30.8.06

சூரியன் 122

வங்கியின் தலைமையக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடைய சார்பில் வங்கியின் புது தலைவர் எம்.ஆர். மாதவனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புக்கு செய்ய வேண்டியிருந்த இறுதி நேர ஏற்பாடுகளை தன்னுடைய எச்.ஆர் இலாக்கா அதிகாரிகளுடன் மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார் ஃபிலிப் மாதவன்.

இறுதியில் ஒருமுறை மேடையலங்காரத்தையும் மேடைக்கு பின்புறம் தொங்கவிடப்பட்டிருந்த திரையில் பொருத்தப்பட்டிருந்த வரவேற்பு எழுத்துக்களின் அமைப்பையும் சரிபார்த்துவிட்டு சுந்தரலிங்கத்தை தொலைப்பேசியில் அழைத்தார். ‘சார் சேர்மன அழைச்சிட்டு வந்தீங்கன்னா ஃபங்ஷன துவக்கிரலாம்.’

அடுத்த ஐந்து நிமிடத்தில் மாதவன் வந்து சேர ஹாலில் குழுமியிருந்த ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்க ஃபிலிப் சுந்தரத்தின் வரவேற்புரையுடன் துவங்கிய விழா துவங்கியது.

விழாவுக்கு முத்தாய்ப்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடைய தொழிற் சங்க தலைவர்களுடைய உரை துவங்க மேடையிலமர்ந்திருந்த சேதுமாதவன் பதற்றத்துடன் இந்த முரளி எங்கே போய் தொலைந்தான் என்று இங்கும் அங்கும் தேடிக்கொண்டிருந்தார்.

அவனிடம் ஏற்கனவே மாதவன் அலுவலகத்திற்குள் நுழையும்போது கல்கத்தா விவகாரத்தை மையமாக வைத்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். சரி என்று சம்மதித்திருந்தவன் அந்த பக்கம் தலையே காட்டாமல் இருந்துவிட சேதுமாதவன் மாதவனுக்கு லாபியில் வைத்து வரவேற்பளித்து முடித்து நேரே தன்னுடைய கேபினுக்குச் சென்று முரளியை தொலைபேசியில் அழைத்து சகட்டு மேனிக்கு ஏசிவிட்டு, ‘டேய் இன்னைக்கி சாயந்தரம் நம்ம எச்.ஓ ஸ்டாஃப் குடுக்கப்போற ரிசப்ஷன்லயாவது வந்து இந்த மேட்டர சொல்லி இத உடனே சேர்மன் தலையிட்டு தீர்த்து வைக்கலனா ஸ்ட்ரைக் பண்ணுவோம்னு நீ பேசணும். இல்லே நா என்னோட சுயரூபத்த காட்டிருவேன்.’ என்று மிரட்டியிருந்தார்.

‘விஷமிக்கேண்டா சாரே.. ஞான் நிச்சயமாயிட்டு வரேன்.. வந்து ஒரு பெகளம் இண்டாக்காண்டு விடுல்லா..’ என்றானே எங்கே போய் தொலைந்தான்.

அவருடைய இந்த பதற்றத்தை ஹாலின் கோடியிலிருந்து கவனித்த முரளியின் தலைமையில் செயலாற்றி வந்த சங்கத்தின் காரியதரிசி வாசகன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

***

அன்று காலையில் சங்க கூட்டத்தில சேதுமாதவன் அழைத்த விவரத்தை முரளி தெரிவித்ததும் ‘இங்க பார் முரளி. அந்த சேதுமாதவன இப்பத்திக்கு பகைச்சிக்காம இருக்கறதுதான் நல்லது. பேசாம நாம லஞ்ச் டைம்ல போயி எச்.ஓ முன்னால நின்னு ஒரு டெமோ செஞ்சிட்டு வந்துருவோம். புது சேர்மனுக்கும் நாம யாருன்னு காமிக்கறது நல்லதுதானே. என்ன சொல்றே?’ என்று வாசகன் கூற மற்றவர்கள் அதற்கு ஒத்து ஊதினர்.

முரளி பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். அவன் மனம் அன்று காலையில் நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை அசைபோட்டது..

***

அன்று காலையில் முரளி அலுவலகத்திற்குள் நுழையும்போதே, ‘முரளி சார் ஒங்களுக்கு ஒரு ஃபோன்.’ என்று பியூன் அழைக்க அவசரமாக சென்று, ‘யாருங்க?’ என்றான்.

‘முரளி நா நந்து பேசறேன்.’

‘என்ன நந்து? வந்தனா மேடத்த பார்த்தாச்சா? இப்ப எங்க இருக்கே?’

‘பார்த்தாச்சி. நான் அவங்க வீட்லருந்துதான் பேசறேன். இப்ப மேடத்துக்கு ஒரு ஃபோன் வந்துது. மேடத்துன சொகமில்லல்லே அதனால நாந்தான் ஆன்சர் செய்தது. யாரோ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ரிப்போர்ட்டராம். முக்கியமான விஷயமா மேடத்துக்கிட்ட பேசணும்னு சொன்னார். நான் அவங்களுக்கு ஒடம்பு சரியில்லை, எங்கிட்ட சொன்னீங்கன்னா நா அவங்ககிட்ட அப்புறமா சொல்றேன்னு சொன்னேன்.’

முரளியின் மொபைல் சிணுங்க யாரென்று பார்த்தான். சேதுமாதவன்!

‘நந்து என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு. அந்த சேதுமாதவன் லைன்லருக்கான்.’

நந்து கடகடவென்று எதிர்முனையில் இருந்து கூறிய செய்தி முரளியை அதிர்ச்சியடைய வைத்தது. ‘என்ன சொல்றே நந்து? நீ சொல்றது உண்மையா? யாரந்த அந்த ரிப்போர்ட்டர்? ஃபோன் நம்பர் ஏதும் குடுத்தாரா?’

‘இல்ல. ஆனா அவரோட பேர சொன்னார். எதுக்கு கேக்கறே?’

‘நீ பேரச் சொல்லு. எதுக்குன்னு அப்புறமா சொல்றேன்.’ என்று முரளி இணைப்பைத் துண்டித்துவிட்டு மொபைலில் காத்திருந்த சேதுமாதவனிடம் பேசினான்.

‘எந்தா சார்?’

எதிர்முனையிலிருந்து சேதுமாதவன் அன்று காலையில் முரளி எச். ஓ. வாசலில் கோஷம் எழுப்பவில்லை என்பதற்காக வசை மாரி பொழிய முரளி ஒரு கேலிப் புன்னகையுடன் பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘இங்க பார் முரளி. தன்டெ களி என்டெடுத்து வேண்டா கேட்டோ. தான் மாத்தரம் இன்னு வைகுன்னேரம் மாதவண்டெ ரிசப்ஷன் சமயத்து வந்து பிரஸ்னம் க்ரியேட்டெய்தில்லெங்கில் ஞான் தனிக்கி ஷ¤வராயிட்டு பிரஸ்னம் உண்டாக்கும். பரஞ்சேக்காம்.’

‘விஷமிக்கேண்டா சாரே.. ஞான் நிச்சயமாயிட்டு வரேன்.. வந்து ஒரு பெகளம் இண்டாக்காண்டு விடுல்லா..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு மேலாளர் அறைக்குள் நுழைந்து, ‘சார் நம்ம பிராஞ்சுல இந்தியன் எக்ஸ்பிரஸ் அக்கவுண்ட் இருக்குல்லே?’ என்றான்.

சாதாரணமாகவே அவனுடைய பெயரைக் கேட்டாலே கலக்கமடையும் மேலாளர் பதறிக்கொண்டு எழுந்து, ‘ஆமாம் முரளி சார்.’ என்றார்.

முரளிக்கு அவருடைய பதற்றத்தைப் பார்க்க தமாஷாக இருந்தது. இத்தனைக்கும் முரளி தான் பணி புரியும் கிளையில் எந்தவித தகராறும் செய்ய மாட்டான்.

மேலும் தன்னுடைய கிளை மேலாளர் சரியான பயந்தாங்குளி என்று அவனுக்கு தெரிந்திருந்ததால் எதற்கு பாவம் என்று அவர் இருந்த பக்கமே போகமாட்டான். அத்துடன் அவர் ஃபிலிப் சுந்தரத்தின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதும் அவனுக்கு தெரியும். இப்போதயை நிலையில் வங்கியின் அதிகாரிகளுக்குள் சுந்தரலிங்கத்தையடுத்து அவனுக்கு மிகவும் பிடித்த அதிகாரி ஃபிலிப் என்பதாலும் மேலாளரிடம் ஒரு சிறு மரியாதையுடன் நடந்துக்கொள்வான்.

‘சார் பதறாதீங்க. எனக்கு ராமகிருஷ்ணன்னு ஒரு ரிப்போர்ட்டர்கிட்ட பேசணும். அவரோட ·போன் நம்பர் மட்டும் நீங்க வாங்கி குடுத்தா நல்லாருக்கும். ஒரு முக்கியமான விஷயம்.’

இவன் காலங்கார்த்தால வந்து ஏதாவது பிரச்சினை செய்யப் போறானோ என்று நினைத்திருந்த மேலாளருக்கு, அப்பாடா இவ்வளவுதானா என்று இருந்தது. ‘அவ்வளவுதானே சார். நீங்க ஒங்க சீட்டுக்கு போங்க. நா அஞ்சு நிமிஷத்துல கேட்டு சொல்லிடறேன்.’

அடுத்த சில நிமிடங்களில் அவன் விரும்பிய தொலைப் பேசி எண் கிடைத்ததும் தன்னுடைய செல் ஃபோனில் அழைத்து தன்னை வந்தனா மேடத்தின் பி.ஏ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ‘ராமகிருஷ்ணந்தானே ஒங்க பேரு? மேடத்துக்கு ஃபோன் செஞ்சிருந்தீங்களாமே? அவங்கதான் என்னெ ஒங்கக்கிட்ட பேசி அந்த நியூஸ் பேப்பர்ல வராம பாத்துக்க சொன்னாங்க.’ என்றான்.

எதிர் முனையில் லேசான தயக்கம் தெரியவே முரளி, ‘இங்க பாருங்க ராமகிருஷ்ணன். இன்னைக்கித்தான் புது சேர்மன் சார்ஜ் எடுத்திருக்கார். இந்த நேரத்துல நீங்க பாட்டுக்கு யாரோ சொன்னாங்கன்னு இந்த மாதிரி ஒரு நியூச போட்டுட்டீங்கன்னா பிரச்சினையாயிரும்.’ என்றான் உறுதியான குரலில்.

‘அதெப்படி சார்? நாங்க போடலன்னாலும் மத்த பேப்பர்ங்கள்ல நிச்சயமா வரத்தான் போவுது. நாங்க முந்திக்கலாம்னு பார்த்தோம். இருந்தாலும் வந்தனா மேடத்துக்கிட்டருக்கற ஃப்ரெண்ட்ஷிப்புக்காக அவங்ககிட்ட சொல்லிரலாம்னுதான் கூப்ட்டேன். ஆனா அவங்க ரிலேட்டிவ் யாரோதான் ஃபோன் எடுத்தாங்க. அவர் மேடத்துக்கிட்ட சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். இதுக்கு மேல என்னெ பண்ண சொல்றீங்க?’

முரளி இவரை எப்படி சமாதானப்படுத்தி நான் நினைத்திருந்ததை சாதிப்பதென யோசித்தான்.

‘ஒங்க சங்கடம் புரியுது சார். நீங்க ஃபோன் செஞ்ச விஷயத்த மேடத்தோட ரிலேட்டிவ் எங்கிட்ட சொன்னாங்க. ஒங்கள நியூச போடாதீங்க சொன்னது தப்புத்தான். ஒத்துக்கறேன். ஆனா நீங்க போடப்போற மேட்டரால பேங்கோட பேருக்கு பெரிசா ஏதும் பாதிப்பு வராம பாத்துக்கிட்டா போறும்னுதான் மேடம் கேட்டாங்க. அதான் ஒங்கள கூப்ட்டேன்.’

எதிர்முனையில் ராமகிருஷணன் அவனுடைய கோரிக்கையை மறுக்கமுடியாமல் தயங்குவதை உணர்ந்த முரளி மேலும் தன்னுடைய கோரிக்கையை மெள்ள வலியுறுத்தினான். ‘ராமகிருஷ்ணன், நீங்க போடப்போற மேட்டரை ஒரு ஃபேக்ஸ் மூலமாவது அனுப்புங்களேன். நான் அஞ்சே நிமிஷத்துல எங்க சேர்மன்கிட்ட காட்டிட்டு சொல்றேன். பேப்பர்ல வர்றதுக்கு முன்னால அவருக்கு தெரிவிக்கறதுக்காகத்தான் கேக்கறேன். இல்லேன்னு சொல்லிராதீங்க.’

‘சார் நீங்க யாருன்னே எனக்கு தெரியல. நீங்கதான் மேடத்தோட பி.ஏன்னு சொல்லிக்கிறீங்க. ஆனா போன தடவ நா மேடத்த பாக்க வந்தப்போ ஒரு மேடம்தான் பி.ஏவா இருந்தாங்க. அதான் யோசிக்கறேன்.’

சட்! என்று உதட்டைக் கடித்துக்கொண்டான் முரளி. உடனே சமாளித்துக்கொண்டு, ‘சரிங்க ராமகிருஷ்ணன். ஒங்களுக்கு எம்மேல நம்பிக்கை இல்லேன்னா எங்க சேர்மனோட ஆஃபீஸ் ஃபேக்ஸ் நம்பர தரேன். அவரோட பி.ஏ. ரூம்லதான் இந்த ஃபேக்ஸ் இருக்கு. அந்த நம்பருக்கு நீங்க அனுப்பினா போறும். ஒரு நிமிஷம் ஃபோன் நம்பர் தரேன்’ என்றவாறு தன்னுடைய மேலாளர் அறைக்குள் நுழைந்து எதிர்முனையில் இருப்பவருக்கு கேட்கவேண்டும் என்பதற்காகவே, ‘சார் நம்ம சேர்மனோட பி.ஏவோட ஃபேக்ஸ் நம்பர கொஞ்சம் பாத்து சொல்லுங்க?’ என்றான் சற்று உரக்க.

அவர் பதறிக்கொண்டு எண்ணைத் தேடிப்பிடித்து கூற முரளி அதை எதிர்முனையிலிருந்த நிரூபரிடம் கூறிவிட்டு, ‘மறக்காம செஞ்சிருங்க சார்.’ என்றான்.

‘சரி சார். நா எங்க எடிட்டர்கிட்ட பேசிட்டு அனுப்பறேன். மேடத்துக்கிட்ட சொல்லிருங்க.’

முரளி மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு சுபோத் மிஷ்ராவை அழைத்து இன்னும் சற்று நேரத்தில் வரப்போகும் ஃபேக்சை உடனே சேர்மனிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ‘இங்க பார் சுபோத். இந்த விஷயத்துல நான் சம்பந்தப்பட்டிருக்கறது வெளிய வரக்கூடாது. எந்த சந்தர்ப்பத்துலயும். புரியுதா?’

‘Yes Murali Sir. I’ll not reveal your name under any circumstances.’

இணைப்பைத் துண்டித்துவிட்டு, ‘நன்றி சார்’ என்று மேலாளருக்கு நன்றி தெரிவித்தான். ‘சார். நா முக்கியமான விஷயமான விஷயமா யூனியன் ஆஃபீஸ் வரைக்கும் போரேன். தப்பா நினைச்சிக்காதீங்க.’

மேலாளர் 'ஐயா மேக்கொண்டு ஏதும் ஹெல்ப் கேக்காம நீ இங்கருந்து போனா போறும்' என்று தனக்குள் நினைத்தவாறு, ‘நீங்க போங்க முரளி சார். நோ ப்ராப்ளம்.’ என முரளி புன்னகைத்தவாறு அறையை விட்டு வெளியேறி தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

***

‘என்ன காம்ரேட்.. என்னமோ யோசிச்சிக்கிட்டிருக்காப்லருக்கு? என்ன யோசனை?’

முரளி திடுக்கிட்டு நிமிர்ந்து தன்னெதிரில் நின்ற தன்னுடைய சங்க காரியதரிசியையும் அவனைச் சுற்றி அமர்ந்திருந்த தன்னுடைய சங்க சகாக்களையும் பார்த்தான்.

‘இங்க பாருங்க. அந்த கல்கத்தா விஷயத்த நானே முன்னெ நின்னு தீர்த்துவச்சேன். இப்ப அத வச்சி என்னத்த டெமோ பண்றது? இது சேது சாருக்கும் நம்ம புது சேர்மனுக்கும் இடையில நடக்கற கோல்ட் வார். நமக்கு அதுல எந்த லாபமும் கிடைக்காது. அவங்கள்ல யார் ஜெயிச்சா நமக்கென்ன? இல்ல தோத்தாத்தான் நமக்கென்ன? நானும் நேத்து இப்படி ஒரு கலாட்டா செஞ்சி புது சேர்மனுக்கு நம்ம ஸ்ட்ரெங்க்த்த காமிச்சா என்னன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கி காலைல நாம அங்க போகலேன்னதும் நம்ம ஈ.டி சேது சார் என்னைய கேவலமா பேசிட்டார். அப்பவே தீர்மானிச்சிட்டேன். அந்தாளு சொன்ன பிறகாரம் செய்யறதில்லன்னு.. அதனால..’

‘அதனால.. என்ன சொல்லு..’

முரளி எழுந்து நின்றான். ‘நம்ம சேர்மனோட ரிசெப்ஷன்ல வந்து இந்த விஷயத்த பேசணும்னு சேது சார் சொன்னத நான் செய்யப்போறதில்ல. ஏன் அந்த ஃபங்ஷனுக்கே வரப்போறதில்ல. வாசகன், நீங்க நம்ம சங்கத்தோட சார்பா போய்ட்டு வாங்க. ஆனா மத்த அசோஷியன்காரங்க பேசறா மாதிரி ஃபார்மலா புது சேர்மனுக்கு எங்க ஒத்துழைப்பு உண்டுன்னு பேசிட்டு வந்துருங்க.’

சங்க அலுவலகத்திலிருந்த எல்லோரும் திகைத்து நிற்க அதை பொருட்படுத்தாமல் எல்லோரையும் நோக்கி கரங்களை குவித்துவிட்டு வெளியேறினான் முரளி.

****

‘அடுத்தபடியாக நம்முடைய ஏ.ஐ.பி.ஈ.எ ஊழியர் சங்க காரியதரிசி வாசகனை பேசுமாறு அழைக்கிறேன்.’

ஹாலின் மறுகோடியிலிருந்து வாசகன் சாவகாசமாக மேடையை நோக்கி நகர மேடையில் அமர்ந்திருந்த சேதுமாதவன் பற்களைக் கோபத்துடன் கடித்தவாறு எங்கே முரளியைக் காணோம் என்று தேடினார்.

தொடரும்..

23.8.06

சூரியன் 121

ராசேந்திரன் தன் முன் அமர்ந்திருந்த ஆடிட்டரையும் வழக்கறிஞரையும் பார்த்தான்.

எல்லாம் இவ்விருவருடைய முட்டாள்தனத்தால் ஏற்பட்ட குழப்பங்கள்.

முதல் தவறு. அவனும் அவனுடைய தந்தை ரத்தினவேலுவும் நியூ இந்தியா பவன் நிறுவனம் சார்பாக வங்கியிலிருந்து பெற்றிருந்த ஓவர்டிராஃப்ட் கணக்குக்கு இட்டிருந்த ஜாமீனை விலக்கிக்கொள்வதன் மூலம் நாடாருடைய வர்த்தகம் ஸ்தம்பித்து போய்விடும் என்று இவ்விருவரும் கூறிய யோசனை சாத்தியமானதுதானா என்று ஆராயாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுடைய தந்தையின் மறுப்புகளை பொருட்படுத்தாமல் வங்கிக்கு கடிதம் எழுதியது.

அவன் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக அந்த வங்கி மேலாளர் நாடாரின் ஆடிட்டரையும் வழக்கறிஞரையும் அழைத்து நடந்தவற்றைக் கூறியதுடன் வர்த்தகம் தடையில்லாமல் நடைபெற ஏதுவான ஆலோசனைகளையும் வழங்கி அவர்கள் இருவரும் செய்த செயலை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும தன்னையும் ரத்தினவேலுவையும் நிறுவன இயக்குனர்கள் பதவியிலிருந்தே விலக்கிவிட பரிந்துரைத்திருந்ததும் பிறகுதான் அவனுக்கு தெரியவந்தது.

இரண்டாவது தவறு நியூ இந்தியா பவன் நிறுவனத்தில் தனக்கும் தன் தந்தைக்குமிருந்த இருபது விழுக்காடு பங்குகளை ரகசியமாக விற்றுவிட தீர்மானித்து அந்த பொறுப்பை இவர்கள் இருவரிடமும் தான் ஒப்படைத்தது.

இதே வர்த்தகத்தில் சென்னையில் மிகவும் பிரபலமாகவிருந்த ஒரு உணவக நிறுவனத்தின் உரிமையாளருக்கு இப்பங்குகளை விற்பதன் மூலம் அந்நிறுவனத்தின் செயலாக்கத்தை ஸ்திம்பக்க செய்துவிடலாம் எனறுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் இவ்விருவருடைய ஆலோசனையின்பேரில் அப்பங்குகளை ஒரு சேட்டிடம் கொண்டு விற்றதன் மூலம் அதை அவர் கூடுதல் விலைக்கு நாடாரிடமே பேரம் பேச இடமளித்துவிட்டனர்.

‘என்னவே ரெண்டு பேரும் இப்படி திருட்டு முளி முளிச்சிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாச்சும் சொல்லுங்கய்யா!’ என்று எரிந்து விழுந்தார் ரத்தினவேல். ‘இந்த பயதான் புத்திக்கெட்டு போயி பேங்க்ல நாம கொடுத்திருந்த ஜாமீன விலக்கிருவோம்னு சொன்னா ஒங்க புத்தி எங்கய்யா போச்சிது? ஒரு நாலு பேங்க்ல விசாரிச்சி செஞ்சிருந்தா இந்த பிரச்சினை இல்லேல்லே?’

ஆடிட்டர் வழக்கறிஞரைப் பார்க்க அவர் ராசேந்திரனைப் பார்த்தார். நீரே சொல்லும் என்ற தோரணையில் டிட்டர் திரும்பி வழக்கறிஞரைப் பார்த்தார்.

ரத்தினவேல் எரிச்சலுடன் இருவரையும் பார்த்தார். ‘என்னவே யார் சொல்றதுன்னு ஒங்களுக்குள்ள போட்டியாக்கும்? யாராச்சும் ஒருத்தர் சொல்லி அழ வேண்டியதுதானேய்யா?’

‘ஐயா நாம செஞ்சதுல எந்த தப்பும் இல்லைங்கய்யா. எப்போ நாம ஜாமீன விலக்கிக்கிட்டோமோ அப்பவே பேங்க் மானேசர் ஓவர்டிராஃப்ட் கணக்க சட்டப்படி நிறுத்திருக்கணும்யா. ஆனா அந்தாளு அவிய ஆடிட்டரோட தோஸ்த்து போலருக்கு. அந்தாள்கிட்ட நீங்க ஜாமீன் விலக்கிட்ட விஷயத்த சொல்ல அவரு ஒடனே மோகன் வக்கீல்கிட்ட சொல்ல அந்தாளுக்குதான் பயங்கரமான குறுக்கு மூளையாச்சிங்களே.. மேனேசர என்னத்தையோ குடுத்து சரிகட்டிட்டாருங்கய்யா.. அதான்..’

அவரை முடிக்கவிடாமல், ‘ஏன்யா தெரியாமத்தான் கேக்கேன். அந்தாளுக்குருக்கற குறுக்கு மூளை ஒங்களுக்கு இருக்க வேணாம்? நீங்க என்ன செஞ்சிருக்கணும்? அந்த மேனேசர சரிகட்டி ஒடனே அந்த நாடானுக்கு நோட்டீஸ் விட வச்சிருக்கணும்லே.. பேங்குலருந்து ஒரு நோட்டீஸ் மட்டும் போயிருந்திச்சின்னா பெறவு அவன் ஆடிட்டரும் வக்கீலும் என்னத்தைய்யா செஞ்சிருக்க முடியும்? அத கோட்ட விட்டுட்டு இப்ப வீம்பு பேசிக்கிட்டு... எலேய் ராசேந்திரா ஒன்னைய சொல்லணும்லே..’ என்று எரிந்து விழுந்தார் ரத்தினவேல்.

‘அப்பா.. நடந்தத பேசறத விட்டுட்டு இனி என்ன செய்யலாம்னு பேசுங்கப்பா!’ என்றான் ராசேந்திரன் பதிலுக்கு.

‘ஆம்மா.. உள்ளதச் சொன்னா கோவம் மூக்குக்கு மேல வந்துருமே..’ என்று முனுமுனுத்தவாறு தன் முன் அமர்ந்திருந்த ஆடிட்டரை பார்த்தார். ‘சொல்லும்யா. இனி என்ன செய்யலாம்னு ஐயா கேக்காரில்லே.. சொல்லுமே..’ என்றார் கேலியுடன்.

ஆடிட்டர் உடனே வழக்கறிஞரைப் பார்த்தார். அவர் தான் குறித்து வைத்திருந்த குறிப்புகளை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு நிமிர்ந்து ரத்தினவேலுவைப் பார்த்தார்.

‘அய்யா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிரல..’

ரத்தினவேலு குறுக்கிட்டு, ‘அத நீர் சொல்லாதேயும்.. இதுக்கு என்ன வழி.. அதெ மட்டும் சொல்லும்..’ என்றார் எரிச்சலுடன்.

இக்குறுக்கிட்டை எதிர்பார்த்திராத வழக்கறிஞர் ஒரு நொடி தடுமாறிப்போனார். பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘இப்ப நாம செய்யக் கூடியது ஒன்னு இருக்குய்யா. அந்த மேனேசருக்கு எதிரா ஒரு புகார அவங்க ஹெட் ஆஃபீசுக்கு குடுக்கலாம். ஓவர்டிராஃப்ட் கணக்க மேல தொடர்ந்து அனுமதிச்சா இப்பருக்கற கடனுக்குக் கூட நாங்க ஜவாப்தாரியில்லே. அதனால ஒடனே கணக்க நிறுத்தச்சொல்லி உத்தரவு போடணும்னு.’

ரத்தினவேலு தன் மகனைப் பார்த்தார். ‘என்னலே இந்த யோசனையாவது உருப்படியா நடக்குமா?’

ராசேந்திரன் எனக்கென்ன தெரியும் என்பதுபோல் தோள்களைக் குலுக்கினான். ‘ஒங்களுக்கு என்ன தோனுதோ அப்படி செய்ங்க. அப்புறம் என்னாலத்தான் ஆச்சின்னு சொல்லாதீங்க.’

ரத்தினவேலு பொங்கி வந்த ஆத்திரத்தை மென்று விழுங்கினார். தறுதலப்பய மவனே, ஒன்னைய பெறவு வச்சிக்கறேன்.

‘சரிய்யா. ஒம்ம புகார அவிய ஹெட் ப்பீசும் சட்டை செய்யலேன்னு வச்சிக்குவம். வேற மேக்கொண்டு என்ன செய்யறதா உத்தேசம்?’ என்றார் வழக்கறிஞரைப் பார்த்து.

‘அப்படியெல்லாம் ஆகாதுய்யா.’

‘வேய் வக்கீலு.. ஒரு காரியத்துல எறங்குறதுக்கு முன்னால ரெண்டையும் யோசிக்கணும்யா? சட்டை செய்யலன்னா அதுக்கு என்ன செய்வீரு? அப்படி சிந்தியும்.’

இதென்னடா தொல்லை? முன்னால போன முட்டுறதும் பின்னால வந்தா ஒதைக்கறதுமால்ல இருக்கு என்று யோசித்தவாறு தன் அருகிலிருந்த ஆடிட்டரைப் பார்த்தார் வழக்கறிஞர்.

அவர் சட்டென்று, ‘நம்மால மேக்கொண்டு ஒன்னும் செய்ய முடியாதுய்யா.’ என்றார்.

‘அப்படி போடும் அருவாள. அதானய்யா கேக்கேன்? சரி.. அப்படியே வச்சிக்கிருவோம். அவிய நம்ம போடற புகார குப்பையில வீசிட்டு அந்த பய கணக்க தொடர்ந்து குடுக்கான்வன்னு வச்சிக்குவம். சட்டத்துல அத தடபண்றதுக்கு வளி இருக்கா? அதாம்யா, கோர்ட்ல ஸ்டே கெடைக்குமான்னு கேக்கேன்.’

ராசேந்திரன் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தான். கையில் கரண்டியுடன் சமையற்காரராக தன்னுடைய வாழ்க்கையை துவக்கியவரா இவர்?

‘எலேய் என்ன பாக்கே? என்னடா படிக்காத தற்குறின்னு நாம நெனச்சிக்கிட்டிருக்க இந்த போடு போடறானேன்னா?’

ராசேந்திரன் அவசரமாய் மறுத்தான். ‘இல்லப்பா..’

‘அதான பார்த்தேன். நீர் சொல்லும்யா.. சட்டத்துல வளி இருக்கா?’

வழக்கறிஞர் சங்கடத்துடன் நெளிந்தார். ‘அப்படி செய்றதுனால நமக்குத்தானய்யா நஷ்டம்?’

ரத்தினவேலு முறைத்தார். ‘எப்படிய்யா? அதையுந்தான் சொல்லுமே?’

ஆடிட்டர் குறுக்கிட்டார். ‘அய்யா.. பேங்கே ஒங்க ஜாமீன் எங்களுக்கு இல்லாட்டியும் பரவால்லை. கம்பெனிய நம்பி நாங்க கடன தொடர்ந்து குடுக்கப் போறோம்கறப்ப நமக்கு கடன திருப்பிக்குடுக்கறதுல எந்த பங்கும் இருக்காதுல்ல? அப்புறம் எதுக்கு அத ஸ்டே பண்றது?’

ரத்தினவேலு உரக்க சிரித்தார். ‘பாத்தியாலே ராசேந்திரா. இவியளுக்கு நாம பணத்த கட்டாம தப்பிச்சிக்கலாமாம். அதாடா வேணும் நமக்கு?’

வழக்கறிஞரும் ஆடிட்டரும் விளங்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ராசேந்திரன் இனியும் தான் மவுனமாக இருப்பது சரியல்ல என்று நினைத்தானோ என்னவோ, 'ஆடிட்டர் சார். நீங்க என்ன செஞ்சாலும் அந்த ஓவர்டிராஃப்ட் லயபிலிட்டி நமக்கு வராம இருக்காது. அவ்வளவு ஈசியா மாமா எங்க ரெண்டு பேரையும் தப்பிக்க விடமாட்டார். அதுக்கும் ஏதாச்சும் ஐடியா வச்சிருப்பார். அதனால அப்பா சொல்றா மாதிரி அவரும் அந்த கணக்க எஞ்சாய் பண்ண முடியாம அவர் குடுத்துருக்கற செக்கெல்லாம் ரிடர்ன் ஆகி பிசினஸ் அப்படியே நின்னு போயிரணும்.. அதான் முக்கியம்..’என்றான். ‘என்னப்பா?’

‘கரெக்டா மவனே.. இப்பத்தான் நீ என் மவன்னு நிரூபிச்சிட்டே.’ என்ற ரத்தினவேலும் ஆடிட்டரைப் பார்த்தார். ‘என்னய்யா.. அதான் தெளிவா சொல்லிட்டோம்லே.. அதுக்கு ஏதாச்சும் வளி இருக்கான்னு பாருங்க. பாக்கறதென்ன பாக்கறது.. வளி இருக்கும், இருக்கணும்.. போய் ஒங்க மண்டைய ஒடச்சிக்கிட்டு கண்டுபிடிங்க.. இல்லேய்யான்னு மட்டும் வந்து நிக்காதீய, சொல்லிட்டன்.’

சரி என்று அரைமனதுடன் வழக்கறிஞர் தலையை அசைக்க ஆடிட்டர் பரிதாபமாக அவரைப் பார்த்தார்.

‘சரிய்யா.. அது முடிஞ்சிது. பெறவு அந்த ஷேர் விஷயம். அத என்ன செய்ய போறீய? அந்த சேட்டுப் பயகிட்டருந்து அத மறுபடியும் நம்மால வாங்கிர முடியுமா?’ என்றார் ரத்தினவேலு.

ஓ! அது வேற இருக்கோ.. இன்னைக்கி நம்ம நேரம் சரியில்ல போலருக்கு என்பதுபோல் விழித்தனர் ஆடிட்டரும், வழக்கறிஞரும்.

‘அதெப்படிங்கய்யா முடியும்? நாம பணத்த வாங்கி பவர் குடுத்துட்டில்ல வந்துருக்கோம்.’

ரத்தினவேலு எரிந்து விழுந்தார். ‘ஏம்யா அது தெரியாமய்யா கெடக்கு? நாம வித்தோம்.. பவர குடுத்தோம். இப்ப வேணாங்கறோம். பணத்த திருப்பி குடுத்துட்டு பவர் கேன்சல் செஞ்சிர வேண்டியதுதானய்யா? அவந்தான் இன்னும் யாருக்கும் விக்கயில்லையே? என்ன நா சொல்றது?’

வழக்கறிஞர் ஆடிட்டரைப் பார்த்தார். ‘அய்யா அந்தாளு அதுக்கு ஒத்துக்கணுமே..?’

‘ஏம்யா அதுக்குத்தானெ ஒங்கள வளி கேக்கோம்? நானே எல்லாத்தையும் சொல்லிட்டா பெறவு நீங்க ரெண்டு பேரும் எதுக்குய்யா? வருசா வருசம் கொட்டிக் குடுக்கோம்லே.. அந்த சேட்டுப் பய ஒத்துக்கணும்னா நாம என்ன செய்யணும்? அந்த ரூட்ல சிந்திங்கய்யா.. அந்த பய ஏற்கனவே இவன் மாமன்கிட்ட பேரம் பேசியிருக்கான். அந்த டீல் நடக்கக் கூடாது. அது மட்டும் நடந்திருச்சின்னா எங்க ரெண்டு பேரையும் கம்பெனிய விட்டே தூக்கிருவான். பெறவு தலை கீழா நின்னாலும் அந்த பயல ஒன்னும் செய்ய முடியாது.’ என்றவர் தன் மகனைப் பார்த்தார். ‘எலேய் ராசேந்திரா.. நீ கம்பெனிக்குள்ள செஞ்சிருக்கற தில்லுமுல்லு எல்லாத்தையும் அந்த செல்வம் பய கண்டுபிடிக்கறதுக்கு ரொம்ப நேரமாவாது.. இந்த ரெண்டு பேரையும் மாத்திரம் நீ நம்பிக்கிட்டிருக்காம ஒம் புத்தியையும் தட்டிவிட்டு ஒரு வளிய கண்டுபிடிக்கற வளிய பாரு. சொல்லிட்டேன்.. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள இதுக்கு வளி கண்டுபிடிக்கலே.. பெறவு ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லேன்னு கைய களுவிட்டு நாம் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்..’ என்றவாறு எழுந்து நின்றார்.

ராசேந்திரனும் மற்ற இருவரும் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க ரத்தினவேல் படிகளிலேறி தன்னுடைய அறையை நோக்கி சென்றார்.

தொடரும்.

22.8.06

சூரியன் 120

‘என்னப்பா விஷயம் சொல்லுங்க?’

சிலுவை மாணிக்கம் நாடார் தான் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை இடமும் வலமுமாக அசைத்தவாறு பேசினார்.

‘எல்லாம் அந்த டாக்டர் விஷயம்தாம்மா. இன்னைக்கி போர்ட்லருந்தே அவன் ராஜினாமா பண்ண வச்சிட்டேன்லே.’

சுந்தரமும் ராசம்மாளும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தனர்.

‘என்னப்பா சொல்றீங்க? ரிசைன் பண்ண வச்சிட்டீங்களா? எப்படி?’

நாடார் நமட்டு சிரிப்புடன் இல்லையென்றவாறு தலையை அசைத்தார். ‘நான்னா.. நா இல்லேம்மா.’

செல்வம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். ‘என்ன மாமா சொல்றீங்க? புரியறாப்பல சொல்லுங்க.’

நாடார் இருக்கையிலிருந்து எழுந்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து மேசையின் விளிம்பில் அமர மேசை ஒரு பக்கமாக சாய்ந்தது. அதிலிருந்த கோப்புகள், தொலைப்பேசி எல்லாம் சரிய ராசம்மாளும் செல்வமும் பதற்றத்துடன் ஓடிப்போய் மேசையைப் பிடித்துக்கொள்ள நாடார் சிரித்தவாறே, ‘ஏய் விடுங்க.. விழுந்தா எடுத்து வச்சிக்கிர வேண்டியதுதானே. அதுக்குப் போயி எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பதறுரீங்க?’ என இருவரும் அவருடைய வார்த்தைகளில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்கிறதோ என்பதுபோல் பார்த்தனர்.

‘என்னப்பா ஏதோ பொடி வச்சி பேசறாப்பல இருக்கு. யார சொல்றீங்க? என்னையா இல்ல டாக்டர் அங்கிளையா?’ என்றாள் ராசம்மாள்.

அவளுடைய குரலிலிருந்த லேசான கோபத்தை ரசித்தார் நாடார். ‘என் பொண்ணு என்னைய மாதிரித்தானல? பாரு எப்படி சட்டுன்னு புடிச்சிக்கிட்டா?’

‘இருந்தாலும் ராசியொன்னும் விழுந்துரலையே?’ என்றான் செல்வம். ‘சரி அது இருக்கட்டும், நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க. அந்த டாக்டர் ஏன் போர்ட்லருந்து விலகுனார்?’

நாடார் அன்று காலையில் பாபு சுரேஷ் எச். ஆர். ஹெட்டாக நியமிக்கப்பட்டதில் துவங்கி இயக்குனர் கூட்டத்தில் நடந்ததுவரை எல்லாவற்றையும் சுருக்கமாக கூறினார். ‘அந்த ஃபேக்ஸ் எப்படி கரெக்டா அந்த நேரம் பார்த்து அங்க வந்துதுன்னுதான் எனக்கும் தெரியல செல்வம். ஆனா அத பார்த்ததும் ஆடிப் போய்ட்டான் அந்த டாக்டர். அவன் போட்டிருந்த திட்டமெல்லாம் பாளாப்போனதுமில்லாம போர்ட்லருந்தே விலக வேண்டியதாயிருச்சி. இதெல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு அந்த பயலுக்கு ஜால்ரா போடற மலையாள பயலுவளும், அந்த ரஜ்ஜத்தும் நினைச்சிட்டாங்க போலருக்கு. என்னெ அவனுக பார்த்த பார்வையில நா எரிஞ்சே போயிருப்பேன் போலருக்கு.’

ராசம்மாள் விளங்காமல் நாடாரைப் பார்த்தாள். ‘சரிப்பா. ஆனா அந்த ஃபைனான்ஸ் கம்பெனியிலருந்து ஒரு பாரோயர்ங்கற முறையிலதான சோமசுந்தரம் அங்கிள் கடன் வாங்கியிருக்கார். வட்டிக்கு வாங்குன கடந்தான? அதுக்காக ஏன் ரிசைன் பண்ணணும்?’

செல்வம் ராசம்மாளைப் பார்த்தான். ‘என்ன ராசி நீ? சோமசுந்தரம் அங்கிள் ஒரு சாதாரண பாரோயர் இல்லையே? அது மட்டுமில்ல. இதுல வேறொரு ஆங்கிளும் இருக்கு. அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில அவரோட ஆடிட்டரும் ஒரு டைரக்டர்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்த பேப்பர்ல எழுதியிருந்தா மாதிரி அந்த ஃபைனான்ஸ் கம்பெனி ஏற்கனவே அதுல பணம் போட்டவங்களுக்கு அசலக்கூட திருப்பிக் குடுக்க முடியாம திண்டாடிக்கிட்டிருக்கு. அந்த போர்ட்ல மெம்பரா இருந்த ஒருத்தரே வெளிய வந்து பத்திரிகைக்காரங்கள கூட்டி வச்சி அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில டைரக்டர்சா இருக்கறவங்களே அவங்க வாங்க லோன கட்டாம இழுத்தடிக்கறதுனாலத்தான் கம்பெனி இந்த நிலமைக்கு வந்திருச்சின்னு சொல்லும் போது இவரையும் குத்தம் சொல்றா மாதிரிதானே.. இவரே ஒரு பேங்க் போர்ட்ல இருக்கறவர். இவரே இப்படி செய்யலாமாங்கறா மாதிரி பேப்பர்காரன் எழுதறதுல என்ன தப்பு இருக்கு?’

நாடார் செல்வத்தை நெருங்கி அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தார். ‘பாத்தியா ராசி? எவ்வளவு கரெக்டா பேசறான் பார். நீ இவன் அளவுக்கு வரணும். அப்பத்தான் இந்த பிசினச மேனேஜ் பண்ண முடியும்.’

ராசம்மாள் உண்மைதான் என்பதுபோல் தலையை ஆட்டினாள். ‘ஆமாப்பா எனக்கு இது தோனலையே?’ என்றாள். ‘சரிப்பா. இதுல நீங்க சந்தோஷப்படறதுக்கு என்ன இருக்கு? சோமசுந்தரம் அங்கிள் போர்ட்ல இல்லாமருக்கறதுக்கு ஒங்களுக்கு எந்த வகையில லாபம்? எனக்கு புரியல.’

நாடார் செல்வத்தைப் பார்த்தார்.

‘என்ன ராசி நீ? சோமசுந்தரம் அங்கிள்தான் இப்போதைக்கு போர்ட்ல சீனியர் மோஸ்ட் மெம்பர். இன்னும் ஆறுமாசத்துல அவர் தானாவே ரிசைன் செஞ்சிருக்கணும். ஆனா அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிச்சிரணுங்கற ஐடியாவுலதான அந்த ஃப்ராடு பாபு சுரேஷ எச்.ஆர் ஹெட்டா போட்டு தேவையில்லாத ஒரு ரெக்ரூட்மெண்ட நடத்தி.. இப்ப அது முடியாதுல்லே. அதானே மாமா?’

நாடார் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘ஏற்கனவே நம்ம பேங்குல ஆஃபீசர்ங்க ஜாஸ்தி. டஇதுல இவன் கடன அடைக்கறதுக்கு பணம் வேணுங்கறதுக்காக தேவையில்லாம முன்னூறு பேருங்கள வேலைக்கு எடுத்து அவனுங்கக்கிட்டருந்து தலா ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு லஞ்சத்த வாங்கி.. என்னமா திட்டம் போட்டுருக்கான் பாத்தியா அந்த டாக்டர்? ஏண்டா செல்வம் அந்த ப்ளான நாம இப்ப அரங்கேத்துனா என்ன? நமக்கு மட்டும் காசு வேணாமா என்ன? என்னடே?’

ராசம்மாள் திடுக்கிட்டு எங்கே செல்வம் இதற்கு ஒத்து ஊதுவானோ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவள் தன்னைப் பார்த்த பார்வையை வைத்தே அவளுடைய உள் மனதை எடை போட்ட செல்வம் உடனே, ‘என்ன மாமா நீங்க? நீங்க எப்படி கேக்கலாம்? அப்புறம் நமக்கும் அந்த டாக்டருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ராசி நா சொல்றது சரிதான?’ என்றான்.

நாடார் உரக்க சிரித்தார். ‘எலேய்.. நீ எதுக்கு அவள சரிதானன்னு கேக்கே? ஒனக்கு ஒத்து ஊதவா?’

ராசம்மாள் கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘இங்க பாருங்கப்பா. நமக்கு இருக்கற பிரச்சினையில இந்த மாதிரியெல்லாம் யோசிக்காதீங்க. சொல்லிட்டேன். நான் இந்த கம்பெனிக்கு எம்.டி யா வரணும்னு உண்மையிலயே நீங்க நினைச்சீங்கன்னா இந்த மாதிரி தில்லுமுல்லுங்கல்லாம் இங்க நடக்கக்கூடாது, நடக்கவும் விடமாட்டேன்.  நியாயமா, நேர்மையா பிசினஸ் பண்ணி வர்ற லாபம் நமக்கு போறும்.’

நாடார் மேலும் உரக்க சிரித்தார். ‘டேய் இங்க பார்றா, இவள!’ என்றவர் படு சீரியசானார். ‘யம்மா ராசி.. இது சின்னப்பிள்ளைங்க விளையாட்டுல்லே.. இங்க நாம அடிபடாம இருக்கணும்னா நாம முதல்ல அடிக்கணும். நீ எம்.டியா இரு இல்லாம போ.. ஆனா எப்படி பிசினஸ் பண்ணணும்னு எனக்கோ இல்ல இந்த பயலுக்கோ சொல்லி தர்ற வேலைய மட்டும் விட்டுரு. என்னடா சொல்றே?’

செல்வம் தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தான். ‘மாமா, ராசி சொல்றதும் சரிதானே. நாம வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தாச்சி. இனி என்னத்தையாவது செஞ்சி நம்ம பிசினஸ மேல மேல வளக்கணுங்கறத தவிர அத ஸ்டெபிலைஸ் பண்றதுக்கு புது புது டெக்னாலஜியெல்லாம் கொண்டு வரணும் மாமா. அதுக்கு நம்ம ராசி மாதிரி படிச்சவங்கக் கிட்ட மேனேஜ்மெண்ட விடணும். ஹோட்டல் லைன்ல மட்டுமே இருந்தா போறாதுதானே.. யார் கூட எல்லாம் பார்ட்னர்ஷிப் வச்சிக்கிட்டா நல்லதுன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கணும். அந்த மாதிரி யோசிக்கிறதுக்கு ராசி மாதிரி படிச்சவங்களாலத்தான் முடியும்.’

‘சரிடா.. நீ சொல்றது சரியாத்தான் இருக்கு. ராசிதான் இன்னையிலருந்து இந்த கம்பெனிக்கு எம்.டி.’ என்றார் நாடார் புன்னகையுடன். ‘என்னம்மா எவ்வளவு சம்பளம் வேணும்?’

‘ஒரு லட்சம்’

நாடார் சிரிப்புடன், ‘வருசத்துக்குத்தானே.. கொஞ்சம் கொறச்சலாருக்கா மாதிரி தெரியுது. நம்ம கம்பெனிதானேன்னு நினைச்சியோ?’ என்றார்.

‘இல்ல மாமா, மாசத்துக்கு. என்ன ராசி?’ என்றான் செல்வம் கேலியுடன்.

ராசி அவனை முறைத்துப் பார்த்தாள். ‘எதுக்கு கேலி பண்ற மாதிரி கேக்கே?’

‘என்னது மாசத்துக்கா?’ என்றார் நாடார் அதிர்ச்சியுடன்.

‘அதுக்கு காரணம் இருக்குப்பா. சொல்றேன்.’ என்று ஆரம்பித்தாள் ராசம்மாள்.

அவள் சொல்ல சொல்ல அட! அப்படியா என்பதுபோல் வாயைப் பிளந்தார் நாடார்.

*******

‘சார்.. ஃப்ரீயா இருக்கீங்களா?’

தனக்கு முன்னாலிருந்த ஒரு கோப்பை கவனத்துடன் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்த சுந்தரலிங்கம் நிமிர்ந்து பார்த்தார். கோப்பில் தான் படித்துக்கொண்டிருந்த இடத்தில் ஒரு அடையாளத்தை வைத்துவிட்டு மூடி வைத்தார்.

‘வாங்க ஃபிலிப்.’

ஃபிலிப் சுந்தரம் உள்ளே நுழைந்து தன் கையிலிருந்த கோப்பு ஒன்றை மேசை விளிம்பில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

‘சொல்லுங்க’ என்றார் சுந்தரலிங்கம்.

ஃபிலிப் சுந்தரம் அன்று காலையில் சேர்மன் மாதவனின் அறையில் பாபு சுரேஷை எச். ஆர் ஹெட்டாக நியமித்த சூழ்நிலையை முதலில் விவரித்தார்.

‘நா கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயம் சார். டாக்டர் சார் சேர்மனுக்கு முன்னால வச்சி பாபு சுரேஷ் எச்.ஆர் ஹெட் போஸ்ட்டுக்கு சரியான சாய்ஸ்தானேன்னு கேக்க என்னால என்ன செய்ய முடியும் சொல்லுங்க. சரின்னு தலையை ஆட்ட சேர்மன் ஒடனே it is settled thenனு சொல்லிட்டார். அந்த நேரத்துல நாடாரோட மொகத்த பாக்கணுமே.’

சுந்தரலிங்கம் பதிலளிக்காமல் அவரையே பார்த்தார். ‘இது எத்தன மணிக்கு நடந்தது ஃபிலிப்?’ என்றார்.

அவருடைய கேள்வியின் நோக்கம் விளங்காமல், ‘ஏன், எதுக்கு கேக்கீங்க? ஏசிபிக்கு முன்னால சார்.’ என்றார் ஃபிலிப் சுந்தரம்.

‘காரணம் இருக்கு சார். நீங்க சேர்மன் ரூமுக்கு போறதுக்கு முன்னால சோமசுந்தரம் சேதுமாதவன அவரோட கேபின்ல வச்சி மீட் பண்ணிருக்கார். எனக்கென்னமோ அவரோட ஐடியாதான் பாபு சுரேஷ எச்.ஓவுக்கு கொண்டு வர்றதுன்னு தோனுது. அவங்க ரெண்டு பேருக்கும் சுருட்டறதுன்னா கொள்ளை ஆசையாச்சே. நம்ம வந்தனா சிக்கானது இவங்களுக்கு நல்லதா போயிருச்சி. அத அவரோட ஐடியான்னா நாடார் எப்படியும் ஒத்துக்கமாட்டார்னு டாக்டருக்கு தெரியும். அதான் சும்மா பேச்சுக்கு ஒங்கள இடையில இழுத்து விட்டுட்டாங்கன்னு நா சொல்றேன்.’

இப்படியும் இருக்குமோ என்று ஓடியது ஃபிலிப் சுந்தரத்தின் சிந்தனை. எதையுமே மேலோட்டமா பாக்கக் கூடாது போல.

‘சரி ஃபிலிப். அதுபோட்டும். அந்த ஃபேக்ஸ் விஷயம் என்னவாம்? ஒங்கக்கிட்ட சொன்னாங்களா?’

‘ஆமாம் சார்’ என்றார் ஃபிலிப் சுந்தரம். பிறகு அந்த விஷயத்தையும் சுருக்கமாக கூறி முடித்தார்.

சுந்தரலிங்கத்தின் முகத்தில் தோன்றி மறைந்தது சந்தோஷமா, அதிர்ச்சியா என்பது விளங்காமல் ஒரு நொடி தடுமாறிப்போனார் ஃபிலிப்.

‘அப்போ இந்த விஷயம் சுமுகமா செட்டில் ஆவற வரைக்கும் டாக்டர் போர்ட்ல வரமுடியாது, அப்படித்தானே?’ என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார்.

‘ஆமா சார். இதுல ஒரு பிரச்சினை என்னன்னா, இந்த ஃபேக்ஸ் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆஃபீஸ்லருந்து எப்படி கரெக்டான நேரத்துல நம்ம ஆஃபீசுக்கு வந்ததுங்கறார் நம்ம சேர்மன். சோமசுந்தரம் இது நாடாரோட வேலையாத்தான் இருக்கும்னு உறுதியா சொல்றார். நீங்க இன்னும் ரெண்டு நாளைல கண்டுபிடிச்சி சொல்லணும்னு எனக்கு ஆர்டர் போட்டுட்டார் நம்ம சேர்மன். இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேற ஒரு தொல்லையா போயிருச்சி.’

‘ஏன் ஒங்களுக்குத்தான் மீடியாலருக்கற எல்லாரையும் தெரியும்லே.. யார் கிட்டயாவது சொல்லி கண்டுபிடிச்சிற வேண்டியதுதானே?’

ஃபிலிப் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். ‘என்ன சார் சொல்றீங்க? ஒருவேளை அது நாடார்தான்னு தெரிய வந்தா? அத போயி நா கண்டுபிடிச்சி சேர்மன் கிட்ட சொல்லிட்டேன்னு வச்சிக்குங்க. அப்புறம் இந்த நாடார் முகத்துல எப்படி முளிக்கறது?’

‘அதுவும் சரிதான்.’ என்றார் சுந்தரலிங்கம்.

தன் மனதிலிருந்ததை இறக்கி வைத்த நிம்மதியுடன் எழுந்து நின்றார் ஃபிலிப். ‘நா வரேன் சார். இன்னும் அரை மணியில நம்ம சேர்மனுக்கு அஃபிஷியல் ரிசப்ஷன் இருக்கு. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு கூப்பிடறேன். நீங்களும் நம்ம ஈ.டியும் நேர்ல போயி மாதவன் சார கூட்டிக்கிட்டு வந்துருங்க.’

தன்னுடைய அறையின் கதவை ஓசைப்படாமல் சாத்திவிட்டு சென்ற ஃபிலிப்பையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சுந்தரலிங்கம். இந்த விஷயத்த தெரிஞ்சிக்காமயே இருந்துருக்கலாம் போலருக்கே என்றிருந்தது அவருக்கு.

தொடரும்..17.8.06

சூரியன் 119

போர்ட் மீட்டிங் முடிந்ததும் தன்னுடைய இலாக்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை கையிலெடுத்துக்கொண்டு புறப்பட்ட ஃபிலிப் சுந்தரம் தனக்கருகில் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தைப் பார்த்தார்.

அவருடைய முகத்தில் தெரிந்த ஒருவித சோகம் ஃபிலிப்பை சங்கடத்திற்குள்ளாக்கியது.

தன்னுடைய இருக்கையில் மீண்டும் அமர்ந்து அறையிலிருந்த மற்ற இளைய அதிகாரிகளை நீங்க போலாம் என்று கண்சாடை காட்டினார். அவர்கள் அதை புரிந்துக்கொண்டு தங்களுடைய கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியேற, ‘சார்.. என்ன யோசிக்கிறீங்க?’ என்றார் மிருதுவாக.

ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து நின்றார் சுந்தரலிங்கம்.

ஃபிலிப் சுந்தரமும் எழுந்து நின்று, ‘சார் என் ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சிட்டு ஒங்க ரூமுக்கு வரேன். எனக்கும் ஒங்கக் கிட்ட கொஞ்சம் பேசணும்.’ என்றார்.

சுந்தரலிங்கம் நின்று திரும்பி அவரைப் பார்த்தார். பிறகு சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேற ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னுடைய அறையை நோக்கி விரைந்தார் ஃபிலிப்.

அவர் அறையை நெருங்கியதும் அவருடைய காரியதரிசி, ‘பாபு சுரேஷ் சார் ரெண்டு மூனுதரம் கூப்ட்டுட்டார் சார்.’ என, ‘I’ll call him later. Tell him if he calls again. I need to be alone for a few minutes. Don’t route any calls to me till I tell you.’ என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய பிரத்தியேக தொலைப்பேசியை எடுத்து சுழற்றினார்.

எதிர்முனையில் எடுத்ததும் கடகடவென ஆணைகளைப் பிறப்பித்தார். இறுதியில் ‘I would like to know how the news leaked out. Find out.. Fast.’ என்ற ஆணையுடன் இ¨ணைப்பைத் துண்டித்துவிட்டு அன்றைய இயக்குனர் கூட்டத்தில் தன் இலாக்கா சார்பாக சமர்ப்பித்திருந்த கோப்புகளில் எடுக்கப்பட்ட முடிவு சம்பந்தப்பட்ட ஆணைகளை தன்னுடைய portable dictator இயந்திரத்தில் பதிவுசெய்து முடித்தார்.

பிறகு காரியதரிசியை அழைத்து இயந்திரத்தை அவரிடம் ஒப்படைத்து, ‘இதுல இன்னைக்கி போர்ட்ல வச்ச நம்ம டிப்பார்ட்மெண்ட்சோட ப்ரொப்போசல்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா instructionsஐயும் ரெக்கார்ட் பண்ணிருக்கேன். எல்லாத்தையும் ஒங்க பி.சியில ஏத்திட்டு என் லேப் டாப்லருக்கற ஷேர்ட் ஃபோல்டர்ல காப்பி பண்ணிருங்க. அத்தோட ஒரு டிராஃப்ட் காப்பி எடுத்து எச்.ஆர், இன்ஸ்பெக்ஷன் அப்புறம் அக்கவுண்ட்ஸ் செக்ஷன் ஹெட்ஸ் கிட்ட அவங்கவங்க போர்ஷன குடுத்து என்ன செய்யணுமோ அத உடனே செய்ய சொல்லுங்க. நான் சி.ஜி.எம் சார பார்த்துட்டு வர்றதுக்குள்ள செஞ்சி முடிச்சிருக்கணும். புரிஞ்சிதா?’ என்றார்.

அவரை ஐந்து வருடத்துக்கு மேல் பெர்சனலாக அறிந்திருந்த அவருடைய காரியதரிசி ராஜி எப்போதுமில்லாத ஒரு கண்டிப்பு அவருடைய குரலில் இருந்ததை கவனித்தாள். ‘இன்னைக்கி போர்ட்ல என்னவோ நடந்திருக்கு. இல்லன்னா சார் இந்த அளவுக்கு டென்ஷனா இருக்க மாட்டார்.’ என்று நினைத்தாள்.

இருப்பினும், ‘ஓக்கே சார்.’ என்றவாறு இயந்திரத்தையும் கோப்புகளையும் பெற்றுக்கொண்டு ராஜி வெளியேற ஃபிலிப் சுந்தரம் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவாறு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.

இது தன்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு கஷ்டமான காலக்கட்டம் என்பதை உணர்ந்தார். முந்தைய முதல்வர் இயக்குனர் குழுவிடம் ஒத்துப்போக முடியாமல் பதவி விலகியதிலிருந்தே இயக்குனர் குழுவில் மூத்தவர்களான சோமசுந்தரம் மற்றும் சிலுவை மாணிக்க நாடார் இருவருக்கும் இடையில் நடந்த பனிப்போரில் தானும் ஒரு பகடைக் காயாய் உபயோகிக்கப்பட்டதை நினைத்து அவ்வப்போது சோர்ந்துபோயிருந்தார்.

புது தலைவர் வந்து பதவியேற்றதும் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தவருக்கு அவர் பதவியேற்ற முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் மேலும் கவலையையே அளித்தது.

அன்று காலையில் முதல்வரின் அறையில் சோமசுந்தரம் அவரை ஒருவிதத்தில் நிர்பந்தித்து பாபு சுரேஷை எச்.ஆர் இலாக்காவிற்கு தலைவராக நியமித்தது, அதன் பிறகு ஆடிட் கமிட்டியில் பாபு சுரேஷை பரிந்துரைத்ததே நாந்தான் என்பதுபோல் அவரே உண்மைக்கு புறம்பாக கூறி நாடாரை வெறுப்பேற்றியது, அதன் பிறகு பாபு சுரேஷ் தன்னை சோமசுந்தரம் எச்.ஆர். தலைவராக நிர்பந்தித்ததன் பின்புலம் இதுதான் என்று கூறிய ரகசியத் திட்டம், பிறகு சேர்மன் அவரை தன்னுடைய அறைக்கு அழைத்து நாடார் முன்னிலையில் தன்னிடமிருந்து அந்த ரகசிய திட்டத்தை வரவழைத்தது, அத்துடன் நில்லாமல் சோமசுந்தரம் பற்றிய செய்தி எப்படி பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன் தனக்கு ஃபேக்ஸ் மூலம் வந்தது என்பதை கண்டுப்பிடிக்கும் பொறுப்பைத் தன் மேல் சுமத்தியது..

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சோமசுந்தரமே ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டு இயக்குனர் குழுவிலிருந்து ராஜிநாமா செய்தது...

ஒரே நாளில் இத்தனைக் குழப்பங்களா என்று மாய்ந்துப்போனார் ஃபிலிப்.. It’s quite natural that Sundaralingam Sir feels aggrieved that he has not been privy to these things..

அவரை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று நினைத்தார். Sooner the better என்று தோன்றவே எழுந்து அவருடைய பிரத்தியேக உணவறைக்குள் நுழைந்து முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்துக் கொண்டு சுந்தரலிங்கத்தின் அறையை நோக்கி விரைந்தார்.

*******

கார் கிளம்பி சென்னை அண்ணா சாலையிலிருந்த போக்குவரத்து சற்றே குறையும்வரை காத்திருந்த மஞ்சு திரும்பி வாகனத்தை செலுத்துவதில் கவனமாயிருந்த தன் கணவன் ரவியைப் பார்த்தாள்.

பாவம்.. மனிதர் பாதி ஆளா இளைச்சி.. இந்த ஒரு மாசமா தனியா இருந்தது அவர இந்த அளவுக்கு பாதிச்சிருக்கே.. இது தெரியாம நான் அங்க எவ்வளவு நிம்மதியா இருந்துருக்கேன்..

‘நீ நெனக்கிறா மாதிரி இல்லேடி மஞ்சு.. நேக்கென்னவோ ரவி ஒரு அடம் புடிக்கற குழந்தையாட்டந்தான் தெரியறது. அவருக்கே தனக்கு என்ன வேணுங்கறது தெரியறதான்னு தெரியலை.. நீ விட்டுட்டு போனதும் மனுசன் தவியா தவிச்சி போய்ட்டார் தெரியுமோ.. பாவம்டி சீக்கிரம் வந்து சேந்துரு..’ பக்கத்துவீட்டு மாமி அவளை தேடி வந்து உபதேசித்தபோதுதான் தன்னுடைய தவறு புரிந்தது அவளுக்கு.

‘என்ன மஞ்சு..ஏதோ யோசனையில இருக்கறாப்பலருக்கு.’

மஞ்சு திடுக்கிட்டு திரும்பி ரவியைப் பார்த்தாள். ‘இல்ல ரவி.. ஒங்களப் பத்தித்தான்..’

ரவி புன்னகையுடன் அவளைப் பார்த்தான். ‘என்னடா இந்தாள இனியும் எத்தன நாளைக்கு சகிச்சிக்கிட்டு இருக்கறதுன்னா?’

மஞ்சு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன ரவி? ஏன் இப்படி சொல்றீங்க?’

ரவி சிரித்தான். ‘ஏய் Don’t get upset. சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..’

மஞ்சு சமாதானமடைந்து சாலையை நோக்கி திரும்பினாள். சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாயிருந்ததால் ரவியும் மேற்கொண்டு பேசாமல் வாகனத்தை செலுத்துவதில் கவனமாயிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாகன நெரிசலைக் கடந்ததும் ரவி திரும்பி அவளைப் பார்த்தவாறு பேசினான். ‘இன்னைக்கி ஆஃபீஸ் ஃபைல்ச படிச்சதுல என்னெப் பத்தி ஏதாவது ஒரு ஒப்பீனியன் ஃபார்ம் பண்ணியிருப்பியே?’

‘ஆமாங்க. ஆனா அத வெளிப்படையா சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா சொல்றேன்.’ என்றாள் மஞ்சு.

‘சொல்லேன். அதுக்காகத்தான ஒன்னைய கூப்பிட்டுக்கிட்டு போனேன்? என் மேல அக்கறையிருக்கறவங்க நான் செஞ்சிருக்கறது இந்த மாதிரியான தண்டனைக்குரியதுதானான்னு தெரிஞ்சிக்கணும்னு நினைச்சித்தான் உன்னையும் அந்த ஃபைல்ச படிக்க வச்சேன். சொல்லு.. மனசுலருக்கறத மறைக்காம சொல்லு..’

மஞ்சு சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, ‘நீங்க செஞ்சது ஒங்க பேங்கோட ரூல்சுக்கு நிச்சயமா முரணானதுதான் ரவி. இதுவே கவர்ன்மெண்ட் ஆஃபீசாருந்தா நிச்சயம் இதவிட சீரியசான பனிஷ்மெண்ட் கிடைச்சிருக்கும்னு நா ஃபீல் பண்றேன்.’ என்றாள்.

மஞ்சுவின் இத்தகைய பதிலை முற்றிலும் எதிர்பார்க்காத ரவி அதிர்ச்சியுடன் திரும்பி அவளைப் பார்த்தான். ‘ஏன் அப்படி சொல்றே?’

மஞ்சு அவனை பார்க்காமல் சாலையைப் பார்த்தவாறே பதிலளித்தாள். ‘ரவி, நீங்க ஒங்க பார்வையிலருந்து மட்டும் பாக்கறீங்க. ஒங்க நோக்கம் எல்லாம் பிசினச டெவலப் பண்ணணும்.. மேல, மேல க்ரோத் (growth) காமிச்சிக்கிட்டே இருக்கணுங்கறதுதான்..ஆனா ஒங்க நோக்கத்த அச்சீவ் பண்றதுக்காக காலம் காலமா இருந்துக்கிட்டு வர்ற ப்ரொசீஜர்சே (procedures) வயலேட் (violate) பண்றது எந்த அளவுக்கு சரிங்கறத நீங்க யோசிச்சி பாக்கல்லன்னு நினைக்கிறேன். நீங்க செஞ்சிருக்கற ஒவ்வொரு வயலேஷனும் ஒங்க கஸ்டமருக்குத்தான் சாதகமா இருந்துருக்கே ஒழிய பேங்குக்கு இல்லையே.. நீங்க ஒங்க கஸ்டமர்ச நம்பி டெலிவரி லெட்டர்ல ரூல்சுக்கு எதிரா கையெழுத்து போட்டு குடுத்துருக்கீங்க. ஏன்? அவங்க குட்ஸ டெலிவரி எடுத்து வித்து பணத்த கட்டி பேங்க்லருக்கற இன்வர்ட் பில்ச ரீடீம் (redeem) செஞ்சிருவாங்கன்னு நம்பித்தானே? ஆனா ஏறக்குறைய எல்லா கஸ்டமர்சுமே ஒங்கள ஏமாத்தியிருக்காங்களே? அதனால இப்ப யாருக்கு நஷ்டம் ரவி? பேங்குக்கு பணம் நஷ்டம்.. ஒங்களுக்கு? பேர் நஷ்டம்.. ஏறக்குறைய இருபது வருசமா கஷ்டப்பட்டு நீங்க உண்டாக்கி வச்சிருந்த நல்ல பேர், ரெப்யூட்டேஷன்.. எல்லாம் ஒன்னுமில்லாம போயிருச்சி.. சரிதானே ரவி?’

மஞ்சு சொல்வதில் இருந்த நியாயம் புரியவே ரவி மவுனமாக வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான். இருந்தாலும் அது மஞ்சுவின் தரப்பிலிருந்து வந்ததுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனாக விரும்பித்தான் இந்த கேள்வியை அவளிடம் கேட்டான்.

கணவன் என்ன செய்திருந்தாலும் அதில் தவறில்லை என்ற கோணத்தில் பார்க்க அவளொன்றும் படிப்பறிவில்லாத பாமரப் பெண் அல்லவே. படித்து பட்டம் பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு அலுவலகத்தில் பணியாற்றியவளாயிற்றே..

‘என்ன ரவி.. நா ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?’

ரவி இல்லையென்றவாறு தலையை அசைத்தான். ‘இல்ல மஞ்சு.. சரியாத்தான் இருக்கு உன் வாதம்.. சரி.. இப்ப சொல்லு.. இதுலருந்து என்னால விடுபட்டு இந்த வேலைய காப்பாத்திக்க முடியும்னு நீ நினைக்கியா?’

மஞ்சு சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ‘முடியுங்க. என்க்வயரின்னு வந்துட்டா நாம எந்த தப்பும் செய்யலேங்கற வாதத்ததான முன் வைக்கணும்? நம்ம பக்கத்து வீட்டு மாமா கூட இன்னைக்கி காலையில அதத்தான் சொன்னார். மஞ்சு, ரவி என்ன செஞ்சிருக்காருங்கறது முக்கியமில்ல.. அதுக்கு பின்னாலருக்கற பாசிட்டிவ் மோட்டிவ நாம வெளியில கொண்டுவரணும்.. அவர் செஞ்சதுக்கு தப்பான மோட்டிவ் ஏதும் இல்லங்கறது நாம ப்ரூவ் பண்ணணும்னு சொன்னார். அதத்தான் இப்ப நாம செய்யணும்..’ என்றாள் உறுதியுடன்..

ரவி தன்னையுமறியாமல் அவளை மனதுக்குள் மெச்சிக்கொண்டான். இந்த மாதிரி புத்திசாலி மனைவிய அடையறதுக்கு நா எவ்வளவு குடுத்து வச்சிருக்கணும்? ஆரம்பத்திலருந்தே இவ சொன்ன பேச்ச கேட்டு நடந்திருந்தா எவ்வளவு நல்லாருந்துருக்கும்? கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்.. ஊம்.. ‘தாங்ஸ் மஞ்சு.. I am really grateful to you.. நா என்ன நினைச்சிக்குவேன்னு யோசிக்காம மனசுலருக்கறத வெளிப்படையா சொன்னதுக்கு தாங்ஸ்..’

மஞ்சு பதிலளிக்க முயல்வதற்கு முன் வாகனம் அவர்களுடைய வீட்டையடைய வாசலிலேயே இறங்கிக்கொண்டு ரவி அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வரும்வரை அவனுக்காக காத்திருந்தாள்..

தொடரும்

16.8.06

சூரியன் 118

செல்வமும் ராசம்மாளூம் வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நேரே திநகரிலிருந்த தங்களுடைய தலைமையகத்திற்கு சென்றனர்.

‘இங்க பார் செல்வம். நேத்தைக்கி ராத்திரி அப்பா நீயே ஏம்மா ராசேந்திரன் இடத்துலருந்து கம்பெனிய மேனேஜ் பண்ணக் கூடாதுன்னு கேட்டப்போ என்னடா இது நம்மளால மேனேஜ் பண்ண முடியுமான்னு ஒரு நிமிசம் யோசிச்சேன். ஆனா அடுத்த நிமிசமே ராசேந்திரன் என்னைய படுத்துன பாடு கண் முன்னால வந்து போச்சி.. இத நாம ஏன் ஒரு சேலஞ்சா எடுத்துக்கிறக்கூடாதுன்னு தோனுச்சி.. அதான் ஒடனே சரின்னுட்டேன்.. இத அப்பாவே முதல்ல எதிர்பார்க்கல. சரியா யோசிச்சி சொல்லும்மான்னார்.’

செல்வம் உடனே பதில் கூறாமல் புன்னகையுடன் தன் மாமன் மகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன செல்வம் அப்படி பாக்கே..?’

செல்வம் புன்னகையுடன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தான்.

‘என்னடா இவ.. கொஞ்சம் தலையில வெய்ட் கூடிட்டா மாதிரி தெரியுதேன்னு யோசிக்கியோ?’

செல்வம் உரக்க சிரித்தான். ‘சேச்சே.. ஒன்னைய பத்தி அப்படி நினைப்பேனா? மாமாவுக்கேத்த பொண்ணுன்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்.. மாமாவும் இப்படித்தான். ஒரு விசயத்துல இறங்கறதுக்கு ரொம்ப யோசிக்கல்லாம் மாட்டார். சட்டுன்னு எறங்கிருவார். என்னடா இது இவ்வளவு பெரிய தொகைய கொண்டு போடறாரேன்னு தோணும்.. ஆனா மாமா இதுவரைக்கும் எடுத்த எந்த ஸ்டெப்பும் ஃபெயிலாவுல.. என்ன, சம்மந்திய தேர்ந்தெடுக்கற விசயத்துலதான் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோன்னு தோனுது.’

ராசம்மாள் பதில் பேசாமல் தன் கையிலிருந்த பேப்பர் வெய்ட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘அதுக்கு நாந்தான் காரணம் செல்வம். நான் பிடிச்ச பிடிவாதம் அப்படி. அன்னைக்கி என் கணவுகள் எல்லாமே சினிமா ஆக்ட்ர மாதிரி ஒரு புருசன புடிக்கணும். என்னெ கருப்பு, கருப்புன்னு சொல்லி கேலி செஞ்ச என் ஃப்ரெண்ட்ஸ் முன்னால அவர கொண்டு போயி நிறுத்தி பாருங்கடின்னு பெரும அடிச்சிக்கணும்.. இது ஒன்னுதான் என் நெனப்பு முழுசும்.. அம்மாவும் என் கூட கட்சிங்கறதுனால அப்பாவால ஒன்னும் செய்ய முடியல..’

ராசம்மாளின் குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்க செல்வம் மேசைக்கு குறுக்கே எம்பி அவளுடைய கரங்களைப் பிடித்து அழுத்தினான்.. ‘ஏய்.. இப்ப எதுக்கு அதெல்லாம்?’

ராசம்மாள் மெள்ள தன் கரங்களை விடுவித்துக்கொண்டு எழுந்து சாலையை நோக்கியிருந்த ஜன்னல் வழியாக வெளியே சாலையை பார்த்தாள்.

நான்கு மாடிகளுக்குக் கீழே திநகர் தியாகராய தெரு படு பிசியாக இருந்தது. திருமணம் முடிந்த புதிதில் இதே அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள்.. இந்த இரண்டு வருடங்களில் கடைகளின் எண்ணிக்கையில் பெரிதாய் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லையென்றாலும் வந்து சென்ற வாகனங்களின் எண்ணிக்கையில் பயங்கர மாறுதல் ஏற்பட்டிருந்ததை உணர முடிந்தது.

வார நாளில் நண்பகல் நேரத்திலும் எப்படி இத்தனை பேர் கடைகளில் ஏறி இறங்கி..

‘லஞ்ச் ப்ளேட் மட்டும் வார நாளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேல இருக்கும்மா.’ என்று கல்லா பெட்டியிலிருந்த மேனேசர் ஒருமுறை அவளிடம் கூறியபோது நம்ப முடியவில்லை அவளால்.

‘என்ன யோசிக்கே ராசி?’

செல்வத்தின் குரல் அவளை நிகழ்காலத்திற்கு கொண்டுவர திரும்பி பார்க்காமலே பேசினாள். ‘அன்னைக்கிருந்த ராசி இல்ல செல்வம் இந்த ராசி.. இந்த ரெண்டு வருசத்துல எனக்கு கிடைச்ச பாடம் இருக்கே.. அது எந்த பொண்ணுக்கு கிடைச்சிருந்தாலும் அவளும் என்னைய போலவே அடியோட மாறிப்போயிருப்பா.. அப்ப இருந்த ராசி வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத ஒரு பணக்கார அப்பாவோட ஒரே பொண்ணு.. ஆனா இப்பருக்கற ராசி.. தனக்கு நடந்த அக்கிரமங்களுக்கு பழிவாங்க துடிக்கற வெறும் ஒரு சராசரி பெண்ணா மட்டும் இல்ல. பொண்ணுன்னா சமையல்கட்டுக்குத்தான் லாயக்குன்னு அடக்கிவச்சிருக்கற ராசேந்திரன் மாதிரி ஆம்பிளைகளுக்கு எங்களாலயும் நீங்க சாதிச்ச அளவுக்கு மட்டுமில்ல அதுக்கு மேலயும் சாதிக்கமுடியும்னு செஞ்சிக்காட்ட துடிக்கற ஒரு...’

அவளுடைய குரலில் இருந்த உறுதியைப் பார்த்து செல்வம் பிரமித்துப் போனான். இது அவன் இதுவரை அறிந்திராத ராசம்மாள் என்பதை உணர்ந்தான்.. இதில் தன் பங்கு என்ன என்று சென்றது அவனுடைய சிந்தனை.

அதற்கு பதிலளிப்பது போல், ‘இப்ப சொல்லு.. உன்னால எனக்கு எந்த அளவுக்கு இதுக்கு ஹெல்ப் பண்ண முடியும்?’ என்றாள் ராசம்மாள் தன் இருக்கைக்கு திரும்பியவாறு..

‘ஒனக்கு என்ன வேணும்னாலும் செய்வேன் ராசி..’

ராசம்மாள் பதிலளிக்காமல் சலனமில்லா முகத்துடன் சில விநாடிகள் அவனையே பார்த்தாள்.
‘ஒன்னால எவ்வளவு நாளைக்கு சென்னையில தங்க முடியும்?’

‘அப்படீன்னா?’

‘ஊர்ல நீ இப்ப என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?’

செல்வம் சிரித்தான். ‘என்ன ராசி நீ ரொம்ப சீரியசா கேள்வி கேக்கே? ஒனக்கு இப்ப என்ன தெரியணும்?’

ராசம்மாள் முறைத்தாள். ‘இங்க பார் செல்வம். I am dead serious. புரிஞ்சிக்கோ. இப்ப நீ திருநெல்வேலியில செஞ்சிக்கிட்டிருக்கற பிசினஸ் என்ன? தெரியாமத்தான் கேக்கேன். நம்ம மாதிரியே ஹோட்டல் பிசினசா.. இல்ல வேற ஏதாச்சுமா?’

செல்வம் பிடிவாதமாக, ‘எதுக்கு கேக்கே.. ஒனக்கு எவ்வளவு நாளைக்கு நான் இங்க இருக்கணுமோ அவ்வளவு நாளைக்கு இருக்கேன் ராசி.. பெறவென்ன?’ என்றான்.

ராசம்மாள் அவனை தீர்க்கமாகப் பார்த்தாள். ‘அது போறாது.. நீ இங்க என் கூடவே இருக்கணும். நீதான் என்னோட ஸ்ட்றேட்டஜிஸ்ட்.. ஒன்னைய முன் வச்சித்தான் ராசேந்திரன் கூட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்போறேன்.. சொல்லு..’

அடேங்கப்பா! என்று நினைத்தான் செல்வம். இவ மாமாவுக்கு மேல இருப்பா போலருக்கே என்று ஒரு நொடி வாயடைத்துப் போய் அவளையே பார்த்தான்.

‘நீ திருநெல்வேலியில ரன் பண்ணிக்கிட்டிருக்கற பிசினசோட டர்னோவர் எவ்வளவு இருக்கும்? எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணியிருப்பே?’

செல்வம் அவளுடைய வர்த்தக தொனியைக் கேட்டு உரக்க சிரித்தான். ‘ஏய்.. ஏய்.. என்ன பயங்கர பிசினஸ் உமனாருப்பே போலருக்கு?’

ராசம்மாள் சிடுசிடுத்தாள். ‘செல்வம் விளையாடாத.. சீரியசா கேக்கேன்.. உன் பிசினஸ் மொத்தத்தையும் நா வாங்கிக்கறேன்.. நீ ஏதோ ஸ்வீட் கடை வச்சிருக்கேன்னு அப்பா சொல்லியிருக்கார். அத அப்படியோ ஹோட்டலா கன்வர்ட் செஞ்சிரலாம். அது நம்ம ஹோட்டலோட பிராஞ்சாயிரட்டும்.. அத பாத்துக்கறதுக்கு நம்ம மத்த பிராஞ்ச் மாதிரி ஒரு மேனேஜர போட்டுரலாம். நீ இங்க பெர்மனெண்டா ஷிஃப்டாயிரு.. என்ன சொல்றே?’

செல்வம் ஊருக்கு கிளம்பி வந்தபோது எடக்கு மடக்காய் கேள்வி கேட்ட தன் மனைவி செல்வியை நினைத்துப் பார்த்தான். ராசி சொல்வதைக் கேட்டால் அவள் வேறு என்ன வீம்பு செய்வாளோ என்று நினைத்தான்.

‘என்ன ,செல்வி என்ன சொல்வாளோன்னு நினைக்கியாக்கும்?’

செல்வம் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். இல்லையென்று தலையை அசைத்தான்.

ராசம்மாள் சிரித்தாள். ‘ஏய் பொய் சொல்லாத. பாம்பின் கால் பாம்பறியுங்கறத கேட்டதில்ல? செல்விய பத்தி எனக்கு தெரியும். அவ வாயடிச்சாலும் புத்திசாலி. அதனாலயே எனக்கு அவள புடிக்கும். அவகிட்டருந்து எதயும் நீ மறைக்காத. அதுதான் முக்கியம். நீ ஊருக்கு வரும்போதுகூட அப்பா கூப்ட்டாருன்னுதான சொல்லியிருக்கே. ஆனா நா செல்விக்கிட்ட என்கூட வக்கீல் வீட்டுக்கு வரணும்னுதான் சொன்னேன்.. எப்பவுமே பொம்பளக்கிட்டருந்து ஒரு ஆம்பள மறைக்கிறப்பத்தான் சந்தேகமே வரும்.’

‘சரி.. நீ சொல்றது சரிதான். செல்விக்கு நம்ம ரெண்டு பேரையும் பத்தி லேசா சந்தேகம் இருக்கறது உண்மைதான். அதனால அவ அவ்வளவு ஈசியா சென்னைக்கு ஷிப்ட் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டா. ஆனா அதப்பத்தி நீ கவலப்படாத.. நா பாத்துக்கறேன்.. வந்தா ஆச்சி.. இல்லைன்னா நீ இங்கயே கெடன்னு நா பொறப்பட்டு வந்துருவேன்..’

ராசம்மாள் இல்லையென்பதுபோல் தலையை உறுதியுடன் அசைத்தாள்.

‘இல்ல செல்வம். நீயும் ராசேந்திரன மாதிரி பிஹேவ் பண்ணாத.. செல்வியும் நம்ம போராட்டத்துல முழுசா கலந்துக்கணும். அப்பத்தான் நம்மளால ராசேந்திரனையும் மாமாவையும் முழுசா ஜெயிக்க முடியும். செல்விக்கு இதுல ஈடுபாடு இல்லன்னு ராசேந்திரனுக்கோ மாமாவுக்கோ தெரிஞ்சா போறும் அவள ஒனக்கு எதிரா திருப்பி விட்டுருவாங்க.. அப்புறம் என்னைய மாதிரியே ஒன் வாழ்க்கையும் நாசமா போயிரும்.. வேணாம்.’

செல்வம் உண்மையிலேயே வியந்துபோய் அவளைப் பார்த்தான். எப்படி இவளுக்கு இரண்டு வருடங்களில் இத்தனை புத்திசாலித்தனம் வந்திருக்கும்?

‘நீ சொல்றதும் வாஸ்தவந்தான் ராசி.. இப்ப சொல்லு நான் என்ன செய்யணும்?’

ராசம்மாள் மீண்டும் எழுந்து அறையின் குறுக்கே நடந்துச் சென்று ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தாள். சிலுவை மாணிக்கம் நாடார் காரிலிருந்து இறங்குவது தெரிந்தது. அப்பா மேல ஏறி வர்றதுக்கு இன்னும் அஞ்சி நிமிஷம் ஆகும். திரும்பி செல்வத்தைப் பார்த்தாள்.

‘இங்க பார் செல்வம்.. அப்பா வந்துக்கிட்டிருக்கார். நாம இப்ப பேசிக்கிட்டிருந்தது நமக்குள்ளயே இருக்கட்டும். முக்கியமா செல்வி விஷயம். நான் சமயம் பார்த்து அப்பாக்கிட்ட சொல்லிக்கறேன்.. நீ இன்னும் ரெண்டு நாளைல வந்திடறேன்னு மட்டும் செல்விக்கு ஃபோன் போட்டு சொல்லு. அப்புறமா நானும் அவகிட்ட பேசறேன். என்ன, சரியா?’

அவள் பேசி முடித்து வாயிலைப் பார்க்கவும் சிலுவை மாணிக்கம் நாடார் அறைக்குள் புன்னகையுடன் நுழையவும் சரியாக இருந்தது.

ராசம்மாள் தன் தந்தையின் புன்னகைப் பூத்த முகத்தைப் பார்த்தாள். நாடார் தன் உணர்ச்சிகளை லேசில் வெளியே காட்ட மாட்டார் என்பது அவளுக்கு தெரியும். ஆகவே, ‘என்னப்பா ரொம்ப சந்தோசமாருக்கீங்க போலருக்கு?’ என்றாள் புன்னகையுடன்.

நாடார் உரக்க சிரித்தவாறே சற்றுமுன் ராசம்மாள் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.

'ஆமாம்மா... நா கொஞ்சமும் எதிர்பார்க்காத விசயம் ஒன்னு இன்னைக்கி நடந்திருச்சி.. அதான்..’ என்றவாறு தன் எதிரில் இருந்த் இருவரையும் மாறி, மாறி பார்த்தார்.

தொடரும்..

15.8.06

சூரியன் 117

தன்னுடைய அடுத்த நான்காண்டு கால வங்கி முதல்வர் வாழ்க்கையை அன்று காலையில் துவக்கியிருந்த எம்.ஆர். மாதவன் தன்னுடைய முதல் இயக்குனர் கூட்டத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேர்ந்த இயக்குனர்களைப் பார்த்தவாறு மேசையின் தலைமை இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவருக்கு வலப்புறத்தில் இ.டி. சேதுமாதவன், அவரையடுத்து வங்கியின் இரு முதன்மை பொது மேலாளர்களான சுந்தரலிங்கம், ஃபிலிப் சுந்தரம் அமர்ந்திருக்க அவரையடுத்து வங்கி தலைமையகத்தின் மற்ற உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.

இயக்குனர்கள் கோபால் மேனன், ரஜ்ஜத் கபூர், சிவசுப்பிரமணி நாடார், ராஜகோபாலன் நாயர், என ஒவ்வொருவராக வந்து சேர சற்று நேரம் கழித்து ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியான இயக்குனர் சாம்பசிவம் வந்தமர்ந்தார்.

சிலுவை மாணிக்கம் நாடாரையும் சோமசுந்தரத்தையும் காணாததால் கூட்டத்தை துவக்க முடியாமல் எல்லோரும் ஒருவித தவிப்புடன் காத்திருக்க சற்று நேரத்தில் நாடார் மட்டும் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து மாதவனைப் பார்த்தார்.

‘மன்னிச்சிருங்கய்யா, கொஞ்சம் நேரமாயிருச்சி.. அவசரமா ஒரு வேலை.. கூட்டத்த துவக்கலாம்யா..’

மாதவன் தயக்கத்துடன் கம்பெனி செக்கரட்டரியைப் பார்த்தார். அவர் நாடாரைப் பார்த்தார். ‘சார்.. டாக்டர் இன்னும் வரல.. லீவாருந்தா ஃபோன் செஞ்சிருப்பார். அதான் இன்னும் கொஞ்சம் நேரம் வெய்ட் பண்லாம்னு...’

நாடார் அப்போதுதான் பார்ப்பதுபோல் மேசையில் அமர்ந்திருந்தவர்களை ஒருமுறை பார்த்தார்.

டேய்.. டாக்டரே.. கடைசியா ஒருதரம் வருவே உன்னை அவமானப்படுத்தலாம்னு காத்துக்கிட்டிருந்தேன்.. தப்பிச்சிட்டே..

‘ஓ.. அவர் வரலையா? சரி அதுக்கெதுக்குய்யா காத்துக்கிட்டிருக்கணும்.. ஃபோன் போட்டு கேட்டுறவேண்டியதுதானே.. என்ன செக்கரட்டரி ஐய்யா.. கூப்டுங்க.. அவருக்கேதாச்சும் ஆப்பரேஷன் இருக்கோ என்னமோ?’ என்றார் கேலியுடன்.

அதே நிமிடம் மாதவனுடைய செல் ஃபோன் ஒலிக்க மாதவன் எடுத்து, ‘Yes Madhavan here.’ என்றார்.

எதிர் முனையிலிருந்து வந்த சோமசுந்தரத்தின் குரல் அவரை வியப்பில் ஆழ்த்த, ‘டாக்டர் we are waiting for you .’ என்றார் சற்றே உரக்க.

அடுத்த சில நிமிடங்கள் அவர் எதிர்முனையிலிருந்து வந்த குரலுக்கு அவ்வப்போது தலையை அசைக்க மேசையை சுற்றிலுமிருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘Yes Doctor.. I regret your decision to quit.. that too on my first day.. I am really sorry..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு எல்லோரையும் ஒருமுறை பார்த்தார் மாதவன்.

‘என்னய்யா சொல்றாரு? வராராமா இல்லையா?’ என்றார் நாடார்.

சரியான ஞான சூன்யம் என்று தனக்குள் முனுமுனுத்த சேதுமாதவன் ‘டாக்டர், போர்ட்லருந்து ராஜிநாமா செஞ்சிட்டாராம் நாட்டார்.’ என்றார்..

நாடார் இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததுதான். இருப்பினும், ‘என்னய்யா.. இவர் சொல்றது உண்மையா?’ என்றார் மாதவனிடம்.

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்த மாதவன்.. தன் இடப்பக்கம் அமர்ந்திருந்த இயக்குனர்களைப் பார்த்து சோமசுந்தரம் சற்று முன் தன்னிடம் தொலைப்பேசியில் கூறியதை சுருக்கமாக கூறிவிட்டு, ‘I propose that a resolution be passed appreciating his services to the Board during this tenure as a Director’ என்றார்.

இயக்குனர்களில் ஒருவரான ரஜ்ஜத் கபூர் எழுந்து, ‘Yes Sir.. I second the resolution.. He has been a tower of strength for the entire Board..’ என்றவாறு நாடாரை கேலியுடன் பார்த்தார்.

டேய், வடநாட்டுலருந்து வந்துட்டு என்னையே நக்கலா பாக்கியா? அந்த பயலோட நாமினிதான நீயி.. அடுத்தது ஒனக்குத்தான்.. வச்சிக்கறேன்..

‘ஐயா நீங்க என்ன சொன்னீய.. இந்த கப்பூர் சாப் என்ன சொல்லுறாருன்னு தமிள்ல சொன்னீங்கன்னா நல்லாருக்கும்’ என்றார் நாடார் மாதவனிடம்.

அன்று காலையில் அவருடைய காரியதரிசி சுபோத், ‘Sir Nadar can’t understand English.. So the entire proceedings of the Board would normally be held in Tamil only’ என்று தன்னிடம் கூறியிருந்தது நினைவுக்கு வர, ‘மன்னிச்சிருங்க நாடார்.. காலையிலயே சுபோத் சொல்லியிருந்தார்.’ என்றவர் தொடர்ந்து சோமசுந்தரம் தன்னுடைய இயக்குனர் பதவியை ராஜிநாமா செய்திருந்த விபரத்தை தமிழில் கூறினார்.

‘எதுக்காம்யா? அந்த ஃபேக்ஸ் சமாச்சாரமா?’

ஆமாம் என்பதுபோல் மாதவன் தலையை அசைக்க அறையிலிருந்த மற்ற இயக்குனர்கள் என்ன ஃபேக்ஸ்.. என்பதுபோல் மாதவனைப் பார்க்க அவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த நகலை எடுத்து ஒருமுறை பார்த்துவிட்டு இயக்குனர் ரஜ்ஜத் கபூரிடம் கொடுக்க அவர் வாசித்துவிட்டு மற்ற இயக்குனர்களிடம் கொடுத்தார்.

இயக்குனர்கள் ஒவ்வொருவராக அதை வாசித்து முடித்துவிட்டு திருப்பித்தர அதை வாங்கி தன் முன்னர் வைத்த மாதவன், ‘நாம கூட்டத்த தொடரலாமா? இல்ல அட்ஜார்ன் பண்ணணுமா? What do you think Sir?’ என்றார் சாம்பசிவத்தைப் பார்த்து.

அவர் புன்னகையுடன் எழுந்து நின்று எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.

‘இது ஒங்களுக்கு முதல் மீட்டிங் மிஸ்டர் மாதவன். உங்கள மற்ற இயக்குனர்கள் சார்பா qபார்மலா இன்வைட் பண்ண வேண்டிய நேரத்துல போர்ட்ல சீனியர் மோஸ்ட் மெம்பர் ரிசைன் செஞ்சிருக்கறது ஒரு அன்ஃபார்ச்சுனேட் விஷயம். But I think he has taken the right decision.. அவர் எடுத்த முடிவு சரியான முடிவுன்னுதான் நான் நினைக்கறேன்.. அவர் அந்த தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியிலருந்து எடுத்த லோன் நியாயமான காரணத்துக்காக இருந்திருக்கலாம். ஆனா அவர் சரியான சமயத்துல திருப்பிக் கட்டாததுனால அவரோட இண்டெக்ரிட்டியவே சந்தேகிக்கறா மாதிரி ஒரு நியூஸ் பேப்பர்ஸ்ல வந்துருச்சி.. அதுக்கு அந்த கம்பெனியோட இப்போதைய மோசமான நிதி நிலமையும் ஒரு காரணமாருக்கும்னு நான் நினைக்கிறேன். ஆனா அதுக்கு முழுப் பொறுப்பு எடுத்துக்கிட்டு டாக்டர் சோமசுந்தரம் நம்ம பேங்கோட பேர் டார்னிஷ் ஆயிரக்கூடாதேங்கற ஒரே காரணத்துக்காக போர்ட்லருந்து ரிசைன் செஞ்சது உண்மையாகவே பெரிய விஷயம்தான்.. ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்.. அவர் ரிசைன் செய்த விஷயம் வருத்தப்படக்கூடிய விஷயம்தான்னாலும் அதுக்காக நம்ம மீட்டிங்க அட்ஜர்ன் பண்ணணுங்கற அவசியம் இல்லை.. நாம தொடர்ந்து கண்டினியூ பண்ணலாம்.’

பார்யா.. செய்யற களவாணித்தனத்தையும் செஞ்சிட்டு நல்ல பேர் எடுத்துக்கறத? யோவ் டாக்டர்.. எங்க களுத்த புடிச்சி தள்ளப் போறாங்களோன்னு பயந்துக்கிட்டு நீயா ரிசைன் பண்ணி இந்த முட்டாப்பய சாம்பசிவம் முன்னால ஹீரோ ஆய்ட்டே.. ஊம்.. எல்லாம் நேரம்..

‘நீங்க சொல்றது சரிதான்யா.. டாக்டர் ரொம்ப தெறமசாலி.. எனக்கு போர்ட்ல பக்கபலமா இருந்தாரு.. அவர் இல்லாதது ஒரு பெரிய கொறையாத்தான் படுது.. இருந்தும் என்ன செய்ய? பேங்க நடத்தணுமால்லையா? அவர் எப்படி இருந்தாலும் இன்னும் ஆறேழு மாசத்துல போயிருக்க வேண்டியவர் தானய்யா.. கொஞ்சம் முன்னாலயே போய்ட்டாரு.. அவரோட டர்ம் முடிஞ்சி போயிருந்தா நல்லாருந்துருக்கும்.. என்னவோ போறாத காலம்..’

கேரள மாநிலத்தைச் சார்ந்த இயக்குனர்களான கோபால மேனனுக்கும், ராஜகோபாலன் நாயருக்கும் நாடாரைக் கட்டோடு பிடிக்காது. ரஜ்ஜத் கபூருக்கும் அப்படித்தான். அவர்கள் மூவருமே சோமசுந்தரத்தின் ஆட்கள் என்பது நாடாருக்கும் தெரியும். அதற்காகவேதான் தன்னுடைய சக வியாபாரியான சிவசுப்பிரமணியத்தைக் குழுவிற்குள் கொண்டு வந்தார். இனி சோமசுந்தரத்திற்குப் பிறகு அவருடைய இடத்தில் யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தன்னுடைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்று காத்திருந்தார்.

முடிஞ்சா அந்த பய சீட்டுல நம்ம வக்கீலையே கொண்டுவந்திரணும் என்றும் நினைத்திருந்தார். ஆனால் சோமசுந்தரத்திற்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் வங்கியின் பங்குகளில் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் இருந்ததால் அவரை அவ்வளவு எளிதாக ஒரங்கட்டிவிட முடியாதென்பதும் அவருக்குத் தெரியும்.

வங்கியின் முதல்வராக சேர்வதென முடிவெடுத்தவுடனே வங்கியின் பங்குதாரர்களைப் பற்றி நன்கு ஆய்ந்து வைத்திருந்த மாதவனுக்கும் சோமசுந்தரம் மற்றும் நாடாரின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது.

‘என்ன மிஸ்டர் நாடார்.. அஜெண்டாவ அய்ட்டங்கள எடுத்துக்கலாமா?’ என்ற மாதனவைப் பார்த்தார்.

‘எடுத்துக்கலாம்யா. அதுக்கு முன்னால நம்ம டாக்டர பாராட்டி ஒரு ரிசலூஷன பாஸ் பண்ணிருவம்.. அப்புறம் தொடர்ந்து நடத்தலாம் என்னய்யா ரஜ்ஜத், நாயர்.. மேனன் சார்.. என்ன நா சொல்றது சரிதான..’ என்றவாறு நாடார் தன் சக இயக்குனர்களை ஒருமுறை பார்த்தார்.

யாருமே அவரை சட்டை செய்யாமல் சாம்பசிவத்தைப் பார்த்தனர். அவர் கம்பெனி செக்கரட்டரியைப் பார்த்தார். ‘ரிசலூஷன டிராஃப்ட் செஞ்சி கொண்டு வரச் சொல்லுங்க சார்.. இப்போ அடுத்த அஜண்டா ஐட்டத்த எடுங்க.. என்ன சேர்மன் சார்?’

மாதவன் சரி என்று தலையை அசைக்க கூட்டம் அன்று பட்டியலிடப்பட்டிருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக அலச துவங்கி அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இடைவெளியில்லாமல் நடந்தது..

*********

சோமசுந்தரம் தன் எதிரில் அமர்ந்திருந்த ஆடிட்டர் வேணுகோபாலை பார்த்தார்.

இடியட், இவன நம்பியிருந்ததுதான் நான் செய்த பெரிய தப்பு. இப்படியொரு சூழ்நிலையில அந்த டைரக்டர அவமானப்படுத்தி அனுப்புனது தப்புன்னு இன்னமும் புரிஞ்சிக்காம ஆர்க்யூ பண்ற இவன என்ன பண்ணா தகும்?

இவனப் போயி நம்ம சீட்ல போர்ட்ல ஒக்கார வைக்கலாம்னு இருந்தேனே..

‘I am really sorry Doctor. அந்த முட்டாள் மனுசன் இப்படிப் போய் திடுதிடுப்னு press meet நடத்திருவார்னு எதிர்பார்க்கலை..’ என்றார் வேணுகோபால் தலையை தொங்கப் போட்டவாறு..

ஆமா.. இப்ப வருத்தப்படு.. இடியட்.. இத முன்னமே யோசிச்சிருந்தா இந்த பிரச்சினை இல்லேல்லே.. இன்னும் மீதி இருக்கற ஆறு மாசத்துல என்னவெல்லாம் செய்ய ப்ளான் செஞ்சிருந்தேன்.. எல்லாத்தையும் ஸ்பாய்ல் பண்ணிட்டியேடா முட்டாள்..

‘சரி.. அதையே சொல்லிக்கிட்டிருக்காம இப்ப என்ன செய்யலாம் அதச் சொல்லுங்க. அந்த கம்பெனிக்கு கட்ட வேண்டிய பணத்த பொரட்டி கட்றத தவிர வேற வழியில்ல. What are we going to do? Do you have any ideas?’ என்றார் சோமசுந்தரம் எரிச்சலுடன்.

வேணுகோபால் தயக்கத்துடன், ‘சார் நம்ம பாபு சுரேஷ் நினைச்சா...?’ என்று இழுக்க எரிந்து விழுந்தார் சோமசுந்தரம்.

‘என்னாச்சி உங்களுக்கு வேணு? இவ்வளவு பெரிய தொகைய அவரால சாங்ஷன் பண்ண முடியுமா? அதுவுமில்லாம இன்னைக்கு காலைலதான் நானே அவர நம்ம ரெக்ரூட்மெண்ட் ப்ளான இம்ப்ளமெண்ட் பண்ற ஐடியாவுல எச்.ஆர் ஹெட் போஸ்டுக்கு ப்ரொப்போஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். முழுசா ஒரு மணி நேரம் ஆவறதுக்குள்ள இப்படியொரு டெவலப்மெண்ட்.. அதனால அவர அப்ரோச் பண்ண முடியாது. அப்படி செஞ்சாலும் அந்த நாடாருக்கு தெரியாம ஒன்னும் செய்ய முடியாது. So that’s not possible.. Think about something else..’

வேணுகோபால் இதென்னடா பெரிய ரோதனையா போச்சி என்று நினைத்தார்.. போய்யா நீயும் வேணாம் ஒன் வேலையும் வேணாம்னு போய்ட்டா என்ன என்றும் தோன்றியது. அவர் சென்னையில் அலுவலகத்தை துவங்கிய நேரத்தில் சோமசுந்தரத்தின் தொடர்பு அத்தியாவசிய தேவையாக இருந்தது. ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களில் சோமசுந்தரத்தைப் போன்றே சென்னையிலிருந்த பல பெரிய தலைகளுடைய தொடர்பும் கிடைத்துவிடவே அவருடைய ஆடிட்டர் தொழில் நன்றாகவே விரிவடைந்திருந்தது.

இனிமேல் சோமசுந்தரத்தின் தயவு தனக்கு தேவையில்லை.. அத்துடன் அந்த நிதி நிறுவனத்தில் இனியும் இயக்குனராக தொடர்ந்து இருந்தால் தனக்கே பிரச்சினையாகிவிடும் என்பதும் உண்மை.. வெறும் சோமசுந்தரத்தின் பினாமியாகத்தான் நான் அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருந்தேன் என்றால் யார் நம்பப்போகிறார்கள்? அந்த பதவியால் சென்னையிலிருந்த செல்வந்தர்களுடன் தனக்கிருந்த தொடர்புகளும் இல்லாமல் போய்விடுமோ என்றும் அஞ்சினார். ஆனால் சோமசுந்தரத்துடனான தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்வதும் அத்தனை எளிதல்ல என்பதும் அவருக்கு தெரியும்..

‘சரி சார்.. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க.. எனக்கு தெரிஞ்ச இடத்துல ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.’ என்று லாவகமாய் கழண்டுக்கொள்ள பார்த்தார்.

சோமசுந்தரம் சந்தேக கண்ணோடு தன் முன் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘ரெண்டு நாள் என்ன.. ஒரு வாரம் எடுத்துக்குங்க.. ஆனா ஒன்னு.. இந்த ப்ராப்ளத்துக்கு காரணம் நீங்கதான்.. அதனால நீங்கதான் இதுக்கு ஒரு சொலுஷனும் கண்டுபிடிக்கணும்.. அதில்லாம இந்த பிரச்சினையிலருந்து எப்படி விலகிக்கலாம்னு நீங்க நினைக்கறாமாதிரி எனக்கு தெரிஞ்சிது.. அப்புறம் ஒங்களுக்குத்தான் பிரச்சினை.. சொல்லிட்டேன்.. நீங்க போலாம்..’

சோமசுந்தரத்தின் குரலில் தொனித்த மிரட்டல் வேணுகோபாலை உண்மையிலேயே பயமுறுத்தியது..

மறு பேச்சு பேசாமல் எழுந்து அறையை விட்டு வெளியேற சோமசுந்தரம் அவர் வெளியேறி பலநிமிடங்கள் வரை தன்னுடைய இருக்கையிலேயே அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்..

தொடரும்..

14.8.06

சூரியன் 116

அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்த ஃபிலிப் சுந்தரம் தன் கையிலிருந்த கோப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு சேர்மனின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தார்.

‘வாங்க ஃபிலிப்.. உக்காருங்க.’ என்ற மாதவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த ஃபிலிப் அருகில் அமர்ந்திருந்த நாடாரை தயக்கத்துடன் பார்த்தார்.

‘முதல்ல ஒக்காருங்க சார்.. அதான் சேர்மனே சொல்லிட்டாரில்லே’ நாடாரின் குரலில் இருந்த மிகுதியான மரியாதை அவரை குழப்பத்தில் ஆழ்த்த தயக்கத்துடன் அமர்ந்தார்.

‘என்ன மிஸ்டர் நாடார் நீங்களே சொல்றீங்களா இல்லை நான்..’ என்றார் மாதவன்.

நாடார் ஏளனத்துடன் சிரித்தவாறு ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார். ‘நீங்களே சொல்லுங்க.. அப்பத்தான் இவர் கேப்பார். நாங்கல்லாம் என்னதான் கரடியா கத்தினாலும் கேக்க மாட்டார். என்ன சார் நா சொல்றது சரிதானே..?’

ஃபிலிப் சுந்தரம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

மாதவன் தனக்கெதிரில் அமர்ந்திருந்த இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ஃபிலிப் சுந்தரம் நாடாரின் வலது கரம் என்று காலையில் சுபோத் அவரிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் கேள்விப்பட்டதற்கு நேர் மாறாக இருந்தது நாடாரின் நடவடிக்கையும் பேச்சும். ஒருவேளை இதுவும் ஒரு நாடகமோ?

‘மிஸ்டர் ஃபிலிப், மிஸ்டர் நாடாருக்கு ஒரு சந்தேகம். அதாவது, டாக்டர் சோமசுந்தரம் மிஸ்டர் பாபு சுரேஷ எச்.ஆர். ஹெட்டா கொண்டுவர்றதுக்கு என்ன காரணம்னு ஒங்களுக்கு தெரியுமோன்னு.. Is it correct?’

இப்படியொரு கேள்வி வரும் என்று ஃபிலிப் எதிர்பார்த்ததுதான். இதற்குரிய பதிலாக எதை சொன்னாலும் தனக்கு பிரச்சினைதான் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

‘காரணம் ஒன்றும் இல்லை என்றாலோ அல்லது எனக்கு தெரியாது’ என்றாலோ ‘அப்ப எதுக்கு அவர நீங்கதான் ப்ரொப்போஸ் பண்ணீங்கன்னு டாக்டர் சொல்றார்னு’ கேள்வி வரும்.

‘ஆமாம் காரணம் இருக்கு.’ என்றாலோ ‘அப்ப எதுக்கு நீங்க எங்கக்கிட்டருந்து மறைச்சீங்கன்னு’ கேள்வி வரும்.

ஆக, என்ன மாதிரி சொன்னாலும் பிரச்சினைதான். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தார்.

‘என்ன சார்? இந்த சிக்கல்லருந்து தப்பிக்க என்ன வழின்னு யோசிக்கிறீங்க போலருக்கு?’ என்றார் நாடார் கேலியாக.

ஃபிலிப் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். ‘இல்ல சார்..’

‘அப்ப சொல்லுங்க. ஒங்களுக்கு தெரியாம இருக்கறதுக்கு சான்ஸ் இல்ல. என்ன காரணம்?’

ஃபிலிப் மாதவனைப் பார்த்தார். அவர் கோ அஹெட் என்பதுபோல் பார்க்க இதிலிருந்து விடுபட தனக்கு வழியில்லையென்பதை உணர்ந்து சற்று முன் பாபு சுரேஷ் கூறியதை சுருக்கமாக கூறினார்.

மாதவனுடைய முகத்தில் வியப்பின் ரேகை லேசாக தெரிந்தது. ஆனால் நாடாரின் முகத்திலோ கோபத்தின் உக்கிரமம் தெளிவாக தெரிந்தது.

‘இது ஒமக்கு எப்போ தெரியும்?’ என்று உறுமினார் ஃபிலிப்பைப் பார்த்து. அவருடைய கோபம் மாதவனையே ஒரு கணம் திடுக்கிட வைத்தது.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான்..’

‘அப்படீன்னா? கரெக்டா சொல்லும்யா’

‘எம்.சிக்கு அப்புறம்.’

‘உண்மையத்தான் சொல்லுதீரா.. இல்லே.. பழுவடியும் பொய்தானா?’

மாதவனுக்கு நாடாருடைய பேச்சில் குறைந்திருந்த கண்ணியம் சற்றே எரிச்சலைத் தந்தது. ஒரு சி.ஜி.எம் என்ற மரியாதையில்லாமல் ஃபிலிப் சுந்தரத்திடம் நாடார் பேசிய விதத்தில் தனக்கு ஒப்புதல் இல்லையென்பதை அவருக்கு கோடிட்டு காட்டினாலென்ன தோன்றவே, ‘மிஸ்டர் நாடார் நீங்க பேசற விதம் சரியில்லைன்னு தோனுது.. என்ன இருந்தாலும் அவர் சி.ஜி.எம் ராங்க்லருக்கற ஒரு சீனியர் ஆஃபீசர்.’ என்றார்.

நாடார் இதை எதிர்பார்க்கவில்லையென்பது அவர் முகம் போன போக்கிலிருந்தே மாதவனுக்கும் ஃபிலிப் சுந்தரத்திற்கும் விளங்கியது. பொங்கி வந்த கோபத்தைக் கட்டுபடுத்த அவர் முயல்வதும் தெரிந்தது.

‘மன்னிச்சிருங்கய்யா.. தப்புத்தான்.. ஆனா நா நம்ம ஃபிலிப் சார அப்படி மட்டும் நினைக்கலையா? அவர் என் கூட பிறக்காத தம்பி மாதிரி. அவர்கிட்ட கோபப்படறதுக்கு எனக்கு உரிமை இருக்குன்னு நினைச்சித்தான்..’

அவர் சட்டென்று கோபம் தணிந்து மன்னிப்பு கேட்டது மாதவனுக்கும் சங்கடமாகிப்போகவே, ‘இல்லை மிஸ்டர் நாடார்.. ஒங்களுக்கும் மிஸ்டர் ஃபிலிப்புக்கும் நெருக்கம் இருந்தாலும் நா புது ஆள் இல்லையா? என் முன்னால வச்சி அவர நீங்க இப்படி பேசறது அவர ஒருவேளை..’ என்றவாறு ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார்.

ஃபிலிப் சுந்தரம் ஒரு தர்மசங்கடமான புன்னகையுடன் இருவரையும் பார்த்தார். ‘ பரவாயில்லை சார். நாடார் இப்படி பேசறது ஒன்னும் புதுசில்லை.. நானும் அதை சாதாரணமாத்தான் எடுத்துக்கிறுவேன்.. It’s ok.’ என்றார் நிலைமையை சீராக்கும் நோக்கத்துடன்.

நாடார் சிறிது நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்த கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இந்த சேர்மன் பய நாம நெனச்ச மாதிரி சாது இல்லை.. முன்னைய ஆளவிட கில்லாடியாருப்பான் போல.. இவன் கிட்ட சாக்கிரதையாத்தான் இருக்கணும்.. பார்ப்போம் எதுலயாவது வளுக்காமயா போயிருவான்.. காத்துக்கிட்டு இருந்து கப்புன்னு புடிச்சி.. அப்ப இருக்கு இவனுக்கு.. இப்ப வேணாம்.. முதல்ல அந்த டாக்டர் பயல போர்ட்லருந்து வெட்டி விடணும்.. அதுக்கு இன்னைக்கி வந்த ஃபேக்ஸ் ஒன்னே போறும்.. அதுக்கப்புறம் இந்த பயல பார்த்துப்போம்.. டாக்டருக்கு பதிலா யார் வர்றான்னு பார்த்துட்டுத்தான் எல்லாம் செய்யணும்..

இன்றைக்கு இது போதும்.. டாக்டர் பய இன்னைய போர்ட் மீட்டிங்கு அப்புறம் நிக்கானான்னு பாப்பம்.. அவனே போனப்புறம் அவன் திட்டம் மட்டும் நிக்கவா போவுது?

மேற்கொண்டு பதிலேதும் பேசாமல் எழுந்து நின்ற நாடாரைப் பார்த்து திடுக்கிட்டு மாதவனும் ஃபிலிப் சுந்தரமும் எழுந்து நின்றனர்.

‘என்ன மிஸ்டர் நாடார் கிளம்பிட்டீங்க?’ என்றார் மாதவன்.

நாடார் கோபம் தணியாத முகத்துடன் அவர்களைப் பார்த்தார். நாம கோவிச்சிக்கிட்டு போய்ட்டதாவே இவனுங்கக் கிட்ட காட்டிக்குவம். அப்பத்தான் ரெண்டு பயலும் போர்ட் மீட்டிங்ல வால சுருட்டிக்கிட்டு இருப்பானுங்க.

மாதவனுடைய கேள்வியைப் பொருட்படுத்தாமல் வேகமாய் அறையை விட்டு நாடார் வெளியேற மாதவனும் ஃபிலிப் சுந்தரமும் பேச்சற்று நின்றனர்.

நாடார் வெளியேறியதும் என்ன செய்வதென விளங்காமல் சற்று நேரம் குழம்பிய மாதவன் சுதாரித்துக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

‘உக்காருங்க மிஸ்டர் ஃபிலிப்.. I need some time to recover before my first board meeting.. My!!! This has been one hell of a first day so far.. First the Fax against the Doctor and now this... Please sit down for a moment..’

Fax against the Doctor... ஃபிலிப் சுந்தரத்திற்கும் அது என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான்.. ஆனால் அதை எப்படி இவரிடம்..

மாதவன் இப்போது இருக்கின்ற மனநிலையில் அதை எப்படி கேட்பதென தெரியாமல் தவித்தவாறு அமர்ந்திருந்தார்..

‘மிஸ்டர் ஃபிலிப் Can I ask you something?’

தனக்குள்ளேயே யோசனையில் ழ்ந்திருந்த ஃபிலிப் திடுக்கிட்டு மாதவனைப் பார்த்தார். ‘கேளுங்க சார்.’

மாதவன் தயக்கத்துடன் மேசையில் கிடந்த ஃபேக்ஸ் நகலை எடுத்து ஒரு முறை படித்துவிட்டு, ‘டாக்டருக்கும் நாடாருக்கும் இடையில ஏதாவது பிரச்சினை இருக்கா மிஸ்டர் ஃபிலிப்?’ என்றார்.

எப்படி பதிலளிப்பதென தெரியாமல் சற்று தயங்கிய ஃபிலிப் சுந்தரம், ‘அப்படியொன்னும் எனக்கு தெரிய வரலை சார்.’ என்றார் பட்டும் படாமலும். ‘எதுக்கு கேக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கலாமா சார்?’

‘அதிருக்கட்டும். உங்களுக்கும் மிஸ்டர் நாடாருக்கும் இடையில ஏதாச்சும் ஸ்பெஷல் உறவு இருக்கா? அவர் ஏதோ நீங்க அவரோட தம்பி மாதிரின்னு சொன்னாரே?’

மாதவனுடைய கேள்வியின் உள்நோக்கம் தெரியாமல் சற்று நேரம் தயங்கினார் ஃபிலிப் சுந்தரம். ‘நானும் அவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவங்க சார். அத்தோட நாங்க ரெண்டு பேரும் ஒரே சர்ச்சுக்குத்தான் போறோம். நாலஞ்சு வருசமா சர்ச் கவுன்சில் தலைவரா இருந்தவர் நாடார். அவருக்கப்புறம் அந்த பதவிக்கு என்ன¨ சிபாரிசி செஞ்சி எலெக்ட் செய்ய வச்சதும் அவர்தான். அதான்... அதனால அவரோட ரைட் ஹேண்ட் நான்னு இங்க ஒரு எண்ணம் இருக்கு.. அதுல உண்மை இருக்கா இல்லையாங்கறது நீங்க போகப் போக தெரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கறேன்..’

மாதவனுடைய உதடுகளின் ஓரம் மேல் நோக்கி வளைந்ததிலிருந்து அவருக்கு தான் கூறியதில் அவ்வளவாக திருப்தியில்லை என்பதை உணர்ந்த ஃபிலிப் சுந்தரம் இனியும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்று நினைத்து எழுந்து நின்றார்.

‘சார்.. I will have to gather the files for my department's agenda item for the Board Meeting. Shall I go?’

மாதவனும் எழுந்து நின்றார். ‘மிஸ்டர் ஃபிலிப்’ என்று வெளியேறவிருந்தவரை அழைக்க அவர் நின்று திரும்பிப் பார்த்தார். ‘Yes Sir?’

‘நீங்க எம்.சி யில டாக்டரையும் நாடாரையும் ஹேண்டில் பண்ண விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. I thought I could depend on you for tackling similar situations in the coming years.. But unless..’

இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்காமல் குழம்பிய ஃபிலிப் திரும்பி மாதவனுடைய மேசையை நோக்கி திரும்பிச் சென்றார். ‘I don’t understand Sir.. If you have anything in your mind please come out with it..’

மாதவன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து தனக்கு முன் இருந்த இருக்கையைக் காட்டினார். ‘Please sit down..’ என்றார்.

ஃபிலிப் சுந்தரம் அமரும் மட்டும் காத்திருந்த மாதவன், ‘would you like to know about this?’ என்றார் தன் முன் கிடந்த ஃபேக்ஸ் நகலை சுட்டிக்காட்டியவாறு..

ஃபிலிப் சுந்தரம் ஃபேக்ஸ் நகலையும் மாதவனையும் பார்த்தார். ‘If you want..’

மாதவன் பதில் பேசாமல் qபேக்ஸ் நகலை நீட்ட qபிலிப் சுந்தரம் வாங்கி நிதானமாக படித்தார்.

Man proposes God disposes என்பது எத்தனை சரி!

சற்று முன் பாபு சுரேஷ் தன்னிடம் கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தார்.

அதற்கு முன்பு மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்தில் பாபு சுரேஷை தான் எச்.ஆர் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்ததாக அபாண்டமாக கூறிய சோமசுந்தரத்தின் எதிர்காலம் இவ்வளவு விரைவில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..

இதற்குப் பிறகும் சோமசுந்தரம் இயக்குனர் குழுவில் நீடிப்பது சிரமம்தான் என்று நினைத்தார்..

இந்த திடீர் திருப்பத்தால் இன்னும் என்னவெல்லாம் குழப்பங்கள் ஏற்படப் போகிறதோ என்றும் அவருடைய சிந்தனை ஓடியது..

தயக்கத்துடன் ஃபேக்ஸ் நகலை மாதவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘You wanted to ask me something Sir?’ என்றார்.

மாதவன் ஃபேக்ஸ் நகலை திரும்பப் பெற்று மீண்டும் ஒருமுறை அதை நிதானமாக வாசித்தார். ‘I want you to investigate and find out whether anyone is behind this leak.. I mean from our Bank..’

ஃபிலிப் சுந்தரம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தார். ‘Why do you think so Sir?’

‘I am not sure. Something tells me that it is being purposefully leaked out to ensure that the Doctor is eased out of the Board.. It could be someone who is aware of his motive behind the recruitment plan.. Please find out ..’ என்றவாறு எழுந்து நின்றார் மாதவன்.. ‘Come.. Let’s go to the Board Room..’

தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் அறை வாசலை நோக்கி நடந்த மாதவனையே பார்த்துக்கொண்டிருந்த ஃபிலிப் சுந்தரம் வேறு வழியில்லாமல் அவரை பிந்தொடர்ந்து வெளியேறி வழியில் மாதவனுடைய காரியதரிசியிடம், ‘சுபோத்.. Please call the Company Secretary and inform him that Chairman is going to the Board Room.. Ask him to gather all the board members.. They may be waiting in their parlour.. quick..’ என்று கூறிவிட்டு அவரிடம் ஒப்படைத்திருந்த தன்னுடைய இலாக்கா கோப்புகளை திருப்பி பெற்றுக்கொண்டு இயக்குனர் கூட்டம் நடைபெறவிருந்த அறையை நோக்கி வேகமாக நடந்தார்..

தொடரும்..

7.8.06

சூரியன் 114

கமிட்டி கூட்டம் இடையிலேயே தடைபட்டுப் போக கூட்ட அறையிலிருந்து வெளியேறிய ஃபிலிப் சுந்தரம் விடுவிடுவென தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

அறைக்கு வெளியில் காத்திருந்த பாபு சுரேஷ் அறையிலிருந்து வெளியேறிய சோமசுந்தரம் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் சென்றதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென்பதை உணர்ந்தார்.

அவரையடுத்து வெளியே வந்த சேர்மன் மாதவனும் அவரை பாராததுபோல் நாடாருடன் தன்னுடைய அறைக்கு திரும்பவே பாபு சுரேஷ் எழுந்து அறை வாயிலையே நோக்கியவாறு நின்றிருந்தார்.

சேர்மனையடுத்து வெளியேறிய சேதுமாதவன் அவரைப் பார்த்து, ‘என்ன சுரேஷ் நீங்க வந்ததுமே பிரச்சினையோட வந்திருக்கீங்க போலருக்கு.. நேத்தைக்கி காலங் கார்த்தால ஃபோன் செஞ்சி என்னோட நாள வேஸ்ட் செஞ்சீங்க. இன்னைக்கி ஒங்க மெண்டரோட டே போலருக்கு.. நல்ல ராசி சார் ஒங்களுக்கு..’ என்று ஏளனத்துடன் கூறியவாறு சென்றதும் அவருடைய சஞ்சலத்தை பல மடங்கு கூட்ட அறையிலிருந்து ஃபிலிப் சுந்தரம் வெளிவர காத்திருந்தார்.

ஆனால் சேதுமாதவனை தொடர்ந்து வெளியே வந்த ஃபிலிப் சுந்தரம் அவரைக் கண்டுகொள்ளாமல் செல்ல பதறிப்போய் அவரை தொடர்ந்து சென்றார் ஓட்டமும் நடையுமாக.

ஃபிலிப் சுந்தரம் நேரே தன்னுடைய அறைக்குள் நுழைந்து தன்னுடைய காரியதரிசியை இண்டர்காமில் அழைத்து, ‘மிஸ் ராஜி, மிஸ்டர் பாபு சுரேஷ் எங்கருந்தாலும் நேரா என் கேபினுக்கு வரச்சொல்லுங்க.’ என்றார்.

அவருடைய குரலிலிருந்த கண்டிப்பை உணர்ந்த ராஜி ஏதோ பிரச்சினை போலருக்கே என்று நினைத்தவாறு தன்னுடைய இண்டர்காமில் கீழ்தளத்திலிருந்த வரவேற்பறை அதிகாரியை அழைத்து ‘பாபு சுரேஷ் சார் எங்கருக்காருன்னு பாருங்க. Philip Sir wants him in his cabin immediately.’ என்று கூறிவிட்டு நிமிர ஃபிலிப் சுந்தரத்தைத் தொடர்ந்து வந்த பாபு சுரேஷ், ‘Miss Raji I want to meet to Philip Sir..’ என்றவாறு நிற்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுடன், ‘Please go in Sir, He is waiting for you only’ என்றாள்.

அவர் ஃபிலிப் சுந்தரத்தின் அறையை நோக்கி நடக்க ராஜி சேர்மனுடைய பிரத்தியேக சுருக்கெழுத்தாளரும் தன்னுடைய தோழியுமான மல்லிகாவை அழைத்து, ‘ஏய் மல்லி.. ஏதாச்சும் பிரச்சினையா? சுபோத்த கேட்டு சொல்லேன்.’ என்று கிசுகிசுத்தாள்.

எந்த ஒரு நிறுவனத்திலும் இத்தகைய கிசுகிசுக்கள் காரியதரிசி அல்லது சுருக்கெழுத்தாளர்களால்தான் துவங்கும்.. இவர்களிடமிருந்து எந்த ஒரு காரியத்தையும் மறைத்து வைக்க முடியவே முடியாது.

****

ஃபிலிப் சுந்தரத்தின் அறைக்குள் நுழைந்த பாபு சுரேஷ் அவரை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் அவர் இருக்கையில் அமர்ந்திருந்த விதமே அவர் பதட்டத்துடன் இருந்ததை குறிப்பாலுணர்த்த தான் மிகவும் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு, ‘Sir, Raji told me that you wanted to meet me.’ என்றார் தயக்கத்துடன்.

ஏதோ சிந்தனையில் இருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தார். இவரை எச்.ஓவுக்கு கொண்டு வர சோமசுந்தரம் விரும்பியதற்கு ஏதோ காரணம் இருக்கிறது. அது என்னவென்று இவருக்கு தெரியுமா? அப்படி ஒன்றும் இல்லையென்றால் இவரை நான் தான் பரிந்துரைத்தேன் என்று சோமசுந்தரம் உண்மைக்கு புறம்பாக கூற என்ன காரணம்?

‘வாங்க மிஸ்டர் பாபு.. உக்காருங்க.’ என்றார்

உடனே மேசைக்கு எதிரே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார் பாபு சுரேஷ். ஃபிலிப் சுந்தரம் எந்த ஒரு முக்கிய முடிவுக்கு முன்பும் தனக்குக் கீழே இருந்த சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளை அனைவரையும் அவர்களுடைய வயது, அனுபவத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் அழைத்து தான் எடுக்கவிருக்கும் முடிவைப் பற்றி தெரிவித்து அதன் சாதக பாதகத்தை முடிந்தவரை தெளிவுபடுத்திவிட்டுத்தான் முடிவெடுப்பது வழக்கம். ஆகவே அவருடைய மேடைக்கெதிரே குறைந்தது பத்து இருக்கைகள் எப்போதும் இடப்பட்டிருக்கும்.

பாபு சுரேஷ் அவற்றுள் ஒன்றில் அமர்ந்ததும் அவரையே பார்த்துக்கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று, ‘நான் கேக்காமயே நீங்க சொல்வீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் பாபு.’ என்றார்.

அவர் குரலில் தெரிந்தது கோபமா அல்லது சலிப்பா என்பதை புரிந்துக்கொள்ளாமல் சற்று நேரம் குழம்பிய பாபு சோமசுந்தரத்தைக் கலந்தாலோசிக்காமல் இவரிடம் உண்மையை கூறுவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்து சிறிது நேரம் தடுமாறினார். இருப்பினும் வங்கியின் உயர் அதிகாரிகளில் தன்னுடன் மிகவும் கரிசனையுடன் நடந்துக்கொண்டிருந்த இவரிடம் மேலும் உண்மையை மறைப்பது சரியல்ல என்று நினைத்து, ‘Sorry Sir, I had no other alternative.’ என்றார்.

‘So, there is something behind this move..’ என்று தனக்குள் நினைத்தார் ஃபிலிப் சுந்தரம். அவர் குத்துமதிப்பாகத்தான் அந்த கேள்வியை வீசினார்.

‘It’s ok. Tell me. What’s the reason?’

பாபு மேலும் தயங்கவே, ‘Is it that secret Mr.Babu? Is Mr.Somasundaram involved in your decision?’ என்றார்.

ஆமாம் என்பதுபோல் பாபு சுரேஷ் தலையை அசைத்தார்.

ஃபிலிப் சுந்தரம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தார். சுமார் முப்பதாண்டு காலம்  இந்த வங்கியில் பணிபுரிந்திருந்த இவரே இந்த அளவுக்கு தயங்கும் அளவுக்கு அப்படியென்ன காரணம் இருக்க முடியும் என்று நினைத்தார். அப்படியொரு விஷயத்தை இவரை வற்புறுத்தி தெரிந்துக்கொள்வது எந்த அளவுக்கு உசிதம் எனவும் தோன்றவே, ‘If you don’t want to reveal the reason it’s ok Mr.Babu. I just thought that it’d would be in your own interest that you reveal it to someone in the senior hierarchy.. that’s all..’ என்றார்.

அவருடைய குரலில் தொனித்த சலிப்பை உணர்ந்த பாபு சுரேஷ் தன்னுடைய மனதிலிருந்த ரகசியத்தை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும் என்று முடிவெடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சோமசுந்தரத்தை சந்திக்க சென்ற அன்று நடந்த சம்பாஷனையை மிகைப்படுத்தாமல் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த ஃபிலிப் சுந்தரம் இதை தான் தெரிந்துக்கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அதே சமயம் வந்தனா மட்டும் இதைக் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தார். அவரை மருத்துவமனையில் சேர்க்க  நேர்ந்தது சோமசுந்தரத்திற்கு எந்த அளவுக்கு உதவி செய்திருக்கிறது!

அதெப்படி வந்தனாவுக்கு இப்படி நேரும் என்று ஒரு நாள் முன்பே சோமசுந்தரத்திற்கு தெரிந்திருக்க முடியும் என்றும் தோன்றியது. கெட்டவர்களுக்கு நினைத்த காரியம் நடக்க நல்லவர்களுக்கு இப்படி ஏதாவது நடக்க வேண்டும் போலிருக்கிறது..

‘சார் இத நான் ஒங்கக்கிட்ட சொன்னது சாருக்கு தெரிஞ்சா...’ என்ற பாபு சுரேஷை அனுதாபத்துடன் பார்த்தார்.

‘Don’t worry. I understand your predicament.’ என்றவாறு ஃபிலிப் சுந்தரம் நீங்க போகலாம் என்று குறிப்பால் உணர்த்த பாபு எழுந்து நின்றார்.

‘Sir should I wait here or shall I go home?’

‘Go home?’

பாபு லேசான புன்னகையுடன், ‘நான் இன்னியிலருந்து ஒரு பத்து நாள் லீவ் போட்டுருக்கேன் சார். என் டாட்டருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் செஞ்சிருக்கேன்னு ஒங்களுக்கு தெரியும்லே? அதுக்காகத்தான். கொஞ்சம் வேலை இருந்திச்சி. இன்னைக்கி காலைல வந்துருங்க. சேர்மன் சார் கிட்ட ஒங்க விஷயமா பேச சரியாருக்கும்னு சோமசுந்தரம் சார் சொன்னதுனாலத்தான் வந்தேன்’ என்றார்.

‘ஓ.. அப்படியா?’ என்ற ஃபிலிப் அடுத்த அரை மணியில் நடக்கவிருந்த இயக்குனர் குழு கூட்டத்திற்கு தேவையான கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார். ‘You carry on.. I’ll call you in case your presence required, Bye..’

அவர் அறைக்கதவுகளை மூடிக்கொண்டு செல்ல இண்டர்காமை எடுத்து சுந்தரலிங்கத்தின் காரியதரிசியை அழைத்தார். ‘சார் ஃப்ரீயா இருக்காரா? I’d like to meet him for a few minutes before the Board meeting.’

‘Yes Sir, he is in his cabin.’ என்று பதில் வரவே புறப்பட்டு அதே தளத்தில் அமைந்திருந்த அவருடைய அறையை நோக்கி புறப்பட்டார்.

அவருடைய அறைக்கு செல்லும் வழியிலேயே செல் ஃபோன் சிணுங்க எடுத்து யாரென பார்த்தார். சேர்மனின் அந்தரங்க காரியதரிசி சுபோத்!

என்ன இந்த நேரத்தில் என்று சலிப்படைந்த ஃபிலிப் எடுத்து, ‘என்ன சுபோத்? நான் சுந்தரலிங்கம் சார மீட் பண்ண அவர் கேபினுக்கு போய்ட்டு இருக்கேன். எதாருந்தாலும் சுருக்கமா சொல்லுங்க.’ என்றார் வேகமாக.

‘Chairman wants you in his cabin Sir. It’s urgent.’

என்னடா இது ரோதனை. ஏற்கனவே சுந்தரலிங்கம் மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்தில் தன்னிடம் பாராமுகமாய் நடந்துக்கொண்டதற்கு பாபு சுரேஷ் விஷயத்தில் புது சேர்மன் அவரைக் கலந்தாலோசிக்காமல் இருந்ததற்கு நான் தான் காரணம் என்று நினைத்திருப்பாரோ என்று குழம்பிப் போயிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும த்ன்னை சேர்மன் தனது அறைக்கு அழைத்தது தெரியவந்தால் என்ன நினைப்பாரோ என்று அவர் தயங்க, ‘Sir could you please come here straight away.. He is waiting to talk to you before the Board Meeting.. Please Sir.’ என்று வற்புறுத்த வேறு வழியில்லாமல் சேர்மன் இருந்த உச்சி தளத்துக்கு செல்லும் லிஃப்டை நோக்கி நடந்தார்.

போகும் வழியில் சுந்தரலிங்கத்தை பிறகு வந்து சந்திப்பதாக தெரிவித்தாலென்ன என்று தோன்றவே அவருடைய காரியதரிசியை அழைத்து, ‘Have you informed CGM that I was coming to meet him?’ என்றார்.

அவரோ, ‘Sorry Sir.. I thought you were coming straight away.’ என்று சுந்தரலிங்கத்திடன் தெரிவிக்காத தன்னுடைய தவறுக்கு வருந்த நிம்மதியடைந்த ஃபிலிப் சுந்தரம், ‘Don’t worry. I’ve some urgent work to do. I’ll meet him later.’ என்று இணைப்பைத் துண்டித்தவாறு சேர்மனின் சாம்பரில் நுழைந்து தனக்காக வாயிலிலேயே பதற்றத்துடன் காத்திருந்த சுபோத்தை பார்த்ததும், Is there anybody else in the room?’ என்றார்.

சுபோத் ஆமாம் என்று தலையை அசைக்க ‘who are all there?’ என்று சப்தம் வெளியில் வராமல் உதடுகளை மட்டும் அசைத்தார்.

‘Only Mr.Nadar Sir. Both of them are waiting for you. Please go.’

ஒருவேளை பாபு சுரேஷ் விஷயத்தில் நாடார் ஏதாவது புதிதாக முட்டுக்கட்டை இடப் போகிறாரோ என்ற நினைப்பில் கையிலிருந்த கோப்புகளுடன் அவர் விரைய பின்னாலிருந்து சுபோத்தின் குரல் வந்தது. ‘Sir If you don't mind, I’ll keep those files..’

அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்த ஃபிலிப் சுந்தரம் தன் கையிலிருந்த கோப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு சேர்மனின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தார்.

தொடரும்..

1.8.06

சூரியன் 114

சீனிவாசனின் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல புறப்பட்ட மைதிலி மனம் போன போக்கில் டாக்சியில் கொஞ்ச தூரம், ஆட்டோவில் கொஞ்ச தூரம், மின்சார ரயிலில் கொஞ்ச தூரம் என பயணித்துவிட்டு... இறுதியில்..

தூரத்தில் தொடுவானத்திலிருந்து ஒன்றையொன்று துரத்திக்கொண்டு வந்த அலைகள் ஓய்வில்லாமல் கரையை முத்தமிட்டு, களைத்து,  நுரைதள்ளி, தோற்றுப்போன பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டிருந்தன..

உச்சி வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் சுடும் மணலில் அமர்ந்திருந்தாள் மைதிலி.

எவ்வளவு எளிதாக கூறிவிட்டான்.. ‘என்னை மறந்துட்டு ஒங்க அப்பாவுக்கு நல்ல பொண்ணா..’ எப்படிறா சீனி.. உன்னால அவ்வளவு ஈசியா..

**

‘என்ன சொல்ற சீனி?’

சீனிவாசன் 'நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இனி நீதான் சொல்லணும்' என்பதுபோல் எழுந்து நிற்க மைதிலி மட்டும் அப்படியே சோபாவில் அமர்ந்திருந்தாள்.

கண்களில் நிறைந்து நின்ற கண்ணீரீனூடே மங்கலாக தெரிந்த சீனியையே பார்த்தவாறு...

‘இனியும் நமக்குள்ள ஏதோ இருக்குன்னு நினைச்சிக்கிட்டு என்னை நானே ஏமாத்திக்க.. No My.. I don’t want to make a fool of myself anymore.. I am sorry.. I think it has gone too far.. It has to stop.. Now.. Here..’

‘இப்படி சொல்றதுக்கு என் அப்பா கேட்டுண்டாரா?’

சீனிவாசன் திரும்பி அவளைப் பார்த்தான்.

குனிந்திருந்த அந்த தலையை தொட்டு தரவாக தடவி விட கை குறுகுறுத்தது..ஆனால்..

‘இல்ல..’

‘அப்ப ஏன் சீனி திடீர்னு இந்த முடிவு? நீ சென்னைக்கு போப்போறேங்கறதுனாலயா?’

‘அதுவும் இல்ல.. ஆனா...’

தலை குனிந்து அமர்ந்திருந்த மைதிலி சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

‘ஏன் நிறுத்திட்டே.. சொல்லேன்..’

சீனிவாசன் தன் மனதிலிருந்ததைக் கேட்பதா வேண்டாமா என்று தயங்கினான். ‘ஒன்னெ பொண் பாக்க வருவான்னியே.. என்னாச்சி?’

மைதிலி பதில் பேசாமல் தலையை குனிந்துக்கொண்டாள். இவனிடம் என்ன சொல்ல முடியும்? உன்னையும் என்னையும் சேர்த்து பார்த்த மாப்பிள்ளை வீட்டார் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என்றா? அது ஒன்றே இவனை நம்மிடம் நிரந்தரமாக பிரித்துவிடுமே..

சற்றே நீண்ட நேரம் நின்றதால் கால்கள் வலியெடுக்கவே தான் சற்று முன் வரை அமர்ந்திருந்த சோபாவில் சென்றமர்ந்த சீனிவாசன் சாய்ந்தமர்ந்து கண்களை மூடினான்.

மைதிலியுடனான தன்னுடைய காதல் இன்றுவரை ஒருதலைப் பட்சமானதுதான் என்பது அவன் அறிந்திருந்ததுதான். தனக்கு அவள் மேல் இருந்த காதல் அவளுக்கு வெறும் நட்பாகவே இருந்ததால்தானே தன்னை வேறொருவர் வந்து பெண் பார்க்க சம்மதித்தாள்?

இப்போது அவளுடைய மவுனமே அந்த பெண் பார்க்கும் படலம் தோல்வியில் முடிந்திருந்தது என்பதை அவனுக்கு உணர்த்தினாலும் வேண்டுமென்றே ‘என்ன மைதிலி? மாப்பிள்ளை வீட்டுல சம்மதிச்சிட்டாங்களா?’ என்றான் அவளுடைய மனம் அவனுடைய கேள்வியினால் புண்படும் என்று தெரிந்தும்.

அவன் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே அவனுடைய கேள்வி அவளைப் பாதித்தது. கண்களில் பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

சமையலறையிலிருந்து சிவகாமி தங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சீனிவாசன் அவளுக்கு கேட்க வேண்டுமென்றேதான் தேவைக்கும் மீறிய உரத்தக் குரலில் அந்த கேள்வியைக் கேட்டான் என்பதும் மைதிலிக்கு புரிந்தது.

‘என்ன மாமி பார்த்துண்டிருக்கேள்? என்னெ வந்து காப்பாத்துங்களேன்’ என்பதுபோல் அவளைப் பார்த்தாள் மைதிலி .

டெலிபதி என்பார்களே அது இதுதானோ என்பதுபோல் அவளுடைய பார்வையை தூரத்திலிருந்தே உணர்ந்த சிவகாமி மாமி பரபரவென ஹாலுக்குள் நுழைந்து, ‘என்னடாச்சி நோக்கு? இப்படி போட்டு அந்த பொண்ண வறுத்தெடுக்கற? அவாத்துல இவளுக்கு பொண்ணு பாக்க ஏற்பாடு செஞ்சா இவோ என்னடா பண்ணுவா? சரி அவாளுக்கு இவள புடிச்சிருந்திருச்சின்னே வச்சிக்குவம்.. அதுக்கென்ன இப்போ.. நீதான் நோக்கு வேணாம்னுட்டியோன்னா?’ என்றாள் படபடப்புடன்.

‘என்ன மாமி இது நீங்களுமா?’ என்பதுபோல் தன்னை மைதிலி பார்ப்பதை உணர்ந்த சிவகாமி ‘ச்சும்மா ஒரு பேச்சுக்குடி’ என்பதுபோல் உதடுகளை அசைத்தாள் அவளைப் பார்த்து.

சீனிவாசன் அதை கவனித்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாததுபோல் எழுந்து நின்றான்.

‘எனக்கு ஒன்னுமில்லை மாமி.. மைதிலி யாரையாச்சும் மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமாருக்கட்டும்.. அவளோட அப்பாவும் அதத்தான மாமி கேட்டா..’ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகளை திருப்பியெடுக்க முடியாமல் உதடுகளைக் கடித்துக்கொண்டு சீனிவாசன் ‘சாரி மைதிலி’ என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

மைதிலிக்கு அவன் சொல்ல வந்தது புரிந்தது. ஓ! அதான் இவனோட இந்த பிஹேவியருக்கு காரணமா? இத தங்கிட்டருந்து மறைக்கறதுக்குத்தான் இவ்வளவு நேரம் ட்ரை பண்ணிக்கிட்டிருந்தானா?

அவளுக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது. ச்சே.. அப்பாவுக்கு இப்படியெல்லாம் இவன்கிட்ட பேசறதுக்கு எப்படி மனசு வந்தது? ஒருவேளை இவன் மயக்கம் போட்டு விழுந்து அடிப்பட்டதுக்கு இதுதான் காரணமோ? இருக்கும்..

சட்டென்று பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் எழுந்து முகத்தை மூடிக்கொண்டு வாசலை நோக்கி ஓடி சாலையை அடைந்து வழியே போன டாக்சியில் ஏறி ‘கிதர் ஜானேக்கா மேம் சாப்?’ என்றவனிடம்.. ‘மாலும் நஹி பையா..’ என்று பதிலிறுக்க வியப்புடன் தன்னைப் பார்த்த டிரைவருடைய பார்வையை சந்திக்க தைரியமில்லாமல் சீட்டில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டு விசும்ப, கண்களின் ஓரத்தில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட டிரைவர் மவுனமாக வண்டியை நகர்த்த..

மனம் போன போக்கில்..

டாக்சியில் கொஞ்ச தூரம், ஆட்டோவில் கொஞ்ச தூரம், மின்சார ரயிலில் கொஞ்ச தூரம் என பயணித்துவிட்டு... இறுதியில்.. இதோ இந்த சுடு மணலில்.. அமைதியுடன் இருந்த கடலை வெறித்து பார்த்தவாறு..

அப்பா ஏன் இப்படி செஞ்சார்?

சீனியின் உடல் காயத்துக்கு மருத்துவம் செஞ்ச நான் அவனோட மனசுல பட்டுருக்கற காயத்த எப்படி ஆற்றப்போறேன்?

மடக்கி வைத்திருந்த கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்தவாறு நேரம் போவதே தெரியாமல் கடல் மணலில் அமர்ந்திருந்தாள்..

****

மருத்துவமனை வாகனத்திலேயே வீடு வந்து சேர்ந்த வந்தனாவை கைத்தாங்கலாக வாகனத்திலிருந்து இறக்கி அவளுடைய குடியிருப்புக்கு அழைத்துச் சென்றாள் நளினி.

தன்னுடைய குடியிருப்புக்குள் நுழைந்ததுமே போன மூச்சு திரும்பி வந்ததுபோல் உணர்ந்தாள் வந்தனா.

உடலில் இருந்த சோர்வு அவளை பலஹீனப்படுத்தியிருந்தாலும் மருத்துவமனையின் சூழ்நிலையிலிருந்து வெளிப்பட்டதுமே  மீண்டும் ஒரு பலம் வந்துவிட்டது போலிருந்தது.

‘தாங்யூ சோ மச் நளினி. நீங்க ரெண்டு பேரும் வந்தது எனக்கு போன உயிர் திரும்பி வந்தாப்பல இருக்கு.. Thanks to both of you.’

நளினி ஒரு போலியான குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தாள். ‘என்ன மேடம் நீங்க? பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி எங்கள அன்னியமாக்கிட்டீங்க?’

அவளுடைய கோபம் போலியானது என்பதை உணர்ந்த வந்தனா பலஹீனத்துடன் புன்னகைத்தாள். ‘சாரி நளினி.. I did not mean it that way.’

நளினி நந்துவைப் பார்த்தாள். ‘எந்தா நந்து? நோக்கி நிக்கனே.. மேடத்தின எந்தெங்கிலும் குடிக்கான் கொடுக்கேண்டே?’

நந்தக்குமார் தன் தவறை உணர்ந்தவாறு ஹாலுக்கு மறுகோடியில் திறந்திருந்த சமையலறையை நோக்கி நடந்தான்.

அவனை நிறுத்தும்படி சைகை காட்டிய வந்தனா நளினியை பார்த்தாள். ‘என்ன நளினி அவரைப் போயி.. பாவம்..’ என்றாள்.

நளினி உதடுகளில் கைவைத்து ‘உஷ்’ என்றாள். ‘மேடம் நீங்க பேசப்படாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அந்த கண்டிஷன்லதான் எங்கக் கூட வீட்டுக்கு அனுப்பியிருக்கார். மறந்துராதீங்க. நந்து சமையல்ல எக்ஸ்பர்ட்.. அதுவும் டீ சூப்பரா போடுவார். ஆனா ஒங்களுக்கு காப்பி, டீ ஏதும் இன்னும் ஒரு வாரத்துக்கு குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். ஹார்லிக்ஸ் இருக்கு இல்ல வீட்ல? இல்லன்னா நந்து போய் வாங்கி வருவார்.’

பதில் பேச முயன்ற வந்தனா களைப்பு மிகுதியால் பேச முடியாமல் அப்படியே சோர்வுடன் கண்களை மூட நளினி அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் சமையலறையை நோக்கி நடந்தாள்..

தொடரும்..