23.8.10

விக்கினங்கள் (சிறுகதை).

ஃபாதர் வின்செண்ட் அன்றைய காலை திருப்பலிக்குப் பிறகு தன்னுடைய பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆலயத்தை விட்டு வெளியில் வந்தார்.

திருப்பலி முடிந்து பத்து நிமிடமே ஆகியிருந்தாலும் ஆலயமே வெறிச்சோடி போயிருந்தது. திருப்பலி எப்போது முடியும் வீடு போய் சேரலாம் என்று காத்திருந்தார்கள் போலும் என்று நினைத்தவாறு தன் அறையை நோக்கி நடந்தார். அவசர உலகத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து திருப்பலிக்கு வருவதே ஏதோ கர்த்தருக்கு செய்யும் அதிகபட்ச உபகாரம். இதில் திருப்பலி முடிந்தபிறகும் ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தித்துவிட்டு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பலனில்லை என்றது அவருடைய மனது.

அவர் குருத்துவத்தில் நுழைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் இளம் குருத்துவராக இருந்த காலத்தில் காலை திருப்பலி அதிகாலை ஐந்து மணிக்கே துவங்கிவிடும். ஆனால் அப்போதும் ஆலயம் நிரம்பி வழியும். திருப்பலி முடிந்த கையோடு உபதேசியார் ஜபமாலையை துவக்கிவிடுவார். ஒருவித ராகத்தோடு அவர் முற்பாதி ஜெபத்தை கூற விசுவாசிகள் அனைவரும் அதே ராகத்தில் பிற்பாதி ஜெபத்தை கூறுவார்கள். ஒவ்வொரு பத்து மணிக்குப் பிறகும் அனைவரும் இணைந்து பாடும் திருப்பாடல்களால் அந்த கிராமமே விழித்தெழுந்துக்கொள்ளும். ஜெபமாலை, அதனைத் தொடர்ந்து தேவ அன்னையின் பாமாலை என வழிபாடு முடிய குறைந்தது ஒரு மணி நேரமாகும். அதற்குப் பிறகும் விசுவாசிகள், குறிப்பாக பெண்கள் உபதேசியார் விளக்குகளை அணைத்துவிட்டு ஆலயக் கதவுகளை மூடும் வரையிலும் ஆலயத்தினுள் அமர்ந்து தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பிரார்த்தித்துவிட்டுத்தான் செல்வார்கள். அவர்கள் ஆலயத்தை விட்டு வெளியில் வருவதை எதிர்கொண்டு காத்திருப்பார் வின்செண்ட்டும் அவருடைய பங்கு குரு லாரன்சும்.

அவர்கள் இருவரையும் கண்டதுமே 'சர்வேசுரனுக்கு தோஸ்திரம் சாமி' என அவரைவிட பல வருடங்கள் மூத்தவர்களும் கூறும்போது அவருடைய மனத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிளர்ந்தெழும். பெற்றோர், உற்றார் உறவினர் என அனைத்து சொந்தங்களையும் துறந்துவிட்டு கர்த்தருக்கு சேவை செய்ய வந்ததற்கு இதைவிட வேறென்ன பிரதிபலன் இவ்வுலகில் இருக்கிறது என எண்ணி, எண்ணி மகிழ்ந்துபோவார்.

ஆனால் இப்போது?

திருப்பலி காலை ஆறு மணிக்கு மேல்தான் துவங்குகிறது. இருந்தும் திருப்பலியை அவர் துவக்கும்போது ஆலயத்தையொட்டி இயங்கி வந்த கன்னியர் இல்லத்திலிருந்து வரும் பத்து பதினைந்து கன்னியர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆலயத்தில் ஐந்தாறு பேருக்கு மேல் இருந்ததில்லை. திருப்பலி முடியும்போது அதிகம் போனால் ஐம்பது பேர் இருந்தால் அதிகபட்சம்! அவர்களிலும் பெரும்பாலானோர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

அவருக்கு எழுபது வயதாகிறது. பங்கு சேவையில் இருந்து ஓய்வுபெறும் வயதை அவர் கடந்திருந்தாலும் ஆள் பற்றாக்குறை (குருத்துவ வாழ்க்கையை இப்போதெல்லாம் யார் தெரிவு செய்கிறார்கள்?) காரணமாக அவர் இப்போதும் பங்கில் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது.

அவர் இருந்த பங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்ததால் அவருக்குக் கீழ் மூன்று பாதிரியார்கள் இருந்தனர். அவர் பெயருக்குத்தான் பங்கு தந்தை. பங்கு அலுவல்களில் பெரும்பாலானவற்றை மூன்று பாதிரியார்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்திருந்ததால் அவருக்கு அவ்வளவாக வேலைப்பளு இல்லை. அதிகாலை திருப்பலியை முடித்துக்கொண்டு பங்கு அலுவலக அறையில் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார். அதற்குப் பிறகு காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முதல் மாடியிலிருந்த தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். அவருடைய அன்றைய தினசரி அலுவல் அத்துடன் முடிந்தது. மாலையில் அரை மணி நேரம் மொட்டை மாடியிலேயே நடப்பார். அதன் பிறகு அடுத்த நாள் காலை திருப்பலிக்குத்தான் இறங்கி வருவார்.

தன்னுடைய அறையை நெருங்கியபோது ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் காத்திருந்ததைக் கண்டார்.

அறைக்கதவை திறந்தவாறு, 'என்ன தம்பி, என்னைப் பார்க்கவா காத்துக்கிட்டிருக்கீங்க?' என்றார் புன்னகையுடன்.

'ஆமா ஃபாதர்.'

அவனுடைய கண்களிலிருந்த ஒருவித சோகம் அவரை ஈர்த்தது.

'என்ன தம்பி ஏதாச்சும் ப்ராப்ளமா?' என்றார் தன் மேசையை நெருங்கியவாறு. 'வாங்க, வந்து உக்கார்ந்து சொல்லுங்க.'

அந்த இளைஞன் தயங்கியவாறு வந்து அவருடைய மேசைக்கு எதிரில் இருந்த இருக்கைகள் ஒன்றில் அமரும் வரை காத்திருந்தார்.

'சொல்லுங்க.'

'போன சண்டே வாசிச்ச கல்யாண ஓலைய (திருமண ஓலை என்பது இன்னாருடைய மகனுக்கும் இன்னாருடைய மகளுக்கும் திருமணமாகப் போகிறது என்று மணமகன் மற்றும் மணமகள் அங்கத்தினராக உள்ள தேவாலயங்களில் தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் வாசிக்கப்படும் அறிக்கை) பத்திய விஷயம் ஃபாதர். விக்கினம் ஏதாச்சும் இருந்தா பங்கு தந்தைக்கிட்ட தெரிவிக்கலாம்னு....'

அந்த இளைஞன் மேற்கொண்டு தொடராமல் தயங்கி நிற்க ஃபாதர் வின்செண்ட் வியப்புடன் அந்த இளைஞனை கூர்ந்து பார்த்தார். அவருடைய பார்வையின் தீர்க்கத்தை சந்திக்க முடியாமல் அவன் தலை குனிந்துக் கொண்டான்.

வெளியில் அவ்வப்போது ஒலித்த அதிகாலை பறவைகளின் ஒலியைத் தவிர ஆலய வளாகமே அமைதியாகிப்போனது போன்றதொரு ஆழ்ந்த நிசப்தம் அந்த அறையை சூழ்ந்துக்கொண்டது.

அவருடைய ஐம்பதாண்டு கால குருத்துவ வாழ்க்கையில் முதல் முறையாக அவருடைய ஆலயத்தில் அவர் நடத்தி வைக்கப்போகிற திருமணங்களில் ஒன்றில் விக்கினம்!

அவரையும் அறியாமல் அவருடைய உதடுகள் புன்னகையால் விரிந்தன. இப்போதெல்லாம் தமிழ் திரைப்படங்களில்தான் எப்படியெல்லாம் கிறிஸ்துவ திருமணங்களை கேலிக்கூத்தாக்கி காட்டுகிறார்கள். திருமண ஓலைகளை பாதிரியார் ஆலயத்தில் வாசித்துவிட்டு 'இந்த திருமண பந்தத்தில் யாருக்கேனும் ஏதும் எதிர்ப்பு இருந்தால் இப்போது கூறலாம்' என்பார். உடனே ஏற்கனவே காதலில் சிக்கியிருக்கும் கதாநாயகி எங்கே தன்னுடைய எதிர்ப்பை சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்துடன் அவருடைய பெற்றோர் அவருடைய கரத்தைப் பற்றி அமர்த்துவர். அவரும் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்!

கிறிஸ்துவ ஆலயங்களில் அர்ச்சிக்கப்படும் திருமணங்களில் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிடலாகாது என்கிற உண்மையான அக்கறையில் திருச்சபை 'விக்கினங்கள்' அதாவது அந்த திருமணம் நடைபெறுவதற்கு தடையாக எதேனும் இருக்குமானால் எந்த ஆலயத்தில் ஓலை வாசிக்கப்படுகிறதோ அந்த ஆலயத்தின் தலைமை குருவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தியிருந்தது.

அவருடைய குருத்துவ வாழ்க்கையில் அதுவரை ஏறத்தாழ ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைத்திருந்தார். ஆனால் அவற்றில் ஒன்றில் கூட 'விக்கினம்' இருந்ததாக அவரை எவரும் அணுகியதில்லை. ஏனெனில் திருமண ஓலை வாசிப்பதற்கு ஏற்பாடு மணமக்களின் பெற்றோர் அவரை அணுகும் சமயத்திலேயே தீர விசாரித்துவிட்டுத்தான் ஓலையையே பதிவு செய்வார். அப்படித்தான் கடந்த ஞாயிறன்று திருப்பலியில் மூன்று திருமணங்களின் ஓலையும் வாசிக்கப்பட்டன. இதில் எந்த திருமணத்தில் இந்த இளைஞன் விக்கினத்தை கொண்டு வந்திருக்கிறான் என்ற திகைப்புடன் அவனை மீண்டும் தன் தீர்க்கமான பார்வையால் துளைத்தார். அவருடைய ஐம்பதாண்டு பங்கு வாழ்க்கையில் அந்த பார்வையில் சிக்கி தங்களுடைய தவற்றை ஒப்புக்கொள்ளாதவர் வெகு சிலரே.

'சொல்லுங்க தம்பி, எந்த கல்யாண ஓலையை பத்தி சொல்றீங்க?'

அதுவரை தலைகுனிந்து அமர்ந்திருந்த இளைஞன் தயக்கத்துடன் பதிலளித்தான். 'ஞானப்பிரகாசம் சார் குடும்பம் சாமி. பொண்ணு பேரு விஜய ராணி.'

'ஞானப்பிரகாசம் குடும்பமா?' அவர் அந்த நகரின் பெரிய தொழிலதிபர். பங்கில் மிகவும் செல்வாக்குள்ள செல்வந்தர் மட்டுமல்லாமல் பங்கின் பெரிய நன்கொடையாளரும் கூட. 'சரி சொல்லுங்க, என்ன விக்கினம்?'

'அந்த பொண்ணுக்கும் எனக்கும் ரெண்டு வருசமா பழக்கம் சாமி....'

பாதிரியாரின் முகம் அதிர்ச்சியால் சிவந்தது. இரண்டு வருடங்களாக பழக்கமா?

'தம்பி நீங்க எந்த பங்கு? உங்கள நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே?'

'நா பக்கத்து ஊர் பங்கு சாமி'

'விஜய ராணியை உங்களுக்கு எப்படி பழக்கம்?'

'நாங்க ரெண்டு பேரும் எட்டு வருசமா ஒரே பள்ளியில படிச்சோம். அதுக்கப்புறம் இப்ப பட்டணத்து காலேஜுல படிச்சிக்கிட்டிருக்கோம், ஒரே வகுப்புல...'

'அந்த பொண்ணோட குடும்பத்துக்கு இது தெரியுமா தம்பி?'

'தெரியும் சாமி.'

பாதிரியார் யோசித்தார். இளைஞன் சொல்லும் வெறும் காதல் மட்டுமே திருச்சபையின் சட்டப்படி விக்கினமாக ஆகிவிட முடியாது. இவர்கள் இருவருக்கும் இடையில் நிச்சயதார்த்தமோ அல்லது பதிவு திருமணமோ நடந்திருக்க வேண்டும். அல்லது, அல்லது.... இதை எப்படி இந்த இளைஞனிடம் கேட்பது....

பாதிரியாரின் மனம் கணத்தது. 'ஒங்க ரெண்டு பேர் மத்தியில தவறான உறவு ஏதும்.....'

இளைஞன் ஒருமுறை அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை குனிந்துக்கொண்டான். 'மன்னிச்சிருங்க ஃபாதர். இது ஒரு சாவான பாவம்னு தெரியும்... ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை.... ராணி கர்ப்பமானதுக்கப்புறந்தான் அவங்க வீட்டுக்கே விஷயம் தெரிஞ்சி... என்னெ ஆளுங்கள விட்டு அடிச்சிப் போட்டுட்டாரு... நா அட்மிட் ஆயிருந்த அதே ஆஸ்பத்திரியிலதான் ராணியோட மூனு மாச கர்ப்பத்தையும் கலைச்சி....'

பாதிரியார் காதுகளைப் பொத்திக்கொண்டார்.

சிறிது நேரம் மவுனமாய் அமர்ந்திருந்த பாதிரியார். 'இதுக்கு ஏதாச்சும் ப்ரூஃப் கொண்டு வந்திருக்கிங்களா தம்பி?'

இளைஞன் சங்கடத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தான். 'எங்கிட்ட என் சொல்ல தவிர வேறெந்த ப்ரூஃபும் இல்ல சாமி. அந்த ஆஸ்பத்திரியில வேணும்னா நீங்களே விசாரிச்சி பாருங்க. நா உண்மையதான் சொல்றேன்.'

'சரி... என்னால என்ன செய்ய முடியுமோ அத செய்றேன். நீங்க போய்ட்டு வாங்க.'

'சாமி... நா அந்த பொண்ண கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படறேன். ஞானப்பிரகாசம் சார் என்னோட சாதிய காட்டி சம்மதிக்க மாட்டேங்கறார். நீங்க கொஞ்சம் பேசினா.....'

பாதிரியார் சோகத்துடன் சிரித்தார். ஒரே கடவுள், ஒரே மதம் ஆனாலும் இவர்களுக்கிடையிலும் சாதி வேறுபாடுகள். ஆலயத்தில் அருகருகில் அமர்ந்து பிரார்த்திப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் நான் இந்த சாதி, நீ அந்த சாதி.... என்றுதான் முடிவுக்கு வரப்போகிறது இந்த சாதி வெறி?

'தம்பி நீங்க இப்ப இங்க வந்துருக்கறது இந்த கல்யாணத்துல இருக்கற விக்கினத்த எங்கிட்ட முறையிடறதுக்குத்தானே? அத மட்டும் செஞ்சிட்டு போங்க. இந்த தள்ளாத வயசுல என்னெ இன்னொரு பிரச்சினையில சிக்க வச்சிடாதீங்க.' என்றார் எரிச்சலுடன். காதலிப்பதற்கு முன்பே இதை பற்றி இவர்கள் சிந்தித்திருக்க வேண்டாமா? ஞானப்பிரகாசம் அந்த பகுதியில் செல்வாக்கு நிறைந்த தொழிலதிபர். விஜய ராணி அவருடைய ஒரே மகள். இந்த இளைஞனைப் பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன்போல் தெரிகிறான். ஆகவே இந்த திருமணம் சாதிப் பிரச்சினையால் மட்டும் நின்றிருக்க வாய்ப்பில்லை.

'சாரி ஃபாதர்...'

'பரவால்லை... நீங்க போகலாம்... நான் ஞானப்பிரகாசத்துக்கிட்ட உங்களப்பத்தி பேசிப்பாக்கறேன். அப்புறம் இறைவன் விட்ட வழி. உங்க பெயர், உங்களுடைய பெற்றோர்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாத்தையும் குறிப்பிட்டு எழுத்து மூலமா ஒரு புகார் எழுதிக் குடுத்துட்டு போங்க. ஏன்னா இது ஒரு பெண்ணோட வாழ்க்கை பிரச்சினை. நீங்க குடுக்கற புகார் உண்மைக்கு புறம்பாக இருக்கற பட்சத்துல நானே போலீசுக்கு புகார் குடுக்க வேண்டி வரும், மறந்துறாதீங்க.'

'நான் சொல்றது உண்மைதான் ஃபாதர்.' என்ற இளைஞன் அவர் நீட்டிய காகிதத்தில் தன்னுடைய புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு செல்ல பாதிரியார் யோசனையில் ஆழ்ந்தார்.

திருமணத்திற்கு மணமகள் அல்லது மணமகனின் சம்மதம் வற்புறுத்தி பெறப்பட்டிருக்கலாகாது என்பதும் கத்தோலிக்க திருச்சபை அறிவித்திருந்த விக்கினங்களில் ஒன்று.

ஆகவே அடுத்த ஞாயிறன்று வாசிக்கவிருந்த திருமண ஓலைகள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து அதிலிருந்து ஞானப்பிரகாசத்தின் மகள் இரண்டாவது திருமண ஓலைக்கான அறிவிப்பை நீக்கினார். தன்னுடைய துணை பாதிரியார்களுள் மூத்தவரை அழைத்து விஷயத்தை சுருக்கமாக கூறிவிட்டு ஞானப்பிரகாசதுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.

ஞானப்பிரகாசம் இதை லேசில் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருந்தும் அவரை எதிர்கொள்ள தயாராக இருந்தார் ஃபாதர் வின்செண்ட்.


********

19.8.10

மதம் மாறுகிறீர்களா? (சிறுகதை)

ஃபாதர் ஆல்பர்ட் தன்னுடைய அறையில் அமர்ந்து அன்றைய தினம் சென்று சந்திக்க வேண்டிய பங்கு அங்கத்தினர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

தொலைபேசி சிணுங்கியது.

எடுத்து 'ஹலோ ஹோலி ட்ரினிட்டி சர்ச்' என்றார்.

'ஃபாதர் நாந்தான் ராயப்பன் பேசறேன்.'

ராயப்பன் தங்கராஜ் அந்த பங்கின் பேரவைத் தலைவர். (பங்கு பேரவை என்பது பங்கிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் தெரிவு செய்யும் ஒரு குழு. இக்குழு பங்கு தந்தை எனப்படும் பாதிரியாரை பங்கின் அனைத்து அலுவல்களிலும் வழிநடுத்தும்.)

ஆல்பர்ட் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பங்கு தந்தையாக பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு வரவேற்பு விழா மற்றும் முந்தையை பங்கு குருவுக்கு பிரிவுபசார விழா என்ற பெயரில் தன்னைப் பற்றியும் தான் இல்லாமல் இந்த பங்கு இல்லை என்பதுபோலவும் ராயப்பன் அடித்த கூத்தை அவர் இன்னும் மறக்கவில்லை. அந்த பங்கு துவக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கத்தோலிக்க கிறீஸ்துவர்களாக மதம் மாற்றியிருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டதையும் அவர்களில் சிலரை அன்றைய விழாவில் அறிமுகப்படுத்தி தன்னைப்பற்றி உயர்வாக பேச வைத்ததும் அவருடைய நினைவில் இருந்தது. அன்று முதலே அவரை தம்மால் இயன்ற அளவு தவிர்க்க வேண்டும் என்று தான் முடிவு செய்திருந்தார்.

ஆகவே பொத்தாம்பொதுவாக, 'என்ன விஷயமா கூப்ட்டீங்க? நான் ஹவுஸ் ப்ளசிங்குக்கு கிளம்பிக்கிட்டிருக்கேன்.' என்றார்.

'என்னது ஹவுஸ் ப்ளசிங்குக்கா, கூட யார் வறாப்பல?'

'கேட்டிகிஸ்ட்தான் (கேட்டிகிஸ்ட் என்பவர் பாதிரியாருக்கு ஆலயத்தின் அலுவல்கள் பலவற்றிலும் உதவியாளர்போல் இருப்பவர்.). இந்த ஒரு வாரமா அவர்தான் என் கூட வந்துக்கிட்டிருக்கார். ஏன் கேக்கறீங்க?'

'இல்ல... எந்த ஏரியாவுக்கு நீங்க போறீங்களோ அந்த ஏரியா அன்பிய (ஒரு பங்கில் வசிக்கும் அனைத்து அங்கத்தினர்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொருத்து ஒவ்வொரு குழுவாக பிரித்து அதை அன்பியம் என்று அழைப்பார்கள். அதற்கு ஒரு தலைவர், துணைத்தலைவர் என சம்பந்தப்பட்ட அன்பிய அங்கத்தினர்களே வருடத்திற்கு ஒருமுறை தெரிவு செய்வர்.) தலைவர் கூட போறதுதான் இதுவரைக்கும் இந்த பங்குல இருந்த பழக்கம். அதான் கேட்டேன்.'

ஆல்பர்ட் புன்னகைத்துக்கொண்டார். 'அப்படியா? இனி அது தேவையில்லைன்னு நினைக்கிறேன். அதுபோகட்டும், நீங்க கூப்ட்ட விஷயத்த சொல்லுங்க.'

'இந்த மாசம் கன்வர்ட் பண்ண வேண்டியவங்கள நாளைக்கு கூட்டிக்கிட்டு வரட்டுமான்னு கேக்கத்தான் கூப்ட்டேன். அஞ்சாறு பேர புடிச்சிருக்கேன். நாளைக்கு காலையில பத்து மணியிலருந்து ஒரு அரை மணி நேரம் இதுக்கு ஒதுக்கணும்.'

அஞ்சாறு பேர புடிச்சிருக்கீங்களா? இது என்ன மீன்பிடி விஷயமா? என்று தனக்குள் நினைத்துக்கொண்ட ஆல்பர்ட் கூட்டிக்கொண்டு வரட்டும், பேசித்தான் பார்ப்போமே என்ற முடிவுடன், 'சரி கூட்டிக்கிட்டு வாங்க.' என்று கூறிவிட்டு மேற்கொண்டு ராயப்பனை பேசவிடாமல் இணைப்பை துண்டித்துவிட்டு எழுந்தார்.

****

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு வருகிறேன் என்ற ராயப்பனை பதினோரு மணியாகியும் காணாமல் போகவே அருகிலிருந்த ஒரு புத்தகக் கடை வரை சென்றுவரலாம் என்று எழுந்து தன்னுடைய கேட்டிகிஸ்ட்டிடம் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் ஃபாதர் ஆல்பர்ட். திரும்பிவர ஒருமணி நேரம் ஆனது.

அவர் பங்கு வளாகத்தில் நுழைந்ததுமே தன்னுடைய அறைக்கு வெளியில் ராயப்பன் ஐந்தாறு நபர்களுடன் காத்திருந்தது தெரிந்தது. ராயப்பனின் முகம் கோபத்தில் கருத்து சிவந்திருந்ததைக் கண்டும் காணாதவாறு தன் அறைக்கதவை திறந்துக்கொண்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்தார்.

'என்ன ஃபாதர், நாந்தான் வரேன்னு சொல்லியிருந்தேனே. அநாவசியமா என்னோட வேல்யபிள் டைம வேஸ்ட் பண்ணீட்டிங்களே.' என்றவாறு கோபத்துடன் தன்னை நெருங்கிய ராயப்பனை பார்த்து புன்னகையுடன் அமைதியாய் இருங்கள் என சைகை காட்டினார். 'கோபப்படாதீங்க மிஸ்டர் ராயப்பன். நீங்க பத்து மணிக்கு வந்துடறேன்னு சொன்னீங்க. பதினோரு மணி வரைக்கும் வரல. ஒருவேளை வரமாட்டீங்களோன்னு நினைச்சி பக்கத்து புக்ஸ்டால் வரைக்கும் போய்ட்டு வரலாம்னு போனேன். போன எடத்துல கொஞ்சம் லேட்டாயிருச்சி. உங்களுக்கு வேற வேலை இருந்திருந்தா நீங்க வெய்ட் பண்ணியிருக்க வேண்டாமே. இவங்கள மட்டும் கேட்டிகிஸ்ட் கிட்ட அறிமுகப்படுத்திட்டு போயிருக்கலாமே.'

ராயப்பனின் கோபம் மேலும் கூடியது. 'என்ன ஃபாதர் ஒருமாதிரி கிண்டலா பேசறீங்க? கோயிலுக்குன்னு நாங்க செய்யற இந்த மாதிரி புனித பணிக்கு இதான் நீங்க குடுக்கற மரியாதையா? இவங்க என்ன ஆடா, மாடா கேட்டிக்கிஸ்ட் கிட்ட அறிமுகப்படுத்திட்டு போறதுக்கு? இவங்க ஒவ்வொருத்தரையும் எவ்வளவு நாளா துரத்தி, துரத்தி புடிச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா? திருச்சபை உங்களுக்கு சம்பளம் குடுத்து நீங்க செய்ய வேண்டிய இந்த மாதிரி வேலைய புனிதமா நினைச்சி நாங்க செய்யிறமே அதுக்கு ஒரு எங்கரேஜ்மெண்ட் இல்லன்னா கூட பரவால்லை.. இப்படி நக்கல் பண்ணாம இருந்தாவே போறும். உங்களுக்கு முன்னாடி இருந்தவர் இப்படி பிகேவ் பண்ணதில்ல ஃபாதர்.' என்று பொரிந்து தள்ளிவிட்டு மூச்சு வாங்க நின்றவரைப் பார்த்த ஆல்பர்ட் ஒருநிமிடம் உண்மையிலேயே அதிர்ந்துபோனார்.

இவரை நாசூக்காகத்தான் கையாளவேண்டும் என்ற முடிவுடன் எழுந்து நின்றார். 'I am really sorry Mr. Royappan. முதல்ல உக்காருங்க. எனக்கு உங்கள கிண்டல் செய்யணுங்கற எண்ணம் எதுவும் இல்லை. நான் எதார்த்தமாத்தான் சொன்னேன். சொல்லுங்க நா இப்ப என்ன செய்யணும்.'

'அப்படி வா வழிக்கி' என்கிற தோரணையுடன் தன் எதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து இருபக்கங்களிலும் இருந்த இருக்கைகளின் மீது தன் கைகளை விரித்து வைத்துக்கொண்டு ஒருவித வெற்றி புன்னகையுடன் அமர்ந்தவரை ஒருசில நிமிடங்கள் அமைதியுடன் சலனமில்லாமல் பார்த்தார் ஆல்பர்ட். இவரை எப்படி கையாள்வது என்ற யோசனை அவருடைய மனதில் ஓடியது. அவருடைய இருபதாண்டுகால குருத்துவ வாழ்க்கையில் இத்தகைய பல போலி கிறிஸ்துவர்களை கண்டிருக்கிறார். ஏதோ தாங்கள்தான் உண்மையான இறைமக்கள் என கற்பித்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்க எண்ணும் இத்தகையோரால்தான் இன்று திருச்சபையே ஸ்தம்பித்துப்போய் நிற்கிறது. மதமாற்றம் என்ற பெயரால் எவ்வித விசுவாசமும், விருப்பமும் இல்லாதவர்களை கிறீஸ்துவ மதத்தை தழுவ செய்வது கிறிஸ்துவர் அல்லாத சமூகத்தவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் திருச்சபையை உள்ளாக்குவதும் இத்தகையோரின் பொறுப்பற்ற செயலே என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஆகவே அவர் இருந்த எந்த பங்கிலும் மதமற்றம் என்று தன்னிடம் அழைத்து வரப்பட்டவர்களை துருவி, துருவி கேள்விகளால் துளைத்து அவர்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை விசுவசித்து கடவுளாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே அவர்களை அதற்குரிய தயாரிப்பு வகுப்புகளில் சேர்த்துக்கொள்வார். அதற்குப்பிறகும் ஞானஸ்நானம் பெற தேவையான அடிப்படை ஜெபங்களை அவர்கள் பாடம் செய்து ஒப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். அவருடைய இத்தகைய நடவடிக்கையால் அவர் அதுவரை இருந்த எந்த பங்கிலும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடித்ததில்லை.

'நா ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த மாசம் இவங்கள கன்வர்ட் பண்லாம்னு இருக்கேன் ஃபாதர்.
இவங்களோட சேர்த்து இந்த வருசம் மட்டும் இருநூறு பேர நம்ம மதத்துக்கு கொண்டு வந்துருக்கேங்கற ரெக்கார்ட் எஸ்டாபிளிஷ் பண்றேன். இந்த மாச பங்கு மேகசீன்ல இதப்பத்தி பப்ளிஷ் பண்றதுக்கு டீட்டெய்லா ஒரு கட்டுரையையும் எழுதிக்கிட்டு வந்துருக்கேன், இந்தாங்க.'

அவர் நீட்டிய தாள்களை வாங்கிய ஆல்பர்ட் நான்கு பக்கங்களில் முதல் பக்கம் முழுவதும் தன்னைப்பற்றியும் மீதி பக்கங்களில் தான் மதம் மாற்றிய அனைத்து நபர்களின் பெயர்களை பட்டியலிட்டிருப்பதையும் பார்த்தார். ஒன்றும் பேசாமல் அவற்றை தன்னுடைய மேசையில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தார். 'உங்களுடைய செயலுக்கு என்னுடைய பாராட்டுகள் மிஸ்டர் ராயப்பன். அவங்கள ஒவ்வொருத்தரா உள்ள கூப்பிட்டு சில கேள்விகளை கேட்கலாம்னு இருக்கேன். நீங்க கொஞ்சம் வெளியில வெய்ட் பண்றீங்களா?'

ராயப்பன் சட்டென்று எழுந்து நின்றார். 'என்ன கேள்வி கேக்க போறீங்க ஃபாதர்? அதுவரைக்கும் என்னால வெய்ட் பண்ண முடியாது. ஏன்னா நானே எல்லாத்தையும், சொல்லிக்கொடுத்துதான் கூட்டிக்கிட்டு வந்துருக்கேன். சாதாரணமா நா கூப்ட்டுக்கிட்டு வர்றவங்களுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் பாப்டிசம் குடுக்கறதுதான் வழக்கம். அவங்க பேர், குடும்பத்துல இருக்கறவங்களோட பேர் எல்லாத்தையும் டீட்டெய்லா இதுல எழுதியிருக்கேன். நீங்க கேட்டிக்கிஸ்ட் கிட்ட சொல்லிட்டா போறும். என்னைக்கி பேப்டிசம் வச்சுக்கலாங்கற விஷயத்த நானே அவர் கிட்ட பேசி முடிவு பண்ணிடறேன்.'

ஆல்பர்ட் அவருடைய குரலில் தொனித்த எரிச்சலை பொருட்படுத்தாமல் புன்னகையுடன் எழுந்து நின்றார். 'இதுவரைக்கும் இந்த பங்குல என்ன நடந்துதுங்கறதப்பத்தி எனக்கு அக்கறையில்ல மிஸ்டர் ராயப்பன். இனி எது எப்படி நடக்கும்னு மட்டும் நா சொல்றேன். இவங்கக்கிட்ட நா பேசி இவங்க உண்மையிலேயே நம்முடைய இறைவனை விசுவசிச்சி வந்தவங்களான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கணும். அப்புறந்தான் மத்த எல்லாம். உங்களால அதுவரைக்கும் வெய்ட் பண்ண முடியாதுன்னா நீங்க கிளம்புங்க. நா இவங்கக்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்.'

அவருடைய கண்டிப்பான பேச்சுக்கு எப்படி பதிலளிப்பது என புரியாமல் ஒருசில நிமிடங்கள் தடுமாறிய ராயப்பன் பொங்கி எழுந்த கோபத்தை மிகச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். என்ன திமிர் இந்த சாமியாருக்கு? என்ன நினைச்சிக்கிட்டிருக்கார்? நா யார்னு தெரியாம விளையாடறார். இருக்கட்டும், அடுத்த மீட்டிங்ல எல்லார் முன்னாலயும் நா யார்னு காட்டறேன். 'நீங்க சொல்றதும் சரிதான் ஃபாதர். எனக்கு வெளியில அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு. நா அத முடிச்சிக்கிட்டு வரேன்.'

அவருடைய பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறிய ராயப்பன் வெளியில் காத்திருந்தவர்களிடம், 'ஃபாதர் ஏதோ பேசணுமாய்யா... நா போய்ட்டு அப்புறமா வரேன்.' என்று உரக்க கூறிவிட்டு தன் வாகனத்தில் ஏறி வெளியேற ஆல்பர்ட் தன் அறையை விட்டு வெளியில் வந்து காத்திருந்தவர்களை அணுகினார்.

அடுத்த ஒரு மணி நேரம் அவர்களை ஒவ்வொருவராய் அழைத்து விசாரித்ததில் அவர் அறிந்துக்கொண்டது.

அவர்களுள் இளையவராய் தெரிந்தவர் ஒரு கிறீஸ்துவ பெண்ணை காதலிக்கிறார். தங்களுடைய பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் மதம் மாற வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் நிர்பந்திக்கவே இந்து மதத்தைச் சார்ந்த அந்த இளைஞருக்கு வேறு வழியில்லை. ஆல்பர்ட் அவரிடம், 'அதற்காக மட்டும்தான் என்றால் நீங்கள் மதம் மாற தேவையில்லை. நீங்கள் இந்துவாகவே அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை கிறிஸ்துவ முறைப்படி ஞானஸ்நானம் கொடுத்து வளர்க்க வேண்டும். அதில் ஏதாவது உங்களுக்கு ஆட்சேபனை உண்டா?' என்றார். அந்த இளைஞன் ஆலோசித்துத்தான் பதிலளிக்க முடியும் என்று கூறவே, 'சரி நீங்கள் நன்றாக யோசித்து இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்' என அனுப்பி வைத்தார்.

மீதமிருந்த நால்வரும் படிப்பறிவற்ற பரம ஏழைகள். மதம் மாறினால் அவர்கள் தொழில் செய்ய கடன் பெற்றுத் தருவதாக கூறி ராயப்பன் அழைத்து வந்ததாக கூறவே ஆல்பர்ட் அவர்களுக்கு கடன் தரும் அளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்றும் இறைவன் இயேசுவை விசுவசித்து அவர் ஏற்படுத்திய மதத்தில் சேர முழுமையான விருப்பம் இருந்தால் மட்டுமே மதம் மாற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அவருடயை அறிவுறுத்தலை கேட்டுக்கொண்டிருந்த கேட்டிக்கிஸ்ட், 'ஃபாதர் இவங்கள திருப்பி அனுப்பிச்சீங்கன்னா ராயப்பனோட கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். பேசாம என் கிட்ட விட்டுருங்க. நா அவங்க யாருக்கும் மந்திரம் சொல்ல வரலைன்னு சொல்லி தலைவர்கிட்ட சொல்லிடறேன்.' என்றார் அச்சத்துடன். அவருக்கு ராயப்பனை பகைத்துக்கொண்டால் தன்னுடைய வேலைக்கே உலை வைத்துவிடுவார் என்ற பயம். ஆனாலும் பாதிரியார் ஆல்பர்ட் சம்மதிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தார். அதனால் ஏற்படக் கூடிய பங்கு பேரவை தலைவரின் கோபத்தையும் எதிர்கொள்ள அவர் தயாராக இருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல் ராயப்பன் அவருடைய அலுவலகத்திற்கு வந்து கண்டு கோபப்பட்டு ரகளை ஏதும் செய்யாமல் இருந்தது அவருக்கு வியப்பை அளித்தது.

இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள். அவர் வெளியில் சென்றுவிட்டு அறையை நோக்கி நடக்க அவருடைய கேட்டிகிஸ்ட் அவரை நோக்கி ஓடிவருவதைக் கண்டார்.

'ஃபாதர் பிஷப் ஹவுஸ்லருந்து ஒரு ஃபோன்'

ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்தவுடனேயே எதிர்முனையில் பிஷப்பின் உரத்த சிரிப்பு கேட்டது, 'என்ன ஃபாதர் இந்த பங்குல ஆறுமாசமாவது தாக்குப்பிடிப்பீங்கன்னு நினைச்சேன். சரி அடுத்து எங்க போறதா உத்தேசம்? ஃபாரின் போஸ்ட்டிங்தான் உங்களுக்கு நல்லதுன்னு நினைக்கேன். யூ.எஸ் பேரிஷ் ஒன்னுல ஒரு இந்திய ஃபாதர் வேணுமாம், போறீங்களா? அஞ்சாறு வருசத்துக்கு நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்றீங்க?'

'எப்ப போகணும்?' என்றார் ஆல்பர்ட் பதற்றமடையாமல்.

**********