31.3.06

சூரியன் 52

சேது மாதவன் இருப்புக் கொள்ளாமல் நடு ஹாலில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருப்பதை சமையலறையிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தான் திருநாவுக்கரசு. காலைல ஐயா முளிச்சி முளியே சரியில்லை போலருக்கே. ஒன்னுமாத்தி ஒரு ஃபோனா வந்து அவரோட கோபம் ஏறிக்கிட்டே போவுது? என்ன நடக்குதுன்னே எளவு வெளங்க மாட்டேங்குதே?

ஹாலிலிருந்த தொலைப்பேசி அலறவே நடந்துக்கொண்டிருந்த மாதவன் சட்டென்று நின்று எரிச்சலுடன் அதைப் பார்த்தார். செல் ஃபோன்ல கூப்டாம யார் இதுல கூப்டறா? ஏதாவது ராங் காலாயிருக்கும் என்ற எண்ணத்தில் ‘எடோ திரு.. எடுத்து யாரான்னு நோக்கு. என்னெ அறியாத்த ஆளானெங்கில் ஞான் இவ்விடெ இல்யா.. கேட்டோ.’ என்றார்.

திரு பதறியடித்துக்கொண்டு ஓடிப்போய் ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்து ‘ஹலோ’ என்பதற்கு முன் எதிர்முனையிலிருந்து, ‘யார்யா அது?’ என்ற அதிகாரத்துடன் ஒரு முரட்டுக் குரல் ஒலிக்க, எரிச்சலுடன், ‘நான் யாரா இருந்தா உங்களுக்கென்னங்க? நீங்க யாருங்க,  அதச் சொல்லுங்க முதல்ல.’ என்றான்.

‘டேய் இங்க பேசறது யாருன்னு சொல்லணுமா? சொல்றேன். -------- ஸ்டேஷன்லருந்து எஸ்.ஐ. பேசறேன். போறுமா? இப்ப சொல்லு.. அங்க சேது மாதவன்னு ஒருத்தர் இருக்காரா?’

போலீசா? சட்டென்று முகம் வெளிறிப் போன திருநாவுக்கரசு திரும்பி தன் முதலாளியைப் பார்த்தான். ‘சார், போலீஸ் ஸ்டேஷன்லருந்து. உங்கக்கிட்டத்தான் பேசணுமாம்.’

மாதவன் அவன் சொன்னதை நம்பாதவர்போல் நின்ற இடத்திலிருந்தே அவனைப் பார்த்தார். ‘போலீஸ் ஸ்டேஷனோ.. எந்துனா? எந்தான்னு சோய்க்கிடோ..’ என்று எரிந்து விழுந்தார்.

திருநாவுக்கரசு, ‘சார் என்ன விஷயம்னு கேக்கறார் சார்.’ என்றான் தொலைப்பேசியில்.

‘என்ன விஷயமா? அவர் அனுப்புன அடியாள்ங்கள புடிச்சி வச்சிருக்கோம். அவனுங்க இவர் சொல்லித்தான் அந்த பார்ட்டிய டார்ச்சர் பண்ணோம்னு சொல்றானுங்க. என்ன குடுக்கறியா, இல்ல நாங்க அங்க புறப்பட்டு வரணுமா? கேட்டுச் சொல்லு.’

திருநாவுக்கரசுக்கு எல்லாம் புரிந்தது. அந்த ரெண்டு தடிப்பசங்க வீட்டுக்குள்ள வந்தப்பவே நெனச்சேன், ஐயா ஏதோ தேவையில்லாம மாட்டிக்கப்போறார்னு. நா நெனச்சது சரியா போச்சி.

‘எடோ எந்தான.. எந்துனா அங்ஙன நோக்குன?’ என்ற மாதவனைப் பார்த்தான்.

‘சார்.. நீங்க அனுப்புன யாரோ ரெண்டு பேர அந்த ஸ்டேஷன்ல புடிச்சி வச்சிருக்காங்களாம்? அதப்பத்தித்தான் உங்கக் கிட்ட பேசணும்னு...’

சேது மாதவன் ஒரு நொடி நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தார். ரெண்டு பேர்னா நிச்சயம் பாஸ்கரனும், பத்மனும் தான்.. மண்டமாரு.. இவம்மாரெங்கன போலீஸ்லே பெட்டுப்போயி.. இப்ப என்ன பண்ணலாம்? வீட்ல இல்லேன்னு சொல்ல முடியாது. போலீஸ் விஷயம்..

இவனுங்கள எந்த கேஸ்ல புடிச்சி வச்சிருக்காங்கன்னே தெரியலையே.. அந்த பாபு சுரேஷோட பொண்ணு கேஸ்லயா.. இல்ல.. வேற ஏதாச்சிலுமா?

‘இவ்விட கொடுக்கு.’ என்று ஒலிவாங்கியை வெடுக்கென பிடுங்கி, ‘யெஸ் சேது மாதவன் ஸ்பீக்கிங். என்ன விஷயம் சார்?’ என்றார் அதிகாரத் தோரணையில்.

அவருடைய குரலில் இருந்த தொனி மறுமுனையிலிருந்த வடி காவல்நிலைய துணை ஆய்வாளரை ஒரு நொடி தயங்க வைத்தது. ‘சார்.. பாஸ்கரன், பத்மநாபன்னு ரெண்டு பேர காலையில நம்ம சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷன்ல வச்சி அரெஸ்ட் பண்ணியிருக்கோம். வெறுமனே சந்தேகக் கேஸ்லதான் புக் பண்ணோம். ஆனா இப்பத்தான் தெரியுது போன வாரம் ஆவடியில ஒருத்தர ரெண்டு நாளைக்கு புடிச்சி கஸ்டடியில இல்லீகலா வச்சிருந்து டார்ச்சர் பண்ண கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கானுங்கன்னு .’

சேது மாதவன் எரிச்சலுடன், ‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்.. இதெல்லாம் எங்கிட்ட எதுக்கு சொல்றீங்க?’ என்றார்.

மறுமுனையில் இருந்து கோபத்துடன் பதில் வந்தது. ‘சார் எங்கள என்ன வேலவெட்டியில்லாதவங்கன்னு நினைச்சீங்களா? இவனுங்கள விசாரிச்சதுல நீங்க சொல்லித்தான் அவர புடிச்சி வச்சோம்னு சொல்றானுங்க. அதான் கூப்டோம்.’

சேது மாதவன் ஒரேயொரு நொடிதான் யோசித்தார். Attack is the best form of defense என்று அவருக்குத் தெரியாதா என்ன.. அதீத கோபத்துடன், ‘நீங்க யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியுமா இன்ஸ்பெக்டர். நான் சவுத் இந்தியாவுலருக்கற மிகப் பெரிய பேங்க் ஒன்னோட எம்.டி. எவனோ ரெண்டு ரவுடிப்பசங்க என் பேர யூஸ் பண்ணி தப்பிக்கப் பார்த்தா நீங்க ஒடனே என்னோட ஃபோன் நம்பர சர்ச் பண்ணியெடுத்து கூப்டுருவீங்களா?’ என்று இரைந்தார்.

எதிர்முனையில் சிறிது நேரம் பதில் இல்லை.. ராஸ்கல்ஸ்.. பறஞ்ச சோலிய செய்துமுடிக்கான் கழிவில்லாண்டு எண்டே பேரையுமல்லே இட்டுக்கொடுத்திருக்கினெ.. இது  பத்மண்டே பணியாயிருக்கணும்.. ஆத்யம் பொறத்தேக்கி கொண்டு வராம்..  இவம்மார எந்தா செய்யேண்டேன்னு பின்னே ஆலோய்க்காம்..

‘சாரி.. சார்.. இவனுங்க ஒங்க ஃபோன் நம்பரையும் கொடுத்ததால ஒங்களுக்கும் இதுல சம்பந்த்தம் இருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்.. மன்னிச்சிருங்க.’

இணைப்புத் துண்டிக்கப்பட்ட ஒலிவாங்கியையே பார்த்துக்கொண்டிருந்த சேது மாதவன் திரும்பி திருநாவுக்கரசைப் பார்த்தார். ‘எடோ தான்  சுரேஷ் நம்பர டயல் செய்துக் கொடுக்கு..’

அவன் அவரிடமிருந்த ஒலிவாங்கியை பணிவுடன் வாங்கி அவர் கூறிய எண்ணுக்கு டயல் செய்து மறுமுனையிலிருந்து குரல் கேட்டதும் அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகன்றான்.

‘சுரேஷ்?’

‘யெஸ் சார். பாபுதான் பேசறேன்.’

‘உங்க டாட்டர் விஷயம் என்னாச்சி. ஏதாச்சும் தெரிஞ்சிதா?’

எதிர்முனையிலிருந்து சிறிது தயக்கத்துடன். ‘இல்லையே சார். நீங்க அனுப்புன ஆள் ஒருத்தன் காலையில வந்து என் பொண்ணோட ஃபோட்டோ ஒன்ன வாங்கிட்டு போனான். அப்புறம் ஒரு தகவலும் இல்லையே சார். என் ஒய்ஃப் வேற இங்க அழுது, அழுது பிரஷர் ஜாஸ்தியாயி டாக்டர கூப்டற அளவுக்கு போயிருச்சி சார்..’

சேது மாதவனுக்கு எரிச்சலாக இருந்தது. எடோ தண்டெ ஃபேமிலி விஷயம் அறியான் வேண்டிட்டானோ ஞான் விளிச்சது? எண்டெ ஆளுங்கள எங்ஙனெ போலிஸ் பிடிச்சுன்னு அறியாவேண்டிட்டானெ தன்னெ விளிச்சே.. வேறொன்னினுமல்லா..

‘சாரி டு ஹியர் தட் மிஸ்டர் சுரேஷ்.. என்னையும் அவனுங்க கூப்டவேயில்லை.. அதான் கூப்டேன்..’ என்றவர் உடனே.. ‘அப்புறம் சுரேஷ் வேறொரு விஷயம்.’ என்றார்.

‘சொல்லுங்க சார்.’

‘எங்கிட்ட இப்ப சொன்னா மாதிரி நான் யாரையும் அனுப்பி உங்க டாட்டரோட ஃபோட்டோவ வாங்குனேன்னு வேற யாருக்கும்.. நம்ம பாங்குலருக்கறவங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன் தெரியக்கூடாது.. புரிஞ்சிதா.. ஒங்க டாட்டரோட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல எனக்கு கூப்டு சொல்லுங்க.. சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன், என்ன?’ என்றார்.

‘சரி சார்.. ஐ வில் டூ தட்..’

‘எனிதிங்க் எல்ஸ்?’

‘சார் என் பொண்ணு விஷயமும் வெளிய தெரியாம இருக்கணும்.. நீங்க சொன்னீங்கன்னுதான் அந்தாள்கிட்ட அவ ஃபோட்டோவ குடுத்தேன். கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கறே நேரத்துல..’

சேது மாதவனுக்கு எரிச்சலாயிருந்தது. ‘டோண்ட் ஒர்றி.. என் சைட்லருந்து விஷயம் வெளியே போகாது. அப்புறமா கூப்டறேன்.’ என்றவாறு எதிர்முனையிலிருந்து பதில் வரும் முன்னர் இணைப்பைத் துண்டித்தார்.

பிறகு சோபாவிலிருந்த தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஒரு எண்ணைத் தேடிப்பிடித்து செல் ஃபோனிலிருந்து டயல் செய்யாமல் ஹாலிலிருந்த தொலைப்பேசி வழியாக அந்த எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் எடுத்ததும் படபடவென பேசிவிட்டு இறுதியில், ‘நான் சொல்றது புரிஞ்சிதில்ல? அந்த ரெண்டு பேரும் உங்க கம்பெனி ஆளுங்க. அப்படித்தான் சொல்லிக்கிட்டு உடனே போயி பெய்ல்ல எடுத்துருங்க. நா அந்த பார்ட்டிக்கு ஃபோன் பண்ணி கம்ப்ளெய்ண்ட வித்ட்ரா பண்ண சொல்றேன். என்ன சொல்றீங்க?’ என்றார்.

எதிர் முனையிலிருந்து பதில் உடனே வராமல் போகவே, ‘என்னய்யா யோசிக்கறே? இந்த விஷயத்த ஒளுங்கா முடிச்சிக்குடுய்யா. உன் விஷயத்த நான் நேரம் வரும்போ பார்த்துக்கறேன்..’ என்றார் எரிச்சலுடன்.

‘சரி சார். இப்பவே ஆள அனுப்பறேன்.’ என்று பதில் வரவே மீண்டும் எரிச்சலடைந்தார். ‘யோவ்.. நீ வேற ஆள அனுப்பறதுக்கா நானே ஒனக்கு ஃபோன் பண்றேன்? நீயே போயி எந்த பிரஸ்னமுமில்லாம முடிச்சிட்டு வாயான்னா..ஆள அனுப்பறியா? ஏன் நம்ம ஆளுங்க பண்ணாமாதிரி புத்தியில்லாம ஒன் ஆளும் ஏதாச்சும் செய்யறதுக்கா?’

‘சாரி சார்.. நானே போறேன்.’

‘விஷயம் முடிஞ்சதும் வெளிய இருந்து எனக்கு ஃபோன் பண்ணு. என் செல்லுக்கு பண்ணாத. வீட்டு நம்பர் உங்கிட்ட இருக்குதில்லே. அப்புறம் இந்த கால உன் ரிசீவ்டு கால் லிஸ்ட்லருந்து இப்பவே அழிச்சிரு.. என்ன?’ என்று  இணைப்பைத் துண்டித்தார்..

***

‘என்ன அங்கிள் சொல்றீங்க?’ என்றாள் மைதிலி பதற்றத்துடன்.

டாக்டர் ராஜகோபாலன் அவளைப் பார்த்து தலையை அசைத்தார். 'ஆமா மைதிலி. ஆங்கிள்ல ஒரு ஹேர் லைன் ஃப்ராக்சர் இருக்கு. ப்ளாஸ்டர் போட்டாத்தான் சரியாவும். ஒரு ஒரு மணி நேரம் ஆவும். அவருக்கு வலி ஜாஸ்தியா இருந்ததால ஒரு பெய்ன் கில்லர் போட்ருக்கேன். லெட் ஹிம் டேக் ரெஸ்ட்.’

மைதிலி வேறு வழியில்லாமல் ‘ஓக்கே அங்கிள்.. நா வெய்ட் பண்றேன்.’ என்றாள்.

சீனியின் காலில் வெறும் சுளுக்குதானிருக்கும் தேவைப்பட்டால் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவளுடைய  குடும்ப நண்பரும் மருத்துவருமான டாக்டர் ராஜகோபாலனுடைய செம்பூர் கிளினிக்கிற்கு சீனிவாசனை அழைத்துக்கொண்டு வந்தாள்.

ஆனால் அவனுடைய கணுக்காலில் லேசான முறிவு ஏற்பட்டிருக்கறதென்பதை அறிந்த மைதிலி சீனியின் வீட்டுக்கு ஃபோன் செய்து அறிவிக்க வேண்டாமா என்ற யோசனையுடன் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

அவளுடைய தலையைக் கண்டதும் லேசான புன்முறுவலுடன் அவளை தன்னருகில் வருமாறு கையை அசைத்தான் சீனிவாசன்.

‘என்ன சொல்லு..’ என்றாள் மைதிலி அவனை நெருங்கி.

‘டாக்டர் ஹேர் லைன் ஃப்ராக்சர்ங்கறாரே.. இப்ப என்ன பண்ணலாம்?’

‘அதான் சீனி நானும் கேக்கலாம்னு வந்தேன். ஒங்காத்துக்கு ஃபோன் பண்ண வேணாம்?’

‘வேணாம்,மை. அப்பா இன்னைக்கி சென்னைக்கு புறப்பட்டு போணும்.. இந்த நேரத்துல இத சொல்ல வேணாம். It is ok. I’ll manage.. Just take me home after they do the plaster.. You  can go home after that. What do you say? I’ll take some rest for a few days and then go to Chennai.’ என்றவனை வியப்புடன் பார்த்தாள் மைதிலி.

‘நீ என்ன சொல்றே சீனி.. நீயும் சென்னைக்கு போறியா?’

பின்ன என்னை என்ன பண்ண சொல்றே? என்பதுபோல் அவளையே பார்த்தான் சீனிவாசன்..

தொடரும்..

30.3.06

சூரியன் 51

‘என்ன அங்கிள் நான் சொன்னதுல தப்பு ஏதாச்சும் இருக்கா?’

தன்னுடைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த தனபாலசாமி ரம்யாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்.

‘என்னம்மா கேட்டே?’ என்றார்.

ரம்யா தோட்டத்தில் பதிந்திருந்த தன் பார்வையை அவர் பக்கம் திருப்பினாள்.

‘இல்ல அங்கிள். இருபத்தி நாலு மணி நேரத்துல தூங்கற நேரத்தத் தவிர ஒரு ரெண்டு மணிநேரம் எங்களுக்குன்னு ஒதுக்கணும்னு எங்க அப்பாவுக்கு தோனியதே இல்லைன்னு சொன்னேனே அது தப்பா?’

தனபால் சமையலறை வாயிலில் நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய மகளைப் பார்த்து லேசாக புன்னகைத்தார். ‘இங்கே வந்து உட்கார்’ என்பதுபோல் சைகை செய்தார்.

புவனா நேரே ரம்யாவை நோக்கிச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு உணவு மேசைக்கு சென்று அமர்ந்தாள்.

தனபால் இருவரையும் கனிவுடன் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

‘நீ நினைக்கறது தப்பில்ல ரம்யா. ஆனா எந்த ஒரு தகப்பனும் தன் பிள்ளைகளை வேணும்னே புறக்கணிக்கறதில்லை. இப்ப என்னையும் புவனாவையுமே எடுத்துக்கயேன். இவ அம்மா இறந்தப்போ இவளுக்குன்னு என்னை விட்டா யாருமே இல்லை. அந்த வயசுல ஒரு பொண்ண வீட்ல வச்சிக்கிட்டு என்னால வளக்க முடியாதுன்னு நினைச்சித்தான் போர்டிங் ஸ்கூல்ல விட்டேன். அதுல புவனாவுக்கு வருத்தம்தான். எங்கம்மா, என்னோட அண்ணா வீட்ல இருந்தாங்க. அவங்களோட விடாம போர்டிங் ஸ்கூல்ல விட்டதுல புவனாவுக்கு மட்டுமில்ல, எங்கண்ணா, அம்மா எல்லாருக்குமே வருத்தம்தான். அம்மா பாசத்துக்காக ஏங்குற பிள்ளைய போயி போர்டிங்ல விட்டுட்டியேப்பான்னு எங்கம்மா வருத்தப்படாத நாளே இல்ல.. ஆனாலும் அதுதான் புவனாவுக்கு நல்லதுன்னு எனக்குப் பட்டது. இப்பவும் சொல்றேன். இன்னைக்கி நா புவனாவ வீட்ல தைரியமா விட்டுட்டு போக முடியுதுன்னா அதுக்குக் காரணம் புவனாக்கிட்டருக்கற துணிச்சல்தான். தனியா எந்த நேரத்துலயும் வெளிய போய் வர்றதுக்கும், தனியா இவ்வளவு பெரிய வீட்ல இருந்துக்கறதுக்கும் ஒரு பொண்ணுக்கு தைரியம் வேணும். அது புவனாக்கிட்ட இருக்குன்னா அது அவ போர்டிங்ல படிச்சதுதான் காரணம்னு நா நினைக்கிறேன். உன் விஷயத்துலயும் அதத்தாம்மா உங்கப்பா நினைச்சிருப்பார். அது மட்டுமில்லை.. இந்த விஷயத்த உன்னோட கோணத்துலருந்து மட்டும் பார்த்தா மத்த அப்பா மாதிரி நம்ம அப்பா இல்லையேன்னு தோனும். நானும் புவனாவும் அன்னியோன்னியமா இருக்கோம்னு உனக்கு தோனுது. ஆனா புவனாவ கேட்டுப் பார். ‘உங்கள பார்த்தாலே ஒரு போலீஸ் ஆஃபீசர பாக்கறா மாதிரி இருக்குதுப்பா’ன்னு அவளே எங்கிட்ட சொல்லியிருக்கா. வீட்டுக்கு வீடு வாசப்படிங்கறா மாதிரி ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வோரு விதமான பிரச்சினை. சில பேரண்ட்ஸ் ஒரேயடியா பிள்ளைங்க விஷயத்துல தலையிட்டு அவங்கள சுயமா ஒரு முடிவெடுக்க முடியாம வளர்த்துருவாங்க. என்னைக் கேட்டா அதுதான் ரொம்பவும் கெடுதியானது.’

ரம்யா தன் தோழியைப் பார்த்தாள். பிறகு, ‘நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன் அங்கிள். நீங்க சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா புவனாவ போர்டிங் ஸ்கூல்ல சேர்த்தீங்க. ஆனா புவனாவே எங்கிட்ட சொல்லியிருக்கா. எந்த வேலையிருந்தாலும் ஒவ்வொரு மாசமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையும் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அவளை போய் பார்த்து அவகூடவே ஒரு நா முழுசும் தங்குவீங்கன்னு. ஆனா எங்கப்பா ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தாலும் மிஞ்சிப்போனா ஒரு மணி நேரம் வீட்ல இருப்பார். புறப்பட்டுப் போற அன்னைக்கிக் கூட அவரோட ட்ரெய்ன் புறப்படற நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னால வரைக்கும் வீட்ல இருக்க மாட்டார். வேணும்னே என்னையும் அம்மாவையும் அவாய்ட் பண்றா மாதிரி நடந்துக்குவார் அங்கிள். மனச வெறுத்து சொல்றேன் அங்கிள். அவருக்கு நாங்க ரெண்டு பேரும் ஒரு பொருட்டே இல்லை . அப்புறம் எப்படி மனசு ஒட்டும்? அதான் அவருக்கு ஒரு லெசன் டீச் பண்ணனும்னு வீட்ட விட்டு வந்துட்டேன்.’

தனபால் அவளை புன்னகையுடன் பார்த்தார். ‘சரிம்மா. I understand. வீட்ட விட்டு வந்துட்டே.. இப்ப என்ன பண்றதா உத்தேசம்?’

ரம்யா இந்த கேள்வியை எதிர்பார்க்காததுபோல் திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

‘என்னம்மா, திகைச்சுப்போய்ட்டே? வீட்ட விட்டு வரணும்னு தோனிய உனக்கு மேல்கொண்டு என்ன செய்யணும்னும் தெரிஞ்சிருக்கணுமே அதனால கேட்டேன்.’

ரம்யா பதில் பேச முடியாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

‘சரி.  வீட்ட விட்டு வந்ததுனால இந்த பிரச்சினை சால்வாயிரும்னு நீ நினைக்கறியாம்மா? உங்கப்பாவ தண்டிக்கறதா நினைச்சி நீசெஞ்சிருக்கற காரியம் உங்கம்மாவையும் பாதிச்சிருக்குமே. எல்லாம் உன்னாலதாண்டின்னு உங்கப்பா உங்கம்மாவ குற்றம் சொல்லியிருப்பாரே.. சரி அதுவும் போட்டும். இந்த விஷயம் ஒருவேளை உன்ன பொண்ணு பாக்க வந்த பையனோட பேரண்ட்சுக்கு தெரிஞ்சிப்போயி இந்த மாதிரி பொண்ணு எங்களுக்கு வேணாம்னுட்டா? அது உன்ன நீயே தண்டிச்சிக்கிட்டா மாதிரி ஆயிராதா?’

ரம்யாவின் தோள்கள் குலுங்கியதிலிருந்து அவள் அழுவதை உணர்ந்த புவனா அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

தனபால் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து நின்றார். ‘சரி புவனா, எனக்கு டைம் ஆவுது. நான் கிளம்பறேன். அப்பா கமிஷ்னர மீட் பண்ணிட்டு நாலு, நாலரைக்குள்ள வந்திடறேன். ரம்யா, இன்னைக்கி முழுசும் இருந்து யோசனை பண்ணி வைம்மா. சாயந்திரம் நான் வந்ததும் நாம மூனு பேருமா உங்க வீட்டுக்கு போலாம். நான் அதுக்கு முன்னால உங்கப்பாவ கூப்டு நீ இங்கதான் இருக்கேன்னு சொல்லணும். என்ன சொல்றேம்மா?’

ரம்யா தலையை நிமிர்ந்து அவரைப் பார்க்க துணிவில்லாமல், ‘சரி அங்கிள்’ என்றால் மெல்லிய குரலில்.

தனபால் அவளை நெருங்கி அவளுடைய தலைமுடியை கனிவுடன் தடவி விட்டு, ‘Be strong. வாழ்க்கையில இதவிட பெரிய பிரச்சினைகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்மா. எத்தனை பெரிய பிரச்சினையானாலும் உன்ன சுத்தி இருக்கறவங்களோட ஹெல்ப் இருந்தா ஈசியா சமாளிச்சிரலாம். You can’t do everything on your own. அத நீ புரிஞ்சிக்கிட்டா போறும்.’ என்று றுதல் கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

********

மத்தினம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கன்னியர் மடத்தலைவி ராணியின் அறைக்கதவுகளைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

தன்னுடைய மடத்தின் வாசலில் இரண்டு வயது சிறுமியாக அனாதையாய் விடப்பட்டிருந்தவளை தன்னுடைய சக கன்னியர் எத்தனையோ மறுத்துக் கூறியும் சொந்த மகளைப் போலவே வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெண்ணா இது என்று அவரை பயமுறுத்தியது ராணியுடைய கோலம்..

சிறுவயது முதலே  ராணி யாரையும் மதியாமல் எடுத்தெறிந்து பேசுவதில் கெட்டிக்காரி. எப்போதும் ஜெபமும், தபமுமாய் இருந்த கன்னியர்கள் வளர்த்த பெண்ணா இது என்று அவளுடைய பள்ளி ஆசிரியைகள் அதிர்ந்துபோய் மடத்தில் வந்து அவளுடைய நடத்தையைப் பற்றி புகார் கூறியபோதெல்லாம் ஒரு தாய்க்குரிய பாசத்துடன் தான் புறக்கணித்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறார் மத்தீனா.

பதினெட்டு வயது மங்கையாய் பள்ளியிறுதி முடித்து ‘எனக்கு மேல படிக்கறதுக்கு இஷ்டமில்லை சிஸ்டர்.’ என்று அவள் தன்  முன்னே வந்து நின்ற நாள் இப்போது நினைவுக்கு வந்தது. ‘அப்ப என்னடி பண்ணப்போறே?’ என்ற தன்னுடைய கேள்விக்கு, ‘ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கற ஐடியாவே இல்லையா உங்களுக்கு? உங்கள மாதிரியே என்னையும் மொட்ட அடிச்சிக்கிட்டு கன்னியாஸ்திரியா ஆக்கிடலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தீங்கன்னா அத இப்பவே மாத்திக்குங்க. என்னாலல்லாம் அப்படி இருக்க முடியாது.’ என்ற கோபத்துடன் தன்னுடன் வாதிட்டு திருமணம் முடித்துக்கொண்ட இவள் திருமண வாழ்க்கையில் தானும் சந்தோஷமாய் இருந்ததில்லை தன்னுடைய கணவன், குழந்தைகளையும் சந்தோஷத்தை அனுபவிக்க விட்டதில்லை என்பதை அவள் அறிந்துதானிருந்தாள்.

தலைவிரிக் கோலத்துடன் தான் அறைக்குள் நுழைந்ததையும் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமான பார்வையுடன் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் சென்று குனிந்து அவளுடைய கலைந்துக் கிடந்த முடியை அன்புடன் கோதிவிட்டார்.

‘இப்ப எதுக்கு இங்க வந்தீங்க? நான் உயிரோட இருக்கேனான்னு பாக்கவா?’ என்று ஆத்திரத்துடன் அலறிய ராணியை பார்த்து தலையை அசைத்தாள். ‘இல்ல ராணி.. உன் துக்கத்த பங்கு போட்டுக்க வந்திருக்கேன். கமலி உனக்கு எப்படி முக்கியமோ அதுபோலத்தாண்டி நீயும் எனக்கு.. இந்த தள்ளாத வயசுலயும் நீ இந்த ஊர்ல இருக்கேன்னுதானடி நானும் முதியோர் மடத்துக்கு போகாம இங்கயே இருக்கேன்? என்னைப் பார்த்தா அப்படி ஒரு கேள்வி கேட்டே..? வா.. எழுந்து வந்து உம் பொண்ணு முகத்துலருக்கற அந்த அலாதியான அமைதிய பார்.. அவ நேரா கர்த்தர்கிட்டதாண்டி போயிருக்கா.. நம்மளவிட்டுட்டு போய்ட்டாளேங்கற துக்கம் இருந்தாலும் அவ ஆத்மா சாந்தியடையறதுக்காட்டியும்  உன்னோட சோகத்த கர்த்தரோட பாதத்துல வச்சிட்டு அவளுக்காக பிரார்த்திக்க வேணாமாடி? இப்படி மூலைல உக்கார்ந்துக்கிட்டு ஏற்கனவே மகள இழந்த சோகத்துலருக்கற அந்த அப்பாவி மனுஷன் ஏண்டி மேலும் வேதனைப் படுத்தறே?’

தன் தலைமுடிமேலிருந்த மத்தீனம்மாவின் கரங்களைத் தட்டிவிட்டுவிட்டு எழுந்த ராணி அவரைப் பார்த்து மேலும் ஆக்ரோஷ்த்துடன் இரைந்தாள். ‘யார் அப்பாவி? அந்த மனுஷனா? அவருக்கு அவரோட அப்பாத்தான முக்கியம்? எம்பொண்ணு தலைவலியால துடிதுடிச்சி செத்திருக்கா. அப்ப இந்த மனுஷன் எங்க இருந்தாரு? ரூம பூட்டிக்கிட்டு தூங்கத்தான செஞ்சாரு? அதே அவரோட அப்பா, எண்பது வயசு கிழம்.. லேசா படபடன்னு வந்தவுடனே கார எடுத்துக்கிட்டு ஆசுபத்திரிக்கு ஓட தெரியுதில்லே.. இல்ல மதர்.. நீங்க நினைக்கறா மாதிரி அந்தாளு அப்பாவியில்லே. எல்லாம் வேஷம்.. கூட இருந்து இத்தன வருஷமா அனுபவிச்ச எனக்கு தெரியாததா ஒங்களுக்கு தெரிஞ்சிரப்போவுது..?’

கன்னியர் மடத்தலைவி தன் முன்னே கோபவெறியுடன் நின்ற அவளை எப்படி சமாதானப்படுத்துவதென தெரியாமல் திகைத்துப் போய் நிற்க வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்ற சப்தம் கேட்டு ராணி அறைக்கு வெளியே செல்லவும் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து வந்தனா இறங்கவும் சரியாக இருந்தது..

அடுத்த நிமிடம், ‘நீ எங்கேடி இங்க வந்தே.. கொலைக்காரி.. வேசி..’ என்ற கூக்குரலுடன் அவளை நோக்கி ராணி ஓட பாதிரியார், கன்னியர்கள், உபதேசியார் எல்லோரும் திடுக்கிட்டுப் போய் வந்தனாவையும் ராணியின் பின்னால் விரைந்துச் சென்ற மாணிக்கவேலையும் பார்த்தனர்.

தொடரும்..29.3.06

சூரியன் 50

புவனாவுக்கு ஒருவாறு விஷயம் புரிந்தாலும் உள்ளூர நடுங்கியவாறு தன்னுடைய தந்தையின் அடுத்த அஸ்திரத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

தனபால் சாமி எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் தன் மகளையும் அவளுடைய தோழியையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். ரம்யாவை பார்ப்பதற்கு பாவமாகவும் இருந்தது அதே நேரத்தில் எதற்கு அநாவசியமாக இங்கு வந்து தனக்கு அனாவசியமான தொல்லையை ஏற்படுத்தினாள் என்று எரிச்சலாகவும் இருந்தது.

இப்பிரச்சினையை டெலிகேட்டாக கையாளவேண்டும். இல்லையென்றால் இதுவே தனக்கு அடுத்த சில தினங்களுக்கு வேண்டாத தலைவலியாகிவிட வாய்ப்பிருக்கிறது என்றும் நினைத்தார்.

‘சொல்லும்மா, ப்ளேட்ல வச்சிருக்கறது ஒன்னுமே நீ தொடலையே அதனாலதான் கேட்டேன். பசியில்லையா இல்ல சாப்டற மூட்ல இல்லையான்னு.’

ரம்யா பதில் பேசாமல் தன் தோழியைப் பார்த்தாள். ‘நீயே சொல்லிருடி..’ என்பதுபோல் தன்னைப் பார்த்தவளை பொருட்படுத்தாமல், 'ஆமா அங்கிள், அம்மாவையும் அப்பாவையும் ஒன்னா பிரிஞ்சி இருந்ததில்லை. I miss them.’ என்றாள் ப்ளேட்டைப் பார்த்துக்கொண்டே.

தனபால் சாமி தன் மகளைப் பார்த்தார். புவனா அவருடைய பார்வையை சந்திக்க துணிவில்லாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

சிறிது நேரம் யாரும் பேசாமல் நிசப்தமாக இருந்தது.

தனபால் அருகில் இருந்த குடிநீரை எடுத்து குடித்துவிட்டு தன் முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்த இட்லியுடன் விளையாடிக்கொண்டிருந்த ரம்யாவின் கவனத்தைக் கவரும் விதமாய் மேசையை தன் விரல்களால் தட்டினார்.

ரம்யா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘என்ன அங்கிள்?’

தனபால் அமைதியுடன் அவளைப் பார்த்தார். ‘உங்க அப்பாவோட செல் நம்பர் குடுக்கறியாம்மா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.’

ரம்யா குழப்பத்துடன் தன் தோழியைப் பார்த்தாள். புவனாவோ ‘இனி உன் பாடு அப்பா பாடு’ என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்ள ரம்யா தனபாலைப் பார்த்தாள். ‘எதுக்கு அங்கிள்?’

‘நீ இங்கதான் இருக்கே. இன்னும் ஒரு மணி நேரத்துல கூப்டுக்கிட்டு வரேன். நீங்க அனுப்புன ஆளுங்கள இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க.வேணும்னா போய் பெய்ல எடுத்துக்குங்கன்னு சொல்லத்தான்.’

ரம்யாவின் முகம் அதிர்ச்சியால் வெளிறிப் போவதைப் பார்த்த புவனா அவளுக்காக உடனே பரிதாபப்பட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘அப்பா, ரம்யா ஏதோ தெரியாம அவசரத்துல...’

தனபால் சாமி கோபத்துடன் கையை உயர்த்தி தன் மகளை மேலே பேச விடாமல் தடுத்தார். ‘நீ சும்மா இரு. நீ இதுவரைக்கும் செஞ்ச முட்டாள்தனம் போறும். அவளைப் பேசவிடு.’

புவனா தன் தோழியைப் பார்த்தாள். பிறகு மேசையிலிருந்த பாத்திரங்களை சமையலறைக்குள் கொண்டு சேர்ப்பதில் மும்முரமானாள். அவளுக்கு அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது.

ரம்யா ‘என்ன அம்போன்னு விட்டுட்டு போறியேடி பாவி..’ என்பதுபோல் தன் மகளைப் பார்ப்பதைப் புரிந்துக்கொண்ட தனபால் கோபத்தைத் தவிர்த்து லேசான புன்னகையுடன் மேசையின் மேலிருந்த அவளுடைய கரங்களை ஆதரவாகத் தொட்டார்.

அந்த செய்கையை முற்றிலும் எதிர்பாராத ரம்யா மனம் உடைந்து அவருடைய கரங்களின்மேல் தலையைக் கவிழ்ந்துக்கொண்டு அழலானாள். சமையலறையில் பாத்திரங்களை வைத்துவிட்டு திரும்பிய புவனா இக்காட்சியைப் பார்த்துவிட்டு திகைத்துப்போய் தன் தந்தையைப் பார்த்தாள். ‘Don’t worry. You carry on’ என்று வாயசைத்தார் தனபால். புவனா சமையலறைக்குள் திரும்பிச் சென்றாள்.

சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்த ரம்யா கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு தனபாலைப் பார்த்தாள்.

‘இப்ப சொல்லும்மா. எதுக்கு இப்படி செஞ்சே? உங்கப்பா பார்த்து வச்ச மாப்பிள்ளை பிடிக்கலையா? அப்படீன்னா நேரடியாவே உங்கப்பாக்கிட்ட சொல்லிரவேண்டியதுதானே. நீ ரொம்ப தைரியசாலின்னுல்லே நான் நினைச்சிக்கிட்டிருக்கேன். இப்படி கோழைத்தனமா வீட்ட விட்டு ஓடிவந்துட்டா பிரச்சினை சால்வாயிருமா?’

ரம்யா இல்லை என்று தலையை அசைத்தாள்.

தனபால் குழப்பத்துடன், ‘அப்படின்னா? என்னம்மா சொல்ல வர்றே?’ என்றார்.

‘எனக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காம இல்ல அங்கிள்.’

தனபால் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தார். ‘என்னம்மா சொல்றே? அப்புறம் எதுக்கு வீட்ட விட்டு வரணும்?’

ரம்யா பதில் பேசாமல் எழுந்து வாஷ்பேசினுக்கு சென்று கைகளையும் முகத்தையும் கழுவி தன்னுடைய துப்பட்டாவாலேயே துடைத்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

‘அங்கிள், உங்களுக்கும் புவனாவுக்கும் இடையில இருக்கற அன்னியோன்னியத்தப் பார்த்து பலதடவை நா பொறாமைப் பட்டிருக்கிறேன். நீங்க ஒரு கண்டிப்பான போலீஸ் ஆஃபிசராயிருந்தும் புவனாவைப் பொறுத்தவரை ஒரு பாசமுள்ள, அன்பான, பொறுப்பான அப்பாவா இருக்கறத நான் பல சந்தர்ப்பங்கள்ல பார்த்திருக்கேன். அந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கலையேன்னு பலநாள் வீட்ல தனியா இருக்கும்போது நினைச்சிக்கிட்டு அழுதிருக்கேன் அங்கிள். ஒன்னா ரெண்டா? பதினைஞ்சி வருஷம்.. அப்பாவுக்காக, அவரோட அன்புக்காக ஏங்கியிருக்கேன் அங்கிள். அத உங்கக்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.. ஏன், என்னோட அப்பா என்கிட்டயோ இல்லே அம்மாக்கிட்டயோ முகம் கொடுத்து பேசியே எத்தனையோ மாசமாயிருச்சி தெரியுமா? அவருக்கு அவரோட வேலை, பதவி, பணம் இதுதான் முக்கியம். இருபத்தி நாலு மணி நேரத்துல தூங்கற நேரத்தத் தவிர ஒரு ரெண்டு மணிநேரம் எங்களுக்குன்னு ஒதுக்கணும்னு அவருக்கு தோனியதே இல்லை அங்கிள்.’

தனபால் சமையலறை வாசலில் நின்றவாறு ரம்யா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தன் மகளைப் பார்த்தார்.

அவருடைய மனைவி இறந்து போய் அவர் நான்கு வயது மகளுடன் தனித்துபோனதை நினைத்துக்கொண்டார்.

‘பொம்பிளைப் பிள்ளைடா.. இத வளர்த்து ஆளாக்குறதுக்காவது நீ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கோ. சித்தியா வர்ற எல்லாருமே கொடுமைக்காரிகளாத்தான் இருக்கணும்னு இல்லே. அதெல்லாம் சினிமாலத்தான். உடனே வேணாம். ஒரு ரெண்டு மூனு மாசம் யோசி..ஆனா நல்ல முடிவா எடு. எனக்கும் வயசாயிருச்சி. ஒங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறத பார்த்து பார்த்து செய்யறதுக்கு என்னால ரொம்ப காலத்துக்கு முடியாதுரா.. அதனாலத்தான் சொல்றேன்.’ என்றார் அவருடைய எழுபது வயது தாயார்.

அப்போது தனபாலுக்கு மறுமணத்தில் லேசான சபலம் இருந்ததென்னவோ உண்மைதான். தகுந்த சமயத்தில் அவருடைய ஸ்டேஷனில் ஆய்வாளராகவிருந்த மகேந்திரன் ஐ.பி.எஸ் கொடுத்த அறிவுரைதான் அவரை அந்த சபலத்திலிருந்து விடுவித்தது.

‘தனபால்.. வேணாம்.. உங்கம்மா சொல்றாங்கன்னு ரீமேரேஜைப் பத்தி நினைச்சிக்கூட பாக்காதீங்க. It won’t work. உங்க குணத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாம உங்க முதல் ஒய்ஃபே ரொம்ப கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். என்னோட வேலைதான் எனக்கு முதல் மனைவின்னு அலையற வர்க்கம் நீங்க. அவங்க விஷக்காய்ச்சல்ல ஹாஸ்பட்ல அட்மிட்டாயிருக்கும்போதும் நீங்க உங்க அசைன்மெண்ட்தான் முக்கியம்னு போயிருக்கலைன்னா ஒருவேளை அவங்க பிழைச்சிருக்கலாம்னு நான் இப்பவும் நினைக்கிறேன். விஷக்காய்ச்சலோட வேதனையவிட இந்த சமயத்துலயும் எங்கூட இருக்கணும்னு தோனலையே இந்த மனுஷனுக்குன்னு உங்க ஒய்ஃப் சொல்லி வேதனைப்பட்த நேர்ல கேட்டவ என் ஒய்ஃப். அவங்க இறந்துபோன அடுத்த நாளே இனிமே  அவர நம்ம வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு வர வேலைய வச்சிக்காதீங்கன்னு என் ஒய்ஃப் எங்கிட்ட கண்டிஷன் போட்டது தெரியுமா உங்களுக்கு? வேணாம், இனியொரு விஷப் பரீட்சை. உங்களால பொண்ண வளர்க்க முடியலையா அவள ஊட்டியிலருக்கற போர்டிங் ஸ்கூல் ஒன்னுல சேர்த்துருங்க..’

தன்னுடைய மனைவியின் மரணத்துக்கு தானும் ஒரு மறைமுக காரணம் என்பதை அன்றுதான் முதல்முறையாக உணர்ந்தார் தனபால். மறுமணம் செய்துக்கொள்வதில்லை என்று அன்று எடுத்த சபதத்தில் இன்றுவரை உறுதியாய் நின்றார் அவர்.

தன்னுடைய மேலதிகாரியின் அறிவுரைப்படி அடுத்த வருடமே புவனாவை ஊட்டியிலிருந்த போர்டிங் பள்ளியில் கொண்டு சேர்த்தார். மனைவி மற்றும் மகளின் பிரிவால் ஏற்பட்ட துக்கத்தை மறக்க தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழக காவல்துறை சரித்திரத்தில் மிகக் குறைந்த வயதிலேயே எஸ்.பி பதவிக்கு உயர்த்தப்பட்டவர் என்ற சாதனையைப் படைத்தார்.

எத்தனை வேலையிருந்தாலும் மாதம் இருமுறை தன்னுடைய மகளை அவளுடையப் பள்ளியில் சென்று பார்ப்பதில் கவனமாயிருந்தார். புவனா மெட்ரிக்குலேஷன் முடித்த கையோடு தான் அப்போது பணியிலிருந்த மதுரைக்கு அழைத்துச் சென்று சிறந்த பள்ளியொன்றில் சேர்த்தார். அவள்  பள்ளியிறுதி பரீட்சை எழுதி முடிக்கவும் தனபால் எஸ்.பியாக பதவி உயர்வு பெறவும் சரியாக இருந்தது.

பதவி உயர்வைத் தொடர்ந்து அவருக்கு சென்னைக்கு மாற்றல் உத்தரவு வரவே மகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து நகரில் மிகச்சிறந்த பெண்கள் கல்லூரியில் சேர்த்தார்.

புவனாவுக்கு தன் தந்தையிடம் அளவுக்கடந்த பாசம் தோன்றியதில்லை. ஆனால் அதே சமயம் மரியாதை இருந்தது. தனக்காக தன்னுடைய வாலிபப் பருவத்தை தியாகம் செய்தவர் தன் தந்தை என்ற ஒரு மதிப்பும் இருந்தது, நகரில் மிகக் கண்டிப்பான, நேர்மையான அதே சமயம் கனிவு நிறைந்த அதிகாரி என்று தன்னுடைய தந்தையை மற்றவர்கள் தன் காதுபடவே புகழ்ந்ததைக்கேட்டு தன் தந்தையைக் குறித்து ஒரு பெருமையும் இருந்தது அவளுக்கு..

தொடரும்.

28.3.06

சூரியன் 49

அடுத்த குடியிருப்பிலிருந்து அவர் வருவதற்குள் தன்னுடைய வரவேற்பறையையாவது சீர்செய்யலாம் என்ற நினைப்புடன் ரவி முகத்தை அலம்பிக்கொண்டு வேகமாக செயல்பட்டான்.

ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் பாதி வேலையிலேயே வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்க, ‘கமிங்’ என்று உரத்தல் குரலில் பதிலளித்துவிட்டு சோபாவில் கிடந்த பழைய துணிமனிகளை அப்படியே கையில் அள்ளிக்கொண்டுபோய் கட்டிலில் வீசியெறிந்துவிட்டு படுக்கையறைக் கதவை ஓங்கி அடைத்துவிட்டு ஓடிச் சென்று வாசற்கதவைத் திறந்தான்.

‘வாங்க சார்..’ என்றான் வாசலில் நின்றிருந்தவரிடம். பெயர் தெரியாததால் சார் என்பதோடு நிறுத்திக்கொண்டான். பெயரை எப்படி கேட்பது.. சரி பேச்சு வாக்கில் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தான்.

‘என்ன சார்.. வீட்ல நீங்க மட்டும்தான் போலருக்கு? பேச்சலர் ரூம் மாதிரி இருக்கு வீடு.. ஊம்.. பரவால்லை. நா வரேன்னதும் ஒங்களால முடிஞ்ச அளவுக்கு சரிபண்ண முயற்சி செஞ்சிருக்கீங்க.. குட்.. நானும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந்தேன்..’  என்றவாறு சோபாவில் சென்று அமர்ந்தவர் தன் எதிரே நிற்கும் ரவியிடம், ‘அட ஒக்காருங்க சார். ஒக்காந்து சுருக்கமா என்ன கேக்கணுமோ கேளுங்க.. மிஞ்சிப்போனா ஒரு அரை மணி நேரம்.. மாமி எழுந்துக்கறதுக்குள்ள போயிரணும். இல்லன்னா இன்னைக்கி முழுசும் பேசியே கொன்னுருவா .  என்ன பண்ண சொல்றேள்.. கோர்ட்ல அட்வகேட் நாராயணசாமின்னா பயப்படுவா.. பேசியே ஜட்ஜ கவுத்துருவாறேம்பா.. ஆனா வீட்ல பொம்மனாட்டிங்க நம்மள கொல்றதவிடவா?’ என்று உரக்கச் சிரித்தார்.

அப்பாடா. ஒருவழியா இவரோட பேர தெரிஞ்சிக்கிட்டாச்சு என்று நினைத்தான் ரவி. ஆனா மனுஷன் நம்மள பேச விடமாட்டார் போலருக்கே என்றும் நினைத்தான்.

‘சொல்லுங்கோ.. என்ன விஷயம்.. பார்த்தாக்கா ரொம்ப டல்லாருக்கறா மாதிரியிருக்கேள்.. எதுவானாலும் சொல்லுங்கோ.. என்னால என்ன முடியுமோ செய்யறேன்.’

ரவி தன் ஸ்டடி மேசையிலிருந்த கோப்பைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.

அடுத்த ஐந்து நிமிடம் நாராயணசாமி கோப்பை படிப்பதில் ஆழ்ந்துபோக ரவி சமையலறைக்குள் நுழைந்து இரண்டு கோப்பை தேநீர் தயாரித்து கொண்டு வந்தான்.

கோப்பைப் படித்துவிட்டு  மூடிய நாராயணசாமி ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனைப் பார்த்தார். ‘இம்புட்டு நடந்து முடிஞ்சிருக்கு... சரி அதிருக்கட்டும்.. ஒங்களுக்கும் ஒங்க ஒய்ஃப் மஞ்சுவுக்கும் இடையில ஏதாச்சும் பிரச்சினை இருக்கா மிஸ்டர் ரவி?’

ரவி என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான்.

‘என் ஒய்ஃப் சொல்லித்தான் நேக்கே தெரியும். சரி.. அத அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப சொல்லுங்கோ.. இதுல நான் என்ன பண்ணனும் நீங்க நினைக்கறேள்?’

‘எங்க பேங்க்ல என்க்வயரி ஆர்டர் பண்ணியிருக்காங்க. மொதல்ல அதுல நான் இன்னசொண்ட்டுன்னு ப்ரூவ் பண்ணனும்..’

‘சரி. உங்க நோக்கம் புரியுது. மேலே சொல்லுங்கோ.’

ரவி சோபாவில் கிடந்த கோப்பை எடுத்து பிரித்தான். ‘இந்த என்க்வயரி ஆர்டர்ல லிஸ்ட் பண்ணிருக்கற எல்லா மேனேஜ்மெண்ட் எக்சிபிட்சோட காப்பீசும் எனக்கு கிடைக்கணும்.. அதுக்குத்தான் ஒங்க உதவி வேணும்..’

நாராயணசாமி வியப்புடன் அவனைப் பார்த்தார். ‘என்ன மிஸ்டர் ரவி.. நீங்க இன்னமும் உங்க பேங்கோட ஆஃபீசர்தானே.. நீங்களே உங்க என்க்வயரி ஆஃபீசருக்கு பெட்டிஷன் பண்ண வேண்டியதுதானே.. இதுல வெளியாள் எதுக்கு?’

ரவி அவரைப் பார்த்தான். ‘அதுக்கில்ல சார். என்னால கேக்க முடியும். ஆனா நா என்க்வயரிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அந்த பிராஞ்சுக்குள்ளவே போமுடியும். அதுவுமில்லாம என்ன என்க்வயரில என்னெ டிஃபெண்ட் பண்ண ஒருத்தர் வேணும்.. அது ஒரு லாயரா இருந்தா நல்லதுன்னு நா நினைக்கிறேன். அதான் உங்கள கன்சல்ட் பண்ணலாம்னு...’

நாராயணசாமி பதில் பேசாமல் அவனையே சிறிது நேரம் பார்த்தார்..

‘அப்படியா? I see..’ என்றவாறு எழுந்து நின்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் ரவி..

‘என்ன சார்.. ஏதானும் பிரச்சினையா?’

நாராயணசாமி அவனை மீண்டும் உன்னிப்பாக பார்த்தார். ‘மிஸ்டர் ரவி.. உங்க பேங்க்ல அப்படியொரு சிஸ்டம் இருக்கா? Can a lawyer like me defend you in your domestic enquiry?’

ரவி ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். ‘இருக்கு சார். நானே ரெண்டு மூனு என்க்வயரீசை நடத்தியிருக்கேன். மேனேஜ்மெண்ட் சைடுலருந்து எங்க பேங்க்லருக்கற லா ஆஃபீசர்ஸ்தான் ஆர்க்யூ பண்ணுவாங்க.. அதனால the Bank would allow the charge sheeted officers to hire a lawyer to defend them..’

நாராயணசாமி சரியென்பதுபோல் தலையை அசைத்தார். ‘அப்படீன்னா சரி.. இந்த ஃபைல நா எடுத்துக்கிட்டு போறேன். நீங்க ஒன்னு பண்ணுங்கோ.. நேரா போயி உங்க தலைமுடிய வெட்டிட்டு க்ளீனா ஷேவ் பண்ணிட்டு மறுபடியும் பழைய ஹேண்ட்சம் ரவியா வாங்கோ.. ஒரு பதினோரு மணிக்கு நம்ம ஃப்ளாட்ல மீட் பண்ணலாம்.’

ரவிக்கு சட்டென்று கோபம் வந்தது. இவன் யார் நம்மள ஆர்டர் பண்ண என்று நினைத்தான்.

நாராயணசாமி அவனுடைய உள் மனதை அறிந்தவர்போல் புன்னகை செய்தார். பிறகு, முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பேசினார்.

‘இங்க பாருங்க மிஸ்டர் ரவி. உங்களுக்கு இப்ப நடந்திருக்கறத மாதிரி பல பிரச்சினைகளை நாங்க டெய்லி சந்திச்சிக்கிட்டிருக்கோம். அதுக்காகத்தான் நீங்க இந்த கோலத்துல இருக்கீங்கன்னா.. I won’t accept that. இந்த மாதிரி பிரச்சினைகளை எதிர்த்து போராடணும்னா மனசுல மொதல்ல நம்பிக்கை வேணும். அத வெளியில மத்தவங்களுக்கு தெரியறாமாதிரி காமிக்கவும் வேணும். நம்ம தோல்விய மத்தவங்கக்கிட்ட நாமளே காமிச்சிக்கக்கூடாது. எம்மடியில கனமிருந்தாத்தான நா பயப்படணும்? நா சுத்தமாத்தான் இருக்கேன். ஒன்னால என்ன ஒன்னும் பண்ணிர முடியாதுரான்னு எதுத்து நிக்கணும்.. அதுக்கு நீங்க இப்ப இருக்கற கோலத்த மாத்தணும்.. அதனாலத்தான் சொல்றேன்..’

ரவிக்கு தான் அவசரப்பட்டுவிட்டோமே என்று தோன்றியது. அவர் கூறியதிலிருந்த நியாயத்தைப் பார்க்காமல் மீண்டும் பழையபடியே சிந்திக்க ஆரம்பித்துவிட்டோமே..

‘சாரி சார். நீங்க சொல்றது சரிதான்.’

நாராயணசாமி திருப்தியுடன் புன்னகைத்தார். ‘குட்.. இத நீங்க புரிஞ்சிக்கிட்டாலே பாதி பிரச்சினை சால்வானா மாதிரிதான். எங்க வீட்டு மாமி ஞாயித்துக்கிழமையானா அவ அம்மா வீட்டுக்கு போயிருவா.. பத்து பத்தரைக்கு போனா திரும்பிவர சாயந்திரம் ஆயிரும். அவ இல்லன்னாத்தான் நம்மால நிம்மதியா டிஸ்கஸ் பண்ண முடியும். நீங்க பதினோரு மணிக்கு வந்துருங்க.. ஒரு ஒன்னவர்ல முடிச்சிரலாம். புறப்படறதுக்கு முன்னால ஃபோன்ல ஒரு டிங்க்கிள் குடுங்க.. நா வரேன்.’ என்றவாறு புறப்பட்டவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு குளியல¨றையை நோக்கி நடந்தான்.

*****

‘நல்ல ஐடியா சந்தோஷ். நான் உடனே எங்க பேங்க் டிராவல் ஏஜண்டுக்கு ஃபோன் பண்றேன். நமக்கு எப்படியும் இன்னைக்கி ஒரு ரெண்டு மூனு கார், வேன்லாம் வேணும். நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. நீ போய் தாத்தாவுக்கு ரெண்டு நாளைக்கு வேண்டிய வேட்டி, சட்டைன்னு எல்லாத்தையும் எடுத்து ஒரு சின்ன பேக்ல வை.. நான் டாக்சிய கூப்டறேன்.’

இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியேறவும் வாசலில் அவருக்கும் ராணிக்கும் திருமணம் செய்துவைத்த பாதிரியாரும், கன்னியர் மடத் தலைவியும் ஒரு வேனில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது..

மாணிக்க வேல் வாசலுக்கு விரைந்துசென்று இருவரையும் வரவேற்றார். சந்தோஷ் தன்னுடைய தாயார் இருந்த அறைக்கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அறையின் மூலையில் தரையில் தலைவிரிக் கோலமாய் நிலைக்குத்தி நின்ற பார்வையுடன் அமர்ந்திருந்த ராணியைப் பார்த்து திடுக்கிட்டான்.

அருகே சென்று அமர்ந்தான் அவளுடைய கரத்தைத் தொட்டான், ‘அம்மா என்னம்மா இது? இங்க என்னெ பாருங்கம்மா..’

பதில் இல்லாமல் போகவே, ‘அம்மா நம்ம ஸ்டீஃபன் ஃபாதரும், மத்தீனம்மா மதரும் வந்துருக்காங்க.. வந்து பாருங்கம்மா..’ என்றவாறு ராணியின் கரங்களுக்கடியில் கைவைத்து தூக்கினான். ஆனாலும் ராணி பிடிவாதமாய் எழுந்திருக்க மறுக்கவே அவளை விட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

கமலியின் சடலத்திற்குமுன்பு கண்களை மூடியவாறு நின்றுக்கொண்டிருந்த பாதிரியாரையும், கன்னியர் மடத்தலைவியையும் அவர்களுடன் வந்திருந்த உபதேசியார், மற்றும் வேறு சில கன்னியர்களையும் அமைதியுடன் பார்த்தான்.

‘Where is Rani my son?’ என்று தன்னை நோக்கி வினவிய பாதிரியாரைப் பார்த்த சந்தோஷ் தன் தாயின் அறையை நோக்கி சைகைக் காண்பித்தான்.

ஸ்டீஃபன் பாதிரியார் தன்னருகில் நின்றிருந்த கன்னியர் மடத்தலைவியைப் பார்த்தார். ‘நீங்க போயி ராணிகிட்ட பேசி வெளிய கொண்டுவாங்க மதர்.. அவ இப்ப இருக்கற நிலையில உங்களாலத்தான் அவள பாசிஃபை பண்ண முடியும்னு  நினைக்கிறேன்.’

பிறகு, திரும்பி தன்னுடன் வந்திருந்த கோவில் உபதேசியாரைப் பார்த்தார். ‘ஸ்தனிஸ், நம்ம கோவில்லருந்து கொண்டு வந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட நாலு மூலையிலும் வச்சி கொளுத்துங்க.. மாணிக்கம், பெட்டி எப்ப வரும்னு கேளுப்பா.. சந்தோஷ் குடிக்க ஏதாச்சும் தாயேன்.. இந்த விஷயத்த கேட்டதுலருந்து ஒன்னும் சாப்டாம ஒடம்பு தள்ளாடுதுப்பா..’ என்றார் நடுங்கும் குரலில்..

தொடரும்...

27.3.06

சூரியன் 48

இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை. லீவு.

இன்னைக்கென்ன, குறைஞ்ச பட்சம் இன்னும் ஆறுமாசத்துக்காவது உனக்கு லீவுதானடா என்றது அவனுடைய மனது.

ரவி படுக்கையில் படுத்தவாறே கூரையில் ஸ்லோ மோஷனில் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான். இப்படித்தான் இலக்கில்லாமல் என்னுடைய வாழ்க்கையும் ஆகிப்போனது என்று நினைத்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நேரத்தில் யாராவது அவனிடம் வந்து ‘டேய் ரவி, அடுத்த ரெண்டு வருஷத்துல நீ இந்த பதவியிலேயே இருக்க மாட்டே.. பார்த்துக்கிட்டே இரு..’ என்று கூறியிருந்தால் அதை ஏளனத்துடன் பொருட்படுத்தியிருக்கவே மாட்டான்.

அத்தனை உச்சத்தில், உயரத்தில் இருந்தான் அவன். அவ்வாண்டின் சிறந்த மேலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய சேர்மன் க்ளப் உறுப்பினரானவன். ‘ You should be aware that It is an exclusive group Mr.Ravi Prabhakar. At present you are the youngest member in my Club.’ என்று சேர்மன் அவனைத் தோளில் தட்டி உற்சாகப்படுத்தியது...

அதே ஆண்டில் நடந்த பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வில் கிளை மேலாளர் பதவியிலிருந்து முதன்மை மேலாளராக (chief manager) பதவி உயர்வுபெற்று மனத்தளவில் இந்த உலகின் உச்சிக்கே.. சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றது...

இப்படி அதள பாதாளத்தில் விழுவதற்கா அத்தனை வேகமாக உயர்ந்தேன்..?

இதிலிருந்து எப்படி, எப்படி நான் மீளப் போகிறேன்..? அப்படியே மீண்டாலும் என்னுடைய வங்கி வாழ்க்கையில் இனியும் யாராவது என்னைப் பொருட்படுத்துவார்களா?

What am I going to do? Is it worth living? தலைக்கு மேல் சுழன்றுக்கொண்டிருந்த மின் விசிறி அவனை அழைப்பதுபோல் தோன்றியது..

என்னைப் போன்ற நிம்மதியிழந்து தவித்த எத்தனையோ ஆத்மாக்களுக்கு இவ்வுலக நரகத்திலிருந்து விடுதலையளித்ததாயிற்றே..  

படுக்கையில் எழுந்தவன் கட்டிலில் சுருண்டு கிடந்த போர்வையையும் மின்விசிறையையும் மாறி, மாறி பார்த்தான்.

எழுந்து நின்றான். படுக்கைக்கு நேர் எதிரே இருந்த வாஷ் பேசினுக்கு மேல் இருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தான். What do you say? Should I go ahead and commit.....?

‘என்ன ரவி இது சின்ன குழந்தையாட்டமா? எத்தனை எச்.ஆர் ப்ரோக்ராம்ஸ் அட்டெண்ட் பண்ணியிருப்பீங்க? When things get tough, tough gets goingனு கேள்விப்பட்டதில்லை நீங்க? சோதனை வரும்போதுதான் நாம இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கணும்.’

நேற்று அவனிடம் கூறிய பிலிப் சுந்தரம் சாரின் வார்த்தைகளை அவனையுமறியாமல் நினைவுகூர்ந்தான். It is easy to preach Sir.. But to practice is not.. அவனையுமறியாமல் கண்கள் கலங்கி அவனுடைய பிம்பமே கலங்கலாக தெரிய திரும்பி அறைவாசலைக் கடந்து பால்கனியை அடைந்தான்.

பத்தாவது மாடியிலிருந்து சென்னை நகரம் பார்வைக்கு எத்தனை அழகாக இருக்கிறது.. வானம் இன்றைக்குப் பார்த்து எந்த களங்கமும் இல்லாமல் நீலமாக.. பளிச்சென்று இருந்தது..

இதேபோல் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த களங்கம் போய்.. Is it possible? Will I be able to come out unscathed?

குனிந்து பார்த்தான். அந்த பலமாடி குடியிருப்பில் குடியிருந்தவர்களின் பணக்காரத்தனமான வாகனங்கள் காலை வெய்யிலில் சில பளபளப்புடன், சில உறைகள் அணிந்து, அணிவகுத்து நிற்பது தெரிந்தது.

இங்கருந்து தாவுனா கீழருக்கற பார்க்கிங் லாட்டுக்கு போய் சேர்றதுக்கு எத்தனை செக்கண்ட் ஆவும், இல்ல நிமிஷமா? அந்த இடைபட்ட நிமிஷங்கள்ல எவ்வளவு லேசா.. ஏதோ ஆகாசத்துல மிதக்கறதப் போல.. இந்த எல்லா தொல்லைகள்லருந்தும் விடுதலைக் கிடைச்ச ஒரு ஃப்ரீடம்..

‘இப்ப என்ன நடந்திருச்சின்னு கவலைப்படறீங்க? We have ordered only to suspend you, we have not terminated your services!’

மறுபடியும் எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க பிலிப் சார்? But I should be grateful to you Sir. But for you I might be in prison today.. அது மட்டும் நடந்திருந்தா எனக்குன்னு யார் இருக்கா, வந்து பார்க்க மஞ்சுவைத் தவிர..

மஞ்சு.. மஞ்சு.. where are you மஞ்சு?

கீஈஈஈஈஈழே ஓசையில்லாமல் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தான். எத்தனை இயந்திரத்தனமானது இந்த வாழ்க்கை..? எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களைப் போலத்தானே நானும் இருந்தேன்..

என்னவோ நான் இல்லையென்றால் இந்த வங்கியே இல்லையென்று நினைத்துத்தானே ஓடிக்கொண்டிருந்தேன்? வார நாளுக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் வித்தியாசம் தெரியாமல்.. வங்கியை விட்டால் வேற வாழ்க்கையில்லேன்னு நினைச்சிக்கிட்டுத்தானே வீட்ல காத்துக்கிடந்த மஞ்சுவை மறந்துப்போனேன்..

இன்னைக்கி..

‘எப்படிறா ரவி உன்னால மட்டும் இது முடியுது? எங்களுக்கு கொடுக்கற பட்ஜெட்டையே வருஷம் பூரா முட்டி மோதினாலும் கடைசி நேரத்துல விண்டோ ட்ரெஸ் பண்ணித்தான் அச்சீவ் பண்ணமுடியுது. அதுக்கே முளி பிதுங்கிப் போவுது. நீ எப்படிறா பட்ஜெட்டுக்கு மேல வருஷா வருஷம் அதுவும் இருநூறு பர்செண்ட் க்ரோத் எல்லாம் காமிக்கறே?’ என்பார்கள் அவனுடைய சக மேலாள நண்பர்கள்.

அதானே! எப்படி என்னால அது முடிஞ்சது..? ஒரு பக்கம் அச்சீவ்மெண்ட் மேல அச்சீவ்மெண்ட்.. இன்னொரு பக்கம் தோல்விக்கு மேல தோல்வி..

‘எனக்குன்னு ஒரு குழந்தைய குடுக்க முடியலையே உங்களால.. ஆஃபீஸ்ல நீங்க அச்சீவ் பண்றதெல்லாம் அஞ்சி மணிக்கு மேல உதவாது ரவி..’ என்ற மஞ்சுவின் கேள்வியும்,

‘When you go home at the end of the day how do you look at yourself.. just a husband? Are you satisfied with what you have achieved at home Ravi?’

அவனுடைய தந்தையின் நெருங்கிய நண்பர், அவனுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு அவனுடைய குடும்பத்துக்கு தரவாய் இருந்தவர், பட்டாபி ஐயர் கேட்டபோது அவனால் பதில் கூற முடியாமல் விழித்த காட்சியும் அவன் கண்முன்னே ஓடியது..

சில்லென்ற நீர்த்துளிகள் முகத்தில் படவே திடுக்கிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் தெளிவாக இருந்தது. பின்னே எங்கிருந்து?

அண்ணாந்து மேல் மாடியைப் பார்த்தான். கட்டிடத்துக்கு மேலிருந்த தண்ணீர் தொட்டி நிறைந்து  நீர்த்துளிகள் தெறித்து சிதறுவது தெரிந்தது..

‘இந்த வாட்ச்மேன்கிட்ட எத்தனதடவைதான் சொல்றதுன்னே தெரியலை.. அவனவன் தண்ணிக்கு லாட்டரி அடிக்கிறான். இவன் மோட்டர போட்டுட்டு எங்கத்தான் போறானோ..’ என்ற குரல் கேட்டு அடுத்த வீட்டு பால்கணியைப் பார்த்தான்.

அதே நேரத்தில் அங்கு நின்றுக்கொண்டிருந்தவரும் திரும்பிப் பார்க்க, ‘என்ன ரவி.. ரெண்டு மாசத்துல ஆளே மாறிப்போய்ட்டீங்க? ஏதாச்சும் கோவிலுக்கு வேண்டுதலா?’ என்றார் அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்.

அவருடைய பெயர் இவனுக்குத் தெரியாதிருக்க அவருக்கெப்படி தன்னுடைய பெயர் தெரிந்தது? ஆனால் அவர் சென்னையிலிருந்த ஒரு பிரபல சட்ட நிறுவனத்தில் (Law Firm) பங்குதாரராக இருப்பவர் என்பதுமட்டும் அவனுக்கு தெரியும்.. அதுவும் மஞ்சு வழியாகத்தான்.

‘இல்ல சார்.. சும்மாத்தான்..’ என்று இழுத்தான்.

அவர் சிரித்தார். ‘என்ன சார். ரெண்டு வருஷமா பக்கத்து பக்கத்து ஃப்ளாட்ல இருக்கோம்னுதான் பேரு. உங்க மிசஸ்சும் நம்ம மிசஸ்சும் ஃப்ரெண்ட்ஸ்.. ஆனா நம்மள பாருங்க. உங்க பேரே உங்க மிசஸ் சொல்லித்தான் தெரியும்..’

மஞ்சு... ஆம் நண்ப, நண்பிகளைக் கவர்வதில் மிகவும் சமர்த்து அவள்.. அப்படித்தானே முதல் முதலாக தன்னைப் பார்த்ததுமே அவளுடைய அந்த அழகிய வெண்பற்கள் நிறைந்த சிரிப்பால் கவர்ந்தாள்? அழகு மட்டுமா, நல்ல மென்மையான இதயம் கொண்டவளாயிற்றே என் மஞ்சு? நாந்தான் அவளைப் புரிந்துக்கொள்ளவில்லை..

சட்டென்று மனதில் தோன்றிய எண்ணத்துடன் அவரைப் பார்த்தான், ‘சார் if you don’t mind. Can you spare a minute?’

அவர் வியப்புடன் அவனைப் பார்த்தார். ‘சொல்லுங்க மிஸ்டர் ரவி.’

‘என்னுடைய ஆஃபீஸ் விஷயமா.. ஒரு ரெண்டு நிமிஷம்..’

‘You mean you want to consult me?’

‘Yes Sir. I won’t take more than two minutes.’

அவர் சிரித்தார். ‘மிஸ்டர் ரவி.. எதுக்கு ரொம்ப ஃபார்மலா பேசறேள். இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைதானே? எங்க வீட்ல எல்லாரும் எழுந்துக்கறதுக்கே ஒன்பது மணியாயிரும். என்னால அது முடியாது. காலங்கார்த்தால எழுந்து ஃபில்டர் காப்பிய குடிச்சுட்டு ஒரு முக்கா மணிநேரம் வாக் போலன்னா மண்டை வெடிச்சுரும்.. தோ வர்றேன். எங்க வீட்ல வேணாம்.. உங்க ஃப்ளாட்டுக்கு வரேன்.’

தொடரும்..
24.3.06

சூரியன் 47

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சின்னதாய் ஒரு மனிதக் கூட்டம் தெரிய வாகனத்தை நடைபாதையில் ஏற்றி நிறுத்திவிட்டு காலிலிருந்த ஹை ஹீல்சை கையில் எடுத்துக் கொண்டு ஓட்டமாய் கூட்டத்தை நோக்கி ஓடினாள் மைதிலி, ‘Please god. Let it be Sreeni.’ என்ற பிரார்த்தனையுடன்..

கூட்டத்தை நெருங்கி குழுமியிருந்தோரை விலக்கிக்கொண்டு பார்த்தாள். சீனியேதான்.

நல்லவேளை பெரிதாய் காயம் ஒன்றும் பட்டதாய் தெரியவில்லை. மயக்கமடித்து விழுந்திருப்பான்போலும். குனிந்து அவனுடைய தோளைத் தொட்டாள்.. ‘சீனி are you ok?’ என்றாள்.

சீனிவாசன் சிரமத்துடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த அந்த பிரகாசம் அருகில் குழுமியிருந்த அனைவரையும் மைதிலியை நோக்கி திருப்பியது.

‘I am ok My.. I think I just lost my balance.. I am Ok now. Thanks for coming.’

யே ஆப்கா ஆத்மி ஹை க்யா? க்யா ஹோகயா இஸ்க்கோ.. பீமார் ஹை க்யா? என்ற கேள்விகள் சுற்றிலும் இருந்து வர மைதிலி அவர்களை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள். ‘குச் நயி ஹை பாய் சாப்.. He must have lost his balance. Nothing serious I presume. Please help me to take him to a nearby Clinic or Hospital.. I need to take to him to a Doctor.. Just to be on the safer side.. Is there anybody nearby?’

மும்பைவாசிகளின் அசல் குணம் உடனே தெரிய ஆரம்பித்தது.. வேடிக்கை பார்க்க வந்தால் உதவி கேட்கிறாளே. நமக்கு தலைக்கு மேல இருக்கு.. இதுல இவள எங்க கூட்டிக்கிட்டு போறது என்று நினைத்தார்களோ என்னவோ, அடுத்த சில நொடிகளில் அனைவரும் கலைந்து செல்ல மைதிலி ஒரு சிறு கேலி புன்னகையுடன், ‘பார்த்தியா சீனி, இவா ஓடறத?’ என்றாள்..

சீனிவாசன் ஒரு பலவீன பார்வை பார்த்தான். தானாகவே எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் நடைபாதையிலேயே அமர்ந்தான்..

மைதிலி பதறிப்போய் அவனுடைய கைகளுக்கடியில் கைகொடுத்து தூக்கினாள்.. சீனிவாசன் வேதனையில் முகத்தைச் சுளித்தவாறு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். ‘My.. I think I have sprained my ankle.. I am unable to get up. Can you please get your scooter? I’ll wait here..’

மைதிலி சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள். ‘உன்னால ஸ்கூட்டர்ல மட்டும் ஏறி உக்கார முடியுமா. அதெல்லாம் வேணாம். நாம டாக்சி பிடிச்சி செம்பூர்க்கே போயிரலாம். கார்டன் பக்கத்துல எனக்குத் தெரிஞ்ச தமிழாள் டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவராண்ட போனா நல்லா பார்ப்பார். ஒன்ன டாக்சியில ஏத்திட்டு நா என் ஸ்கூட்டர்ல வரேன்.. என்ன சொல்றே?’

சீனிவாசனுக்கு வேற வழி தெரியாததால், ‘Ok. Call a taxi.’ என்றான்.

********

வத்ஸ்லா வாகனத்தை போர்ட்டிக்கோவில் ஏற்றி நிறுத்திவிட்டு எஞ்ஜினை அணைத்தாள். ரியர்வியூ கண்ணாடியில் தன்னுடைய தாயின் கடுகடு முகத்தைப் பார்த்தாள்.

அம்மா ஃப்ளைட்டுக் கிளம்பறதுக்குள்ள இன்னும் என்னென்ன ப்ராப்ளம் க்ரியேட் பண்ணப் போறாளோ தெரியலையே..

தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த தன்னுடைய தந்தையின் முகத்தில் படர்ந்திருந்த கவலையும் அவளுக்குத் தெரிந்தது. அப்பா எப்படி சட்டுன்னு சீனி கேட்டதுக்கு ஒத்துக்கிட்டார்? சீனிக்கும் மைதிலிக்கும் இருந்த உறவு.. அது உறவுதானா அல்லது வெறும் ஃப்ரென்ட்ஷிப்பா? சீனி என்ன நினைக்கிறான்னு தெரியும்.. ஆனா மைதிலி மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?

காரிலிருந்து இறங்கி போர்ட்டிகோ படியேறிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தாள். ‘டாட்.. ஒரு ரெண்டு  மூனு நாளைக்கு வேண்டிய ட்ரெஸ் மட்டும் எடுத்தா போறும்லே..?’

மாதவன் பதிலேதும் கூறாமல் தன் முன்னால் கோபத்துடன் சென்ற தன் மனைவியைப் பார்த்தார். What should I do to appease her?

‘டாட்.. நா கேட்டதுக்கு பதில் சொல்லாம அம்மாவையே பார்த்துக்கிட்டிருக்கீங்க?’

மாதவன் சட்டென்று நின்று திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘என்னடா கேட்டே.. சாரி.. I was just thinking about your mom..’

வத்ஸலா தன் தந்தையைப் பார்த்து ஆறுதலுடன் புன்னகைத்தாள், ‘அம்மாவ மறந்துருங்க டாட்.. she will be all right. அம்மாவுக்கு நீங்க சென்னைக்கு போறதப்பத்தி முதல்லயே டிஸ்கஸ் பண்லேங்கற கோபம்தான்.. அது மாறிடும்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. ஒரு ரெண்டு மூனு நாளக்கு ட்ரெஸ் எடுத்துக்கிட்டா போறுமா?’

மாதவன் சில விநாடிகள் யோசித்தார். ‘போறும் வத்ஸ்.. நீ எப்படி இருந்தாலும் திரும்பி வந்து உன் ப்ராஜக்ட் ஹெட் கிட்டருந்து ரிலீவ் வாங்கணுமில்லே..?’

வத்ஸலா சிரித்தாள்.. ‘டாட்.. என்ன பெரிய ப்ராஜக்ட்? இதென்ன ஐ.டி. கம்பெனியா?  I am only a voluntary worker dad. I don’t get paid for my work.. you know that, no?’

மாதவன் பதில் பேசாமல் போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தனக்கருகில் அமரும்படி அவளுக்கு சைகை காண்பித்தார்.

வத்ஸ்லா அவர் காண்பித்த இடத்தில் அமராமல் எதிரில் சுமார் பத்தடி தூரம் தள்ளியிருந்த சோபாவில் அமர்ந்து படிக்கட்டுகளில் ஏறிச் சென்றுக்கொண்டிருந்த தன் தாயையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள்..

பிறகு, திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள், ‘Yes Dad.. you wanted to say something?’

மாதவன் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். ‘Nothing in particular. அம்மாவப்பத்திதான்.. What do you think? Should I leave her here so that she could come along with Srini?’

வத்ஸலா வியப்புடன் அவரைப் பார்த்தார். What’s happening? அப்பா எப்படி ஒரே நாள்ல மாறிட்டார்? அம்மா என்ன சொன்னாலும் மைண்ட் பண்ணாத அப்பாவா இது?

‘என்னடா யோசிக்கறே?’

வத்ஸலா சில நொடிகள் என்ன சொல்வதென யோசித்தாள். அப்பா சொல்றா மாதிரி அம்மா 'நீ இருந்து சீனியோட வரியா'ன்னா சரின்னுதான் சொல்லுவா? ஆனா வருவான்னு நிச்சயம் இல்லை.. சீனியும் அப்படித்தான். அவனால மைதிலிய விட்டுட்டு வரமுடியும்னு தோனலை.. அதையே சாக்கா வச்சிக்கிட்டு அம்மாவும் நானும் சீனியும் இங்கவே இருந்திடறோம்னு சொன்னாலும் சொல்லிருவா.. அது சரிவராது..

அதுமட்டுமில்ல. சீனி-மைதிலி மேரேஜ் நடக்கறதுக்கு சான்சே இல்ல.. அவ பேரண்ட்ஸ் நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.. அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா பயங்கர conservativeஆட்டம் தெரியுதே..

சோ.. அப்பாவோட இந்த போஸ்ட்டிங் நல்ல டைம்லதான் வந்திருக்கு.. சீனி மைதிலிய மறக்கறதுக்கு இதுதான் நல்ல சான்ஸ்.. If he doesn’t see her for some time, he might forget her.. அம்மாவுக்கும் இதான் நல்லது.. அப்பா இறங்கி வந்திருக்கற நேரத்துல அம்மாவும் மாறிட்டா எவ்வளவு நல்லாருக்கும்.. அதுக்கு அம்மாவ இப்ப இருக்கற இந்த க்ளப் ப்ரெண்ட்சோட கம்பெனியிலருந்து செப்பரேட் பண்ணனும்.. அதுக்கு இங்கருந்து கொஞ்ச காலத்துக்கு சென்னையில செட்டில் ஆறதுதான் சரி..

What about you Vaths? என்று கேட்ட தன்னுடைய மனதிடம், Yes I also need to settle down in my life.. How long can I be like this, tell me? என்று எதிர்கேள்வி தொடுத்தாள்.. Am I not getting old?

‘என்ன யோசிச்சிக்கிட்டிருக்கற வத்ஸ்?’

தன்னுடைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த வத்ஸலா திடுக்கிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்ன டாட்?’

மாதவன் லேசாக சிரித்தார்.. ‘என்ன வத்ஸ்.. நீயும் வரலாமா வேணாமான்னு யோசிக்கறயா? நான் மட்டும் தனியா அங்க போய் நின்னா நல்லாவா இருக்கும்? நாளைக்கு ஈவ்னிங் நம்ம எல்லாருக்கும் ஒரு ரிசெப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கறதா என்னோட பி.ஏ. ஃபோன் பண்ணியிருக்கா தெரியுமா?’

வத்ஸலா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். ‘No Dad. I am not thinking about not coming. அம்மாவ இங்க விட்டுட்டு போவேண்டாம்னு சொன்னேன்.. சீனியக்கூட இங்க விட்டுட்டு போறதுக்கு எனக்கு இஷ்டமில்ல டாட்.. He and Mythili.. It won’t work.. I know.. It is bound to leave both of them..’

‘ஏய்.. வத்ஸ்.. நீ என்ன பெரிய மனுஷியாட்டமா.. உனக்கு தேவையில்லாத விஷயத்துல தலையிட்டுகிட்டு..’ என்றவாறு கோபத்துடன் மாடியிலிருந்து வந்து சோபாவில் அமர்ந்த தன் தாயைப் பார்த்தாள்.

‘சாரி மம்மி.. நான் என் மனசுல பட்டத சொன்னேன்.. நான் சொல்றது சரின்னும் உனக்கே தெரியும்.. ஆனா வேணும்னே ஒத்துக்க மாட்டேங்கறே..’

மாதவன் போறும் என்பதுபோல் கையை காட்டிவிட்டு எழுந்து நின்றார். இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘We will discuss this leisurely in Chennai.. When Srini also reaches Chennai.. என்ன சொல்றே சரோ.. We will have a thorough and a frank discussion and then decide..’

சரோஜா வியப்புடன் தன் கணவனைப் பார்த்தாள்.. என்னாச்சி இந்த மனுஷனுக்கு? சட்டுன்னு ஒரே ராத்திரியில இப்படி மாறிட்டார்? இந்த மாற்றம் உண்மையானதுதானா? இல்ல இதுக்கு பின்னால வேற ஏதாச்சும் மாஸ்டர் ப்ளான்  இருக்கா?

வத்ஸலாவும் வியப்புடன் தன் தந்தையை பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் தாயை பார்த்தாள். அம்மாவுக்கும் அப்பாவோட மாற்றம் ஆச்சரியமாத்தான் இருக்குபோல.. The surprise shows in her face.. நீயும் மாறிடேம்மா.. என்றாள் மனதுக்குள்..

‘என்ன சரோ.. ரெடியாவலையா.. We hardly have another two hours’ time to pack..’ என்ற தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தவாறே எழுந்து நின்றாள் வத்ஸலா..

‘நான் இன்னும் அரை மணியில ரெடியாயிருவேன் டாட்.. அம்மாதான் லேட் பண்ணுவா.. நீங்க போங்க நான் அம்மாவ கூட்டிகிட்டு வரேன்..’

சரோஜா அவளை முறைத்துப் பார்ப்பதைப் பார்த்து தயங்கி நின்ற மாதவனைப் பிடித்து அவருடைய அறை இருந்த திசையில் லேசாக தள்ளிவிட்டாள்.. பிறகு தன் தாயிடம் சென்று அமர்ந்தாள்..

‘மம்மி.. சீனிய பத்தி நான் சொன்னது தப்பாருந்தா மன்னிச்சிரு.. இப்ப தயவு செஞ்சி கிளம்பு.. அப்பாதான் சீனி சென்னைக்கு வந்ததும் டிஸ்கஸ் பண்ணலாம்னு சொல்றாரே..’

சரோஜா தன் மகளையே சில விநாடிகள் பார்த்தாள்.. பிறகு ஒரு சிறு புன்னகையுடன் எழுந்து நின்றாள். ‘ஓகே.. போலாம்.. எனக்கும் இங்கருந்து போய்தான் பார்ப்போமேன்னு தோன்றுது.. It may be good for all of us.’

வத்ஸலா சந்தோஷத்துடன் குதித்து எழுந்தாள்.. ‘Yes mummy. It will be good for all us..’  என்றவாறு தன்னுடைய வலது கரத்தால் தன் தாயின் தோளைச் சுற்றி வளைத்து மாடியை நோக்கி அழைத்துச் சென்றாள்..

தொடரும்..
23.3.06

சூரியன் 46

தேவாலயத்திலிருந்து வெளியே வந்ததும் பிலிப் சுந்தரம் முதல் வேலையாய் தன்னுடைய செல் ஃபோனை மீண்டும் ‘ஆன்’ செய்து யாராவது தன்னை அழைத்திருக்கிறார்களா என்று பார்த்தார். அவருடைய கவலையெல்லாம் மாணிக்கம் நாடார் தன்னை அழைத்திருப்பாரோ என்றுதான்.

‘மிஸ்டு கால்’ திரை முழுவதும் அவருக்குத் தெரிந்த எண்கள்.. ஒன்றே ஒன்றைத் தவிர. அனால் அவை எதுவும் மாணிக்கம் நாடாருடையதல்ல என்று சமாதானமடைந்தார்.

தனக்கு அறிமுகமில்லாத எண்ணைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் ஒருமுறைக்கு மேலிருந்த எண்களில் முதலில் இருந்த அவருடைய வங்கியின் ஆக்டிங் சேர்மன் சுந்தரத்தின் எண்ணை டயல் செய்து எதிர்முனையில் எடுத்ததும், ‘சாரி மிஸ்டர் சுந்தரம், நான் கோயிலுக்குள்ள இருந்தேன்.’ என்றார்.

‘அப்படியா? நினைச்சேன்.’

‘என்ன சார், சொல்லுங்க?’ பங்கு பேரவையின் உபதலைவர் தூரத்திலிருந்து ‘டைம் ஆயிருச்சி சார்’ என்று தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காட்டுவது தெரிந்தது, ‘ஒன் செக்கண்ட். வந்திர்றேன்.’ என்பதுபோல் பதிலுக்கு சைகைக் காட்டினார்.

‘பிலிப், இன்னைக்கி நம்ம சேர்மன் வர்றார் இல்லையா? அதான் ரிசீவ் பண்ண போவேணாமான்னு நம்ம சேதுகிட்ட காலைல பேசினேன்.’

‘அப்படியா? என்ன சொல்றார் மனுஷன்?’

‘மனுஷன் பயங்கரமா கோபப்படறார் பிலிப். நம்மக்கிட்ட எந்த ஃப்ளைட்ல வரேன்னு சொல்லாதவர நாம போய் ஏன் ரிசீவ் பண்ணனுங்கறார். நீங்க என்ன சொல்றீங்க?’

என்ன சொல்றது? சேது மாதவன் நிச்சயம் எதையோ மனசுல வச்சிக்கிட்டுத்தான் இந்த மாதிரி பேசியிருப்பார். ஆனாலும் அவர் சொல்றத இக்னோர் பண்ணிட்டு எப்படி போய் ஏர்போர்ட்ல நிக்கறது என்று யோசித்தார்.

‘அப்படியா சொல்றார்? நீங்க என்ன சொல்றீங்க சார்?’

‘அதான் எனக்கும் புரியலை பிலிப். என்ன பண்ணலாம்?’

என்ன பண்ணலாம்? யோசிச்சிதான் டிசைட் பண்ணனும். இப்ப முதல் வேலை பங்கு பேரவை கூட்டம். அது முடிஞ்சதும் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கலாம். அவர் எப்படி இருந்தாலும் ஈவ்னிங் ஃப்ளைட்லதான வருவார். டைம் இருக்கே..

‘சார் எனக்கு இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சுமார் பத்து பத்தரைக்குள்ள முடிஞ்சிரும். அது முடிஞ்சதும் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்றீங்க?’

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு எதிர் முனையிலிருந்து, ‘சரி பிலிப். உங்க மீட்டிங் முடிஞ்சதும் கூப்டுங்க. பை.’ என்று பதில் வரவே பிலிப் சுந்தரம் இணைப்பைத் துண்டித்துவிட்டு செல் ஃபோனை ‘ஆஃப்’ செய்தார். தனக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பை மறந்தே போனார்.

காரின் கதவைத்திறந்து செல் ஃபோனை முன் சீட்டில் வைத்துவிட்டு தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த அவை உபதலைவரை நோக்கி விரைந்தார்.

******

‘பிலிப் என்ன சொல்றார்?’ என்ற மனைவியைப் பார்த்தார் சுந்தரம்.

‘அவருக்கு கோயில்ல ஏதோ அர்ஜண்டா மீட்டிங்காம். அது முடிஞ்சதும் கூப்டறேன். டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்லாங்கறார்.’

'ஆமாம். இவர் எப்பவுமே இப்படித்தான். கோயில், கோயில்னு அதுலயே கெடப்பார். பெண்டாட்டியா, குட்டியா.. பேசாம இவர் வேலைய விட்டுட்டு சாமியாரா போயிரலாம்.

‘ஏய்.. அப்படியெல்லாம் சொல்லாதே. பாவம் மனுஷன். அவருக்கும் நேரம் போவேணாமா? கோயில் காரியத்துல நம்மள போல இல்ல அவங்க. கிறிஸ்துவங்க வாழ்க்கையில எப்பவுமே ஒரு அர்த்தம் இருக்கும். நம்மள மாதிரி காரியம் வேணும்னா மாத்திரம் கோயிலுக்கு போறவங்க இல்ல.. வாழ்நா முழுசும் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்கு போயிடறாங்களே நம்மால அது முடியுமா?’

‘நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க. அவரப்பத்தி நமக்கு தெரியாதா? மனசுல ஒன்னு வெளியில ஒன்னுன்னு பேசறவங்க மத்தியில பிலிப் ஒரு சுத்த தங்கமாச்சே.. சரி அவர் கூப்டும்போது கூப்டட்டும், நா போயி ஒரு குட்டித்தூக்கம் போடறேன். அவர் சொல்றத கேட்டுட்டு என்ன எழுப்புங்க. அப்புறமா வைதேகிக்கு ஃபோன் பண்ணிக்கலாம்.’

‘சரி.. நீ போய் படு. நானும் ஆஃபீஸ் ஃபைல்ஸ் கொஞ்சம் பாக்கறேன்.’ என்றவாறு எழுந்து தன்னுடைய அலுவலக அறையை நோக்கி நடந்தார் சுந்தரம்..

பழைய சேர்மன் பதவி விலகியதிலிருந்து அவருடைய பொது மேலாளர் அலுவலோடு சேர்ந்து சேர்மன் அதிகாரத்திற்குள் வருகின்ற அனுமதி கோப்புகளும் சேர்ந்துக்கொள்ளவே அவற்றை தினமும் வீட்டுக்கு கொண்டுவந்து பார்ப்பது அவருக்கு வழக்கமாகிப் போனது..

‘நீங்க மாடு மாதிரி மாரடிச்சி என்ன பிரயோசனம். அனுபவிக்கிறது அந்த சேது தானே..’ என்று தினமும் புலம்பிய மனைவியைப் பொருட்படுத்தவே மாட்டார்.

****

வந்தனாவின் மனது ஒரு இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தது..

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? நான் யார்மீதெல்லாம் அன்பு வைக்கிறேனோ அவங்களை மட்டும் கடவுள் ஏன் என்னிடமிருந்து பிரிச்சிடறார்?

முதலில் அப்பா.. அப்புறம் மோகன், அவளுடைய தங்கைகள், அம்மா, இப்போ கமலி..

அப்பாவை இழந்தப்போ வாலிப வயசு.. ரெண்டே நாள் விஷக்காய்ச்சலில் அப்பா இறந்துப் போனப்போ அந்த இழப்பு பெரிசா தெரிஞ்சது. அப்புறம் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த ஒட்டுமில்லே உறவுமில்லேன்னு அண்ணா அவனோட புது பொண்டாட்டியோட பிரிஞ்சி போனப்பவும் அது ஒரு பெரிய இழப்பாத்தான் தெரிஞ்சது.. அப்புறம் மோகன்.. அந்த பிரிவு அவளை முந்தைய இரண்டு பிரிவுகளைவிட பாதித்தது என்பது உண்மைதான்.. அப்புறம் அம்மாவின் மரணம்.. எதிர்பார்த்து காத்திருந்ததுதான் என்றாலும் அதுவும் ஒரு ஆற்றமுடியயத சோகமாய்த்தான் இருந்தது. தாயின் மரணத்தையொட்டி அவளுடைய தங்கைகளும் அவளைப் புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்றது.. அது ஒரு தாற்காலிக இழப்பாயிருந்தாலும்.. அதுவும் அவளை பாதிக்கத்தான் செய்தது..

ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த இழப்பு..

தனக்கு யாருமே இல்லை என்று ஏங்கித் தவித்திருந்தபோது தனக்கு கிடைத்த கமலி.. ஒரு தாய்-மகள் உறவுக்கு ஈடாக.. எப்படி ஒட்டிக்கொண்டாள் தன்னுடன்!...

தன் தாயிடமிருந்து கிடைக்காத அன்பும், அரவணைப்பும் அவளிடமிருந்து கிடைத்தது என்று நினைத்துத்தானே அந்த பிஞ்சு மனம் தன்னிடம் அப்படி ஒட்டிக்கொண்டது?

அதைப் பிரித்துப் பார்ப்பதில் இந்த கடவுளுக்கு என்ன ஆனந்தம்?

சமையலறையையொட்டி இருந்த பூஜை அறைக்குள் நுழைந்து அப்படியே சுவரில் சரிந்து அமர்ந்தாள் வந்தனா.

ஏன், ஏன் சாமி.. எனக்கு மட்டும் இப்படி நடக்குது?

நா அப்படி என்ன பாவத்த பண்ணிட்டேன். அப்படி இந்த குழந்தைய எடுத்துக்கணும்னு நினைச்சிருந்தா எங்கிட்ட எதுக்கு கொண்டுவந்து விட்டே.. நா கேட்டனா? அம்மா போனதுக்கப்புறம் இனி எந்த உறவும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேனே.. இந்த பொண்ண கொண்டுவந்து எங்கிட்ட விடுன்னு உன்ன கேட்டனா சாமி..

நீயா கொண்டு வந்து காமிச்சே..

நான் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்காத சந்தோஷத்த எனக்கு குடுத்தே..

இப்போ.. மறுபடியும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறாப்பல பண்ணிட்டியே சாமி.. உனக்கே இது நல்லாருக்கா?

இப்போ பொணமா கெடக்கற என் குழந்தைய பாக்கறதுக்கே நான் தயங்கி நிக்க வேண்டியதாயிருச்சே..

நான் போயி அந்த வாசல்ல நின்னு அவ அம்மா உன்னாலதாண்டி எம் பொண்ணு போய்ட்டான்னு கதற்னா நான் என்ன பண்ணுவேன் சாமி, நா என்ன பண்ணுவேன்..

பூஜை அறையில் துக்கத்தின் பிடியில் முகம் கவிழ்ந்து கிடந்த வந்தனாவுக்கு படுக்கையறையில் தரையில் கிடந்து அலறிக்கொண்டிருந்த அவளுடைய செல் ஃபோனின் ஒலி அவளுடைய செவிகளில் விழவே இல்லை..

அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ..

அவளாகவே எழுந்து உணவறையிலிருந்த வாஷ் பேசினில் முகத்தை அலம்பிக்கொண்டு தலைமுடியைக் கையாலேயே கோதிவிட்டுக் கொண்டாள்..

வாசற்கதவருகின் பின்புறம் ஆடிக்கொண்டிருந்த வீட்டுச் சாவியையும் ஹாலில் சோபாவில் கிடந்த தன்னுடைய கைப்பையையும் எடுத்துக்கொண்டு கதவை சாத்தி பூட்டினாள்..

கால்கள் இரண்டும் பலவீனத்தால் நடுங்க.. தள்ளாடி, தள்ளாடி லிஃப்டை நெருங்கி, உள்ளே நுழைந்து தரைதள பொத்தானை அமுக்கி இறங்கினாள்..

வெளிறிப் போயிருந்த முகத்துடன் தரைதளத்தில் இறங்கி வாசலை நோக்கி நடந்து சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள்..

தன்னருகில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு, தன்னுடைய செய்கை மாணிக்க வேலையும் அந்த குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கப்போகிறது என்பதை உணராதவளாய் ‘தாம்பரம் போப்பா. சீக்கிரம்.’ என்றாள்..

தொடரும்..

22.3.06

சூரியன் 45

‘சார் அவனுங்க ரெண்டு பேரும் கேரளாவ சேர்ந்தவங்க..’

எஸ்.பி தனபால் சாமிக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘ஏன்யா.. அதான் அவனுங்க மூஞ்ச பார்த்தால தெரியுதே. நீ என்னமோ இன்வெஸ்டிகேட் பண்ணி கண்டுபிடிச்சா மாதிரி சொல்றே? அவனுங்கக் கிட்டருந்து வேற ஒன்னும் கிடைக்கலையா?’

எதிர் முனையிலிருந்து வந்த மவுனம் அவரை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியது. ‘என்னய்யா சத்தத்தையே காணோம்?’

‘சார் அவனுங்க ஸ்டேஷனுக்கு வர்றதுக்குள்ளயே செல்ஃபோன்லருந்த நம்பர் எல்லாத்தையும் எரேஸ் பண்ணிட்டானுங்க போலருக்கு சார்.. அதனால அவனுங்கள யார் இந்த வேலைக்கு அனுப்பனான்னு இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியலை.. ரெண்டு பேரும் சரியான கல்லுளிமங்கங்கனா இருக்கான்க..’

எஸ்.பி. தனபாலுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ‘ஏன்யா இப்படி சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லை.. உன்னை என்னவோ டிப்பார்ட்மெண்ட்ல அப்படி இப்படின்னு பேசிக்கறானுங்க? ரெண்டு போக்கத்த பசங்கக்கிட்டருந்து இதக்கூட உன்னால வரவைக்க முடியலே?’

‘அப்படி இல்ல சார். மேல கைவைக்கறதுக்கு போதுமான காரணம் இல்லையே சார்.’

தனபால் எரிந்து விழுந்தார். ‘ஒரு பொண்ணோட ஃபோட்டோவ வச்சிக்கிட்டு ஸ்டேஷன்ல போற வர பொம்பளைங்கள வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கான்க.. இதவிட உனக்கு வேற என்ன காரணம் வேணும்? அந்த பொண்ணு யாரு, இவன்களுக்கு அந்த பொண்ணு என்ன வேணும்? இல்லன்னா இவன்கள அனுப்புனது யாரு? இதெல்லாம தெரிஞ்சிக்க வேணாமா? இங்க பாருங்க. என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு வேண்டிய விஷயம் வந்து சேர்ந்துரணும். பேசமாட்டேன்னு அடம்புடிச்சா கடத்தல் கேசுன்னு புக் பண்ணிருவேன்னு மிரட்டுங்க. படியலைன்னா நீங்க எதுக்கு டிபார்ட்மெண்ட்ல ஃபேமசோ அத செஞ்சி பதில வரவைங்க.. புரியுதா.. பத்தே நிமிஷம்.. உங்க ஃபோன பார்த்துக்கிட்டிருப்பேன்..’

செல் ஃபோனை கட்டிலில் வீசிவிட்டு குளித்து முடித்த தலையை துவட்டி முடித்ததும் அலுவலக உடைகளை அணிந்துக்கொண்டார். உடை மாற்றி முடித்து அறையை விட்டு வெளியேற கட்டிலில் இருந்த செல் ஃபோன் ஒலி கேட்டு திரும்பிச் சென்று எடுத்தார்.

‘சொல்லுங்க, ஏதாச்சும் தெரிஞ்சிதா?’ என்றார்.

‘ஆமா சார். யாரோ மாதவனாம்.. ------------------ பேங்க்லருக்காராம். ஃபோட்டோவுலருந்த பொண்ணு அவரோட நண்பரோட பொண்ணாம். அவரும் அதே பேங்க்லதானாம். ஏதோ கல்யாணப் பிரச்சினைன்னு தோனுதுசார். நேத்தைக்கி காலைல வீட்லருந்து போன பொண்ணாம். இன்னும் வரலைன்னு...’

‘அது சரிய்யா.. இவனுங்க யாரு?’

‘இவனுங்க.. அடியாள் மாதிரின்னு தெரியுது சார்.’

தனபால் எரிச்சல் மேலிட குரலை உயர்த்தி சிடுசிடுத்தார். ‘என்ன ஆச்சிங்க உங்களுக்கு? அடியாள்னா.. அதா அவன்கள பார்த்தாலே தெரியுதே.. இவனுங்களுக்கு யாரோ அந்த மாதவன்னு சொன்னீங்களே அவருக்கும் என்ன தொடர்பு.. இவனுங்களுக்கு நம்ம டிபார்ட்மெண்ட்ல ப்ரொஃபைல் ஏதும் இருக்கா.. கண்ட்ரோல் ரூமுக்கு மெசேஜ் கொடுத்து சிஸ்டத்துல இவனுங்களப்பத்தி ஏதாச்சும் இருக்குதான்னு தேட சொல்ல வேண்டியதுதானே.. இதெல்லாத்தையும் நானா சொல்லணும்? இதப்பாருங்க.. பேங்க்ல பெரிய எக்சிகியூட்டிவ்னா இது பெரிய எடத்து விஷயமாத்தான் இருக்கும்.. அசால்டா இருந்தது போறும்.. அவனுங்க மேல ஏதாச்சும் கேஸ் புக் பண்ணி ரிமாண்ட்ல வச்சாத்தான் இவனுங்கள அனுப்பிச்ச ஆளு தானா வருவார்.. புரியுதா..? கண்ட்ரோல் ரூம்ல ஏதாச்சும் கிடைக்குதான்னு பாருங்க.. நம்ம கமிஷனரப்பத்தி தெரியுமில்லே.. ஏதாச்சும் பிரச்சினையில என்ன மாட்டி விட்டுராதீங்க.. எனக்கு கமிஷனர்கிட்ட நாலு மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு.. அதுக்குள்ள மேல ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க. ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணாதீங்க. என் செல் ஃபோனுக்கு பண்ணுங்க. அப்பத்தான் நான் ஏதாச்சும் மீட்டிங்ல இருந்தாக்கூட நீங்க கூப்டது தெரியும். புரியுதா.. அவன்கள அதுவரைக்கும் உங்க கஸ்டடியிலயே வச்சிருங்க..’

‘சரி சார்.’ என்ற எதிர்முனையிலிருந்த குரலைக் கேட்டவர், ‘குரல்ல மட்டும் விறைப்பு இருந்தா போறாது மேன். ஆக்ஷன்லயும் இருக்கணும்..’ என்று உறுமினார். பிறகு செல் ஃபோனை கையில் பிடித்தவாறு உணவு மேசையை நோக்கி நடந்தார்.

***

‘இங்க பார் ரம்யா. அப்பா ஏதாச்சும் கேட்டா நான் பேசிக்கறேன். தயவு செஞ்சி இனியும் மேல மேல பொய்ய சொல்லி காரியத்த சீரியசாக்கிறாதே.. அப்பாவோட குரல்லருந்தே நான் கண்டுபிடிச்சிருவேன் அவர் நாம சொல்றத நம்பறாரா இல்லையான்னு.. சரியா?’ என்றாள் புவனா தன் தோழியைப் பார்த்து.

‘சரி ரம்யா.. ஆனா..’

‘ஆனா வன்னான்னு எதையாச்சும் சொல்லிக்கிட்டிருக்காம நா சொல்றத கேளு.. அதாவது இந்த விஷயத்துல என்னோட உதவி இனியும் உனக்கு வேணும்னா.. இல்ல நானே பார்த்துக்கறேன்னு நீ சொன்னா அப்புறம் உன் இஷ்டம்..’

புவனாவின் குரலில் இருந்த கோபமும், உறுதியும் ரம்யாவை சிந்திக்க வைத்தன. இவளும் ஒரு போலீஸ்காரரோட பொண்ணுதானே.. இவள நம்பி வந்ததுதான் நாம பண்ண பெரிய தப்பு என்று நினைத்தாள்..

‘ஏய் என்ன சைலண்டாயிட்டே.. பேசாம வா.. அப்பா டேபிள்ல வந்து உக்காந்துட்டார்..’ சிலையாய் நின்றிருந்த ரம்யாவின் தோளைத் தொட்டு திருப்பி அவளுடைய கைகளில் ஒரு பாத்திரத்தை திணித்து, ‘வா.. டேபிளுக்கு போலாம். அப்பா சாப்டற நேரத்துல பேச மாட்டார்.. நீயும் ஒன்னும் பேசாதே.. என்ன?’ என்றவாறு உணவு மேசையை நோக்கி நடக்க ரம்யா அவளைப் பின் தொடர்ந்தாள்.

கையில் பாத்திரங்களுடன் தன்னை நோக்கி வந்த இருவரையும் நிமிர்ந்து பார்த்த தனபால் சாமியின் சந்தேகக் கண்கள் ரம்யாவின் கண்களிலிருந்த கலவரத்தை படம்பிடித்தது. இருப்பினும் உணவு உண்ணும் நேரத்தில் பேசுவதில்லை என்ற தன்னுடைய நியதியை மீற விரும்பாமல் கடகடவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து வாஷ் பேசினில் கைகளைக் கழுவி துடைத்தவாறே மீண்டும் மேசைக்கு திரும்பினார்.

அவருடைய செயல்கள் ஒவ்வொன்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த புவனா.. ‘சோ அப்பா பேசறதுக்கு ரெடியாவுறார்.. ஃபோன்ல யாரோ ஏதோ சொல்லிருக்காங்க.. அது ரம்யாவோட விஷயமா இல்லையான்னு இன்னும் ரெண்டு நிமிஷத்துல தெரிஞ்சிரப் போவுது.....’ என்றாள் தனக்குள்..

தலைகுனிந்தவாறு தட்டில் இருந்த இட்லியை சுழற்றிக்கொண்டிருந்த தன் தோழியின் காலை மேசைக்கடியில் உதைத்தாள் புவனா..

‘என்ன ரம்யா? பசியில்லையா.. இல்ல சாப்டற மூட்ல இல்லையா?’ என்றார் தனபால்..

திடுக்கிட்டு நிமிர்ந்த ரம்யா தன் எதிரில் இருந்த தனபாலையும் அருகில் அமர்ந்திருந்த தன் தோழியையும் மாறி, மாறி பார்த்தாள். ‘என்ன அங்கிள் கேட்டீங்க?’

‘ஏய், நீ சாப்டாம விளையாடிகிட்டிருக்கே.. அதான் பசிக்கலையான்னு அப்பா கேக்கறார்..’

‘அப்படியெல்லாம் இல்ல அங்கிள்.. ஊருக்கு போயிருக்கற அம்மாவ நினைச்சிக்கிட்டேன்.. அதான்..’ என்று இழுத்தவள் புவனாவின் கால்கள் மேசைக்கடியில் அழுத்தவே அவளையுமறியாமல் வலியால் முகத்தைச் சுளித்தாள்.

‘எம்மா.. நீ பாட்டுக்கு உதச்சி கல்யாணப் பொண்ணோட கால உடச்சிராத.. அப்புறம் அவங்க அப்பா அம்மா ஊர்லருந்து வந்ததும் கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போறாங்க.’ என்று சிரித்தார் தனபால் சாமி. ‘என்ன ரம்யா நா சொல்றது சரிதானே..’

ரம்யாவும் புவனாவும் சங்கடத்துடன் நெளிவதை உணர்ந்த தனபால் பேசுவதற்கு வாயெடுப்பதற்கு முன் அவருடைய செல் ஃபோன் ஒலிக்கவே எடுத்து யாரென பார்த்தார்.

‘சொல்லுங்க. அதுக்குள்ள தெரிஞ்சிட்டுதா?’

‘ஆமா சார்.. போன வாரம் ஆவடியில ஒரு ஃபேக்டரி ஓனர கடத்திக்கிட்டு போயி கடன கட்டச் சொல்லி சித்திரவதை செஞ்சதா ஒரு கேஸ் வந்துதுல்லே சார். அதுல பாஸ்கரங்கறவனுக்கு சம்மதம் இருக்கு சார்..’

தனபாலின் முகத்தில் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சி பரவ ரம்யா திகைப்புடன் தன் தோழியைப் பார்த்தாள்.

‘வெரி குட்.. நான் நினைச்சேன். அவனுங்க அந்த பொண்ணோட போட்டோவ பார்த்துக்கிட்டு முளிச்ச முளியிலயே அவனுங்க லேசுபட்டவனுங்க இல்லேன்னு எழுதி வச்சிருந்ததே.. சரி அந்த இன்னொருத்தன்? அவன் பேர்லயும் ஏதாச்சும் இருக்கும் பாருங்க.’

‘இருக்கு சார்.. பாஸ்கரனும் அந்த இன்னொருத்தனும் சேர்ந்துதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறானுங்க. நா சொன்னேனே சார் ----------------- பேங்க்லருக்கற மாதவன்.. அவர் சொல்லித்தான் இதெல்லாம் நடக்குதுன்னு.. ஒரு ஊகம்.. இவனுங்க சொல்ல மாட்டேங்கறானுங்க..’

தனபாலின் முகத்தில் சட்டென்று கோபத்தின் ரேகை படர எரிந்து விழுந்தார். ‘இங்க பாருங்க.. அது ரொம்ப பெரிய எடம்.. நீங்களா எதையாச்சும் ஃபோன்ல சொல்லிக்கிட்டிருக்காதீங்க. அத அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பேக்டரி ஓனரோட கம்ப்ளெய்ண்ட் எந்த ஸ்டேஷன்ல பதிவாயிருக்குன்னு பார்த்து இவனுங்கள அங்க அனுப்பிச்சிருங்க. இந்த பொண்ணோட விஷயம் ரெக்கார்ட்ல வர வேணாம்.. புரியுதா? இவனுங்கள பெய்ல்ல எடுக்க யாராச்சும் வந்தா என் பெர்மிஷன் இல்லாம ஒன்னும் செய்யக்கூடாதுன்னு அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ கிட்ட சொல்லிருங்க.. நீங்க மேல்கொண்டு இவனுங்க மேல ஏதாச்சும் பெண்டிங் கேஸ் இருக்கான்னு பாருங்க.. ஏதாச்சும் இருந்தா மூனு, மூனரைக்குள்ள எனக்கு ஃபோன் பண்ணுங்க..’

புவனாவுக்கு ஒருவாறு விஷயம் புரிந்தாலும் உள்ளூர நடுங்கியவாறு தன்னுடைய தந்தையின் அடுத்த அஸ்திரத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

தொடரும்..20.3.06

சூரியன் 44

தூய பேதுரு (St.Peter's)ஆலயம், வேப்பேரி. சென்னை

உபதேசியார் ஸ்தனிஸ்லாஸ் ஒன்பதரை மணி ஆங்கில திருப்பலிக்கான ஆயத்தங்களைச் செய்வதில் முனைப்பாயிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை என்றாலே காலையில் மூன்று திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம். மூன்று திருப்பலிகளுக்கும் வேண்டிய ஆயத்தங்களை செய்து முடிப்பதற்குள் போதும், போது மென்றாகிவிடும் அவருக்கு.

‘இந்த வயசான காலத்துல அதிகாலையில எழுந்து வர்றது கஷ்டமாயிருந்தா நின்னுக்குங்க ஸ்தனிஸ்..’ என்று அவருடைய பங்கு குரு பலமுறை கூறிவிட்டார்.

அப்போதெல்லாம், ‘என்ன பத்தி ஒங்களுக்கு தெரியாதா சாமி.. இந்த பங்களாவ விட்டா எனக்கு வேற போக்கெடம் ஏது சாமி.. நா பொணமாத்தான் சாமி இங்கருந்து போணும். அதுக்கு மின்னால என்ன போச்சொல்லிராதீங்க சாமி.. ஒங்க கால்ல விளுந்து கேட்டுக்கறேன் சாமி..’

அவருடைய பிள்ளைகளில் எவருமே அவருக்கு புகலிடம் கொடுக்காத நிலையில் தானும் அவரை வெளியே அனுப்பிவிட்டால் அந்த துக்கத்திலேய அவர் மரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்த பங்கு குரு தாமஸ் அடிகளார், ‘சரி ஸ்தனிஸ் நீங்க சொன்னா மாதிரி உங்க இறுதி நாள் வரை இங்கேயே இருந்துருங்க.. கர்த்தருடைய சித்தம் அதுவா இருந்தா அப்படியே நடக்கட்டும். உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு யாரையாவது நியமிக்கிறேன்.’ என்று அடுத்திருந்த கன்னியர் மடத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞனை ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும்  திருவிழா நாட்களில் வந்து ஸ்தனிஸ்லாசுக்கு உதவி செய்ய நியமித்தார்.

அறை மூலையிலிருந்த தொலைப்பேசி அடிப்பதைக் கேட்ட உபதேசியார் ஸ்தனிஸ்லாஸ் தன்னுடைய வயதான கால்களை தரையில் தடவித் தடவி மெதுவாக நடந்து சென்று எடுத்து நடுங்கும் குரலில் ‘ஹலோ யாருங்க? நா உபதேசியார் பேசறேன்.’ என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த குரல் அவருக்கு மிகவும் பரிச்சயமான மாணிக்க வேலுடையது என்பதை அறிந்த உபதேசியார், ‘என்னய்யா இந்த நேரத்துல. சாமி ரெண்டாவது பூசை வச்சிக்கிட்டிருக்காரே.. இன்னும் அரைமணியாவது ஆவும் போலருக்கே.’ என்றார்.

அவர் கூறியதைப் பொருட்படுத்தாமல் எதிர்முனையிலிருந்து ஒலித்த செய்தி அவரை நிலைகுலைய வைத்தது. ‘என்னய்யா சொல்றீங்க? கமலியா? நேத்து காலைல உங்க பேங்குக்கு சாமியாரோட வந்தப்போக்கூட ஒன்னும் சொல்லலையேய்யா.. திடீர்னு எப்படி..? அவஸ்தைக் கூட கொடுக்க முடியாம போயிருச்சேய்யா.. கவலைப்படாதீங்க மாணிக்கய்யா.. சம்மனசு மாதிரி புள்ளையாச்சே உங்க பொண்ணு.. இந்நேரம் கர்த்தரோட பக்கத்துல இருப்பாய்யா.. சம்மனசுகளோட சம்மனசா இருக்கும்யா நம்ம பாப்பா..’

பேச்சுக்கிடையில் எதிர்முனையிலிருந்து விசும்பும் ஒலி வரவே ‘யார்யா அது, சந்தோஷா? பாவம்யா புள்ள.. ஒரேயொரு தங்கச்சியாச்சே.. மனசு ஆறாதே.. எல்லாம் கடவுளோட சித்தம்னு சொல்லாம வேற என்னய்யா சொல்றது? நா சாமியார்க்கு ஒரு சீட்டுல எளுதி அனுப்பி விடறேன்யா.. மனச தேத்திக்குங்க.. பூச முடிஞ்சதும் சாமியாரோட வந்து செபம் பண்ணி மந்திரிச்சிரலாம்யா.. மனச தேத்திக்கிருங்க.. வச்சிடறேன்..’ என்று ஒலிவாங்கியை வைக்கச் சென்றவர் எதிர்முனையிலிருந்து குரல் கேட்கவே மீண்டும் , ‘என்னய்யா சொன்னீங்க? மதர் கிட்டயா? சொல்லிடறேன்யா.. யார்கிட்டயாவது உடனே சொல்லி அனுப்பறேன்.. என்னய்யா? அவுகள உடனே வரச்சொல்லவா? சரிய்யா.. அவங்க மடத்துல காலைலயே பூசை முடிஞ்சிருக்கும்.. ஒடனே புறப்பட்டு வந்துருவாங்க.. சவப்பெட்டிக்கெல்லாம் சொல்லிட்டீங்களாய்யா? என்னய்யா? ஆச்சா? சரிய்யா.. எனக்கும் நீங்க சொன்னத கேட்டதுலருந்து பட படன்னு வருதுய்யா.. கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு சாமிக்கு சீட்டெழுதி அனுப்பணும்.. வச்சிடறேன்.’ என்றவர் ஒலிவாங்கிய அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு துக்க மிகுதியால் தட்டுத்தடுமாறி அறையின் மறுகோடியிலிருந்த குடிநீர் பாத்திரத்திலிருந்து ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பிறகு மெள்ள எழுந்து ஒரு துண்டு காகிதத்தில் நடுங்கும் கரங்களால், ‘நம்ம மாணிக்கய்யா பொண்ணு கமலி மரிச்சிருச்சு சாமி. இப்பத்தான் ஃபோன் வந்துது..’ என்று கிறுக்கி பீடத்திற்கு பின்னாலிருந்த வாயிலில் நின்று பீட சிஷ்யர்களுள் ஒருவனைக் கைச்சாடைக் காட்டி அழைத்து தன் கையிலிருந்து சீட்டைக் கொடுத்து, ‘ஏய்யா. இந்த சீட்ட சாமி கிட்ட குடுத்துரு.. அவசரம்.’ என்றார். ‘நீ குடுத்துட்டு ஒடனே திரும்பி வாய்யா.. மடத்துலயும் போயி இந்த விஷயத்த மதர்கிட்ட சொலணும்.. சாமி ஒன்னும் சொல்ல மாட்டார். என்ன?’ என்றார்.

பீடச் சிறுவன் தன் கையிலிருந்த சீட்டைப் படித்துவிட்டு சட்டென்று முகம் இருண்டு போய் உபதேசியாரைப் பார்த்தான். ‘அய்யா இது சந்தோஷோட தங்கைதானே? நேத்து காலைலக் கூட நா அவங்க வீட்டுக்கு போயிருந்தேனேய்யா..?’ என்றான் கலங்கிய கண்களுடன்..

உபதேசியார் அவனை தட்டிக்கொடுத்தார். ‘எய்யா லாரன்ஸ்.. நீ அப்புறம் போய் பார்க்கலாம். நீ இப்போ போயி சீட்ட சாமிகிட்ட குடுத்துட்டு ஓடி வாய்யா.. மடத்துக்கு போயி சொல்லிட்டு நீ வேணும்னா சைக்கிள எடுத்துக்கிட்டு முன்னால போயிரு. நானும் சாமியும் ஒரு சைக்கிள் வேன்ல  வந்துக்கறோம்.. இப்ப போயி சீட்ட சாமிகிட்ட குடு.. போ..’

***

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்த மாணிக்க வேல் எதிரே கட்டிலில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தார். அவனுடைய வயதில் தன்னால் இப்படியொரு இழப்பைத் தாங்கியிருக்க முடியுமா என்று யோசித்தார்.

அடுத்த அறையில் தன்னுடைய மனைவி எழுப்பிக் கொண்டிருந்த ஓசை கேட்டது. அவளை என்ன செய்வது? நான் வரவேண்டாம் என்பதை வந்தனா மேடம் கேட்டிருப்பார்களா? கமலியின் மரண செய்தியைக் கேட்டதுமே மேடம் செல் ஃபோனை தவறவிட்டதை இங்கிருந்தே அவரால் உணர முடிந்தது. இவ்விழப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடிகிறதோ இல்லையோ.. மேடத்தால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்தார்.

Something has to be done. அவங்க பாட்டுக்கு புறப்பட்டு வந்துட்டா அப்புறம் ராணிய கண்ட்ரோல் பண்ணவே முடியாது. இன்னும் தலைனிந்து அமர்ந்திருக்கும் தன் மகனைப் பார்த்தார்.

‘சந்தோஷ்’ என்று அழைத்தார் மெல்லிய குரலில்.

மறு பதில் ஏதும் கூறாமல் தன்னைப் பார்த்த தன் மகனின் கண்களில் நிறைந்திருந்த சோகம் அவரை என்னவோ செய்தது.  

‘வந்தனா மேடம் நான் சொன்னத கேட்டாங்களோ தெரியலை சந்தோஷ். நான் ரெண்டு மூனு தடவை அவங்க் செல் ஃபோனுக்கு ட்ரை பண்ணி பார்த்துட்டேன். எங்கேஜ்டாவே இருக்கு. லேண்ட் லைனையும் எடுக்கவே மாட்டேங்கறாங்க. அவங்க சொல்லாம கொள்ளாம புறப்பட்டு இங்க வந்துட்டா வேற வினையே வேணாம். சொந்த காரங்க மத்தியில ராணி ஏதாவது பண்ணி அசிங்கமாயிரும். ஃபாதரும், மதரும் நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்கன்னே சொல்ல முடியாது. அத அவாய்ட் பண்றதுக்கு ஒரு வழிதான் இருக்கு.’

‘என்ன டாட்?’

‘நீ உடனே கார எடுத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு போணும்.’

‘நானா? எப்படி டாட். இந்த மூட்ல என்னால அவ்வளவு தூரத்துக்கு கார தனியா ஓட்ட முடியும்னு நினைக்கிறீங்களா டாட்?’

அதுவும் சரிதான். தாம்பரத்திலிருந்து பத்து, பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இவனை தனியாக அனுப்புவது ஆபத்துதான். வேறென்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிக்க தன் அருகில் இருந்த வீட்டு தொலைப்பேசி அடிக்கவே எடுத்து ‘ஹலோ’ என்றார்.

எதிர் முனையில் அவருடைய கிளை துணை மேலாளர்!

‘என்ன சார், நான் கேள்விப்பட்டது உண்மையா? என்ன சார் நீங்க.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? எங்கக்கிட்ட முதல்ல சொல்லணும்னு உங்களுக்கு எப்படி சார் தோனாம போச்சி?’

உண்மைதான்.. தன்னால் எப்படி இவரை மறக்க முடிந்தது?

‘சாரி ஜோ.. I just forgot.. என்னுடைய வேதனையில யாருக்கு சொல்லணும்னு கூட மறந்து போச்சி ஜோ.. நீங்க உடனே புறப்பட்டு வாங்க.. ஃபோன்ல பேசக்கூடிய சூழ்நிலையில நா இப்ப இல்ல.. வாங்க.. நீங்களே நம்ம மத்த ஆஃபீசர்சுக்கும் ஸ்டாஃபுக்கும் முக்கியமான கஸ்டமர்சுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வந்துருங்க..வச்சிடறேன்.. ’

‘டாட்.. நம்ம ஜோ அங்கிள்கிட்டயே இதயும் சொல்லியிருக்கலாமே.. அவர் நம்ம வீட்டுக்கு வர்ற வழியிலேயே அவங்க வந்தனா ஆண்ட்டி வீட்டுக்கு போய்ட்டு வந்திருப்பாரில்லே டாட்.’

மாணிக்க வேல் தன் மகனிடம் எப்படி விளக்குவதென தெரியாமல் யோசித்தார். ‘எப்படி சந்தோஷ்? வந்தனா மேடத்த இந்த நேரத்துல வீட்டுக்கு வரவேணாம்னு ஜோ வழியா எப்படி சொல்றது? அவர்கிட்ட நா என்னன்னு சொல்லுவேன்? ராணி அப்பாவையும் வந்தனா மேடத்தையும் சேர்த்து சந்தேகப்படறான்னா?’

சந்தோஷின் கண்கள் கலங்கி தலையைக் குனிந்துக்கொண்டான். அம்மாவுக்கு ஏந்தான் இப்படி புத்தி போவுதோ தெரியலையே..

சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்ற தன் தந்தையைப் பார்த்தான். ‘டாட் ஒரு ஐடியா.’

‘சொல்லு.’

‘நம்ம தாத்தா முளிச்சதும் அவர கொண்டு போய் வந்தனா மேடம் வீட்ல ரெண்டு நாளைக்கு விட்டுரலாம். அம்மா இப்ப இருக்கற முடுல அவங்க கோபம் முழுசும் தாத்தா மேலதான் பாயும். சித்தப்பா, சித்தி எல்லாம் இருக்கற நேரத்துல அம்மா தாத்தாவ ஏதாவும் மோசமா பேசி, அவங்க பதிலுக்கு ஏதாவது பேசிட்டாங்கன்னா எல்லார் முன்னாலயும் அசிங்கமாயிரும். அதனால ஜோ அங்கிள் கூட.. இல்லன்னா ஒரு கால் டாக்சிய கூப்டுங்கப்பா, நானே தாத்தாவ கூட்டிக்கிட்டு போயி ஆண்டிக்கிட்ட சொல்லி  விட்டுட்டு வந்துடறேன். நாம ஏன் தாத்தாவ அவங்க வீட்ல விடறோம்னு ஆண்டிக்கு சொன்னா புரிஞ்சுக்கும். என்ன டாட் சொல்றீங்க?’

மாணிக்க வேல் தன் மகனின் சமயோசிதத்தை நினைத்து வியந்தார். இந்த துக்ககரமான சூழ்நிலையிலும் இவனால் எப்படி இத்தனை சாமர்தியமாக சிந்திக்க முடிகிறது.

‘நல்ல ஐடியா சந்தோஷ். நான் உடனே எங்க பேங்க் டிராவல் ஏஜண்டுக்கு ஃபோன் பண்றேன். நமக்கு எப்படியும் இன்னைக்கி ஒரு ரெண்டு மூனு கார், வேன்லாம் வேணும். நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. குட் ஐடியா! நீ போய் தாத்தாவுக்கு ரெண்டு நாளைக்கு வேண்டிய வேட்டி, சட்டைன்னு எல்லாத்தையும் எடுத்து ஒரு சின்ன பேக்ல வை.. நான் டாக்சிய கூப்டறேன்.’

இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியே வரவும்  அவருக்கும் ராணிக்கும் திருமணம் செய்துவைத்த பாதிரியாரும், கன்னியர் மடத் தலைவியும் ஒரு வேனில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது..

தொடரும்17.3.06

சூரியன் 43

எஸ்.பி. தனபால் சாமியின் காவல்துறை வாகனம் தூரத்தில் வருவதைப் பார்த்ததுமே வாசலில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் எழுந்து கேட்டைத் திறந்துவிட்டு விறைப்புடன் சல்யூட் வைத்தார்.

வாகனம் கேட்டைக் கடந்து போர்ட்டிக்கோவில் சென்று நின்ற தோரணையே எஸ்.பியின் இன்றைய ‘மூட்’ சரியில்லை என்பதை அவருக்கு உணர்த்தியது..

‘நம்மக்கிட்ட பாயாம இருந்தா சரி.’ என்ற முனுமுனுப்புடன் கேட்டை மூடிவிட்டு சாலையைப் பார்த்து திரும்பி நின்றுக்கொண்டார்.

எஸ்.பி வாகனத்திலிருந்து இறங்கி கதவை அறைந்து சாத்தும் சப்தம் சமையலறையில் காப்பி தயாரித்துக்கொண்டிருந்த புவனாவிற்கு கேட்டது..

மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு சதி செய்து விடுமோ என்ற அச்சத்துடன் நடுங்கும் கைகளில் காப்பி கோப்பையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள்..

‘வாங்கப்பா.. டூர்லாம் எப்படி இருந்திச்சி..’ என்ற மகளை தன்னுடைய போலீஸ் கண்களால் ஆராய்ந்தார் எஸ்.பி.

புவனா அவருடைய பார்வையத் தவிர்த்து தன் கையிலிருந்த காப்பி கோப்பையை கவனத்துடன் குறுமேசையில் வைத்துவிட்டு அவரை தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்னம்மா எப்படி தனியா இருந்தேன்னு கேக்க மாட்டேன். ஏன்னா உன்ன தனியா விட்டுட்டு போறது ஃபர்ஸ்ட் டைம் இல்லையே..’ என்று உரக்க சிரித்தவாறு சோபாவில் அமர்ந்த எஸ்.பி குறுமேசையிலிருந்த காப்பி கோப்பையை எடுத்து உறிஞ்சினார்.

சட்டென்று அவர் முகம் போன போக்கைப் பார்த்து நாக்கைக் கடித்துக்கொண்டாள் புவனா. ‘ஜீனி போடலைப்பா.’ என்றவாறு சமையலறையை நோக்கி ஓடிய தன் மகளைப் பார்த்தார் எஸ்.பி.

என்னத்தையோ செஞ்சிட்டு முளிக்கிறாப்பல இருக்கே.. என்றவாறு ஹாலைச் சுற்றி நோட்டம் விட்டார். அந்த பொண்ணு வீட்ட விட்டு போனது இவளுக்கு தெரிஞ்சிருக்குமோ.. இருக்கும்.. அவளா சொல்றாளான்னு பார்ப்போம்..

சமையலறையிலிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்த புவனா நடுங்கும் கைகளுடன் பாத்திரத்திலிருந்த சர்க்கரையை காப்பியில் கலக்குவதை கவனித்த எஸ்.பி.. ‘சோ.. நாம நினைச்சது சரிதான்.. இவளுக்கு தெரிஞ்சிருக்கு..’ என்ற முடிவுக்கு வந்தார்.

காப்பியை உறிஞ்சியவாறே தன் மகளை நோட்டம் விட்டார். ‘என்ன புவனா.. ஏதோ அப்பா கிட்ட சொல்ல வரா மாதிரி தெரியுதே.. என்னன்னு சொல்லும்மா.’ என்றார்.

புவனா அவரைப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே மாடியைப் பார்ப்பதைப் பார்த்தார். What does it mean? Somebody is there... அந்த பொண்ணா இருக்குமோ?

‘என்னம்மா மாடிய பாக்கறே? யாராச்சும் விருந்தாளி வந்திருக்காங்களா என்ன?’

புவனா அச்சத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஆமாப்பா. என் ஃப்ரெண்ட் ரம்யாதாம்பா..’

தனபால் சாமிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. யெஸ்.. அதான் அந்த பொண்ணோட பேரு.. ரம்யா..

‘ரம்யாவா? எங்க? மாடியிலயா?’

‘ஆமாப்பா..’

அவருடைய புருவங்கள் உயர்ந்தன. அவருடைய போலீஸ் கண்கள் சந்தேகத்துடன் தன்னை ஊடுருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மாடியைப் பார்த்தாள் புவனா. ‘ஏய் ரம்யா? அங்க என்ன பண்றே? அப்பா வந்துட்டார். வா.’

எஸ்.பி யின் பார்வை மாடிக்குத் தாவியது. புவனாவின் குரலுக்கே காத்திருந்ததுபோல் படுக்கையறையிலிருந்து வெளியே வந்த ரம்யா ஒரு சிறு புன்னகையுடன் மாடிப்படியில் இறங்கி வருவதைப் பார்த்த எஸ்.பியின் உதடுகளில் அவரையுமறியாமல் ஒரு புன்னகை தவழ்ந்தது. இந்த காலத்து குட்டிகளுக்குத்தான் என்ன நெஞ்சழுத்தம்! அங்க என்னடான்னா இவளோட அப்பா போலீசுக்கு போனா கேவலம்னு நினைச்சி பொண்ணோட  போட்டோவ அடியாள்ங்க கிட்ட குடுத்து தேடிக்கிட்டிருக்கார். பொண்ணு  என்னடான்னா ஒரு போலீஸ் அதிகாரி வீட்லயே ஒளிஞ்சிக்கிட்டு நிம்மதியா இருக்கு..

ஊம்.. இன்னும் என்னென்ன கதை சொல்லுதுங்கன்னு பார்ப்பம். இதுல இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருக்கற தன் மகளும் புவனாவும் கூட்டா என்றா நினைத்தபோது அவரையும் அறியாமல் அவருக்கு சிரிப்பு வந்தது. உரக்கச் சிரித்தார்.

‘என்ன அங்கிள் சிரிக்கிறீங்க?’ என்றாள் ரம்யா.

புவனாவுக்கு தன் தந்தை காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார் என்பது தெரிந்திருந்ததால் அவருடைய சிரிப்பிற்குப் பின்னால் என்னவோ மர்மம் இருக்கிறது என்று நினைத்தாள்..

பேசாம உண்மைய சொல்லிடறதுதான் நல்லது என்று வாயெடுத்தாள்.

ஆனால் ரம்யா முந்திக்கொண்டாள். ‘அங்கிள் நான் ஒரு ரெண்டு வாரத்துக்கு புவனா கூட இருந்துட்டு போலாம்னு நேத்துதான் வந்தேன்..’

எஸ்.பி தன் முன்னால் நின்ற இருவரையும் மாறி, மாறி பார்த்தார். அப்படியா? ஆனா இத ஏன் வாசல்ல இருக்கற கான்ஸ்டபிள் நான் வந்ததுமே என்கிட்ட சொல்லலை? அவனுக்கு ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டுத்தான போனேன்? சோ.. இந்த பொண்ணு வந்தத வாசல்ல நிக்கற கான்ஸ்டபிள் பாக்கலை..

‘அப்படியாம்மா? ஆனா உன்ன எப்படி உள்ள விட்டான் அந்த கான்ஸ்டபிள்? நா இல்லாதப்போ தெரியாத யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே.. ஏம்மா புவனா?’

புவனா என்னடி இப்படி என்னை மாட்டி விட்டுட்டே.. அதான் அப்பாக்கிட்ட நான் பேசிக்கறேன்னு சொன்னேனே.. என்பதுபோல் தன் தோழியைப் பார்த்தாள்..

‘என்ன புவனா.. உன் ஃப்ரெண்ட பாக்கறே.. ரம்யா வர்றப்போ வாசல்ல கான்ஸ்டபிள் இருந்தானா இல்லையா?’

‘இல்லப்பா.’ என்றாள் புவனா தயக்கத்துடன்..

ரம்யா, ‘அங்கிள் நான் சொல்றேன்..’ என்று குறுக்கிட எஸ்.பி சிரித்தவாறு, ‘It is ok.. நீ சொல்லும்மா. எதுக்கு ரெண்டு வாரம் இங்க தங்கப் போறே.. உங்க வீட்ல யாரும் இல்லையா?’ என்றார்.

ரம்யா தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததைக் கோர்வையாய் சரளமாக கூறி முடிக்க புவனா அதிர்ச்சியில் அவளையே பார்ப்பதை எஸ்.பியும் பார்த்துவிட்டார்.

That’s it. இந்த பொண்ணுக்கு அப்பா, அம்மா பார்த்து வச்ச பையனைப் பிடிக்கலை.. வீட்ட விட்டு ஒடி வந்திருக்கு.. சரி.. அதென்ன ரெண்டு வாரம்?

யோசனையுடன் தன் எதிரில் அப்பாவியாய் நின்றவளைப் பார்த்தார். தன் தோழியின் தந்தை ஒரு கண்டிப்பான காவல்துறை அதிகாரி என்று தெரிந்தும் எத்தனை சாமர்த்தியமாக உண்மையை மறைத்து பேசுகிறது இந்த பெண்! இவளுடன் சேர்ந்து தன் மகளும் கெட்டுப் போக மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

தனபால் சாமி திரும்பி தன் மகளைப் பார்த்தார். அவளுடைய முகபாவமே தன் தோழி கூறியதில் அவளுக்கு சம்மதமில்லை என்பது தெளிவாகத் தெரியவே தன் மகள் தான் நினைத்தது போல் இன்னும் கெட்டுப் போகவில்லை என்பதை உணர்ந்து நிம்மதியடைந்தார்..

சரி.. குளித்து முடித்துவிட்டு எழும்பூர் எஸ்.ஐ. என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுவிட்டு மேல்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று நினைத்தவாறு எழுந்து நின்றார்.

‘சரி ரம்யா.. தாராளமா இங்க இருக்கலாம். ஜாலியா இருந்துட்டு போம்மா.. புவனாவுக்கும் பொழுது போகும். என்ன புவனா?’ என்றவாறு தன் மகளைப் பார்த்தார்.

ஏதோ யோசனையில் இருந்த புவனா.. ‘எ.. என்னப்பா சொன்னீங்க?’ என்றாள்.

ரம்யா ஏய் என்ன, நீயே காட்டிக்குடுத்துருவ போல என்பது போல் அவளைப் பார்த்து முறைத்தாள்.

இதை கவனியாததுபோல் கீழ் தளத்தின் கோடியில் இருந்த தன் அறையை நோக்கி நடந்தார் தனபால்.. ‘புவனா.. கொஞ்சம் ஹீட்டர ஆன் பண்ணும்மா.. நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பலாரத்த எடுத்து டேபிள்ல வை.. மூனு பேருமா சேர்ந்தே சாப்பிடலாம்.’

அவர் தலை மறைந்ததும்.. அப்ப்ப்ப்ப்ப்பா.. ஒரு வழியா தப்பிச்சாச்சி என்றாள் ரம்யா..

புவனா எரிச்சலுடன் தன் தோழியைப் பார்த்தாள். ‘ஏய்.. இடியட்.. அப்பா நீயும் நானும் சொன்னதுல ஒன்னையும் நம்பலை.. நீ வேணும்னா பாரு.. டிஃபன் சாப்பிடறப்போ நம்ம வாய்லருந்தே எல்லாத்தையும் கறக்கறாரா இல்லையான்னு.. எப்படியோ, நாம இன்னைக்கி வசமா மாட்டிக்கிட்டோம்.. சரி.. வா.. வந்து கிச்சன்ல எனக்கு ஹெல்ப் பண்ணு..’ என்றவாறு அவள் சமையலறையை நோக்கி நடக்க ரம்யா குழம்பிப்போய் நின்ற இடத்திலேயே நின்றாள்..

தொடரும்..