29.6.07

நாளை நமதே - 12

'ஒனக்கு என்னைக்கி கவுன்சிலிங் வருது?'

ஜோதிகா பதிலளிக்காமல் டி.வியையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ராம்குமார் எரிச்சலுடன் எழுந்து சமையல்கட்டில் வேலையாயிருந்த தன் மனைவியிடம் சென்றார். 'ஏய்.. என்னாச்சி அவளுக்கு? ஏன் உம்முன்னு ஒக்காந்திருக்கா?'

'அவளுக்கு கவுன்சிலிங் வரும்போது எல்லா நல்ல காலேஜுலயும் சீட் முடிஞ்சிருக்கும் போலருக்கு... அதான் கோபம்.... நீங்க வேற எதையாவது சொல்லி எரிச்சல் மூட்டிறாதீங்க?' என்றாள் லலிதா.

சுர்ரென்று எழுந்த கோபத்துடன் வரவேற்பறைக்குள் நுழைந்து டி.வி பெட்டியை அணைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார் ராம்.

தந்தைக்கு ஒன்றும் சளைத்தவளல்ல என்பதை நிரூபித்தாள் ஜோதிகா. உடனே எழுந்து அவரை பிந்தொடர்ந்து சென்று இறைந்தாள். 'எதுக்கு இப்ப டிவிய ஆஃப் பண்ணீங்க?'

ராம்குமார் அடக்க முடியாத கோபத்துடன், 'ஏய் என்ன என்னைய எதுத்து பேசற அளவுக்கு ஆய்ட்டியா?' என்றவாறு தன் மகளை கன்னத்தில் ஓங்கி அறைய அதை முற்றிலும் எதிர்பாராத ஜோதிகா கன்னத்தைப் பிடித்தவாறு சுவரோடு சரிந்தாள்....

பதறிப் போய் சமையலறையில் ஓடி வந்தாள் லலிதா... 'என்னங்க நீங்க? எதுக்கு இப்ப இப்படி கோபப் படுறீங்க?'

'பின்ன என்னடி...? இவளுக்கு கவுன்சிலிங் துவங்குன முதல் வாரத்துலயே கால் வரணும்னா எண்ட்றன்சுக்கு ப்ரிப்பேர் பண்றப்ப அதே கவனமா இருக்கணும்.. அத விட்டுப்போட்டு எந்த நேரமும் டிவியே கதின்னு கெடக்கறது...மார்க் கொறஞ்சி போச்சினா... எதுக்கு சாதி பேர சர்டிஃபிகேட்ல போடலன்னு அப்பனையே குத்தம் சொல்றது? நானும் பொறுத்து, பொறுத்து பாக்கேன்... இவ போக்கும் சரியில்ல... பேச்சும் சரியில்ல... ஒழுங்கு மரியாதையா இருக்கச் சொல்லு.. இல்ல படிச்சது போறும்னு கட்டி வச்சிருவேன்....'

கணவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது லலிதாவுக்கு தெரிந்தாலும் அவருடைய வார்த்தைகளில் தெறித்த க்ரோதம் அவளையும் தாக்கவே, 'ஏங்க... தெரியாமத்தான் கேக்கேன்.. ஜோதி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஒங்களுக்கு கவுரவம்தான முக்கியமா போச்சிது... ஊர் முழுக்க சாதி, சாதின்னு கட்டிக்கிட்டு அலையறாங்க... நீங்க ஒருத்தர் சாதிய காட்டி சீட் வாங்கறதில்லேன்னு டிசைட் பண்ணா போறுமா? யூனிவர்சிட்டியிலருந்து அட்மிஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்த அன்னைக்கி ஜோதி சொன்னது ஞாபகம் இருக்கா... அவ ஃப்ரெண்ட் விஜி... அவளும் இவள மாதிரித்தான் எண்ட்ரன்ஸ்ல மார்க் வாங்கிருக்கா... அவளுக்கு கேஸ்ட் கோட்டாவுல சீக்கிரமாவே கவுன்சிலிங் வந்து நல்ல காலேஜ்ல சேர்ந்துருவாளேன்னு ஜோதி நினைக்கறா... நம்ம அப்பாவாலதான் நமக்கு கிடைக்க வேண்டிய சீட் போயிருச்சின்னு அவ நினைக்கறதுல என்னங்க தப்பு? அதச் சொன்னா ஒங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது... கவலைய மறக்க டிவி பார்த்துக்கிட்டுருக்கறது கூட பொறுக்காம டிவிய ஆஃப் பண்ணதும் இல்லாம அத கேக்க வந்த பொண்ண கை நீட்டி அடிக்கற அளவுக்கு என்னங்க கோவம்?'

ராமுக்கு தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அவருடைய சுயகவுரவம் அதை ஏற்றுக்கொள்ள தடுத்தது. அதனாலேயே விளைந்த கோபம் அதிகரிக்க தன்னை தன்னுடைய மனைவியும் குற்றம் சாட்டுவதாக நினைத்தார். 'ஏய்... என்ன நீயும் புத்தி கெட்டத்தனமா பேசறே? இவ ப்ளஸ் டூவுல ஒழுங்கா ஒக்காந்து படிச்சதாலத்தான தொன்னூறுக்கு மேல வாங்க முடிஞ்சிது? அப்ப சாதிய பத்தி கவலைப் பட்டாளா? நா கீழ்ச்சாதின்னு சொல்லிக்கிட்டு கூனிக் குறுகி யார் முன்னாலயும் என் பிள்ளைங்க நிக்கக் கூடாதுன்னு நா நெனச்சது தப்பா? காலெஜ்ல வேணும்னா கீழ்சாதிக்காரனுக்கு சீட் கிடைக்கும்டி... ஆனா ஒரு வேலைன்னு ஆய்ட்டா நம்மள எந்த மேல்சாதிப் பயலும் மதிக்க மாட்டான்.. மாடா ஒளச்சாலும் நீ கீழ்சாதிக்கார பயதானேன்னு சொல்லி எளப்பமா பாப்பான்... நா இவளுக்கு என்னடி செஞ்சி குடுக்கல... மெரிட்லயே இவ சீட் வாங்கணும்னுதானடி சிட்டியிலயே பெஸ்ட் இன்ஸ்ட்டியூட்ல கோச்சிங்குக்கு சேத்து விட்டேன்... ப்ள்ஸ் டூவுல படிச்ச மாதிரியே ஒழுங்கா ஒக்காந்து படிச்சிருந்தா எண்ட்ரன்ஸ்லயும் நல்லா மார்க் வாங்கிருக்கலாமே... அத விட்டுப் போட்டு இவ டிவி பாத்துக்கிட்டு ஒக்காந்துருக்கப்பல்லாம் தல பாடா அடிச்சிக்கிட்டேன்... அப்பல்லாம் ப்ளஸ் டூவுலயும் இப்படித்தான பாத்துக்கிட்டிருந்தேன் மார்க் வாங்காமயா போய்ட்டேன்... ஒங்களுக்கு வேற வேலயில்லப்பான்னு சொன்னா... நீயும் எம்பொண்ணு புத்திசாலின்னுதான பீத்திக்கிட்டே... இப்போ மார்க் கொறஞ்சதும் எதுக்கு எம்மேல குத்தம் சொல்றீங்க...?'

கோபத்தின் உச்சியில் விகாரமாகிப் போன முகத்துடன் தன்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தவாறு நின்ற அவருடைய கோலம் லலிதாவையே ஒரு நொடி திகைப்புற செய்தது. அவர் ஹைப்பர்டென்சிவ் என்பது நினைவுக்கு வர இனியும் விவாதத்தை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவளாய் பதில் பேசாமால் தன் காலடியில் சுவரில் சாய்ந்தவாறு தலை குனிந்து அமர்ந்திருந்த ஜோதிகாவின் அருகில் அமர்ந்தாள்.... 'ஏய்... ஜோதி அழாத...' என்றவாறு அவளுடைய தலையை தடவி விட்டாள்... ஜோதிகா அப்படியே தன் தாயைக் கட்டிக்கொண்டு துக்கம் தாளாமல் குலுங்கி அழ லலிதா தன் மகளை இறுக அணைத்துக்கொண்டு கலங்கிய கண்களுடன் தன் கணவனை நிமிர்ந்துப் பார்த்தாள்... 'நீங்க ஒங்க ரூமுக்கு போங்க... நா இவள பாத்துக்கறேன்... அப்பறமா பேசிக்கலாம்.'

சுர்ரென்று தலை வரை ஏறி நின்ற கோபம் சடுதியில் இறங்கிவிட குனிந்து தன் மகளைப் பார்த்தார் ராம்குமார். 'ச்சே... என்னாச்சி எனக்கு...?' தன் மீதே கோபம் வந்தது.. தன்னுடைய கோபம் தவறானது என்பது தெரிந்தது.... இருப்பினும் இறங்கி வந்து தன் மகளிடம் மன்னிப்பு கேட்க விடாமல் அவருடைய தன்மானம் தடுத்தது. 'எப்படியோ ஒழிஞ்சி போங்க.. என் நிம்மதியே போயிருச்சி...' என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட.. 'பாத்தியாம்மா இந்தப்பா சொல்லிட்டுப் போறத... ஒழிஞ்சிபோயிடறேன்... என்னாலதான அப்பாவுக்கு நிம்மதி போயிரிச்சி... போறேன்... எங்கயாச்சும் போயிடறேன்...' என்றவாறு ஜோதிகா எழுந்து தன் அறையை நோக்கி ஓடிப் போய் அறைக்கதவுகளை தாளிட செய்வதறியாமல் ஒரு நொடி திகைத்து நின்றாள் லலிதா...

பிறகு சுதாரித்துக்கொண்டு ராம்குமாரின் அறைக்கதவைத் தட்டினாள், 'ஏங்க... ஜோதிகா அழுதுக்கிட்டே போயி கதவ சாத்திக்கிட்டாங்க... அவ இருக்கற மூடுல எதையாச்சும் செஞ்சிக்கப் போறாங்க... வந்து அவள கூப்டுங்க..' என்றாள் உச்ச குரலில்.

மனைவியின் குரலைக் கேட்ட ராம் அந்த குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கதவுகள் திறக்கப்படுவதை உணர்ந்தார். இதுதான் குடியிருப்பில் வசிப்பவர்களுடைய தர்மசங்கடம்... சற்றே குரலை உயர்த்தினால் போதும்... ஒட்டுக் கேட்பதற்கென்றே சில ஜன்மங்கள் காத்திருப்பதுண்டு...


கழற்றவிருந்த சட்டையை மீண்டும் அணிந்துக்கொண்டு கதவுகளை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். 'ஏய்... எதுக்குடி இப்ப கூப்பாடு போடுற... பார் எதுர்த்த ஃப்ளாட்ல, பக்கத்து ப்ளாட்டுலருக்கறவங்கல்லாம் பாக்கறத. நீ போ... நா அவள பாத்துக்கறேன்...'

ஜோதிகாவின் அறைக்கதவை தட்டி அழைத்தால் நிச்சயம் அவள் வீம்பு பண்ணுவதுடன் அதுவே அக்கம்பக்கத்து ஆட்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் என்று நினைத்தவராய் என்ன செய்யலாம் என்று யோசித்தார். சட்டென்று ஒரு யோசனை நினைவுக்கு வர தன் செல்ஃபோனை எடுத்து மகளின் எண்ணை டயல் செய்தார். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை எடுத்ததற்காக அவர் பரிசாக வாங்கி அளித்த செல்ஃபோன் அது!

எதிர் முனையில் அடித்துக்கொண்டே இருப்பது கேட்டது. வரவேற்பறையில் ஜோதிகா அமர்ந்திருந்த இடத்தில் செல்ஃபோன் கிடக்கிறதா என்று பார்த்தார்... ஊஹும்.... அப்ப அவ ரூம்லதான் இருக்கணும்... ஸ்க்ரீன்ல பாத்துட்டு பேசாம இருக்கா போலருக்கு... அடிச்சிக்கிட்டே இருப்போம்... எப்படியும் எடுப்பா....

அவருடைய செய்கையை மவுனத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் லலிதா... அவளுக்கும் கணவனைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. அவருடைய குணமே அப்படித்தான்... எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும், கோபத்தில் வார்த்தைகளால் எதிராளியின் மனதை புண்படுத்துவதும்... அடுத்த நொடியே கோபம் இறங்கி மன்னிப்பு கோருவதும்... தாஜா செய்து வழிக்கு கொண்டு வருவதும்... இருபதாண்டு கால தாம்பத்தியத்தில் அவள் காண்பதுதானே...

'எதுக்குங்க இப்படி கோபப்படுறீங்க... சமயத்துல கையையும் நீட்டுறீங்க.. பெண்டாட்டி நாந்தான் சரின்னுட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்... பிள்ளைகளுமா?' என்றால் அடிக்கற கைதான் அணைக்கும் சொல்றதுல இன்னொரு அர்த்தம் இருக்கு தெரியும்லே.... அணைக்கற கை அடிக்கவும் செய்யும்... அதான் அர்த்தம்... அணைக்கறதுக்கு எப்படி உரிமையிருக்கோ அதுபோலத்தாண்டி அடிக்கறதுக்கும் என்பார்... எதுக்கு அடிக்கறது, எதுக்கு அணைக்கறது? என்ன ஆம்பிளையோ என்று மாய்ந்துபோவாள்....

'ஏய்... ஜோதி.. வச்சிராத...' ராம்குமார் செல்ஃபோனில் பேசுவது கேட்கவே கணவனை நெருங்கி நின்றாள்...

'சாரிடா... அப்பா ஏதோ மூட்ல அடிச்சிட்டேன்... நாம போட்ட சத்ததுல அக்கம் பக்கத்துலருக்கறவங்கள்லாம் பாக்கறாங்க பார்... அழாதே... அதான் அப்பா சாரி கேட்டுட்டேன்லே... வெளியில வா...'

இதற்கெனவே காத்திருந்ததுபோல் ஜோதிகா கதவுகளைத் திறந்துக்கொண்டு வெளியே வர ராம்குமார் மகளை நெருங்கி அணைத்துக்கொண்டார்... 'சாரிடா.... அப்பா ஒரு இடியட்டுன்னுதான் தெரியும் இல்ல.... கோபம் வந்தா என்ன பண்றேன்னே சில சமயத்துல தெரியமாட்டேங்குதுடா... I am terribly sorry... அப்பாவ மன்னிச்சிரு... வா... ஒக்காந்து பேசலாம்..' என்றவாறு மகளை அழைத்துக்கொண்டு வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தார். 'லலி.. நீயும் ஒக்கார்... என் மனசுலருக்கறத வெளிப்படையாவே சொல்றேன்..' என்று ஆரம்பித்தார். 'இங்க பார் ஜோதி, அப்பா எது செஞ்சாலும் அதுக்கு பின்னால ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கும்.... சாதி பேர ஒன் சர்ட்டிஃபிகேட்ல போடாம இருக்கறதுக்கு காரணம் இருக்கு. நீ என்னதான் மார்க் வாங்கி மெரிட்ல ஃப்ரீ சீட் வாங்கினாலும் நீ சாதி அடிப்படையிலதான் சீட் வாங்குனேன்னு ஒன் ஃப்ரெண்ட்சே பின்னால கேலி பண்ணாலும் பண்ணுவாங்க... சீட் வாங்கறதுக்கு வேணும்னா இது பிரயோஜனப் படலாம். ஆனா படிச்சி முடிஞ்சி வேலைன்னு போறப்போ இதெல்லாம் ஒன்னும் செல்லுபடியாகாது... அதுக்கு நீ வாங்கற மார்க்கும்.. இண்டர்வ்யூல நீ ஆன்சர் பண்றதுலயும்தான் இருக்கு... ஒனக்கு ஏதாவது ஒரு காலெஜ்ல சீட் கிடைச்சிரும்... ஃப்ரீ சீட் கிடைக்கலன்னா பேமெண்ட் சீட் வாங்கிரலாம்... ஒருவேளை நீ பெரிய காலேஜ்னு நினைச்சிக்கிட்டிருக்கறதுல கிடைக்காம போயிரலாம்... உன் ஃப்ரெண்டுக்கு அங்க கிடைக்கவும் செய்யலாம்... ஆனா அதப்பத்தியெல்லாம் கவலைப்பட்டு எந்த யூசும் இல்லை... நமக்கு கிடைக்கற வாய்ப்ப சரியா யூஸ் பண்ணிக்கணும்... அதுதான் புத்திசாலித்தனம்.. நீ அன்னைக்கி கொண்டு வந்த லிஸ்ட்லருக்கற காலேஜுகள நாளைக்கி போய் அப்பா பாத்துட்டு வரேன்... நீயும் வரதான்னா வா.. அதுல ஏதாச்சும் ஒரு காலேஜ்ல சீட் கிடைக்காம போயிராது... போன வருசம் மாதிரியே சி.எஸ்.சிக்கு இந்த வருசமும் பெருசா டிமாண்ட் இருக்காதுன்னு சொல்லிக்கறாங்க... அதனால ஒன் ஃப்ரெண்ட்சுக்கு எங்க கிடைக்குதுங்கறத பத்தி டென்ஷனாவாம இருக்கணும்... சரியா...?'

'ஆமா ஜோதி.. அப்பா சொல்றதும் சரியாத்தான் இருக்கு... நீ இந்த நேரத்துலதான் டென்ஷனாகாம இருக்கணும்... விஜிக்கி எங்க கிடைச்சா நமக்கென்ன...' என்றாள் லலிதா...

ஜோதிகா மவுனமாக தன் பெற்றோர்களை பார்த்தாள்... அம்மா சொல்றது சரிதான்.. விஜி சேரப்போற காலேஜ்ல நாம சேராம இருக்கறதுதான் நல்லது... அவ மட்டுமில்ல... எந்த ஸ்கூல் ஃப்ரெண்ட்சும் நமக்கு வேணாம்... It might help me to start an altogether new chapter... எதுக்கு பழைய ஃப்ரெண்ட்ஷிப்... அப்பா சொன்ன மாதிரியே செஞ்சுருவோம்... 'சாரிப்பா... நானும் மரியாதையில்லாமத்தான் நடந்துக்கிட்டேன்... மன்னிச்சிருங்க...' என்றாள் கலங்கிய கண்களுடன்... 'நீங்களே போயி காலேஜ பார்த்துட்டு வாங்க.. நீங்க பாத்தா போறும்... வேணும்னா அம்மாவையும் கூட்டிக்கிட்டு போங்க... என்னம்மா?' அவளுடைய கலங்கிய கண்கள் லலிதாவின் கண்களையும் குளமாக்கின...

இருவரையும் மாறி, மாறி பார்த்த ராம்குமார் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றார்... 'நா போய் குளிச்சிட்டு வரேன் லலி...' என்றவாறு குளியலறையை நோக்கி நடக்க, 'நா ஒன் மடியில படுத்துக்கறேம்மா...' என்றவாறு ஜோதிகா தன் தாயில் மடிமீது சாய... லலிதா வாஞ்சையுடன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே குளியலறையை நோக்கி நடந்த தன் கணவனைப் பார்த்தாள்...

தொடரும்...

நாளையும் வரும்..

14.6.07

நாளை நமதே - 11

'Your parents have not come with you?'

எதுக்கு வரணும் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தாலும் பணிவுடன் பதிலளித்தாள் ப்ரியா. 'No Madam... I am staying with my Mother. She is not in station.'

அவளுடைய பதிலில் திருப்தியடையாமல் சந்தேகத்துடன் அவளைப் பார்த்தார் சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி முதல்வர். 'Your father?'

ப்ரியாவுக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. தளபதியில் ரஜினி ஓ! நீ அப்பன், ஆத்தா இல்லாதவனா என்றதும் கொடுப்பாரே அந்த மாதிரி கொடுத்தா என்ன என்று நினைத்தாள். 'He is not with us Mam..'

'What do you mean by that?'

'My parents are divorced Mam...'

சட்டென்று நிமிர்ந்து பார்த்த முதல்வரின் கண்களில் இரக்கம் லேசாக எட்டிப் பார்ப்பதை உணர்ந்தாள் ப்ரியா... யாருக்கு வேணும் ஒங்க இரக்கம்? என்னோட மார்க்குக்குத்தான இங்க சீட் குடுப்பீங்க... பி.சி., எம்.பி.சி மாதிரி டைவேர்ஸ்டு பேரண்ட்சோட சில்ரன்னா ப்ரையாரிட்டி ஏதாச்சும் இருக்கா என்ன? எல்லாம் ஹிப்பாக்ரசி...

'Could you tell me why you choose to join BCA when your high marks in the plus two could easily get you an engineering seat ..... எஞ்சினீயரிங் சீட் கிடைச்சிருச்சின்னா இத விட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?'

ச்சை... எதுக்கு இந்த கேள்வியெல்லாம்... அந்தாள் பணத்துல எஞ்சினியரீங்கும் வேணாம்.. ஒரு மண்ணும் வேணாம்னுதான அம்மாவுக்கு கூட தெரியாம இங்க வந்து நிக்கேன்? முதல்லயே இந்த அப்ளிகேஷன அனுப்பிவச்சதும் இதுக்குத்தான? 'No madam... நிச்சயமா போக மாட்டேன்... நீங்க நம்பலாம்.'

அப்போதும் திருப்தியடையாமல் சில நிமிடங்கள் தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்த கல்லூரி முதல்வரைப் பார்த்தாள் ப்ரியா... மனதுக்குள் முடியாதுன்னு சொல்லிரக் கூடாதே.. அட்மிஷன் வாங்கிட்டு ஃபீசையும் கட்டிட்டுத்தான் அம்மாட்ட சொல்லணும்... இல்லன்னா தடுத்துறுவா... அட்மிஷன் ஆனதும்... இங்கயே ஹாஸ்ட்டல்ல இடம் கிடைக்குமான்னு பாக்கணும்... போறும் இந்த லைஃப்... எனக்காத்தான் அம்மா இப்படியொரு ஷேம்லெஸ் லைஃப லீட் பண்றான்னா... அது நமக்கு வேணாம்...

'ஓக்கே...' என்றவாறு 'Admitted' என்ற ரப்பர் ஸ்டாம்ப்பை அவளுடைய அட்மிஷன் விண்ணப்பத்தில் அழுத்தி அதை அவளிடம் திருப்பித் தந்த கல்லூரி முதல்வர் 'ஆல் தி பெஸ்ட் ப்ரியா..' என்றார் புன்னகையுடன். 'இத அடுத்த ப்ளாக்குலருக்கற கவுண்டர்ல குடுத்தேன்னா எவ்வளவு கட்டணும்னு சொல்வாங்க... இன்னைக்கே வேணும்னா கட்டிரலாம்.. இல்லன்னா பிஃபோர் திஸ் சாட்டர்டே... மண்டேய்லருந்து க்ளாசஸ் ஸ்டார்ட்டாயிரும்... காலேஜ் பஸ்சுல வரணும்னா அதயும் அங்கயே சொல்லிரும்மா... ஆல் தி பெஸ்ட் once again..'

ப்ரியா வலுவில் வரவழைத்த புன்னகையுடன் நன்றியை தெரிவித்துவிட்டு வெளியேறி பணம் செலுத்தும் கவுண்டரை தேடிக்கொண்டு சென்றாள். கவுண்டருக்கு முன் நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததுமே எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று நினைத்தாள்.... தலைவிதியை நொந்துக்கொண்டு வரிசையில் இறுதி ஆளாக சென்று நின்றாள்..

முந்தைய நாள் மாலையில் தன் தாயுடன் நடந்த வாக்குவாதம் அவள் கண் முன் விரிந்தது...

காலையிலிருந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கால் கடுக்க நின்று வாங்கி வந்த விண்ணப்ப படிவத்திலிருந்த அட்மிஷன் நியதிகள் அவளை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன...

அத்துடன் மாலையில் வெகு நேரம் கழித்து வந்த மாலதி, 'ப்ரியா, அட்மிஷன் ஃபார்ம வாங்கிண்டு வந்துட்டியா...' என்றபோது பதிலளிக்க விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தாள்...

'ஏன் டல்லாருக்கே? வாங்கினியா இல்லையா?'

ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஆமா வாங்கினேன்.. அதுக்கு என்ன இப்போ?'

மாலதி வியப்புடன், 'இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி எரிஞ்சி விழறே?' என்றவாறு கையை நீட்டினாள். 'எங்க வச்சிருக்கே... குடு என்னல்லாம் பேப்பர்ஸ் ரெடி பண்ணணும்னு பாக்கலாம்.'

ப்ரியா சட்டென்று எழுந்து நின்றாள். 'நேக்கு தலைய வலிக்கறது... நா தூங்க போறேன்...' என்றவாறு தன்னுடைய படுக்கை அறையை நோக்கி நகர்ந்தாள்...

இதை சற்றும் எதிர்பாராத மாலதி எழுந்து அவள் பின்னே சென்றாள்... 'ஏய்... ப்ரியா, என்னாச்சி? ஏன் இப்படி பிஹேவ் பண்றே? நா அப்ளிகேஷன் ஃபார்ம காட்டுன்னுதான கேட்டேன்....?'

ப்ரியா தன் தோளிலிருந்த மாலதியின் கைகளை தட்டிவிட்டாள்... 'எதுக்கு? படிச்சி என்ன செய்யப் போறே? ஒன்னும் வேணாம்... எனக்கு சீட் கிடைக்கப் போறதில்ல... எதுக்கு வீணா... நா ஏதாச்சும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேந்துக்கறேன்...'

'என்னடி சொல்றே? ஏன் சீட் கிடைக்காது... எப்படியும் கவுன்சிலிங்க்கு இன்வைட் பண்ணித்தான ஆவணும்?'

'ஆமா... இன்விட்டேஷன் வந்துட்டா மட்டும் சீட் கிடைச்சிருமாக்கும்... அப்படியே கிடைச்சாலும் ஏதாச்சும் டுபாக்கூர் காலேஜ்ல கிடைக்கும்... யாருக்கு வேணும்? கிடைச்சா அண்ணாவுல கிடைக்கணும்... இல்லையா மெட்றாஸ்லருக்கற ஏதாச்சும் அசோசியேட் காலேஜஸ்ல... இதல்லாத்தையும் விட்டுட்டு வேற எதுலயும் படிக்க மாட்டேன்... இப்பவே சொல்லிட்டேன்...'

மாலதி தன் மகளுடைய தோள்களைப் பற்றி மீண்டும் சோபாவில் அமர்த்தினாள்... 'சரிடி...கவர்ன்மெண்ட் காலேஜஸ்லயே சேர்ந்துரலாம்.. கவலைப்படாதே... எல்லாத்தையும் அங்கிள் கிட்ட சொல்லிருக்கேன்.. அவர் பார்த்துப்பார்...'

'எப்படீம்மா இவ்வளவு கன்ஃபர்ம்டா சொல்றே... செத்த இரு... சீட் அலாக்கேஷன் க்ரைட்டீரியாவ கொண்டு வந்து காட்டறேன்... அப்புறமா சொல்லு...' என்றவாறு எழுந்து தன்னுடைய அறையிலிருந்த பல்கலைக்கழகத்தின் படிவத்தைக் கொண்டு வந்து தன் தாயிடம் நீட்டினாள். 'இங்க பார் என்ன போட்டுருக்கான்னு...நமக்கெல்லாம் ஓப்பன் கேட்டகரியிலதான் கிடைக்கும்.. ஆனா பிசி, எம்பிசி ஆளுங்களும் இந்த கேட்டகரியில வந்து காம்ப்பீட் பண்ணுவாளாம்.. அவாளுக்குன்னு சீட்டுங்க வேற இருக்கு... அதுல கெடைக்கலன்னு வச்சிக்கோயேன்... ஓப்பன்லயும் வந்து நிப்பாளாம்.. என்ன அக்கிரமம் பாரு.. இத படிச்சுட்டு அழுகையே வந்துருச்சி... நீ என்னடான்னா....'

மாலதி பதிலளிக்காமல் விண்ணப்பத்தில் ப்ரியா சிவப்பு பென்சிலால் கோடிட்டு வைத்திருந்த பகுதியைப் படித்தாள்... அவளுக்கும் எரிச்சல் ஏற்பட்டது. எதுக்கு இவா இப்படியெல்லாம் அக்கிரம் பண்றா? ப்ராமணாளா பொறந்ததுதான் இவ செஞ்ச குத்தமா? எப்படியெல்லாம் படிச்சா? இப்ப என்ன பண்ணலாம்... பாஸ்கர் கிட்ட சொன்னா ஏதாச்சும் நடக்குமா? 'அதல்லாம் கவுன்சிலிங் போறப் பசங்க கவலைப்பட வேண்டியது... நமக்கெதுக்கு அதெல்லாம்.. குடுக்க வேண்டியது குடுத்தா மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கிடைச்சிட்டுப் போறது...மாலதி ப்ரியாவ பேசாம ஜாலியா இருக்கச் சொல்லு... வேணும்னா மூனு பேருமா சேந்து ஒரு ஊட்டி டூர் அடிச்சிட்டு வருவோம்... கேட்டுச் சொல்லு...'

பாஸ்கருக்கு கொஞ்ச நாளாகவே தளதளவென்று வளர்ந்து நிற்கும் ப்ரியா மீது ஒரு கண் இருந்ததை அவ்வப்போது கவனித்திருக்கிறாள் மாலதி. படவா ராஸ்கல், ஒனக்கு நானே ஜாஸ்தி இதுல ப்ரியாவ கேக்குதா என்று நினைத்துக்கொள்வாள்...இருந்தும் அவனை விட்டுவிட முடியாத சூழல்... இன்னும் ஒரு ரெண்டே வருசம்... ப்ரியாவ காலேஜ்ல சேத்து ரெண்டு வருசத்துக்கு ஃபீச கட்டிட்டா போறும்... அதுக்கப்புறம் சமாளிச்சிக்கலாம்... ஆனா இவ ஏதும் ஏடாகூடமா செய்யாம இருக்கணுமே...

'என்னம்மா... ஷாக்காருக்கா?' என்ற மகளைப் பார்த்தாள்...

'கவுன்சிலிங்குக்கு இன்விட்டேஷன் வரட்டும் ப்ரியா, பாக்கலாம்...இல்லன்னா இருக்கவே இருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா...'

ப்ரியா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'ஏம்மா யோசிச்சித்தான் பேசறியா? மேனேஜ்மெண்ட் கோட்டாவுல கொறஞ்சது அஞ்சி லட்சம் கேப்பானாம்.. என் ஃப்ரெண்டோட அண்ணா போன வருசம்தான் சேந்தான்... காலேஜும் யூஸ்லெஸ்சாம்..'

'அத நா பாத்துக்கறேன் ப்ரியா... நீ ஏன் ஒர்றி பண்றே?'

ப்ரியா கேலியுடன் புன்னகைத்தவாறு எழுந்து நின்றாள்... 'நீ என்ன சொல்ல வரேன்னு புரியுதும்மா.... But I don't need his charity... நேக்கு அப்படியொரு படிப்பு தேவையில்லை.... சொல்லிட்டேன்... காலைலருந்து க்யூவுல நின்னதுல மண்டைய பொளக்கறது... படுக்கப் போறேன்... என்னைய டிஸ்டர்ப் பண்ணாத.'

*****

'மிஸ் ஒங்க அப்ளிகேஷன குடுங்கன்னு சொன்னேனே காதுல விழலையா? ஒங்க பின்னால எவ்வளவு பேர் நிக்காங்க பாருங்க.. டிலே பண்ணாம மேடம் குடுத்த அப்ளிகேஷன குடுங்க..'

முந்தைய நாள் நினைவுகளில் மூழ்கியிருந்த ப்ரியா திடுக்கிட்டு எரிச்சலுடன் தன்னை முறைத்தவாறு அமர்ந்திருந்த குமாஸ்தாவைப் பார்த்தாள். 'I am sorry... இதோ.' என்றவாறு தன் கையிலிருந்த விண்ணப்பப் படிவத்தை நீட்டினாள்..

தொடரும்..

13.6.07

நாளை நமதே - 10

'ஏய் ஜோதி, என்ன டல்லாருக்கே?'

ஜோதிகா தன் தோழி விஜியைப் பார்த்தாள். 'பின்னெ என்னடி? நா எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா? ப்ளஸ் டூவுல என்னெ விட கம்மியா வாங்குனவளுங்களவிட எனக்கு என்ட்ரஸ்சுல கம்மியா போயிருச்சுடி.. அத நினைச்சாத்தான் மனசு ஆறல...'

'சரிடி... அதான் தெரியுதே.. எனக்குந்தா கம்மியாயிருச்சி.. அத விடு.. எந்த காலேஜ்னு டிசைட் பண்ணிட்டியா?'

ஜோதிகா பதிலளிக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டிருந்த படிவத்தை வாசிப்பதில் ஈடுபட்டாள்.

'என்னடி... நா கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா... நீ பாட்டுக்கு அத படிச்சிக்கிட்டு இருக்கே?'

ஜோதிகா நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள் எரிச்சலுடன். அவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அவள் எப்போதுமே தன்னைவிடவும் சுமார்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் எதிர்ப்பார்த்திருந்ததை விடவும் குறைவாக வாங்க அவளும் இப்போது தனக்கு நிகராக ஆகிவிட்டாளே என்ற எரிச்சல். போறாததற்கு விஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள்... எங்கே அந்த அடிப்படையில் அவளுக்கு தனக்கும் முன்பாக கவுன்சிலிங் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது..

'ஏய் ஜோதி... இங்கதா இருக்கியா? இல்லே...'

விஜியின் குரலிலிருந்த கேலி ஜோதிகாவை மேலும் எரிச்சல்கொள்ள செய்தது. ஆயினும் கோபப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தாள். 'இல்லடி... Allocation of seatsனு போட்டிருக்குல்ல? அத படிச்சிக்கிட்டு இருந்தேன்....'

விஜி என்கிற விஜயாவுக்கு புரிந்தது. ஒனக்கு இது வேணும்டி.. ப்ளஸ் டூவுல ஒரு அம்பது மார்க் ஜாஸ்தி வாங்கிட்டேன்னு என்னமா அல்ட்டிக்கினே. எல்லாம் மக்கப் பண்ணி வாங்குனதுதானே.. எண்ட்ரன்ஸ்ல அது பலிக்கல... மவளே இரு... எனக்கு மட்டும் ஒனக்கு முன்னால கவுன்சிலிங் வரட்டும்... ஒன்னெ விட நல்ல காலேஜ்ல சீட் வாங்கி காட்டறேன்...

'எங்க ஒனக்கு முன்னால எனக்கு கவுன்சிலிங் வந்துருமோன்னு பயப்படறே? அதானே?'

ஜோதிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமாடி... அதான்.. இப்ப என்னங்கறே?' என்றாள் எரிச்சலுடன்.

இதான்.. இதான் வேணும்...மவள நீ வயிறெறியணும்... 'ஏய்.. எதுக்குடி கோபப்படறே? நீயும் என்னெ மாதிரி பேக்வர்ட் காஸ்ட்தான்னு நீயே சொல்லியிருக்கே... ஆனா ஸ்கூல் சேர்றப்ப என்ன கேஸ்ட்டுன்னு போட்டுக்காதது ஒங்கப்பா செஞ்ச தப்பு... அதுக்கு என்னைய எதுக்கு கோச்சிக்கறே?'

ச்சை... அப்பா செஞ்ச தப்புக்கு இவ கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குதே என்று மனதுக்குள் நொந்துப்போனாள்... அப்பா எப்பவுமே இப்படித்தான். கேட்டா பெருசா லெக்சர் அடிப்பார். 'சாதிய காட்டி முன்னுக்கு வரணும்னு நினைக்கறதே கேவலம். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி, மார்க் வாங்கி காலேஜ்ல சீட் புடிக்கணும். அத விட்டுட்டு நா கீழ்சாதிக்காரன்னு சொல்லிக்கிட்டு நிக்கக் கூடாது. அது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல... ஏழைங்களுக்கு.. புரிஞ்சிதா?' என்று ஒருமுறை தன்னையும் தன் அண்ணாவையும் அப்பா எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

இதோ இருக்காளே விஜி, இவ மட்டும் என்ன ஏழையா? இவ போய் வர்றதுக்குன்னே தனியா ஒரு ஸ்கூட்டி.. குடும்பத்தோட போறதுக்கு ஒரு கார்.. அப்பா சம்பாதிக்கார், அண்ணா இவள மாதிரியே சாதிய காட்டி எஞ்சினியாராகி இப்ப வேலை பாக்கான்... வீட்டுல இவளுக்குன்னு ஒரு பி.சி.. இண்டெர் நெட்...

ஹூம்... நமக்குன்னு வந்து வாச்ச அப்பா இப்படி... நேர்மை திலகம்னு நினைப்பு... இப்ப அனுபவிக்கறது யாரு, நாந்தானே?

'ஏய் என்னடி ஜோதி... நா சொன்னது சரிதானே? பதிலையே காணம்?'

இனியும் மேற்கொண்டு இவளிடம் விவாதத்தை வளர்ப்பதில் பயனில்லை என்று நினைத்தாள் ஜோதிகா.. 'சாரிடி...' என்றாள். 'சரி... அத விடு... எந்த காலேஜ்ல சேர்றதுன்னு ஏதாச்சும் டிசைட் பண்ணியா? யூனிவர்சிட்டி சைட்டுல லிஸ்ட் இருக்காமே.. ஒங்க வீட்ல நெட் இருக்குல்ல... பாத்தியா?'

அப்படி வா வழிக்கி இன்றைக்கு இது போதும் என்ற நினைப்பில் விஜி லேசாக புன்னகைத்தாள்...'லிஸ்ட்ட பாத்தேன்... ஆனா நம்மள கவுன்சிலிங்கு கூப்டறதுக்குள்ள நல்ல காலேஜ் எல்லாம் போயிரும் போலருக்கு... ஃபர்ஸ்ட் அம்பது ராங்ல இருக்கற காலேஜ்ங்களோட வெப் சைட் அட்றஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. அதுல எதுலயாச்சும் கிடைச்சிரணும்.. இல்லன்னா அவ்வளவுதான்..'

முதல் அம்பது ராங்குக்குள்ள கூட கிடைக்காதா என்று மனதுக்குள் நினைத்து சோர்ந்துப் போனாள் ஜோதிகா... விஜிக்கும் தனக்கும் ஒரே மதிப்பெண்கள் இருக்கின்ற நிலையில் அவள் எம்பிசி என்பதால் அவளுக்கு எப்படியும் தன்னைவிட இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்துவிடும் என்று நினைத்தாள். அப்படியானால் தன்னைவிடவும் நல்ல கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்துவிடுமோ என்று நினைத்தாள்.. 'அந்த லிஸ்ட்லருந்து நீ ஏதாச்சும் செலக்ட் பண்ணி வச்சிருப்பியே... சொல்லேன்...'

விஜி சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தாள். ஆனால் ஜோதிகாவும் அவள் சேரவிருக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தால் தனக்கும் நல்லதுதானே என்று நினைத்தாள்... எண்ட்ரன்ஸ்ல என்னளவுக்கே எடுத்திருந்தாலும் க்ளாஸ்ல நமக்கு முன்னால ரேங்க் எடுக்கறவளாச்சே... நாம செலக்ட் செஞ்சி வச்சிருக்கற ரெண்டு மூனு காலேஜஸ் பேர சொல்றதால நமக்கென்ன நஷ்டம்? அவளுக்கு கவுன்சிலிங் வர்ற வரைக்கும் சீட்
இருந்தா கெடச்சிட்டுப் போவுது?

'ஆமாடி அதுலருந்து மூனு காலேஜஸ் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்...' என்றவள் தான் குறித்து வைத்திருந்த கல்லூரிகளின் பெயர்களை நினைவிலிருந்து சொல்ல ஜோதிகா குறித்துக்கொண்டாள்...

'என்னடி எல்லாமே ஒரே பேரா இருக்கு?'

'ஆமாடி... எல்லாம் ஒரே க்ரூப்போடதுதானாம்... எங்கப்பா சொன்னார்...' என்றாள் விஜி புன்னகையுடன்...'வெப் சைட்டுங்கள பாத்ததோட எங்கப்பா நேர்லயே போய் பாத்துட்டு வந்தார். மூனு காலேஜும் பக்கத்து பக்கத்து காம்பவுண்ட்ல இருக்காம். எஞ்சினீயரிங்ல எல்லா ப்ராஞ்சஸ்லயும் நிறைய சீட்டுங்க இருக்குதாம்... அதோட மொத்த சீட்டுல எழுபது பர்செண்ட் கவுன்சிலிங் வழியாத்தான் செலக்ட் பண்றாங்களாம்... போன ரெண்டு வருசமும் எல்லா சீட்டும் ஃபில்லாயிருக்கு... அதுல ஃபர்ஸ்ட்ல இருக்குதே வேல் முருகன்... அந்த காலேஜ்ல பக்காவா கம்ப்யூட்டர் லேப் எல்லாம் இருக்காம். எங்கப்பாவோட ஃப்ரெண்ட் பையன் ஒருத்தன் படிக்கானாம்... மெட்றாஸ்ல எல்லா ரூட்டுக்கும் பஸ்சும் இருக்காம்... அந்த க்ரூப்லருக்கற எந்த காலேஜ்ல சீட் இருந்தாலும் எடுத்துரலாம்னு சொன்னார் எங்கப்பா... ஒங்கப்பாவையும் வேணும்னா போய் பாக்க சொல்லு...'

'பயங்கரமான ஆளுடி நீ... இவ்வளவு வேலையும் பாத்து வச்சிருக்கியா?' என்றாள் ஜோதிகா உண்மையான ஆச்சரியத்துடன்..

விஜி பெருமையுடன் புன்னகைத்தாள்... ஒனக்கு உருப்போடத்தாண்டி தெரியும்... நா அப்படியில்ல... 'சரிடி... நா வரேன்... லேட்டாயிருச்சி...' என்றாள் மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல். 'அப்ளிகேஷன நேர்ல கொண்டு வந்து குடுக்கப் போறியா இல்ல தபால்ல அனுப்பிருவியா?'

'நான் நேர்லதான் கொண்டு வந்து குடுப்பேன்... நீ?'

'நானுந்தான்... தபால்ல அனுப்பி கிடைக்கலன்னா?'

'சரி... என்னைக்கி வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்றேன்... ஒன்னாவே குடுக்கலாம்.. சரியா?'

'சரி... பை..' என்றவாறு விஜி தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்ப மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றுவிட்டு சாலையைக் கடந்து எதிர்புறத்திலிருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள் ஜோதிகா...

தொடரும்..

8.6.07

நாளை நமதே - 9

'டேய் வாசன்.. என்னாச்சி? ஏன் நிறுத்திட்டே மேல படிடா..'

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கால்கள் கடுக்க அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது 'டேய், எங்கயாவது பக்கத்துல ஹோட்டல்ல ஒக்காந்து இத படிக்கலாம்டா... எங்கள்ல பாதி பேருக்கு இதுல எழுதியிருக்கறதே புரியாது... நீதான் நம்ம க்ரூப்ல அறிவுஜீவி... நீ படிச்சிட்டு சொல்லு...' என்றது நண்பர்கள் குழு வாசனைப் பார்த்து...

பிற்பகல் வேளை என்பதால் அடுத்திருந்த உணவகத்தில் கூட்டம் சற்றே குறைந்திருந்தது.. தேவைப்பட்ட இருக்கைகளை அருகிலிருந்த மேசைகளிலிருந்து இழுத்து கூட்டமாய் அமர்ந்துக்கொண்டது அந்த கும்பல்...

வாசன் தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழக விதிகள் பட்டியலில் இருந்த அடுத்த விதியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்... பிறகு நிமிர்ந்து நண்பர்கள் குழுவிலிருந்து சற்று தள்ளி அடுத்திருந்த மேசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த வின்செண்ட் முருகனைப் பார்த்தான்


அவனும் அவனுடைய குடும்பத்தாரும் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்த்துவ மதத்தை தழுவியிருந்தனர் என்பது அவனுக்கு தெரியும். 'ஏண்டா திடீர்னு?'

'எங்க சேரியில நிறைய பேர் சேர்ந்தாங்கடா.. அதான் அம்மாவும் நாமளும் அப்படியே செஞ்சிரலாம்னு...'

'அதான் ஏன்னு கேக்கேன்...?'

முருகன் தயக்கத்துடன் பதிலளிக்க விருப்பமில்லாதவனைப் போல் நின்றான்...

'சரிடா இஷ்டமில்லன்னா சொல்ல வேணாம்... இப்ப இருக்கற வீட்ல இனியும் இருப்பியா இல்ல....'

'எங்கள மாதிரி ஒரு பத்து ஃபேமிலிக்கு புதுசா குடிச போட்டு குடுத்துருக்காங்கடா. அங்கக்கி ஷிப்ட் பண்ணப் போறோம்... அதான் ஒங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...'

முருகனை அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தெரியும். அவன் குடியிருந்த தெரு முனையில் இருந்த குடிசைப் பகுதியில் தாய் மற்றும் தன்னுடைய மூன்று சகோதரர்களுடன் வசித்தவன். திடீரென்று யாரோ ஒருவர் வந்து சொந்தமாக குடிசை அமைத்துத் தருகிறேன் வாழ வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் என்பதற்காக காலங்காலமாய் இருந்த தெய்வ நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?

'சரிடா... அப்ப இனி ஒன்னெ பாக்க முடியாது... அதானே சொல்ல வரே?'

'இல்லடா.....'

'பின்னே... பரீட்சை முடிஞ்சிருச்சி... இனி எங்க பாக்கறது..' என்ற வாசன் தொடர்ந்து, 'அதுசரி... அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?'

முருகன் தயக்கத்துடன் எங்கோ பார்த்தவாறு பதிலளித்தான்... 'தெரியலடா... ரிசல்ட் வந்ததுக்கப்புறந்தான்... அதப்பத்தி யோசிக்கணும்..'

அப்போது பார்த்ததுதான்... ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் மீண்டும் ஒருமுறை பள்ளி வளாகத்தில்.... பிறகு சற்று முன்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு வரிசையில் நின்றபோது....

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு அவனை தவிர்க்கும் நோக்கத்துடன் நழுவ முயன்றவனை எட்டிப் பிடித்தான் வாசன்... 'டேய்... எங்க போற... ஒன்னெ இப்ப எப்படி கூப்பிடறதுன்னு தெரியல... பேர மாத்திட்டியா இல்ல அதே பேர்தானா?' என்றான் புன்னகையுடன்...

'சேச்சே... பேர மாத்திக்கலடா... முருகன்கற பேரோட வின்செண்ட்டுன்னு சேத்துக்க சொல்லிட்டார்... ஆனா சர்ட்டிஃபிக்கேட்ல மாத்த வேணாமாம்...'

'ஏன்... கெஜட்ல போட்டுட்டா போறுமேடா...'

முருகன் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறு.... 'இல்லடா அதுல ஒரு சிக்கல் இருக்கு.... சர்ட்டிஃபிகேட்ட பொருத்தவரைக்கும் நான் இந்து தலித்தாத்தான் இருக்கணுமாம்... இல்லன்னா எஸ்.சி.. பெனிஃபிட்ஸ் கிடைக்காதாம்... ப்ரீச்சர்தான் சொன்னார்....'

தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான் வாசன்.... எத்தனை சரியாக படித்து வைத்திருக்கிறார் அந்த பாதிரியார்?

உண்மைதானே... ஒரு இந்து கீழ்ச்சாதிக்காரனாக சேரியில் வறுமையில் உழன்றுக்கொண்டிருந்த பத்து குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு சின்ன மதமாற்றம் உதவுமானால் அதில் தவறேதும் இல்லையே...

ஆனால் அரசு விதித்துள்ள நியதிகளின் படி கிடைக்கக் கூடிய சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கவும் வேண்டும் என்ற முருகனின் எண்ணத்துடன் அவனுக்கு உடன்பாடில்லை என்றாலும்.... ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த போது அரசின் முடிவில்தான் குளறுபடி என்று சமாதானமடைந்தான் வாசன்...

'டேய்... வாசா.... நீ இங்க இல்ல போலருக்கு.... ஒன் கண்ணெ பாத்தா என்னமோ ஸ்லோ மோஷன் ஃப்ளாஷ் பேக்ல இருக்கா மாதிரி இருக்கு... இந்த ஒலகத்துலதான் இருக்கியா... இல்ல...'

நண்பர்களின் கேலிக் குரல் வாசனை நினைவுகளிலிருந்து மீட்டது.... திடுக்கிட்டு தன் கையிலிருந்த படிவத்தைப் பார்த்தான்..

'சாரிடா... இந்த கண்டிஷன படிச்சதும்... ஏதோ பழைய நினைவு...' என்ற வாசன் 'படிச்சிட்டு நீங்களே சொல்லுங்கடா...' என்றான்...

'சரி படி.. அப்படி என்னதான் இருக்கு அந்த கண்டிஷன்ல..?' என்றான் ஒருவன்...

"No person who professes a religion different from Hinduism or Sikhism or Buddhism shall be deemed to be a member of a Scheduled caste."

வாசன் சற்று நேரம் நிறுத்திவிட்டு தன் நண்பர்களைப் பார்த்தான்... எவ்வித ரியாக்ஷனும் இல்லை... அங்கிருந்தவர்களுள் யாருமே இந்த வகுப்பில் வரவில்லை என்கிற மெத்தனம்... முருகன் புரிந்துக்கொண்டு வாசனைப் பார்த்தான்... ஆனால் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தான்..

வாசன் தொடர்ந்தான்..

"A member of the Scheduled Caste on conversion to Christianity will be considered only under Backward class and not under Scheduled caste, for admission purposes."

நாந்தான் சொன்னேனே என்பதுபோல் தன்னை முருகன் பார்ப்பதை உணர்ந்த வாசன் அவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்..

அவனுடைய பார்வை சென்ற திசையில் ஒட்டுமொத்த கும்பலும் திரும்பி அடுத்த மேசையில் தனியே அமர்ந்திருந்த முருகனைப் பார்த்தது... அவனும் அவர்கள் படித்த அதே பள்ளியில் படித்தவன் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும் அவனுடைய ஏழ்மைக் கோலம் அவனை விலைக்கியே வைத்திருந்தது...

வாசன் தன்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களைப் பார்த்தான்.. 'என்னடா ஒரு ரியாக்ஷனையும் காணம்? இந்த கண்டிஷன் inhumanஆ தெரியல?'

நண்பர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த வாசனின் அண்ணன் மூர்த்தி அலட்சியத்துடன், 'இதுல என்னடா மனுஷத்தனம் இல்ல ஒனக்கு? பணம் கிடைக்கிதேன்னுட்டு கும்பிடற சாமியவே மாத்திக்கறவங்களுக்கு எதுக்குடா ரிசர்வேஷன்? என்னெ கேட்டா அவனுங்களுமக்கு நம்மள மாதிரியே பிசி ஸ்டேட்டஸ் குடுக்கறது கூட தேவையில்லைன்னு சொல்வேன்..' என்றாவறு ,குழுமியிருந்த கும்பலைப் பார்த்தான்... 'என்னடா சொல்றீங்க?'

அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையசைத்தது ஒட்டுமொத்த கும்பலும்...

முருகன் சட்டென்று எழுந்து வாசலை நோக்கி நடந்தான்..

'யார்றா அவன்? ஒன் ஃப்ரெண்டா?' என்றான் வாசனின் நண்பன் ஒருவன்.. 'ஒங்க ஸ்கூல்ல படிச்சவனா? நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே..?'

மூர்த்தி கேலியாய் சிரித்தான்.. 'அவன் ஒரு --பயடா... எங்க ரோட்டு முனையிலருக்கற சேரியிலதான் இருந்தான்.. இப்ப கொஞ்ச நாளா காணம்... வாசனுக்குத்தான் அவன் ஃப்ரெண்ட்... இவருக்கு அவர் சிஷ்யர்... அப்பப்ப டவுட் கேக்க வருவான்... நா வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்... அவனும் அவன் மூஞ்சியும்...'

அவனுடைய பேச்சில் தெரிந்த அநாகரீகத்தை அங்கிருந்த பலரும் விரும்பவில்லையென்றாலும் எதற்கு வம்பு என்று மவுனமாக அமர்ந்திருந்தார்கள்..

வாசன் வாசலைப் பார்த்தான்... முருகன் சாலையை கடந்து சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறுவது தெரிந்தது... வசதியாத்தான் இருக்கான் போல என்று நினைத்தவாறு தன் கையிலிருந்ததை தொடர்ந்து வாசித்தான்..

'A candidate who claims to belong to Scheduled Caste by virtue of reconversion should give full details regarding date of reconversion and whether the candidate on such reconversion is accepted by members of the particular community of the locality where he/she resides as belonging to the particular community.. என்ன அக்கிரமம் பாருங்கடா...'

'ஏன் இதுல என்ன அக்கிரமம்?' என்றான் மூர்த்தி கோபத்துடன்... 'காசு குடுத்தா மதத்த மாத்திக்கறது... அப்புறம் கிடைச்சிக்கிட்டிருக்கற கன்செஷன் கிடைக்காதேன்னதும் மறுபடியும் இருந்த இடத்துக்கே வந்துட்டேங்கறது.. .இதென்னா சட்டையா? போடறதும் கழட்டறதும்... இவன் மறுபடியும் இந்துவாய்ட்டேன்னு சொன்னா போறுமா? கூட இருக்கறவங்க ஏத்துக்க வேணாமா?'

வாசனையும் மூர்த்தியையும் மாறி மாறி பார்த்தது நண்பர்கள் குழு... 'டேய் என்னங்கடா நீங்க சம்பந்தமேயில்லாத விஷயத்துக்காக அடிச்சிக்கறீங்க? அவந்தான் எழுந்து போய்ட்டானே.... நம்ம விஷயத்த படிங்கடா...' என்றான் அவர்களுள் ஒருவன்..

வாசனுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது... நுழைவுத் தேர்வில் அவனை விடவும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதிலிருந்தே கடுகடுவென்று இருந்த மூர்த்தியுடன் வாதத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த நியதியை வாசித்தான்..

'ST/SC/MBC & DNC/BC candidates are eligible for selection under Open Competition in addition to the reservations made for them.'

'அப்படிப் போடு' என்றான் மூர்த்தி உரக்க... 'இது நம்மள மாதிரி ஆளுங்களோட காலம்டா... மேல் சாதிக்கார பயலுங்களுக்குத்தான் அப்பன் ஆத்தா சேத்து வச்ச துட்டு இருக்குல்லே... குடுத்து படிக்கட்டுமே... என்ன நா சொல்றது?' நண்பர்கள் குழுவும் புன்னகையுடன் ஆமோதித்தது...

மூர்த்தியின் இந்த கருத்திலும் உடன்பாடில்லாவிடினும் வாசன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிக்கலானான்...

தொடரும்...

7.6.07

நாளை நமதே - 8

கணினி முன் அமர்ந்திருந்த பரத்தைச் சுற்றிலும் அவனுடைய நண்பர்கள்....

'என்னடா இன்னுமா டவுன்லோட் ஆவுது...?' என்றான் ஒருவன்...

'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா... எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கும்? பெரிய ஃபைலா இருக்கும் பாரேன்.. அதான் இவ்வளவு நேரம்....' என்றான் இன்னொருவன்...

'அடப் போடா.. என்ன இன்ஸ்டரக்ஷன் இருக்கப் போவுது பெருசா... நமக்கெல்லாம் கெடைக்கப் போறதில்ல... எதுக்கு இதையெல்லாம் டவுன்லோட் பண்ணிக்கிட்டு..' என்றான் மற்றொருவன்...

அவர்கள் கூறுவதைப் பொருட்படுத்தாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விதிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நுழைவு விண்ணப்பம் அடங்கிய கோப்பை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்வதில் முனைந்திருந்தான் பரத்...

ஒருவழியாக அடுத்த சில நிமிடங்களில் 'download complete' என்ற அறிவிப்பு திரையில் தோன்ற.... 'சக்சஸ்...' என்று ஒருவன் முழங்க எல்லோரும் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர்...

நல்லவேளையாக பரத்தின் தந்தை வீட்டில் இல்லை...

பரத் தரவிறக்கம் செய்த கோப்பை அச்செடுத்துக்கொண்டு தன்னுடைய படுக்கையறையில் குழுமியிருந்த நண்பர்களை நோக்கி திரும்பினான்.

'என்னடா இவ்வளவு பெருசா இருக்கு... அப்ளிகேஷனும் சேந்து இருக்கா?' என்ற நண்பனைப் பார்த்து புன்னகைத்தான்..

'பின்னே... அண்ணா யூனிவர்சிட்டின்னா சும்மாவா?' என்றவன் விலா எலும்பில் இடித்தான் அவனுடைய நண்பர்களுள் ஒருவன். 'டேய் இதையே பத்து தடவ சொல்லிட்டே... மொதல்ல ஒனக்கு சீட் கிடைக்குதான்னு பாப்பம்... அப்புறமா அண்ணா யூனிவர்சிட்டிய பத்தி பீத்திக்கோ..'

பரத் உதடுகளில் தவழ்ந்த புன்னகையுடன் தன்னுடைய நண்பர்களை 'சும்மாருங்கடா...' என்று உரிமையுடன் அதட்டினான்... உடனே எல்லோரும் வாயை மூடிக்கொண்டனர்... பரத் மீது அவர்களுக்கு அத்தனை அன்பு, மதிப்பு.. 'நா இப்ப ஒவ்வொரு கண்டிஷனா படிக்கறேன்.. கேளுங்க...அப்புறமா என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்லாம்... என்ன படிக்கவா?' என்றான்...

சரி என்பதுபோல் தலையை அசைத்த நண்பர்கள் சிலர் அவனுடைய படுக்கையிலும் வேறு சிலர் அப்படியே தரையிலும் அமர்ந்தனர்...

பரத் தொண்டையை கனைத்துக்கொண்டு தன் கையிலிருந்ததிலிருந்து வாசிக்க துவங்கினான்...

துவக்கத்திலிருந்த பொது நியதிகளை மேலெழுந்த வாரியாக படித்த பரத் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தன்னுடைய நண்பர்களைப் பார்த்தான். 'டேய்... இப்பத்தான் மெய்ன் பாய்ண்டுக்கு வரோம்... கேர்ஃபுல்லா கேளுங்க...'

'படி.. கேக்கறோம்..' என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன்..

'இது யூனிவர்சிட்டியிலருக்கற அட்மிஷன் கேட்டகரிய (category) பத்தி...

முதல் கேட்டகரி: கவர்ன்மெண்ட் காலேஜ்.. அப்புறம் கவர்ன்மெண்ட் ஏய்டட் காலேஜ்... அதாண்டா மெட்றாஸ், அப்புறம் சேலம், கோயம்புத்தூர், திருச்சிலருக்கற மத்த கவர்ன்மெண்ட் காலேஜுங்க...

ரெண்டாவது கேட்டகரி: இதுல முதலாவது.. கவர்ன்மெண்ட் எய்டட் காலேஜஸ்லருக்கற செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்சஸ்.... செல்ஃ ஃபைனான்ஸ் காலேஜ்லருக்கற பேமெண்ட் சீட் மாதிரி போலருக்கு...

இதுலயே ரெண்டாவது... நமக்கெல்லாம் சீட் கிடைக்கப் போற செல்ஃப் பைனான்ஸ் காலேஜஸ்... இதுலயும் ஃப்ரீ சீட்டும் இருக்கும்... பேமெண்ட் சீட்டும் இருக்கும்...

'டேய்.. பரத்.. அப்ப மேனேஜ்மெண்ட் கோட்டாங்கறது?' என்றான் ஒருவன்...

பரத் அவனைப் பார்த்தான்... அவன்தான் அந்த கூட்டத்திலேயே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவன்... அவனுக்கு அவனுடைய கவலை!

'டேய்... அது இதுல வராது...' என்றான் பரத்.. 'சாதாரணமா செல்ஃப் பைனான்ஸ் காலேஜ்காரங்க.. ஒரு பெர்சண்டேஜ் சீட்டுங்கள மேனேஜ்மெண்ட் கோட்டாவா வச்சிக்கிட்டு மத்தத அண்ணா யூனிவர்சிட்டி நடத்தற கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ணிருவாங்க... அப்படி சரண்டர் பண்ண சீட்டுங்கதான் கவுன்சிலிங்குக்கு போற எங்கள மாதிரி பசங்களுக்கு கிடைக்கும்.. ஒன்னெ மாதிரி பணக்கார பசங்களுக்குத்தான் அந்த மேனேஜ்மெண்ட் கோட்டா... பி.ஈ சீட்டுக்கு கொறஞ்சது அஞ்சி லட்சமாவது கறந்துருவாங்க... சரியா?'

கேட்டவனுடைய முகம் தொங்கிப் போனது...'டேய் கிண்டலடிக்காதீங்க... எனக்கு இருக்கற மார்க்குக்கு அதவிட்டா வேற வழியில்லடா... எங்கப்பா கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு....'

'டேய் தெரியாமத்தான் கேக்கேன்... ப்ளஸ் டூவுல நீ பாசானதே அபூர்வம்... எண்ட்ரன்ஸ்ல நம்ம க்ரூப்லயே நீதான் கொறச்சல் மார்க் வாங்கியிருக்கெ... இதுல பி.ஈ.. ஒன்னால படிக்க முடியும்னு நினைக்கே...' என்றான் ஒருவன் நக்கலுடன்..

பரத் அவனை முறைத்தான்... 'டேய்... don't be too smart... நாமல்லாம் ஃப்ரெண்ட்ஸ்... நமக்குள்ள இந்த மாதிரி பேச்செல்லாம் வேணாம்...'

'ஆமாடா.. பரத் வாங்கியிருக்கற மார்க்குக்கு முதல் நாளே கவுன்சிலிங்குக்கு இன்விடேஷன் வந்துரும்... அவன் நெனச்சா அண்ணாவிலயே வாங்கிருவான்.. இருந்தாலும் நமக்காக... நமக்கு எங்க கிடைக்குதோ அங்கயே சேரப்போறேன்னு அவங்கப்பாக்கிட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கான்... அவனே அப்படி நினைக்கறப்போ நாம இவனெ கிண்டலடிக்கறது சரியில்லடா... பேசாம பரத் சொல்றதெ கேப்போம்...' கூட்டத்திலிருந்த ஒருவன் பரத்தைப் பார்த்தான்... 'நீ மேல படி பரத்... இவன் கிடக்கான்..'

பரத் தொடர்ந்தான்...

'சரிடா.. .இப்ப அட்மிஷன் எப்படி நடக்குது, இதுல எவ்வளவு ரிசர்வேஷன் கோட்டா இருக்கு யார், யார் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கணும் படிக்கறேன்.....'

ஒருவன் இடைமறித்தான்... 'இது வேறயா... கொடுமைடா... நாமல்லாம் ராத்திரி பகல் பாக்காம படிக்கோம்... நம்மளவிட கொறச்சலா மார்க் வாங்கிட்டு... பிசி, எம்பிசின்னு சொல்லிக்கிட்டு இவனுங்களுக்கு நல்ல காலேஜஸ்ல கிடைச்சிரும்...'

பரத் அவனை முறைத்தான்... 'டேய்... மறுபடியும் எல்லாருக்கும் சொல்றேன்.. நம்ம க்ரூப்புல எஸ்.டி, பிசி, எம்பிசின்னு எல்லாரும் இருக்கோம்... ஒன்னெய மாதிரி எஃபி.சியும் இருக்கோம்... அதனால பேசறப்ப ஜாக்கிரதையா பேசு...'

'அடப் போடா என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்?' என்றவனை கூட்டமே முறைத்தது...

'டேய் வேணாம்... பூணூல் புத்திய காட்டாத.. சொல்லிட்டேன்...' என்றான் கூட்டத்தில் ஒருவன்...

பரத் குறுக்கிட்டான்... 'டேய், அவனுக்கு சொன்னதுதான் ஒங்களுக்கும்.. .ஃப்ரென்ஷிப் நடுவுல இந்த பாழாப்போன ஜாதி வர வேணாம்.... இதனாலதானடா நா இப்படி அனாதையா நிக்கேன்...'

நண்பர்கள் குழு சட்டென்று அமைதியாகிப் போனது... பரத்தின் பெற்றோர்களுடைய கலப்பு திருமணத்தைப் பற்றியும் அவனுடைய தாயின் பெற்றோர் அவரை புறக்கணித்ததைப் பற்றியும் ஏற்கனவே கேட்டிருந்ததால் எல்லோரும் இந்த பிரச்சினையை கூட்டத்தில் எழுப்பிய இரு நண்பர்களையும் பார்த்து முறைத்தனர்... அதில் ஒருவன்... 'ஆமாடா.. பரத் சொல்றா மாதிரி நமக்குள்ள இந்த பிரச்சினை வேணாம்... நம்மால சால்வ் பண்ண முடியாத பிரச்சினை இது... we will have to accept the reality.... பரத் சாரிடா... We never thought this would hurt your sentiments...'

பரத் புன்னகையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்... 'டேய்... இதனாலயே எனக்கு எங்கப்பா, அம்மாமேல மதிப்பு ஜாஸ்தி... அப்பவே அவங்க இந்த ஆங்கிள்ல யோசிச்சிருக்கறப்ப.. நம்மால ஏண்டா அந்த மாதிரி திங்க் பண்ண முடியாது.... இது நம்ம தலைமுறையில தீர்க்க முடியாத விஷயம்... Let us forget about this and go ahead... கொஞ்ச நேரம் சும்மா இருந்தீங்கன்னா... இத படிச்சி முடிச்சிட்டு அப்புறம் என்ன பண்லாம்னு டிசைட் பண்லாம்.. என்ன படிக்கவா?'

'ஆமாம்.. நீ சொல்றதுதான் சரி... 'என்றனர் கோரசாக அனைவரும்...

'தென்.. ஒக்கே... லிசன்..' என்றவாறு தன் கையிலிருந்த நகலில் இருந்து படிக்கலானான் பரத்...

மினிமம் எலிஜிபில் மார்க்...

எஸ்.சி/எஸ்.டி.. பாஸ் பண்ணா போறும்... இங்க யாருக்கும் இது பொருந்தாதுன்னு நினைக்கேன்...

பிசி: 55% பர்சண்ட் இருக்கணும். இதுல இங்க எத்தன பேர்றா?' பரபரவென்று அறையில் உயர்ந்த கரங்களை எண்ணினான்.... 'பத்துக்கு மேல இருக்கமா? சரி... அடுத்தது..

எம்பிசி: 50% பர்சண்ட். இதுலயும் இருக்கம் இல்லே? அங்கொன்றும் இங்கொன்றுமாக கரங்கள் உயர்ந்தன... 'இவ்வளவுதானா? இதுல என்னையும் சேத்துக்கறேன்...'

'நீயா... டேய்... வெளையாடாத... இது ஒனக்கெல்லாம் இல்லை... எங்கள மாதிரி வீக் பசங்களுக்கு...'

கிண்டலடித்தவனைப் பார்த்து புன்னகைத்தான் பரத்...

'டேய்.. என்ன நக்கலா? தோருக்கானே பூணூல்... அவனுங்களுக்குன்னு ஒரு கட் ஆஃப் மார்க் வச்சிருந்தா பரத்துக்கு அதுக்கு மேல இருக்கு... ஏதோ அவன் நல்ல கொணம்... நாம சேரப்போற காலேஜ்லயே சேரப் போறேன்னு நிக்கிறான்...' என்றான் பரத்தின் நெருங்கிய நண்பன் கனேசன்....

'பரவால்லைடா கணேஷ்... சும்மா லெக் புல்லிங்தானே.. I don't mind...' என்றவாறு மேலே தொடர்ந்தான் பரத்....

தொடரும்...

6.6.07

நாளை நமதே - 7

ஸ்டெல்லா அன்று வீடு திரும்பிய நேரத்தில் வழக்கம் போலவே மகள் ஷாலினியைத் தவிர வீட்டில் யாரும் இருக்கவில்லை.

வீட்டிலிருந்த அனைவரிடமும் ஆளுக்கொரு சாவி இருந்ததால் அவள் வாசற்கதவை திறந்து ஹாலிலிருந்த சோபாவில் கையிலிருந்தவற்றை வீசிவிட்டு கால்களை நீட்டியமர்ந்து சாய்ந்துக்கொண்டாள்..

எதிரிலிருந்த சோபாவில் கிடந்த ஷாலினியின் துப்பட்டா, தரையெங்கும் இறைந்துக்கிடந்த புத்தகப்பை, டிஃபன் பாக்ஸ், சாக்ஸ், ஷூ இத்யாதிகள் அவள் பள்ளியிலிருந்து வந்துவிட்டதை அறிவித்தன. ஷாலினி வழக்கம்போல அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

ச்சே என்ன பொழப்புடா இது என்றிருந்தது. காலையிலருந்து எட்டு மணி நேரம் கத்திட்டு வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்க முடியுதா... வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்குன்னுதான் பேரு... கூடமாட ஒத்தாசை செய்யாட்டியும் பரவாயில்லை... அதோட வேலைய மட்டுமாவது பாக்கலாமில்ல.. மணி ஆறாவப் போகுது... தூங்கிக்கிட்டு....

கல்லூரியில் படிக்கும் மூத்தவன் டேவிட் விடுமுறை நாட்களிலேயே வீட்டில் தங்கமாட்டான். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி துவங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் அவன் வீடு திரும்பும்போது இரவு பத்து மணிக்கு குறையாமல் ஆகிவிடும். 'காலைல ஒரு வா காப்பிய குடிச்சிட்டு போற.. எப்படிறா ராத்திரி பத்து மணி வரைக்கும் தாக்கு புடிக்கற?' என்றால்.. 'அட நீங்க வேறம்மா... காலேஜ்ல பஸ்சா வச்சிருக்கானுங்க... எல்லாம் காயலான்கடை வண்டிங்க... இதுல ஊர் முழுக்க சுத்தி எல்லாத்தையும் எறக்குனதுக்கப்புறந்தான் நம்ம ஏரியாவுக்கே வரான்... என்னெ என்ன பண்ண சொல்றீங்க?' என்பான்...

இளையவன் லாரன்ஸ்.... அவளுடைய கணவர் சூசைராஜ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தான்.. ஆனால் அவன் வீடு திரும்பும்போது இரவு குறைந்தது ஏழு மணியாகிவிடும்... பள்ளி இறுதி வகுப்பு... கேட்டால் ஸ்பெஷல் க்ளாஸ், ப்ராக்ட்டிஸ் என்று கதை விடுவான்...

அவளுடைய கணவர் சூசைராஜ்? அவருக்கு வீட்டு நினைப்பு வரவே இரவு பத்து மணியாகிவிடும்.. அவ்வளவு பொதுசேவை!

என்ன பொழப்புடா இது என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டவாறு சோபாவிலிருந்து எழுந்து தன்னுடையதையுமட்டுமல்லாமல் தன் மகளுடையதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அதனதன் இடத்தில் வைத்துவிட்டு கொடியில் கிடந்த டவலை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தாள்... போகிற போக்கில், 'ஏய்.. .ஷாலினி தூங்கனது போதும்... எழுந்திரு..' என்றவாறு...

குளியலறையில் ஷவரை திறந்ததும் ஊசியாய் குத்திய சுடுநீர் முகத்தில் பட்டதும் முகத்தை சுளித்தாள்...ச்சை... வேகாத வெயில்ல வீடு வந்து சேந்தா இது வேற...சில்லுன்னு இருக்க வேண்டிய சம்மர்ல சூடா வரும்... சூடா கதகதப்பா வரவேண்டிய விண்டர்ல சில்லுன்னு வரும்... கொடுமைடாகுளித்து முடித்து சமையலறையில் நுழைந்தவள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரவு உணவு வேலைகளை முடித்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்து டிவியை ஆன் செய்யவும் வாசல் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது... ஷாலினியை ஹாலில் காணோம்... அவளுடைய அறையிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது... அவளை அழைப்பதில் பயனில்லை...

விரைந்துச் சென்று வாசற்கதவைத் திறந்தாள்...

அவளுடைய கணவன் சூசைராஜ், டேவிட், லாரன்ஸ் மூவரும் நிற்க..,'எப்படி எல்லாம் ஒன்னா சேந்து வரீங்க?' என்றாள் வியப்புடன்.. 'டேய் லாரன்ஸ் எதுக்கு இவ்வளவு நேரம்? எங்க போயிருந்தே?'

'வேற என்ன? ஐயா மறுபடியும் க்ளாஸ்ல வால்தனம் பண்ணிருக்காரு... இன்னைக்கி ஏற்கனவே எங்க ரெக்டர் பயங்கர ஆஃப் மூடு... கோயில முழுசும் தொடச்சி எடுத்துட்டுத்தான் வீட்டுக்குன்னு சொல்லிட்டார்... இவன் முடிக்கற வரைக்கும் நான் இவர் வேலைய சூப்பர்வைஸ் பண்ற வேலை எனக்கு... வால்தனம் பண்ணது இவன்னா பனிஷ்மெண்ட் எனக்கும் சேர்த்து.... எல்லாம் தலையெழுத்து....' என்றவாறு சூசைராஜ் ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தார்...

'சரி... டேவிட்ட எங்க பாத்தீங்க?' என்றாள் ஸ்டெல்லா..

'ஓ! இவரா... இவரு... பஸ்சுலருந்து எறங்கி ரோட்டு முக்குல ஃப்ரெண்ட்சோட அரட்டையடிச்சிக்கிட்டு நின்னார்... வாங்க சார்னு கூப்ட்டுக்கிட்டு வரேன்... இல்லன்னா இவராவது இப்ப வர்றதாவது...'

'ஆமா.. ஒங்க ரெண்டு பேருக்கும் எங்க தலைய உருட்டாம இருக்க முடியாதே...' என்ற உரக்கவே முனுமுனுத்தவாறு தங்களுடைய அறையை நோக்கி டேவிட் நடக்க... லாரன்ஸ் சோபாவில் அமர்ந்து புலம்ப ஆரம்பித்தான். 'அம்மா என்னால இனியும் அந்த ஸ்கூல்ல படிக்க முடியாது.. இந்த அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்... அப்பா மட்டும் அங்க வேலை செய்யலன்னா நா அந்த ரெக்டர் கண்ணுல விரல விட்டு ஆட்டியிருப்பேன்... ஃபாதர் ரொம்பத்தான் துள்றார்...'

'பாத்தியாடி இவன் பேசறத... ஃபாதர்னு கூட பாக்காம இன்னைக்கி அவன் அவர்கிட்ட மோதுனத பாக்கணுமே.. ஒங்க சன்னா சார் இவன்? நம்பவே முடியலையே'ன்னு ஃபாதர் சொல்ற அளவுக்கு பண்ணிட்டான்... அடுத்த வருசம் ப்ளஸ் டூவுக்கு நிச்சயம் நம்ம ஸ்கூல்ல சீட் கிடைக்காது... எங்கயாவது கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் சேக்கணும்...'

லாரன்சுக்கு மட்டும் பார்வையால் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் தன் தந்தையை எரித்திருப்பான். 'எதுக்கு நா கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு போணும்? இந்த ஸ்கூல் என்ன ரெக்டரோட வீட்டு சொத்தா... சர்ச்சோட ப்ராப்பர்ட்டி...'

ஸ்டெல்லா வியப்புடன் தன் மகனைப் பார்த்தாள்... 'ஏய் என்ன விட்டா பேசிக்கிட்டே போறே... போயி கை கால் கழுவிட்டு சாப்பிடு....' பிறகு திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். 'ஏங்க இவன விடுங்க... இன்னைக்கி நம்ம லதா டீச்சர் ஒரு விவரம் கேக்க சொன்னாங்க...'

சூசைராஜ் முனுமுனுத்தவாறே எழுந்து சென்ற மகனைப் பொருட்படுத்தாமல் தன் மனைவியைப் பார்த்தார். 'என்ன வேணுமாம்?'

ஸ்டெல்லா அன்று மதியம் தன்னுடைய தோழி கூறியதை சுருக்கமாக கூறினாள். 'ஒங்க மூலமா ஏப்பியார போயி பாத்தா அவங்க காலேஜ்ல சீட் கிடைக்குமான்னு கேக்க சொன்னாங்க... பே மெண்ட் சீட்டானாலும் பரவல்லையாம்.'

சூசைராஜ் சிரித்தார். 'அடிப்போடி.... நீ சொல்றதுதானே நம்ம டேவிட்டுக்கே சீட் கிடைக்காம வேல் முருகன்லதான் சேத்துருக்கோம்னு...?'

'அதுகில்லங்க... நாம பணம் குடுக்க இஷ்டமில்லாம டேவிட்ட அங்க சேக்கல... லதா டீச்சர் மாப்ளதான் பேங்க்ல காஷியரா இருக்காரே... அவங்க பையனும் வேல பாக்கானாமே... மூனு பேர் சம்பளம்... கடன உடன வாங்கி பொண்ண ஒரு எஞ்சினீயராவது ஆக்கிரலாம்னு பாக்காங்க... நீங்க என்னடான்னா தமாஷ் பண்றீங்க..'

'ஏன்டி... பணம் இருந்தா? யாருக்கு வேணும்னாலும் தூக்கி குடுத்துடறதா? அந்த ஏப்பியாரே ஒரு ஃப்ராடு... நம்மள நம்பி பணத்த குடுத்துட்டு அப்புறம் சீட் கிடைக்கலன்னா?'

'அப்படியில்லாம் செஞ்சிருவாரா... அவரும் கிறிஸ்த்துவர்தானங்க..? கோயில்ல கூட பாத்துருக்கமே..?'

சூசைராஜ் உரக்க சிரித்தார்... டேவிட் தன்னுடைய அறையிலிருந்து எட்டிப் பார்த்தான்... 'என்னப்பா அம்மா ஏதாச்சும் ஜோக் அடிக்காங்களா?'

சூசைராஜ் சிரித்தவாறு அவனை 'இங்க வா.. ஒங்கம்மா சொல்றத கேள்... அந்த ஏப்பியார் நம்மள மாதிரி கிறிஸ்த்தவராம்.. அதனால ஃப்ராடு பண்ண மட்டாராம்.... இந்த கூத்த எங்க போய் சொல்றது?'

டேவிட்டும் தன் தந்தையுடன் சேர்ந்துக்கொண்டு சிரித்தான்..

ஸ்டெல்லா எரிச்சலுடன் அவரையும் டேவிட்டையும் மாறி, மாறி பார்த்தாள்... 'எதுக்கு இப்ப அப்பாவும் புள்ளையும் இந்த சிரி சிரிக்கீங்க?'

டேவிட் தன் தாய் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தான்... 'அம்மா அந்த ஆள் நீங்க நினைக்கறா மாதிரி இல்ல.... அந்தாள விட மோசம் அந்தாளோட காலேஜ்... எங்க பாத்தாலும் குண்டனுங்க சுத்திக்கிட்டுருப்பானுங்க... போலீஸ் சி.ஐ.டி மாதிரி... எங்க காலேஜ் ஒரு போலிஸ் ஸ்டேஷன் ஜெயில்னா அந்த காலேஜ் செண்ட்ரல் ஜெயில் மாதிரி... எதுக்கு ஒங்க ஃப்ரெண்டோட பொண்ணையெல்லாம் அங்க போய் ரெக்கமெண்ட் பண்றீங்க?'

சூசைராஜ் சிரித்தார். 'டேய்... பேசாம அந்த பொண்ணெ ஒங்க காலேஜ்ல சேத்துரலாமா?'

'ஏன்... நான் படற பாடு போறாதுன்னா? நீங்கதான் வெப்சைட்ல அப்படி போட்டுருக்கான், இப்படி போட்டுருக்கான்னு சொல்லி சேர்த்துவிட்டீங்க...' என்றான் எரிச்சலுடன்.. 'ஒங்களுக்கு ஒரு ஜோக் தெரியுமாப்பா?'

'என்ன சொல்லு... இன்னும் கொஞ்சம் சிரிப்போம்...' தன்னுடைய மனைவியின் முறைப்பைப் பொருட்படுத்தாமல்.

'இது அந்த ஏப்பியார பத்தி. அவர் எம்.ஏ.. எம்.எட்டுங்கறதுக்கு ஒங்களுக்கு தெரியுமில்ல?'

'ஆமா அந்த கொட்ட எழுத்துல போட்டுருக்கே... காலேஜ் வாசல்லயே.. நீ சொல்லு..'

'ஒருதரம் அவர எங்க காலேஜ் ஃபங்க்ஷன் ஒன்னுக்கு கூப்ட்டுருந்தாங்க... எங்களுக்கு முந்தன பேட்ச் ஸ்டூடன்ஸ்தான் அவர அழைச்சிக்கிட்டு வர போயிருந்தாங்க... கார்ல வந்துக்கிட்டிருக்கறப்ப திடீர்னு எதுத்தாப்பல ஒரு ஆடு குறுக்கால வந்துருச்சாம்... இவர் ஒடனே 'யோவ் டிரைவர் பாத்துய்யா... அந்த மட்டன் போய்க்கட்டும்னாராம்...'

'என்னது மட்டனா? அப்படீன்னா?' என்றாள் ஸ்டெல்லா விளங்காமல்...

சூசைராஜ் சிரிப்பை அடக்கமாட்டாமல், 'அதாண்டி... ஆட்டுக்கறி.... ஆட்டுலருந்துதான மட்டன் வருது... அதனால ஆட்டையே மட்டன்னுருக்கார்....' என்றவாறு மேலும் சிரித்தார்.

சற்று நேரம் சென்றபிறகே ஸ்டெல்லாவுக்கு விளங்கியது. இருப்பினும், 'டேய் டேவிட். இது ரொம்ப ஓவர்... அவர் எவ்வளவு பெரியவர்... கொஞ்சம் கூட மரியாதயில்லாம... எம்.ஏ எம்.எட்டு வரை படிச்சவருக்கு ஆட்டுக்கு இங்க்லீஷ்ல என்ன சொல்றதுன்னு தெரியாதா? டூப் அடிக்காத.. போ... போய் சாப்ட்டு படு... காலைல ரெண்டு ரொட்டி துண்ட சாப்ட்டு போனது...' என்றாள் எரிச்சலுடன்...

'ஆமா.. நீங்களும் டீச்சர்தான... அதான் ஒங்களுக்கு கோவம் வருது..' என்றவாறு டேவிட் எழுந்து சென்றான்...

சூசைராஜும் எழுந்து நின்றார்.

'என்னங்க எழுந்துட்டீங்க..? அப்ப நாளைக்கு அவங்க கேட்டா என்ன சொல்றது?' என்றாள் ஸ்டெல்லா.

'ஊம்? என்ன சொல்றதா?' என்றார் சூசைராஜ் எரிச்சலுடன். 'என்னெ போயி அந்தாள் முன்னால நிக்க சொல்றியா? அந்தாள் யார மறந்துருந்தாலும் நாக்க புடிங்கிக்கிறா மாதிரி கேட்டுட்டு வந்த என்ன மறந்துருக்க மாட்டார். மறுபடியும் அந்தாள் கிட்ட போய் நின்னேன்னு வையி... வாட்ச்மேன உட்டு அடிச்சாலும் அடிப்பார்... ஆள விடு...பேசாம கவுன்சிலிங் வர்றப்ப நம்ம டேவிட்டோட காலேஜ்ல பேமெண்ட் சீட் இருந்தா எடுத்துக்க சொல்லு... இல்லையா இருக்கவே இருக்கு ஆர்ட்ஸ் காலேஜ்...'

'இதான் ஒங்க ஃபைனல் முடிவா?' என்றாள் ஸ்டெல்லா கடுப்புடன்...

'ஆமா... இதான் நம்மால முடிஞ்சது... செய்யறேன், செய்யறேன்னு இழுத்தடிக்க நம்மால முடியாது... அந்த ராம்குமாரும் பி.சிதான... ஃப்ரீ சீட் இல்லன்னாலும் பேமெண்ட் சீட் நிச்சயமா கிடைச்சிரும்... டேவிட் சொல்றானேன்னு பாக்காத... அவன் காலேஜ்லயே சேக்க சொல்லு... இப்ப கொஞ்சம் சின்ன காலேஜ்தான்.. ஆனா யார் கண்டா... இவங்க பேட்ச் முடிக்கறப்ப பெருசாயிரும்... பசங்க நல்லா படிச்சி மார்க் வாங்கனா கவர்ன்மெண்ட் காலேஜ்ல கிடைச்சிருது.. இல்லன்னா இந்த மாதிரி காலேஜ்தான் கதி... ஏப்பியார் காலேஜ் மட்டும் என்ன பெரிய இதுவா... எல்லாம் ஒன்னுதான்... பெருசா பந்தாத்தான் இருக்கும்... ஸ்டஃப் ஒன்னும் இருக்காது.... நீ போயி சாப்பாட எடுத்து வை... குளிச்சிட்டு வரேன்...'

சோபாவிலிருந்த கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு படுக்கையறையை நோக்கி நடந்த கணவனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸ்டெல்லா அடுத்த நாள் தன் தோழியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று நினைத்தவாறு...

தொடரும்...

1.6.07

நாளை நமதே - 6

லதா காலையில் எழுந்ததுமே தன்னுடன் படுக்கையில் படுத்திருந்த தன் மகள் ஜோதிகாவைப் பார்த்தாள். கண்களை மூடியவாறு படுத்திருந்தாலும் அவள் உறக்கத்தில் இல்லை என்பது தெரிந்தது.

முந்தைய நாளின் ஏமாற்றம் அவளுடைய முகத்தில் நன்றாகவே தெரிந்தது. எப்போதும் வாயடித்துக்கொண்டு கலகலப்பாக வளையவரும் அவளை இப்படியொரு கோலத்தில் காண்பது பாவமாக இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் படுத்திருக்கட்டும்...' கலைந்துக்கிடந்த அவளுடைய மேலாடையை சரிசெய்துவிட்டு எழுந்து அமர்ந்து தலைமுடியை அள்ளி முடிந்தாள்.....

வீட்டில் இரண்டு படுக்கையறைகள் இருந்தும் ஒரு அறையில் அவளும் ஜோதிகாவும் இன்னொரு அறையில் ராம்குமாரும் மகன் ராஜ்குமாரும் உறங்குவது வழக்கம். ஜோதிகா வயதுக்கு வந்த நாளிலிருந்தே இந்த ஏற்பாடுதான். 'எதுக்கு தேவையில்லாம கொமரு மனசுல வேண்டாத எண்ணத்தையெல்லாம் வெதைக்கறீங்க? மாப்பிள்ள குமார் கூட படுத்துக்கட்டும்.. நீ ஜோதிய உன் கூட போட்டுக்க... அண்ணன் தங்கைன்னாலும் வயசுக்கு வந்த புள்ளைய ஆம்புள புள்ள கூட தூங்க வைக்கறது நல்லாவா இருக்கு?' என்று ஒருதரம் ஊரிலிருந்து வந்திருந்த அவளுடைய தாயார் கூறியதிலிருந்து....

ராம் குமாருக்கும் அந்த ஏற்பாடு நல்லதுக்குத்தான் என்று தோன்றவே, 'ஒங்கம்மா சொல்றதுலயும் தப்புல்லடி... அப்படியே செஞ்சிருவோம்..'

ஜோதிகா படுக்கையில் உருண்டு புரண்டு படுத்து பழகியவள்.. ஒரே அறையில் இருந்தாலும் அவளுக்கும் அவளை இரண்டே வயது மூத்தவனான ராஜ்குமாருக்கும் தனித்தனி கட்டில் இருந்தது. சுதந்திரமாக உருண்டு புரண்டு படுத்தவளுக்கு தன் தாயுடன் ஒரே கட்டிலில் படுப்பது படுசிரமமாயிருந்தது. 'எதுக்குப்பா திடீர்னு... நாம்பாட்டுக்கு அண்ணா ரூம்லயே படுத்துக்கறேனே...'

ராம்குமார் என்ன பதில் சொல்லி சமாளிப்பதென தெரியாமல் தன் மனைவியைப் பார்த்தான்.

'ஏய்... வெவஸ்தைக் கெட்டவளே.. முந்தி மாதிரியாடி... அதெல்லாம் ஒனக்கு சொன்னா புரியாது... வேணும்னா அடுத்த மொற ஊர்லருந்து ஒங்கம்மெ வர்றப்போ அவுகள கேளு.. இப்ப சொன்னத செய்...' என்று அவளுடைய வாயை அடைக்கத்தான் முடிந்தது லதாவால்...

படுக்கையிலிருந்து எழுந்து நைட்டியை சரிசெய்துக்கொண்டு படுக்கையறைக் கதவைத் திறந்துக்கொண்டு ஹாலைக் கடந்து வாசறகதவைத் திறந்து க்ரில் கேட்டில் மாட்டப்பட்டிருந்த துணிப்பையிலிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்..

அவளுடைய கணவன் படுக்கையறைக் கதவைத் திறந்துக்கொண்டு வருவது தெரிந்தது. அதை பொருட்படுத்தாமல் ஸ்டவ்வைப் பற்ற வைத்து பால் குக்கரை ஏற்றி வைத்தாள்... குக்கர் விசில் சப்தம்தான் மூத்தவன் குமாருக்கு அலாரம்!

அவன் பத்தாவது வகுப்பை முட்டி மோதி கடக்கவே படாதபாடுபடவேண்டியிருந்தது. அவன் படித்திருந்த மேல் நிலைப்பள்ளியிலேயே ப்ளஸ் டூவில் சேர்த்துக்கொள்ள பள்ளி முதல்வரான பாதிரியார் தயங்கினார். அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியையாக இருந்த லதா 'என்ன ஃபாதர் நம்ம ஸ்கூல்லயே அவனுக்கு சீட் இல்லன்னு சொன்னா நா அவனெ எங்க கொண்டு போயி சேக்கறது?' என்றாள் ஆதங்கத்துடன். பள்ளி முதல்வராயிருந்தவர் ஒரு கிறிஸ்துவ பாதிரியார். அவர் புன்னகையுடன், 'இங்க பாருங்க டீச்சர்... குமார் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய காரியம்... அவன் மாத்திரம் எங்க பெய்லாயி நம்ம செண்டம் ரிசல்ட ஸ்பாயில் பண்ணிருவானோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்... நீங்களும் ஒங்க ஹஸ்பெண்டும் படாதபாடு பட்டு கோச் பண்ணதுனால ஒருவழியா பாசாயிட்டான். பேசாம ஒங்க ஹஸ்பெண்ட் பேங்க்ல ஒரு ப்யூன் போஸ்ட் காலியாயிருந்தா அதுல சேத்து விட்டுருங்க.. அதான் நல்லது...' என்றார்.

அதுவும் நல்ல யோசனையாக தோன்றவே அன்று இரவே ராம்குமாரிடம், 'நம்ம குமாரோட மார்க்குக்கு ப்ளஸ் டூவுல சீட் குடுக்க மாட்டேன்னு ஃபாதர் பிடிவாதமா நிக்கிறார்ங்க.. அவனெ மேக்கொண்டு படிக்க வைக்கறதுல எந்த பிரயோசனம்னு வேற சொல்றார்... அதனால....' என்றாள் தயக்கத்துடன்.....

ராம் எரிந்து விழுந்தான். 'அதனால? மாடு மேய்க்க விடலாம்கறியா? எனக்குன்னு வந்து சேந்தான் பார். அப்படியே ஒன்னாட்டம்தான் ஒம்புள்ள..'

ஆனால் லதா அவனுடைய மறைமுக குற்றச்சாட்டை பொருட்படுத்தவில்லை... 'அதுக்கில்லங்க.. ஒங்க பேங்க்ல ஒரு ப்யூனா சேத்துவிட முடியுமான்னு பாருங்களேன்..' என்று குழைந்தாள்...

மேலும் கோபப்படுவான் என்று லதா நினைக்க ராம்குமார் வியப்புடன் அவளைப் பார்த்தான். 'எட்டி ஒனக்கும் மூளை இருக்கத்தான் செய்யிது...'

லதா சிரித்தாள்... 'அப்ப குமாருக்கும் மூளை இருக்குன்னு மறைமுகமா ஒத்துக்கறீங்க..'

ராம்குமார் யோசனையில் ஆழ்ந்தார்... பிறகு.. 'நீ சொல்றதும் சரிதான்... இன்னும் ரெண்டு மாசத்துல ஒரே நாள்ல சிட்டியிலயே நாலு பிராஞ்ச் தொறக்கப் போறாங்க எங்க பேங்க்ல.. எல்லாம் புதுசா வந்துருக்கற சேர்மந்தான் காரணம்... அதனால நிச்சயமா ப்யூன் போஸ்டுக்கு ஆள எடுப்பாங்க... டிபெண்டன்சி கோட்டாவுல கிடைக்குதான்னு பாப்பம்... ப்யூன்னுதான்னாலும் சம்பளம் ரெண்டாயிரமாவது வரும்... மொதல் மாசத்துலயே... ஆனா இவன நம்பி எப்படி சேக்கறதுன்னுதான் பாக்கேன்... சிவம் போக்கு, சித்தம் போக்குன்னு சொல்லாம கொள்ளாம ஃப்ரெண்ட்சோட போயிருவானடி? அப்புறம் எம் மானம் கப்பலேறிடும்... சொல்லி வை ஒம் பையன்கிட்ட...'

இதுவரை சம்மதித்ததே பெரிய விஷயம் என்று நினைத்த லதா உடனே, 'அதெல்லாம் நா பாத்துக்கறேன்... அவன் நா சொன்னா கேப்பான்...' என்றாள்.

ராம்குமார் சிரித்தான்.. 'அதான் பாக்கறேனே.. அவன் கேக்கற லட்சணம்... அவனும் அவன் கோலமும்... எம் மானத்த வாங்கறதுக்குன்னே பொறந்து வந்துருக்காண்டி ஒம் பையன்... ஜோதிகாவாவது என்னெ மாதிரி வந்தாளேன்னு நினைச்சி சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்...'

ராஜ்குமாரின் அதிர்ஷ்டம் ராம் நினைத்ததுபோலவே நடந்தது... புதிய கிளைகளுக்கு தேவையான கடைநிலை ஊழியர் வேலைக்கு வங்கியில் பணியாற்றியவர்களுடைய பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்குவது அவருடைய வங்கியின் கொள்கையாயிருந்தது. ஆகவே அதிக சிரமமில்லாமல் பதினெட்டு வயது முடிந்த கையோடு குமாருக்கு வேலை கிடைத்தது... படிப்பில் எப்படியோ, குமார் வேலையில் படுசுட்டியாயிருந்தான்... வேலை கிடைத்து ஆறுமாதங்களிலேயே வேலையும் நிரந்தரமாகி முதல் மாதத்திலேயே இரண்டாயிரத்து சொச்சம் சம்பளம் கிடைத்தது.

படித்துக்கொண்டிருந்தபோது ஊரைச் சுற்றிக்கொண்டு தன்னுடைய எரிச்சலுக்கு ஆளாகியிருந்தவன் வேலை கிடைத்ததிலிருந்தே பொறுப்புள்ளவனாக மாறியதைக் கண்டு மகிழ்ந்துபோனார் ராம்குமார்... 'பரவால்லடி ஒம்புள்ள... நான் நெனச்சிருந்ததுக்கு நேர் மாறாயிட்டான்! ஆஃபீஸ்லயும் அவனுக்கு நல்ல பேர்தான்... இத்தோட நின்னுராம எங்கயாவது ட்யூட்டோரியல்ல சேர்ந்து ப்ரைவேட்டா ப்ளஸ் டூ எழுதிட்டானா நல்லாருக்கும்... இப்ப இல்லன்னாலும் ஒரு அஞ்சாறு வருசம் கழிச்சி நான் ரிட்டையராவறதுக்கு முன்னால அவன ஒரு க்ளார்க்காவோ இல்ல கேஷியராவோ ஆக்கிரலாம்...' என்றார் தன் மனைவியிடம்...

குமார் என்ன நினைத்தானோ... சரியென்று அடுத்த வாரமே வீட்டுக்கருகிலிருந்த ட்யூட்டோரியல் கல்லூரியில் சேர்ந்தான்... படிப்பில் பெரிதாக மாற்றம் ஏதும் தெரியவில்லையென்றாலும் முன்பை விட மேல் என்பதுபோலிருந்தது... இன்னும் ஆறு மாசம்... பாசாயிருவான்... என்ற நம்பிக்கையுடன் இருந்தாள் லதா...

'ஏய்.. பால் குக்கர் அடிச்சிக்கிட்டே இருக்கு... நீ என்ன யோசனையில இருக்கே..?'

திடுக்கிட்டு திரும்பி கையில் அன்றைய தினத்தாளுடன் நின்ற தன் கணவனைப் பார்த்தாள் லதா...

'என்ன அப்படி யோசனை.. காலங்கார்த்தால..?'

'எல்லாம் நம்ம குமாரபத்தித்தான்... ஃபர்ஸ்ட் அட்டெம்ப்டுலயே பாஸ் பண்ணிட்டா நல்லாருக்கும்..'

ராம் சிரித்தார். 'ஏண்டி... ஜோதிய பத்தி கவலைப்படறையோன்னுல்ல பாத்தேன்... இப்ப குமார் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல பாசாறதா முக்கியம்?'

'பாத்தியாம்மா... இந்த அப்பாவுக்கு எப்பவுமே நான்னா எளப்பம்தான்... ரெண்டு வருசமா மாசா மாசம் சம்பளத்த அப்படியே கொண்டு வந்து கையில குடுக்கேன்... இப்பவும் அப்பாவுக்கு இந்த நக்கல் மட்டும் போவல....'

ராம் திரும்பி எரிச்சலுடன் நின்ற தன் மகனைப் பார்த்தார். 'டேய் சும்மா தமாஷ் பண்ணேண்டா.. ஒன் வயசுல அப்பா ஒரு பெரிய குடும்பத்தையே தலையில சுமந்துக்கிட்டிருந்தேன்...'

'ஆம்மா...இன்னமுந்தான் எறக்கி வைக்கறீங்க?' என்றாள் லதா சமயம் பார்த்து. 'இன்னமுந்தானே தங்கச்சி புள்ளைங்க தம்பி புள்ளைங்கன்னு அடிச்சிக்கறீங்க?'

'சரி... சரி.. காலங்கார்த்தால் ஆரம்பிச்சிறாத... மொதல்ல ஜோதி விஷயத்த பத்தி பேசுவோம்... நீ ஒன் ஃப்ரெண்ட் ஸ்டெல்லாக்கிட்ட பேசறேன்னு சொன்னீயே... மறந்துராத...' என்றவாறு தன் மனைவியின் பேச்சை சாதுரியமாக திசை திருப்பினார் ராம்குமார்.

'ஒங்க தங்கச்சிய பத்தி சொன்னா நைசா டாப்பிக்கையே மாத்திருவீங்களே....' என்றவாறு கலந்துவைத்திருந்த காப்பியை தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தன் கணவரிடமும் இன்னொன்றை தன் மகனிடம் கொடுத்தவாறு தன்னுடைய சமையல்வேலையில் மும்முரமானாள் லதா...

ராம் காப்பி தம்ளருடன் ஹாலை நோக்கி நடக்க... குமார் டைனிங் டேபிளில் அமர்ந்து காப்பியை உறிஞ்சலானான்...


*******