31.1.06

சூரியன் 16

கோபால் ஒதுங்கி நின்று வழிவிட பாபு அவசர அவசரமாக வெளியேறி கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் ஓப்பல் ஸ்ட்ராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

சென்னைப் புறநகர் பகுதியிலிருந்த SSR மருத்துவமனையை அடைந்தபோது இரவு மணி 8.00 ஆகியிருந்தது.

அந்த நேரத்திலும் சுமார் நூறு வாகனங்கள் நிறுத்தக் கூடிய வளாகத்தில் அவருடயை வாகனத்தை நிறுத்த இடமில்லாமல் வளாகத்தை ஒட்டியிருந்த திறந்தவெளியில் நிறுத்தி வாகனத்தைப் பூட்டினார்.

மருத்துவமனையை ஏறிட்டு பார்த்தார். எட்டு மாடிகளுடன் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியைப் போன்ற வெளி அலங்காரத்துடன் கம்பீரமாக நின்றது.

சோமசுந்தரம், பரம்பரை செல்வந்தரான பரந்தாம ரெட்டியாரின் திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசு என்று பாபு கேள்விப்பட்டிருக்கிறார்.

சோமசுந்தரம் ரெட்டியார் என்ற பெயரை சுருக்கி SSR Hospital என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் டாக்டர். சோமசுந்தரம் இப்படியொரு மருத்துவமனையைத் துவக்குவது என்று முடிவெடுத்து பாபு அப்போது மேலாளராகவிருந்த கிளையை நெருங்கியபோது அவருக்கும் அத்தனை நம்பிக்கை இருக்கவில்லை.

மருத்துவமனை, அதுவும் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக... இருப்பினும் முப்பத்தைந்து வயதே நிரம்பிய, அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து அங்கேயே மிகச் சிறப்பான வேலை கிடைத்தும் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டு தன்னுடைய வளர்ந்த ஊரான சென்னைக்கு திரும்பிய சோமசுந்தரம் தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாயிருந்ததைப் பார்த்தார் பாபு.

சோமசுந்தரத்தின் குடும்பப் பின்னணியைக் கேள்விப்பட்டதும் அவருக்கு இருந்த ஐயம் மேலும் கூடவே செய்தது. பரம்பரை, பரம்பரை விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர் அதில் ஈட்டிய தொகை முழுவதையும் முற்றிலும் பரிச்சயமில்லாத துறையில் முதலீடு செய்து தோற்றுப் போவாரோ என்றும் அஞ்சினார்.

அத்துடன் அவருடைய கிளையில் அதுவரை கொடுத்திராத மிகப் பெரிய தொகையை அவர் கடனாக கேட்டபோது பாபுவுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. ஆனால் அவர் கேட்ட கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களை ஜாமீனாக அளிக்க முன்வந்தபோது சரி, அனுப்பித்தான் பார்ப்போமே என்று அவருடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்பினார்.

சோமசுந்தரத்தின் அதிர்ஷ்டம் அச்சமயத்தில் வங்கியின் சேர்மனாக இருந்தவர் மருத்துவத் துறையில் மிகவும் ஈடுபாடுள்ளவர். அவருடைய குடும்பத்திலும் அவரைத் தவிர எல்லா ஆண்களும் மருத்துவத்துறையில் இருந்தனர். ஆகவே இளைஞர் சோமசுந்தரத்தின் கடன் விண்ணப்பத்தைக் கண்டதுமே அவரை தலைமையலுவலகத்திற்கு அழைத்து தானே நேர்காணல் நடத்தியதுடன் அவருடைய தன்னம்பிக்கையான பேச்சால் கவரப்பட்டு அவர் கேட்ட தொகையைக் கடனாக போர்ட் அங்கத்தினர்களின் உதவியுடன் வழங்கினார்.

அக்கடன் டாக்டர். சோமசுந்தரத்தை மட்டுமல்ல பாபு சுரேஷின் அலுவலக பாதையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சோமசுந்தரத்தின் தந்தை அரசியலிலும் மிகுந்த செல்வாக்குடையவராயிருந்ததால் அடுத்த ஐந்து வருடங்களில் பாபு பதவி உயர்வுக்காக சென்ற அனைத்து நேர்காணல்களிலும் வெற்றி கிடைத்து படிப்படியாக முன்னேற முடிந்தது.

துணைப் பொது மேலாளராக இருந்த கிளையில் கையூட்டு பெற்று கையும் களவுமாக பிடிபட்டபோது அப்போது தன்னுடைய தொழிலில் அபிரிதமான வெற்றிப் பெற்று தான் கடனுதவி பெற்ற அதே வங்கியின் இயக்குனர்களில் ஒருவராயிருந்த சோமசுந்தரம் அவரை எல்லா தண்டனைகளிலிருந்தும் விடுவித்தது மட்டுமல்லாமல் அடுத்த வருடமே டெப்புடி பொது மேலாளராக பதவி உயர்வும் கிடைக்கச் செய்தார்.

ஆனால் அதற்கு பிரதிபலனாக பாபுவை அவருடைய சொந்த பணியாளரைப் போல் நடத்தினார். கடன் வழங்கிய வங்கியின் இயக்குனரானவுடன் ரிசர்வ் வங்கியின் நியதியின்படி அவருடைய மருத்துவமனைக்கு அவர் பெற்றிருந்த கோடிக் கணக்கான கடனை திருப்பி அடைக்க வேண்டிய நிர்பந்தத்திற்காளானபோது பாபுவிடம்தான் சென்று நின்றார்.

பாபுவின் சமயோசிதமான யோசனையை அப்படியே ஏற்று மருத்துவமனையின் போர்டில் இருந்து ராஜிநாமா செய்தார். அத்துடன் தன் குடும்பத்திலிருந்த அனைவரையும் தன்னுடன் விலகச் செய்து மருத்துவமனையில் பணிபுரிந்த நம்பிக்கையுள்ள ஊழியர்களை பேருக்கு இயக்குனராக்கினார்.

அவர்களிடமிருந்து பவர் ஆஃப் அட்டார்னி பெற்றுக் கொண்டு தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தார் பேரிலிருந்த பங்குகளை அவர்கள் பேரில் மாற்றினார். ஆனால் அவர்கள் கையில்  அத்தனைப் பெரிய தொகை வேண்டுமே ? அதற்கும் பாபு சுரேஷின் தயவு தேவைப்பட்டது. அவருடைய சொந்த பொறுப்பில் வங்கியின் நியதிகளை சாதுரியமாக வளைத்து அவர்களுக்கெல்லாம் கடன் வழங்கினார்.

அந்த வருடத்தில் நடந்த ரிசர்வ் வங்கியின் ஆய்வில் இக்கடன்களைக் குறித்து கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. பாபுவின் கதி அதோகதிதான் என்று அவருடைய சக மற்றும் உயர் அதிகாரிகள் நினைத்திருந்தபோது யாரும் எதிர்பாராமல் அடுத்த ஆறு மாதத்தில் நடந்த பொது மேலாளர் போட்டியில் அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது. அவருடன் பதவி உயர்வு பெற்ற வேறொரு நபர் குமாரி. வந்தனா தேவி!

வந்தனா தேவியின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார் பாபு சுரேஷ். வந்தனா தேவியென்ன சேலைச் சுற்றிய யாராயிருந்தாலும் அவருக்கு அவர்கள் மேல் ஒரு கண் உண்டு. சரியான சபலக்கேஸ் என்று அவருடைய மனைவியே ஏளனம் செய்யும் அளவுக்கு அவருடைய சபலம் பிரபலம்.

இருவருக்கும் இடையே மூன்று வயது வித்தியாசமிருந்தும் அவருக்கு பதவி உயர்வு கிடைத்த போதெல்லாம் வந்தனாவுக்கும் பதவி உயர்வு கிடைக்கவே அவருக்கு வந்தனாவைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமை கொழுந்துவிட்டெரியும். ‘எல்லாம் தேவடியாத்தனம் பண்ணி வாங்குன ப்ரொமோஷன்’ என்று மனதுக்குள் கறுவுவார்.

ஒருமுறை அவர்களிருவரும் தனித்திருந்த வேளையில் பாபு சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக உடையுடுத்தியிருந்த வந்தனாவை உணர்ச்சிவசப்பட்டு கட்டிப் பிடித்து முத்தமிட முயற்சிக்க அவருடைய நடத்தையை முற்றிலும் எதிர்பார்க்காத வந்தனா தன் காலனியால் அவரை அடித்துவிட்டார்.

அத்துடன் அவருடைய குரல் கேட்டு வந்த பணியாளர்கள் கையில் காலனியுடன் நின்ற வந்தனாவையும் கன்னத்தைப் பிடித்தவாறு நின்றிருந்த பாபுவையும் பார்த்தனர். அடுத்த நிமிடமே காட்டுத் தீ போல் விஷயம் தலைமையலுவலகம் முழுவதும் பரவியது. ‘சரி.. தொலைஞ்சான்.’ என்று எல்லோரும் நினைக்க சோமசுந்தரம் மீண்டும் தலையிட்டு வந்தனாவை சமாதானம் செய்து வைத்தார். அத்துடன் நில்லாமல் பாபுவை அதே பதவியில் அவருடைய மருத்துவமனை கணக்கு வைத்திருந்த கிளைக்கு தலைவராக மாற்றி விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்.  

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! பாபு சுரேஷ¤க்கு முன்பிருந்த கிளை மேலாளர் சோமசுந்தரத்தின் விருப்பத்திற்கு நடக்க மறுத்ததால் அவரை வட கிழக்கு மாநில கிளைக்கு (போராளிகளுக்கு பேர்பெற்ற மாநிலம்) மாற்றவும் அவரால் முடிந்தது.. பாபுவின் துணையுடன் தன்னுடைய மருத்துவமனைக்கு தேவைப்பட்ட சகலவித சலுகைகளையும் அவருடைய கிளையிலிருந்து பெறவும் முடிந்தது!

***

எட்டாவது தளத்திலிருந்த சோமசுந்தரத்தின் Presidential Suiteஐ நெருங்கியபோது அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்று தனக்குள்ளேயே ஒருமுறை கூறிப் பார்த்துக் கொண்டார் பாபு.

‘வாங்க பாபு சார், வாங்க. I’ve been waiting for over two hours. வாங்க வந்து உக்காருங்க.’

என்ன சார், கீர்னு வரவேற்பு ரொம்ப பலமாயிருக்கு? நாம ஒரு ஃபேவர் கேட்க வந்தா இந்தாளு மறுபடியும் பதிலுக்கு ஏதாவது ஏடாகூடமா கேப்பாரோன்னு தெரியலையே..

மனதிலுள்ளதை வெளியே சொல்லவா முடியும்?

அசடு வழிந்துக் கொண்டு, ‘சாரி சார். ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை.. அதான். Sorry for having kept you waiting, Sir.’

சோமசுந்தரத்தின் உதடுகள் கேலியுடன் வளைய பாபு திகைப்புடன் அவரையே பார்த்தார்.

ஆனால் சோமசுந்தரம் அதைக் கண்டுக்கொள்ளாதவர்போல், ‘சரி, சொல்லுங்க, என்ன விஷயமா என்னை பாக்கணும்னு கேட்டீங்க?’ என்றார்.

பாபு தயக்கத்துடன் அவரைப் பார்த்தார். ‘பிராஞ்சுல இருந்தது போறும்னு ஆயிருச்சி சார். அதான் ஹெட் ஆஃபீஸ்ல போஸ்டிங் கிடைச்சா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதுவும் புது சேர்மன் வந்து ஜாய்ன் பண்ற நேரத்துல ஹெட் ஆஃபீஸ்ல இருந்தா நல்லதுன்னு...’

‘குட் ஐடியா.’

பாபு சுரேஷ் ஒன்றும் விளங்காமல் ஒரு நிமிடம் அவரையே பார்த்தார். வரும் வழியெல்லாம் என்ன சொல்வாரோ ஏது சொல்வாரோ என்ற அங்கலாய்ப்புடன் வந்தவருக்கு சோமசுந்தரத்தின் உடனடி சம்மதம் மகிழ்ச்சியை விட கலவரத்தையே அளித்தது.

‘சார்.. நீங்க..’

‘நல்ல ஐடியான்னு சொன்னேன்.நம்ம H.R. Head பதவிய ஜி.எம் பதவியா அப்க்ரேட் பண்ணலாம்னு ஒரு ப்ரொப்போசல் இருக்கு. அதுல உங்கள போடச் சொல்றேன். என்ன சொல்றீங்க?’

எச்.ரா? அதுல ‘ஒன்னுமே’  கிடைக்காதே.. ஃபேவரபிளா டிரான்ஸ்ஃபர் குடுத்தா எவனாச்சும் ஒரு ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கிஃப்டா தருவான். அத வச்சிக்கிட்டு பொண்ணு கல்யாண செலவ எப்படி ஈடுகட்டுறது? க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட் கிடைக்கும்னு நினைச்சா... இந்தாளு காரியத்தையே கெடுத்துருவார் போலருக்கே..

‘எச்.ஆர்க்கு மிஸ். வந்தனாத்தான் சரியான கேண்டிடேட்டுன்னு நினைக்கிறேன் சார்.’ என்றார் பாபு.

சோமசுந்தரம் உரக்கச் சிரித்தார். ‘அதாவது நீங்க க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட குறி வச்சிதான் போஸ்ட்டிங்கே கேக்கறீங்க? அப்படித்தானே... அப்பத்தானே பொண்ணோட கல்யாணத்துக்கு சீரா கொடுக்க வேண்டியதையெல்லாம் எந்த இளிச்சவாயன்கிட்டருந்தாவது கறக்க முடியும்னு பாக்கறீங்க? என்ன பாபு சார்?’

பாபு சுரேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குணிந்து நிற்க சோமசுந்த்தரம் அவரை நெருங்கி வந்து அவருடைய தோளைத் தொட்டார்.

‘டோண்ட் ஒர்றி பாபு சார். எச்.ஆர்லயும் உங்களுக்கு தேவையானது கிடைக்க வழியிருக்கு.. ஐ வில் டேக் கேர் ஆஃப் யுவர் நீட்ஸ்.. நீங்க பதவியேற்ற ரெண்டு மாசத்துலயே Trainee Officers Recruitment Proposal ஒன்ன ப்ரிப்பேர் பண்ணி மேனேஜ்மண்ட் கமிட்டிக்கு வைக்கறீங்க... குறைஞ்சது முன்னூறு பேர்.. அதுல சுமார் நூறு பேர்கிட்டருந்து  மேனேஜ்மெண்ட் கோட்டான்னு சொல்லி தலா ரெண்டுலருந்து மூனு லட்சம் வரைக்கும் கறக்கறதா ப்ளான். அதுக்கு நீங்கதான் லாயக்கு.. எனக்கு போர்ட்ல இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்குன்னு தெரியும்லே.. இதான் மாஸ்டர் ப்ளான்.. என்ன சொல்றீங்க?’

பாபுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. தலா ரெண்டு லட்சம்னு வச்சாலும் நூறு பேருக்கு ரெண்டு கோடி! அதுல நமக்கு? பிச்சாத்து பத்தோ பதினைஞ்சோ லட்சம்.. வேணாம்னு சொன்னா.. பிராஞ்சுலருந்து மாற்றம் கிடைக்காதுங்கறது மட்டுமில்ல.. இந்தாளு நம்மள நார்த்துக்கு எங்கயாவது தூக்கியடிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.. சரின்னு சம்மதிப்போம்.ஆளெடுத்து முடிச்சதும்.. மறுபடியும் க்ரெடிட் இலாக்காவுக்கு ட்ரை பண்ணுவோம்..

தன்னையே கள்ள சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சோமசுந்தரத்தைப் பார்த்து புன்னகையுடன், ‘சரி சார். நீங்க சொல்றா மாதிரியே செய்யறேன்.’ என்றார்.

‘யெஸ்.. தட்ஸ் தி ஸ்பிரிட். யூ வில் நாட் ரெக்ரட் திஸ்.. நான் தயார் பண்ணி குடுக்கற நூறு பேரோட  லிஸ்ட நீங்க Eligible for recruitment லிஸ்டோட கலந்துட்டா போறும். மிச்சத நான் பாத்துக்கறேன்.’ என்றவர் வேலை முடிந்ததும் கழட்டி விடும் நோக்கத்துடன், ‘அப்புறம்? பாக்கலாம். எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. மண்டே H.O.வுக்கு வந்துருங்க. I’ll speak to the new Chairman about your posting, OK. See you.’ என்றார்

தன்னுடைய கையைப் பிடித்து குலுக்கிவிட்டு சென்ற சோமசுந்தரத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாபு சுரேஷ் திரும்பி வாசலை நோக்கி நடந்தவாறு தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 10.00!

தன்னுடைய வாகனத்திற்கு செல்லும் வழியிலேயே கைத்தொலைப் பேசியை இயக்கி தன் மனைவியை அழைத்தார். ‘பத்மா நான் வந்துக்கிட்டிருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன். நீ ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியாயிரு. சுகன்யா, நீ, நான் மூனுபேரும் வெளிய போய் சாப்டலாம்.’

இன்னியிலருந்து நல்ல காலம்டா டேய்.. உன் காத்துல மழைதான்.. என்று தனக்குத்தானே கூறியவாறு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் பாபு சுரேஷ் வீட்டில் தன்னை எதிர் நோக்கியிருக்கும் அதிர்ச்சியை அறியாதவராய்..

தொடரும்30.1.06

சூரியன் 15

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்கலானார் பாபு சுரேஷ்..

அவருடைய கைத் தொலைபேசி சிணுங்கியது. 'யார் இந்த நேரத்துல?' என்று எரிச்சலுடன் பார்த்தார்.

எம்.டி. சேதுமாதவன்!

இந்த ஆளு எங்க இந்த நேரத்துல? குழந்தையை கிள்ளி விட்டுட்டு தொட்டில ஆட்ட வந்திருக்கானா?

கண்டுக்காம விட்டுடலமா? வேணாம். அப்புறம் இந்த ஆள் விரோதத்த வேறு சம்பாதிச்சிக்கணும்.  எடுத்து பேசுவோம்.

‘யெஸ் சார்.’ என்றார் தொலைப்பேசியில். யாராயிருக்கும் என்பதுபோல் முரளிதரன் தன்னுடைய சகாக்களைப் பார்க்க 'எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்' என்பதுபோல் விழித்தனர் சகாக்கள்..

‘என்ன சுரேஷ், எங்க இருக்கீங்க? ஆபீஸ்லயா? வீட்ல கூப்டப்போ நீங்க இன்னும் வரலைன்னு சொன்னாங்களே?’

இவருக்கு எத்தனை தரம் சொன்னாலும் பாபு சுரேஷ் என்ற பெயரில் சுரேஷ் என்பதுதான் இவருக்கு மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் அவர் பாபு என்றால் இவருக்கு மட்டும் சுரேஷ்!

பாபு தன் முன்னால் நின்ற கும்பலைப் பார்த்தார். ஆமா சார். ஆபீஸ்லதான்..’

எதிர் முனையில் ஒலித்த அட்டகாசமான சிரிப்பு அவரை எரிச்சலூட்டியது. இங்க நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறது இந்த ஆளுக்கெங்க தெரியப்போவுது?

‘என்ன சார்.. பொண்ணுக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு சனிக்கிழமை அதுவுமா  ஆபீஸ்ல இருக்கீங்க? இன்னும் ஒரு மாசம் கூட இல்லையே கல்யாணத்துக்கு? வீட்ல கேட்டா அவர் எப்பவுமே இப்படித்தாங்கறாங்க? ஆபீஸ்ல அப்படியென்ன வேலை?’

பாபு சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினார். எதிரில் தன்னை எரித்துவிடுவதுபோல் முறைத்த முரளிதரனைப் பார்த்தார். சட்டென்று முடிவெடுத்து.. ‘இங்க ஒரு பிரச்சினை சார்..’ என்றார்.

சேதுமாதவனின் உரத்த சிரிப்பு எதிர்முனையிலிருந்து. இதுக்கும் சிரிப்பாய்யா?  

‘யார் முரளியா? அவன் அங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான் உங்கள கூப்டேன்.’ அடப்பாவி நீதான் அனுப்புறா மாதிரி அனுப்பிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி எங்க இருக்கே எப்படியிருக்கேன்னு கேக்கறியா? எல்லாம் நேரண்டா.. இருங்க எல்லாருக்கும் வைக்கறேன் வேட்டு..

‘உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று இழுத்தார்.

‘நீங்க வீட்ல இல்லேன்னதும் உங்க ப்ராஞ்சுக்கு ஃபோன் பண்ணேன். உங்க சீனியர் மேனேஜர்தான் எடுத்து சார் கேபினுக்குள்ள ரெண்டு மணியிலருந்து சிறைக்கைதி மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்கிறார் சார்னார்.. அதான் உங்கள ரெஸ்க்யூ பண்ணலாம்னு கூப்டேன். அதுவுமில்லாம நீங்க சோமசுந்தரம் சார பாக்க வரேன்னு சொல்லியிருந்தீங்களாமே. அவர் வேற நீங்க எங்க இருக்கீங்கன்னு ரெண்டு தரம் கூப்டுட்டார்.. சரி அதுபோட்டும்.. முரளி பக்கத்துலதான் இருக்கானா?’

‘ஆமா சார்.’

‘அவன் கிட்ட குடுங்க.’

பாபு தன் முன்னால் நின்ற முரளிதரனை நோக்கி தொலைப்பேசியை நீட்டினார்.

‘யார் சார்? யாராயிருந்தாலும் சரி நா இங்க இல்லை.’

டேய், ரொம்ப துள்ளாத. அப்புறம் வருத்தப் படுவே..

‘முரளி, நம்ம எம்.டி. லைன்ல இருக்கார்.’

முரளிதரன் திடுக்கிட்டு நம்பாததுபோல் அவரையே பார்த்தான். அவருடைய கையிலிருந்து வெடுக்கென தொலைப்பேசியைப் பிடுங்கி.. ‘எந்தா சாரே?’ என்றான் எரிச்சலுடன்.

‘எடோ அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க? தான் இப்பத்தன்னே புறப்பட்டு இங்கோட்டு வா....’

முரளிதரன் கோபத்தின் உச்சிக்கே சென்றான். ‘எந்துனா? எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்குது. அத முடிச்சிட்டுதான் வரமுடியும்.’

‘எடோ அத விட தலை போற விஷயம் இங்க நடந்துருக்கு. நீ உங்க ஆளுங்கள அனுப்பிட்டு இங்க உடனே வா.’

முரளிதரன் தன் முன்னே ஒன்றும் தெரியாதவனைப்போல் அமர்ந்திருந்த பாபுவைப் பார்த்தான். மவனே இப்ப தப்பிச்சிட்டே. உன்னை அப்புறம் பாத்துக்கறேன்..

‘எந்தா சாரே அத்தற அர்ஜண்டா?’ என்றான் தொலைப்பேசியில்.

‘நம்ம கல்கத்தா ப்ராஞ்சுல சீஃப் மேனேஜர உங்க யூனியன் ள் அடிச்சிட்டானாம். அவர் இங்க யார்கிட்டயும் கேக்காம போய் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டார். அங்க ஒரே டென்ஷனாயிருக்காம். நீ உடனே ஃபோன் பண்ணி உங்க ஆளுங்க கிட்ட பேசி சரி பண்ண பாரு. திங்கள்கிழமை காலைக்குள்ள சரி பண்ணிரணும். இல்லன்னா புது சேர்மன் ஜாய்ன் பண்ற அன்னைக்கு  பிரச்சினையா போயிரும்.’

முரளிதரன் தன்னுடன் வந்திருந்த தன் சகாக்களைப் பார்த்தான். ‘எல்லோரும் வெளிய போங்க’ என கண்ணால் சாடை செய்தான். என்ன ஏது என்று கேட்காமல் எல்லோரும் வெளியே செல்ல பாபு சுரேஷ் என்ன நடக்கின்றது என புரியாமல் குழப்பத்துடன் முரளிதரனைப் பார்த்தார்.

‘இப்ப வரேன் சார்.’ என்று தொலைப்பேசியில் கூறிவிட்டு வேண்டுமென்றே அதை மேசையின் மேல் வீசியெறிந்தான்.

பிறகு குனிந்து பாபு சுரேஷின் முகத்திற்கு நேரே தன் முகத்தை வைத்துக் கொண்டு பேசினான். ‘இன்னைக்கி தப்பிச்சிட்டே சாரே.. இப்ப போறேன்.. ஆனா அப்புறமா வருவேன். நீங்க அந்த லெட்டர எழுதி வச்சிக்குங்க.. அத உங்கக் கிட்டருந்து வாங்காம விடமாட்டேன்..’

பாபு ஏதோ சொல்ல வாயெடுக்க முரளி அதைக் கண்டுக்கொள்ளாமல் அறையின் கதவை முரட்டுத்தனமாக திறந்துக் கொண்டு வெளியேறினான்.

பாபு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஏழு!

‘மை காட். அஞ்சு மணி நேரம்! வாட் எ வேஸ்ட்.’

அறைக்கதவைத் திறந்துக் கொண்டு வந்த தனக்குக் கீழ் பணிபுரிந்த சீனியர் மேலாளர் கோபால் சர்மாவைப் பார்த்தார். முரளியை வரவைத்தது இவனாயிருக்குமோ.. யாருக்குத் தெரியும்? இவன் இல்லன்னா இன்னொருத்தன். மாட்டிக்காமயா போயிருவானுங்க?

‘சாரி சார். இவனுங்க இப்படி திடீர்னு உள்ள வந்து கலாட்டா பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல. அதான் எம்.டி கூப்டப்போ நடந்தத முழுசும் சொன்னேன் சார். அவர் நான் பாத்துக்கறேன்னார்.’

பாபு சுரேஷ் ஒன்றும் பதில் பேசாமல் தன் லாப்டாப் பையை ஒரு கையிலும் தன்னுடைய கைப்பெட்டியை ஒரு கையிலும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றார். ‘தாங்க்ஸ் ஷர்மா. ஐ வில் ரிமெம்பர் வாட் யூ டிட் டுடே.. நீங்க ஆஃபீசை மூடிக்கிட்டு போங்க. நான் புறப்படறேன்.’

கோபால் ஒதுங்கி நின்று வழிவிட பாபு அவசர அவசரமாக வெளியேறி கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் ஓப்பல் ஸ்ட்ராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

தொடரும்

27.1.06

சூரியன் 14

பாபு சுரேஷ்: இவரும் பொது மேலாளர்தான். வங்கியிலேயே பெரிய கிளையின் மேலாளர். வயது 59. சுருங்கக் கூறினால் சரியான 420

***

பாபு கிளையிலிருந்து வெளியேறியபோது மாலை மணி ஏழு.

சனிக்கிழமைகளில் சாதாரணமாக சரியாக இரண்டு மணிக்கே இறங்கி விடுவது வழக்கம். ஆனால் இன்று அப்படி செய்ய முடியவில்லை..

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. எல்லாம் அந்த தொழிற்சங்கத் தலைவர் முரளிதரனுடைய வேலை.

சென்னையிலிருந்த சகல கிளைகளிலுமுள்ள அவனுடைய தொழிற்சங்க சகாக்களை சரியாக பகல் இரண்டு மணிக்கு வரச்சொல்லி இருக்கிறான் என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது.

பாபு தன்னுடைய மேசையை ஒதுங்க வைத்துவிட்டு லாப்டாப் பையைக் கையில் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற முயன்றபோது கிளைக் கதவுகளைத் திறந்துக் கொண்டு திமுதிமுவென்று அத்துமீறி கிளைக்குள் நுழைந்து கும்பல் அவரை அறையிலிருந்து வெளியேற விடாமல் வாயிலை அடைத்துக் கொண்டு நிற்க..

என்ன காரணம் என்று விளங்காமல் அவன் திகைத்து நின்றார்.

‘என்ன ஜி.எம். சார், இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல இல்ல?’ என்ற முரளிதரனைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் முறைத்தார்.

‘கழிஞ்ச ஆய்ச்ச நிங்கள்ட பியூன் ஒருத்தன் ட்ரெய்ன்ல அடிப்பட்டு மரிச்சில்லே..?’

ஓ! அதான் காரணமா? இப்ப இந்த முட்டாளுங்கக் கிட்டருந்து எப்படி தப்பிக்கறது? டாக்டர (சோமசுந்தரம். வங்கியின் இயக்குனர்களில் மிகவும் சீனியரானவர்) வேற வந்து பாக்கறேன்னு சொல்லிட்டேனே? இப்ப என்ன பண்றது? கோபப்பட்டா காரியம் கெட்டுரும்.. சமாதானமா போறதுதான் ஒரே வழி..

‘எந்தா சாரே.. மறந்துட்டீங்களா?’

அறை முழுவதும் அடைத்துக் கொண்டு நின்றிருந்த ஆட்களை ஒரு நிமிடம் பார்த்தார். அவருடைய கிளையில் பணிபுரிந்த எந்த அதிகாரியும் கூட்டத்தில் இல்லை என்பது புரிந்தது. அவர்கள் அனைவரும் வேறொரு சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது ஒன்று.

இரண்டாவது, பாபுவை முறைத்துக் கொண்டால்  அவருக்கு கீழே தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று அக்கிளையிலிருந்த எல்லோருக்கும் தெரியும் என்பதும் பாபுவுக்கு தெரியும்.

இருப்பினும் அவர்களில் யாரோ ஒருவன்தான் முரளியை தூண்டிவிட்டு அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார். யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் சரி.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடித்து தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கியடிக்கலே என் பேரு பாபு சுரேஷ் இல்ல..

‘என்ன சார், ஒன்னும் பேசாம இருந்தா.. சும்மா போயிருவோம்னு நினைக்காதீங்க.. அந்த பியூன் செத்ததுக்கு நீங்கதான் காரணம். நீங்க சொல்லித்தானே அவர் வேல நேரத்துக்கப்புறம் அங்க போவேண்டி வந்தது? அதனால் அவரோட குடும்பத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு என்ன செய்யப் போறீங்க? சொல்லுங்க சார்.. இன்னைக்கி நீங்க ஒரு பதில் சொல்லித்தான் ஆவணும். அதுவரைக்கும் நீங்க வெளிய போமுடியாது.. எத்தனை நேரமானாலும் சரி..’

பொங்கியெழுந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். ‘இங்க பாருங்க முரளிதரன். மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடாதீங்க. அவன போயி ட்ரெயினுக்கு முன்னால நானா விழச் சொன்னேன்? அது அவன் தலையெழுத்து.. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. பேசாம கலைஞ்சி போயிருங்க.. திங்கக்கிழமை புது சேர்மன் ஜாய்ன் பண்ற நேரத்துல அனாவசியமா பிரச்சினைய கிளப்பாதீங்க. சொல்லிட்டேன்.’

முரளி கோபத்துடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னே வந்து முறைத்தான். ‘கலைஞ்சி போவணுமா? நாங்களா? இல்லன்னா என்ன சார் செய்வீங்க? என்ன பூச்சாண்டி காட்டறீங்களா? அதுக்கொன்னும் பேடிக்கிறவனல்லா ஈ முரளிதரன் நாயர், பறைஞ்சேக்காம்.’

இவர்களிடம் இப்படி பேசினால் சரிவராது போல் தெரிகிறது.. தற்போதைக்கு பணிந்து போவதுபோல் நடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.. கண்கள் சிவக்க தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற முரளிதரனைப் பார்த்து புன்னகைத்தார்.

‘சரி, முரளி. இப்ப நான் என்ன செய்யணும், அதச் சொல்லுங்க.’

முரளிதரனுடைய இதழ்களிலும் ஒரு குரூர புன்னகை மலர்ந்தது. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் பின்னால் நின்ற தோழர்களைப் பார்த்தார்.

‘அப்படி வாங்க சார் வழிக்கு. நீங்க என்ன செய்யணும்னு நா சொல்றன்.. அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா இப்பவே கலைஞ்சி போயிடறோம். இல்லன்னா.. எத்தனை நேரமானாலும் இங்கருந்து போற ஐடியா இல்லை.. என்ன சார், பறஞ்சோட்டே?’

இடைக்கிடையில் மலையாளத்தில் பேசுவது வேறு அவருக்கு எரிச்சலை மூட்டியது. ஊர் விட்டு ஊர் வந்து பொளைக்க வந்த பயல், என்ன ஆட்டம் போடறான்? எல்லாம் அந்த எம்.டி. மாதவனோட குடுக்கற எடம். புது சேர்மன் வந்து சார்ஜ் எடுக்கட்டும்.. வச்சிக்கறேன்.. இன்னைக்கி டாக்டர பாக்கும்போதும் இவனப் பத்தி மறக்காம சொல்லணும். ராஸ்கல், இர்றா, ஒன்ன வச்சிக்கறேன்..

‘என்னா சார்.. என்ன சொல்லி தப்பிச்சிக்கலாம்னு பாக்கறாப்பல இருக்கு?’

‘ஒன்னுமில்ல.. சொல்லுங்க முரளி.’

‘முதல்ல அந்த குடும்பத்துக்கு பேங்கலருந்து காம்பன்சேஷனா குறைஞ்சது ஒரு லட்சம் வாங்கித் தரணும்..’

‘சரி..’ என்கிட்டருந்து கேக்காம விட்டானே.

‘அப்படி பேங்க்லருந்து கிடைக்கலைனா உங்க கையிலருந்து தரணும்..’

வச்சானே ஆப்பு! சரின்னு சொல்லி வைப்போம். இளிச்ச வாயன் கஸ்டமர் எவன் தலையிலயாவது கட்டிரலாம்.

‘சரி’

முரளிதரன் அவரை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தான். ‘எந்தா சாரே பறஞ்சே?’

பாபு ஒரு கள்ள சிரிப்புடன் அவனைப் பார்த்தார். டேய் நீ தடுக்குல பாஞ்சா நா கோலத்துலயே பாய்றவண்டா..

‘சரின்னு சொன்னேன். நீங்க மேல சொல்லுங்க..’

முரளிதரன் அப்போதும் நம்பாமல் தன் சகாக்களைப் பார்த்தான். ‘நீங்க மேல சொல்லுங்க தலைவரே..’ என்பதுபோல் அவர்களில் பெரும்பாலோனோர் தலையசைக்க முரளி மேலே தொடர்ந்தான்.

‘அவருக்கு ஒரு மூத்த மகன் இருக்கான். பதினெட்டு வயசாவறதுக்கு இன்னும் மூனு மாசந்தான் இருக்கு.  பதினெட்டு வயசு ஆனதும் அவனுக்கு பேங்குல ஒரு பியூன் வேலைக் கொடுக்கறதுக்கு நீங்க ஏற்பாடு பண்ணனும்..

இன்னும் மூனு மாசம் இருக்கில்லே.. அதுக்குள்ள என்னென்ன நடக்குமோ யாருக்கு தெரியும். சரின்னு சொல்லி வைப்போம்..

‘சரி’ என்பதுபோல் தலையை ட்டினார். ‘புது சேர்மன் சார்ஜ் எடுத்ததும் நானே பேசி வேண்டியதை செய்யறேன். இன்னும் ஏதாவது இருக்கா? நான் போலாமா?’

முரளி ஏளனத்துடன் சிரித்தான். ‘என்னா சார் இத்தற தெறக்கு? யாரையாச்சும் மணியடிக்கான் போணுமா?’

பாபு அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். ‘இங்க பாருங்க முரளி.. தேவையில்லாம பேச வேணாம். நீங்க என்ன பேச வந்தீங்களோ அத மட்டும் பேசினாப் போறும்.. அனாவசியமா என் கோபத்த கிளறாதீங்க, சொல்லிட்டேன்..’

முரளியின் கேலிச் சிரிப்பு இன்னும் அதிகமானது.. சுற்றிலுமிருந்த தன்னுடைய சகாக்களைப் பார்த்து கண்ணடித்தான். அவர்களுள் ஒருவன் முரளியின் காதில் கிசுகிசுத்தான். ‘தலைவரே எதுக்கு இந்த வீண் பேச்சு.. பேசாம நாம வந்த வேலைய பார்ப்போம்.. கடைசியா நாம போட நினைச்ச குண்ட தூக்கி போடுங்க.. அந்தாளு ஆடிப் போயிருவான், பாருங்க.’

அதுவும் சரிதான் என்பதுபோல் தலையை ஆட்டிய முரளிதரன் தனக்கு முன் அகங்காரத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்த பாபு சுரேஷைப் பார்த்தான். ‘எடா கருங்காலி.. இப்ப நோக்கிக்கோ..’ என்று மனதுக்குள் கறுவினான்.

‘சார் பறஞ்சது சரியா.. அனாவசியமான பேச்செல்லாம் எதுக்கு. கடைசியா சார் இத செஞ்சிட்டா போறும்.. இப்பவே போயிடறோம்..’

பாபு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மாலை நான்கு மணியாகியிருந்தது. இந்த தடிப் பசங்க வந்து ரெண்டு மணி நேரமாயிருச்சா? இந்த கலாட்டாவுல சாப்பிடக்கூட இல்லை.. இனியும் என்னத்த கேக்க போறாங்கன்னு தெரியலையே.. சை.. இன்னைக்கி யார் முகத்துல முளிச்சேன்.. டாக்டர கூப்டு லேட்டாகும்னு சொல்லவும் முடியல.. அந்தாளு என்ன நெனச்சிக்குவாரோ தெரியலையே.. இந்த பிராஞ்சிலருந்து மறுபடியும் ஹெட் ஆபீசஸ்ல போடச் சொல்லி சேர்மன் கிட்ட சொல்ல சொல்லலாம்னு பார்த்தா நடக்காது போலருக்குதே.. இன்னைக்கி பாக்கலேன்னா அப்புறம் ஒரு வாரத்துக்கு பாக்க முடியாதே..

நிமிர்ந்து தன் முன்னால் நின்ற கும்பலைப் பார்த்தார். முரளி நின்றிருந்த கோலமே அவருடைய கோபத்தை அதிகரித்தது. பேங்க்ல வேல செய்யறமாதிரியா இருக்கான்? பொறுக்கிப் பய மாதிரி.. காலர்ல கைக் குட்டைய வச்சிக்கிட்டு சரியான ஃபேக்டரி ஒர்க்கர் மாதிரி.. ‘சொல்லுங்க முரளி. என்ன கேக்கப் போறீங்க? I am listening.’ என்றார் கோபத்தை அடக்கிக் கொண்டு..

முரளி மீண்டும் கேலியாக சிரித்தான். ‘ஒன்னுமில்ல சாரே.. நீங்க அவங்க ஃபேமிலிய வீட்ல போயி பாக்கணும்.  அவரோட வொய்ஃப் கிட்ட உங்க ஹஸ்பெண்ட ஆவடி ஆர்மி கேண்டீன்லருந்து வெளிநாட்டு சரக்கு வாங்க அனுப்பிச்சது நாந்தான். அதனால அவரோட சாவுக்கு நாந்தான் காரணம்னு சொல்லி ஒரு மன்னிப்பு கடிதத்த உங்க கைப்பட எழுதி கொடுக்கணும். அவ்வளவுதான்.’

பாபு தன் காதுகளை நம்ப முடியாமல் முரளியையும் அவனுக்குப் பின்னால் கேலி புன்னகையுடன் நின்றிருந்த கும்பலையும் பார்த்தார்.

என்ன தைரியம் இவனுக்கு? என்ன நினைச்சிக்கிட்டிருக்கான் மனசுல? அப்படியொரு கடிதம் எழுதிக் குடுக்கறதுக்கு நான் என்ன முட்டாளா? அத வச்சிக்கிட்டே இந்த பயலுங்க ப்ளாக் மெய்ல் பண்ண மாட்டான்கன்னு என்ன நிச்சயம்? அதுவும் புது சேர்மன்கிட்ட அந்த லெட்டர காட்னா என்ன ஆவறது? H.O.வுக்கு போறத மறக்கறது மட்டுமில்லாம ஒரு வேளை பணி இடைநீக்கம் செய்யவும் வாய்ப்பிருக்கிறதே.. இதற்கு பின்னால் யாரோ இருக்க வேண்டும்.. ஒருவேளை அந்த ராட்சசி வந்தனாவா இருக்குமோ.. இருக்கும்..

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்கலானார் பாபு..

தொடரும்

26.1.06

சூரியன் 13

வீட்டுக்குள் நுழைந்ததும் மாணிக்கவேல் தன் தந்தையை நேரே அவருடைய படுக்கையறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தார்.

‘கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருங்கப்பா. நான் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக்கிட்டு வரேன். அது போதுமா, இல்ல ரசம் சோறு சாப்டுறீங்களா?’

ஆறுமுகச்சாமி தன் மகனைப் பார்த்தார். ‘வேணாம்ப்பா.. ஒன்னும் வேணாம். வயிற ஒருவேளை காயப் போட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். நீ போய் சாப்ட்டு படு..’

வேலுவுக்கு தந்தையின் தயக்கத்திற்குப் பின்னால் இருந்த வேதனை புரிந்தது.. எங்கே இதுக்கும் ராணி ஏதாவது தகராறு செய்வாளோ என்று அப்பா நினைக்கிறாரோ என்று நினைத்தார். ‘இல்லப்பா.. நீங்க டயாபெடிக் வேற.  வெறும் வயித்தோட படுத்தா நடுராத்திரியில ஷ¤கர் லெவல் குறைஞ்சாலும் குறைஞ்சிரும். ராத்திரில மட்டும் சாப்டாம படுக்காதீங்கன்னு டாக்டர் சொன்னத மறந்துட்டீங்களா? இருங்க, ஹார்லிக்ஸ் கொண்டு வரேன். ராணிய பத்தி கவலைப் படாதீங்க. அவ என்னைக்கிதான் சலிச்சுக்காம இருந்திருக்கா?’

வேல் நேரே சமையலறைக்குச் சென்று சுவர் அலமாரியிலிருந்த ஹார்லிக்சை எடுத்துக் கொண்டு மின்சார கூஜாவில் குடிநீர் நிரப்பி சுவிட்சை ஆன் செய்துவிட்டு காத்திருந்தார். அப்பாவுக்கு இரவில் ஃப்ளாஸ்க் நிறைய சுடுநீர் நிரப்பி வைத்து விட்டுத்தான் அவர் உறங்க செல்வார். எந்த வேலையிருந்தாலும் அதை மட்டும் மறக்கவே மாட்டார்.

உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்த ராணி தன் கணவனை எரிச்சலுடன் பார்த்தாள். ‘ஏங்க, வந்ததும் வராததுமா உங்கப்பாவுக்கு வேண்டியத மட்டும் பார்த்தா போறுமா? நாங்கல்லாம் என்னத்த சாப்பிடறது? வர்ற வழியிலேயே சாப்டுட்டு வந்திருக்கலாமில்ல?  கார எடுத்துக்கிட்டு ஸ்டேஷனுக்கு அந்த பக்கம் இருக்கற ஓட்டல்ல ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க. பசிய வயித்த கிள்ளுது.’

வேல் திரும்பிப் பார்க்காமல் பதிலளித்தார். ‘இரு.. அப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்துட்டு போறேன். அவர் குடிச்சிட்டு படுக்கட்டும். பாவம், அவருக்கு இன்னும் மூச்சு வாங்கிக்கிட்டே இருக்கு..’

ராணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் கணவரை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள். ‘ஏங்க, ஒரு ராத்திரி வெறு வயித்தோட படுத்தா செத்தா போயிடுவார்? இங்க பிள்ளைங்க பசியால துடிக்கிது.. சாவப் போற ஆளுக்குதான் இப்ப ரொம்ப முக்கியம்.’

எங்கிருந்து கோபம் வந்ததோ..  மூர்க்கத்தனமான கோபத்துடன் சரேலென திரும்பி தன் மனைவியை நெருங்கினார். ‘ஏண்டி, என்ன சொன்னே? சாகப் போற ஆளா? ஏன் நீ சாகவே மாட்டியா? என்ன பேச்சுடி பேசறே? ஒரு கிறீஸ்துவ பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அண்ணிங்க ரெண்டு பேர மாதிரி பஜாரியா இருக்க மாட்டேன்னுதானடி உன்ன தேடிப் பிடிச்சி கட்டிக்கிட்டேன்... கிறீஸ்துவ குடும்பங்கள்ல வளர்ற பொண்ணுங்க பொறுமையா, அன்பா இருப்பாங்கன்னு நினைச்சேனே என்ன செறுப்பால அடிக்கணும்.. இரு, வந்து பேசிக்கிறேன்.’

இருவருடைய வாக்குவாதத்தையும் தன் அறையிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த ஆறுமுகச்சாமி வேதனையுடன் கதவை அடைத்து தாளிட்டுக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தார்.

வேல் பலமுறை கதவைத் தட்டியும் திறக்காமல் வெறுமனே படுத்திருந்தார்.

ஒரு கையில் ஹார்லிக்சும் இன்னொரு கையில் ஃப்ளாஸ்க்குமாக நின்றிருந்த வேல் தன் முதுகை யாரோ ஆதரவுடன் தொடுவதை உணர்ந்து திரும்பினார்.

கமலி!

‘இங்க என் கிட்ட குடுங்கப்பா. நான் தாத்தாவுக்கு குடுத்துக்கறேன். நீங்க போய் துணி மாத்திட்டு குளிங்க போங்க.’

வேல் தன் மகளின் தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்தார். தன்னிடமிருந்தவற்றை அவளிடம் கொடுத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

‘ஏங்க.. எங்க போறீங்க? நான் சொன்னது என்னாச்சி? பசிக்கிதுங்க..’ சமையலறையிலிருந்தே கூவிய தன் மனைவியை வெறுப்புடன் பார்த்தார்.

‘ஏம்மா அப்பாவ தொந்தரவு பண்றே? உனக்கென்ன வேணும், சொல்லு. நான் பைக்கை எடுத்துக்கிட்டு போய் வாங்கிக்கிட்டு வரேன்.’ என்று தன் தாயைப் பார்த்து சொன்ன சந்தோஷ் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதைப் பொருட்படுத்தாமல் ‘நீங்க போய் குளிங்கப்பா. நான் போய்ட்டு வரேன். உங்களுக்கு என்ன வேணும்ப்பா?’

வேல் ஆயாசத்துடன் தன் மகனைப் பார்த்தார். ‘உங்க ரெண்டு பேருக்கும் அப்பாவுக்காகவுந்தாண்டா உங்கம்மாவ பொறுத்துக்கறேன்.’ என்று தனக்குள் கூறிக்கொண்டார். ‘எனக்கு ஒன்னும் வேணாம் சந்தோஷ். உங்கம்மாதான் பசிக்கிதுங்கறா.. அவளுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் வேண்டியத வாங்கிட்டு வா. அப்பா பர்ஸ் டேபிள் மேலதான் இருக்கு. வேணுங்கறத எடுத்துக்கிட்டு போ..’

உடை மாற்றி குளியலறைக்குள் நுழைந்து ஷவரைத் திறந்துக் கொண்டு குளிர்ந்த நீரினடியில் நின்றார். அவரையுமறியாமல் கண்கள் கலங்கி குளிநீரோடு கலந்து வழிந்தோடியது..

அவருடைய அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு அவர் பார்த்ததே இல்லை..

‘புருஷன், பொஞ்சாதி, மூனு பசங்க இருக்கறீங்கன்னுதான் பேரு.. ஒரு சத்தம், மூச்சையே காணோம்.. ஏம்மா, நீங்க  குடும்பந்தான் நடத்தறீங்களா? எங்கூட்ல என்னடான்னா எப்ப பாத்தாலும் குடிச்சுப்புட்டு வந்து இந்த ஆம்பளைங்க பண்ற கூத்தும் எங்கூட்டு பசங்க அடிக்கற கொம்மாளமும்... உங்கூட்டு ஆம்பள இப்பிடின்னா உங்கூட்டு புள்ளங்களும் கம்முன்னு இருக்குதுங்களேடிம்மா.. எதுனாங்காச்சியும் சொக்குப் பொடி கிடி போட்டு வச்சிருக்கியா? அப்படி எதுனாச்சும் இருந்தா எங்களுக்கும் குடேன்..’ என்று அடுத்த வீட்டு பாட்டி புலம்புவதை அவர் பலமுறைக் கேட்டிருக்கிறார்..

அப்படி வளர்ந்தவர்கள் அவரும் அவருடைய சகோதரர்களும். அப்பா ஒருமுறை கூட அவரையோ அல்லது ‘சரியான வாலு பய டெய்லர் உன் கடைசி புள்ள. மூத்தது நாலும் என்னா ஜைலண்டா இருக்குது? அதெல்லாத்தையும் இது தூக்கி சாப்ட்றும் போலக்குதே..’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சதா குற்றம் சொல்லும் அவனுடைய கடைக்குட்டி தம்பி பாபுவையும் கூட அப்பா அடித்ததே இல்லை.. அம்மாவோ அதற்கு மேல். பார்வையால் கூட அவர்களை அதட்டியதில்லை..

அம்மா யாரையும் அதிர்ந்து பேசி அவர் பார்த்ததே இல்லை. அப்பாவுக்காவது எப்பொழுதாவது கோபம் வரும். அம்மா எப்போதுமே சிரித்த முகத்துடன் இருந்துதான் பார்த்திருக்கிறார்..

அப்பா சில நாட்களில், ‘கடையில காசே வரலடி.. நீயுந்தான் பாத்தியே.. என்னை என்ன பண்ண சொல்றே?’ என்று வெறும் கையுடன் வந்து நின்றபோதும் அம்மா எதையாவது செய்து, ‘நீங்க சாப்டு படுங்கடா.. அம்மா அப்புறம் சாப்டுக்கறேன்.’ என்று பானையிலிருந்ததை வழித்து அவருக்கும் அவருடைய தம்பிகள் இருவருக்கும் கொடுத்துவிட்டு எழுந்து போய்விடுவாள். அவருக்கு மூத்தவர்கள் இருவரும் போர்டிங் பள்ளியில் படித்ததால் அவர்கள் வறுமையிலிருந்து தப்பித்தார்கள்.

அப்போதெல்லாம் அவருக்கு அம்மாவும் அப்பாவும் பட்டினியாய்தான் இருந்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கவில்லை..

பட்டினியாய் கிடந்தாலும் அம்மாவின் முகத்தில் சோர்வையோ, அலுப்பையோ, கோபத்தையோ அவர் கண்டதே இல்லை.. அதேபோல், அப்பா எப்போதாவது கோபப்பட்டு சப்தம் போட்டாலும் அம்மா ஒரு சிறு புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவாள்.

அவர்கள் இருந்தது பத்து பதினைந்து குடித்தனங்கள் இருந்த ஒரு பெரிய காம்பவுண்ட்..

ஒவ்வொரு வீட்டிலுமிருந்து ஆக்ரோஷமாக சண்டை இடும் சப்தம் கேட்கும். அம்மாவும் அப்பாவும் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார்.

அப்படி குடும்பம் நடத்திய அம்மாவும் அப்பாவும் பிள்ளைகள் வளர்ந்தப் பிறகு வீட்டுக்கு வந்த மருமகள்களிடம் அனுபவித்த வேதனைகள்...

இப்போதும் அப்பா தன் மனைவியிடம் படும் தொல்லைகள், அவச் சொற்கள்...

கண்களில் குளிர்ந்த நீர் பட இரண்டும் ஜிவ் என்று எரிந்தன. கண்களை ஷவரை நோக்கி திருப்பினார். ஊசி போல் குத்திய நீர் அவருடைய மன வேதனையை சற்றே தணித்தது.

ஷவரை  நிறுத்துவிட்டு டவலை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தார். படுக்கையின் மேல் கிடந்த லுங்கியை எடுத்து உடுத்திக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்தார்..

சந்தோஷ் கேட்டைத் திறந்துக் கொண்டு நுழையும் சப்தம் கேட்டும் அறையிலிருந்து வெளியே செல்லாமல் அமர்ந்திருந்தார்.

இனியும் வெளியே சென்று தன் மனைவியை பார்க்க பிடிக்காமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தார்..

தலைக்குமேலிருந்த மின் விசிறியின் ஓசையைத் தவிர அறை நிசப்தமாயிருந்தது..

கண்களை மூடிக்கொண்டு உறக்கம் வராமல் அப்படியே படுத்திருந்தார்..

அப்பா..

உள்ளத்தால் எத்தனை மிருதுவானவர்! அவருக்கா இப்படி?

அம்மா போனதுமே.. மனம் ஒடிந்து போய் ‘நானும் போயிர்றேண்டா.. நான் போயிர்றேண்டா..’ என்று அவர் அரற்றியது இப்போதும் கண் முன்னே நிற்க கண்களை இறுக மூடிக்கொண்டு அந்த காட்சியை அழிக்க முயன்று தோற்றுப் போனார்...

எப்போது என்றே தெரியாமல் அப்படியே உறங்கிப் போனார் விடிந்ததும் ஏற்படப் போகும் பெறும் இழப்பை  உணராதவராய்..

தொடரும்..
25.1.06

சூரியன் 12

மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் சத்யம் சினிமா வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலைக் காட்சி முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த கூட்டத்தோடு கூட்டமாக சிக்கித் தத்தளித்து வெளியே வந்த மாணிக்கவேல் (வேல் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பர். ஆகவே இனிமேல் நமக்கும் அவர் 'வேல்' தான்) தன்னுடன் வந்த எழுபது வயதைக் கடந்த தன் தந்தை, மனைவி மற்றும் மகன், மகள் என்ற தன் குடும்பத்தார் வரட்டும் என்று பாதையை விட்டுத் தள்ளி காத்திருந்தார்.

ஒவ்வொருவராய் கசங்கி, கந்தலாகி வெளியே வருவதற்கே கால் மணி நேரம் பிடித்தது. மேல் மூச்சு வாங்க தன் அருகில் வந்து நின்ற தன் தந்தையைப் பார்த்து, ‘நான் அப்பவே சொன்னேன்ல.. பேசாம நீங்க வீட்லயே இருந்திருக்கலாம். நீங்கதான் கேக்கலே.. பாருங்க, எப்படி இளைக்கிது? சோடா எதுவும் குடிக்கீறீங்களாப்பா.. நாம கார தேடிப் பிடிச்சி எடுத்துக்கிட்டு வெளிய வர இன்னும் அரைமணி நேரமாவுது ஆவும் போல.. என்ன சொல்றீங்கப்பா?’ என்றார்.

மூச்சு விடாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேலின் தந்தை ஆறுமுகச்சாமி பதிலளிக்க முடியாமல் திணறியவாறு அவர் சொன்ன யோசனைக்கு சரி என்பதுபோல் தலையை ஆட்டினார்.

அப்போதுதான் வெளியே வந்த தன் மனைவி ராணி, மகன் சந்தோஷம், மகள் கமலியை வேல் பார்த்தார். எல்லோருமே கூட்டத்தில் சிக்கித் தவித்த களைப்புடன் காணப்பட்டனர்.

‘What a stupid management Dad? Really Stupid. They have a surch a large number of theatres in the same complex and still there is only one way to exit. How do they expect the crowd to get out? I am going to write a letter to that stupid theatre Manager. Idiot. They say it is the best theatre complex in the City. It is a real chaos.’

ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளியவாறு தன் தந்தையுடன் சென்ற இளைஞனைப் பார்த்து ‘Extactly’ என்றான் பதினெட்டு வயது நிரம்பிய சந்தோஷம்.

வேலின் மனைவி ‘டேய் சும்மா இர்றா, நீ வேற. அப்பா ஏதாச்சும் சொல்ல போறார்.’ என்றவாறே மூச்சு விட முடியாமல் தடுமாறும் தன் மாமனாரைப் பார்த்துவிட்டு கேலியுடன் தன் மகளைப் பார்த்து ‘பாத்தியா அவஸ்தை படறத’ என்பதுபோல் கண்ணால் சாடைக் காட்டினாள்.

‘சும்மா இருங்கம்மா. பாவம் தாத்தா.’ என்றாள் கமலி எரிச்சலுடன். உடனே சென்று தன் தாத்தாவின் தோள்களில் பாசத்துடன் கையிட்டாள். ‘என்ன தாத்தா, முடியலையா?’

வேல் தன் மகளைப் பார்த்தார். அம்மாவுக்கும் பொண்ணுக்கும்தான் எத்தன வித்தியாசம்? இவள மாதிரியே இவ அம்மாவும் இருந்துட்டா குடும்பத்துல எத்தன சந்தோஷம் இருக்கும்? எவ்வளவோ எதிர்பார்ப்புகளோட இவள கல்யாணம் பண்ணேன்..

தன் மகளைப் பார்த்து, ‘ஒன்னுமில்ல கமலி. தாத்தாக்கு ஒரு சோடா வேணுமாம்.’ என்றார்.

ராணி சிடுசிடுத்தாள், ‘இந்த கூட்டத்துல எங்க போயி சோடாவ வாங்குறது? சொல்றத கேட்டுக்கிட்டு வீட்லயே இயேசுவேன்னு இருந்திருக்கலாமில்லே.. நீங்க போயி முதல்ல கார எடுங்க.. போற வழியில வாங்கிக்கலாம்.. குளிர்ந்த காத்து மூஞ்சில பட்டா எல்லாம் சரியாயிரும்.’

சந்தோஷம் பரிதாபத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ‘காசு தாங்கப்பா. நான் தாத்தாவ கூட்டிக்கிட்டு போய் சோடா வாங்கி குடுத்துட்டு அந்த exit gateல வந்து நிக்கறேன். நீங்க போயி கார எடுத்துக்கிட்டு வெளியில வாங்க. நானும் தாத்தாவும் அங்க வந்து ஏறிக்கிறோம்.’

அதுவும் நல்ல யோசனைதான் என்று தோன்றவே தன் மனைவி தடுத்தும் கேளாமல் வேல் தன் மகனுடன் தன் தந்தையை அனுப்பிவிட்டு அவர்கள் இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும் வரைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

‘என்னத்த பாத்துக்கிட்டு நிக்கறீங்க? உங்கப்பாவ யாரும் கொத்திக்கிட்டு போயிரமாட்டாங்க. போய் கார எடுங்க.. மணி இப்பவே பத்தரையாச்சி. இந்த சின்னப் பசங்க படத்த பாக்கறதுக்கு உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வரணுமாக்கும்? நாம மட்டும் வந்திருந்தா போற வழியிலயே ராத்திர பலார வேலையையும் முடிச்சிக்கிட்டு போயிருக்கலாம். பொம்பள சொன்னா கேக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படி அவஸ்தை படவேண்டியதுதான்.’
பதினைந்து வயது மகள் கமலியின் கையைப் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்தவாறே முன்னால் நடந்துச் சென்ற தன் மனைவியை பின் தொடர்ந்து தன்னுடைய பழைய மாருதி 800ஐ நிறுத்தி வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்தார் வேல்.

‘கிங்காங் அந்த டயனோசர்களோட போட்ட சண்டை சூப்பரா இருந்திச்சில்லப்பா.’ என்றாள் கமலி..

‘அதென்ன சண்டை கமலி.. உங்கம்மா வீட்ல வந்ததும் போடப் போறா பாரு அதவிட சூப்பர் சண்டை..’ என்று குனிந்து கிசுகிசுக்கும் குரலில் அவளிடம் வேல் கூற ‘களுக்’ என்று சிரித்தாள் கமலி.

‘என்னத்த அப்பாவும் மகளும் குசுகுசுன்னு பேசிக்கிட்டு. சீக்கிரம் போய் கார எடுங்கங்க. சே.. அந்த பையன் சொன்னா மாதிரிதான் இருக்கு இந்த தியேட்டரும்.. இப்படி கார்ங்கள கன்னாபின்னான்னு நிறுத்தி வச்சிருக்கானுங்களே இதுல நாம எப்படி நம்ம கார்கிட்ட போயி.. எப்ப எடுத்து.. பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்ப சினிமா பாத்த சந்தோஷமே சுத்தமா போயிருச்சி..’

கமலிக்கு அவளுடைய அம்மாவின் சுபாவம் தெரிந்ததுதான். இருந்தாலும் அம்மா சொன்னது சரிதான் போலருக்குதே என்று தன் கண் முன்னே நூற்றுக் கணக்கில் நின்றுக் கொண்டிருந்த கார்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சாதா சைக்கிள்கள் என.. பார்க்கவே மலைப்பாயிருந்தது.. அவள் இத்தனைப் பெரிய தியேட்டருக்கு வருவது இதுதான் முதல் தடவை..
‘என்னப்பா பண்ணப் போறீங்க?’ என்றாள் தன் தந்தையைப் பார்த்து..
வேல் தன் மகளைத் திரும்பிப் பார்த்தார். ஐந்தடி இரண்டங்குலம் இருந்த அவருக்கு சம உயரத்தில் இருந்தாள் பதினைந்தே வயது நிரம்பிய மகள் கமலி. மகன் சந்தோஷம் அவனை விட அரையடிக்கும் கூடுதலாகவே உயரம்!
‘அதெல்லாம் இல்ல கமலி. பாக்கறதுக்குத்தான் அப்படி தெரியுது. நம்ம கார் அதோ இருக்கு பார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல போன ஷோவுக்கு வந்த காரெல்லாம் போயிரும். நாம நம்ம கார்ல போய் உக்கார்றதுக்குள்ள ஒவ்வொன்னா போயிரும் பார். உங்கம்மா எதுக்குத்தான் டென்ஷன் ஆவாம இருந்திருக்கா?’

அவர் கூறியதுபோலவே அவர்கள் மூவரும் அவர்களுடைய வாகனத்தை சென்றடைவதற்குள் ஒவ்வொரு வாகனமாக நகர ஆரம்பிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களும் எவ்வித சிரமுமின்றி கையிலிருந்த சீட்டை வாசலில் கொடுத்துவிட்டு சாலையை அடைந்தனர். வாசலில் இருந்து பத்தடி தள்ளி நின்றிருந்த தன் மகனையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வேகமெடுத்து அண்ணா சாலை போக்குவரத்துடன் கலந்தவுடன் Dashboardல் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 11.00ஐ கடந்திருந்தது.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தைக் கடந்ததும் போக்குவரத்து குறைந்துவிடவே வாகனத்தின் வேகத்தை அதிகரித்தார். அங்கிருந்து தாம்பரத்தை அடைய சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் ஆகாது..

முன் இருக்கையில் தனக்கருகில் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்த்தார். ‘இப்ப எப்படி இருக்குப்பா?’

‘பரவாயில்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தவரைப் பார்க்க பாவமாயிருந்தது.

அப்பா!

அந்த வார்த்தைக்கு முழுமை தந்தவர் அப்பா. வேலுவுடன் கூடப் பிறந்தவர்கள் நால்வர். எல்லோரும் ஆண் பிள்ளைகள். வேல் நடு..

அப்பா ஒரு தையற்காரர்..

அவருக்கு இப்போதும் நன்றாய் நினைவிருக்கிறது..

அவர்கள் குடியிருந்த வீட்டு வாசலிலேயே இருந்த ஒரு சிறிய கடையும், அதனுள் ஒற்றைத் தையல் இயந்திரத்துடன் அப்பா எப்போதும் போராடிக் கொண்டிருப்பதையும்.. அம்மா தான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதெல்லாம் அப்பாவுடன் அமர்ந்துக் கொண்டு சட்டை, டவுசரில் காஜா, பட்டனும் ஜாக்கெட்டில் ஊக்கு என கைவேலைகளில் மும்முரமாய் இருப்பதையும்... பார்த்திருக்கிறார்...

தீபாவளி, கிறீஸ்துமஸ்,ரம்ஜான் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் இரவு, பகல் என பாராமல் அம்மாவும் அப்பாவும் கடையிலேயே இருந்துவிடுவார்கள்..

காலையில் செய்து வைத்திருந்த பலகாரம், சாப்பாடுதான் இரவிலும்.. ஆறி அவலாய் போயிருந்தவற்றை சாப்பிடும் போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் கையொடிய வேலை செய்வதை நினைத்துக் கொண்டு சப்தம் போடாமல் அவனும் அவனுடைய இரண்டு தம்பிகளும் சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொள்வார்கள்.

‘ஏங்க எங்க போய்கிட்டேயிருக்கீங்க? வண்டி ஓட்டும்போது எங்க இருக்கு உங்க கவனமெல்லாம்? தாம்பரம் லெவல் க்ராசிங் கேட் திறந்திருக்கிறதே அபூர்வம்.. நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருக்கீங்க? இப்ப, இப்படியே போய் ரவுண்டடிச்சிக்கிட்டுத்தான் வரணும். சீக்கிரம்.. கேட்ட மூடித் தொலைச்சிரப் போரான். நல்ல ஆளுதான் நீங்க.. ஸ்டீரிங்க புடிச்சது கூட நினைவில்லாம அப்படி என்னத்த தான் நினைப்பீங்களோ..’

சந்தோஷமும் கமலியும் நடுவிலிருந்த ராணியைப் பார்த்து முறைத்தனர்..
‘சும்மா இரும்மா.. எப்ப பாத்தாலும் எதையாச்சும் சொல்லிக்கிட்டு.. இப்ப என்ன? இன்னும் பத்தடி போன யூ டர்ன் இருக்குது.. அதுக்கு போயி.. நீ இந்த ராத்திரியில் வண்டிய ஓட்டி பாரு தெரியும்..’ என்ற மகளைப் எரிச்சலுடன் பார்த்தாள் கமலி. ‘ஏய், என்ன வாய் ரொம்ப நீளுது? இளுத்து வச்சி தச்சிருவேன்.. வாயாடி.. அப்பாவ ஒண்ணு சொல்லிரக் கூடாதே.. உடனே வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திருவியே..’

வேல் ஆயாசத்துடன் ரியர் வியூ கண்ணாடி வழியாக பின் இருக்கையிலிருந்த மூவரையும் பார்த்தார். ராணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தார். அவரையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.
சற்று முன்னாலிருந்த திரும்பு வளைவை நெருங்கியதும் எச்சரிக்கையுடன் எதிரே அசுர வேகத்தில் வந்த பேருந்து கடந்து செல்லும் வரை காத்திருந்து வண்டியை திருப்பினார்.

24.1.06

சூரியன் 11

சில்லென்ற மழைச் சாரல் முகத்தில் அடிப்பதை உணர்ந்த வந்தனா சிலிர்ப்புடன் தன்னுடைய நினைவுகளிலிருந்து திரும்பினாள்..

மழைச்சாரல் முகத்தில் விழுவதும் சுகமாய்த்தான் இருந்தது. கடந்த கால நினைவுகள் அவளுடைய மனதை மேலும் சோர்வடையச் செய்தாலும் முகத்தில் பட்ட காற்றும் சாரலும் ஒருவித இன்பத்தை அளிக்க அங்கேயே சிறிது நேரம் நின்று அந்த இன்பத்தை அனுபவித்தாள்.

மழைச்சாரல் சற்று வலுக்கவே ஜன்னலை மூடிவிட்டு குளியலறைக்குள் சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருந்தாள்.

உடலும் மனமும் சோர்ந்திருந்த வேளைகளில் இழந்திருந்த மனவலிமையை மீண்டும் பெற ஆசைதீர குளிப்பது அவளுடைய வழக்கம். இன்றும் நேரம் போவதே தெரியாமல் பூவாய் கொட்டிய வெதுவெதுப்பான நீரினடியில் நின்றாள்.

குளித்து முடித்து படுக்கையறைக்கு திரும்பிய வந்தனாவின் பார்வை மேசை மேலிருந்த கடிகாரத்தில் விழ அதிர்ந்து போனாள். மணி அதிகாலை இரண்டு என்றது. ‘அடேயப்பா.. இவ்வளவு நேரமா குளிச்சிருக்கேன்? டாங்குல தண்ணி தீந்திருச்சின்னு காலைல செக்கரட்டரி வாட்ச்மேன் கிட்ட சத்தம் போடாம இருக்கணும்.’

சென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் பஞ்சம் யாராலும் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை. அது பணக்காரன், ஏழை என்று பாகுபாடில்லாமல் எல்லா குடியிருப்புகளையும் பாதித்தது. ஒரு நடுத்தர குடியிருப்பில் மாத வாடகையாய் வசூலிக்கப்படும் தொகையை அவள் பராமரிப்புக்கு மட்டுமே கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதென்னவோ ரேஷனில்தான். தனியாளாய் இருந்ததால் அவளை அது அத்தனை பாதிக்கவில்லை.

பூத்துவாலையால் தவலையைத் துவட்டியவாறே  அறையின் ஒரு மூலையிலிருந்த டிரஸ்சிங் மேசையின் முன் அமர்ந்து எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள்.

அடர்த்தியாய் நீண்டு வளர்ந்து இடுப்பிற்கும் கீழே தொங்கிய தலை முடி அவளுடைய தாயின் சீதனம். அவளுடைய பொன் நிற மேனி அப்பாவுடையது.. குட்டையென்று சொல்ல முடியாத உயரம்.. தீர்க்கமான ஆனால் அழகான அடர்த்தியான புருவங்களுக்கு கீழ் அழகான கண்கள், வளைவில்லாத நாசி.. ‘உங்களுக்கு வெள்ளை ஒற்றைக் கல் மூக்குத்தி சூப்பரா இருக்கு மேடம்.’  அழகான செந்நிற குவிந்த உதடுகள்.. பச்சரிசியாய் ‘எப்பவும் நீங்க சிரிச்சிக்கிட்டே இருங்க மேடம்.’ என்று சொல்லத் தூண்டும் ஒரே சீரான பற்கள்.. ‘56 வயசா உங்களுக்கா? என்ன மேடம் விளையாடறீங்களா? எல்லாரும் வயச குறைச்சி சொல்லித்தான் பார்த்திருக்கோம்.. நீங்க என்னடான்னா?’ என்று பார்ப்போர் முகஸ்துதிக்கோ.. இல்லையோ.. சொல்லத் தூண்டும் வாளிப்பான உடல்கட்டு..

‘என்ன இருந்து என்ன பிரயோசனம் அக்கா? ஒரு ஆம்பிளைய வளைச்சிப் போட தெரியாம.. நா மட்டும் உங்கள மாதிரி இருந்தா ஒருத்தருக்கு ஒம்போது பேர வளைச்சிப் போட்டிருப்பேன்..’ வந்தனாவைக் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் வாயடிக்கும் தன் குட்டித் தங்கையின் வார்த்தைகள் நினைவில் வர அவளையுமறியாமல் அவளுடைய உதடுகளில் தவழ்ந்தது ஒரு அழகிய புன்னகை..

‘அவ சொன்னது சரிதானோ? என்னால மோகனை வளைச்சித்தான் போட முடியலை..’

மோகனும் அவளும் சென்னை சட்டக் கல்லூரியின் மாலை வகுப்புகளில்தான் முதன் முதலில் சந்தித்தார்கள். ஆசிரியர், மாணவி என்ற உறவில்..

மோகன் அவளைவிட ஐந்து வயதுதான் பெரியவன். எம்.எல் முடித்துவிட்டு அப்போதுதான் சட்டக் கல்லூரியில் இளநிலை ஆசிரியராக சேர்ந்திருந்தான். இருப்பினும் அவள் பார்த்த எல்லா ஆசிரியர்களையும் விட, ஏன் சில விரிவுரையாளர்கள¨யும் விட, அவனுடைய பயிற்றுவிக்கும் முறையில் ஒரு தனித்தன்மை இருந்தது. அவள் மட்டுமல்ல அவளுடைய சக மாணவ, மாணவிகளும் அவனிடம் மயங்கித்தான் போயிருந்தார்கள்.

வந்தனாவின் அபிரிதமான அழகும், புத்திக் கூர்மையும் எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற அவளுடைய வெறித்தனமான குணமும் அவனையும் கவர்ந்தது.. சில நேரங்களில் அவளுடைய சாதுரியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறவும் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் ‘சரியான அதிகப்பிரசங்கியா இருக்காளே’ என்று தோன்றினாலும் அன்று இரவே கல்லூரி நூலகத்தில் அமர்ந்து தேடிப் பிடித்து படித்துவிட்டு அடுத்த நாள் வகுப்பில் அவளுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பான்.

வந்தனாவுக்கு அவனிடமிருந்த, ஒரு ஆசிரியருக்கு தேவையான அந்த அக்கறை, பொறுப்பு, பொறுமை எல்லாமே பிடித்திருந்தது. அடுத்து ஐந்தாறு மாதங்களில் தன்னையுமறியாமல் தன் மனதை அவனிடம் பறிகொடுத்து நின்றாள்.

அலுவலகத்தில் சக, மற்றும் உயரதிகாரிகளிடத்தில் நாள்தோறும் அவமானப்பட்டு  நிற்கும் போதெல்லாம் தன்னிடம் பயிலும் பல மாணவிகளுள் ஒருத்திதானே என்று நினைக்காமல் அவளை தனக்கு சரிசமமாக பாவித்த அவனுடைய பெருந்தன்மை அவளை மிகவும் ஈர்த்தது.

அலுவலக வேலை நேரம் போக மாலையில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர வங்கித் தலைவரிடம் நேரடியாக எழுத்து மூலமாக அனுமதி பெற்றிருந்தும் அவளைவிட இரண்டு வயதே மூத்திருந்த அவளுடைய மேலதிகாரி வேண்டுமென்றே அவளுடைய படிப்புக்கு உலை வைக்கும் நோக்கத்தில் பல நாட்களில் மாலை ஐந்து மணி வரை காத்திருந்து மற்றவர் செய்ய வேண்டிய அலுவலையும் அவள் தலைமேல் சுமத்துவது வழக்கம். அப்போதெல்லாம் வகுப்பில் கலந்துக் கொள்ள முடியாமல் போனதுண்டு.

இருப்பினும் அவள் இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட பாடங்களைக் குறித்து வகுப்பு நேரம் முடிந்தவுடன், ‘சார் இஃப் யூ டோண்ட் மைண்ட்..’ என்று தயக்கத்துடன் மோகனை  நெருங்குவாள். அவனும் வேலைப் பளுவைப் பாராமல் பொறுமையாய் அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பான்.

அவ்வாறு அவர்கள் தனித்திருந்த சமயங்களிலெல்லாம் அவளுடைய மனது அடித்துக் கொள்ளும். அவனுடைய நெருக்கம் கேட்க வந்ததை கேட்க விடாது அலைக்கழிக்கும். உதடுகள் கட்டுப்பாடின்றி நடுங்கும், வார்த்தை தடுமாறும்.. கஷ்டப்பட்டு தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வாள்.

தன்னைப் போலவே அவனும் தன்னைப் பற்றி நினைக்கிறானா என்பது தெரியாமல் நாள்தோறும் படுக்கச் செல்லும் நேரங்களில் தவிப்பாள். இப்படி பல ராத்திரிகளில் தன்னுடைய உணர்வுகளை யாரிடம் பகிர்ந்துக் கொள்வது என தெரியாமல் கொட்ட கொட்ட விழித்திருந்ததுண்டு..

இப்படியே நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி அவளுடைய பட்டப் படிப்பு முடிவடையுந் தருவாயில் ஒரு நாள் மாலை வகுப்பு நேரத்திற்குப் பிறகு மோகன் அவளிடம் வந்து புன்சிரிப்புடன் நீட்டிய அவனுடைய திருமண அழைப்பிதழ் அவளை முற்றிலுமாக நிலைகுலைய வைத்தது..

ஆக, ‘நான் மட்டும்தான் அவருடைய அக்கறையை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கேன் போலருக்கு..’ என்று நினைப்புடன் சட்டென்று கலங்கி நின்ற கண்களுடன் அவனையும் அவன் நீட்டிய அழைப்பிதழையும் மாறி, மாறி பார்த்தாள்.

மோகனும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். பிறகு அழைப்பிதழை அவளுடைய கையில் திணித்துவிட்டு.. ‘உங்க ரியாக்ஷ்னை என்னால புரிஞ்சிக்க முடியல வந்தனா... நானும் நீங்களா சொல்வீங்க, சொல்வீங்கன்னு இந்த மூனு வருஷமா காத்திருந்தேன்.. உங்க குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்கறதுனால நான் இன்னமும் கூட காத்திருக்க தயாராயிருந்தேன்.. ஆனா வீட்ல அம்மாவுக்கு என்ன விட்டா வேற யாருமில்லேங்கறதையும் உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.. நான் உங்கள, உங்க உணர்ச்சிய புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு நீங்க என்னை புரிஞ்சிக்கலையோன்னு பல நேரங்கள்லயும் எனக்கு தோனியிருக்கு.. அதான் இன்னமும் காத்திருந்து அம்மாவ வேதனைப் படுத்த வேணாம்னு அம்மா பார்த்த இந்த பொண்ணையே பண்ணிக்கலாம்னு.. இதோ, இப்ப கண்கலங்கி நிக்கற உங்கள் பார்த்ததும் நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்னோன்னு தோனுது வந்தனா.. ஐ ஆம் சாரி. பட் நவ் இட் ஈஸ் டூ லேட்..’

மேலே தொடர முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற மோகனை அவன் சென்று மறையும் வரைப் பார்த்துக் கொண்டே நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோனாமல் அன்று நின்றது இப்போதும் தன் கண் முன்னே தெளிவாய் பார்த்தாள் வந்தனா..

இப்போ மோகன் எங்க இருப்பார்? இதே சென்னையிலா? இல்ல வேற எங்கயாவதா?

ஊர் ஊராய் நாடோடி போல் அலைய வைத்த கிளை மேலாளர் பதவியை அவள் நாடி பெற்றதே மோகனிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடுதான். சுமார் பதினைந்து ஆண்டுகள் தன் தாயின் துணையுடன் நாடு முழுவதும் சுற்றியலைந்து தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் சென்னை தலைமையலுவலகத்திற்கு துணை பொது மேலாளராய் வந்த சேர்ந்த போது மீண்டும் அவனுடைய நினைவுகள் திரும்பி வர அவனைக் கண்டுபிடித்து என்னாகப் போகிறது என்று வாளாவிருந்துவிட்டாள்.

சென்னையை வந்து சேர்ந்தவுடனே கட்டி முடிக்கப்படாதிருந்த இந்த பலமாடி கட்டடத்தில் தனக்கென ஒரு குடியிருப்பை வாங்கி தன் தாயுடன் குடியேறினாள். அடுத்த இரண்டாண்டுகளில் நோய்வாய் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அவளுடைய தாய் மரித்தபோது மனமுடைந்து போனாள்.

இருபதாண்டுகளுக்குப் பிறகு தன் தாயின் மரணத்திற்கு கொள்ளிப் போட வந்திருந்த தன் சகோதரனை நிமிர்ந்தும் பாராமல் வைராக்கியத்துடன் அவள் நின்ற போது தன்னால் வளர்த்து ஆளாக்கப்பட்ட தங்கைகளும் அவளைப் புரிந்துக் கொள்ளாமல் தங்கள் சகோதரனுடன் சேர்ந்துக் கொள்ள எல்லோருமிருந்தும் யாருமில்லாத அனாதையாகிப் போனாள்.

அடுத்த இரண்டாண்டுகளில் அவளாக வலிய சென்று தன் தங்கைகளிடம் மட்டும் சமாதானமாக, அந்த ஆண்டிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்கு அவளுடன் வந்து தங்கியிருந்து செல்ல ஆரம்பித்தனர்.

சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது துணைப் பொது மேலாளர் பதவியிலிருந்த அவள் இந்த பத்தாண்டுகளில்  பொது மேலாளராக உயர்வு பெற்று வங்கியிலிருந்த இரண்டு பொது மேலாளர்களில் ஒருவரானாள்..

மணிக்கொருதரம் இசையுடன் ஒலியெழுப்பும் கடிகாரத்தின் இன்னிசை காதில் விழ நினைவுகள் கலைந்து மணியைப் பார்த்தாள். அதிகாலை மணி மூன்று!

அவளையுமறியாமல் இத்தனை நேரம் கையில் பிடித்திருந்த சீப்பை டிர்ஸ்சிங் மேசையில் வைத்துவிட்டு மரத்துப் போயிருந்த விரல்களை நெட்டி முறித்துவிட்டுக் கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றாள். விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்து உடனே உறங்கிப் போனாள்..

தொடரும்..

23.1.06

சூரியன் 10

குமாரி வந்தனா தேவி: வங்கியின் இரு பொது மேலாளர்களில் ஒருவர்.
**

படுக்கையறையிலிருந்த மேசைக்கு முன் அமர்ந்து அதுவரை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த வந்தனா பேனாவை மூடி வைத்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தாள். தன் முன்னே மேசையின் மேலிருந்த ரேடியம் பொருத்திய அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வெளிநாட்டு  கடிகாரத்தைப் பார்த்தாள். நள்ளிரவு கடந்திருந்தது.

அமர்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டு எழுந்து நின்றாள். தன் முன்னே திறந்துக் கிடந்த நாட்குறிப்பு புத்தகத்தை (Diary) பார்த்தாள்.  

கல்லூரி பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம்அவளுக்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் எழுதி முடித்த நாட்குறிப்பு புத்தகங்களை இன்றுவரை காப்பாற்றி வைத்திருக்கிறாள்.

அவள் மேலாளராக பணியாற்றிய காலத்தில் ஊர் ஊராக மாறி செல்லவேண்டியிருந்தபோதும் கூட இவற்றை மறக்காமல் பாதுக்காப்பாக கொண்டு செல்வது வழக்கம். மனம் சோர்வடைந்திருந்த சமயங்களிலெல்லாம் தன்னுடைய கல்லூரி நாட்களில் நண்பிகளுடன் சேர்ந்து அவள் அடித்து லூட்டிகளைப் படித்து ஆறுதலடைவாள்.

திறந்துக் கிடந்த நாட்குறிப்பை மூடிவிட்டு குளியலறையை நோக்கி சென்றாள். செல்லும் வழியில் இருந்த ஜன்னலின் வழியே சில்லென்று காற்று அவளை  நடுத்து நிறுத்த திரையை ஒதுக்கி வெளியே பார்த்தாள்.

பத்தாவது மாடியிலிருந்து பார்த்தபோது இரவு நேர சென்னை மிகவும் அழகாகத் தெரிந்தது. கீஈஈஈழே இந்த நேரத்திலும் பரபரப்பாக இருந்தது அண்ணா சாலை. விமானதளத்திற்கு செல்லும் வழியில் இருந்த பணக்காரத்தனமான குடியிருப்பில் இருந்த இந்த மூன்று படுக்கையறை வீட்டை (Flat) அவள் பத்து வருடங்களுக்கு முன் வாங்கிய குடி வந்தபோது வங்கியிலிருந்த சக அதிகாரிகளில் சிலர் அவளைப் பார்த்து கேலியுடன், ‘என்ன மேடம், தனி ஆளான உங்களுக்கு எதுக்கு மூனு பெட்ரூம் ஃப்ளாட்?’ என்றனர்.

அப்போதெல்லாம் சட்டென்று கோபம் வந்துவிடும் அவளுக்கு. எதிரிலிருப்பவர்களை கழுத்தை நெறித்து விடலாமா என்பதுபோல் பார்ப்பாள். கோபத்தில் சிவந்து நிற்கும் அவளுடைய கண்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டு சென்று விடுவார்கள்.

வந்தனாவின் இரு இளைய சகோதரிகளும் அவர்களுடைய குழந்தைகளுடன் கோடை விடுமுறைகளில் வந்திருக்கும் நேரங்களில் குழந்தைகளின் அட்டகாசங்களுடன் அவளுடைய வீடு நிறைந்து ஒரே களேபராமாயிருக்கும். அதற்காகவே மூன்று படுக்கையறைகளுடன் குடிய குடியிருப்பை வாங்கி ஆண்டின் மீதமுள்ள பத்து மாதங்களும் அந்த இரண்டு மாதங்களுக்காக காத்துக் கிடப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

ஜன்னலுக்கு வெளியே இருண்ட வானத்தில் இறைந்துக் கிடந்த நட்சத்திர கூட்டத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். நட்சத்திர கூட்டங்களிலிருந்து தள்ளி தனியாய் தூரத்தில் ஒற்றையாய் நின்ற நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களைவிட பிரகாசமாய் தெரிந்தது..

'அதுவும் நானும் ஒன்றுதான்.' உதடுகளில் படர்ந்த வறண்ட புன்னகையுடன் நினைத்தாள் வந்தனா.

பதினெட்டாவது வயதில் தந்தையை இரண்டு நாள் விஷக் காய்ச்சலில் இழந்தபோது அவளும் அவளுடைய தாய், தங்கைகளுடன் அவளும் அப்படித்தான் நின்றாள். அவளைவிட ஐந்து வயதான மூத்த சகோதரனின் திருமணம் முடிந்த மூன்றாவது மாதம்.

‘உங்கப்பாவுக்கப்புறம் நீதானடா இந்த குடும்பத்துக்கு தலைவங்கற ஸ்தானத்துல இருக்கே. நீயும் இப்படி என்னையும் உன் தங்கைகளையும் தவிக்க விட்டுட்டு உன் பெஞ்சாதி பேச்சை கேட்டுக்கிட்டு தனியா போறேங்கறியே இது உனக்கே நல்லாருக்கா? வந்தனா படிச்சி முடிச்சி ஒரு வேலைக்கு போற வரைக்குமாவது எங்களோடயே இருடா..’என்று காலைப் பிடிக்காத குறையாக எத்தனை கெஞ்சியும் தன் தாயின் கெஞ்சலை உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய புது மனைவியுடன் சென்ற அண்ணனை இன்றுவரை அவள் மன்னிக்கவேயில்லை.

வந்தனாவின் தந்தை முன் யோசனையுடன் செய்து வைத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து கிடைத்த ரூ.50000/-த்தை வைத்துக்கொண்டு நால்வரடங்கிய குடும்பத்தை நடத்தியதுடன் தன்னுடைய மூன்று வருட இளநிலை பட்டத்தையும் முடித்தாள். அவளுடைய தாயார் வீட்டிலிருந்தே அப்பளம், வடாம், வற்றல் என செய்து வீடு வீடாய் ஏறி இறங்கி  விற்று கொண்டு வந்த தொகையும் அந்த குடும்பத்தின் அன்றாட செலவை சரிகட்ட உதவியது.

இளநிலை படிப்பை அவள் முடிக்கவும் அவளுடைய இரண்டு தங்கைகளும் ஒருவர் பின் ஒருவராய் பள்ளிப் படிப்பை முடிக்கவும் சரியாக இருந்தது. மேலே படிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை மூட்டைக் கட்டிவிட்டு வீட்டு உபயோக பொருட்களை விற்கும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தாள். அவளுடைய அழகும் பேச்சுத் திறனும் அவளுடைய வேலையில் அவளுக்கு தேவைக்கும் அதிகமாகவே ஊதியம் கிடைக்க வழி செய்தது.

அலுவலக வேலையினூடே மாலை நேரங்களில் தன்னுடைய முதுகலை படிப்பை சென்னையில் அப்போதுதான் துவக்கப்பட்ட அஞ்சல்வழி பல்கழைகத்தில் சேர்ந்து தொடர்ந்தாள். அடுத்த இரண்டாண்டுகளில் குடும்பத்தின் நிதி நிலமை ஓரளவுக்கு சீரானது.  வந்தனா முதுகலைப் படிப்பில் அஞ்சல்வழி பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாக வரவே செய்தித் தாள்களில் எல்லாம் அவளுடைய புகைப்படம் வெளிவர பிரபலமானாள்.

அவளுடைய புகைப்படத்தை செய்தித்தாளில் காண நேர்ந்த சென்னையில் தலைமையலுவலகத்தை கொண்டிருந்த வங்கிகள் ஒன்றின் தலைவர் வழக்கத்திற்கு மாறாக வந்தனாவை நேர்காணலுக்கு அழைக்க முதல் சந்திப்பிலேயே தன்னுடைய அபூர்வ புத்திக் கூர்மையால் அவரைக் கவர்ந்து வங்கியில் பயிற்சி இளநிலை அதிகாரியாக வங்கியில் நுழைந்தாள்.

அவள் வங்கியில் சேர்ந்த சமயத்தில் அங்கிருந்த அதிகாரிகளுள் வந்தனா மட்டுமே பெண். அதுவும் வங்கியின் வழக்கமான தேர்வு நியதிகளை மீறி நேரடியாக வங்கித் தலைவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவள். பொறாமைக்கு கேட்க வேண்டுமா?

அவள் பணியில் சேர்ந்து அடுத்த பத்து வருடங்களில், அதாவது அவள் ஒரு கிளையின் மேலாளராக பதவி உயர்வு பெறும் வரை அவள் படாத அவமானங்களே இல்லை எனலாம். அவளுக்கு மேலிருந்த அதிகாரிகள், அவளுடன் சக அதிகாரிகளாக இருந்தவர்கள், அவளுக்கு கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் என எல்லோரும் அவளை ஒரு காட்சிப் பொருளாகவே பார்த்தனர்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ ஒரு பெண். ஆண்களின் அதிகார வட்டத்துக்குள் நுழைய லாயக்கில்லாதவள் என்று தன்னை அச்சுறுத்திய ஆண் வர்க்கம் முழுவதையுமே தன் ஒட்டுமொத்த எதிரிகளாய் நினைத்தாள் வந்தனா.

அவர்களை தன்னுடைய அறிவுத் திறனால் வெற்றிக் கொள்ள முயன்று தோற்றுப் போன வந்தனா ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவர்களை ஜப்பானிய முறையில் தோற்கடிப்பது ஒன்றுதான் ஒரே வழி என்று உணர்ந்தாள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் முழுவதுமாய் தோற்கடிக்கப்பட்டு அவமானப்பட்டு ஹிரோஷிமோ, நாகசாக்கி என்ற இரு பெரு நகரங்களும் அமெரிக்கர்களால் நிர்மூலமாக்கப் பட்ட அதே நாள் நள்ளிரவில் ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரத்தில் ரகசியமாக கூடிய ஜப்பானுடைய தொழிலதிபர்கள் ஒரு ரகசிய முடிவுக்கு வந்தார்களாம். அதாவது அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் தங்களுடைய அபூர்வ புத்தி கூர்மையாலும் அயரா உழைப்பினாலும் உலகின் பிற நாடுகள் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு பொருளாதார்த்தில் முன்னேறுவது எனவும் தங்களை அணுவின் கொடூர அழிவுக்கு ஆளாக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளை தங்களுடைய நாட்டின்  பொருளாதார அதிகாரத்தால் அடக்கியாளுவது எனவும் சபதமெடுத்து பிரிந்ததாம் அந்த குழு.

வந்தனாவுக்கு தானும் அதேபோல் செய்தாலென்ன யோசித்தாள்.

அன்றிலிருந்து இரவு பகல் பாராமல் ஒரே குறிக்கோளுடன் படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய வயதையொத்த பெண்கள் விதவிதமான உடைகள், அழகு சாதனங்கள், நகைகள் என அலைந்த காலத்தில் படிப்பு, படிப்பு, படிப்பு என ஒரே கருத்தாய் படிக்க ஆரம்பித்த அடுத்த எட்டாண்டுகளில் பைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ, சட்டத்தில் எல்.எல்.பி என இரு நேர் எதிர் பிரிவுகளில் பட்டங்களைப் பெற்றதுடன் வங்கித் துறையினருக்கு பிரத்தியேகமாக நடத்தப்பட்ட CAIIB, AIIB (London) என்ற பட்டங்களையும் பெற்று அவளுடைய சக அதிகாரிகள் மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளையும் விடவும் அதிகம் படித்தவள் என்ற பெருமையைப் பெற்றாள். அவளுடைய படிப்பைக் கண்டு அசராதவர்களை தன்னுடைய வாளிப்பான உடலழகால் வீழ்த்தவும் தயங்கவில்லை வந்தனா.

முதுகலைப் பட்டத்துடன் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்த வந்தனா CAIIB மற்றும் AIIB (London) முடித்தவுடன் அடுத்த நிலைக்கும் எம்.பி.ஏ முடித்தவுடன் கிளை மேலாளர் நிலைக்கும், சட்டப் படிப்பு முடிந்தவுடன் உயர் மேலாளர் நிலைக்கும் பதவி உயர்வு பெற்றாள். அவளுடைய அழகும், வாளிப்பான உடலமைப்பும் சாதுரியமான பேச்சும் அவளுடைய கிளை வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்க வங்கி வர்த்தகத்தை விரிவாக்குவதிலும் கைதேர்ந்தவளாக ஜொலித்தாள்.

இதற்கிடையில் திருமண வயதை எட்டியிருந்த தன்னுடைய இரு தங்கைகளையும் தன் தாயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நல்ல பதவிகளிலிருந்த மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்தாள்.

அவர்களிருவருடைய திருமணமும் முடிந்து தங்கள், தங்கள் புகுந்த வீடுகளுக்கு வழியனுப்பி வைத்த போது வந்தனாவுக்கு வயது 30ஐ கடந்திருந்தது.

தன்னுடைய நிலையை கவலையுடன் பார்த்த தாயுடன் தனித்து நின்றபோதும் வீணாய் போன தன்னுடைய இளமையை நினைத்து வருந்தவில்லை அவள். மாறாக தான் இதுவரை சாதித்த வெற்றிகளை நினைத்து சந்தோஷமே அடைந்தாள்..

ஆனால் அடுத்த சில வருடங்களில் அவளுடைய தாயும் மரிக்க முதன் முறையாய் உலகத்தின் தனியாய் விடப்பட்டதைப் போல் உணர்ந்தாள் வந்தனா..20.1.06

சூரியன் - 9


Is it? I did not know that?’ என்ற சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். இவனுக்கு தெரியாமயா சுந்தரம் போயிருப்பார். இந்தாளு தெரிஞ்சும் தெரியாதமாதிரி டிராமா போடறானா? 'என்ன நாடார்? கபூர் சொல்றது விளங்குதா?' என்றார்

‘ஒரு எளவும் புரிய மாட்டேங்குதே?’

‘ஒன்னுமில்லை நாடார். நம்ம சி.ஜி.எம். சுந்தரம் ரெண்டு வாரத்துக்கு முன்னால ரிசர்வ் பேங்குக்கு போயிருந்தாராமேன்னு கேக்கறார். உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேட்டேன்?’

சிலுவை மாணிக்கம் நாடாரின் கறுத்த முகம் சட்டென்று கோபத்தால் மேலும் கறுத்தது..

அப்படியா? அப்ப ஏன் அந்த படுபாவி சுந்தரம் என் கிட்ட ஒன்னுமே சொல்லலை? விடக் கூடாது. ஒரு பிடி பிடிக்கணும்.

‘டாக்டர், இதோ ஒரு நிமிஷத்துல பதிலோட வரேன். இவனுங்களுக்கு ஒரு பெக் ஊத்தி குடுங்க..’ என்றவாறு எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்று போர்டிகோவிலிருந்து சுந்தரத்தின் கைத்தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்தார்.

மணி அடித்துக் கொண்டே இருந்தது.. நான்கு மணிக்கப்புறம் பொறுமையில்லாமல் துண்டித்துவிட்டு வீட்டுக்குள் நுழைய முயன்ற போது அவருடைய தொலைப் பேசி அழைக்கவே நின்று யாரென்று பார்த்தார். சுந்தரம்!

‘என்னவே அதுக்குள்ளாறயே தூங்கிட்டீரா? நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே?’ என்றார் எரிச்சலுடன்.

சுந்தரம் எதிர்முனையில் தன் எரிச்சலை காட்டிக் கொள்ளாமல், ‘இல்ல சார், நாளைக்கு நம்ம பங்குல பொதுக்குழு கூட்டம் இருக்கு. அதுக்குத்தான் பிரிப்பேர் பண்ணிக்கிட்டிருந்தேன்.. சொல்லுங்க சார்.’ என்றார்.

நாடாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'ஆமா. இப்ப அதுதான் முக்கியம். சரிவே.. நீரு ரிசர்வ் பேங்குக்கு போயிட்டு வந்தீராமே.. எதுக்குவே நா கூப்டப்போ சொல்லலே.. வேணுக்கும்னே என்கிட்டருந்து மறைச்சிட்டீராவே.. அப்படியிருந்தா அது நல்லால்லேவே.. சொல்லிட்டேன்.’

சுந்தரம் பதறிப் போய் சில நொடிகள் என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறினார். எல்லாம் எம்.டியின் வேலையாய்தான் இருக்கும் என்று நினைத்தார்.

‘சார் நான் போன விஷயத்துக்கும் நீங்க கேட்ட விஷயத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை சார். அதான் சொல்லலை..’

‘அத நீர் என்னவே முடிவு பண்றது? போனேன், வந்தேன்னு வரவா போனீரு? அப்படியே நமக்கு வேண்டியதையும் கேட்டிருக்க வேணாமா இல்லையா? சரி என்னதாம்யா கேட்டான் அவன்?’

சுந்தரம் என்ன சொல்லி சமாளிப்பதென தெரியாமல் தடுமாறினார். தன்னிடம் அங்கே கேட்கப்பட்ட கேள்விகளையும் தான் அதற்கு அளித்த பதில்களையும் இவரிடம் கூறினால் என்ன ஆவது? என்ன சொல்லலாம், என்ன சொல்லலாம் அவர் யோசித்துக் கொண்டிருக்க, ‘என்ன வேய், சத்தத்தையே காணோம்.. என்ன கதை விடலாம்னு யோசிக்கீறீராக்கும்?’ என்ற குரல் காதைக் கிழித்தது.

‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சார். அவங்க என்னை கூப்பிட்டதே வேறொரு விஷயாமா. மாதவன் சாரை நியமிச்ச இலாக்காவுக்கு இல்ல சார் நான் போனது.’ என்றார் உண்மைக்கு புறம்பாக. ஏன் பொய் பேசுகிறாய் என்று அதட்டிய மனசை சட்டை செய்யாமல். ‘நாலு பேருக்கு நல்லதுன்னா பொய் சொல்றதுல தப்பில்ல.. என்று தனக்குள் சமாதானம் செய்துக் கொண்டார். ‘அதில்லடா.. நீ அந்த காட்டான் நாடார்கிட்டருந்து தப்பிக்கத்தான பொய் சொல்றே’ என்று வாதிட்டது அவருடைய மனசாட்சி..

‘சரி, நீரு போன புண்ணாக்கு விக்கற இலாக்காவுக்கு இல்லல்லே.. நானும் ஆடிட் கமிட்டி உறுப்பினர்தாங்கறத மறந்திட்டீராக்கும். ரிசர்வ் பேங்க் விஷயமெல்லாம் கமிட்டிக்கு ரிப்போர்ட் பண்ணனும்னு உமக்கு தெரியாதாக்கும். அங்க வந்து என்ன சொல்றீர்னு பாத்துக்கறேன். இப்ப வைக்கிறேன்.’ என்று சுந்தரம் மறுபதில் பேசுவதற்கு முன் வைத்துவிட்டு கோபத்தை கஷ்டப் பட்டு அடக்கிக்கொண்டு வீட்டினுள் மீண்டும் நுழைந்தார் நாடார்.

‘என்ன நாட்டார் எங்கே போனே..’ என்ற கோபால் மேனனின்  அரைகுறை தமிழை சட்டை செய்யாமல் சோமசுந்தரத்தின் அருகில் சென்று, ‘டாக்டர் நம்ம சி.ஜி.எம் போனது வேற விஷயமாவாம்.’ என்றார்.

சோமசுந்தரம் அவரை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தார். பிறகு சமாளித்துக் கொண்டு அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அவரைப் போலவே குழுமியிருந்தவரில் எவருக்கும் நாடார் சொன்னதில் நம்பிக்கையில்லை. இருப்பினும் அதை பெரிதுபடுத்த விரும்பாமல் மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியாமல் வாளாவிருந்தனர்.

சோமசுந்தரம் எல்லோரையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு தொடர்ந்தார். ‘நாம எல்லோரும் இந்த நேரத்துல ஒரு முடிவுக்கு வரணும். நாம இப்ப என்ன பண்ணாலும் பிரச்சினையாத்தான் முடியும். நம்ம பழைய சேர்மன் ராகவன் போர்ட் மெம்பர்சோட என்னால ஒத்துப் போக முடியலைன்னு ரிசைன் பண்ணதிலிருந்தே ரிசர்வ் பேங்குக்கு நம்ம போர்ட் மேல சந்தேகம் வந்திருக்கும். அதப் பத்தி கேக்கறதுக்காகத்தான் சி.ஜி.எம் சுந்தரத்த கூப்டிருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்.சேர்மன் இல்லாத நேரத்துலருந்து நாம ஃபார்ம் பண்ண சேர்மன் கமிட்டிதான் சேர்மனோட இடத்துலருந்து நிர்வகிச்சிக்கிட்டு வரோம். அந்த ஆங்கிள்லருந்து பார்த்தா நம்ம சி.ஜி.எம் அங்கருந்து வந்தவுடனே போன வாரம் நடந்த கமிட்டிக்கு ரிப்போர்ட் பண்ணியிருக்கணும். ஏன் ரிப்போர்ட் பண்ணலைன்னு ஒரு விளக்கம் கேக்கலாம்னு சஜ்ஜஸ்ட பண்றேன். வாட் டு யூ சே?’

எல்லோரும் ஒரே நேரத்தில் நாடாரைப் பார்த்தனர். சி.ஜி.எம். நாடாரின் வலக்கரம் என்று எல்லோருக்கும் தெரியும்.

நாடார், சோமசுந்தரம் தன்னிடம் இதைப் பற்றி பேசாமல் எப்படி இப்படி பொதுவில் பேசலாம் என்ற எரிச்சலுடன் ஒன்றும் பேசாமல் இருந்தார்.

சோமசுந்தரம்  வேண்டுமென்றே ‘என்ன நாடார் நீங்க என்ன சொல்றீங்க?’ என்று அவரை சீண்டினார். அவருக்கு இவர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறார் என்ற கோபம்.

‘டேய் டாக்டரே ஒன் புத்தி ஒன்ன விட்டு எங்க போவும்? ஃப்ராடு பய.. ஒன்ன மாதிரி இல்லடா நானு.. ஒரு வா சோத்துக்கு சிங்கியடிச்சதுலருந்து இந்த மாதிரி ஒரு பேங்குல பதினேளு பர்சண்ட் ஷேர் வச்சிருக்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா அது உன்ன மாதிரி ஆளுங்களல்லாம் கவுத்திப்பிட்டு வந்ததுனாலலே.  எங்கிட்ட வேணாம்’ என்று மனதுக்குள் கறுவிய நாடார் சோமசுந்தரத்தைப் பார்த்து,  ‘நான் என்னத்த டாக்டர் சொல்றது? நீங்க சொன்னா மாதிரியே கேட்டுருவோம்.. ஆனா எழுத்துல வேணாம்.. கமிட்டிக்கு வருவார்லே.. நேர்லயே கேட்டுட்டா போச்சி.. எழுத்துல கேட்டா அப்புறம் நம்ம எம்.டி அதையே சாக்கா வச்சிக்கிட்டு அவர வறுத்தெடுத்துருவாறு.. வேணாம்.’ என்றார்.

சோமசுந்தரம் அவருடைய சாதுரியமான பேச்சை ஒப்புக்கொண்டது போல் குழுமியிருந்தவர்களைப் பார்த்தார். ‘அப்புறம் இன்னொரு விஷயம். மாதவன் கொஞ்ச மின்னால என்னைக் கூப்டுருந்தார். நாளைக்கு சாயந்திர ஃப்ளைட்ல மும்பைலருந்து வராறாம். என்னை பார்த்து பேச முடியுமான்னு கேட்டார். நான் யோசிச்சி சொல்றேன்னு சொன்னேன். சொல்லுங்க.. அவருக்கு என்ன சொல்லட்டும்?’

எல்லோரும் ஒருவரையொருவர் கேள்வியுடன் பார்த்தனர்.

‘Why Doctor saab? What does he want?’

சோமசுந்தரம் கபூரைப் பார்த்து ‘தெரியாது’ என்று தலையை அசைத்தார்.

நாடார், ‘எனக்கென்னவோ நீங்க எதையாவது சொல்லி அவர தவிர்க்கறதுதான் நல்லதுன்னு தோனுது.. அதான் திங்கக் கிழமை ஸ்பெஷல் போர்ட் மீட்டிங்  இருக்கில்லே.. நான் இன்னைக்கி ராத்திரி ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை ஆடிட் கமிட்டி மீட்டிங் சமயத்துலதான் வருவேன்.’ என்றார் சோமசுந்தரத்தை பார்க்காமல்..

‘யோவ் நாடார்.. நீ என்ன பெரிய இவனா?.. நீ இரு, இல்லாம போ.. எனக்கென்ன? நான் யார பாக்கணும் யார பாக்கக் கூடாதுன்னு நீ யார்யா சொல்றது? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா..’ என்றார் சோமசுந்தரம் தனக்குள்..

‘டேய் டாக்டரே, நீ என்ன மனசுக்குள்ள நினைக்கிறேன்னு எனக்கு தெரியாதாக்கும்.. எண்ணி ஒரே மாசத்துக்குள்ள வர்ற ஆளை கைக்குள்ள போட்டுக்கிட்டு ஒனக்கு வக்கிறேன் வேட்டு.. ஒனக்கு ஏழு வருஷம் முடிய இன்னும் நாலோ அஞ்சோ  மாசந்தான இருக்கு. பாக்கறேன் யார போர்டுக்குள்ள கொண்டு வரேன்னு..’ என்றார் நாடார் தனக்குள்..

இதுதான் மேல் மட்டத்து சண்டைக்கும் கீழ் மட்டத்து சண்டைக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலான சமயங்களில் இம்மாதிரியான நிழல் குத்துகள் முன்னும் பின்னும் வீசிக்கொள்ளப்படுவது வழக்கம். வீசியவரின் முகத்திலும் புன்னகையிருக்கும். பெறுபவரின் முகமும் சிரித்துக்கொண்டு இருக்கும். யார் யாரை அடிக்கிறார்களென்றே தெரியாது..

இதெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பு நாடாரின் தயவால் போர்டில் நுழைந்த செட்டியாருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் எப்போதும் போல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நாடாரை கலந்தாலோசிக்காமல் அவராக எதுவும் பேசமாட்டார்.

போன வருடத்தில் ஒரு நாள் நாடார், வணிகர் கூட்டத்தில் அவரைப் பார்த்து, ‘செட்டியார் நம்ம போர்ட்ல ஒரு வேக்கன்ஸி வருது.. ஒரு அம்பது லட்சத்த போட்டு கொஞ்சம் ஷேர் வாங்கிருங்க.. உங்கள இழுத்து விட்டுடறேன்.. பின்னால பெரிசா வரக்கூடிய பாங்குங்க.. நம்மக் கிட்ட காசு இருந்து என்ன பிரயோசனம்? வெளிய போன என்ன ஓட்டல்காரங்கறான். உங்கள பாத்திரக் கடைக்காரங்கறான். நம்ம தொழிலுக்குன்னு தனியா இல்லாத கவுரத்த இந்த பேங்க் டைரக்டர்ங்கற பதவி தரும்லே? அதுக்காக சொல்றேன்.. எங்கிட்டருக்கற ஷேர்ல கொஞ்சம் நீங்க வாங்கிட்டாலே போறும். போர்ட்ல புகுந்துரலாம், என்ன சொல்றீங்க?’ என்று வினவ அவருக்கும் அது சரியான யோசனை என்று படவே உடனே காசைக் கொடுத்து பங்குகளை வாங்கினார்.

நாடார் கூறிய படியே அடுத்த போர்டிலேயே அட்-ஹாக்காக அவரை சேர்த்துக் கொள்ள வைத்தார். அடுத்த பங்குதாரர் தேர்தலில் அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்க வைத்து அடுத்த ஏழு வருடங்களுக்கென்று நிரந்தர அங்கத்தினராக்கினார். நாடார் இருந்த எல்லா கமிட்டிகளிலும் அங்கத்தினராகவும் சேர்க்கப் பட்டார். ஒவ்வொரு மாதமும் இரு போர்ட் கூட்டங்கள், நான்கு கமிட்டி கூட்டங்களென ஒவ்வொரு கூட்டத்திற்கும் சிட்டிங் ஃபீசே மாதம் இருபத்தையாயிரம் என பாக்கெட் மணியாக வரவே குஷியாகிப் போனார் செட்டியார். அந்தஸ்த்துக்கு அந்தஸ்த்து, பணத்துக்கு பணம்.. அத்துடன் வங்கியில் அவர் செய்திருந்த முதலீட்டுக்கு கடந்த வருடம் 20% டிவிடண்ட் தொகையே கணிசமாக வந்தது.

எல்லாவற்றிற்கும் நாடார்தான் காரணம் என்ற நன்றியுணர்வு அவரை எதிர்த்து எந்த கூட்டத்திலும் பேசாமல் அவருக்கு விசுவாசமாயிருந்தார் அவர்.

சோமசுந்தரம் தன் மணிக்கட்டிலிருந்த ரோலக்ஸ் வாட்சைப் பார்த்தார். மணி நள்ளிரவைக் கடந்திருந்தது..

குழுமியிருந்தவர்களைப் பார்த்தார்.. நாடாரையும் செட்டியாரையும் தவிர எல்லோரும் மதுவின் மயக்கத்தில் இருந்தது தெரிந்தது..

இரு கைகளையும் தட்டியாவாறே எழுந்து நின்றார். ‘இன்னைக்கி இது போறும்னு நினைக்கிறேன்.. டின்னர் ரெடியாயி ஒரு மணி நேரத்துக்கு மேலாவுது.. வாங்க சாப்பிடலாம்.. யார் யார் இங்கேயோ தங்கணும்னு நினைக்கிறீங்களோ அவங்க எந்த கெஸ்ட் ரும் வேணுமோ சொல்லிருங்க.. அவங்க லக்கேஜை ரூமுக்கு அனுப்ப வசதியாயிருக்கும்.  நாடார் உங்க ப்ரோக்ராம சொல்லீட்டீங்க.. செட்டியார் நீங்க? தங்கறீங்களா? இல்ல...’

நாடார் செட்டியாரைப் பார்த்தார்.. ‘அவர் ஏன் இங்க தங்க போறார்? என்ன செட்டியார்? நாலெட்டு வச்சா அவர் வீடு.. டிரைவர் வேற காத்து கெடக்கான்..’ என்றார்.

சோமசுந்தரம் எதற்கு சொல்கிறார் என்று ஊகித்தவண்ணம் ஒரு மர்ம புன்னகையுடன் செட்டியாரைப் பார்த்தார். அவரோ நாடாரைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்தார். ‘என்ன நாடார் இவனுங்கெல்லாம் புட்டிகள கட்டிப் பிடிச்சிக்கிட்டு தூங்கிருவானுங்க.. நாம யார.. இல்லங்க.. என்னத்த கட்டி பிடிச்சிக்கிறது... வீட்லத்தான்.. என்ன சொல்றீங்க..?’ என்று தான் அடித்த அசட்டு ஜோக்குக்கு தானே உரக்க சிரித்தவாறு எழுந்து நின்றார்.

‘யோவ் செட்டியார்.. என்னவே, நீரும் இவனுங்க கூட சேர்ந்து கெட்டுப் போயிராதேயும்.. நம்ம ஊரு மானத்த காப்பாத்தும்.. டாக்டர் வெளிநாடெல்லாம் சுத்துனவரு.. அவரு எப்படி வேணும்னாலும் இருக்கலாம். என்ன டாக்டரே?’

சோமசுந்தரத்திற்கு இந்த ஆள் கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று தோன்றியது. சிரித்து மழுப்பியவாறு.. திரும்பி, வரவேற்பறைக்கு அடுத்திருந்த விசாலமான உணவறையை நோக்கி நடந்தார்..

தொடரும்..

19.1.06

சூரியன் - 8


மாணிக்கம் நாடாரின் சொகுசு கார் அந்த பிரம்மாண்ட பங்களாவில் நுழைந்த போது காரில் இருந்த ரேடியம் டிஜிட்டல் கடிகாரத்தில் இரவு மணி 11.00ஐ கடந்திருந்தது.

ஆனால், சென்னை-மகாபலிபுரம் சாலையில் அடர்ந்து வளர்ந்திருந்த சவுக்கு மர தோப்பிற்குள்ளே இருந்த அந்த பிரம்மாண்ட மாளிகையின் எல்லா விளக்குகளும் எரிய ஜகஜ்ஜோதியாக காட்சியளித்தது.

சிலுவை மாணிக்கம் நாடார் நுழை வாசலில் நின்று வரவேற்ற டாக்டர் சோமசுந்தரத்தின் மருத்துவமனை மேலாளரைப் பொருட்படுத்தாமல் தனக்குள் தன் தலைவிதியை நினைத்து முனகியவாறே உள்ளே நுழைந்தார்.

‘வாங்க நாட்டார்.’ என்ற மதுவின் ஆதிக்கத்தில் ‘நாட்டார்’ என்று அழுத்தி அழைத்த ரஜ்ஜத் கபூரைப் பார்த்து முறைத்தார்.

‘யோவ் சேட்டு, என்ன நக்கலா? ஒரு ரெண்டு ரவுண்டு அடிக்கறதுக்குள்ளவே ஒளர ஆரம்பிச்சிருவியே.. வயித்தெரிச்சல கெளறாத.. அப்புறம் வாங்கி கட்டிக்குவே..’

‘ஓ க்யா போல்த்தா ஹை..’ என்ற ரஜ்ஜத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை..

நாடார் நேரே ஹாலின் கோடியிலிருந்த குளியலறை கம் டாய்லெட்டில் நுழைந்து முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டு வேலையாள் ஓடிவந்து நீட்டிய வாசமுடன் கூடிய உயர் ரக பூத்துவாலையில் முகத்தைத் துடைத்து அடைத்திருந்த தன் மூக்கை சிந்தி வேலையாளிடம் நீட்டினார். அருவறுப்புடன் வாங்கி அருகிலிருந்த அழுக்குக் கூடையில் வீசியவனை கண்டும் காணாததுபோல் ஹாலுக்குள் மீண்டும் நுழைந்து தன் கண் முன்னே விரிந்த காட்சியை நிதானமாகப் பார்த்தார்.

கிட்டப்பார்வை கோளாறுடைய நாடாருக்கு ஹாலின் மறுபக்கத்திலிருந்தவர்களின் முகங்களைக் கூட சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நீஈஈஈள அகலத்துடன் இருந்தது அந்த வரவேற்பறை!

சுவருக்கு சுவர் அடைத்துக்கொண்டு கணுக்கால் வரை புதையுறும் அளவுக்கு கனமான காஷ்மீர் கார்ப்பெட்.. சுவரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட Wallpaper, நான்கு சுவர்களிலும் ஐந்தடிக்கு ஒன்றெனவும், கூரையில் பத்தடிக்கு ஒன்றெனவும் பொருத்துப்பட்டிருந்த அலங்கார விளக்குகள், சினிமா அரங்குகளைப் போன்ற இண்டீரியர்.. சுமார் ஐம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவான அலங்கார இருக்கைகள்..

‘படுபாவிப் பய.. நோயோட வர வியாதிக்காரங்கள கொள்ளையடிச்சே கட்டியிருக்கான் பாரு.. ஒன் சமாதி இருக்குமாடா இதுமாதிரி?’ என்று மனதுக்குள் கறுவியவாறே சென்று சிவசுப்பிரமணி செட்டியாரின் பக்கத்தில் கிடந்த அலங்கார திவானில் அமர்ந்து திண்டில் சாய்ந்துக் கொண்டு, ‘கர்த்தரே’ என்றவாறு இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு அறையை சுற்றி அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார்.

ராஜகோபாலன் நாயரைத் தவிர போர்டில் இருந்த எல்லா முக்கிய நபர்களும் இருந்தனர். டாக்டரைத் தவிர எல்லோரும் இரண்டு, மூன்று ரவுண்டுகளை முடித்திருப்பார்கள் போல் தெரிந்தது.

திரும்பி, தன் அருகில் வெறும் பழரசத்துடன் அமர்ந்திருந்த செட்டியாரைப் பார்த்தார். எழுந்து இரண்டு கால்களையும் மடித்துக் கொண்டு அமர்ந்தார். ‘என்ன செட்டியார, இங்க எதுக்கு கூடியிருக்கோம்கறதயே மறந்துட்டு தண்ணியடிச்சிக்கிட்டிருக்கான்க?’

சிவசுப்பிரமணி செட்டியார் ஒரு மர்ம புன்னகையுடன் மும்முரமாய் மது அருந்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தார். ‘நாடாரே, இவனுங்களுக்கு தண்ணியடிச்சாத்தான் பேச்சே வரும். நீங்க சும்மா ஆரம்பிங்க..’ என்றார்.

‘நீங்க சொல்றதும் சரிதான். இல்லன்னா விடிய விடிய இங்கயே ஒக்காந்திருக்க வேண்டியதுதான். டாக்டர எங்க காணோம்?’ என்ற சிலுவை மாணிக்கம் நாடார் ஹாலை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்து ‘டாக்டர்’ என்று உரக்க குரல் கொடுத்தார்.

‘தோ வந்துட்டேன் நாடார். ஒரு நிமிஷம்’ என்ற குரல் வந்த திசையை நோக்கினார். தூரத்தில் டாக்டர் சோமசுந்தரம் முதுகைக் காட்டிக் கொண்டு தொலைப் பேசியில் பேசுவது தெரிந்தது.

‘என்னத்த அவ்வளவு ரகசியாம பேசறான்?’ என்ற யோசனையுடன் அவரை நோக்கி மெள்ள நடக்க.. சோமசுந்தரம் தொலைப்பேசியை வைத்துவிட்டு திரும்பினார். தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த நாடார் தயங்கி நிற்பதைப் பார்த்தார். ‘சரியான சந்தேகப்பிராணி.’

‘என்ன நாடார், ஃபோன்ல யாருன்னு பார்த்தீங்களா? நம்ம சேர்மன் மாதவன்தான். நாளைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல வராறாம். ஹோட்டலுக்கு வர்ரீங்களான்னு கேட்டார். யோசிச்சி சொல்றேன்னேன்.’ என்ற டாக்டரையே மேலும் சந்தேகத்துடன் பார்த்தார் நாடார்.

‘என்ன வேணுமாம் அந்த ஆளுக்கு?’

சோமசுந்தரம் அலட்சியத்துடன் சிரித்தார். ‘அவர் கிடக்கறாரு.. நீங்க வாங்க. நாம பேச வந்தத பேசுவோம்.’ என்றவாறு நாடாருடைய தோளில் கை வைத்து அழைத்துக் கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தார்.

வரவேற்பறையை அடைந்ததும் தன் இரு கரங்களையும் தட்டி, ‘ஃப்ரெண்ட்ஸ்.. shall we start the meeting?’ என்றார்.

‘டாக்டர்.. தமிழ்ல பேசுவோம். உங்க மேனேஜர வேணும்னா இங்கிலீஷ்ல மினிட்ஸ் எழுதச் சொல்லுங்களேன்.’ என்ற நாடாரைப் பார்த்தார்.

‘வேண்டாம் நாடார். நானே எழுதிடறேன். நாம பேசற விஷயம் ரொம்ப சீக்ரெட்டாயிருக்கணும். இந்த விஷயத்துல யாரையும் நம்பக் கூடாது. என் மேனேஜர நா நீங்க வந்தவுடனே அனுப்பிட்டேன். வீட்ல நம்மளத் தவிர வேற யாருமில்ல. தைரியமா பேசலாம்.’

ஹாலில் இருந்த எல்லோரும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து வரவேற்பறையையொட்டி இருந்த தங்களுடைய வழக்கமாக கூடும் அறைக்குள் சென்று  அமர்ந்தனர்.

சோமசுந்தரம் அறைக்கதவைச் சாத்திவிட்டு மேசையின் தலைப் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னுடைய லாப்டாப் கணினியைத் திறந்து அதில் குறித்து வைத்திருந்ததைப் ஒருமுறை பார்த்துவிட்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு

‘ஃப்ரெண்ட்ஸ்.. நம்ம மீட்டிங்க ஆரம்பிக்கிறோம்.’ என்று சம்பிரதாயமாக துவக்கி வைத்தார்.

உடனே நாடார், ‘எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்.’ மறுத்து பேச முயன்ற ரஜ்ஜத் கபூரை பேச விடாமல் கையை உயர்த்தி தடுத்தார். ‘கபூர் சாப்.. டாக்டர் சார் உங்களுக்கு நான் என்ன பேசறேன்னு சொல்வார். பொறுமையா இருங்க. என்ன டாக்டர்?’

சோமசுந்தரம் மெல்லிய புன்னகையுடன், ‘கரெக்ட் நாடார்.. நீங்க மேல பேசுங்க.’ என்று கூறிவிட்டு, ‘I will brief you after he completes. OK?’ என்றார் கபூரைப் பார்த்து. அவரும் ‘ஒகே’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்ட நாடார் மேலே தொடர்ந்தார்.

‘நாம ரெக்கமெண்ட் பண்ணதுக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி அந்த ஆள ஒரேயடியா நாலு வருஷத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் பண்ணியிருக்கு ரிசர்வ் பேங்க். நாம இப்ப என்ன பண்ணணும்னு முடிவு பண்ணணும். அதுதான் இன்னைக்கிருக்கற ஒரே அஜெண்டா.’

நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். ‘நாம இப்ப ஒன்னும் எதிர்த்து சொல்லாம இருந்தா இதே பழக்கமா போயிரும். அத்தோட மாதவனும் நம்மள அவ்வளவா மதிக்காம போனாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல. என்ன சொல்றீங்க? செட்டியார், நீங்க சொல்லுங்க..’

செட்டியார் தயக்கத்துடன் சோமசுந்தரத்தைப் பார்த்தார். அவர் போர்டில் நுழைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. ‘நம்மளவிட சீனியரெல்லாம் இருக்கறப்போ நாம ஏதாவது பேசப் போயி தப்பா நினைச்சிக்க போறார் டாக்டர்’ என்று நினைத்தார்.

சோமசுந்தரம் நீங்க பேசுங்க பரவாயிலை என்பது போல் அவரைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு நாடார் சொன்னதை தன்னுடைய லாப்டாப்பில் சிரமத்துடன் ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டார்.

செட்டியார் சங்கடத்துடன் மீதமிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு பேசினார். ‘நம்ம நாடார் சொல்றதுதான் நானும் சொல்றேன். ரிசர்வ் பேங்க எதிர்த்து நாம ஒன்னும் செய்ய முடியாதுன்னாலும் போர்ட் மெம்பர்ஸ் சார்பா ஒரு அப்ஜெக்ஷன் லெட்டராவது அவங்களுக்கு அனுப்பணும். அவ்வளவுதான்.’

சோமசுந்தரம் அவர்களிருவரும் பேசியதை சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கூடியிருந்த எல்லோரும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தனர்.

சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். ‘நாடார், அதுக்கு முன்னால நான் ஒன்னு கேக்கறேன். ஏன் நமக்கு லாஸ்ட் மினிட்ல இந்த விஷயம் தெரிய வருது? நம்ம எம்.டி., சி.ஜி.எம் எல்லாம் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க? அவங்க யாருக்குமே ரிசர்வ் பேங்க்ல கனெக்ஷன் ஒன்னுமில்லையா? ஏன் கேக்கறேன்னா முன்னாலயே தெரிஞ்சிருந்தா ஆர்டர்ஸ் அங்கருந்து டெஸ்பாட்ச் ஆகறதுக்குள்ளயே ஏதாச்சும் செஞ்சிருக்கலாமில்லே..’

நாடார் சலிப்புடன், ‘ஆமா டாக்டர் அதுதான் எனக்கும் கோபம். கார்ல வர்ற வழியில் அந்த சுந்தரத்த ஒரு பிடி பிடிச்சிட்டுதான் வந்தேன். ஒன்னும் தெரியாம முளிக்கிறார்.. என்ன பண்ண சொல்றீங்க? சும்மா ஏ.ஜி.எம்மா கும்மியடிச்சிக்கிட்டிருந்தவன புடிச்சி ரெண்டு வருஷத்துல சி.ஜி.எம் ஆக்குனதுதான் மிச்சம்..  நம்ம எம்.டி என்னடான்னா கீழ இருக்கற ஆளுங்கக் கிட்ட சண்டை போடறதுக்கே நேரம் சரியாயிருக்கு. பேசாம எல்லாத்தையும் போங்கடான்னு வீட்டுக்கனுபிச்சிட்டு சின்ன பசங்கள ப்ரொமேட் பண்ணிரலாமான்னு கூட தோனுது. குறைஞ்ச பட்சம் நாம சொல்றயாவது கேட்டு செய்வானுங்கல்லே.. என்ன சொல்றீங்க செட்டியார்?’ என்றார்..

சோமசுந்தரம் புன்னகையுடன் அவர் கூறியதை ஆங்கிலத்தில் குத்து மதிப்பாய் மொழிபெயர்க்க ரஜ்ஜத் உரக்க சிரித்தார். ‘சுந்தர் ஐடியா டாக்டர் சாப்.’

‘யார்யா அந்த சுந்தர்.. டாக்டர், கபூர் என்ன சொல்றான்?’ என்றார்.

டாக்டர் சிரிப்பையடக்கிக் கொண்டு ‘இல்லை’ என்பதுபோல் தலையைசைத்தார். ‘இல்ல நாடார். நீங்க சொன்ன ஐடியா ரொம்ப நல்லாருக்குங்கறார். சுந்தர்னா ஹிந்தியில நல்லாருக்குன்னு அர்த்தம்.’

‘நாசமா போச்சு.’

ரஜ்ஜத் தொடர்ந்து சோமசுந்தரத்திடம். ‘Doctor I am told that Mr.Sundaram had gone to RBI two weeks back on their instructions?’

‘Is it? I did not know that?’ என்ற சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். இவனுக்கு தெரியாமயா சுந்தரம் போயிருப்பார். இந்தாளு தெரிஞ்சும் தெரியாதமாதிரி டிராமா போடறானா? 'என்ன நாடார்? கபூர் சொல்றது விளங்குதா?' என்றார்

தொடரும்..