29.11.06

சூரியன் 147

சேதுமாதவனின் வசவு வார்த்தைகள் அவருடைய கோபத்தை விட அவர் குடித்திருந்த மதுவின் தாக்கம்தான் என்பதைப் புரிந்துக்கொண்ட பத்மநாபன் பதில் ஏதும் பேசாமல் காத்திருந்தான்.

சேதுமாதவனின் குணம் பிடித்திருந்ததோ இல்லையோ அவர் ஏவும் வேலைகளுக்கு சற்று அதிகமாகவே அவர் அள்ளி வீசும் சன்மானம் அவனுக்கு மிகவும் பிடித்திருத்ததால்தானே அவரை இன்னமும் பொறுத்துக்கொண்டிருக்கிறான்? இல்லெங்கில் இயாளெ கொன்னு குவிக்கான் எத்தனெ மினிட்டு வேணும்.. பட்டி.. பிராந்தன்..

அவன் எதிர்பார்த்தது போலவே சற்று நேரத்தி சேதுமாதவனின் வேகம் குறைய, ‘எடோ எந்தா நோக்கி நிக்கனெ.. ரெண்டன்னம் எடுத்து வீசு.. தண்டெடுத்து பறயனோ..’ என்றவாறு குறுமேசையில் காலியாயிருந்த இரண்டு காலி தம்ளர்களில் ஒன்றைக் காட்டினார்.

‘இதான், இதான்.. சாரு.. தேஷ்யத்தோட சீத்த பறஞ்சாலும்.. இங்ஙனயும் கொடுக்கண்டல்லோ..’ என்று மனதுக்குள் அவரை புகழ்ந்தவாறு அவர் கூறுவதற்கென்றே காத்திருந்தது போல மணக்க, மணக்க மேலைநாட்டு சரக்கை சற்று தாராளமாகவே உற்றி சோடா கலந்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு வைத்தான். சூடாக தொண்டைக்குள் இறங்கிய மது அளித்த உற்சாக தலைக்கு ஏற கண்கள் சிவக்க சேதுமாதவனைப் பார்த்தான் பத்மநாபன்.

‘பறயு சார்.. ஞான் எந்தா ச்செய்யேண்டே..?’

சேதுமாதவன் அவன் விறைப்புடன் நின்ற தோரணையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தார். ‘எடோ பப்பா.. இதா, இதா, இதாண்ட வேண்டது..’ என்றவர் படு சீரியசானார். குரலை இறக்கி அவனை அருகில் வரும்படி அழைத்தார். நான்கு பெக்குகள் உள்ளே சென்ற தாக்கத்தில் நாக்கு குளறினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு பேசலானார்.

‘எடோ.. .. எஸ்.பி.. அயாள்டெ பேரெந்தான?’

பத்மநாபனுக்கு அவர் குறிப்பிட்ட எஸ்.பி முந்தைய தினம் தன்னை மடக்கிப்பிடித்த தனபால் சாராகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துக்கொள்ள முடிந்தது. ‘யாரா சாரே.. தனபாலான்னோ..’

‘அதே..ஆத் தெண்டியான.. அவன் இன்னு நம்மள்ட ஓஃபீசுக்கு வந்நிருந்நு..’

பத்மநாபனின் விழிகள் வியப்பால் விரிந்தன.. ‘எந்தா சாரெ பறயனெ? அத்தேஹம் எந்துனா..’

சேதுமாதவன் எரிச்சலுடன் அவனைப் பார்த்தார். ‘அத்தேஹமோ.. அவனெந்தா அத்தெறெ வெல்லிய ஆளானோ.. தனிக்கெந்தா அயாள்டெடுத்து அத்தெற ரெஸ்பெக்ட்டு.. அயாள்னு பறஞ்சா போறே?’

பத்மநாபனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.. ‘இல்ல சார்.. சாரி சார்..’

சேதுமாதவனின் கோபம் அப்போதும் குறையவில்லை. ‘எடோ தான் ஒரு தெண்டியான.. தனிக்கி வேணங்கிலு அயாளு வெலிதாவாம்.. எனிக்கி அவன் ஒரு புல்லா.. அறியோ..  எண்டெ லெவலுக்கு அயாளு ஒரு.. ஒரு.. எந்தா பறயா..’ மேற்கொண்டு தனபால் எஸ்.பியை அர்ச்சிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிவிட்டு சட்டென்று, ‘அது போட்டே.. தான் அயாள்டெடுத்து எண்டே பேரு பறஞ்சிண்டாயிருந்நோ..?’ என்றார்.

இந்த நேரடி தாக்குதலை முற்றிலும் எதிர்பார்த்திராத பத்மநாபன் சட்டென்று சமாளித்துக்கொண்டு, ‘ஞானா.. இல்லல்லோ சாரே..’ என்று பதிலளித்தான்..

சேதுமாதவன் அவனுடைய பதிலில் திருப்தியில்லாமல் அவனையே பார்த்தார். இவன் சொல்லியிருப்பான்.. ராஸ்க்கல்.. இவன் இல்லன்னா இவனோட லீடர் .. யாரவன்? பாஸ்கரன்.. கிடுக்கி பாஸ்கரன்..

‘தானில்லங்கில் தண்டெ நேத்தா உண்டல்லோ..  பாஸ்கரன்.. அவனானோ?’

சேதுமாதவனின் இத்தகைய விசாரனை உத்தி பத்மநாபன் அறிந்திருந்ததுதான். தன்னை தனியாக விசாரித்துவிட்டு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டே பாஸ்கரனிடமிருந்து பதிலை வரவழைக்கும் டெக்னிக் அவனுக்கு தெரியாதா என்ன?

‘இல்ல சார்.. யாரும் பறஞ்சில்லா..’ என்றான் உறுதியாக..

சேதுமாதன் நடுங்கும் கைகளுடன் அடுத்த பெக்கை ஊற்றுவதிலேயே குறியாயிருக்க பத்மநாபன் மீண்டும் இத்தகைய கேள்விகள் வந்தால் எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

‘ஷரி போட்டே.. எங்ஙனயோ.. அயாளு வந்நிருந்து..  ஆத்தெண்டி சேர்மனெ கண்டேச்சி போயி.. எந்தா சோய்ச்சிண்டாவும்? தனிக்கி எந்தெங்கிலும் தோனுனுண்டோ..?’

பத்மநாபன் உஷாராக, ‘அறியில்லா சார்..’ என்றான். நாமாக எதையாவது சொல்லப் போய் இந்தாளு மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டா நம்ம பாடு திண்டாட்டமாயிருமே என்ற நினைப்பு அவனுக்கு.

‘ஷரி.. எந்தெங்கிலும் பறஞ்சோட்டே... நமக்கு எந்து போயி.. ஞான் தன்னெ விளிச்ச காரியம் பறஞ்சேக்காம்..’ என்ற சேதுமாதவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘எடோ தான் இவ்விட வந்து இருக்கி.. ஞான் பறஞ்சோட்டே..’ என்றவாறு தன்னுடைய காலடியைக் காட்ட பத்மனாபன் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு அவர் காலடியில் அமர்ந்தான்.

‘எடோ..  முரளியுண்டுல்லே..’ என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்களில் அவர் இட்ட ஆணைகள் ஒரு நிமிடம் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

முரளியையா.. இந்தாளுக்கு ஏதாச்சும் பைத்தியம், கிய்த்தியம் பிடிச்சிருச்சா..

முரளி யாரு? நம்மள்டெ நாட்டுக்காரன்.. போறாததுக்கு ஒரு பேங்க்கோட யூனியன் லீடர். அவனெப் போயி..

இருப்பினும் மறுபேச்சு பேசாமல் அவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்தான். அவர் இறுதியில், ‘எந்தா ஞான் பறஞ்சது மனசாலாயோ?’ என்ற கேட்ட கேள்விக்கு பலமாக தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான்.

அவன் பதிலளிக்க முயல்வதற்குள் வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டது.

‘எடோ..  விஷ்வன் சாராயிருக்கும்.. தான் பொக்கோ.. ஞான் பறஞ்ச காரியம் நாளெ நடந்திருக்கணும்.. ஆத் தெண்டி நம்மள க்ராஸ் ச்செய்யான் நோக்குவா.. விடாம் பாடில்லா.. மனசிலாயோ..’

பத்மநாபனுக்கு அவர் கூறிய வேலையை முடிப்பதில் ஆர்வம் இல்லாவிடினும் வேறு வழியில்லாமல், ‘சரி சாரே..’ என்றவாறு கிளம்பினான்.

‘எடோ நிக்கு.. வேறொரு காரியம்..’ என்றார் சேதுமாதவன். ‘ஞான் இப்போ பறஞ்ச காரியம் பாஸ்கரன் அறியேண்டா.. கேட்டோ..’

பத்மநாபனுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. ‘சரி.. சார்.. பறயில்லா.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு படிகளில் வேகமாக இறங்க எதிரே வந்த விஸ்வநாதன் அவனை முறைத்தார். ‘இந்த பொறுக்கி எங்க இந்த நேரத்துல.. இவனுங்க சகவாசம் வேணாம்னு எத்தனெ தரம் சொன்னாலும் இவருக்கு புரிய மாட்டேங்குதே..’ என்று முனகியவாறு மேலே செல்ல கீழே ஹாலில் நின்றிருந்த திருவும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்த மாயாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

திருவுக்கு பத்மநாபனை அடியோடு பிடிக்காதென்றால் மாயாவுக்கோ விஸ்வநாதனையும் பிடிக்காது.. ‘Parasites..’ என்று முனகியவாறு ஏஷியாநெட்டில் அடக்க மாட்டாமல் அழுதவாறே  சிரிவித்யா பேசும் டயலாக்கைக் கேட்பதில் கவனத்தைத் திருப்பினாள்..

********

‘என்னடா ஒன் தோஸ்த்துங்க ஒருத்தனையும் காணம்? வெளக்கு வச்சதும் டாண்ணு வந்து நின்னுருவாய்ங்க..? என்னாச்சி இன்னைக்கி? அப்பன் வந்திருக்கான்.. அதனால வெளியில வச்சிக்கலாம்னு சொல்லிட்டியோ?’

இன்னைக்கி தாகசாந்தி செஞ்சிக்க முடியாது போலருக்கே என்று கடுப்புடன் சோபாவில் அமர்ந்திருந்த ராசேந்திரன் எரிச்சலுடன் தன் தந்தையைப் பார்த்தான். மனுஷன் எங்கயாச்சும் வெளியில போவாரு நாம நடைய கட்டலாம்னு பார்த்தா நடக்காது போலருக்கே..

‘என்னடா என்ன யோசிக்கறே.. நா எங்கயாச்சும் வெளியில போனா தோஸ்த்துங்கள பாக்க போயிரலாமேன்னுதானே..’

ராசேந்திரன் அவருடைய பேச்சைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எதிரே இருந்த தொலைக்காட்சி பெட்டியை முடுக்கிவிட்டான்..

சன் டிவியில் யாரோ அழுதுக்கொண்டிருக்க, அடுத்த சானலுக்கு தாவினான்.. ஜெயாவில் குஷ்பு அழுதுக்கொண்டிருந்தார்.. அடுத்த சானல்.. அடுத்த சானல் என எல்லாவற்றிலும் யாராவது ஒருத்தர் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுக்கொண்டிருக்க வெறுத்துப்போய் அணைத்துவிட்டு ரிமோட்டை தூர எறிந்தான்..

‘எலேய்.. அவளுங்களாவது துட்டெ வாங்கிக்கிட்டு அளுவறாளுங்க.. நீ செஞ்சி வச்சிருக்கற காரியத்துக்கு சீக்கிரமே விடிவு வரலைன்னு வச்சிக்கோ.. நானும் ஒங்கம்மாளும் சம்பளம் வாங்காமயே அளுவ வேண்டியதுதான்..’

இவர் வேற.. என்று மனதுக்குள் எரிச்சலுடன் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தான்..

‘என்ன ராசேந்திரா.. நா பேசறது வெளங்குதாலே. என் களுத்த பிடிச்சி நெரிச்சிரலாம்னு வருமே.’

அப்போதும் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான் ராசேந்திரன். அவன் பதில் பேசினால் நிச்சயம் அது வாக்குவாதத்தில் சென்றுதான் முடியும் என்று நினைத்தான்.

தனக்கு இப்படியொரு துர்பார்க்கிய நிலை ஏற்படும் என்று கடந்த மாதம் வரை நினைத்திருக்கவில்லை. ராசம்மாளை தான் புரிந்துக்கொள்ள தவறியதன் விளைவே இது என்று நினைத்தான்.

எல்லாம் அந்த செல்வத்தால வந்ததுதான். இருடா லேய்.. எப்படி என் பெஞ்சாதிய தூண்டிவிட்டு இந்த அளவுக்கு அவள வளத்துவிட்டியோ அதே மாதிரி ஒம்பொஞ்சாதியையும் பண்றேன்.. அவளும் படிச்சவதான..

ராசம்மா என்னெ பளிவாங்கணும்னு எறங்க ஆரம்பிச்சா அதுக்கு ஒன் தொனையில்லாம முடியாதுன்னும் அதுக்காக வேண்டி நீ இங்கயே வந்து செட்டிலாவேன்னும் எனக்கு தெரியும்லே.. நீ இங்கன இருக்கறப்போ நா அங்க போறேன்.. ஒம்பொஞ்சாதி மனச மாத்தறேன்.. ஒன்னால முடிஞ்சது என்னால முடியாதாக்கும்..

‘என்னலே பலமா யோசிக்கற போலருக்கு? ராசம்மா நம்மள  மாட்டிவிட்ட சுத்தல்லருந்து எப்படி தப்பிக்கலாம்னா.. இல்ல இன்னைக்கி பொளுது குடிக்க முடியாம போயிருச்சேன்னா..’

இவர் வேற. இடைக்கிடையில. அசரீரி மாதிரி.. பேசாம ஊர்லயே கிடக்க வேண்டியதுதானே.. என்னமோ தனக்குத்தான் எல்லாந் தெரியுங்கறா மாதிரி.. போவீயளா..

என்ன நினைத்தாரோ ரத்தினவேல் சட்டென்று எழுந்து நின்றார். ராசேந்திரன் அவரை நிமிர்ந்து பார்த்தான் என்ன என்பதுபோல்..

‘நா போயி ஒன் வக்கீல பார்த்துட்டு வரேன்.. காலையில போன பய.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கூப்ட்டு சொல்லலே.. அந்த சேட்ட பாத்துட்டு அப்படியே பேங்குக்கு போய்ட்டு வரேன்னுதானே ரெண்டு பேரும் பொறப்பட்டு போனானுவ?’

ராசேந்திரன் அவர் புறப்பட்டு போனால் போறும் என்று நினைத்தான். ‘சரிப்பா.. நீங்க போய் பார்த்துட்டு வாங்க..’

ரத்தினவேல் உரக்கச் சிரித்தார்.. ‘அதான பார்த்தேன்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை எப்ப காலியாவுங்கறா மாதிரிதானெ நீ சிந்திக்கே.. அப்பன் இந்த பக்கம் போனதும்.. நாம எளுந்து நம்ம பசங்கள பாக்க போயிரணும்.. அதான ஒன் நெனப்பு?’

‘ஆமா அதுக்கென்ன இப்போ..? என்றான் ராசேந்திரன் எரிச்சலுடன்..எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ்தான் முக்கியம்.. அவன்களோட ஒரு அஞ்சு நிமிசம் பேசினா எனக்கு ஏதாச்சும் ஐடியா கெடைக்கும்..’

‘அது என்னமோ சரிதான்..’ என்றார் ரத்தினவேலு கேலியுடன்.. ‘சரக்க உள்ள தள்ளினாத்தானல்லே வண்டி ஓடும்.. போ.. தாராளமா போய்ட்டு வா..’

விட்டால் போதும் என்று நினைத்த அவர் மீண்டும் மனம் மாறுவதற்குள் புறப்படும் நோக்கத்துடன் டீப்பாயில் கிடந்த தன்னுடைய கார் சாவையை எடுத்துக்கொண்டு எழுந்தான்..

‘ஆனா ஒன்னுலே..’ என்று ரத்தினவேல் குறிக்கிட என்ன என்பதுபோல் எரிச்சலுடன் பார்த்தான்.

‘நீ திரும்பி வரும்போது ஒங்கப்பன் போயிருப்பான்.. அப்புறம் நீயாச்சும் ஒம்பொஞ்சாதியாச்சி.. ஒன் பிரச்சினையில இந்தப்பன் தலையிடமாட்டாங்கறது மட்டுமில்ல.. இவன் என் பிள்ளையே இல்லேன்னு காலையில பத்திரிகையில வராமாதிரி செஞ்சிருவேன்.. அப்புறம் ஒன் இஷ்டம்..’

ராசேந்திரனுக்கு இது கேட்டு, கேட்டு புளித்துப் போயிருந்தது. இதையே சொல்லி, சொல்லி இந்த மனுசன் எத்தனெ வருசத்துக்குத்தான் மிரட்டுவாரு.. போய்யா நீயும் ஒன் சொத்தும்னு போய்ட்டா என்ன? என்று சிந்தித்தான்..

ஆனால் அடுத்த நொடியே அடுத்த வேளை குடிக்க என்ன சாப்பாட்டுக்கே வழியிருக்காதே என்ற நினைப்பு வர சுருதியிறங்கி, ‘இப்ப என்ன பண்ணணும்னு சொல்றீங்க? அதையாவது சொல்லுங்க.’ என்றான்.

நாடார் சிரித்தார். ‘அப்படி வாடா மவனே.. போயி.. கார எடு.. நாம ரெண்டு பேருமாவே போயி பாத்துட்டு வருவோம்..’

ராசேந்திரன் தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டே கையில் சாவியுடன் வாசலை நோக்கி நடக்க ரத்தினவேல் தனக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தார் வீட்டைப் பூட்டிக்கொண்டு.

தொடரும்..
     

27.11.06

சூரியன் 146

நாடார் தன்னுடைய செல் ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த மோகனைப் பார்த்தார்.

அவர் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்ததிலிருந்தே தான் ஃபிலிப் சுந்தரத்திடம் பேசிய தோரணையில் அவருக்கு உடன்பாடில்லை என்பதைப் புரிந்துக்கொண்டார்.

உதடுகள் கேலியுடன் வளைய, ‘என்ன தம்பி தலையக் குனிஞ்சிக்கிட்டீங்க? நான் பேசன ஸ்டைல் ஒங்களுக்கு பிடிக்கல.. சரிதான?’ என்றார்.

மோகன் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். பதிலளிக்காமல் அமர்ந்திருந்தார்.

நாடார் எழுந்து நின்றார். ‘பெறவென்ன தம்பி.. யார்யா ஃபேக்ஸ அனுப்புனா கேட்டா சட்டுன்னு சொல்லிற வேண்டியதுதான? எதுக்கு சவ்வு மிட்டாய் மாதிரி இளுக்கறது? அவருக்கென்ன.. அந்த டாக்டர் பய நான் அனுப்புனேன்னுல்ல நெனச்சிக்கிட்டிருக்கான்? இல்ல தம்பி, தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த பயல போர்ட விட்டு அனுப்பனும்னு நா எதுக்கு நெனெக்கப் போறேன்? எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு வருசத்துக்குள்ள போகத்தான போறீரு.. பெறவென்ன? களவாணிப்பய.. என்னதான் சொல்லுங்க தம்பி.. அந்த யூனியன்காரப் பய பயங்கர கில்லாடிதான் போங்க.. அவன் மட்டும் இத ஃபேக்ஸ் வழியா அனுப்பலேன்னு வைங்க.. இந்த பயலும் அவன் ஆடிட்டருமா சேர்ந்துக்கிட்டு அந்த நியூச வெளியவே வரவிடாதபடி செஞ்சிருப்பாய்ங்க.. என்ன தம்பி, நாஞ்சொல்றது சரிதான?’

மோகன் அவரை மவுனமாகப் பார்த்தார். பிறகு இல்லையென்று தலையை அசைத்தார்.

நாடாருடைய முகம் சட்டென்று கோபத்தில் சிவந்துபோனது. ‘என்ன தம்பி சொல்றீங்க..?’

‘நா சொல்ல வந்தது அது இல்ல.. அந்த ஃபேக்ஸ் விஷயம்..’

நாடார் கோபத்துடன், ‘நா மட்டும் இவ்வளவு நேரமா அந்த ஃபேக்ஸ் விசயத்தத்தான தம்பி பேசிக்கிட்டிருக்கேன்..’ என்றார். ‘என்னாச்சி ஒங்களுக்கு? நீங்களும் அந்த சுந்தரம் ஐயா மாதிரியே பேசறீங்க?’

மோகனின் உதடுகள் அவரையுமறியாமல் புன்னகையுடன் விரிந்தன. ‘நா சொல்ல வந்தது சேர்மனுக்கு வந்த ஃபேக்ஸ பத்தியில்ல.. சுந்தரம் சார அனுப்ப சொன்னீங்களே அதப்பத்தி.’

நாடார் உரக்கச் சிரித்தார். ‘ஓ! நீங்க அதச் சொல்றீங்களா? ஏன்.. கேட்டதுல என்ன தப்பு?’

‘அது ஒரு ரகசியமான லெட்டராச்சே.. அத எப்படி சி.ஜி.எம் ராங்லருக்கற ஒருத்தர் ஒங்களுக்கு அனுப்புவார்? எதுக்கு நாடார் அவர தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?’

நாடார் மீண்டும் சிரித்தார். ‘நல்ல ஆளுங்கய்யா.. அதிகமா படிக்கறதோட வெனயா இதெல்லாம். எத செய்யச் சொன்னாலும் அது சரியாருக்குமா, தப்பாருக்குமான்னுல்லாம் யோசிச்சிக்கிட்டிருந்தா... எய்யா.. நா என்ன அவரெ களவு செய்யிங்கய்யான்னா கேக்கேன்? ஒரு லெட்டர்.. அத கேக்கறதுல என்னய்யா தப்பு? அத வச்சிக்கிட்டு நா என்ன கோட்டையையா புடிச்சிறப்போறேன்..? இதுக்கு எதுக்கு சங்கடப்படறது?’

மோகனுக்கு இவரிடம் இதைக் குறித்து மேலும் விவாதிப்பதில் பயனில்லையென்று தோன்றியது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கத் தெரிந்த இவரைப் போன்றவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி எங்கே நினைப்பு இருக்கப் போகிறது?

‘என்ன தம்பி சைலண்டாய்ட்டீங்க?’

‘இல்ல நாடார்.. நீங்க நெனக்கறதுல தப்பு இருக்கா இல்லையாங்கறதில்ல பிரச்சினை. சுந்தரம் சார் ஒரு பொறுப்பான பதவியில இருக்கறவர். அதுமட்டுமில்ல. நிச்சயமா நீங்க கேட்ட லெட்டர் அவர் கைவசம் இருக்க சான்ஸ் இல்ல. அத அவர் கேட்டு வாங்குனாலும்.. அவருக்கு பெர்சனலா ஒரு ஃபேக்ஸ் இருந்தாத்தான் யாருக்கும் தெரியாம ஒங்களுக்கு அவரால அனுப்ப முடியும்.. இருந்தாச் சரி.. இல்லாட்டி? வேற யார் மூலமாவதுதான அனுப்பணும்? அப்புறம் அத ரகசியமா வச்சிருக்கறதெப்படி? அதத்தான் சங்கடம்னு சொல்றேன்..’

நாடார் பதிலளிக்காமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு திரும்பி மோகனைப் பார்த்தார். ‘இதுக்குத்தான்யா படிச்சிருக்கணுங்கறது.. சரியா பிட்டு, பிட்டு வச்சிட்டீங்க தம்பி.. நீங்க சொல்றது சரிதான்.. அதுக்குத்தான் அந்த சுந்தரம் அப்படி யோசிச்சிருக்கார்.. சரி.. ஃபேக்ஸ்ல வேணாம்.. ஒரு ஆள விட்டு வாங்கிருவோம்.. என்ன தம்பி?’

மோகன் நொந்துப் போனார். சரி.. மனுஷன் இந்த விஷயத்த விட்டுருவார்னு பார்த்தா.. ஃபேக்ஸ் அனுப்பறதவிட இது மோசமான விஷயமாச்சே.. நாடார் அனுப்புற மனுசன் அஜாக்கிரதையா அந்த லெட்டர வழியில தொலைச்சிட்டு வந்து நின்னா வேற வெனையே வேணாம்.. அந்த லெட்டர வச்சிக்கிட்டு என்ன செய்யறதா உத்தேசம்னு வெளிப்படையாவே கேட்டுட்டா என்ன?

‘என்ன தம்பி அந்த லெட்டர நா எதுக்கு இப்படி விடாப்பிடியா கேக்கறேன்னு பாக்கீங்களோ?’
மோகன் வியப்புடன் அவரைப் பார்த்தார். நாம மனசுல கூட ஒன்னையும் நினக்க முடியாது போலருக்கே..

நாடார் மீண்டும் எழுந்து அறையின் குறுக்கே நடக்க ரம்பித்தார். ‘தம்பி.. இது நீங்க நெனைக்கறா மாதிரி சின்ன விஷயமில்ல.. ஏன்னு கேளுங்க.. நா தெரியாத்தனமா இந்த லெட்டரப் பத்தி அந்த டாக்டர் பயகிட்ட சொல்லிட்டேன்.. அவனோட குறுக்குப் புத்தி இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கும்.. நாளைக்குள்ள அந்த லெட்டரையே இருக்கற எடம் தெரியாம செஞ்சிட்டாலும் செஞ்சிருவான்.. புது சேர்மனுக்கு இந்த வெவரம் தெரியாதுல்ல தம்பி.. அதான்.. அதுக்குத்தான் அந்த ஃபேக்ஸ் காப்பி..’

மோகன் அதிர்ச்சியில் என்ன பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தார். இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதோ.. பாம்பின் கால் பாம்பறியும்னு சும்மாவா சொன்னாங்க?

******

ஃபிலிப் சுந்தரம் நாடாருடைய வில்லங்கம் பிடித்த கோரிக்கையிலிருந்து எப்படி தப்புவதென தெரியாமல் சற்று நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தார். பிறகு சட்டென நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய இண்டர்காம் வழியாக மாதவனின் காரியதரிசி சுபோத்தை அழைத்தார்.

எதிர் முனையில் தொலைப்பேசி உபயோகத்திலிருந்தது தெரிந்தது. எழுந்து முதல் வேலையாக தன்னுடைய செல்ஃபோனை அணைத்து பாக்கெட்டில் வைத்தார். அதால் இன்று பட்ட பாடு போதும் என்று தோன்றியது. இதற்கு மேலும் சோமசுந்தரமோ அல்லது நாடாரோ அழைத்து அவதிப்பட அவர் தயாராக இல்லை. மேசை மீதிருந்த மடிக் கணினியை மூடி இழுப்பில் வைத்து பூட்டினார். சனிக்கிழமைகளைத் தவிர வார நாட்களில் அவர் கணினியை வீட்டிற்கு கொண்டு செல்வதில்லை. வீடு திரும்பியதும் உடையை மாற்றிக்கொண்டு காலையில் செல்லும் ஜிம்முக்கே உடை பயிற்சிக்காகச் செல்வது வழக்கம். திரும்பி வந்து இரா உணவை தயாரித்து உண்டு சற்று நேரம் பிரார்த்தித்துவிட்டு பத்து மணி செய்தியைக் கேட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவார். ஆகவே, அவருக்கு வார நாட்களில் வீட்டில் கணினி தேவைப்பட்டதில்லை.

அவர் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியேறி வெளியே அமர்ந்திருந்த தன்னுடைய பிரத்தியேக அலுவலக அதிகாரிகளை ஒரு பார்வை பார்த்தார். தன்னை நிமிர்ந்து நோக்கிய அதிகாரியிடம் நான் போறேன் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நேரே சேர்மனின் அறை இருந்த நான்காவது மாடிக்கு விரைந்தார்.

நாடார் விரும்பிய கடிதம் இருந்த கோப்பு முந்தைய சேர்மனின் தனிப்பட்ட பொறுப்பில்தான் இருந்ததாக நினைவு அவருக்கு. ஆகவே அதை இப்போதே வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்தார்.

நாடாருடைய வேண்டுகோளை நாம் பூர்த்தி செய்யக் காண்பித்த தயக்கம் அவரை வேறு யார் மூலமாகவாவது முயற்சி செய்ய ஒருவேளை தூண்டலாம் என்று நினைத்தார் சுந்தரம்.

It should somehow be prevented.. It might lead to unnecessary complications.. Mr.Madhavan also may not like it.. Subodh should be advised to be careful..

ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவர் அங்கு சென்றடைந்தபோது சுபோத்தின் இருக்கை காலியாக இருந்தது. விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு அந்த தளத்தின் பிரத்தியேக பாதுக்காப்பு அதிகாரியைத் தவிர எவரும் இல்லாமலிருக்கவே ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தார்.

********

சுபோத் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை முடுக்கி சாலையில் இறங்கி வாகன நெரிசலில் கலந்தான். மாலை நேர நெரிசலில் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டியிருந்தது.

சற்று முன் முரளியுடன் தொலைப்பேசியில் பேசியது அவனது மனதை நெருடிக்கொண்டே இருந்தது.

தொலைப்பேசியில் முரளி விடுத்தது ஒரு மிரட்டலோ என்று கூட எண்ணத் தோன்றியது.

சென்னைக்கு அவன் மாற்றலாகி வந்து நான்கு வருடங்கள்..

முந்தைய மும்பைவாசம் அலுத்துப் போய் சென்னை வந்தவனுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மிகவும் பிடித்துப் போனதென்னவோ உண்மைதான்.

ஆங்கிலம் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மராத்தியில் பேச விரும்பும் மும்பைவாசிகளுடன் ஓப்பிடுகையில் சென்னையில் ரிக்ஷ¡ ஓட்டுனர் முதல், பால்காரர், காய்கறி வியாபாரி என சகலரும் அரைகுறை ஆங்கிலத்திலாவது பேசி அவனைப் போன்ற மொழி தெரியாதவர்களின் சங்கடத்தைக் குறைக்க முயன்றது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தவர் விஷயத்தில் அதீத விருப்பம் காட்டும் சென்னைவாசிகளின் அன்புத் தொல்லையும் நாளடைவில் பழகிப் போக மும்பைவாசிகளின் யாரையும் ஒரு பொருட்டாக கருதாத விட்டேத்தியான குணத்துக்கு இது மேல் என்றே தோன்றியது...

அலுவலகத்திலும் அவனுக்கு எந்தவித சங்கடமும் இருந்ததில்லை. அலுவலகத்தில் கடைநிலை ஊழியனுக்கும் ஆங்கிலத்தைப் புரிந்துக்கொள்ளக் கூடிய திறமை இருந்ததைப் பார்த்தான். மும்பையை ஒப்பிடுகையில் இங்கே வேலையில் ஒரு ஒழுக்கமும், சட்டத்திட்டங்களுக்கு பணியும் குணமும், நட்புடன் பழகும் விதமும் அவனை மிகவும் கவர்ந்துபோக நிர்வாகமே தன்னை மாற்றாத வரையில் இங்கேயே பணிபுரியும் நோக்கத்துடன் இருந்தான்.

தலைமையகத்தில் எச். ஆர் இலாக்காவில் பணிபுரிந்துக்கொண்டிருந்த அவனுடைய திறமையையும், அடக்கத்தையும் கவனித்த இலாக்கா தலைவரின் பரிந்துரையால் முந்தைய சேர்மன் பதவியேற்றவுடன் அவருக்கு அந்தரங்க காரியதரிசியாக நியமிக்கப்பட்டான்..

அவரும் அவனுடைய அதீத புத்திசாலித்தனத்தால் கவரப்பட அதே பதவியில் இதோ இரண்டரையாண்டு காலம்.. அவ்வப்போது சேதுமாதவன் சார் தரும் தொல்லைகள் இருந்தாலும் அவன் மீது முழுநம்பிக்கை வைத்திருந்த ஃபிலிப் சுந்தரம் சாரும் வந்தனா மேடமும் அளித்த ஆதரவில் எந்த பிரச்சினையுமில்லாமல் அவனால் பணியாற்ற முடிந்தது.

ஆனால் முந்தைய சேர்மன் யாரும் எதிர்பாராத நேரத்தில் பதவி விலக அந்த பதவிக்கு சேதுமாதவன் சார் முயற்சி செய்து தோற்க கடந்த ஒரு மாதகாலமாக அவன் அனுபவித்து வந்த சங்கடம் கடந்த இரு நாட்களாக உச்சத்திற்கு எட்டியிருந்ததாக கருதினான்.

அதுவும் இன்று எப்போதும் இல்லாமல் ஃபிலிப் சுந்தரம் சாரும் தன்னை சாடுவார் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை..

இறுதியில் இந்த முரளி வேறு..

அவன் முரளியின் பெயரை வேறு வழியில்லாமல் சுந்தரம் சாரிடம் சொல்ல வேண்டிவந்துவிட்டது என்று அவனிடம் தொலைப்பேசியில் கூறியபோது ஆரம்பத்தில், ‘It is Ok.. நா பார்த்துக்கறேன்.’ என்றவன் இறுதியில், ‘இருந்தாலும் ஒங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன் சுபோத்.. இதுல நீங்க ஏதாச்சும் டர்ட்டி கேம் விளையாடுனீங்கன்னு கேள்விபட்டேன்.. அப்புறம் ஒங்கள ஊர விட்டே ஓட்டிருவேன்.. ஜாக்கிரதை..’ என்றவுடன் கலங்கிப் போனான்.

‘சிக்னல் போட்டது கூட தெரியாம என்னத்த சார் யோசிச்சிட்டிருக்கீங்க? போங்க சார்.. பின்னால எத்தனெ வண்டி நிக்குது பாருங்க.’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு தன் எதிரில் கோபத்துடன் நின்ற போக்குவரத்து காவலரைப் பார்த்தான். ‘சாரி.. சார்’ என்றவாறு வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு விரைந்தான்..

ஆனால் மனமோ முரளியின் இந்த மிரட்டலை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று சிந்திக்கத் துவங்கியது..

தொடரும்..

24.11.06

சூரியன் 145

ஊமையாகிப் போன செல்ஃபோனை அணைத்துவிட்டு தன்னுடைய படுக்கையில் அமர்ந்த பாபு சுரேஷ¤க்கு அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் பிடித்தன.

இதுவரை சோமசுந்தரம் அவரிடம் இப்படி நடந்துக்கொண்டதில்லை என்பதை நினைத்துப் பார்த்தார்.

இன்னைக்கிக் காலையிலதான் மனிதர் என்னைத் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று புது சேர்மன் முன்னிலையில் தன்னைக் காட்டினார்? அதற்குள் என்னாயிற்று? தன்னுடைய பதவி பறிபோன வருத்தத்தில் தன்னிடம் தொலைப்பேசியில் பேசியிருப்பாரோ என்றும் தோன்றாமலில்லை.

ஒருவேளை வங்கியின் இயக்குனர் குழுவில் நாம் இனிமேல் இருக்கப் போவதில்லையே? அதற்குப் பிறகு அந்த பயிற்சி அதிகாரிகளை பணிக்கு சேர்க்க தன்னால் எப்படி சாத்தியமாகப் போகிறது? அதற்குத்தானே இவனை எச்.ஆர் இலாக்காவின் தலைவராக நியமிக்கவிருந்தோம்? முன்னது சாத்தியமில்லாதபோது பின்னது இனி எதற்கு என்று நினைத்திருப்பாரோ?

ஏற்கனவே சோமசுந்தரத்தின் கோரிக்கையைத் தட்டமுடியாமல் தனது அதிகார வரம்பை மீறி பல காரியங்களை செய்திருந்த பாபுவுக்கு அவருடைய ஆதரவும் இல்லாமல் போனால் தன்னுடைய நிலமை என்ன ஆகுமோ என்ற அச்சம் பிடித்துக்கொண்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்க வேண்டிவரும் என்று சோமசுந்தரம் இயக்குனர் பதவியிலிருந்த கடந்த ஏழாண்டு காலத்தில் பாபு கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவர் சோமசுந்தரத்தின் ஆள் என்று வங்கியிலிருந்த அனைவருக்குமே தெரிந்துதானிருந்தது. அதனாலேயே தனக்கு இணையாக மற்றும் தனக்கு மேலிருந்த பல அதிகாரிகளுக்கும் தன் மீது அத்தனை நல்ல அபிப்பிராயமில்லை என்பதும் அவருக்கு தெரியும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் சென்னைக் கிளையொன்றில் மேலாளராக இருந்த காலத்தில் சோமசுந்தரத்திற்கு அவர் தன்னுடைய அதிகார வரம்பை மீறி வழங்கிய கடன்களைக் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டபோதே அவருடைய அலுவலக வாழ்க்கையில் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சோமசுந்தரம் தன்னுடயை இயக்குனர் பதவியளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருடைய பதவியைக் காப்பாற்றியதும் நினைவிருந்தது.

ஆனால் சோமசுந்தரத்தின் பதவியே பறிபோய்விட்ட சூழலில் அந்த பழைய கோப்புகளை மீண்டும் திறந்து தற்போது ரவி பிரபாக்கருக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் தன் மீதும் பாயுமோ என்று அஞ்சினார்.

முந்தைய சேர்மனின் பதவிகாலத்தில் வங்கியிலேயே மிகச் சிறந்த மேலாளர் என்ற விருதைப் பெற்ற ரவிக்கே இந்த கதியென்றால் தன்னைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கலானார்.

சோமசுந்தரத்தின் பதவிகாலம் முடிய இன்னும் ஐந்தாறு மாதங்கள் இருக்கும் சூழலில் அவருடைய இடத்தில் யார் அமர்த்தப்படப் போகிறார்கள் என்பதிலும் தன்னுடைய எதிர்காலம் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார். நிச்சயம் நாடார் அல்லது குழுவிலிருந்த மற்ற எந்த இயக்குனருடைய நாமினியையும் தன்னுடைய இடத்தில் அமர்த்தப்படுவதை சோமசுந்தரம் அனுமதிக்கமாட்டார் என்பதும் பாபுவுக்குத் தெரியும்.

சோமசுந்தரத்தின் பரிந்துரையில் அமர்த்தப்படும் எந்த நபரும் அவருக்கு தேவைப்பட்ட சமயத்தில் உதவி புரிந்த தனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கமாட்டார் என்றும் அவருடைய சிந்தனை ஓடியது.

ஆக, அடுத்த சில மாதங்களில் தனக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்ற நினைப்பே அவருக்கு ஆறுதலை அளித்தது.

நடக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தை நினைத்து எதற்கு நாம் வருத்தப்பட வேண்டும்? நம்முடைய மனதில் இப்படியொரு வருத்தம் குடிகொண்டிருந்தால் நடக்கவிருக்கும் ரம்யாவின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திவைக்க முடியாதே..

நமக்கு இப்போது அதுதான் முக்கியம். குடும்பத்தில் இதுவரை இல்லாத சமாதானமும் சந்தோஷமும் ஏற்பட்டுள்ள இந்நேரத்தில் தன்னுடைய அலுவலகத்தையும் தனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் பற்றி நினைத்து அதைக் கெடுத்துவிடலாகாது என்ற உறுதியுடன் கட்டிலிலிருந்து எழுந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தார்..

I should keep this thought aside for the time being.. at least till this marriage gets over..

இந்த நினைப்புடன் அறையை விட்டு வெளியேறி மாடியிலிருந்து கீழே ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி கையில் ஒரு லிஸ்ட்டை வைத்துக்கொண்டு மும்முரமாக விவாதித்துக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியையும் மகளையும் பார்த்தார்.

‘ஏய்.. என்ன ரெண்டு பேரும் ரொம்ப பிசியா இருக்கீங்க போலருக்கு?’ என்றவாறு புன்னகையுடன் அவர்களை நோக்கி படிகட்டில் இறங்கினார்.

******

சீனிவாசனின் வீட்டிலிருந்து புறப்பட்டபோது மைதிலியின் மனதில் இனந்தெரியாத ஒரு சந்தோஷம் நிறைந்திருந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால் தன்னுடைய வீட்டை நெருங்க, நெருங்க அந்த சந்தோஷம் கொஞ்சம், கொஞ்சமாக மாறி இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோர்களிடம் எப்படி எடுத்துரைக்கப் போகிறோம் என்ற ஒருவித அச்சமாக உருவெடுத்தது.

ஆரம்பத்தில் சீனிவாசனும் அவளும் நண்பர்களாக பழகியதற்கே அவளுடைய தந்தை உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நினைத்துப் பார்த்தாள் மைதிலி.

‘இது ஒனக்கு வேணும்னா இது வெறும் நட்பா இருக்கலாம் மைதிலி.. ஆனா அந்த பையன் என்னத்தெ நெனச்சிக்கிட்டிருக்கானோ தெரியலையே.. அந்த பையன் போதை பொருளுக்கு அடிமையாகி அவஸ்த்தைப் பட்டிருக்கற சமயத்துல நீ அவனெ சந்திச்சே.. அதனால அவன் மேல பச்சாதபம் வந்திருக்கலாம்.. இல்லேன்னு சொல்லல.. அந்த பையன அந்த பழக்கத்துலருந்து விடுவிக்கத்தான் அவனோட ஃப்ரண்ட்ஷிப்ப வச்சிக்கிட்டிருக்கேன்னும் எனக்கும் அம்மாவுக்கும் தெரியுது..  ஆனா வீட்டுல அன்பு கிடைக்கலேங்கறதுக்காக போதை பழக்கத்துக்குள்ளான அந்த பையன் நீ காட்டுற பச்சாதாபத்த வேற விதமா நெனெச்சுட்டா? அப்போ என்ன செய்யறதா உத்தேசம்?’

'அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுப்பா.. நீங்க எதுக்கும் சும்மான்னாச்சும் எதெதையோ கற்பனைப் பண்றேள்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கறது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்..' என்று அப்போது தந்தையின் வாதத்தை ஏற்க மறுத்த தன்னுடைய கண் முன்பே அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் மத்தியிலிருந்த நட்பு சீனிவாசனின் கண்மூடித்தனமான பிடிவாதத்தால் மறுக்க முடியாத காதலாக உருவெடுத்ததை உணர்ந்தும் மைதிலியால் ஒன்றும் செய்ய இயலாமற் போனது.

சீனிவாசன் தன்னுடைய காதலை அவளிடம் தெரிவித்த ஒவ்வொரு முறையும் அதை கேலியுடன் ஒதுக்கித் தள்ளிய மைதிலி அவன் மீதிருந்தது வெறும் நட்பு மட்டுமே என்று நினைத்திருந்தாள்.

ஆனால் மைதிலியுடனான தன்னுடைய காதலை அவளுடைய தந்தை ஒத்துக்கொள்ளப் போவதில்லையென்பதை அவர் மூலமாகவே அறிந்துக்கொண்ட சீனிவாசன் அவளை மறந்து மும்பையை விட்டு நிரந்தரமாக செல்வதென தீர்மானித்தபோதுதான் அவனுடான தன்னுடைய உறவு வெறும் நட்பு மட்டுமல்ல என்பதை உணர்ந்தாள் மைதிலி.

கடந்த பத்து நிமிடங்களாக பாந்த்ரா சந்திப்பில் வழக்கம்போல போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தன்னுடைய வாகனத்தில் அமர்ந்திருந்த மைதிலிக்கு இந்த பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்தால் போதும் என்று தோன்றியது.

இப்படித்தான் ஒருமுறை அவர்கள் மூவரும் மத்துங்காவிலிருந்த ஷண்முகானந்தா அரங்கில் ஒரு இசைக் கச்சேரிக்குச் சென்றுவிட்டு இரவு பதினோரு மணிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சயான் சந்திப்பில் நெரிசலில் சிக்கிக்கொண்டு அரைமணிக்கும் கூடுதலாக இருந்த இடத்தில் நகர முடியாமல் தவித்தபோது, ‘எதுக்கும்மா இந்த அவஸ்தை? பேசாம இங்கருந்து போயிரலாம்.’ என்று மைதிலி கூற,

'எங்கடி போவே.. அந்த பட்டிக்காட்டு சிரீரங்கத்துக்கா?’ என்றாள் அவளுடைய தாய் ஜானகி எரிச்சலுடன்.

‘என்னம்மா நீ..  நீ பொறந்து வளர்ந்த ஊர் இப்போ ஒனக்கு பட்டிக்காடா போயிருச்சா? நீ ரொம்பத்தான் மாறிட்டம்மா.’

‘ஏய்.. ஏய்.. செத்தெ நிறுத்தறேளா? யாரும் இந்த பம்பாய விட்டுப் போகப் போறதில்லே.. இந்த டிராஃபிக் ஜாமெ இன்னைக்கி நேத்தாடி பாக்கறேள்.. இப்ப வீட்டுக்கு எப்படி போய்ச் சேர்றதுன்னு பாக்கறத விட்டுட்டு ஆர்க்யூ பண்ணாதேள்.. ஆட்டோக்காரன் ஒரு மாதிரி பாக்கறான் பார்.. இவாளுக்கு ஹிந்தி தெரியாது போலருக்குன்னு நெனச்சுண்டு ஆட்டோக்கு மேல ஜாஸ்தியா ஏதாச்சும் கேப்பான் பாத்துண்டே இருங்கோ..’ என்றார் பட்டாபி குறுக்கிட்டு..

தனக்கு பின்னாலிருந்த வாகனங்களின் ஹார்ன் ஒலி அவளுடைய நினைவுகளிலிருந்து மீட்க தன்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு விரைந்த  மைதிலியின் மூளை தன்னிச்சையாக வாகனத்தைச் செலுத்த அவளுடைய மனமோ அவளுக்கு முன்னேயிருந்த பிரச்சினையை விட்ட இடத்திலிருந்து மீண்டும் அலச ஆரம்பித்தது..

இப்படிப்பட்ட அப்பாவா சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயரலாம் என்ற தன்னுடைய யோசனையை ஏற்றுக்கொள்ளப் போகிறார்? சரி.. என்னுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கும் பட்சத்தில் என்னுடைய பதில் என்னவாயிருக்கும்?

I am sorry Dad.. My relationship with Sreeni is more important to me than anything else in this world.. என்று தன்னுடைய பெற்றோர்களை உதறியெறிந்துவிட்டு சீனியுடன் சென்னை சென்றுவிட முடியுமா தன்னால்?

அப்படியொரு சூழ்நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டவாறு வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்துவதில் முனைந்தாள் மைதிலி.

****

அலுவலக நேரம் முடிந்து வெகு நேரமாகியும் சுபோத் மிகவும் சோர்வுடன் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான்.

அன்றைய தினம் தனக்கு ஒரு பெரிய சோதனை தினமாக இருந்துவிட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்து மருகினான்.

அவனுடைய தலைமையகத்தில் ஒரு அதிகாரியாக பணிக்கு சேர்ந்த இந்த நான்காண்டு காலத்தில் இன்று முதன் முறையாக ஃபிலிப் சுந்தரத்தின் கோபத்திற்கு ஆளானதை மட்டும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சேதுமாதவன் அவனிடம் தரக்குறைவாகப் பேசியதுகூட அவனுக்கு பெரிதில்லை. அவருடைய பிறவிக் குணமே அதுதான் என்று தலைமையகத்தில் இருந்த அனைவருக்குமே தெரிந்ததுதான்..

ஆனால் எப்போதுமே நிதானம் தவறாத ஃபிலிப் சார்..

எல்லாம் அந்த முரளியால் வந்த வினை..

எதற்கு அவன் என்னை இந்த காரியத்துக்கு தேர்ந்தெடுத்தான்?

அவனுடைய சகாக்கள் எத்தனையோ பேர் இதே அலுவலகத்தில் இருக்க என்னை மட்டும் ஏன்?

முரளியை நினைத்ததுமே அவனுடைய பெயரை ஃபிலிப் சுந்தரத்திடம் தெரிவித்துவிட்டோமே அதனால் தனக்கு வேறு வழிகளில் ஏதேனும் பிரச்சினை வந்து சேருமோ என்ற கலக்கமும் பிடித்துக்கொள்ள இப்போது என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான்..

முரளியின் பெயரை நாம் கூறியதாக யாரிடமும் கூறுவதில்லையென்று ஃபிலிப் சார் உறுதியளித்திருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர் சேர்மனிடமோ அல்லது வேறு எவரிடமோ கூறிவிட்டால் முரளி வழியாக தனக்கு நிச்சயம் பிரச்சினை வரும் என்று கருதினான்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று முரளியையே தொலைப்பேசியில் அழைத்து தன்னிடமிருந்து சாமர்த்தியமாக அவனுடைய பெயரை ஃபிலிப் சார் வரவழைத்துவிட்டார் என்று கூறிவிட்டாலென்ன?

அவனாக வேறு வழியாகக் கேள்விப்படுவதற்கு முன் நாமாகவே அவனிடம் கூறிவிடுவது மேல் என்று நினைத்து தன்னுடைய செல்ஃபோனை எடுத்து முரளியின் எண்ணைத் தேடலானான்.

தொடரும்..

21.11.06

சூரியன் 144

ரவி தயாரித்து வைத்திருந்த அறிக்கையை வழக்கறிஞர் நாராயணசாமி படித்து முடிக்கும்வரை அமைதியாக அவருடைய வீட்டு அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் ரவி.

மஞ்சுவும் நாராயணசாமியின் மனைவியும் சமையலறையில் இரவு சமையலில் ஈடுபட்டிருக்க வீடே அமைதியாக இருந்தது.

ரவி தன்னெதிரில் அறிக்கையை வாசிப்பதில் கவனமாயிருந்த வழக்கறிஞரையே பார்த்தான்.

தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருப்பவைதான் தன்னுடைய வாழ்க்கையின் போக்கையே தீர்மானிக்கவிருக்கின்றன என்பதை அவன் அறிந்திருந்தான்.

நாராயணசாமியின் வாதத்திறமை வேண்டுமானால் அவனுக்கு கிடைக்கவிருந்த தண்டனையின் தீவிரத்தைக் குறைக்கலாம். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து முழுவதுமாக விடுபட முடியுமா என்பது சந்தேகமே என்றும் அவன் அறிந்திருந்தான்.

அறிக்கையைப் படித்து முடித்து தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசையின் மீது வைத்துவிட்டு வலப்புறம் இருந்த ஜன்னல் வழியே தெரிந்த கருநீல வானத்தைப் பார்த்தார் நாராயணசாமி.

அமாவாசை இரவு. வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட தெரியாமல் முழுவதும் கருநீலமாக இருந்தது..

ரவியும் வாழ்க்கையைப் போல என்று ஒரு நொடி தனக்குள் நினைத்துக்கொண்டார்..

ரவியின் புத்திச் சாதுர்யம் அவன் தயாரித்திருந்த அறிக்கையில் தெளிவாக தெரிந்ததை எண்ணிப் பார்த்தார். இத்தனை திறமையுள்ள மனுஷன் இந்த நேரம் எங்கயோ போயிருக்கணுமே..

கொள்கையற்ற பார்வை, செயல்பாடு, தேவையற்ற சிந்தனைகள்.. இவைதான் இவனுடைய இன்றைய நிலைக்குக் காரணம் என்பது அவருக்கு விளங்கியது.

But he deserves one more chance.. At least to correct himself if not to get the recognition for what he has achieved so far.. till he landed himself in this mess..

ஜன்னலிலிருந்து தன்னுடைய பார்வையை ரவியை நோக்கி திருப்பினார். ‘ரொம்ப அருமையா.. கோர்வையா எழுதியிருக்கீங்க ரவி.. It is really good.. ஒரு நல்ல வக்கீலா ஷைன் பண்ணியிருக்கலாம் நீங்க..’ என்றார் புன்னகையுடன்.

ரவி சங்கடத்துடன் நெளிந்தான். ‘தாங்ஸ் சார்.. ஆனா..’

‘இதுவே ஒங்கள இந்த விசாரனையிலிருந்து விடுவிச்சிருமான்னு கேக்கறீங்க?’

ரவி ஆம் என்று தலையை அசைத்தான்.

நாராயணசாமி தனக்கு இடப் புறத்தில் மேசையின் மீதிருந்த கோப்பைத் திறந்து சில நொடிகள் அவற்றில் இருந்தவற்றை ராய்ந்தார்.

அவர் விரும்பியது கிடைத்ததும் அதன் மீது இரு கைகளையும் வைத்தவாறு ரவியைப் பார்த்தார்.

‘இந்த குற்ற அறிக்கையை மறுபடியும் ஒவ்வொன்னா பாக்கலாமா ரவி?’

‘சரி சார்’

நாராயணசாமி கோப்பிலிருந்த குற்ற அறிக்கையிலிருந்ததை உரக்க வாசித்தார்.

1. நீங்கள் --------- நிறுவனத்திற்கு கீழ்காணும் கடன்களை வழங்கியிருக்கிறீர்கள்.

அ) நிலப்பத்திரத்திற்கு எதிராக நீண்டக் காலக் கடன்: ரூ.20 லட்சம்
ஆ) இயந்திரங்கள் வாங்க நீண்டக் காலக் கடன்: ரூ.15 லட்சம்
இ) நிறுவனத்தின் அன்றாட தேவைக்கான ஓவர்டிராஃப்ட்: ரூ.10 லட்சம்.

இதில் காணப்பட்டுள்ள குறைபாடுகள்:

அ) இவை யாவுமே உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறியவை
ஆ) நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பே, அதாவது தொழிற்சாலை எழுப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இயந்திரங்களை வாங்குவதற்கும், தொழிற்சாலையின் அன்றாட தேவைக்கான ஓவர்டிராஃப்ட்டையும் வழங்கியிருக்கிறீர்கள்.
இ) கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருக்கும் நிலப்பத்திரங்கள் ஃபோர்ஜரி என்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களில் உங்களுடைய செயல்பாடுகள் தலைமையகம் விதித்திருந்த நியதிகளுக்கு புறம்பாக இருந்துள்ளது:

அ) இறக்குமதி செய்த பொருட்களுக்கான Airway Billsகளை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்காமலே ரிலீஸ் செய்திருக்கிறீர்கள்.
ஆ) ஏற்றுமதிக்கென கொடுக்கப்பட்டிருந்த Packing Credit கடன்களை சரியான ஏற்றுமதி உத்தரவுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறாமலே வழங்கியிருக்கிறீர்கள்.
இ) அத்தகைய வாடிக்கையாளர்கள் ஒரு வருட காலத்திற்குள் ஏற்றுமதி செய்யாமலிருந்தபோதும் வேறொரு கடனிலிருந்து வழங்கப்பட்டிருந்த தொகையை உபயோகித்து காலாவதியான கடன்களை வசூலித்திருக்கிறீர்கள்.

இதன் மூலம் வங்கிக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.00 கோடி.

3. பல கடன்களிலும் தலைமையகமும் உங்களுடைய வட்டார அலுவலகமும் அனுமதித்திருந்த அதிகபட்ச தொகைக்கும் கூடுதலான தொகையை மேலதிகாரிகளுடைய அனுமதியின்றி வழங்கியிருக்கிறீர்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உங்களுடைய தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லை. ஆகவே உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமையகம் தீர்மானித்து ----- வங்கி அதிகாரிகளின் சர்வீஸ் நியதி 2(1அ)வின் படி மேற்கூறிய குற்றச்சாட்டுகளின் மீது பாரபட்சமற்ற விசாரனையை வரும் நவம்பர் மாதம் --- தேதி நம்முடைய சென்னை ------ கிளையில் துவங்கி விசாரனை முடியும் வரை நடக்கவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் நீங்கள் பங்குபெறாமலிருக்கும் பட்சத்தில் வங்கியின் சார்பில் தன்னிச்சையான முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்..

நாராயணசாமி படித்து முடித்துவிட்டு நிமிர்ந்து ரவியைப் பார்த்தார்.

‘இனி இந்த மூனு அலிகேஷனுக்கும் நீங்களும் மஞ்சுவும் பேங்க்லருந்து கலெக்ட் பண்ணியிருக்கற எக்ஸிபிட்ச பாக்கலாம்னு நெனக்கேன்.. ஆர் யூ ரெடி ரவி?’

‘Yes Sir.. எல்லாத்தையும் அதே ர்டர்ல அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கோம்..’ என்றவாறு கையோடு கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவரிடம் கொடுக்க அடுத்த இரண்டு மணி நேரங்கள் இருவரும் அதில் ஆழ்ந்து போயினர்.

*****

சேதுமாதவனின் நண்பரும் சட்ட ஆலோசகருமான விஷ்வன்
எனப்படும் விஸ்வநாதன் வந்துசேர சற்று தாமதமாகவே இடைப்பட்ட நேரத்தில் இரண்டு, மூன்று பெக்குகளை Rawவாகவே உள்ளே தள்ளியிருந்த சேது பொறுமையிழந்து தன் முன்னர் போலி பவ்யத்துடன் நின்றிருந்த திருநாவுக்கரசைப் பார்த்தார்.

‘எந்தாடா திரு இது.. விஷ்வன் சார காணுநில்லல்லோ.. தான் ஒடன் விளிச்சி பறஞ்சில்லே..?’

‘ஆமா சார்.. நீங்க ஃபோன் செஞ்சதுமே ஃபோன் பண்ணி சொல்லிட்டேங்க..’

‘எந்து ஃபோன் செஞ்சி? வெறதே பறயாதே.. ஷரி.. அது போட்டே.. பப்பன் எவ்விட போயி? அயாள விளிச்ச்ச்ச்ச்ச்சில்லே தான்?’

திரு எரிச்சலுடன் அவரைப் பார்த்தான்.. மூனுதான் உள்ள போயிருக்கு.. அதுக்குள்ள நா கொளறுது.. நடுராத்திரிக்குள்ள என்ன ஆவுமோ.. ‘கூப்ட்டு சொல்லியாச்சி சார்.. அந்தாளு எங்கயோ ஆவடி வரைக்கும் போயிருக்காராம்.. வர்றதுக்கு கொஞ்ச நேரமாவும்னு சொன்னார்..’

‘எல்லாருக்கும்.. அவரவர் ஜோலி.. ஷரி.. அது போட்டே.. மாயா வந்நோ..?’

‘மேடம் வந்துட்டாங்க.. கீழே அவங்க ரூம்ல இருக்காங்க..’

‘திரு.. நான் வந்நுன்னு சேதுவிடத்து பறயேண்டா கேட்டோ.. எனிக்கி கொறச்செ பெர்சனல் ஃபோன் ச்செய்யானுண்டு.. அது சேதுவிண்டெ மும்பிலெ வச்சி செய்யான் பற்றில்லா.. அது கொண்டு...’ என்று திருநாவுக்கரசுவிடம் கூறிவிட்டுத்தான் தன் அறைக்குள் சென்றிருந்தாள் மாயா.. ஆயினும் அவள் வீட்டிலிருக்கும்போது தான் அவள் வீட்டிலில்லை என்று சேதுமாதவனிடம் கூறி.. பிறகு அது உண்மையல்ல என்று தெரிந்தால் அவருடைய வசுவுகளைக் காது கொடுத்து கேட்க முடியாது என்பதும் அவனுக்கு தெரியும்..

‘ரூம்ல அவளெந்தா செய்யினெ.. இவ்விட வறாம் பறயி..’ என்றார் சேதுமாதவன் அடுத்த பெக்கை உள்ளே தள்ளிக்கொண்டே..

திருநாவுக்கரசு, ‘சரி சார்..’ என்றவாறு கீழே இறங்கிச் செல்லவும் வாசற் கதவைத் திறந்துக்கொண்டு பத்மநாபன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.

ஆயினும் ‘சார்.. மோள்லெ உண்டோ..?’ என்ற அவனுடைய கேள்விக்கு மாடியை நோக்கி விரலை மட்டும் காட்டிவிட்டு சமையல்கட்டை நோக்கி நடந்தான் திரு..

பத்மநாபனைப் போன்ற ஆட்களுடைய சவகாசம்தான் தன்னுடைய முதலாயின் இந்த இழி நிலைக்குக் காரணம் என்று நினைத்தான் அவன்..

வாசற்கதவு திறக்கப்படுவதையும் கீழே பத்மநாபன் கேட்ட கேள்வியையும் செவியுற்ற சேதுமாதவன் சோபாவிலிருந்து எழ முயன்று முடியாமல் அப்படியே அமர்ந்து அவன் வரும்வரைக் காத்திருந்தார்.

‘சாரி சார்.. கொறச்சே லேட்டாயி..’ என்று பின்னந்தலையைச் சொறிந்தவாறு வந்து நின்ற பத்மநாபனைப் பார்த்ததும் சீறிக்கொண்டு வந்த கோபத்தை அடக்க முடியாமல் பிரசுரிக்க இயலாத வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தார் சேதுமாதவன்.

பத்மநாபன் இத்தகைய வார்த்தைகளை அவர் வாயால் பல முறைக் கேட்டிருந்ததால் ஒரு அசட்டுப் புன்னகையுடன் நின்றிருந்தான் மனதுக்குள் அதே வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தவாறு..

தொடரும்..

20.11.06

சூரியன் 143

எந்த நேரத்திலும் நாடாருடைய தொலைப்பேசி அழைப்பு வரப்போகிறது என்று அவர் நினைக்கவும் அவருடைய செல்ஃபோன் ஒலிக்கவும் சரியாயிருந்தது..

Think of the devil and there he is..னு சும்மாவா சொன்னாங்க என்ற நினைப்புடன், ‘சார் சொல்லுங்க?’ என்றார் எதிர் முனையிலிருந்த நாடாரிடம்..

‘என்னது, நான் சொல்லவா? நீர்தானய்யா அஞ்சு மணிக்குள்ளாற சொல்றேன்னு சொன்னீரு? மணி இப்ப ஆறாகப் போகுதில்லே.. நீரா கூப்பிடுவீருன்னு காத்திருந்தேன்.. கூப்டறாப்பல தெரியல.. அதான் கூப்ட்டேன்.. நான் சொன்னது என்னாச்சி.. முடிஞ்சிதா இல்லையா?’

ஃபிலிப் சுந்தரம் என்ன செய்யலாம் என்று ஒரு நொடி யோசித்தார். இவரிடம் சொன்னாலும் சிக்கல், சொல்லாமல் இருப்பதிலும் சிக்கல்..

சொன்னால் ஏற்படும் சிக்கலைவிட சொல்லாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல் தீவிரமானது என்று அவர் நினைத்ததால் சொல்லிவிடுவதென தீர்மானித்தார். ஆனால் முழுவதும் சொல்லாமல்..

அதற்கும் வேட்டு வைத்தார் நாடார். ‘என்ன சார்.. சொல்லலாமா வேணாமான்னு யோசிக்கிறீராக்கும்?’

‘இல்ல சார்..’

‘என்ன இல்ல.. யோசிக்கலேங்கறீரா? இல்ல இன்னும் கண்டுபிடிக்கலேங்கறீரா?’

இப்படி எதிராளியைச் சிந்திக்க விடாமல் கிடுக்கி போடுவதில் நாடார் கைதேர்ந்தவர் என்பது சுந்தரத்திற்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்கிறோமே என்று ஒருமுறை தன்னையே நொந்துக்கொண்டார் ஃபிலிப்..

‘கண்டுபிடிச்சிருக்கேன் சார்.. ஆனா இன்னும் கொஞ்சம் உறுதிபடுத்திக்கிட்டு ஒங்கக் கிட்ட சொல்லலாமேன்னுதான்.. இன்னும் சேர்மன் கிட்டக் கூட சொல்லலை..’ என்றவர் தவறிப்போய் உளறிவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டார்.

‘என்னது சேர்மனுக்கே தெரியாதா? அவருக்குத்தானய்யா ஃபேக்ஸ் வந்தது? அதெப்படி அவருக்கு தெரியாம போவும்? என்னய்யா நடக்குது...? அதான் வந்த ஃபேக்ஸ்லயே அனுப்புன நம்பர் இருக்குமில்ல? பிறவென்ன?’

அதானே.. இந்த சின்ன விஷயம் ஏன் நமக்கு தெரியாமல் போனது? சரி அந்த வழிக்குத்தான் தேவையில்லாமல் போய்விட்டதே.. இருப்பினும் அந்த வழியில் நாம் சிந்திக்காமல் போனோம் என்பதை இவரிடம் ஏன் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நொடிப்பொழுதில் முடிவெடுத்து சமாளித்தார்.

‘நீங்க சொல்றதும் உண்மைதான் சார்.. ஆனா அந்த நம்பர்ல எங்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கல..’

‘என்னது கெடைக்கலே?’

சுந்தரம் தன்னுடைய தவறை உணர்ந்து, ‘சாரி சார்.. சரியான பதில் கிடைக்கலேன்னு சொல்ல வந்தேன்.’ என்றார்.

எதிர்முனையில் எரிச்சல் தொனித்தது. ‘சரி என்ன எளவோ.. எங்கருந்து வந்துதுன்னு உறுதிபடுத்திக்கிடலேன்னு சொன்னா என்ன அர்த்தம். யார் அனுப்புனான்னு தெரிஞ்சிருக்கு.. ஆனா உண்மையா இல்லையான்னு தெரியலன்னு அர்த்தமா? தெளிவாச் சொல்லும்யா.’

‘ஆமாம் சார்.. அதான் யோசிக்கேன்..’

நாடார் பொறுமையிழந்து இரைந்தார். ‘நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீரே?’

நீங்க சொன்னத என்னைக்கி தப்பா எடுத்துருக்கேன்.. மானம், ரோஷம் எல்லாத்தையும் விட்டுப்போட்டுட்டுத்தானே இந்த ரெண்டு வருசமா ஒங்கள மாதிரி ஆளுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கேன்.. விட்டுட்டு போகணும்னாலும் முடியலையே..

‘சொல்லுங்க சார்.’ என்றார் மெல்லிய குரலில்..

‘என்னய்யா திடீர்னு கொரல் சுருதி எறங்கிருச்சி.. சொல்றதுக்கு முன்னாலயே வருத்தப்படுறீராக்கும்.. சரி, சரி.. சொல்ல வந்தத சொல்லி முடியும்.. நீர் கண்டுபிடிச்ச வரைக்கும் சொல்லும்.. யார் அது?’

‘யாரோ ஒருத்தர் நம்ம வந்தனா மேடத்தோட பி.ஏ.ன்னு சொல்லி அந்த நிரூபர்கிட்ட பேசியிருக்கார் சார்..’

‘யாரு.. வந்தனா மேடத்தோட பி.ஏ.வா? அது ஒரு சின்ன பொண்ணாச்சேய்யா? அதுவா?’

ஃபிலிப் அவசர, அவசரமாக மறுத்தார். ‘அவங்க இல்ல சார்.. நான் ஏற்கனவே விசாரிச்சிட்டேன்..’

நாடார் சிரித்தார். ‘விசாரிச்சிட்டீரா? யார அந்த பொண்ணையா? நல்ல ஆளுய்யா.. தெரியாமத்தான் கேக்கேன்.. அப்படியே செஞ்சிருந்தாலும் நீங்க கேட்டதும் ஒத்துக்கிருமாக்கும்.. சரி இந்த விஷயத்த ஒமக்கு யார் சொன்னது?’

இது தேவையா என்று யோசித்தார் ஃபிலிப். அவருக்கு மிகவும் பழக்கமான நிரூபர் தன்னுடைய பெயர் வெளியில் தெரியவந்தால் தன்னுடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும் என்று தன்னிடம் அவர் கேட்டுக்கொண்டிருந்ததை ஒரு நொடி நினைத்துப் பார்த்தார்.

‘சார் அது வந்து..’

‘என்ன? அதுவும் சொல்லப்படாதாக்கும்.. சரி போட்டும்.. அந்த பொண்ணு கேக்கலை.. வேற யார் கேட்டிருப்பா? அந்த சேர்மனோட பி.ஏ. இருக்கானே அந்த வடக்கத்தி பய.. அவனெ கேக்க வேண்டியதுதானே.. அவனுக்கு ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாமில்லே.. அவனுக்குத்தானெ ஃபேக்ஸ் வந்திருக்கணும்?’

நாடார் இப்படியெல்லாம் கேட்பார் என்று முன்கூட்டிய் யூகித்து வைத்திருந்தாலும் அவருடைய இந்த கேள்வியை எப்படி சமாளிப்பதென ஒரு நொடி தடுமாறினார் ஃபிலிப். இனியும் சொல்லாமல் இழுத்தடிப்பது உசிதமல்ல என்று நினைத்தவர் அதே சமயம் சேர்மனிடம் தெரிவிப்பதற்கு முன் இவரிடம் எப்படி சொல்வது என்ற தயக்கமும் இருந்தது.. ஆகவே ‘விசாரிச்சிட்டேன் சார்.. ஆனாலும் அவரோட பதில்ல எனக்கு கொஞ்சம் தயக்கம். அதான் இன்னும் ஒரு நாள் குடுத்தா சரியா விசாரிச்சிட்டு சொல்லலாம்னு..’ என்று இழுத்தார்.

நாடார் அதற்கு தயாராக இல்லை.

‘சரிய்யா.. நீர் தீர விசாரிச்சிட்டு மத்தவங்கக் கிட்ட சொல்லும்.. அந்த பி.ஏ பய ஒம்மகிட்ட என்ன சொன்னான்? அத அப்படியே சொல்லும்.. தப்பாருந்தாலும் பரவால்லை..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ‘நம்ம யூனியன் லீடர் முரளி.... சார், இது மிஸ்டர் சுபோத்தோட யூகம்தான்..’

‘யாரு..?’

‘நம்ம சேர்மனோட பி.ஏ சார்.. சுபோத்னு பேரு..’

‘என்ன எளவோ.. அதுவா இப்ப முக்கியம்? சரிய்யா.. அந்த யூனியன் ஆளு.. அவந்தானே.. இருக்கட்டும்.. இதச் சொல்றதுக்கு எதுக்குய்யா இப்படி முக்குறீரு? நா யார்கிட்டயாவது சொல்லிருவேன்னா? நீர் வேறய்யா.. இந்த ஃபேக்ஸ¤க்கு பின்னால நாந்தான் இருக்கேன்னுல்லே அந்த டாக்டர் பய நினைச்சிக்கிட்டிருக்கான்? இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே ஒமக்கு ஃபோன் செஞ்சாலும் செய்வான்.. சாக்கிரதையா இரும்..’

ச்சை.. இது வேறயா? இவர்கிட்ட பேசி முடிச்சதுமே கெளம்பிர வேண்டியதுதான்.. செல்ஃபோன நாளைக்கி காலைல வரைக்கும் ஆஃப் செஞ்சி வச்சாத்தான் சரியா வரும்..

‘சரி.. இவ்வளவு தூரம் இழுத்தடிச்சாலும் கடைசியா ஒம்ம மனசுலருக்கறத சொன்னீருல்லே.. அதுக்காக நானும் ஒமக்கு ஒரு ரகசியம் சொல்றேன்.. இன்னும் சேர்மனுக்குக் கூட தெரியாதுய்யா.. அதனால நா இப்ப சொல்லப் போறத நீரும் ரகசியமா வச்சிருக்கணும்.. என்ன வெளங்குதா?’

ரகசியமா? இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேறயா?

‘நம்ம டாக்டர் எடத்துக்கு நம்ம வக்கீல் தம்பிய போடப்போறேன்னு சொன்னேனில்ல.. அது நடக்காது போலருக்கு. அதுக்கு அவரோட பொண்ணு இருக்கில்ல.. அத நாமினேட் பண்ணணுமாம்..’

யா? அந்த பெண்ணா என்று வியந்துபோனார் ஃபிலிப்..

‘அடுத்த போர்ட்லயே கோ ஆப்ட் (co-opt) பண்ணணுமாம்.. நாளைக்கு அவரே சேர்மன்கிட்ட பேசிக்குவார்.. அதுவரைக்கும் ஒம்ம மனசுலயே இது கெடக்கட்டும்..என்ன நா சொல்றது வெளங்குதா?’

‘சரி சார்..’

‘இரும் வச்சிடாதேயும்.. இன்னும் ஒன்னு இருக்கு..’

விடமாட்டார் போலிருக்கிறதே என்றிருந்தது சுந்தரத்திற்கு.. ‘சொல்லுங்க சார்..’

‘ரெண்டு மாசத்துக்கு முன்னால ரிஜர்வ் பேங்க்லருந்து ஒரு கடுதாசி வந்துதில்ல.. நம்ம போர்ட்ல ஒரு வக்கீலும், ஆடிட்டரும் இருக்கணும்னு?’

நாடார் எதற்கு அடிபோடுகிறார் என்று புரிந்தது அவருக்கு. ‘ஆமாம் சார்..’

‘அந்த லெட்டரோ காப்பிய எனக்கு காலைல நான் தர்ற நம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணும்.. என்ன பண்ணுவீரா இல்ல இதுக்கும் சேர்மனெ கேக்கணும்னு சொல்லுவீரா?’

சுந்தரத்திற்கு பகீர் என்றது. என்ன மனிதர் இவர்? அதெப்படி ரிசர்வ் பேங்கின் கடிதத்தை இவருக்கு ஃபேக்ஸ் செய்வது? இருப்பினும் இவரிடம் முடியாது என்று எப்படி சொல்வது? இன்றைக்கி நம்முடைய நேரமே சரியில்லை போலிருக்கிறதே..

‘சரிய்யா.. நீர் யோசிக்கிறீர் போலருக்கு.. நல்லா யோசியும்.. ஆனா நாளைக்கு பதினோரு மணிக்குள்ளாற எனக்கு அனுப்பிரணும்.. ஆனா பேங்க்ல யாருக்கும் தெரியக்கூடாது.. என்ன விளங்குதா, வச்சிடறேன்..’

‘சார்.. வந்து..’

ஹுஹூம்.. பலனில்லை..

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்ஃபோனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சுந்தரம்..

தொடரும்..

14.11.06

சூரியன் 142

எதிர்முனையிலிருப்பவர் சோமசுந்தரம் என்று அறிந்தவுடனே நாடார் தர்மசங்கடமாகிப்போவார் என்று நினைத்த மோகனுக்கு அவர் படு உற்சாகமாக ‘இப்பத்தான் ஒம்மரப் பத்தி நம்ம வக்கீல் தம்பிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..’ என்றதும் திடுக்கிட்டார்.

சோமசுந்தரத்தையும் அவருடைய குணத்தையும் ஏற்கனவே நன்கு அறிந்துவைத்திருந்த மோகன் இனி அவருடைய குறி தன் மீதும் பாயும் என்பதை உணர்ந்து சங்கடப்பட்டார்.

‘சொல்லும்யா. என்ன விசயம், திடீர்னு கூப்ட்றீரு?’ என்று தொடர்ந்தவாறு தன்னை ஓரக்கண்ணால் பார்ப்பதைப் புரிந்துக்கொண்ட மோகன் ‘நான் கெளம்பட்டுமா’ என்று சைகையால் கேட்க ‘வேணாம் இங்கேயே இருங்க’ என்றதுடன் அவருடைய மேசை மீது எப்போதுமிருக்கும் கையடக்க ஒலிப்பதிவு சாதனத்தை இயக்கச் சொல்லி நாடார் சைகைக் காண்பிக்க அவருடைய சங்கடம் மேலும் கூடியது.

வேறுவழியின்றி அதன் 'பதிவு' பட்டனை அழுத்திவிட்டு சங்கடத்துடன் நாடாரைப் பார்த்தார்.

நாடார் தன்னுடைய செல்ஃபோனிலிருந்த ஒலிபெருக்கி பட்டனை அழுத்தி ஒலிப்பதிவு சாதனத்தின் அருகில் வைத்து அதன் ஒலியை சற்று கூட்டினார்.

எதிர்முனையில் சோமசுந்தரத்தின் குரல் ஸ்பஷ்டமாக அறையெங்கும் பரவியது. அவர் பேசப் பேச அவருடைய குரல் ஒலிப்பதிவாக நாடாரின் உதடுகள் விஷமத்துடன் நெளிந்தன.

அவர் பேசி முடிக்கும்வரை குறுக்கிடாமல் காத்திருந்த நாடார், ‘என்னது ஒம்ம பொண்ணா.. யாரு பூர்ணிமாவா?’ என்றவாறு மோகனை ‘பார்த்திராய்யா என்னமோ நியாயம் தர்மம்னு பேசினீரே’ என்பதுபோல் பார்த்தார்.

‘ஏன் நாடார்.. என் பொண்ணுக்கென்ன.. அவ நம்ம போர்ட்லருக்கற சிலரெ விட நல்லாவே படிச்சிருக்கா நாடார்.’ சோமசுந்தரம் அந்த ‘சிலரில்’ சற்றே அழுத்த நாடாரின் கருத்த முகம் மேலும் கருத்ததைக் கவனித்தார் மோகன்.

‘அதுக்கு சொல்லலய்யா.. அது சின்னப் பொண்ணு.. போர்ட் ரூம் சண்டையை எல்லாம் பாத்துருக்குமோ இல்லையோ.. அதுக்காகச் சொன்னேன்..’

சோமசுந்தரம் எதிர் முனையில் சிரித்தார். ‘எங்க ஹாஸ்ப்பிட்டல் போர்ட்ல நடக்காததா.. நாலு வருசமா அதுல பூர்ணி இருந்திருக்காளே..’

நாடார் என்ன பதிலளிக்கலாம் என்று யோசித்தவாறு தயங்குவது தெரிந்தது. அவர் மேசையில் தன் கை விரல்களால் லேசாக தாளம் போடுவதைக் கவனித்த மோகனால் அவருடைய மனதில் ஏதோ வில்லங்கமான எண்ணம் உருவாவதை ஊகிக்க முடிந்தது.

ஒன்றா இரண்டா பதினைந்தாண்டுகால பழக்கமாயிற்றே. நாடார் எந்த நேரத்தில் என்ன சிந்திப்பார், எப்படி சிந்திப்பார் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி.

‘சரிய்யா.. அப்படியே செஞ்சிருவோம்.. ஒமக்கென்ன, ஒடனே ஒம்ம பொண்ணெ போர்ட்ல ஏத்திரணும்.. செஞ்சிருவோம்.. ஆனா அதே சமயத்துல நீரும் எனக்கு ஒரு உதவி பண்ணோணும்..’ நாடாரின் குரல் இறுகுவதை கவனித்தார் மோகன்.

எதிர்முனையில் இவர் என்ன கேட்கப் போகிறார் என்ற நினைப்பில் சில நொடிகள் கழித்தே பதில் வந்தது. ‘சொல்லுங்க நாடார்..’

‘கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம பளைய சேர்மன்.. வக்கீலுக்கோ ஆடிட்டருக்கோ படிச்ச மெம்பர்ஸ் நம்ம போர்ட்ல இல்லே. அடுத்த இன்ஸ்பெக்ஷனுக்குள்ள அத நிவர்த்தி பண்ணணும்னு ரிசர்வ் பேங்க்லருந்து ஒரு லெட்டர் வந்துதுன்னு சொன்னாரில்ல?’

அவர் முடிப்பதற்குள் எதிர்முனையிலிருந்து விஷமமான சிரிப்பொலி கேட்டது. ‘நாடார்.. நீங்க பயங்கரமான ஆளுய்யா.. என்னெ போர்ட விட்டு வெளியே அனுப்பிட்டு நீங்க ஒங்க வக்கீலாஃபீசுக்கு நேரா போயி அந்த எடத்துல அவர சேர்த்து விட்டுறப் போறேன்னு திட்டம் போடறீங்களாக்கும்.. சரியான நேரத்துல நா கூப்பிடலன்னா என் எடத்துலயே மோகன் சார போட்டுருப்பீங்க போல?’

நாடார் முகத்தில் கேலியான ஒரு புன்னகை தவழ்ந்தது. ‘நான் பயங்கரமான ஆளுதான்யா.. நீர் மட்டுமென்ன.. இப்படியொரு எண்ணம் என் மனசுல வந்துரப்போவுதுன்னு எப்படியோ ஊகிச்சிருக்கிரேய்யா.. இல்லன்னா சரியா இந்த நேரம் பார்த்து எம் பொண்ணெ சேக்கணும்னு எங்கிட்ட ஒதவி கேட்டு ஃபோன் செஞ்சிருப்பீரா?’

இரு பக்கமும் சிரிப்பொலி எதிரொலிக்க பயங்கரமான ஆளுங்கப்பா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் மோகன். இனி இவர்களுடைய விளையாட்டில் தானும் ஒரு பகடைக்காய் போல்தான் என்று ஓடியது அவருடைய எண்ணம்.

******

சேதுமாதவனின் வாகனம் அவருடைய வீடு நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது.

சாலையிலிருந்த வாகன நெரிசல் அவர் நினைத்த வேகத்தில் செல்ல முடியாமற்போகவே ஓட்டுனரைப் பார்த்து எரிந்து விழுந்தார். ‘என்ன மேன் ஓட்டுற? ஒன்னெ சைக்கிள்ல போறவன்கூட முந்திக்கிட்டு போயிருவான் போல.. தள்ளிப்புளி.. வேகமா போன்னு எத்தனெ தரம் சொல்றது ஒனக்கு?’

இதற்காகவே சேதுமாதவனின் வாகனத்தை வங்கியிலிருந்த எந்த டிரைவருமே மனமுவந்து ஓட்டுவதற்கு முன்வருவதில்லை.

குறித்த நேரத்தில் புறப்படாமல் கடைசி நேரத்தில் வந்துவிட்டு, ‘இங்க பார் மேன்.. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனிக்கி அறியில்லா.. இன்னும் பத்தே நிமிஷத்துல ஞான் செல்லாம் பறையன எடத்துக்கு போயிரணும்.. டிராஃபிக் இருக்கு, சிக்னல் இருக்குன்னுல்லாம் பறையாம் பாடில்லா.. எந்தா மனசிலாயோ..’ என்று வறுத்தெடுத்துவிடுவார்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாகனத்தை செலுத்த வேண்டிவரும். தப்பித்தவறி காலதாமதமாகிவிட்டாலோ அவ்வளவுதான், அலுவலகம் திரும்பியவுடனேயே ஒரு எச்சரிக்கை மெமோ கொடுக்கப்பட்டுவிடும்..

சாதாரணமாகவே கோபத்துடன் காணப்படும் சேதுமாதவன் இன்று ஏதோ கூடுதல் ‘சூடாக’ இருப்பதாகப் பட்டது அவருடைய ஓட்டுனருக்கு.. ஆகவே நாம் ஏதாவது சொல்லப் போக நாளைக்கு மெமோ கிடைத்துவிடுமே என்ற பயத்தில் மவுனமாக வாகனத்தின் வேகத்தைக் கூட்டுவதில் முனைந்தான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று நெரிசல் சற்று கூடுதலாகவே இருந்தது.

மாநில ஆளுனர் ஏதோ விழாவுக்காக உயர்நீதி மன்றத்திற்குச் செல்கிறாராம் கடற்கரைச் சாலை முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு அத்தனை வாகனமும் அண்ணா சாலையில் நிறைந்து வழிந்தன..

சேதுமாதவனுக்கு இன்று காலை முதல் ஏற்பட்ட தோல்விகள் ஏற்கனவே அவருடைய பொறுமையை மிகவும் சோதித்திருந்தது. இதில் வாகன நெரிசலும் சேர்ந்துக்கொள்ள அவருடைய கோபம் உச்சந்தலை வரை ஏறி அத்தனையும் வாகன ஓட்டுனர் தலையில் இறங்கியது.

‘ஒன்னெ மாதிரியான ஆளுங்கள வச்சிக்கிட்டிருக்கறதுக்கு...’ என்று கோபத்தில் பல்லைக் கடித்தார். ரியர்வ்யூ கண்ணாடி வழியாக எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தைப் பார்த்தார் டிரைவர் மகா எனப்படும் மகாலிங்கம்.. இவருக்கு திரு தான் லாயக்கு.. நம்மளால ஒரு அரைமணி நேரமே இந்தாள சமாளிக்க முடியலையே எப்படிதான் அவன் இத்தன வருசமா இவர்கிட்ட குப்பைய கொட்டறானோ தெரியலையே..

சேதுமாதவனுடைய அந்தரங்க ஊழியன் திரு என்கிற திருநாவுக்கரசு ஒருமுறை அவனிடம், ‘இங்க பார் மகா.. சார் எங்க போறார்.. யாரெ பாக்கறார்னு டெய்லி எங்கிட்ட சொல்லணும்.. ஒன்னெ தனியா கவனிச்சுக்கிறேன்.. ஆனா அந்தாளுக்கு தெரியக்கூடாது என்ன?’ என்றான்.

எதுக்கு இவனுக்கு இதெல்லாம்? என்று தோன்றினாலும் அவனிடமிருந்து கிடைத்த தொகை கணிசமானதாகவே இருக்கவே சேதுமாதவனுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாகனம் ஓட்ட மகாலிங்கம் முன்வந்தான்.

‘எடோ திரு.. நான் வந்துக்கிட்டிருக்கேன்.. மாயா வீட்டிலுண்டா?..’

‘.....’

‘எவ்விட போயி? எப்போ வரும்னு எந்தெங்கிலும் பறஞ்சோ?’

‘.......’

‘சரி.. போட்டே.. நீ நம்மட வீட்டு ஃபோன்லருந்து பப்பனெ விளிச்சி வீட்டிலேக்கி வராம் பற..’

‘... ...’

எதிர் முனையிலிருந்து என்ன பதில்வந்ததோ சேதுமாதவன் எரிந்து விழுவதை கவனித்தான் மகாலிங்கம்..

‘எந்தாயி திரு.. அதாடா.. அந்த பத்னமநாபன்.. அவனெ விளிச்சி வராம் பறயி.. ஞான் இனியும் பத்து நிமிசத்துல வந்துரும்.. பின்னே நம்மட க்ளப்பு ஆபீஸ்லெக்கி விளிச்சி நம்ம விஸ்வநாதன் சார் வந்தா வீட்டிலோட்டு வராம் பறயி.. மறக்கண்டடா.. பின்னே கூலர்ல குப்பியுண்டில்லே.. விஸ்வன் சார்னெ வோட்காயிருக்கிம் வேண்டது.. வீட்டிலெ உண்டுல்லே..’

‘.... ...’

மகாலிங்கத்திற்கு அரைகுறையாக மலையாளம் விளங்கும்.. அதுவும் வோட்கா என்றால் மலையாளம் என்ன பிரெஞ்சும் புரியுமே.. அவன¨யுமறியாமல் நாக்கில் எச்சில் ஊறியது..

இப்படிப்பட்ட சமயங்களில் சேதுமாதவனே போதையின் உச்சியில் ‘எடோ திரு.. நம்ம டிரைவருக்கு வேணோன்னு சோய்க்கி.. கொறச்செ கொடுக்குடா.. குடிச்சி களிச்சோட்டே..’ என்பார்..

இணைப்பைத் துண்டித்த சேதுமாதவன் தன்னுடைய டிரைவர் கண்ணாடி வழியாக தன்னைக் கவனிப்பது தெரிய எரிந்து விழுந்தார். ‘எடோ.. எந்தா நோக்குனெ.. இன்னும் பத்து நிமிசத்துல நம்ம வீட்டு முன்னால நிக்கலே.. ஒனக்கு சஸ்பென்ஷந்தான் சொல்லிட்டேன்..’

போச்சிரா என்றிருந்தது மகாவுக்கு.. தன் கண்ணெதிரே அணிவகுத்து நின்ற வாகனங்களைப் பார்த்தான்.. சஸ்பென்ஷன் என்ற வாக்கில் சற்று முன் எச்சில் ஊறிய நாக்கு வரண்டுபோக முண்டியடித்துக்கொண்டு செல்ல ஏதாவது வழி தெரிகிறதா என்று பார்ப்பதில் முனைந்தான்..

தொடரும்..

13.11.06

சூரியன் 141

செல்வி அமைதியாகிப் போன ஒலிவாங்கியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அதை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்.

‘என்னடி.. என்ன அப்படி மலைச்சிப் போயி நிக்கறே.. என்னவாம்?’

‘ஒன்னுமில்லம்மா.. என்னெ கொஞ்சம் யோசிக்க விடுங்க.. அப்புறமா சொல்றேன்.. இப்ப வேலைய பார்ப்போம்..’ என்றவாறு செல்வி சமையலறையை நோக்கி செல்ல ரத்தினம்மாள் என்னாச்சி இவளுக்கு என்று அவளையே பார்த்தாள்..

செல்வி இயந்திரக்கதியில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் சற்றுமுன் ராசம்மாள் தொலைப்பேசியில் கூறியது அவளுடைய மனத்தில் ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது..

‘செல்வம் ஒன் அளவு படிக்கல தாயி. ஆனா புத்திசாலி. என்னோட ஹோட்டல் வியாபாரத்துல அவந்தான் எனக்கு வலது கை மாதிரி. அவனும் ஒன்னெ மாதிரியே சின்ன வயசுலயே வறுமையில வாடுனவன். அப்போ அவன் அம்மாதான் அவனுக்கு ஒலகமே. இப்ப அந்த அம்மாவும் இல்ல. நாந்தான் அவனுக்கு எல்லாமே. அவனுக்கு படிப்பில்லங்கற குறைய தவிர பையன் குணத்துல தங்கம். ஒன்னெ நல்லபடியா வச்சி பாத்துக்குவான்.’ என்று சிலுவை மாணிக்கம் கூறியபோது அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியென்று சம்மதித்தாள்.

செல்வத்தை திருமணம் முடிப்பதாக நிச்சயம் செய்த கையோடு அவளுக்கு வந்த மொட்டைக் கடுதாசியில் எழுதியிருந்தது இப்போதும் நினைவிலிருந்தது.

‘ஏற்கனவே தன் மாமன் பெண்ணை விரும்பி அவ வேண்டாம்னு ஒதுக்கப்பட்ட ஆளதான் நீ கட்டிக்கப் போறே.. அவன்னா அவனுக்கு பைத்தியமாக்கும். நீ சந்தோஷமா இருந்தாப்பலத்தான்..’ என்பதுபோன்ற தோரனையிலிருந்த அந்தக்கடிதம் அவளை சில நாட்கள் அலைக்கழித்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் சிறுவயது முதலே வறுமையில் வாடிய தனக்கு விடிவு காலம் செல்வத்தால்தான் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த செல்வி அதை தன்னுடைய பெற்றோர்களிடமும் காட்டாமல் மறைத்தாள்.

ஆனால் அடுத்த முறை நாடார் வந்திருந்தபோது அந்த கடிதத்தைக் காட்டினாள்.

நாடார் எந்தவித சலனுமில்லாமல் அதைப் படித்துவிட்டு, ‘இதுல போட்டுருக்கறது உண்மைதான் செல்வி.. அவன் எம் பொண்ணுமேல விருப்பமாத்தான் இருந்தான். எனக்கும் அதுல சம்மதந்தான்.. ஆனா நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலருந்தே ஒன்னா வளந்தவங்க.. அதனால செல்வத்த நான் கூடப் பொறந்த பொறப்பாத்தான் நினைச்சிருக்கேன்னு எம்பொண்ணு சொன்ன பெறவு என்னத்தச் செய்ய? செல்வம் தங்கமான பையன்மா.. எம் பொண்ணுக்கு குடுத்து வைக்கல.. அவ்வளவுதான் சொல்வேன்.. இன்னொரு உண்மையும் சொல்லிப் போடுறேன்.. ஒன்னெ அவன் என்னோட கட்டாயத்தின் பேர்லதான் கட்டுறான்.. ஆனா அவனெ ஒன் பக்கம் இளுத்துக்க வேண்டியது ஒன் பொறுப்பு.. எம் பொண்ணெ அவன் விரும்புனானே தவிர அவ என்னைக்கி இவனெ கல்யாணம் பண்ணிக்க புடிக்கலன்னு சொன்னாளோ அப்பவே அவன் அந்த எண்ணத்தெ விட்டுப்போட்டது எனக்கு தெரியும். அதுக்கப்புறம் அவ விரும்புன பையன எனக்கு அவ்வளவா புடிக்கலன்னாலும் செல்வந்தா முன்னால நின்னு பேசி இந்த சம்பந்தத்த முடிச்சிக் குடுத்தான்.. அந்த அளவுக்கு தங்கம் அவன் மனசு.. அவனெ கட்டிக்கப்போறவ குடுத்து வச்சவன்னு நானே சொல்லிக்கறதுல அர்த்தமில்ல.. நீயே போகப் போக புரிஞ்சுக்குவே.. இவ்வளவுக்கப்புறமும் ஒனக்கு மனசுல ஏதாச்சும் விகல்பம் இருந்தா தாராளமா சொல்லிரும்மா.. இந்த ஏற்பாட்ட விட்டுரலாம்.. நானே ஒனக்கு என் செலவுலயே வேறொரு பையன பார்த்து முடிச்சி வைக்கறேன்..’ என்றபோது செல்வி அவருடைய வார்த்தைகளிலிருந்த உண்மையைப் புரிந்துக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தாள்.

அவர் கூறியதுபோலவே இருந்தான் செல்வம். திருமணம் முடிந்த புதிதில் சென்னைக்கு தன்னுடைய மாமனுக்கருகிலேயே இருக்க வேண்டும் என்று முனைப்பாயிருந்தவனை நாடார்தான் அதட்டி, மிரட்டி நெல்லையிலேயே நிர்ந்தரமாக இருக்கச் செய்தார்.

செல்வி கேட்காமலேயே அந்த கடை இருந்த இரண்டு மாடிக் கட்டடத்தையும் அவர்கள் இருவரும் குடியிருந்த வீட்டையும் வாங்கி அவளுடைய பெயரில் பதிவு செய்துக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை சென்னைக்கு சென்று வருவதில் பிடிவாதமாக இருந்தவனை அவன் போக்கிலேயே விட்டு நாளடைவில் தன் வழிக்கு கொண்டு வந்தாள் செல்வி.

நாடார் அவளிடம் கூறியிருந்ததுபோலவே வியாபாரத்தில் புலியாயிருந்தான் செல்வம். திருமணம் முடிந்த இரண்டே ண்டுகளில் இனிப்பு வியாபாரம் ஒரு முழுஅளவு உணவகமாக மாறி திருநெல்வேலியிலிருந்த உணவகங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.

செலிவியும் தான் படித்த படிப்பை வீணடிக்க விரும்பாமல் செல்வத்தின் வர்த்தக கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பிக்க அந்த கணவன் மனைவியின் கூட்டு முயற்சி அடுத்த சில ஆண்டுகளில் நல்ல பயனை அளிக்க ஆரம்பித்தது.

இந்த சூழ்நிலையில்தான் ராசம்மாள், ராசேந்திரனின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் எழ ஆரம்பித்தது. ஏற்கனவே இந்த திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்த நாடார் ராசேந்திரன் அவருடைய நிறுவனத்தில் கையாடல் செய்யும் விவரமும் தெரியவர தன்னுடைய மனக்குறையை செல்வத்திடம் கொட்ட அதனுடைய பாதிப்பு அவனுடைய போக்கையே மாற்றியதை உணர்ந்தாள் செல்வி.

ஆனால் அவள் நினைத்திருந்தபடி செல்வம் அடியோடு மாறிவிடவில்லை. அடிக்கடி சென்னைக்கு சென்று வந்தாலும் தன்னுடயை வர்த்தகத்திலும் சரி செல்விக்கு செய்ய வேண்டிய கடமைகளிலும் சரி குறை வைக்கவில்லை.

சென்னைக்கு சென்று வருவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு வேறொரு காரணம் சிலுவை மாணிக்கம் நாடார் அவள் மீது வைத்திருந்த பாசம்.

‘நீயும் எனக்கும் ராசம்மா மாதிரி ஒரு மகளபோலதாம்மா. அதனால ஒன்னோட வாழ்க்கையில நானோ இல்ல என் மகளோ என்னைக்கிம் இடைஞ்சலா இருக்க மாட்டோம். எம் மகள செல்வத்துக்கு கட்டி வைக்க நெனச்சதென்னவோ உண்மைதான். ஆனா எப்ப எம்பொண்ணு அந்த நினைப்பு எனக்கு இல்லப்பான்னு சொல்லிட்டாளோ அப்பவே அவனுக்கு ஒரு நல்ல பொண்ணெ பாத்து கட்டிவைக்கறதோட அவனுக்குன்னு ஒரு பிசினஸ் வச்சி வெளியூர்ல குடி வச்சிரணும்னு நினைச்சித்தான் இந்த ஏற்பாட செஞ்சேன்.. இருந்தாலும் செல்வத்த கலக்காம என் பிசினஸ்ல நா எதையுமே செஞ்சதுல்லங்கறதாலதான் அவனெ அடிக்கடி மெட்றாஸ்க்கு கூப்டறேன்.. தப்பா நெனச்சிக்காத..’

ஆனால் இப்போது நிரந்தரமாக சென்னைக்கே சென்று அங்கேயே குடியேறுவதென்பது..

‘ஏய்.. ஏய்.. செல்வி.. சாப்பாடு அடிபுடிச்சி ஹால் வரைக்கும் தீயிற வாசனை அடிக்குது..? பக்கத்துல நிக்கற ஒனக்கு அடிக்கலையா? அப்படி என்ன யோசனை..?’

தன்னுடைய தாயின் குரலைக் கேட்டு பதறியவாறு ஸ்டவ்வை அணைத்துவிட்டு சாப்பாடு பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்..

அம்மாக்கிட்ட இப்ப சொல்லணுமா? சொன்னா எப்படி ஏத்துக்குவாங்கன்னு தெரியலையே.. செல்வம் அடிக்கடி மெட்றாசுக்கு போய்வர்றதே அம்மாவுக்கு பிடிக்காது. அப்பாவுக்கு இது பிடிக்கலைன்னாலும் வெளியில சொன்னதில்லை...இதுல நிரந்தரமா அங்கயே போயி இருக்கப் போறேன்னு சொன்னா..

‘என்னடி என்னெ அப்படி பாக்கே.. கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.. அந்த ஃபோன் வந்ததுலருந்து பாக்கேன்.. ஏன் அப்படி என்ன சொன்னா ராசம்மா? ஏதும் பிரச்சினையாமா? மாப்பிள்ளை எப்ப வராறாம்..?’

செல்வி பதிலளிக்காமல் தன் தாயையே பார்த்தாள்..

‘என்னடி.. என்ன? கேக்கேன்லே.. சொல்லு.. அப்படி என்னதான் சொன்னா, நீ இப்படி நிக்கே..?’

செல்வி ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். செல்வம் வரட்டும்.. அவரிடம் பேசிவிட்டு அம்மாக்கிட்ட சொல்லலாம்.. இல்லன்னா அவர் வந்ததும் வராததுமா அம்மா எதையாவது பேசப் போக பிரச்சினை பெரிதாகிவிடக் கூடும்..

தன்னுடைய வாழ்க்கை இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணமே சிலுவை மாணிக்கம் அங்கிள்தான்.. அவங்க எனக்கு எந்தவித தீங்கையும் நினைக்க மாட்டாங்க.. ராசம்மா சொன்னது அவங்களுக்கு தெரியாம இருக்க சான்ஸ் இல்ல..

சென்னைக்கு வரமுடியாதுன்னு சொல்றதுக்கு ஒரு நிமிசம் போறும்.. ஆனா அதுக்கப்புறம்? செல்வமே ஒருவேளை தன்னை எதிர்த்துக்கொண்டு போய்விட்டால்? அப்புறம் இந்த சொத்தையும் ஓட்டலையும் வைத்துக்கொண்டு தன்னால் என்ன செய்யமுடியும்? அப்பாவ மட்டும் நம்பி இத நடத்த முடியுமா?

‘இந்த நேரத்துல நீயும் செல்வமும் எங்கூடவே இருந்தா நல்லதுன்னு நினைக்கேன்.. ராசேந்திரன் இருந்த இடத்துல செல்வம் இருக்கணும்னு அப்பாவுக்கும் நினைக்கார்.’

ராசேந்திரன் இருந்த எடத்துல.. என்ன சொல்ல வருகிறாள் ராசம்மாள்? ச்சீச்சீ.. அப்படி இருக்காது.. ராசேந்திரன் பிசினஸ்ல இருந்த எடத்துலன்னு மீன் பண்ணிருப்பாங்க..

எதுக்கும் செல்வம் வரட்டும்.. என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சிக்குவம்..
‘என்னடி.. நா பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ சித்தப்பிரம பிடிச்சவ மாதிரி இருக்கே?’

செல்வி அமைதியாக தன் தாயைப் பார்த்தாள். ‘ஒன்னுமில்லம்மா.. ராசம்மாவுக்கு அங்க ஏதோ புதுசா பிரச்சினையாம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சினையாருக்கும் போலருக்கு.. அதான் எங்கிட்ட பேசினா மனசுக்கு றுதலாருக்குமேன்னு ஃபோன்ல கூப்ட்டாங்களாம்..’

தன் தாய்க்கு தன்னுடைய பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லையென்பது அவளுடைய முகத்தைப் பார்த்து புரிந்துக்கொண்ட செல்வி, ‘நீங்களா ஏதாச்சும் கற்பன பண்ணிக்காதீங்க.. இந்த பிரச்சினை முடியறவரைக்கும் நீ எங்கூட வந்து இருக்கியான்னு கேட்டாங்க. அதான் இந்த பிசினச விட்டுட்டு எப்படி போறதுன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.. வேறொன்னுமில்லை.. அந்த யோசனையிலதான் சாப்பாடு தீஞ்சிப் போறத கூட கவனிக்காம.. இனி சமையல் பண்ண முடியாது.. நா நம்ம கடைக்கு ஃபோன் செஞ்சி சாப்பாட கொண்டு வரச் சொல்றேன்..ஒங்களுக்கு ஏதாச்சும் ஸ்பெஷலா வேணுமாப்பா’ என்று தன்னுடைய தந்தையைப் பார்த்தவாறு தொலைப்பேசியை நோக்கி நடந்த செல்வியைக் குழப்பத்துடன் பார்த்தாள் ரத்தினம்மாள்..

இவ என்னத்தையோ நம்மக் கிட்டருந்து மறைக்கிறா.. என்று முனுமுனுத்தாள்.. கூடத்தில் அதுவரை எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த செல்வியின் தந்தை, ‘ஏய்.. நீ பாட்டுக்கு எதையாச்சும் அவள கேட்டுக்கிட்டே இருக்காத.. அவளுக்கா சொல்லணும்னா சொல்வா.. மாப்பிள்ளை வந்தா என்னன்னு தெரிஞ்சிரப்போவுது..’ என்றாலும் அவருக்கும் தன்னுடைய மகள் தங்களிடமிருந்து எதையோ மறைப்பது தெரிந்தது.

தொடரும்..

10.11.06

சூரியன் 140

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு மவுனமாக அமர்ந்திருந்த மாணிக்கம் நாடாரையே பார்த்தார் மோகன்.

நாடாரை அவருக்கு சுமார் பதினந்துவருடமாக தெரியும்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கட்டாய திருமணம் தோல்வியில் முடிந்து வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் சோர்ந்துபோயிருந்த நேரத்தில் நாடாருடைய மருமகன் செல்வத்தை அவனுடைய உணவகத்தில் சந்தித்து அவன் வழியாக நாடாருடைய அறிமுகம் கிடைத்து..

இந்த பதினைந்தாண்டு காலத்தில் நாடாருடைய சட்ட ரீதியான எல்லா அலுவல்களும் மோகன் வசம்தான். துவக்கத்தில் நாடாருடைய அணுகுமுறைகள் மோகனுடைய சிந்தனைகளுக்கு முரணாக இருந்ததைப் பார்த்து அவர் தயங்கியதுண்டு.

அப்போதெல்லாம் செல்வம், ‘சார்.. மாமாவோட எண்ணம் நல்லதுதான். என்ன, அவர் வாழ்க்கையில பட்ட அடிகளோட தாக்கம் சில சமயங்கள்ல அவருடைய நடவடிக்கைகள்ல தெரியும். அவரென்ன சார்.. எனக்கும் அப்படிப்பட்ட வலிகள் நிறையவே இருக்கு. மாமாவா பார்த்து என்னெ கைதூக்கி விட்டிருக்கலன்னா நா இப்ப எங்கயாவது எடுபிடி வேலை செஞ்சி.. மாமாவா யாரையும் போயி அடிக்கறதில்லையே சார்.. அவருக்கு வாழ்க்கையில முன்னுக்கு வர்றதுக்கு உழைப்பு மட்டும் போறாது.. இந்த மாதிரியெல்லாம் செய்யணுங்கற பிடிவாதம்.. எல்லாரையும் நேசிக்கறதுக்கு நாம என்ன கர்த்தராடான்னு கேப்பார்.. ஆனா அதுக்காக அவர் எல்லாரையும் கவுக்கணும்னு நினைக்கறதில்லையே சார்.. யாராச்சும் அவர கவுக்கணும்னு நினைச்சா விடமாட்டார்.. அவ்வளவுதான்..’ என்று பேசி மோகனை சமாதானப்படுத்திவிடுவான்..

அவன் சொல்வதும் உண்மைதான் என்பதை நாளடைவில் மோகன் புரிந்துக்கொண்டாலும் நாடார் எல்லை மீறி செல்கின்ற நேரங்களில் தன்னுடைய எதிர்ப்பை உணர்த்தாமல் இருந்ததில்லை.

‘நாடார்.. நீங்க சொல்றத சொல்லிட்டீங்க.. ஆனா இந்த பிரச்சினையை நான் என் போக்குல சால்வ் பண்ண விடுங்க.. நா தோத்துட்டா நீங்க சொல்றா மாதிரி செய்யலாம்..’ என்று வாதிடுவார்.

நாடாரும், ‘தம்பி.. நீங்களும் செல்வம் மாதிரிதான் எனக்கு.. ஆம்பிளை பிள்ளைங்க இல்லாத குறைய ஒங்க ரெண்டு பேரையும் பார்த்து தீத்துக்குறேன்.. நீங்க சொல்றா மாதிரி முயற்சி பண்ணுங்க.. நான் காத்துக்கிட்டிருகேன்.. நீங்க தோக்கக் கூடாதுன்னு நா வேணும்னா கர்த்தர வேண்டிக்கறேன்.. ஆனா அதுக்கப்புறம் நா சொல்றத நீங்க கேக்கணும்..’ என்று மோகனுடைய போக்கிலேயே விட்டுவிட்டு அவராக போய் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ளும்வரை காத்திருப்பார்.

மோகனுடைய அணுகுமுறை சில நேரங்களில் வெற்றியைக் கொடுத்திருந்தாலும் நாடாருடைய அணுகுமுறையிலும் தவறில்லை என்பதை பல நேரங்களில் மோகன் உணர்ந்திருக்கிறார்.

அதே சமயம் கரடு முரடான சிந்தனைகளைக் கொண்ட நாடாருடைய மனதிலும் ஈரம் இருப்பதை பல சமயங்களில் மோகன் கவனித்திருக்கிறார்.

ஒருமுறை சென்னையிலுள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இல்ல ஆண்டு விழாவன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினம் மூன்று வேளை உணவு, காப்பி, சிற்றுண்டி என்று தன்னுடைய தலைமை உணவகத்திலிருந்து இலவசமாக எந்தவித சுயவிளம்பரமும் இல்லாமல் அளித்ததை நினைத்து மோகன் பல சமயங்களிலும் பெருமை பாராட்டியிருக்கிறார்.

தன்னுடைய ஒரே மகள் ராசம்மாள் விரும்பிவிட்டாளே என்பதற்காக அவளுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ராசேந்திரனை தன்னுடைய விருப்பத்திற்கெதிராக திருமணம் முடித்துவைத்தது, சுமார் ஐம்பது லட்சம் பெருமானமுள்ள பங்களாவை அவனுக்கு திருமண அன்பளிப்பாக அழைத்தது.. அத்துடன் திருப்தியடையாமல் ராசேந்திரன் நாடாருடைய நிறுவனத்திலிருந்து லட்சம், லட்சமாக கொள்ளையடித்ததைக் கண்டும் காணாததுபோல் இருந்தது..

இதோ, இப்போது அவர் இயக்குனராக இருந்த வங்கியில் தன்னையும் ஒரு இயக்குனராக சேர்க்க முயல்வது..

‘என்ன மோகன் தம்பி என்ன அப்படி பாக்கீங்க.. நான் சொன்னதுல தப்பு ஏதும் இருக்கா என்ன?’

இல்லையென்பதா, ஆமாமென்பதா என்ற ஆலோசனையுடன் மோகன் அவரை குழப்பத்துடன் பார்க்க நாடார் உரக்க சிரித்தார்.

‘தம்பி.. இதெல்லாம் ஒரு விளையாட்டு பாத்துக்கிருங்க.. இப்ப பாருங்க.. அந்த சோமசுந்தரம் திடுதிடுப்புன்னு வெளியில போவேண்டியிருக்கும் நீங்க நெனச்சீங்களா இல்ல நா நெனச்சனா? அவனெ மாதிரி நானுந்தானே எங்கெங்கயோ கைமாத்து வாங்கிருக்கேன்.. ஆனா இவன மாதிரி மாட்டிக்கிட்டனா என்ன? கொள்ள அடிச்சாலும் ஒளுங்கா செய்யணுமில்லே.. கிறுக்குப் பய.. சரி அது கெடக்குது களுத.. இப்ப சொல்லுங்க.. நா அந்த சுந்தரம் சார்கிட்ட சொன்னதுல தப்பு இல்லேல்லே?’

மோகன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தார். ‘இருந்தாலும்...’

நாடார் சிரித்தார். ‘சும்மா சொல்லுங்க.. என்ன தயக்கம்.. அது சரி.. நீங்கல்லாம் படிச்சவங்க.. அதான் இதுக்கு இத்தனெ யோசிக்கீங்க.. அந்த சுந்தரம் சாரும் நம்ம ஆளுதான் தம்பி.. எங்கயும் போய் சொல்லிரமாட்டார்..’

‘அதுக்கில்ல சார்.. இப்ப ஒங்க போர்ட்ல வந்திருக்கற வேக்கன்சி டாக்டரோடது.. நியாயமா அவரோட கேண்டிடேட் ஒருத்தருக்குத்தான் அந்த இடம் போகணும்.. இதுல நாம இடைபட்டு இப்படி யோசிக்கறதே சரியில்லன்னு எனக்கு படுது..’

மோகனின் முகத்தில் தெரிந்த சங்கடம் நாடாரை உரக்கச் சிரிக்க வைத்தது.

‘தம்பி.. நீங்க சொல்றது சரிதான் .. இல்லேங்கல.. ஆனா அந்த டாக்டர் பய இருக்கானே அவன் விஷயத்துல இதயெல்லாம் பாக்கப்படாது.. அவன் ஈர பேனாக்கி பேன பெருமாளாக்குவான்னு சொல்வீங்களே அந்த மாதிரி ஆளு.. இன்னைக்கி பாருங்களேன்.. காலையில திடுதிடுப்புன்னு அவன் சிங்கடி இருக்கானே அந்த பாபு.. அதான்யா அந்த மவுண்ட் ரோட் ப்ராஞ்ச்லருக்கானே.. அவனெ கொண்டு வந்து அந்த ஆஸ்பத்திரிலருக்கற மேடம் சீட்ல ஒக்கார வைக்கலாம்கறான்.. அதுக்கு நம்ம சுந்தரம் சார மெரட்டி ஒத்தூத வச்சிருக்கான்.. பாவம் அந்த மனுசன்.. நா இருக்கறேனேன்னு மெல்லவும் முடியாம விளுங்கவும் முடியாம.. ஏய்யா.. ஆஸ்பத்திரியில சீக்கா கெடக்கற நேரத்துலயுமா இப்படி செய்யணுங்கறதையாவது யோசிச்சிருக்க வேணாம்? இல்லேல்லே.. அப்புறம் எதுக்கு நாம மட்டும்? நீங்க சும்மாருங்க தம்பி.. அவன் ஏளு வருசமா ஆட்டம் போட்டான் இல்லே.. இனி நாமளும் கொஞ்சம் ஆட்டம் போடுவோம்..’

மோகன் என்ன சொல்வதென புரியாமல் அவருடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மாலை மணி ஐந்தைக் கடந்திருந்தது. அன்று இரவு மாற்றலாகிச் செல்லவிருந்த உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பிரிவு உபசார விழா இருந்தது நினைவுக்கு வந்தது. இப்போதே புறப்பட்டுப் போனால்தான் குளித்து முடித்து போய்ச் சேர சரியாயிருக்கும்.

‘என்ன தம்பி.. எங்கயாச்சும் போகணுமா?’

மோகன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். இல்லை என்று தலையை அசைத்தார்.

நாடார் புரிந்துக்கொண்டு சிரித்தார். ‘புரியுது தம்பி.. நான் சொன்னதுல எனக்கு உடன்பாடில்லைங்கறத சூசகமா சொல்றீங்க.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. பரவால்லை.. நீங்களும் நம்ம செல்வம் பய மாதிரித்தான் யோசிக்கறீங்க.. அவனும் இப்படித்தான். நான் கொஞ்சம் எல்ல மீறுறா மாதிரி தெரிஞ்சா போறும்.. வேணாம் மாமாம்பான்.. சரிதான் போடான்னுருவேன்.. ஆனா யோசிச்சிப் பார்த்தா அவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கும்.. பாப்போம்.. ரெண்டு நா ஆறப்போட்டு யோசிப்போம்.. ஆனா ஒன்னு தம்பி..’ அவரை மேற்கொண்டு பேச விடாமல் அவருடைய செல் ஃபோன் சினுங்க எடுத்து யாரென்று பார்க்காமலே, ‘யார்ய்யா இது.. என்ன வேணும்?’ என்றார் எரிச்சலுடன்..

எதிர்முனையில் இருந்தவரின் குரல் கேட்டதும் உரக்க சிரித்தார். ‘டாக்டரே.. ஒமக்கு ஆயுசு கெட்டிய்யா.. இப்பத்தான் ஒம்மப் பத்தி நம்ம வக்கீல் தம்பிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..’

******

‘சொல்லுங்க வந்தனா. இப்ப எப்படியிருக்கு?’ என்றார் ஃபிலிப் சுந்தரம் செல்ஃபோனில்.

எதிர்முனையிலிருந்து வந்த குரல் மிகவும் மென்மையாக இருக்கவே சற்று கூடுதலான இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த குளிரூட்டும் பெட்டியை அணைத்துவிட்டு, வந்தனா கூறிமுடித்ததை சரிவர கேட்காமலே, ‘அப்படியா.. சரி..’ என்றார்.

‘தாங்க்யூ சார்.. நான் ரெண்டு நாளைக்கப்புறம் பேசறேன்.’ என்றவாறு வந்தனா துண்டிக்க குழப்பத்துடன் சுந்தரம் எதுக்கு ஃபோன் பண்ணங்க.. எதுக்கு தாங்க்யூன்னு சொல்லிட்டு டிஸ்கனெக்ட் செஞ்சாங்க.. என்ன சொன்னாங்கன்னே சரியா கேட்டுக்காம சரின்னு சொல்லிட்டமோ.. என்று நினைத்தார்.

எல்லாம் இந்த ஓட்ட ஏசி மிஷினால.. மொதல்ல நாளைக்கே பிரமிசஸ் டிப்பார்ட்மெண்ட்ல சொல்லி மாத்த சொல்லணும்..

‘என்ன, ரெண்டு மூனு நாள் லீவுன்னு சொல்லியிருப்பாங்க.. ஒடம்பு சரியில்லாத நேரத்துல வேற என்னத்தெ கேட்டுருக்கப் போறாங்க’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொண்டு சேர்மன் அலுவலகத்திலிருந்து புறப்படும் முன் அவரைக் காணவேண்டும் என்ற எண்ணத்துடன் மாதவனுடைய காரியதரிசியை அழைத்தார்.

எதிர் முனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டதும் தன்னையுமறியாமல் இரைந்தார்.‘என்ன சொல்றீங்க சுபோத்..? நான் ஒங்கக் கிட்ட என்ன சொல்லியிருந்தேன்..? சேர்மன் புறப்படறதுக்கு முன்னால நான் பாக்கணும்னு சொன்னேனா இல்லையா? Why didn’t you inform me in time?’

பிலிப் சுந்தரம் இத்தனைக் கோபப்பட்டு பார்த்திராத சுபோத் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் ஒரு நொடி தடுமாறிப் போனான். வங்கியின் முதல்வர் அலுவலை முடித்துக்கொண்டு வெளியேற நம்முடைய அனுமதியை கேட்பாரா என்ன? அவர் கிளம்புவது என முடிவெடுத்த பிறகு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் ஓடியது அவனுடைய சிந்தனை..

ஆனால் அதை அப்படியே வெளியில் சொல்ல முடியாதே.. ‘Extremely sorry Sir.. Even ED wanted me to inform him as soon as the Police Officer left.. But I could not do it.. Chairman just decided to leave Sir.. That’s why I could not inform you..’ என்றான் மென்று விழுங்கி..

சுபோத் கூறியதிலிருந்த நியாயம் உரைக்க வேறுவழியில்லாமல், ‘It’s OK Subodh..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்..

சேதுமாதவன் சேர்மனை சந்திக்க விரும்பினாரா? எதற்கு? ஒருவேளை பாபு சுரேஷின் நியமனத்தில் தன்னைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று வாதாட நினைத்திருப்பாரோ.. இல்லை.. சோமசுந்தரத்தின் ராஜிநாமா பற்றியா? இல்லை அந்த ஃபேக்ஸ் விஷயமா?

ஃபேக்ஸ் விஷயம் நினைவுக்கு வந்ததும் நாடாருக்கு என்ன பதிலளிப்பதென சிந்திக்கலானார்.

அவரிடம் கூறுவதற்கு முன்பு மாதவனிடம் இதைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று தான் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என்ற கலக்கம் வேறு அவரைப் பிடித்துக்கொள்ள இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

பணிக்கு சேர்ந்த முதல் நாளே அலுவலக நேரத்திற்கு பிறகு அவரை செல்ஃபோனில் தொடர்புக் கொண்டு அலுவலக விஷயத்தைக் குறித்து பேசுவது அவ்வளவு நன்றாக இருக்காதே என்றும் அவருடைய சிந்தனை ஓடியது..

ஆனால் அதே சமயம் அவரைக் கலந்தாலோசிக்காமல் நாடாரிடம் தனக்கு கிடைத்த தகவலை தெரிவிப்பதால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் அவருக்கு தெரியும்..

இதென்னடா தேவையில்லாத சோதனை என்று சோர்வுடன் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்... நேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது..

எந்த நேரத்திலும் நாடாருடைய தொலைப்பேசி அழைப்பு வரப்போகிறது என்று அவர் நினைக்கவும் அவருடைய செல்ஃபோன் ஒலிக்கவும் சரியாயிருந்தது..

Think of the devil and there he is..னு சும்மாவா சொன்னாங்க என்ற நினைப்புடன், ‘சார் சொல்லுங்க?’ என்றார் எதிர் முனையிலிருந்த நாடாரிடம்..

தொடரும்..

8.11.06

சூரியன் 139

மாணிக்கவேல் ஒரே நாளில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த வந்தனாவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

எத்தனை கம்பீரமாக அலுவலகத்தில் வலம் வருபவர் மேடம் என்ற நினைப்புடன் படுக்கையில் ஆயாசத்துடன் கண்களை மூடியவாறு படுத்திருந்த மெலிந்த உருவத்தைப் பார்த்த மாணிக்கத்தின் கண்கள் அவரையுமறியாமல் பனித்தன.

‘மேடம் கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் பேசிக்கிட்டுத்தான் இருந்தாங்க மாணிக்கம் சார்.. நாந்தான் பேசினது போதும் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னேன்.. லேசா கண்ணெ மூடுனவங்கதான் அப்படியே தூங்கிட்டாங்க.. வேணும்னா எழுப்பலாம்..’ என்ற நளினியை பார்த்தார். வேண்டாம் என்று தலையை அசைத்தார்.

‘எம் பொண்ணு கமலியும் மேடமும் பயங்கர க்ளோஸ்.. அதான் அவளோட திடீர் மரணத்த இவங்களால தாங்கிக்க முடியல.. ஆனா நீங்களும் நந்து சாரும் வந்தது ரொம்ப நல்லதா போச்சின்னு நினைக்கேன்..’

நளினி புன்னகையுடன் அவரைப் பார்த்தாள். ‘உண்மைதான் சார்.. மேடம் சிக்குன்னு கேள்விப்பட்டதுமே எனக்கும் நந்துவோட கெளம்பி வரணும்னு தோனிச்சி.. நாங்க சரியான நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு போனதால வீட்டுக்கு அனுப்ப முடியாதுன்னு சொன்ன டாக்டர கன்வின்ஸ் பண்ணி கொண்டு வர முடிஞ்சது. ஹாஸ்ப்பிட்டல்லருந்து வந்ததுமே மேடத்துக்கு தைரியம் வந்திருச்சின்னு நினைக்கேன்.. முகத்துல மறுபடியும் பழைய களை வந்திருச்சி.. இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா I think she will be back to normal.. அதுவரைக்கும் நானும் நந்துவும் கூடவே இருக்கறதா ப்ளான்..’

மாணிக்கம் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தவாறு எழுந்து நின்றார். ‘ஓக்கே நளினி.. நா கெளம்பறேன்.. மேடம் எழுந்தா நா வந்துபோனேன்னு சொல்லுங்க.. மேடம் என்னவோ எங்கிட்ட பேசணும்னு வந்து வேண்டாம்னு ஃபோன வச்சிட்டதாலத்தான் நா வந்தேன்.. அங்க சந்தோஷ் மட்டுந்தான் இருக்கான்.. அதனால நா இப்பவே கெளம்புனாத்தான்..’

நளினி பரபரப்புடன் எழுந்து நின்றாள்.. ‘சார் நீங்க வந்ததும் எதாச்சும் குடிக்க குடுக்கணும்னு எழுந்தேன்.. பேச்சு வாக்குல மறந்தே போய்ட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரேயொரு நிமிஷம்.. இதோ வந்துடறேன்..’

மாணிக்கம் தடுத்து நிறுத்தியும் கேட்காமல் நளினி சமையலறைக்குள் சென்று மறைய வாசலில் அழைப்பு மணி அடித்த ஓசை கேட்டது.

‘சார், கொஞ்சம் யாருன்னு பாருங்களேன்.. நந்துவாத்தான் இருக்கும்’ என்ற நளினியின் வேண்டுகோளுக்கு பணிந்து மாணிக்கவேல் கதவைத் திறந்தார். நளினியின் கணவன் நந்தகுமார் கையில் பெட்டியுடன் நிற்க மாணிக்கவேல் புன்னகையுடன், ‘வாங்க சார்..’ என்றவாறு வரவேற்றார்.

நந்தக்குமாருடைய முகத்தில் அவரை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பு தெளிவாகவே தெரிந்தது. வீட்டிற்குள் நுழைந்து கையிலிருந்த பெட்டிகளை தரையில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தான்.

‘என்ன சார்.. இங்க ஒங்கள எதிர்பார்க்கவேயில்லை.. மேடத்த பார்த்துட்டு போலாம்னு வந்தீங்களா? ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புலயும் நீங்க மத்தவங்களப் பத்தி நினைக்கணும்னா.. You are really great Sir..’

மாணிக்கவேல் புன்னகையுடன் அவனுடைய தோள்களில் கையை வைத்தார். ‘இழப்பு எல்லாருக்கும் ஏற்படறதுதானே நந்து சார்.. அதனால பாதிக்கப்பட்டவங்கள்ல மேடமும் ஒருத்தராச்சே.. எப்படி கவலைப்படாம இருக்க முடியும், சொல்லுங்க.’

சமையலறையிலிருந்து கையில் பழச்சாற்றுடன் வெளி வந்த நளினியின் பார்வை கட்டிலில் படுத்திருந்த வந்தனாவின் மீது படிந்தது. ‘சார் மேடம் முளிச்சிட்டாங்க..’ என்றாள் உடனே..

மாணிக்கவேலும், நந்தகுமாரும் வந்தனா படுத்திருந்த இடத்தைப் பார்த்தனர்.. வந்தனா மெல்லிய புன்னகையுடன் மாணிக்கவேலைப் பார்த்தார்.

‘என்ன மாணிக்கம் எப்ப வந்தே.. ஏன் என்னெ எழுப்பல?’

மாணிக்கவேல் அவர் படுத்திருந்த கட்டிலை நெருங்கி இருக்கையில் அமர்ந்தார். ‘நீங்க நல்லா தூங்கிக்கிட்டிருந்தா மாதிரி இருந்தது மேடம். டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னுதான்..’

வந்தனா நளினியை நோக்கி தன் கைகளை நீட்ட நளினி கையிலிருந்த பழச்சாற்றை அருகிலிருந்த குறு மேசையைல் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி அமர்த்தினாள்.

நந்தக்குமாரும் நளினியும் அடுத்திருந்த படுக்கையறையை நோக்கி நகர மாணிக்கவேல், ‘எப்படி இருக்கீங்க மேடம்.. நீங்க சட்டுன்னு மயக்கம் போட்டு விழுந்ததும் எனக்கு மொதல்ல என்ன பண்றதுன்னே தெரியலை.. நல்லவேளையா ஜோ அந்த நேரம் பார்த்து வந்தார்..’ என்றார் தங்கத்துடன்..

‘உண்மைதான் ஜோ.. தங்கமான பையன்.. You must be really lucky to have him as your assistant.. Nice boy..’

மாணிக்கவேல் ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

‘என்ன யோசிக்கே மாணிக்கம்?’

மாணிக்கவேல் தயக்கத்துடன் வந்தனாவைப் பார்த்தார்.. ‘நீங்க கடைசியா ஃபோன்ல எதையோ சொல்ல வந்துட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னீங்களே..?’

வந்தனா பதிலளிக்காமல் நளினி சென்ற படுக்கையறையைப் பார்த்தார். பிறகு, ‘அது... இப்ப வேணாமே மாணிக்கம்.. நீ இப்ப இருக்கற மனநிலையில..’ என்று தயங்க..

‘எதுவாருந்தாலும் கேளுங்க மேடம்..’ என்றார் மாணிக்கவேல்..

வந்தனா மவுனமாய் மாணிக்கவேலை பார்த்தார்.

‘ராணி எப்படி இருக்கா? என் மேல இன்னமும் கோபமாத்தான் இருக்காளா?’

‘இதத்தான் நீங்க கேக்க வந்தீங்களா மேடம்... இல்ல...?’

இல்லை என்று தலையை அசைத்தார் வந்தனா.. ‘அது இருக்கட்டும்.. சொல்லு.. ராணி இப்பவும் எம்மேல கோபமாத்தான் இருக்காளா?’

‘அவ கெடக்கறா மேடம்.. அவ கொணம் நாய் வால் மாதிரி.. எந்த நேரத்துல என்ன செய்வா, எப்படி பேசுவான்னு யாராலயும் பிரடிக்ட் பண்ண முடியாது.. அதுக்கும் நீங்க கேக்க நினைச்சதுக்கும் என்ன சம்பந்தம்.. புரியல மேடம்..’

வந்தனா ஆயாசத்துடன் கண்களை மூடினார். சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, ‘இருக்கு மாணிக்கம்..’ என்றார்.

மாணிக்கவேல் வியப்புடன் வந்தனாவைப் பார்த்தார். ‘அப்படியா? அப்படி என்ன கேக்கப் போறீங்க?’

‘ஒன்னெ கொஞ்ச நாளைக்கு சென்னையிலருந்து மாத்தலாமான்னு பாக்கேன்.. ஒனக்கும் கொஞ்ச நாளைக்கு அந்த வீட்ட விட்டு மாறி இருந்தா கமலியோட நெனப்பு போகும் இல்லையா?’

மாணிக்கவேல் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லையென்பதை அவருடைய முகம் போன போக்கிலிருந்து வந்தனாவால் உணரமுடிந்தது.

‘என்ன சொல்றீங்க மேடம்..? அப்பா படுத்த படுக்கையா கெடக்கற இந்த நேரத்துல.. கமலியோட திடீர் மரணம் எனக்கு ஒரு பெரிய இழப்புதான்.. ஆனா அது முடிஞ்சிப் போன கதை.. முடியுதோ முடியலையோ தாங்கிக்கிட்டுத்தான் ஆகணும்.. ஆனா அப்பாவோட நிலமை அப்படியில்லை மேடம்.. அவருக்காக நான் இங்க இருந்துதான் ஆகணும்.. அதனால...’

வந்தனா சரி என்பதுபோல் தலையை அசைத்தார். ‘எனக்கு தெரியும் மாணிக்கம்.. அதான் அப்புறமா பாத்துக்கலாம்னு ஃபோன்ல சொன்னேன்..’

மாணிக்கவேலுக்கு வந்தனா தன்னிடமிருந்து எதையோ மறைப்பதுபோல் தோன்றவே ‘நான் ஒன்னு கேக்கட்டுமா மேடம்..?’ என்றார் தயக்கத்துடன்..

வந்தனா கண்களை மெள்ள திறந்து அவரைப் பார்த்தார். ‘என்ன? சொல்லு..’

‘ஒங்களுக்கு என் நிலமை நல்லா தெரிஞ்சும் இப்படியொரு யோசனைய சொல்றதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணும்.. அத தெரிஞ்சிக்கதான் கேக்கேன்.. சொல்லுங்க.. என்ன காரணம்?’

வந்தனா இல்லையென்று தலையை அசைத்தார்.. பிறகு நளினி இருந்த அறையை நோக்கி கண்களால் சாடை காட்டியவாறு ‘பெரிசா ஒன்னுமில்ல மாணிக்கம்.. நளினியும் நந்துவும் கொஞ்ச நாளைக்கு சென்னையிலருந்து டாக்டர யாரையாச்சும் கன்ஸல்ட் பண்ணா குழந்தை பிறக்குமான்னு ஒரு ஐடியா.. அதான் உன்னெ அவளோட பிராஞ்சுக்கும் அவள ஒன்னோட பிராஞ்சுக்கும் ம்யூச்சுவலா டிரான்ஸ்ஃபர் பண்லாமான்னு ஒரு யோசனை.. ஒனக்கு அப்பாவ விட்டுட்டு போமுடியாதுன்னு தெரியும்.. அதான் ராணிக்கு ஆட்சேபனையில்லன்னா நா அப்பாவ இங்க கொண்டு வந்து வச்சி பாத்துக்கலாமேன்னு.. யோசிச்சேன்.. ஆனா அது சரி வராதுன்னு அப்புறமா தோனிச்சி.. சரி.. அப்புறமா வேற ஏதாச்சும் செஞ்சிக்கலாம்னு..’

மாணிக்கவேல் மவுனமாக யோசித்தார்.. அவருக்கும் இந்த யோசனை ஒருவகையில் பிடித்திருந்தது.. அப்பாவ ஏன் நம்மளோடயே கூப்ட்டுக்கிட்டு போயிரக்கூடாது? சந்தோஷ் ராணியோட இருக்கட்டும்.. இப்பவும் நாள் முழுக்க அப்பாவ ராணிய நம்பி விட்டுட்டு போகணுமே.. வேலைக்கு வர்ற நர்ஸ எந்த அளவுக்கு நம்ப முடியும்? அதுவும் ராணி வீட்டுல இருக்கறப்ப?

கேரளாவுக்கு கொண்டுபோய் ஏதாச்சும் நாட்டு வைத்தியமும் பாக்கலாமே.. அங்க யாராச்சும் நர்ஸ் கிடைக்காமயா போயிருவா? ஏன் நாம முயற்சி செஞ்சி பாக்கக் கூடாது?

‘நான் ரெடி மேடம்.. அப்பாவையும் கூடவே கூட்டிக்கிட்டு போயிடறேன்.. நீங்க சொன்னா மாதிரி அப்பாவுக்கும் இந்த சேஞ்ச் ஒருவேளை ஆறுதலாருக்கலாமில்லையா?’ என்றார் தன்னையுமறியாமல்..

இதை எதிர்பார்க்காத வந்தனா திடுக்கிட்டு கட்டிலில் இருந்து எழ முயன்று.. முடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழ மாணிக்கவேல் பதறிப் போய் நளினையை அழைத்தார்..

அடுத்த அறையில் இருந்த நளினி ஓடிவந்து வந்தனாவை அணைத்து எழுப்பி அமரச் செய்தாள்..

வந்தனா ஆயாசத்துடன் மாணிக்கவேலைப் பார்த்தார். ‘நல்லா யோசிச்சிதான் சொல்றியா?’

‘ஆமாம் மேடம்.. இது கடவுள் ஒங்க வழியா எனக்கு காட்டற வழின்னு நினைக்கேன்.. எனக்கு ஒரு மாசம் டைம் குடுங்க.. அதுக்குள்ள இங்கருக்கற சில பர்சனல் வேலையை எல்லாம் முடிச்சிக்கறேன்..’

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு வந்தனா சரி என்று தலையை அசைக்க மாணிக்கவேல் எழுந்து நின்றார்..

அவர் புறப்படுவதை உணர்ந்த நளினி நந்தக்குமாரை அழைக்க மாணிக்கவேல் விடைபெற்று கிளம்பினார்..

தகுந்த சமயத்தில் வந்தனா மூலம் தனக்கு ராணியிடமிருந்து கிடைக்கவிருந்த விடுதலையை எண்ணியவாறே வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினார்..

ஆனால் கடவுள் வேறொன்றையல்லவா நினைத்திருந்தார்!

தொடரும்..

6.11.06

சூரியன் 138

‘எதுக்கு அப்படிச் சொன்னீங்க?’

குளியலறையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மாதவன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். ‘என்ன சொன்னேன்?’

‘சீனிக்கிட்ட சொன்னதத்தான் கேக்கேன்.’

‘ஏன் அதுல என்ன தப்பு?’

சரோஜா எரிச்சலுடன் தன் கணவரைப் பார்த்தாள். ‘என்னங்க நீங்க, அந்த மனுஷந்தான் அவங்க ரெண்டு பேரும் பழகறதையே விரும்பலையே. அவர் கிட்ட போயி இவன் என்னத்தங்க பேசறது?’

மாதவன் தங்கள் இருவருடைய சம்பாஷனையிலும் தலையிடாமல் அறையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த தன் மகளைப் பார்த்தார். ‘நீ என்ன சொல்றே வத்ஸ்?’

வத்ஸலா தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றாமல் தன்னுடைய தோள்களை உயர்த்தி இறக்கி தனக்கு இதில் கருத்து ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தினாள்.

‘அவ கிட்ட கேட்டா? அவளுக்கு எப்ப சீனியோட விஷயத்துல அக்கறை இருந்திருக்கு? அவதான் கல்யாணம்னால காத தூரம் ஓடறவளாச்சே?’

வத்ஸ்லா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். ‘ஏம்மா சும்மா இருக்கற என்னெ வம்புக்கு இழுக்கறே?’

சரோஜா தன் மகளை எரிச்சலுடன் பார்த்தாள். ‘பின்னே என்னடி? நாங்க ரெண்டு பேரும் பேசிக்கறதுல ஒனக்கு எந்த பங்கும் இல்லேங்கறா மாதிரி தோளப் போட்டு அந்த குலுக்கு குலுக்கறே?’

மாதவன் புன்னகையுடன் இருவரையும் மாறி, மாறி பார்த்தார்.

வத்ஸ்லா அப்படியே அச்சாக தன் மனைவியை உரித்து வைத்திருந்ததை அப்போதுதான் முதல் முதலாக பார்ப்பதுபோல் அதிசயத்துடன் பார்த்தார்.

இருவரும் எரிச்சலுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற பாவனையும் அச்சாக அப்படியே இருந்தது!

‘ஏய், ஏய்.. போறும்.. வந்த இடத்துல ஒங்க சண்டைய ஆரம்பிச்சிராதீங்க.. இது வீடு இல்ல.. ஹோட்டல்..’

சரோஜாவும், வத்ஸலாவும் திரும்பி மாதவனைப் பார்த்தனர்.

‘நா சும்மாத்தானப்பா இருந்தேன்.. இந்த அம்மாதானே வம்புக்கு இழுத்தாங்க.’

மாதவன் தன் மகளை நெருங்கி தன் கையிலிருந்த துவாலையை அவளுடைய தோளைச் சுற்றி இட்டு விளையாட்டாக அவளுடைய தலையைக் குட்டினார்.

தன் தந்தையின் இந்த செயலை எதிர்பார்த்திராத வத்ஸ்லா வியப்புடனும் சந்தோஷத்துடனும் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘I did not expect this from you Dad.’

மாதவன் சிரிப்புடன் தன் மகளை அணைத்துக்கொண்டார். பிறகு திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.

‘இங்க பார் சரோ.. சீனி நமக்கு எப்படி முக்கியமோ அதே மாதிரி அந்த பொண்ணும் அவங்க பேரண்ட்சுக்கு. நா கேள்விப்பட்ட வரைக்கும் அவங்களுக்கு அந்த பொண்ணெ விட்டா வேற யாருமில்ல போலருக்கே?’

சரோஜா வியப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். எப்படி இந்த மனுசனால சட்டுன்னு ரெண்டே நாள்ல மாற முடிஞ்சது? அந்த பரபரப்பு புடிச்ச மும்பைதான் இவர அப்படி ஒரு ஜடமா, குடும்பத்த பத்திய நினைப்பே இல்லாதவரா மாற்றி வச்சிருந்ததா?

அவரைத் திருமணம் புரிந்துக்கொண்டு வந்த புதிதில் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு இப்படி எந்தவித சொந்தமுமில்லாமல் தனிமரமாக நின்ற மனிதரை நம்பி வந்துவிட்டோமே என்று பல இரவுகள் உறங்காமல் அழுதிருக்கிறாள்.

மாதவன் கிளை மேலாளர் பதவிக்கு உயரும் வரை தன்னுடைய மனைவி, மக்கள் என்று ஒரு சராசரி குடும்பத் தலைவனுக்குரிய எல்லா கடமைகளையும் செய்வதில் எவ்வித குறையும் வைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் தன்னுடைய முப்பதாவது வயதில் வங்கிலேயே வயது குறைந்த மேலாளர் என்ற பெருமையை அடைந்தபோது அவருக்கு குடும்பம் என்று ஒரு இருந்ததே மறந்துபோனது.

வேலை, வேலை, வேலை.. இதுதான் அவருடைய நினைப்பாயிருந்தது.

சரோஜாவும் படித்து பட்டம் பெற்றிருந்ததால் அவருடைய துணை இல்லாமலே வத்ஸ்லா மற்றும் சீனிவாசனின் படிப்பு விஷயங்களைக் கவனித்துக்கொள்ள முடிந்தது.

அவள் ஏற்கனவே வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்ததால் தன்னுடைய பொருளாதார தேவைகளுக்கும் மாதவனைச் சார்ந்திருக்க தேவையிருந்ததில்லை.

மாதவன் ஊர், ஊராக மாற்றலாகிச் சென்றபோதும் அவள் தன்னுடைய குழந்தைகள் இருவருடனும் தன்னுடைய பெற்றோர் வசித்திருந்த திருச்சியிலேயே தங்கிவிட்டாள்.

மாதவன் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் உயர் அதிகாரிகளுள் ஒருவராக சென்னையில் பதவியேற்றபோதுதான் தன்னுடைய மனைவியையும் மக்களையும் சென்னைக்கு கொண்டு வந்து குடியமர்ந்தார்.

பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக விடுமுறைக்கு மட்டும் வந்து சென்ற மாதவனுடன் பள்ளிப் பருவத்திலிருந்த வத்ஸ்லாவும், சீனிவாசனும் ஒட்ட மறுத்தனர்.

மாதவனுக்கு அது ஒரு பொருட்டான விஷயமாக படாவிட்டாலும் சரோஜாவுக்கு அது ஒரு குறையாகப்பட்டது.

மாதவனுடைய கவனத்தை தன்னாலியன்றவரை அவர்கள் இருவர் பேரிலும் திருப்ப முயற்சி செய்தாள்.

ஆனால் மாதவன் தன் வயதையொத்த சேதுமாதவனுடன் பதவி போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்க ஒரே வீட்டிலிருந்தும் தலைவனில்லா குடும்பம் போலவேதான் இருந்தது.

ஆனால் நாளடைவில் அதுவே அவர்களுக்குப் பழகிப் போனது. ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் சரோஜாவுக்கும் நண்பிகள் வட்டம் பெருக ஆரம்பித்து அவர்கள் குடியிருந்த வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு மகளிர் கழகத்தையும் உருவாக்கி அதிலேயே மூழ்கிப் போனாள்.

அவளுடைய குடும்பத்துக்கு எந்தவித உறவோ, பந்தமோ இல்லாத சிவகாமி ஒரு சாதாரண வேலையாளாய் வந்து சேர்ந்து அவளுடைய குழந்தைகள் இருவரையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது அவளுக்கு மிகவும் வசதியாய்ப்போனது.

சரோஜாவின் இந்த முடிவு மாதவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தன்னுடைய தந்தையின் பாசத்தை அறிந்திராத சீனிவாசன் தன்னுடைய தாயையும் இழந்ததுபோல் உணர்ந்ததை அவள் கவனிக்க தவறியதன் விளைவு அவன் தன்னுடைய பள்ளியிறுதி தேர்வில் தோற்றுவிட்டு வந்து நின்றான்.

‘இங்க பார் சரோ.. சீனி இப்படி ஆனதுக்கு நான் காரணம்னு மட்டும் சொல்லாத. நான் ஒரு அப்பனா என்னோட பிள்ளைங்களுக்கு எல்லா வசதிகளையும் செஞ்சி குடுத்துருக்கேன். சிட்டியிலயே பெஸ்ட் காலேஜ்.. சிட்டியிலேயே பெஸ்ட் ஸ்கூல்.. போய் வரதுக்கு கார்.. வருசம் ஒருதடவ சம்மர்ல வெக்கேஷன்.. இத விட ஒரு அப்பனால என்ன செய்ய முடியும்?’

உண்மைதான். ஆனால் சீனிவாசனுடைய பார்வையில் அது முக்கியமாகப் படவில்லை..

அவன் எதிர்பார்த்தது தன்னுடைய நண்பர்களுடைய தந்தையரைப் போலவே தன்னுடன் அமர்ந்து ஒரு நண்பனாக பேசி, சிரித்து, விளையாடி, தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவுக்கு தன்னுடன் வந்துபோகும் ஒரு சராசரி தந்தையை.. பணக்காரத்தனமான காரில் தன்னந்தனியாய் பள்ளிக்கு சென்றுவருவதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதை மாதவனோ, சரோஜாவா உணர ஆரம்பித்தபோது காலம் கடந்திருந்தது....

மாதவன் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு அதைவிட உயர்ந்த பதவியைத் தேடி மும்பைக்குச் சென்றபோது நிலைமை இன்னும் மோசமாகிப் போனது.

சென்னையிலிருந்தபோது இரவு ஒன்பது மணிக்கு வந்துக்கொண்டிருந்த மாதவன் மும்பைக்கு குடிபெயர்ந்த ஒரே மாதத்தில் அடியோடு மாறிப் போனார்.

மும்பை வாசம் வத்ஸலாவையும் சீனிவாசனையும் ஏன் சரோஜாவையும் கூட அடியோடு மாற்றிப் போட்டது.

நாளடைவில் குடும்பத்திலிருந்த நால்வருமே தினமும் நள்ளிரவைக் கடந்து வீடு திரும்ப இரவு உணவு தயாரிப்பதையே நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானாள் சிவகாமி மாமி..

‘ஏய்.. சரோ.. என்னாச்சி.. ஏன் இப்படி பாக்கறே?’

பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சரோஜா திடுக்கிட்டு தன்னுடைய தோள்களைப் பற்றியவாறு தன் முன்னே நின்றுக்கொண்டிருந்த மாதவனைப் பார்த்தாள்..

‘அம்மா ஃப்ளாஷ்பேக்குல போயிருப்பாங்க.. என்னம்மா?’

சரோஜா மாதவனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. மாதவனும் அவளுக்கருகில் அமர்ந்து அவளுடைய கரத்தைப் பற்றினார்..

‘நம்ம கடந்த கால வாழ்க்கை திரும்பிப் பார்த்து சந்தோஷப்படறா மாதிரி ஏதாச்சும் இருக்கா என்ன? I mean.. we four as a family.. Have we ever.. நா ஒனக்கோ இல்ல பிள்ளைகளுக்கோ ஏதாச்சும் நல்லது செஞ்சிருக்கேனான்னு என்னையே கேட்டுப் பாக்கறேன்.. நல்ல அப்பாவா வேணும்னா இருந்திருப்பேனோ என்னவோ.. I’ve provided my children all that I could provide.. maybe except love and affection.. ஆனா நான் ஒனக்கு ஒரு நல்ல புருஷனா இருந்திருக்கல சரோ.. I know that..’

வத்ஸ்லா தான் இருந்த இருக்கையிலிருந்தவாறே தன் தந்தையைப் பார்த்தாள்..

அவளுடைய பார்வையிலிருந்த வியப்பு மாதவனை ஒருவகையான வேதனைக்குள்ளாக்கியது. அவளைப் பார்த்து ஆறுதலாக புன்னகைத்தார்.

‘என்னாச்சி இந்த அப்பாவுக்குன்னு பாக்கறியா வத்ஸ்.. Yes.. I now realise that I’ve been a fool all these years.. I never realised that there is something out there.. outside the office.. outside the positions.. the power.. the money.. இன்னைக்கி ஆபீஸ்ல நடந்தத எல்லாம் நினைச்சிப் பார்த்தா.. நா ஏன் இப்பவும் இந்த சிக்கல்ல மாட்டிக்கிட்டு அவஸ்த்தைப் படணும்னு தோனுது.. Why shouldn’t I simply throw in the towel and walk offனு தோனுது.. But, at the same time.. Is it that simple? Could I walk off as simple as thatம்னும் தோனுது.. But one thing is sure.. I am going to make myself available to my wife.. to my children.. the family.. என்ன சொல்றே வத்ஸ்.. Will that be fine?’

அவர் பேசி முடிக்கும் வரை அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வத்ஸ்லா கண்கள் நிறைந்த கண்ணீருடன் எழுந்து வந்து தன் தந்தையையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சரோஜா அமர்ந்திருந்த இருக்கையின் மறு கையில் அமர்ந்து அவளை அணைத்துக்கொள்ள மாதவன் உணர்ச்சி மேலீட்டால் சற்று நேரம் பேச்சற்று அமர்ந்திருந்தார்..

அறை முழுக்க ஒரு கணத்த மவுனம் நிறைந்திருக்க சுவர்க்கடிகாரத்தின் ஓசை மட்டும்...

தொடரும்..1.11.06

சூரியன் 137

சேதுமாதவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு ஏற்பட்ட தோல்விகளும், ஏமாற்றங்களூம் அவரை நிலைதடுமாற வைத்திருந்தது.

முதலில் அந்த முரளி..

காலையில் மாதவன் காரில் வந்து இறங்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு வராதிருந்தது.

பிறகு அவருக்கு தலைமையலுவலக ஊழியர்கள் வரவேற்பளித்தபோது வந்து கலவரம் உண்டாக்காததுடன் அவனுடைய அசிஸ்டெண்ட்டையனுப்பி அவருக்கு வரவேற்புரையாற்ற வைத்தது.

அடுத்து அவருக்கு தெரியாமல் பாபு சுரேஷ் வந்தனாவின் பதவிக்கு நியமிக்கப்பட்டது..

தனக்கு சாதகமாக இருந்த இயக்குனர் சேதுமாதவன் தன்னுடைய போர்ட் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தது.

இத்தனை போறாதென்று தனக்கு சற்று முன் வந்த தொலைபேசி செய்தி.

‘சார்.. எங்கள புடிச்சி வச்சிருந்த அந்த தனபால்சாமி எஸ்.பி ஒங்க சேர்மன பாக்கறதுக்கு வந்திருக்கார் சார்..’ அவருடைய அடியாட்களுள் ஒருவனான பத்மநாபன்.

சேதுமாதவன் அதிர்ந்து போனார். ‘எந்தாடா பறயனெ? அயாளோ.. ஒனக்கெப்படி தெரிஞ்சிது?’ என்று இறைந்தார். பிறகு சுதாரித்துக்கொண்டு ‘சரி.. ஞான் நோக்கிக்கோளாம்.. பேடிக்கேண்டா.’

ச்சை.. நேத்து அந்த பாபு சுரேஷோட பொண்ணெ எப்போ தேடி குடுக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணி நம்ம ஆளுங்கள அனுப்புனமோ அப்போ புடிச்ச சனி.. இன்னும் விடமாட்டேங்குது..

நேத்தைக்கே மினிஸ்டரோட பி.ஏவை கூப்ட்டு பேசினோமே.. பிறகெப்படி?

உடனே இண்டர்காமை எடுத்து சேர்மனுடைய காரியதரிசியை அழைத்தார்.

மறுமுனையில் சுபோத் எடுத்ததும் எரிந்து விழுந்தார். ‘ஏய் மிஸ்டர்.. Chairman is free?’

சுபோத்துக்கு அன்று போர்ட் ரூமில் வைத்து தன்னுடைய முகத்தைக் கண்டதும் எரித்துவிடுவதுபோல் சேதுமாதவன் பார்த்திருந்ததிலிருந்தே கலங்கிப் போயிருந்தான். இப்போது சேர்மனைப் பார்த்து தன்னைப் பற்றி ஏதாச்சும் புகார் கூறப்போகிறாரோ என்று அஞ்சினான். ஆகவே சேர்மன் தற்சமயம் ஒரு போலீஸ் அதிகாரியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று கூறினால் நம்புவாரா என்று குழம்பி ஒரு நிமிடம் என்ன சொல்வதென யோசித்தான்.

ஆனால் ‘என்ன மேன்.. நேத்தைக்கி மாதிரி இன்னைக்கிம் ஏதாச்சும் பொய் சொல்லி நான் சேர்மன மீட் பண்ண விடாம இருக்கலாம்னு ப்ளான் பண்றியா? தொலைச்சிருவேன்.. Is he free or not?’ என்று சேது எதிர்முனையிலிருந்து மிரட்ட வேறு வழியில்லாமல், ‘Sir.. there is a Policer officer in his cabin.. He told me not to allow anyone till...’

‘Ok..Ok.. Call me when he is free..’ So.. அந்த பத்மநாபன் சொன்னது சரிதான் ..

இப்ப என்ன செய்யறது? எதுக்காக வந்திருப்பான்.. பத்மநாபனையும், அந்த நம்பியாரையும் பிடிச்சதப் பத்தியாருக்குமோ..

இல்ல அந்த கோயம்புத்தூர் பார்ட்டிய புடிச்சி ரெண்டு நாள் அடைச்சி வச்சிருந்தோமே அதப்பத்தி இருக்குமோ..

எதுவாருந்தா என்ன? Why should I be afraid of anyone.. I did not do anything illegal.. I don’t think anyone could connect me personally to these two incidents..

தைரியமிருந்தா மாதவன் நம்மள கூப்ட்டு கேக்கட்டுமே..

சரி.. இப்ப சோமசுந்தரத்தோட ரிசிக்னேஷன்.. அதான் முக்கியம்.

எப்படி கரெக்டா போர்ட் நடக்கற நேரம் பார்த்து அந்த ஃபேக்ஸ் வந்தது? யார் அனுப்பியிருப்பா? இன்னைக்கி சாயந்தரமோ.. அல்லது நாளைக்கு காலைலயோ வரப்போற நியூஸ் எப்படி அதுக்குள்ள ஃபேக்ஸ் மூலமா வந்தது?

அந்த சுபோத் பயல ரூமுக்கு கூப்ட்டு மிரட்டுனா என்ன? மரியாதையா சொல்லிரு.. சொன்னா நேத்தைக்கி நீ சொன்ன பொய்ய மறந்துடறேன்.. இல்லே மவனே நீ தொலைஞ்சேன்னு ரெண்டு போட்டா கக்கிரமாட்டான்..?

அவனெ மெரட்டி வேற யாரும் தெரிஞ்சிக்கறதுக்கு முன்னால நாம கண்டுபிடிக்கணும்..

மீண்டும் இண்டர்காமை எடுத்து சேர்மனின் காரியாரியாலயத்தை அழைக்க ரிங் போய்க்கொண்டேயிருந்தது..

எரிச்சலுடன் ஒலிவாங்கியை ஓங்கியறைந்ததும் அது உடனே ஒலிக்க எடுத்த, ‘ஹலோ’ என்று உறுமினார்.

‘சார்.. சேர்மன் ஈஸ் லீவிங்.. எல்லா எக்ஸ்க்யூட்டிவ்சும் லாபியில அவர வழியனுப்பறதுக்கு நிக்கிறாங்க.. நீங்க..’ அவருடைய பி.ஏ.

அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘So what? Don’t disturb me for such silly things hereafter.’ என்று பாய்ந்தார்.

Idiots.. கூஜா தூக்கிப் பசங்க.. இவன் என்ன பெரிய இவனா? இவன் வரும்போதும் போம்போதும் போய் நிக்கறதுக்கு?

வச்சிக்கறேண்டா.. மாதவன்.. வச்சிக்கறேன்.. எண்ணி ஒரு வாரம் தாங்கறியான்னு பாக்கறேன்..

புறப்பட்டு வீட்டுக்குப் போய் நன்றாக குடித்து இன்றைய தோல்விகளை மறக்கவேண்டும் என்று நினைத்தவாறு எழுந்தார்..

****

‘என்ன டாட்.. ஏதோ யோசனையா இருக்காப்லருக்கு.. நா வந்து ஒங்க முன்னால பத்து நிமிஷத்துக்கும் மேல ஒக்காந்திருக்கேன்.. நா வந்தத கூட நோட் பண்ணாம அப்படியென்ன யோசனை டாட்?’

சோமசுந்தரம் திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரில் புன்னகையுடன் அமர்ந்திருந்த தன் மகள் பூர்னிமாவைப் பார்த்தார்.

‘ஒன்னுமில்ல பூர்னி.. I am little tired.. I was in fact dozing off.. அதான் நீ வந்தத கவனிக்கலை.. சொல்லும்மா.. இன்னைக்கி ஹாஸ்ப்பிட்டல்ல ப்ராப்ளம் ஏதும் வரலையே..’ என்றவன் தன் மகளின் முகம் போன போக்கைப் பார்த்து சட்டென்று, ‘வராதுன்னு தெரியும்.. சும்மா கேட்டேன்.. Everything went smoothly, No?’ என்றார் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்தவாறு..

பூர்னிமா தன் தந்தையையே பார்த்தாள். ‘Come out with it Dad.. What’s bothering you? ஆடிட்டர் அங்கிள் கூட நா எதிர்ல வர்றதையும் கவனிக்காம போறார்? Is there anything serious? Is it the loan at that finance company? Are they pressing you to repay that?’

எப்படி எப்பவும் மாதிரி இதையும் கரெக்டா சொல்றா? Does she know mind reading too? இவளுக்கு தெரியாததுன்னு ஏதாச்சும் இருக்கா என்ன? இவளிடம் மறைத்து பயனில்லை என்று நினைத்தார். ஒருவேளை இவளே அதற்கு ஒரு தீர்வும் சொல்லலாமே..

ஆமாம் என்றவாறு தலையை அசைத்தார் மெதுவாக. ‘It is more serious than you think Poorni. It has come out in the papers..’

பூர்னிமா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்துவிட்டு அவருடைய மேசையின் மீது கிடந்த கடிதம் போன்ற ஒரு காகிதத்தைப் பார்த்தாள்.

அவளுடைய பார்வையின் பாதையை கவனித்த சோமசுந்தரம் அன்று பகல் வங்கி சேர்மன் அலுவலகத்திற்கு வந்த ஃபேக்சின் நகல¨ அவளிடம் நகர்த்தினார்.

பூர்னிமா அதை முழுவதுமாக படித்து முடித்து தன் தந்தையிடமே நகர்த்திவிட்டு அவரைப் பார்த்தாள். ‘So.. this is it.. As you said.. it is indeed serious Dad..’ என்றவள் மெள்ள எழுந்து அறைக்கு எதிர் புறத்திலிருந்த ஜன்னல் வழியாக பத்து மாடிக்கு கீழே மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களைப் பார்த்தாள்..

தூரத்தில் மாலைச் சூரியன் முழு வட்ட வடிவத்தில் மேகங்களிலிருந்து அடிவானத்தில் அழகாக விழுந்துக்கொண்டிருந்தது..

சோமசுந்தரம் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து அறையைக் கடந்து அவளருகில் சென்று நின்றார்.

‘என்ன பூர்னி யோசிக்கறே.. You have any solution ?’

பூர்னிமா திரும்பி தன் தந்தையை பார்த்தாள்.

‘நீங்க இதுக்கப்புறமும் போர்ட்ல கண்டினியூ பண்றது சரியாருக்காதே டாட்..’

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்து ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘I know.. I resigned in the afternoon..’ என்றார் மிருதுவாக..

பூர்னிமா தன் தந்தையை நெருங்கி அவருடைய தோள்களில் தன் தலையை சாய்த்தாள்.. இடக்கரத்தை தன் தந்தையின் இடுப்பைச் சுற்றி வளைத்து.. ‘You did the right thing Dad.. You had no choice.. did you?’ என்றாள் மெல்லிய குரலில்..

சோமசுந்தரம் பதிலளிக்காமல் தூரத்தில் சாலையில் பொட்டுக்களாய் தெரிந்த வாகன விளக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.. இதுவே சம்மராருந்தா வெய்யில் இன்னும் இறங்கியிருக்காது.. அக்டோபர் கூட இன்னும் முடியல அதுக்குள்ள ஆறு மணிக்கெல்லாம் எப்படி இருட்டிப் போயிடுது?

‘What are you planning to do Dad? I mean the vacancy in the Board.. You have any names in your mind?’

ஆமாம் என்றவாறு தலையை அசைத்த சோமசுந்தரம் திரும்பி தன் இருக்கையை நோக்கி நடந்தார். பூர்னிமாவும் அவரைத் தொடர்ந்து சென்று அவரெதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்தாள்..

சில நொடி நேர மவுனத்திற்குப் பிறகு..

‘Is my name there in your list Dad?’

சோமசுந்தரம் திடுக்கிட்டு நிமிர்ந்து தன் மகளைப் பார்த்தார்..

‘Are you really serious.. Poorni?’

‘Why not?’

‘I don’t know Poorni, I really don’t know..’ என்ற சோமசுந்தரம் சட்டென்று சினுங்கிய தன் செல்ஃபோனைப் பார்த்தார்..

பாபு சுரேஷ்.. இவன் எங்க இந்த நேரத்துல என்ற எரிச்சலுடன், ‘Yes.. But I am sorry Mr.Babu.. I am little busy.. Can you call me in the morning?’ என்றவாறு இணைப்பைத் துண்டித்தார்..

தொடரும்..