26.12.07

நாளை நமதே - 35

அன்று பகல் காவல்துறை அத்துமீறி கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து பரத்தை கைது செய்ததை எதிர்த்து டேவிட் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை ஒட்டுமொத்தமாக காவல்துறையினரின் உதவியுடன் கல்லூரியிலிருந்து அகற்றியிருந்தது. ஆயினும் கல்லூரி வாசலில் நின்று தொடர்ந்து ட்ட மாணவர் காவல்துறை கும்பலை வேனில் அள்ளிக்கொண்டு செல்ல மறியலில் நேரடியாக பங்குபெறாவிட்டாலும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த ப்ரியா, சுந்தர் போன்றவர்களையும் கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து இருவாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்துவிடவே என்ன செய்வதென தெரியாமல் கல்லூரி வாசலில் நின்றிருந்தாள் ப்ரியா.

ஏற்கனவே அன்று காலையில் தன் தாயுடன் நடந்து முடிந்திருந்த வாக்குவாதம் வேறு அவளை நிலைகுலை செய்திருந்தது. இனியும் தன் தாயுடன் ஒரே வீட்டில் இருக்க முடியுமா என்பதிலேயே கல்லூரிக்கு வரும் வழியெல்லாம் அவளுடைய மனம் உழன்றுக்கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஜோதிகா கூறிய அறிவுரையும் அவளுக்கு நினைவு வரவே ஜோதிகாவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று என்ற தீர்மானத்துடந்தான் கல்லூரிக்கே வந்திருந்தாள் ப்ரியா.

அவள் இருந்த மனநிலையில் கல்லூரியில் நடந்த மறியலில் கலந்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக சம்பவங்கள் நடந்துமுடிந்துவிட தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு கல்லூரி பேருந்தும் இல்லாத நிலையில் எங்கு செல்வது, எப்படி செல்வது என்பது புரியாமல் நின்றிருந்தவள் துக்கம் மேலிட முகத்தை மூடிக்கொண்டு விசும்ப துவங்கினாள் தன்னையுமறியாமல்.

அவள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றிருந்த சுந்தர் அவளை தயக்கத்துடன் திரும்பி பார்த்தான். அவனுடன் சிறு கும்பலாக நின்றிருந்த மாணவர்களுள் ஒருவன் 'தோ பார்றா.... இதுக்கெல்லாம் போயி எமோஷனலாயி எல்.கே.ஜி பொண்ணாட்டம் அழுவறத...' என்றான் கேலியுடன்.

ப்ரியாவின் காதுகளில் அவனுடைய கேலி பேச்சு விழ சட்டென்று மூண்ட கோபத்தில் அவனை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

'Mind your business....' என்றாள் கோபம் அடங்காமல்.

இதை எதிர்பாராத மாணவன் கன்னத்தை பிடித்தவாறு அங்கிருந்த அகல அவனுடன் நின்றிருந்த மாணவ கும்பல் அதிர்ச்சியுடன் ப்ரியாவை பார்த்தது.

சுந்தர் என்ன நினைத்தானோ, 'என்ன ப்ரியா இப்படி செஞ்சிட்டீங்க... Control yourself...' என்றான் தன்னையுமறியாமல்.

'மிஸ்டர், ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க...'

இதை சுந்தர் எதிர்பார்க்கவில்லையென்பது அவன் சட்டென்று விலகி நடந்ததிலிருந்தே தெரிந்தது. அவனைத் தொடர்ந்து குழுமியிருந்த மாணவர் கும்பல் அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு கலைந்து செல்ல ஒரு நிமிடத்தில் தன்னையிழந்து நடந்துக்கொண்ட விதத்திற்காக தன்னையே

நொந்துக்கொண்டு நின்றாள் ப்ரியா....'ச்சே.... What a stupid thing to do.... சுந்தர் சொன்னாமாதிரி I should have controlled myself... என் ப்ராப்ளம் கமெண்ட் அடிச்சவனுக்கு தெரிய சான்ஸ் இல்லையே.... இப்ப என்ன பண்றது? காலேஜுக்குள்ளயும் போமுடியாது... ஜோதிகாவையும் வேன்ல ஏத்திக்கிட்டு போய்ட்டாங்க... ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோயிருப்பாங்க போலருக்கு... போலீஸ் ஸ்டேஷன் எங்கருக்குன்னு தெரிஞ்சாலாவது போய் பாக்கலாம்...'

சுற்றும் முற்றும் பார்த்தாள். கல்லூரியை தவிர வேறெந்த கட்டிடங்களும் அருகில் இல்லாததால் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த ஓரிருவர்களைத் தவிர ஆள் அரவம் இல்லாமல் பகல் பொழுதிலும் அச்சத்தை உண்டுபண்ணியது. தனக்கு முன்னால் சாலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சக மாணவர்களை பார்த்தாள். இவர்களுடன் சேர்ந்து சென்றால்தான் தனக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தவளாய் துப்பட்டாவால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு சாலையை நோக்கி நடந்தாள்.

தனக்கு முன்னால் சென்ற மாணவ கும்பல் நான்கைந்து சிறு குழுக்களாக பிரிந்து சற்று முன் நடந்த சம்பவங்களை அலசியவாறு கல்லூரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த நகர பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க அவர்களிடமிருந்து சற்று தொலைவில் நடந்து பேருந்து நிலையத்தை ப்ரியா அடைந்தபோது களைத்துப்போயிருந்தாள். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததோ அல்லது சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்ததோ அல்லது அவள் இருந்த மனநிலையோ பேருந்து நிலைய வாசலில் மயங்கி விழுந்தாள்.

அதற்குப் பிறகு அவள் கண்விழித்தபோது பேருந்து நிலையத்திலிருந்த இருக்கைகளுள் ஒன்றில் அவளும் அவளுக்கெதிரில் சுந்தரும் அவனுடன் சற்று முன்பு அவள் கோபித்துக்கொண்ட சக மாணவர்களும்.....

பேருந்துகளுக்காக காத்திருந்தவர்களுள் பலரும் தன்னை நோக்கி பார்ப்பது தெரிய கலைந்துக் கிடந்த ஆடைகளை சரிசெய்துக்கொண்டு எழுந்திருக்க முயன்று முடியாமல் இருக்கையிலேயே அமர்ந்தாள். 'எனக்கு என்னாச்சி?' என்றாள் நடுங்கும் குரலில்.

'எழுந்துக்காதீங்க இத குடிங்க.. வெயில்ல நடந்துவந்த களைப்புன்னு நினைக்கேன். மயங்கி விழுந்துட்டீங்க... நம்ம ஸ்டூடன்ஸ்தான் உங்கள இங்க

கொண்டு வந்து ஒக்கார வச்சோம்... இப்படியே கொஞ்ச நேரம் ஒக்காந்து இருந்தீங்கன்னா சரியாயிரும்னு நினைக்கேன்.' என்று பதிலளித்த சுந்தர் எழுந்து நின்றான்.

குழுமியிருந்த மாணவ, மாணவிகள் பலரும் ஒருவித கேலியுடன் தன்னை பார்ப்பதுபோல் உணர்ந்தாள் ப்ரியா. ஆனாலும் சுந்தரின் கரிசனம் அவளை தொட்டது. 'Thanks Sundar....' என்றாள் மெல்லிய குரலில். பிறகு தன்னை சூழ்ந்து நின்ற மாணவர்களைப் பார்த்தாள். 'I feel ashamed of myself for what happened at the College. Sorry friends..'

மாணவர்கள் குழு சட்டென்று நடந்ததை மறந்து புன்னகைத்தது. 'It's OK.' என்றான் சுந்தர் உடனே. 'ஒங்களால பஸ்ல போக முடியுமா இல்ல ஆட்டோ ஏதாச்சும் வேணுமா?'

ப்ரியா மெல்லிய புன்னகையுடன் அவனை நன்றியுடன் பார்த்தாள் 'If you could get me an auto...'

'I'll do that' என்றவாறு சுந்தர் கூட்டத்திலிருந்து விலகி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தான். 'பார்றா... இதான் சாக்குன்னு இவன் லைன்

போடறத? காலேஜ் தொடங்குன நாள்லருந்து இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தான்... திடீர்னு ஹீரோவாய்ட்டான்... ஹூம்...' என்றது கும்பலிலிருந்து ஒரு குரல்...

ப்ரியாவின் உதடுகளில் அவளையுமறியாமல் ஒரு புன்னகை விரிந்தது... ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் அவளை நோக்கி சைகை செய்து பேசிக்கொண்டிருந்த சுந்தரைப் பார்த்தாள்...

அதன் பிறகு ஆட்டோவில் ஏறவும் அவள் சிரமப்பட, 'பிரதர் இவ்வளவு செஞ்சீங்க கூடவே போய் வீட்ல ட்ராப் பண்ணிருங்க...' என்றவாறு சில மாணவர்கள் கிண்டலடித்தது.... இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் சங்கடத்துடன் சுந்தர் அவளைப் பார்த்தது... 'வாங்களேன் ப்ளீஸ்'

என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தது... பிறகு தயக்கத்துடன் அவளுடன் ஆட்டோவில் அவன் ஏறியது.... தன்னையுமறியாமல் தன்னுடைய பிரச்சினைகளை ஒன்றுவிடாமல் அவனிடம் கொட்டி தீர்த்தது.. அவளை தடை செய்யாமல் முழுவதையும் அனுதாபத்துடன் கேட்டுவிட்டு...

இறுதியில்.. 'I fully understand your problems Priya....Give me one or two days.. I will try to help you. ஒங்க மொபைல் நமபர மட்டும் குடுங்க...If you don't mind.' என்று பதிலளித்தது....

'நான் முதல்ல சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றான்னு நினைச்சேன் ஜோதி. ஆனா அடுத்த நாளே என்னெ மொபைல்ல கூப்ட்டு ------- டிவி ஸ்டேஷன் அட்றச குடுத்து 'இங்க போய் ப்ரேமா மேடம்னு கேளுங்க... அவங்கக்கிட்ட ஒங்களபத்தி சொல்லியிருக்கேன்.. She will help you.' னு சொன்னப்ப கூட நா நம்பல. இருந்தாலும் போய்த்தான் பாப்பமேன்னு போனேன். ப்ரியா மேடம்னு சுந்தர் சொன்னவங்கள நீ கூட டிவியில பாத்துருப்பே... வாரம் ஒரு சினி ஆக்ட்ரோட சேந்து ப்ரோக்ராம் குடுப்பாங்க... டிவியில பாக்கறத விட யங்கா, செகப்பா... She was very sweet when I introduced myself....போன அன்னைக்கே ஒரு ஸ்க்ரீன் டெஸ்ட்டுன்னு சொல்லி ஒரு ஷீட்ட கைல குடுத்து இதுலருக்கற மனப்பாடம் செஞ்சி சொல்லுன்னு சொன்னாங்க... எனக்கு எப்படியும் அந்த வேலை வேணும்னு ஒரு வைராக்கியம்... ஒரே டேக்குலயே ஓக்கே ஆயிருச்சி... டேக் முடிஞ்சதும் அந்த மேடம் என்னெ கட்டிபுடிச்சிட்டு ஒன் வயசுலதாம்மா நானும் இந்த ஃபீல்டுக்கு வந்தேன்.. நா அப்ப இருந்தா மாதிரியே நீ இருக்கேன்னு சொன்னப்ப I was very thrilled Jothi...'

அவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்பதுபோன்ற முகபாவனையுடன் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஜோதிகா...

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் நான்கு மணியை கடந்திருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம்! நேரம் போனதே தெரியவில்லை...

'என்னடி அப்படி பாக்கறே... நம்ப முடியல இல்ல?'

'ஆமாடி... ஆனா நம்பித்தான ஆவணும்? காலையில ஒன்னெ பாக்கறப்பவே என்ன இது இவ்வளவு பளிச்சின்னு இருக்கான்னு நெனைச்சேன்... எப்படியோ நீ சந்தோஷமா இருக்கறத பாத்து மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி.' என்றவாறு எழுந்து நின்றாள் ஜோதிகா. 'ஏய் ஒரு மணி நேரத்துக்கும் மேல இங்க ஒக்காந்துருந்துருக்கோம் இப்பவே கெளம்புனாத்தான் அப்பா வர்றதுக்குள்ள நா வீடு போய் சேர முடியும்...'

அப்போதுதான் தன்னுடைய வாட்சைப் பார்த்தாள் ப்ரியா. 'ஏய் ஆமாடி....' என்றவள் பதற்றத்துடன், 'ஐயையோ... அந்த ஆட்டோ டிரைவர்...' என்றவாறு பூங்கா வாசலை நோக்கி ஓடினாள். ஆட்டோ நின்றிருந்த இடம் காலியாயிருந்தது. 'ச்சே.. பணத்து குடுத்துட்டாவது போயிருக்கலாம்...'

'என்னடி ஆட்டோவையே காணோம்... நொந்துபோயி போய்ட்டார் போலருக்கு... சரி வா வேற ஒரு ஆட்டோவ புடிப்போம்... ஒன்னெ இறக்கிவிட்டுட்டு நா போறேன்....' என்றவாறு ஜோதிகா சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ நோக்கி கையசைத்தாள்...

இருவரும் சிறிது நேரம் மவுனமாக பயணித்தனர். சட்டென்று, 'ஏய் ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்...' என்றாள் ப்ரியா.

'என்ன... மூவி ஆஃபர் ஏதாச்சும் வந்துருக்கா?' என்றாள் ஜோதிகா கிண்டலுடன்..

'ச்சீ இல்லடி... அந்த ப்ரேமா மேடம் யார் தெரியுமா?'

'எனக்கென்ன தெரியும்?'

'நம்ம சுந்தரோட அம்மா....'

ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள். 'என்னடி சொல்றே?'

'ஆமாடி... ஆனா அவங்கதான் நம்ம சுந்தரோட பிரச்சினையே....'

'அப்படீன்னா?'

'We are in the same boatடுன்னு சொன்னனே....'

'ஆமா...'

'எங்கம்மா மாதிரிதான்... ஆனா இது வேற மாதிரி...'

'என்னடி சொல்றே? ஒன்னும் புரியல... This is differentடுன்னு tomatto ketchup ஆட்ல சொல்றா மாதிரி இருக்கு...'

'ஏய் வெளையாடாத... I am serious...'

‘சொல்லு...’

தொடரும்...

 

Technorati Tags:

24.12.07

நாளை நமதே - 34

ஜோதிகாவும் ப்ரியாவும் எதிர் எதிர் திசையில் செல்ல வேண்டியவர்கள் என்பதாலும் ஜோதிகா எப்படியாவது தன்னுடைய தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டை சென்றடையவேண்டும் என்று கருதியதாலும், 'சரிடி ப்ரியா, மண்டே காலேஜ்ல வச்சி பாக்கலாம்.' என்றாள் விடைபெறும் நோக்குடன்.

ஆனால் ப்ரியா விடவில்லை. 'ஏய், இரு. நானும் ஒங்க வீடு இருக்கற டைரக்ஷன்லதான் போணும்.' என்றாள்.

'ஏன்... ஒங்க வீடு ஆப்போசிட் டைரக்ஷன்லதான இருக்கு?' என்றாள் ஜோதிகா வியப்புடன்.

'இல்லடி... நீ போற டைரக்ஷன்லதான்.'

'என்னடி சொல்றே?'

ப்ரியா அவளுடைய முகத்தை தவிர்த்து எதிரில் ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நின்ற ஆட்டோக்களில் ஒன்றை கையசைத்து அழைத்தாள். அதிசயமாக என்ன, ஏது என்று கேட்காமல் ஆட்டோ வட்டமடித்து அவர்கள் முன் வந்து நின்றது. 'வா சொல்றேன்.' என்று ஜோதிகாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.

'எங்கம்மா போகணும்?' என்றார் ஆட்டோ டிரைவர்.

'சொல்றேன் இப்படியே போங்க..' என்றாள் ப்ரியா.

'இல்லம்மா.... எங்கன்னு சொன்னாதான எவ்வளவு குடுப்பீங்கன்னு....'

'நீங்க கேக்கறத குடுக்கறேன், போறுமா?' என்றாள் ப்ரியா எரிச்சலுடன், 'வண்டிய எடுங்க....'

வாகனம் நகரும்வரை காத்திருந்த ஜோதிகா, 'நா சொல்லட்டுமா... இப்ப நீ ஒங்க வீட்ல இல்லை... சரியா?' என்றாள்.

'ஆமா.....'

'நா அன்னைக்கி அவ்வளவு தூரம் சொல்லியும்......'

ப்ரியா ஜோதிகாவின் கரங்களைப் பற்றினாள். 'அந்த அங்கிள் இப்ப வீட்டுக்கே வந்துட்டார்டி.... இதுக்கப்புறம் நா எப்படி....?'

ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள்.... சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தபடி அமர்ந்திருந்த ப்ரியாவின் கண்கள் கலங்கி இருப்பதை காண முடிந்தது. அவளாக மேலே தொடரும் வரை காத்திருப்பது என தீர்மானித்தாள். இந்த மனநிலையில் அவளை விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை அவளுக்கு. இருவரும் சிறிது நேரம் மவுனமாக சாலையை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். இதற்கு மேலும் ஆட்டோவில் அமர்ந்து தங்களுடைய பர்சனல் விஷயங்களை பேசுவது அத்தனை உசிதமாக படவில்லை அவளுக்கு.

'இறங்கி எங்கயாவது ஒக்காந்து பேசலாமா ப்ரியா?'

ப்ரியாவும் சரியென்று தலையை அசைத்தாள். ஆட்டோ டிரைவருக்கு புரிந்தது. வேகத்தை குறைத்து சாலையின் இடதுபுறம் ஒதுங்கி நின்றார். அவர்கள் கடந்திருந்த தூரம் சிறிதளவேதான் என்றாலும் முப்பது ரூபாயை எடுத்து நீட்டினாள் ப்ரியா. 'வேணாம்மா.... ஒங்க கண்ணுல கண்ணீர பாத்ததுக்கப்புறம் ஒங்கக் கிட்ட காசு வாங்க மனசு வரல.... வேணும்னா பக்கத்துலருக்கற பார்க்ல ட்ராப் பண்ணிட்டு வெய்ட் பண்றேன்... சாவகாசமா பேசிட்டு வாங்க... எங்க கொண்டு வுடணுமோ வுட்டுடறேன்....'

ப்ரியாவும் ஜோதிகாவும் சென்னையில் இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவரா என்பதுபோல் அவரை பார்க்க....'எனக்கும் ஒங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கும்மா... ஒங்க வீட்டுல ஏதோ பிரச்சினைன்னு தெரியுது... மனசு கேக்கல... அதான்....' என்றார் ஆட்டோ டிரைவர்.

'தாங்ஸ்ங்க.... ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்லாம்னா...' என்றாள் ப்ரியா தயக்கத்துடன்..

'வெய்ட் பண்றேன்.... இருங்க பக்கத்துலதான் பார்க்...'

அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ அருகில் இருந்த பூங்கா ஒன்றில் நிறுத்த இருவரும் இறங்கி காலியாய் இருந்த பூங்காவுக்குள் நுழைந்து புல் தரையில் அமர்ந்தனர். ஆட்டோ டிரைவர் இறங்கி ஒரு பீடியை பற்றவைத்தார்.

ப்ரியா தலை குனிந்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க....'ஒங்கம்மா எப்படிறி இதுக்கு ஒத்துக்கறாங்க?' என்றாள் ஜோதிகா.

'I think she is being blackmailed by him....'

'அப்ப போலீசுக்கு போவேண்டியதுதானே....?'

ப்ரியா கேலி புன்னகையுடன் தன் தோழியைப் பார்த்தாள். 'என்னன்னு கம்ப்ளைண்ட் பண்ண? எங்கம்மாதான் ஏறக்குறைய ரெண்டு வருசமா அந்த அங்கிளோட ரிலேஷன்ஷிப் வச்சிருக்காங்களே.... I think he is having some photos with him.... அம்மா அந்தாள் சொல்றத கேக்கலன்னா சைட்ல போட்டுருவேன்னு மிரட்டறான்னு சொல்றாங்க...'

அவள் கூறுவதில் இருந்த நியாயம் ஜோதிகாவுக்கு புரிந்தது. 'சரிடி... வீட்ட வெளிய வந்துட்டே.... பணத்துக்கு? காலேஜ் ஃபீஸ் வேற இருக்கு....எப்படி மேனேஜ் பண்ணுவ?'

'சுந்தர் மூலமா ஒரு ஜாப் கிடைச்சிருக்குடி....'

ஜோதிகா வியப்புடன் பார்த்தாள். 'என்னடி சொல்ற? சுந்தர் மூலமாவா? என்ன வேல?'

'------- டிவியில ஜாக்கியா..... வாரத்துல மூனு ப்ரோக்ராம்...'

ஜோதிகாவின் விழிகள் வியப்பால் விரிந்தன. 'அப்படியா வெரி குட்... ஆனா ஸ்டடீஸ் அஃபெக்ட் ஆகாதா?'

'இல்லடி..... ஈவ்னிங்லதான் ரெக்கார்டிங் வச்சிக்கறாங்க... சுந்தரோட அம்மாதான் ப்ரொட்யூசர்.. அவங்க ரெக்கமெண்டேஷன்லதான்.....'

'என்னடி சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைசா தரே... சுந்தரோட அம்மா டிவி ப்ரொட்யூசரா?'

'ஆமாடி.... தற்செயலாத்தான் கேட்டேன்.... சுந்தர் was very understanding....'

ஜோதிகாவால் தான் கேட்பதை ஜீரனிக்க முடியவில்லை. 'சரிடி... ஆனா சுந்தருக்கு ஒன் விஷயம் எப்படி தெரியும்? எங்கிட்ட சொன்னா மாதிரியே அவங்கிட்டயும் ஒங்க அம்மாவப்பத்தி சொன்னியா என்ன?'

ப்ரியா சோகத்துடன் தன் தோழியைப் பார்த்தாள். 'We are in the same boat ஜோதி.... அதான் அவனால எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனியிருக்கு...'

'என்னடி சொல்றே? அப்படீன்னா?'

ப்ரியா பதிலளிக்காமல் சற்று தூரத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களை பார்த்தாள். இப்படியே இருந்துருந்தா எவ்வளவு நன்னாருந்துருக்கும்..... அவளையுமறியாமல் இரு வாரங்களுக்கு முன்னால் சுந்தரை சந்தித்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்....

தொடரும்...

 

Technorati Tags:

14.12.07

நாளை நமதே 33

அதிகாலையிலேயே விழிப்பு வந்தும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் விட்டத்தில் சுழலும் மின்விசிறியையே பார்த்தவாறு படுத்துக்கிடந்தாள் ஜோதிகா.

அம்மா, அப்பா, ராஜ் எல்லாரும் கிளம்பி சென்றிருந்ததால் வீடு அமைதியாக இருந்தது.

இந்த இரண்டு வாரங்களில்தான் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது என்று நினைத்தாள். இன்னையோட காலேஜ டெம்பரவரியா மூடி ஒரு வாரமாவுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னால க்ளாசுக்குள்ள பரத்த அடிக்கற அளவுக்கு போயி அடுத்த நாள் சஸ்பெண்ட் ஆன குமார் அன்னைக்கி ராத்திரியே யாரோ ரவுடிப் பசங்க அடிச்சி போட்டது.... அதுக்கு பரத்தும் அவன் க்ரூப்பும்தான் காரணம்னு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் போயி பரத் போலீஸ் காலேஜ் காம்பஸ்ல வச்சே அரெஸ்ட் பண்ணது..

அதே நாள் வாசனோட ட்வின் ப்ரதர் அடுத்த காம்பஸ்ல அவன் ஃப்ரெண்ட்சோட சேந்து கலாட்டா பண்ண அங்கயும் போலீஸ் புகுந்து தடியடி பண்ணது.

அத்துமீறி ரெண்டு காலேஜ் காம்பஸ்க்குள்ளயும் போலீஸ் நுழைஞ்சத எதுர்த்து டேவிட் மத்த பசங்கள சேத்துக்கிட்டு டெமோ பண்ண எல்லாரையும் ஒட்டுமொத்தமா ஜோதிகாவையும் வாசனையும் சேர்த்து காலேஜ்லருந்து சஸ்பெண்ட் பண்ணது... விஷயம் தெரிஞ்சி அப்பா கோபத்துல தலகால் தெரியாம, காலேஜ்ல போயி படிடின்னு சொல்லி அனுப்புனா பசங்களோட சேந்துக்கிட்டு கலாட்டா பண்ணி சஸ்பெண்ட் ஆயி என் மானத்தையே வாங்கிட்டியடின்னு சொல்லி அவளெ அடிச்சி குடியிருப்புக்கே தெரிஞ்சி அவமானப்பட்டது.

அதுக்கப்புறம் குமார அடிச்சி போட்டது காலேஜ் செக்யூரிட்டி ஆளுங்கதான் பரத்தோட அப்பா கண்டுபிடிச்சி அண்ணா வைஸ் சான்சலர பாத்து காலேஜ் அட்மினுக்கு எதுரா கம்ப்ளெய்ண்ட் குடுத்தது. அதுக்கப்புறம் யூனிவர்சிட்டி ஒரு சின்னவிசாரனை நடத்தி காலேஜ் அட்மினுக்கு வார்னிங் குடுத்தது. ஸ்டூடண்ட்ஸ் அன்ரெஸ்ட்டுன்னு காரணம் காட்டி காலேஜ் மேனெஜெமெண்ட் அடுத்தடுத்த காம்பஸ்லருந்த ரெண்டு காலேஜையுமே லாக்கவுட் பண்ணது.....

இன்னையோட ரெண்டு வாரமாச்சு காலேஜுக்கு போயி....

ஜோதிகாவின் நினைவுகளை கலைத்தது அவளுடைய செல்ஃபோன்... எடுத்து 'சொல்லு... என்ன விஷயம்? பரத்த மீட் பண்ணியா?' என்றாள் எதிர்முனையிலிருந்த டேவிட்டிடம்.

'ஆமா....'

'எப்படியிருக்கான்.'

'கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். ஆனா இப்ப பரவால்லை... இன்னைக்கி ஒன்னெ மீட் பண்ண முடியுமான்னு கேட்டான்.'

'எங்க?'

'ஒனக்கு எங்க சவுகரியப்படுமோ அங்க... வாசனும் வருவான். சுந்தரும் வரேன்னு சொல்லியிருக்கான்.'

'சுந்தரா?' ஜோதிகாவுக்கு வியப்பாக இருந்தது. 'அவனெ எங்க மீட் பண்ணே?'

டேவிட் சிரித்தான். 'ஏய், நாம நெனச்சா மாதிரியில்ல அவன். நல்ல விவரமான ஆளாருக்கான். ஆனா அவன் லைஃப்லயும் ப்ராப்ளம்ஸ். போன ரெண்டு வாரத்துல அவன் வீட்டுக்கு ரெண்டு மூனுதரம் போயிருந்தேன். அப்பத்தான் தெரிஞ்சது ஏன் அவ்ளோ சைலண்டாருக்கான்னு... நல்ல பையன் ஜோதி... He was very helpful to us....பரத் வீட்டுக்கும் ரெண்டுதரம் வந்துருக்கான். பரத்தோட டாடிக்கும் அவனெ ரொம்ப புடிச்சி

போயிருச்சி...'

'பரவால்லையே.. இவ்வளவு நடந்துருக்கா?' என்ற ஜோதிகா படுக்கையில் இருந்து எழுந்து செல்ஃபோனுடன் ஹாலை நோக்கி நடந்தாள். ‘சுந்தர் லைஃப்லயும் பிரச்சினைன்னு சொன்னியே.. என்ன பிரச்சினை?’

'அத வேற ஒரு டைம் சொல்றேன்.... எங்க மீட் பண்ணலாம் அத சொல்லு.’'

'எனக்கு எங்கன்னாலும் ஓக்கே. ஆனா அப்பா திரும்பி வர்றதுக்குள்ள நா வீட்டுக்கு வந்துரணும்... இல்லன்னா டேஞ்சர்...'

டேவிட் சிரித்தான். 'ஏன், அங்கிள் இன்னும் திட்டிக்கிட்டேத்தான் இருக்காரா?'

'ஆமா டேவிட்... ஆல்மோஸ்ட் ஒருவாரமா பயங்கர டார்ச்சர். இனி மறுபடியும் காலேஜ் திறந்தாத்தான் நிக்கும் போலருக்கு. இதுனாலயே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அடிக்கடி ஆர்க்யூமெண்ட் வந்துருது.... வீட்ல ஒரு வாரமா நிம்மதியே இல்ல டேவிட்....' ஜோதிகாவின் குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்க டேவிட் ஆறுதலாக பேசினான்.

'நா கேள்விப்பட்டேன் ஜோதி... அம்மா சொன்னாங்க...But don't worry.... Things would work out... பொறுமையாயிரு...'

'தாங்ஸ் டேவிட்....' என்றாள் ஜோதிகா சுதாரித்துக்கொண்டு. 'சொல்லு... எங்க வரணும்?'

ஒரு நொடி தாமதத்திற்குப் பிறகு எதிர் முனையிலிருந்து பதில் வந்தது. 'பரத் வீடு பரவால்லையா?'

அவ்வளவு தூரமா என்று ஒரு நொடி தயங்கினாள் ஜோதிகா. போய் வரவே ரெண்டு மணி நேரம் ஆயிருமே. இருந்தாலும் பரவால்லை.... எனக்கும் ஒரு ரிலீஃப் வேணும். எவ்வளவு நேரந்தான் தனியா ஒக்காந்துருக்கறது? 'நாலு மணிக்குள்ள முடிஞ்சிருமா?'

டேவிட் சிரித்தான். 'ஏய்... எதுக்கு அவ்வளவு நேரம்? ஒரு பதினோரு மணிக்கு துவங்குனா லஞ்சோட முடிச்சிட்டு நீ வேணும்னா போயிரு... நா வேணும்னா வந்து பிக்கப் பண்ணவா?'

அவனுடைய தொனியில் இருந்த கேலி ஜோதிகாவுக்கு புரிந்தது. 'ஏன் இன்னொரு பிரச்சினைய தரலாம்னு பாக்கியா?' என்றாள் புன்னகையுடன்.

டேவிட் குடும்பம் முழுவதையும் ஜோதிகாவின் பெற்றோர்க்கும் பழக்கம் என்றாலும் அவனுடைய பைக்கில் சேர்ந்து செல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கும் இல்லையே.... ஏற்கனவே பழங்காலத்து ஆளான அப்பா இது தெரிஞ்சா கேக்கவே வேணாம்....

'ஒங்கப்பாவ எனக்கு தெரியாதா என்ன? சும்மா தமாஷுக்கு கேட்டேன்...' என்றான் டேவிட். 'சரி... இன்னும் ஒரு மணி நேரத்துல பாக்கலாம். வழி தெரியலன்னா மறுபடியும் ஃபோன் பண்ணு.... நா வந்து ஒன் ஆட்டோவ கைட் பண்றேன்... பை...'

இணைப்பை துண்டித்துவிட்டு குளித்து ஜோதிகா புறப்படுவதற்கு முன் தன் தாயை செல்ஃபோனில் அழைத்து அனுமதி கோரினாள்... 'எதுக்குடி, அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சினை பண்ணுவாரே...' என்று லதா ஆரம்பத்தில் தடுத்தாலும் 'சரி போனோம் வந்தோம்னு இரு... திடீர்னு அப்பா

வீட்டுக்கு போன் பண்ணி நீ இருக்கியான்னு செக் பண்ணா பிரச்சினைதான்.' என்று அனுமதியளித்தாள்.

'பயப்படாதேம்மா... நா சீக்கிரம் வந்துருவேன்.' என்று சமாதானம் சொல்லிவிட்டு வீட்டு தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினாள். கூப்ட்டா எங்கேஜ்டு நினைச்சிக்கட்டும்... 'நீ வீட்ல இருந்தா ஃபோன் பேசறத தவிர வேற வேலையே இருக்காதே...' என்று ஏற்கனவே பலமுறை அவளை கோபித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். என்ன மிஞ்சிப்போனா மறுபடியும் ஒரு திட்டு

விழப்போவுது....

பரத்தின் வீட்டைக் கண்டுபிடித்து சேரும்போது நண்பகலை தாண்டியிருந்தது.

பரத் வசதியானவன் என்பது தெரிந்திருந்தாலும் இத்தனை வசதிபடைத்தவனா நம்முடன் ஒரே கல்லூரியில் படிக்கிறான் என்று வியந்துபோனாள் ஜோதிகா. அத்தனை விசாலமாக இருந்தது பரத்தின் பங்களா!

அவள் சென்றடைந்தபோது வீட்டு முன் வரவேற்பறையில் பரத்துடன், டேவிட், வாசன், சுந்தர் ஆகியோருடன் அதிசயமாக ப்ரியாவும் அமர்ந்திருந்தாள்.... ஜோதிகா வியப்புடன், 'ஏய் ப்ரியா நீயுமா... எப்ப வந்தே?' என்ற விசாரனையுடன் அவள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

பரத் இரண்டு நாள் ஷேவ் செய்யாத முகத்துடன் பார்க்கவே பரிதாபமாக இருந்ததுபோல் பட்டது ஜோதிகாவுக்கு..... பாவம் இவனுக்கென்ன தலையெழுத்தா இவன் இருக்கற ஸ்டேட்டசுக்கும், மார்க்குக்கும் யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருக்கும்... எதுக்கு நம்மளமாதிரி இந்த காலேஜ்ல சேந்து

லோல் படறான்... 'என்ன பரத் டல்லாருக்கே....' என்றாள் ஆதரவாக..

'I am OK now...' என்றான் பரத் புன்னகையுடன். 'அப்பாதான் ரொம்ப அப்செட்டாய்ட்டாங்க.... He never thought I would be roughed up by the Police... That was a shocking experience..... But அடுத்த நாளே பெய்ல் கெடச்சி இதுக்கு நிஜமா யார் காரணம்னு தெரிஞ்சதும்..... Now it's ok...'

'யூ ஆர் ரைட்...எங்க வீட்லயும் இது ஒரு பெரிய பிரச்சினையையே உண்டாக்கிருச்சி...' என்றான் வாசன். 'ஒங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமான்னு தெரியலை.'

'இப்ப அது தேவையா வாசன்...' என்று இடைமறித்தான் டேவிட்... 'இனி என்ன பண்றதுன்னு பேசுவமே?'

ஜோதிகா விடவில்லை. 'இரு டேவிட்... அவன் சொல்ல வந்தத சொல்லட்டுமே.... சொல்லு வாசன் என்ன நடந்தது?'

வாசன் துவங்குவதற்கு முன் டேவிட் பதிலளித்தான். 'இவன் மூர்த்தி மாதிரியே இருக்கறதால ரெண்டு நாளைக்கு முன்னால குமார அடிச்சமாதிரி இவனெயும் ஒரு கும்பல் அட்டாக் பண்ணியிருக்கு... நல்லவேளையா பகல் நேரமானதால ரோட்ல இருந்தவங்க தலையிட்டு இவனெ ரெஸ்க்யூ பண்ணியிருக்காங்க....'

'ஐயையோ' என்றாள் ஜோதிகா பதற்றத்துடன். 'மூர்த்திக்கி இது தெரியுமா?'

'தெரியும்' என்றான் வாசன். 'ஆனா அவனுக்கு இதெல்லாம் சகஜம் ஜோதி... அப்பாவுக்கும் எம்மேலதான் கோவம்... என்னமோ இதுக்கு நாந்தான் காரணம்கறா மாதிரி... இதுல வேற ஒரு பிரச்சினை என்னன்னா மறுபடியும் மூர்த்திய அவங்க காலேஜ்ல சேத்துக்குவாங்களான்னே தெரியல... குமார அவங்கப்பா நம்ம காலேஜ்லருந்தே ரிலீஃப் வாங்கிட்டாராம்.. வேற எங்கயோ சேக்கப் போறதா கேள்வி... அதனாலதான் மூர்த்தி விஷயம் சீரியசாருக்கு... மூர்த்திய டிஸ்மிஸ் பண்ணா அவனுக்கு எங்க கிடைக்கிதோ நீயும் அங்கதான் படிக்கணும்னு அப்பா கம்பெல் பண்றார். அம்மாவுக்கும் நா அந்த காலேஜ்லயே கண்டினியூ பண்ணா எங்க என்னெ மறுபடியும் யாராச்சும் அட்டாக் பண்ணுவாங்களோங்கற பயம். அதான் என்ன பண்றதுன்னே தெரியல...'

வாசனின் குரலில் இருந்த விரக்தி ஹாலில் அமர்ந்திருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள சற்று நேரம் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

'We all understand your feelings Vasan.' என்றான் பரத் ஆறுதலாக. 'ஆனா எனக்கென்னவோ ஒங்கம்மாவோட பயம் நியாயமானதுன்னுதான் படுது.'

'என்ன பரத் நீயும் இப்படி சொல்றே?' என்றான் டேவிட். 'யார் என்ன பண்ணப் போறா? எனக்கென்னவோ வாசனப்பத்தி நம்ம காலேஜ்ல யாருக்கும் தப்பான ஒப்பீனியன் இல்லேன்னுதான் படுது. அப்படியே இருந்தாலும் we can mediate and solve it.'

சுந்தர் சிரித்தான். 'நீ பயங்கரமான ஆப்டிமிஸ்றா டேவிட்.... நம்மளையே சஸ்பென்ஷன்ல வச்சிருக்காங்க.... மறுபடியும் என்க்வயரின்னு எதையாவது வச்சி காலேஜ்லயே சேர விடாம பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.... நீ என்னடான்னா?'

ப்ரியா புன்னகையுடன் ஜோதிகாவைப் பார்த்தாள். 'டேவிட் பயங்கரமான ஆப்டிமிஸ்ட்னா சுந்தர் பயங்கரமான பெஸ்சிமிஸ்ட்... என்ன சொல்றே?'

ஜோதிகா வாய்விட்டு சிரிக்க அனைவரும் சிரித்தனர். அறையில் அதுவரை இருந்த சங்கடம் அந்த சிரிப்பில் கரைந்துபோனது.

அதன் பிறகு அந்த வார இறுதியுடன் முடியவிருந்த சஸ்பென்ஷன் காலத்திற்குப் பிறகு அனைவரும் கல்லூரிக்கு திரும்புவது என்றும் கல்லூரி நிர்வாகம் எடுக்கவிருந்த எத்தகைய நடவடிக்கைகளையும் ஒரே குழுவாக இணைந்து சந்திப்பது என்றும் முடிவானது.

ஜோதிகாவும் ப்ரியாவும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட 'திங்கள் கிழமை காலேஜ்ல பாக்கலாம்.' என்றவாறு அனைவரும் விடைகொடுத்தனர்.

தொடரும்...

 

Technorati Tags:

7.12.07

நாளை நமதே 32

 

Technorati Tags:

இவ்வளவு நடக்கற வரைக்கும் நீங்கல்லாம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க?' என்று எரிச்சலுடன் இரைந்தார் வெங்கடேஸ்வரலு. ஏற்கனவே 'உள்ளே' சென்றிருந்த அரை பாட்டில் உயர் ரக மது அவரை உசுப்பிவிட்டிருந்தது. தன்னுடைய மருமகன்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.

மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரலுவின் குடும்பத்தினர், முக்கியமாக மருமகன்கள் இருவரும் தலையைக் குனிந்துக்கொண்டனர்.

தெண்ட பசங்க. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானுங்களேங்கற ஒரே காரணத்துக்காக ஊர்லருந்து புடிச்சி கட்டி வச்சதுக்கு இது தேவைதான். காலேஜ்ல சேந்து மூனு மாசம் கூட ஆகாத வெத்து பசங்க காலேஜுக்குள்ளவே ரகள பண்ணிருக்கானுங்க. அங்கயே நாலு மொத்து மொத்தி தொரத்திவிடாம... இதுக்கு இடியன் தடியன் மாதிரி செக்யூரிட்டி வேற.

உள்ளுக்குள் புகைந்த வெங்கடேஸ்வரலு ஹாலின் மறுகோடியில் தலையைக் குனிந்தவாறு நின்ற கல்லூரி வாட்ச் அண்ட் வார்ட் தலைவனை பார்த்தார். 'யோவ்... ஒன்னெ நம்பித்தான நா காலேஜையே விட்டுருக்கேன். அந்த காலிப் பயலுங்க லேபூக்குள்ள பூந்து எல்லாத்தையும் போட்டு ஒடச்சிருந்தா என்னய்யா ஆவறது?'

செக்யூரிடி ஆஃபீசர் முருகேசன் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தார். 'அந்த அளவுக்கு போயிருவானுங்களாய்யா?'

'கிளிச்சிருப்பே.... போய்யா... வாய்ல சும்மா வந்துறப்போவுது...' வெங்கடேஸ்வரலு மேலும் இரைந்தார். வசவுகள் சரமாரியாக வந்து விழுந்தன.

மேசையை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் மூவரும் காதுகளைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியது.... ஆனால் இது நாளும் நடக்கும் நிகழ்வுகளாயிற்றே.... ஒன்றும் நடவாததுபோல் அமர்ந்திருந்தனர்.

'சரிங்க... இப்புடு என்னெ பண்றது?' அவரை அப்படியொரு கேள்வி கேட்கக் கூடிய ஒரே ஆள் கற்பகம்..

'என்னையவே கேளு.. ஏன் காலேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர கேக்கறது? டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கார்ல போய் வறாங்கள்லே?'

நாகராஜுலு இருக்கையில் நெளிந்தார். அடுத்து அமர்ந்திருந்த அவருடைய மனைவி ரோகினி இடுப்பில் இடித்தாள். அதற்கு 'வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கவும்' என்று அர்த்தம். இவர் எங்க எதையாவது ஒளறிக்கொட்டி அப்பாவோட எரிச்சலை கூட்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. ஓரக்கண்ணால் தன் தங்கை ரோஜாவைப் பார்த்தாள். ஏதாச்சும் சொல்லி அப்பாவ சமாதானப்படுத்தேன் என்று கெஞ்சியது அவளுடைய பார்வை. இருந்தும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் ரோஜா. அவளுக்கு எப்படியாவது கல்லூரி நிர்வாகி பொறுப்பு தன்னுடைய கணவனை வந்தால் போதும் என்ற எண்ணம்.

'அதில்லீங்க... நம்ம மருமக புள்ளைங்களுக்கு ஒங்கள மாதிரி வயசும் விவரம் இல்லீங்களே.... அதான் கேக்கேன்.' என்றாள் கற்பகம். 'அந்த பையனத்தான் ஏற்கனவே ஒரு தடவ டிஸ்மிஸ் செஞ்சி அத வித்ட்றா பண்ணமே... அதான் யோசனையாருக்கு....'

வெங்கடேஸ்வரலுவுக்கும் இந்த பிரச்சினையிலிருந்த தீவிரம் தெரிந்துதானிருந்தது. இருந்தும் இதை தவிர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் ஆத்திரமாக வெளிவந்தது. 'அது தெரியுதுல்ல... அப்ப என்ன பண்ணியிருக்கணும்? அந்த பையன ஆஃபீஸ் ரூமுக்கு கூப்ட்டு கடுப்படிச்சிருக்க வேணாம்லே... ரெண்டாம் வருச பசங்கள விட்டே அவனுங்கள மொத்தியிருக்க வேணாம்... இல்லையா செக்யூரிட்டிங்கள விட்டு ரெண்டு போட்டுருக்கணும். ஏதாச்சும் பிரச்சினையாயிருந்தா ரெண்டு மூனு செக்யூரிட்டிங்கள வேலைய விட்டு தூக்கி நாம தப்பிச்சிருக்கலாம். அத விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் நேரடியா தலையிட்டு...' என்றவர் மீதமிருந்த மதுவை ஒரே மூச்சில் அடித்துவிட்டு அறையிலிருந்த அனைவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.

கற்பகம் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கணவனை நெருங்கினாள். 'சரிங்க... தப்புத்தான்... அதான் சொன்னேனே.... விவரம் பத்தாம இவங்க....' என்றவள் அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் மீது இருந்த மது பாட்டிலை மூடி விலக்கி வைத்தாள்.

'ஏய்... என்ன பண்றே.... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கே...' என்றார் இதை எதிர்பாராத வெங்கடேஸ்வரலு நாக்குழற...

'இருக்கட்டும்.' என்றாள் கற்பகம் புன்னகையுடன். 'நீங்க மொதல்ல இந்த எம்.எல்.ஏவ கூப்ட்டு அந்த பையன் செஞ்சத பத்தி சொல்லுங்க. அவர் ஏதாச்சும் சொன்னார்னா நம்ம 'அய்யாவ' கூப்ட வேண்டியிருக்கும்னு சொல்லுங்க... அவர் பேர சொன்னா வாய மூடிக்கிருவான்...'

'அய்யா' என்ற வார்த்தையை கேட்டதுமே போதை கலைந்துபோக நிமிர்ந்து அமர்ந்தார் வெங்கடேஸ்வரலு. 'ஏண்டி ஒனக்கென்ன பைத்தியமா? ஒங்கய்யாவுக்கு முளுசா சொளையா குடுத்து ரெண்டு மாசம் கூட ஆவல... இந்த லட்சணத்துல இதுக்கு தனியா கறந்துருவாண்டி... நீயே அந்த எம்.எல்.ஏ கிட்ட பேசி சமாளி. சரிவரலையா அவனுக்கு ஏதாச்சும் குடுத்துடறேன், அந்த பையன் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொல்லு....என்னால முடியாது... நா ரூமுக்கு போறேன்.'

விருட்டென்று இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து தடுமாறியவாறு வெங்கடேஸ்வரலு தன் அறையை நோக்கி செல்ல கற்பகம் வேறு வழியின்றி மேசை மீதிருந்த தன் செல்போனை கையில் எடுத்தாள்.

********

'இப்ப என்னடா செய்யப் போறே?' என்றாள் பார்வதி எரிச்சலுடன்.

மூர்த்தி அவளுடைய கோபத்தை பொருட்படுத்தாமல் டிவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

'டேய் ஒன்னத்தான்...' சாதாரணமாக எந்த சூழலிலும் பதற்றப்படாமல் இருக்கும் பார்வதி எழுந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை அணைத்தாள்.

'இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி?'

மூர்த்தி கோபத்துடன் வாசனைப் பார்த்தான். 'டேய் இது ஒன் வேலைதான? வந்ததும் வராததுமா போட்டுக் குடுத்துட்டியா?'

'டேய்... அவனுக்கே நா சொல்லித்தான் விஷயம் தெரியும்.' இடைமறித்தாள் பார்வதி. 'இவ்வளவு நடந்துருக்கு, வீடு வந்து சேர்ற வரைக்கும் அவங்கிட்ட கூட சொல்லல நீ...'

'அவன் சொல்லலனா ஒனக்கு எப்படி தெரியும்?'

'அப்பவே போன் வந்துருச்சி... ஒங்க கரஸ்பாண்டண்ட் ஆஃபீஸ்லருந்து....அதான் நம்ம வீட்டு ஃபோன் நம்பர் அவங்க ரெக்கார்ட்ல இருக்கே... இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி? ஒங்கப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொன்னாத்தான் இந்த சனிக்கிழமையாவது வந்து சேர்வார்...'

'அவர் எதுக்கு? பைசா பொறாத விஷயம்... எல்லாம் நானே பாத்துப்பேன்...' என்றவாறு மூர்த்தி எழுந்து தன் அறையை நோக்கி செல்ல பார்வதி அவனை இடைமறித்தாள்.

'டேய்.. நீ நெனக்கறா மாதிரி இல்ல....ரிஜிஸ்தர் தபால்ல எக்ஸ்ப்ளனேஷன் லெட்டர் வருதாம்... ஒங்கப்பா நேர்ல வந்து எக்ஸ்பிளனேஷன் குடுத்து எம் பையன் இனி இப்படி செய்யமாட்டான்னு எழுதி குடுத்தாத்தான் ஒன்னெ மறுபடியும் காலேஜ்ல சேத்துக்குவாங்களாம்......'

மூர்த்தி வாய்விட்டு சிரித்தான். 'என்னது..... எக்ஸ்ப்ளனேஷன் லெட்டரா? அதுவும் அப்பா வந்தா? என்ன புருடா விடறியா? இல்ல இவன் சொல்லி குடுத்து நீ சொல்றியா?'

வாசன் அவனுடைய குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல் அன்று அவனுடைய கல்லூரியில் நடந்ததை விவரித்தான். 'இங்க பார் மூர்த்தி... அவனையும் சஸ்பெண்ட் பண்ணிருவாங்கன்னுதான் நெனைக்கேன்... ஆனா அவனுக்கு யாரோ பொலிடிஷியன் சப்போர்ட் இருக்காம். ஒன் கேஸ் அப்படியில்லை...அத்தோட நீ காலேஜ் ப்ராப்பர்ட்டிய வேற ஏதோ டேமேஜ் பண்ணிருக்கியாம்... ஃபோன்ல சொல்லியிருக்காங்க... அதனாலதான் பயமாருக்கு...'

மூர்த்தி மீண்டும் சிரித்தான். 'போடா டேய்... போடா... ஒன்னைய மாதிரின்னு நினைச்சியா...' என்றவன் தன் தாயை பார்த்தான். 'இங்க பார்மா... அப்பாவுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம்.... நம்ம தெரு பசங்கள விட்டு மறுபடியும் ஒரு கலாட்டா பண்ணா எல்லா சரியாயிரும்... இரு சொல்லிட்டு வரேன்...'

பார்வதி தடுத்தும் கேளாமல் வாசலில் கிடந்த செருப்பை அணிந்துக்கொண்டு வெளியேறினான்.

'என்னடா வாசன்... இப்ப என்ன செய்யிறது?' என்றாள் பார்வதி...

வாசன் எழுந்து நின்றான். 'நீங்க கவலைப் பட்டு என்னம்மா பிரயோசனம்.... அவனா நாம சொல்றத கேக்கப் போறான்... அவன் திரும்பி வர்றதுக்குள்ள அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருவோம்... வாங்க...'

'இவன் திரும்பி வந்து குதிப்பானடா?'

வாசன் தன் தாயை நெருங்கி அவளுடைய தோள்களை அணைத்துக்கொண்டான். 'அதுக்கெல்லாம் பயந்தா சரி வராதும்மா.... இவன் பாட்டுக்கு அந்த பசங்களோட சேந்துக்கிட்டு மறுபடியும் ஏதாச்சும் செஞ்சான்.... இவன் கூட பொறந்த பாவத்துக்கு என்னையும் வெளியில தள்ளிருவாங்க...அப்பா வந்தாத்தான் இதுக்கு சொலுஷன்... திட்டுனா திட்டிக்கட்டும்... நீங்க வாங்க...' தன் பெற்றோர்களுடைய படுக்கையறையில் இருந்த தொலைபேசியை நோக்கி அவன் நடக்க பார்வதி வேறு வழியின்றி தன் கணவர் என்னவெல்லாம் பேசுவாரோ என்ற அச்சத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

தொடரும்...

1.12.07

நாளை நம்தே 31

அண்ணாநகர் பூங்கா. இளம் மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

தன் எதிரில் அமர்ந்திருந்த ப்ரியாவை மவுனமாக பார்த்தாள் ஜோதிகா. கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் எங்கோ சூன்யத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்த அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவளோட கம்பேர் பண்றப்ப நம்ம அம்மா, அப்பா எவ்வளவு நல்லவங்க! அப்பா எடுத்ததுக்கொல்லாம் பயங்கரமா கோபப்படறவர்தான். நம்ம முன்னாலயே அம்மாவ கை நீட்டி அடிச்சிருக்கார். எத்தனையோ தரம்... ஆனாலும் அப்பாவுக்கு அம்மா மோல எத்தன பிரியம்னும் எத்தன தர தரம் அடிவாங்கினாலும் அம்மா அப்பாவை எந்த அளவுக்கு விரும்புறாங்கணும் நாமளே பாத்துருக்கமே. அப்பாவோட கோவம் அம்மாக்கிட்ட மாத்திரம் இல்லையே, நானும் ராஜும் கூட அவரோட கோபத்துக்கு எத்தன தரம் பலியாயிருக்கோம். ஆனாலும் அப்பாவோட கோவத்துக்கு பின்னால இருக்கற பாசத்தை எப்படி மறக்கறது?

'எனக்கு வீட்டுக்கு போறதுக்கே என்னவோ மாதிரி இருக்கு ஜோதி....'

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ஜோதிகார் சட்டென்று நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள்.

'அதனால?'

'தனியா ஏதாச்சும் ஹாஸ்டல்ல இருந்துரலாம்னு தோனுது.'

'ஹாஸ்டல் ரூமுக்கு ரெண்ட், காலேஜ் ஃபீஸ், இதுகெல்லாம் பணத்துக்கு எங்க போவே?'

'எங்கயாச்சும் வேலைக்கு போலாம்னு....'

ஜோதிகா திடுக்கிட்டு ப்ரியாவைப் பார்த்தாள். 'அப்ப காலேஜ்?'

ப்ரியா விரக்தியுடன் புன்னகைத்தாள். 'I'll drop out. வேற வழி?'

'உங்கம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா?'

ப்ரியா எழுந்து நின்றாள். 'அவங்கக்கிட்ட சொன்னாத்தான?'

ஜோதிகாவும் தன் கைப்பையுடன் எழுந்தாள். 'நீ நல்லா யோசிச்சித்தான் இந்த டிசிஷனுக்கு வந்துருக்கியா ப்ரியா?'

'ஆமா.. இத விட எனக்கு வேற வழி தெரியல...'

ஜோதிகாவுக்கு தன் தோழியின் முடிவை எப்படி மாற்றுவது என தெரியாமல் குழம்பினாள். There should be some way to tackle this issue without droping out of the college... there should be... ஆனால் அது எப்படி என்பதுதான் விளங்கவில்லை.... இருவரும் மவுனமாக பூங்கா வாசலை நெருங்கினர்.

'நீ நினைக்கிற மாதிரி ஒங்க வீட்டுலருந்து வெளிய வராமயே இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு ப்ரியா.' என்றாள் ஜோதிகா சட்டென்று.

ப்ரியா நின்று அவளை நோக்கி திரும்பினாள். 'என்ன?'

'அந்த அங்கிள பாத்து பேசலாம் இல்லையா? I mean ஒங்கம்மாவுக்கு தெரியாம?'

ப்ரியா கேலியுடன் அவளைப் பார்த்தாள். 'அந்த அங்கிளோட ஏய்மே நாந்தானடி? எங்கம்மா ஒரு இண்டரிம்... நா ரெடின்னு சொல்ற வரைக்கும்.'

ஜோதிகா இதை எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் தாய் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதாக வாக்குறுதியளித்துவிட்டு மீண்டும் அவளுடைய பழைய பாதையிலேயே சென்றுக்கொண்டிருப்பதை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தபோது இதில் இப்படியொரு கோணம் இருக்கும் என்று நினைக்கவில்லை.

'இதவும் ஒங்கம்மாவுக்கு தெரியுமா?'

ப்ரியா படிலளிக்காமல் யோசனையில் ஆழ்ந்தாள். எதிர் திசையில் தன் வீட்டுக்கு செல்லும் பேருந்து வருவது தெரிந்தது. தன் மணிக்கட்டைப் பார்த்தாள். ஏழரை என்றது வாட்ச். திரும்பி ஜோதிகாவைப் பார்த்தாள். இவளுடன் பழகி மூன்று மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் இவளிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்று எப்படி தோன்றியது? தன்னுடைய வயதொத்த இவளால மட்டும் எப்படி பதறாமல் இந்த விஷயத்தை அணுக முடியுது? இந்த மூனு மாசத்துல காலேஜ்ல இவளுக்கு எவ்வளவெல்லாம் அவமானம் ஏற்பட்டுருக்கு. இருந்தாலும் அதுக்கெல்லாம் அசராம... அந்த ட்ரப்ள்சம் எச்.ஓ.டிய கூட டாக்ட்ஃபுல்லா ஹேண்டில் பண்ணி.... அதனாலதான் இவகிட்ட நம்ம பிரச்சினைய டிஸ்கஸ் பண்ணணும்னு தோனுச்சோ....

'தெரியல ஜோதி.... அப்படியே தெரிஞ்சாலும் அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு என்னால சொல்ல முடியல.'

ஜோதிகா ஒரு முடிவுக்கு வந்தாள். 'நா ஒன்னு சொல்லட்டுமா?' என்றாள்.

அவள் ஏற வேண்டிய பேருந்து பஸ் நிறுத்தத்திலிருந்து கிளம்புவது தெரிந்தது. ஆட்டோ புடிச்சித்தான் போணும் போலருக்கு. 'சொல்லு...'

'ஒன் ப்ளேஸ்ல நா இருந்தா இத கண்டுக்காம இருந்துரு....' ப்ரியாவின் முகத்தில் சட்டென்று தோன்றிய கோபம் ஜோதிகாவை மேலே தொடர விடாமல் தடுத்தது. ப்ரியா பதிலளிக்காமல் கிளம்பி சாலைய கடக்க முயல ஜோதிகா திடுக்கிட்டு அவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள். 'ஏய் மறுபடியும் கோச்சிக்கிட்டு போகாத... நா சொல்ல வந்தத முழுசா கேளு.'

ப்ரியா மனமில்லாமல் நின்று தன் தோழியைப் பார்த்தாள். 'சொல்லு...'

'நீ விட்ட விட்டு வர்றதுனால இந்த பிரச்சினை தீர்ந்துடப் போறதில்ல ப்ரியா. அதுவே ஒங்கம்மாவுக்கு அவங்க ரூட்ல போறதுக்கு ஈசியாயிரும்... அதனால நீ எந்த காரணத்த முன்னிட்டும் வீட்ட விட்டு வெளியேறக் கூடாது. காலேஜ்லருந்தும் ட்ராப் ஆகக் கூடாது.'

'எங்கம்மா குடுக்கற காசுல படிக்கச் சொல்றியா? அருவருப்பா இருக்குடி...' ப்ரியாவின் கண்கள் கலங்கி குரல் நடுங்கியது.

ஜோதிகாவுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்படியொரு தாய்க்கு இப்படியொரு மகளா? இருப்பினும் ப்ரியாவின் தற்போதைய தேவை கல்லூரி படிப்பை முடிப்பது. அதற்கு அவள் தொடர்ந்து வீட்டில் இருப்பது அவசியம். ' இங்க பார் ப்ரியா. You have to put up with this just for three more years... அதுக்குள்ள ஒங்கம்மாவும் சேஞ்ச் ஆயிருவாங்கன்னுதான் நா நெனக்கேன்... இல்லையா, இப்ப டிசைட் பண்ணாமாதிரி தனியா வந்துரு....'

'சொல்றது ஈசிடி... அனுபவிச்சி பாத்தாத்தான் தெரியும்... இப்பல்லாம் எங்கம்மாவ பாக்கறதுக்கே பிடிக்கல... இந்த லட்சணத்துல ஒரே வீட்ல....'

ஜோதிகா வாட்சைப் பார்த்தாள். திடுக்கிட்டாள். நேரம் போனதே தெரியாமல்.... இப்ப பொறப்பட்டா கூட வீடு போய் சேர ஒன்பது மணியாயிறும்.

'சாரி ப்ரியா.... இப்ப கெளம்புனாத்தான் ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு போய் சேர முடியும்.... நீ டிஸ்டர்ப் ஆகாம வீட்டுக்கு போ... நாளைக்கி பேசிக்கலாம்....'

தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஜோதிகா ஏறிக்கொள்ள ப்ரியா சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்...

தொடரும்....

9.11.07

நாளை நமதே 30

அன்றைய வகுப்புகள் முடிந்து மாணவர்கள் சிறு, சிறு குழுவாக வெளியேற பரத்தும் வாசனும் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கி நின்றாள்.

'நீ போ ஜோதிகா. நானும் வாசனும் கொஞ்ச நேரம் கழிச்சி வரோம்.' என்றான் பரத்.

'எதுக்கு? நீதான க்ளாஸ் முடிஞ்சதும் பிரின்சிய பாத்து பேசிட்டு போலாம்னு சொன்னே? இப்ப என்னாச்சி?'

பரத் வாசனை திரும்பிப் பார்த்தான். 'இல்ல ஜோதிகா. பரத் கம்ப்ளெய்ண்ட்லாம் குடுக்க வேணாம்னு ஃபீல் பண்றான்.' என்றான் வாசன்.

'அதான் ஏன்னு கேக்கேன். அவனெ இனியும் டிஃபெண்ட் பண்றது சரியில்லைன்னு எனக்கு தோனுது.'

பரத் பதிலளிக்காமல் பெஞ்சில் இருந்த தன்னுடைய புத்தகங்களை கைப்பையில் வைப்பதில் முனைப்பாயிருந்தான். பிறகு எழுந்து ஜோதிகாவை பார்த்தான். 'I think it is better to forget what happened in the morning. குமாருக்கு எதிரா கம்ப்ளெய்ண்ட் பண்ணா விஷயம் இன்னும் சீரியசா ஆகுமே தவிர குறையாது. அதனலதான் லஞ்ச் டைம்ல நானும் வாசனும் டேவிட்ட போயி பாத்து இதப்பத்தி பேசினோம். He also feels the same way.'

ஜோதிகாவுக்கும் அவன் சொல்ல வந்தது விளங்காமல் இல்லை. அவளுக்கும் குமாரும் அவனுடைய நண்பர்களும் நடந்துக்கொண்டவிதம் அதிர்ச்சியை அளித்தது என்னவோ உண்மைதான். ஆனால் வகுப்பில் இருந்த பலரும் குமாருக்கு எதிராக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தபோது அவளுக்கு அதில் தவறில்லையென்றே தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் அவனை கல்லூரிக்குள் அனுமதித்தலிருந்தே அவனுடைய நடவடிக்கையில் ஒருவித ஆணவம் தெரிந்ததை அவள் மட்டுமல்லாமல் சக மாணவர்களும் உணர்ந்திருந்தனர். பரத் அவர்களுடைய ஆலோசனைக்கு உடனே சம்மதிக்கவில்லையென்றாலும் முதல்வரின் அறையிலிருந்து திரும்பிய குமார் அன்று முழுவதும் ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் பரத்தை சீண்டிக்கொண்டிருக்கவே அவனுக்கெதிராக புகார் அளிப்பதில் தவறில்லையென்றே நினைத்திருந்தாள்.

ஆகவேதான் பரத் இப்படியொரு முடிவெடுத்ததில் அவளுக்கு அத்தனை உடன்பாடில்லை. இருப்பினும் பரத் எடுத்த முடிவுக்கு பிறகு கல்லூரி மாணவர் தலைவன் டேவிட்டின் அறிவுரையும் ஒரு காரணம் என்பதை நினைத்து அதை மறுப்பதில் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாள்.

'பரத் சொல்றது சரிதான் ஜோதிகா. நாம கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போயி அதனால குமார காலேஜ்லருந்தே டிஸ்மிஸ் பண்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு டேவிட் சொன்னதாலதான் நாங்க இந்த டிசிஷன் எடுத்தோம். So let us not discuss this anymore.' என்றவாறு வாசன் எழுந்து வாசலை நோக்கி நடக்க பரத்தும் ஜோதிகாவும் அவனை தொடர்ந்தனர்.

**********

ஜோதிகா பேருந்திற்குள் நுழைந்து அமர்வதற்கு ஏதாவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்தாள். மாணவர்கள் இடதுபுறமும் மாணவிகள் வலதுபுறமும் அமர வேண்டும் என்பது கல்லூரியின் நியதிகளுள் ஒன்று. 'நாம படிச்ச ஸ்கூல்லக் கூட இந்த மாதிரி கண்டிஷன் எதுவும் இல்ல, இல்லடா?' என்பான் மூர்த்தி அடிக்கடி. வாசன் கண்டுக்கொள்ள மாட்டான். 'உங்கிட்ட வந்து சொன்னன் பார்.' என்று சலித்துக்கொள்வான் மூர்த்தி. இதற்காகவே கல்லூரி பேருந்தில் மூர்த்தியுடன் அமர்வதை வாசன் தவிர்த்துவிடுவான்.

மாணவிகள் அமர்ந்திருந்த பகுதியில் ஒரேயொரு இருக்கை மட்டும் இருந்தது. ஆனால் அதில் அமர்வதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள் ஜோதிகா. ப்ரியா அந்த இருக்கையில் அமர்ந்திருந்ததுதான் காரணம். ப்ரியா வேண்டுமென்றே அவளை கவனியாதுபோல் பேருந்துக்கு வெளியில் பார்வையை செலுத்தியது தன்னை தவிர்ப்பதற்காக என்றே நினைத்தாள்.

'ஏய் இங்கதான் ஒரு சீட் இருக்கே?' என்றான் மூர்த்தி உரக்க.

'ஹல்லோ...' என்று எழும்பியது ஒரு குரல் பேருந்தின் பின் இருக்கைகளிலிருந்து, 'எல்லாம் அவங்களுக்கு தெரியும். ஒன் வேலைய பாரு. காலேஜ் ரூல்ஸ் தெரியுமில்ல?'

'யார்யா அது?' என்றவாறு திரும்பினான் மூர்த்தி. கல்லூரி ஊழியர்களுள் ஒருவர். அடியாள் வடிவில்.. கல்லூரி பேருந்துகள் எல்லாவற்றிலுமே இப்படி ஒருவர் இருப்பது வழக்கம். 'பஸ்ல பசங்க பொண்ணுங்கள கலாட்டா பண்றதா எந்த கம்ப்ளெய்ண்டும் வரக்கூடாது. அது ஒங்க ட்யூட்டி.' என்பது கல்லூரி நிர்வாகியின் கட்டளை.

ஆனால் மூர்த்தி இதற்கெல்லாம் கவலைப்படமாட்டான். 'யோவ் ஒன் வேலைய பாருய்யா... நீ என்ன போலீசா?' என்றான் எரிச்சலுடன். 'ஹல்லோ நீங்க போய் ஒக்காருங்க... இவனுங்களுக்கு வேற வேலையில்லை.'

மூர்த்தியின் இந்த பதிலை விரும்பாத கல்லூரி ஊழியன் எழுந்து அவனை நோக்கி நெருங்க இடை வழியிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வாசன் எழுந்து அவனை சமாதானப் படுத்துவதைக் கவனித்த ஜோதிகா தன்னால் மேலும் எந்த பிரச்சினையும் வரவேண்டாமே என்ற நினைப்புடன் விரைந்து சென்று ப்ரியாவின் அருகில் அமர்ந்துக்கொள்ள பேருந்து புறப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கைக் கூடுதலாக எந்த மாணவனோ, மாணவியோ ஏறக்கூடாது என்பதும் கல்லூரி நிர்வாகத்தின் நியதி.

பேருந்து கல்லூரி வளாகத்தைக் கடந்து விரைந்தது. ப்ரியா அப்போதும் தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்த ஜோதிகா தன் கையிலிருந்த சஞ்சிகையில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இருந்தும் மனம் அதில் செல்ல மறுக்கவே ஓரக்கண்ணால் ப்ரியாவைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளிர்த்த கண்ணீர் ஜோதிகாவை திடுக்கிட வைத்தது. 'ஏய் ப்ரியா... நீ எதையோ எங்கிட்டருந்து மறைக்கறதுக்குத்தான் என்னெ அவாய்ட் பண்றேன்னு நினைக்கேன்... சரியா?' என்றாள் சன்னமான குரலில்.

ப்ரியா வெளியில் பார்த்தவாறு பதிலளித்தாள். 'அதெல்லாம் ஒன்னுமில்லை.' ஆனால் இவகிட்ட கன்ஃபைட் பண்றதுனால உன் டென்ஷன் குறையுமேடி என்றது அவளுடைய உள்மனது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து அவள் விடுபடுமுன் அவள் இறங்கும் இடம் வந்தது. ஆனால் அவள் எழாமல் அமர்ந்திருக்க, 'என்னம்மா இங்க நீ எறங்கணுமே?' என்றவாறு ரியர்வ்யூ கண்ணாடியில் அவளைப் பார்த்தார்.

ப்ரியா திடுக்கிட்டு எழுந்து நின்றாள். 'நானும் ஒங்கூட எறங்கட்டுமா?' என்றாள் ஜோதிகா. 'If you don't mind.'

'சரி' என்று தலையை மட்டும் ஆட்டிய ப்ரியா கைப்பையுடன் வாசலை நோக்கி நகர ஜோதிகா எழுந்து அவளைத் தொடர்ந்து, 'என்னம்மா நீயும் இங்கவே எறங்கறயா?' என்ற ஓட்டுனரின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஜோதிகா பேருந்திலிருந்து இறங்கினாள்.

************

வாசனும் மூர்த்தியும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்தாலும் மூர்த்தி எப்போதுமே வாசனுடன் வீட்டுக்கு திரும்பியதில்லை. தெரு முனையிலிருந்த சகாக்களுடன் ஒரு சிகரெட்டை இழுத்து அரட்டையடித்துவிட்டு வரவில்லையென்றால் அவனுக்கு உறக்கம் வராது. அன்றும் அப்படித்தான் பேருந்திலிருந்து இறங்கி நடை தூரத்திலேயே இருந்த தங்களுடைய வீட்டை நோக்கி வாசன் நடக்க மூர்த்தி தெருமுனையில் காத்திருந்த தன் சகாக்களை நோக்கி சென்றான்.

வீட்டு வாசலிலேயே நின்ற தன் தாயைக் கண்டதும், 'என்னம்மா என்ன விஷயம் ஏன் இங்க நிக்கீங்க? உங்க முகத்த பார்த்தா ஏதோ டென்ஷன்ல இருக்கா மாதிரி தெரியுது?' என்றான் வாசன்.

'எங்கடா மூர்த்தி?'

வாசன் வியப்புடன் தன் தாயைப் பார்த்தான். 'ஏன்... அவந்தான் ஃப்ரெண்ட்சோட பேசாம வரமாட்டானே?'

'இன்னைக்குமா?' என்றாள் பார்வதி. 'என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இன்னைக்கும் அவன் ஃப்ரெண்ட்சோட அரட்டையடிக்க நின்னுருப்பான்.'

'ஏன்...இன்னைக்கி என்ன?'

பார்வதி எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தாள். 'என்னடா தெரியாத மாதிரி கேக்கே?'

வாசன் குழப்பத்துடன் திரும்பி தெருமுனையைப் பார்த்தான். அரட்டைக் கச்சேரி கனஜோராக துவங்கியிருந்தது அங்கிருந்தே தெரிந்தது. திரும்பி தன் தாயைப் பார்த்தான். 'எனக்கு வெளங்கலை. இன்னைக்கி என்னம்மா ஸ்பெஷல்?'

'உள்ள வா சொல்றேன்.' என்றவாறு பார்வதி வீட்டுக்குள் திரும்ப மீண்டும் ஒருமுறை தெருமுனையைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் வாசன்.

'இப்ப சொல்லுங்க... என்ன விஷயம்?'

'உண்மையிலயே ஒனக்கு தெரியாதா? இல்ல எங்கிட்டருந்து மறைக்கறியா?'

'இல்லம்மா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னே எனக்கு தெரியல....'

'மூர்த்தி காலேஜ்லருந்து ஃபோன் வந்துது... அவனெ ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்களாம். அப்பாவே நேரா வந்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி தந்தாத்தான் மறுபடியும் சேத்துப்பாங்களாம்.'

வாசன் அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தான். காலையில் கோபத்துடன் மூர்த்தி தன் கல்லூரியை நோக்கி சென்றது நினைவு வந்தது. செய்றதையும் செஞ்சிட்டு கல்லுளிமங்கன் மாதிரி சைலண்டா இருந்துருக்கானே. இந்த லட்சணத்துல பஸ்சுல வேற தகராறு செஞ்சான்? நாம மட்டும் இல்லன்னா அங்கயும் பெரிய தகராறாயிருக்கும்.

'இப்ப சொல்லு... ஒனக்கு தெரியுமா தெரியாதா? அப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொல்லப் போறேன்.' என்றாள் பார்வதி கண்டிப்புடன்.

'இல்லம்மா... நிச்சயமா நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும். என்னெ நம்புங்க, ப்ளீஸ்.''

அப்போதும் பார்வதி நம்பாமல் வாசனைப் பார்த்தாள். பிறகு, 'சரி நம்பறேன். அவன் வர்றதுக்குள்ள போய் ஒங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணு.'

வாசன் தயங்கினான். 'அவன் வந்துறட்டுமேம்மா... அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு சொல்வமே...'

'டேய். நான் சொல்றத செய்யி. இந்த வாரக் கடைசியில ஒருவாரம் இருக்கறா மாதிரி வரச்சொல்லு. அவன் வந்தா ஃபோன் பண்ண வுடமாட்டான்... போ சீக்கிரம்.'

வாசன் வேறு வழியில்லாமல் படுக்கையறையிலிருந்த தொலைபேசியை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்...

Technorati Tags:

2.11.07

நாளை நமதே 29

கல்லூரி நிர்வாகி நாகராஜுலு தன் எதிரில் நின்றிருந்த மாணவர் தலைவர் டேவிட்டையும் அவனுடன் நின்றிருந்த ஐந்தாறு வகுப்பு பிரதிநிதிகளையும் ஏளனமாக பார்த்தார். அவருடன் அவருடைய மனைவி அதாவது கல்லூரி கரஸ்பாண்டண்ட் வெங்கடேஸ்வரலுவின் மூத்த புதல்வி ரோகினி, அவளுடைய சகோதரி ரோஜா மற்றும் கல்லூரியின் துணை நிர்வாகியான அவளுடைய கணவர் பிரசாத் ஆகியோரும் மற்றும் கல்லூரி முதல்வர். அவர்களுக்கு பின்னால் கல்லூரியின் அடியாள் படைத் தலைவன், சில இலாக்கா தலைவர்கள் என....

'என்ன தம்பிகளா நிறைய தமிழ் சினிமா பாப்பீங்களோ?' என்றார் கல்லூரி நிர்வாகி நாகராஜுலு.

'என்ன சார் கிண்டலா?' என்றான் குமார் கோபமாக.

நிர்வாகி அவனை எரித்து விடுவது போலப் பார்த்தார். 'நீதானே ஒரு மாசத்துக்கு முன்னால சஸ்பெண்ட் ஆன பையன்? ஃபர்ஸ்ட் இயர்?'

'ஆமா சார். அதுக்கென்ன இப்போ?'

நிர்வாகி டேவிட்டைப் பார்த்தார். 'என்ன டேவிட் நீ இந்த விசயத்துக்கெல்லாம் இந்த மாதிரி பசங்க கூட சேந்துக்கிட்டு டைம வேஸ்ட் பண்ணலாமா? இந்த மாதிரி பசங்களுக்கு படிக்கறதே ஒரு பொழுதுபோக்கு. ஆனா நீ அப்படியில்லையே?'

டேவிட் சங்கடத்தில் நெளிந்தான். அவர் சொல்வதும் சரிதான். யூனிஃபார்ம்னு வந்துட்டா அவனுக்கும் நிம்மதிதான். இருக்கறதே அஞ்சாறு ட்ரெஸ். அத வச்சிக்கிட்டு டெய்லி ஒன்னுன்னு மாத்திக்கிட்டு வர்றதுலருக்கற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். 'தொரைக்கு டெய்லி ஒரு ட்ரெஸ் கேக்குதோ? ஒன் துணிய தொவைக்கறதுக்கே தனியா ரெண்டு கிலோ ரின் பவுடன் வாங்கணும் போலருக்கே?' நேத்து கூட அப்பா கேட்ட கேள்வி.

ஓரக்கண்ணால் தன் பக்கத்தில் நின்றிருந்த குமாரைப் பார்த்தான். பாக்கப்போனா இவன் க்ளாஸ் ரெப் கூட இல்லை. பணத் திமிர் பசங்கள கூட்டு சேத்துக்கிட்டு கலாட்டா பண்றான். போறாததுக்கு என் கூட பிரின்சி ரூமுக்கு நீ வந்துதான் ஆகணும்னு புடிவாதம் அவனையும் புடிச்சி இழுத்துக்கிட்டு வந்து இந்தாள் முன்னால கேவலப்படறது நமக்கு தேவைதானா... இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா வேற வெனையே வேணாம்.

'காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம எதுக்குடா இந்த லீடர் வேலை? இந்த ஒரு வருசத்தோட இந்த மாதிரி வேலையையெல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டு ஒழுங்கா படிச்சி டிஸ்டிங்ஷன் வாங்கப் பாரு. ஒன்னைய நம்பித்தான் குடும்பம் இருக்குங்கறத மறந்துராத.' அவன் கல்லூரி மாணவர் தலைவராக தேர்வு செய்த அன்று வீட்டில் அவனுக்கு கிடைத்த அர்ச்சனை.

'சார்.. அப்படியில்லை... இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு முன்னால எங்களோட கலந்து பேசியிருக்கலாம். என்ன இருந்தாலும் எங்கள இப்படி ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ட்ரீட் பண்றது.....'

'டேவிட் எதுக்கு இவர்கிட்ட போயி கெஞ்சறீங்க? நா பேசறேன்.' என்று இடைமறித்த குமார் நிர்வாகியை முறைத்தான். 'இங்க பாருங்க சார். இது எஞ்சினியரீங் காலேஜ். எலிமெண்டரி ஸ்கூல் இல்லை. நீங்க மட்டும் இந்த டிசிஷன ரிவோக் பண்ணலைன்னா நாளையிலருந்து ஸ்ட்ரைக் பண்ணுவோம். ஒங்களால ஆனத பாத்துக்குங்க. டேய் வாங்கடா.'

அவனை தடுத்து நிறுத்த முயன்ற டேவிட்டின் கைகளை உதறிவிட்டு குமார் அறையிலிருந்து வெளியேற அவனுடைய சகாக்கள் நிர்வாகிக்கு எதிரான கோஷங்களுடன் அவன் பின்னே சென்றனர்.

டேவிட் தயக்கத்துடன் நிர்வாகியைப் பார்த்தான். 'அவன் சொன்னத சீரியசா எடுத்துக்கிறாதீங்க சார். நா அவன் கிட்ட பேசறேன். இத இத்தோட விட்டுருங்க. நா எல்லா க்ளாஸ் ரெப்ஸ்ங்களோடயும் பேசிட்டு ஒங்களுக்கு சொல்றேன்.'

நிர்வாகி சிரித்தார். 'டேவிட் இதுல ஒனக்கு சம்மதமில்லேன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் வேற வழியில்லாம இவன் சொல்லி நீ இங்க வந்துருக்கே. நீ எந்த ரெப்புக்கிட்டயும் பேசி ஒன் டைம வேஸ்ட் பண்ண வேணாம். இந்த டிசிஷன் எடுத்தது கரஸ்பாண்டண்ட் மட்டுமில்லை. நம்ம காலேஜோட எண்டயர் போர்டும் சேந்து எடுத்தது. நம்ம காலேஜ் மட்டுமில்லாம நம்ம க்ரூப் காலேஜஸ் எல்லாத்துலயும் இண்ட்ரொட்யூஸ் பண்ற ஐடியா. யூனிவர்சிட்டி வி.சி கிட்டயும் பேசியாச்சு. அதனால இந்த டிசிஷன ரிவோக் பண்ணணுங்கற பேச்சுக்கே இடமில்லை. அதனால டோண்ட் வேஸ்ட் யுவர் டைம். கோ டு யுவர் க்ளாஸ்.'

டேவிட்டுக்கு அவர் பேசிய தோரனை அடியோடு பிடிக்கவில்லையென்றாலும் தன்னுடைய குடும்ப சூழலை மனதில் கொண்டு மறுபேச்சு பேசாமல் வாசலை நோக்கி நடந்தான்.

அவன் வாசலை கடந்ததும் நாகராஜுலு தன்னுடன் அமர்ந்திருந்த குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களை நோக்கி கண்ணசைத்தார். அடுத்த நொடியே மறுபேச்சில்லாமல் அனைவரும் எழுந்து வெளியேறினர். கதவு அடைக்கப்படும்வரை காத்திருந்த நாகராஜுலு தன் சகலையை பார்த்தார்.

'நாம இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்கலன்னா ராத்திரி மாமாகிட்ட பதில் சொல்ல முடியாது.'

பிரசாத் தன் மனைவியைப் பார்த்தான். தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் பேசக்கூடாது என்பது ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்.

'என்ன சகலை.. எப்பவும் போல பெர்மிஷன் வேணுமா?'

'அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க சொல்றது சரிதான். ஆனா எப்படி இத முடிக்கறதுன்னுதான் யோசிக்கறேன். அந்த பையன் கொஞ்சம் வசதியான எடம்னு கேள்விபட்டுருக்கேன். போனதடவை அந்த பையனை சஸ்பெண்ட் பண்ணப்பவே எங்கெங்க இருந்தோ ஃபோன் வந்துதே...'

உண்மைதான். குமாருடைய தந்தையே நேரில் வந்து தன்னுடைய மகனுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் அவருடைய மனைவி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி லோக்கல் எம்.எல்.ஏவை விட்டு நேரடியாக வெங்கடேஸ்வரலுவுக்கே ஃபோன் செய்து தன் மகனின் சஸ்பென்ஷனை ரத்து செய்யுமாறு கேட்க வைத்தாள். கல்லூரி நிர்வாக குழுவில் இருந்த 'அய்யா' கட்சியை சேர்ந்தவர் என்பதால் வெங்கடேஸ்வரலு, 'எதுக்குய்யா என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அந்த பையனை சஸ்பெண்ட் செஞ்சீங்க?' என்று தன்னுடைய மருமக்கள் மீது எரிந்து விழ அடுத்த நாளே சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டி வந்தது.

'பிரசாத் சொல்றது உண்மைதான். அப்பா அன்னைக்கி பயங்கர கடுப்பாய்ட்டாரில்ல? அதனால இதுல எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னால அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்றதுதான் நல்லதுன்னு நா நெனக்கேன்.' என்றாள் ரோஜா.

அந்த யோசனையை நிராகரிக்க யாருக்கும் தைரியமில்லை. ஆனால் அன்று இரவு உணவின்போதுதான் மாமாவுடன் ஆலோசிக்க முடியும் என்று 'எதுக்கும் நம்ம முருகுக்கிட்ட அந்த பையன் மேல ஒரு கண் வைக்கறதுக்கு சொல்லி வைப்போம். என்ன சொல்றீங்க?' என்றார்.

அனைவரும் ஒத்துக்கொள்ள நாகராஜுலு இண்டர்காமை எடுத்து, 'முருகேசன உள்ள வரச்சொல்லுங்க.' என்றார்.

அடுத்த சில நொடிகளில் செக்யூரிட்டிகளின் தலைவன் முருகு என்கிற முருகேசன் உள்ளே நுழைய அவன் மீது எரிந்து விழுந்தார். 'ஏன்யா இந்த பசங்கள்லாம் கோஷம் போட்டுக்கிட்டு காலேஜ் காம்பஸ்குள்ள சுத்தறதுக்கு நீங்க எப்படிய்யா பெர்மிட் பண்ணீங்க. ஏறக்குறைய அம்பது பேர வச்சிருக்கறது இதுக்குத்தானா? ஒங்களுக்கெல்லாம் வெக்கமாயில்ல? போய்யா போய் ஒன் ஆளுங்கக்கிட்ட சொல்லி வை. இதான் லாஸ்ட் வார்னிங்.

இனிமே இந்த மாதிரி ஏதாச்சும் நடந்துது கூண்டோட எல்லாத்தையும் வீட்டுக்கனுப்பிச்சிருவேன். என்ன வெளங்குதா?'

முருகேசன் பணிவுடன், 'வெளங்குது சார்.' என்றான். பிறகு தொடர்ந்து, 'அந்த பையன ரெண்டு தட்டு தட்டி வைக்கட்டுங்களா?' என்றான் குரலை இறக்கி.

நாகராஜுலு அவனை எரித்து விடுவது போல் பார்த்தார். 'ஏன்யா நா ஒன்கிட்ட அட்வைஸ் கேட்டனா? அதிகப்பிரசங்கித்தனமா எதையாவது செஞ்சி வைக்காத. அப்புறம் கரஸ்பாண்டண்ட் கிட்ட பேச்சு வாங்க முடியாது. போய் நா சொன்ன வேலைய மட்டும் பாரு, போ.'

'சரி சார்.' என்று பணிவுடன் கூறிவிட்டு சென்றாலும் தன்னை இப்படியொரு சிக்கலில் சிக்கவைத்த குமாரை சும்மா விடக்கூடாது என்ற முடிவுடன் வெளியேறினான் முருகேசன்.

'என்ன சார் ஐயா ஏதாச்சும் சூடா சொல்லிட்டாங்களா...?' என்று சூழ்ந்துக்கொண்ட சகாக்களைப் பார்த்தான். தனக்கு கிடைத்த ஏச்சையும் பேச்சையும் இவர்கள் மீது காட்டினால் என்ன என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்தான். அதனால் மோசமான விளைவுகளே ஏற்படும் என்பது அவனுக்கு தெரியும். இருப்பினும் இவர்களை சற்று தட்டி வைப்பதுதான் நல்லது என்று நினைத்தான்.

'பின்னெ என்ன தட்டி குடுப்பாரா? நாமல்லாம் இங்க வந்து சேர்ந்து ரெண்டு வருசம் ஆவுதில்ல? இதுக்கு முன்னால இப்படி ஏதாச்சும் நடந்துருக்கா? அந்த பொடிப்பய இன்னைக்கி நம்ம எல்லார் மூஞ்சிலயும் கரி பூசிட்டானில்ல? நீங்களும் பாத்துக்கிட்டுத்தானய்ய நின்னீங்க? நீங்க மட்டும் அசால்ட்டா இல்லாம இருந்துருந்தா இப்படி நடந்துருக்குமா? ஒழுங்கா டூட்டி பாக்கலே எல்லாரையும் கூண்டோட வேலைய வுட்ட தூக்கிருவேங்கார். என்ன சரியா?'

'சார் அந்த பையன் கொஞ்சம் வசதியான பையன்னு கேள்வி. அத்தோட நம்ம ---------- எம்.எல்.ஏ கனெக்ஷனும் இருக்கு போலருக்கு. அதனால....' என்றது ஒரு குரல் குழுவிலிருந்து.

அவனைப் பார்த்து முறைத்தார் முருகு. 'அதுக்காக? அவன் என்ன பண்ணாலும் பாத்துக்கிட்டு இருப்பீங்களா? போங்கய்யா... அவனவன் லொக்கேஷனுக்கு போங்க. மறுபடியும் இப்படியொரு பிரச்சினை வராம பாத்துக்குங்க. நம்ம காம்பஸுக்குள்ள எந்த பையனும், பொண்ணும் பிரச்சினை பண்ணக்கூடாது. அது ஒங்க பொறுப்பு. சொல்லிட்டேன். போங்க...'

மறுபேச்சு பேசாமல் கூட்டம் கலைந்து செல்ல முருகேசன் தன் அறையை நோக்கி நடந்தார் மனதுக்குள் எழுந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்ற எண்ணத்துடன். அந்த பையன இப்படியே விட்டா சரிவராது. தட்டி வைக்கணும். ஆனா தப்பு நம்ம மேல விழுந்துராம பாத்துக்கணும்.

தொடரும்...

1.11.07

நாளை நமதே 28

Technorati Tags:

அன்று கல்லூரி வளாகமே பதற்றத்துடன் இருந்தது.

கல்லூரி முகப்பு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பே இதற்குக் காரணம்.
வாசனும் மூர்த்தியும் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கியதுமே முகப்பில் குழுமியிருந்த கும்பலைக் கவனித்தனர். கூட்டத்தில் இருந்த பல
மாணவர்கள் தங்களுக்குள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

'வாடா என்னன்னு பாக்கலாம்.' என்றவாறு கூட்டத்தை நோக்கி நகர முயன்ற மூர்த்தியைப் பிடித்து நிறுத்தினான். 'வேணாம் மூர்த்தி, நீ ஒன் காலேஜுக்கு போ... இது ஒன் பிரச்சினையில்லை.'

'போடா தொடநடுங்கி. இன்னைக்கி இங்க பிரச்சினைன்னா நாளைக்கி என் காலேஜுல. எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள்ளதான இருக்கு?'

மூர்த்தியின் நடையே இது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கப் போகிறது என்பதை உணர்த்த வாசன் என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றான். அவனுடைய பேருந்தை தொடர்ந்து வந்து நின்ற பேருந்துகளிலிருந்து இறங்கிய மாணவர்களுள் பலர் அவனைப் போலவே தயங்கி நிற்பதைப் பார்த்தான். மூர்த்தியைப் போன்ற ஒரு சில மாணவர்கள் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை வாசிப்பதில் தீவிரம் காட்டுவதும் தெரிந்தது.

'என்ன வாசன், என்ன விஷயம் ஏன் இங்கயே நிக்கீங்க'

வாசன் திரும்பிப் பார்த்தான். சுந்தர். கடந்த இரு மாதங்களாக ஒரே வகுப்பில் இருந்தாலும் அதுவரை சுந்தர் அவனிடமோ அல்லது அவன் சுந்தரிடமோ பேசியதில்லை. சாதாரணமாக யாருடன் பேசாமல் அமைதியாக கல்லூரிக்கு வந்து சென்ற அவனை வாசன் பலமுறை கவனித்திருக்கிறான். பேசவும் முயன்றிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அதை அவன் தவிர்ப்பதை உணர்ந்து அவனுடைய போக்கிலேயே விட்டுவிட்டான்.

'தெரியல சுந்தர். மேனேஜ்மெண்ட் ஏதோ நோட்டீஸ் ஒட்டியிருக்காங்க. அதுலதான் பிரச்சினை போலருக்கு.' என்றான் வாசன்.

மூர்த்தி கூட்டத்திலிருந்து விலகி தங்களை நோக்கி வருவது தெரிந்தது. அவன் வருகிற தோரணையே வாசனை கதிகலங்க வைத்தது. 'சரி சுந்தர் நீங்க போங்க... நா என் பிரதர் கிட்ட பேசிட்டு வரேன்.'

சுந்தர் புரிந்துக்கொண்டு விலகிச் செல்ல தன்னை நோக்கி வந்த தன் சகோதரனை நெருங்கினான். 'மூர்த்தி ஒன்னும் சொல்லாத. ஒன் மூஞ்சியிலயே கோவம் தெரியுது. சுத்தி பசங்க நிக்கறாங்கங்கறத மறந்துட்டு எதையாவது வில்லங்கமா சொல்லிறாத ப்ளீஸ்.'

'என்னடா பேசாம போறது? இதென்ன காலேஜா, ஸ்கூலா? வர்ற ஒன்னாந் தேதியிலருந்து யூனிஃபார்ம் கொண்டு வரப்போறாங்களாம்! எப்படிறா சும்மாருக்கறது? ஒருவேளை இதே நோட்டீஸ் எங்க காலேஜ்லயும் ஒட்டியிருக்கோ என்னவோ. நீங்க ஏதும் பண்றீங்களோ இல்லையோ எங்க காலேஜ்ல நா இத சும்மா விடப்போறதில்லை.'

அவனுடைய கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் மூர்த்தி கோபத்துடன் கூறிவிட்டு அவனுடைய கல்லூரியை நோக்கி செல்ல வாசன் தன்னை பார்த்தவாறு நின்ற மாணவர்களின் பார்வையை சந்திக்க துணிவில்லாமல் தலையைக் குனிந்தவாறு முகப்பில் நின்ற கும்பலை தவிர்த்து தன் வகுப்பை நோக்கி நடந்தான்.

அவனுக்கென்னவோ கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

கல்லூரி துவக்க நாளிலிருந்தே சில மாணவர்களின் குறிப்பாக மாணவிகளின் உடையில் அவனுக்கு உடன்பாடில்லை. ஏதோ ஃபேஷன் பெரேடுக்கு செல்வதுபோன்ற உடையில் வருவது சற்றே முரண்பாடாக தெரிந்தது. முதல் நாளன்றே கல்லூரி தலைவர் மாணவ, மாணவியர் எத்தகைய உடையில் வர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை வேண்டுமென்றே சிலர் பொருட்படுத்தாமல் தங்கள் மனம் போன்றவாறு உடை உடுத்தி வந்ததை அவன் கவனித்திருக்கிறான்.

'டேய் மச்சி அவ ட்ரெஸ்ச பாத்தியா? குலுக்கு நடிகை கெட்டா போ. இதுங்கள பாக்கறதுக்கே டெய்லி வரலாம் போலருக்கு...' என்பதுபோன்ற சில மாணவர்களுடைய வெளிப்படையான கமெண்டும் அவன் காதுகளில் விழாமல் இல்லை.

அவன் வகுப்பறையில் நுழையும்போது ஏற்கனவே பரத் வந்துவிட்டிருந்தது தெரிந்தது.

'என்ன வாசன் மூர்த்தி பயங்கர டென்ஷனாய்ட்டார் போலருக்கு?' என்றான் பரத்.

'ஆமாம் பரத். அவங்க காலேஜ்ல போயி ஏதாச்சும் பெருசா கலாட்டா செஞ்சிருவானோன்னு பயமாருக்கு.'

பரத் சிரித்தான். 'எப்படி வாசன்... அவன் ஒன் ட்வின் ப்ரதரா? நம்பவே முடியலை.'

'டேய் எல்லாரும் க்ளாச விட்டு வெளியில வாங்கடா.' என்ற ஆர்ப்பாட்டமான குரல் வகுப்பறை வாசலில் இருந்து எழும்ப இருவரும் திடுக்கிட்டு வாசலைப் பார்த்தனர்.

கல்லூரிக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே எச்.ஓ.டியை கிண்டலடித்துவிட்டு ஒருவாரம் சஸ்பெண்ட் ஆகியிருந்த குமார் தன் சகாக்களுடன்!

வாசனும் பரத்தும் அவர்களைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க அறையிலிருந்த மாணவர்கள் சிலர் எழுந்து வாசலை நோக்கி நடந்தனர்.
மாணவியர்கள் பலரும் என்ன செய்வதென தெரியாமல் தயங்கியவாறு பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர்.

பரத் எழுந்து ஜோதிகாவை நெருங்கினான். 'We need not respond to them. Just sit tight. Madam might come now and handle him.'

ஜோதிகா சரி என்றவாறு தலையை அசைத்துவிட்டு திரும்பி பின் வரிசையில் அமர்ந்திருந்த ப்ரியாவைப் பார்த்தாள். பார்வைகள் சந்தித்தன. ஆனால் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் ப்ரியா தலையை திருப்பிக்கொள்ள 'என்ன இவ என்னமோ விரோதிய பாத்தா மாதிரி மூஞ்ச திருப்பிக்கிறா?' என்று நினைத்தாள்.

குமார் இப்படியொரு சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தான்? அவனுக்கு பரத்தின் மீதிருந்த கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இவனாலதான நம்மள சஸ்பெண்ட் பண்ணாங்க? அன்னைக்கி காலேஜ்லயும் வீட்லயும் பட்ட அவமானம் கொஞ்சமா? அவனுக்காக அப்பா வந்து பிரின்சிகிட்ட மன்னிப்பு கேக்கறாப்பலல்லே வச்சிட்டான்? இன்னைக்கி வச்சிக்கறேன்.

'டேய் பாத்தீங்களாடா நம்ம தல ஏதோ சம்பந்தம் இல்லாததுபோல பாக்கறத? இவனையெல்லாம் க்ளாஸ் ரெப்பா தேர்ந்தெடுத்தீங்களே ஒங்கள சொல்லணும். அன்னைக்கி மட்டும் நா இருந்தேன்னு வச்சிக்கோ இவனை மாதிரி பூணூல் கேசுங்களையெல்லாம் ரெப்பாக வுட்டுருக்க மாட்டேன்...'

பரத்தின் இனத்தைக் குறித்து குமாரின் தரக்குறைவான பேச்சு அவனைச் சூழ்ந்திருந்த சகாக்களையே முகம் சுழிக்க வைத்தது. 'டேய் அவனெ பெர்சனலா அட்டாக் பண்ணி ட்ராக்க மாத்திராத. நம்ம வந்த விஷயத்த பத்தி மட்டும் பேசு.' என்று கிசுகிசுத்தான் சகாக்களில் ஒருவன்.

அதுவும் சரிதான் என்று குமார் நினைத்தானோ என்னவோ பரத்தை தவிர்த்து மற்ற மாணவர்களைப் பார்த்தான். 'இங்க பாருங்கடா இன்னைக்கி யூனிஃபார்ம்னு சொல்வாய்ங்க.. நாளைக்கி சாமியார் ட்ரெஸ்லதான் வரணும்பாய்ங்க... இத இப்பவே எதுக்கணும். வாங்க எல்லாரும் ப்ரின்சி ரூமுக்கு போவோம். செக்கண்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் கூட அங்கதான் போயிருக்காங்க.'

வகுப்பில் இருந்தவர்களுள் சிலர் வேறுவழியின்றி எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தனர். அந்த கூட்டத்தில் சேர்வதா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் பலர் பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர். சிலர் பரத்தை நெருங்கி, 'பரத் ஏதாச்சும் பண்ணு. இல்லன்னா அவன் பின்னால போறத தவிர வேற வழி இல்லை.' என்றனர்.

பரத் அமைதியாக குமாரையும் வகுப்பில் இருந்தவர்களையும் பார்த்தான். 'எனக்கு காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் எடுத்த டிசிஷன்ல எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லை. குமார் கூட போகணும்னு நினைக்கறவங்க தாராளமா போலாம். ஆனா அதனோட consequences என்னவாருக்கும்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டு போங்க. அவ்வளவுதான் சொல்வேன்.'

குமார் கோபத்துடன் அவனை நெருங்கினான். 'அப்ப நீ என்னடா க்ளாஸ் ரெப்? ரிசைன் செஞ்சிரு. நா பாத்துக்கறேன்.'

பரத் அவனை பொருட்படுத்தாமல் தன் கையிலிருந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான்.

'டேய் என்ன திமிரா நா பாட்டுக்கு இங்க கத்திக்கிட்டு நிக்கேன். நீ பாட்டுக்கு என்னமோ ------- மாதிரி படிச்சிக்கிட்டுருக்கே...' கோபத்தில் நிதானமிழந்த குமார் பரத்தின் காலரை கொத்தாக பிடித்து இழுக்க அடுத்த சில நொடிகளில் அங்கே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.....


தொடரும்...

19.10.07

நாளை நமதே - 27

அன்று ஜோதிகா வகுப்பு முடிந்து தனியாக கல்லூரி கேண்டீனை நோக்கி நடந்தாள்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் அவசரத்தில் டிபன் பாக்ஸை எடுக்க மறந்ததன் விளைவு...

கல்லூரி கேண்டீனில் சாப்பிடுவது இதுதான் முதல்...

தினமம் கேண்டீனில் சாப்பிடும் மாணவர்கள் வகுப்பில் புலம்புவதை கேட்டிருந்தாலும் சரி பரீட்சித்துத்தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் கிளம்பினாள்.

அவள் எதிர்பார்த்ததையும் விட கேண்டின் விசாலமாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஒரு கோடியில் இருந்த 'எச்' ப்ளாக்கின் தரை தளத்தில் நீள் வடிவத்தில் சுமார் நூறடி நீளத்தில்.. ரயில்வே ப்ளாட்பாரம் போல்... நீண்டு கிடந்தது. வலதுபுறத்தில் சுவரையொட்டி நீண்ட கவுண்டர். அதில் பல மாணவர்கள் நின்றவாறு உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.

'செல்ஃ சர்விங்மா... டோக்கன் வாங்கிட்டு அந்த கோடியிலருக்கற டெலிவிரி கவுண்டர்ல வாங்கிட்டு எங்க வேணும்னாலும் ஒக்காந்துக்கலாம்.' வாசலையொட்டி அமர்ந்திருந்த க்ளார்க் அவளை தடுத்து நிறுத்த, அவர் நீட்டிய மெனுவைப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. வாயில் நுழையாத அயிட்டங்கள்...

'ஒரு லைம் ரைஸ், ஒரு கர்ட் ரைஸ்'

இரண்டு அலுமினிய டோக்கன்களும் மீதி சில்லறையும் கிடைக்க 'அட! பரவால்லையே சீப்பாத்தான் இருக்கு..'

'சாப்பாடும் சீப்பாத்தான் இருக்கும் கவலைப்படாதீங்க...'

ஜோதிகா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். புன்னகையுடன் ஒரு அறிமுகமில்லாத மாணவன். அதெப்படி நாம மனசுல நினைச்சத இவ்வளவு கரெக்டா சொல்றான்?

'ஒங்க மனசுல நினைச்சத எப்படி கரெக்டா சொல்றான்னு பாக்கறீங்களா?'

ஜோதிகா பதறிப்போனாள்... நடையை வேகப்படுத்தி டெலிவிரி என்ற பலகை தொங்கிய கவுண்டரை நோக்கி நடந்தாள்...

இரண்டு கைகளிலும் பேப்பர் ப்ளேட்டுடன் காலியாக இருக்கையை தேடி கண்களை ஓடவிட்டாள். சற்று தொலைவில் ப்ரியா வேறு சில மாணவிகளுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சற்று தயங்கி நின்றாள்.

ஒருவாரமாகவே அவளுடைய போக்கை புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தது. தன்னை தவிர்க்க நினைப்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஏன் என்பதுதான் புரியாத புதிராக.... இப்ப நாமளா போயி எதுக்கு... ப்ரியா அமர்ந்திருந்த திசைக்கு நேர் எதிர் திசையில் திரும்பி கண்களை ஓடவிட்டாள். எல்லா மேசைகளிலும் மாணவ, மாணவியர்கள்.....

சரி நின்னுக்கிட்டுத்தான் சாப்டணும் போலருக்கு...

'ஹலோ மேடம்... இங்க வந்து ஒக்காருங்க...' சட்டென்று திரும்பி பார்த்தாள். சற்று முன்பு அவள் மனதிலிருந்ததை படம் பிடித்த அதே மாணவன்...

எந்த ஒரு மேசையிலும் மாணவர்களும் மாணவியரும் சேர்ந்து அமராதிருக்க இவன் மட்டும் எப்படி இவ்வளவு தைரியமாக தன்னுடன் வந்து அமருமாறு அழைக்கிறான் என்று நினைத்தாள். இந்த பதினைந்து நாட்களில் கல்லூரியின் சட்டதிட்டங்கள் அவளுக்கு நன்றாக தெரிந்திருந்தன.

கல்லூரி வளாகத்தில் எந்த மாணவியும் மாணவனும் பேசிக்கொள்ளவே அனுமதியில்லாதபோது இவனுக்கு ரொம்பத்தான் துணிச்சல் என்று நினைத்தவாறு அவனுடைய அழைப்பை புறக்கணித்து திரும்பி 'நின்னடிச்சான் கவுண்டரை' நோக்கி நடந்தாள்.

அவள் நெருங்குவதை கண்ட வேறொரு மாணவி சற்று நகர்ந்து நின்று அவளை பார்த்து புன்னகைத்தாள். ஜோதிகா 'தாங்ஸ்' என்று பதிலுக்கு புன்னகைத்துவிட்டு கையிலிருந்தவற்றை கவுண்டர் மேடையில் வைத்துவிட்டு சற்று தள்ளியிருந்த குடிநீர் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

'அவன் பேர் டேவிட்...' என்றாள் அவளுக்கு இடமளித்த மாணவி...

'யார சொல்றீங்க?'

'ஒங்கள இன்வைட் பண்ணானே.. அவந்தான்... செக்கண்ட் இயர்... இந்த வருச காலேஜ் ஸ்டூடண்ட் ப்ரெஸ்... கொஞ்சம் நக்கல் புடிச்சவன்... ஆனால் ரொம்ப நல்லவன்...'

'ஓ!' என்று நினைத்தவாறு ஓரக்கண்ணால் டேவிட் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள்...

'என்னங்க... நம்மள பத்தி தப்பா சொல்றாங்களா? நம்பாதீங்க...' என்று அவளைப் பார்த்து அந்த மாணவன் கண்ணடிக்க பதறிப்போய் பார்வையை திருப்பிக்கொண்டு அவசர, அவசரமாக எலுமிச்சை சாதத்தை அள்ளி சாப்பிடலானாள் ஜோதிகா...

'எப்படிங்க அவர் நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றாரு?' என்றாள் ரகசிய குரலில்...

'அவன் அப்படித்தான்... சும்மா குத்து மதிப்பா சொல்வான்... சில சமயங்கள்ல கரெக்டாருக்கும்... கேட்டா நா ஃபேஸ் ரீடிங் படிச்சிருக்கேம்பான்... கண்டுக்காதீங்க...' என்ற அந்த பெண் ஜோதிகாவைப் பார்த்தாள்... 'நீங்க ஃபர்ஸ்ட் இயரா? எந்த க்ரூப்? ஐட்டியா?'

'இல்ல சிஎஸ்சி'

'ஓ! ஒங்க பேர்?'

'ஜோதிகா...'

'I am இந்த்ரா... இந்துன்னு கூப்டலாம்... ஐட்டி... செகண்ட் இயர்.. டேவிடோட க்ளாஸ்தான்...'

'என்னங்க என் பேர் அடிபடறா மாதிரி இருக்கு...' என்றவாறே டேவிட் என்ற அந்த மாணவன் எழுந்து அவர்களை நெருங்க... 'அய்யா ப்ரெஸ்சு...... இது இங்க கூடாதுன்னு தெரியாதா?' என்ற குரல் வந்தது அடுத்த மேசையிலிருந்து. கல்லூரி ஊழியர்களுள் ஒருவன் என்பது அவனுடைய சீருடையிலிருந்தே தெரிந்தது.

டேவிட் அலட்சியமாக திரும்பி பார்த்தான். 'எது?'

'லேடி ஸ்டூடண்ட்ஸ் கிட்ட தேவையில்லாம பேசக் கூடாதுன்னு.'

'தெரியாம என்ன? எல்லாம் தெரிஞ்சிதான் இருக்கு...' என்றவாறு அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி அவர்களைக் கடந்து சென்று கையிலிருந்தவற்றை அதற்குரிய தொட்டியில் எறிந்துவிட்டு கைகளை கழுவியவாறு கல்லூரி ஊழியனை நோக்கி நடந்தான். 'பேசாம கேண்டீன் நடுவுல ஒரு வால எழுப்பு பிரிச்சிடறதுதான... லேடீஸ், ஜெண்ட்ஸ் டாய்லெட் இருக்கறாப்பல ரெண்டு கேண்டீனாக்கிருங்க. அப்ப இந்த பிரச்சினையே இருக்காது... பிரின்சிக்கிட்ட போயி நான் சொன்னேன்னு சொல்லு'

கல்லூரி ஊழியன் கோபத்துடன் எழுந்து டேவிட்டை முறைக்க அவன் அதை பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்....

கேண்டீனில் இருந்த அனைத்து மாணவர்களுடைய பார்வையும் தங்களை நோக்கி திரும்பியதத கண்ட ஜோதிகா நிச்சயம் இது பிரச்சினையில்தான் முடியப் போகிறது என்று நினைத்தாள். திரும்பி தன் அருகில் நின்றிருந்த இந்துவைப் பார்த்தாள். 'நாம போயிரலாமா?'

இந்து சிரித்தாள். 'பயப்படாதீங்க... சாப்ட்டு முடிங்க... பாதி சாப்பாட்ட தொட்டியில போட்டாலும் காலேஜ் ஹேண்ட் எவனாவது புடிச்சிக்குவான்... இங்க நாம வாங்குன சாப்பாட்ட கூட தூக்கி போட முடியாது... உடனே நம்ம எச். ஓ.டிகிட்ட கம்ப்ளெய்ன் பண்ணிருவாங்க...'

ஜோதிகா அவசர, அவசரமாக ப்ளேட்டில் இருந்ததை உண்டு முடித்து கைகளை கழுவிக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்... 'நா வரேங்க... '

'வாங்க... நீங்கதான் ஜோதிகாவா.. லலிதா டீச்சர் பொண்ணுதான?' என்றவாறு டேவிட் வாசலுக்கருகில் அவளைப் பார்த்து புன்னகைக்க ஜோதிகா பதற்றத்துடன் திரும்பி சற்று முன் கல்லூரி ஊழியன் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள். காலியாக இருந்தது.

'ஆமா... ஆனா அது....'

டேவிட் சிரித்தான். 'லலிதா டீச்சர் ஃப்ரெண்ட் ஸ்டெல்லா டீச்சரோட சன்... சொல்லியிருப்பாங்களே?'

ஓ! நீதானா அது.... அம்மா சொன்னது சரிதான்.. சரியான அதிகப்பிரசங்கிதான் நீ..... 'சொல்லியிருக்காங்க...' என்ற ஜோதிகா சற்று தொலைவில் தங்கள் இருவரையும் பார்த்தவாறே தன்னுடைய எச்.ஓ.டி. வருவதைப் பார்த்தாள். 'சரிங்க நா வரேன்... அப்புறம் பாக்கலாம்.'

'என்ன இவ்வளவு பயந்தாங்கொள்ளியாருக்கீங்க?' என்றவன் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தான்.... 'ஓ சதுர மண்டையா? இவனுக்கெல்லாம் பயந்தா வேலைக்காகாதுங்க...'

ஜோதிகா அவனைப் பொருட்படுத்தாமல் தலையைக் குணிந்தவாறு தன் வகுப்பை நோக்கி விரைந்தாள்..

'என்ன சார்... ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்சையெல்லாம் டெரரைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போலருக்கு?' என்று கேலியுடன் டேவிட் எச்.ஓ.டியை கேட்பது அவளுக்கு கேட்டது...

'யாரு... இந்த பொண்ணா...? நீ வேற டேவிட்... இது பயங்கரமான கேடி....பாத்து ஆப்ட்டுக்காத..நல்ல வீட்டு பையன் மாதிரி இருக்கே...' என்ற பதிலளித்தவாறு எச்.ஓ.டி. அதிர்ந்து நின்ற டேவிட்டை கடந்து செல்ல ...

எச்.ஓ.டியின் குரூரமான பதில் அவளுடைய காதுகளை தீயாய் சுட பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் தன் வகுப்பறையை நோக்கி விரைந்தாள் ஜோதிகா...

'அடப்பாவி... என்ன மோசமா பேசறான்.. இவனெல்லாம் ஒரு காலேஜ் ப்ரொஃபசர்... பொறுக்கி...' என்று முனுமுனுத்தவாறு ஜோதிகா ஓடி மறைந்த திசையைப் பார்த்தவாறு நின்றான் டேவிட்..

தொடரும்...

Technorati Tags:

12.10.07

நாளை நமதே 26

Technorati Tags:

அன்று வகுப்பில் நடந்த அசம்பாவிதத்தை அசை போட்டவாறு கல்லூரி வளாக வாசலில் பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தனர் பரத்தும் வாசனும்.

'என்ன ப்ரதர் அந்த சதுர மண்ட  ஒங்களையும் போட்டு கலாய்ச்சுட்டானா?'

பரத் சட்டென்று நின்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்.

'ஐ ஆம் டேவிட், ஐ.டி. செக்கண்ட் இயர்.' வாயெல்லாம் பல்லாக அகண்ட புன்னகையுடன வலக்கையை நீட்டியவாறு தன் எதிரில் வந்து நின்றவனைப் பார்த்த பரத் ஒரு நொடி தயங்கி அவனுடைய கரத்தைப் பற்றி பேருக்கு குலுக்கினான்.

ஆள பாத்தா வில்லங்கம் புடிச்ச ஆளா தெரியுதே என்று நினைத்தவாறு திரும்பி வாசனைப் பார்த்தான். டெலிபதி போல பரத் நினைத்ததை புரிந்துக்கொண்ட வாசன் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான், லேசாக.

'என்ன பிரதர், நா கேட்ட கேள்விக்கு பதில காணம்?'

பரத் தயங்கியவாறு சுற்றிலும் நோக்கினான். அவனுடைய சக மாணவ, மாணவியர் பலரும் சற்று தொலைவில் பேருந்துகளுக்கு காத்து நிற்பது தெரிந்தது. டேவிட்டின் குரல் நிச்சயம் அவர்களுக்கு கேட்டிருக்கும் என்று நினைத்தான். அவன் 'சதுர மண்டை' என்று யாரை குறிப்பிடுகிறான் என்பது தெளிவாக இல்லை என்றாலும் இன்று வொர்க் ஷாப்பிலும் வகுப்பிலும் நடந்தவைகளை தொடர்புப் படுத்தி பார்க்கும் எவருக்கும் டேவிட் குறிப்பிட்டது எச்.ஓ.டியைத்தான் இருக்கும் என்று அவன் மட்டுமல்லாமல் அவனுடைய சக மாணவர்களாலும் புரிந்துக்கொள்ள முடியும் என்று நினைத்தான். நாம் வேறு எதையாவது சொல்லப் போக அது அவனுடைய வகுப்பபச் சேர்ந்த மாணவர்கள் காதில் விழுந்து.... வேற வினையே வேண்டாம்.

'சாரி... டேவிட் நீங்க கேட்டது சரியா காதுல விழலை.' என்றான் பட்டும் படாமல்.

டேவிட் உரக்க சிரித்தான். 'புரியுது பிரதர்.' கைகளை அட்டகாசமாக விரித்து 'இவனுங்க யார் காதுலயாவது விழுந்து அது அந்த சதுர மண்டைக்கு போயிரும்னுதான நினைக்கீங்க?'

இதென்னடா ரோதனையா போச்சி என்பதுபோல் பரத் வாசனைப் பார்த்தான். 'நீ பேசிட்டு வா பரத் நா பஸ் கிட்ட காத்துக்கிட்டிருக்கேன்.' என்று வாசன் கழண்டுக்கொள்ள பரத் டேவிட்டை நெருங்கி, 'நீங்க எந்த பஸ்சுல போகணும்? வாங்களேன், பேசிக்கிட்டே போகலாம்.' என்றவாறு அவனுடைய பேருந்தை நோக்கி நடந்தான்.

டேவிட் சிரித்தவாறு, 'வேணாம் பிரதர் நீங்க போங்க... இன்னொரு நாள் பேசிக்கலாம்.' என்று பதிலளித்துவிட்டு திரும்பி தன் பேருந்தை நோக்கி நடந்தான்.

****

ப்ரியா பேருந்தில் ஏறியதிலிருந்து ஏதோ நினைவாக இருப்பதைப் பார்த்த ஜோதிகா, 'ஏய் என்ன, ஏதோ கோட்டைய புடிக்க ப்ளான் பண்றாப்பல இருக்கு?' என்றவாறு விலாவில் இடித்தாள்.

ப்ரியா திரும்பாமல் சாலையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

ஜோதிகாவுக்கு சுருக்கென்றிருந்தது. இந்த ஒரு வார காலத்தில் ப்ரியா ஒருமுறை கூட இப்படி நடந்துக்கொண்டதில்லை.

'சாரி ப்ரியா.' என்று கூறிவிட்டு தன்னுடைய புத்தகப் பையை திறந்து அந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்ட்டை திறந்து வாசிக்கலானாள். அவளுடைய வீடு இருந்த பகுதியை சென்றடைய இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். ப்ரியா இன்னும் இரண்டு ஸ்டாப்பில் இறங்கிவிடுவாள் என்பதால் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அவளுடைய ஸ்டாப் வந்தும் இறங்காமல் ப்ரியா அமர்ந்திருக்கவே, 'ஏய் ஒன் ஸ்டாப் வந்தாச்சி. என்ன ட்ரீம் பண்றியா?' என்றவாறு அவளுடைய தோளை தொட்டாள்.

பேருந்து ஓட்டுனர் கதவை திறந்து பிடித்தவாறு காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

'நா இன்னைக்கி பாரீஸ் கார்னர்ல இறங்கிக்கட்டுமா?' என்றாள் ப்ரியா தயக்கத்துடன்.

ஓட்டுனர் பிடிவாதமாக தலையை அசைத்தான். 'முடியாதும்மா... நீங்க கட்டியிருக்கற ஃபீசுக்கு இதுவரைக்கிம்தான் காலேஜ் பஸ்ல ட்ராவல் பண்ண முடியும். எறங்கிருங்க... டைம் ஆவுது.'

பேருந்து முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. 'என்னங்க இது அநியாயம்? என்னைக்காவது ஒரு நாளைக்கு கூட கொஞ்சம் தூரம் போமுடியாதுன்னா எப்படி? இது என்ன கவர்ன்மெண்ட் காலேஜா?'

ஆளாளுக்கு குரலெழுப்ப அவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர்களுள் ஒருவர் எழுந்து கைகளை உயர்த்தினார். 'ஸ்டூடன்ஸ் till you get down from this bus you are bound to obey the regulations of the College. Don't forget that. If the conductor says you can't travel, then you can't. Is that clear?'

'போய்யா... நீயும் ஒன் ரெகுலேஷன்சும்' என்று சற்று உரக்கவே முனுமுனுத்தான் மூர்த்தி. அவனும் வாசனும் படித்தது வெவ்வேறு கல்லூரி என்றாலும் இரண்டும் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தது என்பதால் இரு கல்லூரிகளுக்கு பொதுவான பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.

அவனுடைய குரல் பேருந்தில் பயணித்த அனைவர் காதிலும் விழ அனைவரும், சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் சேர்த்து, காதிலும் விழவே எல்லா தலைகளும் அவன் இருந்த திசையை நோக்கி திரும்பின. ஆனாலும் ஆசிரியர்கள் பெரிதுபடுத்தாமல் அமர்ந்திருந்தனர்.

ப்ரியா தன்னால்தானே பிரச்சினை என்று நினைத்தவாறு மெள்ள எழுந்து வாசலை நோக்கி  நகர்ந்தாள்.

மூர்த்தி விடவில்லல. 'ஹல்லோ மேடம்... ஒங்களுக்காகத்தான நாங்கல்லாம் பேசிக்கிட்டிருக்கோம்... நீங்க பாட்டுக்கு எறங்கறீங்க..? போய் ஒங்க சீட்ல ஒக்காருங்க. என்ன பண்றாங்கன்னு பாத்துருவோம்.'

வாசன் எரிச்சலுடன் திரும்பி பின் இருக்கையில் அமர்ந்திருந்த தன் சகோதரனைப் பார்த்தான்.

'டேய் என்ன மொறைக்கறே... நானும் ஒருவாரமா பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... இவனுங்க டார்ச்சர் தாங்க முடியல... நாம என்ன ஜெயில் பிரிசனர்ஸா... காலேஜ் ஸ்டூடண்ஸ்.. நம்ம மைட்ட (might) இவனுங்களுக்கு காட்டணும்டா...'

ப்ரியா அவனைப் பொருட்படுத்தாமல் வாசலை நெருங்கி 'சாரிங்க. இங்கயே இறங்கிக்கறேன்.' என்று ஓட்டுனரிடம் பதிலளித்துவிட்டு இறங்க ஜோதிகாவும் சட்டென்று எடுத்த முடிவில் 'நானும் இங்கயே இறங்கிக்கறேன்..' என்றவாறு தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள்.

ஒட்டுனர் மூர்த்தியை முறைத்தவாறு கதவை அடைக்க பேருந்து நகர்ந்தது. மாணவ, மாணவியர் சற்று முன் நடந்தவற்றை மறந்துபோய் அவரவர் நினைவுகளில் மூழ்கினர்.

'முதுகெலும்பு இல்லாத பயல்க.... இவனுங்களுக்கு இந்த மாதிரி ட்ரீட்மெண்ட்தான் கிடைக்கும்..' என்றான் மூர்த்தி சற்றே உரக்க.

பேருந்தில் இருந்த யாருமே அவனைக் கண்டுக்கொள்ளவில்லை.... நமக்கேன் வம்பு என்று நினைத்தார்கள் போலும்...

******

'எதுக்குடி நீயும் இங்கயே எறங்குனே?'

' நீ பாரீஸ் கார்னர் வரைக்கும்தானே போறே? நானும் ஒங்கூட வரேன். எனக்கு அங்க பீச் ஸ்டேஷன்லருந்து ட்ரெய்ன் இருக்கு...'

'அதான் ஏன்னு கேக்கேன்... ஒன் வீடு வரைக்கும் காலேஜ் பஸ் போகுதில்ல? நீ பாட்டுக்கு போக வேண்டியதுதான?'

ப்ரியாவின் குரலில் தொனித்த எரிச்சல் ஜோதிகாவை திடுக்கிட வைத்தது. ஒருவேளை நா அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கறேன்னு நினைக்காளோ... சட்டென்று பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு வேண்டுமென்றே அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்ற ப்ரியாவைப் பார்த்தாள். 'சாரிடி.... I thought.....' வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினாள்....

ப்ரியா அப்போதும் அவளை திரும்பி பார்க்காமல் பேசினாள். 'If I had hurt you... I am sorry... But I need to be alone... நா வரேன்... நீ வீட்டுக்கு போ... நாளைக்கி பேசிக்கலாம்.'

ப்ரியா சாலையைக் கடந்து வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொள்ள விக்கித்து நின்றாள் ஜோதிகா.... என்னாச்சி இவளுக்கு?

********

டேவிட் பேருந்தில் ஏறி இருக்கை ஏதும் காலியாய் இருக்கிறதா என்று பார்த்தான். மாணவியர் அமர்ந்திருந்த பகுதியில் ஒரேயொரு இருக்கை மட்டும் இருந்ததைப் பார்த்துவிட்டு அங்கு அவன் அமர அனுமதியில்லை என்று தெரிந்தும் அதை நோக்கி நகர்ந்தான்.

'ஹலோ... அது லேடி ஸ்டூடண்ட்ஸ் செக்ஷன்னு தெரியுமில்ல...?' ஓட்டுனர் கீழிருந்து குரல் கொடுத்தார்.

'தெரியாமயா கெடக்கு?' என்றான் டேவிட் நக்கலுடன். 'ஒக்காந்தா கேளு.'

ஒட்டுனர் அவனை முறைக்க பேருந்தில் இருந்த அனைவரும் ஆசிரியர்களை தவிர்த்து, சிரித்தனர்.

'வச்சடா மச்சான் ஆப்பு.' என்றான் ஒரு மாணவன் சற்று உரக்க...

'டேய்... இன்னும் அஞ்சி நிமிசத்துல.. வைக்கறேன் இருங்க ஒங்க எல்லாருக்கும்... ஆப்பு...' என்று ஓட்டுனர் பதில் குரல் கொடுக்க சட்டென்று அமைதியானது பேருந்து.

'டேய்... கரஸ்சோட டாட்டர் வருது.... பாரா உஷார்' என்றான் வேறொருவன்.

டேவிட் குனிந்து பார்த்தான்.... நிர்வாகியின் இளைய மகள் ரோஜா படு ஸ்டைலாக வருவது தெரிந்தது... 'இருடா டேய் டிரைவர். யார் யாருக்கு ஆப்பு வைக்கறான்னு பாப்பம்.' என்று நினைத்தவாறு டேவிட் பேருந்தில் இருந்து இறங்கி நின்றான்.

'என்ன மேடத்துக்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போறியா.... போ... பண்ணு...' என்று ஓட்டுனரை உசுப்பி விட்டான்...

அடுத்த சில நொடிகளில்  ரோஜா டேவிட்டின் பேருந்தை நெருங்க ஓட்டுனர் அவளை சற்றே நெருங்கி, 'மேடம்...' என்றான் தயக்கத்துடன்..

ரோஜாவின் முகம் உடனே கடுப்பானது. 'என்ன தைரியம் இருந்தா இவ்வளவு பக்கத்துல வந்து நின்னு பேசுவ, ராஸ்க்கல். தொலைச்சிருவேன்..' என்றவாறு ஓங்கி ஒட்டுனரின் கன்னத்தில் அறைந்துவிட்டு கடந்து சென்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத பேருந்தில் அமர்ந்திருந்த முதலாமாண்டு மாணவர் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

டேவிட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இது ஒன்னுமே இல்லை.... கட்டுன புருசனையே எல்லார் முன்னாலயும் செருப்ப கழட்டி அடிச்சவங்களாச்சே.... டிரைவர் என்ன பிரமாதம்...' என்றவாறு கன்னத்தை தடவியாவாறு தன்னை முறைத்த ஓட்டுனரை பார்த்தான்... 'வாய்யா வந்து வண்டிய எடு.' என்றவாறு பேருந்துக்குள் நுழைந்து 'இங்க வந்து ஒக்கார்டா' என்று அழைத்த நண்பனை நோக்கி சென்றான்..

தொடரும்...

6.10.07

நாளை நமதே - 25

வந்தனா வகுப்புக்குள் நுழைந்து கொண்டு வந்திருந்த புத்தகங்களை மேசை மீது வைத்துவிட்டு ஒரு நிமிடம் வகுப்பறையைச் சுற்றி பார்த்தார்.

மாணவர்களுள் பலரும் அமைதியாக தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தனர்.

அன்றைய ஒர்க் ஷாப் வகுப்பில் நடந்து முடிந்திருந்த சம்பவம் நிச்சயம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்துதானிருந்தது. கடந்த ஒரு வார கால அனுபவத்தில் எச்.ஓ.டி. ஒரு ஈகோ பிடித்த, வறட்டு கவுரவம் பார்க்கும் மனிதர் என்பதும் தெரிந்திருந்தது. ஆகவே அவர் இதை லேசில் விடப்போவதில்லை என்று நினைத்தனர்.

'You must know that you have upset our HOD very much.'

'அதான் அந்தாள் மொறச்சிக்கிட்டு போனதிலருந்தே தெரியுதே.'

வந்தனாவின் முகம் சட்டென்று கடுப்பானது.

குரல் வந்த திசையைப் பார்த்தார்.

'இந்த மாதிரியான unwanted and anonymous commentsதான் பிரச்சினை. Either you should have guts to stand up and make such comments or keep your mouths shut. This is not a market place where you can say anything you want and get away with it.' வந்தனாவின் குரலில் இருந்த கோபத்தை மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களுடைய மெளனத்திலிருந்தே தெரிந்தது.

அடுத்த நொடியே சகஜ நிலைக்கு திரும்பிய வந்தனா தொடர்ந்தாள். 'வொர்க் ஷாப்புல எச்.ஓ.டிக்கு எதிரா கமெண்ட் அடிச்ச ஸ்டூடண்ட் யாராருந்தாலும் நேரா அவர் ரூமுக்கு மன்னிப்பு கேட்டுக்கறது பெட்டர். இல்லன்னா ஒட்டுமொத்தமா எல்லார் இண்டர்னல் மார்க்லயும் கை வச்சிருவார்.  என்ன பெரிய மார்க்குன்னு நீங்க யாராவது நினைச்சீங்கன்னா இப்ப நா சொல்லப் போறத தெளிவா கேட்டுக்குங்க.'

வந்தனா சற்றே நிறுத்திவிட்டு வகுப்பறையை நோட்டம் விட்டார். எல்லாருடைய கண்களும் தன்னையே பார்ப்பது தெரிந்ததும் தொடர்ந்தார்.

'ஒவ்வொரு பேப்பர்க்கும் இண்டர்னல் மார்க்ஸ் உண்டு. நிறைய காலேஜஸ்ல இருபதுக்கு இருபதுன்னு குடுத்துடறது வழக்கம். நம்ம காலேஜ்லயும் சில எச்.ஓ.டிங்க அப்படித்தான் செய்யறாங்க. அதாவது பிரச்சினை பண்ணாத ஸ்டூடண்ட்ஸ தவிர. நம்ம எச்.ஓ.டி அப்படியில்லை. நல்ல பிரில்லியண்ட் ஸ்டூடண்டுக்கே அவர் இதுவரைக்கும் பதினஞ்சு, பதினாறு மார்க்குக்கு மேல குடுத்தது இல்லை. பிரச்சினை பண்ணிட்டா கேக்கவே வேணாம். பத்துக்கு மேல தாண்டாது. இதோட சிக்னிஃபிக்கன்ஸ் இப்ப உங்களுக்கு புரியாது. ஆனா கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்டுன்னு வரும்போது நீங்க வாங்கப் போற பெர்சண்டேஜ்தான் ஒங்களுக்கு எந்த கம்பெனியில வேல கிடைக்கப் போகுதுங்கறத டிசைட் பண்ணும். அரை மார்க், ஒரு மார்க்ல கூட

Technorati Tags:

ரெப்யூட்டட் கம்பெனி ஜாப மிஸ் பண்ண நிறைய ஸ்டூடண்ட்ஸ நா பாத்துருக்கேன். என்ன நா சொல்றது வெளங்குதா?'

இங்கும் அங்குமாக பல தலைகள் புரியுது என்பதுபோல் அசைந்தன.

'எச்.ஓ.டிக்கு எதிரா கமெண்ட் அடிச்ச ஸ்டூடண்ட் தானாவே போய் அப்பாலஜி பண்ணா ஒருவேளை அத அவர் ஏத்துக்க மறுத்து ஏதாச்சும் பனிஷ்மெண்ட் குடுக்கலாம். மேக்ஸ்மிமம் ஒரு நாள் சஸ்பென்ஷன் இருக்கும்.  இல்லன்னா ஒட்டுமொத்த க்ளாசுக்கும் இந்த செமஸ்டர் இண்டெர்னல் மார்க் போயிரும். பரவால்லையா?'

ப்ரியா தன்னையுமறியாமல் சற்று முன் வொர்க் ஷாப்பில் கமெண்ட் அடித்த மாணவன் இருந்த திசையை நோக்கி திரும்பினாள். தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்த அவனுக்கருகில் அமர்ந்திருந்த சுந்தரும் அதே நேரத்தில் அவளை நோக்கி திரும்ப இருவர் கண்களும் ஒரு நொடி சந்தித்தன. சுந்தர் உடனே தலையைக் குனிந்துக்கொண்டான். இதைக் கவனித்த ஜோதிகாவின் உதடுகளில் புன்னகை விரிந்தது.

'என்ன ஜோதிகா உங்களுக்கு யாருன்னு தெரியுமா?'

ஜோதிகா திடுக்கிட்டு வந்தனாவைப் பார்த்தாள். உண்மையிலேயே அவளுக்கு அந்த மாணவனின் பெயர் தெரிந்திருக்கவில்லை. 'No Madam...I don't know'

'பரத்?' என்றவாறு அவனைப் பார்த்தாள் வந்தனா.

பரத்தும் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு, 'Whoever it is I'll go and apologize on his behalf madam.' என்றான்.

வந்தனா புன்னகைத்தவாறு தலையை அசைத்தார். 'எச்.ஓ.டிக்கு நீங்க இல்லேங்கறது நல்லாவே தெரியும். அதனால it won't server any purpose...'

அடுத்து தொடர்ந்த மவுனம் அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. 'So you have decided to protect him. Is that right?' என்றார் எரிச்சலுடன்.

'எனக்கு அந்த ஸ்டூடன்ட் யார்னு தெரியும் மேடம்..' என்ற குரல் வகுப்பின் ஒரு மூலையிலிருந்து வர அனைத்து கண்களும் அந்த திசையை நோக்கி திரும்பின.

வந்தனா எழுந்து நின்ற மாணவனைப் பார்த்தார். 'சொல்லுங்க..'

அவன் சுந்தரை நோக்கி கையை காட்ட அவன் திடுக்கிட்டு, 'மேடம் நிச்சயமா நான் இல்லை.' என்று மறுத்தான். 

பரத்தும் உடனே எழுந்து, 'He is not the person madam. I know.' என்றான் தன்னையுமறியாமல். அடுத்த நொடியே தன்னுடைய தவறை உணர்ந்தான்.

'So, you must know who had made that comment.' என்றாள் வந்தனா புன்னகையுடன். 'OK.  You need not tell me.. As the class rep லஞ்ச் டைம்ல அந்த ஸ்டூடன்டோட எச்.ஓ.டி ரூமுக்கு போயி அப்பாலஜி கேட்ருங்க. If you go with him HOD might accept it and forget the whole issue. என்ன சொல்றீங்க?'

'Yes mam..' என்றவாறு பரத் அமர சுந்தரின் அருகில் அமர்ந்திருந்த மாணவன் நிதானமிழந்து, 'இவனோட தயவு ஒன்னும் எனக்கு தேவையில்லை...' என்றவாறு எழுந்து நிற்க வந்தனாவின் முகம் கடுப்பானது.

'So you are the person.' என்றாள் கோபத்துடன். I will see that you are suspended for a week.'

அதே கோபத்துடன் மேசையிலிருந்த புத்தகங்களுடன் வந்தனா வெளியேற அனைத்து மாணவ, மாணவியரும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர்.

 

தொடரும்...

29.9.07

நாளை நமதே - 24

அன்று வொர்க் ஷாப் வகுப்பு இருந்ததால் அதற்கென கல்லூரி நிர்வாகம் வழங்கியிருந்த சீருடையில் செல்ல வேண்டியிருந்தது.

கரு நீல கலரில் சட்டையும் பேண்டும். காலில் கருப்பு நிற ஷூ. என்.சி.சி ஸ்டைலில்! தலையில் கேடட் தொப்பி சகிதம் சீருடையில் ப்ரியா படு ஸ்மார்ட்டாக இருந்ததை வொர்க் ஷாப்பில் குழுமியிருந்த அத்தனன கண்களும் மொய்த்தன.

'ஏய் ப்ரியா யூ லுக் ரியலி க்யூட்.' என்றாள் ஜோதிகா புன்னகையுடன்.

'ஏன் நீயுந்தான்' என்றாள் ப்ரியா.. 'ஆனா என்ன, மூச்சு விட முடியாத மாதிரி டைட்டா இருக்கு. கால்ல வேற ஷூ டன் கணக்குல..'

ப்ரியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவன், 'என்ன காலேஜ்டா மச்சான்... பொண்ணுங்கக் கிட்ட பேசக்கூடாதுன்னு... ச்சை... நச்சுருக்கீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லணும்னு கிடந்து மனசு அடிச்சிக்குது... ஆனா முடியலையே...' என்று தனக்கு அடுத்திருந்த மாணவனிடம் கிசு கிசுத்தான். ' அந்த எச்.ஓ.டி மட்டும் எப்படி சைட் அடிக்கிறான் பார். அவனும் அவன் தலையும்... சதுர மண்டைன்னு பேர் வச்சிரலாமாடா?'

அடுத்திருந்தவன் முறைத்தான். 'டேய் வாய வச்சிக்கினு சும்மாரு... அந்த எச்.ஓ.டி. இந்த பக்கம் பாக்கறான் பார்... கழுகு பார்வைடா அவனுக்கு. அப்புறம் இண்டர்னல்ல கைய வச்சிருவான்.. சொல்லிட்டேன்.'

அவர்களுக்கு அருகில் நின்றிருந்த சுந்தர் தன்னையுமறியாமல் ப்ரியாவை பார்த்தான். ஆனால் அடுத்த கணமே அவளுடைய பார்வை தன்மேல் படிவதைக் கண்டு கண்களை தாழ்த்திக்கொண்டான்.

ப்ரியாவின் உதடுகள் அவளையுமறியாமல் புன்னகையால் விரிந்தன.

'என்ன ப்ரியா... அப்பப்ப அந்த சுந்தர் பக்கம் உன் பார்வை போகுது...' என்று விளையாட்டாக அவளுடைய விலாவில் இடித்தாள் ஜோதிகா... 'ஒரு வாரம் கூட முழுசா ஆவலை...'

ப்ரியா பொய்க் கோபத்துடன் அவளை முறைத்தாள். 'ஏய் என்ன ஒவரா இமாஜின் பண்றே? அதெல்லாம் இல்லை...' என்றவள் தொடர்ந்து, 'ஆனா பார்க்கறதுக்கு ஸ்மார்ட்டா இருக்கான் இல்லே.' என்றாள்.

ஜோதிகா ஓரக்கண்ணால் சுந்தர் இருந்த திசையைப் பார்த்தாள். அவன் லெக்சர் அடித்துக்கொண்டிருந்த எச்.ஓ.டியையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்...

'ஹல்லோ... வைஸ் ரெப்..' என்ற கேலி குரல் அவளுடைய கவனத்தை கலைத்தது. திடுக்கிட்டு திரும்பி எச்.ஓ.டியை பார்த்தாள். 'இவன் அன்னைக்கி முதல் நாள் பேசுனத மனசுல வச்சிக்கிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்கானே.'

'என்ன முறைக்கிறீங்க? நா இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டிருந்தது காதுல விழுந்துச்சா இல்லையா?'

ஜோதிகா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். மாணவிகளில் சிலர் சிரித்தனர்.

'அதான பார்த்தேன். காலேஜுக்கு நீங்கல்லாம் படிக்கவா வரீங்க... டைம் பாஸ் பண்ணத்தானே...'

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு 'சாரி சார்.' என்றாள்.

'இந்த வார்த்தைய மட்டும் மறக்காம சொல்லிருங்க.' என்று வேண்டுமென்றே எரிந்து விழுந்த எச்.ஓ.டி மாணவர்கள் பக்கம் திரும்பினார். 'Look Boys. You can form teams of four each. Boys and Girls should not mix. I will give you five minutes. If you don't form the teams yourselves I will do it. Right?'

அடுத்த சில நிமிடங்களில் மாணவ, மாணவியர் தங்களுக்குள் குழுக்களை பிரித்துக்கொண்டனர்.

'என்ன மனுசண்டா இவன்.. ரெண்டு பொண்ணுங்களை நம்ம க்ரூப்புல சேத்துக்கினா என்னா சோக்கா இருக்கும்.' என்று குரல் எழும்ப

'டேய் நீ இன்னைக்கி அடிப்படப் போறே... வாய பொத்திக்கினு இரு..' என்று பதில் எழுந்தது.

'No talking please...' என்றது எச்.ஓ.டி குரல்.

'இவன் ஒருத்தண்டா, அசரீரி கணக்கா.' என்ற குரல் சற்றே ஓங்கி ஒலிக்க மொத்த குழுவும் கொல்லென்று சிரித்தது.

'யார் மேன் அது? I want to see that face... Come out. Otherwise no workshop today... I will not award any marks to any of you.'

அதிர்ச்சியில் அமைதியாகிப் போனது மாணவ, மாணவியர் குழு. அடுத்த சில நிமிடங்கள் சங்கடமான அமைதி நிலவ அடுத்த பகுதியில் மாணவர் குழு மும்முரமாக தங்களுடைய பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெளிவாக கேட்டது.

'பரத்' என்றார் எச்.ஓ.டி.  உரக்க. 'Could you identify the person who made that comment?'

பரத் தன் அருகில் நின்ற வாசனைப் பார்த்தான். இருவருக்குமே கமெண்ட் அடித்த மாணவனை தெரியும். ஆனாலும் மவுனம் காத்தனர்.

'Ok then... You can go back to your class room. I will report this to the Principal.' என்றவாறு எச்.ஓ.டி. வாசலை நோக்கி நடந்தார்.

'டேய்... போய் ஒத்துக்கடா... இல்லன்னா இந்த செமஸ்டர்ல எல்லாரோட இண்டர்னல் மார்க்லயும் கைய வச்சிருவான்.' என்றவனைப் பார்த்து முறைத்தான் எச்.ஓ.டிக்கு எதிராக கமெண்ட் அடித்தவன்.

ஒட்டுமொத்த மாணவர் குழுவும் அவனை முறைப்பதைப் பார்த்த பரத் எச்.ஓ.டி. வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு தன் சக மாணவர்களைப் பார்த்தான்.  'இங்க பாருங்க. இவர் செஞ்சது தப்புன்னாலும் இவர காட்டிக் குடுத்து நமக்கு கிடைக்கற மார்க் வேணாம்... After all five marks. பிரின்சிப்பால் கேட்டாலும் யாரும் சொல்லக் கூடாது. Let us take that decision. What do you say?'

மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சிலருக்கு பரத் கூறியதில் ஒப்புதல் இல்லையென்றாலும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர்.

'தாங்ஸ்...' என்ற பரத் கமெண்ட் அடித்த மாணவனைப் பார்த்தான். 'ஆனா let this be the last time. என்ன?' என்றான்.

'டேய் நீ என்ன பெரிய ஹீரோவா... வார்னிங் குடுக்கறே?' என்று மனதுக்குள் கருவினாலும், 'ஓக்கெ பிரதர்' என்று பதிலளிக்க மாணவர் குழு தங்களுடைய வகுப்பை நோக்கி நகர்ந்தது.

'இதுக்கா காலையிலருந்து இந்த ட்ரெஸ்சை போட்டுக்கிட்டு அவஸ்தை பட்டோம்.' என்ற மாணவியை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

தொடரும்...

22.9.07

நாளை நமதே 23

'என்னடி சொல்றே? இதென்ன ஸ்கூலா மொபைல புடுங்கிக்கிட்டு பேரண்ட்ச வர சொல்றதுக்கு?'

'ஆமாம்மா' என்றாள் ஜோதிகா அழுகையினூடே 'எனக்கு அந்த காலேஜுக்கு போறதுக்கே புடிக்கலம்மா....'

லதாவுக்கு சிரிப்பு வந்தது. 'ச்சீ... இதுக்கா அழுவறே... நா மன்னிப்பு லெட்டர் எழுதி தரேண்டி... அப்படியும் மொபைல குடுக்க மாட்டேன்னு சொன்னா வர்ற சனிக்கிழமை நானே வந்து ஒங்க பிரின்சிக்கிட்ட பேசறேன்.... அதுக்கெதுக்கு காலேஜுக்கு போமாட்டேங்கறே?'

ஜோதிகா முகத்தைத் துடைத்துக்கொண்டு தன் தாயைப் பார்த்தாள். இவங்கக்கிட்ட காலேஜ்ல நடந்ததா சொல்லணுமா, வேணாமா? ஃபர்ஸ்ட டெர்ம் ஃபீச கட்டிட்டு திடீர்னு இந்த காலேஜ் வேணான்னு சொன்னா அம்மா என்ன சொல்றாங்களோ ஆனா அப்பா நிச்சயம் வயலண்டா ரியாக்ட் பண்ணுவாங்க... வேணாம்... நமக்குள்ளவே வச்சுக்குவம்.... அதான் பரத் நல்லா திருப்பிக் குடுத்தானே....

அன்று காலை வகுப்பு பிரதிநிதி தேர்தலில் அவள் வைஸ் ரெப்பாக தெரிவு செய்யப்பட்டதுமே வகுப்பிலிருந்த ஒரு மாணவன் அடித்த கமெண்ட்டில் நொந்துப்போனாள் ஜோதிகா. ஆனால் வந்தனா உடனே தலையிட்டு அவனை கடிந்துக்கொண்டதும் பரத் உடனே முன்வந்து அவன் சார்பில் மன்னிப்பு கேட்டதும் அவளை ஒருவிதத்தில் சமாதானமடையச் செய்தன.

வந்தனா மேடம் அளித்த படிவங்களை நிரப்பி அவரிடமே சமர்ப்பித்தாள்.

அவளுடைய படிவத்தை மேலோட்டமாக படித்த வந்தனா அவளை நோக்கி புன்னகைத்தாள். 'You have a beautiful handwriting... I think you would be good in studies too.'

ஜோதிகா வெட்கத்துடன், 'தாங்க்ஸ் மேம்..' என்றாள்.

மொத்த வகுப்பும் ஒருவித பொறாமையுடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் மெள்ள தன் இருக்கைக்கு திரும்பினாள்.

'One Second Jothika...'

ஜோதிகா திரும்பிப் பார்த்தாள். 'Yes Mam?'

வந்தனா அவளுடைய படிவத்தையும் சற்று முன் பரத் சமர்ப்பித்திருந்த படிவத்தையும் எடுத்துக்கொண்டு, 'Both of you come with me. I will introduce you to our HOD.' என்றவாறு வாசலை நோக்கி நடக்க பரத்தும் அவரைப் பின் தொடர்ந்தான். சற்றே தயங்கி நின்ற ஜோதிகா அவர்களை தொடர்ந்து அதே தளத்தின் கோடியில் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.

எச் ஓ டி யின் அறையில் வேறு எவரும் இல்லை என்பதை கண்டுக்கொண்ட வந்தனா நுழைய பரத்தும் ஜோதிகாவும் தயங்கி வெளியில் நின்றனர்.

பரத் தயக்கத்துடன் ஜோதிகாவைப் பார்த்தான். 'ரொம்ப நெர்வசா இருக்கீங்க போலருக்கு?'

'ஆமாங்க.... வீட்ல என்ன சொல்வாங்களோன்னுதான் பயமாருக்கு..'

பரத் புன்னகைத்தான். 'வீட்லயா? ஏன்? அப்பா டெரறா?'

ஜோதிகா மறுப்பதற்குள் வந்தனா எச்.ஓ.டியின் காபின் வாசலில் நின்று அழைப்பதைப் பார்த்தாள். பரத்தை தொடர்ந்து அவளும் காபினுக்குள் நுழைய அறையின் நடுநாயகமாக அமர்ந்திருந்த எச்.ஓ.டி. தன்னைப் பார்த்த பார்வையிலேயே நொந்துப் போனாள். 'இந்தாளுக்கு நம்மள புடிக்கலை.'

'I am Bharath' என்றவாறு பரத் நீட்டிய கையை பொருட்படுத்தாமல் எச்.ஓ.டி. வந்தனாவைப் பார்த்தார்.

'இந்த பொண்ணு கோட்டாவுல வந்தது போலருக்கே... வைஸ் ரெப்புக்கு ஒங்களுக்கு வேற ஆள் கெடைக்கலையா மேடம்?'

எச்.ஓ.டியின் குரலில் இருந்த நையாண்டி அவளை மட்டுமல்லாமல் வந்தனாவையே துணுக்குற வைத்ததை ஜோதிகாவால் உணர முடிந்தது.

அதுவரை பார்த்திராத பரத்தின் மறு பக்கத்தையும் அவளால் பார்க்க முடிந்தது.

'என்ன சார் இண்டீசண்டா பேசறீங்க? கோட்டாவுல வந்தா? What do you mean by that?'

எச்.ஓ.டி அலட்சியத்துடன் அவனைப் பார்த்தார். 'என்ன தம்பி, நாக்கு நீளுது... ஜாக்கிரதை, ஒட்ட அறுத்துருவேன்... ஒங்கப்பா என்ன பண்றார்? கலெக்டரா? இந்த துள்ளு துள்றீங்க?'

பரத்தின் கோபம் அவனுடைய அடுத்த பதிலில் தெரிந்தது. 'அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம் சார்... இருந்தாலும் சொல்றேன். அவர் பேர் ராஜசேகர்.... நம்ம யூனிவர்சிட்டி வைஸ் சான்சலரோட க்ளாஸ்மேட்... போறுமா?'

எச்.ஓ.டியின் பார்வையில் கலக்கம் தெரிந்தது. 'எந்த ராஜசேகர்? CDMல ஹெட்டா இருக்காரே அவரா?'

'வைஸ் ஹெட்...'

எச்.ஓ.டி. எழுந்து வந்து பரத்தை அணைத்துக்கொண்டார். 'சாரி தம்பி... ஒங்கப்பாவ பத்தி கேள்வி பட்டுருக்கேன்... ரொம்ப நல்ல மனுஷன்... அறிவுஜீவி... நீங்க போங்க... ஆல் தி பெஸ்ட்'

பரத் அவருடைய பிடியிலிருந்து விலகி வாசலை நோக்கி நடந்தான் கோபம் தணியாமல்... ஜோதிகா தயக்கத்துடன் அவனைப் பிந்தொடர.. 'ஏய் நில்லு...' என்றார் எச்.ஓ.டி.

பரத் வாசலில் நின்று திரும்பி பார்த்தான்.

'நீங்க போங்க தம்பி....'

பரத் வேறு வழியின்றி வந்தனாவையும் ஜோதிகாவையும் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினான்...

'சார் என்ன இருந்தாலும் நீங்க...' என்று துவக்கிய வந்தனாவை இடைமறித்த எச்.ஓ.டி. ஜோதிகாவை பார்த்தார். 'ஏய்... நீ எந்த கோட்டாவுல வந்துருக்கே... எஸ்.டியா எம்.பி.சியா?'

ஜோதிகாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. என்னை ஆணவம் இவனுக்கு? ராஸ்க்கல்... அப்பா சொன்னது எவ்வளவு சரி? நாம ஒப்பன் கேட்டகரியில ஃபீஸ் கட்டி வந்துமே இவன் இப்படி கேக்கறான்னா நாம எம்பிசி கோட்டாவுல வந்திருந்தா என்னாவறது? இருந்தாலும் நாம இன்சல்ட்டாய்ட்டோம்னு காட்டிக்கக் கூடாது. பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். எச்.ஓ.டியை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தாள்.
'ரெண்டுலயும் இல்லை... ஓப்பன் கேட்டகரி..' என்றாள்.

வந்தனாவுக்கு சிரிப்பு வந்தது. நல்லா குடுத்தேம்மா என்று நினைத்துக்கொண்டாள். 'பொண்ணு நாம நெனச்சா மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை... வேணும் இந்தாளுக்கு.. கருப்பு தோலாருந்தாவே ஒரு எளக்காரம்.'

எச்.ஓ.டி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. இருப்பினும் தன்னை நோக்கிய அவருடைய பார்வையில் சந்தேகம் தெரிந்ததை பார்த்தாள். தன்னுடைய பேட்ஜில் இருந்த அட்மிஷன் எண்ணை சொன்னாள்.

'எனக்கெதுக்கு ஒன் நம்பர்?'

'என் அப்ளிகேஷன ஒங்களுக்கு வெரிஃபை பண்ணணும் தோனிச்சின்னா... அதுக்குத்தான்.'

எரித்துவிடுவதுபோல் பார்த்த எச்.ஓ.டியின் பார்வையில் தயங்காமல் சந்தித்தாள் ஜோதிகா.

'ஏய் என்ன நக்கலா? தொலைச்சிருவேன்... ஒன் க்ளாசுக்கு போ...'

எச்.ஓ.டியின் குரலில் இருந்த மிரட்டல் ஜோதிகா உண்மையிலேயே பாதித்தது. விட்டால் போதும் என்று தலையை குனிந்தவாறு வெளியேறியவள் கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ என்று நினைத்தாள்...

'என்ன ஜோதிகா வேற எதுவும் இன்சல்ட்டிங்கா சொன்னாரா?'

பரத்தின் மிருதுவான குரல் அவளை நிறுத்தியது. திடுக்கிட்டு நிமிர்ந்தாள். சட்டென்று பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இல்லையென்று தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் வகுப்பறைக்கு விரைந்தாள்...

******

'இப்ப புரியுதா அப்பா எதுக்கு நம்ம ஜாதி பேர சர்டிப்பிகேட்ல போடலைன்னு?'

லதா எரிச்சலுடன் தன் கணவரைப் பார்த்தார். 'என்னங்க நீங்க, இப்ப அதுவா முக்கியம்? என்ன தைரியம் இருந்தா அந்த எச்.ஓ.டி இவள இப்படி கேவலமா ட்ரீட் பண்ணியிருப்பான். அவனெ சும்மா விடக்கூடாதுங்க.'

ராம்குமார் சிரித்தார். 'பின்னே? போயி சண்டை போடலாங்கறியா? போடி பைத்தியக்காரி.'

'என்ன சொல்ல வரீங்க? இப்படியே விட்டுரலாம்னா?' என்றாள் லதா கோபத்துடன்.

'அப்பா சொல்றது சரிதாம்மா..' என்றாள் ஜோதிகா முகத்தை துடைத்தவாறு... 'நீங்களோ அப்பாவோ வந்து கேக்கறதுனால பிரச்சினை பெரிசாத்தான் ஆவுமே ஒழிய குறையாது... அந்தாள பாத்தாலே ஒரு வில்லன் மாதிரி இருக்கான்... ஏதோ தைரியத்துல அந்தாள் மொகத்த பாத்து பேசிட்டு வந்துட்டேன்... அதான் பயமாருக்கு...'

லதா தன் கணவனைப் பார்த்தாள். 'பாருங்க, மொதல் நாளே எப்படி பயப்படறான்னு.. பேசாம வேற காலேஜ்ல சேத்துருவோம்..சுமாரான காலேஜாருந்தாக் கூட பரவால்லை.'

ராம்குமார் மீண்டும் சிரித்தார். 'ஏய் லதா.. ஒவரா ரியாக்ட் பண்ணாதே... இந்த மாதிரி நிறைய சிக்கல்லாம் வரும்... ஒவ்வொன்னுக்கும் வேற காலேஜ் பாக்க முடியுமா? பேசாம அவளெ அவ போக்குல விடு... அவளே மேனேஜ் பண்ணிக்குவா...மொபைலுக்கு மாத்திரம் ஒரு லெட்டர் எழுதிக் குடு...' என்றவர் தன் மகளை நெருங்கி அவளுடைய தலையை வருடிக்கொடுத்தார். 'இதெல்லாம் சகஜம் ஜோதி.... நாளைக்கி அந்தாள பாத்தா ஒன்னும் நடக்காத மாதிரி குட்மார்னிங் சொல்லிரு... மனசுல வச்சிக்கிட்டு டென்ஷனாகாத... எல்லாம் போகப் போக சரியாயிரும்...என்ன சொல்றே?'

'யெஸ்ப்பா...' என்றாள் ஜோதிகா மெதுவாக...

'சரி... அப்படியே கொஞ்சம் படுத்துக்கிட்டுரு...' என்ற ராம்குமார் தன் மனைவியைப் பார்த்தார். 'அவளெ டிஸ்டர்ப் பண்ணாம போய் கிச்சன் வேலைய பார்...'

ஆனாலும் லதா வெளியேறாமல் தன் அருகில் அமர்ந்திருந்த மகளை சாய்த்து தன் மடியில் படுக்க வைத்து தடவிக்கொடுத்தாள்... 'நீயே மானேஜ் பண்ணிக்குவியா ஜோதி?' என்றாள் மிருதுவாக... 'இல்ல அம்மா வந்து பேசட்டுமா?'

'வேணாம்மா... நானே பாத்துக்கறேன்....' என்றவாறு ஜோதிகா கண்களை மூடினாள்... ஒரத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவாறு...

தொடரும்...

21.9.07

நாளை நமதே 22

ராம்குமார் குடியிருப்புக்குள் நுழைந்ததும் அமைதியாக இருந்த டி.வி. பெட்டியை பார்த்தார்.

'ஜோதி இன்னும் வரலையா?' என்றார்.

'இல்லைங்க.' சமையலறையிலிருந்து வந்தது லதாவின் குரல்.

'எட்டு மணிக்கு மேல ஆவுதே?'

லதா படபடப்புடன் வெளியில் வந்தார். 'ஏன் சொல்ல மாட்டீங்க? அவ அன்னைக்கி காலேஜ் பஸ்சுக்கு பணம் கட்டிருங்கப்பான்னு கெஞ்சுனப்போ என்ன சொன்னீங்க?'

கடுகடுவென்றிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே, 'சரி, சரி.... கத்தாதே... எதுக்கு வீணா மாசம் ஆயிரம் ரூபாவ கட்டணும்னு பார்த்தேன்.'

'என்ன சொல்றீங்க நீங்க? இங்கருந்து ஒரு பஸ் ஸ்டேஷன் வரைக்கும். அங்கருந்து செண்ட்ரல் வரை ஒரு ட்ரெய்ன், அப்புறம் பார்க் வரைக்கும் போயி வேறொரு ட்ரெய்ன். மறுபடியும் ஸ்டேஷன்லருந்து பஸ்... டெய்லி எப்படியும் அம்பதுக்கு மேல ஆவும். இதுல ஏதாவது ஒரு பஸ்ச மிஸ் பண்ணா போறும். காலேஜுக்கு லீவ் போட வேண்டியதுதான். டெய்லி அம்பதுன்னாலும் மாசம் ஆயிரம் ஆயிரும். நீங்களும் ஒங்க கணக்கும்...' லதாவின் குரலில் கோபத்தை விட சலிப்பே மேலோங்கியிருந்தது. இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு நாம அனுபவிக்கறது போறாதுன்னு இப்ப பிள்ளைங்களும்... ச்சே...

'சரி... நாளைக்கே காலேஜ் பஸ்சுக்கு கட்டிறலாம்.' என்று இறங்கி வந்த ராம்குமார் தன் மனைவியை பார்த்தார். 'இவ கிட்டதான் மொபைல் இருக்குல்லே... லேட்டாயிருச்சின்னு போன் பண்ணலாம் இல்ல?'

'அதான் எனக்கும் புரியலீங்க. காலேஜ் போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணுடின்னு சொல்லி விட்டேன். அதுகூட பண்ணல...' என்றார் லதா கவலையுடன்.

'நான் வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் போய் பார்க்கவா?'

'வேணாங்க... அப்புறம் ஒங்கள வேற நா தேடிக்கிட்டுருக்கணும்...ராஜ் இப்ப வந்துருவான். அவனெ வேணும்னா போய் பார்த்துட்டு வாடான்னு அனுப்புவம்.'

வாசலில் மணி அடித்தது.

'ஜோதிதானோ என்னவோ... கதவ திறங்க.'

ராம் கதவை திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்த ஜோதிகா காலிலிருந்து காலனிகளை மட்டும் உதறியெறிந்துவிட்டு தன்னுடைய அறைக்குள் ஓடிப்போய் கட்டிலில் விழுந்து அழுவதைப் பார்த்த ராம்குமார் திகைப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். போய் என்னன்னு கேளு... என்பதுபோல் கண்சாடை செய்தார்.

*********

'என்ன நடந்தது பரத். நிதானமா பதட்டப்படாம சொல்லு.' என்றார் ராஜசேகர்.

பரத் அன்று காலையில் கல்லூரியில் நடந்தவற்றை விவரித்தான்.

***

அன்று காலை வரவேற்பு கூட்டத்தின் இறுதியில் 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்ற அறிவுப்பு விடுக்கப்பட்டதும் பரத் திரும்பி தன் நண்பன் வாசனைப் பார்த்தான்.

'எதுக்கு வாசன் எங்கள நிக்க சொல்றாங்க?'

'ஒருவேளை ஒங்க வண்டி நம்பர குறிச்சிக்கிறதுக்காக இருக்குமோ என்னவோ? நீ குடுத்துட்டு வா.. நா க்ளாசுக்கு போறேன்.'

ஹாலிலிருந்த மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு செல்ல சுமார் ஐம்பது மாணவ, மாணவியர் மேடையில் நின்றிருந்தவரைப் பார்த்தனர். அவர் மேடையிலிருந்து இறங்கி வந்து, 'எல்லாரும் பக்கத்துல வாங்க.' என்றார் அதிகாரத்துடன்.

அடுத்த சில நொடிகளில் ஹாலில் இருந்த மாணவ, மாணவியர்கள் அவரை நெருங்கினர்.

'ஒங்க வண்டி சாவிய அந்த பெட்டியில போட்டுட்டு க்ளாசுக்கு போங்க.' என்றவாறு அவர் அருகிலிருந்த மேசையிலிருந்த ஒரு பெட்டியைக் காட்ட குழுமியிருந்த மாணவ கும்பல் திகைப்புடன் ஒவ்வொருவரையும் பார்த்தனர்.

'எதுக்கு?' என்ற குரல் வந்த திசையை நோக்கி, 'யார் மேன் அது எதிர் கேள்வி கேக்கறது?' என்று அறிவிப்பு விடுத்தவர் கோபத்துடன் திரும்ப மாணவர் கும்பல் அச்சத்துடன் அவரையே பார்த்தது. 'அவங்கவங்க வண்டி நம்பர ஒரு பேப்பர்ல எழுதி சாவியோட சேர்த்து கட்டிட்டு போட்டுட்டு க்ளாசுக்கு போயிரணும். நாளைக்கி ஒங்க பேரண்ட்ஸ்கிட்டருந்து இனிமே காலேஜுக்கு எங்க பசங்க வண்டியில வரமாட்டாங்கன்னு ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வந்து பிரின்ஸ்பால் கிட்ட குடுத்துட்டு ஒங்க வண்டிய எடுத்துக்கிட்டு போலாம்.'

என்னது பேரண்ட்ஸ் கிட்டருந்து லெட்டரா, எதுக்கு? என்ன சொல்றாங்க? என்று அருகில் இருந்து கிசுகிசுத்த மாணவனை பார்த்தான் பரத். பேசாம இருங்க என்பதுபோல் சைகை காட்டிவிட்டு தன்னுடைய வாகனத்தின் எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி அதை சாவி வளையத்துடன் இணைத்து மேசை மீதிருந்த பெட்டியில் இட்டுவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான்.

அவனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிற மாணவர்களும் செய்துவிட்டு வெளியேற பரத்தை நோக்கி ஓடி வந்தான் ஒரு மாணவன். 'என்ன பிரதர் என்ன ஏதுன்னு கேக்கலாம்னா நீங்க முந்திக்கிட்டு சாவிய போட்டுட்டீங்க, இதென்ன காலேஜா ஸ்கூலா?'

பரத் திரும்பாமலே பதிலளித்தான். 'நீங்கதானே எதுக்குன்னு கேட்டீங்க? அவர் சத்தம் போட்டதும் சைலண்டாய்ட்டீங்க. சரிதானே?'

'ஆமாம் பிரதர். அவனெ பார்த்தாலே ரவுடியாட்டம் இருக்கான். மொதல் நாளே நாம எதையாவது பேசிட்டு... அப்புறம் வில்லங்கமாகி...'

பரத் புன்னகையுடன் அவனை திரும்பி பார்த்தான். 'அதான்... அதுக்குத்தான் நானும் சாவிய போட்டுட்டு வெளியே வந்தேன்.... When you realise that there is no use in objecting..... வாதம் பண்ணி பலன் இல்லேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சைலண்டா இருந்துரணும்...'

'ஒங்க வீட்ல பிரச்சினை ஒன்னும் வராதா... ஒங்க வீட்டுக்கு தெரிஞ்சிதான் வண்டியில வந்தீங்களா?'

பரத் வியப்புடன் தன் அருகில் நின்றவனைப் பார்த்தான். 'ஏன்... நீங்க வீட்டுக்கு தெரியாம வண்டியில வந்தீங்களா?'

'வேற வழி? எங்கப்பா அட்மிஷன் அன்றைக்கே காலேஜ் பஸ்சுலதான் போணும், வரணும்னு ஃபீசோட சேர்த்து பஸ்சுக்கும் கட்டிட்டார். நாந்தான் ஃபர்ஸ்ட் டேதானேன்னு அவர் குளிச்சிக்கிட்டிருக்கறப்ப சாவிய எடுத்துக்கிட்டு வந்துட்டேன்... இப்ப வண்டியில்லாம எப்படி போறதுன்னுதான் யோசனையா இருக்கு...'

பரத் அமைதியாகிப் போனான்.... டாடியும் காலையில வீட்லருந்து கெளம்பறப்பவே சொன்னாங்களே... வண்டி வேணுமான்னு... How am I going to explain to him.....

****

'இவ்வளவுதானே பரத்? ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டா போறது... இதுக்கா இவ்வளவு டென்ஷனாருக்கே....' என்றவாறு தன் மகனைப் பார்த்தார் ராஜசேகர். 'If I am not mistaken... there is something else? Am I correct பரத்?'

பரத் தலையை அசைத்தான். 'Yes Dad...'

thodarum..