27.2.06

சூரியன் 31

சட்டென்று நினைவுக்கு வந்ததுபோல் நிமிர்ந்தார் சேது மாதவன். ‘எடோ தான் ஒரு காரியம் செய்யி. தாழ போயி எண்ட கார் டாஷ் போர்ட்ல நம்மட சீக்ரெட் டைரி உண்டாவும். அத கொண்டுட்டு வேகம் வா.’

அது அவருடைய நெருங்கிய நண்பர்கள், அடியாட்களின் தொலைப்பேசி எண்கள் அடங்கிய ரகசியப் புத்தகம். எண்கள் மட்டுமே இருக்கும். யாராவது சம்பந்தம் இல்லாதவர்கள் எடுத்தால் அவை என்னவென்று விளங்கவே சிறிது நேரம் பிடிக்கும். அப்படியொரு புத்தகம் இருப்பதே அவருக்கும் திருநாவுக்கரசுவுக்கும் மட்டுமே தெரியும்.

அதைப் புரட்டி ஒரு எண்ணை அவனிடம் சுட்டிக்காட்டி, ‘திரு, தான் தாழ போயி இயாள விளிச்சி இன்னும் அரைமணிக்குள்ளில என்னெ வந்து காணாம் பற.. வேகம் போ..’ என்றார்.

அந்த எண்ணைப் பார்த்ததுமே அவனுக்கு புரிந்தது. வியப்புடன் அவரைப் பார்த்தான். ஆனால் அடுத்த விநாடியே ஒன்றும் கூறாமல் படியிறங்கி ஓடி அவர் கூறியதை செய்தான்.

அவன் பார்வையிலிருந்து மறையவும் அவருடைய செல் ஃபோன் சிணுங்கவும் சரியாயிருந்தது. யார் என்று பார்த்தார். அவருடைய புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. என்ன வேணும் இவனுக்கு? அதுவும் இந்த நேரத்துல?

எடுத்து, ‘என்ன?’ என்று உறுமினார்.

அடுத்த சில விநாடிகளில் அவர் முகம் அதிர்ச்சியில் உறைந்து பிறகு படிப்படியாக மாறி சோகமானது..

‘Is it? Where is she now?’ என்றார்.

மறுமுனையிலிருந்து என்ன பதில் வந்ததோ.. ‘Ok. Leave it to me. I’ll try and bring her back. Don’t do anything stupid till I call back and don’t tell anyone. Ok?’ என்றார்.

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் கையில் இருந்த டைரியிலிருந்த வேறொரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் சம்பந்தப்பட்டவர் எடுத்ததும் கடகடவென ஆணைகளைப் பிறப்பித்தார். ‘எடோ.. தான் எங்கன செய்யாம் போனன்னு ஞான் பறையில்லா.. பட்ச காரியம் நடந்திருக்கணும்.. நோ எக்ஸ்க்யூஸ்.. மனசிலாயோ?’

மறுமுனையிலிருந்து பதில் வருவதற்கு முன் இணைப்பைத் துண்டித்துவிட்டு செல் ஃபோனை கட்டிலில் வீசியெறிந்துவிட்டு அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

அவர் வீசியெறிந்ததும் அடிக்கத் தொடங்கிய செல் ஃபோனை எடுக்காமல் குனிந்து யாரென பார்த்தார். ‘சே.. இயாளெந்துனா ஈ சமயத்துல விளிக்கின? எடுக்காதிருந்தாலோ?’ என்று நினைத்தவர் அது தொடர்ந்து உச்ச ஸ்தாயியில் ஒலிக்கவே அரைமனதுடன் எடுத்து, ‘என்ன சார், இந்த நேரத்துல?’ என்றார்.

‘சார் நான் சுந்தரம்’

அதான் தெரியுதேய்யா..

‘தெரியுது சார். சொல்லுங்க.’

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால முரளி கூப்டு எல்லாம் நீங்க நெனச்சா மாதிரியே சுமுகமா முடிஞ்சிருச்சின்னு சொன்னார் சார்.. எம்.டி கிட்ட சொல்லிருங்கன்னும் சொன்னார். அதான் உங்கள இன்ஃபார்ம் பண்ணலாம்னு கூப்டேன்..’

மாதவன் அதிர்ச்சியில் என்ன பதில் பேசுவதென தெரியாமல் ஒரு நிமிடம் சிலையாய் நின்றார்..

‘என்னாச்சி மிஸ்டர் மாதவன்? ஆர் யூ தேர்?’ என்ற சுந்தரத்தின் குரல் செவியில் அறைய சுதாரித்துக்கொண்டு.. ‘நான் எதிர்பார்த்ததுதான் சார்.. உங்க இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப தாங்க்ஸ்..’ என்றார்.

‘சார், அப்புறம் இன்னொரு விஷயம்.’

என்னய்யா நை நைன்னு..?

‘சொல்லுங்க சார்.’

‘நம்ம மாதவன் சார ரிசீவ் பண்ண போணுமில்லே..’

வாயில் வந்த வசவுகளை கஷ்டப்பட்டு மென்று விழுங்கினார். ‘நாம எதுக்கு சார் போணும்? அவரு எந்த ஃப்ளைட்டுல வரேன்னு கூட நமக்கு சொல்லலையே.. போர்ட் மெம்பர்ஸ் வந்தாப் போறும்னு நினைச்சித்தானே டாக்டர்கிட்ட மட்டும் சொல்லியிருக்கார். அவரே போட்டும்..’ என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு..

மறுமுனையில் இருந்து சிறிது நேரம் ஒன்றும் பதில் வராமல் போகவே.. இணைப்பைத் துண்டித்துவிட்டு ‘போடா தெண்டி’ என்றார் உரக்க.

அவருக்குப் பின்னால் ஓசைப்படாமல் வந்து நின்ற திருநாவுக்கரசு முதலாளியின் வசவு யாருக்கு என்று தெரியாமல் விழித்தான். ‘சரி, ஐயா அந்தப்பக்கம் போனதும் செல்ல எடுத்து கால் ரெஜிஸ்டர்ல பாத்து வச்சிக்கணும். பின்னால யூஸ் ஆவும்.’ என்று மனதில் குறித்துக்கொண்டு.. ‘சார்.. நீங்க சொன்ன நம்பருக்கு ஃபோன் பண்ணிட்டேன்.. கரெக்டா இன்னும் அரை மணி நேரத்துல வந்துர்றேன்னிட்டான்..’ என்றான்.

‘இனி அயாளு வந்து எந்தெய்யானா? வேணாம்னு விளிச்சிப் பற’ என்ற மாதவனைப் பார்த்து ஒன்றும் விளங்காமல் விழித்தான் திரு. என்னாச்சி இந்தாளுக்கு, காலைலருந்தே முன்னுக்கு பின்னா பேசறாரு? சரி நமக்கென்ன, இன்னொரு ஃபோன் போடணும், அவ்வளவுதானே?

‘சரிங்கய்யா.’ என்றவாறு நகர்ந்தான். அவன் ஓரடி எடுத்து வைக்கும் முன், ‘ஏய், நில்லு.. வேண்டா.. அவன் வந்தோட்டே.. தான் போயி.. இனியும் ஒரு சாயா ஸ்ட்ராங்காய்ட்டு கொண்டு வா..’ என்றார் மாதவன்.

நாம நெனச்சது சரிதான். என்னமோ முக்கியமான காரியம் நடந்திருக்கு இல்லே, நடக்கப் போவுது.. இல்லன்னா இந்தாளு இப்படி தடுமாறமாட்டான்..

அவன் நகர்ந்ததும் தன் செல் ஃபோனை எடுத்து கோபத்தில் நடுங்கும் விரல்களுடன் ஒரு எண்ணைச் சுழற்றி காதில் வைத்தார்.. கோபத்தின் உச்சியில் நடுங்கும் உதடுகளைக் கடித்துக்கொண்டு மறுமுனையில் எடுக்கும்வரைக் காத்திருந்தார்.. யாரும் எடுக்காமல் போகவே ஆத்திரத்துடன் ஃபோனை கட்டிலில் வீசியெறிந்தார்..

தெண்டி, தெண்டி, தெண்டி.. எடோ, தான் கூடுதல் களிக்கான் நோக்கியாலே.. பட்டி.. கட்டுக்கடங்காமல் சரமாரியாக வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கூறி தன்னுடைய செல் எண்ணைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே எடுத்து பதிலளிக்காதிருந்த முரளிதரனைத் திட்டித் தீர்த்தார்..

கொல்கொத்தா விவகாரத்தை சுமுகமாக முடிக்க விடக்கூடாது என்பதில் தீவிரமாயிருந்த சேது மாதவன் அதற்காகவே முரளி கொல்கொத்தா செல்லும் முன் தன்னை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார். ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அவருடைய உள்நோக்கத்தை அறிந்திருந்த முரளி வேண்டுமென்றே ஷண்முக சுந்தரத்தின் பேரில் இருந்த விசுவாசத்தால் தன்னை அழைக்காதிருந்திருக்கிறான் என்று நினைத்தபோது அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை..

வாசலில் இருந்து ஒலித்த அழைப்பு மணியோசை அவருடைய நினைவுகளை கலைக்க படுக்கையறையை விட்டு வெளியேறி மாடியிலிருந்தே கீழே பார்த்தார்.

திருநாவுக்கரசு சென்று கதவைத் திறந்ததும் அவனை முரட்டுத்தனமாய் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அடியாட்கள் கூட்டத்தின் தலைவனைப் பார்த்ததும் ஒரு வன்மப் புன்னகை மாதவனின் முகத்தில் படர்ந்தது..

‘எடா.. மோள்லேக்கு வா..’ என்றார் மாடியில்ருந்தவாறு..

திருநாவுக்கரசுக்கு மாதவன் யாரை மாடிக்கு அழைக்கிறார் என்று தெரிந்தது.. அவன் ஒன்றும் பேசாமல் வாசற்கதவை அடைத்துத் தாளிட்டுவிட்டு சமையலறையை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்த அடியாள் படியேறி மேலே சென்றான்..

‘எந்தா சாரே.. அர்ஜெண்டாய்டு?’

இருபது வருடங்களுக்கு கேரள மாநிலம் கம்யூனிச கட்சிகளின் பாசறையான அலுவாவிலிருந்து (Alluva District) தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கத்தைத் துவக்க வந்தவர்களுள் ஒருவன் தான் இப்போது அடியாட்களின் தலைவனாக உருவெடுத்திருக்கும் பாஸ்கரன் நம்பியார்.. அவனுக்கு கிடுக்கி நம்பியார் என்ற பட்டப் பெயரும் உண்டு!

அவனிடம் அகப்பட்டவர்கள் ஒருவரும் தப்பித்ததில்லை. அதற்காக அவனுடைய சகாக்கள் வைத்த பெயர்தான் ‘கிடுக்கி’.

சேதுமாதவன் தன் எதிரே ஆறடிக்கும் கூடுதலான உயரத்தில் வாட்ட சாட்டமான உருண்டு திரண்டிருந்த புஜங்களுடன், பாதி முகத்தை மறைத்துக்கொண்டிருந்த தாடியுடனூடே காவியேறிய பற்கள் தெரிய ஒரு கொடூர புன்னகையுடன் நின்றவனைப் பார்த்தார்.

அவருடைய ஆணையின் பேரில் கடன் பெற்றுவிட்டு திருப்பி அடைக்காமல் மக்கார் செய்த எத்தைனையோ வங்கி வாடிக்கையாளர்களை மிரட்டி பணியவைத்தவன் இந்த பாஸ்கரன்..

‘எந்தா சாரே.. எந்தா ஆலோய்க்கண?’

‘தனிக்கி ஒரு ஜோலி கொடுக்கான் விஜாரிச்சதான பாஸ்கரா.. அதுகொண்டா தன்ன விளிப்பிச்சது.. பட்சே அதிண்ட அவஸ்யம் தீர்ந்நுபோயி.. அதான ஆலோய்க்கண..’ என்ற சேதுமாதாவன் சட்டென்று நினைவுக்கு வந்தவராய்.. ‘எடோ நம்மட பத்மன் இல்லே..?’ என்றார்.

பாஸ்கரனுக்கு தெரியாமலா? அவனுடைய நெருங்கிய சகா பத்மநாபனை மறக்க முடியுமா என்ன? ‘அதே சார்..’

‘ஞான் இன்னு ராவிலெ அவண்டெடுத்து ஒரு காரியம் எல்ப்பிச்சிட்டுண்டு.. தான் அவனெ விளிச்சோ.. அவன் பறஞ்சு தரும்.. நிங்களு ரெண்டு பேரும் ச்சேர்ந்து போக்கோ.. காரியம் கொறச்ச புத்திமட்டுள்ளதான.. தானும் ச்சேர்ந்தாலே சரியாவுள்ளு.. பத்மன் தேஷ்யத்ல எந்தெங்கிலும் ச்செய்துபோயா பிரஸ்ணம் சீரியாவான் சான்ஸ்சுண்டு.. தான் இப்பத்தன்னே அவனெ விளிச்சோ..ஞான் தன்னெ விளிச்ச காரியம் பின்னே அவசியம் வரும்போ பறயாம்..’

பாஸ்கரன் ‘ பாஸ் ராவில விளிச்ச காரியம் எந்தாயிருக்கும்?’ என்ற யோசனையில் பதிலளிக்காமல் சில விநாடிகள் மெளனமாய் நிற்க சேதுமாதவன் எரிச்சலுடன், ‘தான் எந்தா ஆலோய்க்கண? வேகம் போக்கோ.. எனிக்கி வேற ஜோலியுண்டு.’ என்றார்.

அவருடைய குரலில் இருந்த கோபத்தைக் கண்ட பாஸ்கரன்.. ‘ஒன்னுமில்லா சாரே..’ என்றவாறு தயங்கி நின்றான்..

'எந்தாடோ? பறஞ்சோ..' என்றார் எரிச்சலுடன்.

‘சார், பைசா கொடுத்துட்டு கொறே காலமாயி.. அதுவுமில்லாண்டு.. சார் இப்போ பறஞ்ச காரியம் கொறச்ச ரிஸ்க்குள்ளதான.. போலீஸ் பிடிக்கானங்கில் அவருக்கு எந்தெங்கிலும் கொடுக்கண்டே சாரே?’

சேதுமாதவனுக்கு புரிந்தது.. அறையை விட்டு வெளியேறி, ‘எடோ திரு..’ என்று இரைந்தார்.

அடுத்த நொடியே மாடிப்படிகளில் பறந்து வந்த திருநாவுக்கரசிடம் பாஸ்கரனைப் பார்த்து கண் ஜாடை செய்ய அவன் புரிந்துக்கொண்டு அவனைப் பார்த்து கீழே வா என்று கண் ஜாடைக் காட்டியவாறு படிகளில் இறங்கினான்..

தொடரும்




24.2.06

சூரியன் 30

விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து படுக்கையில் அமர்ந்த சேதுமாதவனின் தலை விண்னென்று வலித்தது..

முந்தைய நாள் மாலையில் அடித்த ‘வெள்ள’த்தின் பாதிப்புதான், வேறென்ன?

ஃபோன் பண்றேன்னு போய்ட்டு  ஆ -------- மவன் முரளி விளிச்சிட்டேயில்லல்லோ.. என்று முரளிதரனை நினைத்து வசைபாடினார்.

படுக்கை தலைமாட்டில் இருந்த மேலைநாட்டு அலங்கார டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்து என்றது..

ராத்திரியே என்னாச்சின்னு விளக்கமா ஃபோன்ல சொல்றேன்னு போனவன் ஏன் கூப்டவே இல்லை? ஒருவேளை அந்த சுந்தரத்துக்கு ஃபோன் பண்ணி சொல்லிருப்பானோ.. இருக்கும். அந்த முரளி என்ன வேணும்னாலும் செய்வான்..

அவன் செல்லுக்கு ஃபோன் பண்ணா என்ன? வேண்டாம்.. அவனாவே ஃபோன் பண்ணட்டும்...

படுக்கையில் படுத்து இன்னும் சிறிது நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட்டாலென்ன என்று நினைத்து அதையும் வேண்டாம் என்று தள்ளிவிட்டு படுக்கை அருகிலிருந்த இண்டர்காம்மை எடுத்து அவருடைய வேலையாள் திரு என்ற திருநாவுக்கரசுக்கு டயல் செய்தார்.

ஒரு அடி அடித்ததுமே எடுத்த திரு, ‘என்னய்யா.. சாயாத்தானே.. தோ, ஒரே நொடியில..’ என.. ‘அதே.. வேகம் கொண்டு வா..’ என்றார் மாதவன். அதுதான் திருநாவுக்கரசு. எள் என்பதற்கு முன்பு எண்ணையாக வந்து நிற்பவன்!

அவன் வருவதற்குள் பல் தேய்த்துவிட்டு வந்துவிடலாம் என்ற நினைப்புடன் எழுந்து அவருடைய பிரத்தியேக குளியலறைக்குள் நுழைந்தார்.

ஆமாம். அது அவருடைய பிரத்தியேகமான குளியலறைதான். அதனுள், சுத்தம் செய்ய வரும் ஆயாவைத்தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.. அவருடைய மனைவி மாயாதேவிக்கும் தான்.. அவரே மேற்பார்வையிட்டு பார்த்து, பார்த்து வடிவமைத்த குளியலறையாக்கும் அது..

அதென்ன அப்படி.. ஆஃப்டர் ல் ஒரு குளியலறை.. என்று நினைத்தீர்களானால் அது தவறு..

உள்ள போய் பாருங்கள், தெரியும்..

நுழை வாயில் கதவே ஒரு பிரத்தியேக டிசைனில் மாதவனின் டேஸ்டுக்கு ஏத்தாப்பல ‘செக்சியாக’ இருக்கும்.. புரியலையா? அப்ப விட்டுருங்க..

அதத் தாண்டி உள்ள வாங்க..

ஒரு குட்டி பெட் ரூம் சைசில் இருபதுக்கு இருபது என்று மொத்தம் நானூறு சதுர அடி. அறை முழுவதும் கரணம் தப்பினா மரணம்தான் என்பதுபோல் வழுக்கும் மார்பிள் .. ‘தண்ணி கீழ நிக்கறதே தெரிய மாட்டேங்குதுமா’ என தினமும் புலம்புவாள் ஆயா.. ஆனால் மாதவனுக்கு அது அத்துப்படி.. கால்ல ஸ்பாஞ்ச் வைத்து தைத்த  துணியாலான ஷ¤மாதிரியான ஒரு காலனியை அணிந்துக்கொண்டுதான் உள்ளே நுழைவார்.. வழுக்கும் என்ற பிரச்சினையே இல்லை..

அறை சுற்றுச் சுவர் முழுவதும் தரையிலிருந்து கூரை வரை பெல்ஜியம் கண்ணாடிகள்.. அறைக்குள் நுழைந்ததுமே எதிரே, இடது, வலது என எல்லா பக்கங்களிலிருந்தும் பிம்பங்கள் அவரை நோக்கி வருவதைப் பார்ப்பதே அவருக்கு ஒரு த்ரில்.. தினம் தினம் பார்த்தாலும் அதில் லயித்து போய் ஒரு நொடி நின்று ரசிப்பார்..

‘அம்மா, உங்க வீட்டுக்காரர் பாத்ரூமுக்குள்ள போறதுக்கே எனக்கு பயமா இருக்கு. யாரோ பக்கத்துலருந்து நம்மளையே பாக்கறா மாதிரி..’ என்ற சுத்தம் செய்யும் ஆயாவைப் பார்த்து ‘போடி பிராந்தி’ என்று சிரிப்பாள் மாயாதேவி..

பத்தடி நீளமுள்ள பெரிய பாத் டப் அலங்கார பைப் ஃபிட்டிங்குகளுடன் அறையின் இடது பக்கம் முழுவதையும் பிடித்துக்கொண்டிருந்தது.. நேர் எதிரில் மூன்றடி நீளத்திற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாரி நிறுவனத்தின் வாஷ் பேசின்.. கையை நீட்டியவுடன் தானாக திறந்து, மூடிக்கொள்ளும் அலங்கார சுடுநீர், குளிர் நீர் குழாய்களுடன். அதற்கருகில் வலப்பக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அரை அங்குல ஆழமுள்ள பூத்துவாலைகளைத் தாங்கி நிற்க ஒரு அழகான முழு நிர்வாண வீனஸ் சிலை.. (சே! என்ன மனுஷன் இவர் என்ற முனகலுடன் சுத்தம் செய்ய வரும் ஆயா அறைக்குள் நுழைந்ததும் ஒரு துணியால் மூடுவது அந்த சிலையைத்தான்.)..

வாஷ் பேசினுக்கு இடப்பக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று ப்ளேடுகளைக் கொண்ட மின்சார ஷேவர், குட்டியாய் கைக்கு அடக்கமான ஹேர் கட்டிங் இயந்திரம், ஷேவிங் க்ரீம் மற்றும் ஆஃப்டர் ஷேவ் லோஷன், மாதவனின் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான ஸ்ப்ரே பாட்டில்கள்..

அறையின் மூலையில் அலங்காரமான இருக்கையைப் போன்ற கைப்பிடியுடன்(!) வடிவமைக்கப்பட்ட கழிப்பிடம், அதையொட்டி, தியேட்டர்களில் இருப்பது போன்ற உபயோகித்தவுடன் தானாக திறந்து சுத்தம் செய்துக்கொள்ளும் வசதியுடனான  யூரினல் க்யூபிக்கிள்..

அதற்கு பக்கவாட்டில் சுவரில் பொருத்தப்பட்ட குறு மேசை.. அதன் மேல் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் லாப்டாப், தினசரி தாள்களை பொருத்தக்கூடிய க்ரிஸ்டல் ஸ்டாண்ட், தொலைப் பேசி, இண்டர்காம்.. இத்யாதிகள்..

கமலஹாசன் ஒரு போட்டியில் கூறினாராம்.. இங்க இருக்கும்போதுதான் பிரமாதமான ஐடியாஸ் வரும்.. அப்ப உடனே ஒர் நோட் பேட்ல குறிச்சி வச்சிக்குவேன் என்று.. அவருக்கு ஒரு சாதாரண குறிப்பேடு இருந்தால் போதும்.. நம் சேது சாருக்கு ஒரு லாப்டாப்!

அப்ப்ப்ப்ப்ப்பா.. அந்த அறையில் இருப்பதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்..

சேது மாதவன் ஒரு சரியான டிவி பைத்தியம்.. அதுவும் லாஸ் வேகஸ், டினாஸ்டி, ஹாலிவுட் ஸ்டார்ஸ்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறைப்பற்றியும் வரும் தொலைக்காட்ட்சி டாக்கு சினிமாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்..

அவருடைய படுக்கையறை, குளியலறை, ஸ்டடி அறை.. இவை எல்லாமே ஆங்கில படங்களையும், தொலைக்காட்சி தொடர்களில் வந்தவற்றையும் காப்பியடித்து வடிவமைக்கப்பட்டவைகளே..

சரி.. இதற்கெல்லாம் எங்கிருந்த பணம் வந்தது என்று கேட்காதீர்கள்..

Amassing assets disproportionate to known source of income என்று வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் வெற்றிதான்..

ஆனால் ஒன்று. சேது மாதவனின் மனைவி மாயாதேவியின் தந்தை கேரளத்தில் பரம்பரை பரம்பரையாகவே சாராயக்கடை, மதுபானக் கடைகளை ஏலம் எடுத்து நடத்திய குடும்பத்தில் வந்தவர்..

கணக்கிட முடியாத கறுப்புப் பணத்தில் புரண்டவர்.. மாயாதேவியையும் சேர்த்து அவருக்கு நான்கு புதல்விகள்.. புதல்வர்கள் இல்லை.. ஆகவே அவருடைய அபிரிதமான ஐந்தாறு கோடி ரூபாய் சொத்திற்கு நான்கில் ஒரு பங்குக்கு மாயதேவி பிறகு அவளுக்கு கணவர் என்ற முறையில் சேது மாதவனும் ஒரு வாரிசு என்பது உண்மைதான்..

ஆனாலும் சேது மாதவனுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு அவருடைய மாமனாருடைய கையை எதிர்பார்த்ததே இல்லை..

சேதுமாதவனுக்கு பல வழிகளிலுமிருந்து வருமானம் வரும்.. அவருக்குக் கிடைத்த ஆறிலக்க மாத சம்பளம் வெறும் கண்துடைப்புக்குத்தான்..

ஆனால் சேதுமாதவன் கேடுகெட்ட வழியில் சம்பாதித்த கணக்கிடமுடியாத சொத்துக்கு அவருடைய மாமனாரின் பரம்பரைப் பணக்கார வம்சாவழி ஒரு சவுகரியமான போர்வை என்பதென்னவோ உண்மை..

***

சேதுமாதவன் பல் தேய்த்துவிட்டு வரவும் ஆவி பறக்கும் ஏலக்காய் கலந்த டார்ஜ்லிங் தேயிலையில் (தேயிலை அவருடைய வங்கியின் அஸ்ஸாம் கிளை வாடிக்கையாளருடைய கைங்கரியம்) தயாரிக்கப்பட்ட சாயாவை ஒரு அழகான சைனா பீங்கான் குவளையில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தருவதைப் போல் திரு கொண்டுவந்து கட்டிலுக்கருகில் இருந்த குறு மேசையில் வைத்துவிட்டு நின்றான்.

‘எடோ.. தாம் மாத்திரம் இல்லங்கில் ஞான் எந்தாவும்?’ என்று புன்னகையுடன் கூறிய முதலாளியைப் பார்த்து முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், பதில் ஏதும் பேசாமல் நின்றான் திரு..

ஐயா புகழ்றார்னு சந்தோஷப்படவும் மாட்டான், திட்டறாரேன்னு கவலைப்படவும் மாட்டான், கடந்த பதினைந்து வருடங்களாக அவருடைய வீட்டில் அவருக்கு எல்லாமாக இருந்து வரும் திருநாவுக்கரசு..

அவனுடைய பெயரை அழைத்து எங்கே தன்னுடைய நாக்கு சுளுக்கிக் கொள்ளுமோ என்று அதை திரு என்று சுருக்கியவர் அவரே..

நல்ல வேளை திருடான்னு கூப்டாம விட்டாரே என்று நக்கலடிப்பான் டிரைவர். ‘அப்படி கூப்டாலும் அது சரியாத்தான் இருக்கும்.’ என்பான் திரு பதிலுக்கு. ‘திருடனுக்கு திருடந்தான்யா லாயக்கு. ஐயா ஊர கொள்ளையடிக்கிறார். நா அவர கொள்ளையடிக்கிறேன். அவர் வீட்டுச் சொத்தா போவுது? ’

ஆமாம். திருநாவுக்கரசு அந்த வீட்டிலிருந்து சகட்டுமேனிக்கு சுருட்டும் அநியாயம் சேது மாதவனுக்கும் தெரியுமோ என்னவோ ஆனால் அவன் வெளியே இருப்பதைவிட தன்னுடன் இருப்பதே நல்லது என்று நினைக்குமளவுக்கு அவருடைய தில்லுமுல்லுகளையும் மாயாதேவி ஊரில் இல்லாத நேரத்தில் அவர் விளையாடும் காம லீலைகளையும் அறிந்து வைத்திருந்த ஒரே ஆள் திரு தான்.

சாயாவை சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துவிட்டு கோப்பையை திருவிடம் கொடுத்துவிட்டு, ‘மாயா எத்தற மணி ஃப்ளைட்லா வரனே திரு?’ என்றார்.

‘சாயந்திரம் ஏழு மணிக்கு சார். டிரைவர போகச்சொல்லிட்டேன். சாருக்கு சேர்மன பாக்க போணுமே.’

சட்டென்று நினைவுக்கு வந்ததுபோல் நிமிர்ந்தார் மாதவன். ‘எடோ தான் ஒரு காரியம் செய்யி. தாழ போயி எண்ட கார் டாஷ் போர்ட்ல கருத்த நிறத்துல ஒரு ச்செறிய டைரி உண்டாவும். அத கொண்டுட்டு வேகம் வா.’

திரு காலியான கூஜாவையும் கோப்பையையும் எடுத்துக்கொண்டு விரைந்து ஓடினான்.

தொடரும்..

23.2.06

சூரியன் 29

நியூ இந்தியா பவனின் பெயர் மாற்ற ராசியோ என்னவோ அவருடைய நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் நாடாரே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் தமிழர்கள் அதிகம் வசித்த மேற்கத்திய நாடுகளான யூ.கே., யு.எஸ், கனடாவிலும் பிராஞ்சைசி என்ற பாதையில் பரந்து விரிந்து வளர்ந்தது.

இத்தனை வளர்ச்சியிலும் மாணிக்கம் நாடார் மற்றும் அவருடைய பங்காளி, ரத்தினவேல் இருவரிடையிலிருந்த நட்பு ஆழமானதே தவிர எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுடைய நட்புக்கு பந்தம் வரவில்லை. வரவிடக்கூடாது என்பதில் இருவருமே முனைப்பாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...

அதாவது நாடாரின் வாலிப மகள் ராசம்மாள் ரத்தினவேலுவின் வாலிப மகன் ராசேந்திரனை சந்திக்கும் வரை...

ராசேந்திரன் பார்ப்பதற்கு சந்திரனைப் போல் சிவப்பாக (வெள்ளப் பாச்சான் மாதிரி இருக்கான்ல உம் பையன் என்பார் நாடார் தமாஷாக) பார்ப்பதற்கு சினிமா ஹீரோ தோற்றத்திலிருந்ததால் அமாவாசை நிறத்தில் ஆனால் லட்சணமான முக அமைப்புடன் இருந்த ராசம்மாள் (என்னப்பா பேர் வச்சீங்க? அம்மாள்னு.. எனக்கே கேக்க சகிக்கலை என்று சலித்துக் கொள்ளும்போதெல்லாம்.. ஏய் அது என்னைப் பெத்த ஆத்தா பேரும்மா.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்பார் நாடார்) மயங்கிப் போனதில் வியப்பில்லை..

நாடாரின் வளர்ச்சியில் ரத்தினவேலுவுக்குப் பிறகு ஒருவன் உண்டென்றால் அது அவருடைய தங்கை மகன் செல்வரத்தினம்தான். பத்தாவது முடித்தவுடனே தன்னுடைய மாமனுடைய உணவகத்தில் நுழைந்தவன் அவர் தன்னுடைய மகளுக்கு வரன் தேட துவங்கியபோது அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருந்தான்.

சென்னையில் ஐந்து கிளைகளை ஒரே நாளில் துவக்கி சென்னை நகரையே கலக்கியதும் அவனுடைய யோசனைதான். அத்துடன் இன்று கடல் கடந்து கிளைகளைத் திறந்து ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதில் அவனுடைய உழைப்பும் உண்டு .

அத்துடன் சட்ட ஆலோசகர் மோகனுடன் இனணந்து நாடாரை ஒரு வங்கியின் இயக்குனர் நிலைக்கு உயர்த்தியதும் செல்வம்தான்..

அவனைத்தான் தன் மகளுக்கு ஏற்றவனாக தன் மனதில் வரித்திருந்தார் நாடார்..

‘ச்சீய்.. உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் உங்க வேலைக்காரன்.. தங்கச்சி மகனாத்தான் எப்பவும் இருக்கணும்.. அவனும் அவன் மூஞ்சியும்.. கருச்சட்டி மாதிரி ஒரு மொகத்த வச்சிக்கிட்டு.. ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்? கருச்சட்டி மாதிரி இருக்கற ஒங்களுக்கு என்னைய மாதிரி செகப்பு நிறத்துல ஒரு பொண்ணு வேணும்னு ஒங்காத்தா கட்டி வச்சது எதுக்கு? செகப்பா ஒரு பேரக்குளந்த பெறக்கணும்னுதான? என் தலையெளுத்து, ஒங்க நெறத்துல வந்து பொறந்திருச்சி.. அதையும் போயி மறுவாட்டியும் ஒரு கருச்சட்டி தலையனுக்கு நா கட்டி வைக்க மாட்டேன்.. ஒங்க பங்காளி பய இருக்கானே.. சினிமா கீரோ மாதிரி. அவனத்தான் எம்பொண்ணுக்கு பிடிச்சிருக்கு. கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு நிக்கறா.. இத்தன சொத்துக்கும் அவதானங்க ஒரே வாரிசு.. அந்த பய சம்மதிக்கலன்னாலும் உங்க பங்காளி ஒத்துக்குவாறு.. போயி பேசி முடிங்க..’ என்ற தன்னுடைய தர்ம பத்தினியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ரத்தினவேலுவிடம் பேசுவதற்கு முன் தன் மருமகனிடம் பேசுவோம் என்று நினைத்து தயங்கி, தயங்கி அவனிடம் விஷயத்தை சொன்னார்.

ஆனால் அவனோ அவர் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக, ‘என்ன மாமா நீங்க? நா எங்க.. ராசம்மா எங்க? அவ படிப்புக்கு ராசேந்திரன் மாதிரி படிச்ச மாப்பிள்ளை தான் மாமா சரியாயிருக்கும். நிறமில்லேன்னா என்ன? ராசம்மா பாக்கறதுக்கு லட்சணமாத்தான இருக்கா? உங்களுக்கு தயக்கமா இருந்தா சொல்லுங்க நா போயி ரத்தினவேல் மாமாக்கிட்ட பேசுறேன்.’ என்றதுடன் நிற்காமல் அடுத்த நாளே ரத்தினவேலிடம் சென்று தன் தாய்மாமனின்  மனதில் இருந்ததைக் கூறினான்.

ரத்தினவேலுவுக்கும் அவருடைய ஒரே மகன் ராசேந்திரனுக்கும் ராசம்மாவைப் பிடித்ததோ இல்லையோ அவளுடைய தந்தைக்கு இருந்த திரண்ட சொத்து மிகவும் பிடித்திருந்தது.

ராசேந்திரனின் குணத்தைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தும் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நிர்பந்தம் காரணமாக அவர்களுடைய திருமனத்தை மதுரை நகரே வியக்கும் விதத்தில் தடபுடலாக நடத்தி முடித்தார் நாடார்.

ராசேந்திரனின் விருப்பத்திற்காக தன் மகள் பெயரில் சென்னையிலேயே ஒரு பிரம்மாண்டமான பங்களாவையும் விலைக்கு வாங்கி குடி வைத்தார்.

முதல் ஆண்டிலேயே ராசேந்திரனைப் போலவே ஒரு அழகான ஆண் மகனை ராசம்மாள் பெற்றெடுக்க பூரித்துப் போனாள் ராசாத்தியம்மாள்..

ஆனால் அதற்கடுத்த ஆண்டிலேயே ராசேந்திரனின் ‘பொம்பளை வீக்னஸ்’ தலைகாட்ட ஆரம்பித்தது.

நீயு இந்தியா பவனின் நிர்வாக இயக்குனர் என்ற பதவியளித்த போர்வையில் தன் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களிடத்தில் தன் லீலைகளைத் துவக்கியவன் நாளடைவில் வெளியேயும் பெண் சிநேகிதர்கள் வட்டத்தை விரிவாக்க.. கண்ணீரும் கம்பலையுமாய் தன் தந்தை முன் சென்று நின்றாள் ராசம்மாள்.

தன் மாமன் மகளுக்கா இந்த நிலை என்றி பரிதவித்துப்போன செல்வம் சீறிக்கொண்டு ராசேந்திரனை எதிர்கொள்ள அவன் தன் தந்தையைத் தூண்டிவிட்டு இருபதாண்டுகாலம் வரை உண்மையாய் உழைத்த செல்வத்தையே மன வேதனையுடன் நிறுவனத்தை விட்டே நீக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் நாடார்..

ஆனால் அவர் யாருக்கும் தெரியாமல் பெருந்தொகையொன்றை முதலீடாக அவனுக்குக் கொடுத்து திருநெல்வேலியில் இனிப்பு மற்றும் சிற்றுண்டி கடையை நிறுவ உதவினார்..

உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டிருந்த செல்வம் அடுத்த இரண்டாண்டுகளிலேயே ஒரு கடையை மூன்று கடைகளாக பெருக்கி திருநெல்வேலியின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவராகிப் போனான்..

ராசம்மாளோ ராசேந்திரனுடன் வாழப்பிடிக்காமல் தன் தந்தை வீட்டில் வந்து சேர்ந்தாள்..

‘அய்யா.. ஒங்க பங்காளி வீடு வந்திருச்சிங்க..’

டிரைவரின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மாணிக்க நாடார்.. தோள் மேல் கிடந்த துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி தன் கண்ணெதிரே தெரிந்த பிரம்மாண்டமான மாளிகையை ஏறெடுத்துப் பார்த்தார்..

‘ஹ¥ம்..’ என்ற பெருமூச்சு அவரையும் அறியாமல் வெளிவர தன் பங்காளி ரத்தினவேலுவின் வீட்டுப் படியில் ஏறினார்.

‘அடடா, என்ன சம்மந்தி? ஒரு போன் போட்டிருந்தா நானே வந்திருக்க மாட்டேன்.. மெட்றாசுக்கு போயிருந்தீங்கன்னுல்லே நினைச்சிக்கிட்டிருந்தேன்..’ என்று காவிப்படிந்த பற்கள் தெரிய புன்னகையுடன் தன்னை வரவேற்ற ரத்தினவேலுவின் கண்களில் அவன் செய்திருந்த நம்பிக்கைத் துரோகம் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தார்..

‘என்ன சம்மந்தி அப்படி பாக்கறீங்க?’

‘நீ தான் சொல்லணும் ரத்தினம்.. நீதான் சொல்லணும்.. அதுக்காவத்தான மெட்றாஸ்லருக்கற வேலைய எல்லாம் போட்டத்து போட்டபடியே கெடக்கட்டும்னு போட்டுட்டு வந்துருக்கேன்.’

ரத்தினவேலுவுக்கு சுருக்கென்றது... படுபாவிப்பய. நாம ரகஸ்யமா செஞ்சது இவனுக்கெப்படி தெரிஞ்சது? இல்ல சும்மாட்டியும் நூல் விட்டு பாக்கறானா? இருக்கும்.. இருக்கும்.. ரத்தினவேலுவா கொக்கா.. அவனாவே கேக்கட்டும்.. அதுவரைக்கும் மூச்சு விடப்படாது..


தொடரும்..

22.2.06

சூரியன் 28

அடுத்த இரண்டு நாட்களில் தாமாகவே முன்வந்து தன் ஊழியர்களில் வயதில் மூத்தவர் மூவரை அழைத்து தான் செயல்படுத்த நினைத்திருந்த சலுகைகளை அறிவித்தார்.

தன்னிடம் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு கூடுதலாக பணியாற்றிய நிரந்தர ஊழியர்களுக்கு தினம் பன்னிரண்டு மணி நேர வேலை, அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஓவர்டைம், வருடத்திற்கு இரண்டு செட் சீருடை, செருப்பு, டவல் மற்றும் மாதம் இரண்டு சோப்பு, வருடத்திற்கு ஒரு வார சம்பளத்துடனான விடுமுறை என அவர் அறிவித்தபோது ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஊழியர்களைத் தூண்டிவிட்டவர்கள் அவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கண்டு அசந்துபோனார்கள். ஆனாலும் அவர்களுடைய அடுத்த அஸ்தரத்தை வீச தயாரானார்கள்.

மாணிக்கம் நாடாருடைய உணவகங்கள் பிரபலமடைய முக்கிய காரணம் அவருடைய சுவை மிகுந்த உணவு பண்டங்கள்தான் என்பது மதுரையிலிருந்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு காரணகர்த்தா அவருடைய சமையலறை நாயகராயிருந்த ரத்தினவேல் என்பது அவருடைய பழைய சகாக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவரை மாணிக்கத்திடமிருந்து பிரித்துவிட்டால் போதும், அவருடைய உணவகங்கள் படுத்துவிடும் என்பது அவர்களுடைய எண்ணம்.

அதையும் தன் சாதுரியத்தால் முன்கூட்டியே அறிந்த மாணிக்கம் நாடார் அடுத்த நாளே ரத்தினவேலை அழைத்து அவருக்கு தன்னுடைய உணவகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் நான்கில் ஒரு பங்கை அளிப்பதாக வாக்களித்தார்.

ரத்தினவேல் சொல்வதறியாது திகைத்து நின்றபோது அவரை தரவாய் அணைத்துக்கொண்ட மாணிக்கம், ‘டேய் ரத்தினம், நீ எத்தனை நாளைக்குத்தான் எங்கிட்ட வேலைக்காரனா கைகட்டி நிக்கப்போற? இன்னையிலருந்து கிடைக்கற லாபத்துல கால் பங்க உன்னோட கணக்குல சேர்த்துறப் போறன். ரெண்டு வருஷம்.. அதுக்கப்புறம் நீயும் நானும் மூனுக்கு ஒன்னுங்கற விகிதத்துல நம்ம பிசினஸ்ல பார்ட்னர்ஸ், அதாண்டா பங்காளிங்க. என்ன சொல்றே?’ என்றார்.

ரத்தினவேலுக்கு கரும்பு தின்ன கூலியா என்று தோன்ற உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

பிறருடைய துர்போதனையால் ரத்தினவேலுவின் மனம் மாறிவிடக்கூடும் என்று அஞ்சிய மாணிக்க நாடார் அடுத்த சில வாரங்களிலேயே மாணிக்கம் & ரத்தினவேல் என்ற கூட்டு ஃபர்மை ஸ்தாபித்து மதுரையில் அவருக்குத் தெரிந்த வக்கீல் ஒருவரைப் பிடித்து ஒரு ஒப்பந்தத்தையும் தயாரித்து நல்ல நாள் பார்த்து அதில் ரத்தினவேலுவைக்  கையொப்பமிட வைத்தார்.

அவ்விருவரை மட்டும் கொண்டு துவங்கப்பட்ட அந்த ஸ்தாபனம் இன்று வளர்ந்து ஒரு ஆலமரத்தைப் போல் படர்ந்து விரிந்து உலகெங்கும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் ஃபிராஞ்சைசி என்ற அமைப்புகளுடன்...

இதை வளர்க்க அவர் எத்தனை பாடுபட்டிருப்பார்? ராப்பகலாக, ஊண் உறக்கமின்றி, பலரிடம் பல்லிளித்து, சிலரை மிரட்டி, பலரிடம் குணிந்து, சிலரை காலில் போட்டு மிதித்து, பலரிடம் ‘கொடுத்து’, சிலரிடம் ‘பெற்று’.. அவர் செய்யாத தில்லுமுல்லுகளும் இல்லை நற்செயல்களும் இல்லை..

நாலு பேருக்கு வயிறார சோறு போடற தொழில்டா இது.. ஒன்னு ரெண்டு தப்புத்தண்டா பண்ணா தப்பேயில்லை.. என்பார்..

கொடுக்கறவனுக்கு கொடுத்து, ஏமாந்தவன்கிட்டருந்து சுருட்டுனாத்தான் வியாபாரத்துல முன்னுக்கு வரமுடியும் என்பது அவராக ஏற்படுத்திக்கொண்ட நியதி இல்லை.. வழிவழியாக வர்த்தகம் செய்யும் எவரும் கடைப்பிடித்து வந்ததுதான்..

செய்யும் தொழிலே தெய்வம்.. என்பதை மட்டும் மறக்காமலிருந்த நாடார் அதை வளர்க்க என்ன செய்யவும், எத்தனை கீழே இறங்கிவரவும் தயாராயிருந்தார்.

மதுரையில் மட்டும் பெற்ற வெற்றி அவரை திருப்தியடைய செய்யவில்லை..

ரத்தினவேலுவுடன் கூட்டு வர்த்தகம் என்று ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளிலேயே அவருடைய உணவகம்  திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, சேலம் என்று விரிவடைய சென்னையில் கால் பதிக்க நேரம் பார்த்து காத்திருந்தார் மாணிக்க நாடார்.

அவர் கிளைகள் துவங்கிய ஒவ்வொரு நகருக்கும் தேவையான பணியாட்களை தன்னுடைய நாடார் சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுப்பதில் குறியாயிருந்தார். அயாரா உழைப்புக்கும், பணிவுக்கும், நண்றியுணர்வுக்கும் புகழ்பெற்ற அச்சமூகத்தைச் சார்ந்த பணியாட்கள் அவருக்கு விசுவாசத்துடன் பணிபுரிய அவரும் அவர்களுடைய தேவைகளை நன்றியுடன் பூர்த்திச் செய்ய தவறியதில்லை..

தன்னிடம் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் பி.எஃப், காப்பீடு என்பதுடன் நின்றுவிடாமல் நாளடைவில் ஊக்கத்தொகை என்ற பெயரில் தன்னுடைய நிறுவனத்தின் லாபத்தில் பங்கு என்ற சலுகையையும் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும்..

அத்துடன் மதுரையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கிளைகளுக்கும் பொதுவான சமையலறை என்ற அமைப்பை ஏற்படுத்தி நகரில் இருந்த தன்னுடைய  எல்லா கிளைகளிலும் ஒரே அளவான தரத்தில் உணவுப் பண்டங்கள் கிடைக்கும் ஏற்பாட்டை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் அவரே..

சிறு நகரங்களில் அவர் அடைந்த வெற்றியை சென்னையிலும் ஒரே நேரத்தில் ஐந்து கிளைகளை சென்னையில் வெவ்வேறு முக்கிய இடங்களில் திறந்து பரபரப்பை ஏற்படுத்தி அதே தொழிலில் இருந்த அவருடைய போட்டியாளர்களைக் கலங்கடித்தவரும் நாடார்தான்.

தமிழ் நாட்டில் தான் செய்த புரட்சியில் திருப்தியடையாத நாடார் திருவனந்தபுரம், கொச்சி, நெல்லூர், ஹைதராபாத், பெங்களூர், மைசூர், ஏன் மும்பையில் செம்பூர், மாத்துங்கா, தாதர், போன்ற தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் அண்டை மாநிலங்களிலும் படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய சரித்திரம் இன்றுவரை வேறெவராலும் சாதிக்கமுடியாத சாதனை என்றாலும் மிகையாகாது.

மாணிக்கம் & ரத்தினவேல் என்ற கூட்டு ஸ்தாபனத்தை ஒரு பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக மாற்றினால்தான் பலரிடமிருந்தும் முதலீட்டைப் பெறமுடியும் என்பதை உணர்ந்த மாணிக்கம் சென்னையில் அப்போதுதான் தன்னுடைய வழக்கறிஞர்  தொழிலைத் துவங்கியிருந்த மோகன் என்ற முப்பது வயதே நிரம்பியிருந்த வழக்கறிஞருடைய உதவியை நாடினார்.

அவருடைய பரிந்துரைப்படி நிறுவனத்திற்குத் தேவையான வரைமுறைகளைக் கொண்ட ஆதாரங்களைத் தயாரித்து பதிவு செய்ததுடன் நிறுவனத்தின் பெயரையும் ‘நியூ இந்தியா பவன்’ என்று உலகெங்கும் உள்ள இந்திய மக்களைக் கவரும் வகையில் மாற்றியமைத்தார்.

அன்று முதல் இன்றுவரை அவருடைய சட்ட ஆலோசகராக இருந்து வரும் மோகனுடைய ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவந்த ஒரு தனியார் வங்கியின் பங்குகளை சந்தையில் வாங்கினார் நாடார். அத்துடன் அவ்வருட இறுதியில் நடந்த வங்கி பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்கு கொண்டு அவரை பேசவைத்து மற்ற பங்குதாரர்கள் மத்தியில் அவருடைய பெயரை பிரபலமடைய வைத்ததும் மோகனின் ஆலோசனைதான்.

அதற்கடுத்த ஆண்டிலேயே மோகனுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் வங்கியின் இயக்குனராகவிருந்து ஏழாண்டு கால நியதிக்குப் பிறகு ஓய்வுப் பெற்றபோது அவர் பெயரிலிருந்த பங்குகளில் ஒரு கணிசமான பகுதியை மாணிக்கம் நாடாருக்கு விற்க வைத்து அடுத்த பங்குதாரர்கள் கூட்டத்தில் நாடாரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்க வைத்ததும் மோகன்தான்.


தொடரும்..



21.2.06

சூரியன் 27

சிலுவை மாணிக்கம் நாடாரின் சொகுசுக் கார் மதுரை எல்லைக்குள்  நுழைந்தபோதுதான் பின் இருக்கையின் குறுக்கே படுத்து உறங்கிக்கொண்டிருந்த நாடார் கண் விழித்து, ‘என்னடா மந்திரச் சாமி, ஊர் வந்துருச்சா?’ என்றார்.

முதலாளி கோபத்துலருக்கறப்பத்தான் நம்ம பேருக்கிடையில  ‘ச்’ சேர்த்து மந்திரச்சாமிம்பார். இப்ப என்ன கோவமோ தெரியலையே என்று நினைத்தான் மந்திர சாமி. ‘ஆமாங்கய்யா.. வர்ற வழியில மேலூர்ல ஒரு வேனும் காரும் மோதி ஆக்சிடெண்ட்டாயிருச்சி போலருக்குய்யா. அதான் டிராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியாயிருச்சி.’ என்றான் தயக்கத்துடன்.

‘ஆம்மா.. இல்லன்னா அஞ்சு மணி நேரத்துல கொண்டு வந்திருவியளாக்கும். சரி.. சரி.. வீட்டுக்கு போன் போட்டு வென்னி போட்டு வைக்க சொன்னியளா?’ என்று நக்கலுடன் பதிலளித்த முதலாளியை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தான் மந்திரம்.

‘இல்லய்யா.. தோ இப்ப சொல்லிடறேன்.’

‘ஆமா.’ என்றார் சலித்துக்கொண்டார் நாடார். ‘எல்லாத்துக்கும் ஒரு இல்லய்யா சொல்லிரு..’

பதற்றத்தில் அவன் ஸ்டீயரிங்கில் இருந்து ஒரு கையை எடுத்து முதலாளியின் வீட்டு எண்ணை டயல் செய்ய எரிந்து விழுந்தார் நாடார். ‘எலேய் மடச்சாமி.. ஒனக்கு எத்தனை முறைதாம்லே சொல்றது. போய்க்கிட்டிருக்கறப்ப போன் போடாதேன்னு.. ஓரத்துல நிறுத்திட்டு செஞ்சா ஒரு மணி நேரமாயிரப்போவுது? நீ பாட்டுக்கிட்டு போன்ல பேசறேன்னு எதுத்தாப்பல வர்ற லாரியில விடறதுக்கா.. இன்னும் வாழ்க்கையில ச்சாதிக்கறது நிறைய இருக்குலே.. ஒன்ன மாதிரியா..’

மந்திர சாமியின் பதற்றம் அதிகமாக இடது புற சிக்னல் இடாமல்  சாலையோரம் ஒதுங்கினான்.  பின்னால் வேகத்துடன் வந்துக்கொண்டிருந்த சரக்கு வேன் சிரமத்துடன் நாடாருடைய காரில் மோதிவிடாமலிருக்க வண்டியை விலக்கியோட்டி அவனைக் கடக்கும்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு செல்ல.. ‘எலே மந்திரம், ஒனக்கு இன்னைக்கி முளிச்ச நேரம் சரியில்லப் போலருக்கு.. பாத்துலே, வேற ஏதாச்சும் வம்புல மாட்டிக்கறதுக்குள்ள ஒளுங்கா வீடு போய் ச்சேருவோம். போன் போட்டுட்டு கிளம்பு..’ என்றார் மாணிக்கம் நாடார்.

‘நம்ம எங்க தூங்குனோம்.. முளிக்கறதுக்கு. அப்படியேன்னாலும் இவர் முகத்துலதான முளிச்சிருக்கோம்.. இன்னைக்கி உருப்பட்டாப்பலதான்..’ என்று முனகிக்கொண்டே வீட்டுக்கு ஃபோன் செய்துவிட்டு வண்டியைக் கிளப்பி அடுத்த அரைமணியில் ஞானஒளிப்புறத்திலிருந்த நாடார் வீட்டையடைந்தான்..

***

‘என்னங்க இப்பத்தான் வந்தீக, குளிச்சீக.. ஒரு வா காப்பியமட்டும் குடிச்சிட்டு கிளம்பிட்டீக.. வீட்ல பொண்ணு வந்து நின்னு மாசம் ஒன்னாவுது.. அதப்பத்தி ஒன்னும் கேக்கக் காணோம். வீட்டு நெனப்பு இருக்கா இல்லையா?’

எரிச்சலுடன் தன் மனைவையை திரும்பிப் பார்த்தார் நாடார்.

‘ஏண்டி எனக்கென்ன கண்ணு தெரியாமயா இருக்கு? இப்பம் என்ன பண்ணணும்கற?’

‘மாப்ளை வீட்டுக்கு போய்ட்டு வரேன்னுதான கெளம்புனீக.. வந்ததும் நீங்களாவயே சொல்லுவீகன்னு நா ஒருத்தி நின்னுக்கிட்டிருக்கன்.. நீங்க என்னடான்னா சாவக்காசமா என்ன பண்ணணும்கறங்கறீக.. அங்கிட்டு போனியளா இல்லையா?’

நாடார் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு நிமிடம் தன் மனைவியையே பார்த்தார். என்னத்த சொல்றது? போவலேன்னு சொல்லிரலாமா? அந்த பொம்பள பொறுக்கிப் பயல ஒரு வேற சாதி பொண்ணோட பாத்தேன்னு சொல்லி.. இவ பொலம்பல ஆரம்பிச்சிட்டான்னா நமக்கிருக்கற  வெளி வேலல்ல கெட்டுப் போயிரும்? தொலி நிறத்தப் பாத்துல்ல கட்டுனீக.. ச்சினிமா கீரோ மாதிரி இருக்கான்.. கட்டுனா இவனத்தான் கட்டுறேன்னு சொல்றா எம்பொண்ணுன்னு நீதானடி பல்ல இளிச்சிக்கிட்டு சொன்னே.. .. அதான் நாளுக்கு ஒருத்தியோட சுத்தறான். என்ன என்னத்தையே பண்ண சொல்றீக? அனுபவிங்க.. இதே எந்தங்கச்சி பயல கட்டியிருந்தீன்னா ராணி மாதிரி கையில ஏந்தியிருப்பான். கருஞ்சட்டிப் பயன்னீக.. இப்ப அவன பாரு.. ராணி மாதிரி ஒரு பொண்ண கட்டிக்கிட்டு ராசா மாதிரி இருக்கான்..

‘என்ன நா ஒருத்தி இங்க கேட்டுக்கிட்டு நிக்கேன் நீங்க மோட்டு வளைய பாத்துக்கிட்டு நிக்கீக?’

நாடார் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். அவளுக்கு பின்னால் சமையலறை வாசலில் தன்னுடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் ராசம்மா நிற்பதையும் பார்த்தார். பொண்ண கண்ணுக்குத் தெரியறாப்பல கொடுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? அப்பன் சொன்ன பேச்ச கேட்டிருந்தா இந்த பொல்லாப்பு வந்துருக்குமாடி மவளே..

‘எனக்கிருந்த சோலியில இது மறந்தே போச்சிடி.. நம்ம பேங்குல புது ச்சேர்மன் வராகயில்ல? அந்த சோலியில மாப்ள வீட்டுக்கு போணும்கறத மறந்தே போய்ட்டேன். நீ ஒன்னும் கவலப்படாத ராசம்மா.. நான் இன்னைக்கி ராத்திரியே பொறப்பட்டு போலாம்னுதான வந்திருக்கேன். நேத்து ராத்திரிதான் இங்கன ஒரு சோலின்னு ஃபோன் வந்துதேன்னு அங்கனருக்கற வேலைய அப்படியே போட்டத போட்டபடி போட்டுட்டு ப்ளசர எடுத்துக்கிட்டு வந்துட்டேன். அதுக்காகத்தான் இப்ப போறேன்.. வந்து பேசிக்கலாம்.. ஏய் ராசாத்தி, நீ வேற அவள போட்டு கொடஞ்செடுக்காம உன் சோலி களுதைய பாரு.. பேரப்பய தூங்கறானாக்கும்.. தூங்கட்டும்.. தூங்கட்டும். ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்து.. கொஞ்சம் தலைய சாச்சாத்தான் ராத்திரி மறுபடியும் போமுடியும் போலருக்கு. அந்த பாளாப்போன ப்ளசரு சீட்டுல படுத்தா எளவு தூக்கமா வருது? கார் புதுசாருந்து என்ன பண்றது? ரோடையா போட்றுக்கானுவ.. கல்ல போட்டு ரோட்ட போட்டா ரோடு ரோடா இருக்கும்.. வெறும் களிமண்ண மிதிச்சில்ல போடறானுக.. லட்சம் லட்சமா டாக்சு கட்றவனும் அதுலதான் போறோம்.. டாக்சே கட்டாத களவாணிப் பயலுவளும் அதுலதான் போறானுக..’

மூச்சு விடாமல் அவர் பேசிக்கொண்டே போனதிலும் ஒரு டெக்னிக் இருக்கிறது.. அது அவருடைய மனைவி ராசாத்தியின் புலம்பலிலிருந்து தப்பிக்க அவர் அடிக்கடி உபயோகிக்கும் உக்தி அது..

அவர் பேசி முடித்துவிட்டு வாசலை நோக்கி நடக்க.. ‘மதிய சாப்பாட்டுக்கு வருவியளா?’ என்ற அவருடைய மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.

ஆமா இவ வைக்கிற மூத்திரம் மாதிரி கொளம்ப திங்கறதுக்குத்தான் மெட்றாஸ்லருந்து ப்ளசர போட்டுக்கிட்டு வந்தமாக்கும்.. ‘இல்லம்மா, போற எடத்துல கிடைக்கறத தின்னுக்க வேண்டியதுதான்.. நீ புள்ளைக்கு வேணுங்கறத பொங்கிப் போடு..’ என்றவாறு இனியும் தாமதிப்பது ஆபத்து என்ற நினைப்புடன் வாசலில் நின்ற தன் வாகனத்தை நோக்கி விரைந்தார் நாடார்.

அவர் மதுரையிலிருக்கும்போது உபயோகப்படுத்தும் அம்பாசடர் காரின் டிரைவர் அமிர்தராஜ் அவருக்கு கதவை பணிவுடன் திறந்துக் கொண்டு நின்றான்.

‘என்ன அமிர்தம் எங்க போவணும்னு தெரியுமா?’ என்றவரைப் பார்த்து, ‘தெரியலீங்கய்யா. சொன்னா போயிரலாம்.’ என்றான்.

நாடார் கேலியுடன் அவனைப் பார்த்தார். ‘நல்லா பேச கத்துக்கிட்டீங்கலே.. சரி சரி. வண்டிய எடு.. அப்படியே காரியாப்பட்டி ரூட்ல ஓட்டு.. நம்ம பங்காளி ரத்தினவேல் வீட்டுக்கு ஒரு நட போய்ட்டு வந்துருவோம்.’

அமிர்தராஜ் அவர் வாகனத்தின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் ஓடிப்போய் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை முடுக்கினான்..

கார் மதுரை எல்லையைத் தாண்டியதும் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தவரின் கண்களினுள்ளே தெரிந்தது சென்னை வீதியில் வேறொரு பெண்ணுடன் கைக்கோர்த்துக்கொண்டு சென்ற அவருடைய மாப்பிள்ளையின் முகம்.

அவர் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் மதுரை மேலமாசி வீதியில்  சிறியதாய் ஒரு காப்பி மற்றும் டிபன் க்ளப் திறந்திருந்த நேரத்தில் அவருடைய கடையில் சமையற்காரனாய் வந்து சேர்ந்தவர் ரத்தினவேல். அவருடைய மாப்பிள்ளை ராசேந்திரனின் தந்தை. அவருடைய சம்மந்தி.

அவருடைய கைமணமும் மாணிக்கத்தின் நல்ல நேரமும் அடுத்த ஒரே வருடத்தில் காபி க்ளப் சிற்றுண்டி கடையாக பிரபலமடைந்தது. அடுத்திருந்த காப்பி கடைகள் இரவு பதினோரு மணிக்கு மூடிவிட மாணிக்கத்தின் கடை மட்டும் விடிய விடிய திறந்திருந்ததால் பூ மற்றும் பால் வியாபாரிகளும் அன்றாடம் மதுரையில் வந்து போகும் லாரி டிரைவர்களும் விடியற்காலையில் வந்து தாகசாந்தியை தீர்த்துக் கொள்ளும் புகலிடமாக மாறியது..

மாணிக்கத்திற்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கு நேரெதிரில் பலதரப்பட்ட கடைகளை நடத்திக் கொண்டிருந்தவர்களை அன்றைய ஆளுங்கட்சியின் மதுரை வட்ட செயலாளரின் அடியாட்கள் துணையுடன் பலவந்தமாக காலி செய்ய வைத்து அடிமாட்டு விலையில் கிரயம் செய்து அமைச்சர் ஒருவரின் கையால் மாணிக்கவேல் (மாணிக்கம் + ரத்தினவேல்)  லஞ்ச் ஹோம் என்ற பெயரில்  ஒரு முழுஅளவு உணவகத்தை திறக்க வைத்தது அவருடைய இந்த இது போறும் என்ற திருப்தியடையாத மனநிலைதான்.

அடுத்த இரண்டு வருடங்களில் மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்திற்கு நேரெதிரில், அரசரடி, ரயிலடி சமீபம் என்று திசைக்கு ஒரு கிளையாக திறந்து மதுரை நகரையே வளைத்துப் போட்டும் திருப்தியடையவில்லை மாணிக்கம். மாணிக்கம், மாணிக்க நாடாராக மற்றவர்களால் பெயர் சூட்டப்பட்டது இந்த காலக்கட்டத்தில்தான்.

மதுரை ரயிலடி கிளை திறக்கப்பட்ட சமயம். அவருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய பழைய காலத்து சகாக்கள் அவருடைய ஊழியர்களை சங்கம் அமைக்க தூண்டுவதை தன்னுடைய அடியாட்கள் வழியாகக் கேள்வியுற்ற நாடார் அவர்களுடைய கோரிக்கைகள் என்னென்னவென்பதை அதே அடியாட்கள் வழியாக கேட்டறிந்தார்.

அவர்கள் கோருவதாய் நினைத்திருந்த கோரிக்கைகளில் முக்கியமானவற்றை பட்டியலிட்டு அதைச் செயல்படுத்த தனக்காகும் செலவு என்ன என்று தனியாய் அமர்ந்து கணக்கிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில் தாமாகவே முன்வந்து தன் ஊழியர்களில் வயதில் மூத்தவர் மூவரை அழைத்து தான் செயல்படுத்த நினைத்திருந்த சலுகைகளை அறிவித்தார்.

தொடரும்..







17.2.06

சூரியன் 26

பிலிப் சுந்தரம் வார நாட்களில் காலையில் எழுந்தவுடன் ஒரு பாட்டில் நிறைய மினரல் வாட்டரைக் குடித்துவிட்டு தன் குடியிருப்புக்கு அருகிலிருந்த க்ளப்பில் இருந்த உள்ளரங்கிற்குச் சென்று பேட்மிண்டன் விளையாடிவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார்.

ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் அதற்கும் விடுமுறை..

ஞாயிறு காலையில் தேவாலயத்துக்கு செல்வதுதான் அவருக்கிருந்த முக்கியமான வேலை..

அதுவும் கடந்த மூன்று மாதங்களாக அவர் இணைந்திருந்த தேவாலயத்தின் நிர்வாக குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு முடிந்தவுடன் வீடு திரும்பவும் முடியவில்லை.

அன்று ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் வருடாந்தர கூட்டம் நடைபெற இருந்ததால் படுக்கையிலிருந்து எழுந்தவுடனே அக்கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் அவர் அன்று ஆற்றவிருந்த, நேற்று நள்ளிரவு வரை விழித்திருந்து தயாரித்து தன்னுடைய லாப்டாப் கணினியில் சேமித்து வைத்திருந்த,  உரையின் வடிவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்து வாசித்துப் பார்த்தார்.

உரையின் கோப்பில் தனக்கு திருப்தியில்லாத பகுதிகளை மாற்றியமைத்துவிட்டு ஒரு இறுதிப் பிரதியின் நகலை (Print) எடுத்தார். மீண்டும் ஒரு முறை துவக்கத்திலிருந்து இறுதிவரை வாசித்துப் பார்த்தார். ‘குட்..’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார். மடித்து தேவாலயத்துக்கு அன்று அணிவதாய் தீர்மானித்திருந்த சஃபாரி சர்ட் பாக்கெட்டில் வைத்தார்.

அவருடைய மனைவி ராஜம்மாவுக்கு பிடித்த கலர் என்பதாலேயே ஞாயிற்றுக் கிழமைகளில் அணிவதற்கென அவர் வைத்திருந்த  எல்லா சஃபாரி சூட்டும் டார்க் மெரூன் நிறத்தில்தான் இருந்தன. அதை அணிந்துக்கொண்டு அவருடைய குடியிருப்பிலிருந்து வெளியேறி லிஃப்டில் ஏறும்போதே, ‘என்ன சார் சர்ச்சுக்கு கிளம்பிட்டீங்களா?’ என்பான் லிஃப்ட் ப்பரேட்டர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கேட்கப்படும் இந்த கேள்விக்கு எப்போதும் போல் அன்றும் ஆமாம் என்பதுபோல் புன்னகைத்தார் பிலிப்.

ராஜம்மாள் மரித்தபோது அவருக்கு வயது 53. கணவன் மனைவி என்ற உறவுக்கப்பால் ஒரு நல்ல நண்பர்களாகவே அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது.

அதனால்தானோ என்னவோ அவர்களுக்கு பிள்ளை பாக்கியத்தை கொடுக்காமலே ஏமாற்றிவிட்டார் இறைவன்.

ஆனால் அதற்காக அவரோ, அவருடைய மனைவியோ ஒருநாளும் இறைவனை நிந்தித்ததில்லை. அதுவே இறைவனுடைய சித்தமாயிருந்தால் அதற்கு பணிவதே நல்லது என்று இருவரும் ஒரு மனதாய் தீர்மானித்து தங்களுக்குத் தெரிந்த குழந்தை காப்பக மையங்களில் தங்களுக்கு ஒரு குழந்தையைத் தேட துவங்கினார்கள். பல மாதங்கள் அலைந்தும் அவர்களுக்குப் பிடித்த குழந்தை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த நேரம்..

அவருடைய வங்கியின் சென்னைக் கிளைகளில் ஒன்றில் அவர் மேலாளராய் இருந்த சமயம் அது.

அவருடைய கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் தன் மனைவி, மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊர் சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் விபத்தைச் சந்திக்க  கணவன் மனைவி இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே மரித்தனர்.  அனாதையாய் விடப்பட்ட பெண் குழந்தையை அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அக்குழந்தையை மட்டுமல்லாமல் குழந்தையுடன் அனாதையாய் கவனிக்க ஆளில்லாது தனித்து விடப்பட்ட அதன் எழுபது வயது பாட்டியையும் தத்தெடுத்துக்கொண்டனர் பிலிப் சுந்தரம், ராஜம்மாள் தம்பதியர்!

பாட்டியும், குழந்தையும் கூட கிறீஸ்துவ குடும்பத்தைச் சார்ந்தவர்களானது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போனது. ஆனால் கிறீஸ்துவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க இந்தியாவில் அமுலில் இருந்த சட்டத்தில் இடமில்லை. இந்திய கிறிஸ்துவ தத்தெடுப்பு நியதியின்படி குழந்தைக்கு காப்பளாராக (Guardian) மட்டுமே அவரால் இருக்க முடிந்தது. இந்து பெற்றோர்களுக்கு அத்தகைய உரிமை அளிக்கப்படும்போது கிறீஸ்துவர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பது அந்த நியதியை வகுத்தவர்களுக்கே வெளிச்சம்!

ஒரு தத்துக் குழந்தைக்குரிய எந்த உரிமைகளையும் அக்குழந்தைக்கு அவர்களால் அளிக்க முடியாமற் போனாலும் பிலிப்பும் ராஜம்மாளும் அதன் சொந்த பெற்றோர்களைப் போலவே நடந்துக் கொண்டனர். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருந்த எஸ்தர் என்ற பெயரையே கூறி அழைத்தனர்.

சட்டத்தின் நிர்பந்தம் காரணமாக எஸ்தர் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய நேரம் வந்தபோது தான் அவளுடைய காப்பாளர் மட்டுமே என்று அறிவிக்க வேண்டி வந்தது..

மூன்று வயதே நிறைந்திருந்த எஸ்தருக்கு அதன் பொருள் விளங்காவிடினும் அவள் சேர்க்கப்பட்ட பள்ளித் தலைவரின் பொறுப்பற்ற நடத்தையால் அவ்விஷயம் வெகு சீக்கிரமே அவள் படித்த வகுப்பிலிருந்த எல்லா குழந்தைகளுக்கும் தெரிந்துப் போனது..

‘ஏய் இது உங்கப்பா இல்லையா? நீ கடவுளோட கொளந்தையாமே? எங்கம்மா சொன்னாங்க. நீ கடவுள பாத்திருக்கியா..?’ என்று மழலையில் அவள் கேட்கப்பட்டபோது ஒன்றும் விளங்காமல் வீட்டையடைந்ததும், ‘அம்மா நான் கடவுளோட குழந்தையாம்மா? அப்ப நீங்க என் அம்மா இல்லையா?’ என்று எஸ்தர் கேட்டபோது, ‘என்னங்க இது விபரீதம்?’ என்று பிலிப்பைப் பார்த்தாள் ராஜம்மாள்.

அவர் மேலாளர் பதவியில் ஊர் ஊராக மாறி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் எஸ்தரை ஒவ்வொரு பள்ளியிலும் சேர்க்கும்போதும் ‘நான் இவளுடைய தந்தையில்லை. வெறும் காப்பாளர்தான்’ என்பதை மீண்டும், மீண்டும் கூறவேண்டிய தன்னுடயை துர்பாக்கியத்தை எண்ணி பிலிப் வேதனையடையாத நாளே இல்லை..

அப்போதெல்லாம் ‘நம்ம கையில என்னங்க இருக்கு.. கர்த்தர் பார்த்துக்குவார்.. நீங்க விசனப்பட்டு நிக்கறது பார்த்துட்டு எஸ்தரும் கலங்கிப் போறாங்க..’ என்பாள் ராஜம்மாள்.

எஸ்தருடைய பாட்டியும் அவர்களைப் போன்ற குணநலன்களைக் கொண்டிருந்ததால் அவரை தங்களுடைய சொந்த தாயாகவே கருதி நடத்தினார் பிலிப். ஆயினும் தன்னுடைய ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த வேதனையை மறக்க முடியாமல் தவித்த அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே மரணமடைய எஸ்தருக்கு பிலிப், ராஜம்மாள் மட்டுமே உறவு என்றாகியது.

ராஜம்மாளுக்கு சிறுவயது முதலே ஆஸ்துமா இருந்தது என்று தெரிந்துதான் அவளை மனமுவந்து திருமணம் செய்துக்கொண்டார் பிலிப். ‘ஆஸ்துமா கூடப் பிறந்த சகோதரி மாதிரிங்க.. நா சாகற வரைக்கும் கூடவே வரும்.’ என்று அவளை பெண்பார்க்க சென்ற இடத்தில் அவள் வெளிப்படையாக கூறியது அவரை மிகவும் கவர்ந்தது. ‘உன்ன நான் கல்யாணம் பண்ணதே உன்னுடைய அந்த குணத்துக்காகத்தான் ராஜம்.’ என்பார் பிலிப்.

அவர் வட இந்தியாவில் பணிபுரிய வேண்டி வந்தபோது அப்பகுதிகளில் நிலவிய கடுங்குளிரில் ராஜம்மாளின் ஆஸ்துமாவின் தீவிரம் அதிகரிக்கவே அவளையும் பதினைந்து வயது நிரம்பியிருந்த எஸ்தரையும் சென்னையிலேயே நிரந்தரமாக தங்க வைக்க முடிவு செய்து நடுத்தரக் குடும்பத்தினர் வசித்து வந்த சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருந்த குடியிருப்பு ஒன்றை வாங்கி அவர்களை குடியமர்த்தினார்.

‘அப்பா எப்படியாச்சும் மாசம் ஒரு தடவை வருவேன் எஸ்தர். நான் இல்லாதப்போ நீதான் அம்மாவ பாத்துக்கணும்’ என்றபோதெல்லாம், ‘அத நீங்க வேற சொல்லணுமாப்பா..?’ என்பாள் எஸ்தர்.

தன்னுடைய வேலையில் அவர் காட்டிய நேர்மையும், திறமையும் அவரை படிப்படியாக உயர்த்த அவருடைய 53வது வயதில் அவருடைய வங்கியின் பொது மேலாளர்களில் ஒருவராக பதவி உயர்வுப் பெற்றதும் சென்னையிலிருந்த தலைமையலுவலகத்திலேயே பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

பதவி உயர்வில் கிடைத்த மகிழ்ச்சியை விட இனி பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை தன் மனைவி, மகளுடன் வசிக்கலாமே என்பதில்தான் அதிகம் மகிழ்ந்தார் பிலிப்.

அவருடைய மகிழ்ச்சி கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது. அடுத்த ஆறு மாதத்திலேயே ஆஸ்துமா தீவிரமாகி சென்னையில் மிகவும் பிரபலமடைந்திருந்த மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் மரித்துப்போனார் ராஜம்மாள்.

எஸ்தருக்கு அப்போது 23 வயது. கல்லூரி இறுதியாண்டு. தன் வயதொத்த தோழிகளுக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, சித்தப்பா என்று சுற்றமும், சொந்தமும் இருந்தபோது தனக்கு மட்டும்..

‘அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க .. இப்போ.. வளர்ப்புத்தாய்னு இருந்த இவங்களையும் பறி கொடுதுட்டேன்.. எனக்கு மட்டும் ஏம்பா இப்படி?’ என்று கலங்கி நின்ற கண்களுடன் தோளுக்கிணையாக வளர்ந்து நின்ற எஸ்தரின் குழந்தை முகத்தை தன் மார்பில் அணைத்துக் கொண்டு செய்வதறியாமல் நின்றார் பிலிப்.

இருபத்தேழு காலம் தன் நிழலாய், துணையாய், தோழியாய் இருந்த மனைவியை இழந்ததும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாததுபோல் தோன்றியது அவருக்கு..

வேலையை விட்டு விட்டு வேத போதகத்தில் முழுவீச்சாய் ஈடுபட்டாலென்ன என்றும் நினைத்தார்.

‘No, Mr. Philip, It is simply not fair to your Wife. Not only that, the Organisation needs your expertise. You are a GM now. You have a lot to do. Think about your daughter too. You haven’t married her off yet.’ என்று அவருடைய வங்கித் தலைவர் அளித்த அறிவுரைதான் அவரை இந்த விபரீத முடிவுக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது.

எஸ்தருடைய திருமணம் தாயை இழந்த அவளுடைய வேதனையை குறைக்க உதவும் அருமருந்து என்பதை உணர்ந்து முழு வீச்சாக அவளுக்கு ஒரு தகுந்த துணையை தேட துவங்கினார். எஸ்தருக்கும் தனக்கும் இருந்த உறவை புரிய வைத்து, அவளுடைய அழகுக்கும், படிப்புக்கும் ஏற்ற ஒருவனை தேர்ந்தெடுப்பது  அவர் நினைத்ததை விடவும் மிகவும் கடினமாக இருந்தது..

நல்ல வேளை, அவர் அங்கத்தினராயிருந்த தேவாலயத்திலேயே திருமண மையம் ஒன்று சிறப்புடன் செயலாற்றி வந்ததால் அவர்களிடமிருந்த கோப்புகளிலிருந்த மணமகன்களில் தகுந்ததாய் ஒருவரை மிகுந்த சிரமத்திற்குப்பிறகு தேர்ந்தெடுக்க முடிந்தது..

சென்னையிலேயே அவரும் பணியாற்றி வந்ததால் எஸ்தருக்கும் தன் தந்தையை விட்டு பிரிய வேண்டிய தேவையிருக்காதே என்ற ஒரே காரணத்திற்காக சம்மதிக்க திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார் பிலிப்.

எஸ்தரின் துரதிர்ஷ்டம், திருமணமான மூன்றாம் மாதத்திலேயே மாப்பிள்ளைக்கு சிறப்பானதொரு வேலை அமெரிக்காவில் கிடைத்தது.. ‘என்னப்பா இது? நான் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னுதான் உங்களுக்கு தெரியுமே.. இப்போ திடீர்னு அமெரிக்காவுல வேல கிடைச்சிருக்கு வா போலாம்னா.. நா எப்படி உங்கள விட்டுட்டு போறது? அவர் மட்டும் வேணுன்னா போட்டும். நா உங்களோடதான் இருப்பேன்.’ என்று அடம்பிடித்த மகளை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தார்..

***

‘என்ன சார் என்னமோ யோசனையில இருக்கீங்க போலருக்கு.. பத்தாவது மாடியிலருந்து கீழ வர்றதுக்குள்ளயே ஃப்ளாஷ் பேக்கா சார்..’ என்ற லிஃப்ட் ஆப்பரேட்டரின் குரல் அவருடைய நினைவுகளைக் கலைக்க பிலிப் சுந்தரம் லிஃப்டிலிருந்து வெளியேறி தன் காரை நோக்கி நடந்தார்..

தொடரும்..









16.2.06

சூரியன் 25

சீனிவாசன் காரிலிருந்து இறங்கியதும் தன் செல் ஃபோனிலிருந்த மைதிலியின் செல் எண்ணை டயல் செய்தான்.

மணி அடித்துக்கொண்டே இருந்தது. இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பொறுமையிழந்தான். அடுத்து என்ன செய்வதென புரியாமல் நடைபாதையில் சிறிது நேரம் முன்னும் பின்னும் நடந்தான்.

மைதிலி வேண்டுமென்றே எடுத்து பேசாமல் இருப்பாளோ?

இதுவரை அவர்கள் இருவருக்கும் இடையில் பலமுறை அபிப்பிராய பேதங்கள் எழுந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவன் முறுக்கிக்கொண்டு எத்தனை நாளானாலும் அவளிடம் பேசாமல் இருப்பான்.

ஆனால் மைதிலியால் இரண்டு நாட்கள் தொடர்ந்து அவனுடன் பேசாமல் இருக்கமுடியாது. அவனுடைய தந்தை வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு நேரே புறப்பட்டு அவனுடைய வீட்டுக்கே வந்துவிடுவாள்.

சீனிவாசன் போதைப் பொருட்களின் பிடியிலிருந்து முழுவதுமாய் விடுதலையடைந்து மீண்டும் மனிதனானதில் மைதிலிக்கிருந்த பங்கு என்னவென்று சரோஜாவுக்குத் தெரியும். ஆகவே அவளும் சில வேளைகளில் அவர்களுக்கிடையில் புகுந்து சமரசம் செய்து வைப்பாள்.

அவர்கள் இருவருடைய நட்பும் காதலாய் மலர்ந்து மைதிலியைப் பார்க்காமல், அவளுடன் பேசாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்பதை சீனிவாசன் உணர ஆரம்பித்து அவளிடம் அவனுடைய உள்ளத்திலிருந்ததை கூறியபோது அவள் உடனே பதிலளிக்கவில்லை.

சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, ‘எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா சீனி?’ என்றாள்.

சீனிவாசன் நாம கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் உங்க வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அவளைப் பார்த்தான். ‘Why do you say that?’

அவளிடமிருந்து பதில் வராமல் போகவே, ‘என்னை உனக்கு பிடிச்சிருக்கா மைதிலி. அத முதல சொல்லு.’ என்றான்.

‘பிடிச்சிருக்கு. ஆனா அது மட்டும் போறாதே சீனி.’

அவனுக்கு விளங்கவில்லை. ‘ஏன்? What else is needed?’

‘நான் எங்காத்துல ஒரே பொண்ணுன்னு உனக்கு தெரியுமில்லே?’

‘ஆமா, தெரியும். அதுக்கென்ன இப்போ?’

அப்போது அவள் கூறிய பதிலை இப்போது நினைத்துப் பார்த்தான். ஒருவேளை அதுதான் எடுத்து பேசாமல் இருக்கிறாளோ.. Ok. Why can’t we try once again? என்ற நினைப்புடன் மீண்டும் அவளுடைய செல் நம்பரை தவிர்த்து அவளுடைய வீட்டு எண்ணைச் சுழற்றினான்.

மறுமுனையில் ஒரு ஆண்குரல். அவளுடைய அப்பா பட்டாபி!

இப்ப என்ன பண்றது? டிஸ்கனெக்ட் பண்ணிரலாமா? பேசலாமா? என்ற குழப்பத்தில் ஒரு நொடி தவித்தான். பிறகு சரி, பேசுவோம் என்ற முடிவுடன். ‘நான் சீனி பேசறேன்.’ என்றான் தயக்கத்துடன்.

‘சொல்லு சீனி. நாந்தான் பட்டாபி. அவ வீட்ல இல்லையே. உன்ன பாக்கத்தான் வந்திருப்பான்னு நான் நினைச்சேன். நீ எங்கருந்து பேசறே?’

‘நான் தாதர்லருந்து பேசறேன் அங்கிள்.’

‘ஓ! தாதர்ல என்ன?’

கேள்வியின் பொருள் விளங்காமல், ‘என்ன அங்கிள்?’ என்றான்.

மறுமுனையில் இருந்து ஆயாசத்துடன் வந்தது குரல். ‘இல்ல சீனி, நீ தாதர்ல என்ன பண்றேன்னு கேட்டேன்.’

‘ஓ! அதுவா. அங்கிள்  டாட் இன்னைக்கி சென்னைக்கி போறார். அதனால நாங்க எல்லாரும் பிள்ளையார் கோவிலுக்கு வந்தோம். நேத்தைக்கி எனக்கும் மைதிலிக்கும் இடையில ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. அதான் நான் மைதிலிய பார்த்து பேசிட்டு ரெண்டு நா கழிச்சி வரேன்னு சொல்லிட்டு கார்லருந்து இறங்கி இங்க நிக்கறேன்.’

மறுமுனையில் சிறிது நேரம் ஒரு பதிலும் இல்லாமல் போனது. சீனிவாசன் குழப்பத்துடன் காதில் செல் ஃபோனை வைத்துக்கொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

‘சீனி.. ஆர் யு தேர்?’ என்ற குரல் அவன் காதில் விழுந்ததும் பதறிக்கொண்டு, ‘யெஸ் அங்கிள்.’ என்றான்.

‘நான் உங்கிட்ட ஒன்னு சொன்னா அதும்படி நடப்பியா?’ என்றார் மைதிலியின் தந்தை.

‘சொல்லுங்க அங்கிள்.’

‘Can you just leave Mythili alone for some time. Maybe a month or so?’

கேள்வியின் பொருள் விளங்காமல், ‘என்ன அங்கிள் சொல்றீங்க?’ என்றான் சீனிவாசன். What does it mean? மைதிலிய விட்டுருங்கறாரா? How is it possible? How can I leave her?

மனது கிடந்து அடித்துக்கொள்ள என்ன செய்வதென தெரியாமல் தவிப்புடன், ‘அங்கிள்.. Why do say that?’ என்றான்.

‘Look here சீனி.. மைதிலி எங்களுக்கு ஒரே பொண்ணு.. எங்களுக்குன்னு சொல்லிக்க வேற யாரும் இல்லை.. நீங்க ரெண்டு பேரும் நினைச்சிக்கிட்டிருக்கிறது நடக்கறதுக்கு சான்சே இல்லை.. நீ பேசாம உங்கப்பாவோட புறப்பட்டு சென்னைக்கு போயி ஒரு புது வாழ்க்கைய தொடங்கறதுதான் சரின்னு படுது..’

சீனிவாசனால் அதற்கு மேல் கேட்க முடியவில்லை.. அப்படியே கண்களிரண்டு இருட்டிக்கொண்டு வர நடைபாதையில் சரிந்து விழுந்தான்.

***

பரபரப்பான தாதர் பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த மைதிலி தன்னுடைய செல் ஃபோன் ஒலிப்பதைக் கேட்டு சாலையோரத்தில் நிறுத்தி எடுத்து பார்த்தாள்.

அப்பா!

‘என்னப்பா?’ என்றாள்.

‘நீ எங்க இருக்கே?’

‘தாதர் சர்க்கிள்ல இருக்கேன். ஏன், என்ன விஷயம்?’

‘சீனி தாதர்லருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஆத்துக்கு ஃபோன் பண்ணான் மைதிலி. நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன். திடீர்னு பேசறதி நிறுத்திட்டான். அப்புறம் அக்கம்பக்கத்துலருந்த ஆளுங்க பேசிக்கிட்டது மட்டும்தான் கேட்டுது. அவன் மயங்கி விழுந்துட்டான் நினைக்கிறேன்.’

என்னது? எங்கே? ஐயோ அப்பா.. எது நடக்கக் கூடாதுன்னு இத்தனை நாள் நினைச்சிக்கிட்டிருந்தேனோ அதுக்கு நீங்களே காரணமாயிட்டீங்களே.. நா இப்போ எங்கேன்னு போய் தேடுவேன்..

காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே நேற்று அவனிடம் கோபித்துக்கொண்டு கிளம்பி வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்து, நினைத்து மருகிப்போனாள். அவனை சென்று பார்த்தால்தான் நிம்மதியென்று நினைத்து கிளம்பலாம் என்று நினைத்தபோதுதான் அப்பா பிடித்துக்கொண்டார்.

‘என்ன மைதிலி. இன்னைக்கி ஞாயித்துக்கிழமை.. நான் சொன்னது நினைவிருக்கா இல்லையா?’

மைதிலி ஒன்றும் விளங்காமல் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொன்னீங்க?’

பட்டாபி திரும்பி தன் மனைவி ஜானகியைப் பார்த்தார். ‘பாத்தியாடி இவ சொல்றத?’

ஜானகி, ‘என்னண்ணா நீங்க. அவ வேணும்னா போய்ட்டு வரட்டுமே. அவா சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலத்தான வரா.’ என்றாள்.

மைதிலி வியப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள். ‘என்னம்மா சொல்றே? சாயந்தரம் யார் வரா?’

‘பார்த்தியாடி தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி கேக்கறத?’ என்ற தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்ற? நெசமாவே தெரியலை..’

‘என்ன மைதிலி நீ. உன்ன பொண்ணு பாக்க வரான்னு அப்பா ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னாரே.. நீ கூட சரிங்கறா மாதிரி ஒன்னுமே சொல்லாம கிளம்பி போயிட்டே. சரி நீ சம்மதிச்சிட்டியாங்காட்டியும்னு நாங்க நினைச்சி ஜாதகப் பொருத்தம்லாம் பார்த்துட்டோம். எல்லா பொருத்தமும் அம்சமா இருக்குன்னு ஜோஸ்யர் சொன்னதுக்கப்புறம்தான் அவாள வாங்கோன்னு சொல்லிருக்கோம். நீ என்னடான்னா ஒன்னும் தெரியாத மாதிரி பேசறே?’

மைதிலிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. அன்றும் அப்பா கூறியதற்கு ஒன்றும் கூறாமல் சென்ற தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து எரிச்சலடைந்தாள். ஆனால் அதே சமயம், சரி இப்ப என்ன பொண் பாக்கத்தானே வறா.. வந்துட்டு போட்டும்.. அப்புறம் வேணான்னுட்டா போறது என்றும் நினைத்தாள்..

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து.. நேரே போய் சீனியைப் பார்த்து பேசிவிட்டு திரும்பினாலும் மூன்று மணிக்குள் திரும்பிவிடலாம்.

‘சாரி டாட். நாந்தான் மறந்துட்டேன். மூனு மணிக்குள்ள வந்துருவேன். ப்ராமிஸ்.’ என்றாள் புன்னகையுடன்.

இந்த அளவுக்கு சம்மதித்தாளே என்றிருந்தது ஜானகிக்கு. எங்கே தன் கணவர் அவளை விடமாட்டேன் என்று தடுத்து பிரச்சினை செய்வாரோ என்று நினைத்து, ‘சரி மைதிலி. போய்ட்டு சீக்கிரம் வந்துரு..’

வீட்டை விட்டு வெளியே வந்ததும் சீனியின் செல் எண்ணை டயல் செய்தாள். Not reachable என்று வரவே அவனுடைய வீட்டுக்கு டயல் செய்தாள். யாரோ எடுத்து அவன் குடும்பத்துடன் தாதரிலிருந்த கோவிலுக்கு போயிருப்பதாக சொல்ல.. அவள் உடனே தாதரை நோக்கி வண்டியைச் செலுத்தினாள்.

ஞாயிற்றுக் கிழமை என்றுதான் பெயர். செம்பூரிலிருந்து தாதர் வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

அதற்குள் அவன் அவளை செல்லில் அழைக்க அவள் போக்குவரத்து நெரிசலில் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தை செலுத்துவதிலேயே குறியாயிருந்தாள்.

அதன் விளைவு.. இப்ப சீனியை எங்கேன்னு தேடறது தெரியலையே.. என்று தவியாய் தவித்தாள்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சின்னதாய் ஒரு மனிதக் கூட்டம் தெரிய, வாகனத்தை நடைபாதையில் ஏற்றி நிறுத்திவிட்டு காலிலிருந்த ஹை ஹீல்சை கையில் எடுத்துக் கொண்டு  கூட்டத்தை நோக்கி ஓடினாள், ‘Please god. Let it be Sreeni.’ என்ற பிரார்த்தனையுடன்..

தொடரும்


15.2.06

சூரியன் 24

‘இப்படி எல்லாருமா சேர்ந்து வெளிய வந்து எவ்வளவு நாளாச்சி டாட்.’  என்றாள் வத்ஸலா.

மாதவன் தன் முன் அமர்ந்திருந்த தன் குடும்பத்தாரை பார்த்தார். தாதர் சந்திப்பில் அமைந்திருந்த டம்பரமான அந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாசலில் இருந்த சொகுசு சோபாக்களில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் எந்த மேசை காலியாகும் அமர்ந்துக் கொள்ளலாம் என்று பொறுமையிழந்து காத்திருப்பது தெரிந்தது.

‘ஆமா வத்ஸ்.. நாம சென்னைக்கு போனதும் we should do this often.’

சரோஜா சட்டென்று நிமிர்ந்து மாதவனைப் பார்த்தாள். ‘என்ன சொன்னீங்க?’

மாதவன் உதட்டில் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘நான் தமிழ்லதானே சொன்னேன்.’

சரோஜா பொங்கி வந்த எரிச்சலை அடக்க முயற்சிப்பது வத்ஸலாவுக்குப் புரிந்தது. ‘டாட்.. மம்மி.. Please, Not here.. We will discuss this topic when we return home..’

சீனிவாசன் அவர்கள் பேசுவதில் சிரத்தையில்லாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ப்ளேட்டில் இருந்த இட்லி வடை கேட்பாரற்று கிடந்தது..

‘சீனி.. are you elsewhere?’ என்று வத்ஸலா சீண்டினாள்..

ஆனாலும் சீனிவாசன் அவனுடைய கனவுலகத்தில் இருந்தான் என்பது அவனுடைய கண்களைப் பார்த்தாலே தெரிந்தது..

வத்ஸலா மீண்டும் அவனை சீண்ட முயல.. ‘Hey.. leave him alone..’ என்றாள் சரோஜா.

மாதவன் தன் மகனை திரும்பிப் பார்த்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை தனியாக மும்பையில் விட்டு விட்டு போகக்கூடாது என்று நினைத்தார். சரோஜாதான் தன்னுடைய யோசனைக்கு முட்டுக்கட்டு போடுவாள் என்றும் நினைத்தார்.

வத்ஸலா சொன்னதும் சரிதான். வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம். எப்படியும் மூனு மணி ஃப்ளைட்ல எல்லோரும் போகணும். அங்க செட்டில் ஆகப்போறமா இல்லையாங்கறத அங்க போயி கூட பேசிக்கலாம்.

‘ஒகே.. சீனி, நீ சாப்டு முடிச்சா நாம கிளம்பலாம்.’ என்றார் மாதவன்.

அவன் அப்போதும் சாலையிலேயே மூழ்கியிருந்தான். மாதவன் அவனை லேசாக தோளில் தொட்டார்.

திடுக்கிட்டு திரும்பி அவரைப் பார்த்த சீனிவாசன், ‘என்ன டாட்?’ என்றான் ஒன்றும் புரியாமல்.

மாதவன் புன்னகையுடன், ‘நீ சாப்டு முடிச்சா கிளம்பலாம்னேன்..’

அவன் அசிரத்தையுடன் தன் முன்னே இருந்த ப்ளேட்டைப் பார்த்தான். ‘I don’t feel like eating dad..’

சரோஜா.. ‘அவன கம்பெல் பண்ணாதீங்க.. நீங்க அவன கேக்காம ஆர்டர் பண்ணிட்டு அவன சாப்டு, சாப்டுன்னா அவன் என்ன பண்ணுவான்?’ என்றாள்..

வத்ஸலா தன் பெற்றோர் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். ‘மம்மி.. லெட் அஸ் கோ ஹோம்.. டேய் சீனி.. நீ சாப்டாட்டா பரவாயில்லை.. கிளம்பு போலாம்.’

சீனிவாசன் எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு.. ‘நீங்க போங்க.. நான் மைதிலியை பார்த்துட்டு வரேன்..’

‘ப்ளீஸ் சீனி.. நமக்கு எல்லோருக்குமா சேர்த்துதான் ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணியிருக்கேன். நீ இப்ப போனா டைமுக்கு வரமாட்டே.. அந்த பொண்ண அப்புறம் பார்த்துக்கலாம்.’

சரோஜா எரிச்சலுடன் தன் கணவனைப் பார்த்தாள். ‘என்ன சொன்னீங்க, நம்ம எல்லோருக்கும் ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணியிருக்கீங்களா? எங்க போறதுக்கு? சென்னைக்கா? நாந்தான் நேத்தே...’

அவளை மேலே பேசவிடாமல் சைகைக் காட்டி தடுத்தார் மாதவன். ‘ப்ளீஸ் சரோ.. கார்ல போய்க்கிட்டே பேசலாம்..’

மாதவன் கார் சாவியை வத்ஸலாவிடம் கொடுக்க அவள் கார் நிறுத்திவைத்திருந்த பேஸ்மெண்ட்டுக்குச் சென்று எடுத்துக்கொண்டு வந்து முகப்பில் நிறுத்த சிவகாமி மாமியைத் தவிர எல்லோரும் ஏறிக்கொண்டனர்.

‘நான் பக்கத்துலருக்கற ஆசிரமத்துக்கு போயிட்டு சாயந்திரமா வரேன்.’ என்றாள் சிவகாமி மாமி.

மாதவன், ‘மாமி.. அநேகமா நீங்க வீட்டுக்கு வரும்போது நாங்க நாலு பேரும் கிளம்பிப் போயிருப்போம். ஆறுமுகமும் அவன் பெஞ்சாதியும் வீட்ல இருப்பாங்க. ராத்திரிக்கு மேல சாமான்கள கட்டுறதுக்கு ஒரு கம்பெனியிலருந்து ஆள்ங்க வருவாங்க. நீங்க அந்த சமயத்துல வீட்ல இருக்கணும்.. நான் சென்னைக்கு போய்ட்டு ஃபோன் பண்றேன்.’ என்றார்.

காருக்குள்ளிருந்தவாறே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சரோஜாவின் முகம் கோபத்தால் சிவந்தது. இவராவே முடிவெடுத்துட்டு சொல்றத பாரு.. கார்ல ஏறட்டும் பேசிக்கறேன்.

‘நீ தள்ளிக்க வத்ஸ், நான் ஓட்டறேன்.’ என்ற மாதவனைப் பார்த்தாள் வத்ஸலா.. அப்பா கார்ல ஏறுனதுமே கடிச்சு குதற மம்மி காத்துக்கிட்டிருக்கா.. இந்த நிலமையில அப்பா கார் ஓட்டாம இருக்கறதுதான் நல்லது..

‘இல்ல டாட்.. நிங்க பின்னால மம்மி பக்கத்துல உக்காருங்க. சீனி முன் சீட்ல உக்காரட்டும். நான் ஓட்டறேன்..’

மாதவன் பின்சீட்டிலிருந்த தன் மனைவியைப் பார்த்தார். அவளுடைய சிவந்த முகம் அவருக்கு வத்ஸலா கூறியது சரிதான் என்று உணர்த்தியது. அவள் கார் புறப்பட்டதுமே பிரச்சினையை நிச்சயம் கிளப்புவாள் என்று நினைத்தார்..

சீனிவாசன் பின் சீட்டிலிருந்து இறங்கி முன்பக்க கதவைத் திறந்துக் கொண்டு ஏறிக்கொண்டான். மாதவன் பின் இருக்கையில் அமர கார் சீறிக்கொண்டு புறப்பட்டது.

‘வத்ஸ் ஞாயிற்றுக்கிழமைங்கறதுக்காக ஸ்பீட் லிமிட்டைத் தாண்டாத.. மெதுவாவே போ.. வீ ஹேவ் லாட் ஆஃப் டைம்..’ என்ற மாதவன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார்.

‘இங்க பார் சரோ.. I am going to take you all to Chennai only for a week. அங்க போயி மண்டே சார்ஜ் எடுத்துக்கிட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு பேசி முடிவெடுப்போம். நாம நாலு பேரும் போறதுக்கான டிக்கெட்ஸ் பேங்க்ல கொடுக்கறாங்க.. அதை ஏன் வேஸ்ட் பண்ணனும்? அது மட்டுமில்லாம ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் செட்டிங் அப் தி ஹவுஸ்.. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள வீட்லருக்கற எல்லாத்தையும் பேக்கர்ஸ் வந்து பேக் பண்ணி வச்சிருவான். எனக்கு தேவையான திங்க்ஸ்  மட்டும் இப்போதைக்கு சென்னைக்கு  அனுப்பிருவான். மீதிய அவங்க கொடவுன்லயே வச்சிருப்பான். நீங்க என்ன டிசைட் பண்றீங்களோ அதப் பொறுத்து எங்க அனுப்புனுமோ அனுப்பிருவான். பத்து நாளைக்கு ஃப்ரீயா கொடவுன்ல வச்சிக்கறேன்னு சொல்லிருக்கான். பார்ப்போம்.. சென்னைக்கு எல்லோருமே வந்துட்டீங்கன்னா ஐ வில் பி ஹாப்பி. இல்ல இங்க வீடோ ஃப்ளாட்டோ வாங்கணும்னாலும் வாங்கலாம்.. ஐ வில் லீவ் தி டிசிஷன் டு யூ சரோ..’

மாதவன் முடிக்கும்வரை பேசாமல் இருந்த வத்ஸலா தன் தந்தையை ரியர் வ்யூ மிரரில் பார்த்தாள். ‘எக்ஸலண்ட் ஐடியா டாட்.. என்ன மம்மி?’

சரோஜாவுக்கும் மாதவன் தெரிவித்த யோசனை பிடித்துத்தானிருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே, ‘இத நேத்தைக்கே சொல்லியிருக்க வேண்டியதுதானே. கிளம்புறதுக்கு இன்னும் ரெண்டு மூனி நேரம்தான் இருக்கு.. திடுதிடுப்புன்னு இப்படி சொல்லி கடுப்படிக்கணுமாக்கும்.’ என்றாள் எரிச்சலுடன்..

மாதவன் பதில் பேசாமல் இருந்தார்.

சீனிவாசன் தயக்கத்துடன், ‘டாட்...’ என்றான்.

‘சொல்லு.’

‘என்னோட டிக்கட்ட மட்டும் ரெண்டு நாளைக்கு தள்ளி போட்டுக்கறேனே..’

‘ஏன்?’

‘மைதிலிக்கும் எனக்கும் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. இன்னைக்கி அவள மீட் பண்ணிட்டு..’

மாதவன் திரும்பி சரோஜாவைப் பார்த்தார்.

அவள் எரிச்சலுடன், ‘எதுக்கு என்ன பாக்கறீங்க? நீங்களாச்சு உங்க மகனாச்சு.’ என்றாள்.

சிறிது நேரம் மவுனமாயிருந்த மாதவன், ‘ஒகே சீனி.. if you want you can either bring her along to Chennai or stay back for two more days.’ என்றார்.

அவருடைய இந்த பதிலை எதிர்பார்க்காத மூவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்..

சீனிவாசன் அதிர்ச்சி மாறாமல்.. ‘டாட் என்ன சொன்னீங்க? You mean I could bring Mythili to Chennai?’

‘ஆமா.. If that is what you want.’

சீனிவாசன் திரும்பி சாலையிலேயே குறியாயிருந்த வத்ஸலாவைப் பார்த்தான். ‘நீ என்ன சொல்றே வத்ஸ்..?’

அவள் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டாள் ‘எனக்கொன்னும் தெரியாது. You decide.’

சிறிது நேரம் காரிலிருந்த யாரும் பேசாமல் அவரவர் சிந்தனையில் மூழ்கிப் போயினர்..

‘டாட்..’ என்றான் சீனிவாசன் தயக்கத்துடன்..

‘எதுக்குடா எல்லாத்துக்கும் தயங்கறே? என்ன சொல்ல வர்றியோ தைரியமா சொல்லேன்.’ என்றாள் சரோஜா..

‘ஒன்னுமில்ல மம்மி.. நாந்தான் இன்னைக்கி வரலையே.. நா இங்க இறங்கி மைதிலிய பார்த்துட்டு வரேனே..’

சரோஜா மாதவனைப் பார்த்தாள். அவர் ‘சரி.. இறங்கிக்கோ.. வத்ஸ் அவன இறக்கி விட்டுரு.. Let him come later.’ என்றார்.

அவன் இறங்கிக்கொள்ள வாகனம் வேகமெடுத்து அடுத்த அரை மணியில் அவர்கள் வீட்டை அடைந்தது..

தொடரும்..







14.2.06

சூரியன் 24

வத்ஸ்லாவுக்கு நாள் எந்த நாளாக இருந்தாலும் எட்டு மணிக்குதான் அவளுக்கு பொழுதே விடியும்..

ஆனால் எழுந்துவிட்டால் பரபரப்பாகிவிடுவாள். அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து முடித்து ஒரு அழுக்குப் பிடித்த ஜீன்ஸ் (ஏண்டிம்மா, அத தொவைக்க தாடீன்னு எத்தன தரம் கேட்டுட்டேன்? அதுல அப்படி என்னத்தத்தான் கண்டியோ? பொண்ணா, லட்சணமா எல்லாரும் போட்டுக்கறாளே சூடிதார் அத போட்டுக்கறதுதானடிம்மா? என்று புலம்பும் சிவகாமி மாமியைக் கண்டுக்கொள்ளவேமாட்டாள்.) தினந்தோறும் மாற்றும் டாப்சுடன் (கையில்லாதது) இறங்கி வந்துவிடுவாள்..

காலை உணவு இரண்டு ஜாம் தடவிய வரட்டு ரொட்டித் துண்டு.. ஒரு பால் கலக்காத கட்டம் காப்பி (பசும்பால் முஞ்சிக்கு கலர் கொடுக்கும்டிம்மா. நோக்குத் தெரியாது. தோலெல்லாம் கூட சில்க் மாதிரி பளபளன்னு இருக்கும். திக்கா டிகாக்ஷன் எறக்கி வச்சிருக்கேன்.. ஆடை படிஞ்சிருக்குன்னு சொல்வியேன்னு வடிகட்டி வச்சிருக்கேன்.. என்று சிவகாமி மாமி கெஞ்சுவாள்.. பாலெல்லாம் குழந்தைகளுக்குத்தான் மாமி.. எனக்கெதுக்கு என்பாள் பதிலுக்கு..). நின்றுக்கொண்டே சாப்பிட்டுவிட்டு தன்னுடைய மாருதி எஸ்டீமை நோக்கி ஓடுவாள் ஏதோ தலைபோகும் வேலை இருப்பதுபோல..

அப்படி என்னதாண்டி செய்றே என்று சரோஜா கேட்கும்போதெல்லாம் அதெல்லாம் உனக்கெதுக்கு மம்மி.. நீ போய் உன் லேடீஸ் க்ளப்ல நீ என்ன பண்றேன்னு நான் கேட்டேனா? ஆனா நீ செய்யறத விட உருப்படியாத்தான் நான் செய்யறேன்.. என்பாள்..

ஆமா, அந்த தாராவில போயி சோஷியல் சர்வீஸ்ங்கற பேர்ல என்ன கர்மத்த செய்றியோ.. நீ என்ன தலைகீழா நின்னாலும் அதுங்க உருப்படப் போறதே இல்லை என்பாள் சரோஜா.

இந்த அம்மா-பெண் ஆல்டர்கேஷனை (altercation) மாதவன் பலமுறைக் கேட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறைக் கூட அவர் தலையிட்டதேயில்லை. 'முப்பது வயசாகுது. கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கற உத்தேசம் ஏதாவது இருக்கா வத்ஸ¤' என்று இரண்டு மூன்று முறைக் கேட்டிருக்கிறார்..

'ஏம்பா நா நிம்மதியா இருக்கறது பிடிக்கலையா? ஆம்பிளைங்க என்னைக்கு மேல் ஷாவனிஸத்த விடறீங்களோ அன்னைக்கித்தான் கல்யாணம்.. நா இங்கருக்கறது உங்களுக்கு ஏதாவது கஷ்டமாயிருந்தா சொல்லிருங்க டாட். I know how to take care of myself' என்பாள்.. மாதவன் வாயை மூடிக்கொள்வார். அவளை வீட்டிலிருந்து வெளியேற்றினால் ஒருவேளை அவள் தாராவிக்குப் பக்கத்திலேயே குடியேறிவிட்டால் என்னாவது என்பது அவருடைய கவலை!

மாதவன் அவளுடைய அறைக்கதவைத் தட்டி, தட்டி கை வலித்ததுதான் மிச்சம்.. கதவு திறக்கப்படவே இல்லை..

சரி, சீனியைப் பார்ப்போம் என்ற சிந்தனையுடன் அடுத்த அறைக்கதவைத் தட்டினார்.

சீனிவாசன் வத்ஸலா எழுந்து புறப்பட்டுச் செல்லும்வரை கீழிறங்கி வரமாட்டான். எத்தனை மணிக்கு எழுந்தாலும் இந்த விஷயத்தில்மட்டும் குறியாயிருப்பான்.

அவன் எழுவதற்கு நேரம் காலம் என்றெல்லாம் இருந்ததில்லை.. உறக்கம் கலைந்த அந்நிமிடமே எழுந்து உக்கார்ந்துவிடுவான். அது காலை எத்தனை மணியானாலும்..

சில நாட்களில் அது ஏழு மணியாயிருக்கும் சில நாட்களில் அது அதிகாலை நாலு மணியாகவும் இருக்கும்!

அதிகாலையில் எழுந்து கட்டில் தலைமாட்டில் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு கனவு காண்பது அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு..

கனவு காண்பதில்தான் எத்தனை சுகம்!

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்.. யாருடைய தொந்தரவும் இல்லாமல்.. எந்தவித எல்லையுமில்லாமல்.. அப்படியே வானத்தில் பறப்பதுபோல்.. கடலின் விளிம்பில் மிதப்பதுபோல்.. பூமியின் ஆழத்தில் அமிழ்வதுபோல்..

அன்றும் அப்படித்தான் இருந்தான் கனவுலகில்..

அறைக்கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க அவனுடைய தனி உலகிலிருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது.. சரி அதுவும் கனவில்தான்போல் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

ஆனால் ‘டொக், டொக்’ ஒலி அவனை விடுவதாயில்லை..

யார் இது என்று நினைத்து வேண்டா வெறுப்புடன் எழுந்து சென்று திறந்தான்..

தாடியும் மீசையுமாய் கழுத்துவரைத் தொங்கிய தலைமுடியுடன் கனவுகள் நிறந்த கண்களுடன் தன் எதிரில் நிற்பவன் தன் மகனா என்று அவனுடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்துப் போய் நின்றார் மாதவன்.

சீனிவாசன் கண்கள் விரிய தன் முன்னே நின்ற தன் தந்தையையே ஒரு சில விநாடிகள் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவனும் மாதவனும் ஒருவரையொருவர் சந்தித்தே பல வாரங்கள் ஆகியிருந்தன. ஒரே வீட்டில்தான் வசித்தனர் என்பதென்னவோ உண்மைதான்.

‘என்னடா கோலம் இது சீனி? சரி அது போட்டும்.. நீ ஒன்னு பண்ணு.. குளிச்சி தலைய ஒழுங்கா சீவிட்டு கீழ இறங்கி வா.. எல்லாரும் கோயிலுக்கு போலாம்னு ப்ளான்.’

சீனிக்கு ஒன்றும் புரியவில்லை.. கோவிலுக்கா? யார் நானா? அதுவும் எல்லோரோடயுமா? என்னாச்சி இந்த அப்பாவுக்கு?

புத்தம்புது வேட்டியும் சட்டையுமாய் நெற்றியில் சந்தணப் பொட்டுடன் தன் முன்னே நின்றுக்கொண்டிருந்த மாதவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.

‘என்னடா அப்படி பாக்கறே.. போ.. போய் வேகமா குளிச்சிட்டு உனக்கு பிடிச்சத போட்டுக்கிட்டு.. தயவு செய்து ஜீன்ஸ், டீஷர்ட் வேணாம்.. வெள்ளையில ஒரு குர்த்தா போடுவியே.. அத போட்டுக்கிட்டு சீக்கிரம் இறங்கி வா.. அம்மா ரெடியாயிருப்பா.. நான் வத்ஸ¤வை போய் எழுப்பறேன்..’ என்றவாறு அடுத்த அறைக்கதவைத் தட்ட ஆரம்பித்த மாதவனை எட்டி தொட்டான் சீனிவாசன்..

மாதவன் நின்று, திரும்பி தன் மகனைப் பார்த்தார். ‘என்னடா?’

‘நான் எதுக்கு டாட். நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்களேன்.’

மாதவன் கோபப்படக்கூடாது என்ற தீர்மானத்தில் இருந்ததால் அவனைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தார். ‘எல்லாருமா சேர்ந்து போகலாம்னு ப்ளான்னு சொன்னேனே சீரினி.. ப்ளீஸ், டாடி சொல்றத கேளு.. இன்னைக்கி மட்டும்.. இட் ஈஸ் டாடிஸ் டே அவுட்.. என்ன? போ.. சீக்கிரம் ரெடியாவு..’

‘சரி, நாம என்ன சொன்னாலும் அவர் கேக்கப் போறதில்லை.. அவர் சொன்னா மாதிரி இன்னைக்கி ஒரு நாள் அவர் சொல்றதத்தான் கேப்பமே..’ என்று நினைத்தவாறு அடுத்த அறைக்கதவைத் தட்ட ஆரம்பித்த தன் தந்தையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு தன் அறைக்குள் திரும்பினான் சீனிவாசன்..

குளியலறைக்குள் நுழைந்து ஒரு சுவர் முழுவதும் அடைத்தவாறிருந்த நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். அவனுக்கே அவனைப் பார்க்க வெறுப்பாயிருந்தது.. நேற்று மைதிலி அவனை உதாசீனப்படுத்துவதுபோல் திடுதிடுப்பென்று கிளம்பிச் சென்றதை நினைத்துப் பார்த்தான்..

ஓகே.. today maybe the turnaround day.. டாடி சொன்னா மாதிரி போவோம்..

கடவுள பார்க்க கோவிலுக்கு போணுமாக்கும்.. என்று இடக்கு செய்த உள்மனதை உதாசீனப்படுத்திவிட்டு கண்ணாடி ஸ்டாண்டிலிருந்த கத்தரியை எடுத்து தாடியை வெட்டித்தள்ள துவங்கினான்.. today is daddy’s day out என்ற தன் தந்தையின் வார்த்தைகள் கண் முன்னே வர அவனையுமறியாமல் அவனுடைய உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை தவழ்ந்தது.. today, this son’s day out too!

மாதவன் வத்ஸலாவின் கதவை மீண்டும் தட்ட கையெடுக்கவும் கதவு திறக்கவும் சரியாயிருந்தது..

கண்களிரண்டும் ஆச்சரியத்தில் விரிந்து ஏற்கனவே பெரிதான கண்களுடன் சிறுவயதில் ஏய் முண்டக்கன்னி என்று பள்ளித்தோழிகள் பட்டப் பெயருக்கு சொந்தக்காரியான வத்ஸலாவின் கண்கள் மேலும் விரிய சந்தோஷத்துடன்.. ‘ஹாய் டாட்! வாட் அ சர்ப்பரைஸ்! புது வேஷ்டி, புது சட்டை.. நெத்தியில சந்தணப் பொட்டு.. என்னாச்சி டாட்.. இன்னைக்கி ஞாயித்துக் கிழமைதானே..’ என்ற தன் மகளுடைய சந்தோஷம் தன்னையும் தொற்றிக்கொள்வதை உணர்ந்தார் மாதவன்..

வத்ஸ¤ மாதவனுடைய செல்லம்.. சிறு வயது முதலே.. அவர்களுடைய இருவர் குணமும் ஒன்று என்று அவர் நினைத்திருக்கிறார்..

அவருக்கு எப்படி பெண்களென்றால் துச்சமோ.. அவளுக்கு ஆண்களென்றால் துச்சம்..ஆனால் அவர்களிருவருக்கும் பரஸ்பரம் பிடிக்கும்..

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உன் கதவ தட்டோ தட்டுன்னு தட்டினேனே நீ திறக்கவேயில்ல?’

‘நான் டாய்லெட்ல இருந்தேன் டாட்.. சரி.. என்ன விஷயம் சொல்லுங்க.. வெளீல எங்காச்சும் போறீங்களா?’

‘நா மட்டுமில்லடா.. நாம எல்லாருமா.. இன்னைக்கி மும்பையில கடைசி நாள் இல்லையா? அதான் கோவிலுக்கு போய்ட்டு ப்ரேக்ஃபாஸ்டையும் முடிச்சிட்டு வரலாம்னு ப்ளான் பண்ணேன்.. அம்மாவும் சீனியும் ரெடி.. இப்ப நீ தான்..’

வத்ஸலா தான் கேட்பது சரிதானா என்பதுபோல் மாதவனையே பார்த்தாள்.. what are you talking dad.. அம்மாவும் சீனியும் கூட வராங்களா? Is it true?’

மாதவன் கண்கள் விரிய தன் முன் நின்ற தன் மகளுடைய கன்னத்தில் லேசாக தட்டினார். ‘ஆமாம்.. it is true.. கேக்கறதுக்கு நம்ப முடியலை இல்லே.. ஆனா உண்மை.. சீனியும் வரேன்னுட்டு குளிக்க போயிருக்கான்.. நீயும் போய் குளிச்சிட்டு.. ரெடியாவு..’

‘ஒகே டாட்.. பத்தே நிமிஷம்..’என்றவாறு தன் அறைக்குள் திரும்ப முயன்ற தன் மகளை தடுத்து நிறுத்தினார் மாதவன். ‘ஜீன்ஸ், டீஷர்ட் கூடாது..’

வத்ஸலா திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். ‘Anything other than that is ok?’

மாதவன் புன்னகையுடன், ‘Yes.. but make it fast.’ என்று கூறிவிட்டு படியிறங்கினார்.

தொடரும்..