15.5.07

நாளை நமதே - அறிமுகம்

வேல் முருகன் பொறியியல் கல்லூரி.

இதுதான் நம்முடைய தொடரின் களம். கதாநாயகன் என்றும் கூறலாம். சென்னை புறநகரில் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் கூடுதல் நிலத்தில் ( அரசியல்வாதிகள் சிலரின் 'தயவில்' சலுகை விலையில் ஆர்ஜிதம் செய்து, மன்னிக்கவும், ஆக்கிரமித்து ) எழுப்பப்பட்ட சாம்ராஜ்ஜியம். இதற்கு சகோதர, சகோதரி நிறுவனங்களும் உண்டு.

வேலன் தொழில்நுட்பக் கல்லூரி,
ரோகினி பாரா மெடிக்கல் கல்லூரி,
கற்பகம் கலைக் கல்லூரி இத்யாதி, இத்யாதிகள்..

அதாவது எல்.கேஜியில் ஒரு குழந்தையை சேர்த்து சுமார் இருபது வருடங்கள் கழித்து இளகலை பட்டதாரியாகவோ, பொறியாளராகவோ வெளியே கொண்டு வர 'சேவை' மனப்பான்மையோடு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த வெங்கடேஸ்வரலூ ரெட்டி & டாட்டர்ஸ் (அதாவது அவருடைய இரண்டு மகள்களும்) குடும்பத்தார் ஐந்தே வருடங்களில் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்..

இதன் உரிமையாளர் (அதாவது மேஜர் ஷேர் ஹோல்டர்) வெங்கடேஸ்வரலு... அவருடைய பொறியாளர் மனைவி (முதுகலைப் பட்டதாரி என்று கல்லூரியின் brochure கூறுகிறது.) கற்பகம் (தென்தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்று கேள்வி). இவரைப் பற்றி ஒரு துணுக்கு செய்தி. ஒரு பட்டமளிப்பு விழாவில் அவர் கடித்து குதறிய ஆங்கில பேச்சைக் கேட்டுவிட்டு விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர் ஒருவர் அடுத்த இருக்கையிலிருந்தவரிடம், 'இப்ப தெரியுதா சார் இவங்களோட எம்.டெக் எப்படி கிடைச்சிதுன்னு... எல்லாம் துட்டு குடுத்து வாங்குனது சார்... இதுங்கக் கிட்டல்லாம் பசங்க படிச்சி.. பட்டம் வாங்கி...' என்று பெருமூச்செறிந்ததாகவும் கேள்வி..

இவர்களுடைய இரு புதல்விகள் ரோகினி மற்றும் ரோஜா. இருவருமே பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாதவர்கள். 'தலையிலதான் மூளைக்கு பதிலாத்தான் திமிர் இருக்கே அது போறாது?' பணியாளர் ஒருவரின் கமெண்ட் இது. அவர்களும் அவர்கள் இருவரின் கணவன்மார்களும் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள்!

இருபாதாண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் பழைய பேப்பர் கடை வைத்திருந்தவர் வெங்கடேஸ்வரலு. இன்று சென்னைப் புறநகரில் அவர் நடத்தி வந்த சாம்ராஜ்யம் (திறந்தவெளி சிறைச்சாலை என்பது மாணவர்களின் ஒருமித்த கருத்து!) அவருடைய உழைப்பால் வந்தது இல்லை, அவர் வெறும் பினாமியே என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.

அடுத்தது இந்த கல்லூரியில் படிக்க நேர்ந்த தங்களுடைய தலைவிதியை நொந்துக்கொள்ளும் மாணவ, மாணவிகள், அவர்களுடைய பெற்றோர். கல்லூரியில் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு பணியாற்ற நேர்ந்த கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்... பணியாளர்கள்... இவருக்கு இருபத்திநாலு மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்டிருக்கும் குண்டர் கும்பல்!

இவர்களுள் முக்கியமானவர்கள்..

பேராசிரியர் ராஜசேகர், அவருடைய ஒரே மகன் பரத்குமார்.

ராம்குமார் - லதா தம்பதியர். மகன் ராஜ்குமார். மகள் ஜோதிகா... ராம்குமார் அரசு வங்கியொன்றில் காசாளர். லதா ஒரு மேல்நிலை பள்ளி ஆசிரியை.

லதா பணியாற்றும் பள்ளியில் பணியாற்றும் சகஆசிரியை ஸ்டெல்லா, அவருடைய ஆசிரியர்-கணவர் சூசைராஜ். மகன்கள் டேவிட் மற்றும் லாரன்ஸ். மகள் ஷாலினி.

கணவனுடனிடமிருந்து விவாகரத்து பெற்ற மாலதி மற்றும் அவருடைய ஒரே மகள் ப்ரியா.

அரபு நாடுகளில் ஒன்றில் பணியாற்றும் பொறியாளர் கிருஷ்ணன் நாயர், சென்னையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தயாரிப்பாளராக பணியாற்றும் ப்ரேமா. அவர்களுடைய இரு மகன்கள் சுந்தர், சுதாகர்.

மத்திய அரசு அலுவலர் பஞ்சாபகேசன், மனைவி பார்வதி இரட்டை மகன்கள் (twins)மூர்த்தி, வாசன் மற்றும் மகள் சாந்தி.

மற்றும் வேல் முருகன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜோதிகா, டேவிட், ப்ரியா, சுந்தர், மூர்த்தி,வாசன் ஆகியோரின் நண்பர்கள், நண்பிகள்..

இவர்களுடன் கல்லூரி உரிமையாளருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய, இவருக்கு முழு 'ஒத்துழைப்பு அளித்து'வந்த கட்சித் தலைவர் ஒருவர். அவருடைய முழு நேர அலுவல் எடுத்ததற்கெல்லாம் மறியல் நடத்துவது, போராட்டம் நடத்துவது. வருமானத்திற்கு மீறிய வசதிகளை சேர்த்துக்கொண்டவருக்கு எப்போதும் ஏழை எளியவர்களைக் குறித்து மட்டுமே சிந்தனை!

இது முழுக்க, முழுக்க இன்றைய இளைஞர்களைப் பற்றிய தொடர்..

இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைதான் என்றாலும் சித்தரிக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை... சமீபகாலமாக பத்திரிகைகள் மூலமாகவும் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த என்னுடைய நண்பர்களுடைய குழந்தைகள் மூலமாகவும் கேட்டறிந்த சம்பவங்களின் நிழல்களே..

அதாவது நிஜவாழ்வில் சில கல்லூரிகளில் பயிலும் மாணவர்களால் அனுபவிக்கப்பட்ட வேதனைகளின், நிராசைகளின் நிழல்கள்...

பெருத்த எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளில் நுழையும் நம்முடைய இளைஞர்கள் அவர்கள் வாழ்வில் நினைத்த நிலையை அடைய எத்தனை அவமானங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை என்னால் இயன்றவரை படம்பிடித்து காட்டவிருக்கிறேன்...

எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை...இடத்தின் பெயர்களையும், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் மட்டுமே மாற்றியுள்ளேன்.

ஆனால் அதே சமயம் இதில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் யாரையாவது நினைவுபடுத்தியிருந்தால் அது ஒரு தற்செயலே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..

யாரையும் குறைகூறும் நோக்கமோ அல்லது அவர்களுடைய மனதைப் புண்படுத்தும் நோக்கமோ நிச்சயம் இல்லை...

நாளை முதல் வாரம் மூன்று நாட்கள் இத்தொடர் வரும்....

********

11.5.07

சூரியன் 200

இரண்டாம் பாகம் - நிறைவுப் பகுதி

'சரிய்யா... நீங்க சொல்றதெல்லாத்தையும் நான் ஒத்துக்கறேன்... ஃபிலிப் சுந்தரத்துக்கு இனிஷியேட்டிவ்னு என்னமோ சொன்னீங்களே அது இல்லதான்... அவருக்கு அவரோட வாழ்க்கையிலயே பெருசா சாதிக்கணுங்கற விருப்பமில்ல... ஆஃபீஸ் விட்டா வீடு.. மிஞ்சிப் போனா பக்கத்துலருக்கற க்ளப்ல போயி பேட்மிண்டன் ஆடுவார்... சனி, ஞாயிறு ஆனா கோவில்... இதான் அவரோட ஒலகமே... ஆனா அவருக்கு இருக்கற தெய்வ பக்தி நம்ம பேங்கையும் காப்பாத்தும்யா... மாதவன் திருப்பி வர்ற வரைக்கும் தான? வேணும்னா நாம சேர்மன் கமிட்டின்னு ஒன்னெ அமைச்சி அவருக்கு ஒத்தாசையா இருப்போம்... இப்பருக்கற மேனேஜ்மெண்ட் கமிட்டியே கூட இத பாத்துக்கலாம்... எதுக்கு சொல்றேன்னா சேதுமாதவன நம்பி சேர்மன் பதவிய குடுக்க முடியாதுய்யா.. அவர் எந்த நேரத்துல என்ன செய்வார்னு யாருக்குய்யா தெரியும்?'

சோமசுந்தரத்துக்கும் சிலுவை மாணிக்கம் நாடாருடைய வாதத்தில் இருந்த உண்மை தெரிந்துதானிருந்தது. ஆனால் அவர் மனதில் நினைத்திருந்த அந்த ஆஃபீசர் ரெக்ரூட்மெண்ட்... இயக்குனர் பதவி பறிபோன பிறகு சேதுவைப் போன்றவர்களை வைத்துத்தானே அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.. மாதவன் விடுப்பில் போவது கூட நல்லது என்றே நினைத்திருந்தார்... ஃபிலிப் சுந்தரத்தைப் போன்ற தெய்வபக்தியுள்ளவரை அந்த பதவியில் அமர்த்திவிட்டால் நம்முடைய திட்டம் நிறைவேறாதே... சேது-பாபு சுரேஷ் கூட்டணியை வைத்து தான் நினைத்திருந்ததை நடத்திவிடலாம் என்று தான் நினைத்திருந்தது நிறைவேறாது போலிருக்கிறதே என்று அவருடைய சிந்தனை ஓடியது... இருப்பினும் தற்போதைக்கு நாடாருடைய தயவு நமக்கு மிகவும் தேவை.. அவர் நினைத்தால் பூர்ணிமா இயக்குனர் குழுவில் நுழையமுடியாதபடி செய்துவிட முடியும்... 'சரி நாடார்.. நீங்க சொல்றத ஒத்துக்கறேன்...'

நாடார் விடவில்லை...'அப்படி மொட்டையா சொன்னா எப்படிய்யா? எத ஒத்துக்கிறீரு... ஃபிலிப் சுந்தரத்த போடலாம்னா?'

ஆமாம் என்று தலையை அசைத்தார். 'அத்தோட நீங்களே சொன்னா மாதிரி ஒரு கமிட்டிய போட்டுரணும்... அதுலயும் பூர்ணிமா இருக்கணும்.. அது நடக்கணும்னா இந்த வாரத்துலயே போர்ட கூட்டி அதுல பூர்ணிமாவ போர்ட்ல கோ ஆப்ட் செய்ய வேண்டியிருக்கும்... என்ன சொல்றீங்க?

'செஞ்சிருவம்யா... ஒம்ம மக இல்லாமலாய்யா... மொதல்ல நாளைக்கே பகலுக்கு மேல மேனேஜ்மெண்ட் கமிட்டிய கூட்டச் சொல்லி நம்ம கம்பெனி செக்கரட்டரிக்கு சொல்லிருவம்... அதுலயே பூர்ணிமாவ போர்ட்ல சேக்கற விஷயத்த முடிவு பண்ணிருவம்யா.. நீரே செக்கரட்டரிக்கிட்ட சொல்லிடறீரா... அந்தாளுக்கு தமிழ் சரியா வராதேய்யா... அதுக்குத்தான் சொல்றேன்...'

சோமசுந்தரம் முறைத்தார். 'என்ன நாடார் வெளையாடறீங்களா நா எப்படி?'

நாடார் புரிந்துக்கொண்டார்.. 'மன்னிச்சிரும்யா... நா மறந்துட்டேன்... நா ஒன்னுச் செய்யறேன்... ஃபிலிப் சார கூப்ட்டு சொல்றேன்...' என்றவர் விஷமத்துடன் சோமசுந்தரத்தைப் பார்த்தார். 'ஒம்மத்தான் செலக்ட் செஞ்சிருக்கோம்னு சொல்லிரலாமாய்யா?'

சரி என்று சோமசுந்தரம் தலையை அசைக்க நாடார் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணை தேடினார்... அதற்குள் செல்ஃபோன் சிணுங்கியது...

'யார்யா... ஃபிலிப் சாரா? ஒங்களுக்கு ஆயுசு கெட்டிய்யா... ஒங்க நம்பரத்தான் துழாவிக்கிட்டிருந்தேன் நீரே கூப்ட்டுட்டீரு...' என்றவர் எதிர்முனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தார்...'அப்படியா... நல்லதா போச்சுய்யா.. எங்க விசயம் சுளுவா போயிருச்சி... அவன் கெடக்கட்டும்... இனி நீங்க நிம்மதியா சேர்மன் சேர்ல ஒக்காந்துரலாம்... என்னது... எதுக்கா? அத நாங்க பாத்துக்கறோம்...நீங்க நம்ம செக்கரட்டரிய கூப்ட்டு நாளைக்கு பகலுக்கு மேல... ஒரு மூணு, நாலு மணி வாக்குல நம்ம எம்.சி கூட்டத்த கூட்டச் சொல்லுங்க... ஒம்ம பேர அதுல முடிவு பண்ணிருவம்... என்னய்யா? சொல்லுங்க... எது... அந்தாள் விஷயமா? அதான் எங்கிட்ட சொல்லிட்டீங்கல்ல.. இங்கதான் டாக்டர் இருக்காரு... அப்புறம் செட்டியார்... நா சொல்லிக்கறேன்... என்னதுய்யா? ஏதாச்சும் செய்யறதா? நாம இதுல செய்யறதுக்கு என்னய்யா இருக்கு... திணைய வெதச்சவன் திணைய அறுக்கான்... கொஞ்ச நாளைக்கு படட்டும்யா... நீங்க கவலப்படாம நா சொன்னத செய்ங்க... பெறவு கூப்புடுறேன்...'

அவர் அதுவரை பேசியது ஒன்றும் விளங்காமல் அங்கு இருந்த மூவரும் நாடாரையே பார்த்தனர்... 'எய்யா டாக்டரே நீங்க சேர்மன் பதவியில போடலாம்னு சொன்னீங்களே... அவர அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபிசுக்கு கொண்டு போயிருக்காங்களாம்..நம்ம லேபர் யூனியன் தலைவர் முரளிய இந்தாளு ஆள வச்சி அடிச்சிப் போட்டாராமே?'

சோமசுந்தரம் மட்டுமல்லாமல் செட்டியாரும் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களிருவர் முகம் போன போக்கிலிருந்து தெரிந்தது.

'என்ன நாடார் சொல்றீங்க.. யார் சேதுவா.. அவரா இப்படி செஞ்சிருப்பாரு?' என்றார் சோமசுந்தரம் நம்பமுடியாமல்.

'யார்க்குய்யா தெரியும்? நா கேட்டுக்கலை... நமக்கு அதுவா முக்கியம்?' நாடாருடைய செல்ஃபோன் மீண்டும் சிணுங்க... திரையில் தெரிந்த தன்னுடைய மகளுடைய எண்ணைப் பார்த்தார். 'எம் பொண்ணு கிட்டருந்து ஃபோன்... பேசிட்டு வந்துடறேன்..' என்றவாறு ஹாலை விட்டு வெளியேறினார்... 'என்னம்மா சொல்லு...' என்றவர் அடுத்த நொடியே, 'என்ன தாயி சொல்றே.. எது? நம்ம மந்திரச்சாமியையா? அடப் பாவமே... ஒனக்கு ஒன்னுமில்லையே... அங்கனயே இரு... தோ அஞ்சு நிமிசத்துல காத்தா பறந்து வந்துட்டேன்...' என்றவர் உள்ளே காத்திருந்தவர்களை மறந்து தன்னுடைய வாகனத்தை நோக்கி ஓடினார்...

************

மருத்துவமனையின் தலைவர் அறையில் அமர்ந்திருந்த மாதவன் சென்னையிலிருந்து வந்திருந்த இரு மருத்துவர்களையும் பார்த்தார். 'Are you sure that my wife is fit to travel by air doctor?'

'Yes... I think so... Since she has come out of the shock now... We feel we can take her to Chennai for further treatment..'

மாதவன் மருத்துவமனையின் தலைவரைப் பார்த்தார். 'Do you have any objection Doctor?'

அவர் புன்னகையுடன் இல்லை என்று தலையை அசைத்தார். 'I think she is physically strong.. Especially after she was told that your son has survived his suicide attempt she has recovered very fast from her stroke.. Her BP has come down faster than we thought... From now on she needs only the emotional support from you and your family... she should be able to walk in another couple of months with the help of a good and supportive physio... but to get back her speech.... I think it might take little more than that...maybe a year or so...' என்றவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தார்...'It's settled then... Thankyou gentlemen... Goodday.. I've got to run...'

மாதவனும் திருப்தியுடன் எழுந்து அறையிலிருந்து வெளியேறி தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி விரைந்தார்..

*******

பாபு சுரேஷ் என்ன பதில் பேசுவது என தெரியாமல் திகைத்து நிற்க ஆய்வாளர் மணியின் செல்ஃபோன் அடித்தது.

எதிர்முனையில் எஸ்.பி தனபால்சாமியின் குரல்... எஸ்.ஐ. விறைப்பாக, 'எஸ் சார்..' என்றார். அடுத்த நொடியே அவருடைய முகம் அஷ்டகோணலாகியது... 'எஸ் சார்... இப்பவே வரேன்.. சார்...' என்றவர் பாபுவைப் பார்த்தார்..இவரிடம் எஸ்.பி தன்னிடம் கூறியதை சொன்னால் தனக்கு நல்லதல்ல என்று நினைத்தார்... 'யோவ் நா அப்பவே சொன்னேன்... அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு... எல்லாத்துக்கும் காரணம் அந்த பேங்க் ஈ.டி. சேதுமாதவந்தான்னு அவன் ஏவிவிட்ட ஆளே ஒத்துக்கிட்டான்... சேதுவ அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபீசுக்கு கொண்டு வர லோக்க எஸ்.ஐய அனுப்பிட்டேன்... நீங்க மிஸ்டர் பாபுசுரேஷ் கிட்ட சாரி சார்ன்னு சொல்லிட்டு ஒடனே கமிஷனர் ஆஃபீஸ் வந்து சேருங்க... க்விக். .'

இவர்கிட்ட சாரின்னு சொல்றதா? எனக்கென்ன பைத்தியமா? 'சார்... இப்ப போறேன்... தேவைப்படறப்போ கூப்பிடறேன்.. ஸ்டேஷனுக்கு வரவேண்டியிருக்கும்...' என்று கெத்தாக கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார் மணி தன்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை வீணாகப் போகிறதென்பதை உணராமல்...

அவர் வாசலை தாண்டுவதற்கு முன் பாபு சுரேஷின் சம்மந்தி வாசலை நோக்கி நடந்தார். இதை எதிர்பாராத பாபு அவரைத் தொடர்ந்து ஓடினார்...' சம்மந்தி வந்த விஷயத்த சொல்லாம போறீங்க?'

'இனிமே பேசறதுக்கு என்னய்யா இருக்கு? நீங்க பேங்க்ல ஒரு சீனியர் ஆஃபீசர்... நம்ம லெவலுக்கு ஏத்த ஆளுன்னு நெனச்சித்தான் சம்மந்தம் பேசினேன்... ஆனா இப்ப? விட்டா சந்தேகத்தின் பேர்ல ஒங்கள அரெஸ்டே பண்ணிருப்பார் போலருக்கே அந்த எஸ்.ஐ? ஏதோ நா வந்தேன்... அப்புறம் வரேன்னு கெளம்பிட்டார்... இதுல கூப்டறப்பல்லாம் ஸ்டேஷனுக்கு வரணும்னு வேற ஆர்டர்.. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா எங்க குடும்பத்துக்கும் சேர்த்துல்லே அவமானம்? அதான் கெளம்பிட்டேன்...'

பாபு சுரேஷ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்...'என்ன சம்மந்தி இப்படி திடீர்னு சொல்றீங்க... கல்யாண ஹால்லருந்து எல்லாமே ரெடி பண்ணிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படீ? நா பண்ண தப்புக்காக என் பொண்ண தண்டிச்சா எப்படி?'

தன் தந்தையின் கெஞ்சும் குரலைக் கேட்ட ரம்யா சமையலறையிலிருந்து வெளியேறி ஹாலுக்குள் நுழைந்தாள் 'அப்பா என்ன பண்றீங்க?' என்றாள் உரத்த குரலில். பிறகு ஓடிச்சென்று தலைகுனிந்து நின்ற தன் தந்தையின் சட்டையைப் பிடித்து பின்னுக்கு இழுத்தாள். 'நோ.... வேணாம்ப்பா... Don't beg him... எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்....'

'ஏய் ரம்யா... நீ சும்மாயிரு... நீ வேற எதையாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துராத...'என்ற தன் தாயை திரும்பிப் பார்த்தாள்.

'ஏம்மா.. எதுக்கு சும்மாருக்கணும்? கேவலம் ஒரு சின்ன சந்தேகத்தின் பேர்ல அப்பாவ கொஸ்ச்சின் பண்ண வந்ததுக்காக இவங்க அப்பாவ என்ன வேணா பேசலாம்.. நா பேசக் கூடாதா? முடிவா சொல்றேன்... எனக்கு இந்த மாப்பிள்ள வேணாம்... I am not interested.. just leave me out of this....' என்றவாறு மாடிப்படிகளை நோக்கி ஒடிய தன் மகளைப் பார்த்தவாறு நின்றார் பாபு சுரேஷ் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறிய சம்மந்தியை தடுத்த நிறுத்த தோனாமால்...

********

'என்ன ஃபிலிப்.. என்ன சொல்றார்?' என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்...

இவரிடம் தன்னையே சேர்மன் பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று எப்படி சொல்வது என்று நினைத்தார். நிச்சயம் தனக்கு கீழே பணியாற்ற ஒப்புக்கொள்ள மாட்டார்... இன்று மாலை மாணிக்கவேலின் வீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நாடாரிடம் இவரையே மீண்டும் அந்த பதவியில் அமர்த்த பரிந்துரைக்க வேண்டும்... பார்ப்போம்... 'நம்ம ஈடியோட விஷயத்துல ஒன்னும் செய்யறதுக்கில்லன்னு சொல்லிட்டார் சார்.. அதான் கொஞ்சம் ஷாக்காப் போயிருச்சி...' என்றார் பட்டும் படாமலும். 'நாளைக்கு எம்.சிய வேற கூட்டணுமாம்... ஏன், எதுக்குன்னு சொல்லல...

எம்.சி மீட்டிங்கா? ஒருவேளை சேர்மன் போஸ்ட்ல யார போடலாம்னு டிசைட் பண்றதுக்காருக்குமோ... சேதுவும் இல்லாத நேரத்துல.. Will I get a chance again என்று சிந்திக்க ஆரம்பித்தார் சுந்தரலிங்கம்...

'ஈ.டியும் இல்லாத நேரத்துல ஒங்க ரிசிக்னேஷன ரீக்கன்சிடர் பண்ணுங்களேன் சார்.. அட்லீஸ்ட் நாளை மீட்டிங் முடியறவரைக்கும்...'

ஃபிலிப் சுந்தரத்தின் இந்த கேள்வி அவருடைய செவியில் தேனாக பாய்ந்தது... இருந்தும் சுயகவுரவத்தை விட்டுக்கொடுக்காமல்... 'யோசிச்சி நாளைக்கு சொல்றேன் ஃபிலிப்.' என்றார்...

'தாங்ஸ் சார்... நீங்களே செக்கரட்டரிக்கிட்ட சொல்லி நாளைக்கு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ண சொல்லிருங்க... அஜெண்டான்னு ஒன்னும் சொல்லலைன்னு சொல்லிருங்க.. அவர் வேணும்னா நாடார கூப்ட்டு கேட்டுக்கட்டும்..' என்றவாறு ஃபிலிப் வெளியேற மீண்டும் ஒருமுறை சேர்மன் பதவியில் அமரப்போவதை நினைத்து மகிழ்ந்தார் சுந்தரலிங்கம்.. பதவி மோகம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது!

*****

ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை....

ஃபிலிப் சுந்தரம் எத்தனை கெஞ்சியும் நாடார் ஏற்றுக்கொள்ள மறுத்து அடுத்த நாள் கூட்டத்தில் மாதவன் விடுப்பில் இருந்து திரும்பும் வரையில் சேர்மன் பதவிக்கு அவரையே நியமித்தது வங்கியின் மேனேஜ்மெண்ட் கமிட்டி. கூட்டத்தின் முடிவு அறிவிக்கப்பட்டதும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஃபிலிப் சுந்தரத்திடம் சமர்ப்பிக்கிறார் சுந்தரலிங்கம்.

'Don't stop him... Let him go' என்ற சென்னை திரும்பிய மாதவனின் பரிந்துரையை ஏற்று அவருக்கு பிரிவு உபசாரமளித்து விடையளிக்கிறார் ஃபிலிப்.

மாணிக்கவேலின் மனைவி மற்றும் தந்தையின் இறுதிச் சடங்கில் வங்கியின் தாற்காலிக முதல்வர் என்ற முறையில் பங்குக் கொள்ளும் ஃபிலிப் சுந்தரம் 'என்னுடைய மன ஆறுதலுக்கு கொஞ்ச நாளைக்கு சென்னையிலருக்க வேணாம்னு நினைக்கிறேன் சார்...' என்ற அவருடைய வேண்டுகோளை பரிசீலனை செய்வதாக உறுதியளிக்கிறார்.

அடுத்த நாளே வந்தனாவை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை அறிவிக்கிறார். அப்படியா என்று மகிழ்ந்து போகிறார் வந்தனா. தன்னை எதிர்வரும் திங்கள் முதல் அலுவலகம் திரும்பலாம் என்று மருத்துவர் அனுமதித்த விஷயத்தை கூறுகிறார்.

மாணிக்கவேலுவின் குடும்பத்தில் நடந்த துயரச் சம்பவங்களை பக்குவமாக அவரிடம் எடுத்துரைக்கின்றனர் நந்துவும் நளினியும்.... அன்றே மாணிக்கவேலுவும் அவரை வீட்டில் சந்தித்து தனக்கு சென்னையிலிருந்து மாற்றம் பெற்றுத்தரும்படி கோருகிறார்.

ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறவர் என்ற நினைப்புடன் வங்கியின் பயிற்ச்சிக் கல்லூரியின் தலைவர் ஃபெர்னாண்டோவை தலைமையகத்துக்கு மாற்றி புதிதாக துவக்கப்பட்ட வங்கியின் கணினி இலாக்காவை அவரிடம் ஒப்படைக்கிறார். வந்தனாவை வங்கியின் பயிற்சிக் கல்லூரி தலைவராக நியமிக்கிறார். 'You need rest for some time Vandana... I think you can relax in this post...' என்று அவரை சமாதனப்படுத்துகிறார்.

சேதுமாதவனின் தூண்டுதலின் பேரில் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட ரவி பிரபாக்கரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்து அவரை தன்னுடைய பிரத்தியேக காரியதரிசியாக நியமிக்கிறார். 'The domestic enquiry ordered against you would however go ahead. Is that ok?' 'Yes Sir..'என்று அவருடைய முடிவை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பணியில் மீண்டும் சேர்கிறார் ரவி.

அடுத்த வாரம் பணிக்கு சேரும் வந்தனாவின் வேண்டுகோளை ஏற்று நளினியை பல்லாவரம் கிளைக்கும் மாணிக்கவேலை எர்ணாகுளம் கிளைக்கும் மாற்றம் செய்கிறார் மாதவன்.

'எங்க ஊர் ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் பண்ணா சந்தோஷுக்கு சீக்கிரமே குணமாயிரும் சார்' என்ற நளினியின் பரிந்துரையை சந்தோஷை அழைத்துக்கொண்டு கேரளா பயணமாகிறார் மாணிக்கவேல்...

சோமசுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று பாபு சுரேஷை எச். ஆர் தலைவராக நியமிக்கிறார் ஃபிலிப்.

சேதுமாதவன் தலைகீழாக நின்றும் யாரும் அவருடைய உதவிக்கு வராததால் வங்கி ஊழியர் சங்கத் தலைவரை கொலை செய்ய முயன்றதற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை ஜாமீனில் வெளிவராதபடி அவருடைய கைதை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்குகிறார் எஸ்.பி தனபால்சாமி.

நாடாரை தாக்க வந்த கும்பல் அவர் அந்த வண்டியில் இல்லை என்பதைக் கண்டுக்கொண்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற வெறியில் காரில் இருந்த மேனேஜரை தாக்காமல் அவருடன் அமர்ந்திருந்த ராசம்மாளை தாக்க முயல்கிறது. வண்டியிலிருந்து இறங்கி அதை தடுக்க முயன்ற மந்திரச்சாமி அவர்களுக்கிடையில் சிக்கி காயமடைகிறான். ராசாம்மாள் சிறு காயங்களுடன் தப்பிக்கிறாள். படுகாயமடைந்த மந்திரச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். உயிருக்கு ஆபத்தில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

தன்னை கொலை செய்ய முயன்றது ராசேந்திரன்தான் என்று அவளுடைய தந்தை தடுத்தும் கேளாமல் போலீசில் புகார் செய்கிறாள் ராசம்மாள்..காவல்துறை புகாரை பதிவு செய்து விசாரனையில் இறங்குகிறது... விஷயத்தைக் கேள்விபட்ட ரத்தினவேலுவும் ராசேந்திரனும் இரவோடு இரவாக தலைமறைவாகிறார்கள்...

சீனிவாசன் குடும்பத்தினருடன் சென்னை செல்ல உத்தேசிக்கும் மைதிலி தன் பெற்றோரிடம் போராடுகிறாள். 'நீங்க சம்மதிச்சாலும் இல்லாட்டியும் நா சென்னை போறது உறுதிப்பா... நீங்க சம்மதிச்சா ஒங்க மகளா போயி திரும்பி வருவேன்.. இல்லன்னா வரவே மாட்டேன்...' 'அவளெ தடுக்காதீங்கோன்னா... அப்புறம் அவளே நமக்கு இல்லாம போயிருவா' என்ற தன் மனைவியின் பரிந்துரையை தட்ட முடியாமல் விமான நிலையம் வரை வந்து வழியனுப்புகிறார் பட்டாபி ...

மாதவனுடைய நியமனத்தை உறுதிப்படுத்தும் போர்ட் இயக்குனர் குழு கூட்டத்தில் பூர்ணிமா இயக்குனராக கோ ஆப்ட் செய்யப்படுகிறார்.

அதற்கடுத்த கூட்டத்தில் நாடார்-சோமசுந்தரம் இருவரிடையே ஏற்படும் ஒப்பந்தப்படி நாடாரின் வழக்கறிஞரான மோகனும் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

முதல் இயக்குனர் கூட்டத்தில் பங்கேற்க வரும் உயர் அதிகாரிகள் பட்டியிலில் வந்தனா என்ற பெயரைக் கண்டு விசாரித்துக்கொண்டு வங்கியின் பயிற்சிக் கல்லூரிக்கு செல்கிறார்.... பழைய நினைவுகள் திரும்புகின்றன...

********

இது ஒரு தாற்காலிக முடிவுதான்....

மாதவன் மீண்டும் வங்கிக்கு திரும்புவாரா?

சேதுமாதவன் சிறைத்தண்டனையிலிருந்து மீள்வாரா?

ரவி பிரபாகர் தனக்கெதிரான விசாரனையிலிருந்து மீள்வாரா?

ரத்தினவேல், ராசேந்திரன் பிடிபடுவார்களா? நீயா நானா என்ற போராட்டத்தில் வெற்றி யாருக்கு? நாடார் - ராசம்மாள் ஜோடிக்கா இல்லை ரத்தினவேல் - ராசேந்திரன் ஜோடிக்கா?

மாணிக்கவேலின் மகன் குணமடைவாரா?

ரம்யாவின் தடைபட்டுப் போன திருமணம்.....

மோகன் - வந்தனாவின் வாழ்வில் வசந்தம் திரும்புமா?

சீனிவாசன் - மைதிலியின் திருமண ஆசை...

இன்னும் எத்தனை, எத்தனையோ தீர்வு கிடைக்காத வினாக்கள்.....

அடுத்த பகுதியில்... ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு....

சூரியன் தொடரை தொடர்ந்து ஆதரவளித்து வந்த தமிழ்மண நண்பர்களுக்கு மிக்க நன்றி... இத்தொடரின் மொத்த ஹிட்... சுமார் 50000 - பழைய ப்ளாகரில் 30000 மற்றும் புதிய ப்ளாகரில் 20000...

அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்ட ஜப்பான் கிருஷ்ணாவுக்கும்...

விடாது பின்னூட்டம் இட்டு என்னை ஊக்குவித்த என் அருமை நண்பர் சிவஞானம்ஜி அவர்களுக்கும் இரட்டை நன்றிகள்...

சூரியன் மீண்டும் உதயமாகும்வரை.....இடைபட்ட காலத்தில்... அதாவது, எதிர்வரும் பதினைந்தாம் தேதி முதல்.....

நாளை நமதே... புதிய தொடர்... இளைய சமுதாயத்தினரின் ஆசைகள், நிராசைகள்.....

**********

10.5.07

சூரியன் 199

மகளின் திருமண வேலைகள் நிமித்தம் கடந்த இருதினங்களாக விடுப்பிலிருந்த பாபு சுரேஷ் அன்று அலுவலகம் செல்ல தீர்மானித்து குளித்து முடித்ததும் உணவு மேசையில் சென்றமர்ந்தார்.

இதை எதிர்பாராத சுசீந்தரா, 'என்னங்க இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க.. நீங்க இன்னைக்கிம் லீவுன்னுல்ல நினைச்சேன்... ப்ரேக் ஃபாஸ்ட் ரெடியாகலையே?' என்றால் பதறியவாறு..

பாபு மேசையின் மீது கிடந்த செய்தித்தாளை புரட்டியவாறு, 'காப்பி மட்டும் குடு.. முடிஞ்சா ப்ரெட் டோஸ்ட் போடு... இல்லன்னா பரவால்லை..' என்றார். அவருடைய பார்வையில் முதல் பக்கத்திலிருந்த புகைப்படம் பட்டதும் புரட்ட இருந்தவர் மீண்டும் அதைப் பார்த்தார். அருகிலிருந்த தலைப்பும் அவரை திடுக்கிட வைத்தது.

அவருடைய மனைவி அவசர, அவசரமாக கொண்டு வைத்த காப்பியையும் மறந்து அதை படிப்பதில் தீவிரமானார். அதை படித்து முடித்ததும் அவருக்கிருந்த பசியும் பறந்துபோனது. செய்தித்தாளை மடித்து தன் கைப்பெட்டியில் வைத்துக்கொண்டு எழுந்து நின்றார். 'சுசீ நா கெளம்பறேன்... ஒரு அர்ஜெண்ட் வேலையிருக்கு.'

சமையலறையில் ரொட்டித் துண்டுகளில் 'பட்டரை' தடவிக்கொண்டு நின்ற சுசீந்தரா திடுக்கிட்டு என்னாச்சி இந்த மனுசனுக்கு இப்பத்தான் ப்ரெட் டோஸ்ட் கேட்டார் என்று நினைத்தவாறு ஹாலுக்குள் நுழைந்து தன் கணவனைப் பார்த்தாள். 'என்னங்க திடீர்னு...இப்பத்தான ப்ரெட் டோஸ்ட் கேட்டீங்க?'

சட்டென்று எரிச்சல் வர அதை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்... இதே இரண்டு நாளைக்கு முந்தைய பாபுவாக இருந்தால்...'சொன்னேன் அதுக்கென்ன இப்ப? ஆஃபீசுக்கு போறப்ப எதையாவது சொல்லி என் மூட கெடுக்காத' என்று எரிந்து விழுந்திருப்பார்....


'இல்ல சசி... ஒரு முக்கியமான வேலை... மறந்துட்டேன்... சாயந்தரம் வந்து சொல்றேன்.. இப்ப வரேன்.. ப்ரெட் டோஸ்ட ரம்யாவுக்கு குடு...வா வந்து கேட்ட மூடிக்கோ...' என்றவாறு கார் சாவியை வாசல் கதவின் உட்புற சட்டத்திலிருந்த கொக்கியிலிருந்து எடுத்துக் கொண்டு வாசற்கதவைத் திறந்தார்.

அங்கே...

போர்ட்டிக்கோவில் அப்போதுதான் வந்து நின்ற காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கிய காவல்துறை ஆய்வாளர் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார், தயங்கி நின்று திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். 'ரம்யா எங்க... அவள மேலயே இருக்கச் சொல்லு... நீயும் கிச்சன்லயே இரு... நா கூப்பிட்டதுக்கப்புறம் வந்தா போறும்..'

'எ....என்ன சொல்றீங்க... ஏன்?' என்றவாறு அவரை நோக்கி செல்ல முயன்ற சுசீயை தன்னுடைய கோபப் பார்வையால் தடுத்து நிறுத்திய பாபு சுரேஷ் வாசலை நோக்கி திரும்பி ஒரு செயற்கை புன்னகையுடன், 'யார பாக்கணும் சார்... I am Babu Suresh' என்றார்.

வாசலைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த காவல்துறை ஆய்வாளர் மணி வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டார். பிறகு பாபு சுரேஷை கூர்ந்து பார்த்தார். 'ஒங்களதான் பாக்க வந்தேன் சார்... If you don't mind.. .I would like to ask you some questions...'

பாபு சுரேஷ் சோபாவைக் காட்டினார். 'Of course... சொல்லுங்க... என்ன தெரியணும்?'

அவர் காட்டிய சோபாவில் அமர்ந்த ஆய்வாளர், 'ஒங்களுக்கு மிஸ்டர் முரளிய தெரியுமா?' என்றார் சட்டென்று... அடுத்த நொடியில் பாபு சுரேஷின் முகத்தில் தோன்றி மறைந்த கலவரத்தைக் குறித்துக்கொண்டார்.

பாபு சுரேஷ் சமாளித்துக்கொண்டு. 'தெரியும்.. எதுக்கு கேக்கீங்க?' என்றார்.

'அவருக்கும் ஒங்களுக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதும் இருக்கா?'

'தனிப்பட்ட விரோதம்னு இல்லை... ஆனா அவர் மேல வருத்தம் இருக்கறது உண்மைதான்..'

'ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?'

பாபு சுரேஷ் இத்தனை அமைதியாக பேசி பார்த்திராத சுசீந்தரா இதுவே பழைய பாபுவாக இருந்தால் என்று நினைத்தாள்...'சார் அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம்... அவன் ஒரு ரவுடி...' என்று முரளியைப் பற்றி தாறுமாறாக வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார்... ஆனால் அவருடைய மகள் ரம்யாவின் வீட்டிலிருந்து வெளியேறிய நாள் முதல் அவருடைய நடவடிக்கைகள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மாறியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

'போன சனிக்கிழமை பகல் அவரும் அவரோட யூனியன் மெம்பர்சுல சிலரும் வந்து என்னெ என் ரூம்லருந்து வெளிய வர முடியாம சுமார் ரெண்டு மணி நேரம் கேரோ பண்ணாங்க... அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்...' என்ற பாபு சுரேஷ் சற்று நிறுத்தி, 'சார் தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேக்கலாமா?'

ஆய்வாளர் புன்னகையுடன் பாபுவைப் பார்த்தார். 'எதுக்கு இந்த கேள்வின்னு கேக்கறீங்க? சரிதானே?'

ஆமாம் என்று தலையை அசைத்தார் பாபு.

ஆய்வாளர் எழுந்து நின்றார். பிறகு பாபுவின் முகத்தைப் பார்த்தவாறு, 'முரளிய இன்னைக்கி காலைல யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க...அடிச்சி போட்டுட்டாங்க... அவர் இப்ப ICU வுல இருக்கார்...' என்றார்... பிறகு பாபு எதிர்பாராத நேரத்தில் கோபத்துடன், 'நீங்க இன்னைக்கி காலைல எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?' என்றார் உரக்க..

அவருடைய உரத்த குரல் மாடியில் தன்னுடைய அறையிலிருந்த ரம்யாவை இழுக்க அவள் மாடியிலிருந்தவாறே பார்த்துவிட்டு படிகளில் இறங்கி ஓடிவந்தாள்.... 'என்னப்பா... எதுக்கு இவங்க நம்ம வீட்டுக்குள்ள வந்து சத்தம் போடறாங்க?' என்றவாறு தன்னை நோக்கி வந்த தன் மகளை நெருங்கி ஆதரவாய் தோளை தொட்டார் பாபு... 'Nothing Ramya... nothing serious... நீ கிச்சன்ல போயி அம்மா கூட இரு.... இவர அனுப்பிட்டு வந்து சொல்றேன்.'

அவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு சமையலறையை நோக்கி அவள் திரும்ப ஆய்வாளருடைய கேலி சிரிப்பு அவளை தடுத்து நிறுத்தியது...'அது அவ்வளவு ஈசி இல்ல சார்... ஒங்க மேல சந்தேகப் பட்டு முரளியே புகார் செஞ்சிருக்காரு... சொல்லப் போனா அவருடைய புகாரை வச்சே ஒங்கள கைது பண்ண முடியும்.... ஆனா..... நீங்க ஒரு ரெஸ்பான்சிபிள் பேங்க் ஆஃபீசர்ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் உங்கக் கிட்ட இப்படி பேசிக்கிட்டிருக்கேன்...'

ஆய்வாளரின் கேலிப் பேச்சு அவரை உசுப்பி விட்டாலும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டார் பாபு... கைது என்ற வார்த்தை ரம்யாவையும் சமையலறையில் நின்றிருந்த சுசீந்தராவையும் கலவரப்படுத்தியது...

அந்த நேரம் பார்த்து வாசலில் அழைப்பு மணி ஒலிக்க எல்லோருடைய கவனமும் வாசலை நோக்கி திரும்பியது... ஒருக்கழித்து மூடப்பட்டிருந்த கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தவரைப் பார்த்து பாபு சுரேஷ் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி, மகள் இருவரும் கலக்கமடைந்தனர். 'இந்த நேரம் பார்த்தா சம்மந்தி வரணும்?' என்று முனுமுனுத்தாள் சுசீந்தரா.

வந்தவர் ஹாலில் நின்றிருந்த காவல்துறை ஆய்வாளரையும் பாபுவையும் கலவரத்துடன் நின்றிருந்த ரம்யாவையும் பார்த்தார். 'என்ன சம்மந்தி என்ன நடக்குது இங்க? எதுக்கு போலீஸ் வந்திருக்கு.. நீங்க எல்லாரும் எதுக்கு என்னைய பாத்ததும் இப்படி திகைச்சிப் போய் நிக்கறீங்க?' என்றவருக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றார் பாபு..

****

சுந்தரலிங்கத்தின் அறையை அடைந்து உள்ளே நுழைந்ததும் அவர் முன்னாலிருந்த கடிதத்தை மும்முரமாக படித்துக் கொண்டிருக்கவே சற்று தயங்கி நின்றார்... 'You want me to come later Sir?' என்றார் தயக்கத்துடன்..

அவருடைய குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த சுந்தரலிங்கம், 'நோ, நோ.... நா உங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்... இது ஒங்களுக்கு எழுதுன கடிதம்தான்.. ஐ மீன் எச்.ஆர் டிப்பார்ட்மெண்டுக்கு...' என்றவாறு கடிதத்தில் ஒப்பிட்டு நீட்டினார்.

'எனக்கா? என்ன லெட்டர் சார்?' என்றவாறு அவர் நீட்டிய கடிதத்தை மேலோட்டமாக படித்தவர் அதிர்ச்சியுடன், 'என்ன சார்... எதுக்கு இப்ப திடீர்னு?' என்றார்.

சுந்தரலிங்கம் புன்னகையுடன், 'முதல்ல ஒக்காருங்க சொல்றேன்.' என்று அவர் அமரும்வரை காத்திருந்தார்.

'சொல்லுங்க சார்... இன்னைக்கி காலைல வந்த ப்ரெஸ் ரிப்போர்ட் ஒங்கள இந்த முடிவுக்கு தூண்டியிருந்தா அதுக்கு தேவையே இல்லைன்னு சொல்வேன்... எங்க எல்லாருக்கும் நீங்க அப்படி சொல்லியிருக்க மாட்டீங்கன்னு நல்லாவே தெரியும்... So if you feel that you should resign on that count... I would say... It is not necessary.'

சுந்தரலிங்கம் இல்லை என்று தலையை அசைத்தார். 'இல்ல ஃபிலிப்....அதுவும் ஒரு காரணம்தான்.. .ஒத்துக்கறேன்... ஆனா அது மட்டுமே காரணம் இல்லை... I have been thinking about this ever since Madhavan joined as Chairman... Right from the incident that took place at the airport and on that night at the hotel bar...' ஃபிலிப் சுந்தரம் அதிர்ந்துபோய் அமர்ந்திருக்க சுந்தரலிங்கம் எழுந்து அறையை ஒரு வலம் வந்தார். அவர் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தது ஃபிலிப்புக்கு புரிந்தது. ஆகவே அவராக பேசட்டும் என்று காத்திருந்தார்.

'என்னோட மனநிலையையும் நீங்க புரிஞ்சிக்கணும் ஃபிலிப்... மாதவனுக்கும் சேதுவுக்கு இடையிலருக்கற இந்த ஈகோ க்ளாஷ இனியும் என்னால பொறுத்துக்க முடியாதுன்னு நினைக்கேன்... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்கற கோல்ட் வார்ல நாம ஏன் பகடைக்காயா ஆவணும்னு நான் நினைக்கறேன்... அதுவுமில்லாம ஆறு மாசம் சேர்மன் சேர்ல ஒக்காந்துருந்துட்டு மறுபடியும் இன்னொரு சேர்மன் கிட்ட கைகட்டி பதில் சொல்ற லெவலுக்கு இறங்கணுமான்னும் யோசிக்கேன்... போறா கொறைக்கு இப்ப மாதவன் இல்லை... அங்க அவரோட சன் மேல போலீஸ் ஆக்ஷன்... அரெஸ்ட்... பெயில்னு... இப்பத்தைக்கி அவரால திரும்பி வரமுடியும்னு எனக்கு தோனலை.... அவர் இல்லாத நேரத்துல எப்படியும் அந்த சீட்ல ஒக்காந்துரணும்னு துடியா துடிக்கார் சேது... நேத்து ராத்திரி கூப்ட்டு நா அந்த சேர்ல ஒக்கார்றதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணணும்னு வேற ரிக்வஸ்ட் பண்றா மாதிரி ஒரு மிரட்டல்...'

ஃபிலிப் சுந்தரம் அப்படியா என்பதுபோல் அவரை வியப்புடன் பார்த்தார்... ஆனால் பதில் பேசவில்லை....

'ஒங்கக்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லணும்னு நினைக்கேன்...' என்றவாறு தன்னுடைய இருக்கைக்கு திரும்பிய சுந்தரலிங்கம் இவரிடம் சொல்வதா வேண்டாமா என்பதுபோல் தயங்குவதை கவனித்தார் ஃபிலிப்... ஆனால் தொடர்ந்து மவுனம் காத்தார்.

'போன சனிக்கிழமை நான் அந்த கொல்கொத்தா பிராஞ்ச் விஷயமா அவர் வீட்டுக்கு போயிருந்தேன்னு சொன்னேனே ஞாபகமிருக்கா?' என்றார் சுந்தரலிங்கம்.

'ஆமா சார்... சொன்னீங்க... ஏன் அதுல ஏதும் பிரச்சினையா?'

'இல்லை சார்... அதான் முடிஞ்சிதே... அதில்லை... நா சொல்ல வந்தது சேது அன்னைக்கி எங்கிட்ட சொன்ன ஒரு விஷயத்த பத்தி...'

'எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க...'

'சொல்லணும் சார்... அன்னைக்கி ராத்திரி அக்காடமியில நம்ம குன்னக்குடியோட கன்சர்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிருந்தேன்... சேது நல்லா குடிச்சிட்டு ஒளற ஆரம்பிச்சதால... நா சபாவுக்கு போணும்.. டைம் ஆயிருச்சின்னு சொன்னேன்.. அது ஒரு ஃபண்ட் ரெய்சிங் பங்க்ஷன்னுங்கறதையும் சொன்னேன்..'

'சரி...'

'அதுக்கு சேது எவ்வளவு ஃபண்ட்ஸ் எதிர்ப்பாக்கறீங்கன்னு கேட்டார்... நா பதில் சொல்லாம நின்னேன்.. அப்புறம் என்ன ஒரு பத்து லட்சம் இருக்குமான்னு கேட்டார்... நா குடிச்சிட்டு நிக்கறவர்கிட்ட என்னத்த பேசறதுன்னு இருந்தேன்... அந்த பணத்த நீங்க சீட்ல இருந்துக்கிட்டே சம்பாதிச்சிரலாமே சார்ன்னு சேது சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் என்ன பதில் பேசறதுன்னே தெரியல ஃபிலிப்... அன்னைக்கே தீர்மானம் பண்ணிட்டேன்... மாதவன் வந்து சார்ஜ் எடுத்ததும் அதிக நாள் இங்க இருக்கக் கூடாதுன்னு.... எனக்கென்னமோ அவர் எதையோ மனசுல வச்சிக்கிட்டுத்தான் அப்படி பேசியிருப்பாரோன்னு தோனுது... நா கஷ்டப்பட்டு தெய்வ காரியத்துக்கு பணத்த திரட்ட இந்த மனுசன் அத நான் வேற தகாத வழியில கலெக்ட் பண்ணதுன்னு பேச ஆரம்பிச்சா அப்புறம் என் கதி அதோகதிதான்.... அதான் போறும்னு தோனுது.... அத்தோட இன்னைக்கி காலைல இந்த ரிப்போர்ட்டும் வந்ததும்.... இதுக்கும் மேல காத்துக்கிட்டிருக்க வேண்டாம்னு எனக்கு மட்டுமில்லாம கனகாவுக்கும் தோனிருச்சி... அதான்... இன்னைக்கி காலைல வந்ததும் மொதல் வேலையா இத எழுதிட்டேன்.. இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல ஃபிலிப் .... நீங்களும் மாத்த முயற்சிக்காதீங்கன்னு கேட்டுக்கறேன்...'

அவர் பேசி முடித்து சில நிமிடங்கள் வரை இருவரும் ஒன்றும் பேச தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருக்க அறைக்கதவைத் திறந்துக்கொண்டு யாரோ நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு இருவரும் வாசலை நோக்கி திரும்பினர்... மத்திய ஆய்வு இலாக்காவின் தலைவர்... டிஜிஎம்... அவருடைய முகத்தில் அளவுக்கு மீறி தெரிந்த பதற்றத்தைப் பார்த்தா ஃபிலிப்... 'என்ன ராகவன் என்ன விஷயம்... ஏன் இப்படி ஓடிவரீங்க?'

'சார்... நம்ம ஈ.டிய போலீஸ் அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபீசுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காங்களாம் சார்... அவர் வீட்லருந்து நம்ம சுபோத்துக்கு ஃபோன் வந்திருக்கு....'

'என்னது... சேதுமாதவனையா? ஏன்... என்ன விஷயம்... யார் ஃபோன் பண்ணா... சுபோத் எங்க?' என்று சரமாரியாக இருவரும் மாறி, மாறி கேள்விகளைக் கேட்க, ' சுபோத் வெளியிலதான் நிக்கார் சார்... I will call him inside..' என்றவாறு ராகவன் வாசலை நோக்கி ஓடினார்.

தொடரும்...

நாளை சூரியன் நிறைவுபெறும்... தாற்காலிகமாக...

9.5.07

சூரியன் 198

சேதுமாதவன் தினமும் இரவில் க்ளப்பில் தன் சிநேகிதர்களுடன் சீட்டாடுவதும் மூச்சு முட்ட குடிப்பதும் வாடிக்கையென்றாலும் அடுத்த நாள் காலையில் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு எழுந்துவிடுவார். ஆனால் அதற்குப் பிறகு அன்று நாள் முழுவதும் எந்த அதிகாரி அல்லது எந்த ஊழியருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆராய்வதிலேயே ஆழ்ந்துவிடுவார்.

வங்கியில் முதல்வருக்கு அடுத்தவர் என்ற பதவி அவருக்கு பல சலுகைகளை அவருக்கு அளித்திருந்தது. அதில் ஒன்று அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதது. வீட்டிலிருந்தவாறே அலுவலக கோப்புகளை பார்க்கிறேன் என்ற பெயரில் பல நாட்கள் பகலுணவுக்கு பிறகே அலுவலகம் செல்வார். அவர் எந்த நேரத்தில் அலுவலகத்திலிருப்பார் என்பது அவருக்கு அடுத்தபடியாக இருந்த சிஜிஎம்களான சுந்தரலிங்கத்திற்கும் ஃபிலிப் சுந்தரத்திற்குமே தெரியாது. அவருடைய மனைவி மாயா கேட்கும்போதெல்லாம், 'ஆ ரெண்டு சுந்தரன்மாரும் உண்டுல்லே... அவரு நோக்கிக்கோளும் என்பார் கேலியுடன். மலையாளத்தில் சுந்தரன்மார் என்றால் அழகானவர்கள் என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அவர் அதற்கு நேர்மறையான அர்த்தத்தில் அதாவது இரண்டு கோமாளிகள் என்று பொருள்பட கூறுகிறார் என்பது மாயாவுக்கு மட்டுமல்ல அவருடைய அந்தரங்க வேலையாள் திருநாவுக்கரசுக்கும் தெரியும்... மாயா தலையடித்துக்கொள்வாள்... திருவோ சமயம் பாத்து ஒன்னெ போட்டுக்கொடுக்காம போகமாட்டான்லே இந்த திரு என்று மனதுக்குள் கறுவுவான்.. அவன் வேலை செய்தது சேதுமாதவனிடம்தான் என்றாலும் அவரை எந்த நேரத்திலும் காட்டிக்கொடுக்க தயாராயிருந்தான்.

அன்றும் அப்படித்தான். காலையில் எழுந்ததுமே முந்தைய தினம் நடந்த நிரூபர்கள் கூட்டத்தில் அவர் கூறியவற்றை சுந்தரலிங்கம் கூறியதாக அவர் ஏற்பாடு செய்திருந்தபடி பத்திரிகைகளில் வர அதை அனுபவித்து படித்துவிட்டு சுந்தரலிங்கத்தின் நிலையை குறித்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இன்னையோட முடிஞ்சது ஒன் ச்சாப்ட்டர்... பத்து லட்சம் தரேன் போயிருடான்னு சொன்னப்பவே போயிருந்தா இந்த நிலமை வந்துருக்காதுல்லே... வேணும்டா ஒனக்கு... சோ.. ஒரு லைன் க்ளியர்... அடுத்தது அந்த ஃபிலிப்தான்... ஆனா லிங்கத்த மாதிரி அத்தன ஈசியா இவனெ கழட்டி விட முடியாது.. யோசிக்கணும்.. இன்னும் நல்லா யோசிக்கணும்.. சோமசுந்தரத்துக்கு பதிலா அந்த நாடார் போர்ட்லருந்து போயிருந்தா இவன் கதையையும் முடிச்சிருக்கலாம்... அதுக்கு ஒரு வழிய கண்டுபிடிச்சிட்டா நம்ம வேல ஈசியாயிரும்....

அத்தோட அந்த முரளியோட கதையையும் இன்னைக்கே முடிச்சிரணும்... ராஸ்கல் சோமசுந்தரத்துக்கு யோசிக்கறதுக்குக் கூட டைம் இல்லாம திடீர்னு போர்ட்லருந்து ரிசைன் பண்றதுக்கு அந்த ஃபேக்ஸ்தான காரணம்? அதுமட்டும் வராம இருந்துருந்தா எப்படியாவது அவர் அடுத்த நாள் பேப்பர்ல வராம தடுத்திருப்பாரே... அதுக்கப்புறம் அடுத்த போர்ட் மீட்டிங் வரைக்கும் டைம் கிடைச்சிருக்குமே... அவனெ கைய கால ஒடச்சி கொஞ்ச நாளைக்கு வீட்டுலயோ முடக்கி போட்டாத்தான் புத்தி வரும்... ஆனா நாம மாட்டிக்கக் கூடாது... நாம சொன்னா மாதிரியே அந்த பத்மநாபன் போலீசுக்கு போன் போட்டுருப்பான்... என்று நினைத்த சோமசுந்தரம் சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்தார். இந்நேரம் வேலைய முடிச்சிருக்கணுமே... ஏன் இன்னமும் நமக்கு போன் பண்ணாம இருக்கான்? அவனோட கால் வந்தாத்தான ஆஃபீசுக்கு கிளம்ப முடியும்?

வாசலில் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டது... மாடியிலிருந்தவாறே கீழே திருநாவுக்கரசு வாசல் கதவை நோக்கி விரைவதைப் பார்த்தார். ஒருவேள பத்மநாபன் நேராவே வந்துட்டானோ? அதுவும் நல்லதுக்குத்தான்... நாடார் விஷயத்துலயும் ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கலாமே... என்று நினைத்தவாறு எழுந்து நிற்க கீழே வாசற்கதவு திறக்கப்பட்டு திருவை பின்னுக்கு தள்ளிவிட்டு திபுதிபுவென்று உள்ளே நுழைந்த நால்வரடங்கிய காவலர் குழுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றார்.... அவர்கள் நடுவே கைகளில் விலங்குடன் பத்மநாபன்!

*******

மைதிலி மருத்துவமனையைச் சென்றடைந்தபோது இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சீனியின் அறையை எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று மலைத்துப் போனாள்.

மருத்துவமனையின் வரவேற்பறையே ஒரு பெரிய கால்பந்தாட்ட மைதான அளவில் இருந்தது. அறை முழுவதும் ஒரு பெரிய திரையரங்கின் நேர்த்தியில் அழகுபடுத்தப்பட்டிருந்ததையும் அங்கு நிறைந்திருந்த மேல்தட்டு மனிதர்களையும் கண்டு மிரண்டுபோனாள்.

நல்லவேளையாக அவள் அறைக்குள் நுழைந்ததும் வாசலருகே கவலையுடன் நின்றிருந்த வத்ஸலாவை பார்த்துவிட்டாள். அவளும் மைதிலியைப் பார்த்ததும் ஓடிவந்து அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டாள். 'ரொம்ப தாங்ஸ் மைதிலி... நீ மட்டும் வரலைன்னா நா என்ன செஞ்சிருப்பேன்னு தெரியலை.. முதல் மாடியிலருக்கற ICUல அம்மாவ வச்சிருக்கு. இன்னமும் அம்மா கான்சியசுக்கு வரல. அப்பா அங்கதான் இருக்கார். அப்பாவோட பேங்க் டைரக்டர் ஒருத்தருக்கு சென்னையில பெரிய ஹாஸ்ப்பிடல் இருக்காம். அங்கருந்து ரெண்டு சீனியர் டாக்டர்ஸ் வந்துருக்காங்க. நா நீ வருவேன்னு சொல்லிட்டு கீழ வந்தேன்.. சீனி எட்டாவது மாடியில இருக்கான். He is ok now... இந்தா அவன் ரூமோட விசிட்டர்ஸ் பாஸ்... இத வச்சிக்கிட்டாத்தான் அந்த ஃப்ளோருக்குள்ளயே விடுவாங்க... நீ நேரா அங்க போய் அவன் கூட பேசிக்கிட்டுரு... நேத்து ராத்திரி பெட்ல கொண்டு வந்து போட்டதுலருந்து ஒன் பேர சொல்லித்தான் புலம்பிக்கிட்டே இருக்கான். அப்புறம் டாக்டர் அவனுக்கு செடேட்டிவ் இஞ்சக்ஷன் குடுக்க வேண்டியதா போச்சி... இப்பவும் அநேகமா தூங்கிக்கிட்டுத்தான் இருப்பான். அவனா முழிக்கறவரைக்கும் அவன எழுப்பிராத. நா அம்மாவ ரூமுக்கு போறேன்...' என்றவள் மைதிலியின் கரங்களை விட்டுவிட்டு லிஃப்ட்டை நோக்கி விரைந்தாள்.. பிறகு சட்டென்று நின்று மைதிலியிடம் திரும்பி வந்தாள். 'மைதிலி சீனிக்கு அம்மாவோட விஷயம் இதுவரைக்கும் தெரியாது. நீயும் சொல்லிராத... அப்பா எப்ப தேவைப்படுதோ அப்ப சொல்லிக்கலாம்னு சொல்லிட்டார்... He is so attached to Amma... அவங்களுக்கு ஸ்ட்ரோக்குன்னு சொன்னா அதுக்கு நாந்தானே காரியம்னு அப்செட்டாயிருவான்... அதனால be careful... you should tactfully handle him...' என்றவள்... 'நீ இங்க வந்துருக்கறது ஒங்க வீட்ல தெரியுமா மைதிலி?' என்றாள் மிருதுவாக.

மைதிலி சோகத்துடன் தலையை அசைத்தாள். 'இல்ல வத்ஸ்... But that's not going to make much difference now... I'll tell them when I feel like telling them... You needn't worry about that... But.....'

'என்ன மைதிலி என்ன தயங்கறே.. சொல்லேன்...'

'ஒங்க அப்பாவ நினைச்சித்தான்.....'

வத்ஸலா மைதிலியின் கரத்தைப் பற்றி ஆறுதலாக அழுத்தினாள். 'நீ பார்த்த அப்பா இல்ல மைதிலி இப்பருக்கற அப்பா... போன ஒரு வாரத்துல அப்பா ரொம்பவே மாறிப்போய்ட்டார்... அவர் சொல்லித்தான் நான் ஒன்னையே வரவச்சேன்... அதனால Don't worry about him...' என்றவள், 'எனக்கு நேரமாச்சு மைதிலி... நீயே சீனியோட ரூமுக்கு போயிருவ இல்ல... இந்த பாஸ்ல ஒன் பேரதான் எழுதியிருக்கேன். யாராச்சும் கேட்டா ஃபேமிலின்னு சொல்லிரு... என்ன... நா அப்புறமா ஒன் செல்லுல கூப்பிடறேன்..'

ஓட்டமும் நடையுமாக லிஃப்ட்டை நோக்கி விரைந்தவளைப் பார்த்தவாறே நின்றிருந்த மைதிலி மெள்ள தான் செல்ல வேண்டிய லிஃப்ட்டை தேடிப் பிடித்து எட்டாவது அறையை அடைந்தாள். நல்லவேளையாக சீனியின் அறைக்குள் நுழையும் வரை அவளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முன்னெச்சரியைக வத்ஸ்லா கொடுத்த விசிட்டர்ஸ் பாசை தன்னுடைய சூரிதாரில் குத்தியிருந்ததும் வசதியாக இருந்தது.

இரண்டு கை மணிக்கட்டுகளிலும் பாண்டேஜுடன் கட்டிலில் கிடந்த சீனிவாசனைக் கண்டதும் கண்கள் இரண்டும் கலங்கி பார்வையை மறைக்க இதுக்கு முக்கிய காரணகர்த்தா தாந்தானே என்று நினைத்து கலங்கி நின்றாள் மைதிலி....

இவன ஜுஹூ பேச்சில பாத்து பேசி ஒரு வாரம் இருக்குமா? அன்னைக்கி ஆரம்பிச்ச இந்த வாக்குவாதம் இங்க கொண்டு போயி விட்டுருக்கு... ஒரே வாரம்... ஏழு நாள்.... என்னல்லாம் நடந்திருச்சி.... இந்த அளவுக்கு வந்ததுக்கப்புறம் என்னால இனியும் இவன் இல்லாத ஒரு வாழ்க்கையை செலக்ட் பண்ண முடியுமா? நா எடுக்கற எந்த டிசிஷனும் இவனையும் இவன் குடும்பத்தையும் அஃபெக்ட் பண்ணுமே... சரோஜா ஆண்டி மேல உயிரையே வச்சிருந்த சீனியால அவங்க இந்த நிலைக்கு ஆனானதுக்கு இவளும் ஒரு காரணம்தானே நினைப்பானோ... அதுவே அவனுக்கு நம்ம மேல ஒரு வெறுப்ப உண்டாக்கிருமோ.... பகவானே... அத மட்டும் என்னால தாங்கிக்கிற முடியாதுப்பா....

வாசற்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கலங்கி நின்ற கண்களை துப்பட்டாவால் துடைத்தவாறு திரும்பினாள்... அழகிய புன்னகையுடன் நர்ஸ்... நிச்சயம் மராத்தி இல்லை.... மலையாளியாருக்குமோ... இன்னைக்கி எல்லா ஹாஸ்ப்பிட்டல்லயும் இவங்கதானே.... என்றவாறு மைதிலியும் சிரமப்பட்டு புன்னகைத்தாள்.. 'Are you related to him?' என்ற நர்சின் பேச்சில் தொனித்த மலையாள வாடை தான் நினைத்தது சரிதான் என்று அவளை நினைக்க வைத்தது.... 'Yes she is my Fiancee' என்ற குரல் கேட்டு அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையைப் பார்த்தாள் மைதிலி. 'Is it? Congrats!' என்றவாறு நர்ஸ் படுக்கையை நெருங்க... புன்னகையுடன் அவளை நோக்கி வா என்று கையசைத்த சீனியை இது தேவையா என்பதுபோல் ஆயாசத்துடன் பார்த்தாள் மைதிலி...

*********

ராசம்மாள் உடைமாற்றிக்கொண்டு தன்னுடைய முதல் மாடி அறையிலிருந்து கீழே ஹாலுக்கு வந்தாள். அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டது. அவளுடைய உதடுகள் புன்னகையில் விரிந்தன. அம்மாவுக்கு கிச்சன்ல பாத்திரங்களோட போராடலன்னா தூக்கம் வராது. எத்தன சொன்னாலும் ஒரு வேலைக்காரிய வச்சிக்க மனசு வராது. நம்ம வேலைய நாமதான் பாக்கணும் ராசிம்மா.. இன்னைக்கி பணம், காசு வந்துருக்கலாம்... அதுக்காக கால் மேல கால் போட்டுக்கிட்டு ஒக்காந்துருக்க முடியுமா என்ன? ஆடி ஓடி வேல செஞ்சாத்தான் ராத்திரி படுத்ததும் தூக்கம் வரும்... அம்மாவ மாத்தவே முடியாது... 'அம்மா நா வக்கீல் அங்கிள பாத்துட்டு அப்படியே கடைக்கி போயிருவேன்... ஒங்க பேரனுக்கு நீங்க இருந்தாத்தான் போறுமே.. நா சாயந்தரம் வர்றதுக்கு லேட்டானாலும் ஆகும்... அப்பா டாக்டர் அங்கிள பாத்துட்டு கடைக்கி வந்துருவாய்ங்க..' என்றவள் வாசலைப் பார்த்தாள். மந்திரச்சாமி காருடன் போரடிக்கொண்டிருப்பது தெரிந்தது... கூலண்ட் வந்திருக்கும் போல.... சரி வரட்டும் என்று நினைத்தவாறு சோபாவில் அமர்ந்தாள்...

இன்னைக்கி எப்படியும் வக்கீல் அங்கிள பாத்து பேர மாத்தற விஷயத்த ஃபைனல் செஞ்சிரனும்.. அப்புறம் அந்த சேட்டுக்கிட்டருந்து வாங்கன ஷேர் டிரான்ஸ்ஃபர் விஷயம். அதையும் பேசி முடிச்சிரணும். தாயும் மகளும்னாலும் வாயும் வயிரும் வேறதான? அப்பா கம்பெனிக்கு ஒரே வாரிசு நாமதான்னாலும் நமக்கு வரவேண்டிய பங்குகளுக்கு நாமளே பணத்த திரட்டறதுதான் நல்லது. இந்த வீடு நம்ம பேர்லதான இருக்கு? வேணும்னா இத பேங்குல மார்ட்கேஜ் பண்ணி பொரட்டுவோம்... அந்த ஷேர் ப்ரைஸ்ல (price) பாதியவாவது நம்ம பணமாருக்கணும்.. அப்பத்தான் நாமளும் ஒரு ஷேர் ஹோல்டர்ங்கற ஒரு நெனப்பு, ஒரு இன்வால்வ்மெண்ட் வரும்... இதுக்கு அப்பா என்ன சொன்னாலும் கேக்கக்கூடாது... we should stand on our own legs...

ராசேந்திரனுக்கு சரியான பதிலடி குடுக்கணும்னா இப்ப இருக்கற கணவன் - மனைவிங்கற பந்தத்த அறுத்துரனும். இன்னைக்கி அங்கிளோட ஒக்காந்து எந்நேரமானாலும் டைவர்ஸ் பேப்பர்ச ஃபைல் பண்ண வச்சிரணும். பேர மாத்தறமோ இல்லையோ இந்த தேவையில்லாத பந்தத்திலருந்து விடுதலை வாங்கிரணும்.

'ராசிக்கா... வண்டி ரெடி.'

நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த ராசம்மாள் தன் எதிரில் இருந்த மந்திரச்சாமியைப் பார்த்தாள். 'போலாம்...' என்றவாறு கைப்பையையும் தன் கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் திருமண பதிவு சான்றிதழ் அடங்கிய கோப்பையும் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்...

'அக்கா நம்ம கட மேனேசர் அய்யா வந்துருக்காக... அய்யாவ தேடிக்கிட்டு வந்தாங்களாம்...'

ராசம்மாள் வியப்புடன் வாசலில் நின்றிருந்த ஹோட்டல் நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் மேலாளரைப் பார்த்தார். 'என்ன அங்கிள் ஏதாச்சும் அர்ஜண்ட் விஷயமா? அப்பா மதியத்துக்கு மேலத்தான வருவாக....'

'ரெண்டு மூனு செக்குல கையெழுத்து வாங்கணுமா... ராத்திரியே வாங்கிரணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்... அய்யாவும் நீங்களும் வெரசா பொறப்பட்டுட்டதால வாங்க முடியல... இன்னைக்கி கொடுத்துரணும்... அதான் கையெழுத்த வாங்கிட்டு போயிரலாம்னு.....'

'நா கையெழுத்து போட்டா போறுமா? எனக்கு பவர் இருக்கா?'

மேலாளர் தலையைச் சொறிந்தார். 'எனக்கு தெரிஞ்சி ஒங்களுக்கு பவர் இல்லம்மா.... அப்படியே இருந்தாலும் ஒங்க கையெழுத்த பேங்க்ல இதுவரைக்கும் குடுக்கல....அதன் யோசிக்கேன்.. '

'அதனாலென்ன? செக்க கையெழுத்துப் போட்டுக்குடுத்தா இன்னைக்கே போட்டுரப் போறாங்க?' என்றவாறு ராசம்மாள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இப்பவே மணி பத்துக்கு மேல... இனியும் லேட்டான்னா வக்கீல் அங்கிள புடிக்க முடியாது.... 'சரி அங்கிள் நீங்களும் கார்லயே வாங்க... போற வழியில பேசிக்குவோம்...' அவருடைய பதிலுக்கு காத்திராமல் ராசம்மாள் போர்ட்டிக்கோவில் நின்றிருந்த காரின் பின் கதவைத் திறந்துக்கொண்டு அமர்ந்தாள்.. மந்திரண்ணே... போற வழியில அங்கிள எறக்கிறணும்... வண்டிய எடுங்க... டைம் ஆச்சி..'

மேலாளர் அதிர்ச்சியுடன் தயங்கி நிற்பதைப் பார்த்தாள். 'என்ன அங்கிள் வாங்க... ஏறுங்க..'

'இல்லம்மா... அய்யாவுக்கு தெரிஞ்சா....'

ராசம்மாள் சிரித்தாள்... 'தெரிஞ்சாத்தானே... வாங்க..'

மேனேஜர் அப்போதும் தயக்கத்துடன் மந்திரச்சாமியைப் பார்த்தார்... இவன் சொல்லிருவானே என்பதுபோ... மந்திரச்சாமி இதில் எனக்கு சம்மதமில்லை என்பதுபோல் நேரே சாலையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்....

பிறகு முன்சீட்டில் மந்திரசாமிக்கு அருகில் அமர்வதற்காக முன் கதவைத் திறக்க முயன்ற மேலாளரை ராசம்மாள் 'இங்க ஒக்காருங்க அங்கிள்' வற்புறுத்தி பின் சீட்டில் தனக்கருகில் அமரச் செய்தாள்... 'அப்பத்தானே பேசறதுக்கு சவுகரியம்..'

மந்திரச்சாமி வாகனத்தை முடுக்கியதிலிருந்தே அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. 'பரவால்லையே நானே கொஞ்சம் வேகமா போங்கன்னு சொல்ல இருந்தேன்...... டைம் ஆயிருச்சின்னே... இன்னும் பதினஞ்சி நிமிசத்துக்குள்ள நாம அங்கருக்கணும்... பாத்துக்குருங்க... போற வழியில அங்கிள எறக்கிறணும்...'

ஏற்கனவே மேலாளரை பின்சீட்டில் அமர்த்தியதில் கடுப்பிலிருந்த மந்திரச்சாமி ஆக்சிலரேட்டரில் தன்னுடைய கோபத்தைக் காட்ட வண்டி சீறிக்கொண்டு காம்பவுண்ட் வாசலை விட்டு வெளியேறி சாலையில் இறங்கி வேகம் பிடித்தது... சற்று நேரத்தில் காத்திருந்த ஆபத்தை உணராமல்...

தொடரும்...

4.5.07

சூரியன் 197

சோமசுந்தரமும் அவருடைய ஒரே மகள் பூர்ணிமாவும் ஹாலுக்குள் நுழைய நாடார் புன்னகையுடன் தன் மகள் வயதொத்த பூர்ணிமாவைப் பார்த்து புன்னகைத்தார். 'வாங்கம்மா.. வர்ற வழியில என்னெ பத்தி டாக்டர் சொல்லாம இருந்துருக்க மாட்டாரே... நல்லபடியா சொன்னாரா... இல்லே...'

பூர்ணிமா தன் தந்தை வழியாக மட்டுமில்லாமல் ராசம்மாள் பிரசவத்திற்காக தங்களுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததிலிருந்தே சிலுவை மாணிக்கம் நாடாரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். தன் தந்தையைப் போலல்லாமல் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய சுய முயற்சியால் செல்வந்தரானவர் அவர் என்பதை கேள்விப்பட்டிருந்ததிலிருந்தே அவர் மீது ஒரு தனி மரியாதையும் அவளுக்கிருந்தது. அவருக்கும் தன் தந்தைக்குமிடையில் அதிகார போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது என்பதும் அவளுக்கு தெரிந்திருந்தது.

'இங்க பார் பூர்ணி.. நாடார் நம்மள மாதிரி படிச்ச குடும்பத்துலருந்து வந்தவர் இல்ல.... He is a self made man... That shows not only in the way he speaks but also in his dealings... His way of approaching a problem at times might irritate you... அப்பா இதுவரைக்கும் அவரெ டாலரேட் பண்ணிக்கிட்டிருக்கேன்னா அது அவர் கிட்டருக்கற பத்து பர்சண்ட் ஷேர் மட்டுமில்ல... He is a powerful person in his Nadar community which
has a sizable percentage of holdings in our Bank... அவங்கள பொருத்தவரைக்கும் நம்ம பேங்க் அவங்க கம்யூனிட்டியோட சிம்பல் மாதிரி... போர்ட்ல அவங்களோட ரெப் நம்ம நாடார்... Though none of the board members relishes his way of talking.. we have no other alternative... but to tolerate him... இது போறாதுன்னு போர்ட்ல கொஞ்சம் கொஞ்சமா அவரோட ஃப்ரெண்ட்ச கொண்டு வர ஆரம்பிச்சிருக்கார்... அப்படி போன வருசம் போர்ட்ல நுழைஞ்சவர்தான் இந்த செட்டியார்... சிட்டியிலருக்கற பெரிய பாத்திரக் கடையோட ஓனர்... நமக்கு ஈக்வலா இல்லன்னாலும் சிட்டியில அவரும் ஒரு பெரிய புள்ளின்னு சொல்லலாம்... நாடார மாதிரியே படிப்பு இல்லை... போர்ட்லயும் ஜாஸ்தி பேச மாட்டார்... நாடார் என்ன சொல்றார்னு பாத்து அதுக்கு ஏத்தா மாதிரி பேசுவார்... நம்ம ஃபேமிலிக்கப்புறம் இந்த ரெண்டு பேருக்கும்தான் சைசபிள் ஹோல்டிங்ஸ் இருக்கு..அதனால at no point should you antagonise them.' என்று வரும் வழியில் தன்னுடைய தந்தை கூறியது நினைவுக்கு வர புன்னகையுடன் நாடாரைப் பார்த்தார். 'சேச்சே தப்பா எதையும் சொல்லலை அங்கிள்...' என்று நிறுத்தி, 'நல்லதாவும் சொல்லலை' என்றாள் ஒரு விஷமப்
புன்னகையுடன்..

நாடார் உரக்க சிரித்தார். 'பரவால்லையே டாக்டர் நல்லாத்தான் ட்ரெய்னிங் குடுத்துருக்கார். சரிம்மா வாங்க... மொதல் தடவையா வந்துருக்கீங்க.. ஆனா டைம்தான் நல்லால்லை...' என்றவர் தயங்கி நின்ற தன் நண்பரைப் பார்த்தார். 'என்ன செட்டியாரே என்ன சைலண்டாருக்கீங்க...? இவங்கதான் டாக்டர் எடத்துல போர்ட்ல இனிமே... படிச்ச பொண்ணு... அதுவும் சின்ன வயசு.... நமக்கு தோன்ற மாதிரியே இவங்களுக்கு
தோனாதுய்யா.... நாம நெனச்சிருக்கறது நடக்கணும்னா இனி இவங்களும் ஒத்துக்கணுமே... ஒரு சலாம் போட்டு வைங்க... என்ன நான் சொல்றது?'

என்னதான் நீ டாக்டரோட பொண்ணாருந்தாலும் ஒனக்கு வயசு பத்தாதும்மா என்று மறைமுகமாக தன்னை எச்சரிப்பதாக உணர்ந்தாள் பூர்ணிமா.

இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஓரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்தாள். நீ நினக்கறததான் நானும் நினைக்கறேன்...கவலைப்படாதே... என்றவாறு அவரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள்.. I can manage him Dad... என்பதுபோல் அவருடைய கையைப் பிடித்து அழுத்தினாள்...

செட்டியார், 'வணக்கம்மா...' என்று அவளுக்கு வணக்கம் செலுத்த, 'என்ன அங்கிள்.. இந்த ஃபார்மாலிட்டியெல்லாம் வேணாமே... நா இன்னும் அஃபிஷியலா போர்ட்ல நுழையலையே... நீங்க ரெண்டு பேரும் மனசுவச்சாத்தான் அது நடக்கும்..' என்ற பூர்ணிமா, 'என்ன டாட்...' என்று தன் தந்தையை பார்த்தாள் புன்னகையுடன்...

'தோ பார்றா... புலிக்கி பொறந்தது பூனையாகுமாங்கறாப்பல..' என்று சிரித்தவாறு மீண்டும் மெத்தையில் அமர்ந்தார் நாடார்.

சோமசுந்தரமும் பூர்ணிமாவும் தயங்கியவாறு நிற்க, 'என்ன டாக்டரே... என்ன தயங்கறீங்க... இங்கன ஒக்காந்து பேசறதுதுதான நம்ம வழக்கம்? இது ஆஃபீசில்லையேய்யா....?' என்றவாறு இருவரையும் பார்த்தார் நாடார்.

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார். 'ச்சேச்சே அதெல்லாம் இல்லை அங்கிள்... I am comfortable... It's ok..' என்றவாறு அவள் மெத்தையில் அமர நாடார் வாய்விட்டு சிரித்தார். பூர்னிமா குழப்பத்துடன் தன் தந்தையை பார்த்தாள். அவர் தோள்களைக் குலுக்கியவாறு கேலியுடன், 'நாடாருக்கு இங்க்லீஷ்னா புடிக்காது பூர்ணி...'

நாடார் மேலும் உரக்க சிரித்தார். 'ச்சேச்சே எதுக்கு டாக்டர் மறைக்கறீங்க? நமக்கு தமிழ தவிர வேறெந்த மொளியும் புரியாதும்மா.. அதான் காரணம்.. தோ இருக்காரே நம்ம தோஸ்த்து... இவருக்கு புரியும்... ஆனா பேச வராது....' என்றவர் திரும்பி தன் நண்பரைப் பார்த்தார். 'என்ன செட்டியாரே... அதான் இன்னைக்கி ஹிந்து பேப்பர்ல படிச்சத சொன்னீங்களே... அத வச்சி சொல்றேன்.'

அவர் ஹிந்து பத்திரிகை என்றதுமே சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார். 'ஆமா நாடார்... நீங்க சொன்னது நல்லதாப்போச்சி.... நானும் படிச்சேன்.. அத படிச்சதுலருந்து பூர்ணிமாவும் ரொம்பவும் டென்ஷனாருக்கா... இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க..'

நாடாரின் முகம் சட்டென்று சீரியசானது..'இனி என்னத்தைய்யா ச்சொல்றது? அந்த லிங்கம் இப்படி ச்செய்வார்னு நா கனவுலயும் நெனக்கலையே... நீரு வேல செஞ்சி கிளிச்சது போறும்னு வீட்டுக்கு அனுப்பிற வேண்டியதுதான்.' என்றார் கோபத்துடன்.

சோமசுந்தரம் இடைமறித்தார். 'நாடார்... எனக்கென்னமோ சுந்தரலிங்கம் இப்படி பேசியிருப்பார்னு எனக்கு படலை... அதனால இத முழுசா விசாரிக்காம அவர் மேல ஆக்ஷன் எதையும் எடுக்க வேணாம்னு நினைக்கறேன்.. முதல்ல நாம இன்னைக்கி மாதவனுக்கு பதிலா யார போடலாம்னு முடிவு பண்ணுவோம்... இந்த ப்ரெஸ் மீட் விஷயத்த யார ஆக்டிங் சேர்மனா செலக்ட் பண்றமோ அவர்கிட்ட விட்டுருவோம்...'

நாடார் சோமசுந்தரத்தையும் அவருக்கருகில் அமர்ந்திருந்த பூர்ணிமாவையும் பார்த்தார். 'நீ என்னம்மா சொல்றே...?' என்றார் சட்டென்று..

அவருடைய கேள்வியை சிறிதும் எதிர்பாராமல் அமர்ந்திருந்த பூர்ணிமா திடுக்கிட்டு, 'என்னையா அங்கிள்?' என்றாள்... 'நா இன்னைக்கி சும்மா ஒரு அப்சர்வராத்தான் வந்தேன்..'

நாடார் குழப்பத்துடன் சோமசுந்தரத்தைப் பார்க்க பூர்ணிமாக உதடுகளைக் கடித்தவாறு, 'ஒரு... ஒரு பார்வையாளராத்தான் வந்தேன் அங்கிள்' என்றாள் ஒரு அசட்டு புன்னகையுடன்...

நாடார் சிரித்தார். 'இந்த காலத்து புள்ள... சுத்தமா தமிழ்ல பேசறது கஸ்டமாத்தான் இருக்கும்.. நம்ம ராசியும் இப்படித்தான்...' பிறகு சீரியசாக, 'இல்லம்மா நீங்களும் இப்பவே மெம்பர்னு நினைச்சிக்கிட்டு சொல்லுங்க... ஒங்கப்பா சொல்றாப்பல செஞ்சிருவமா?' என்றார்.

பூர்ணிமா ஒரு நிமிடம் யோசித்தாள். இதுதான் நாம் எடுக்கப்போகும் முதல் முடிவு.. இதில் குழப்பமிருக்கலாகாது. தன்னுடைய தந்தை சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தது அவளுக்கு... எந்த ஒரு சூழலிலும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழு அதனுடைய தினசரி நடவடிக்கைகளில் தலையிடலாகாது என்பதை பல மேனேஜ்மெண்ட் புத்தகங்களில் வாசித்திருக்கிறாள். தன்னுடைய மருத்துவமனையின் அன்றாட அலுவல்களிலும்
அவளோ அவளுடைய தந்தையோ ஒரு இயக்குனர் என்ற முறையில் தலையிட்டதில்லை... அததற்கு அதிகாரிகள் அமைத்திருந்த சிறு சிறு குழுக்களே அவற்றை மேற்பார்வையிடுவது வழக்கம்... அவர்களால் தீர்க்க முடியாத விஷயங்கள் மட்டுமே இயக்குனர் என்ற முறையில் அவளிடம் வரும்.. அப்போதும் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இயக்குனர் குழுவில் விவாதித்தே எந்த முடிவையும் எடுப்பது வழக்கம்... ஆகவே வங்கியின்
விஷயத்திலும் ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதைப்பற்றி வங்கியின் இயக்குனர் குழு முடிவெடுப்பது சரியல்ல என்ற ரீதியில் தன் தந்தை கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்தாள். 'அப்பா சொன்னதுக்காக சொல்லல அங்கிள்... ஆனா சுந்தரலிங்கம் சார் மேல ஆக்ஷன் எடுக்கற பொறுப்ப நாம எடுத்துக்க வேணாம்னுதான் தோனுது..'

'ச்சரியா சொன்னம்மா... நாந்தாம் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... கடன் குடுக்கறது பேங்கு... அத அடைக்கறதுல கொஞ்சம் முன்ன பின்ன ஆவத்தான் ச்செய்யும்.. அதுக்காக ஆள வச்சி அடிக்கறதுங்கறதல்லாம் சரிங்கறாப்பல பேசினதத்தான் என்னால தாங்கிக்க முடியலம்மா... அதான் சட்டுன்னு கோவம் வந்துருச்சி...' என்ற நாடார் சோமசுந்தரத்தைப் பார்த்தார். 'டாக்டரே... ஒம்ம பொண்ண நீரு போர்ட்ல போடலாம்னு சொன்னப்போ எனக்கு கொஞ்சம் தயக்கமாத்தான்யா இருந்திச்சி... சின்ன பொண்ணாச்சேன்னு யோசிச்சேன்... ஆனா ஏற்கனவே ஒங்க ஹாஸ்ப்பிடல் போர்ட்ல இருந்துருக்கில்ல...அதான் கரெக்டா சொல்லிருச்சி... ச்சரிய்யா... அப்படியே செஞ்சிருவம்.. இப்ப நாம வந்த வேலைய பாப்பம்... என்ன செட்டியாரே...?' அவர் முடிப்பதற்குள் தலையை பலமாக ஆட்டிய செட்டியாரைப் பார்த்து சிரித்தார் நாடார். 'நீர் வேறய்யா... நம்ம தோஸ்த்துங்கறதுக்காக சொல்றீரா..இல்ல...'

'இல்ல நாடார். டாக்டரோட டாட்டர் சொன்னதுலயும் நியாயம் இருக்கே...' தன் ஆங்கில புலமையை மறைமுகமாக காட்ட முயன்ற செட்டியாரைப் பார்த்து கண்ணடித்தார் நாடார்... 'டாக்டரோட டாட்டர்... அதாவது டாக்டரோட மகள்.. சரிதானய்யா... ஒமக்கும் இங்க்லீஷ் நல்லாவே வருதுய்யா...ஜமாய்ங்க..' என்றவாறு கூட்டத்தை சம்பிரதாயமாக துவக்கி வைத்து 'எனக்கென்னமோ சேதுமாதவன சேர்மன் சேர்ல ஒக்கார வச்சா
சரிவராதுன்னு தோனுதுய்யா...' என்று துவக்கி வைக்க விவாதம் சூடுபிடித்தது...

மருத்துவமனை இயக்குனர் குழுவிலிருந்த நகரத்தின் மிக உயர்ந்த படிப்பும் அந்தஸ்த்தும் கொண்ட அங்கத்தினர்களுடன் விவாதித்து பழகிப்போயிருந்த தன் தந்தை கதர் சட்டை வேட்டியுடன் மிக எளிமையான கோலத்திலிருந்த நாடார் மற்றும் செட்டியாருடன் அவர்களுடைய லெவலுக்கு இறங்கிவந்து விவாதிப்பதை ஒரு புன்னகையுடன் அமர்ந்து கேட்கலானாள் பூர்ணிமா...

************

2.5.07

சூரியன் 196

ஃபிலிப் சுந்தரம் அலுவலகம் சென்றடைந்ததுமே தன்னுடைய காரியதரிசி ராஜியை அழைத்தார்.

'இன்னைக்கி ஈவ்னிங் நாலு மணிக்கு நம்ம மீட்டிங் ஹால்ல ஒரு கண்டோலன்ஸ் மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க ராஜி. மிஸ்டர். மாணிக்கவேலோட வய்ஃபும் ஃபாதரும் அப்புறம் அவங்க டாட்டர் மிஸ் கமலியோட மரணத்துக்கு அஞ்சலிக்காக இந்த கூட்டம்னு ஒரு டி.ஓ. லட்டர் அடிச்சி கொண்டு வாங்க. Whoever wants to attend the funerals can go after the meeting அப்படீன்னு ஒரு ஜெனரல் பர்மிஷனையும் லாஸ்ட்ல சேத்துருங்க.' என்றார். 'Yes Sir.' என்றவாறு ராஜி வாசலை நோக்கி நடக்க, 'சுந்தரலிங்கம் சார் கேபின்ல இருக்காரான்னு பாருங்க. If he is there check up with his secretary if I could come straightaway.' என்றார்.

'Yes Sir.'

ராஜி வெளியேறவும் அவருடைய பிரத்தியேக தொலைபேசி சிணுங்கவும் சரியாயிருந்தது. 'Philip here.' என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவரை அதிர்ச்சியடைய செய்தது. 'என்ன சுபோத் சொல்றீங்க? Are you sure?'

'Yes Sir. I just got the information from the Secretary.'

'Where is Mr.Murali now?'

'He has admitted himself to the ---------- hospital Sir. I am told that he is still in the ICU.' என்ற சுபோத் ஏதோ சொல்லவந்து தயங்குவது தெரிந்தது.

'என்ன, சொல்லுங்க' என்றார். 'whatever it is..'

'சார் நம்ம --------------- ஸ்டாஃப் யூனியன் ஆஃபீஸ் முன்னால நம்ம ஸ்டாஃப் மெம்பர்ஸ் டெமோ பண்ணி போலீஸ் வர்ற அளவுக்கு போயிருச்சி சார்.'

ஃபிலிப் சுந்தரத்திற்கு அவருடைய செவிகளையே நம்பமுடியவில்லை. அவருக்கு தெரிந்து அவருடைய வங்கியில் இதுவரை ஊழியர்களுடைய போராட்டமோ, மறியலோ பெரிதாக நடந்ததில்லை. அதுவும் தொழிற்சங்க ஊழியர் தலைவரை ஒருவர் ஆள் வைத்து அடித்து அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுடைய சாலை மறியல்... காவல்துறையினர் வந்து தலையிடும் அளவுக்கு!

மாதவன் வந்து பதவியேற்றதிலிருந்து கடந்த ஒருவார காலத்தில்தான் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. நம்பமுடியவில்லை அவரால்....

'சார் இன்னொரு விஷயம்.' சுபோத் எதிர்முனையிலிருந்து மீண்டும் தயங்குவது தெர்ந்தது.

'Is there anything else Subodh?'

'Yes Sir...'

'Then go ahead...' என்றார் சலனமில்லாமல். இதற்கு மேல் என்ன நடக்க முடியும்?

'The Union VP has lodged a police complaint against our ED Sir.....' மேலே தொடர முடியாமல் சுபோத் தயங்க ஃபிலிப் அதிர்ச்சியடைந்தார்.

'Is it? But why...? How could he..'

'தெரியல சார். I just received a phone call from one of my friends who was in the gathering... I don't have the details... If you want I'll get it.'

'Please do that.' என்றவர் தொடர்ந்து, 'Where is our ED? In the Office?' என்றார்.

'No Sir.. he hasn't come in yet.'

'OK.. Please find out the details of the complaint loged against him and let me know... make it fast.'

எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டும் சில நொடிகள் ஒலிவாங்கியை கையிலேயே வைத்திருந்த ஃபிலிப் அவருடைய இண்டர்காம் ஒலிப்பதை உணர்ந்து கையிலிருந்த ஒலிவாங்கியை வைத்துவிட்டு இண்டர்காமை எடுத்தார்.

'CGM is in his cabin Sir... his PA says he is free.' என்றார் அவருடைய காரியதரிசி ராஜி. 'நீங்க வரீங்கன்னு சொல்லட்டுமா சார்?'

'Yes.. I am going...' என்ற ஃபிலிப் உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறினா. ராஜியின் இருக்கையை கடக்கும்போது, 'If Subodh called divert the call to CGM's cabin.. I'll be there for another ten to fifteen minutes...' என்று கூறிவிட்டு ஆங்காங்கே ஊழியர்களும் கடைநிலை அதிகாரிகளும் சிறு, சிறு குழுவாக தங்களுக்குள் விவாதிக்கொண்டு நிற்பதை கவனியாதவர்போல் சுந்தரலிங்கத்தின் அறையை நோக்கி நடந்தார். அவர் நினைத்திருந்ததைவிடவும் அன்றைய தினம் வில்லங்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்று தோன்றியது.

*********
நந்தக்குமார் மருத்துவமனையை அடைந்தபோது வாசலைவிட்டு சற்று தள்ளி காவல்துறையினரின் வாகனம் நிற்பது தெரிந்தது. அதனருகில் எஸ்.ஐ. போன்ற தோரணையுடன் இருவர் நிற்பதும் அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கி சில காவலர்கள் நிற்பதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து சற்று தொலைவிலேயே ஆட்டோவை கட் பண்ணிவிட்டு இறங்கியவன் உள்ளே நுழைவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றான்.

பிறகு வந்ததுதான் வந்தோம் உள்ளே சென்று பார்த்துவிட்டு போய்விடலாம் என்று நினைத்தவாறு மருத்துவமனை வாசலை நோக்கி மெள்ள நகர்ந்தான். அவன் உள்ளே நுழையவும் அவனை உரசிக்கொண்டு ஒரு வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதிலிருந்து சற்றுமுன் ஊழியர் சங்க அலுவலகத்திற்கு முன்பு அவன் சந்தித்த சங்க துணைத் தலைவரும் வேறு சிலரும் இறங்குவதைப் பார்த்தான். 'ஹலோ சார்.' என்றான் துணைத் தலைவர் ஜேக்கப்பைப் பார்த்து. அவரும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்பது அவனுக்கு தெரியும். நந்தக்குமாரை அவருக்கும் நன்றாக தெரியும் என்றாலும் அவன் அதிகாரி என்பதால் முரளியை பழைய நண்பன் என்ற முறையில் சந்திக்க வந்திருக்கலாம் என்று நினைத்து வெறுமனே பதிலுக்கு ஹலோ என்று கூறிவிட்டு தன் சகாக்களுடன் முன்னே நடந்தார். அவர்கள் முன்னே செல்ல சற்று நேரம் கழித்து நந்து அவர்களை பின் தொடர்ந்தான்.

மருத்துவமனை லாபியில் நுழைந்ததுமே அந்த சிறிய கூட்டத்தை கவனித்துவிட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவர் அவர்களை நோக்கி வந்தார். 'சார் நீங்க மிஸ்டர் முரளியைப் பாக்க வந்திருந்தீங்கன்னா.. சாரி.. இப்ப அவர பாக்கறதுக்கு பர்மிட் பண்ண முடியாது. He is still in ICU. அடி பலமா படலைன்னாலும் டாக்டர் அவர் இன்னும் நார்மலுக்கு வரலைன்னு சொல்றார். அதனால....'

ஜேக்கப்புடன் வந்திருந்தவர்களுள் ஒருவர் கோபத்துடன் இடைமறிக்க அவர் கையை உயர்த்தி, 'பேசாம இருங்க... நா பேசிக்கறேன்.' என்று கட்டுப்படுத்தினார். பிறகு, 'சார்... அடி பலமா இல்லேங்கறீங்க. அப்புறம் எதுக்கு சார் ICU ல வச்சிருக்காங்க..?' என்றார் சற்று கோபத்துடன்.

'சார்... டாக்டர்ஸ் எங்களையே இன்னும் அவர பாக்க விடல.. அவர் கான்ஷியஸ்ல இல்லேன்னு அவங்க சொல்றப்போ எங்கள என்ன பண்ண சொல்றீங்க?'

ஜேக்கப் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார். 'என்ன பண்ணலாம் சொல்லுங்க. போலீசே இன்னும் பாக்கலைன்னா நாம பாக்கணும்னு அடம்புடிச்சா பிரச்சினைதான் வரும்... அதனால...'

சகாக்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு அதிலொருத்தர், 'சார் நாம குடுத்த கம்ப்ளைண்ட் என்னாச்சின்னு கேளுங்க. இவர்தான ஸ்டேஷன்ல வந்து குடுங்கன்னு சொன்னார்?' என்றார் உரத்த குரலில்.

ஜேக்கப் திரும்பி அதிகாரியைப் பார்த்தார்.

'சார்... நீங்க குடுத்த கம்ப்ளைண்ட்ட வச்சி மட்டும் ஆக்ஷன் எடுக்க முடியாத சூழ்நிலையில நாங்க இருக்கோம்.'

'எதுக்கு சார்? அப்படியென்ன சூழ்நிலை. நாங்கதான் எங்க ஈ.டி சேதுமாதவன்தான் இதுக்கு காரணம்னு க்ளியரா சொல்லியிருக்கோம்லே?' என்றார் சகாக்களுள் ஒருவர் சூடாக.

எஸ்.ஐ. அவரை முறைத்தார். 'சரி.. அப்போ பாபு சுரேஷ்ங்கறது யாரு?'

ஜேக்கப் அதிர்ச்சியடைந்து தன் சகாக்களைப் பார்த்தார் பிறகு எஸ்.ஐயிடம், 'என்ன சார் சொல்றீங்க? அவர் பேர யார் ஒங்கக் கிட்ட சொன்னா?'

'கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்களுக்கு ஒரு போன் வந்துது. ஒங்க பேங்க்லருந்துதான் பேசறோம்னு சொன்னார். அதுல போன சனிக்கிழமை ஒங்க மவுண்ட்ரோட் ப்ராஞ்ச் மேனேஜர் பாபு சுரேஷ அடிபட்டுருக்கறவரும் அவரோட யூனியன் ஆளுங்களும் போயி கேரோ பண்ணாங்களாமே. அதுக்காக அவர்தான் இவர ஆள வச்சி அடிச்சிருக்கலாம்னு சொன்னார். இதுக்கு என்ன சொல்றீங்க?'

ஜேக்கப் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார். அவர் சென்ற சனிக்கிழமை ஊரில் இல்லை. 'என்னய்யா? சார் சொல்றது உண்மையா?'

'ஆமாம் தலைவரே.. நம்ம சப்ஸ்டாஃப் ஒருத்தர் போன மாசம் ட்ரெய்ன்ல அடிபட்டு செத்ததுக்கு அந்தாள்தான் காரணம்னு போய் கேரோ பண்ணோம்.' என்றார் சகாக்களுள் ஒருவர். 'ஆனா அவர் இப்படி செஞ்சிருக்க மாட்டார் சார்.'

எஸ்.ஐ குறுக்கிட்டு, 'எப்படீங்க சொல்றீங்க? அவர ஏறக்குறைய ரெண்டு மணி நேரமா கேரோ செஞ்சிருக்கீங்க. மன்னிப்பு லெட்டர் எழுதித் தரலன்னா விடமாட்டோம்னு மெரட்டியிருக்கீங்க. அவரும் ஒங்கள வைக்கற எடத்துல வைக்கறேன்னு வார்ன் பண்ணிருக்காரு. அவர் ஏன் இத செஞ்சிருக்கக் கூடாது?'

'இருக்கலாம் சார். ஒங்களுக்கு சந்தேகம் வர்றதுல தப்பில்லை... ஆனா எங்க ஈ.டி. முரளிய அடிக்கறதுக்கு ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கறதா அவர் ஏற்பாடு பண்ண ஆளே இவர்கிட்ட வந்து சொன்னதா முரளி இவங்கக் கிட்ட சொல்லியிருக்காரே.' என்றார் ஜேக்கப்.

சற்று தள்ளி நின்றிருந்த நந்தக்குமாருக்கும் தன்னிடம் முந்தைய நாள் முரளி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் நளினியின் முகம் நினைவுக்கு வர மெளனமாக நடப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். 'நந்து நாம எதுக்கு வந்தமோ அத மட்டும் பார்ப்போம். முரளி ஒங்களுக்கு ஃப்ரெண்டாருக்கலாம். ஆனா அவனெ நிறைய பேருக்கு பிடிக்காதுங்கறது நமக்கு தெரியும். நீங்க அவனெ பாக்க போறதே எனக்கு புடிக்கலை. இருந்தாலும் வேற வழியில்லாம பொறுத்துக்கிட்டிருக்கேன்.' முரளியை அடிக்க சேதுமாதவன் ஏற்பாடு செய்திருந்ததாக தன்னிடம் அவன் கூறியதை நளினியிடம் கூறியபோது தனக்கு விழுந்த அர்ச்சனை அவனுக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

'அதனால மிஸ்டர் முரளியா நினைவுக்கு வந்து இன்னார் மேல தனக்கு சந்தேகம் இருக்குன்னு சொன்னப்புறம்தான் எங்களால ஆக்ஷன் எடுக்க முடியும். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி நீங்க அவர்கிட்ட விசாரனை பண்லாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதுவரைக்கும் வேற யாரையும் அவர சந்திக்க பர்மிட் பண்ண முடியாது... அதனால நீங்க வெளியில வெய்ட் பண்ணுங்க. இது ஹாஸ்ப்பிடல்... ஒங்க கோபதாபத்த காட்டறதுக்கு இது இல்ல இடம்... ப்ளீஸ்...' என்றவாறு அவர் வாயிலை நோக்கி கைகாட்ட ஜேக்கப் தன் சகாக்களை கண்சாடைக் காட்டி வெளியே அழைத்துச் சென்றார்.

நந்தக்குமார் அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாததுபோல் விலகி லாபியில் கிடந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தான்.

தொடரும்...

27.4.07

சூரியன் 195

சமையலறையிலிருந்து காப்பி கோப்பையுடன் வந்த நளினியைப் பார்த்தாள் வந்தனா...

காலையிலிருந்தே அவள் ஏதோ பதற்றத்துடன் காணப்படுவது தெரிந்தது. ஆனால் என்ன என்றுதான் விளங்கவில்லை...

காப்பிக் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நகர முயன்றவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள்.. 'என்ன நளினி என்ன விஷயம்? ஏன் ஏதோ டென்ஷனோட இருக்கா மாதிரி.... நந்து ஏதாச்சும் சொன்னாரா? எங்க அவர் காலைலருந்தே காணம்?'

நளினி அவளுடைய முகத்தை நேரடியாக பார்க்காமல் அணைந்துக்கிடந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தவாறு நின்றாள். 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மேடம்.. நார்மலாத்தான் இருக்கேன்... டிரான்ஸ்ஃபர் கிடைக்குமோ கிடைக்காதோங்கற கவலை லேசா இருக்கு... வேற ஒன்னுமில்லை...'

'அதான் மாணிக்கம் சரின்னு சொல்லிட்டாரில்ல... அப்புறம் என்ன? எல்லாம் சரியாயிரும்... இன்னைக்கி எப்படியும் டாக்டர கன்வின்ஸ் பண்ணிரணும்... இந்த மாதிரி அரை வயித்து சாப்பாடெல்லாம் சாப்ட்டுக்கிட்டிருந்தா மண்டேலருந்து ஆஃபீசுக்கு எப்படி போறது? என்னதான் ஃபிலிப்கிட்ட சொல்லிட்டோம்னாலும் நா அங்க இருந்தாத்தான ஆர்டர ஒடனே போட முடியும்...? அதனால இன்னைக்கி எப்படியும் ஹாஸ்ப்பிடலுக்கு போய்ட்டு வந்துரணும்... அதனாலதான் கேக்கேன் நந்தக்குமர் எங்க.. அவரும் கூட வந்தா நல்லாருக்குமே...'

நளினி திரும்பி அவளைப் பார்த்தாள். மூன்று நாட்களாக சரியான உணவு இல்லாததாலோ என்னவோ மெலிந்து சோர்ந்துபோயிருந்த அவளுடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது நளினிக்கு... அந்த களையிழந்த முகத்தை பார்க்கவே சகிக்கவில்லை... டீக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஹை ஹீல் செருப்புல மிடுக்கா நடக்கற மேடமா இது? அதுவும் மூனே நாள்ல... அடையாளமே தெரியாம...

'என்ன நளினி பதில் சொல்லாம என்னையே பாக்கே... ஆளே அடையாளம் தெரியாம மாறிப்போய்ட்டனோ?'

'ச்சேச்சே அப்படியெல்லாம் இல்ல மேடம்... கொஞ்சம் டயர்டா இருக்கீங்க.. நீங்க சொன்னா மாதிரி சரியான சாப்பாடு இல்லாததுதான் காரணம்...' என்று சமாளித்த நளினி தொடர்ந்து, 'நந்து முரளிய பாத்துட்டு வரேன்னு போயிருக்கார் மேடம்... அவர் இல்லன்னாலும் பரவால்லை... நம்ம கால் டாக்சிய கூப்ட்டுகலாம்... நீங்க காப்பிய குடிங்க மேடம்.. நீங்க குளிக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்... குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா போய்ட்டு வந்துரலாம்...' என்றவாறு குளியலறையை நோக்கி நகர, 'நளினி இந்த டிவிய ஆன் பண்ணிட்டு போயேன்... மூனு நாளா ந்யூசும் கேக்கல... பேப்பரும் படிக்கலயா... பைத்தியம் புடிச்சா மாதிரி இருக்கு...' என்றாள் வந்தனா...

நளினி திடுக்கிட்டு தொலைக்காட்சி பெட்டியையும் வந்தனாவையும் பார்த்தாள். 'வேணாம் மேடம்... டாக்டர கன்சல்ட் பண்ணிட்டு பாத்துக்கலாம்... அப்புறம் அதுல ஏதாவது வேண்டாத நியூஸ் சொல்ல.. நீங்க டென்ஷனாயிருவீங்க... நீங்க காப்பிய குடிச்சிட்டு குளிங்க... ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணதும் சாப்ட்டு கெளம்பலாம்... டாக்டர் சரின்னு சொல்லிட்டா சாயந்தரம் பாத்துக்கலாமே...'

விட்டால் போதும் என்பதுபோல் ஓடுகிறாளே... என்னாயிற்று இவளுக்கு என்ற சிந்தனையுடன் அன்றைய செய்தித்தாளாவது கிடக்கிறதா என்று டீப்பாயைப் பார்த்தாள்... சாதாரணமாக ஒரு வாரத்து செய்தித்தாள்கள் ஞாயிற்றுக்கிழமை வரை டீப்பாயிலேயே கிடக்கும்... ஞாயிற்றுக்கிழமை பகலுணவுக்குப் பிறகு அவ்வார செய்தித்தாள்களை ஒன்றுவிடாமல் படித்துமுடித்து ஷெல்ஃபில் எடுத்து வைப்பது வழக்கம்... ஆனால் பேப்பர் வாங்குவதையே நளினி நிறுத்திவிட்டாள் போலிருக்கிறது... இப்படியொருத்தி சகோதரியா வந்திருந்தா... ஹூம்... இவளும் கூடப் பொறந்திருந்தா இப்படி இருக்க மாட்டாளோ என்னமோ....

*******
நாடார் சோமசுந்தரத்தின் பங்களாவைச் சென்றடைந்தபோது அவரைத் தவிர யாரும் வந்திருக்கவில்லை...

வாசலிலிருந்த பிரம்மாண்டமான இரும்பு கேட்டைத் திறந்துவிட்ட குர்க்கா நாடாரைக் கண்டதும் சலாமடித்தான்...

'சலாமெல்லாம் பலமாத்தான் இருக்கு.... ஒங்க அய்யா இன்னும் வரலையாக்கும்?' என்றார் நாடார் புன்னகையுடன்..

'இப்போ வந்துருவார் சாப்... ஆப் அந்தர் ஜாக்கே பைட்டியே.... மேனேஜர் சாப் ஹை அந்தர்...' என்றான் அவருக்கு விளங்காத மொழியில்...

நாடார் உரக்கச் சிரித்தவாறு அவரை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்த மேலாளரைப் பார்த்தார். 'என்னய்யா... இந்தாளுக்கு தமிழ ஒரு வாத்தியார வச்சி சொல்லித்தரப்படாதா? இப்படி போட்டு கொல்றான்..?'

மேலாளர் சிரித்தார்... 'இவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தா நமக்கே அது மறந்துரும் சார்.. நீங்க வாங்க... வர்ற வழியில டாக்டர் வண்டி ஏதோ மக்கார் பண்ணிருச்சி போலருக்கு... இங்கருந்த வண்டிகள்ல ஒன்னெ அனுப்பியிருக்கேன்... செட்டியார் இப்பத்தான் போன் பண்ணார்... இன்னும் அஞ்சி நிமிசத்துல வந்துருவேன்னு சொன்னார்... நீங்க உள்ள வந்து ஒக்காருங்கய்யா...'

'சரி போங்க... நீங்களாச்சும் இருக்கீங்களே... இல்லன்னா நாம் பாட்டுக்கு திரும்பிப் போயிருப்பேன்.. வாசல்லருக்கற குர்க்காக்கிட்ட என்னத்த கேக்கறது... அவன் ஆத்தா ஜாத்தாம்பான்.. நான் அச்சா கிச்சான்னு சொல்லிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...'

அந்த காலைநேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழையாதபடி இருட்டடிப்பு செய்துக்கொண்டிருந்தன சவுக்கு மரங்கள்.... 'ஜில்லுன்னு ஏசி போட்டா மாதிரி இருக்குய்யா... பேசாம ஒரு துண்ட விரிச்சி படுத்துரலாம் போலருக்கு... நிம்மதியா தூங்கி எத்தன நாளாச்சிது....'

ஹூம்.. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது சரியாத்தான் இருக்கு.... தோளுக்கு மீது வளர்ந்து நின்ற இரு பெண்களை எப்படித்தான் கரையேற்றப் போகிறேனோ என்று நினைத்தவாறு ஆறு மாதங்களுக்கும் மேலாக உரக்கமிழந்து தவித்துக் கொண்டிருந்த மேலாளர் கோடி, கோடியா பணமிருக்கறவங்களும் நம்மளப் போலத்தான் போலருக்கு என்று நினைத்தவாறு முன்னே நடந்தார்...

அவர் வரவேற்பறை என்ற பெயரில் நாற்பதடிக்கு குறையாத நீளத்திலிருந்த அந்த அறையில் ஆங்காங்கே கிடந்த சோபாக்களில் அமராமல் அறையின் ஒரு மூலையில் கிடந்த மெத்தைகளில் ஒன்றில் அமர்ந்து அருகில் கிடந்த உருட்டை தலையணைகளில் ஒன்றில் சாய்ந்தார்...

விர்ரென்ற மெல்லிய ஓசையுடன் இயங்கிய குளிர்சாதன பெட்டியின் ஓசையைத் தவிர முழு அமைதியுடன் இருந்த அந்த சூழலில் தன்னை மறந்து கண்கள் சொருக... 'என்ன நாடார்... குட்டித் தூக்கமா?' என்ற உரத்த சிரிப்பொலியினூடே கேட்ட குரல் சத்தத்தை நோக்கி திரும்பினார்...

வாயெல்லாம் பல்லாக சிவசுப்பிரமணிய செட்டியார்.... அரசியல்வாதியைப் போன்ற வெள்ளைவெளேர் வேட்டி சட்டையில்...

'வாய்யா செட்டியாரே... வந்து ஒக்கார்... நம்மள வரச்சொல்லிட்டு இந்த டாக்டர காணம் பாத்தீகளா?'

'அவருக்கென்னய்யா.. நம்மள மாதிரியா? எத்தனை பேர அருக்கணுமோ... தைக்கணுமோ... அதயல்லாம் முடிச்சிட்டுத்தான வருவாரு?'

நாடார் ஒரு போலி பதற்றத்துடன் செட்டியாரைப் பார்த்தார்... 'என்னய்யா காலங்கார்த்தால பயங்கரமா யோசிக்கறீரு... அவர்தான் ரிட்டையராயி மக கைல ஆஸ்ப்பிட்டல குடுத்தாச்சே... அப்புறம் எதுக்கு இந்த வேலையெல்லாம்.. இப்ப அவரோட முழு நேர வேலையா யார கவுக்கலாங்கறதுதானே... என்ன சொல்லுதீரு...' என்றவாறு உரக்கச் சிரிக்க செட்டியாரும் சேர்ந்துக்கொள்ள அந்த அறையின் அமைதியே கலைந்துப் போனது...

வாசலில் நின்றிருந்த சோமசுந்தரத்தின் மேலாளர் கேட்டும் கேட்காததுபோல் வாசலை நோக்கி திரும்ப தொலைவில் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு, 'டாக்டரய்யா வந்துட்டார்யா..' என்றார் முன்னெச்சரிக்கையாக.. எங்கே இவர்கள் இருவரும் சோமசுந்தரம் வருவது தெரியாமல் அவரை கேலி செய்வதை தொடர்ந்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு..

************

தனபால்சாமியுடன் பேசிவிட்டு செல்பேசியை அணைத்து கையில் பிடித்தவாறே சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைப் பார்த்தார். 'இதே லேபரர் கூட்டம்னா தடியடி செஞ்சி கலைச்சிரலாம்... இவங்கள பாத்தா நல்ல படிச்ச ஆளுங்களாட்டம் தெரியுதே சார்.. என்ன பண்ணப் போறீங்க?' என்றாவாறு அருகிலிருந்த ஏரியா எஸ்.ஐயை பார்த்தார்.

அவரும் அதே யோசனையுடன் கூட்டத்தைப் பார்த்தார். 'பெரிசா கலாட்டா ஏதும் பண்ணாலும் ஏதாச்சும் ஆக்ஷன் எடுக்கலாம்.. எல்லாரும் அமைதியா ஒக்காந்துருக்கானுங்க... அதான் யோசனையாருக்கு.... யாராச்சும் லீடர் மாதிரி இருக்கானான்னு பாக்கலாம் வாங்க..' என்றவாறு முன்னே நடந்தவரை பிந்தொடர்ந்தார்..

அவர்களிருவரும் கூட்டத்தை நெருங்கவும் அதிலிருந்து ஒரு சிறிய கூட்டம் எழுந்து அவர்களை நெருங்கியது. அவர்களை தடுக்க முயன்ற காவலர்களை, 'அவங்கள வரவிடுங்க...' என்றார் ஏரியா எஸ்.ஐ.. 'என்ன சார் விஷயம் சொல்லுங்க.. படிச்சவங்களாருக்கீங்க.. இப்படி காலைல நேரத்துல டிராஃபிக்க ப்ளாக் பண்றீங்களே.. எதாருந்தாலும் பேசி தீர்த்துக்கலாங்க.. அவங்கள மொதல்ல ரோட்டுலருந்து விலகச் சொல்லுங்க..' என்றார்.

அவர்களை நோக்கி வந்த கூட்டத்திலிருந்தவர்களுள் ஒருவர் தொழிற்சங்க துணை செயலாளர். 'சொல்றோம் சார்... அதுக்கு முன்னால இதுக்கு காரணமாருந்தவர் பேர்ல ஆக்ஷன் எடுக்கறோம்னு சொல்லுங்க...' என்றார் முறைப்புடன்..

தனபால்சாமியின் உதவியாளர் தன் நண்பரைப் பார்த்தார். அவர், 'யார்னு சொல்லுங்க... ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அதவிட்டுட்டு வொர்க்கர்ஸ் மாதிரி மறியல்ல எறங்குனா எப்படி சார். 'என்றார்..

அவர் சொல்வதில் நியாயம் இருந்ததுபோல் தன் சகாக்களைப் பார்த்தார் சங்க துணை செயலாளர். 'சார் இது எமோஷனலா நம்ம சங்கத்து ஆளுங்க எடுத்த முடிவு... எங்களுக்கு எங்க ஈ.டி மேலதான் சந்தேகம். அவருக்கும் எங்க தலைவருக்கும் இடையில இருக்கற பெர்சனல் விரோதத்த மனசுல வச்சுக்கிட்டு இந்த காரியத்த செஞ்சிருக்கார். எங்க பேங்க் சேர்மன் இல்லாத இந்த நேரத்துல இவங்களுக்கு தங்களோட வருத்தத்த தெரிவிச்சிக்க வேற வழி தெரியல... அதான் மறியல்ல இறங்கிட்டாங்க.. நீங்க வந்து ஆக்ஷன் எடுக்கறோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா.. ஒடனே கலைஞ்சி போயிருவாங்க.. அதுக்கு நா க்யாரண்டி..'

'என்ன சார்.. சொல்லிருவோமே... டிராஃபிக் ஜாம் ஜாஸ்தியாகறதுக்குள்ள முடிச்சிருவோம் சார்.. இல்லன்னா மேடத்துக்கிட்ட பதில் சொல்ல முடியாது.' என்றவாறு ஏரியா எஸ்.ஐ. தனபால்சாமியின் உதவியாளரைப் பார்க்க அவரும் தலையை அசைத்தார். பிறகு சற்று முன் பேசிய சங்கத் தலைவரைப் பார்த்தார். 'சார்.. ஒங்க ஈ.டியோட பேர் என்னன்னு சொன்னீங்க?'

'சேதுமாதவன் சார்... கேரளாக்காரர்.. ஈ.டின்னதும் பயந்துராதீங்க... அடிபட்டுருக்கறது எங்க செக்கரட்டரி... தயவு செஞ்சி ஆக்ஷன் எடுக்கறேன்னு சொல்லிட்டு பின்வாங்கிராதீங்க...'

சேதுமாதவன் என்ற பெயரைக் கேட்டதுமே... 'சார் நீங்க போய் பேசுங்க.. நான் எஸ்.பிக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிட்டு வந்துடறேன்.. அப்புறம் என்னெ கேக்காம எதுக்குய்யா ப்ராமிஸ் பண்றீங்கன்னு கத்துவார்...' என்றவாறு தன் செல்பேசியை எடுத்துக்கொண்டு ஜீப்பை நோக்கி நகர்ந்தார் எஸ்.பி தனபால்சாமியின் உதவியாளர்.

தொடரும்...

26.4.07

சூரியன் 194

வீட்டிலிருந்து புறப்பட்டு செம்பூர் கார்டனை நெருங்கிய மைதிலி சாலையில் இடதுபுறத்திலிருந்த மருத்துவர் ராஜகோபாலனின் மருத்துவமனையைப் பார்த்தாள். This is where my life took a turn for the worse என்று நினைத்தாள். அவளையுமறியாமல் ராஜகோபாலனின் மீது கோபம் எழுந்தது. அவரை சந்தித்து சூடாக நாலு கேள்விகளைக் கேட்டாலென்ன என்று நினைத்தாள். அடுத்த நொடியே அவர மட்டும் சொல்லி என்ன பிரயோசனம்? என்ன என்று தோன்றியது. நேற்று மட்டும் தன்னை சீனியில் வீட்டின் முன்னிருந்து காரில் கடத்தி வரவில்லையென்றால் எப்படியாவது அவள் அவனை சந்தித்திருப்பாள்...

செம்பூர் கார்டன் சந்திப்பிலிருந்த போக்குவரத்து சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாறியும் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க நாலாபுறமும் காத்திருந்த வாகனங்கள் அலறத் துவங்கின. திடுக்கிட்டு மீண்ட மைதிலி அவசர, அவசரமாய் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சிக்னலைக் கடந்து சயான் செல்லும் திசையில் திரும்பினாள்.

இப்ப என்ன செய்யலாம்னு ப்ளான்? என்றது உள்மனசு. மொதல்ல சீனிக்கி என்னாச்சின்னு கண்டுபிடிக்கணும். அதுக்கு என்ன வழி... அவன்கிட்ட செல்ஃபோன் இருக்காது. வீட்டுக்கு ஃபோன் பண்ணா ஒருவேளை சரோஜா ஆன்டியோ இல்ல அங்கிளோ எடுத்தா என்னன்னு பேசறது? இது எல்லாத்துக்கும் நீதாண்டிம்மா காரணம்னு சொல்லிட்டா?

இத்தனை குழப்பங்களுடன் மேலே செல்வதா அல்லது எங்காவது அமர்ந்து யோசிப்பதா என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்க அவளுடைய செல்பேசி ஒலித்தது. கழுத்திலிருந்து மாலையாய் தொங்கிக்கொண்டிருந்த செல்பேசியை எடுத்து யாரென விளங்காமல் 'ஹலோ' என்றாள் தயக்கத்துடன்...

'மைதிலி நாந்தா வத்ஸ்... எங்கருக்கே?'

'வத்சலா நீங்களா? Thankyou so much for calling me.. நா இப்ப சயான் போய்க்கிட்டிருக்கேன்...ஒன் செக்கண்ட்... வண்டிய பார்க் பண்ணிட்டு கூப்பிடறேன்..' உடனே சாலையோரத்தில் ஒதுங்க முடியாதபடி அவளுக்கு இடமும் வலமும் வாகனங்கள் பறந்துக்கொண்டிருந்தன. அவைகளை சமாளித்து இடது புறம் ஒதுங்கி வாகனத்தை நிறுத்தவே பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.

அதற்குள் பொறுமையிழந்து வத்ஸ்லா மீண்டும் அழைக்க, 'சாரி வத்ஸ்... இங்க பயங்கர டிராஃபிக்... நானும் சீனியப் பத்தித்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன்.. யார கூப்பிடறதுங்கறது தெரியாம தடுமாறிக்கிட்டிருக்கேன்... நல்லவேளையா ஒங்க ஃபோன் வந்துது..' என்றவள் சீனி எப்படியிருக்கான்... சொல்லுங்களேன்...' என்றாள் தொடர்ந்து படபடப்புடன்.

வத்சலா அடுத்த சில நொடிகளில் நடந்தவற்றையெல்லாம் மளமளவென்று கூறிமுடித்து மருத்துவமனையின் விலாசத்தையும் கூறினாள். இறுதியில், 'நீ ஒடனே இங்க பொறப்பட்டு வா மைதிலி... சீனி ஒன்னெ பாத்தே ஆகணும்னு டென்ஷன் பண்றான்... அம்மா இருக்கற நிலையில எனக்கு எப்படி அவனெ சமாளிக்கறதுன்னே தெரியல.. ஒடனே வாயேன் ப்ளீஸ்... Don't worry about Dad.. வச்சிடறேன்...' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க மலைத்துப் போய் சில நொடிகள் நடந்ததற்கு தானும் ஒரு முக்கிய காரணம்தானே என்ற குற்றவுணர்வு மேலோங்க சாலையென்றும் பாராமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்...

செத்துக்கிடந்தாலும் கவலைப்படாமல் தன்வழியில் சென்றுக்கொண்டிருக்கும் மும்பைவாசிகள் மைதிலியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரவர் வழியில் செல்ல அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து வத்சலா சொன்ன மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்.

*******

தனபால்சாமி எஸ்.பியின் வாகனம் அலுவலகத்திற்குள் நுழைந்தால் காலை சரியாக ஒன்பது மணி என்று அர்த்தம்.

வாகனம் அவருடைய அலுவலக வாசலில் சென்று நின்றதும் இறங்கி மிடுக்குடன் அவர் முன்செல்ல அவருடைய வாகனத்தில் இருந்த பத்திரிகைகளையும் கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவர் பின்னே ஓடினார் அவருடைய பிரத்தியேக காவலர். அய்யா நடக்கும் நடையிலிருந்தே அவர் எந்த மூடுல இருக்கார்னு சொல்லிருவேன் என்று தன்னுடைய நண்பர்களிடம் பெருமையடித்துக்கொள்ளும் அவருக்கு அன்று அய்யா படு டென்ஷனுடன் இருப்பது தெரிந்தது.

எல்லா இந்த பாளாப்போன பாம்ப் ப்ளாஸ்ட்தான் காரணம்.. எங்கயோ என்னமோ வெடிக்குதுன்னா ரெண்டாயிரம் மைலுக்கப்புறம் இருக்கற எங்கள ஏன்யா டென்ஷனாக்குறீங்க? இப்பப் பார் காலைல வந்து எறங்குனதுமே இவ்வளவு டென்ஷன்லா இருந்தார்னா.. இன்னும் போகப்போக என்ன ஆகுமோ தெரியலையே... இன்னிக்கி நம்ம கதி அதோகதிதான் போலருக்கு... யார் தலையெல்லாம் உருளப் போகுதோ...

தனபால்சாமி மேசையை சுற்றிக்கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்ததுமே தன் காவலரைப் பார்த்தார். தன்னுடைய உதவி அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, 'மணி இருக்காரான்னு பார்யா. இருந்தா ஒடனெ வரச்சொல்லு... க்விக்.' என்றார். 'வந்துட்டார்யா... இதோ வரச் சொல்றேன்.' என்றவாறு சென்ற காவலர் அடுத்த சில நொடிகளில் திரும்பிவந்து, 'அய்யா அவர் இப்பத்தான் எங்கருந்தோ ஃபோன் வந்து ஜீப்ப எடுத்துக்கிட்டு போயிருக்காராம்... எங்கன்னு சொல்லலையாம்யா...' என்றவாறு தலைகுனிந்து நிற்க எரிந்து விழுந்தார் எஸ்.பி.

'என்னய்யா பண்றீங்க எல்லாரும்? அவர் எங்க போனாலும் கேக்கணும்னு சொல்லியிருக்கேனில்லே... அவர் அசிஸ்டெண்ட்ஸ் யாரும் இருக்காங்களா பார்...'

'இருக்காங்கய்யா.. ஆனா எஸ்.ஐ அய்யா போன் வந்ததுமே பரபரப்பா கெளம்பி போனாராம்யா.. அதான் டைப்பிஸ்ட் அம்மாவுக்கு கேக்கணும்னு தோனல... கேட்டா எங்க கோச்சிக்குவாரோன்னாருக்கும்...' என்றவர் எஸ்.பியின் முறைப்பதைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டார்.. 'மன்னிச்சிருங்கய்யா..'

'எதுக்கெடுத்தாலும் இந்த ஒரு வார்த்தைய சொல்லிருங்க... போயி... வயர்லெஸ் இல்லன்னா செல் ஃபோன எடுத்துக்கிட்டு போயிருக்காரான்னு பாத்துட்டு அவர என்னெ ஒடனே கூப்பிடச் சொல்லுங்க... போங்க... அடுத்த அஞ்சு நிமிசத்துல அவர் ஃபோன் மட்டும் வரல.... இருக்கு ஒங்க எல்லாருக்கும்...'

போச்சிரா.. எங்கயோ இடி இடிச்சா எங்கயோ மழை பெய்யுங்கறா மாதிரி அந்த அய்யா செஞ்ச தப்புக்கு எனக்கு இடியா... என்னடா பொளப்பு இது என்று நொந்துக்கொண்டு காவலர் வெளியேற இருக்கையிலிருந்து எழுந்து அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார் எஸ்.பி... அந்தாளு ஆஃபீசுக்கு கெளம்பறதுக்குள்ள போங்கன்னு படிச்சி படிச்சி சொல்லியிருந்தேனே.. ஒருவேளை அங்கதான் போயிருப்பாரோ... என்று நினைத்தவர் அடுத்த நொடியே முந்தைய நாள் அவர் கூறியதை நினைத்துப் பார்த்தார்... அதான் அந்த ஏரியா எஸ்.ஐய பாத்துக்க சொல்லலாம்னு சொன்னாரே...

மேசைமீதிருந்த அவருடைய செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும் விரைந்துச் சென்று திரையைப் பார்த்தார். அவர்தான். எடுத்தவுடன் 'சொல்லுங்க... அந்த பேங்க் ஈ.டி கேஸ் என்னாச்சி..?' என்று உறுமினார்.

'சார்... அந்த விஷயத்த காலைலயே ஏரியா எஸ்.ஐகிட்ட சொல்லிட்டேன் சார்... சர்ச் வாரண்டையும் நம்ம ஆஃபீஸ் ஏட் வழியா குடுத்தனுப்பியாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் அங்க போயிருவார்... நான் நீங்க வந்ததுமே சொல்லணும்னுதான் இருந்தேன்.. அதுக்குள்ள இங்க ஒரு லேபர் ப்ராப்ளம்... --------------- பேங்க் ஸ்டாஃப் யூனியன் லீடர யாரோ ரவுடிங்க இன்னைக்கி காலைல அடிச்சி காயப்படுத்திட்டாங்களாம்.. வொர்க்கர்ஸ் திடீர்னு அவங்க யூனியன் ஆஃபீஸ் முன்னால கூடி சாலை மறியல்ல எறங்கிட்டாங்க... கூட்டம் பெரிசா இருக்கு, யாராச்சும் போய் ஹெல்ப் பண்ணுங்கன்னு கமிஷனர் ஆஃபீஸ்லருந்து ஃபோன் வந்துது... அதான் ஒடனே கெளம்பி ஓடியாந்தேன்...'

தனபால்சாமிக்கு அவருடைய உதவியாளர் கூறிய வங்கியின் பெயரைக்கேட்டதும் எங்கோ பொறிதட்டியது... இதுக்கும் அந்தாளுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமோ... அப்படி மட்டும் இருந்தா சர்ச் பண்ணதோட நிக்காம.. உள்ளவே தூக்கி போட்டுரலாமே... 'அடிபட்ட ஆள் இப்ப எப்படி இருக்கானாம்... விசாரிச்சீங்களா?'

'இல்ல சார்.. நா இப்பத்தான் வந்து சேர்ந்தேன்.. ஆளாளுக்கு ஒன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க... விசாரிச்சிட்டு இன்னும் அஞ்சே நிமிசத்துல ஒங்கள கூப்பிடறேன் சார்..' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க எஸ்.பி... 'யூஸ்லெஸ் ஆளுங்க.. எத விசாரிக்கணுமோ அத விசாரிக்க மாட்டானுங்க...' என்றவர் அறையில் தன்னுடைய காவலர் நிற்பதை அப்போதுதான் கவனித்தார். 'என்னய்யா.. ஒட்டு கேக்கறீயா? தொலச்சிருவேன்... ஃபோன் பேசறப்போ ரூமுக்குள்ள வாரதன்னு எத்தன தரம் சொல்லிருக்கேன்... போ... போய் சூடா ஒரு காப்பி வாங்கிட்டு வா... ஒடு....' என்று விரட்ட... பதறியடித்தவாறு ஓடிய காவலரைப் பார்த்தவாறு நின்றிருந்தார்..

தொடரும்..

25.4.07

சூரியன் 193

தனபால்சாமிக்கும் அலுவலகம் செல்லும் வழியில் அன்றைய தினத்தாள்களை படிக்கும் வழக்கமிருந்தது. ஆகவே மறக்காமல் தினமும் வீட்டிற்கு வரும் பத்திரிகைகளை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம்.

அன்று காலையில் புவனா தன்னிடம் காட்டிய பக்கத்திலேயே மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை எடுத்ததுமே அவர் கண்ணில் பட்டது --------------- வங்கியின் முந்தைய தின பத்திரிகை நிரூபர் கூட்டத்தைப் பற்றிய செய்தி!

அதில் வெளியாகியிருந்த புகைப்படத்தை பார்த்ததுடன் நிரூபர் கூட்டத்தைப் பற்றி பிரசுரமாகியிருந்த செய்தியையும் மேலோட்டமாக படித்தவர் அதில் வங்கியின் உயர் அதிகாரியொருவர் கூறியிருந்ததைப் படித்ததும் கோபமடைந்தார். அவரையுமறியாமல் அருகிலேயே பிரசுரமாகியிருந்த புகைப்படத்திலிருந்த சேதுமாதவனின் உருவத்தின் மீது அவருடைய பார்வை பதிந்தது. அவரருகில் அமர்ந்திருந்த மற்றொரு அதிகாரி யாராயிருக்கும் என்று கீழே அளிக்கப்பட்டிருந்த பெயரை வாசித்தார். சுந்தரலிங்கம்!

எங்கோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என்று ஒரு நொடி சிந்தித்தார். அட! இவரா? மீண்டும் ஒருமுறை முகத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். இவர் போன சனிக்கிழமை ம்யூசிக் அக்காடமி ஹால்ல நடந்த கச்சேரிய நடத்துன கன்வீனர் இல்ல?

ஆம். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் தனபால்சாமி. அவரா இப்படியொரு பொறுப்பில்லாத பேட்டியை கொடுத்திருக்க முடியும்? தர்மசிந்தனை, ஆன்மீக உணர்வு உள்ள இவரைப் போன்ற ஒருவரால் எப்படி வங்கியில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்த தாமதிப்பவர்களை அடித்து மிரட்டுவதில் தவறில்லை என்று பகிரங்கமாக கூற முடிகிறது? எங்கோ பிசிரடிக்குதே என்று நினைத்தவாறு அருகில் ஒரு லேசான விஷமப்புன்னகையுடன் அமர்ந்திருந்த சேதுமாதவனின் உருவத்தைப் பார்த்தார். I think he is the culprit.. ஒன்னு இவர் சொன்னத அந்த சுந்தரலிங்கம் சொன்னதா போடச் சொல்லியிருக்கணும்.. இல்லன்னா அவர் ஏற்கனவே ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்த டெக்ஸ்ட இந்த மனுசன் வேற வழியில்லாம வாசிச்சிருக்கணும்... Yes that's possible... என்று நினைத்தவர் அலுவலகம் சென்றடைந்ததும் சேதுமாதவனின் வீட்டில் ரெய்ட் நடத்த நினைத்திருந்ததை முடுக்கிவிடவேண்டும் என்று குறித்துக்கொண்டு மற்ற செய்திகளை வாசிப்பதில் மூழ்கிப்போனார்.

*****

சிலுவை மாணிக்கம் நாடார் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் வீடு அமைந்திருந்த சாலையை அடைந்த ஏழுமலையும் அவனுடைய கூட்டாளிகளும் கலைந்து சாதாரண வழிபோக்கர்களைப் போன்று நிதானமாக நடந்து அவருடைய வீட்டை நெருங்கி நோட்டம் விட்டனர். நாடாருடைய வாகனம் போர்ட்டிக்கோவில் நிற்பது தெரிந்தது.

'என்னண்ண? அவரு உள்ளதான் இருக்கார் போலருக்கு? அந்த அய்யா இவரு சரியா எட்டு மணிக்கெல்லாம் பொறப்பட்டுருவாருன்னு சொன்னாரே?' என்ற கூட்டாளி ஒருவனை முறைத்துப் பார்த்தான் ஏழுமலை.

'எலேய்... ஒன்னெ தனியா போய் பார்னு சொன்னா எம் பின்னாலயே வந்துக்கிட்டிருக்கியா? ஏன் எட்டு மணிக்கு மேல காத்துக்கிட்டிருக்க மாட்டியளோ... போல அங்கிட்டு... போய் எதிர்வாடையில நில்லு... நா அங்கன நிக்கேன்... யாராச்சும் வீட்டுக்குள்ளாற இருந்து வந்தா...'

அவன் கூறி முடிப்பதற்குள், 'என்னண்ணே ஒங்களுக்கு சிக்னல் குடுக்கவா?' என்றவனை முறைத்தான். 'எலேய்.. சிக்னலா... நீயே காமிச்சி குடுத்துருவ போலருக்கே... சும்மா கைய தலைக்கு மேல ஒசத்தி நெட்டி முறிக்கறாப்பல செய்யி... நா புரிஞ்சிக்குவேன்.. என்ன வெளங்குதா?'

'சரிண்ணே..'

'என்னத்த வெளங்குச்சோ.. போ...' என்று சலித்தவாறு ஏழுமலை வீட்டைக் கடந்து தெருக்கோடி வரை சென்றுவிட்டு மீண்டும் வந்த வழியே நடந்தான்.. அவன் வீட்டை நெருங்கவும் மெக்கானிக் போன்ற ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. அவரை, 'வாங்கண்ணே... ' என்றவாறு கேட்டைத் திறந்தவனைப் பார்த்ததும் ஏழுமலை சடாரென்று திரும்பி வந்த பாதையிலேயே நடந்தான். 'அட இவன் எங்க இங்க? நம்மள இவன் அடையாளம் கண்டுக்குவானே? இப்ப என்ன ச்செய்ய?' மதுரையில் அவன் வசித்த பகுதியில் மந்திரச்சாமியை பார்த்த நினைவு வந்தது. தனக்கு அவனை அடையாளம் தெரியும்போது அவனுக்கும் என்னை அடையாளம் தெரியாதா என்ன? ரத்தினவேலய்யாவ கூப்பிடலாம்னா அந்தய்யா கூப்டாதேன்னு வேற சொல்லிப்போட்டாரே...

ஏழுமலை அன்று காலையில் தாம்பரம் வந்திறங்கியதும் அழைத்த தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருந்த துண்டுச்சீட்டை தன் பாக்கெட்டிலிருந்த எடுத்துப் பார்த்தான். கூப்ட்டுபாத்தா என்ன? ஏசினா ஏசிட்டு போட்டும்... பெறவு ஏண்டா சொல்லலைன்னு கேட்டா? கையில் சீட்டுடன் சுற்றிலும் பார்த்தான். சாலைக்கு குறுக்கே ஒரு பொது தொலைபேசி கூண்டு தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து கூண்டுக்குள் புகுந்தான்.

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது.. யாராச்சும் எடுங்களேன்யா... என்று முனுமுனுத்தவாறு காத்திருந்தான்... இரண்டு, மூன்று என நிமிடங்கள் கடந்தனவே தவிர யாரும் எடுப்பாரில்லை. சலிப்புடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு வெளியேறி நடைபாதையில் நின்றவாறு யோசிக்கலானான்.. பிறகு ஒரு முடிவுடன் தன் சகாக்களுள் ஒருவனை நெருங்கி, 'எலேய் நம்ம பயலுவள கூப்ட்டுக்கிட்டு வா... நா அந்தாக்ல இருக்கற பார்க்ல இருக்கேன்.. ஒரு முக்கியமான வில்லங்கம்லே.. வெரசா வந்து சேருங்க.. சேந்து வராதீங்க.. தனித்தனியா வாங்க..' என்ற கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் தெருக் கோடியிலிருந்த பூங்காவை நோக்கி விடுவிடுவென நடந்தான்..

******

'என்னண்ணே... ஏதாச்சும் ஒப்பேறுமா?' என்ற மந்திரசாமியை எரிச்சலுடன் பார்த்தான் கார் மெக்கானிக்.

'எலேய் என்ன கிண்டலடிக்கிறீகளாக்கும்...எத்தன வருசமால்ல இந்த வண்டிய ஓட்டுற பெட்ரோல் போடறத தவிர வேற ஏதாச்சும் தெரியுமால்ல? ஒன்னையும் டிரைவர்னு வச்சிருக்காங்க பார் அய்யாவ சொல்லணும்.. இதுல கேலி வேற..' என்றவாறு பானட்டைத் திறந்து கவிழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூடிவிட்டு நிமிர்ந்தான். 'அடேய் மந்திரச்சாமி... பெருசா ஒன்னுமில்லன்னு நினைக்கேன்... கூலண்ட்தான் கொஞ்சம் கம்மியாருக்கு.. வாங்கிட்டு வந்து ஊத்திட்டு ஸ்டார்ட் பண்ணி பாப்பம்.

'என்னண்ணே சொல்றீய.. இங்கன பக்கத்துல கூலண்ட் கிடைக்காதே...' என்று அலறினான் மந்திரசாமி. 'அக்கா வக்கீலாஃபீஸ் வரைக்கும் போகணும்னு ரெடியாயி நிக்காவளே...'

'அதுக்கு நான் என்னச் செய்ய... நான் ஒர்க் ஷாப்புக்கு ஃபோன் போட்டு சொல்லத்தானல்ல முடியும்.. அங்கருந்து ஒரு பயல கொண்டுவரச் சொல்வோம்.. பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துருவான்... வா வந்து போன காமி.' என்றவாறு மெக்கானிக் வாசலை நோக்கி நடக்க மந்திரசாமி பதறியவாறு தடுத்து நிறுத்தினான். 'அண்ணே இங்கிட்டு வாங்க பின் வாசல் கூடி போவம்... முன் வாசல் வழியா போனா அக்கா வையும்..'

மெக்கானிக் சிரித்தவாறு மந்திரசாமியை தொடர்ந்து பின்வாசலை நோக்கி நகர்ந்தான்.

********

'எலேய்... புதுசா ஒரு வில்லங்கம்லே.. அதனால நா இப்ப சொல்றத கவனமா கேளுங்க' என்றவாறு துவங்கி தன்னுடைய திட்டத்தை விளக்கினான் ஏழுமலை..

அவன் முடிக்கும்வரை காத்திருந்த நால்வர் அடங்கிய அவனுடைய கூட்டாளி கூட்டம் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டது.

'என்னலேய்.. பிசாச கண்டாமாதிரி முளிக்கீங்க? முடியுமா, முடியாதா?'

'அதுக்கில்லண்ணே.. நீங்க இல்லாம எப்படி...? இதுவரைக்கும் நாங்க தனியா செஞ்சதில்லையேண்ணேன்.. அதான்..'

'எலேய்... தடிப்பயலுவளா இதுக்கா ஒங்கள இவ்வளவு வருசமா கூட வச்சிருக்கேன்... என்னைய அந்த பய பாத்துட்டான்னா வேற வெனையே வேணாம்லே... பெறவு ஊருக்கு போய் ச்சேந்தாப்பலதான்..' என்று எரிந்து விழுந்தான் ஏழுமலை அக்கம்பக்கம் பார்த்தவாறு. நல்லவேளையாக அந்த காலை நேரத்தில் பூங்கா ஓரிருவரைத் தவிர வெறிச்சோடி கிடந்தது.

ஒரு சில நிமிட ஆலோசனைக்குப் பிறகு கூட்டாளிக் கும்பலுள் ஒருவன், 'சரிண்ணே.. முடிச்சிருவோம்... நீங்க இங்கனயே இருங்க.. முடிச்சிட்டு வந்துட்டு பேசிக்குவம்... நீங்க சொன்ன அடையாளத்த வச்சிக்கிட்டு மொகத்த பாத்துக்கிட்டுருக்க முடியாதுல்லண்ணே அதான்.....'

'சரிண்ணே.. அந்த அய்யாவோட வேற யாராச்சும் இருந்தா என்னண்ணே ச்செய்ய? அப்புறம் அந்த டிரைவர் பய... அவன் எங்கள்ல யாராச்சும் ஒருத்தன அடையாளம் பாத்து சொல்லிருவானே.. அதுக்கென்னச் செய்ய?' என்றான் வேறொருவன்.

அவன் கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்தாலும் ஏழுமலை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எரிச்சலுடன் அவனைப் பார்த்தான். 'எலேய்.. இதயெல்லாமா சொல்லிக்கிட்டிருப்பாக... அவன் கார விட்டுட்டு ஓடிட்டா விட்டுருங்க.. இல்லையா அவனையும் போட்டுருங்க..' என்றவன், 'எலேய்.. உள்காயம் மட்டுந்தான்.. சாகடிச்சிராதீங்கலே... அந்தய்யா மட்டுந்தான் இருப்பாகன்னுதான் கேள்வி... கூட யாராச்சும் இருந்தா என்ன செய்யன்னு யோசிச்சி எதுக்குலே மண்டையிடி... பொம்பளையாருந்தா விட்டுருங்க.. மத்தபடி யாராருந்தாலும்.. அந்தய்யாவுக்கு நேர்ந்ததுதான்... என்னச் செய்ய... அது அந்தாளோட தலையெழுத்துன்னு நினைச்சிக்கிர வேண்டியதுதான்...'

கூட்டாளிக் கும்பல் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புல்தரையில் வைத்திருந்த சாக்கு பைகளை தோள்களில் சுமந்தவாறு வெளியேறியது.. அவர்கள் வெளியேறி சில நிமடங்கள் கழித்து ஏழுமலை சிந்தனையுடன் மீண்டும் ஒருமுறை தொலைபேசி கூண்டை நோக்கி நடந்தான்.

தொடர்ந்தான்..

17.4.07

சூரியன் 192

சாதாரணமாக ஃபிலிப் சுந்தரம் அலுவலகம் செல்லும் வழியில்தான் அன்றைய தினத்தாள்களை வாசிப்பது வழக்கம்.

அவருடைய வாகன ஓட்டுனர் அவருடைய இல்லத்திற்கு வரும்போது அன்றைய ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில தினத்தாள்களை கொண்டு வந்துவிடவேண்டும் என்பது ஏற்பாடு. அவருடைய இல்லத்திலிருந்து அலுவலகம் சென்று சேர அரை மணிக்கும் கூடுதல் ஆகும் என்பதால் இரண்டு தினத்தாள்களிலுமுள்ள தலைப்புச் செய்திகளை படித்து முடிக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

அன்றும் அப்படித்தான். வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே செய்தித்தாள்களை புரட்டத் துவங்கினார். ஆனால் முதல் பக்கத்திலேயே வெளியாகியிருந்த மாதவனுடைய புகைப்படத்துடனான முந்தைய தின பேட்டியின் செய்தி அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.

ஆவலுடன் அதை படிக்கத் துவங்கிய சுந்தரம் அதை படித்து முடித்ததும் மேற்கொண்டு மற்ற செய்திகளை படிக்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

How can he do this? Of all the people CGM? என்று மாய்ந்துபோனார். உடனே தன்னுடைய செல்ஃபேசியை எடுத்து டயல் செய்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'மிஸ்டர் சுபோத் நம்ம பிஆரோ ஆஃபீசுக்கு வந்துட்டாரான்னு பாருங்க. வந்திருந்தா இன்னும் அரை மணியில நேத்து மீட்டுல நம்ம சிஜிஎம் குடுத்த ரெஸ்பான்சோட நோட்ச என் கேபினுக்கு கொண்டு வரச்சொல்லுங்க. It should not be shown to anybody else without my clearance, is that clear?' என்றார்.

பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

இது நிச்சயம் சுந்தரலிங்கம் சாரோட ஸ்டேண்ட்மெண்டாருக்காது. I think our ED has played his game again. அவருக்கு தன்னையும் சுந்தரலிங்கத்தையும் அடுத்த பதவி உயர்வு போட்டியிலிருந்து, முக்கியமாக சேர்மன் பதவிக்கான போட்டியிலிருந்து, எப்படியாவது விலக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது தெரிந்துதானிருந்தது. அவர்களிருவருக்குமே அந்த பதவியில் ஆர்வம் இல்லை என்பதை சேதுவுக்கும் தெரியும் என்பதை பல சமயங்களில் அவர் உணர்ந்திருக்கிறார். இருந்தும் தொடர்ந்து சேது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரையும் சுந்தரலிங்கத்தையும் சிக்கலில் சிக்கவைப்பதில் முயன்றுவருவதை ஃபிலிப் நன்றாக அறிந்துவைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுந்தரலிங்கம் அதை உணரவில்லை.

முந்தைய தினம் மாதவன் புறப்பட்டுச் சென்றதுமே தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் சேது முனைந்துவிடுவார் என்பது உணர்ந்திருந்தார் என்றாலும் அவர் அதை அத்தனை பகிரங்கமாக செயல்படுத்த துணிவார் என்று நினைத்திருக்கவில்லை. அவரை மாதவன் தனக்கு சார்பாக பத்திரிகை நிரூபர் கூட்டத்தில் பேச அனுமதித்திருந்தார் என்பதுதான் அவரை உசுப்பி விட்டிருக்க வேண்டும். எங்கே தன்னிச்சையாக அவரை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்தால் பிரச்சினையாகிவிடுமோ என்ற அச்சத்தில் சுந்தரலிங்கத்தையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய தினம் அலுவலகத்தில் நடந்த ஒருசில நிகழ்வுகள் காரணமாக சுந்தரலிங்கத்துக்கும் தன் மீது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது சேதுவின் சதித்திட்டத்திற்கு வசதியாகப் போனது.

அவருடைய சிந்தனைகளைக் கலைப்பதுபோல் செல்பேசி ஒலிக்க அதை எடுத்துப் பேச மனமில்லாமல் யாரென்று பார்த்தார். நாடார்! அவர் இருந்த மனநிலையில் பேசாமலிருப்பதே உத்தமம் என்ற நினைப்பில் வாகன ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடி வழியாக தன்னைக் கவனிப்பதை உணர்ந்தும் பதிலளிக்காமல் பத்திரிகையில் கண்களை ஓடவிட்டார். செய்தித்தாளில் வெளியாகியுள்ளதைப் பற்றித்தான் நாடார் தன்னிடம் விளக்கம் கேட்க முனைந்திருப்பார் என்று நினைத்தார். அத்துடன் அவர் அந்த கூட்டத்திலேயே பங்குகொள்ளவில்லை என்பது நாடாருக்கு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம். 'அவன் சொன்னா நீரு எறங்கி போயிருவீராக்கும்?' என்று அவரையே சாடினாலும் வியப்பதற்கில்லை.

முந்தைய தினம் நடந்த பத்திரிகை கூட்டத்தைப் போன்று எந்த ஒரு முக்கிய கூட்டத்திலும் நடப்பவைகளை அப்படியே சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவென்றே ஒரு சுருக்கெழுத்தாளர் நியமிக்கப்பட்டிருப்பார். கூட்டத்தில் பேசப்படுபவற்றை ஒன்றுவிடாமல் குறிப்பெடுத்து பிறகு அதை கணினியில் ஏற்றி ஒரு நிரந்தர மென் கோப்பாக மாற்றி அதை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் அடுத்த நாளே சமர்ப்பித்துவிடவேண்டும் என்பது நியதி. அந்த சுருக்கெழுத்தாளர் எச்.ஆர். மற்றும் போர்ட் (Board) அலுவல்களுக்கு பொறுப்பான ஃபிலிப் சுந்தரத்தின இலாக்காவில் பணியாற்றுபவர் என்பதால் அந்த மென் கோப்பை அவர் சரிபார்த்தபிறகே மற்ற அதிகாரிகளுக்கு, வங்கி முதல்வரையும் சேர்த்து, வழங்கப்படும். ஆனால் அன்றைய செய்தித்தாளில் வெளியாகியிருந்த விஷயம் நிச்சயமாக உண்மையில் கூட்டத்தில் நடந்ததற்கு முரண்பட்டது என்பதால் சேது மாதவன் அந்த குறிப்புகளையே மாற்ற முயன்றாலும் வியப்பில்லை என்பதால்தான் சுபோத்தை அழைத்து அதை அவருடைய அனுமதியில்லாமல் யாருக்கும் அதை யாருக்கும் காட்டக் கூடாத என உத்தரவிட்டார்.

அவருடைய வாகனம் அலுவலகத்திற்குள் நுழைவதை உணர்ந்த ஃபிலிப் அன்றைய தினம் முந்தைய தினத்தைவிடவும் சிக்கலாக இருக்கப் போகிறது என்று நினைத்தவாறு இறங்கி தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

********

நந்தக்குமார் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகத்திலிருந்து சற்று தொலைவிலிருந்தே அங்கி குழுமியிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டான். உடனே அங்கேயே ஆட்டோவிலிருந்து இறங்கி கால்நடையாக அலுவலகத்தை நெருங்கினான்.

கூட்டத்தின் விளிம்பிலிருந்த ஒருவரை எங்கோ பார்த்த நினைவு. அவரை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 'என்ன சார் என்ன ஆச்சி? எதுக்கு கூட்டமா நிக்கிறீங்க?'

அவர் வியப்புடன் அவனை திரும்பிப் பார்த்தார். 'என்ன நந்தக்குமார் சார் ஒங்களுக்கு விஷயம் தெரியாதா?'

'ஏன் என்ன ஆச்சி?'

'இன்னைக்கி காலைல நம்ம முரளி சார ஆஃபீஸ் வர்ற வழியில யாரோ ரெண்டு மூனு ரவுடிப் பசங்க சவுக்கு கம்பால அடிக்க வந்திருக்காங்க சார். முரளி ஸ்கூட்டர நிறுத்தாம தப்பிக்க முயற்சி பண்ணிருக்கார். இருந்தாலும் தலையில பலமா அடிபட்டுருக்கு. எப்படியோ சமாளிச்சி ஸ்கூட்டர ஓட்டிக்கிட்டு பக்கத்துலருக்கற ஆஸ்பத்திரிக்கி போயி அட்மிட் ஆய்ட்டார். அது தெரியவந்து சிட்டி பிராஞ்ச் ஸ்டாஃபெல்லாம் ஒரே டென்ஷனாய்ட்டாங்க.. நேரா இங்க வந்துட்டாங்க... வாசகன் சார் ஹாஸ்பிட்டல் போயிருக்கார். அவர் வந்தாத்தான் மேக்கொண்டு என்ன செய்யறதுன்னு டிசைட் பண்ணுவாங்க..'

நந்தக்குமார் அதிரிச்சியில் உறைந்துப்போனான். முந்தைய தினம் சேதுமாதவன் தன்னை அடித்து மிரட்ட அடியாட்களை ஏவிவிட்டிருந்தார் என்று முரளி தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் ஏவிவிட்டவனே தன்னுடைய ஊரைச் சார்ந்தவன் என்பதால் அவன் அதை செயல்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவன் கூறியதை வைத்தே சேதுமாதவனை மடக்கப் போவதாகவும் முரளி கூறினானே பிறகெப்படி இது நடந்தது?

இப்போது என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்த நந்தக்குமார் கூட்டத்தினர் கோபத்துடன் வங்கி நிர்வாகத்திற்கெதிராக கோஷமிடுவதை கவனித்தான். இக்கூட்டம் பொறுமையிழந்து வன்முறையில் ஈடுபட நேர்ந்தால் நிச்சயம் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தவனாய் அங்கிருந்து புறப்பட்டான். அதற்கு முன்பு முரளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு எப்படி செல்வதென்று அவனிடம் தகவலளித்தவரிடமே கேட்டு தெரிந்துக்கொண்டான். 'ஆனா சார்.. நீங்க இப்ப போனாலும் பாக்க முடியாதுன்னு நினைக்கேன்... அநேகமா அவர் ஐ.சி.யூவுலோ இல்ல ஆப்பரேஷன் தியேட்டர்லயோதான் இருப்பார் போலருக்கு... வாசகன் ஃபோன் பண்ணி சொன்னதுலருந்து சொல்றேன்..'

இருந்தும் சென்றுதான் பார்போமே என்ற நினைவுடன் எதற்கும் நளினியிடம் தெரிவித்துவிட்டு செல்வோம் என்று நினைத்தவனாய் வந்தனாவின் வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தான். ஆனால் நளினி அவன் கூறியதை கேட்டும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சம்பந்தமில்லாமல் சிரிப்பதை கேட்டவன் சினந்து, 'ஏய் என்ன நீ? நா சீரியசான விஷயம் சொல்றேன் சிரிக்கிறே? என்னதான் அவன ஒனக்கு புடிக்கலன்னாலும் இப்படியா?' என்றான்.

'மேடம் பக்கத்துல உண்டு...' என்று நளினி பதிலுக்கு கிசுகிசுக்க கோபம் தணிந்து, 'அப்படியா சாரி... நான் போய் பாத்துட்டு வந்துடறேன்...' என்றான்.

'ஏய்.. வைக்கேண்டா..' என்ற நளினி அதே கிசுகிசு குரலில்.. 'பல்லாவரத்துலருந்து ஜோ விளிச்சிண்டாயிருந்து... நந்துவெ விளிக்காம் பறஞ்சு' என்றாள்...'நம்பர் உண்டுல்லே... வேகம் விளிக்கி...'

'சரி' என்றவாறு இணைப்பைத் துண்டித்த நந்து அடுத்து ஜோவை அழைத்தான்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'என்ன மிஸ்டர் ஜோ.. கூப்டீங்களா?' என்றான்.

ஜோ அவசர, மளமளவென்று முந்தைய தினம் நடந்தவைகளை தெரிவித்துவிட்டு அன்று மாலையே இறுதிச் சடங்கு நடக்கவிருப்பதாகவும் இதை முரளியிடம் தெரிவிக்க முயன்று தோற்றுப்போனதாகவும் கூறினான். 'ஒங்களுக்கு ஒருவேளை தெரியுமான்னு தெரியுமான்னுதான் கூப்ட்டேன்.. வாசகனும் செல்ஃபோன எடுக்க மாட்டேங்கறார்.'

முரளி தாக்கப்பட்டதை சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி தடுமாறிய நந்தக்குமார் பிறகு சொல்லிவிடுவதான் நல்லதென தீர்மானித்தான்.

'அப்படியா? I am sorry to hear that Mr.Nandhu.. ஆனா என்னால இப்ப வரமுடியாது.. நீங்க போய் பாத்துட்டு வாங்க.. நான் நாளைக்கி போய் பாத்துக்கறேன்.. இங்க சாருக்கு வேற யாரும் உதவிக்கு இல்லை... I hope he will recover fast... வச்சிடறேன்.' என்றவாறு ஜோ இணைப்பைத் துண்டிக்க நந்தக்குமார் வழியில் சென்ற ஒரு ஆட்டோவை கையசைத்து ஏறி மருத்துவமனை விலாசத்தை கூற ஆட்டோ வட்டமடித்து வந்த வழியிலேயே விரைந்தது.

தொடரும்..

11.4.07

சூரியன் 191

தன்னுடைய அறையிலிருந்து வெளியேறியதுமே ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோர் இருவரும் தன்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்ததை உணர்ந்த மைதிலி தன்னுடைய நாடகத்தை அரங்கேற்ற துவங்கினாள். 'எதுக்கு ரெண்டு பேரும் எம் மொகத்த பாக்கறேள்? நேத்து அப்பா செஞ்ச காரியத்துல நேக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆனா ராத்திரி ரொம்ப நேரம் யோசிச்சி பாத்தேன். அப்பா நினைக்கறதுல தப்பில்லன்னு தோனிச்சி. அதுக்கப்புறம்தான் நிம்மதியா தூங்கினேன்.. அதான் எழுந்துக்க லேட்டாயிருச்சி..'

பட்டாபி குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். 'என்னடி சொல்றா இவ?' என்பதுபோல்.

அதை கவனியாதவள் போல் கையில் துவாலையுடன் குளியலறையை நோக்கி நகர்ந்தாள் மைதிலி. போகிற போக்கில், 'அம்மா நா பல் தேய்ச்சி குளிச்சிட்டு வர்றதுக்குள்ள டிபனும் காபியும் ரெடி பண்ணிரு. மதிய சாப்பாட்ட வெளில பாத்துக்கறேன்.. இன்னைக்கி லஞ்ச் நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பனான்னு தெரியலை' என்றாள்.

அவள் குளியலறைக்குள் சென்று மறைந்ததும். 'என்னடி இது நாம ஒன்னு நினைச்சா.. இவ ஒன்னுமே நடக்காத மாதிரி பேசறா? ஏதாச்சும் டிராமா பண்றாளோ?' என்றார் பட்டாபி.

ஜானகி முகத்தை நொடித்தவாறு எழுந்து நின்றாள். 'ஒங்கக்கிட்டா இதான்னா ரோதனை. நீங்களா எதையாச்சும் நினைச்சுக்க வேண்டியது. அப்புறம் அவள டிராமா போடறான்னு சொல்ல வேண்டியது. நேக்கென்னவோ அவோ நம்மள புரிஞ்சுண்டான்னுதான் தோன்றது. நீங்க மேக்கொண்டு எதையாச்சும் சொல்லி பிரச்சினை பண்ணாதேள்.. நா அவளுக்கு வேண்டியத செய்யணும்..' என்றவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தவள் நின்று, 'நீங்க போயி செத்த பாலத்துக்கடியிலருக்கற கடையிலருந்து ரெண்டு கொத்தமல்லி கட்டு மட்டும் வாங்கிணுடு வாங்கோ. போங்கோ..' என்றாள்.

பட்டாபி அப்போதும் நம்பிக்கையில்லாமல் மைதிலியின் குளியலறையையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ஜானகி தங்களுடைய அறையிலிருந்த அவருடைய மேல் சட்டையை கொண்டு வந்து அவர் கையில் திணித்தாள். 'மசமசன்னு ஒக்காந்துருக்காம போய்ட்டு வாங்கோ.. அவசரமில்லை... மைதிலி ஆஃபீஸ் போற நேரத்துல நீங்க மறுபடியும் ஏதாவது பிரச்சினை பண்ண வேணாமேன்னுதான் ஒங்கள வெளில அனுப்பறேன்.. சாவகாசமாவே வாங்கோ..'

'ஹூம்.. எப்படியோ போங்கோ.. நேக்கென்னவோ...' என்று இழுத்தவாறு பட்டாபி குளியலறையை மீண்டும் பார்த்தார். 'மைதிலி நா வெளில போறேன்.. நீ சாயந்தரம் சீக்கிரமா வந்துரு.. ஒங்கிட்ட இன்னம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.' என்றார் உரக்க..

அடுத்த நொடியே உற்சாகத்துடன் பதில் வந்தது. 'சரிப்பா.. ஆறு மணிக்குள்ள ஆத்துல இருப்பேன்.. போறுமா?'

'பாத்தேளா.. நா சொல்லலை.. நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கோ...' என்ற ஜானகியை முறைத்தார் பட்டாபி. அவருக்கு மைதிலியின் நடத்தையில் நம்பிக்கை வரவில்லையென்பது அவருடைய முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் வேறு வழியில்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சுடன், 'ஈஸ்வரா நீதாம்பா பொறுப்பு...' என்ற முனுமுனுப்புடன் சட்டையை தலைவழியாய் அணிந்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

****

'என்ன பூர்ணி.. ரெடியா.. shall we go?' என்றவாறு தன்னை நோக்கி வந்த மகளைப் பார்த்தார் மருத்துவர் சோமசுந்தரம். அவரையுமறியாமல் தன் மனைவியை அப்படியே உரித்து வைத்திருந்த மகளைப் பார்த்து அதிசயித்தார்.

அவருடைய பார்வையிலிருந்த வியப்பை கண்டுகொண்ட பூர்ணிமா, 'என்ன டாட்.. என்ன ஒருமாதிரி பாக்கீங்க? என்னடா பேண்ட், சர்ட்லருந்து சாரிக்கு மாறிட்டாளேன்னா?'

'அதுவுந்தான்.. என்ன திடீர்னு?' என்றார் சோமசுந்தரம் புன்னகையுடன்.. இதுவும் நல்லதுக்குத்தான் என்றது அவருடைய மனது. She looks more matured... சவுத் இந்தியாவுல இருக்கற டாப் பேங்க் ஒன்னுல போர்ட் மெம்பர்னா சும்மாவா?

'நீங்கதான டாட் சொன்னீங்க... போர்ட் மெம்பர் பொசிஷன் அவ்வளவு சீப்பானதில்லன்னு... அதான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு... how do I look? Do I look like a honourable member of the Board?' என்றாள் சிரித்தவாறு.

சோமசுந்தரமும் அவளுடைய சிரிப்பில் கலந்துக்கொண்டார். 'Yes Madam.' என்றார் கேலியுடன்.. 'Shall we go? கீழ என் ரூமுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வரச் சொல்லிருக்கேன். டோஸ்ட்டும் காப்பி மட்டுந்தான்... சாப்ட்டு கெளம்புனா சரியாருக்கும்.'

'Yes Dad..' என்றவாறு பூர்ணிமா முன்னால் செல்ல சோமசுந்தரம் தொடர்ந்தார். 'பூர்ணி ஒன்னு கேக்க மறந்துட்டேன்.. நம்ம டாக்டர்ஸ் மும்பை கெளம்பி போயிருப்பாங்க இல்ல?'

'ஆமா டாட்...நேத்து ராத்திரியே ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்... காலைல 7.50க்கு ஒரு ஃப்ளைட் இருக்கு... They must have landed now.. ஆஸ்ப்பிட்டல் போயி Mrs.Madhavanஐ பாத்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்கேன்... Don't worry dad.. everything has been taken care of.'

'பூர்ணிமாவா கொக்கா... Most capable young woman executive அவார்ட நேஷனல் லெவல்ல வாங்கணும்னா சும்மாவா?' என்றார் சோமசுந்தரம் லேசான கேலியுடன்.

அவருடைய குரலில் தொனித்த கேலியை பொருட்படுத்தாமல் நடந்தாள் பூர்ணிமா. இதான் Male Chauvinismகறது.. அதென்ன women executive? அப்பாவும் ஆம்பளதான என்று நினைத்தாள்...

அடுத்த அரைமணியில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் வாகனத்தில் ஏற அது பரபரப்பாயிருந்த மருத்துவ வளாகத்தை கடந்து விரைந்தது.

*****

'என்னய்யா... இன்னும் எத்தன நேரமாவும்?' என்றார் நாடார் ஓட்டுனரைப் பார்த்து.

ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, 'டிராஃபிக் இல்லன்னா அரை மணி நேரத்துல போயிரலாம்யா.. ஆனா இன்னைக்கி பார்த்து டிராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கே.. எப்படியும் முக்கால் மணி நேரமாயிரும் போலருக்கு. கொஞ்சம் நெருக்கி புடிச்சா ஒரு அஞ்சி பத்து நிமிசம் கொறைக்கலாம்யா..' என்றார் தயக்கத்துடன்.. 'அய்யா கொஞ்சம் கோவக்காரரு.. நீம்பாட்டுக்கு எதையாச்சும் ஒளறி வச்சிராத.. கேட்ட கேள்விக்கு மட்டுந்தால் பதில் சொல்லணும்.. என்ன வெளங்குதா?' என்று எச்சரித்துத்தான் அனுப்பியிருந்தார் டிராவல்ஸ் முதலாளி..

நாடார் பதிலளிக்காமல் சிரித்தார். 'நெருக்கல்லாம் வேணாம் தம்பி.. அவசரமில்லாம பத்திரமா கொண்டுபோய் ச்சேத்துரு அது போறும்.. அதுக்குள்ள நானும் ரெண்டு மூனு போன் போட்டுக்கறேன்... .. நா பேசறதுல கவனத்த வைக்காம நீ சாலையா பாத்து ஓட்டு.'

'சரிய்யா..' என்றவாறு வாகன ஓட்டுனர் சாலையில் கவனத்தை செலுத்த முதலில் யாரை அழைக்கலாம் என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை நோட்டம் விடலானார் நாடார். 'மொதல்ல அந்த ஃபிலிப் ஐயா என்ன பண்றார்னு பாப்பம்.'

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது. 'டிரைவ் செஞ்சிக்கிட்டு இருப்பாரோ.. இருக்காதே.. டிரைவர்பய இருப்பானே...' என்ற யோசனையில் ஆழ்ந்தார்.. அடுத்த நொடியே, ஒருவேள வேணுக்குன்னே எடுக்காம இருப்பாரோ... இருக்கும். 'எதுக்கு எடுத்து இந்த மனுசன் கிட்ட எதையாச்சும் சொல்லி பளுவடியும் திட்டு வாங்கணுமான்னு நினைச்சிருப்பார்... அதுவும் சரிதானய்யா... நம்ம வாயுந்தான் சும்மா இருக்காதே... பாவம் ஆஃபீசுக்கு போற நேரத்துல அவர எதுக்கு பாவம் டென்ஷனாக்கிக்கிட்டு... மீட்டிங் முடிஞ்சதும் கூப்டுவோம்...'

அடுத்து சோமசுந்தரத்தின் எண்ணை பார்த்தார். வேணாம்... மீட்டிங்குல பாத்துக்குவம். இல்லன்னா எதையாச்சும் சொல்லி நம்ம மூட கெடுத்துப் போட்ருவான்.. கூடவே அந்த பொண்ணும் வந்தாலும் வரும்... எதுக்கு அதுக்கு முன்னால... சரி.. வேற யாரு... ஆங்.. செட்டியார்... அவர கூப்டுவோம்.. மீட்டிங்ல வச்சி ஒன்னும் பேச முடியாமப் போயிரும்... அடுத்த நொடியே எண்ணைத் தேடிபிடித்து டயல் செய்ய அடித்தவுடனே எடுத்தார் செட்டியார் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன்... 'அண்ணாச்சி எப்படி இருக்கீங்க?'

'என்னவோ இருக்கம்யா.. .கடவுள் புண்ணியத்துல.. நீங்க எப்படி இருக்கீங்க.. கெளம்பியாச்சா இல்ல வீட்லதானா?'

எதிர்முனையிலிருந்த பெருத்த சிரிப்பு. இந்த சிரிப்ப விட்டா வேற எதுவுமே தெரியாதாய்யா என்று முனுமுனுத்தார் நாடார். 'சிரிப்புக்கு என்னய்யா அர்த்தம்.. வீட்லதான் இருக்கேன்னா?'

'இல்லண்ணாச்சி.. கார்லதான் வந்துக்கிட்டிருக்கேன்... என்னமோ சவுண்ட் ப்ரூஃப் ஏசியாம்லே, வச்சிருக்கு. அதான் வெளி சத்தம் ஒன்னும் கேக்க மாட்டேங்குது..'

நாடார் சிரித்தார். 'ஒமக்கென்னய்யா... விட்டா சிட்டிக்குள்ளயே ப்ளேன்ல போவீரு.. காசுதான் மழையா கொட்டுதில்ல...'

'நீங்க வேற அண்ணாச்சி... எல்லா நம்ம கையிலயா இருக்கு... முப்பது வருசத்துக்கு முன்னால கையில ஒரு ஓட்ட சைக்கிளோட வந்து எறங்குன ஊரு... அது கெடக்கட்டும்.. இன்னைக்கி காலைல ஹிந்து பேப்பர பாத்தீங்களாண்ணாச்சி?'

'ஹிந்துவா... அட நீங்க வேற. நமக்கு தினத்தந்திதான்...அது சரி நீங்க என்னையிலருந்து ஹிந்து படிக்க ஆரம்பிச்சீங்க செட்டியாரே?'

எதிர்முனையில் மீண்டும் வெடிச் சிரிப்பு.. செல்ஃபோனை எட்டிப்பிடித்தார். 'காது சவ்வே கிளிஞ்சிரும் போலருக்கய்யா... என்னமாத்தான் சிரிக்கீறு? சொல்லும்.. அப்படியென்ன போட்டுருக்கான்?' என்றவர் ஓசைபடாமல் ஒரு ஊசியை செருகினார் 'மருமகன் படிச்சு சொன்னாராக்கும்.' என்னைய மாதிரி கைநாட்டுதானய்யா நீரும்.. இது மனதுக்குள் நினைத்துக்கொண்டது..

அடுத்த சில நொடிகளில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவருடைய முகத்தை மேலும் கருப்பாக்க.. 'அப்படியா சொல்லியிருக்கான் லிங்கம்..? பயல விடப்படாதுய்யா.. விடப்படாதுய்யா...' என்றார் கடுப்புடன்..

thodarum..