20.11.19

அமேஜான் கிண்டிலில் என் புத்தகம்

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற க்ரைம் நாவலை ஒரு நீள் தொடராக எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை அப்போதே பல நண்பர்கள் இதை புத்தக வடிவில் வெளிக்கொணரலாமே என்று கருத்துரைகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் அப்போது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை.

ஆனால் இப்போது நம்முடைய பதிவுலக நண்பர்கள் சிலர் காட்டிய பாதையில் அமேஜான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

  சொந்த செலவில் சூன்யம் 

இதை இயன்றவரை பலருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இதன் விலையை ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக விலையிட வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அமேஜான் தளத்தில் புத்தகத்தின் அளவின் (size) அடிப்படையில் அமெரிக்க சந்தையில் குறைந்த பட்சம் 0.99 டாலர்கள் விலை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில்தான் உலகெங்கும் உள்ள அமேஜான் கிண்டில் தளங்களில் விலை நிர்ணயிக்கப்படுமாம்!

அமெரிக்க சந்தையில் குறைந்த பட்ச விலையாக ஒரு டாலரை தெரிவு செய்தேன். அதன் அடிப்படையில் இந்திய சந்தையில் ரூ.72/- என நிர்ணயிக்கப்பட்டது. இதில் முப்பந்தைந்து விழுக்காடு எனக்கு ராயல்ட்டியாக வழங்கப்படும். எழுபது விழுக்காடு வரை ராயல்டி வழங்கும் திட்டமும் உள்ளது. ஆனால் அந்த் அடிப்படையில் புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூ.225/- இருக்க வேண்டும். அந்த விலையில் புத்தகத்தை இந்தியாவில் விற்பது கடினம் என்பதால் அதை நான் தெரிவு செய்யவில்லை.

இந்த நாவலை தொடராக படித்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். அமேஜான் விதித்த நிபந்தனைகளின்படி இத்தொடரை என்னுடைய என்னுலகம் தளத்திலிருந்து நீக்கிவிட வேண்டியதாயிற்று. இப்போது அது என்னுடைய பளாகில் படிக்க கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதுவரை படிக்காதவர்களுக்கு  ஒரு கதை சுருக்கம்.

ராஜசேகர் ஒரு க்ரிமினல் வழக்கறிஞர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

வழக்கறிஞர் பணியில் அதிகம் பிரசித்தி இல்லாதவர். சுமாரான வருமானம்தான்.

இந்த சூழலில் தன்னிடம் உதவி கேட்டு வரும் மாதவி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்படுகிறது.

ஆனால் அந்த பெண் தன்னுடன் அல்லாமல் வேறு பலருடனும் இத்தகைய தொடர்பு வைத்திருந்ததை அறிய வரும்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வரும் மாதவியை பிடித்துதள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் ராஜசேகர்.

அடுத்த நாள் காலை மாதவி கொலையுண்டு இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவேளை தாந்தான் கொலையாளியாக இருக்குமோ என்று அஞ்சுகிறார்.

அவர்தான் கொலை செய்தாரா இல்லையா அப்படியானால் அதிலிருந்து விடுபடுகிறாரா அல்லது தண்டிக்கப்படுகிறாரா என்பதுதான் மீதி கதை.

ஒரு சராசரி க்ரைம் நாவலைப் போன்று இல்லாமல் குற்றவாளையை கண்டுபிடிப்பதில் காவல்துறை செய்யும் புலன்விசாரணைகள், காவல்துறையில் அதிகாரிகளுக்கிடையில் ஏற்படும் ஈகோ மோதல்கள், காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், குற்றவாளிக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் குற்ற விசாரணைகள் அதை தொடர்ந்து வழக்கு வழக்காடு மன்றத்திற்கு செல்லும் சூழலில் அங்கு ஏற்படும் மோதல்கள், காரசாரமான விவாதங்கள் என குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் தண்டனை அளிக்கப்படும் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலை தேடி எடுத்து சில பகுதிகளை குறைத்தோ நீக்கியோ என ஒரு முழு தணிக்கை செய்து வெளியிட்டுள்ளேன்.

இதை தொடராக வாசித்தவர்களுக்கும் முழு நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் அனுபவம் இந்த புத்தக வாயிலாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி,

அன்புடன்,
டிபிஆர்.