29.3.07

சூரியன் 188

சுந்தரலிங்கம் தன் கண்களை நம்பமுடியாமல் பத்திரிகையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். எதிரே டீப்பாயிலிருந்த காப்பி ஆறி அவலாகிப்போயிருந்தது.

எப்படி இந்தாளால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது? என்னன்னு சொல்றது?

'என்னங்க காலங்கார்த்தால அப்படியென்ன யோசனையில ஒக்காந்திருக்கீங்க? காப்பிய வச்சிட்டுப் போயி பத்து நிமிஷத்துக்கு மேலாச்சிதே? அப்படியே இருக்கு?' என்றவாறு ஹாலுக்குள் நுழைந்த கனகா தான் பேசுவதை கேளாததுபோல் அமர்ந்திருந்த தன் கணவருடைய தோளை தொட்டாள். 'ஏங்க இப்படி பித்துப் பிடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கீங்க? அப்படியென்ன பேப்பர்ல?"

திடுக்கிட்டு நிமிர்ந்த சுந்தரலிங்கம் குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். 'எ...என்ன கேட்டே?'

கனகா சிரித்தாள். 'நல்ல ஆளுதான் போங்க.. பேப்பர்ல அப்படியென்ன போட்டிருக்கு? இப்படி பேயறைஞ்சா மாதிரி ஒக்காந்துருக்கீங்க?'

'இந்தா நீயே படி.. நேத்தைக்கி அந்த சேது சொன்னதையெல்லாம் நா சொன்னா மாதிரி போட வச்சிருக்கான். இத மட்டும் அந்த சோமசுந்தரமோ இல்ல நாடாரோ பார்த்தா நா தொலைஞ்சேன்.. என்ன மனுஷனோ.. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ தெரியல.. எல்லாம் என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. இந்தாள நம்பி ப்ரெஸ் மீட்ல போய் ஒக்காந்தேன் பார்.. என்னெ சொல்லணும்..'

கனகா அன்றையை ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்த செய்தியை எழுத்துக்கூட்டி படித்து முடிக்கும்வரை பொறுமையுடன் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து ஹாலின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார் சுந்தரலிங்கம்.

'இது ஒங்களுக்கு வேணுங்க.. அந்தாள பத்தி தெரிஞ்சிருந்தும் அவர் கூட துணை போனீங்கல்லே... பேசாம ராஜிநாமா பண்ணிட்டு வந்துருங்க. இனியும் அங்க வேலை செய்யணும்னு நினைச்சீங்க.. அவ்வளவுதான் ஒங்கள மதிக்கறதுக்கு ஒரு நாதி இருக்காது... சொல்லிட்டேன்.. இப்பவே நான் மாப்பிள்ளைய கூப்ட்டு நம்ம பொண்ணோட ஒடனே வரச்சொல்லப் போறேன்.. இன்னைக்கி நீங்க ஆஃபீசுக்கு போவேணாம்.. எல்லாருமா ஒக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும்.. என்ன சொல்றீங்க?'

சுந்தரலிங்கம் அதிர்ச்சியுடன், 'ஏய் என்ன நீ, என்னென்னமோ சொல்றே? இதுல மாப்பிள்ளைக்கி என்ன ரோல் இருக்கு? நா செஞ்ச முட்டாத்தனத்த அவர்கிட்ட வேற சொல்லணுமாக்கும்?' என்றவாறு தன் மனைவியின் அருகில் அமர்ந்தார்.

'நாம எதுக்குங்க சொல்லணும்? அதான் பேப்பர்லயே வந்துருச்சே.. நாம கூப்டாட்டாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளையே கூப்ட போறார் பாருங்க. என்ன பேசறோம் ஏது பேசறோம்னு யோசிச்சி பேசணும்.. எடுத்தோம் கவுத்தோம்னு எதையாச்சும் பேசிட்டு.. இன்னைக்கி மட்டும் நீங்க ஆஃபீசுக்கு போனீங்க.. ஒவ்வொருத்தரும் ஒங்கள போட்டு தொளச்சி எடுக்கப் போறாங்க..'

சுந்தரலிங்கம் ஆதரவுடன் தன் மனைவியின் கரங்களைப் பற்றினார். 'ஏய்.. இங்க பார்.. நீ வேற டென்ஷனாகாத.. அப்புறம் மூச்சு வாங்கப் போவுது.. போய் கொஞ்ச நேரம் படு.. சமையல அப்புறம் பாத்துக்கலாம்...'

ஆனால் கனகா செல்வதாயில்லை.

'கனகு, நடந்தது நடந்திருச்சி.. இப்ப நீ டென்ஷனாயி என்னாவப்போவுது.. நான் இப்படி பேசியிருக்க மாட்டேன்னு பேங்க்ல எல்லாருக்கும் தெரியும். அங்க இருந்த சுபோத்தும் மத்த ஜூனியர் ஆஃபீசர்சும் இதுக்கு சாட்சி... மீட்டிங் முடிஞ்சதுக்கப்புறம் சேதுதான் ரிப்போர்ட்டர்ஸ்ங்கக் கிட்ட பேசிட்டிருந்தார். நா மீட்டிங் முடிஞ்சதும் ஃபிலிப்ப தேடிக்கிட்டு போய்ட்டேன்.. அப்பத்தான் தெரிஞ்சது அவர் புறப்பட்டு போய்ட்டார்னு.. என்ன, டைரக்டர்ஸ்தான் தப்பா நெனச்சிருப்பாங்க.. அவங்கள அப்புறமாத்தான் டீல் பண்ணணும்..'

கனகா சலிப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். 'எதுக்குங்க? நீங்க போய் அவங்கக்கிட்ட சொல்றதால ஒன்னும் பெரிசா நடந்துரப்போறதில்ல.. போறும்.. நீங்க இனிமேலும் சம்பாதிச்சிதான் ஆவணுங்கறதில்ல.. பேசாம ரிசைன் பண்ணிட்டு வந்துருங்க.. ஊர்ல போயி செட்டிலாயிருவோம்.. நீங்க தர்மகர்த்தாவாருக்கற கோயில மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தா போறாதாக்கும்.. எதுக்கு கண்டவங்க கால்லயும் போயி விழணும் இந்த வயசுல?'

சுந்தரலிங்கம் யோசனையில் ஆழ்ந்தார். 'இவ சொல்றதுலயும் நியாயம் இருக்கத்தான் செய்யிது.. எதுக்கு நாம போய் மறுபடியும் அந்த குட்டையில விழுந்து... மாதவன் எப்படியும் திரும்பிவர கொஞ்ச நாள் ஆவும் போலருக்கு.. ஒருவேளை சேதுவ ஆக்டிங் சேர்மனா போட்டுட்டா அப்புறம் அங்க நீடிக்கறதுல எந்தவித அர்த்தமும் இல்ல.. ஃபிலிப் ஒரு பாவம்.. அவரும் ஒருவேளை வேலை வேணாம்னு விட்டுட்டு பொண்ணோட போயி செட்டிலாயிரலாம்னு டிசைட் பண்ணிட்டார்னா அப்புறம் நாம மட்டும் அங்கருந்து என்னத்த பண்றது? போறும்... விட்டுருவோம்...'

'என்னங்க.. யோசிக்கிறீங்க.. பேசாம ரிசிக்னேஷன் லெட்டர் எழுதி குடுத்துட்டு வந்துருங்க.. அதுக்குக் கூட நேரா போணும்னு இல்ல.. குரியர்ல அனுப்பிருவம்.. என்ன சொல்றீங்க?'

சுந்தரலிங்கம் பதிலளிக்காமல் எழுந்து நின்றார். 'சரி பார்ப்பம்.. நீ போய் முடிஞ்சா பலார வேலைய பாரு.. நா குளிச்சிட்டு வரேன்.. அந்த பேப்பர என் ப்ரீஃப் கேஸ்ல வை..'

குளியலறையை நோக்கி சென்ற தன் கணவனையே சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்த கனகா மெள்ள எழுந்து நாளிதழை அவருடைய கைப்பெட்டியில் வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.

********

'என்ன டாட்.. என்னதான் போட்டுருக்கு? ரொம்ப கோபமாருக்கா மாதிரி தெரியுது?' என்றவாறு தன் தந்தையைப் பார்த்தாள் பூர்ணிமா.

சோமசுந்தரம் பதில் பேசாமல் தன் கையிலிருந்த ஆங்கில நாளிதழை அவளிடம் கொடுத்தார். 'என்ன அக்கிரம் பாரு. ஒரு சீனியர் எக்ஸ்யூட்டிவ் பேசறா மாதிரியா பேசியிருக்கார் அந்த சுந்தரலிங்கம்? It's really a shame.. அவர் இப்படி பேசுவார்னு நா கனவுலயும் நினைக்கல.. அந்த சேதுதான் இப்படின்னு பார்த்தா இவருமா? என்னால நம்பவே முடியல.'

பூர்ணிமா பதிலளிக்காமல் செய்தித்தாளைப் படிப்பதில் மும்முரமானாள்...

'-----------Bank's CGM Mr.Sudaralingam replied that there was nothing wrong in engaging private recovery agents to recover bad debts. He said that there were some industrialists who believed that they could hoodwink the Bank by citing imaginary losses in their business. He said that the Bank would not hesitate to use strong arm methods to recover its dues from such borrowers in future....'

'.... to another question Mr.Sundaralingam, who was till recently the acting chairman of the Bank said that the incumbent Chairman had already taken a decision not to take part in Govt sponsored schemes, especially those sponsored by the State Government, as the Government Agencies had not extended any support in recovery of such loans in the past.'

' He declared that the Board had already accepted the resignation of Dr.Somasundaram, one of its senior directors, as the Board felt that his continued presence in the Board might tarnish the image of the Bank..'

பூர்ணிமா மேலே படிக்க விரும்பாமல் நாளிதழை டீப்பாயில் எறிந்தாள். 'என்னப்பா இது.. இவரையா ஆக்டிங் சேர்மனா போட்டிருந்தீங்க.. இவ்வளவு இம்மெச்சூர்டா இருக்கார்.. ஒங்களப்பத்தி சொன்னது போட்டும்.. ஆனா அதெப்படி டெட்ச ரிக்கவர் பண்றதுக்கு ஸ்ட்ராங் மெத்தட்ச யூஸ் பண்ணுவோம்னு சொல்றது? அதுவும் ரீசெண்டா வந்த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்டுக்குப்புறமும்? போறாததுக்கு கவர்ன்மெண்ட் ஸ்பான்சர்ட் லெண்டிங் பண்ணமாட்டோம்னு வேற சொல்லியிருக்கார். அதுவும் பப்ளிக்கா.. சேச்சே... இந்த மாதிரி எக்ஸ்யூட்டிவ்ஸ் இருக்கற பேங்க் போர்ட்லயா என்ன இருக்க சொல்றீங்க.. ஃபர்ஸ்ட் டேவே இந்த மாதிரி எக்ஸ்க்யூட்டிவ்ஸ்கிட்டருந்து ரிசிக்னேஷன் வாங்கிட்டுத்தான் மறுவேல பாப்பேன்.. They just don't deserve to be in their position.'

சோமசுந்தரம் புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தார். 'இப்ப தெரியுதா டாடி எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்னு...' என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். 'ஆனா எனக்கென்னவோ இப்பவும் டவுட்டாத்தான் இருக்கு.. இது நிச்சயமா சுந்தரலிங்கம் சொல்லியிருப்பாரான்னு.. அதுவும் இந்த மாதிரி ப்ரெஸ் மீட்ல...We all know him for several years.. He is known for simplicity.. He never talks much.. I just can't believe that he could have made such bold and irresponsible statements... I very much doubt it...'

பூர்ணிமா கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். 'என்னப்பா சொல்றீங்க? அதான் ப்ளாக் அண்ட் வய்ட்ல இருக்கே.. பேப்பர்ல.. இதுக்கு மேல என்ன வேணும்? He simply has to go... இன்னைக்கி எம்.சி மீட்டிங்ல இதப்பத்தியும் பேசறதாருந்தா நா வரேன்.. இல்லன்னா நீங்க மட்டும் போங்க..'

'ஏய்.. ஏய்.. Don't get excited.. பேசலாம்... இந்த விஷயம் நாடாருக்கு மட்டும் தெரிஞ்சிது... நல்லவேளையா மனுசனுக்கு தமிழத்தவிர வேற ஒன்னும் தெரியாது... இது தமிழ் பேப்பர்ல வந்துருக்காதுன்னு நினைக்கேன்.. தினமணி போட்டா உண்டு... பாப்பம்... நீ போய் குளிச்சிட்டு ரெடியாவு.. போற வழியில பேசலாம்.. நா குளிச்சிட்டு வரேன்...'

தொடரும்..

28.3.07

சூரியன் 187

எதிர்முனையில் சிலுவை மாணிக்கம் நாடாராக இருக்கும்பட்சத்தில் என்ன செய்வதென ஆலோசித்தவாறே எடுத்த ஃபிலிப் சுந்தரம் எதிர்முனையில் தன்னுடைய முதல்வர் மாதவன் என அறிந்ததும், 'சார் நீங்களா? நானே ஒங்கள கூப்பிடணும் இருந்தேன்.. ஆனா எப்படின்னு தெரியாமத்தான் தயக்கத்தோட...' என தடுமாறினார்.

'It's ok.. Mr.Philip.. நா ஒங்கள கூப்ட்டது எதுக்குன்னு சொல்லிடறேன்.. கொஞ்ச நேரம் பொறுமையா கேளுங்க.'

ஃபிலிப் ஏதோ முக்கியமான விஷயமென ஊகித்து உஷாரானார். 'சார் அதுக்கு முன்னால நீங்க போன விஷயம் என்னாச்சி சார்? அதச் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.'

'சொல்றேன்.. என்னோட சன் போலீஸ்ல சிக்கிட்டது ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அதுலருந்து விடுபட்டாலும் அவசரப்பட்டு அவனொரு சூயிசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான்.. பட் நவ் ஹி ஈஸ் ஒக்கே.. ஆனா..'

'ஆனா என்ன சார்? அவர் பாம்பேயிலயே இருக்கணும்னு கண்டிஷன் போட்டததான சொல்ல வரீங்க.. கவலைப்படாதீங்க சார்.. அதுவும் விலகிரும்.'

மாதவன் விரக்தியுடன் சிரிப்பது கேட்டது. 'ஐ நோ தட் ஃபிலிப்.. That's not the issue..'

அவரே தொடரட்டும் என காத்திருந்தார் ஃபிலிப்..

'My wife has suffered a stroke.. டாக்டர் இன்னும் ஃபார்ட்டியெட் அவர்சுக்கப்பறந்தான் எதுவும் சொல்லமுடியும்னு சொல்லிட்டார்..'

இதை முற்றிலும் எதிர்பாராத ஃபிலிப் கவலையில் ஆழ்ந்தார். இதை எப்படியோ தெரிந்துக்கொண்டுதான் சேது ஆட்டம் போடுகிறார் போலிருக்கிறது என்று நினைத்தார். 'அப்படியா சார்?' என்றார் கவலையுடன். 'நா ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா சார்? நமக்கு அங்க அஞ்சாறு பிராஞ்சஸ் இருக்கு சார். யாரையாச்சும் ஒங்கள வந்து பாக்க சொல்லட்டுமா.. அவங்களுக்கு யாராவது நல்ல டாக்டர்ஸ் தெரிஞ்சிருக்குமே..'

'இல்ல மிஸ்டர் ஃபிலிப். நேத்து ராத்திரியே டாக்டர் சோமசுந்தரத்துக்கிட்ட பேசினேன். அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம வந்துட்டேனில்லையா அதனால நேத்து மிட்நைட் கூப்ட்டேன். அவர் உடனே அவரோட ஆஸ்ப்பிட்டல்லருந்து ரெண்டு ந்யூரோ சர்ஜன்ச இன்னைக்கி காலைல ஃப்ளைட்ல அனுப்பி வைக்கறேன்னு சஜ்ஜஸ்ட் பண்ணார். நானும் சரின்னு சொல்லியிருக்கேன். அதவிட வேற எதுவும் நம்மால செய்ய முடியாது. நான் ஒங்கள் கூப்ட்டது அதுக்கில்லை.'

'சொல்லுங்க சார்.'

'நான் நேத்து சோமசுந்தரத்துக்கிட்ட பேசினப்போ என்னால இப்போதைக்கி சென்னை திரும்ப முடியாது போலருக்கு சார்னு சொன்னேன்.'

சரிதான்.. சேது சாரோட மூவ பத்தி இவருக்கும் தெரிஞ்சிட்டதுபோல.. பாவம் இவர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்! எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ஃபிலிப் தயங்க மாதவனே தொடர்ந்தார். 'சோமசுந்தரம், ரெண்டு பேரையும் ஏர் லிஃப்ட் பண்ணி கொண்டு வந்துருங்க மாதவன், நம்ம ஆஸ்பட்லயே வச்சி பாத்துக்கலாம்.அதுக்காக நீங்க அங்கயே இருக்கணும்னு இல்லன்னு சொன்னார். எனக்கும் அதுல ஆட்சேபனையில்லதான்.. ஆனா அதுக்கும் இன்னும் ரெண்டு வாரமாவது ஆகும்னு இங்கத்த சீஃப் டாக்டர் ஃபீல் பண்றார். அத்தோட என்னோட சன் சீனியோட விஷயமும் முடியணும்.. I am planning to go and meet the Mumbai DGP also today. அப்பத்தான் விஷயம் சட்டுன்னு முடியும்.. ஆனாலும் அதாவது நான் சென்னை திரும்பினாலும் உடனே என்னால வந்து ஜாய்ன் பண்ண முடியுமான்னு தெரியலை மிஸ்டர் ஃபிலிப். இத நான் சோமசுந்தரத்துக்கிட்டயும் சொல்லிட்டேன்.. That's why I called you now..'

ஒருவேளை இவரும் ஆக்டிங் சேர்மன் பதவிய பத்தி பேசப்போறாரோ என்று நினைத்தார் ஃபிலிப். 'சொல்லுங்க சார்.' என்றார் பட்டும்படாமலும்.

'I don't have anything personally against Mr.Sethu.. But.. நேத்து டாக்டர் சோமசுந்தரம் எங்கிட்ட சொன்னத வச்சி சொல்றேன். சேதுமாதவன விட நீங்கதான் ஆக்டிங் சேர்மன் போஸ்ட்டுக்கு பொருத்தமான ஆள்னு நம்ம டைரக்டர் நாடார் சொன்னாராம்.. நானும் அப்படித்தான் நினைக்கேன்.. I am told that our Management Committee members are meeting at the Doctor's place today.. நீங்க என்ன சொல்றீங்க ஃபிலிப்.. I want you to accept this proposal.. It may not be long.. may be for three or four months.. I mean till I feel that I could peacefully return and assume charge.. What do you say?'

என்ன சொல்வதென தடுமாறினார் ஃபிலிப். அவரையுமறியாமல் அவருடைய பார்வை சுவரிலிருந்த கர்த்தரின் படத்தை நோக்கி செல்ல அவர் அதே மாறா புன்னகைய்டன் தன்னை பார்ப்பதைப் பார்த்தார். 'ஏற்றுக்கொள்ளேன்.. நானிருக்கிறேன்.' என்பதுபோலிருந்தது அந்த பார்வை..

இருப்பினும், 'Is it necessary to think about this Sir.. நீங்க வர்ற வரைக்கும் மிஸ்டர் சேதுமாதவனே இருந்துக்கட்டுமே.' என்றார் மிருதுவாக.

'இல்ல மிஸ்டர் ஃபிலிப்.. Whether I agree or not majority of the Board members may not agree to post him..especially Mr.Nadar. That's the fact. So.. please think about what I said and call me before you reach the office. I'll pass on the information to Dr.Somasundaram.. bye' அவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமலே இணைப்பு துண்டிக்கப்பட அமைதியாகிப்போன ஒலிவாங்கியை சிந்தனையுடன் அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார் ஃபிலிப்.

*******

தனபால்சாமி கையிலிருந்த காப்பி கோப்பையுடன் அன்றைய பத்திரிகைகளை மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருந்தார். பக்கத்திற்குப் பக்கம் முந்தைய தினம் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய செய்தியாகவே இருந்தன.

அதிலும் பிரசுரமாகியிருந்த சில புகைப்படங்களைப் பார்த்ததும் அவரையுமறியாமல் கோபம் பீறிட்டு எழ கையிலிருந்த பத்திரிகையை டீப்பாயில் வீசியெறிந்துவிட்டு எழுந்து நின்றார்.

ச்சை.. ரிப்போர்ட் பண்றதுக்கும் ஒரு விவஸ்தையில்லாம போயிருச்சி.. கை, கால் இல்லாத சடலங்களையெல்லாம் எப்படி கூசாம பப்ளிஷ் பண்றானுங்க.. இவனுங்களையெல்லாம் சுடணும்..

அவரையுமறியாமல் உரக்க பேசிவிட்டாரோ என்னவோ, 'என்னப்பா காலையிலயே சூடா இருக்கீங்க?' என்றவாறு தன்னைப் பார்த்தவாறு வந்து நின்ற தன் மகள் புவனாவைப் பார்த்தார்.

'பின்ன என்னம்மா? இந்த ரிப்போட்டர்சுக்கு மனசாட்சின்னு ஒன்னுமே கிடையாது போலருக்கு. எந்த மாதிரி படங்கள பப்ளிஷ் பண்றதுங்கற விவஸ்தையேயில்லாம போட்டுருக்கறத பார். இதுக்குத்தான் எமர்ஜன்சியிலருந்தா மாதிரி ஒரு சென்சார்ஷிப் வரணுங்கறது..'

புவனா பதிலளிக்காமல் டீப்பாயில் கிடந்த பத்திரிகையில் வெளியாகியிருந்த புகைப்படங்களைப் பார்த்தாள். தன் தந்தை கோபமடைந்ததில் எவ்வித வியப்பும் இல்லையென்பதுபோலிருந்தது அந்த புகைப்படங்கள். வெறுப்புடன் பத்திரிகையை மடித்து டீப்பாயில் வைக்க முனைந்தவள் சட்டென்று, 'அப்பா இங்க பாருங்க. இவர் நம்ம ரம்யா அப்பா பேங்க் சேர்மன் இல்லை?' என்றவாறு பத்திரிகையில் வெளியாகியிருந்த புகைப்படத்தை காட்டினாள்.

தனபால்சாமி அதை வாங்கி பார்த்தார். முந்தைய தினம் வங்கியில் நடைபெற்ற பத்திரிகை நிரூபர் கூட்டத்தைப் பற்றிய செய்தியுடன் மாதவனின் புகைப்படமும் அருகில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த புகைப்படமும் வெளியாகியிருக்க அதில் மேடையில் அமர்ந்திருந்த வங்கி அதிகாரிகள் புகைப்படத்தின் அடியில் திரு.சேதுமாதவன் இ.டி என்று குறிப்பிட்டிருந்ததை கவனித்தார். ஓ! இவந்தானா நம்ம வில்லன்! என்று நினைத்தார். பாக்கறதுக்கே வில்லன்மாதிரிதான் இருக்கான்.. இவனெ இன்னைக்கி எப்படியும் அமுக்கிரணும்..

'என்னப்பா அப்படி பாக்கறீங்க.. இவர்தானே சேர்மன்?'

'ஆமாமா... முந்தா நேத்து சாயந்தரம்தான் இவர போய் மீட் பண்ணேன்.. மனுசன் பிடிகுடுத்தே பேசல..' என்றார் சலிப்புடன்.

புவனா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தார். 'பிடிகுடுக்கலன்னா.. நீங்க எதுக்கு அவர போய் பாத்தீங்க?'

'அதாம்மா ஒன் ஃப்ரெண்ட் விஷயமாத்தான் சில சந்தேகம் இருந்துச்சி.. அத கேக்கத்தான் போயிருந்தேன்..'

'ரம்யா விசயமா?'

'ஆமா.. அந்த பொண்ண கடத்த ட்ரை பண்ணதா சொல்லி ரெண்டு பேர அரெஸ்ட் பண்ணமே..'

புவனா திடுக்கிட்டு தன் தந்தையை பார்த்தாள். 'என்னது ரம்யாவ கடத்த இருந்தாங்களா? என்னப்பா சொல்றீங்க?'

தனபால்சாமி தன் தவறை உணர்ந்து பேச்சை மாற்றினார். 'ச்சை... நா ஒருத்தன்.. அது ரம்யா இல்லம்மா.. வேற ஒரு பொண்ணு.. சரி அத விடு.. அதுல இந்த பேங்க் அதிகாரி ஒருத்தர் இண்டைரக்டா சம்பந்தப்பட்டிருக்கறதா சந்தேகம்.. அத க்ளாரிஃபை பண்ணிக்கலாம்னுதான் போனேன்..' என்றவாறு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தார் இனியும் தன் மகளிடம் பேச்சை வளர்த்தால் எதையாவது உளறிவிடுவோமோ என்ற அச்சத்தில். காவல் நிலையத்தில் குற்றவாளிகளிடமிருந்து தகவலை வரவழைப்பதில் பெயர்போனவருக்கு தன்னுடைய மகளிடம் உரையாடுவதில் அச்சம்!

புவனா விடவில்லை அவர் பிறகே ஓடினாள். 'அப்பா மறைக்காம சொல்லுங்க.. நீங்க சொல்லவந்தது ரம்யாவ பத்தித்தான? சொல்லுங்கப்பா ப்ளீஸ்..'

தனபால்சாமி நின்று திரும்பி தன் மகளைப் பார்த்தார். 'இங்க பார்மா.. அப்பாவோட ட்யூட்டிய பத்தி ஒன்னும் கேக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்ல.. அது ரம்யா இல்லன்னு சொன்னா விட்டுரணும்.. இப்ப போயி நல்ல பொண்ணா ப்ரேக்ஃபாஸ்ட ரெடி பண்ணு.. அப்பா குளிச்சிட்டு வர்றதுக்குள்ள டேபிள்ல வச்சிரணும்.. என்ன சரியா?'

புவனா நம்பிக்கையில்லாமல் தன் தந்தையைப் பார்த்தாள். 'இல்லப்பா கேக்கலை.. ஆனா எங்கிட்டருந்து நீங்க எதையோ மறைக்கறீங்கன்னு மட்டும் தெரியுது.. நா அவள போய் பாக்கணும்.. அப்பத்தான் என் மனசுக்கு ஆறுதலாருக்கும்.. பாத்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.'

தனபால்சாமி சிரித்தார். 'ஏய் என்ன நீ என்னவோ ஒரு மாசத்துக்கு முன்னால பாத்தா மாதிரி சொல்றே... அந்த பொண்ண கொண்டுவிட்டு முழுசா மூனு நாள் ஆகல.. அதுக்குள்ள என்ன?'

'இருக்கட்டுமே.. எனக்கென்னவோ மாசக் கணக்கான மாதிரிதான் இருக்கு.. ஜீப்பெல்லாம் வேணாம் ஆட்டோவுலயே போய்க்கறேன்..'

தனபால்சாமி ஒருநோடி யோசித்தார். 'சரி.. ஆனா ஒரு கண்டிஷன்.. பகலுக்குள்ள திரும்பிரணும்.. இன்னைக்கிம் பாம்ப் ப்ளாஸ்ட் ட்யூட்டி இருக்கு. அதனால அப்பா ஆஃபீஸ்ல இருக்க மாட்டேன்.. நீ திரும்பி வந்ததும் என் மொபைலுக்கு ஃபோன் பண்ணணும்.. என்ன சரியா..'

'சரிப்பா..' என்று தலையை அசைத்தாள் புவனா சட்டென்று.. 'நீங்க குளிச்சிட்டு வாங்க.. அஞ்சே நிமிஷத்துல ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாயிரும்..'

தன் சிநேகிதியைக் காண அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் சிட்டென பறந்த தன் மகளைப் பார்த்தவாறே குளியலறையை நோக்கி நடந்தார் எஸ்.பி.தனபால்சாமி...

தொடரும்..

27.3.07

சூரியன் 186

மார்கழிக் குளிரிலும் விடியற்காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிடவேண்டும் சிலுவை மாணிக்கம் நாடாருக்கு.

'வாணம் பாத்த பூமியில பொறந்து வளந்த ஒடம்புடா இது. ஏசி ரூம்ல தூங்குனாலும் பளக்கம் விட்டுருமா என்ன? அன்னக்காவடியா இருந்தப்போ காலங்கார்த்தால எழுந்து ரோட்டுக் குளாவுலருந்து எப்பவாச்சும் அதிசயமா வர்ற தண்ணியில குளிச்சிப்போட்டு வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு கிளிஞ்ச துண்டால தலைய தொடச்சும் தொடைக்காம கரண்டிய தூக்கிக்கிட்டு அன்னைக்கி எங்க சமையலோ அங்க ஓடிக்கிட்டிருந்த ஒடம்புதான இது? வசதி வந்ததும் மறந்துபோகக்கூடிய விஷயமால்லே.' என்பார் மருமகன் செல்வத்திடம்.

வசதிகளும் செல்வாக்கும் பெருகி அவருடைய வாழ்க்கை முறையையே அடியோடு மாறிவிட்டபோதும் அதிகாலையில் எழுந்து குளிக்கும் பழக்கத்தை மட்டும் விடவில்லை.

சென்னையில் இருக்கும் நாட்களில் இரவு எத்தனை நேரம் கழித்து உறங்கச் சென்றாலும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஈர உடம்புடன் வேட்டியை சுற்றிக்கொண்டு வெறும் காலில் வீட்டைச் சுற்றி பத்துக்கும் குறையாமல் வேக வேகமாய் நடந்துவிடுவதும் வழக்கம்.

அந்த நேரத்தில்தான் தன்னுடைய எதிரிகளை எப்படி மடக்கலாம், எப்படி வீழ்த்தலாம் என்கிற சதியாலோசனைகளும் நடக்கும்.

அன்றும் அப்படித்தான். முந்தைய தினம் காலையில் செல்வத்தையழைத்து உரையாடியதிலிருந்து இறுதியில் மருத்துவர் சோமசுந்தரத்துடன் பேசிய பேச்சுகளை ஒன்றுவிடாமல் தன் மனத்திரையில் ஓட்டியவாறு வீட்டைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்தார்.

செல்வம் என்றவுடனே முந்தைய தினம் தன்னுடைய பாம்பே மேனேசர அனுப்பி சேர்மன் மாதவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தமே, பய பதிலே சொல்லலையே என்பது நினைவுக்கு வந்தது. காரணமில்லாம பய கூப்டாம இருக்க மாட்டானே. ஊர்ல ஏதும் பிரச்சினையாருக்குமோ? அந்த செல்வியோட அம்மா ஏதும் இடையில பூந்து குட்டைய குளப்பியிருப்பாளோ? இருக்கும்.. பேராச புடிச்ச பொம்பளையாச்சே அது? எரியற வீட்டுல கொள்ளிய புடுங்கறவளாச்சே? ஒருவேள அந்த பாம்பே பய கூப்டாம இருந்துருப்பானோ.. என்ன எளவோ.. நடைய முடிச்சதும் மொத வேலையா அந்த பயலோட பேசிப்புடணும்..

அப்புறம் அந்த ரத்தினவேல் பய. நேத்து பட்ட அடியில சுருண்டு போயிருப்பான். யார் கிட்ட மோதறம்னு நினைச்சிப் பாக்க வேணாம்? எப்படியிருந்தோம் இப்ப எப்படியிருக்கோம்னு கொஞ்சமாச்சும் நெனச்சி பாத்துருந்தா இப்படியொரு காரியத்த செஞ்சிருப்பானா.. 'ஐயா.. அந்த ராசேந்திரனுக்குத்தான் வயசு பத்தாது.. பொம்பள சோக்கு, குடின்னு புத்திகெட்டு அலையறான்? சரி போட்டும் சின்ன வயசு.. ராசி அவனெ வேண்டாம்னுட்டா ஒலகமே முடிஞ்சி போயிருச்சின்னு நினைக்கறதுல ச்சான்ஸ் இருக்கு? இவனுக்கென்ன? ஏளற களுத வயசு? ஒரு பிச்சாத்து சமையல் கரண்டியோட வாசல்ல வந்து நின்னு வேல கேட்ட பயதானடா நீ? இப்ப என்ன பெருசா வாள்வு வந்துருச்சின்னு வளத்துவுட்ட என் மேலய பாயறே.. சரிய்யா.. ஒனக்கு கைபாகம் இருக்கு.. ஒத்துக்கறேன்... நா வளந்ததுக்கு நீயும் ஒரு காரணம்தான்.. இல்லேங்கலே.. அதுக்காவத்தானலே = நா சம்பாதிச்சதுல பாதிக்கும் மேல ஒனக்கு அள்ளிக் குடுத்தேன்.. போறாததுக்கு எம் பொண்ணையே தார வார்த்தனே ஒம் மகனுக்கு? நா என்ன இஷ்டப்பட்டா செஞ்சேன்... ஏதோ எம் பொண்ணு ஆசப்பட்டுட்டாளேங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வச்சனே ஒம் மகனுக்குத்தான் அந்த அரும தெரியல.. சரி.. ஒனக்கு எங்கலே போச்சி புத்தி?'

என்னமோ நீ ஒன் ஷேர வித்துப்போட்டா கம்பெனிய மூடிருவமா? முட்டாப் பய.. வயசு பத்துமால்லே ஒனக்கும் ஒம் பையனுக்கும்? சின்னதுக விரும்பி கட்டிக்கிச்சுங்க.. இப்ப வேணாம்னு தோணுது பிரிஞ்சிப் போறதுன்னு முடிவு பண்ணிருச்சிங்க.. எனக்கும் இதுல சம்மதமில்லதான்.. ஆனா என்ன பண்றது.. அதுக்கும் நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலருக்கற ஒறவுக்கும் என்னலே சம்பந்தம்? சரிய்யா.. ஒனக்கும் நீயும் நானும் இனி ஒன்னாருக்க முடியாதுன்னு தோனியிருக்கும்.. அதுலயும் தப்பு இல்ல.. ஆனா நீ என்ன பண்ணியிருக்கணும்.. இந்தாய்யா என் பங்கு.. நீயே வச்சிக்க.. எனக்கு குடுக்க வேண்டியத குடுத்துரு.. கட்டுன ஒறவையே ஒம் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டப்போ நாம மட்டும் எப்படின்னு நினைக்கறதுலயும் தப்பில்லைய்யா.. ஆனா அதுக்காக நிழலுக்கு ஒதுங்கன மரத்தையே வெட்டிச் சாய்ச்சிரலாம்னு நினைச்சா உட்டுருவமா?

ஒழுங்கு மரியாதையா இத்தோட ஆட்டத்த நிறுத்திக்கிட்டா போனாப் போறான்னு அவனும் அவன் புள்ளயும் வித்த பங்குக்கு மேல ஒன்னோ ரெண்டோ போட்டுக் குடுத்துருவம். வீட்டுப் பிரச்சினைய வெளிய கொண்டு வந்து நாறடிக்கறது நல்லாவாருக்கு? ஆனா அத விட்டுப்போட்டு கோர்ட்டு கீர்ட்டுன்னு அலையறதுன்னோ இல்ல மேக்கொண்டு வில்லங்கத்துல எறங்கி ஏடாகூடமா ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சானுங்களோ.. நானும் எம் பங்குக்கு ஏதாச்சும் செய்ய வேண்டி வரும்.. பாப்பம்.. எதுவரைக்கிம் போறான்வன்னு பாப்பம்...

அந்த சேது பயலயும் சும்மா விடப்படாது... ஏற்கனவே அவன் மேல ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட் அரசல்புரசலா வந்துக்கிட்டேயிருக்கு. லஞ்சத்த வாங்கிக்கிட்டு லோன் குடுக்க வேண்டியது.. அப்புறம் இவனுங்களே அத என்.பி.ஏவா ஆக்க வேண்டியது. இவ்வளவு குடு.. வட்டிய குறைச்சித் தரேன்னு பேரம் பேச வேண்டியது.. இல்லன்னா அடகு வச்ச சொத்த நாங்களே வித்து தாரோம்.. கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சி கடைசில அடிமாட்டுக்கு வெலைக்கு பேங்குக்கு குடுக்கறத காட்டிலும் நா காமிக்கற ஆள்கிட்ட வித்தா ஒனக்கு நஷ்டம் வராம பாத்துக்கறேன்னு புரோக்கர் பயலுகள விட்டு மிரட்ட வேண்டியது. ஒத்துவரலையா, ரிக்கவரி பண்றேன்னு சொல்லி அடியாளுங்கள விட்டு கடத்திக்கிட்டு போயி அடிக்க வேண்டியது. படுபாவிப் பய.. பேருக்குத்தான் பேங்க் ஈ.டி.. பண்றது முழுசும் அடாவடித்தனம்.. இந்த லட்சணத்துல பேங்க் சேர்மன் போஸ்ட் மேல வேற ஒரு கண்ணு.. இவன மட்டும் அந்த போஸ்ட்ல ஒக்கார வச்சா.. நாளப்பொழுதுல பேங்கையே வெல பேசி வித்துப்போட்டாலும் போட்ருவான்..

அந்த லிங்கத்த கையில போட்டுக்கிட்டு இவன் அடிச்ச கொட்டம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கான் போல.. அந்த பயலுக்கு இந்த சோமசுந்தரம் வேற ஒத்து ஊதறான். இவனும் சேர்ந்துக்கிட்டு கூட்டுக் கொள்ள அடிச்சிருக்கானோ என்னவோ.. இதுவரைக்கும் அடிச்சது போறும்.. இன்னையோட அவன் விசயத்த முடிச்சிறணும்..

எடக்கு பண்ணாலும் ஃபிலிப் சுந்தரம்தான் அந்த போஸ்ட்டுக்கு லாயக்கு. கடவுள் பக்தி நிறைய இருக்கு. வாங்கற சம்பளத்துலயே பாதிய கோயிலுக்கு குடுத்துடற மனுசன்.. அவரால சேர்மன் போஸ்ட்டுக்கே ஒரு மரியாத வந்துரும்.. அதான்.. அதான் சரியான முடிவு..

அதுக்கு முன்னால மாதவன்கிட்ட எப்படியாவது போன்ல பேசிரணும்.. அங்க எப்படியிருக்குன்னு தெரியாம நாமளா எதையாச்சும் செஞ்சி போட்டுட்டு நடுக்கால அவரும் வந்து நின்னா நல்லாருக்காது.. அப்படியே நடந்தாலும் சேதுவ அந்த போஸ்டுல போட்டுட்டம்னா.. அதுல நிக்கறதுக்காகவே மாதவன இங்க வரமுடியாம செய்யவும் தயங்கமாட்டான்.. படுபாவிப்பய.. தெனக்கிம் குடிச்சிப்போட்டு கண்டதயும் திங்கற பயதானே..

'அப்பா.. என்ன என்னைக்கில்லாம நடந்துக்கிட்டே இருக்கீங்க.. அரை மணி நேரத்துக்கு மேல ஆயிருச்சி.. என்ன பயங்கரமான யோசன போலருக்கு.. நானும் பத்து நிமிசமா பாத்துக்கிட்டி நிக்கேன்.. ஒங்களுக்கு நீங்களே பேசிக்கறீங்க?'

அசரீரி போல கேட்ட குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்று நிமிர்ந்துப் பார்த்தார் நாடார். எதிரில் புன்னகையுடன் ராசம்மாள்.. 'ஒன்னுமில்ல தாயி.. ஏதோ யோசனை... தோ வந்துட்டேன்...ரொம்ப நேரம் நடந்துட்டேன் போலருக்கு.. வேர்த்துப் போச்சி.. மறுபடியும் குளிச்சாத்தான் சரியாருக்கும்.. நீ போயி பலாரத்த ரெடி பண்ணு.. இன்னைக்கி நெறய வேலையிருக்கு..' என்றவாறு ராசம்மாள் நீட்டிய டவலைப் பெற்றுக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தார்.

******

'எலேய்.. என்ன எங்கருந்து கூப்டறே? தாம்பரத்துலருந்துதான?'

'....'

'சரி அங்கனேயே நில்லு.. இன்னும் கா மணி நேரத்துல அங்க இருப்பேன்.. அப்புறம் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்துருக்க இல்ல?'

'...'

'சரி.. அது போறும்.. நா வர்றதுக்குள்ள சாப்ட்டு முடிங்கலே.. வந்ததும் என்ன செய்யணும்னு சொல்றேன்... வச்சிடறேன்..'

ரத்தினவேலு இணைப்பைத் துண்டித்துவிட்டு அவசர அவசரமாய் குளித்து முடித்தார். குளித்த முடித்த கையுடன் 'அப்பனே முருகா ஒன்ன நினைச்சித்தாம்பா இந்த காரியத்துல எறங்கறேன்.. நல்லபடியா முடிச்சிக் குடுத்துரு.. பளனியில வந்து மொட்ட போட்டுக்கறேன்...' என்று தான் செய்யவிருக்கும் படுபாதக செயலுக்கு கடவுளை துணைக்கு அழைத்தவாறு தயாராக எடுத்து வைத்திருந்த வெள்ளை வெளேர் வேட்டி சட்டைக்கு மாறினார்.

மறக்காமல் தான் எடுத்து வைத்திருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைப்பதற்கு முன் ஒருமுறை நிதானமாகப் பார்த்தார். 'ஒனக்கு இது தேவையால்லே.. யார்கிட்ட மோதறதுன்னு ஒரு வெவஸ்தை வேணாம்.. என்னெ வச்சி முன்னுக்கு வந்துட்டு என்னையே கவுக்க பாக்கறியா? நன்றிகெட்ட பயலே.....இன்னையோட முடிஞ்சிருதுல ஒன் ஆட்டமெல்லாம்.. கருவா பயலே.. இரு வச்சிக்கறேன்..'

ஹாலுக்குள் நுழைவதற்கு முன் ராசேந்திரனின் படுக்கையறையை எட்டிப்பார்த்தார்.. கைலி ஒருபுறம் கலைந்து கிடக்க விவஸ்தையில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை அருவருப்புடன் பார்த்தார். எருமை மாடு மாதிரி எந்த கவலையுமில்லாம தூங்கறத பார்.. கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிருப்பான் போலருக்கு.. நாலஞ்சி நாளா போடாததையெல்லாம் சேத்து போட்டுருப்பானோ என்னவோ.. இப்பத்தைக்கி எளுந்துருக்க மாட்டான். அதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான்.. நாம போற காரிய இவனுக்குக் கூட தெரியப்படாது.. குடிச்சிட்டா நெதானமே தெரியாத பயல நம்பி என்னத்த செய்யிறது? தெரிய வர்றப்ப பாத்துக்குவம்.. ரோட்ல எவனெவனோ போறான்.. கார்ல பஸ்சுல அடிபட்டு சாவறான்.. அதுக்கெல்லாம் நானாடா பொறுப்பு?

படிகளில் இறங்கி ஹாலுக்குள் நுழைந்து வாசலைக் கடந்து கதவை மெள்ள மூடிவிட்டு போர்ட்டிக்கோவில் நின்ற ராசேந்திரனின் நாற்சக்கர வாகனத்தத தவிர்த்து சாலையில் இறங்கி இருமருங்கிலும் பார்த்தார். கண்ணுக்கு எட்டியவரை ஆட்டோ எதையும் காணோம்... மெள்ள தெருக்கோடியை நோக்கி நடந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ கிடைக்க, 'சைதாப்பேட்டைக்கு போ.. ஸ்டேஷன் பக்கத்துல எறக்கி விட்டுரு..' என்றார்.. எதுக்கு இவங்கிட்ட தாம்பரம்னு சொல்லி.. நாளைக்கி ஏதும் பிரச்சினையானா.. வம்ப எதுக்கு வெல குடுத்து வாங்கறது.. சைதாப்பேட்டையிலருந்து ட்ரெயின புடிச்சி தாம்பரம் போயிருவோம்.. ஸ்டேசன் வாசல்லருந்துதான கூப்ட்டான்.. அதான் சரி...

ஆட்டோ சைதாப்பேட்டையை நோக்கி விரைய தான் நினைத்திருந்ததை சிக்கலில்லாமல் நிறைவேற்றுவதைக் குறித்து சிந்திக்கலானார்.

தொடரும்..

23.3.07

சூரியன் 185

சாதாரணமாக காலையில் கண் விழிக்கையில் முந்தைய தினம் நடந்த எந்தவொரு நிகழ்வையும் குறித்து எதிர்மறையான சிந்தனைகள்
எதுவுமில்லாமல் கண்களை மூடி படுக்கையறை ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருக்கும் கர்த்தரின் படத்திற்கு முன்னால் ஒரு சில நிமிடங்கள் நின்று
பிரார்த்திவிட்டு நாளை துவக்குவார் ஃபிலிப் சுந்தரத்தின்.

ஆனால் அன்று காலையில் கண்விழித்தபோதே தனக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கத்தை உணர்ந்தார். முந்தைய தினம் நடந்த நிகழ்வுகள்
இரவு முழுவதும் அயர்ந்து உறங்கவிடாமல் செய்ய காலையில் கண்விழித்தபோது உடல் சோர்வுடன் மனச் சோர்வும் சேர்ந்து அவரை வெகுவாகப்
பாதித்தது.

அவர் தனக்கென்று எதுவும் வேண்டி கர்த்தரின் முன் நின்றதில்லை. அவருடைய மனைவியின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு தன்னுடைய மகள்,
மருமகன், பேரன் ஆகியோரின் நலனைத் தவிர வேறெதையுமே அவர் விரும்பியதில்லை. விடிகிற ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நல்லதாகவே
அமையவேண்டும் என்பதே அவருடைய அன்றாட பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால் அன்றோ வழக்கத்திற்கு மாறாக தனக்கும் அன்றைய தினம் நடப்பவையெல்லாம் நல்லதாகவே இருக்க வேண்டும் என்று எண்ணம்
அவரையுமறியாமல் மனதிற்கு எழ கண்களை மூடி கர்த்தரின் உருவப்படத்தின் முன் நின்றார். 'நமக்கு எது வேணும்னு கர்த்தருக்கு தெரியும்மா.
அப்புறம் எதுக்கு இது வேணும், அது வேணும்னு கேக்கணும்? அவர் சித்தத்தின் படியே ஆகட்டும்னு விட்டுறணும். எல்லாமே நல்லதுக்குத்தான்
நினைக்க ஆரம்பிச்சிட்டா அப்புறம் ஏமாற்றம்கறதே நம்ம வாழ்க்கையில இருக்காது.' இப்படி சொல்லி, சொல்லித்தான் மகளை வளர்த்தார்.

அந்த அறிவுரை வெறும் போலி பிரசங்கமாய் இல்லாமல் அவருடைய உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாய் சொன்ன வார்த்தைகள் என்பது அவரை
முழுவதுமாக உணர்ந்துவைத்திருந்த அவருடைய மனைவிக்கு தெரிந்திருந்தது. அப்படியொரு இறைபக்தியுள்ள குடும்பமாய் திகழ்ந்தது அந்த சிறிய
குடும்பம்.

எந்த ஒரு சூழலிலும் இறைவனை விட்டு பிரிவதில்லை என்பதை தன்னுடைய வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கையாய் வைத்திருந்தார் அவர்.
அவருடைய மனைவியுந்தான். திருமணமாகி பத்துவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாதிருந்தபோதும் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை
அவர்கள் இருவரும் இழக்கவில்லை. 'நமக்கு எப்ப தரணும்னு கர்த்தருக்கு சித்தமிருக்கோ அப்ப தருவார். நம்பிக்கைய மட்டும் இழந்துராத. பழைய
வேதாகம கதை நினைவிருக்கில்லே? சாராளுக்கு தள்ளாத வயதில் இறை தூதர் காட்சியளிச்சி ஒனக்கு ஒரு குழந்தை பிறக்கும்னு சொன்னப்போ
சாராள் கேலியாக சிரிச்சதை படிச்சிருக்கமே.. ஆனா என்ன ஆச்சி? இறைவனோட சித்தப்படித்தான நடந்துச்சி. புது வேதாகமத்துல யோவான்
அவருடைய பேரண்ட்சுக்கு எந்த வயசுல பிறந்தார்? இறைவனால முடியாதது ஒன்னுமில்லேங்கறதுக்கு இதவிட என்ன ஆதாரம் வேணும்?' இதுதான்
அவருடைய வாதமாக இருந்தது.

அவர் மீது உயிரையே வைத்திருந்த அவருடைய அன்பு மனைவியின் மரணத்திற்குப் பிறகும் அவருடைய மகளும் மருமகனும் வெளிநாட்டில்
குடியேறிய போதும் அவர் அந்த நம்பிக்கையை இழந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நம்பிக்கைதான் அவருடைய தனிமையிலும்
துணையாயிருந்தது.

கடந்த சில நாட்களாக அவருடைய அலுவலக வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் அவரை அந்த நம்பிக்கையிலிருந்து பிறழ
செய்துவிடவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் மனது கலக்கமடைந்திருந்தது என்பது மட்டும் உண்மை. குறிப்பாக நேற்றைய தினம்
இரவும் சிலுவை மாணிக்கம் நாடாருடன் பேசி முடித்தபிறகு சற்று அதிகமாகவே கலங்கிப் போயிருந்தார்.

கர்த்தரின் உருவப்படத்திற்கு முன்பு கண்களை மூடி நின்றிருந்தாலும் அவருடைய நினைவுகள் ஒரு நிலையில் நில்லாமல் அவரை அலைக்கழித்தன.
அன்றைய தினம் அவருடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு முக்கிய தினமாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்திருந்தாலும் அதனால் ஏற்படப்
போகும் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஏற்கனவே ஏதோ ஒரு தீய எண்ணத்துடந்தான் சேது மாதவன் அவரை நேற்றைய தினம் நடந்த பத்திரிகை நிரூபர் கூட்டத்தில் பங்குகொள்ள
முடியாமல் செய்தார் என்பதை உணர்ந்திருந்ததால் அவருடைய செயல் அவரை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து
சுந்தரலிங்கமும் தன்னை புறக்கணித்தது அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.

இந்த சூழலில் இன்று எப்படி அவருடைய முகத்தில் விழிக்கப்போகிறேன்.. அப்படியே அதை நான் பொருட்படுத்தாது அவருடன் அளவளாவ
முயன்றாலும் அவருடைய மனநிலை எப்படி இருக்கப் போகிறது?

இது போதாததுன்னு இன்னைக்கி டாக்டரோட பங்களாவுல கூடப்போற எம்.சி கூட்டத்துல மெம்பர்ஸ் நம்மள ஆக்டிங் சேர்மனா தேர்ந்தெடுக்க
முடிவு செஞ்சிட்டா வேற வெனையே வேணாம்.. இத நம்மாள தடுக்க முடியுமோ இல்லையோ அப்படியொரு சூழ்நிலை ஏற்படாம செய்ய முடியாதா?
என்ற ரீதியில் ஓடியது அவருடைய சிந்தனை.. பேசாம மாதவன் சார கூப்ட்டு நேத்து நாடார் சொன்னத சொல்லிட்டா என்ன? ஆனா அவர்
இப்பருக்கற மனநிலையில இதப்பத்தி சொல்லி மேற்கொண்டு வீணா டென்ஷனாக்கணுமா?

ஷ்ரில்ல்ல்ல்ல்ல்.. என்று ஒலித்த அவருடைய வீட்டு தொலைபேசி அவருடைய சிந்தனைகளை கலைக்க திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.
யாராருக்கும்? நாடாராருந்தா என்ன பண்றது? என்னன்னு சொல்றது? சொன்னாலும் மனுசன் புரிஞ்சிக்கற மூட்ல இருக்க மாட்டாரே? என்ன
பண்லாம் கர்த்தரே ஒரு வழி காம்பிங்களேன்.. என்றவாறு தன் முன் என்றும் மாறா இரக்கப் புன்னகையுடன் தோற்றமளித்த கர்த்தருடைய திருவுருவ
படத்தைப் பார்த்தார்.

தொலைப்பேசி தொடர்ந்து ஷ்ரில்லிட வேறு வழியின்றி கர்த்தரே ப்ளீஸ் ஹெல்ப் மீ டு ஃபேஸ் வாட்டெவர் கம்ஸ் பிஃபோர் மி டுடே.. என்றவாறு
எடுத்து தயக்கத்துடன் ஃபிலி ஹியர் என்றார்...

******

'நேத்தைக்கி கொஞ்சம் ஜாஸ்தியாவே சாப்ட்டுட்டீங்க சார்.' என்றான் திரு, 'அதான் டீ போடாம கொஞ்சம் ஸ்ட்ராங்கா காப்பி போட்டு
கொண்டாந்துருக்கேன்.. ஜீனியும் போடல.' படுபாவிப் பய ஒரு நாளப் போல இப்படி குடிக்கான். இவனுக்கு ஒன்னும் ஆவ மாட்டேங்குதே..
என்றான் மனதுக்குள்..

நேற்றைய போதை இன்னும் கலையாத நிலையில் மூடிய கண்களைத் திறக்காமல் தன் முன் நின்றவனைப் பார்த்தார் சேதுமாதவன். இவன் மட்டும்
இல்லன்னா என்னாவறது? தமிழன்மார் தமிழன்மார்தான்.. எத்தற பறஞ்சாலும் இவந்தான் எத்தற ஸ்நேகத்தோட ராவில எழுந்து காப்பி கப்போட..
'மாயா எழுந்தாச்சா?' என்றார் திருநாவுக்கரசு நீட்டிய கோப்பையை வாங்கியவாறு. 'அவ எங்க எழுந்திருக்கப் போறா?' என்றார் அவரே பதிலுக்கு.

திரு லேசாக புன்னகைத்தான். அவனுடைய எஜமானி என்றைக்கி எட்டு மணிக்கி முன்னால எழுந்ததாக சரித்திரமே இல்லையே.. ஆனால் சேது
ராத்திரியில் எத்தனை பெக்குகளை உள்ளே தள்ளினாலும் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அவனை வியப்புக்குள்ளாமல்
இருந்ததே இல்லை. எப்படி இந்த மனுசனால மட்டும் முடியுது? உள்ளுக்குள்ள எதாவது இருந்தாத்தான? எல்லாம் எரிஞ்சி போயிருக்காது?

'சூப்பர் காப்பியானடா திரு.. இனி இதன்னே மதி.. டெய்லி..' என்றவாறு காப்பியை உறிஞ்சி குடித்த சேதுமாதவன் காலி கோப்பையை குறு
மேசையில் வைத்துவிட்டு எழுந்து நின்று கரங்களை தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தார். 'எடோ இந்நத்த திவசம் வளற
இம்ப்பார்ட்டண்டான.. சிம்பிளாய்ட்டு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாக்கியா மதி.. எனிக்கி வேகம் ஆஃபீஸ் செல்லணும்.. டிரைவர் வந்ந வழிக்கி வண்டிய
கழுகி ரெடியாக்கம் பற... ஞான் குளிச்சிட்டு வராம்.' என்றவாறு அவருடைய அல்ட்றா மாடர்ன் குளியலறைக்குள் நுழைய, 'சரி சார்.' என்றவாறு காலி கோப்பைகளை எடுத்துக்கொண்டு படியிறங்கினான் திரு..

இன்னைக்கி மாத்தரம் நா நெனச்சது நடந்துருச்சினா எண்டெ குருவாயூரப்பா ஞான் எந்து வேணங்கிலும் செய்யாம்.. கோல்டு வேணோ.. டைமண்ட் வேணோ.. எந்து வேணுங்கிலும் ச்செய்யாம்.. ஆனால் இன்னைக்கி மாத்தரம் ஞான் நெனச்சது நடக்கலே?...

குருவாயூரப்பன் வேணுமானால் சர்வ வல்லமைப் படைத்த கடவுளாயிருக்கலாம்.. சேதுமாதவனைப் பொறுத்தவரை அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க வேண்டிய சிப்பந்திதான்....

அவர் நினைத்ததை நிறைவேற்றிவைத்துவிட்டால் ஆயிரம், லட்சம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்பது அந்த குருவாயூரப்பனுக்கே தெரியும்..

ஹாட்.. அண்ட் கோல்ட் என அதிநவீன ஷவரின் துளிகள் ஊசியாய் ஆக்ரோஷத்துடன் அவருடைய உடம்பைக் குத்த அன்றைய தினத்தில் தனக்கு கிடைக்கவிருந்த சேர்மன் பதவியைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துப் போனார் சேதுமாதவன் அடுத்த சில நிமிடங்களில் தன்னை நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தை உணராதவராய்...

தொடரும்..

16.3.07

சூரியன் 184

'இப்ப என்ன நடக்கும்னு நினைக்கீங்க ரவி?'

தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் நாராயணசாமியைப் பார்த்தான் ரவி. அவனருகில் கவலையுடன் மஞ்சு.

'தெரியலையே சார்.. புது சேர்மன் சார்ஜ் எடுத்திருக்கறது எனக்கு நல்லதுதான்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துல இப்படி.. என்ன சொல்றதுன்னே தெரியல சார். எல்லாம் என் நேரம்னு நொந்துக்கறத தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியல..'

'எதுக்கு ரவி நிராசையா பேசறேள்?' என்றார் நாராயணசாமி. 'இப்ப என்ன? ஒங்க சேர்மன் மும்பைக்கு போனா திரும்பி வராமயா போயிருவாரு? ஒங்க என்க்வயரிய ப்ரிப்போன் பண்ண முடியுமான்னு கேட்டுருக்கோம். ஒங்களுக்கு சேர்மன் திருப்பி வந்ததுக்கப்புறம் நடத்தினா போறும்னு தோனிச்சின்னா சொல்லுங்க.. மறுபடியும் ஒரு பெட்டிஷன் போட்டுப் பார்ப்போம். இப்பருக்கற சூழ்நிலையில ஒங்க என்க்வயரி ஆஃபீசரே நம்ம ப்ரீப்போன் பெட்டிஷன ரிஜெக்ட் பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.. டோண்ட் ஒர்றி.' என்றவர் மஞ்சுவைப் பார்த்தார். 'நீ சொல்லும்மா.. ரவிக்கு இப்ப தேவை கான்ஃபிடன்ஸ்.. அத மட்டும் இழந்துறக்கூடாது.'

மஞ்சு தன் அருகில் அமர்ந்திருந்த ரவியின் கரங்களை ஆதரவாய் பற்றினாள். 'ஆமா ரவி. அங்கிள் சொன்னா மாதிரி நம்பிக்கையோட இருங்க. நம்மள மீறி எதுவும் நடக்கப் போறதில்லை.'

ரவி சரியென்று தலையை அசைத்தான். 'நீங்க சொல்றதும் ஒருவகையில பார்த்தா சரியாத்தான் தோனுது சார். ஆனாலும் எங்க சேர்மனுக்கு இப்படியொரு சங்கடம் வந்திருக்க வேணாம்.. அந்த பையன பார்த்தாலும் பாவமாருக்கு.. அவனெ ரிலீஸ் பண்ணிட்டாலும் மும்பையிலருந்து வெளியேறக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுருக்கறதால சாரால அவ்வளவு சீக்கிரம் அந்த பையன அங்க விட்டுட்டு வருவாரான்னு சந்தேகம்தான்.. சார் இல்லாத நேரத்துல இந்த மாதிரி எச்.ஆர் மேட்டர்ச டீல் பண்ற எச். ஆர். கமிட்டியும் கூடறதுக்கு சான்ஸ் இல்லேன்னுதான் நினைக்கறேன்...'

நாராயணசாமி புன்னகையுடன் எழுந்து நின்றார். 'அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.. So don't worry.. அது எப்ப நடந்தாலும் ஒங்க பக்கம்தான் சாதகமா முடியும்.. என்க்வயரி டேட் நீண்டு போறது நமக்கு நல்லதுதான்.. இன்னும் ஸ்ட்ராங்கா ப்ரெசண்ட் பண்லாமே.. கவலைய விடுங்க.. வேணும்னா ரெண்டு பேரும் எங்கயாச்சும் வெளியூர் போய்ட்டு வாங்க.. என்ன மஞ்சு.. ஏதாச்சும் ஐடியா வேணும்னா மாமிய கேளு.. அவளுக்கு தமிழ்நாட்ல தெரியாத கோயில் குளமே கிடையாது.. டூரிஸ்ட் ஸ்பாட்சும் அவளுக்கு அத்துப்படி.. நாளைக்கி கார்த்தால நா கெளம்பி போனதுக்கப்புறம் ஃப்ரீயாத்தான இருப்பா.. அப்போ டிஸ்கஸ் பண்ணுங்க.. நா வரேம்மா.. நா வரேன் ரவி.. No use in worrying about something which is not under our control.. எல்லாம் பகவான் விட்ட வழின்னு நினைச்சிக்கணும்.. bye..'

நாராயணசாமியை வழியனுப்பிவிட்டு திரும்பிய ரவி யோசனையுடன் தன் அறையை நோக்கிச் சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற மஞ்சு சன்னல் வழியாக சாலையைப் பார்த்தவாறு நின்றிருந்தவனை பின்னாலிருந்து கட்டிப் பிடித்தாள். 'அங்கிள் சொன்னா மாதிரி எங்கயாச்சும் போய் வரலாம் ரவி.. பழனிக்கி போலாம்.. அங்கருந்து அப்படியே கொடைக்கானல் போய்ட்டு ஒரு ரெண்டு வாரம் கழிச்சி வரலாம்.. என்ன சொல்றீங்க?'

ரவி சரி என்று தலையை அசைத்தவாறு தன்னை அணைத்திருந்த மஞ்சுவின் கரங்களைப் பற்றினான்.. நேரம் போவதே தெரியாமல் இருவரும் அப்படியே நட்சத்திர குவியலாய் இருந்த நீல வானத்தை பார்த்தவாறு நின்றிருந்தனர்... கீஈஈஈஈழே.. சப்தமில்லாமல் வரிசையாய் வாகனங்கள்...

********
'சார்.. நீங்க சொன்னா மாதிரியே சர்ச் வாரண்ட் தயாரிச்சி வச்சிருக்கேன்.. காலையில முதல் வேலையா....'

தனபால் சாமி பொறுமையிழந்து கத்தினார், 'எதுக்குய்யா நாளைக்கு காலைல வரைக்கும்.. இப்பவே போய் கோழிய அமுக்குறா மாதிரி அமுக்குறத விட்டுட்டு...'

என்ன இது என்னைக்குமில்லாம என்ற குழப்பத்துடன் பார்த்தார் அவருடைய உதவி அதிகாரி. தனபால்சாமி பொறுமைக்கும் நிதானமாக யோசித்து செயல்படுவதற்கு பெயர்போனவர் என்பது அவருக்கு தெரியும்..

ஆகவே ஏன் இந்த விஷயத்தில் மட்டும் இப்படி என சிந்தித்தவர், 'சார்.. இப்பவே எட்டு மணியாயிருச்சி.. இதுக்கு மேல போயி.. நமக்கு ஏற்கனவே இந்த பாம்ப் பளாஸ்ட் ட்யூட்டி வேற இருக்கு சார்... நீங்க வந்ததும் சொல்லிட்டு போலாம்னுதான் நான் வெய்ட் பண்றேன்.. அதுவுமில்லாம அந்த ஏரியா ஸ்டேஷன்ல சொன்னாலே போறுமே சார்.. நாமளே ஏன் நேரடியா...' என்றார் தயக்கத்துடன்.

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்கியவாறு தன் எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்தார் தனபால் சாமி. அவர் கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்து தன் இருக்கையில் ஆயாசத்துடன் அமர்ந்தார். 'நீங்க சொல்றதும் சரிதான்யா.. நீங்க நம்ம ஏரியாவுக்கு போய் கோஆர்டினேட் பண்ணுங்க.. காலையில வாரண்ட ஏரியா எஸ்.ஐக்கு அனுப்பி அந்தாள் வீட்ட சர்ச் பண்ண சொல்லுங்க.. மீறி ஏதாச்சும் பண்ணா நாம இண்டர்ஃபியர் பண்லாம்.. நாமளா நேரடியா போயி பிரச்சினையானா ஒங்களுக்கு இதுல என்னய்யா பர்சனல் இண்ட்ரஸ்ட்டுன்னு டி.ஜி.பி கேட்டா நம்மளால பதில் சொல்ல முடியாது.. மேடத்துக்கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சின்னும் வெளிப்படையா சொல்ல முடியாது.. ச்சை... நாம செய்யறது சரின்னு நமக்கு தோனுனாலும் இந்த ஃபார்மாலிட்டியையெல்லாம் பாக்கத்தான வேண்டியிருக்கு...'

எஸ்.பி தன்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த உதவி அதிகாரி அவர் பேசி முடிக்கும் வரை மரியாதை நிமித்தம் நின்றிருந்துவிட்டு இறுதியில் விறைப்புடன் வணக்கம் செலுத்திவிட்டு அறையை விட்டு வெளியேற தனபால்சாமி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினார்.

********

சிலுவை மாணிக்கம் நாடாரிடம் பேசி முடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்த சோமசுந்தரம் தன் எதிரில் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தார்.

'நாளைக்கு நம்ம ஈ.சி.ஆர் பங்களாவுல மீட்டிங் வைக்கலாம்னு சொல்றார். நீயும் வரியா?'

'என்னப்பா கிண்டலா? நா எதுக்கு?' என்றாள் பூர்ணிமா புன்னகையுடன்..

சோமசுந்தரம் சிரித்தார். 'இல்லம்மா சீரியசாத்தான் சொல்றேன்.. எனக்கப்புறம் நீதான போர்ட்ல இருக்கப் போற?'

'என்னது நானா? என்னப்பா புதுசா? நீங்க நம்ம வேணுகோபால் அங்கிள இல்ல சஜ்ஜஸ்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்.'

'ஆமாம்மா.. அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.. ஆனா அவருமில்ல இந்த ஸ்கேண்ட்லல்ல மாட்டிக்கிட்டிருக்கார்? அவர்தான அந்த கம்பெனியில டைரக்டர்? அந்த லோன எப்படியாவது இன்னும் ஒருவாரத்துக்குள்ள க்ளோஸ் பண்ணணும்.. அதுக்கப்புறம் கூட அவர நம்ம போர்ட்ல சேக்கறதுல இப்ப எனக்கு இஷ்டம் இல்ல பூர்ணி.'

'ஏன் எதுக்கு இப்படி சொல்றீங்க? நம்ம கிட்ட விசுவாசமாத்தானப்பா இருந்திருக்கார்?'

'அதுக்கு சொல்லலம்மா.. இந்த விஷயத்த அவர் டீல் பண்ண விதம் சரியில்லேன்னு நினைக்கேன்.. அந்த ரிசர்வ் பேங்க் ஆள் போர்ட்லருந்து விலகாம இவர் பாத்துருக்கணும்.. அத விட்டுட்டு அவர் கோச்சிக்கிட்டு போறவரைக்கும் அங்கயே இருந்தும் இவரால தடுக்க முடியல இல்ல? அப்படியிருக்கறவர நம்பி எப்படி இங்க போடறது? அது சரிவராது.. நமக்கு பேங்க்ல இருக்கற ஸ்டேக்குக்கு நம்ம குடும்பத்துலருந்த ஒருத்தர் போர்ட்ல இருக்கறதுதான் நல்லதுன்னு படுது.. அதுக்கு ஒன்னெ விட்டா வேற யார் இருக்கா?'

பூர்ணிமா யோசனையுடன் எழுந்து சோமசுந்தரத்தின் நீண்ட அறையின் குடுக்கும் நெடுக்கும் நடந்தாள்.. 'சரி டாட்.. நாளைக்கி என்ன திடீர்னு.. என்ன டிசைட் பண்ண போறீங்க?'

'எல்லாம் இந்த சேதுவோட தொல்லைய தாங்க முடியாமத்தான். நீதான் நாடார் கிட்ட நா பேசறத கேட்டியே? மாதவன் வேற திடீர்னு சொல்லாம கொள்ளாம மும்பை கிளம்பிப் போய்ட்டார்.. சேதுவுக்கும் அவருக்கும் நடுவுல ஏற்கனவே பிரச்சினை.. இத சாக்கா வச்சிக்கிட்டு மும்பை போயிருக்கற மாதவன் இப்பத்தைக்கி திரும்பி வர சான்ஸ் இல்லை.. அதனால என்னெ ஆக்டிங் சேரமனா போடுங்கன்னு கேக்கார்.. அதுக்கு நாடார் நிச்சயம் ஒத்துக்கமாட்டார்னு தெரியும். அதான் நான் போர்ட்ல இல்லாத நேரத்துல பிரச்சினை வேணாம்னுட்டு அவர கூப்ட்டேன்.. அவர் நா நெனச்சா மாதிரியே அந்த குடிகார பயல போடறதான்னு எகிர்றார்.. அநேகமா அவர் அந்த ஃபிலிப்ப சொல்வாருன்னு நினைக்கேன்.. அதுவும் ஒருவகையில டேஞ்சரான விஷயம்.. அவர் நேர்மையானவர்தான்னாலும் இந்த நாடார நம்ப முடியாது.. அவர ஆட்டி படைச்சிருவார்.. அதான் இப்பருக்கற எம்.சி மெம்பர்ச கூட்டி நாளைக்கி அன்னஃபிஷியலா பேசிரலாம்னு பாக்கோம்.. நாங்க என்ன டிஸ்கஸ் பண்றோம்னு நீ தெரிஞ்சிருந்தாத்தான அடுத்த போர்ட்ல இந்த டிஸ்கஷன் வர்றப்போ ஒன்னால ப்ராப்பரா டீல் பண்ண முடியும்? அதான் நீயும் வாயேன்னு சொல்றேன்.. என்ன சொல்றே?'

தன்னுடைய நடையை நிறுத்திவிட்டு தன் தந்தை அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்த பூர்ணிமா, 'Tell me Dad.. Are you really serious in nominating me to the Board.. Do you think I have the right credentials?' என்றாள் சீரியசாக..

அவளுடைய முகபாவனையைக் கண்டு உரக்கச் சிரித்தார் சோமசுந்தரம்.. 'ஏய்... என்ன அதுக்குள்ள பந்தாவா?' பிறகு புன்னகையில்லாத முகத்துடன் தன் மகளைப் பார்த்தார். 'ஆமாம்மா.. I believe that you are the right person to replace me..'

பூர்ணிமா புன்னகையுடன் தன் தந்தையின் கரங்களைப் பற்றி குலுக்கினாள். 'தாங்ஸ்ப்பா... I will do my best.. நாளைக்கி புறப்படறப்போ சொல்லுங்க.. நானும் வரேன்.. குட் நைட்..'

சோமசுந்தரம் புன்னகையுடன் தன் கரங்களைப் பற்றிய தன் மகளின் கரங்களை இறுக அழுத்தி குலுக்கினார். பிறகு வாசல்வரை சென்று அவளை வழியனுப்பிவிட்டு திரும்பி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு விளக்குகளை அணைத்துவிட்டு தன்னுடைய படுக்கையறையை நோக்கி மெள்ள நடந்தார்..

தொடரும்..

15.3.07

சூரியன் 183

'என்னடே இப்ப என்ன செய்யறதா உத்தேசம்?'

ரத்தினவேலுவின் குரலிலிருந்த எகத்தாளம் ராசேந்திரனுக்கு எரிச்சலை அளித்தாலும் அதைக் கவனியாதவன்போல் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.

'துண்ட தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு ஊரப் பாக்க ஓடிற வேண்டியதுதான்.. அதான நினைக்கே?'

விடமாட்டார் போலிருந்தது... எதையாவது சொல்லி தற்போதைக்கு சமாளிக்க வேண்டும். ரெண்டு நாளா தாகத்த தணிக்க முடியாம நா படற பாடு இவருக்கெங்க தெரியப் போவுது. அங்க பயலுக நம்மள காணமேன்னு சோர்ந்துப் போயிருப்பான்க.. ராவா (raw) ரெண்ட உள்ள தள்னாதான் மேக்கொண்டு என்ன செய்யலாம்னு ஐடியா வரும்..

அதுக்கு என்ன வழி?

'என்னடே நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன்.. என்ன யோசன பெருசா.. ஏதோ கோட்டைய புடிக்கறாப்பல.. அதத்தான் கோட்டை விட்டுப்போட்டு வந்து நிக்கமே..'

எதையாவது சொல்லி இவருடைய வாயை அடைக்க வேண்டும். ஆனால் என்ன சொல்வது என்றுதான் விளங்காமல் மவுனம் சாதித்தான் ராசேந்திரன். மோகனுடைய அலுவலகத்திலிருந்து வெளியேறுகையில் ஆடிட்டர் பாலசுந்தரம் தன்னை எச்சரித்தது நினைவுக்கு வர அதுவும் இவருக்கு தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம். தன் முகத்தின் மீது காறித் துப்பிவிட்டு ஊரை பாக்க போய்விடுவார் என்பதை உணர்ந்திருந்தான் அவன்.

'எடே ஒன்னெத்தான்.. காது செவிடாயிருச்சா. இல்ல இந்த கெளப் பயலுக்கு எதுக்கு பதில் சொல்லணும்னு பாக்கியா?'

இனியும் மவுனமாயிருந்தால் சரிவராது என்பதை உணர்ந்த ராசேந்திரன் எரிச்சலுடன் திரும்பி, 'இப்ப என்ன பண்ணணுங்கறீங்க?' என்றான்.

ரத்தினவேலு எகத்தாளமாக சிரித்தார். 'டே.. இங்க பார்றா.. கோவம் வேற வருதாக்கும் தொரைக்கி? நீ செஞ்சிருக்கற வேலைக்கி.. ஒன்னெ.. என்ன செஞ்சாலும் தகும்லே.. பொன் முட்ட போடற வாத்த கழுத்தறுத்து கொன்னதுமில்லாம.. எலேய்.. நம்ம கிட்ட சம்பளம் வாங்கி கைகட்டி நிக்க வேண்டிய பயலுவதானல்ல அந்த மோகனும்.. அந்த ஆடிட்டரும்.. அவனுங்க முன்னால தலைய குனிய வச்சிட்டு இப்ப என்ன பண்ணணுங்கறீகளாக்கும்?.. சரீஈஈஈ.. அது கெடக்கட்டும் கார்ல வர்றப்பவே கேக்கணும்னு நினைச்சேன்.. டிரைவர்பய இருக்கானேன்னு பேசாம இருந்தேன்.. நா வெளிய வந்ததுக்கப்புறம் அந்த ஆடிட்டர் பய ஒன்கிட்ட ஏதோ சொன்னாப்பலருக்கு? என்ன விசயம்? ஒம் மொகம் அப்படியே பேயறைஞ்சாப்பலாயிருச்சே.. என்னடே.. என்ன விசயம்? வேற ஏதாச்சும் எனக்கு தெரியாம செஞ்சி வச்சிருக்கியா?'

ராசேந்திரன் ஒரு நொடி உண்மையைக் கூறிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அடுத்த நொடியே இப்போதிருக்கும் தொல்லையில் இதுவும் சேர்ந்துக்கொண்டால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்து இல்லை என தலையை அசைத்தான்.

'அப்படின்னா.. என்னடே.. என்ன சொல்ல வரே? அவன் ஒன்னும் சொல்லலேன்னு சொல்றியா? இல்ல நீ ஒன்னும் செய்யலேங்கறியா?'

பொங்கிவந்த எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, 'நீங்க நெனக்கறா மாதிரி ஒன்னும் இல்லேன்னு அர்த்தம்.' என்றான்.

'நான் நெனக்கறா மாதிரின்னா? நா என்ன எளவ நெனக்கேங்கறத கண்டுபிடிச்சிட்டீங்களாக்கும்? சரி.. அது போட்டும்.. இப்ப என்ன செய்யலாம். அதச் சொல்லு?'

'அப்படீன்னா? வெளங்கல..'

'எலேய்.. வெளங்கலையா இல்ல வெளங்காத மாதிரி நடிக்கியா?'

என்னடாயிது ரோதனை என்று நொந்துப்போன ராசேந்திரன் இங்கிருந்து போனால்தான் தன் தந்தையிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நோக்கத்துடன் எழுந்து நின்றான். 'நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்..'

ரத்தினவேலு கோபத்துடன் எழுந்து வழிமறித்தார். 'எலேய் நா இங்க ஒருத்தன் வேல மெனக்கெட்டு கத்திக்கிட்டிருக்கேன்.. நீ வெளியில கெளம்பறியோ.. எதுக்கு? அந்த வெட்டிப்பயல்வளோட சேர்ந்து குடிக்கத்தான?'

ராசேந்திரன் வெறுப்புடன் அவரைப் பார்த்தான். 'இப்ப நீங்க எத கேட்டாலும் எங்கிட்ட பதிலில்லை... நீங்க சொன்னா மாதிரி என் கூட்டாளி பயல்களோட பேசினாத்தான் எதாச்சும் ஐடியா வரும்.. நீங்க பேசாம எதையாச்சும் வாங்கி வரச் சொல்லி சாப்ட்டுட்டு படுங்க.. காலைல பேசிக்கலாம்..'


அவனுடைய பதிலிலிருந்த ஏளனம் ரத்தினவேலுவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.. ஆவேசத்தில் உதடுகள் துடிக்க ராசேந்திரனின் சட்டையை ஒரே கொத்தாய் பிடித்து உலுக்கினார். 'என்னலே சொன்னே.. எதையாச்சும் தின்னுட்டு தூங்கவா?.. எலேய்.. சாப்பிடறது.. தூங்கறதுன்னா என்னன்னே தெரியாம வளந்த ஒடம்புடா இது.. குடிகாரப் பய மவனே.. யார பாத்து என்ன பேசறே? நம்மள ரெண்டு வேலைக்கார பய புள்ளங்கக் கிட்ட ஏச்சு வாங்க வச்சவன ஒன்னு தூங்க விடாம பண்ணணும்.. இல்ல நிரந்தரமா தூங்க வச்சிரணும்.. அதுக்கப்புறந்தாண்டா மத்த சோலியெல்லாம்..'

ராசேந்திரனுக்கு அவருடைய நோக்கம் தெளிவாக தெரிந்தாலும்... 'என்ன சொல்றீங்க நீங்க? தெரிஞ்சிதான் பேசறீங்களா?' என்றான் அதிர்ச்சியுடன்.. 'என்னாலெல்லாம் அப்படி நெனச்சிப் பாக்கக் கூட முடியாது.. கொலைங்கறது ஒங்களுக்கு வேணும்னா ஈசியா படலாம்.. ஆனால் எனக்கு அப்படியில்லை. என்னெ விடுங்க.. என்ன செஞ்சாலும் யோசிச்சித்தான் செய்யணும்...'

சட்டையின் மீதிருந்த ரத்தினவேலுவின் கரங்களை விலக்கிவிட்டுவிட்டு வாசலை நோக்கி ராசேந்திரன் நடக்க, 'போடே.. போ.. ஒன்னெ நம்பி நா இல்லடே.. என்ன செய்யணுமோ அத நானே செஞ்சிக்கறேன்.. எப்ப அவன் இந்த அளவுக்கு வந்துட்டானோ ஒன்னு அவன் இருக்கணும்.. இல்ல நானு.. முதுகெலும்பில்லாத பய.. ஒன்னெ நம்பி இருந்தேன் பார்.. என்னெய சொல்லணும்... தொட நடுங்கிப் பய.. போ.. மூக்குபுடிக்க குடிச்சிட்டு எங்கயாச்சும் உருளு...'

கோபத்தில் நடுங்கும் கரங்களுடன் ஹாலிலிருந்த தொலைப்பேசியை எடுத்து டயல் செய்து எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'எலேய்.. நாந்தாம்லே.. இன்னைக்கி ராத்திரி பஸ்சுக்கு கெளம்பி வா.. நம்ம பயலுவள கூட்டிக்கோ.. வீட்டுக்கு வந்து தொலைச்சிராதீங்கலே.. தாம்பரம் வந்ததும் எனக்கு இந்த நம்பருக்கு போன் போடு.. செல்லுல கூப்டாதீங்கலே.. வம்பு.. நீங்க என்ன செய்யணுங்கறத நேர்ல சொல்றேன்.. என்னடே.. எலேய் இங்கருக்கற பயலுகல நம்பமுடியாமத்தானே ஒன்னையெ கூப்டறேன்.. காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிப் போட்டுட்டு ஊர பாக்க போயிருங்கலே.. பொறவு நடக்கறத நா பாத்துக்கறேன்.. என்ன சொல்லுதே..?' என்றார் கடகடவென்று..

'....'

'அதெல்லாம் பாத்துக்கலாம்லே.. இதுக்கு முன்னாடி நீ செஞ்சதுக்கெல்லாம் சொன்னா சொன்னபடி குடுத்துருக்கேன்லேல்லே.. பெறவென்ன.. பேசாம பொறப்பட்டு வா.. பேசிக்கிருவோம்.. எலேய்.. உன் கூட்டாளி பயலுகளுக்குக் கூட என்ன வெசயமா மதறாசுக்கு வரோம்னு தெரியப்படாது.. என்ன வெளங்குதா? வச்சிடறேன்..'

பேசி முடித்துவிட்டு வைத்துவிட்டு தொலைப்பேசியையே பார்த்தவாறு நின்றிருந்தார் ரத்தினவேலு.. 'எலேய் சிலுவை.. நாளைக்கின்னேரம்.. மணிய எண்ணிக்கலே... எண்ணிக்க..'

*********

'How are they Doctor?'

'Your Son will survive.. I am more worried about your wife...'

மாதவன் திகைப்புடன் மருத்துவரைப் பார்த்தார், 'என்ன சொல்றீங்க டாக்டர்?'

ஐந்து நட்சத்திர விடுதியின் பிரம்மாண்டத்துடன் அமைந்திருந்த மருத்துவமனையின் தலைவருடைய நேர்த்தியான அறையில் அமர்ந்திருந்த மாதவனுக்கு அறையிலிருந்த குளிர்சாதன பெட்டி முழுவீச்சில் இயங்கியபோதும் பதற்றத்தில் வியர்த்துக்கொட்டியது.

மும்பையின் மிகப் பிரபலமான மருத்துவமனைகளுள் அதுவும் ஒன்று. சீனிவாசன் முயற்சித்தது தற்கொலைதான் என்றாலும் மாதவனுடைய முந்தைய வங்கி முதல்வருக்கு மருத்துவமனையின் இயக்குனர்கள் குழுவிலிருந்த பல இயக்குனர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் அவருடைய வங்கி மருத்துவமனைக்கு பெருமளவு கடன் வழங்கியிருந்ததால் என்ன ஏது என்று கேட்காமலே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையையும் துவங்க முடிந்தது.

'உங்க மகனுக்கு நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கு மிஸ்டர் மாதவன். இருந்தாலும் அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அவரால் இதிலிருந்து மீள முடியும் என்றுதான் கருதுகிறேன்.. ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.. It might take some time.. He has also aggravated the fracture in his leg.. அதையும் ஒரு சர்ஜரி செஞ்சித்தான் கரெக்ட் பண்ண முடியும்..'

மருத்துவர் அடுத்து சற்று நேரம் தன் முன்னே மிர்ஸ். சரோஜா என்ற பெயர் பொறித்திருந்த கோப்பை ஆராய்ந்தார். 'She is the one who is more critical.. ஏற்கனவே அவங்க ப்ளட் ப்ரஷர் அளவுக்கதிகமா இருந்துருக்கு.. அதான் அவங்களால அதிர்ச்சிய தாங்கிக்க முடியல.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது மிஸ்டர் மாதவன்.. I am sorry. அவங்களுக்கு வந்துருக்கற Speech loss temporaryயா இருக்கலாம்.. அதுபோலத்தான் paralytic attackகும்.. கோமாவுல போயிருக்க வேண்டியவங்க.. She must be really fortunate... அதுலருந்து தப்பிச்சிட்டாங்க.. அவங்களுக்கு இருக்கற ப்ரஷர் லெவல்ல she could have gone into a coma.. yes.. it was possible .. சோ.. அவங்க கண்டிஷந்தான் ரொம்பவும் க்ரிட்டிக்கல்.. சீனிவாசன் is comparatively better....'

மணிக்கட்டுகளிலிருந்து வழிந்தோடிய ரத்தத்துடன் குளியலறையில் கிடந்த சீனிவாசன் மீதுதான் எல்லோருடைய கவனமும் சென்றிருந்ததே தவிர சோபாவில் மூர்ச்சையாகி விழுந்திருந்த சரோஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையோ அல்லது அதன் விளைவாக ஒரு பக்க காலும் கையும் செயலற்றுப்போனதையோ வீட்டிலிருந்த யாரும் கவனிக்கவில்லை...

சீனிவாசனுக்கென வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தபோதுதான் மூர்ச்சையாகிக் கிடந்த தன் மனைவியைப் பற்றியே நினைவே வந்தது மாதவனுக்கு. விட்டு, விட்டு வந்துக்கொண்டிருந்த சுவாசத்தைக் கவனித்த வத்ஸ்லா, 'டாடி இங்க பாருங்க.. Mummy is struggling to breath..' என்று அலற அவளையும் அதே ஆம்புலன்சில் அள்ளிப் போட்டுக்கொண்டு விரைந்தனர் இருவரும்..

மருத்துவரின் பதிலைக் கேட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டு விசும்பும் வத்ஸலாவை எப்படி தேற்றுவதென விளங்காமல் மாதவன் அமர்ந்திருக்க அவர்களை தனிமையில் விட்டு அறையை விட்டு மெள்ள வெளியேறினார் மருத்துவர்..

தொடரும்..

7.3.07

சூரியன் 182

பாபு சுரேஷ் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

'என்னங்க இது? ஒங்க பேங்க்ல வேல பாக்கற எல்லாருக்கும் ஏதாச்சும் பிரச்சினை போலருக்கே.' என்ற தன் மனைவியை திரும்பி பார்த்தார். 'ஏன் அப்படி சொல்றே.. நமக்கு என்ன பிரச்சினை இப்போ?'

சுசீந்தரா வியப்புடன் தன் கணவனைப் பார்த்தாள். 'என்னங்க ரொம்ப கூலா சொல்றீங்க.. போன ரெண்டு நாளா ரம்யாவ காணாம நாம பட்ட பாட்டை மறந்துட்டீங்களா?'

ரம்யா சிரித்தாள். 'அதான் இப்ப தீர்ந்துருச்சேம்மா? இன்னும் என்ன?'

'என்னமோ போ.. அத நெனச்சிப் பாக்கவே பயமாருக்கு.. நம்மள மாதிரிதானே இப்ப இந்த பையனோட அப்பாவுக்கும் இருக்கும்? பாவம் இப்பத்தான் பேங்க்ல ஜாய்ன் பண்ணியிருக்காரு.. அதுக்குள்ள இப்படி?' என்ற சூசீந்தரா தன் கணவனைப் பார்த்தாள். 'இப்ப என்ன ஆவுங்க?'

பாபு சுரேஷ் பதிலளிக்காமல் தொலைக்காட்சியில் மாதவனின் மகன் விடுவிக்கப்பட்டதாகவும் ஆயினும் அவர் மும்பையிலிருந்து செல்லலாகாது என காவல்துறை அதிகாரிகள் பணித்திருப்பதாகவும் கூறுவதை கேட்டுவிட்டு தன் மனைவி மற்றும் மகளைப் பார்த்தார். 'என்னன்னு தெரியலையே.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போகாததுனால அங்க என்ன நடக்குதுன்னே தெரியலை. மாதவன் சார் ஒருவேளை புறப்பட்டு போயிருப்பார். இவங்க சொல்றத பார்த்தா அவர் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வர வாய்ப்பில்லை.. இதுக்கிடையில என் பாடும் திண்டாட்டம்தான் போலருக்கு.'

'ஏம்ப்பா அப்படி சொல்றீங்க? இதுல ஒங்களுக்கு என்ன ரோல்?' என்றாள் ரம்யா.

'இருக்கும்மா' என்றவர் முந்தைய நாள் தன்னை தலைமையகத்துக்கு மாற்ற டாக்டர் சோமசுந்தரம் பரிந்துரைத்ததை விவரித்தார். 'ஆனா அந்த இன்னொரு டைரக்டர் நாடாருக்கு டாக்டரோட சஜ்ஜஷன் புடிக்கலைன்னு நினைக்கேன். அதுவுமில்லாம டாக்டரும் நேத்தைக்கே போர்டலருந்து ரிசைன் பண்ணிட்டார். இப்போ சேர்மனுக்கும் பிரச்சினை.. அதனாலதான் யோசனையாருக்கு.. இதுக்கிடையில இந்த கல்யாண வேலை..'

ரம்யா , 'இத சாக்கா வச்சிக்கிட்டு கல்யாணத்த கொஞ்சம் தள்ளிப் போட்டா என்னப்பா?' என்றாள் ஒரு விஷம புன்னகையுடன்..

சுசீந்தரா எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்தாள். 'பார்த்தீங்களா இவ பேசறத?'

பாபு சுரேஷ் புன்னகையுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'ச்சே.. அவ சும்மா கேலிக்கி சொல்றா. நீ வேற புலம்ப ஆரம்பிச்சிராத.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. கல்யாணத்துக்கு இன்னும் மூனு வாரம் இருக்குல்லே.. அதுக்குள்ள எல்லாம் சரியாயிரும்..' என்றவர் எழுந்து தொலைக்காட்சியை அணைத்தார். 'சரி.. போய் படுங்க.. நாளைக்கி இன்னும் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்குல்லே..'

சுசீந்தரா எழுந்திருக்க முடியாமல் எழுந்து நிற்க ரம்யா புன்னகையுடன் போய் அவளை அணைத்துக்கொண்டாள். 'ஏம்மா நீ கொஞ்சம் வெய்ட்ட குறைக்கலாம் இல்லே...?'

'ஆமாடி.. சொல்ல மாட்டே.. நானே நேத்து ரெண்டு நாளா சரியா சாப்பிடாத களைப்புல இருக்கேன்.. நீ வேற.. இது கள்ளம் கபடில்லாத ஒடம்பு.. அப்படித்தான் இருக்கும். நீ ஒங்கப்பாவுக்கு சொல்லு...'

ரம்யா சிரித்தாள். 'பாத்தீங்களாப்பா அம்மா சாடையா சொல்றத?'

'அம்மா சொல்றதும் சரிதானம்மா.. எங்க பழைய சேர்மனும் ஒருதரம் சொல்லியிருக்கார்.. வெய்ட்ட குறைங்க பாபுன்னு... ஒன் கல்யாணம் முடிஞ்சதும் டெய்லி காலையில வாக் போயி குறைச்சிரப்போறேன்..'

ரம்யா கலகலவென சிரித்தாள். 'அப்பா இதுவரைக்கும் நீங்க பலதரம் இத சொல்லியாச்சி..'

பாபு சுரேஷ் சிரித்தவாறு தன் அறையை நோக்கி நடக்க ரம்யா ஹால் விளக்குகளை அணைத்துவிட்டு தன் தாயுடன் மாடிப்படியேறினாள், 'குட் நைட்பா' என்றவாறு..

*****

'யார்ங்க போன்ல?' என்றாள் கனகா தன் கணவரைப் பார்த்து.

சுந்தரலிங்கம் சலிப்புடன் செல்ஃபோனை சோபாவில் எறிந்துவிட்டு எழுந்து நின்று இரண்டு கண்களையும் அழுந்த தேய்த்துக் கொடுத்தார். 'எதுக்கு கனகா.. விடு.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ பிரச்சினைக்கு மேல பிரச்சினை.. இன்னைக்கி படுத்தாலும் தூக்கம் வராது போலருக்கு.. நீ போய் படு..'

கனகா குழப்பத்துடன் தன் கணவரைப் பார்த்தாள். 'என்னங்க.. நா ஒன்னு கேட்டா நீங்க ஒன்னு சொல்றீங்க? ஃபோன்ல யாருன்னு தான கேட்டேன்?'

சுந்தரலிங்கம் திரும்பி தன் மனைவியைப் பார்த்தாள். 'எல்லாம் அந்த சேதுதான். நல்லா குடிச்சிருக்கார் போலருக்கு.. அவர் பேசறத புரிஞ்சிக்கிறதுக்கே கஷ்டமாயிருந்துதுன்னா அவர் சொன்ன விஷயம் அதுக்கு மேல.. குழம்புன குட்டையில மீன் பிடிக்கறவன்னு சொல்வாங்களே அது இவருக்குத்தான் ரொம்ப பொருந்தும்.. இந்தாள் பேச்ச கேட்டு இன்னைக்கி நம்ம ஃபிலிப்புவ வேற இக்னோர் பண்ணிட்டேன்.. சில நாள்ல நமக்கு தெரியாமயே நிறைய முட்டாள்தனம் செஞ்சிருவோம் போலருக்கு..'

'என்னங்க சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை.. ஃபிலிப்ப இக்னோர் பண்ணீங்களா? எதுக்கு?'

சுந்தரலிங்கம் அன்றைய தினம் காலையிலிருந்து மாலை பத்திரிகை நிருபர் கூட்டம் நடந்தது வரை சுருக்கமாக கூறினார். 'இப்ப சொல்லு... நா பண்ணது முட்டாத்தனம்தானே.. அந்த ஃபிலிப் என்னெ பத்தி என்ன நினைச்சிருப்பார்?'

கனகா எரிச்சலுடன் தன் கணவனைப் பார்த்தாள். 'பின்னே.. ஏங்க நா தெரியாமத்தான் கேக்கேன்.. அந்த சேதுவப்பத்தித்தான் ஒங்களுக்கு தெரியுமில்ல.. அவர் எங்க.. நம்ம ஃபிலிப் எங்க? அதுவுமில்லாம ஃபிலிப் பாவங்க.. அவருக்குன்னு யார் இருக்கா? இப்படிப் போய் பண்ணிட்டு வந்து நிக்கீங்க? சரி.. இப்ப அந்த சேதுவுக்கு என்ன வேணுமாம்?'

'ஆமா இப்ப அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?' என்றார் சுந்தரலிங்கம் சலிப்புடன், 'விட்டுத்தள்ளு.. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு..'

'அட! அப்படி என்னத்தத்தாங்க சொன்னாரு? மனசுல வச்சிக்கிட்டு உழலாம சொல்லுங்க..'

'அவருக்கு இப்ப சேர்மனாவணுமாம்.. அதுக்கு நானும் ரெக்கமெண்ட் பண்ணணுமாம்!'

'ஏன்.. மாதவன் திரும்பி வராம அப்படியே போயிருவாராம்மா?'

சுந்தரலிங்கம் கனகாவின் குரலிலிருந்த கேலியை உணர்ந்து சிரித்தார். 'ஒனக்கு தெரியுது.. அவருக்கு தெரியலையே.. அந்த பையனுக்கு பாம்பேய விட்டு போக்கூடாதுன்னு போலீஸ் கண்டிஷன் போட்டுருக்காம். அதனால மாதவனும் இப்போதைக்கு வரமாட்டார்னு இவரா கற்பனை பண்ணிக்கிட்டு இப்படியொரு ஐடியாவ எடுத்து விடறார். டாக்டர் சோமசுந்தரத்துக்கிட்டயும் சொல்லிட்டாராம்.. இப்ப நா அவர கூப்ட்டு இவரையே போட்டுரணும்னு சொல்லணுமாம். அதான் இந்த குடிபோதையிலயும் போன் போட்டு சொல்றார்.'

'அந்தாளுக்கு இருந்தாலும் ரொம்ப தைரியம்தாங்க.. போனதடவ சேர்மன் இல்லாதப்போ ஆக்டிங்கா இருந்த ஒங்களையே கூப்ட்டு இப்படி கேக்கறார்னா..' என்று நொடித்த கனகா, 'நீங்க ஒன்னும் சரின்னு சொல்லலையே?' என்றாள்.

'அதான் நீ கேட்டுக்கிட்டு இருந்தியே.. நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டுருந்துட்டு கட் பண்ணிட்டனே.. சரி.. அதப் பத்தி பேச ஆரம்பிச்சா தூக்கம் போயிரும்.. நீ ரூமுக்கு போ.. நா பால காய்ச்சி கொண்டாரேன்.. மறக்காம ஆஸ்த்மா கேப்சூல எடுத்து வை.. அப்புறம் நேத்தைக்கி மாதிரி மூச்சு வாங்க போவுது..' என்றவாறு சுந்தரலிங்கம் சமையலறையை நோக்கி நடக்க கனகா சிரமப்பட்டு சோபாவிலிருந்து எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்..

*****

லிஃப்ட் தன்னுடைய தளத்தை அடைந்ததும் பரபரப்புடன் கதவுகளை திறந்தவாறு குடியிருப்பு கதவை தட்டினாள் சரோஜா..

சமையலறையில் வேலையாயிருந்த சிவகாமி கைகளை சேலைத் தலைப்பில் துடைத்தவாறு, 'வந்துண்டேயிருக்கேன்.' என்ற குரலுடன் வாசற் கதவுகளை திறக்க அவளைத் தள்ளிக்கொண்டு நுழைந்த சரோஜா சீனிவாசனை ஹாலில் காணாமல், 'எங்க சிவகாமி சீனி? விட்டுட்டாங்கன்னு சொன்னாரே?' என்றாள் பதற்றத்துடன்..

'இருக்கான்.. பதட்டப்படாதே.. இன்னிக்கி சாயந்தரத்துலருந்து ரூம்லதான் அடைஞ்சி கிடக்கான்.. நீங்கல்லாம் வரேள்னும் சொல்லிப் பார்த்துட்டேன்.. இப்ப வரைக்கும் வெளிய வராம உள்ளயே கெடக்கான்.. நீயே கதவ தட்டி கூப்பிடு.. வரானான்னு பாப்பம்..'

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே சீனியின் அறைக்கதவை நெருங்கிய சரோஜா, 'டேய்.. சீனி.. அம்மா வந்துருக்கேண்டா.. கதவ தொற..' என்றாள் அழுகுரலுடன்..

அதற்குள் மாதவனும், வத்ஸலவும் வந்துவிட, 'ஏய்.. சரோ.. ப்ளீஸ் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத.. நடுராத்திரி ஆவப் போவுது.. அவன் ஒருவேள கால் வலியில தூங்கியிருப்பான்.. விடு வீட்ல இருக்கறத கன்ஃபர்ம் பண்ணியாச்சில்லே போய் பேசாம படு.. காலையில பேசிக்கலாம்..' என்றார் மாதவன்.

'என்ன சொன்னீங்க.. போய் படுக்கறதா? ஒங்களுக்கு புத்தி பிசகிப் போச்சிதா.. நா எப்படா எம்புள்ளைய பார்த்து பேசுவோம்னு வந்தா?..' சரோஜாவின் கோபத்தை சற்றும் எதிர்பாராத மாதவன் திடுக்கிட்டு தன்னை நோக்கி கோபத்துடன் வந்தவளைக் கண்டு மிரண்டுப் போனார்.

வத்ஸ்லா சுதாரித்துக்கொண்டு தன் தாயை இடைமறித்து கட்டிப் பிடித்தாள். 'அம்மா.. ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.. சீனி ஒருவேளை பாத்ரூம்ல இருக்கானோ என்னவோ.. இரு நா கூப்பிடறேன்..'

அவளும் கதவைத் தட்டிப் பார்த்தும் அறைக்குள்ளிருந்து எந்த பதிலும் வராமல் போகவே சரோஜா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.. ;ஐயோ என் புள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி.. என்னங்க பாத்துக்கிட்டு நிக்கீங்க? கதவ ஒடச்சி தொறங்களேன்..'

மாதவன் செய்வதறியாது திகைத்து நிற்க வத்ஸ்லா சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் அறையை நோக்கி ஓடினாள். சீனியின் அறைக்கு அவளுடைய அறையிலிருந்து ஒரு வழியிருந்தது!

நல்லவேளையாக அது தாளிடாமல் இருக்கவே அதை திறந்துக்கொண்டு இருட்டாயிருந்த சீனியின் அறைக்குள் நுழைந்து விளக்குகளைப் போட்டாள்.. சீனியை அறையில் காணவில்லை.. அதிர்ச்சியடைந்த வத்ஸ்லா அறையெங்கும் கண்களை அலையவிட பாத்ரூமிலிருந்து சீனி முனகும் குரல் கேட்டது..

'அங்க என்னடா பண்றே?' என்றவாறு ஒருக்களித்து மூடப்பட்டிருந்த குளியலறையை திறந்த வத்ஸ்லா , 'அம்மா இங்க வாயேன்..' என்று வீறிட அவளுடைய குரல் கேட்டு அந்த குடியிருப்பு முழுவதும் விளக்குகள் படபடவென எரிந்தன..

தொடரும்..

2.3.07

சூரியன் 181

எஸ்.பி தனபால்சாமி கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் முடிந்ததும் கூட்டம் நடந்த அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் நின்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவாறு யோசைனையுடன் நின்றிருந்தார் சிறிது நேரம்.

'சார்..' என்ற குரல் கேட்டு திரும்பினார். எதிரே வாசலில் நின்றிருந்த காவலர்.


'என்ன சண்முகம், எப்படியிருக்கே. கையில என்ன?'

சண்முகம் தன் கையில் சற்று முன் ஜோ விட்டுச் சென்றிருந்த அடையாள அட்டையை நீட்டினார். 'சார் இது ஒங்க விசிட்டிங் கார்டுதான். ஆனா அத கொண்டுக்கிட்டு ------------ பாங்க்லருந்து ஜோன்னு ஒருத்தர் ஒங்கள பாக்க வந்திருந்தார். கூட்டம் முடியறதுக்கு அஞ்சி மணிக்கு மேல ஆவும்னு சொன்னேன். காத்துக்கிட்டிருக்க முடியாத சூழ்நிலை இத குடுத்துட்டு நா வந்து போன விஷயத்த சார்கிட்ட சொல்லிருங்கன்னு போய்ட்டார்.'

'----------------- பேங்லருந்தா?' என்றவாறு காவலரிடமிருந்து அட்டையை வாங்கி திருப்பி பின்புறம் பார்த்தார். 'The bearer is my junior officer. He is urgently in need of your help.' என்று எழுதியிருந்தது. அதற்குக் கீழே ஃபிலிப் சுந்தரம் சிஜிஎம் என்ற வார்த்தைகள். நேத்து நம்ம போய் சேர்மன பார்த்த விஷயமா ஏதாச்சும் சொல்ல வந்திருப்பாரோ.. 'என்ன விஷயம்னு ஏதாச்சும் சொன்னாங்களா சண்முகம்?'

'ஆமா சார். அந்த ஜோவுங்கறவரோட சார இன்னைக்கி காலைல அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். நம்ம -------------- ஸ்டேஷன்ல வச்சிருக்காங்களாம். அது விஷயமாத்தான்...'

'அரெஸ்ட் பண்ணியா?' என்ற வியப்புடன் அவரைப் பார்த்த தனபால்சாமி, 'அங்க யார்யா எஸ்.ஐ?' என்றார்.

'தெரியலய்யா.. கேட்டு சொல்லட்டுங்களா?'

தனபால்சாமி யோசனையுடன் தன் கையிலிருந்த அட்டையையும் தன் முன் நின்ற காவலரையும் பார்த்தார். 'சரி.. இத நா பாத்துக்கறேன். நீ ஒன் வேலைய பாரு.' என்றவாறு கையிலிருந்த சிகரெட்டை அணைத்து எறிந்துவிட்டு கமிஷனர் அறையை நோக்கி விரைந்தார்.

கமிஷனர் அறைக்கு வெளியில் அவரும் டிஜிபியும் நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் பவ்யத்துடன் வராந்தாவின் ஓரத்தில் ஒதுங்கி நின்றார். சற்று நேரத்தில் டிஜிபி புறப்பட்டுச் செல்ல கமிஷனர் மேடம் திரும்பி புன்னகையுடன் 'என்ன சாமி.. என்ன இன்னும் நிக்கிறீங்க? ஒங்களுக்கு அலாட்டான ஏரியாவுக்கு போயிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்..' என்றார்.

தனபால் சாமிக்கு கமிஷனர் மேடத்தின் குணம் நன்றாக தெரிந்திருந்தது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிப் பழகிப் போனவருக்கு கமிஷனர் பதவி ஒரு முள் முடியாகவே தெரிந்ததை அவர் மட்டுமல்லாமல் அவருடைய சக அதிகாரிகளுள் பலரும் உணர்ந்துதானிருந்தனர்.

'சொல்லுங்க சாமி.. என்னெ பாக்கறதுக்காகத்தான் நிக்கிறீங்கன்னா உள்ள வாங்க.. ஏதாச்சும் முக்கியமான விஷயமா? இன்னைக்கி நடந்ததவிட?' கமிஷனர் திரும்பி தன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய இருக்கையை நோக்கி செல்ல தனபால்சாமி அவரைப் பின் தொடர்ந்தார். 'எங்கயோ வெடிக்குது எங்கல்லாம் எதிரொலிக்கிது பாருங்க. நமக்கு இருக்கற டென்ஷன் போறாதுன்னு இது வேற.. வெறும் பேனிக் ரியாக்ஷன்னு நமக்கு தெரியுது ஆனா முதல்வருக்கு தெரியலையே.. அவர் சும்மாருந்தாலும் பக்கத்துலருக்கறவங்க சும்மா இருக்க விடமாட்டாங்க. இப்ப பாருங்க.. பட்ரோல் ட்யூட்டியிலருக்கறவங்களையெல்லாம் புடிச்சி இதுல இழுத்துப் போட்டு.. ச்சை.. What a waste of time and energy.. leave alone the cost..'

கமிஷனரின் மனநிலை அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. இருப்பினும் தன்னிடமிருந்து எந்த பதிலையும் கமிஷனர் எதிர்பார்க்கவில்லையென்பதை உணர்ந்திருந்ததால் மவுனமாக அமர்ந்திருந்தார். தான் சொல்ல வந்ததை பதறாமல் சொல்லிவிட்டு கிளம்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.

அவர் நினைத்தது போலவே தன் போக்கில் பேசிக்கொண்டிருந்த கமிஷனர், 'சொல்லுங்க சாமி.. என்ன விஷயம்?'

தனபால் சாமி முந்தைய ஞாயிற்றுக்கிழமை காலையில் எக்மோர் ரயில் நிலைய வாசலில் இருந்து ஒரு பெண்ணை இரு ரவுடிகளிடமிருந்து மீட்கப்பட்டதிலிருந்து, சேதுமாதவனின் பெயர் அதில் சம்பந்தப்பட்டிருந்தது, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வர முயற்சித்தது, பிறகு மேலிடத்து தலையீட்டால் அது முடியாமற் போனது, முந்தைய தினம் -------------- வங்கி சேர்மன் அலுவலகத்திற்குச் சென்று வந்தது வரை கடகடவென கூறி முடித்தார். 'மேடம் இந்த வார துவக்கத்துல சுப்ரீம் கோர்ட் கூட வேறொரு பாங்க் விஷயத்துல ரவுடிகள ஏவிவிட்டு லோன்ச வசூலிக்கறத கடுமையா கண்டிச்சி குடுத்த ஜட்ஜ்மெண்ட்ட பத்தி பேப்பர்ல வந்திருக்கு. நீங்க கூட பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த சேதுமாதவங்கறவர் மேல இது மாதிரி நிறைய புகார் இருக்கு. சமீபத்துல ஒரு பொள்ளாச்சி இண்டஸ்ட்ரியலிஸ்ட இவர் சொன்னார்னு கடத்திக்கிட்டுப் போயி டார்ச்சர் பண்ணி நிறைய ப்ளாங்க் பேப்பர்ஸ்ல கையெழுத்துவாங்கியிருக்கறதா அவர் புகார் குடுத்திருக்கார். அத்தோட இந்த பொண்ணோட கிட்நாப் அட்டெம்ப்ட் வேற..'

கமிஷனர் போறும் என்பதுபோல் கையை உயர்த்திக் காட்டினார். அவருடைய முகம் பாறையென இறுகிப்போயிருந்ததைக் கவனித்த தனபால்சாமி சட்டென்று நிறுத்திக்கொண்டு, 'எஸ் மேடம்?' என்றார்.

'இப்ப நா என்ன செய்யணும் அத மட்டும் சொல்லுங்க.'

கமிஷனரின் குரலிலிருந்த தொனியின் பொருள் விளங்காமல் அவரைப் பார்த்தார் தனபால்சாமி. 'மேடம் அந்த பேங்க்ல அவர் சேர்மனுக்கு அடுத்த பொசிஷன்ல இருக்கார்னு கேள்வி. அதுமட்டுமில்லாமல் ---------------- அமைச்சரோட தொகுதி லீட் பேங்க் வேறயாம். அதனால அவர்கிட்ட நெருக்கமானவர்னும் கேள்விப்பட்டேன். அந்த கிட்நாப் ரவுடிங்க ரெண்டு பேரையும் நான் -----------------ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்க அவங்க பேர்ல கம்ப்ளெய்ண்ட் ரிஜிஸ்தர் பண்ணாமயே விடுவிக்கற அளவுக்கு அவரால முடிஞ்சிருக்கு மேடம். அதனால..'

'அதனால? அவர அப்படியே விட்டுற முடியுமா? மிஸ்டர் சாமி சுத்தி வளைக்காம சொல்லுங்க.. ஒங்களுக்கு இப்ப என்ன வேணும்.. அந்த.. பேங்க் ஆசாமிய விசாரிக்கணும். அவ்வளவுதானே..?'

'ஆமாம் மேடம்.' என்று உடனே தலையை ஆட்டினார் தனபால்சாமி.

'Then go ahead and do it. If he cooperates with you, good. If he tries to act smart, obtain a search warrant and search his house, office whatever.. Or if you want to arrest him, take him.. Don't worry about the consequences.. If you feel that you have sufficient evidence to nail him.. go ahead and do it Swamy.. I will interfere when it is absolutely needed.. Right?'

சம்பாஷனை முடிவுக்கு வந்ததை உணர்த்தும் விதமாக கமிஷனர் மேடம் எழுந்து நின்று கையை நீட்ட தனபால்சாமி எழுந்து குலுக்கிவிட்டு வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி செல்கையிலேயே தன்னுடைய உதவி அதிகாரியை அழைத்து மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தார். 'இங்க பார்யா.. விஷயம் ஒனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். அப்படி யே இருக்கணும். புரிஞ்சிதா. அப்புறம் நம்ம ------------ ஸ்டேஷன் எஸ்.ஐ. யாருன்னு தெரிஞ்சி வை. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.'

**********

விமான நிலையத்திலிருந்து மாதவனுடைய குடியிருப்பை வந்து சேரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. வரும் வழியெல்லாம் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி. நல்ல வேளையாக மாதவன் சென்னையிலிருந்து வந்த விமான சீட்டை கையிலேயே வைத்திருந்தார். ஒவ்வொரு சோதனை தடுப்புகளிலும் அதைக் காட்டி விடுபட அது மிகவும் உதவியாயிருந்தது. 'என்னங்க இது அநியாயமாருக்கு. நாமளும் எத்தன வருசமா இங்க இருந்திருக்கோம். சென்னையிலருந்துன்னதுமே இப்படி பாக்கறானுங்க.. அடிச்சது எவனோ அவனுங்கள புடிக்கறதுக்கு துப்பில்ல.. வந்துட்டானுங்க..' என்று முனுமுனுத்தாள் சரோஜா.

'விடும்மா.. இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துரப் போவுது. இனி ஒன்னும் இன்ஸ்பெக்ஷன் இருக்காது பாரேன்.' என்றாள் வத்ஸ்லா.

'என்னமோ போடி.. அங்க சீனிய என்னவெல்லாம் போட்டு படுத்தறானுங்களொ தெரியலையே.. படுபாவிப் பசங்க. இந்த மராத்திப் பயலுங்களுக்கு மதறாஸின்னாலே புடிக்காது. இதுல இவன் வேற ஐயர் பையன் மாதிரி இருப்பான். அடிதாங்கற ஒடலாடி அது. அடிச்சி கிடிச்சி போட்டானுங்களோ என்னவோ தெரியலையே.. புள்ளையாரப்பா ஒன்னெ வந்து சேவிச்சிட்டுத்தானப்பா போனேன்.. போயி முழுசா ஒரு வாரம் ஆவறதுக்குள்ளவே கைய விட்டுட்டியேப்பா.. நா அப்பவே சொன்னேன் அவன இங்க தனியா விடவேணாம்னு.. நான் சொன்னா யார் கேக்கா.. படுபாவிப் பசங்க.. கையில கிடைச்சவனையே நாந்தான் பண்ணேன்னு ஒத்துக்க வச்சிருவானுங்களே..' என்றவள் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மாதவனுடைய தோளைப் பற்றி திருப்பினாள் கோபத்துடன். 'அப்படி ஏதாச்சும் ஆச்சி.. வச்சிக்கறேன்.. ஒங்க சங்காத்தமே வேணாம்னுட்டு போறேன்..'

சரோஜாவின் திடீர் கோபத்தை எதிர்பாராத வாகன ஓட்டுனர் திடுக்கிட்டு திரும்பி அவளைப் பார்த்தான். 'க்யா ஹோகயா மேடம்? அபி காலி தஸ் பந்த்ரா மினிட் ஹை.. பாக்கி..' என்றான் விவரம் புரியாமல்.

மாதவன் அமைதியுடன் சரோஜாவின் கரங்களைப் பற்றினார். 'சரோ கலாட்டா பண்ணாம சும்மா இரு.. சீனிக்கு ஒன்னுமில்லை. அவனெ ரிலீஸ் பண்ணியாச்சின்னு நம்ம சேர்மன் ஏர்போர்ட்லருந்து ஃபோன் பண்ணப்போ சொன்னார். வீட்லதான் இருக்கானாம். போனதும் பார். அவனுக்கு ஏதோ கால்ல சின்ன ஃப்ராக்சராம். அதான் ஒங்கிட்ட சொல்லாம மறைச்சேன்.'

மாதவனின் தோள்களில் இருந்த கரத்தை சரேலென விலக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் சரோஜா. 'என்னங்க சொல்றீங்க.. கால்ல ஃப்ராக்சரா?'

மாதவனுக்கு எரிச்சல் வந்தது. இருப்பினும் அமைதியாக, 'அந்த கால் ஃப்ராக்ச்சர்தான் அவனெ இந்த கேஸ்லருந்து விடுவிச்சிருக்கு. இல்லன்னா போலீஸ்க்கு இவன் மேல வந்த சந்தேகம் அவ்வளவு ஈசியா போயிருக்காது. அதனால அதுவும் நல்லதுக்குத்தான். கொஞ்ச நேரம் பேசாம இரு. இன்னும் பத்து நிமிசத்துல வீடு வந்துரும். அங்கயும் வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத. அங்க இருக்கற எல்லாருமே நமக்கு தெரிஞ்சவங்க. நிறைய பேருக்கு நம்மள புடிக்கவே புடிக்காதுங்கறதையும் மறந்துராத. அப்புறம் காது, மூக்குன்னு வச்சி பேசி.. அதனால நடந்தது நடந்துருச்சின்னு நினைச்சிக்கிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சீனிய கூப்டுக்கிட்டு சென்னை போயிரணும். அதான் முக்கியம் இப்போ.' என்றார்.

அவர் பேசி முடிக்கும் முன்னரே அவர்களுடைய வாகனம் அவருடைய குடியிருப்பை அடைந்து, 'ஆயீயே சாப்.. ஆயியே மேடம்.' என்ற குர்க்காவின் வரவேற்புடன் போர்ட்டிகோவில் ஏறி நிற்க பரபரப்புடன் இறங்கி லிஃப்ட்டை நோக்கி ஓடினாள் சரோஜா எதிர்கொள்ளவிருக்கும் அதிர்ச்சியை உணராதவளாய்..

தொடரும்..

1.3.07

சூரியன் 180

அறைக்கதவுகளை தாளிட்டுவிட்டு தத்தி தத்தி நடந்து கட்டிலை அடைந்த சீனி தன் கைத்தாங்கிகளை உதறிவிட்டு படுக்கையில் விழுந்தான்.

கண்கள் உத்திரத்திலேயே நிலைகுத்தி நின்றன..

Why should this happen? Why only to me? What did I do to deserve this?

எவ்வளவு கஷ்டப்பட்டு மைதிலிய சம்மதிக்க வச்சேன்..

அப்பாவும் மனசு மாறி மைதிலிய ஏத்துக்க ஆரம்பிச்சிருக்கறப்போ ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

Where do I go from here?

மைதிலிக்கிட்டருந்து ஃபோனையே காணமே.. நா சொன்னத அவ நம்பலையா? நாம போன் செஞ்சி இவ்வளவு நேரமாகியும் அவ ஃபோன் ஏன் வரலை?

அதான் எவன் எவன்கிட்டருந்தோ கால்ஸ் வந்துக்கிட்டே இருக்கே.. ஒருவேளை டயல் பண்ணி, பண்ணி சோர்ந்துப் போய்ட்டாளோ என்னமோ?

அலைபாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தடுமாறினான் சீனிவாசன்..

இந்த ராஜன் அங்கிள் வேற.. எல்லாத்துலயும் மூக்க நீட்டுறத பழக்கம்.. சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் எழுந்து கட்டைகளை எடுத்துக்கொண்டு சன்னலை நெருங்கி திரையை முழுவதும் ஒதுக்காமல் வாசலைப் பார்த்தான். அவர் இரண்டு கைகளையும் ஆட்டி, ஆட்டி நிரூபர்களிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.. ஒரு வறட்டுப் புன்னகையுடன் அதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினான்.

I don't know what he is talking about.. இவர் வழியாவே நம்மளோட பழைய ட்ரக் பழக்கம் வெளிய தெரிஞ்சிருமோ.. Newspaper men could bring anything out of a person like him.. It is possible, even if it is remote..

சரி.. அப்படியே வெளியே தெரிஞ்சிருச்சின்னு வச்சிப்போம்.. What then? இது ஏற்கனவே மைதிலிக்கும் தெரியும் அவளோட பேரண்ட்சுக்கும் தெரியும்.. வேற யாருக்கும் தெரிஞ்சா தெரிஞ்சிட்டுப் போட்டுமே.. Does it matter anymore?

'டேய் சீனி.. ஒரு வா காப்பியாவது குடிறா.. காலையிலருந்து ஒன்னும் சாப்பிடலையே?'

சீனி கேட்காததுபோல் படுக்கையில் விழுந்தான். மூடிய கண்களுக்குள்ளே மைதிலி புன்னகையுடன்.. தலையை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான்..

சிவகாமி மாமி தொடர்ந்து கதவைத் தட்ட, 'எனக்கு ஓன்னும் வேணாம் மாமி.. என்னெ கொஞ்ச நேரம் தனியா விடுங்கோ.. பசிக்கறப்ப வரேன்.' என்றான்.

கதவைத் தட்டும் ஓசை சட்டென நின்றது. ஆனால் மாமி கதவுக்கப்பால் நிற்கும் நிழல் மட்டும் கதவுகளின் கீழே...

சீனி கண்களை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். அப்பா கூப்டதுமே பேசாம சென்னைக்கு போயிருந்தா.. ஒரு வாரம் கழிச்சி மைதிலிய ஃபோன்ல கூப்ட்டு பேசியிருக்கலாம். அவளும் ஆற அமர ஒக்காந்து யோசிக்க டைம் கிடைச்சிருக்கும்.. அந்த ஒரு முட்டாத்தனமான டிசிஷனால இப்ப என்னல்லாம் நடந்திருச்சி... சரி.. போலீஸ் வந்துப்போனவுடனேயாவது டாடிக்கு போன் செஞ்சிருக்கலாம்.. செய்யல.. அதனால என்னாச்சி திரும்பி வந்தப்பவும் சொல்ல முடியல..

சிவகாமி மாமி மீண்டும் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. 'என்ன மாமி என்னெ தனியா விடச்சொன்னேனே?' என்றான் எரிச்சலுடன்.

'டேய்.. ஒங்கம்மாவும் அப்பாவும் வத்ஸலா கூட வந்துண்டிருக்காளாம்.. ஏர்போர்ட்லருந்து ஃபோன் வந்தது.. நீ ரூமுக்குள்ள இருக்கேன்னு சொன்னேன்.. சர்ப்ரைஸா இருக்கட்டும் நீங்க சொல்லாதீங்கோன்னு வத்ஸலா சொல்லிட்டு வச்சிட்டா.. நீ எழுந்து மொகத்த அலம்பிண்டு வேற ட்ரெஸ் போட்டுண்டு வெளிய வாடா.. வாசல்லருந்தவாளும் போய்ட்டா.. அந்த ஐயங்கார் என்னமோ சொல்லி அனுப்பிச்சிட்டார் போலருக்கு.. இப்ப யாரையும் காணம்.. கொஞ்ச நேரமா பழையபடி போனும் வர்றது நின்னு போச்சிடா.. நீ வெளியில வா..'

சீனிக்கு சந்தோஷத்தைவிட கோபமே வந்தது.. யார் சொல்லியிருப்பா.. மாமியா? ஒருவேளை மைதிலியாருக்குமோ..

இப்ப எப்படி அப்பாவை ஃபேஸ் பண்ணுவேன்.. என்னெ ஒரு வழியா ஏத்துக்க தயாரா இருந்தாரே.. இப்போ ஊருக்கெல்லாம் பையன் ஒரு டெர்ரரிஸ்ட்ங்கறா மாதிரி ஆயிருச்சேன்னு நினைப்பாரோ.. Will he look at me with contempt? ஏற்கனவே நம்மாலதான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல பிரச்சினையே வரும்.. ட்ரக் அடிக்டுங்கற முத்திரையோட ஆஸ்பட்ல இருந்தப்போ டைவோர்ஸ் வரைக்கும் போனவங்க.. அது மறுபடியும் நாளைக்கி ப்ரெஸ் காரங்களால ஊர் முழுசுக்கும் தெரியவந்தா.. How will he react? அம்மாவுக்கு எப்பவுமே நம்ம மேல இருக்கற சிம்பதி ஒருவேள அவங்க பேச்ச கேக்காம மும்பையில நின்னதுனாலதான இதெல்லாம் வந்துதுன்னு கோபமா மாறிருமோ.. Will she also turn against me? Will Vaths be sore at me? She could definitely do without me.. Yeah! she can.. she can..

தன் மீதே ஏற்பட்ட அனுதாபம் சோகமாக மாற படுக்கையில் விழுந்து முகத்தை கைகளில் புதைத்தவாறு கிடந்தான் சீனி.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தோட....

இதை அறியாத சிவகாமி மாமி சமையலறையில் பரபரப்பாயிருந்தாள்...

*********

ஃபிலிப் சுந்தரம் டிவியை அணைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

சுந்தரலிங்கம் சார் நிச்சயமா நியூச கேட்டிருப்பார். ஆனா ஏன் நம்மள இன்னும் கூப்டவேயில்ல? ஒருவேளை நாம அப்ரெப்டா ஆஃபீஸ்லருந்து கெளம்புனத அவர் விரும்பலையோ? வேணும்னா அவனே கூப்டட்டும்னு இருக்காரோ.. அதானே.. நாமளே அவரெ கூப்டா என்ன?

சோபாவில் கிடந்த செல்ஃபோனை எடுத்து எண்களை தேடிப்பிடித்து சுழற்ற எதிர்முனையில் அடித்துக்கொண்டே இருந்தது. பத்து முறை அடித்தப் பிறகும் எடுக்காமலிருக்கவே இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து ஹால் விளக்கைகளை அணைத்துவிட்டு கையிலிருந்த குறு மேசையிலிருந்த பால் தம்ளரை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார். சமையல் மேடையில் கிடந்த சில்லறை பாத்திரங்களை சிங்கில் போட்டு நனைத்துவிட்டு விளக்கை அணைத்துக்கொண்டு தன்னுடைய செல்ஃபோனில் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்க முயலவும் அது அடிக்கவும் சரியாக இருந்தது. திரையைப் பார்த்து முகத்தை சுளித்தார். இருப்பினும் வேறு வழியில்லாமல், 'சொல்லுங்க சார்..' என்றார்.

'நீர்தாம்யா சொல்லணும்.. எங்கருக்கீர்?'

இதென்னய்யா கேள்வி? எரிச்சலாக இருந்தாலும்.. 'வீட்லதான் சார்..' என்றார் தயக்கத்துடன்..

எதிர்முனையிலிருந்து சிரித்தார் நாடார். 'பின்னே எங்க ஏதாச்சும் க்ளப்புலயா இருக்கப் போறீரு.. சரி அது கெடக்கட்டும்.. எதுக்கு சேர்மன் பாம்பேக்கு போன விஷயத்த எங்கிட்ட சொல்லவேயில்லை? நா வேற வழியாத்தான் கேட்டு தெரிஞ்சிக்கணும் போலருக்கு.. பேங்க்ல எல்லாரும் பேசிக்கறாங்களேய்யா.. ஒம்ம வழியாத்தான எனக்கு எல்லா நியூசும் வருதாமே.. ஆனா நீரு எதையுமே சொல்ல மாட்டேங்கறீரு?'

அப்படியே இன்னைக்கி நடந்த ப்ரெஸ் மீட்டோட விஷயமும் தெரிஞ்சிருக்கணுமே.. நல்ல வேளை இந்த களேபரத்துல அதப்பத்தி ஒன்னும் நியூஸ்ல வரல.. பத்து மணி சன் நியூஸ்ல வருதோ என்னமோ..

'என்னய்யா பதிலையோ காணம்? சரி அதுபோட்டும்.. இதுதான் சாக்குன்னு ஒங்க ஈ.டி. சில்மிஷம் பண்றாராமே.. அதாவது தெரியுமா?'

நாடாரின் குரலிலிருந்த கேலி அவருக்கு எரிச்சலை மூட்டினாலும் அது என்னவென்று தெரிந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.. எல்லாவற்றையும் உதறியெறிந்துவிட்டு செல்வதென முடிவெடுத்தபின் யார் என்ன திட்டம் போட்டாலும் நமக்கென்ன என்று நினைத்தார் அவர்.

'ஒமக்கெங்க தெரிஞ்சிருக்கப் போவுது.. அடுத்த வாரம் சர்ச்சுல என்ன மீட்டிங்.. அதுல என்ன பேசணும்னே நினைச்சிக்கிட்டிருக்கற ஆளூ நீரு.. நானே சொல்றேன்.. ஒங்க ஈ.டிக்கு ஆக்டிங் சேர்மனா ஆகணுமாம்.. என்ன போட்டுரலாமா? அத கேக்கத்தான்யா கூப்ட்டேன்..'

அவருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயத்தைக் கூறிவிட்டவர்போல் நாடார் எதிர்முனையில் சிரிக்க இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல் அமைதியாய் இருந்தார் ஃபிலிப்.

'என்னய்யா இதுக்கு மவுனம்தானா.. அதாவது சம்மதம்கறீர். சரிதானே?'

இனியும் மவுனமாயிருந்தால் நல்லதல்ல என்ற நினைத்த ஃபிலிப், 'இது நா எதிர்பார்த்ததுதான் சார்.' என்றார்.

'அப்படியா?' என்றா நாடாரின் குரலில் கேலி கொப்பளித்தது. 'பரவாயில்ல... நல்லாவே தேறிட்டீங்க.. சரிய்யா.. நம்ம சோமசுந்தரம் அய்யாவும் அதுல தீவிரமா இருக்கார் போலத்தான் தெரியுது.. போன தடவ ஒங்க லிங்கம் சார போட்டுட்டு பட்ட அவஸ்த போறும்னு நினைக்காரோ என்னமோ..நாளைக்கு காலைல நம்ம எம்.சி கூட்டத்த கூட்டி பேசலாம்னு இருக்கோம்..' என்றவர் ஒரு நொடி தாமதித்து, 'ஒமக்கு ஏதும் சொல்றதுக்கு இருக்கா?' என்றார் சீரியசாக..

நானா? என்ன சொல்ல? என்று தயங்கினார் ஃபிலிப்.. 'இதுல நா சொல்றதுக்கு....'

'அதான பார்த்தேன்.. என்னைக்கித்தான் நீரா எதையும் கேட்டிருக்கீரு? சரி.. அது கெடக்கட்டும்.. என் மனசுல பட்டத சொல்றேன்.. நான் நாளைக்கு ஒம்ம பேரத்தான் சொல்லப்போறேன்.. என்ன சொல்றீரு?'

ஃபிலிப் சுந்தரம் திடுக்கிட்டு தன்னையுமறியாமல், 'I am not interested.' என்றார்.

'என்னய்யா.. என்ன சொன்னீரு.. நாட் இண்டரெஸ்டடா? எதுக்கு?'

என்னன்னு சொல்றது? எனக்கு போறும்னுட்டு ரிசைன் பண்ணிரலாம்னு இருக்கேன்னா? இவர்கிட்ட சொன்னா வேற வெனையே வேணாம்..

'தப்பா நினைச்சிக்காதீங்க சார்.. எங்கள்ல சீனியர் நம்ம ஈ.டிதான்.. போனதடவையே அவர இக்னோர்.. அதாவது கண்டுக்காம இருந்துட்டோம்னு சுந்தரலிங்கம் சார் என்ன செஞ்சாலும் முட்டுக்கட்டையாவே இருந்தார்.. அதனாலதான் எனக்கு விருப்பமில்லேன்னு சொன்னேன்..'

நாடார் கேலியாக சிரித்தார். 'அவன் கெடக்கறான்.. ஒங்க லிங்கத்து தைரியம் பத்தாது. அதான் அவன் அப்படி துள்ளிக்கிட்டு திரிஞ்சான்..ஒமக்கென்னய்யா.. அதான் நாங்க இருக்கோம்லே.. சமாளிச்சிருவோம்.. நீரும் தொடநடுங்கிமாதிரி ஆயிராதேயும்.. நாளைக்கு வெள்ளனே ஆஃபீசுக்கு போய் என் ஃபோன் காலுக்கு வெய்ட் பண்ணும். கமிட்டி முடிஞ்சதும் கூப்டறேன்.. இப்போதைக்கு அந்த ஈ.டி பயலுக்கோ இல்லே அந்த லிங்கத்துக்கோ தெரியவேணாம்.. வச்சிடறேன்..'

அவர் பதில் பேசுவதற்கு முன் இணைப்பு துண்டிக்கப்பட 'கர்த்தாவே என்ன இது புது சோதனை' என்றவாறு 'பிதாவே உமக்கு சித்தமானால் இத்துன்பக் கலம் என்னை விட்டு அகலட்டும்..' என்ற வார்த்தைகள் பொறித்திருந்த எதிரே சுவரில் தொங்கிய யேசுபிரானின் திருவுருவ படத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்..