28.12.06

சூரியன் 159

‘யார்ப்பா ஃபோன்ல, செல்வமா?’ என்றாள் ராசம்மாள்.

நாடார் ஒலிவாங்கியை கையால் மூடிக்கொண்டு தன் மகளைப் பார்த்தார். ஆ,ம் என்று தலையை அசைத்தார். பிறகு, ‘என்னம்மா செல்வி. செல்வம் எல்லாத்தையும் சொல்லிருப்பான்னு நெனைக்கேன். எதப்பத்தியும் கவலப்படாம அவங்கூட கெளம்பி வா.. செல்வம் முன்னெ தங்கியிருந்த வீட்டுலயே கொஞ்ச காலத்துக்கு தங்குங்க.. பெறவு ஒங்க வசதிக்கேத்தாப்பல ஒரு வீட்ட பாத்து வாங்குவோம். என்ன நா சொல்றது?’ என்றார்.

‘.....’

‘சரிடா செல்வம். நா நெனச்சிருந்தத விட வெரசாவே காரியத்த முடிச்சிட்டே.. அவ அம்மாளும் அப்பாவும் ஒங்க கூடவே வராங்களாடா?’

‘.....’

‘அப்ப சரி.. நா நெனச்சாப்பலதான் நடந்திருக்கு. சந்தோஷம்.. நா ஒடனே நம்ம ஆடிட்டர்கிட்ட ஒரு பயல அனுப்ப சொல்றேன். நீயும் கூடவே இருந்து கணக்கு பொஸ்தகங்களையெல்லாம் காமிச்சி ஒரு மதிப்ப போடச் சொல்லு. தற்போதைக்கு இப்போ பாத்துக்கிட்டிருக்கற மேனேஜரையே கடைய பாத்துக்க சொல்வோம்லே.. பெறவு எல்லாருமா ஒக்காந்து பேசி என்ன செய்றதுன்னு முடிவு செய்யலாம்.. என்ன நா சொல்றது?’

‘.....’

‘சரி.. அப்படியே செஞ்சிருவோம்.. நா வச்சிடறேன்.. பொறப்பட்டு வர்றதுக்கு முன்னாடி ஃபோன் போட்டு சொல்லு.. வீட்ட ரெடி பண்ணனுமில்லே?’

இணைப்பைத் துண்டித்துவிட்டு புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தார் நாடார்.

‘என்னப்பா.. செல்வி சம்மதிச்சிட்டாளாமா?’

நாடார் சிரித்தார். ‘பின்னே.. பய யாரு? நம்ம ட்ரெய்னிங் ஆச்சே? என்னத்தையோ சொல்லி சம்மதிக்க வச்சிட்டான். செல்வியோட ஆத்தாதான் ஆரம்பத்துல மக்கார் செஞ்சிருக்கா.. ஆனா செல்வம் வாச்சாலக்கா பேசி மசிய வச்சிருக்கான். அந்த பொண்ணு புத்திசாலிம்மா.. என்ன எடக்கு மடக்கா பேசுவா.. மத்தபடி வெகுளி. எப்படியிருந்தவள எப்படி ஆக்கிருக்கேன்? இன்னைக்கி அவ பேருலயே ஒரு இருபது இருபத்தஞ்சி லெட்ச சொத்தையில்ல சேத்து குடுத்துருக்கேன்? எப்படியோ சட்டுபுட்டுன்னு அந்த கடைக்கி ஒரு மதிப்ப போட்டு முடிச்சிரணும்.. வேற எவனாவது இடையில புகுந்து குட்டைய கொளப்பிரக் கூடாதுல்லே?’

ராசம்மாளும் சிரித்தாள். ‘அதான பாத்தேன்.. ஒங்க கவல ஒங்களுக்கு..’

‘பின்னே இருக்காதாம்மா.. ஒம் புருசன் இருக்கானே? எமகாதகன்! செல்வியோட ஆத்தா குணம் அவனுக்கும் தெரியுமே.. கூட காசு தரேன், கடைய ஒங்க சம்மந்திக்கு குடுத்துராதீங்கன்னு சொன்னா சரின்னு இளிச்சிக்கிட்டு நிப்பாளே..’

‘அதெப்படிப்பா.. அவர்கிட்ட அவ்வளவு காசு இருக்கும்னு சொல்றீங்க?’

நாடார் சிரித்தார். ‘அட நீ வேறம்மா.. நம்ம ஆடிட்டர கேளு தெரியும்.. எவ்வளவு கொள்ளையடிச்சிருக்கான்னு.. எல்லாம் நம்ம பணம்தான்.. அவங்கப்பன் அன்னைக்கி எங்கிட்டருந்து கொள்ளையடிச்சான்.. இப்ப மகன்.. அதனாலதான் இந்த சம்பந்தம் வேணாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன்.. ஆத்தாளும் பொண்ணுந்தான் ஊர்ல இல்லாத வெள்ளத்தோல பாத்துட்டாப்பல குதிச்சீங்களே.. இப்ப என்னடான்னா நம்ம பணத்த வச்சி நம்மளையே வெல பேச நிக்கான்.. குடும்பச் சங்கதி ஊரெல்லாம் தெரிய வேணாமேன்னு பாக்கேன்.. இல்லன்னா ரெண்டு பயலையும் கோர்ட் வாசல்ல ஏத்திருவேன்.. அட அது கெடக்குது களுத.. நீ சொல்லு.. செல்வம் வர்றதுக்கு இன்னும் பத்து நாளாவது ஆகும்.. நீ ஆஃபீசுக்கு வர்றியா, இல்ல செல்வம் வந்துரட்டுமா?’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘நா ஆஃபீசுக்கு வர்றதுக்கும் செல்வத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? ஏன் அவன் இல்லாம என்னால ஒன்னும் செய்ய முடியாதுங்கறீங்களா?’

நாடார் உரக்கச் சிரித்தார். ‘அட இங்க பார்றா? நா அப்படி சொல்வேனா? ஆஃபீஸ் விஷயமெல்லாம் ஒனக்கு தெரியுமோ தெரியாதோன்னு அப்படி கேட்டேன்..’

‘எனக்கு வக்கீல் அங்கிள பாக்கணும்.. இந்த பேர் மாத்தறதுக்கு தேவையானதையெல்லாம் இன்னைக்கி முடிச்சிரணும்.. நானும் ஒங்களோடயே வரேன். ஒங்கள டிநகர் ஆஃபீஸ்ல விட்டுட்டு நா அங்கிள பாக்கப் போறேன். அங்கிள், ‘நா கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னால வந்துரும்மா.. இன்னைக்கே ஃபைல் செஞ்சிரலாம்னு சொன்னார்.’

நாடார் கேலியுடன் தன் மகளைப் பார்த்தார். ‘இப்ப பேர மாத்தி என்னம்மா செய்யப் போறே? அதுக்கு இப்ப என்ன அவசியம்னு கேக்கேன்?’

‘இருக்குப்பா.. எனக்கு இருக்கு.. ராசம்மாள்ங்கற பேர வச்சியே என்னெ பட்டிக்காடு ஒனக்கு ஒன்னுந் தெரியாதுன்னு மட்டந்தட்டுனவராச்சே அவர்? அவருக்கு நா யாருன்னு காட்டணும்பா.. அதுக்கு முதல் ஸ்டெப்தான் இந்த பேர் மாத்தம்.. என்னெ தடுக்காதீங்க.’

மகளின் குரலிலிருந்த உறுதி நாடாரையே ஒரு கணம் சிந்திக்க வைத்தது. ‘சரிம்மா.’ என்று இறங்கிவந்தார். ‘எதுக்கும் சாக்கிரதையா இருந்துக்க.. அந்த பயலும் சரி அவன் அப்பனும் சரி.. களவாணிப் பயலுக.. எதையும் செய்ய துணிஞ்சவனுங்க.. சொல்லிட்டேன்.. சரி, துணிய மாத்திக்கிட்டு ரெடியாவு.. தோ வந்துடறேன்.’

நாடார் படியேறி தன் அறைக்குச் செல்ல ராசம்மாள் தன் தாயை தேடிக்கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.

*****


சுந்தரலிங்கம் அறையை விட்டு வெளியேறும் வரைக் காத்திருந்த சேதுமாதவன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என சிந்திக்கலானார்.

இன்னும் அரை மணி நேரத்தில் சோமசுந்தரம் கேட்டிருந்த அந்த கடிதம் கிடைக்காவிட்டால் அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நினைத்தார்.

அவர் போர்ட்ல இருக்கறவரைக்கும் தனக்கு இருந்துவந்த பாதுகாப்பு இனி இருக்காது என்பதும் அவருக்கு தெரியும். மாதவனுக்கும் தனக்கும் இடையில் இருந்த பழைய பகையை நினைவில் வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் அவரை மேலும் கலங்கடித்தது. ஆகவே எத்தனை விரைவில் சோமசுந்தரத்தின் பிரதிநிதி ஒருவர் போர்டில் நுழைகிறாரோ தனக்கு அத்தனை நல்லது என்று நினைத்தார்.

சோமசுந்தரத்தின் வழக்கறிஞரையும், ஆடிட்டரையும் அவருக்கும் நல்ல பரிச்சயம் இருந்தது. மூவரும் சேர்ந்து குடிகார க்ளப்பில் அங்கத்தினர்களாயிற்றே.. எத்தனை ஊற்றி கொடுத்திருப்பார்? அந்த விசுவாசம் இல்லாமலா போய்விடும் என்ற நினைப்பு அவருக்கு.

அத்துடன் சோமசுந்தரத்தைப் பற்றிய அந்த செய்தியை ஃபேக்ஸ் மூலம் மாதவனுடைய பிரத்தியேக ஃபேக்ஸ் எண்ணுக்கு அனுப்பியவர் யாராயிருக்கும் என்றும் அவருடைய சிந்தனை ஓடியது.

நேரே மாதவனிடத்தில் சென்று கேட்டுறலாம்னு பாத்தா அந்த ஃபிலிப் வேற நந்தி மாதிரி காலையிலருந்து மாதவன் ரூம்ல ஒக்காந்துருக்கான். சுந்தரலிங்கத்த பாக்கலாம்னு போன எடத்துலயும் அவந்தான் இருந்துக்கிட்டு தடுத்தான். இங்க போனா இங்கயும் இருக்கான்.. என்னதான் நடக்குது?

ஒருவேள நாம அந்த லெட்டர் விஷயமா சுபோத்த கொடஞ்சது ஃபிலிப்புக்கு தெரிஞ்சி அத மாதவன் கிட்ட போட்டு குடுக்கானோ? ஒருவேளை இந்த ஃபேக்சுக்கு பின்னாலயும் இவந்தான் இருக்கானோ? இருக்கும், இருக்கும்.. நாடாரோட ஆள்தானே இவன். பேசாம இவந்தான் சார் இதுக்கு பின்னாலன்னு சோமசுந்தரத்துக்கிட்ட ஒரு போடு போட்டா என்ன?

அடுத்த சில நொடிகளில் சோமசுந்தரத்திடம் இதை சொல்வதன் மூலம் அவர் விரும்பியதை தன்னால் செய்ய இயலாமற் போனதற்கும் ஃபிலிப் சுந்தரம்தான் காரணம் என்று தான் தப்பித்துக்கொள்ள வழியிருக்கிறதே என்ற முடிவுக்கு வந்தார்.

நினைத்ததை செயல்படுத்த தன்னுடைய செல் ஃபோனை எடுத்து சோமசுந்தரம் எண்ணை டயல் செய்தார்.

****

சோமசுந்தரம் தான் வாசித்துக்கொண்டிருந்த பத்திரிகையை மேசையின் மீது வீசியெறிந்தார். ‘இடியட்ஸ்..’ என்று உதடுகள் முனுமுனுக்க அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

‘டாட்.. கூல் டவுன்.. இப்படி கோபப்படுறதுனால ஒங்க பி.பிதான் ஏறும்.. ஏற்கனவே டயஸ்டாலிக் லெவல் ஜாஸ்தியாருக்கு..’ என்ற தன் மகள் பூரணியை ஒருமுறை கோபத்துடன் பார்த்தார்.

‘இங்க பார் பூரணி.. நானும் டாக்டர்தாங்கறத மறந்துராத. அதப்பத்தியெல்லாம் கவலைப்படற நேரம் இல்ல அது. காலையிலருந்து ஃபோன் மேல ஃபோன்.. பிச்சாத்து மூனு கோடி ரூபா.. அதுல ரெண்டு கோடிய பொரட்டியாச்சு.. இன்னும் ஒரேயொரு கோடி.. எல்லாம் அந்த கெளவனால.. அப்பவே நம்ம வேணுக்கிட்ட சொல்லியிருந்தேன்.. கவர்ன்மெண்ட்ல வேல செய்யறவனையெல்லாம் ஃபபனான்ஸ் கம்பெனி போர்டுக்குள்ள விடாதீங்கய்யான்னு.. கேக்கல? இப்ப என்னாச்சி.. எவ்வளவு வருசமா ஒளச்சி சம்பாதிச்ச பேர்மா இது.. ஒரே நாள்ல.. இது நம்ம ஆஸ்பத்திரியோட பேரையுமில்லம்மா கெடுத்துருச்சி.. ஒரே ஸ்ட்ரோக்ல ரெண்டு அடி.. மிச்சமிருக்கற இந்த ஆறுமாசத்துல பேங்க்லருந்து எவ்வளவு கறக்கமுடியுமோ அவ்வளவையும் கறந்துரலாம்னு பாத்தேனே? அதுகூட பரவால்லை பூரணி.. போயும், போயும் அந்த நாடார் முன்னால தலை குனியறா மாதிரி ஆயிருச்சே.. அந்த ஃபேக்ஸ் மட்டும் அப்ப வராம இருந்திருந்தா அந்த நியூசையே வெளிய விடாம அமுக்கியிருக்கலாமே.. ராஸ்க்கல்.. அவன் மட்டும் யாருன்னு தெரிஞ்சுது? அவனெ உண்டு இல்லேன்னு ஆக்கிருவேன்..’ கோபத்தின் உச்சியில் அவருடைய குரல் நடுங்குவதைக் கண்ட பூரணி எழுந்து அவரை நெருங்கி அவருடைய கரங்களைப் பற்றினாள்.

‘Leave it Dad.. Leave it to me.. Let me handle it.. நீங்க இன்னைக்கி ஹாஸ்ப்பிடலுக்கு வரவேணாம்.. Take some rest.. இந்த நியூஸ் வெளியானதொன்னும் நீங்க நினைக்கறாமாதிரி அத்தன பெரிய விஷயமில்லை.. எத்தன பேர் படிச்சிருக்கப் போறாங்கன்னு நினைக்கீங்க? ஃப்ரண்ட் பேஜ்ல வந்திருந்தாலும் பரவாயில்லை.. வந்திருக்கறது பிசினஸ் பேஜ்ல.. பிசினஸ் பண்றவங்களுக்கு இது ஒன்னும் பெரிசில்ல டாட்.. It will die down. Don’t worry...’

சோமசுந்தரம் இல்லையென்று தலையை அசைத்தார். ‘இல்லம்மா.. இது யாரோ வேணும்னே செஞ்சிருக்காங்க. எங்க இது பேப்பர்ல வராம போயிருமோன்னு நினைச்சி யாரோ இத ஃபேக்ஸ் மூலமா எங்க போர்ட் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கற நேரத்துல எங்க சேர்மன் ஆஃபீசுக்கு அனுப்பியிருக்காங்க.. சேர்மனோட பெர்சனல் ஃபேக்ஸ் நம்பர் தெரிஞ்சிருக்கணும்னா அது நம்ம பேங்குக்குள்ளவே இருக்கற ஆளாத்தான் இருக்கணும்.. இதத்தான் என்னால தாங்கிக்க முடியல.. யார்.. அது யாராயிருக்கும்? அத கண்டுபிடிக்கணும்..’

பூரணிக்கு அவருடைய குரலிலிருந்த உச்சக்கட்ட கோபம் அச்சத்தையளித்தது. இனியும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் அவருடைய கோபம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவள் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே ஓசைப்படாமல் வெளியேறினாள்.

இதையறியாத சோமசுந்தரம் தன்னுடைய செல் ஃபோன் ஒலிப்பதை செவியுற்ற சோமசுந்தரம் பூரணி எடுப்பாள் எனக் காத்திருந்தார் . அது தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கவே தான் நின்றிருந்த இடத்திலிருந்து திரும்பி அவள் அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தார். காலியாயிருந்தது.

விரைந்துச் சென்று எடுத்தார். சேதுமாதவன்! ‘என்ன விஷயம்? அந்த லெட்டர் கெடைச்சிதா?’ என்றார். அடுத்த சில நிமிடங்கள் எதிர்முனையிலிருந்து வந்த பதிலை நம்ப முடியாமல் எரிந்து விழுந்தார். ‘என்ன சொல்றீங்க? யார், அந்த ஃபிலிப் சுந்தரமா? I can’t believe this!’

தொடரும்..

27.12.06

சூரியன் 158

மைதிலி புறப்பட்டு ரெடியாகியும் காலையிலிருந்து இருந்த இருக்கையிலேயே பிடிவாதமாக அமர்ந்துக்கொண்டு படித்த பத்திரிகையையே படிப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தாள்.

அவருடைய பார்வை பத்திரிகையில் இருந்தாலும் அவருடைய எண்ணம் முழுவதும் தன் மீதே இருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.

அவரை இப்படியே விட்டால் சரிவராது என்ற தீர்மானத்துடன், ‘ஏம்ப்பா இன்னும் எத்தன நாழிதான் அந்த பேப்பரையே பார்த்துண்டிருப்பே. இப்ப நீ எழுந்து எங்கூட டாக்டர பாக்க வரப்போறியா இல்லையா?’ என்றாள் எரிச்சலுடன்.

பட்டாபி அப்போதும் அவளை சட்டை செய்யாமல் அமர்ந்திருக்க சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்து அவரைப் பார்த்தாள் ஜானகி. ‘இருந்தாலும் ஒங்களுக்கு இத்தன வீம்பு ஆகாதுன்னா. அவ யாரு? ஒங்க பொண்ணுதான? ஒங்களுக்கு இருக்கற அதே அளவு வீம்புதான அவளுக்கும் இருக்கும்?’

பட்டாபி அப்போதும் மசியவில்லை.

‘சரிம்மா.. நா மாத்தரம் போய்ட்டு வரேன். அவர் எப்போ சொல்றாரோ அன்னைக்கி எனக்கும் டிக்கட் புக் பண்ணிடறேன். நா மாத்தரம் அவனோட சென்னைக்கி போயி நாம தங்கறதுக்கு நல்ல வீடா பாத்து அரேஞ் பண்ணிட்டு வந்து ஒங்க ரெண்டு பேரையும் அழைச்சிண்டு போறேன்.’ என்றவாறு மைதிலி வாசலை நோக்கி நடந்தாள் தன்னுடைய தந்தை எப்படியும் தன்னை தடுத்து நிறுத்துவார் என்ற நினைப்பில்.

அவள் நினைத்ததுபோலவே நடந்தது.

‘ஏய்.. என்ன நீ அவ பாட்டுக்கு எதையோ சொல்லிட்டு போறா.. நீயும் பாத்துண்டு நிக்கறே? அவள நிறுத்துடி’

ஜானகி எனக்கென்ன வந்தது என்பதுபோல தோளைக் குலுக்கிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்துக்கொண்டாள். எப்படியும் பட்டாபி எழுந்து மைதிலியை தடுத்து நிறுத்துவார் என்பது அவளுக்கு தெரியும்.

அவள் நினைத்ததுபோலவே நடந்தது.

‘ஏய் மைதிலி வாசல கடக்காதே, சொல்லிட்டேன்.’ என்றவாறு எழுந்தார் பட்டாபி.

மைதிலி நின்றாள். ஆனால் தன் தந்தையை நோக்கி திரும்பாமல் பேசினாள். ‘ஏன்? என்ன செஞ்சிருவேள்? அதயும்தான் சொல்லுங்களேன்?’

பட்டாபி பொங்கிவந்த கோபத்தை அடக்க முடியாமல் தடுமாறுவதை அவளால் உணர முடிந்தது. அவளையுமறியாமல் அவளுடைய உதடுகள் புன்னகையில் வளைந்தன. அப்பா இப்படித்தான். பாசத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு வெளியில் வேஷம் போடுவார். இவரைப்பற்றி தெரியாதாக்கும்?

பட்டாபி கோபத்துடன் சமையலறையைப் பார்த்தார். ‘ஏய் ஜானகி.. சொல்லி வை ஒம் பொண்ணுக்கிட்ட.. இந்த பட்டாபி மானஸ்தன்.. என் பேச்செ கேட்காம வாசப்படி தாண்டினா திருப்பி வரப்படாது.. நீயே சொல்லு ஒம் பொண்ணுக்கிட்ட.’

சமையல்கட்டிலிருந்து குரல் மட்டும் வந்தது. ‘ஏன் அதையும் நீங்களே சொல்லிருங்களேன். எனக்கேன் பொல்லாப்பு?’

மைதிலிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் இப்படி ஷேடோ பாக்ஸிங் செய்வது புதிதல்லவே. இறுதியில் தன் வழிக்கு இவர்கள் வரத்தானே வேண்டும் என்ற நினைப்பில் நின்ற இடத்திலேயே நின்றாள்.

பட்டாபி தன் கையிலிருந்த பத்திரிகையை தன் இருக்கையில் வீசியெறிந்துவிட்டு மைதிலியின் முதுகைப் பார்த்தார். ‘நா இப்ப என்ன செய்யணும்? நீ சொன்னதும் எனக்கு இங்க இருக்கற எல்லாத்தையும் விட்டுட்டு ஒன் பின்னால ஓடி வரணும்? அதான? அது மட்டும் நடக்காது, சொல்லிட்டேன்.. ஒனக்கு அவந்தான வேணும்? நீ போ.. எங்கள கூப்பிடாத? சொல்லிட்டேன்.’

மைதிலி புன்னகையுடன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். பேசாமல் இருந்தவர் பேசிவிட்டாரே.. இனி கவிழ்த்துவிடலாம் என்று நினைத்தாள். ‘என்னப்பா இப்படி பேசறே? நா என்னைக்கி நீ சொல்றத கேக்காம இருந்திருக்கேன். மெடிசின் படிக்கணும் ஆசைப்பட்டேன்.. எங்கிட்ட காசில்லன்னுட்டே.. யாருக்கும் பிடிக்காத எக்கனாமிக்ச படிச்சேன்.. படிச்சி முடிச்சி ரெண்டு வருசம் ஒப்புக்குப்பெறாத வேலையெல்லாம் செஞ்சேன்.. விடப்போறேன், விடப்போறேன்னு ஒங்கிட்ட சொன்னேன்.. கேக்கலை.. பொம்மனாட்டிக்கு எந்த வேலையான்னா என்னன்னே.. அதுக்காகவே முதல் தடவையா ஒன்னெ எதிர்த்துக்கிட்டு இருந்த வேலைய விட்டுட்டு எம்.எஸ்.டபிள்யூ செஞ்சேன்.. எனக்கு மனசுக்கு பிடிச்ச சோஷியல் சர்வீஸ் வேல கெடச்சது.. அதுலதான் சீனிய மீட் பண்ணேன். என் கொணத்துக்கு சாலஞ்சா இருந்தான்.. ஃப்ரெண்ட்ஷிப்புன்னு நினைச்சித்தாம்ப்பா பழகிட்டிருந்தேன்.. ஆனா இப்ப பாக்க வர்ற மாப்பிள்ளைக்கிட்ட என்னெ பத்தி விளக்கமா சொல்ற அளவுக்கு வந்திருச்சின்னு நீயும் நினைக்கறே, அம்மாவும் நினைக்கறா. இந்த அளவுக்கு நீங்களே தப்பா நினைக்கறப்போ நா சீனிய தவிர வேற யார கல்யாணம் பண்ணாலும் நிம்மதியா இருக்க முடியாதுப்பா.. அத புரிஞ்சிக்கோ..’ பேச்சின் இடையில் உணர்ச்சி மிகுதியால் குரல் நடுங்கியபோதும் அழுவதில்லை என்ற தீர்மானத்துடன் பேசி முடித்தாள் மைதிலி.

பட்டாபி எப்படி மறுத்துப் பேசுவதென தெரியாமல் சமையல்கட்டின் வாசலில் நின்றவாறு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்தார். ‘என்னடி நீயும் பாத்துக்கிட்டு பேசாம நிக்கறே? இவ புரிஞ்சிதான் பேசறாளா.. இவ கொழந்தை ஒன்னுமில்லையேடி, வயசு இருபத்தியேழாறதே? இவள விட ரெண்டு வயசு சின்னவனெ கட்டிக்கிட்டு.. என்னடி இது? நடக்கற கதையா இது?’

‘ஏன்னா முடியாதுங்கறேள்? அவ தான் பிடிவாதமா நிக்கறாளே? நல்லதும் கெட்டதும் அறியாத வயாசான்னா இது? நாம சரின்னு சம்மதிச்சா நமக்குத்தான்னா நல்லது. இருக்கறது ஒன்னேயொன்னு.. அதும்பாட்டுக்கு சென்னைக்கி போறேன்னு போய்ட்டா ஒங்க மூஞ்ச நானும் எம் மூஞ்ச நீங்களும் பாத்துண்டு ஒக்காந்திருக்கவா? ஆத்திரப்படாம யோசிங்கோ.. பேசாம சட்டைய மாட்டிண்டு அவ கூட போங்கோ..’

இனிமேலும் நின்று வார்த்தையை வளர்த்தால் வம்பு என்று நினைத்தாளோ என்னவோ சமையலறைக்குள் மீண்டும் ஜானகி புகுந்துக்கொள்ள என்ன செய்வதென தெரியாமல் திரும்பி தன் மகளைப் பார்த்தார் பட்டாபி.

கலங்கிய கண்களுடன் தன்னைப் பார்த்த தன் தந்தையை நெருங்கி பாசத்துடன் அவருடைய கரங்களைப் பற்றினாள் மைதிலி. ‘ஒன்னோட வலி எனக்குப் புரியறாப்பல என்னோட வலியையும் புரிஞ்சிக்கோப்பா.. எனக்கும் சீனிக்கும் நடுவுலருக்கற சுத்தமான அன்பை ஒன்னையும் அம்மாவையும் தவிர வேற யாராலப்பா புரிஞ்சிக்க முடியும்?’

பட்டாபி  செய்வதறியாது தன் மகளையே பார்த்தார். ‘நா என்ன செய்யணுங்கறே?’ என்றார் நடுங்கும் குரலில்.

மைதிலி தன் தந்தையின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். ‘என்னெ நம்புப்பா.. நல்லா யோசிச்சித்தான் இந்த டிசிஷன் எடுத்துருக்கேன்.. Just believe me and let me do what I want to do.. ப்ளீஸ்ப்பா..’

பட்டாபி சற்று நேரம் தன் மகளுடைய கண்களையே பார்த்தவாறு நின்றிருந்தார். இறுதியில் சரி என்பதுபோல் மெதுவாக தலையை அசைத்தார், ‘சரி.. நீ போய் ராஜகோபாலன கேட்டுட்டு வா.. அப்பா வரலை..’

தன் கரங்களைப் பற்றியிருந்த தன் மகளின் கரத்தை விலக்கிவிட்டு தன் அறையை நோக்கி அவர் நடக்க அவரையே பார்த்தவாறு நின்றிருந்தாள் மைதிலி.

*****

ஜோ வழக்கறிஞர் சபரியுடன் காவல்நிலையத்தினுள் நுழைந்ததும்  மாணிக்கவேல் தலையைக் குனிந்தவாறு சுவர் ஓரத்தில் கிடந்த ஒரு மரபெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவரை நோக்கி விரைந்தான்.

‘சார்.. என்னாச்சி.. ஏன் இப்படி ஒக்காந்திருக்கீங்க?’

அவனுடைய குரலைக் கேட்டு நிமிர்ந்த மாணிக்கவேல் ஜோவையும் அவனுடன் நின்றிருந்த வழக்கறிஞரையும் மாறி, மாறி பார்த்தார். ‘I am now beyond redemption Joe..’ என்றார்.

அவருடைய பேச்சின் உள்ளர்த்தம் புரியாமல் ஜோ திரும்பி சபரியைப் பார்க்க அவரும் குழப்பத்துடன் மாணிக்கவேலைப் பார்த்தார்.

‘யார் சார் நீங்க? நீங்க பாட்டுக்கு வந்தீங்க. இங்க நிக்கற யார்கிட்டயும் பெர்மிஷன் கேக்காம நேரா போய் ஒரு அக்யூஸ்ட் கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க?’ என்ற முரட்டுக் குரலைக் கேட்டு திரும்பிய சபரி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘ஒங்க இன்ஸ்பெக்டர பாக்கணும்..’ என்றார்.

‘அய்யா வெளிய போயிருக்காங்க.. அவர் வர்றவரைக்கும் நீங்க அந்த சேர்ல ஒக்காருங்க. அய்யா வந்து சரிங்கற வரைக்கும் இவர் கிட்ட நீங்க எதுவும் பேச முடியாது, சொல்லிட்டேன்.. போங்க போய் ஒக்காருங்க.’  

ஜோ கோபத்துடன் பதில் பேச முனைய சபரி அவனுடைய கரத்தைப் பற்றி அமைதியாக இருங்கள் என சைகைக் காட்டினார். பிறகு மாணிக்கவேலைப் பார்த்து, ‘நீங்க ஏதாச்சும் ஸ்டேட்மெண்ட் குடுத்தீங்களா?’ என்றார்.

அவர் இல்லையென தலையை அசைத்தார். ‘என்னை இங்க கொண்டு வந்த அடுத்த நிமிஷமே அவருக்கு ஒரு ஃபோன் வந்தது சார். பேசி முடிச்சிட்டு எங்கிட்ட வந்து ஒங்க ஒய்ஃப் ஜீப்லருந்து குதிச்சி தப்பியோட முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா எதிர்ல வந்த ஒரு பஸ்சுல அடிபட்டுட்டாங்களாம்.. ஆஸ்பத்திரிக்கி கொண்டு போயிருக்காங்களாம். நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போய்ட்டார். போய் ஒரு மணி நேரமாவுது..’

சபரியும் ஜோவும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க அவர்களருகில் நின்றிருந்த காவலர் அவர்களை, ‘ஏன் சார் ஒருதரம் சொன்னா கேக்க மாட்டீங்களா? போய் ஒக்காருங்க சார்.’ என்று விரட்டினார்.

‘வாங்க மிஸ்டர் ஜோ. விஷயம் சிக்கலாகும் போலருக்கு. நான் சார்கிட்ட ஃபோன் செஞ்சி பேசிட்டு வரேன். நீங்க வந்து ஒக்காருங்க.’ என்றவாறு சபரி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார்.

ஜோ என்ன செய்வதென விளங்காமல் குழப்பத்துடன் காவலர் காட்டிய மர இருக்கையை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்

22.12.06

சூரியன் 157

ஃபிலிப் சுந்தரம் மாதவனின் அறைக்குள் நுழைந்தபோது அவர் அன்றைய தபாலில் வந்த கடிதங்களில் மூழ்கியிருந்ததைக் கவனித்தார்.

முந்தைய முதல்வர் மூர்த்தி பதவியிலிருந்த காலத்தில் அவரால் இதற்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோப்புகள் இவை என்பது அவருக்கு தெரியும்.

அரசு இலாக்காக்களில் காணப்படுவது போலவே அவசரமானவை (Urgent), ரகசியமானவை (Confidential), முதல்வரின் பிரத்தியேக பார்வைக்கு (For the personal attention of the Chairman) என்ற அடிப்படையில் கடிதங்கள் தரம் பிரிக்கப்பட்டு தனித்தனி கோப்புகளில் வங்கி முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்ற வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

‘வாங்க மிஸ்டர் ஃபிலிப். There are certain letters which I thought I should discuss with you.. That’s why I called you..’ என்று துவங்கிய மாதவன் தன்னுடைய பார்வைக்கு என்று பிரிக்கப்பட்டிருந்த கடிதங்களிலிருந்து இரண்டு கடிதங்களை அவர் முன் நீட்டினார்.

ஃபிலிப் சுந்தரம் அவற்றைப் பெற்று வாசிக்க துவங்கினார்.

முதல் கடிதம் வங்கியின் முதன்மை தொழிற்சங்கத் தலைவரிடமிருந்து வந்திருந்தது. மாதவனை சந்திக்க அனுமதி கோரி. முந்தைய முதல்வரின் பதவிக் காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப் படாமல் இருக்கும் சலுகைகளைப் பற்றி விவாதிக்க விரும்புவதாகவும் இரண்டு நாட்களுக்குள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஃபிலிப் சுந்தரம் சற்று முன்னர் ஃபேக்ஸ் மூலம் வந்திருந்த இரண்டாவது கடிதத்தைப் பார்த்தார்.

சென்னை பத்திரிகை நிரூபர்களின் கழகத்திலிருந்து வந்திருந்தது. அன்று காலை பத்திரிகைகளில் வந்திருந்த இயக்குனர் சோமசுந்தரத்தின் பதவி விலகலைப் பற்றி வங்கி முதல்வரின் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

ஃபிலிப் சுந்தரம் வாசித்து முடித்து நிமிர்ந்து மாதவனைப் பார்த்தார்.

‘What should I do?’ என்றார் மாதவன்.

‘நம்ம யூனியன் லீடர்ஸ் சாதாரணமா நம்ம ஈ.டியத்தான் மீட் பண்ணுவாங்க. ஏன்னா அவர்தான் நம்ம எச்.ஆர் கமிட்டியோட சேர்மன். நானும் சுந்தரலிங்கம் சாரும் கமிட்டி மெம்பர்சா இருக்கோம். வந்தனா கமிட்டியோட கன்வீனர். நாங்க நாலு பேரும் கூட்டா தீர்த்து வைக்க முடியாத விஷயங்கள மேனேஜ்மெண்ட் மட்டும் கமிட்டிக்கு ஃபார்வேர்ட் பண்ணுவோம். அவங்க சில விஷயங்கள சேர்மனே டிசைட் பண்ணட்டும்னு ஒங்கக்கிட்ட அனுப்பிருவாங்க. அந்த டைம்லதான் சேர்மன் யூனியன் லீடர்ச சேர்மன் மீட் பண்றது வழக்கம். இது நம்ம பேங்க்லருக்கற மூனு யூனியன் லீடர்சுக்கும் நல்லாவே தெரியும்.. அப்படி இருக்கறப்ப இப்ப மட்டும் ஏன் இந்த மாதிரி லெட்டர் வந்திருக்குன்னு யோசனையா இருக்கு. There must be some compelling reasons for this request.. If you permit me I can talk to them and find out.’

மாதவன் வியப்புடன் அவரைப் பார்த்தார். ‘எதுக்கு என் பெர்மிஷன்..? As a CGM of Operations I think you have the right to talk to the union leaders.. H.R. issues come directly under your domain only, no?’

ஃபிலிப் சுந்தரம் சங்கடத்துடன் இல்லையென்று தலையை அசைத்தார். ‘It is not that way Sir, எச்.ஆர் டிவிஷன் என் கண்ட்ரோல்லதான் வருதுன்னாலும் நம்ம organisation chart பிரகாரம் ஆப்பரேஷன்ஸ் டிப்பார்ட்மெண்ட் முழுசும் நம்ம ஈ.டிக்கு கீழதான் ஃபங்ஷன் பண்ணுது. சாதாரணமா யூனியன் மேட்டர்ஸ்ல அவர கேக்காம நாங்களா எதுவும் செய்ய முடியாது. அதான் யோசிக்கேன்.’

‘I see..’ என்ற மாதவன் யோசனையுடன் ஃபிலிப்பை பார்த்தார். ‘It appears that the Bank continues to function in the old format.. சரி.. I will try to change that.. நீங்க இந்த யூனியன் லீடர் கிட்ட பேசி என்ன விஷயம், எதுக்காக சம்பிரதாயப்படி இல்லாம நேரடியா என்னெ பாக்கணும்னு லெட்டர் குடுத்துருக்காங்கன்னு கேளுங்க.. Then I will decide what to do..’

மாதவனின் உரலிலிருந்த உறுதி ஃபிலிப் சுந்தரத்தை மறுத்து பேச முடியாமல் ஒத்துக்கொள்ள வைத்தது.

‘What about the request from the Chennai Press Club? How do we respond to that?’

‘எழுத்து மூலம் நம்ம பதில சொல்றத விட நாமளே ஒரு Press Meetக்கு ஏற்பாடு செஞ்சிரலாம்னு நினைக்கேன் சார். நீங்க சார்ஜ் எடுத்ததும் இந்த மாதிரி ஒரு மீட் தேவைதானே. அதுலயே இதுக்கு நம்ம பேங்கோட ரெஸ்பான்சையும் சொல்லிரலாமே?’

மாதவன் சரி என்பது தலையை அசைக்க, ‘I will make the arrangements Sir.’ என்றவாறு எழுந்து நின்றார் ஃபிலிப். அவருக்கு நாடாரின் தொலைப்பேசி வருமே அதை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனை. அத்துடன் மாணிக்கவேல் என்ன ஆனார் என்பதையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அவர் கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வராமலிருக்க இப்போதே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு.

‘One more thing Mr.Philip.. Please sit down.’ என்றார் மாதவன்.

ஃபிலிப் சுந்தரம் மீண்டும் அமர்ந்து அவரையே பார்த்தார்.

‘நேத்து அந்த ஃபேக்ஸ் விஷயமா விசாரிக்கச் சொல்லியிருந்தேனே?’

இந்த கேள்வி மாதவனிடமிருந்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்தாலும் சட்டென்று என்ன பதில் சொல்வதென தெரியாமல் தடுமாறினார் ஃபிலிப்.

‘விசாரிச்சீங்களா?’

‘விசாரிச்சேன் சார்.’

‘Then, why are you reluctant to share with me?’

ஃபிலிப் சங்கடத்துடன் நெளிந்தார். சற்று முன் வாசித்த முரளியின் கடிதத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று யோசித்தார். அதனால்தான் நடைமுறைக்கு புறம்பாக சேர்மனை நேரில் சந்திக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருப்பாரோ?

‘Yes?’ என்ற கேள்வியுடன் தன்னையே பார்த்த மாதவனின்  நம்பகமில்லாத பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் ஃபிலிப்.

‘It’s only this Murali Sir.. the Union leader who has sought your appointment. அவருக்கும் சோமசுந்தரத்திற்கும் இருந்த பகை அவரை இப்படி செய்ய தூண்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.’

மாதவன் விளங்காமல் பார்த்தார். ‘அப்படியென்ன பகை அவங்க ரெண்டு பேருக்கும் இடையில?’

ஃபிலிப்பின் சங்கடம் மேலும் கூடியது. ‘டாக்டர் சோமசுந்தரம் எப்பவுமே யூனியன் லீடர்ச மதிச்சதில்ல சார். ரொம்பவும் ரூடா பேசுவார். அதான் காரணம்.’

‘I see.. nothing strange in that.. It’s OK. I now understand the motive that prompted him to fax that news item.. சரி அத விடுங்க.. We will deal with that later as it has already come in the papers. எனக்கு ஒங்கக்கிட்ட வேறொரு விஷயம் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு.’ என்ற மாதவன் தொடர்ந்து, ‘நேத்து ஈவ்னிங் ஒரு போலீஸ் டி.எஸ்.பி. என்னெ வந்து சந்திச்சார்ங்கறது ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றார்.

‘Yes Sir.. Subodh told me after you left yesterday.’

‘ஏன், எதுக்குன்னு நீங்க கேக்கவே இல்லையே?’

ஃபிலிப் புன்னகையுடன், ‘தேவைப்பட்டா நீங்களே சொல்வீங்கன்னு எனக்கு தெரியும் சார்.’ என்றார்.

மாதவன், ‘Yes.. You should know..’ என்றவாறு தொடர்ந்து முந்தைய தினம் தனபால் அவரிடம் கூறியதை சுருக்கமாக கூறினார். இறுதியில், ‘I would like to know whether his allegations against Mr.Sethu are true or not..’ என்றார் கண்டிப்பான குரலில்.

ஃபிலிப் சங்கடத்துடன் நெளிந்தார். ‘I don’t think.. It would not be fair on my part to offer my comments on this allegations Sir.. Sorry..’

மாதவனிம் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்துபோக ஃபிலிப் சுந்தரத்தின் சங்கடம் மேலும் அதிகரித்தது. சேதுமாதவனின் நடவடிக்கைகளைப் பற்றி அவரும் அறிந்துதான் இருந்தார். செயலிழந்த கடன்களை (non performing assets) வசூலிக்க அதிரடி நடவடிக்கைகளில் அவர் இறங்குவதை வங்கியிலிருந்த அனைத்து மேலதிகாரிகளும் அறிந்துதான் இருந்தனர். ஆனால் இயக்குனர் குழுவின் மூத்த அங்கத்தினர்கள் சிலருடைய  மறைமுக ஆதரவுடந்தான் அவர் இவ்வாறு செயல்படுகிறார் என்பதையும் அறிந்திருந்ததால் யாரும் அதில் தலையிட விரும்பவில்லை.

ஆனால் தன்னுடைய பதில் மாதவனை இந்த அளவுக்கு எரிச்சலடையச் செய்யும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ‘I am extremely sorry Sir.. You should know my limitations.. After all he is our E.D. and reports directly to the Board..’

‘Does it mean he is not answerable to me?’ என்றார் மாதவன் கோபத்துடன்.

ஃபிலிப் சுந்தரம் சங்கடத்துடன் மவுனமாய் அமர்ந்திருந்தார்.

அவருடைய சங்கடத்திற்கு விடுதலையளிப்பதுபோல் மாதவனின் இண்டர்காம் சிணுங்க அவர் கோபத்துடன் எடுத்து, ‘Who is this?’ என்று உரும முந்தைய தினம் நாம் கண்ட சேர்மன் அல்ல இவர் என்று மனதுக்குள் நினைத்தார் ஃபிலிப். ஆனால் இப்படியொரு கண்டிப்பான சேர்மந்தான் சேதுவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் அவருக்கு தோன்றியது.

‘Sethu? What does he want?’

‘...’

‘Tell him that I am busy.. Let him not come now.’ எதிர்முனையில் இருந்தவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு மாறாத கோபத்துடன் தன்னைப் பார்த்த பார்வையை சந்திக்க இயலாமல் மேசையில் கிடந்த கோப்புகளை நோக்கி தன் பார்வையைத் திருப்பினார் ஃபிலிப்.

‘It’s Sethu.. He wants to meet me now..’

நிச்சயம் அந்த RBI கடிதத்தைப் பற்றித்தான் இருக்கும் என்று நினைத்தார் ஃபிலிப். அதைப்பற்றி நாமே இவரிடம் தெரிவித்துவிட்டாலென்ன என்று சிந்தித்தார். சொல்லிவிடுவதென தீர்மானித்து வாயை திறந்தவர் பிறகு இப்போது வேண்டாம் என்ற நினைப்பில் வாயை மூடிக்கொண்டார்.

‘என்ன மிஸ்டர் ஃபிலிப், ஏதோ சொல்ல வந்தாப்பல இருக்கு. கமான் ஷ¥ட்..’

இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்று கருதிய ஃபிலிப் முந்தைய தினம் நாடார் தன்னை தொலைப்பேசியில் அழைத்ததிலிருந்து சற்று முன் அவர் சுந்தரலிங்கத்தை சந்தித்ததுவரை ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.

அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் இருந்த மாதவன் ஒரு ஏளன புன்னகையுடன் அவரைப் பார்த்தார். ‘அதாவது நாடாருக்கு இந்த லெட்டர் வேணும்.. ஆனா சோமசுந்தரத்துக்கு இது அவர் கைக்கு கிடைக்கக் கூடாது. இடையில பகடைக் காயா நீங்க.. Very good.. நா இதுக்கு முன்னால வேல செஞ்ச new generation bankலயும் இப்படியொரு சூழ்நிலைய சந்திக்கல.. Board Room quarrels would end in the board room itself.. It has never reached the executives.. To be frank, no executive, except the Chairman would be allowed to take part in the proceedings of the Board.. Except of course, for furnishing the clarifications required by the members.. அந்த வகையில we were fortunate not to get involved in the board room wrangling, you know.. நமக்கெதுக்கு அந்த தொல்லையெல்லாம்?.. இன்னைக்கி அடிச்சிக்கிற டைரக்டர்ஸ் நாளைக்கு ஒன்னாயிருவாங்க.. Executivesதான் தேவையில்லாம ரெண்டு க்ரூப்பா.. You can’t run an organisation like this.. You don’t trust me, I don’t trust you.. This is not the way.. ஏதாவது செஞ்சாகணும்.. ஒன்னும் சரிவரலன்னா இறங்கி போயிரவும் நா தயங்கமாட்டேன் மிஸ்டர் ஃபிலிப்.. I don’t have any particular attachment to this seat.. I just can walk out.. any day,  anytime.. I just can..’

மாதவனின் குரலில் தொனித்தது சலிப்பா, இயலாமையா அல்லது ஆதங்கமா என்பது விளங்காமல் அமர்ந்திருந்தார் ஃபிலிப் சுந்தரம்.

******

21.12.06

சூரியன் 156

ஃபிலிப் சுந்தரம் பரிந்துரைத்த வழக்கறிஞரின் அலுவலகம் வந்தடையும்வரை அவர் என்னவெல்லாம் கேட்பார் என்ற ஆலோசனையில் ஆழ்ந்திருந்த ஜோ வாகனத்திலிருந்து இறங்கி வாசலில் இருந்த சிப்பந்தியிடன் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு தான் சந்திக்க வந்தவரின் பெயரைக் கூறினான்.

‘சபரி சாரா சார்? ஒரு நிமிசம் இருங்க கேட்டு சொல்றேன்.’ என்றவாற் அலுவலகத்திற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் திரும்பி வந்தவன், ‘போங்க சார்.’ என ஜோ படபடப்புடன் அவன் காண்பித்த அறையை அடைந்து அந்த சிறிய அறையில் நடுநாயகமாக அமைந்திருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க வழக்கறிஞர் முன்னால் நின்றான்.

‘ஒக்காருங்க மிஸ்டர் ஜோ. ஃபிலிப் சார் சொன்னார். சீனியருக்கு இன்னைக்கி கோர்ட்ல ஒரு முக்கியமான வாய்தா இருக்கு. அதனால நீங்க டீல் பண்ணுங்க.. நா சாயந்தரம் வந்து பாத்துக்கறேன்னு சொல்லிட்டார். சொல்லுங்க.. என்ன நடந்தது?’

ஜோ வரும் வழியில் தனக்குள் ஒத்திகைப் பார்த்திருந்தபடியே மாணிக்கவேலின் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து ஃபிலிப் சுந்தரத்தை அழைத்தது வரை ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

அவன் கூறி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டு ஒரு மஞ்சள் நிற பதிவேட்டில் குறித்துக்கொண்ட வழக்கறிஞர் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.

‘ஓக்கே மிஸ்டர் ஜோ. இப்ப நா கேக்கற கேள்விக்கு ஒங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் பதில் சொல்லுங்க. தெரியலன்னா தெரியாதுன்னு சொல்லிருங்க. தவறான தகவல் மட்டும் தயவு செஞ்சி சொல்லாதீங்க. சரியா?’

ஜோ சரி என்று தலையை அசைத்தான்.

‘அந்த எஸ்.ஐ என்ன சொன்னார்? மிஸ்டர் மாணிக்கவேலை அரஸ்ட் பண்றேன்னு சொன்னாரா? இல்ல வெறும் என்க்வயரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரா?’

ஜோ சில நொடிகள் யோசித்தான். காவல்துறை அதிகாரி தன்னிடம்  கைது என்ற சொல்லை உபயோகித்ததாக நினைவில்லை என்று பதிலளித்தான்.

‘குட்.. அப்போ வெறும் என்க்வயரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போயிருப்பார்.’

‘சார் அப்படியே அரெஸ்ட் பண்ணணும்னாலும் வாரண்ட் எதுவும் வேணாமா?’

சபரி ‘தேவையில்லை’ என்றார். ‘மிஸ்டர் ஜோ.. குற்றத்துல cognisable, non cognizableனு ரெண்டு வகை இருக்கு. Murder is a congnizable offence. அதுக்கு வாரண்ட் இல்லாமலே அரெஸ்ட் பண்றதுக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு பவர் இருக்கு. ஆனா ஒங்கள இன்ன சார்ஜுக்காக அரெஸ்ட் பண்றேன்னு அக்யூஸ்ட் கிட்ட சொல்லணும். ஆனா இவர் அரெஸ்ட்ங்கற வார்த்தைய சொல்லலேங்கறீங்க. அதனாலதான் என்க்வயரிக்காகத்தான் கூட்டிக்கிட்டு போயிருப்பார்னு நினைக்கேன்.’

ஜோ தயக்கத்துடன் அவரைப் பார்த்தான். ‘சார் நா அங்க இருக்கறப்போ அப்படி சொல்லலதான். ஆனா மாணிக்கம் சார்கிட்ட சொல்லியிருப்பாரோ என்னவோ. அப்படியே இருந்தாலும் இப்ப அவர பெய்ல எடுக்க முடியாதா சார்?’

சபரி முடியாது என்பதுபோல் தலையை அசைத்தார். ‘மர்டர் சார்ஜ்ல அரெஸ்ட் பண்ணியிருந்தா ஸ்டேஷன்லருந்து பெய்ல் எடுக்க முடியாது. அவர அரெஸ்ட் பண்ணியிருந்தா இருப்பத்தி நாலு மணி நேரத்துல ஒரு மஜிஸ்ட்ரேட் முன்னால ஆஜர் செஞ்சியாவணும். அங்க இவர் ஒரு ரெஸ்பான்சிபிளான பேங்க் மேனேஜர். அதனால பெய்ல விடணும்னு வாதாடலாம். ஆனா இதுக்கு நேரடி சாட்சி அதாவது eye witness அவரோட மனைவிங்கறதுனால சாட்சிய கலைக்கறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்லி போலீஸ் சைட்லருந்து வாதாட வாய்ப்பிருக்கு.’

ஜோ என்னடா இது சோதனை என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

சபரி புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘Don’t worry Mr. Joe..’ என்றவாறு தன் முன்னாலிருந்த குறிப்பேட்டைப் பார்த்தார். ‘நீங்க அவரோட சன் சந்தோஷப் பத்தி என்னமோ சொன்னீங்களே? அது என்னது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?’

‘சந்தோஷ் நான் பார்த்தப்போ அவனோட ரூம்ல நல்ல தூக்கத்துல இருந்தான் சார். மாணிக்கம் சார் போகும்போது அவன் எழுந்திருக்கறதுக்கு எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆவும்னு சொன்னார். அதனால நா வீட்ட பூட்டிக்கிட்டு ஆஃபீசுக்கு போயி என் கஸ்டடியிலருந்த சாவியையும் மாணிக்கம் சார் சாவியையும் எனக்கு அடுத்தபடியா இருந்த ஆஃபீசர் கிட்ட குடுத்துட்டு லீவு சொல்லிட்டு ஃபிலிப் சார கூப்ட்டு சொன்னேன். அப்புறம் திரும்பி வீட்டுக்கு போனேன். சந்தோஷ் திறந்த கண்ணோட சீலிங்கையே பாத்தாப்பல கிடக்கறத பாத்தேன். நா கிட்ட போயி நின்னதுக்கப்புறமும் அவன் என்னெ அடையாளமே கண்டுபிடிக்கல சார். சீலிங்கையோ பாத்துக்கிட்டு இருந்தான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம மாணிக்கம் சார் ரூமுல போயி அங்கருந்த டெலிஃபோன் டைரக்டரியில இருந்த டாக்டர கூப்ட்டு நடந்த விவரத்த சொன்னேன். அவர் பதறிப்போயி கார போட்டுக்கிட்டு ஓடி வந்து பார்த்தார். சந்தோஷ் நாடிய புடிச்சி பார்த்தார். கண்ணுல டார்ச் அடிச்சி பாத்துட்டு Something serious has happened to him.. I will admit in my hospital.. ஒரு வாரத்துக்கு என் அப்சர்வேஷன்ல் இருக்கட்டும். அப்புறம் என்ன பண்ணணும்னு டிசைட் பண்லாம்னு சொல்லிட்டு அவர் கார்லயே கூட்டிக்கிட்டு போய்ட்டார். அவரும் எங்க சாரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ்ங்கறதுனால நானும் சரின்னு சம்மதிச்சேன்.’

அவன் கூறியதைக் கேட்டுவிட்டு ‘I see’ என்ற வழக்கறிஞர் தன் பதிவேட்டில் ‘சந்தோஷ்’ என்று எழுதியிருந்ததை பெருக்கல் குறியால் அடிப்பதைப் பார்த்தான்.

‘He must have seen the incident. அதிர்ச்சியில நிதானம் தவறிட்டார்னு நினைக்கேன்.  அவரோட எவிடென்ஸ் யூஸ் ஃபுல்லா இருக்கும்னு நினைச்சேன்.. It’s ok..’

‘ஆமா சார்.. நானும் அப்படித்தான் நினைச்சேன்.. நிச்சயமா மாணிக்கம் சார் இப்படியொரு காரியத்த செஞ்சிருக்கவே மாட்டார் சார்.’

‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? புகார் செஞ்சிருக்கறது அவருடைய மனைவியாச்சே? அவங்க எதுக்காக பொய் சொல்லணும்?’

‘அதான் சார் எனக்கும் புரியமாட்டேங்குது. எதுக்கு மேடம் இப்படியொரு பொய்ய சொல்லணும்?’

சபரி அனுதாபத்துடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ஜோ, ‘சார்.. என்னுடைய யூகத்த சொல்றேன். அது சரியா இருக்குமான்னு தெரியலை.’ என்றான் தயக்கத்துடன்.

‘சும்மா சொல்லுங்க.’

‘ஒருவேளை ராணி மேடமே இத செஞ்சிட்டு பழிய சார் மேல போட்டிருக்கலாமில்லையா?’

சபரி புன்னகைத்தார். ‘இருக்கலாம்.’

‘ஒருவேளை அத சந்தோஷ் பார்த்து அந்த அதிர்ச்சியிலதான் அவனுக்கு அப்படி யிருக்கலாம்.’

‘ஆனா சந்தோஷ¤க்கு அது மயக்க மருந்தோ, தூக்க மருந்தோ.. ஊசி மூலமா ஏத்துனதே நாந்தான்னு மாணிக்கம் போலீசுக்கிட்டயே ஒத்துக்கிட்டாரே. அத எத்தன மணிக்கு குடுத்துருப்பாருன்னு சுமாரா ஒரு கெஸ் பண்ணத்தான் முடியுமே தவிர எந்த டாக்டராலும் சரியா சொல்ல முடியுமான்னு சந்தேகம்தான்.’

ஜோ சட்டென்று பிரகாசமானான். ‘சார் ஒரு ஐடியா. இப்பவே சந்தோஷ கொண்டு போன டாக்டர கூப்ட்டு கேட்டா என்ன? அவன் மயக்கத்துலருந்து தெளிஞ்சி அரை மணி நேரம் கூட ஆகலையே?’

சபரி, ‘அதுவும் சரிதான். He may be able to find out.. சரி அது ஒரு வழி. இப்ப நீங்க முதல்ல கேட்ட கேள்விக்கு வரேன். மிஸ்டர் மாணிக்கத்தோட மனைவி இத செஞ்சிருக்க முடியும்னு நீங்க நினைக்கறீங்க, இல்லையா?’

ஜோ தயங்கினான். ‘அது என்னுடைய யூகம் மட்டும்தான் சார்.’

‘யூகத்துக்கும் ஒரு அடிப்படை வேணுமில்ல?’

ஜோ தன்னுடைய மூடத்தனத்தை நினைத்து வருந்தினான். தேவையில்லாம ஒளறி கொட்டிட்டோமோ என்று நினைத்தான்.

‘சொல்ல வேண்டாம்னா கேக்கல மிஸ்டர் ஜோ. மிஸ்டர் மாணிக்கத்த காப்பாத்தறதுக்கு ஒதவுமேன்னே கேட்டேன்.’

ஜோ மேலும் தயங்கினான்.

‘ஏதோ சொல்ல வரீங்க. ஆனா வேணுமான்னு யோசிக்கறீங்க. அப்படித்தானே?’

‘ஆமாம் சார்.’ என்றான் ஜோ. ‘சாருக்கும் மேடத்துக்கும் இடையில பிரச்சினை இருந்ததுங்கறத எங்க ஆஃபீஸ் பியூன் வழியா கேட்டிருக்கேன். அவர்தான் சாரோட வீட்டுக்கு அடிக்கடி போவார். மேடத்துக்கு சாரோட அப்பாவ வீட்ல வச்சிக்கிட்டிருக்கறதுக்கு இஷ்டம் இல்லேன்னு..’

சபரி புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘எந்த மருமகளுக்குத்தான் மாமனார பிடிச்சிருக்கு? அதுக்குன்னு கொலை பண்ற அளவுக்கு போயிருவாங்களா என்ன? அதுவும் தோளுக்கு மேல வளர்ந்த மகன் வீட்ல இருக்கற சமயத்துல?’

ஜோ பிரகாசமானான். ‘சார் இந்த லாஜிக் சாருக்கும் பொருந்துமே?’

‘ஒத்துக்கறேன். ஆனா மிஸ்டர் மாணிக்கம் சந்தோஷ¤க்கு மயக்க மருந்த குடுக்க வேண்டிய அவசியம் என்னன்னு போலீஸ் தரப்புலருந்து கேட்டா என்ன சொல்வீங்க?’

ஜோ தடுமாறினான். அதானே? சார் எதுக்காக அத செய்யணும்?

சபரி எழுந்து, ‘இதுக்கு பதில் தெரியணும்னா மிஸ்டர் மாணிக்கத்த பார்த்து பேசிணும். வாங்க ஸ்டேஷனுக்கு போய்ட்டு வரலாம்.’ என்றவாறு வாசலை நோக்கி நடந்தார்.

ஜோ குழப்பத்துடன் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

தொடரும்..

20.12.06

சூரியன் 155

ரவி தான் எழுதியிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை உரக்க வாசித்தான். அவனெதிரில் அமர்ந்திருந்த மஞ்சு அவன் படித்து முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்துவிட்டு, ‘நல்லாருக்கு ரவி. ஆனா..’ என்றாள் தயக்கத்துடன்.

‘அதாவது என்னுடைய வேண்டுகோளை எங்க மேனேஜ்மெண்ட் ஏத்துக்குவாங்களாங்கற சந்தேகம் ஒனக்கு, அதானே?’ என்றான் ரவி.

ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு மேசையில் கிடந்த கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை தனக்குள்ளே வாசித்தாள்.

‘அவங்க ஏத்துக்குறாங்களோ இல்லையோ, நாம ஒரு ரிக்வெஸ்ட் போட்டு வைப்போம்னுதான நாராயணசாமி சார் சொன்னார்? அப்படியே செய்வோம்.. என்க்வயரிய ப்ரீப்போன் (prepone) பண்ணா நல்லது. இல்லன்னா நடக்கறப்ப நடக்கட்டும், என்ன சொல்றே?’

மஞ்சு அதற்கும் ஆமாம் என்று தலையை அசைத்தாள். ‘அதுவும் சரிதான். சீக்கிரமா இந்த என்க்வயரி நடந்துட்டா நல்லாருக்குமேன்னு நாந்தான் வக்கீல் அங்கிள்கிட்ட சஜ்ஜஸ்ட் பண்ணேன். சரிம்மா. எழுத்து மூலமா ஒரு ரிக்வெஸ்ட் டிராஃப்ட் பண்ணி கொண்டாங்க நான் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னார். நீங்க எழுதுனதே நல்லாத்தான் இருக்கு. வாங்க, அங்கிள் கெளம்பிக்கிட்டு இருப்பாங்க. குடுத்துட்டு வந்துருவோம்.’ என்றவாறு எழுந்து நிற்க ரவியும் எழுந்து நின்றான்.

உணவு மேசையில் கிடந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு இருவரும் வாசற் கதவை வெறுமனே மூடிவிட்டு தங்களுடைய அடுத்த குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினர்.

கதவைத் திறந்த வழக்கறிஞர் நாராயணசாமி இருவரையும் புன்னகையுடன் வரவேற்றார்.

மஞ்சு தன் கரங்களிலிருந்த கடிதத்தை அவரிடம் நீட்ட, ‘என்னது ப்ரீப்போன்மெண்ட் ரிக்வெஸ்டா? குட்.. இரு கண்ணாடிய எடுத்துக்கிட்டு வந்துடறேன்..’ என்றவர் ரவியைப் பார்த்து சிரித்தார். ‘என்ன மிஸ்டர் ரவி.. ஒங்க பேங்க பத்திக்கூட இன்னைக்கி பேப்பர்ல வந்துருக்கே.. யாரோ சோமசுந்தரமாம் டைரக்டர் போர்ட்லருந்து ரிசைன் பண்ணிட்டாராமே.. தோ.. டீப்பாய்ல இருக்கு பாருங்க.. படிச்சிக்கிட்டிருங்க.. வரேன்.’

ரவி வியப்புடன் குறுமேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த அன்றைய ஆங்கில தினத்தாளை எடுத்து படித்தான். இதுபோன்ற விஷயங்களில் அதிக தீவிரம் காட்டி வரும் அந்த நாளிதழை அவன் வாங்குவதில்லை.

நாராயணசாமி சிவப்பு மசியால் கட்டம் கட்டியிருந்த அந்த செய்தியைப் படித்தவன் அருகிலேயே வெளியாகியிருந்த மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் வங்கியின் புது சேர்மன் திரு மாதவனின் புகைப்படத்தையும் பார்த்தான்.

சோமசுந்தரத்தைப் பற்றியும் அவருடைய மருத்துவமனையைப் பற்றியும் ஏற்கனவே அவன் அறிந்திருந்ததுதான். அத்துடன் அவர் பாபு சுரேஷின் துணையுடன் வங்கியில் செய்திருந்த சில அத்துமீறல்களைப் பற்றியும் கேட்டிருக்கிறான். அதனுடன் ஒப்பிடுகையில் தன்னுடைய விதி மீறல்கள் ஒரு பொருட்டேயில்லை என்பதையும் அவன் அறிவான்.

ஆனால் என்ன செய்ய? எல்லாம் விதி என்ற கோணத்தில் சென்றது அவனுடைய எண்ணம்.

‘இது தாராளமா போறும் மிஸ்டர் ரவி. இத சைன் பண்ணி எங்கிட்ட குடுத்துருங்க. நானும் ஒரு ரிக்வெஸ்ட வச்சி ஒங்க என்க்வயரி ஆஃபீசருக்கு ஃபார்வேட் பண்ணிடறேன். ஆனா ஒன்னு. இன்னைக்கி பேப்பர்ல வந்துருக்கற நியூஸ் படிச்சா ஒங்க பேங்க் ஃபங்க்ஷன்ஸ்ல கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்பன்ஸ் வர்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கறேன். அதனால நம்ம ரிக்வெஸ்ட்ட எந்த அளவுக்கு கன்சிடர் பண்ணுவாங்கன்னு தெரியலை.. போட்டு பார்ப்போம். விழுந்தா மாங்கா.. இல்லன்னா கல்லு.. என்ன சொல்றீங்க?’ என்றார் நாராயணசாமி சிரித்தவாறு.

‘உண்மைதான் சார். எங்க பேங்க பத்தி இப்படியொரு ஸ்கேண்டல் பேப்பர்ல இதுவரைக்கும் வந்ததில்ல. அதுவும் புது சேர்மன் சார்ஜ் எடுத்துருக்கற தேதியில போர்ட்லருந்து ஒரு சீனியர் மெம்பர் ரிசைன் பண்ண வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடண்ட்தான். எங்க எச்.ஓ வுக்கு ஃபோன் பண்ணா தெரியும் இதுக்கு சேர்மன் எப்படி ரியாக்ட் பண்றாருன்னு. ஆனா இது அவருக்கு நேத்தே தெரிஞ்சிருக்கும் போலருக்கு.’ என்ற ரவி நாராயணசாமியைப் பார்த்தான். ‘ஆனா இது பெரிய அளவில ஃபங்க்ஷன பாதிக்கும்னு சொல்ல முடியாது சார். போர்ட் சாதாரணமா வெறும் பாலிசி டிசிஷன் மட்டுந்தான் எடுக்கும். மத்தபடி டெய்லி ஃபங்ஷன் எல்லாம் சேர்மன் கையிலதான். இப்ப வந்துருக்கறவர் ஏற்கனவே எங்க பேங்க்ல இருபது வருசத்துக்கு முன்னால இருந்தவர்தானே? அதனால பெரிசா எந்த பாதிப்பும் இருக்காதுன்னு நினைக்கிறேன்..’

நாராயணசாமி உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றார். ‘ஓக்கே மிஸ்டர் ரவி, மஞ்சு.. நான் இத அனுப்பிச்சுடறேன்.. நீங்க எதுக்கும் ஒங்க என்க்வயரி ஆஃபீசர கூப்ட்டு இந்த மாதிரி ஒரு ரிக்வெஸ்ட் வச்சிருக்கேன்னு சொல்லிருங்க. அவர் ஒங்க ரிக்வெஸ்ட் ஏத்துக்கிட்டா அடுத்த வாரமே வைக்கச் சொல்லுங்க. இல்லன்னா ப்ரஸ் பண்ணாதீங்க. மத்தத நா பாத்துக்கறேன். சாயந்தரம் பாக்கலாம்.’

ரவியும் மஞ்சுவும் எழுந்து நின்று நாராயணசாமிக்கும் அருகில் நின்றிருந்த அவருடைய மனைவிக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வாசலை நோக்கி நடந்தனர்.

****

சுந்தரலிங்கம் சேதுமாதவனின் இந்த எதிர்பாராத அழைப்புக்கும் சற்று முன்னர் ஃபிலிப் சுந்தரம் கேட்ட கேள்விக்கும் எதோ ஒற்றுமை இருக்கிறது என்று தான் நினைத்ததுதான் சரிதான் என்று நினைத்தவாறே சேதுமாதவனின் கேள்விக்கு எப்படி பதிலளிப்பதென யோசித்தார்.

‘என்ன சார்.. ஏதோ பலமா யோசிக்கறா மாதிரி இருக்கு?’ என்றார் சேதுமாதவன்.

சுந்தரலிங்கம் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தார். ‘இல்ல சார். நா அந்த லெட்டர RBIலருந்து வந்த சமயத்துல பாத்ததுதான். அதுக்கப்புறம் நம்ம மூர்த்தி சார் அதுக்கு பதில் போட்டு போர்ட்ல எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வேண்டி வந்தப்போ ஒருதரம் பார்த்தது. அதுக்கப்புறம் பார்த்த ஞாபகம் இல்ல. ஆனா அது இப்போ மாதவன் கேபின்லருக்கற கப்போர்ட்லதான் இருக்கணும். ஏன் நீங்க சுபோத்கிட்டயே கேட்டுருக்கலாமே. அவருக்கு தெரிஞ்சிருக்கணுமே?’

சேதுமாதவன் அவரை எரித்துவிடுவது போல பார்த்தார். ராஸ்க்கல்ஸ் இவனும் அந்த ஃபிலிப்பும் சேர்ந்துக்கிட்டு நம்மள முட்டாளாக்க பாக்கறான்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னால நா கூப்ட்டப்போ ரெண்டு பேருமா ஒக்காந்து டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தது எனக்கு தெரியாதுன்னாடா நினைக்கறீங்க? இருங்க ஒங்க ரெண்டு பேருக்கும் வச்சிக்கறேன்.

இவனுங்க சொல்லித்தான் அந்த சுபோத்தும் ஆடறான்னு நினைக்கேன். அன்னைக்கி ஏர்போர்ட்ல என்னடான்னா இவனுங்க ரெண்டு பேரும் இருக்கறப்பவே மாதவன் வரலைன்னு சொல்றான். இவனுங்க ரெண்டு பேரும் நா இந்த லெட்டர கேட்டா எப்படி ஆக்ட் பண்ணணும்னு அவனுக்கு சொல்லி வச்சிருப்பானுங்க போல. அதான் அவன் அந்த ஆட்டம் ஆடறான்.. இப்ப இவன் என்னடான்னா அந்த லெட்டர பாத்தே ரொம்ப நாளாச்சிங்கறான். எல்லாம் நம்ம நேரம்.

சுந்தரலிங்கம் அமைதியுடன் தன் எதிரில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தான். அவருடைய மேசை முழுவதும் கோப்புகளும், பத்திரிகைகளும் ஒரு இஞ்ச் இடமில்லாமல் குவிந்திருப்பதைப் பார்த்தார்.

சேதுமாதவனின் செயல்பாட்டைப் பற்றி அவருடைய பிரத்தியேக அதிகாரிகளே தலைமையகம் முழுவதும் கிண்டலுடன் பேசிக்கொள்வதை அவரும் பலமுறை கேட்டிருக்கிறார்.

‘சார் பயங்கரமான ஃப்ராடு. மனுசன் நாம குடுக்கற ஃபைல்ஸ வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயி பாக்கறேன் பேர்வழின்னுட்டு தொலைச்சிருவார். அப்புறம் ஒரு வாரம் கழிச்சி எங்கருந்தாவது மறுபடியும் கிடைக்கும். ஃபைல் கிடைச்சதும் முன் தேதி போட்டு கையெழுத்த போட்டு வெளிய அனுப்புவார். அதாவது நாம நோட்( Note)  ப்ரிப்பேர் பண்ண தேதிய வச்சி. பாக்கறவங்களுக்கு பாத்தியா ஈ.டி எவ்வளவு வேகமா செயல்படறார்னு தெரியணுமாம். மேலே சேர்மன் கிட்ட போனா ஏன் ஈ.டி உடனே கையெழுதுப்போட்டும் பத்து நாள் கழிச்சி எங்கிட்ட வருதுன்னு இவரோட பி.ஏ.வை போட்டு வறுத்தெடுத்துருவார். மானங் கெட்ட மனுசன்.. செய்யற வேலைக்கு ரெஸ்ப்பான்சிபிலிட்டி கூட எடுத்துக்க தெரியாம.. இவனெல்லாம் ஒரு ஈ.டி. இவங்கிட்ட வேல பாக்கற தலையெழுத்து நமக்கு..’

மனுசன் டேபிள பாத்தாலே தெரியல. இந்த ஆள் ஒர்க் பண்ற லட்சணம்? இவரோட ஸ்டாஃப் சொல்றது சரிதான் போலருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இங்க ஒக்காந்திருந்தா பைத்தியம் புடிச்சாலும் புடிச்சிரும் என்று நினைத்தவாறு எழுந்து நின்றார் சுந்தரலிங்கம். ‘வேற ஒன்னும் இல்லையே சார்.. எனக்கு கொஞ்சம் அர்ஜண்ட் ஒர்க் இருக்கு.. If you don’t mind..’

சேதுமாதவன் அலட்சியத்துடன் அவரைப் பார்த்தார். ஆமா ---- புடுங்கற வேலை.. போய்யா போ.. நீ இல்லன்னா எனக்கு அந்த லெட்டர் கிடைக்காதா என்ன? அந்த சுபோத்த போடற போடுல கதறிக்கிட்டு எடுத்து வர மாட்டான்?

சரி என்ற உருமலுடன் சேது தலையை அசைக்க சுந்தரலிங்கம் வெளியேறி தன்னுடைய அறையை நோக்கி நடந்தவர் தன்னுடைய பிரத்தியேக அலுவலக அதிகாரிகள் அன்றைய செய்தித்தாளை விரித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் தர்க்கம் செய்துக்கொண்டிருந்ததைக் கண்டும் காணாததுபோல் அவர்களைக் கடந்து சென்று அறைக்குள் நுழைந்தார்.

‘வேணுங்க இந்த டாக்டருக்கு. பழைய சேர்மன் போனதுக்கப்புறம் நீங்க அந்த சீட்ல இருந்தப்போ ஒங்கள என்ன பாடாபடுத்தினான்? இப்ப என்ன ஆச்சி பாத்தீங்கள்லே.. இப்பல்லாம் தெய்வம் நின்னு கொல்றதில்ல போலருக்கு.. அப்பப்போ கிடைச்சிருது.. இது மாதிரி அந்த சேதுவுக்கும் கிடைச்சா நல்லாருக்கும்.’ அன்று காலையில் பத்திரிகையைப் படித்தவாறு தன்னுடைய மனைவி அடித்த கமெண்ட்டை நினைத்து சிரித்துக்கொண்டார்.

****

மாணிக்கவேலின் துர்பாக்கிய நிலையைக் குறித்த யோசனையில் ழ்ந்திருந்த ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய இண்டர்காம் சிணுங்குவதை செவியுற்று எடுத்து, ‘ஹலோ.’ என்றார்.

‘சார் சேர்மன் ஒங்கள ஒரு நிமிஷம் வர முடியுமான்னு கேக்கறார் சார்.’

‘Yes Subodh.. I am on the way.’ என்று எழுந்து தன்னுடைய செல்ஃபோனை எடுத்துக்கொண்டு விரைந்தார்.

தொடரும்..

15.12.06

சூரியன் 154

ஃபிலிப் சுந்தரத்தின் நடத்தை விசித்திரமாகத் தோன்றினாலும் அதைப் பெரிதுபடுத்துவதில் பயனில்லை என்று உணர்ந்தார் சுந்தரலிங்கம்.

புதிய சேர்மன் வந்து பதவியேற்க சம்மதித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதுமே இனியும் நாம் இவ்வங்கியில் நீடிப்பது உசிதமாயிருக்காது என்று நினைத்தவர் அவர். மாதவன் வந்து பொறுப்பேற்றதுமே தம்மை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கென வழக்கத்திலிருந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் தன்னை விடுவிக்க வேண்டுமென்று அவரிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்கலாம் என்றுதான் கருதியிருந்தார். அது முடியாதென்கிற பட்சத்தில் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யவும் தயாராயிருந்தார்.

‘மிஞ்சிப்போனா ஒங்க சர்வீஸ் இன்னும் பதினஞ்சு மாசந்தானப்பா.. பேசாம ரிசைன் பண்ணிட்டு சாயந்தர நேரத்துல ஒங்க சபா வேலைய பாத்துக்கிட்டு இருந்தா போறாது? போறாததுக்கு ஊர்ல கோயில் கட்டித்தரேன்னு ஒரு பெரிய வேலைய தலைமேல போட்டுக்கிட்டிருக்கீங்க. பேசாம நாங்க சொல்றத கேளுங்க.. வேலைய விட்டுட்டு கோயில் வேல முடியற வரைக்கும் அம்மாவும் நீங்களுமா ஊர்ல போய் இருங்க.. அதுக்கே எப்படியும் ஒரு வருசம் ஆயிரும் போலருக்கு..’ என்று அவருடைய ஒரே மகள் வைதேகி அறிவுறுத்தியபோது அப்படியே செய்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார் சுந்தரலிங்கம்.

அவருடைய மனைவி கனகாவுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று அவர் நினைத்ததுபோலவேதான் இருந்தது. ‘ஆமாங்க. பேசாம வைதேகி சொல்றாப்பல செஞ்சிருங்க. இனி ஒங்களுக்கு என்ன இருக்கு? சேர்மன் சேர்லயே ஒக்காந்தாச்சு. இப்ப மறுபடியும் அந்த சி.ஜி.எம் சேர்ல ஒக்காந்து வேல செய்யணுமாக்கும்? போறாததுக்கு அந்த சேது வேற.. அவன் பொஞ்சாதிக்கு பயந்தே எங்க க்ளப் பக்கம் கூட போறதில்ல. அந்த ஃபிலிப்புக்குத்தான் வேற வேலையில்ல.. மாடு மாதிரி ஒளச்சிக்கிட்டு பேங்கே கதின்னு கெடக்கார். பேசாம விட்டுட்டு வாங்க.. ஊர் பக்கம் போயிருவோம். எனக்கும் முடியலங்க..’

சனிக்கிழமையிலருந்து நடக்கறதையெல்லாம் பாக்கறப்ப விட்டுட்டு போயிரலாம்னுதான் தோனுது.. ஆனா மாதவன் வந்து கால வச்சதுமே நா போறேன்னு நின்னா நல்லாருக்காதே.. பாப்போம்.. இன்னும் ஒரு மாசம்.. அதுக்கும் மேல இருக்க முடியாதபடி இருந்திச்சின்னா.. போயிர வேண்டியதுதான்..

அவருடைய சிந்தனையை கலைப்பதுபோல் அவருடைய இண்டர்காம் இணைப்பு அலற எடுத்து எதிர்முனையில் குரலைக் கேட்டதும், ‘இதோ அங்கதான் கிளம்பிக்கிட்டிருக்கேன் மிஸ்டர் சேது.. I am on the way.. One sec..’ என்று பதிலளித்துவிட்டு அவரை மேற்கொண்டு பேசவிடாமல் துண்டித்துவிட்டு.. ‘இவர் வேற.. அப்படியென்ன தலைபோற விஷயமோ தெரியல..’என்று முனகியவாறு எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

******

மாதவன் சுபோத் தன் முன் வைத்த கடிதங்கள் அடங்கிய தடித்த கோப்பை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ‘Tell me Subodh. What is the practice here? Do I have to go through all these letters?’ என்றார்.

என்னடா இவர் இப்படி கேக்கார்? இவரும் சுந்தரலிங்கம் சார் போலத்தானா? என்று ஒரு நொடி சோர்ந்துபோனான் சுபோத். பிறகு இந்த விஷயத்தில் முந்தைய சேர்மன் மூர்த்தி செய்தவற்றை சுருக்கமாக விளக்கினான்.

அவன் முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்ட மாதவன் இறுதியில், ‘I see.. OK.. leave the file with me then.. I’ll call you when I am finished.’ என்றார் ஒரு மெல்லிய புன்னகையுடன்.

சுபோத் விட்டால் போதும் என்ற நினைப்பில் வெளியேறுவதற்கு முயல, ‘One second Subodh.’ என்ற மாதவனின் குரல் கேட்டு நின்று அவரைப் பார்த்தான். ‘Yes Sir?’

‘Are you being harassed by Mr.Sethu for the Airport incident?’

சுபோத் சட்டென்று தலையை அசைத்தான். ‘No Sir..’ நாம் ஏதாவது ஒன்று சொல்லப் போக இவர் அவரை அழைத்து கேட்டு.. அதனால் நமக்கு ஏதாவது புதுசா பிரச்சினை வந்துட்டா?

மாதவன் லேசான புன்னகையுடன்.. ‘நீங்க சொல்ல தயங்கறது தெரியுது.. I understand.. Don’t worry.. I have something in my mind.. You may go..’ என்று அவனை அனுப்பிவிட்டு கோப்பைத் திறந்து அதில் மூழ்கினார்.

****

சுந்தரலிங்கத்தின் அறையிலிருந்து தன்னுடைய அறைக்கு திரும்பிய ஃபிலிப் சுந்தரம் மேற்கொண்டு என்ன செய்வதென சிந்திக்கலானார்.

அவருடைய மேசையிலிருந்த கோப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாடார் மீண்டும் தொலைபேசியில் தன்னை அழைப்பதற்குள் இக்கடித விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையேல் அவர் மீண்டும் தன்மீது கோபப்பட வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தார்.

ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது விளங்காமல் தடுமாறிய வண்ணம் அமர்ந்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை தோன்ற இண்டர்காமை எடுத்து வங்கியின் மத்திய ஆய்வு இலாக்கா தலைவரை அழைத்தார்.

எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘மிஸ்டர் கோபி.. லாஸ்ட் இயர் RBI Inspection ஃபைல ஒரு பியூன் கிட்ட குடுத்து விடுங்க.. சீக்கிரம்.’ என்று கூறிவிட்டு அவர் ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்தார். தேவையில்லாமல் உண்மைக்கு புறம்பாக எதுவும் கூறவேண்டாமே என்பதும் ஒரு காரணம்.

சாதாரணமாகவே ஒரு உண்மையான கிறித்துவ வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருப்பவர் ஃபிலிப் சுந்தரம். ஆலயத்தில் வழிபாட்டிற்கிடையில் பாதிரியார் பிரசங்கிப்பவற்றை தன்னுடைய அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதில் குறியாயிருந்தவர் அவர்.

மனைவியைப் பிரிந்து ஆரம்பகாலத்தில் அவர் மனநிம்மதியில்லாமல் தவித்தபோது அவருக்கு நிம்மதியை அளித்தது தேவாலயப் பணிகள்தான். பங்குப் பேரவையின் தலைவர் பதவியை அவராகத் தேடிச் செல்லாவிட்டாலும் அது அவரைத் தேடி வந்தபோது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தேவாலயப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

எந்த ஒரு சூழலிலும் உண்மைக்குப் புறம்பாக பேசுவதோ, செய்வதோ இல்லையென்று தனக்குள் கற்பித்துக்கொண்டவருக்கு அதைக் கடைபிடிக்க இயலாமற்போன சமயங்களில் வேதனையடைந்ததும் உண்டு. சற்று முன்னர் சுந்தரலிங்கத்திடம்  உண்மையை மறைக்க நேர்ந்ததில் அவருக்கு வருத்தம்தான். ஆனாலும் சந்தர்ப்பமும் சூழலும் தன்னை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு ஆளாக்கிவிட்டதே என்று நினைத்தார்.

அவருடைய சிந்தனையைக் கலைப்பதுபோல் அவருடைய செல் ஃபோன் சிணுங்க யாரென பார்த்தார். திரையில் தெரிந்த தொலைப்பேசி எண் பரிச்சயமில்லாதிருக்கவே, ‘ஹலோ.. ஃபிலிப் ஹியர்.’ என்றார்.

‘Sorry to disturb you Sir.. I am Joe here.. Asst Manager to Mr. Manickavel.. Can I talk to you now Sir?’

ஜோ? சட்டென்று நினைவுக்கு வராமல் தடுமாறியவர்.. மாணிக்கவேலின் துணை மேலாளர் என்ற வார்த்தையைக் கேட்டதும் நினைவுக்கு வந்தவராய், ‘என்ன மிஸ்டர் ஜோ சொல்லுங்க? எப்படியிருக்கார் ஒங்க மேனேஜர்?’ என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தவர் ‘என்ன சொல்றீங்க? இது எப்ப நடந்தது?’ என்றார் மெல்லிய குரலில்.

எதிர் முனையிலிருந்து வந்த விளக்கத்தைக் கேட்டவர் இறுதியில் ‘இப்போ என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் ஒங்கள கூப்ட்டேன் சார்..’ என்று பதில் வந்ததும் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் தடுமாறிப் போனார்.

அவருடைய அந்த மவுனத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு எதிர்முனையிலிருந்து , ‘நா ஒங்கள டிஸ்டர்ப் செஞ்சிருந்தா சாரி சார்..’ என்ற பதில் வரவே பதற்றத்துடன், ‘நோ, நோ.. நாட் அட் ஆல்.. நா என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். Just give me some time .. I will call you back on this number..’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ழ்ந்தார்.

நல்லவங்களா இருக்கறதே தப்பு போலருக்கே. தன் அறைவாசலுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த ஏசு கிறிஸ்துவின் உருவப் படத்தை நோக்கினார். தான் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு ஜெத்சமெனி தோட்டத்தில் 'என் தகப்பனே உமக்கு சித்தமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்' என்று பிரார்த்திக்கும் கோலத்தில் இருந்தவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். ஏன் கர்த்தரே இந்த மனிதருக்கு  இப்படியொரு சோதனை? உயிருக்குயிராய் நேசித்த தன் தகப்பனையே கொன்ற பழி இவர் மீதா?

மாணிக்கவேலுவை அவருக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாவிடினும் வந்தனாவிடம் பேசிய நேரங்களிலெல்லாம் அவரைப் பற்றி கூறக் கேட்டு நாளடைவில் அவரைக் காணாமலே அவரை மிகவும் பிடித்துப்போனது. அதன் பிறகு ஒரு திறப்பு விழாவில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது தான் கேள்விப்பட்டதிலிருந்து உருவகித்திருந்ததைப் போலவே அவர் இருந்தபோது தன்னையுமறியாமல் தன் மனதில் தோன்றிய மகிழ்ச்சி இப்போதும் நினைவிலிருந்தது.

அடிமட்டத்திலிருந்து தன்னுடைய சுய முயற்சியால் உயர்ந்த மனிதர் என்பதாலும் அவரை சுந்தரத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. ‘He is gem of a person Sir.. அப்படியொரு மனுசன் நம்மளோட வேலை செய்யறதே நம்ம பாக்கியம்னுகூட சொல்லலாம்.’ என்று வந்தனா தன்னிடம் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

அப்படியொரு நல்ல மனிதருக்கா இந்த சோதனை? என்ன கடவுள், என்ன நம்பிக்கை என்ற சலிப்பு தன் மனதில் தோன்ற அடுத்த நொடியே அதை விலக்கினார். கர்த்தருடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நியாயமான காரணம் இருக்கும் என்பதை அவர் சிறுவயதுமுதலே அறிந்திருந்ததுதான். 'We have no right to question the wisdom of our Lord my son.. Remember this and leave you in his safe hands..' மரண படுக்கையில் அவர் செவியுற்ற அவருடைய தந்தையின் வார்த்தைகள்..

அவருடைய வாழ்க்கையில் அவர் சந்திக்க நேர்ந்த சோதனைகளுக்கெல்லாம் அவர் இந்த வார்த்தைகளை நினைத்துத்தான் சமாதானம் அடைந்திருக்கிறார்.

மாணிக்கவேலின் வாழ்க்கையில் தற்போது நடந்திருக்கும் சம்பவங்களுக்கு பின்னாலும் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும்.. அதை நம்மால்தான் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை என்று ஓடியது சிந்தனை..

அதிருக்கட்டும்.. இப்போது உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.  
தன்னுடைய தேவாலய நண்பர் ஒருவருடைய பெயர் சட்டென்று  நினைவுக்கு வர அவருடைய தொலைப்பேசி எண்ணை செல் ஃபோனில் தேடிப்பிடித்து டயல் செய்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘டேவிட்?’ என்றார்.

‘சார் ஒரு க்ளையண்டோட பேசிக்கிட்டிருக்கார் சார். ஏதாவது அர்ஜெண்டா இருந்தா எங்கிட்ட சொல்லுங்க.’ என்று அவருடைய ஜூனியர் வழக்கறிஞர் கூற தான் சொல்ல வந்ததை கடகடவென கூறினார்.

அவர் கூறியவற்றை குறித்துக்கொண்டு, ‘கவலைப்படாதீங்க சார். நான் உடனே சார் கிட்ட சொல்லி என்ன செய்யணுமோ அதச் செய்யச் சொல்றேன். திருப்பி ஒங்கள கூப்பிடவும் சொல்றேன் சார்.’ என்று வந்த பதிலில் திருப்தியடைந்தவர் நன்றி தெரிவித்துவிட்டு உடனே, ஜோவை அழைத்தார்.

‘மிஸ்டர் ஜோ நான் என் ஃப்ரெண்ட கூப்ட்டு என்ன செய்யணுமோ அத செய்ய சொல்லியிருக்கேன். நீங்க இந்த நம்பருக்கு கூப்பிட்டு அவர் கேக்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் குடுத்துருங்க. நீங்க வேணும்னா அஃபிஷியல் கெப்பாசிட்டியில ஒரு கார எடுத்துக்கிட்டு அவர கூட்டிக்கிட்டு போங்க. He should be able to arrange the bail.. unless something serious crops up..’

‘ரொம்ப தாங்ஸ் சார்.’ என்ற ஜோ ஏதோ சொல்ல வந்து தயங்குவது தெரியவே, ‘என்ன மிஸ்டர் ஜோ.. வேற ஏதும் சொல்லணுமா? தயங்காம சொல்லுங்க’ என்றார்.

அடுத்த சில நொடிகள் மவுனமாக கேட்டுவிட்டு, ‘இப்ப என்ன பண்ணணும்.. அதச் சொல்லுங்க.’ என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த வேண்டுகோளை எந்த அளவுக்கு தம்மால் நிவர்த்தி செய்ய முடியும் என்று தோன்றாமல் சில நொடிகள் சிந்திக்கலானார். பிறகு, ‘சந்தோஷ வந்தனா மேடம் வீட்ல அவங்கக்கூட வச்சிக்கறதுல அவங்களுக்கு ப்ராப்ளம் இருக்காதுன்னு தெரியும்.. ஆனா இப்ப அவங்க இருக்கற சூழ்நிலையில இத எப்படி அவங்கக் கிட்ட சொல்லி.. ஓக்கே மிஸ்டர் ஜோ.. Let me talk to her first.. நீங்க கவலைப்படாதீங்க.. முதல்ல அவர ஜாமீன்ல எடுக்க பாருங்க.. அது முடியாதப் பட்சத்துல சந்தோஷ எங்க விடலாம்னு யோசிக்கலாம்.. Keep me posted of the developments..’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் முன்னே இருந்த பிரச்சினையில் கவனத்தைத் திருப்பினார்.

தொடரும்..

14.12.06

சூரியன் 153

விடியற்காலையிலேயே விழிப்பு வந்தும் எழுதிருக்க மனமில்லாமல் படுக்கையிலேயே உழன்றுக்கொண்டிருந்தாள் மைதிலி.

முந்தைய நாள் இரவில் நடந்தவைகள் மனதில் கிடந்து சங்கடப்படுத்தின.

எதுக்கு அவ்வளவு கோபம் வந்துது எனக்கு? நிதானமா ஹேண்டில் பண்ண வேண்டிய விஷயத்த தேவையில்லாம கோபப்பட்டு, என்ன செய்ய முடியும் இவங்களாலங்கற திமிர் நம்மையுமறியாம நமக்குள்ள ஐருக்கோ? இல்ல.. பயமா? Attack is the best form of defenseங்கறா மாதிரி நாம அவ்வளவு கோபப்படலன்னா அப்பாவையும் அம்மாவையும் நம்ம வழிக்கு கொண்டு வர முடியாதோ?

தலைக்கு மேலே ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தவாறு படுத்திருந்தாள். மூனு ப்ளேட்ஸ் இருந்தும் சுத்தறப்போ ஒன்னுமே இல்லாதமாதிரி தெரியுதே? வாழ்க்கையும் இப்படித்தான் போலருக்கு. போற வேகத்துல சுற்றம், பந்தம், பாசம், பச்சாதாபம் எதுவுமே இல்லாத மாதிரி போயிருமோ..

நாம இப்ப எடுத்திருக்கற முடிவு சரியானதுதானா? சீனிய நமக்கு உண்மையிலயே முழுசா தெரியுமா? அவன் மேல நமக்கு இருக்கறது உண்மையிலேயே காதல்தானா? இல்ல வெறும் பச்சாதபமா? அவனால ஆம்பளையா, லட்சணமா ஒரு வேலைய தேடிக்கிட்டு.. ஒரு பொறுப்புள்ள புருஷனா.. Can he discharge his duties as a responsible husband?

அப்பா சொன்னாரே.. ஒன்னைய பத்திய விஷயத்தையெல்லாம் அவா கிட்ட சொல்லிருக்கேன்னுட்டு.. என் விஷயமா? அப்படீன்னா? எம் பொண்ணு சீனிவாசன்னு ஒரு பையனோட சேந்துக்கிட்டு ஊரெல்லாம் சுத்திருந்தாலும் அவ ஒன்னும் கெட்டுப்போயிரலன்னுட்டா? என்ன அக்கிரமம்? ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கு நடுவில காதல், காமம்கறத தவிர வேற ஒன்னும் இருக்க முடியாதா என்ன?

ஊர் பேசறது இருக்கட்டும். பெத்த அம்மா, அப்பாவே அப்படியொன்னு இருக்குன்னுட்டு அவங்களா நினைச்சிக்கிட்டு பொண் பாக்க வர்றவா கிட்ட மட்டும் அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? ஜெயகாந்தன் சொல்றா மாதிரி இது ஒரு பம்மாத்து விஷயமில்ல?

இதுக்காகவே நாம சீனியத்தான் கட்டிக்குவேங்கறதுல பிடிச்சி நிக்கணும்.. அவனோட சேர்ந்து வாழணும்னு நமக்குள்ளயே ஒரு முடிவுக்கு வந்துட்டா போறும்.. அப்புறம் அது ஒரு பெரிய, கஷ்டமான விஷயமாவே தெரியாதுன்னு படுது.. Yes! It should be possible.. Or we should make it possible..

‘ஏய்.. மைதிலி.. இன்னுமா தூங்கிக்கிட்டிருக்கே.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போறியா இல்லையா?’

அம்மா!

அம்மா எப்பவுமே இப்படித்தான். அவகிட்ட எத்தன சண்டை போட்டாலும் சரி.. அடுத்த நிமிஷமே மறந்துட்டு வந்து ஈஷிப்பா.. ஆனா அப்பா அப்படியில்லை.. அவர் மேல எந்த தப்புமிலாம யாராச்சும் கோச்சுண்டா.. அவாளே வந்து பேசறவரைக்கும் மூஞ்ச தூக்கி வச்சுண்டு..

‘ஏய்.. ஒன்னெத்தான்.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போறியா இல்லையா? அதச்சொல்லு..’

மைதிலி போர்வையை ஒதுக்கிவிட்டு எழுந்து நின்றாள். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி நெட்டி முறித்தவாறு ஒரு நொடி யோசித்தாள். ஆஃபீசுக்கு போணுமா? வீட்டுல இருந்து அப்பாவோட பேசி.. வேணும்னா டாக்டர் அங்கிளையும் வரச்சொல்லி.. இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்தா என்ன?

ஆஃபீஸ் போயி பெருசா என்ன பண்ணப் போறோம்? அப்பாவ முழுசா சம்மதிக்க வைக்காம ஆஃபீஸ் போறதுல அர்த்தமில்ல..

அறைக்கதவைத் திறந்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள். தன் தாயைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள். ஜானகியும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு ஹாலில் அமர்ந்து பேப்பரில் மூழ்கியிருந்த பட்டாபியை நோக்கி கண்ணால் சாடை செய்தாள் அவர்கிட்டயும் பேசுடி என்பதுபோல்..

பேசறேன் என்று பதிலுக்கு உதட்டையசைத்த மைதிலி, ‘நா இன்னைக்கி ஆஃபீசுக்கு போலம்மா.. நம்ம டாக்டர் அங்கிளயும் போய் பாக்கணும்.. சீனி எப்ப மெட்றாசுக்கு போமுடியுங்கறத பத்தி கேக்கணும்.. சாப்பாடு வேணாம்.. டிஃபன் மட்டும் பண்ணிடு.. நா குளிச்சிட்டு வரேன்..’ என்றவாறு தன் தந்தையைப் பார்த்தாள். ‘நீங்களும் எங்கூட க்ளினிக் வரைக்கும் வர முடியுமாப்பா?’

பட்டாபி அவளைப் பொருட்படுத்தாமல் அன்றைய ஹிண்டு நாளிதழில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக்கொண்டார். மைதிலி தன் தாயைப் பார்த்து உதட்டை சுளித்துவிட்டு ஹாலின் ஒரு கோடியிலிருந்த குளியலறையை நோக்கி நடந்தாள்.

அவள் குளியலறைக்குள் சென்று மறையும்வரைக் காத்திருந்த ஜானகி, ‘ஏன்னா.. அவதான் நேத்தைக்கி நடந்தத மறந்துட்டு வந்து பேசறாளே நீங்களும் செத்த இறங்கி வந்தாத்தான் என்னவாம்?’ என்றாள்.

பட்டாபி அப்போதும் பதிலளிக்காமல் நாளிதழைப் படிப்பதிலேயே குறியாயிருக்க, ‘எப்படியோ போங்க.. ஒங்கள மாதிரிதான ஒங்க பொண்ணும் இருப்போ.. ஒங்க ரெண்டு பேர் நடுவுலயும் மாட்டிண்டு நாந்தான் அல்லாடறேன்..’ என்று புலம்பியவாறு சமையலறையை நோக்கி நடந்தாள் ஜானகி.

*********

மாணிக்கவேல் தன் தந்தையை எந்த அளவுக்கு நேசித்திருந்தார் என்பது ஜோவுக்கு நன்றாக தெரியும்.

‘ரெண்டு தையல் மிஷின வச்சிக்கிட்டு எங்கப்பாவும் அம்மாவும் காலையிலருந்து ராத்திரிவரைக்கும் ஓய்வில்லாம ஒழைச்சதுனாலதான் நாங்கல்லாம் இந்த அளவுக்கு வர முடிஞ்சது தெரியுமா ஜோ? அப்பா பட்ட ஒவ்வொரு கஷ்டமும் எனக்கு நல்லாவே தெரியும். அந்த கஷ்டத்துலயும் நாங்கல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலைக்கும் போகணும்னு ஆசைப்பட்டார். எங்க எல்லாரையுமே படிக்க வச்சிரணும், நம்மளமாதிரி இந்த தையல் வேலைக்கு வந்து கஷ்டப்படக்கூடாதுங்கறதுல அப்பாவும் சரி அம்மாவும் சரி ரொம்பவே பிடிவாதமா இருந்தாங்க. ஆனா அவங்க மட்டும் நினைச்சா போறாதுல்ல ஜோ.. அண்ணன்க நினைப்பெல்லாம் வேறயாவுல்ல இருந்துது? என்னையும் அப்பா ஸ்கூல் முடிச்சதும் படிக்கத்தான் சொன்னாங்க.. ஆனா எனக்கும் கீழ ரெண்டு பேர் இருந்தான்களே.. அவனுங்களும் படிக்கணும்.. அதுக்கு அப்பாவால செலவழிக்க முடியுமான்னு நினைச்சிப் பார்த்தேன். இல்லப்பா நா ஒரு வேலையில சேர்ந்துக்கிட்டு அப்புறமா படிச்சிக்கறேன்னு சொல்லித்தான் அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரு போஸ்ட் மாஸ்டர புடிச்சி.. சார்ட்டிங் க்ளார்க்கா சேர்ந்து அப்புறம் போஸ்ட்டல் டெலிவரி மேனா மாறி.. அது வழியா நம்ம பேங்க்ல சேர்ந்து.. நானாவே படிச்சி.. இன்னைக்கி நானும் முன்னுக்கு வந்து என் தம்பிகளையும் காலேஜ் படிக்க வச்சிருக்கேன்னா.. அதுக்கு பின்னால இருக்கற அப்பாவோட efforts.. அது கொஞ்சநஞ்சமில்ல ஜோ.. I owe him my entire life.. அப்பாவோட கடைசி காலம் சந்தோஷமா இருக்கணும்.. அப்பா அவங்க வயசுல அனுபவிக்க முடியாம போனதையெல்லாம் நா செஞ்சி குடுக்கணும்..’

எத்தனை முறை, சலிக்காமல் இதையே திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருப்பார்? அப்பா, அப்பா, அப்பா என்று சதாகாலமும் பாடிக்கொண்டிருந்தவரா இப்படியொரு காரியத்தை செய்திருப்பார்? நிச்சயம் இருக்காது..

ஜோ யோசனையுடன் ஹாலின் மறுகோடியில் அமர்ந்திருந்த ராணியைப் பார்த்தான். அன்னைக்கி வந்தனா மேடம் மயங்கி விழுந்ததுக்கும் இவங்கதான் காரணம்னு சாரே சொன்ன மாதிரி இருந்துதே..

‘சார்.. நா அவங்கக் கிட்ட கொஞ்சம் தனியா பேச முடியுமா?’

‘எதுக்கு சார்?’

‘எனக்கென்னமோ அவங்க குழப்பத்துல இருக்காங்கன்னு தோனுது, அதான் அப்படி ஒங்கக்கிட்ட கம்ப்ளெய்ன் செஞ்சிருக்காங்க.’

காவல்துறை அதிகாரி எரிச்சலுடன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் ராணியை நோக்கி ஜோ முன்னேற, ‘மிஸ்டர், உங்கள் இங்க வரச்சொன்னது அவங்க சொன்னது சரியா தப்பான்னு விசாரிக்க இல்ல.. இவரோட சன் மயக்க நிலையில அந்த ரூம்ல இருக்கார். நாந்தான் அவருக்கு தூக்க மருந்து ஊசி போட்டேன் இவரே ஒத்துக்கிட்டார். மேடம் இங்க தனியா இருக்க மாட்டேன்னு சொன்னதால இவர் சொல்லி ஒங்கள வரவச்சேன். நீங்க அவர பாருங்க நாங்க இவர கூட்டிக்கிட்டுப் போய் விசாரிக்கிறோம்.’ என்றவாறு அவனைத் தடுத்து நிறுத்தினார் அவர்.

ஜோ திடுக்கிட்டு அவரைப் பார்த்தான். ‘என்ன சொல்றீங்க சார். இவர கூப்பிட்டுக்கிட்டு போறீங்களா, எங்க?’

ஆய்வாளர் பதிலளிக்காமல் தன்னருகில் நின்றிருந்த காவலரைப் பார்த்தார். ‘என்னய்யா பாத்துக்கிட்டிருக்கீங்க? இவர கூட்டிக்கிட்டுப் போய் ஜீப்புல ஏத்துங்க..’ பிறகு திரும்பி ராணியையும் அவளுடன் நின்றிருந்த பெண் காவலரையும் பார்த்தார். ‘நீங்க ரெண்டு பேரும் இந்தம்மா எங்க போணும்னு சொல்றாங்களோ அங்க கூட்டிக்கிட்டு போய் விட்டுருங்க. ஆனா அவங்க கைப்பட ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிட்டு வந்துருங்க.. ஊம்.. கெளம்புங்க..’

மாணிக்கவேல் மறுபேச்சு பேசாமல் எழுந்து நின்றார். ஜோ பதறியவாறு, ‘சார்’ என்றவாறு அவரை நெருங்க நின்று அவனைப் பார்த்தார். ‘Don’t worry Joe.. நீங்க சந்தோஷோடவே இருக்கணும்னு இல்ல.. அவன் எழுந்துக்கறது எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆவும். நீங்க ஆஃபீஸ் போய் சாவிய ஹேண்டோவர் செஞ்சிட்டு வந்து அவன பாருங்க. முழிச்சிருந்தா அவனையும் கூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க.. பாக்கலாம்..’

ஜோ சரி சார் என்பதுபோல் தலையை அசைக்க மாணிக்கவேல் திரும்பி தன் மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

அவரைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளரும், காவலர்களும் வெளியேறினர். ராணியும் பெண் காவலர்களுடன் அவன் நிற்பதைப் பொருட்படுத்தாமல் தலையைக் குனிந்தவாறு வெளியேற வெறிச்சோடிப் போன ஹாலைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஜோ.

தொடரும்..

13.12.06

சூரியன் 152

குளித்து முடித்து தலைமுடியைத் துடைத்தவாறு படுக்கையறைக்குள் நுழைந்த ஜோ தன்னுடைய செல் ஃபோன் சிணுங்குவதைக் கவனித்து ஓடிச் சென்று எடுத்தான்.

‘மிஸ்டர் ஜோ?’ என்று அதிகாரத்தனமானதொரு முரட்டுக் குரல்.  யாருடையது என்று குழம்பி, ‘யெஸ்?’ என்றான் தயக்கத்துடன்.

‘ஒங்களுக்கு மிஸ்டர் மாணிக்கவேல்ங்கறவரைத் தெரியுமா மிஸ்டர்?’

‘தெரியும்.. ஆனா நீங்க யாருன்னு...?’

‘சொல்றேன்.. நீங்க உடனே பொறப்பட்டு அவர் வீட்டுக்கு வாங்க.’

என்ன, ஏது என்று விசாரிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட ஒரு நொடி திகைத்து நின்ற ஜோ, அவசர, அவசரமாக தலையைத் துடைத்து உடை மாற்றிக்கொண்டு கிளம்பினான்.

இருப்பினும் புறப்படும் முன்பு தொலைப்பேசி செய்தால் என்ன என்று நினைத்து மாணிக்கவேலின் செல் ஃபோனுக்கு டயல் செய்தான்.

‘யெஸ்?’ சற்று முன் கேட்ட அதே முரட்டுக் குரல். ‘யாருங்க இது?’

ஜோ துண்டித்துவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அது சரியாகாது என்று நினைத்து, ‘நான் அவரோட அசிஸ்டெண்ட் ஜோ பேசறேன்.. Could I talk to him for a few minutes, please?’ என்றான்.

‘மிஸ்டர்.. நா ஒங்கள ஒடனே புறப்பட்டு வரச் சொன்னா எதுக்கு ஃபோன் பண்றீங்க.. மொதல்ல நா சொன்னத செய்ங்க.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே பார்த்துக்கொண்டு நின்ற ஜோ, ‘என்னங்க.. யார் ஃபோன்ல?’ என்றவாறு வந்து நின்ற தன் மனைவியைப் பார்த்தான். எனக்கே யார்னு தெரியலையே என்று தனக்குள் நினைத்த ஜோ, ‘தெரியல அக்சீ.. நம்ம சார் வீட்லருந்துதான்.. ஆனா யாரோ சம்பந்தமில்லாத குரல்.. நா ஒடனே பொறப்பட்டு வரணுமாம்.. நா போய்ட்டு வந்துடறேன்.. பாப்பா இன்னைக்கி ஒரு நாள் ஸ்கூலுக்கு போவாட்டியும் பரவால்லை.. நா சார போய் பார்த்துட்டு அப்படியே ஆஃபீசுக்கு போறேன்.. ஏதாவது முக்கியம்னா ஒன்னெ கூப்டறேன்.. என்ன?’ என்றவாறு தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

*******

‘சார்.. நம்ம மூர்த்தி சார் இருந்தப்ப ரிசர்வ் பேங்க்லருந்து ஒரு லெட்டர் வந்துதே, ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா?’

சுந்தரலிங்கம் குழப்பத்துடன் தன் முன் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார். ‘எந்த லெட்டர பத்தி கேக்கீங்க பிலிப்?’

‘சாரி, சார்.. அவசரத்துல எந்த லெட்டர்னு சொல்லாம விட்டுட்டேன்..’ என்ற ஃபிலிப் தொடர்ந்து, ‘போன ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சதும் நம்ம போர்ட்ல ஒரு ப்ரொஃபஷனல் ஆடிட்டரும், அட்வகேட்டும் இல்லேன்னு..’ என்றார்.

சுந்தரலிங்கம் ஒரு நொடி லோசனையில் ஆழ்ந்தார். அதுக்கென்ன இப்ப? எதுக்கு காலையில முதல் வேலையா இதப்பத்தி கேக்றார்? நேத்துதான் ஒருத்தர் வேற வழியில்லாம போர்ட்லருந்து வெளியா போயிருக்கார். இந்த சமயத்துல இதப்பத்தி கேக்கறீங்கன்னா புதுசா ஒருத்தர போர்ட்ல நுழைக்கறதுக்கா? அப்படீன்னா யார்? அந்த டாக்டரோட ஆளா? அவருக்கு பதிலா அவரோட அட்வகேட் இல்லன்னா ஆடிட்டர நுழைக்கப் பாக்கறாரா?

ஃபிலிப் சுந்தரம் பதிலளிக்காமல் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். எதுக்கு இந்த மனுஷன் இவ்வளவு யோசிக்கறார்? என்னடா நமக்கு தெரியாம இவன் என்னவோ புதுசா ப்ளான் போடறானேன்னு நினைக்காரோ? ஏற்கனவே பாபு சுரேஷை எச்.ஆர் தலைவரா நம்மக்கிட்ட கேக்காமயே ரெக்கமெண்ட் பண்ணவராச்சேன்னு நினைக்காரோ? இருக்கும்.. எப்ப ஒரு விஷயத்துல சந்தேகம்னு வந்துருச்சோ அப்புறம் நாம என்ன கேட்டாலும் இவருக்கு சந்தேகம் வர்றது ஒன்னும் பெரிய விஷயமில்லையே..

‘என்ன சார் யோசிக்கீங்க?’ என்றார் தயக்கத்துடன்.

சுந்தரலிங்கம், ‘எதுக்கு கேக்கீங்கன்னு என்கிட்ட சொல்லலாம்னா..’ என்றார் தயக்கத்துடன்..

ஃபிலிப் வலிய ஒரு புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு, ‘என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? ஒங்கக் கிட்ட சொல்றதுல எனக்கென்ன தயக்கம்?’ என்றார்.

அப்ப சொல்லுங்க.. ஏன் தயங்குறீங்க என்பதுபோல் அவரைப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

இவர்கிட்ட என்னன்னு சொல்றது? அதோட காப்பியொன்னு நாடாருக்கு வேணுமாம்னு சொல்ல முடியுமா என்ன? புது சேர்மன் கேட்டார்னும் சொல்ல முடியாது. நேரா இவரே அவர போய் கேட்டுட்டா.. வேற வினையே வேணாம்.. புது சேர்மன் வந்து ரெண்டாவது நாளே அவர் நம்மள பத்தி தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு..

இவர்கிட்ட வந்து கேக்க நினைச்சதே முட்டாத்தனம் போலருக்கு. இவர் ஏற்கனவே சொற்பக் காலம் சேர்மன் சீட்ல இருந்தவராச்சே இவருக்கு தெரிய வாய்ப்பிருக்குன்னு நினைச்சி வந்தது நம்ம முட்டாள்தனம் என்று மருகிக்கொண்டிருந்த ஃபிலிப்பை அந்த இக்கட்டிலிருந்த காப்பாற்றுவது போலவே சுந்தரலிங்கத்தின் இண்டர்காம் சிணுங்கியது.

அவர் எடுத்து, ‘யெஸ்?’ என பதிலளிக்க யாராயிருக்கும் என்று யோசித்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘அப்படியா? நீங்க ஒன்னு பண்ணுங்க.. ஈ.டியெ நானே வந்து பாக்கறேன்னு சொல்லுங்க.. அவர் இங்க வர வேணாம்..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு ஃபிலிப்பைப் பார்த்தார் சுந்தரலிங்கம். ‘என்ன சார்.. இன்னைக்கி காலைலயே வந்துட்டார் நம்ம ஈ.டி.?’ என்றார் புன்முறுவலுடன். ‘அதுவும் என்னைக்குமில்லாம என்னெ பாக்கறதுக்கு என் கேபினுக்கே வரட்டுமான்னுவேற கேக்காராம்? நீங்க கேக்கற லெட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமிருக்குமோ?’

அவர் குரலில் தொனித்த கேலியைக் கவனியாதவர்போல் எழுந்தார் ஃபிலிப். ‘இருக்காது சார்.. நீங்க போய் பார்த்துட்டு வாங்க.. நா அதுக்கப்புறம் வரேன்.’

அவர் மேற்கொண்டு கேள்வி கேட்குமுன் அவருடைய அறையிலிருந்து சென்றால் போதும் என்ற நினைப்புடன் ஃபிலிப் சுந்தரம் புறப்பட, ‘என்ன சார்.. நீ கேட்ட கேள்விக்கு பதில் வேண்டாமா?’ என்றார் சுந்தரலிங்கம்.

வாசலை நோக்கி கிளம்பிய ஃபிலிப் சற்று தயங்கி நின்றார்.

சுந்தரலிங்கம் தன்னுடைய இருக்கையிலேயே அமர்ந்தவாறு பதிலளித்தார். ‘அந்த லெட்டர் மட்டுமில்ல ஃபிலிப், ரிசர்வ் பேங்க் லெட்டர்ஸ் எல்லாமே சேர்மனோட பெர்சனல் கேபின்லருக்கற கப்போர்ட்லதான் இருக்கும். நா அந்த கப்போர்ட் கீஸ் எல்லாத்தையும் நேத்துதான் மாதவன் கிட்ட ஒப்படைச்சேன்.. நீங்க வேணும்னா அவர்கிட்டயே கேளங்களேன்.’

ஃபிலிப் திரும்பி அவரைப் பார்த்தார். ‘தாங்ஸ் சார்.. நீங்க சொன்னா மாதிரியே செய்றேன்.’

அவர் அறையிலிருந்து வெளியேறும்வரை காத்திருந்த சுந்தரலிங்கம், ‘என்னாச்சி இவருக்கு? நம்மக்கிட்டருந்த கான்ஃபிடென்ஸ் எல்லாம் ஒரே நாள்ல போயிருச்சா இவருக்கு? நேத்து காலைலருந்து இவர் நடந்துக்கற விதம் சரியாயில்லையே’ என்று நினைத்தவாறு ஒரு பெருமூச்சுடன் எழுந்து சேதுமாதவனின் அறையை நோக்கி விரைந்தார்.

****

‘சுபோத், நீங்க வந்ததும் ஒடனே கேபினுக்கு சார் வரச் சொன்னார்.’

அப்படியா என்பதுபோல் தன்னுடைய சக அதிகாரியைப் பார்த்த சுபோத் அன்றும் அதற்கு முந்தைய நாளும் வந்திருந்த கடிதங்கள் அடங்கிய கோப்புடன் மாதவனின் அறையை நோக்கி விரைந்தான்.

வங்கியின் முதல்வர் பார்வைக்கு வரும் கடிதங்களை முந்தைய முதல்வர் மூர்த்தி இருந்த சமயத்தில் அவருடைய பிரத்தியேக கோப்பில் வைத்து சமர்ப்பிப்பதுடன் சுபோத்தின் வேலை  முடிந்துவிடும். வங்கி சம்பந்தப்பட்ட அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்பதால் அவரே கடிதங்களைப் படித்து அதிலேயே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரத்தில் சுருக்கமாகக் குறித்து சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளின் பெயரையும் அதிலேயே குறித்து திருப்பியனுப்பி விடுவார்.

கடிதத்தை அனுப்பியவருக்கு பதில் அளிக்க வேண்டியிருந்தால் அவரே சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரியை அழைத்து அனுப்ப வேண்டிய பதிலை சுருக்கமாக கூறி பதிலை தயார் செய்து எடுத்து வருமாறு பணித்துவிடுவார். அதிலும் வங்கியின் கிளைகளைப் பற்றியோ அல்லது வட்டார அலுவலகங்களைப் பற்றியோ வந்த புகார்களுக்கு பதிலளிப்பதிலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மூர்த்தி சாருக்கு நிகர் எவருமில்லை என்று நினைப்பான் சுபோத். அந்த அளவுக்கு விரைந்து செயல்படுவார்.

அவருக்குப் பிறகு நான்கு மாதம் அப்பொறுப்பிலிருந்த சுந்தரலிங்கம் இருந்த காலத்தில் அவருக்கு வரும் கடிதங்களை இலாக்காவாரியாகப் பிரித்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட இலாக்காவின் தலைவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்து அவர்களுடைய பதிலையும் சேகரித்து அதற்குப் பிறகுதான் அவருடைய பார்வைக்கு அனுப்பவேண்டும்.

சுந்தரலிங்கம் திறமையானவர்தான் என்றாலும் யாரையும், அவரைவிட வயதிலோ, அனுபவத்திலோ குறைந்தவர் என்றாலும், அதிகாரம் செய்து பழக்கமில்லாததுடன், எந்த விஷயத்திலும் உடனே ஒரு முடிவுக்கு வருவதில் தயக்கம் காட்டக் கூடியவர் என்பதாலும் அவருக்கு வரும் கடிதங்கள் மற்றும் புகார்கள் மீது அவராக எந்த முடிவுக்கு வரமுடியாமல் சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகள் பொறுப்பிலேயே விட்டுவிடுவார். போறாததற்கு ஈ.டி சேதுமாதவனும் தலையிட்டு முதல்வருக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் இலாக்கா அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு முன் தனக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டு.. போறும், போறும் என்று ஆகிவிடும் சுபோத்துக்கு..

தன்னுடைய கையிலிருந்த கோப்பை மீண்டும் ஒருமுறை பார்த்த சுபோத் இவர் எப்படியிருப்பாரோ என்று நினைத்தவாறே அவருடைய அறைக் கதவை லேசாக தட்டினான்.

********

ஜோ மாணிக்கவேலின் வீட்டை நெருங்கும்போதே வாசலில் நின்ற கூட்டத்தைப் பார்த்து ஒரு நொடி திகைத்துப் போனான்.

சற்று தொலைவில் நின்றிருந்த காவல்துறையினரின் ஜீப்பையும் அதனருகில் குழுமியிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளையும் பார்த்த ஜோ வீட்டையடுத்திருந்த கடையொன்றில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர, அவசரமாக வீட்டை நெருங்கினான்.

குழுமியிருந்த கூட்டத்தை சிரமப்பட்டு விலக்கியவாறு நுழைய முயன்ற ஜோ தன்னைத் தடுத்து நிறுத்திய காவலரைப் பார்த்தான் எரிச்சலுடன். ‘சார்.. என் பேர் ஜோ.. நான் மாணிக்கவேல் சார் ஆஃபீஸ்ல வேலை செய்யறேன். ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னால இங்கருந்துதான் யாரோ ஃபோன் பண்ணி வரச்சொன்னாங்க. ப்ளீஸ்..’

அவனை தடுத்த காவலர் தன்னுடைய வயர்லெஸ்சில் யாருடனோ தொடர்புகொண்டுவிட்டு அவனை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க பரபரப்புடன் உள்ளே நுழைந்த ஜோ மாணிக்கவேல் தலையைக் குனிந்து ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க அவரை ஒரு காவல்துறை அதிகாரி விசாரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தான்..

அவர்தான் தன்னை தொலைப்பேசியில் அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவன் நேரே அவரிடம் சென்று, ‘சார் நாந்தான் ஜோ.. I think you only called me on my mobile’ என்றான்.

அவனுடைய குரல் கேட்டு திரும்பிய காவல்துறை துணை ஆய்வாளர் அவனை மேலும் கீழும் பார்த்தார். ‘நாந்தான் வரச் சொன்னேன். இவர எவ்வளவு காலமா தெரியும் ஒங்களுக்கு?’

ஜோ குழப்பத்துடன் அவரையும் மாணிக்கவேலையும் மாறி, மாறி பார்த்தான். என்ன நடக்குது இங்க? ஹாலின் மறு கோடியில் ஒரு இருக்கையில் இரண்டு பெண் காவலர்களுக்கிடையில் அமர்ந்து முகத்தை மூடியாவறு அமர்ந்திருந்த மாணிக்கவேலின் மனைவியைப் பார்த்தான். சந்தோஷைக் காணவில்லை. மாணிக்கவேலின் தந்தை படுத்திருக்கும் அறைக் கதவுகள் ஒருக்கழித்து மூடப்பட்டிருந்ததைக் கவனித்தான். Something seriously wrong..

‘என்ன மிஸ்டர்.. என் கேள்விக்கு ரிப்ளை பண்ணாம என்ன அங்கயும் இங்கயும் பாக்கீங்க..?’

ஜோ குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். பிறகு ‘சார் இவர் நான் வேலை செய்யற பிராஞ்சோட  மேனேஜர் மட்டுமில்ல. என் கூடப் பிறக்காத சகோதரர் மாதிரி. இப்ப சொல்லுங்க.. என்ன நடந்தது? எதுக்கு இவர ஏதோ குற்றவாளி மாதிரி ட்ரீட் பண்ணிக்கிட்டிருக்கீங்க?’ என்றான் சற்று எரிச்சலுடன்.

சற்று நேரம் பதிலளிக்காமல் அவனை கேலியுடன் பார்த்த அதிகாரி, ‘இவர் அவரோட அப்பாவ கொலை செஞ்சிருக்கார்...’ என்றார் நிதானமாக.

ஜோ.. ஒரு நொடி பேச்சற்று நின்றான்.. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘என்ன சார் சொல்றீங்க? அப்படீன்னு யார் உங்கக்கிட்ட சொன்னது?’

பதிலுக்கு அதிகாரி ராணியை நோக்கி சைகை செய்ய அப்போதும் தன்னை நிமிர்ந்து பார்க்க துணிவில்லாமல் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் ஜோ..

தொடரும்..

9.12.06

சூரியன் 151

சாதாரணமாக தினமும் காலையில் அலுவலக வளாகத்தில் நுழையும் முதல் வாகனம் ஃபிலிப் சுந்தரத்தினுடையதாகவே இருக்கும். அவரையடுத்து சுந்தரலிங்கம். அதற்குப் பிறகே சேதுமாதவன் வருவது வழக்கம். சேதுமாதவன் ஒருநாளும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் வந்ததாக சரித்திரமே கிடையாது. இது வங்கியிலிருந்த அனைவருமே அறிந்திருந்ததுதான்.

ஆனால் அன்றோ ஃபிலிப் சுந்தரத்தின் வாகனம் வளாகத்திற்குள் நுழைந்தவுடன்  அவருடைய பார்வையில் முதலில் தெரிந்தது சேதுமாதவனின் வாகனம்தான்.

‘தலைபோகிற விஷயமா இல்லாட்டி இந்த நேரத்துல இவர் இங்க வர மாட்டாரே’ என்று எண்ணியவாறு வாகனத்திலிருந்து இறங்கி தன்னுடைய அறைக்கு விரைந்தார்.

அறையை சென்றடைந்ததும் தன்னுடைய கைப்பெட்டியை மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் சேர்மன் மாதவனின் காரியதரிசியை இண்டர்காமில் அழைத்தார். அடித்துக்கொண்டே இருந்தது. ‘சாதாரணமா இந்த நேரத்துல வந்திருப்பாரே..’ என்று நினைத்தவாறு அறையை விட்டு வெளியேறி தன்னுடைய பிரத்தியேக அலுவலர்கள் அமர்ந்திருந்த அறைகளைப் பார்த்தார். ஒரேயொரு அதிகாரி மட்டும் அமர்ந்து கணினியில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவரையழைத்து, ‘மேல போயி சேர்மன் பி.ஏ வந்துருக்காரான்னு பார்த்துட்டு வாங்க.. அவர் இருந்தா என் கேபினுக்கு வரச்சொல்லுங்க.’ என்று பணித்துவிட்டு தன் அறைக்கு திரும்பினார்.

சுபோத்துக்கு நாடார் கேட்டிருந்த கடிதம் எங்கிருக்கிறதென்று தெரிய வாய்ப்பிருக்கிறது. அது நாடாருக்கு எதற்கென்று முதலில் அவருக்கு விளங்காவிட்டாலும் ஆலோசித்து பார்த்தபோது அதன் முக்கியத்துவம் புரிந்தது.

நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் நடந்துக்கொண்டிருந்த பனிப்போர் அவருக்கு மட்டுமல்ல வங்கியின் உயர் அதிகாரிகள் அனைவருக்குமே தெரிந்ததுதான். சோமசுந்தரத்திற்கு ஆதரவாக மூன்று, நான்கு இயக்குனர்கள் இருந்ததும் நாடாருக்கு ஆதரவாக நகரில் மிகப் பெரிய பாத்திரக் கடை வைத்திருந்த சிவசு எனப்படும் செட்டியார் மட்டுமே.

ஆகவே அந்த எண்ணிக்கையை கூட்டும் முயற்சியில் கடந்த ஆறு மாத காலமாகவே நாடார் இறங்கியிருந்தார் என்பதை ஃபிலிப் சுந்தரம் அறிந்திருந்தார்.

அவருடைய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் முந்தைய சேர்மனின் பதவிக் காலத்தில் வங்கியில் வருடாந்தர ஆய்வு நடத்த வந்திருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வின் இறுதி நாளன்று வங்கியின் முதல்வர் மற்றும் மூத்த இயக்குனர்கள் முன்னிலையில் இயக்குனர் குழுவில் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர்கள் இல்லாத குறையைச் சுட்டிக்காட்டியதுமே நாடாருடைய முகத்தில் தோன்றி மறைந்த மகிழ்ச்சியை ஃபிலிப் சுந்தரம் கவனித்தார்.

ஆனால் நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த வங்கியின் முதல்வர் இதனால் புதிதாக ஒரு பிரச்சினையை இயக்குனர் குழுவில் ஏற்படுத்த விரும்பாமல் ரிசர்வ் வங்கியின் கருத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துவிடும்படி தனக்கு உத்தரவிட்டதை நினைத்துப் பார்த்தார் ஃபிலிப்.

ஆனால் இயக்குனர் குழுவைக் கலந்தாலோசிக்காமல் அவர் அப்படி செய்தது குழுவிலிருந்த அனைவருக்குமே மனக்கசப்பை ஏற்படுத்தியது. வங்கியின் முதல்வர் தன்னுடைய அதிகார வரம்பை மீறிவிட்டார் என்றும் இனி அப்படியொரு சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இயக்குனர் குழு அடுத்த போர்ட் கூட்டத்தில் குழுவினரின் ஒட்டுமொத்த ஆதரவுடன் முன்வைக்கவே தன்னுடைய முடிவுக்கு வருத்தம் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானார் முதல்வர்.

அன்று முதலே அவர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் இயக்குனர் குழு குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிக்க நாளடைவில் மனம் வெறுத்துப்போய் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகி.. யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய முடிவை இயக்குனர் குழுவினருக்கு தெரிவிக்காமல் அவர் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அறிவித்துவிட்டு வெளியேற ரிசர்வ் வங்கியின் நேரடி கண்கானிப்பின் கீழ் வந்தது வங்கி.

ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக இயக்குனர் குழுவில் இருந்த சாம்பசிவத்தின் தலைமையில் இயக்குனர் குழுவின் மூத்த இயக்குனர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அடுத்த வங்கி முதல்வர் நியமிக்கப்படும் வரை வங்கியின் நிர்வாகத்தை அதனிடம் ஒப்படைத்தது.

வங்கியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் நடந்த இழுபறி போராட்டத்தில் சிக்கிக்கொண்டு எச்.ஆர் இலாக்காவின் தலைவர் என்ற முறையில் தான் அனுபவித்த இன்னல்களையும் இப்போது நினைத்துப் பார்த்தார் சுந்தரம்.

இந்த போராட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கடிதத்தைப் பற்றி நாடாரும் சரி சோமசுந்தரமும் சரி மறந்து போயிருந்தார்கள் போலிருக்கிறது. அதை மீண்டும் அவர்கள் இருவருடைய நினைவுக்குக் கொண்டுவருவதுபோல் அமைந்துவிட்டது யாருமே எதிர்பாராதிருந்த சோமசுந்தரத்தின் பதவி விலகல்..

ஆகவே ரிசர்வ் வங்கியின் இந்த கடிதத்தை வைத்துக்கொண்டு ஆதாயம் தேட இருவருமே முயல்வார்கள் என்று நினைத்தார் சுந்தரம்.

அதை தம்மால் தடுக்க முடியாதென்பதை அவர் உணர்ந்திருந்தாலும் சற்று தள்ளிப் போடவாவது முடியுமே என்று நின¨த்தார்.

அதற்கும் காரணமிருந்தது. இயக்குனர்கள் குழுவில் நகரத்தில் தொழில் நடத்தும் வழக்கறிஞர் ஒருவர் அங்கத்தினராக இருந்தால் வங்கியின் சட்ட ஆலோசகர்களின் பணியில் தலையிட்டு குற்றம் காண்பதில் குறியாயிருப்பார். அத்தகைய தலையீடு சில வழக்கறிஞர்கள் விஷயத்தில் தேவைதான் என்றாலும் பல மூத்த வழக்கறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்க வாய்ப்புண்டு. அத்தகைய சூழலில் அவர்களுடைய திறமையுள்ள சேவை வங்கிக்கு கிடைக்காமல் போய்விட வாய்ப்புள்ளது.

அதுபோலவேதான் தொழில் நடத்தும் தணிக்கையாளர் விஷயத்திலும். ஒவ்வொரு வங்கிக்கும் மத்திய தணிக்கையாளர் என்று ஒருவரும் கிளைகளுக்கு என்று ஒருவருமாக பல தணிக்கையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதுண்டு. இயக்குனர் குழுவில் அங்கத்தினராக இருக்கும் தணிக்கையாளர் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி அவர்களுடைய பணியில் தலையிட வாய்ப்புள்ளது. அதனால் சாதகத்தைவிடவும் பாதகமே விளைய வாய்ப்பு அதிகம் என்று நினைத்தனர் வங்கியின் உயர் அதிகாரிகள்.

‘சார்.. சுபோத் ஆஃபீஸ்ல இருக்கார்.ஆனா போன அரை மணி நேரமா அவர் சேதுமாதவன் கேபினுக்குள்ள இருக்காராம்.. ஈ.டி சார் வந்தவுடனே அவர கூப்ட்டு அனுப்புனாராம்.. என்ன, ஏதுன்னு யாருக்கும் தெரியல சார்..’

சுந்தரம் குழப்பத்துடன் தன் முன் நின்ற அதிகாரியைப் பார்த்தார். ‘என்ன சொல்றீங்க? சுபோத் ஈ.டி. கேபின்ல இருக்காரா?’ என்றவர் மேற்கொண்டு இவரிடம் விசாரிப்பதில் பயனில்லை என்று நினைத்து, ‘சுந்தரலிங்கம் சார் வந்துட்டாரான்னு பாருங்க.. அவங்க பி.ஏ.வ இண்டர்காம்ல கூப்ட்டு சார் ஃப்ரீயா இருக்காரான்னு கேட்டு சொல்லுங்க. அப்படியே சேர்மன் வந்துட்டாரான்னும் பாருங்க..க்விக்..’ என்று அவரை அனுப்பிவிட்டு சுந்தரலிங்கத்திடம் இதை சொல்வது உசிதம்தானா என்று சிந்திக்கலானார்.

*********

மாதவன் அலுவலகம் வரும் வழியெல்லாம் முந்தைய தின சந்திப்பில் காவல்துறை அதிகாரி தன்னிடம் கூறியதைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார்.

‘இந்த விஷயத்த யார்கிட்டயாவது பகிர்ந்துக்கணுமே.. அப்படி அந்த ஆஃபீசர் சொன்னது சரியாயிருந்தா பேங்க்ல வேற யாருக்காவது நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்.. அத எப்படி கன்ஃபர்ம் செஞ்சிக்கறது?’ என்று சிந்தித்தவர் வங்கி வளாகத்தில் அவருடைய வாகனம் நுழைந்ததும் ஃபிலிப் சுந்தரம்தான் இதற்கு ஏற்ற ஆள் என்று தீர்மானித்தார்.

ஆகவே அவர் தன்னுடைய அறையை அடைந்ததுமே இண்டர்காம் வழியாக தன்னுடைய காரியதரிசியை அழைத்தார்.

ஆனால் சுபோத்துக்கு பதிலாக அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி தயங்கி, தயங்கி அவருடைய அறைக்குள் நுழைவதைக் கவனித்தார். ‘Yes?’ என்றார் சற்று எரிச்சலுடன்.. ‘Where is Mr.Subodh?’

அவருடைய எரிச்சல் தொனித்த கேள்வி அவ்வதிகாரியை சற்று நிலைகுலையச் செய்ததை உணர்ந்த மாதவன் புன்னகையுடன், ‘don’t be upset.. is Mr.Subodh in the office or not?’ என்றார்.

‘He is with E.D. Sir..’

மாதவனின் புருவங்கள் வியப்பில் வளைந்தன.

‘Should I call him from his cabin Sir.’

மாதவன் புன்னகையுடன் வேண்டாம் என்று தலையை அசைத்தார். ‘Ask him to come to my cabin when he returns.’

‘Yes Sir..’

அப்பெண் அதிகாரி அறைக் கதவை மிருதுவாக மூடியவாறு வெளியேற மாதவன் யோசனையில் ஆழ்ந்தார். ‘What does Sethu want from Subodh? ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை ஏர்ப்போர்ட்டில் நடந்ததைக் குறித்தாயிருக்குமோ? பாவம் சுபோத்.. நாம கேக்கப் போயிதான அவன் அந்த பொய்ய சொல்ல வேண்டி வந்தது? I should do something to rescue the poor chap..’

****

‘Hey! Look here.. I don’t want your explanation..’ என்று எரிந்து விழுந்தார் சேதுமாதவன். ‘I was told that the letter is in your custody. Is it true or not.. Yes or No?’

சுபோத்துக்கு இவர் எந்த கடிதத்தைப் பற்றி கேட்கிறார் என்றே சற்று நேரம் புரியவில்லை..  

ரிசர்வ் வங்கியிடமிருந்து தினம் ஒரு கடிதமாவது வருவதுண்டு. இவர் கேட்பதோ ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்த கடிதத்தைப் பற்றி.

சாதாரணமாக ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கி முதல்வருக்கு எந்த கடிதம் வந்தாலும் சுபோத் அவருடைய பார்வைக்கு வைத்துவிடுவான். முந்தைய சேர்மன் கடிதங்களைப் படித்து அது எந்த இலாக்கா சம்பந்தப்பட்டது என்று அவரே தீர்மானித்து சம்பந்தப்பட்ட இலாக்கா தலைவரை அழைத்து அதைக் குறித்து விசாரிப்பார். பிறகு அவரே அதற்கு எப்படி பதிலளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்து உடனே பதிலை தயாரித்துக்கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிடுவார்.

அடுத்த அரை மணியில் பதிலைத் தயாரித்து அவருடைய மேசைக்கு எடுத்து வராவிட்டால் அவ்வளவுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மண்டகப்படிதான்.. அந்த சந்தர்ப்பங்களில் சுபோத்துக்கும் டோஸ் விழுவதுண்டு..

பதில் தயாராகி வந்ததும் அவரே ஒப்பிட்டு தன்னுடைய பிரத்தியேக அலுவலக முத்திரையைத் தாங்கியிருக்கும் உரையில் இட்டு மூடிய பிறகே சுபோத்திடம் கொடுத்து, ‘It should be delivered at the RBI’s Chennai Office by hand.. Send a person immediately.’ என்று உத்தரவிடுவார். பதிலின் நகலை அப்போதே தன்னுடைய பிரத்தியேக சிப்பந்தியை அழைத்து தன் பொறுப்பில் இருந்த கோப்புகளில் file செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அந்த கோப்புகளும் அவருடைய பொறுப்பில் இருந்த அலமாரியில் மட்டுமே வைக்கப்படும். அதன் சாவியையும் கூட சுபோத்திடம் கொடுத்ததில்லை. அவர் விடுப்பிலோ அல்லது அலுவலக விஷயமாக சுற்றுப் பயணம் சென்றாலோ ஃபிலிப் சுந்தரம் சாரிடம் மட்டுமே கொடுப்பார்.

இப்படியிருக்க இவர் கேட்கும் கடிதம் இப்போது எந்த கோப்பில் இருக்கிறதென்றே தெரியாத என்னிடம் கேட்டு என்ன பயன்? இதை இவரிடம் எப்படி எடுத்துரைப்பது என்று எண்ணி மாய்ந்துப் போனான் சுபோத்..

‘என்ன மேன்.. Don’t try to act too smart.. Go and search for that letter.. It should have come between May and June this year.. If I don’t get that letter in another half an hour you’ll have to face the consequence.. Do you understand? Go..’ என்று சேதுமாதவன் எரிந்து விழ அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்ற நிம்மதியில் அறை வாசலை நோக்கி விரைந்தவனை ‘Hey.. listen..’ என்று தடுத்து நிறுத்தினார். ‘No one should know that I asked for that letter. Is that clear?’

அவருடைய உத்தரவின் உட்பொருள் புரிந்ததோ இல்லையோ.. சரி என்று தலையை அசைத்துவிட்டு ஒரே பாய்ச்சலில் அறையை விட்டு வெளியேறினான் சுபோத்..

தொடரும்..

8.12.06

சூரியன் 150

‘டேய்.. செல்வம்.. என்ன நீ.. இன்னும் கெளம்பாம இருக்கே?’ என்றவாறு வீட்டிற்குள் நுழைந்த நாடாரைப் பார்த்தான் செல்வம்.

‘கெளம்பிக்கிட்டேருக்கேன்மாமா... ராத்திரி கடைசி வண்டிக்குத்தான் டிக்கட் இருந்தது. அதான்.. எப்படியும் பத்து மணிக்குள்ள போய் சேர்ந்துருமே..’

சமையலறைக்குள் வேலையாயிருந்த ராசாத்தியம்மாள் எட்டி தன் கணவரைப் பார்த்தாள். ‘இப்ப எதுக்கு அவனெ ஊருக்கு அனுப்பறீங்க.. இன்னைக்கி காலைலதான வந்தான்?’

நாடார்  சமையலறையை நோக்கி பார்த்தார். ‘ஏய்.. ஒன் வேலை சோலிய மட்டும் பாரு.. நா ஏதாவது செஞ்சா அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு தெரியுமில்ல?’

‘ஆமாம்.. பெரிய காரணம் இருக்கும்..’ என்றவாறு ராசாத்தியம்மாள் முனுமுனுத்தது காதில் விழுந்தும் அதை பொருட்படுத்தாமல் சோஃபாவில் அமர்ந்து ஹாலையொட்டியிருந்த அறையில் அமர்ந்து  கணினியில் மும்முரமாய் இருந்த தன் மகளைப் பார்த்தார். ‘என்னத்த தாயி இவ்வளவு மும்முரமா.. அப்பன் வந்ததக் கூட சட்டெ பண்ணாம?’

ராசம்மாள் திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். பிறகு பதிலளிக்காமல் தன் பணியைத் தொடர்ந்தாள்.

நாடார் தன் மருமகனைப் பார்த்தார். ‘என்னடா?’ என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.

செல்வம் சிரித்தான். ‘ராசிக்கு அவ பெயர் பிடிக்கலையாம்.. பட்டிக்காடு மாதிரி இருக்காம். அதான் ராசி, இல்லன்னா ராஜின்னு சுருக்கிரப் போறாளாம். அதுக்கு நம்ம மோகன் சார் ஒரு அப்ளிக்கேஷன் குடுத்தார். அதத்தான் ராசி.. கம்ப்யூட்டர்ல ஏத்தி அடிச்சிக்கிட்டிருக்கா.

நாடார் வாய்விட்டுச் சிரித்தார். ‘என்னம்மா இது விபரீத ஆசையாருக்கு.. பேர்ல என்ன இருக்கு.. பைத்தியக்காரப் புள்ள.. ஏண்டா இதுக்கு நீயும் ஒத்து ஊதறியாக்கும்?’

செல்வம் இல்லையென்று தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான். ‘மாமா.. நா கெளம்பறேன்.. நீங்க வந்ததும் சொல்லிக்கிட்டு கெளம்பலாம்னுதான் இருந்தேன்.. நா போய்ட்டு ரெண்டு, மூனு நாளைல வந்துடறேன்.. செல்வி நா சொன்னத கேட்டு எங்கூடவே பொறப்பட்டு வந்தா சரி.. இல்லையா நா மட்டும் பொறப்பட்டு வந்துருவேன்..’

புன்னகையுடன் தன் மருமகனைப் பார்த்துக்கொண்டிருந்த நாடார் சீரியசானார். ‘டேய்.. எடுத்தேன் கவுத்தேன்னு எதையாவது செஞ்சிட்டு வந்து நிக்காத.. அதுக்கெதுக்கு ஊருக்கு போறே.. இங்கருந்தே போன்ல பேசிரவேண்டியதுதான? முட்டாப் பய.. நின்னு நிதானமா எடுத்துச் சொல்றத விட்டுட்டு ரெண்டு நாளைல வரானாம்.’ என்றவர் எழுந்து தன் மருமகனின் தோள்களில் கைகளை வைத்தவாறு தொடர்ந்தார். ‘இங்க பார்றா.. நீ குடும்பத்தோட இங்க வர்றதுதான் முக்கியம்.. இனியும் நீ அங்கயும் நா இங்கயுமா இருக்க முடியும்னு எனக்கு தோனல.. அதனால செல்விய மட்டும் இதுக்கு சம்மதிக்க வச்சா போறாது.. அவ அப்பன், ஆத்தாளையும் சம்மதிக்க வைக்கணும்.. அதுக்குத்தான் ஒன்னெ நேரா அனுப்பறேன்.. செல்விய பத்தி எனக்கு தெரியும்.. வாயடிச்சாலும் புத்திசாலிப் பொண்ணு.. அவ அப்பன்? அவன் ஒரு வாயில்லா பூச்சி.. சரின்னும் சொல்லமாட்டான்.. முடியாதுன்னும் சொல்ல மாட்டான்.. அவ ஆத்தா அப்படியில்ல.. பணத்தாச புடிச்சவ.. அதனால.. எடுத்தோம் கவுத்தோம்னு பேசிராத.. அவ ஆத்தா இல்லாத நேரத்துல நீ ஒம் பொஞ்சாதி கூட பேசு.. நிதானமா சொன்னா ஏத்துக்குவா.. ஆரம்பத்துல முரண்டு பிடிச்சாக் கூட நீ பொறுமையா இருக்கணும்.. ஒன்னால முடியலையா எனக்கு ஃபோன் பண்ணு.. நானும் பொறப்பட்டு வாரன்.. நா சொன்னா அந்த பொண்ணு கேக்கும்.. என்ன சொல்றே? ஒன் குடும்பத்த பிரிச்சி இங்க ஒன்னும் ஆயி பிரயோசனம் இல்லடா.. அத புரிஞ்சிக்கோ..’

செல்வம் தலையைக் குனிந்தவாறு, ‘சரி மாமா.. புரிஞ்சிது.. நா கெளம்பறேன்.’ என்று பதிலளித்துவிட்டு சமையலறையிலிருந்த ராசாத்தியம்மாளிடம் கூறிக்கொண்டு புறப்பட்டான். ராசம்மாள் எழுந்து அவனுடன் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு அவனை ஏற்றிச் சென்ற வாகனம் கேட்டைக் கடக்குவரை பார்த்துக்கொண்டே நின்றாள்.

‘இவன் ஏதாச்சும் அவசரப்பட்டு செஞ்சிராம இருக்கணும்..’ என்ற தன் தந்தையைப் பார்த்தாள்.

‘அப்படியொன்னும் நடக்காதுப்பா.. நா ஃபோன்ல பேசினப்பவே செல்வி சம்மதிச்சா மாதிரிதான் எனக்கு பட்டுது.. நீங்க வாங்க..’ என்றவாறு அவள் வீட்டிற்குள் திரும்ப நாடார் அவளைத் தொடர்ந்தார்.

ஹாலிலிருந்த சோபா ஒன்றில் அமர்ந்த ராசம்மாள் தன் தந்தையைப் பார்த்தாள். ‘அவசரமா மோகன் அங்கிள பாக்கணும்னு கெளம்பி போனீங்களேப்பா.. என்ன ஆச்சி?’

நாடார் பதிலளிக்காமல் சமையலறையைப் பார்த்தார். ‘ஏய்.. என்னமோ கல்யாண விருந்து சமைக்கறமாதிரி அங்கனயே நிக்கே..  பசி வயித்த கிள்ளுது.. சாப்பாட்ட எடுத்து வை..’ என்றவர் தன் மகளைப் பார்த்தார். ‘நீ என்னம்மா கேட்டே?’

‘மோகன் அங்கிள பாத்தீங்களா? என்ன சொன்னாங்க? அந்த சேட்ட பாத்தாங்களாமா?’

நாடார் கால்களை மடக்கி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். ‘பாக்காம இருப்பாரா? பாத்து எல்லாம் பேசி முடிச்சாச்சு.. நல்ல வேள நா காலையிலயே தம்பிக் கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.. இல்லன்னா..’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்றீங்க?’

‘ஆமாம்மா.. ஒம் புருசனும் ஒம் மாமனும் இடையில பூந்து குட்டைய கெளப்ப பாத்திருக்கானுக.. நல்ல வேளை.. அந்த சேட்டு மசியல..’

‘மாமாவா? அவரும் இங்கயா இருக்கார்?’

‘ஆமா, ஆமா.. நா நேத்தைக்கி சாயங்கால அவன் வீட்டுல போயி சத்தம் போட்டேன்லே.. அதான் பய ரோசத்தோட நாம கெளம்பி வந்தா மாதிரி ப்ளசர போட்டுக்கிட்டு வந்துருக்கான். அவன் ஒரு வக்கீலையும், ஆடிட்டரையும் வச்சிருக்கான்லே.. அந்த கிறுக்குப் பயல்க பேச்சைக் கேட்டு ஒம் புருசன் செஞ்ச மடத்தனந்தான் நம்ம கம்பெனி சேர வித்ததும் நம்ம பேங்க்ல போயி அந்த லெட்டர குடுத்ததும்.. நல்ல வேளயா அந்த பேங்க் மேனேஜர் கொஞ்சம் காசுக்கு அலையற பயலா போய்ட்டான். அது நம்ம ஆடிட்டருக்கு தெரிஞ்சிருக்கு..  குடுக்க வேண்டியது குடுத்து ஒம் புருசன் குடுத்த லெட்டர் வந்ததாவே மனுசன் காட்டிக்கிறல.. நாம ஒம் புருசனையும், மாமனையும் கம்பெனியிலருந்து தூக்கறதா குடுத்த லெட்டர வாங்கிக்கிட்டு அந்த பயலுக மேக்கொண்டு ஒன்னும் செய்ய முடியாத படி செஞ்சிட்டார்.. அந்த சேட்டு.. நம்ம கம்பெனி சேர நமக்கே விக்கறதுக்கு மேல காசு கேட்டுருக்கான்.. ஆனா நம்ம மோகன் தம்பி.. அத நீங்க வாங்குனாலும் அத எங்க கம்பெனி போர்ட் ரிஜிஸ்த்தர் பண்ணிக்க முடியாது.. ஏன்னா இது பிரைவேட் லிமிடட் கம்பெனின்னு ஒரு மிரட்டு மிரட்டியிருக்கார். சேட்டுக்கு மேல யோசிக்கறதுக்கு டைம் குடுக்காம அவன் கேட்டதுக்கு மேலயே குடுத்து ஒரே அமுக்கா அமுக்கிட்டாரு.. அந்த சேர் பத்திரமெல்லாம் இப்ப அவர் கையிலதான்.. களவாணிப் பயலுகம்மா அந்த ரெண்டு பேரும்.. இனிமேலும் வாலாட்டுனாலும் வாலாட்டுவானுங்க.. அதான்.. ஹைகோர்ட்ல ஒரு காவியத்தோ என்னவோ பைல் பண்ணி வச்சிரலாம்னு மோகன் தம்பி சொல்லிச்சி.. சரி.. என்னத்தையோ செய்யிங்க.. பிரச்சினை வராம இருந்தாச் சரின்னு சொல்லிட்டு வந்தேன்.. இனி அவர் பாடு அந்த பயலுவ பாடு..’

சமையலறையிலிருந்தவாறே நாடார் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த ராசாத்தியம்மாளுக்கு விவரம் முழுவதுமாய் புரியவில்லையென்றாலும், ‘இதெல்லாம் தேவைதான்.. புருசன் பொஞ்சாதி சண்டைக்கு நடுவுல வக்கீலு நொளஞ்சா உருப்பட்டாப்பலதான்.. என்னமோ போங்க..’ என்று முனுமுனுத்தவாறு தயாரான உணவை ஹாலின் கோடியிலிருந்த உணவு மேசையில் பரப்பலானாள்..
‘அது கெடக்கும்மா.. நா அந்த டாக்டர் பய போர்ட்லருந்து வெளிய போனான்னு சொன்னேன் இல்லே..?’ என்றார் நாடார் தன் மகளைப் பார்த்து.

‘அதான் சாயந்திரம் சொன்னீங்களேப்பா, அதுக்கென்ன?’

நாடார் சிரித்தார். ‘நான் அந்த பய எடத்துல நம்ம மோகன் தம்பிய நொளச்சிரலாம்னு பேசிக்கிட்டிருக்கேன், மூக்குல வேர்த்தாப்பல  அந்த பய ஃபோன் போட்டு.. எம் பொண்ணெ அந்த எடத்துக்கு கோப்ட் பண்ணணுங்கறான்?’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘யார்.. பூர்ணிமாவா?’

நாடார் கேலியுடன் சிரித்தார். ‘ஆமாம்மா.. ஒனக்கு பிரசவம் பார்த்துச்சே.. அதே பொண்ணுதான்..’

ராசம்மாள் அவரை முறைத்தாள். ‘அதுக்கெதுக்குப்பா நீங்க கேலியா சிரிக்கீங்க?’

நாடார் மேலும் உரக்கச் சிரித்தார். ‘பார்றா.. இதுக்கு வர்ற கோபத்தே? ஏன் ஒனக்கு புடிச்ச பொண்ணுன்னா?’

‘அதெல்லாம் இல்லை.. அவங்களுக்கு இருக்கற படிப்புக்கும், திறமைக்கும் அவங்கப்பாவ விட நல்லாவே பெர்ஃபார்ம் பண்ணுவாங்க..’

நாடார் சிரிப்புடன் தன் மகளைப் பார்த்தார். ‘ஏய்.. ஏது.. விட்டா என்னையும் விடன்னு சொல்லிருவ போலருக்கு?’

ராசம்மாள் பொய்க் கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஏன்.. அதுவும் உண்மைதான்..’

நாடார் சிரித்தார். பிறகு எழுந்து நின்றார். ‘அம்மா போதும்மா.. விட்டா நீயும் அந்த பொண்ண மாதிரியே ஒங்க எடத்துல நா இருக்கறம்ப்பான்னு சொல்லாம இருந்தாச் சரி.. நா போயி குளிச்சிப் போட்டு வாரேன்.. சாப்புடுவோம்..’ என்றவாறு அவர் மாடிப்படிகளில் ஏற.. ‘அதானே.. இதுவும் நல்ல யோசனையாவுல்ல இருக்கு?’ என்ற நினைத்தவாறு அவரைப் பார்த்தாள் ராசம்மாள்.

********

மைதிலி வீடு வந்து சேர்ந்தபோது இரவு எட்டைக் கடந்திருந்தது.

அவள் தினமும் இந்நேரத்தில் வருவது வழக்கம்தான் என்றாலும் அவள் வீட்டில் நுழைந்ததுமே, ‘எங்கடி போயிருந்தே? இன்னைக்கி ஆஃபீசுக்கும் போலியாமே நீ?’ என்றாள் அவளுடைய தாய் ஜானகி.

‘சரி.. சரி.. ஆரம்பிச்சிராத.. அவ போய் கை கால் அலம்பிண்டு வரட்டும்.. நிதானமா பேசுவோம்..’ என்றவாறு தன் மகளைப் பார்த்தார் பட்டாபி. ‘நீ போய்ட்டு வாம்மா, ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்.’  

மைதிலி இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். கையிலிருந்த ஹெல்மெட்டை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு தன் தந்தையினருகில் அமர்ந்தாள். ‘எனக்கும் ஒங்க ரெண்டு பேர்  கிட்டயும் ஒரு விஷயம் பேசணும்..’ என்றவாறு தன் தாயைப் பார்த்தாள்.. ‘நீயும் ஒக்காரும்மா..’

பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். என்னவாருக்கும் என்பதுபோல் புருவங்களை உயர்த்தினார். எனக்கென்ன தெரியும் என்பதுபோல் ஜானகி உதட்டைப் பிதுக்கியவாறு தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடீ சொல்றே?’ என்றாள்.

‘சரி.. அதிருக்கட்டும்.. நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்ல வந்தேள்.. அதச் சொல்லுங்கோ..’ என்றாள் மைதிலி.

பட்டாபி ‘நீயே சொல்லு’ என்பதுபோல் தன் மனைவியைப் பார்த்தார்.

‘சரி.. சொல்றேன்.. ஒனக்கு காப்பி ஏதாச்சும் வேணுமா?’ என்றாள் ஜானகி.

‘தாங்ஸ்மா.. கொண்டாயேன்.. இன்னைக்கி என்னமோ பயங்கர டிராஃபிக்.. சயான்லருந்து வீட்டுக்கு வர்றதுக்கே ஒரு மணி நேரம் ஆயிருக்குன்னா பாத்துக்கயேன்..’ என்றாள் மைதிலி.

ஜானகி சமையலறையிலிருந்து கையில் காப்பியுடன் வந்து மைதிலியிடம் கொடுத்துவிட்டு சுவரில் சாய்ந்து நின்றவாறு அவளைப் பார்த்தாள். ‘வேற ஒரு நல்ல எடம் வந்திருக்கு.’ என்றாள்.

மைதிலி பருகிக் கொண்டிருந்த ஒரு வாய் காப்பியுடன் நிறுத்திவிட்டு தன் பெற்றோரைப் பார்த்தாள். ‘என்னம்மா சொல்றே.. நேத்து ஒருத்தர் வந்துபோயி இன்னும் முழுசா ஒரு நா கூட ஆவலை.. அதுக்குள்ளேயே.. என்னெ நீ என்னன்னு நினைச்சிக்கிட்டிருக்கே.. டெய்லியொரு எக்சிபிஷன் காட்டறதுக்கு?’ என்றாள் கோபத்துடன்.

பட்டாபி அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவளுடைய கரங்களைப் பற்றினார். ‘இல்லம்மா.. இவா கிட்ட ஒன்னெ பத்தி எல்லாத்தையும் சொல்லியாச்சு.. அவாளும் சரின்னு ஒத்துண்டுட்டா..’

அவர் கூறி முடிப்பதற்குள் கோபத்துடன் குறுக்கிட்டாள் மைதிலி. ‘என்னப்பா சொல்றேள்.. என்னைய பத்தி எல்லாத்தையும் சொல்லியாச்சுன்னா? அதுக்கென்ன அர்த்தம்?’

பட்டாபி ஆயாசத்துடன் தன் மனைவியைப் பார்த்தார்.. என்னடி நீ பார்த்துண்டு நிக்கறே என்பதுபோல்..

‘மைதிலி புரியாத மாதிரி பேசாத.. அப்பா என்ன சொல்ல வறார்னு நோக்கு தெரியாதாக்கும்..?’ என்றாள் ஜானகி.

மைதிலி தன் கரங்களைப் பற்றியிருந்த தன் தந்தையின் கைகளை விலக்கிவிட்டுவிட்டு எழுந்து நின்றாள். ‘சரி.. நீங்க சொல்ல வந்தத சொல்லிட்டேள்.. இப்ப நா சொல்ல வந்தத சொல்லிடறேன்..’

பட்டாபியும், ஜானகியும் அச்சத்துடன் அவளைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், ‘நானும் சீனியும் மேரேஜ் செஞ்சிக்கறதா டிசைட் செஞ்சிருக்கோம்.. அவன் கூடவே சென்னைக்கு போயிடறதாவும் முடிவு பண்ணிருக்கேன்.. ஒங்களையும் கூட்டிக்கிட்டு..’ என்ற மைதிலி தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாளிட திகைத்துப் போய் நின்றனர் பெற்றோர் இருவரும்.

*****

மாணிக்கவேல் வாகனத்தை போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டு இறங்கியபோது வீடு இருளில் மூழ்கியிருந்ததைப் பார்த்து, ‘எங்க போய்ட்டான் இந்த சந்தோஷ்..  ஒரு லைட்டையும் போடாம? வாசக்கதவும் திறந்து கெடக்கு?’ என்று நினைத்தவாறு திறந்துகிடந்த வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்.

தரைதளத்தில் ஹாலின் கோடியிலிருந்து தன்னுடைய மனைவியின் அறையில் மட்டும் விளக்கெரிவது தெரிந்தது. எப்போதும் ஜீரோ வோல்ட் பல்பாவது எரிந்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தந்தையின் அறையும் இருளில் மூழ்கியிருக்க பதற்றத்துடன் அந்த அறையை நோக்கி நடந்தார்.

வாசல் கதவு வெளியில் தாளிட்டுக் கிடக்க திகைத்துப் போய் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவர் தன் தந்தையின் கட்டிலைப் பார்த்து, ‘ஐயோ மோசம் போய்ட்டமே..’ என்றவாறு அப்படியே சரிந்து அமர்ந்தார்..

அறையின் ஒரு கோடியில் குத்திட்டு அமர்ந்திருந்த சந்தோஷ்.. பேந்த, பேந்த விழித்துக்கொண்டு.. தன் தந்தையைக் கண்டதும்.. உதடுகள் துடிக்க, வார்த்தைகள் வராமல்..

தொடரும்..