ன சார் அக்கிரமம்.. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? அதெப்படி அவர் தள்ளிப்போடலாம்.. சட்டம்னு ஒன்னு இருக்குல்லே?’

சபரி அவனைப் பார்த்து ஆறுதலுடன் புன்னகைத்தார். ‘சட்டம் இருக்கு மிஸ்டர் ஜோ.. ஆனா அத எப்படி வேணும்னாலும் வளைக்கறதுல இந்த போலிஸ் டிப்பார்ட்மெண்ட் கில்லாடிங்களாச்சே.. மேல யாரையாவது பெர்சனலா தெரிஞ்சிருந்தா ஏதாச்சும் பண்ணலாம்.. பாஸ்கிட்டத்தான் கேக்கணும்.. இல்லன்னா ஒங்க பேங்க்ல யாருக்காவது தெரியுமான்னு விசாரிங்க.. எஸ்.பி, டி.எஸ்.பி லெவல்லருந்து யாராச்சும் இந்த எஸ்.ஐகிட்ட பேசினா நடக்க சான்ஸ் இருக்கு.’

ஜோ திகைப்புடன் அவரையே பார்த்தான். என்ன அநியாயம்? எங்கோ குண்டு வெடித்ததற்கு இங்கு என்ன? சரியான ஆட்டுமந்தைக் கூட்டம்.. ஒரு இடத்துல ஏதாச்சும் விபரீதம் நடந்தாப் போறும் நாடு முழுசும் அது நடக்கும்னு இவங்களாவே கற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கறங்களையெல்லாம் தொல்லைப் பண்றதே வேலையா போச்சு.

இப்ப என்ன பண்ணலாம்? ஃபிலிப் சார் கிட்டதான் கேக்கணும்.. ஆனா இந்த டிராஃபிக் எப்ப சரியாகி எப்ப போயி.. சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து அவருக்கு ஃபோன் செஞ்சா என்ன என்று சிந்தித்தான்.. அடுத்த நொடியே அதுதான் சரி என்று நினைத்தவாறு அவருடைய எண்ணை டயல் செய்தான்.. ஹ¥ஹ¤ம்.. எங்கேஜ்ட்.. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முயற்சித்தான்.. யாருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது..

அவருடைய லேண்ட் லைன்ல கூப்பிடலாமா? என்று நினைத்தான். ஆனா அடுத்த நொடியே அது தன்னிடம் இல்லையென்பதை உணர்ந்தான். நம்ம ஆஃபீசுக்கு கூப்ட்டு கேட்டா என்ன? என்று அடுத்த நொடியே நினைத்து அவனுடைய கிளை அதிகாரிகளுள் ஒருவரை அழைத்தான். அங்கிருந்து கிடைத்த எண்ணைக் குறித்துக்கொண்டு  அதற்கு டயல் செய்தான்.. சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு ஃபிலிப் சுந்தரத்தின் குரல் ஒலிக்க மளமளவென்று தன் மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தான்.

அவன் பேசி முடித்தப் பிறகும் எதிர்முனையிலிருந்து பதில் வராமலிருக்கவே, ‘சார்.. Are you in a meeting or something.. Shall I call you later Sir?’ என்றான் பதற்றத்துடன்..

‘இல்ல மிஸ்டர். ஜோ.. I am not in a meeting.. ஆனா நீங்க சொன்னதுல அப்செட் ஆயி என்ன சொல்றதுன்னே தெரியல.. அந்த பாம்பே ப்ளாஸ்ட் விஷயமே நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. அந்த பதற்றத்தோட இங்க மிஸ்டர் மாணிக்கவேல் பிரச்சினை.. எனக்கு தெரிஞ்சி இதுல ஹெல்ப் பண்ணக்கூடிய போலீஸ் ஆஃபீசர்ஸ் யாரும் இல்லை..’ என்ற ஃபிலிப் சட்டென்று நினைவுக்கு வந்தவராய்.. ‘நேத்து நம்ம சேர்மன ஒருத்தர் வந்து பார்த்துட்டு போனார்னு.. அவர் கொஞ்சம் ஹை அஃபிஷியல்னு நினைக்கேன்.. I will talk to Subodh and find out.. வேணும்னா நம்ம சேர்மன் கிட்டயும் கேட்டுப் பாக்கேன்.. Can you call me after ten or fifteen minutes?’  

‘Yes Sir..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த ஜோ தன்னருகில் அமர்ந்திருந்த சபரியைப் பார்த்தான். ‘எங்க சிஜிஎம்முக்கு யாரையோ தெரியுமாம் சார்.. கேட்டுட்டு சொல்றேன்னு சொல்றார்.’

‘அப்படியா.. யார்னு தெரிஞ்சா போறும்.. அவ்வளவா பழக்கமில்லைன்னாலும் நாமளே நேர்ல போயி பார்த்து ஒங்க சார பத்தி சொல்லி உதவி கேக்கலாம். ஆனா இந்த எஸ்.ஐ அதுக்குள்ள கேஸ் புக் பண்ணாம இருக்கணும்.. பார்ப்போம்.. கவலைப்படாதீங்க.. முதல்ல நம்ம ஆஃபீஸ் போய் சேர்ற வழிய பாக்கணும்.. எங்க சீனியருக்கும் யாரையாச்சும் தெரிஞ்சிருக்கலாம்..’

அவர் பேசி முடிக்கவும் வாகனங்கள் மெள்ள நகர துவங்கவும் சரியாக இருந்தது.. சென்னை வானொலியின் செய்திக் குறிப்புகள் அவ்வப்போது மும்பை குண்டு வெடிப்பின் இறுதி விவரங்களை தெரிவித்துக்கொண்டே இருக்க.. அடுத்த ஒரு மணி நேரத்தில் சபரியின் அலுவலகத்தை சென்றடைந்தனர்.

சபரி இறங்கும் வரை காத்திருந்த ஜோ.. ‘சார் நா இப்படியே எங்க எச்.ஓ வரைக்கும் போய் எங்க சிஜிஎம்ம பார்த்துட்டு வரேன்.. ஒருவேளை அவர் சொன்ன ஆள நேர்ல போய் பாக்கணும்னா ஒங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு வந்து அழைச்சிக்கிட்டு போறேன்.. ஃபோன்ல கூப்ட்டுட்டு வரேன் சார்.. தாங்ஸ்..’ என்றவாறு வாகன ஓட்டியைப் பார்த்தான். ‘எங்க எச்.ஓ. தெரியுமில்ல ஒங்களுக்கு?’

அவர் தெரியும் என்று தலையை அசைத்தவாறு வாகனத்தைத் திருப்ப கவலையுடன் பின் சீட்டில் தலையை சாய்த்து கண்களை மூடினான் ஜோ.

****     

‘என்ன மேடம்? சிஜிஎம் என்ன சொன்னாங்க?’ என்றவாறு வந்தனாவைப் பார்த்தாள் நளினி.

வந்தனா சிரித்தார். ‘எல்லாம் நா சொன்ன மாதிரிதான். மாணிக்கவேல ஒன் பிராஞ்சிலயும் ஒன்னெ இங்கயும் போடறதுக்கு சார் ஒத்துக்கிட்டார். மாணிக்கவேலுவுக்கும் இது ரிலீஃபா இருக்குமேன்னுதான் நேத்து அவர் வந்திருந்தப்போ கேட்டேன். அவர் சரின்னு சொன்னதுமே இத நடத்திரலாம்னு நினைச்சேன். இருந்தாலும் ஃபிலிப் சார்கிட்ட சொல்லாம செய்யக்கூடாதில்லையா? அதான்.. ஆனா அவர் நேத்து எங்கிட்ட சரின்னு சொன்னத மறந்தே போய்ட்டார் போலருக்கு.. நல்லவேளை இன்னைக்கி அவரே கூப்ட்டதால சரியா போச்சி.. இல்லன்னா நா எங்க சொன்னேன்னு கேட்டாலும் கேட்டிருப்பார்..’

நளினிக்கு இரண்டு நாட்கள்  மருத்துவமனையில் கிடந்த வந்தனா மேடமா இது என்று வியப்பாக இருந்தது. அத்தனை தெளிவுடன் கலகலவென சிரித்த அவரையே பார்த்தாள். ‘ஆச்சரியமா இருக்கு மேடம்.. ஒங்க transformation.. நேத்தைக்கி நானும் நந்துவும் ஒங்கள பார்த்தப்ப பயந்தே போய்ட்டோம்..’

‘அதான் நீங்க சரியான நேரத்துல வந்து என்னெ அங்கருந்து rescue பண்ணிட்டீங்களே..’என்று மீண்டும் சிரித்த வந்தனா சட்டென்று கலங்கிய கண்களுடன் நளினியைப் பார்த்தார். ‘I am so grateful to you and Mr.Nandakumar.. நீங்க ரெண்டு பேர் மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா அந்த டாக்டர் என்னெ அந்த இருட்டுக்குள்ளருந்து விட்டிருக்கவே மாட்டார்.. என்னெ வீட்டுக்கு கொண்டு வந்ததே எனக்கு பெரிய ரிலீஃப்னு நினைக்கேன்.. அத்தோட மாணிக்கவேல் வந்து போனதும் எனக்கு ரொம்பவும் ஆறுதலா இருந்தது நளினி.. அதுக்கும் ஒங்க ரெண்டு பேருக்குந்தான் நா தாங்ஸ் சொல்லணும்.’

வந்தனா குரல் உடைந்து விசும்ப நளினி பதறிப்போனாள். ‘என்ன மேடம் நீங்க.. நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சி மறந்துருங்க.. இப்ப நீங்க சிரிச்ச சிரிப்பு எனக்கும் எவ்வளவு ரிலீஃபா இருந்தது தெரியுமா? அந்த நிலமையிலும் நீங்க என்னெப் பத்தி நினைச்சி கவலைப்பட்டு மாணிக்கவேல் சார் கிட்ட பேசி.. அவர சம்மதிக்க வச்சி.. கையோட சிஜிஎம் சார்கிட்டயும் பேசி.. நாந்தான் ஒங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கேன் மேடம்.. அதுமட்டுமில்ல மேடம் இந்த மாற்றம் எனக்கு ஒரு குழந்தை பிறக்கறதுக்கு உதவும்னு நம்பறேன் மேடம்.. நந்துவுக்கும் எனக்கும் இடையிலருக்கற விரிசலை தீக்கறதுக்கும் இந்த மெட்றாஸ் ஜேர்னி ஹெல்ப் பண்ணியிருக்கே.. இத பாசிபிளாக்குனது மாணிக்கம் சாரோட மோளோட மரணமும் அதனால ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த சிக்னெசும்.. ப்ளஸ்சிங் இன் டிஸ்கைஸ்னு சொல்ல நாக்கு வர மாட்டேங்குது மேடம்.. ஆனா அதுவும் உண்மைதானேன்னு தோனுது.. தப்பா நினைச்சிக்காதீங்க.’

வந்தனா தன்னுடைய சாய்வு இருக்கையிலிருந்து நிமிர்ந்து தன் அருகில் நின்றிருந்த நளினியின் கரங்களைப் பற்றி தன்னருகில் அமர்த்தினாள். ‘சேச்சே.. நா எதுக்கு தப்பா நினைக்கப் போறேன்.. நீ சொன்னதுலயும் தப்பில்லையே.. சில பேராலத்தான் தங்களோட சாவுலயும் மத்தவங்களுக்கு நல்லது செய்ய முடியும்.. அது என் கமலியால முடிஞ்சிருக்கு.. What a wonderful child she was.. அவளோட இழப்ப என்னாலயே தாங்கிக்க முடியலையே.. இந்த இழப்புலயும் மாணிக்கவேலுக்கு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனியிருக்கே நளினி.. What a wonderful person he is? அவனுக்கு மகளா பொறக்கறதுக்கே கமலி எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும்.. ஆனா ஒனக்கு பயன்படப்போற இந்த டிரான்ஸ்ஃபர் சந்தோஷ¤க்கு வருத்தத்த குடுக்குமோன்னு நினைக்கறேன்.. இருந்தாலும் பரவாயில்லை.. சின்ன பையந்தானே.. சமாளிச்சிக்குவான்.. அப்பாவ மிஸ் பண்ணுவான்னாலும்.. அம்மா இருக்காளே.. He may not miss his dad that much.. பாக்கலாம்..’

நளினி வந்தனாவின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தவளாய் பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்ட வந்தனா, ‘நளினி நந்தக்குமார் எங்க போயிருக்கார்?’ என்றாள்.

நளினிக்கு நினைத்தாலே கோபமாக வந்தது. அவள் எத்தனை தடுத்தும் அந்த முரளியைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று காலையில் கிளம்பிச் சென்றவர் மூன்று மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் திரும்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு.

ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், ‘அவர் ஒரு ஃப்ரெண்ட பாத்துட்டு வரேன்னு போயிருக்கார் மேடம். லஞ்சுக்கு வந்துருவேன்னு சொல்லிட்டுத்தான் போயிருக்கார். ஏன் மேடம்?’ என்றாள்.

‘அவர் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் போய் நம்ம ஃபிலிப் சார பாத்துட்டு வந்துருங்க.. நந்தக்குமாருக்கும் இங்கேயே டிரான்ஸ்ஃபர் கிடைச்சா நல்லதுதானே.. நான் ஒனக்கு மட்டுந்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் அவர நேர்ல பாத்து கேட்டா இப்பவே முடியலேன்னாலும் அஞ்சாறு மாசத்துக்குள்ள செய்யலாமே.. என்ன சொல்றே?’

நளினி நன்றியுடன் வந்தனாவைப் பார்த்தாள். ‘ரொம்ப தாங்ஸ் மேடம்.. கண்டிப்பா போறோம்.. இதோ இப்பவே கூப்ட்டு வரச் சொல்றேன்..’ என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை தேடிப் போனாள்.

தொடரும்..

10.1.07

சூரியன் - 162

மாதவனின் அறையிலிருந்து திரும்பிய ஃபிலிப் சுந்தரம் தன் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த குறிப்பைப் பார்த்தார்.

‘Hon’ble Director Mr.Nadar wanted to talk to you. Raji’

அவருடைய காரியதரிசி ராஜி எழுதி வைத்திருந்த குறிப்பு அவருடைய வயிற்றில் புளியைக் கரைத்தது.

அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று நினைத்தார். புதிய சேர்மன் மாதவனிடம் இதைப்பற்றி கூறியும் அவர் ரிசர்வ் வங்கியிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தின் நகலை நாடாரிடம் கொடுப்பதா வேண்டாமா என்பதைப் பற்றி ஒன்றும் முடிவாக கூறாத நிலையில்..

போறாததற்கு இந்த சேதுமாதவன் வேறு அதே கடிதத்தைக் குறிவைத்திருக்கிறார்.. அவர் நேரடியாக மாதவனிடத்தில் அக்கடிதம் தனக்கு வேண்டும் என்று கேட்டாலும் வியப்பில்லை. ஆனால் மாதவன் அவருடைய கோரிக்கைக்கு மசிவாரா என்பது வேறு விஷயம். இந்த விஷயத்தில் மாதவன் எப்படி முடிவெடுப்பார் என்பதும் கேள்விக்குறிதான் என்று நினைத்தார் ஃபிலிப்.

மீண்டும் ஒருமுறை தன் எதிரிலிருந்த குறிப்பைப் பார்த்தார். இனியும் தாமதியாமல் நாடாரை அழைத்து தன்னுடைய இயலாமையைக் கூறிவிடுவதுதான் நல்லது. மீண்டும் அவராக தன்னை அழைப்பதற்கு வாய்ப்பளித்தால் அவருடைய கோபத்தை தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தார்.

அவர் அழைப்பதற்கெனவே காத்திருந்ததுபோல் இருந்தது எதிர்முனையில் நாடாரின் குரல். ‘என்ன சார்.. நான் கேட்டது மறந்துட்டீங்க போலருக்கு? அப்படியென்ன சேர்மன் ரூம்ல? தலைபோற விஷயமோ?’

அவருடைய குரலில் கோபத்தைத் தவிர கிண்டலே மேலோங்கியிருந்ததைக் கவனித்த ஃபிலிப் சுந்தரம் தகுந்த விதத்தில் தன்னுடைய இயலாமையை விளக்கிவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். ‘சார்.. அந்த லெட்டர் விஷயமாத்தான் போயிருந்தேன்.’

‘அதுக்கெதுக்குய்யா சேர்மன்கிட்ட போணும்? நம்ம இஞ்பெக்சன் இலாக்காவுல கேக்க வேண்டியதுதான?

‘இல்ல சார்.. இந்த மாதிரியான கான்ஃபிடன்ஷியல் லெட்டர் எல்லாம் சேர்மன் கஸ்டடியிலதான் இருக்கும்.. அதான்..’

‘என்னவோ போங்க..’ நாடாரின் குரலில் சலிப்பு எட்டிப் பார்த்தது. ‘சரி.. அவர்கிட்ட போய் நான் இந்த லெட்டரப்பத்தி கேட்டத சொல்லிட்டீராக்கும். நல்ல பேங்குய்யா இதுன்னு நெனைக்கப் போறார்யா.. வந்து ரெண்டு நா கூட ஆகல!’ தன்னுடைய காரியம் வெற்றிபெறாது என்ற நிராசையிலும் தன்னுடைய கவுரவத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டது வியப்பளித்தது.

இப்ப என்ன சொல்றது? சேர்மன்கிட்ட இதப்பத்தி சொல்லலேன்னு சொல்றதா? அது தேவையற்ற பொய்யாகாதா? மீண்டும் உண்மைக்கும் புறம்பாக பேச வேண்டுமா? சரி அப்படியே பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தாலும் நாளை ஒருநாள் மாதவனே நாடாரிடம் இதைப்பற்றி நான் கூறியிருந்ததாகக் கூறிவிட்டால்?

‘என்னய்யா சத்தத்தையே காணோம்? ஆக இப்பத்தைக்கு அந்த லெட்டரப்பத்தி யோசிச்சி பலனில்லைங்கறீர் அப்படித்தானே? சரி விட்டுத்தொலையும்..’ என்று எதிர்முனையிலிருந்து பதில் வர அப்பாடா மீண்டும் ஒரு பொய் சொல்லத் தேவையில்லை என்று நிம்மதியடைந்தார் ஃபிலிப். ‘‘ஆனா ஒன்னுய்யா..அந்த லெட்டர இல்லாம ஆக்கறதுக்கு அந்த டாக்டரும் அவனோட கையாள் இருக்கானே.. அதான்யா ஒங்க ஈ.டி.. அவனும் முயற்சி பண்ணுவானுங்க.. அது நடக்கப்படாது.. கேட்டீராய்யா?’ என்று நாடார் தொடர மீண்டும் தொல்லையா என்று நினைத்தார்.

‘சரி சார்.. அது நடக்காது..’

நாடார் கேலியுடன் சிரிப்பது கேட்டது. ‘அதெப்படிய்யா அத்தன நிச்சயமா சொல்றீரு? ஒமக்கு தெரியாம சேர்மன் அவன்கிட்ட தூக்கி குடுத்துட்டா?’

‘அவர் அப்படி செய்யமாட்டார்னு உறுதியா சொல்லலாம் சார்.’ என்றார் ஃபிலிப்.

‘எப்படிய்யா சொல்றீரு? ரெண்டு நாளைக்குள்ளேயே சேர்மனெ பத்தி ஒமக்கு தெரிஞ்சிருச்சாக்கும்.. சரி.. அத விடும்.. அந்த பாபு சுரேஷ் விஷயம் என்னாச்சிது? அவனெ அந்தம்மா இடத்துல போடறதா முடிவாயிருச்சா?’

ஒன்றுபோனால் ஒன்று. விடமாட்டார் போலிருக்கிறதே என்று நினைத்தார் ஃபிலிப். ‘இல்ல சார்.. அதப்பத்தி இன்னும் முடிவாகல.’

‘அதான் வேணும்.. அவர் சொன்னார், இவர் சொன்னார்னு நீர் பாட்டுக்கு தலைய ஆட்டிறப்படாது. அந்தம்மாவுக்கு மட்டுந்தான் ஒங்க ஈ.டிய எதுத்து நிக்கற தைரியம் இருக்கு..நீரும் அந்த லிங்கமும் சரியான தலையாட்டி பொம்மைங்கதானய்யா..’

நாடாருடைய குரலிலிருந்த ஏளனம் அவரை சங்கடப்படுத்தினாலும், ‘நீங்க நினைக்கறா மாதிரி எனக்கு தெரியாம நம்ம சேர்மன் டிசைட் பண்ணமாட்டார்னு நினைக்கறேன் சார்.’ என்றார் நிதானத்துடன். ஆனாலும் அவருடைய கூற்று நியாயமானதுதான் என்றும் நினைத்தார். வந்தனாவுக்கு இருக்கும் தைரியம் யாருக்கும் வராதுதான்.. அவர் எப்போது பணிக்கு திரும்புவாரோ என்று நினைத்தார் ஃபிலிப். அவர் வந்துவிட்டால் நமக்கு இத்தனை பாரம் இருக்காதே..

‘சரிய்யா.. பாத்துக்கிறும்.. சொல்லிட்டேன்..’ என்றவாறு நாடார் இணைப்பைத் துண்டிக்க தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நிம்மதி பெருமூச்சை விட்டார்.

நாடார் வந்தனாவின் பெயரைக் குறிப்பிட்டதும் அவருடைய நினைவு வர, ‘இப்ப எப்படியிருக்கார்னு தெரியலையே?’ என்று முனுமுனுத்தவாறு அவருடைய எண்ணை டயல் செய்து எதிர்முனையில் பழக்கமில்லாத பெண்ணின் குரல் கேட்க நாம்தான் தவறான எண்ணை டயல் செய்துவிட்டோமோ என்று நினைத்தார்.

அவர் இணைப்பைத் துண்டிக்கலாமா என்று நினைத்துக்கொண்டிருக்க, ‘One second Sir.. I will put you to Madam..’ என்றவாறு ‘மேடம் ஒங்களுக்குத்தான்.. நம்ம ஃபிலிப் சார் பேசறார்.’ தொலைப்பேசியை வந்தனாவிடம் கொடுப்பது கேட்டது.

‘நம்ம ஃபிலிப் சார்’ என்றால் இவரும் நம் வங்கியைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். தமிழில் மலையாள வாடை நன்றாக தெரியவே கேரளத்தைச் சார்ந்தவர்.. யாராக இருக்கும் என்ற சிந்தனையில் ஃபிலிப் மூழ்க, ‘குட்மார்னிங் சார்..’என்ற வந்தனாவின் உற்சாகமான குரல் அவரை மகிழ்ச்சியடைய செய்தது.

‘எப்படி இருக்கீங்க? பரவாயில்லையா?’ என்றார்.

‘ஆமா சார்.. நேத்து ராத்திரி நல்லா தூங்கினே.. தாங்ஸ் டு யூ.’

‘நானா.. என்னாலையா? நா அப்படியென்ன செஞ்சேன்?’

‘என்ன சார் மறந்துட்டீங்களா? நா கேட்டதும் சரின்னு சொல்லிட்டீங்களே.. நான் எதிர்பார்க்கலையே.. சின்ன விஷயம்தான்னாலும்.. நீங்க சரின்னு சொன்னதால ஒருத்தருக்கு நல்லது நடக்கப்போகுதே.. அதுவே ஒரு பெரிய சந்தோஷம்தானே?’

ஃபிலிப்புக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன சொல்கிறார் இவர்? நான் என்ன சரின்னு சொன்னேன் அதனால யாருக்கு என்ன நல்லது நடக்கப் போகுது?

‘I am sorry Vandana.. I don’t understand..’ என்றார்.

எதிர்முனையிலிருந்து சற்று தயக்கத்துடன் குரல் வந்தது. ‘என்ன சார்.. நேத்து நம்ம எர்ணாகுளம் சி.எம் விஷயமா பேசினேன்.. நீங்களூம் சரின்னு சொன்னீங்களே?’

எர்ணாகுளம் சி.எம் விஷயமா? இதென்னடா புதுகுழப்பம்? நேத்து இவங்க ஃபோன்ல கேட்ட விஷயமாருக்குமோ? ஏ.சி போட்ட சத்தத்துல நாந்தான் சரியா கேக்காம சரின்னு சொல்லிட்டமோ.. எரிச்சலுடன் அமைதியாகிப் போன குளிரூட்டும் பெட்டியைப் பார்த்தார்.. இத நேத்தே அணைச்சிப் போட்டுருக்கலாம்..

இருப்பினும் நாம் சரியாக கேட்காமலேயே அவருடைய கேள்விக்கு சரி என்று பதில் கூறினோம் என்பது வந்தனாவுக்கு தெரிந்தால் ஒருவேளை அதுவே அவரை மீண்டும் பதற்றமடையச் செய்துவிடுமோ என்று அஞ்சி நாம் சம்மதித்தது சம்மதித்ததாகவே இருக்கட்டும் என்று நினைப்புடன், ‘ஓ அதுவா? நா இங்க இருக்கற கன்ஃப்யூஷன்ல மறந்தே போனேன் வந்தனா. சாரி.. மன்னிச்சிருங்க.. இப்ப ஃபோன எடுத்தது அவுங்கதானா?’ என்று சமாளித்தார்.

எதிர்முனையிலிருந்து கேட்ட கலகலவென்ற சிரிப்பொலி அவர் எடுத்த முடிவு சரிதான் என்பதை உணர்த்தியது. ‘நீங்க இப்படி சிரிச்சி ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு வந்தனா.. எப்ப ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கீங்க?’

‘இந்த வீக் எண்ட்தான் டாக்டர் வரச்சொல்லியிருக்கார் சார். எப்படியும் மண்டே ஜாய்ன் பண்ணிருவேன்னு நினைக்கேன். புது சேர்மன் ஏதும் பிரச்சினை பண்றாரா சார்?’

ஃபிலிப் சிரித்தார். ‘புது சேர்மனா? சேச்சே.. நம்ம மூர்த்தி சார் மாதிரி கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பாரோன்னு தோனுது.. ஆனா அவர மாதிரியே நல்ல நாலேட்ஜ் இருக்குது.. ஆனாலும் நியூ ஜெனரேஷன் பேங்க்ல இருக்கறா மாதிரி நம்ம பேங்கையும் மாத்தணும்னு நினைக்கறது நடக்குமான்னு தெரியலை..’

‘அப்படியா? என்னத்த மாத்தணுமாம்?’

‘என்ன வந்தனா விடமாட்டீங்க போலருக்கு?’ என்றார் ஃபிலிப் சிரித்தவாறு. ‘மறுபடியும் பிரஷர ஏத்திக்க போறீங்களா?’

மீண்டும் சிரிப்பொலி அவருடைய காதை நிரப்பியது. வந்தனாவின் சிரிப்பே அலாதியானதுதான்.. எந்த ஒரு சங்கடமான சூழலையும் தன்னுடைய உரத்த சிரிப்பொலியால் அவர் மாற்றிவிடுவதை உயர் மட்டத்திலிருந்த அனைத்து அதிகாரிகளும் உணர்ந்திருந்ததை நினைத்துக்கொண்டார்.

‘சேச்சே.. ஒரு நாள் முழுசா ICU ல இருந்ததுக்கப்புறம் இனி அப்படியொரு நிலைக்கு ஆளாகக் கூடாதுன்னு தோனுது சார்.. எந்த அதிர்ச்சியையும் தாங்கிக்க பழகிக்கணும்னு தீர்மானிச்சிட்டேன்.’

மாணிக்கவேலின் தந்தை கொலையுண்டதையும் அந்தப்பழி மாணிக்கவேலின் மீதே விழுந்திருப்பதையும் இவர் கேள்விப்பட்டால் அதையும் லேசாக எடுத்துக்கொள்ள முடியுமா இவரால் என்று ஓடியது அவரது சிந்தனை..

வேண்டாம்.. இப்போதைக்கு வேண்டாம்.. ஜோவையும் அழைத்து இதை அவரிடம் இப்போதைக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கூறிவிட வேண்டும் என்று தீர்மானித்தார்..

‘ஓக்கே வந்தனா.. மொதல்ல நல்லா குணமாகி ஆஃபீஸ் வந்து சேருங்க.. அப்புறம் பாத்துக்கலாம். நீங்க சொன்ன அந்த சி.எம்மெ என்னெ வந்து பாக்கச் சொல்லுங்க.. ஒங்களுக்கு ப்ராமிஸ் பண்ணா மாதிரியே செஞ்சிரலாம்.. பை..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு ஜோவின் எண்ணை தேட எத்தனிக்கவும் அவருடைய பிரத்தியேக தொலைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது..

எதிர்முனையில் ஜோ!

‘நானே ஒங்களுக்கு ஃபோன் பண்ணணும்தான் இருந்தேன்.. சொல்லுங்க.. நீங்க போன விஷயம் என்னாச்சி?’

அடுத்த சில நிமிடங்களில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவரை திணறடித்தது!

தொடரும்..

4.1.07

சூரியன் 161

காவல் நிலைய மர பெஞ்சில் அமர்ந்திருந்த ஜோ சற்று முன் ஜீப்பிலிருந்து இறங்கி அவனையும் அவனுடன் அமர்ந்திருந்த வழக்கறிஞர் சபரியையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்த துணை ஆய்வாளரை வெறுப்புடன் பார்த்தான்.

இந்த காவல்துறை அதிகாரிகளுடைய அகம்பாவத்துக்கு அளவே இல்லை. என்னவோ அவர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பு. காவல் நிலையத்திற்கு வருபவர்களை ஏதோ குற்றவாளிகள் போன்று நடத்துவதில் அவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை வக்கிரபுத்தி என்றுதான் கூறவேண்டும்.

அவனையும் சபரியையும் தவிர வேறு எவரும் அங்கு காத்திருக்கவில்லை. ஆயினும் நிலையத்திற்குள் வந்து ஐந்து நிமிடத்திற்கு மேலாகியும் அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு முகத்தைத் துடைப்பதிலேயே குறியாயிருந்தவரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் அவர் மீதிருந்த பார்வையை அகற்றாமல், ‘சார் நீங்க போய் பேசுங்களேன்.’ என்றான் சபரியிடம்.

‘அவராவே கூப்பிடுவார் பாருங்க. ஹாஸ்ப்பிடல்ல என்னமோ சீரியசா நடந்திருக்கு. அதான் இவ்வளவு டென்ஷனாருக்கார். அவர் எதிர்ல நிக்கற லேடி கான்ஸ்டபிள்ச பாருங்க. அவங்கள டீல் பண்ணிட்டுத்தான் நம்ம கிட்ட வருவார். பொறுமையா இருங்க. இல்லன்னா காரியம் கெட்டுரும்.’ என்றார் சபரி பற்களுக்கிடையில்.

அவர் நினைத்ததுபோலவே நடந்தது.

‘சொல்லுங்க, ஒங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம்?’ என்று அவர் தன் எதிரில் நின்ற பெண் காவலர்களைக் கேட்பது ஜோவின் காதில் விழுந்தது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்பதில் குறியானான்.

‘நாங்க அந்த லேடி அப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கல சார்.’

‘எதிர்பார்க்கணும்மா, எதிர்பார்க்கணும்.. போலீசுக்கு எப்பவுமே அஜாக்கிரதை கூடாது. அவங்க அக்யூஸ்டு இல்லதான். ஆனா ஒரு முக்கியமான ஐ விட்னஸ். நடந்துருக்கற கொலைக்கு அவங்கதான் ஒரே சாட்சி. அப்புறம் அந்த பையன். அவனுக்கு இந்த ஆளே ஊசி போட்டுருக்கார். அது வெறும் தூக்க மருந்தோ இல்ல போதை ஊசியோ. அவன்கிட்டருந்து ஸ்டேட்மெண்ட் வாங்கறது எந்த அளவுக்கு சரிவருமோ தெரியல. அப்படி இருக்கறப்போ இந்த லேடிகிட்டருந்து ஸ்டேட்மெண்ட் வாங்கறவரைக்குமாவது அவங்கள பாத்துக்கறது முக்கியம்னு ஒங்களுக்கு தெரிய வேணாம்?’

‘தெரியும் சார். வண்டி சிக்னல்லதான நிக்கிதுன்னுட்டு கொஞ்சம் அசந்துட்டோம் சார். அந்தம்மா வண்டி பொறப்படறவரைக்கும் காத்திருந்துட்டு சட்டுன்னு குதிச்சி ஓடுவாங்கன்னு எதிர்பார்க்கல சார். அதான்..’

ஆய்வாளர் கேலியுடன் அவர்களைப் பார்த்தார். ‘ஏம்மா இதெல்லாம் ஒரு எக்ஸ்க்யூசா? வண்டி நிக்கறப்போ இறங்கி ஓடுனா நீங்களும் அவங்க பின்னால ஓடிவருவீங்கன்னு அந்தம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒங்களுக்கு தெரியல.. சரி அதெல்லாம் இருக்கட்டும். அந்தம்மா எறங்குனவுடனே நீங்க என்ன பண்ணீங்க? அவங்க பின்னாலயே எறங்கி ஓடவேண்டியதுதானம்மா?’

காவலர்கள் ஒருவரையொருவார் பார்த்துக்கொண்டனர் ‘நீ ஓடியிருக்கலாமில்ல?’ என்பதுபோல். ‘ஓடுனோம் சார். அதுக்குள்ளதான் அந்தம்மா பஸ்ல அடிபட்டு.. சாரி சார்.’

‘ஏம்மா சாரின்னா முடிஞ்சிருச்சா? நம்ம டிப்பார்ட்மெண்ட் ரூல்ஸ் தெரியுமில்ல? ஒரு மர்டர் கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கற முக்கியமான விட்னெச தப்பிக்கவிட்டா சஸ்பென்ஷந்தான்னு தெரியாது? போங்க.. போயி ஏன் ஒங்கள சஸ்பெண்ட் பண்ணக்கூடாதுன்னு விளக்கம் எழுதி கொண்டாங்க.. அந்தம்மா மட்டும் முழிக்காம அப்படியே போய் சேந்துட்டாங்கன்னு வச்சிக்கங்க.. ஒங்க வேலையும் கோவிந்தாதான்..’

ஆய்வாளருடைய இறுதி வார்த்தைகளில் ஜோ கொதித்துப்போனது போலவே ஹாலில் மற்றொரு மூலையில் அமர்ந்திர்ந்த மாணிக்கவேலும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்.

காவலர்கள் இருவரும்கூட பதறிப்போனார்கள்.. தங்களுடைய வேலைக்கு பத்து வந்துவிடுமோ என்று நினைத்து.. ‘சார், என்ன சார் குண்ட தூக்கி போடறீங்க? நாங்க தப்பிக்க விட்டோம்னு சொல்றதுக்கு அவங்க ஒன்னும் கைதியில்லையே சார்..’

ஆய்வாளர் எரிச்சலுடன் பார்த்தார். ‘அட! ரூல் பேசறீங்களா? எரிச்சல் மூட்டாம போயி எழுதி கொண்டாங்க.. போங்க..’

அவர்கள் இருவரும் அங்கிருந்த நகர ஜோ தனக்கருகில் அமர்ந்திருந்த சபரியைப் பார்த்தான். ‘சார்.. இப்பவாவது அவர்கிட்ட போய் பேசலாமா?’

சபரி எழுந்து நின்றார். ‘வாங்க.. ஆனா அவர் ஏதாச்சும் கிண்டலா சொன்னா கோபப்படாதீங்க.. தேவைப்பட்டாலொழிய நீங்க பேசக்கூடாது.’

ஜோ தலையை அசைத்தவாறு அவர் பின்னே சென்றான். அவர்களிருவரும் உதவி ஆய்வாளரின் மேசைக்கு முன் சென்று நின்ற ஒரு சில விநாடிகள் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய செல்ஃபோனையே அவர் பார்த்துக்கொண்டிருக்க ஜோ எரிச்சலுடன், ‘சார்.. ஒங்கள பாக்கத்தான் வந்திருக்கோம்.’ என்றான். சபரி அவனுடைய கரத்தை இறுக்கப் பற்றியவாறு அவனைப் பார்க்க அவன் மவுனமானான்.

உதவி ஆய்வாளர் மெள்ள தலையைத் திருப்பி அவர்களை அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார். அவர் ஜோவைப் பார்த்த பார்வை அவனை ஏற்கனவே வீட்டில் சந்தித்திருந்ததையே மறந்துவிட்டதுபோலிருந்தது. உள்ளுக்குள் பொங்கி வந்த கோபத்தை அடக்கியவாறு நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

‘சார்.. I am Sabari.. Advocate..’ என்றவாறு சபரி தன்னை அறிமுகப்படுத்தினார்.

உதவி ஆய்வாளர் அவரை மேலும் கீழும் பார்த்த பார்வை.. ஜோவுக்கு அவருடைய கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று தோன்றியது. அடக்கிக்கொண்டு அவரை அமைதியாகப் பார்த்தான்.

‘ஒக்காரலாங்களா சார்.’ என்றான் நக்கலாக.

சபரி அவனை இது தேவைதானா என்பதுபோல் பார்த்தார். பிறகு அவராகவே மேசையின் முன்னிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்துக்கொண்டு அவனையும் அமருமாறு கண்ணால் சைகை செய்தார். ஆனால் ஜோ அமராமல் நின்றுக்கொண்டிருந்தான்.

‘என்ன சார் சொன்னாத்தான் ஒக்காருவீங்களோ? ஒக்காருங்க சார்.. நாங்களே இங்க தல எரிஞ்சிபோற பரபரப்புல இருக்கோம்.. நீங்க வேற..’ அவருடைய குரலில் இருந்த எகத்தாளம், ஆணவம்.. ஜோ பற்களைக் கடித்துக்கொண்டு அமர்ந்தான்.

‘சார்.. நான் மிஸ்டர் மாணிக்கவேல் விஷயமா வந்திருக்கேன்.’ என்றார் சபரி மிருதுவாக.

‘அதான் தெரியுதே.. இவர்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்திருக்கார்?’ தன்னை நோக்கி கண்ணால் சைகைக் காட்டிய அந்த ஆய்வாளரை முறைத்தான்.

‘அவர எதுக்காக இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கிட்டா மேற்கொண்டு ஸ்டெப்ஸ் எடுக்க வசதியாருக்கும்..’

‘எதுக்கா?’

ஆய்வாளரின் ஏளன சிரிப்பைப் பொருட்படுத்தாமல் சபரி தொடர்ந்தார், ‘இல்ல சார். வெறும் என்க்வயரிக்காகவா இல்ல..’

‘அரெஸ்ட் பண்ணியிருக்கீங்களான்னு கேக்கீங்களா?’

சபரி பதில் கூறாமல் அவரையே பார்த்தார்.

‘அரெஸ்ட் பண்ணிருக்கோம்னுதான் வச்சிக்குங்களேன்.. இப்ப என்ன பண்ணணுங்கறீங்க? இதுக்கு வாரண்டெல்லாம் தேவையில்லைன்னு ஒங்களுக்கு தெரியுமில்லே..’

சபரி பணிவுடன், ‘தெரியும் சார். அப்படி அரெஸ்ட் பண்ணிருந்தா பெய்ல் மூவ் பண்லாமேன்னுதான் கேக்கேன்.. அவர எப்ப மாஜிஸ்ட்ரேட்  கிட்ட ப்ரொட்யூஸ் பண்ணப் போறீங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..’ என்றார் தன்னுடைய குறிப்பேட்டை எடுத்தவாறு.

உதவி ஆய்வாளர் தன்னுடைய இருக்கையை பின் தள்ளிவிட்டு எழுந்து நின்றார். ‘சார் அதெல்லாம் இப்ப அவ்வளவு உறுதியா சொல்ல முடியாது. போலீஸ் கஸ்டடியில வச்சி இவர என்க்வயரி பண்ண வேண்டியிருக்கு.. இவர் மேலருக்கறது கொலைப் பழி.. அதுவும் அவரோட ஒய்ஃபே கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்காங்க..  இவரா அத ஒத்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டா நல்லது.. இல்லன்னா..’

ஜோ பொறுமையிழந்து, ‘என்ன சார் இது அக்கிரமம்? நீங்க தீர்மானிச்சா போறுமா? இவர் யார்னு தெரியுமா சார் ஒங்களுக்கு? போலீஸ்னா என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காதீங்க!’ என்றான்.

உதவி ஆய்வாளர் அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். சபரி உடனே குறுக்கிட்டு, ‘சாரி சார். அவர் ஏதோ கோபத்துல..’ என்று சமாளிக்க ஜோ மேலும் அங்கிருக்க விரும்பாமல் எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

உதவி ஆய்வாளர் திரும்பி மாணிக்கவேலைப் பார்த்தார். ‘யார் சார் நீங்க? கலெக்டரா இல்ல கடவுளா? இங்க  வந்துட்டா எல்லாரும் எங்களுக்கு ஒன்னுதான் சார். ஒங்க ஒய்ஃபே ஒங்க மேல புகார் குடுத்துருக்காங்கன்னா அதுல எப்படி சார் உண்மையில்லாம இருக்கும்? ஒழுங்கா ஒத்துக்கிட்டீங்கன்னா ஒங்களுக்குத்தான் நல்லது. இல்லன்னா ஒங்கக்கிட்டருந்து உண்மைய வரவைக்கறதுக்கு எங்களுக்கு ரொம்ப நேரமாகாது.. சொல்லிட்டேன்.’

சபரி அமைதியாக அமர்ந்திருந்தார். காவல்துறை அதிகாரிகளின் கோபம் அவர்களை மிருகமாக மாற்றிவிடக்கூடியது என்பது அவர் அறியாததா?

அடுத்த சில நிமிடங்களில் கோபம் தணிந்த உதவி ஆய்வாளர் சபரியைப் பார்த்தார். ‘நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் சார். இனி இவர் கோவாப்பரேட் பண்றதப்பத்தித்தான் இருக்கு..’

சபரி அமைதியாக, ‘சார் நீங்க தப்பா நினைக்கலன்னா நா ஒன்னு கேக்கலாமா?’

அதிகாரி கேலியுடன் அவரைப் பார்த்தார். ‘வக்கீல் மாதிரி கேக்காம இருந்தா சரி.. கேளுங்க.’

சபரி ஒருமுறை தன் குறிப்பேட்டைப் பார்த்தார். ‘நீங்க அந்த லேடி கான்ஸ்டபிள்ஸ் கிட்ட பேசிக்கிட்டிருந்ததுலருந்து கேக்கேன். சாரோட ஒய்ஃப் ஒங்க ஜீப்லருந்து குதிச்சி தப்பிக்க ட்ரை பண்ணதுல அடிபட்டு ஹாஸ்ப்பிடல்ல இருக்காங்க. சரிதான சார்?’

‘ஆமா, அதுக்கென்ன இப்ப?’

‘அவங்க இப்ப எப்படி இருக்காங்க? சுயநினைவிருக்கா?’

‘அத நீங்க ஹாஸ்ப்பிடல்ல போய்தான் கேக்கணும்.’

‘இல்ல சார்.. கோபப்படாதீங்க.. நான் சொல்ல வந்தது என்னன்னா?’

‘சொன்னாத்தான சார் தெரியும்?’

‘அவங்க ஒங்கக்கிட்ட ஃபோன்ல சொன்னது இல்லாம ரைட்டிங்ல இவர் மேல ஏதும் குடுத்துருக்காங்களான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்..’

உதவி ஆய்வாளர் எரிச்சலுடன் தன்னைப் பார்த்ததிலிருந்தே அப்படி ஏதும் அவர் பெறவில்லையென்பது தெளிவானது சபரிக்கு.

‘இன்னும் இல்லை.. அதனால் என்ன? அந்தம்மா வீட்ல வச்சி எங்கக்கிட்ட நேர்ல சொன்னதுக்கு சாட்சி இருக்கே? அதுபோறும்.. இவர சார்ஜ் ஷீட் பண்றதுக்கு.’

‘ஒத்துக்கறேன்.. அப்புறம் எதுக்கு சார் இவர ஒத்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட் குடுக்க சொல்றீங்க? அந்தம்மாவோட ஓரல் கம்ப்ளெய்ண்ட் வச்சி அரெஸ்ட் பண்ணி மாஜிஸ்ட்ரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்ணுங்க..  நாங்க அவர கன்வின்ஸ் பண்ணிக்கறோம்..’

‘என்ன சார்.. ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா?’

அவருடைய குரலிலிருந்த கேலி சபரியை எரிச்சலைடைய செய்தாலும் அந்த பொறியில் அவர் விழத்தயாராயில்லை. ‘தப்பா நினைச்சிக்காதீங்க சார்.. ஒங்களுக்கு தெரியாதத ஒன்னும் நான் சொல்லலை.. சட்டப்படி நீங்க என்ன செய்யணுமோ அதத்தான் செய்ங்கன்னு சொல்றேன்.. இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள அரெஸ்ட் பண்ண ஒரு அக்யூஸ்ட மஜிஸ்ட்ரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்ணணும்னு இருக்குங்கறத நா ஒங்களுக்கு சொல்ல தேவையில்லை.. அத தயவு செய்து செய்யணும்னு மட்டுந்தான் நா கேக்கேன். இவர் சமுதாயத்துல நல்ல அந்தஸ்த்துல இருக்கற ஒரு பேங்க் மேனேஜர். இவர நாளைக்குள்ள பெய்ல விட்டாத்தான் இவரோட ஃபாதரோட லாஸ்ட் ரைட்ச ஒரு மகனா இருந்து செய்ய இவரால முடியும்.. இவரோட ஒய்ஃபும் ஏன் மகனும்கூட ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.. இவரோட ஒரே டாட்டர் திடீர்னு இறந்துபோய் முழுசா ரெண்டு நாள் கூட ஆகல.. இதயெல்லாம் எடுத்து வைச்சா நிச்சயம் இவருக்கு பெய்ல் கிடைக்குங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.. நீங்க கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணா போறும்.. அவ்வளவுதான்.’

உதவி ஆய்வாளர் மறுப்பேதும் கூறாமல் வாசலைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க சபரி எழுந்து மாணிக்கவேலை நெருங்கி குரலை இறக்கி, ‘சார் தைரியமா இருங்க.. நா எங்க சீனியர் கிட்ட பேசிட்டு ஒங்கள மறுபடியும் சாயந்தரமா வந்து பாக்கேன். இவர் ஏதாச்சும் கேள்வி கேட்டா ஒங்களுக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லுங்க.. எதுவும் எழுதி கையெழுத்துப் போட்டு குடுக்காதீங்க..’ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

தொடரும்..

3.1.07

சூரியன் 160

நாடார் அலுவலகம் சென்றடைந்ததும் செய்த முதல் வேலை ஃபிலிப் சுந்தரத்தை அழைத்துதான்.

எதிர் முனையில் மணி அடித்துக்கொண்டே இருந்தது.

‘எங்க போய்த் தொலைந்தார் இவர்?’ என்ற முனுமுனுப்புடன் செல் ஃபோனை துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

ஒருவேளை நம்ம செல்ஃபோன் நம்பர பாத்துட்டு மனுசன் எடுக்காம இருக்காரோ. இருக்கும்..

அவருடைய அலுவலக தொலைப்பேசியிலிருந்து ஃபிலிப் சுந்தரத்தின் பிரத்தியேக அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு டயல் செய்தார்.

அடித்துக்கொண்டே இருந்தது. இல்ல போலருக்கு என்றவாறு துண்டிக்கப்போனவர் எதிர்முனையிலிருந்து ஒரு பெண் குரல் வர, ‘யார்ம்மா பி.ஏ.வா? சி.ஜி.எம் இல்லையாம்மா?.. நா நாடார் பேசறேன்.’ என்றார்.

எதிரிலிருந்து பணிவுடன் குரல் வந்தது. ‘சார் சேர்மன் ரூம்ல இருக்கார் சார். வந்ததும் சொல்லட்டுமா சார்.. இல்ல இப்பவே ஒங்கள கூப்பிட சொல்லணுமா?’

நாடார் சிரித்தார். ‘வேணாம்மா அவர் வந்ததும் சொன்னாப் போறும். வச்சிடறேன்.’

‘பயங்கரமான குட்டிங்க.. என்ன ச்சாலக்கா பேசுதுக பாருங்க. ஒருவேளை மனுசன் ரூம்லயே இருந்தாலும் இருப்பார். யார் கண்டா.. இந்த படிச்ச ஆளுங்கள நம்பக்கூடாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காக.. என்ன நா சொல்றது?’என்றார் நாடார் தன் எதிரில் நின்ற அலுவலக மேலாளரிடம்.

அவர் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழிக்க, ‘எதுக்கெடுத்தாலும் இப்படி பேபேன்னு முளி, முளிக்கறதே ஒமக்கு பொளப்பா போச்சிய்யா.. சரி கையிலருக்கற ஃபைல வச்சிட்டு போயி ஒம்ம வேலையப் பாரும்.’ என்றார் எரிச்சலுடன்.

ஆனாலும் அவர் தயங்கி நிற்க, ‘என்னவே.. ஏதாச்சும் சொல்லணுமாக்கும்.. சொன்னாத்தான தெரியும்?’ என்றார் கேலியுடன்.

‘நம்ம மருமகப்பிள்ள செத்த நேரம் முன்னாடி கூப்ட்டுருந்தார் சார்.’

நாடார் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘யாருய்யா.. யாருன்னு சொன்னீர்?’

மேலாளர் என்ன கேட்க வருகிறார் என்று தெரியாமல் விழித்தார். ‘நம்ம ராசேந்திரன் சார்.. கூப்ட்டார்னு சொல்ல வந்தேன்.’

நாடார் எரிச்சலுடன் பார்த்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன்னையுமறியாமல் இரண்டடி எட்டி நின்றார் மேலாளர்.

‘யாருய்யா அந்த ராசேந்திரனா? என்னவாம்?’

‘அவருக்கு நம்ம கம்பெனி கணக்கு புஸ்தகங்கள பாக்கணுமாம். பகல் ஒரு மணி வாக்குல வரேன்னு சொன்னார். எல்லாத்தையும் எடுத்து வைக்கணுமாம்.. அதான் ஒங்கள கேக்காம...’

நாடார் இடைமறித்தார். ‘நல்ல வேளையா கேட்டு தொலைச்சீர். சரி நீர் போம்.. நான் யோசிச்சி சொல்றேன்..’

மனிதர் விட்டால் போதும் என்று நகர, ‘அவர் பழுவடியும் கூப்ட்டார்னா ஆடிட்டர கேட்டுட்டுத்தான் சொல்ல முடியும்.. வேணும்னா நீங்களே அவர்கிட்ட பேசிக்கிருங்கன்னு சொல்லி வையும்.. எங்கிட்ட சொன்னதா தெரியப்படாது.. என்ன நா சொல்றது?’ என்றார் பற்களைக் கடித்தவாறு.

சரி என்று தலையை அசைத்தவாறு ஓட்டமும் நடையுமாய் வெளியேறிய மேலாளரை கவனியாமல் தன் செல் ஃபோனை எடுத்து அவருடைய ஆடிட்டர் எண்ணை டயல் செய்தார்.

எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘அய்யா நாந்தான்யா.. செத்த முன்னாலதான் நம்ம ராசிம்மா மாப்பிள்ள கூப்ட்டு நம்ம கம்பெனி கணக்கு பொஸ்தகங்கள பாக்கணும்னு சொன்னானாம்.. என்ன, ஏதுன்னு சொல்லலையாம்.. நா நம்ம மேனேசர்கிட்ட மறுபடியும் அவர் கூப்ட்டார்னா நம்ம ஆடிட்டர் கிட்ட பேசிக்குங்கன்னு சொல்ல சொல்லியிருக்கேன்.. நீங்க பாத்து என்ன செய்யணுமோ செஞ்சிக்குங்க.. அந்த பயலுக்கு நாம எதையும் காமிக்கணும்னு இல்லைய்யா. அவ்வளவுதான் நாஞ் சொல்லுவேன்.. மத்தபடி ஒங்க இஷ்டம். எல்லாம் அவங்கப்பன் செய்யற வேலையாத்தான் இருக்கும்னு நினைக்கேன்.’ என்றார்.

‘.....’

‘சரிய்யா அப்படியே செஞ்சிருங்க.. ஒங்களுக்கு தெரியாததாய்யா.. அப்புறம் நம்ம ராசி பேர்ல வாங்கியிருக்கற ஷேர் விஷயமாவும் ஏதாச்சும் கேப்பான்.. அந்த சேட்ட அப்பனும் புள்ளையுமா நேத்து ராத்திரியே போய் பாத்ததாக கேள்விய்யா. என்ன பதில் சொல்லணுமோ சொல்லிக்கிருங்க.. ஷேர்ங்கள நம்ம பொண்ணு பேர்ல மாத்தற நேரத்துல எந்த சிக்கலும் வராம பாத்துக்கிருங்க..அவ்வளவுதான்.. வச்சிடறேன்யா..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு அமர்ந்து ஏன் இன்னும் ஃபிலிப் சுந்தரம் தன்னை அழைக்கவில்லை என்று சிந்திக்கலானார்.

******

‘என்னலே ராசா.. என்ன சொல்றான் அந்த மேனேசர் பய?’

இவர் வேற நை, நைன்னு என்று மனதுக்குள் தன் தந்தையை திட்டினான் ராசேந்திரன். நிம்மதியா யோசிக்க விடாம கேள்வி மேல, கேள்வியா கேட்டுக்கிட்டு..

‘எலேய் ஒன்னையத்தானே கேக்கேன்.. இவன் என்ன கேக்கறது நாம என்ன பதில் சொல்றதுன்னு நினைக்கியோ?’

ராசேந்திரன் எரிச்சலுடன் திரும்பி அவரைப் பார்த்தான். ‘என்னத்த சொல்வார்? அய்யாகிட்ட கேட்டுட்டுத்தான்யா சொல்ல முடியும்கறார். மாமா இன்னும் வரலையாம்.’

ரத்தினவேல் உரக்கச் சிரித்தார். ‘யார்லே மாமாவா? எலேய் யாருக்கு யார் மாமா? இன்னும் அப்படித்தான் நெனச்சிக்கிட்டிருக்கியாக்கும்? ஒம் பொஞ்சாதிதான் ஒன்னெ டைவோர்ஸ் பண்ற வரைக்கி போய்ட்டாளடா? பெறவென்ன? மாமாவாம் மாமா.. அந்த நெனப்ப தூக்கியெறிஞ்சிட்டு அவனையும் அவங் குடும்பத்தையும் நம்ம குடும்பத்துக்கே பரம வைரியா மனசுல வரிச்சிக்கல்லே.. அப்பத்தான் பளி வாங்கணுங்கற வெறி வரும்.. அந்த வெறி மட்டும் ஒம் மனசுல இல்லேன்னு வை.. நாம நெனச்சிக்கிட்டிருக்கறது ஒன்னும் நடக்காது.. சொல்லிப் போட்டேன்.. கரண்டி பிடிச்சி, பிடிச்சி இந்த கை மட்டுமில்லடா காய்ச்சி போயிருக்கி.. இந்த மனசுந்தான்.. வீடு வரைக்கும் வந்து என்ன பேச்சு பேசிட்டு போனான்.. மறக்க முடியுமால்லே.. திங்கறது உப்புப் போட்ட சோறுன்னா.. நாம யாருங்கறத அவனுக்கு காம்பிக்கணும்லே.. காம்பிக்கணும்...’

ராசேந்திரன் தன்னையே சபித்துக்கொண்டான். வாய்த் தவறி வந்த வார்த்தைக்கு இவ்வளவு பெரிய லெக்சரா என்று நினைத்தான்.

‘சரி.. அவர் சொன்னத அப்படியே சொல்லிட்டேன்.. அதுக்கென்ன இப்ப.. சொல்ல வந்தத சொல்ல விடாம..’

ரத்தினவேலு எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். ‘சரி தொலையுது விடு.. இப்ப என்ன செய்யறதா உத்தேசம்.. கம்பெனி ஷேர் கைமாறப் போறது உறுதியாயிருச்சி.. யார் பேருக்கு மாறப்போகுதுன்னாவது தெரிஞ்சிக்கணுமில்லடா? அத எப்படி தெரிஞ்சிக்கப் போற?’

‘அது தெரிஞ்சி நமக்கென்ன ஆகப்போகுது? பிரைவேட் லிமிடெட் கம்பெனியில குடும்பத்துலருக்கறவங்கள தவிர வேற யாருக்கும் அவ்வளவு ஈசியா மாத்த முடியாதுங்கறது தெரியாமத்தான இப்படியொரு முட்டாத்தனத்த செஞ்சிட்டு நிக்கறோம்?’

‘யார்ல முட்டாத்தனம் பண்ணது? நீயா, நானா? முட்டாப்பய.. என்ன செய்யிறோம்.. ஏது செய்யிறோம்னு யோசிக்கறது கிடையாது.. எடுத்தோம் கவுத்தோம்னு செஞ்சிட்டு பிற்பாடு முளிக்கறதே ஒனக்கு பொளப்பா போச்சிலே.. கண்ட, கண்ட களுதைங்களோட சுத்தாதல்லே.. அந்த பொண்ணுன்னா அவனுக்கு உசுரு.. ஒனக்கு குடுக்கறதுக்கே அவன் பலதரம் யோசிச்சிருக்கான்னு எத்தன தடவெ சொல்லியிருப்பேன்.. அப்பல்லாம் கேட்டுருந்தா இப்படி நடு ரோட்டுல வந்து நின்னுருப்பியா? உள்ளுக்குள்ளயே இருந்து கவுக்கறத விட்டுப்போட்டு வெளியிலருந்துக்கிட்டு என்னத்தலே செய்யப் போற? முட்டாப்பய, முட்டாப்பய.. இப்ப முளிச்சி என்ன பண்றது.. அப்பன் பேச்ச கேக்கக் கூடாதுன்னு ஒரு வக்கிர புத்தி.. என்ன படிச்சியோ எளவோ.. போ..’

ராசேந்திரன் பொங்கி வந்த கோபத்தை அடக்க முடியாமல் கீழுதட்டை அழுத்தி கடித்தான் ரத்தம் வரும்வரை.. இந்த ஆள் மட்டும் பேச்சை நிறுத்தலே.. போய்யான்னுட்டு போயிரவேண்டியதுதான்..

‘என்னலே கோவம் பொத்துக்கிட்டு வருமே.. வரணும்லே.. கோவம் வரணும்.. நம்மள அடிச்சவனுங்கள திருப்பி அடிக்கணும்னா இந்த கோவம் ஒனக்கு கண்டிப்பா வேணும்.. அத மட்டும் விட்டுறாத.. அது ஒன்னுதான் ஒன்னெ உந்திக்கிட்டே இருக்கும்..’

தெரியாமய்யா கெடக்கு.. பெரிசா சொல்ல வந்துட்டீக? இப்ப என்ன செய்யிறது? அதச் சொல்லுவீகளா? சொன்னதையே சொல்லிக்கிட்டு..

‘இப்ப என்ன செய்யறதா உத்தேசம்லே.. அதயாவது சொல்லு.. நடக்குமா இல்லையான்னு நா சொல்லுதேன்..’

உதடுகளில் வழிந்த ரத்தத்தை உள்ளுக்குள் உறிஞ்சியவாறு தன் தந்தையைப் பார்த்தான். ‘ஏன் நீங்கதான் சொல்லுங்களேன்?’

ரத்தினவேல் அவனுடைய உதடுகளிலிருந்த வழிந்த ரத்தத்தை பொருட்படுத்தாமல் பேசினார். ‘அந்த பய.. அதான்லே ஒம் மாமன்.. நீ நெனக்கறாப்பல இல்ல.. ஒன்னெ பழுவடியும் ஆஃபீசுக்குள்ள விடுவான்னு எனக்கு தோனல.. நீ அந்த கணக்கு பொஸ்தகத்த எதுக்கு பாக்க கேக்கேன்னு அவனுக்கு தெரியும்.. அதனால அநேகமா ஒன்னெ அவனோட டிட்டர கேட்டுக்கன்னு சொல்லிருவான்..’

அது தெரியாமயா கெடக்கு? என்னெ என்ன அந்த அளவுக்கு முட்டாளுன்னு நினைச்சீங்களாக்கும்.. அது தெரிஞ்சிதான எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நூல விட்டுப்பார்த்தேன். நாளைக்கு பின்னால கோர்ட் வரைக்கும் போய்த்தான் இந்த கணக்கு வழக்குகள செட்டில் பண்ணணும்னா நம்ம கேட்டப்போ கணக்க காட்ட மாட்டேன்னு சொன்னத சொல்லலாமில்ல? இவருக்கெங்க அந்த சூட்சுமம்லாம் தெரியப்போவுது.. தற்குறி.. தற்குறி.. நாலாங்களாஸ் கூட தாண்டாதவர்கிட்டல்லாம் பேச்சு வாங்கி கட்டிக்க வேண்டியிருக்கு.. தலையெழுத்துடா..

‘என்னலே ஒனக்குள்ளயே பேசிக்கறாப்பல இருக்கு? இந்த அப்பன மனசுக்குள்ளயே வையிறயாக்கும்? என்னமும் செஞ்சிக்க.. அவன் ஆடிட்டர பாருன்னு சொல்லிப்போட்டான்னு வச்சிக்குவம்.. மேக்கொண்டு என்ன செய்யிறதா உத்தேசம்? இல்ல அதையும் நாந்தான் சொல்லணுமா?’

ராசேந்திரன் அடக்கமாட்டாத எரிச்சலுடன் அவரைப் பார்த்தான். ‘இதென்ன கேள்விப்பா? அந்த ஆடிட்டர போய் பாக்க வேண்டியதுதான்.’

ரத்தினவேல் உரக்கச் சிரித்தார். ‘அட முட்டாப் பயலே.. சொன்னா மட்டும் கோவப்படறியே? அதயா கேக்கேன்? இவனே முடியாதுன்னு நேரடியா சொல்லாம.. ஆடிட்டர பாருங்கான்.. அவனெ மட்டும் ஒங்கிட்ட காட்ட விட்டுருவானாக்கும்?’

‘அது எனக்கு தெரியாமயா கெடக்கு?’

‘அட! பரவாயில்லையே.. சரி.. மேக்கொண்டு என்ன செய்யப் போற?’

‘கோர்ட்டுக்கு போவேண்டியதுதான்.. கம்பெனியிலருந்து எங்கள எந்த காரணமும் இல்லாம வெலக்கிட்டதால  எங்களுக்கு சேர வேண்டியத என்னன்னு பாக்க கணக்கு வழக்க சப்மிட் பண்ண சொல்லுன்னு நோட்டீஸ் விடவேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க?’

‘சபாஷ்.. இப்பத்தான் எம் பையன்.. இதத்தான்லே ஒன் வாய்லருந்து வரணும்னு காத்துக்கிட்டிருந்தேன்.. நீ இப்பவே நம்ம ஆடிட்டர் பயலுக்கு ஃபோன் போட்டு வக்கீலையும் கூட்டிக்கிட்டு இங்கன வரச்சொல்லு. அவனுங்கள விட்டே பேசச் சொல்வோம்..’

ராசேந்திரன் மறு பதில் கூறாமல் தன்னுடைய தந்தையையே பார்த்தான். நாம சொல்ல வேண்டியது.. இவர் அதத்தான்லே நினைச்சேன்னு சொல்லிரவேண்டியது.. சரீ.. இப்ப அந்த ஆடிட்டரையும் வக்கீலையும் எதுக்கு வரச்சொல்றார்.. குட்டைய கொளப்பவா? சரி வந்து தொலையட்டும்.. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..

செல்ஃபோனை எடுத்து டயல் செய்ய முனைந்தான்.

‘எலேய்.. ராசேந்திரா.. செல்ஃபோன்லருந்து பண்ணாத.. இருந்துக்கிட்டே எடுக்காம இருப்பானுவோ.. வீட்டு லைன்லருந்து பண்ணு..’

பரவால்லை.. ஒங்க மூள நல்லாவே வேலை செய்யிது.. எத்தனுக்கு எத்தன் ஜித்தனாச்சே நீங்க என்று நினைத்தவாறு ஹாலிலிருந்த தொலைப்பேசியை நெருங்கினான் ராசேந்திரன்..

தொடரும்..