29.4.06

சூரியன் 66

உடை மாற்றிக்கொண்டு படியிறங்கி வரவேற்பறைக்கு வந்த சேது மாதவன் வீட்டினுள் திரும்பி, ‘எடோ திரு. எந்தா செய்ன? ரெடியாயோ?’ என்று இரைந்தார்.

வீட்டினுள் இருந்து ஓடி வந்த திருநாவுக்கரசு, ‘சார் நானும் உங்களோட வரணுமா? சொல்லவேயில்லையே சார்.’ என்றான்.

சேது மாதவனுக்கு எரிச்சலாக வந்தது. ஒரு வேளை நாமதான் இவங்கிட்ட சொல்லவே இல்லையோ. இவன் இருக்கற கோலத்த பார்த்தா இவன் கிளம்பறதுக்குள்ள லேட்டாயிருமோ? சரி.. நாம மட்டும் போலாம்.

‘எடோ தானும் வரணும்னு நான் கொறச்செ மும்பு பறஞ்சில்லே..?’ என்றார் எரிச்சலுடன்.

‘இல்ல சார். சொல்லியிருந்தா இந்த கோலத்துல நிப்பனா? நான் மேடத்தோட ரூம க்ளீன் பண்ணி ரெடி பண்ணிக்கிட்டிருந்தேன் சார். இன்னம் கொஞ்சம் வேலையிருக்கு. நீங்க மட்டும் போங்க சார். கார தொடச்சி ரெடியா வச்சிருக்கேன். இன்னைக்கி சண்டே இல்லையா டிரைவரும் இல்லை.’

சேது மாதவன் அதையும் மறந்துபோயிருந்தார். அலுவலக டிரைவரை வரச் சொல்ல வேண்டும் என்று காலையில் நினைத்தார். எல்லாம் இந்த முட்டாள் சுரேஷால் வந்த வினை. அதிகாலையிலேயே ‘என் பொண்ண காணோம் சார்’னு கூப்டு எல்லா காரியத்தையும் கன்ஃப்யூஸ் பண்ணி விட்டுட்டான். இப்ப என்ன பண்றது? பேசாம  நாமளே வண்டிய எடுத்துக்கிட்டு போவேண்டியதுதான்.

‘சரிடோ.. நீ வீட்ட க்ளீன் பண்ணிட்டு என் ரூம்லருந்து ரெண்டு பாட்டில எடுத்து கூலர்ல வை. அப்புறம் ஒரு ரெண்டு மூனு பேர் சாப்பிடறா மாதிரி சமையல் பண்ணி வை. வெஜ், நான் வெஜ் ரெண்டும் வேணும். ஏழு ஏழரைக்குள்ள ரெடி பண்ணிரு. வீட்ல எல்லாம் இருக்கில்லே?’

திருநாவுக்கரசு திரு திரு என விழித்தான். என்னாச்சி சாருக்கு? இதையெல்லாம் காலையிலயே சொல்ல வேணாமா? மேடம் வந்ததுக்கப்புறம் எல்லாத்தையும் வாங்கிக்கிரலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தா இப்படி திடீர்னு குண்ட போடறாரு.

‘எந்தாடோ.. நீ முளிக்கிற முளிய பார்த்தா வீட்ல ஒன்னும் இல்லேன்னு தோனுது.’

ஆமா சார் என்பதுபோல் தலையைச் சொறிந்தான் திரு.

‘சரி.. தான் தாஜ் இல்லேங்கில் ச்சோழாவ்ல போய் அவசியமுள்ளதொக்க வாங்ச்சோ.. கேட்டோ.. பைசா உண்ட்டிலே..?’

திரு பிரகாசமானான். ‘இருக்குது சார். நீங்க போய்ட்டு வாங்க. நா எல்லாத்தையும் வாங்கி வச்சிடறேன்.’ என்றான் இந்த அளவுக்கு சார் விட்டாரே என்ற நினைப்பில்.

‘சரி. நான் ஏர்போர்ட்லருந்து சேர்மனோட ஹோட்டலுக்கு போய் அங்கருந்து கிளம்பறப்ப கூப்டறேன். நீ போய்ட்டு வேகம் வா..’ என்றவாறு வாசலை நோக்கி சென்றவர் நின்று , ‘எடோ யாராவது எனக்கு ஃபோன் பண்ணா ஏர்போர்ட்டுக்கு போயிருக்கேன்னு சொல்லிராத.. முக்கியமா நேத்தைக்கு வந்திருந்தாரே சுந்தரலிங்கம் அவர்கிட்ட. வேற யாராச்சும் ஃபோன் பண்ணா யாருன்னு கேட்டுட்டு என் செல்லுக்கு ஃபோன் பண்ணு. என்ன?’ என்றார்.

திருநாவுக்கரசு, ‘சரி சார்.’ என்றான் யோவ் இரு உனக்கு வேட்டு வைக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்தவாறு.

கையில் கார் சாவியுடன் சேது மாதவன் வெளியேறி வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு செல்ல திருநாவுக்கரசு உடனே ஹாலில் இருந்த தொலைப்பேசியில் சுந்தரலிங்கத்தை அழைத்தான். அவர் மேல் அவனுக்கு ஏற்கனவே அபிரிதமான மதிப்பு இருந்தது. அவரை ஒதுக்கிவிட்டு புது சேர்மனை வரவேற்க சேதுமாதவன் செல்கிறார் என்பதை அவன் ஊகித்திருந்தான்.

மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும் சேது மாதவன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற விஷயத்தை கடகடவென ஒப்பித்து முடித்து இணைப்பைத் துண்டித்ததும்தான் அவனுக்கு நிம்மதியாயிருந்தது.

ஊர விட்டு ஊர் வந்து பண்ணாத ஃப்ராடெல்லாம் பண்ணி எங்க ஊர்ஆளுங்களையே கவுக்க பாக்கறியா என்று தன்னுடைய முதலாளியை நினைத்துக் கறுவிக்கொண்டே சேதுமாதவன் கூறியிருந்த பொருட்களை வாங்க தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வேலையாயிருந்த வேலையாட்களிடம் கூறிக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான் திருநாவுக்கரசு..

*******

‘யார் சார் ஃபோன்ல? பேசி முடிச்சிட்டு நீங்களே சிரிச்சிக்கிறீங்க?’ என்ற பிலிப் சுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

‘நம்ம சேதுவோட சர்வெண்ட் திருநாவுக்கரசு.’

‘என்னவாம்?’

‘வேறென்ன? நம்ம சேது ஏர்போர்ட்டுக்கு இப்பத்தான் கிளம்பிப் போறாராம். நான் ஃபோன் பண்ணா அவர் ஏர்போர்டுக்கு போயிருக்கார்னு சொல்ல வேண்டாம்னு சொன்னாராம். எப்படி இருக்கு பாருங்க? அப்படியாபட்ட ஆளுக்கு இந்த மாதிரி சர்வெண்ட்..’

பிலிப் ஒன்றும் பேசாமல் சாலையைப் பார்த்தார். அவர்கள் இருவரும் சுந்தரலிங்கத்தின் வீட்டில் குளித்துவிட்டு திரும்பி விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அனாவசியமாக சேது மாதவனுடன் மோதுவதில் அவருக்கு விருப்பமில்லை.

திரும்பி தன்னுடைய நண்பரைப் பார்த்தார். ‘சார் அவர் ஏர்போர்ட்ல வச்சி அனாவசியமா உங்ககிட்ட ஏதாச்சும் பேசினாலும் நீங்க அத பொருட்படுத்தக்ககூடாது. புது சேர்மன் முன்னால அன்ப்ளெசண்ட் சீன் க்ரியேட் பண்ணவேண்டாம்னு பாக்கறேன்.’

சுந்தரலிங்கம் வியப்புடன் அவரைப் பார்த்தார். ‘என்ன பிலிப், என்னபத்தி உங்களுக்கு தெரியாதா? அதுவுமில்லாம நம்ம ரெண்டு பேருக்குத்தான் சேர்மன் புதுசு. சேதுவுக்கில்லை. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில முன்னாலயே ஏதோ பிரச்சினை இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான சேர்மன் அவரோட ஃப்ளைட் டீடெய்ல்ச யாருக்குமே சொல்ல வேணாம்னு அவரோட பழைய பி.ஏ கிட்ட சொல்லியிருக்கார். சேதுவுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை.’

பிலிப் சிரித்தார். ‘நீங்க வேற சார். நீங்க சேர்மனோட பழைய பி.ஏ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டா மாதிரி அவர் நம்ம பேங்கோட சேர்மன் செக்கரியேட்டுல கேட்டிருக்க மாட்டாரா?’

சுந்தரலிங்கம் அதானே எனக்கு ஏன் இது தெரியாம போயிருச்சி என்று நினைத்தவாறு மவுனத்துடன் தலையை அசைத்தார்.

அவர்களுடைய வாகனம் விமான நிலைய வாசலை நெருங்கவும் மாதவனின் மும்பை விமானம் வந்தடைந்த அறிவிப்பு விமான நிலைய ஒலிபெருக்கியில் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய இருவரும் பரபரப்புடன் நுழைவு சீட்டைப் பெற்றுக்கொண்டு நுழைந்ததும் அவர்களுடைய பார்வையில் பட்டது சேது மாதவனும் அவருடைய மனைவியும் தான்.

********

‘இங்க பார் சீனி. நான் சொல்றத கேளு. நான் எங்காத்துக்கு போய்ட்டு வர வரைக்கும் க்ளினிக்ல இரு. நான் ராத்திரி எந்நேரமானாலும் திருப்பி உங்க ஆத்துல ஒன்ன கொண்டு விட்டுட்டுத்தான் போவேன். அடம்புடிக்காம நா சொல்றா மாதிரி செய். இல்லன்னா இனி ஒன்ன பாக்க வரவே மாட்டேன். என்ன சொல்றே?’

சீனிவாசன் அப்போதும் இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்திருந்தான்.

‘நீ இப்ப வரப்போறியா இல்லையா?’ என்று கோபத்துடன் இரைந்த மைதிலியை தலைநிமிர்ந்து பாராமல், ‘இல்ல மைதிலி நீ உங்க வீட்டுக்கு போ. சிவகாமி மாமி இன்னும் ஒரு அரை மணியில வந்திருவாங்க. என்ன பத்தி கவலைப்படாம நீ போ.. உங்க வீட்ல அப்புறம் என்னைய திட்டிக்கிட்டு இருப்பாங்க. மாமி வர்ற வரைக்கும் குர்க்கா இருக்கான் இல்ல? அவன் பார்த்துப்பான். ’ என்றான்.

மைதிலி விடுவதாய் இல்லை. அவளும் அவனருகில் சென்று புல்தரையில் அமர்ந்தாள். மாதவன் வீட்டு தோட்டத்தில் அவளுக்கு மிகவும் பிடித்தது மெத்தென்ற புல்தரைதான். ஆனால் அதுவும் அவளுக்கு இன்று முள்ளாய் குத்தியது. சீனிவாசன் இருந்த நிலையில் அவனைத் தனியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. வாசலில் நின்ற குர்க்காவால் எந்த பயனும் இல்லையென்று அவள் நினைத்தாள்.

சீனிவாசன் சலிப்புடன் தன் அருகில் அமர்ந்த மைதிலியைப் பார்த்தான். ‘Hey.. What happened? Are you not going?’

இல்லை என்று தலையை அசைத்தாள் மைதிலி. ‘நீ வர்றதானா போலாம். இல்லன்னா வேணாம். ஆனா ஒன்னு. நீ தாமசிக்கற ஒவ்வொரு நொடியும் அம்மாவும் அப்பாவும் அங்க டென்ஷனாயிட்டே இருப்பா, புரிஞ்சிக்கோ. மாப்பிள்ளையாத்துல வந்துட்டு திரும்பி போற சூழ்நிலை வந்துது.. அப்புறம் நாம ரெண்டு பேரும் சந்திச்சிக்கவே முடியாத சூழ்நிலை வந்தாலும் வந்துரும் சொல்லிட்டேன்.’

‘Now tell me. What should I do to prevent such a situation?’

மைதிலி குறும்புடன் அவனை திரும்பி பார்த்தாள். ‘பேசாம நா சொல்றத கேளு. புறப்பட்டு வா. நா வந்த டாக்சி இன்னும் வெளியதான் நிக்கிது. கிளம்பு.’

சீனிவாசன் சலித்தவாறே எழுந்து நிற்க முயன்று முடியாமல் கீழே விழப்போனான். மைதிலி சட்டென்று கைகளை நீட்டி அவனை அண¨த்துக்கொள்ள சீனிவாசன் அவளுடைய கைகளை உதறிவிட்டான். அவள் மீண்டும் அவனுடைய கைகளைப் பிடித்து தன் தோளில் சுற்றிப்போட்டுக்கொண்டு வாலை நோக்கி உதடுகளில் விரலை வைத்து விசில் அடிக்க வாயிலில் நின்ற குர்க்கா திரும்பிபார்த்தான்.

‘ஓ டாக்சிக்கோ அந்தர் பேஜ்னா’ என்று இருந்த இடத்திலிருந்தே மைதிலி இரைய குர்க்கா வாயில் கேட்டைத் திறந்து சாலையில் நின்ற டாக்சி ஓட்டுனருக்கு உள்ளே போ என்று சைகைக் காட்டினான்.

அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு டாக்சி  அடுத்த அரைமணியில்  செம்பூரில் இருந்த ராஜகோபாலன் மருத்துவமனை வாசலில் நின்றது. அதில் இருந்து சீனிவாசனை மெள்ள இறக்கி அவனுடைய இடுப்பை தன்னுடைய வலக்கரத்தால் வளைத்து  அணைத்தவாறே மைதிலி அழைத்துச் செல்ல அவ்வழியே கடந்து சென்ற ஒரு மாருதி எஸ்டீம் வாகனத்தில் இருந்த ஒரு குடும்பம் வாகனத்தை நிறுத்திவிட்டு  அவர்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தது.

‘ஏன்னா இது நாம பாக்கப்போற பொண்ணாட்டம் இல்லை? என்னன்னா இது கண்றாவி?’ என்றாள் மாப்பிள்ளையின் தாய்!


தொடரும்..

27.4.06

சூரியன் 65

தாம்பரம் தேவாலய வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை தெருவில் போவோர் எல்லோரும் ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவுக்கு இருந்தது.

மாணிக்க வேலின் அணுகுமுறை அவருக்கு வங்கியில் இருந்த எல்லா நிலைகளிலும் நண்பர்கள் இருந்தனர். சென்னையிலிருந்த அவருடைய வங்கிக் கிளைகளின் அனைத்து மேலாளர்களும் அவற்றில் பணிபுரிந்த சக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவருடைய தலைமையலுவலகத்தில் அவருக்கு பரிச்சயமான அதிகாரிகள், அலுவலர்கள் என சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கமலியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்று இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர்.

தேவாலய வளாகத்தில் நுழைந்து நின்ற வாகனத்திலிருந்து இறங்கியதும் ‘கூட்டத்த பார்த்தீங்களா பிலிப்?’ என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார் பிலிப் சுந்தரம். ‘ஆமாம் சார்.’ என்றார் வியப்புடன்.

அவருக்கும் பிரமிப்பாகத்தான் இருந்தது. இதற்கு முன்னர் தன்னுடைய வங்கியின் ஊழியர்களுடைய திருமணம் மற்றும் மரண வீடுகளுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த அளவு கூட்டத்தை ஒரு சேர பார்த்ததில்லை. எந்தவித பந்தாவுக்கும் ஆளாகமல் எளிமையாக பழகக்கூடியவர் மாணிக்க வேல் என்று கேள்விப்பட்டிருக்கிறார். அவருடைய எளிமையும் அவருடைய மகளுடைய வயதும் வங்கியில் அவரை அறிந்திருந்த அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இந்த கூட்டத்தில் அவரைத் தனியே சந்தித்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவிப்பது அவ்வளவு எளிதாயிருக்காது என்றும் நினைத்தார். இன்னும் அரை மணி நேரத்திலாவது கிளம்பினால்தான் சுந்தரலிங்கத்தின் வீட்டிற்கு திரும்பிச் சென்று குளித்துவிட்டு விமான நிலையத்துக்குச் செல்ல முடியும்.

வாகனத்தை ஓட்டுனர் கிளப்புவதற்கு முன் அவரை சைகைக் காட்டியழைத்து, ‘இங்கயே வாசல் கிட்டவே நிறுத்திக்குங்க. உள்ள போய்ட்டா ஃப்யூனரல் வண்டி போறவரைக்கும் நம்மால வெளியே வரமுடியாது போலருக்கு.’ என்றார்.

வாகனம் அவர்களை விட்டு செல்லவும் கோவில் நுழைவாயிலில் நின்றிருந்த ஒரு இளைஞன் தங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வருவதைப் பார்த்தார் பிலிப் சுந்தரம்.

‘சார் ஐ ம் ஜோ. நாந்தான் உங்கள ஃபோன்ல கூப்டேன். பல்லாவரம் ப்ராஞ்ச் அசிஸ்டெண்ட் மானேஜர்.’

பிலிப் சுந்தரம் திரும்பி சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். ‘சார் நாம இவர்கூடவே கோவிலுக்குள்ள போய் இந்த ரீத்த வச்சிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிரலாம்.’

ஜோ முன்னே செல்ல அவர்கள் இருவரும் தங்களைப் பார்த்ததும் மரியாதையுடன் அமைதியாய் வழிவிட்டு நின்ற வங்கி அலுவலர்களைக் கடந்து தேவாலயத்திற்குள் நுழைந்தனர்.

வரிசை வரிசையாய் போடப்பட்டிருந்த மர இருக்கைகளைக் கடந்து பலிபீடத்தின் முன்னே ஒரு பெஞ்சில் வைக்கப்பட்டிருந்த திறந்த சவப்பெட்டிக்குள் ஒரு தேவதையைப்போல் உதடுகளில் தவழ்ந்திருந்த புன்னகை மாறாத தோற்றத்தில் இருந்த அந்த இளம் பெண்ணின் சடலம் அவர்கள் இருவரையுமே சங்கடத்தில் ஆழ்த்தியது.

‘ஐயோ பாவம். இந்த சின்ன வயசுல இப்படியொரு மரணமா?’ என்று அங்கலாய்த்துப்போனார் பிலிப்.

சுந்தரலிங்கம் பெட்டிக்குள் கிடந்த சடலத்தைக் காண சகியாமல் தலையை குனிந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யலானார்.

சிறிது நேரம் கழித்து தலைநிமிர்ந்து மர இருக்கைகளின் முதல் வரிசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த மாணிக்க வேல் குடும்பத்தாரையே சில விநாடிகள் பார்த்தார்.

இவர்களிடம் போய் என்னவென்று பேசுவது? ஒரு சில வார்த்தைகளில் தேற்றிவிடக்கூடிய இழப்பா இது?

தன் அருகில் கண் மூடி தலைகவிழ்ந்து நின்றுக்கொண்டிருந்த பிலிப் சுந்தரத்தின் கரத்தைத் தொட்டு மாணிக்க வேலுவை நோக்கி சைகைக் காட்டினார். ‘அவர்கிட்ட என்ன சொல்றது பிலிப்? இந்த சூழ்நிலையில ஒன்னும் சொல்லாம போயிடறதுதான் நல்லதுன்னு தோனுது. What do you think?’

மவுனமாக ‘ஆமாம்’ என்று தலையையசைத்த பிலிப் நிமிர்ந்து மாணிக்கவேலையும் அவருடைய குடும்பத்தாரையும் பார்த்தார்.

தங்களை அழைத்துச் சென்ற ஜோ என்ற இளம் அதிகாரி மாணிக்க வேலின் தோளை லேசாகத் தொட்டு தங்களை நோக்கி சைகைக் காட்டுவதை இருவரும் கண்டனர்.

உடனே எழுந்து தங்களை நோக்கி வர முயற்சி செய்த மாணிக்க வேலுவை, ‘வேண்டாம்’ என்று சைகைக் காட்டிய பிலிப், சுந்தரலிங்கத்தை அழைத்துக்கொண்டு அவர் இருந்த இருக்கைக்குச் சென்று அவருடைய கரங்களைப் பற்றி ஆறுதலாக தட்டிக்கொடுத்தார். ‘கடவுளோட சித்தம்னு நினைச்சிக்குங்க மாணிக்கம். God will take care of your daughter. இந்த இழப்பையும் அவர்கிட்டவே ஒப்படைச்சிருங்க. இன்னைக்கி நம்ம புது சேர்மன் வர்றதுனால நானும் சிஜிஎம் சாரும் ஏர்போர்ட் போறோம். ஒரு வாரத்துக்கப்புறம் வீட்டுக்கு வரேன்.’ என்றவாறு அவருக்கருகில் அமர்ந்திருந்த அவருடைய மனைவியை நோக்கி கை கூப்பினார். ராணி அவர்கள் இருவரையும் பார்த்தும் பாராததுபோல நேர்குத்திய பார்வையுடன் அமர்ந்திருக்க பிலிப் சற்று தள்ளி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த சந்தோஷை நெருங்கி அவனுடைய தோளில் கைவைத்தார். திடுக்கிட்டு நிமிர்ந்த சந்தோஷின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் அவரை என்னவோ செய்ய அவனுடைய தலைமுடியை கோதிவிட்டு விட்டு மெள்ள நகர்ந்தார். அவரைப் பின்பற்றி சுந்தரலிங்கமும் வெளியேறி தேவாலய வாசலை நோக்கி நகர்ந்தனர்.

********

‘காலைல எத்தன தரம் படிச்சிப் படிச்சி சொன்னே? சரியா மூனு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொன்னவ இன்னமும் வரலை பார்.’

சமையலறையில் பரபரப்பாய் இருந்த ஜானகி அங்கிருந்தே, ‘நீங்க சும்மா சும்மா அதையே சொல்லி புலம்பிண்டிருக்காதேள். அவள மொபைல்ல கூப்டுங்கோ. அவா வர்றதுக்கு இன்னமும் நேரம் இருக்கில்ல?’ என்றாள்.

பட்டாபி எரிச்சலுடன், ‘அவதான் செல்ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருக்காளேடி. எங்க கூப்ட்டு தொலையறது?’ என்று முனகியவாறு ஹாலில் இருந்த தொலைப்பேசியை நோக்கி நகர்ந்தார்.

அவர் தொலைப்பேசியை நெருங்கவும் அது ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து ‘ஹலோ பட்டாபி’ என்றார்.

எதிர் முனையில் மைதிலியின் குரல் கேட்டதும், ‘ஏய் மைதிலி நீ பண்றது நன்னாருக்காடி? மணி இப்ப நாலாவப் போவுது. ஆத்துக்கு வந்து சேர்றத விட்டுட்டு எங்கருந்து ஃபோன் பண்றே?’ என்று இரைந்தார்.

சமையலறையிலிருந்தவாறு தன் கணவருடைய குரலைக் கேட்ட ஜானகி கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஹாலுக்கு ஓடிச்சென்று தன் கணவருடயை கையிலிருந்த ஒலிவாங்கியை வெடுக்கென்று பிடுங்கினாள். ‘நீங்க செத்த போய் ஒக்காருங்கோ. டென்ஷனாயி பிரஷர் ஏறிட்டா அப்புறம் அவா வந்திருக்கற நேரத்திலும் எதையாச்சும் சொல்லிண்டே இருப்பேள். நா பேசிக்கறேன்.’ என்றவள் ஒலிவாங்கியில், ‘எங்கடி மைதிலி இருக்கே? என்னது பாந்த்ராவா? என்னடி விளையாடறியா? இந்த நேரத்துல அங்க என்ன பண்ணிண்டிருக்கே?’ என்றாள்.

‘பாந்த்ராவா? பாத்தியாடி ஒம்பொண்ணுக்கு இருக்கற நெஞ்சழுத்தத்த? அந்த ஓட்ட ஸ்கூட்டிய ஓட்டிக்கிட்டு அவ்வளவு தூரத்துல வந்து சேர்றதுக்குள்ள பொழுது போயிரும். அவா வந்துட்டு திரும்பித்தான் போகப் போறா?’ என்று இரைந்த தன் கணவரைப் பொருட்படுத்தாமல் மைதிலி கூறுவதை கேட்பதில் குறியாயிருந்தாள் ஜானகி.

‘அம்மா, அப்பாவ பதட்டப்படாம இருக்கச் சொல்லு. நா சீனிய அவனாத்துல விட்டுட்டு வரத்தான் போனேன். அவனுக்கு கால்ல ஒரு ஃபிராக்சர் ஆயிருச்சி. நம்ம ராஜகோபாலன் அங்கிள்கிட்டத்தான் கூட்டிண்டு போனேன். திருப்பி வீட்ல விட்டுட்டு வந்திர்றலாம்னுதான் போனேன். ஆனா அவா வீட்ல யாருமே இல்ல. வீடும் பூட்டிக்கிடக்கு. வேலக்கார மாமியையும் காணோம். அதான் அவ வீட்டு வாசல்லயே நிக்க வேண்டியதா போச்சி. அதான் அவனையும் கூட்டிண்டு நம்மாத்துக்கு வரலாமான்னு கேக்கத்தான் கூப்டேன்.’

ஜானகிக்கு மைதிலி சொல்ல சொல்ல கோபம் ஏறிக்கொண்டே சென்றாலும் அடக்கிக் கொண்டாள். மாப்பிள்ளையாத்துலருந்து வர்ற நேரத்துல அந்த பிள்ளாண்டானயும் கூட்டிண்டு வரட்டான்னு கேக்கறாளே இவள என்ன பண்றது? இத இவர் கேட்டா பின்னே கேக்கவே வேணாம். வீட்டையே ரெண்டாக்கிருவார்.

ஆகவே தன் கணவரைப் பார்த்து, ‘ஏன்னா, செத்த நேரம் நீங்க ஸ்டவ்வுலருக்கற பாலை கிண்டிண்டு இருங்கோளேன். தீயற வாடை அடிக்குதே.’ என்றாள். ‘ஆமா, நீ இந்த பால்கோவாவ கிண்டலைன்னு யார் அழுதா? பொண்ணையே காணோம். இதுல சொஜ்ஜியையும் பஜ்ஜியையும் யார் சீந்தப் போறா?’ என்றவாறு சலிப்புடன் எழுந்து சென்ற பட்டாபியையே பார்த்துக்கொண்டிருந்த ஜானகி, ‘ஏண்டி பொண்ணே நோக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? பேசாம அந்த பிள்ளாண்டானை அங்கேயே விட்டுட்டு வந்து சேர். அவனையும் கூட்டிண்டு வந்து நின்னு எங்க மானத்த வாங்காத. இப்ப வர்றவா ஆச்சாரமான குடும்பமாம். தரகர் மாமா சொன்னார். என்ன சொல்றே?’

‘இல்லம்மா. அப்படி பண்ண முடியாது. வேணும்னா ஒன்னு பண்றேன். சீனிய மறுபடியும் ராஜகோபாலன் அங்கிளோட க்ளினிக்ல விட்டுட்டு வரேன். மாப்பிள்ளையாத்துலருந்து வந்துட்டு போனதும் அவன கொண்டு வீட்ல விட்டுக்கலாம். சரியா?’

ஜானகி சில நொடிகள் யோசித்தாள். கடங்காரி. அவ பிடிச்சதுக்கு மூனே கால்னுட்டு அப்பன மாதிரியே நிக்கறா. அவ யோசனைக்கு ஒத்துக்கலைன்னா பேசாம வரேன்னுட்டு வராமயே நின்னுக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அவா யோசனைப்படியே செஞ்சி தொலைக்கட்டும். ‘சரிடி.. அப்படியே செஞ்சிட்டு வந்து சேர். இன்னும் அரைமணியில அவா வர்றதுக்குள்ள வர்றமாதிரி வா.  வச்சிடறேன்.’

சமையலறையில் பாலைக் கிண்டி, கிண்டி அலுத்துப்போன பட்டாபி, ‘என்னடி, என்னவாம் ஒம் பொண்ணுக்கு? வர்றாளாமா? இல்ல அப்படியே அவனோடவே ஒடிப்போறேங்கறாளா?’ என்றார் எரிச்சலுடன்.

‘ஏன்னா, ஒங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா? பெத்த பொண்ண பத்தி பேசற பேச்சா இது? வந்துண்டே இருக்காளாம். நீங்க போயி குளிச்சிட்டு ரெடியாவுங்கோ. இன்னைக்கின்னு பார்த்து அந்த பாயிம்மா வராம மட்டம் போட்டுட்டா பாருங்கோ. நாளைக்கு வருவாளோன்னா பேசிக்கறேன்.’ என்ற ஜானகி படபடப்புடன் சமையலறையை நோக்கி நடந்தாள்..

தொடரும்..

21.4.06

சூரியன் 64

பாபு சுரேஷின் வீட்டிலிருந்து வெளியே வந்த தனபால் சாமி எஸ்.பி  செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியை செல் ஃபோனில் அழைத்து தான் ஒரு கேஸ் விஷயமாக ஆவடி காவல் நிலையத்திற்கு செல்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்று கூறவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

பிறகு புறப்பட்டு நேரே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சென்றடைந்தார்.

ஆனால் அவர் செய்த தவறு அவர் வருவதை முன்கூட்டியே அறிவிக்காததுதான்.

அவர் காவல் நிலையத்தை அடையவும் அவர் விசாரனை செய்ய நினைத்த இரு கைதிகளும் அவர்களுடைய வழக்கறிஞருடன் வெளியே வந்து அவர்களுக்கென காத்திருந்த வாகனத்தில் ஏறவும் சரியாக இருந்தது.

அவர் அவர்களைப் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் இருவரும் அவரைப் பார்த்துவிடவே சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு வாகனத்தில் ஏற வாகனம் விருட்டென்று புறப்பட்டுச் சென்றது.

வாகனம் தனபால் சாமியின் வாகனத்தைக் கடந்த போதும் அவர் அதில் இருப்பவர்களைக் கவனிக்கவில்லை.

அவர் காவல்நிலையத்திற்குள் நுழைய காவல்நிலைய ஆய்வாளரின் அறையிலிருந்து வெளியே வந்த உதவி ஆய்வாளர் விறைப்புடன் சல்யூட் அடித்துவிட்டு.  ‘வாங்க சார், ஏதாவது அர்ஜண்ட் விஷயமா?’ என்றார்.

‘என்ன மாலி அப்படி கேட்டுட்டீங்க? முக்கியமான வேலையில்லாம நா இவ்வளவு தூரம் வருவேனா என்ன?’ என்றார்.

‘என்ன ஏதாவது கேஸ் விஷயமா சார்?’

‘ஆமா. நான் ஒங்க எஸ்.பி கிட்ட கூட ஃபோன் பண்ணி சொல்லியிருந்தேனே? ஒங்க இன்ஸ்பெக்டர் இருக்காரா?’

‘இருக்கார் சார். இப்பத்தான் மினிஸ்டரோட பி.ஏ. கிட்ட டோஸ் வாங்குன கடுப்புல  இருக்கார். நீங்க வேணும்னா போய் பாருங்களேன்.’

தனபால் சாமி திகைப்புடன் எதிரே நின்றவரைப் பார்த்தார். ‘என்ன மாலி சொல்றீங்க? டோசா? எதுக்கு?’

உதவி ஆய்வாளர் மகாலிங்கம் அவரருகில் வந்து ரகசியக் குரலில் ‘வாங்க சார் சொல்றேன்’ என்று தன்னுடைய இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் உதவி ஆய்வாளரின் மேசைக்கு எதிரும் புதிருமாய் அமர்ந்ததும், ‘சார் நம்ம எக்மோர் எஸ்.ஐ காலையில ரெண்டு ரவுடிப் பசங்கள ரயில்வே ஸ்டேஷன்ல வச்சி அரெஸ்ட் பண்ணி விசாரிச்சதுல போன மாசம் அந்த மில் ஓனர் கடத்தப்பட்ட கேஸ்ல அந்த பயல்களுக்கு கனெக்ஷன் இருக்கறது தெரிஞ்சி ரெண்டு கான்ஸ்டபிள்களோட இங்க அனுப்பிச்சி வச்சார்.’

தனபால் சாமி இடைமறித்து, ‘அது யாரும் இல்ல மாலி. நாந்தான். காலைல டூர்லருந்து வந்து இறங்குனதும் இவனுங்கள பார்த்தேன். சந்தேகமா இருந்திச்சி. உடனே பீட் போலீஸ்மேன கூப்டு விசாரிக்க வச்சேன். அவன்க பேசுனதுல நம்பிக்கையில்லாம புக் பண்ணி இவன்களுக்கு ஏதாவது பெண்டிங் கேஸ்ல கனெக்ஷன் இருக்கான்னு பார்க்க சொன்னேன். அப்புறம்தான் நீங்க இப்ப சொன்னீங்களே அந்த கேஸ்ல தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சி இங்க அனுப்ப சொன்னேன். அந்த விஷயமாத்தான் நானும் வந்திருக்கேன். நீங்க அவன்கள விசாரிச்சீங்களா இல்லையா?’ என்றார் படபடப்புடன்.

‘விசாரிச்சோம் சார். அவன்கள விசாரிச்சதுல இதுல -------------- பேங்க் அதிகாரி.. சேது மாதவன்னு ஒருத்தர பேரும் அவரோட ஃபோன் நம்பரும் கிடைச்சது. அவருக்கு ஃபோன் போட்டோம். ஆனா அவர் பயங்கரமா கோபப்பட்டு இவனுங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லேன்னுட்டார்.’

‘அவர் சொன்னா? எங்க அவனுங்க? ரெண்டு போட்டா தானா வெளிய வந்துருது.’

உதவி ஆய்வாளர் சிரிப்பதைப் பார்த்து எரிச்சலுடன், ‘என்ன மாலி நா சீரியசா பேசிக்கிட்டிருக்கேன். நீங்க சிரிக்கறீங்க?’ என்றார்.

மகாலிங்கம் உடனே சீரியசானார். ‘சாரி சார். நான் உங்கள மதிக்காம சிரிக்கலே. அந்த ரெண்டு பயல்க மேலயும் எந்த கேசும் போட வேணாம்னு மேலிடத்துல உத்தரவு வந்து நாங்க அவனுங்கள ரிலீசே பண்ணியாச்சி. அதத்தான் சொல்ல வந்தேன்.’

தனபால் சாமி அதிர்ச்சியுடன் தன் எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘என்ன மாலி சொல்றீங்க? யார் அந்த மேலிடம்?’

மகாலிங்கம் மரியாதையுடன், ‘சார், வாங்க. நான் ஆய்வாளர்கிட்ட கூட்டிக்கிட்டு போறேன். அவரே மீதிய சொல்லுவார்.’ என்றவாறு எழுந்து நிற்க தனபால் சாமியும் எழுந்து அவருடன் ஆய்வாளர் அறையை நோக்கி நடந்தார்.

அவர்  அறைக்குள் நுழைந்ததைக் கூட கவனியாமல் தன்னுடைய டைரியில் எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆய்வாளர், ‘சார்’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்தார். சட்டென்று புன்னகையுடன் எழுந்து தன்னுடைய வலக்கரத்தால் விறைப்புடன் சல்யூட் வைத்தார். ‘வாங்க சார். என்ன திடீர்னு? ஒரு ஃபோன் போட்டிருக்கலாமில்லே? மஃப்டில வேற இருக்கீங்க? வேற எங்கயாச்சும் போற வழியில எட்டி பார்த்தீங்களா, இல்ல ஏதாவது பெர்சனல் விஷயமா?’

தனபால் புன்னகையுடன், ‘மெதுவா, மெதுவா. இத்தனை கேள்விங்களையும்  ஒரே நேரத்துல கேக்கறதிலருந்தே நீங்க ரொம்ப டென்ஷன்ல இருக்கீங்கன்னு தெரியுது. நான் வந்து பத்து நிமிஷமாவுது. ஒரு கேஸ் விஷயமாத்தான் இங்க வந்தேன். கொஞ்சம் சென்சிட்டிவான கேஸ். அதான் நானே மஃப்டியில வந்தேன். இவ்வளவு நேரம் உங்க எஸ்.ஐ.கிட்ட பேசிட்டுத்தான் வரேன். சொல்லுங்க, அந்த தடிப் பசங்கள விடச்சொல்லி எந்த மேலிடத்துலருந்து ஃபோன் வந்தது?’

ஆய்வாளர் வியப்புடன் தன்னுடைய உதவி ஆய்வாளரைப் பார்த்தார்.

அவர் மரியாதையுடன், ‘சார், அந்த ரெண்டு பேரும் எஸ்.பி சார் காலையில எக்மோர் ஸ்டேஷன்ல வச்சி புக் பண்ண ஆளுங்களாம்.’ என்றார்.

ஆய்வாளர் உடனே வியப்புடன், ‘அப்படியா? சொல்லவே இல்லையே?’ என்றவர் தொடர்ந்து, ‘ஆமா.. உங்க பேர சொல்லி விஷயம் உங்களுக்கும் பிரச்சினையா வரணுமா என்ன? தொலைஞ்சி போறானுங்க. விட்டுத் தொலைச்சிட்டு இருக்கற வேலைய பார்ப்போம்.’ என்றார் தனபாலைப் பார்ப்பதைத் தவிர்த்தவாறு.

தனபால் சாமி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். அவருக்குத் தெரிந்தவரை அந்த ஆய்வாளர் தமிழக காவல்துறையில் இருந்த நேர்மையான, கண்டிப்பான அதிகாரிகளுள் ஒருவர் என்று தெரியும். ஆனால் அவரே இத்தனை விரக்தியுடன் பேசுகிறார் என்றால் ஏதோ சீரியசாக நடந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்.

‘என்ன நடந்துச்சி சார் சொல்லுங்க. நான் கமிஷனர மதியானம் பார்த்து பேசினப்போ கூட எங்கிட்ட ஒன்னும் சொல்லலையே?’

ஆய்வாளர் இல்லை என்று தலையை அசைத்தார். ‘அவர் இல்ல சார். இது அதுக்கும் மேலே. நம்ம எஸ்.ஐ சொல்லியிருப்பாரே.. அந்த சேது மாதவனோ யாரோ.. அவர் அந்த பேங்கோட எம்.டியாம். அவங்க பேங்க்தான் நம்ம நிதியமைச்சரோட தொகுதியில லீட் பேங்க்காம். ‘ஏன்யா இந்த மாதிரி அரசாங்க திட்டங்கள்ல கிராமங்கள தத்தெடுத்து சலுகை கடன் வழங்கிக்கிட்டிருக்கற பேங்க்லருந்து கோடி கணக்குல கடன ஒருத்தன் வாங்கிட்டு ஏமாத்துவான். பேங்க் ஆளுங்க கைய கட்டிக்கிட்டு இருக்கணுமான்னு’ நிதியமைச்சர் பி. ஏ கேக்கறார் சார். என்ன பண்ண சொல்றீங்க?’

தனபால் சாமி கோபத்துடன், ‘அப்ப நாம எதுக்கு இருக்கோமாம். --- புடுங்கவான்னு கேக்கறதுதானே?’ என்றார்.

ஆய்வாளர் உரக்க சிரித்தார். ‘பரவாயில்லையே எஸ்.பி சார். நீங்கக் கூட இப்படியெல்லாம் பேசறீங்களே? நானும் அதையே மனசுல நினைச்சிக்கிட்டு கேட்டேனே சார். ஆனா அதுக்கு என்ன பதில் வந்தது தெரியுமா? யோவ் நீங்க என்னத்தையா கிளிச்சிருக்கீங்க? இது சிவில் கேஸ்.. எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னுதான சொல்லிருவீங்க? பேங்க்லருந்த வாங்குன கடன்ல தொழில் பண்றத விட்டுப்புட்டு இவனுங்க குடி, கூத்தின்னு அலைவானுங்க.. கோடி கணக்குல குடுத்துப்புட்டு பேங்க் ஆளுங்க கோர்ட்டு கேசுன்னு அலையணும் இல்லே.. ரெண்டு நாளைக்கு புடிச்சி வச்சதுல கதறிக்கிட்டு நிலுவையிலருந்ததுல பாதிய கட்டிட்டானாம் தெரியுமில்லே.. இத முதல்லயே செஞ்சிருக்க வேண்டியதுதானேன்னு. எப்படி இருக்கு? சொல்லுங்க.’

தனபால் சாமி என்ன பதில் பேசுவதென தெரியாமல் அமர்ந்திருந்தார்.

‘சரிய்யா. அந்தாளோட பொஞ்சாதிதான் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தான்னு சொன்னதுக்காக கேஸ் போடறா மாதிரி போட்டு நாட் ட்ரேசபிள்னு கேச முடிப்பீங்களா யார் எவர்னு தெரியாம பேங்க் எம்.டி வீட்டுக்கெல்லாம் போன் போட்டு மிரட்டுவீங்களாய்யான்னு கேக்கறாங்க. என்ன பண்ணட்டும் சொல்லுங்க? அதான் நமக்கு கேசுக்கா பஞ்சம்னு நினைச்சிக்கிட்டு அந்த கேச க்ளோஸ் பண்ணிட்டு அவனுங்கள விட்டுட்டோம்.’

சிறிது நேரம் பதில் ஒன்றும் கூறமுடியாமல் அமர்ந்திருந்த தனபால் சாமி திடீரென்று, ‘அந்த பேங்க் எம்.டி.யோட பேரு என்னன்னு சொன்னீங்க?’ என்றார்.

மகாலிங்கம் குறுக்கிட்டு, ‘சேது மாதவன், சார்.’ என்றார். ‘அவர் பேசுனதுலருந்து கேரளாக்காரர்னு தோனுது.’

‘அவரோட ஃபோன் நம்பர் நோட் பண்ணீங்களா?’

உதவி ஆய்வாளர்,ஆய்வாளரைப் பார்க்க, அவர், ‘எதுக்கு சார். விட்டுத் தொலைங்க. நிதியமைச்சரோட பி.ஏ அமைச்சருக்கு தெரியாம பேசியிருக்க மாட்டார். பேச்சுக்கு இடையில அவர் நிறுத்தி நிறுத்தி பேசுனதுலருந்தே அமைச்சர் அந்த ரூம்லதான் இருந்திருக்கார்னு தெரிஞ்சது. நீங்க வேற இத கிளறப் போயி.. எதுக்கு சார் வம்பு? இத்தோட விட்டுருங்க.’ என்று எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேறு வழியில்லாமல் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறினார் தனபால் சாமி.

தொடரும்..20.4.06

சூரியன் 62

காலையிலிருந்து வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாயிருந்த நளினி சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் சோஃபாவில் சரிந்து அமர்ந்து கண்களை மூடினாள்.

ஐந்து நிமிடம் அசையாமல் மனத்தை ஒருமுனைப் படுத்தி ஒருவகை தியானத்தில் ஆழ்ந்துப் போனாள். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பத்தை தான்  எதிர்பார்த்து காத்திருப்பதைப் போலவும் உணர்ந்தாள்.

ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்டுலம் கடிகாரத்தின் சிர்க், சிர்க் என்ற ஓசையைத் தவிர வீடு முழுவதும் அமைதியாய், நிசப்தமாய் அவளுடைய வேதனைகளுக்கு மருந்தாக.. மனதின் வேதனை கண்ணீராக மூடியிருந்த கண்களின் ஓரத்திலிருந்து வடிந்ததையும் பொருட்படுத்தாமல் சிலையாய் அமர்ந்திருந்தவளை எழுப்பியது அவளுடைய செல் ஃபோன் ஒலி.

‘சே எந்தா இது.. வெறத ஒரு சல்லியம் (தொல்லை)..’ என்ற முனுமுனுப்புடன் யாரென்று பார்த்தாள். நந்தகுமார்!

என்ன வேண்டும் இவனுக்கு? இனி அடுத்த வாரம்தான் என்று காலையில் சொன்னானே..?அவனுடைய தங்கை வருவதற்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கும். இந்த நேரத்தில் இவனுடன் பேசி மூட் அவுட் ஆகவா? எடுக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தாலும் அது தொடர்ந்து அடிக்கவே எடுத்து எரிச்சலுடன், ‘எந்தா நந்து?’ என்றாள்.

‘எந்தாடி ஏதோ நான் வேண்டாத்த சமயத்தே விளிச்சது போலே?’ என்ற பதிலுக்கு எரிச்சலுடன் வந்தது நந்துவின் குரல்.

சட்டென்று சுதாரித்துக்கொண்டு அமைதியாகப் பேசினாள் நளினி. ‘சரி.. போட்டே.. எந்தா விளிச்ச?’

‘நான் மெட்றாஸ் போறேன். நீயும் வரியான்னு கேக்கத்தான் கூப்டேன்..’

காலையில் அழைத்தபோது ஏதோ கொல்கொத்தாவில் பிரச்சினை நானும் மார்க்சிஸ்ட் பார்ட்டி சகாக்களும் மும்முரமாக டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்னு சொன்னார்! இப்ப என்ன திடீர்னு மெட்றாஸ் பயணம்? ‘எதுக்காம் இப்ப மெட்றாஸ் போறீங்க? அங்க போய் ஏதாச்சும் மறியல் பண்றதுக்கா?’

நந்து சிரித்தான். ‘சேச்சே.. நம்ம பல்லாவரம் மேனேசர் ஒனக்கு தெரியுமில்லே?’

‘பல்லாவரம் மேனேஜரா? யாரு? எனக்கு தெரியாது.’

நந்து சற்று எரிச்சலுடன், ‘எடி.. நாம கோயம்புத்தூர்ல இருந்தப்போ என் பிராஞ்சில என்னோட க்ளார்க்கா இருந்தாரே. ப்யூன் ப்ரோமோட்டி.. நம்ம பேச்ல நம்மளோட ஆபீசராக்கூட ஆனாரே..’

நளினிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. அப்போது அவரைப் பற்றித்தான் வங்கி முழுவதும் பேச்சாக இருந்தது. ஒரு கடை நிலை சிப்பந்தியாய் பணிக்கு சேர்ந்து சரியாக பத்தே வருடத்தில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர். அவருக்கு இப்ப என்ன?

‘அதே.. ஞாபகம் வந்திருச்சி. ஆமா அவருக்கு இப்ப என்ன?’

நந்துவின் குரலில் சட்டென்று ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்க தவறவில்லை அவள்.

‘அங்கோர்ட மோளானடி.. பதினைஞ்சி, பதினாறு வயசே உண்டாவுள்ளு.. இன்னு வெளுப்பிலெ (விடியற்காலையில்) மரிச்சி போயித்றெ.. கேட்டப்போ பயங்கர ஷாக்காயிப் போயி நளினி.. பாவம் ஆக் குட்டி பயங்கர மிடுக்கியாத்றெ..’

நளினிக்கும் முகம் தெரியாத குழந்தையானாலும் பதினைந்து வயதென்றதும் ‘ஐயோ.. மோளே..’ என்று தோன்றியது.

‘பட்சே (ஆனால்) ஃப்யூனரெல் எப்போழா?’

‘இன்னு வைந்நேரந்நானன்னா (மாலை) பறஞ்செ.. நமக்கு எத்தாம் பற்றில்லா (போய் சேர முடியாது)..’

‘அப்படியா? முடிஞ்சதுக்கப்புறம் போய் என்ன பண்றது?’

நந்துவின் குரலில் மீண்டும் எரிச்சல் எட்டிப் பார்த்தது. ‘இங்க பார் நளினி. அவர் என்னோட ஃப்ரெண்ட். நான் போறதா இருக்கேன். நீ வேணும்னா வா. க்ராஸ் கேள்வியெல்லாம் கேக்காத.’

நளினி யோசித்தாள். இரண்டு மூன்று நாட்கள் தன்னுடைய ஈகோவை கழற்றியெறிந்துவிட்டு அவனுடன் சேர்ந்து சென்று வந்தால் ஒரு வேளை இந்த மன முறிவுக்கு ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கலாமே. அவனுடன் போனால் என்ன?

‘சரி. ஞானும் வராம்.’ என்றாள்.

‘குட். நான் நம்ம ரெண்டு பேருக்கும் இங்கருந்தே நாளைக்கு அலெப்பில புக் பண்ணிடறேன். ஏசி கோச் கிடைக்காது. ஸ்லீப்பர்லத்தான் போவேண்டியிருக்கும். ஒனக்கு பரவாயில்லையா?’

நளினிக்கு சட்டென்று கோபம் வந்தது. ‘எதுக்கு அப்படி கேக்கறீங்க? உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கு மட்டும் இருக்காதா?’

நந்து கேலியுடன் சிரித்தான், ‘இல்லடி.. நீ சிஎம் கேடர் ஆச்சே.. அதான் கேட்டேன்.’

நளினி சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். ‘போதும் நந்து.. கேலி பண்ணாதீங்க. நீங்க எதுல பண்ணாலும் பரவாயில்லை. போர்டிங் எர்ணாக்குளம்னு பட்டும் போட்டு வாங்கிருங்க. நா இங்க உங்களோட ஜாய்ன் பண்ணிக்கறேன்.’

‘ஏய் வச்சிராத. அப்புறம் இன்னொரு விஷயம்.’

‘என்ன?’

‘நம்ம வந்தனா மேடம் இல்லே? அதான் நம்ம எச்.ஆர் ஹெட்..’

'ஆமாம்?’ நளினிக்கு வந்தனா மேடத்தின் மேல் ஒரு ஹீரோ வொர்ஷிப் இருந்தது. அவளுக்கு மட்டுமா? அந்த வங்கியிலிருந்த சகல பெண் ஊழியர்களுக்கும்தான்.

‘அவங்க சாவு வீட்டுக்கு போயிருந்ததுல ஷாக்காயி இப்ப ICUவிலாம். சீரியசா ஒன்னுமில்லையாம். அவங்களயும் பார்த்துட்டு வரலாம்.’

நளினிக்கு இப்பத்தாண்டா உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கே என்று நந்துவை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் அவளுடைய மனதில் ஒரு கோடியில் நந்துவின் இந்த திடீர் நல்ல குணத்துக்கு ஏதோ ஒரு காரணம் இருப்பது போல் தோன்றியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் ‘சரி நந்து. நா ஒரு நாலு நாளைக்கு லீவ் போட்டுடறேன். உங்களுக்கு ஏதாச்சும் ட்ரெஸ் பேக் பண்ணணுமா?’ என்றாள்.

‘வேணாம். இங்க இருக்கு. நான் பாத்துக்கறேன்.’ என்று நந்து இணைப்பைத் துண்டிக்க.. இந்த பயணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவராதா என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனாள்.

********

‘மைதிலி நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே?’ என்ற தன்னுடைய குடும்ப மருத்துவர் ராஜகோபாலனை வியப்புடன் பார்த்தாள் மைதிலி.

‘என்ன அங்கிள்?’

‘இன்னைக்கி ஒன்ன பொண்ணு பாக்க வர்றதா ஒங்கப்பா காலைல சொன்னாரே. நீ என்னடான்னா இந்த பையன பார்த்துக்கிட்ட இங்கயே ஒக்காந்திருக்கே? யார் மைதிலி இந்த பையன்?’

மைதிலி சிறிது நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். பிறகு, ‘சீனி என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அங்கிள். இன்னும் சொல்லப் போனா அதுக்கும் மேல.. இன்னைக்கி காலைல அவன் தாதர்ல ரோட்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு கேட்டதும் என்னால தாங்க முடியாமத்தான் அப்பாவும் அம்மாவும் தடுத்தும் நான் ஓடிப்போனேன். நான் மட்டும் போயிருக்கலைன்னா என்னாயிருக்கும்னு இப்போ யோசிக்கறேன்.’ என்றாள்..

‘ஏன் அந்த பையனோட பேரண்ட்ஸ் யாரும் இங்க இல்லையா?’

‘இல்ல அங்கிள். அவா எல்லாம் இன்னைக்கித்தான் சென்னைக்கு புறப்பட்டு போறா.. அந்த நேரத்துல இவனோட ஃப்ராக்சர பத்தி சொல்லவேண்டாம்னு சீனி ஃபீல் பண்ணான். அதான் நான் இங்க கூட்டியாந்தேன்.’

‘சரிம்மா. நீ செஞ்சது நல்ல காரியம்தான். ஒத்துக்கறேன். அதான் இப்ப பெரிசா ஒன்னுமில்லேன்னு ஆயிருச்சே? நீ அந்த பையன டாக்சியில ஏத்தி விட்டுட்டு ஆத்துக்கு போலாம்தானே? நீ இன்னைக்கி இங்கதான் இருந்தேன்னு உங்கப்பாவுக்கு தெரியவந்தா அவர் என்னையும் தப்பா நினைக்க சான்ஸ் இருக்கில்லே? இன்னைக்கி சாயந்திரம் நீங்களும் உங்க மிசஸ்சோட வாங்க டாக்டர். எனக்குன்னு பெரிசா சொந்தம்னு சொல்லிக்க இங்க வேற யார் இருக்கான்னு என்னையும் கூப்டுருக்காரே..?’

மைதிலி எழுந்து நின்றாள். ‘ஓக்கே அங்கிள். நா இவன அழைச்சிண்டு போயி அவனோட ஆத்துல விட்டுட்டு சரியா அஞ்சு மணிக்கெல்லாம் நம்மாத்துல இருப்பேன். மாப்ளையாத்துலருந்து ஆறு மணிக்குத்தான் வரேன்னு சொல்லியிருக்கான்னு அம்மா காலைல சொன்னா. அதனால நீங்க ஒர்றி பண்ணிக்காதேள். நா இன்னைக்கி இங்க சீனியோட வந்த விஷயம் அப்பாவுக்கு தெரியறதுல நேக்கொன்னும் ஆட்சேபணையில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சீனியை நன்னாவே தெரியும். நா அவனை அழைச்சிண்டு போலாமா அங்கிள்? ப்ளாஸ்டர என்னைக்கி பிரிப்பேள்னு சொன்னேள்னா நானே அழைச்சிண்டு வரேன்.’

இனி இவளிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்று நினைத்த ராஜகோபாலன் எழுந்து அவளுடன் சீனிவாசன் இருந்த அறைக்குச் சென்று அவனுக்கு மருத்துவம் பார்த்த எலும்பு முறிவு மருத்தவரை கலந்தாலோசித்துவிட்டு, ‘மிஸ்டர் சீனிவாசன். அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்காவது கால அசைக்காம இருக்கறது நல்லது. ஹேர் லைன் ஃப்ராக்சர்தான்னாலும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கறதுதான் நல்லது. ஒரு வாரத்துக்கப்புறம் வீட்டுக்குள்ள லேசா நடக்கலாம். ரெண்டு வாரம் கழிச்சி வந்தீங்கன்னா ப்ளாஸ்டர பிரிச்சிரலாம்.’ என்றவாறு மைதிலியைப் பார்த்தார். ‘You can now take him home Mythili’

‘சீனி நீ இங்கயே இரு.. நா போய் டாக்சியை கூப்டுண்டு வரேன்.’ என்ற மைதிலி ராஜகோபாலனைப் பார்த்தாள். ‘அங்கிள் எவ்வளவு பே பண்ணணும்னு சொன்னேள்னா நா செக் குடுத்துடறேன். கேஷ் கொண்டு வரலை.’

ராஜகோபாலன் மெல்லியதொரு புன்னகையுடன், ‘ரிசப்ஷன் கவுண்டர்ல கேளு மைதிலி. முடிஞ்சா இன்னைக்கி குடு. இல்லைன்னா நாளைக்கானாலும் பரவால்லை.’ என்றார்.

‘இல்லே அங்கிள். செக்தானே, இன்னைக்கே குடுத்துட்டு போறேன்.’ என்று பதிலளித்துவிட்டு வாசலை நோக்கி விரைந்தாள்.

தொடரும்19.4.06

சூரியன் 62

வாசலில் அழைப்பு மணி ஒலிப்பதை முதல் மாடியில் தன்னுடைய அறையிலிருந்து செவியுற்ற பாபு சுரேஷ் கையிலிருந்த துவாலையை கட்டிலில் வீசியெறிந்துவிட்டு பரபரப்புடன் படிகளில் இறங்கி வாசலை நோக்கி ஓடினார்.

ஆனால் ஹாலில் குளித்து உடை மாற்றி அமர்ந்திருந்த சுசீந்தரா அவரை முந்திக்கொண்டு சென்று வாசற்கதவைத் திறந்து தன் எதிரில் நின்றிருந்த புவனா மற்றும் அவளுடைய தந்தை தனபால் சாமியை மட்டும் கண்டு திகைத்துப் போய், ‘எங்கம்மா ரம்யா? அவ வரலையா?’ என்றாள்.

புவனா ஒரு குறும்பு புன்னகையுடன் விலகி நிற்க அவளுக்குப் பின்னால் தலையைக் குனிந்தவாறு நின்றுக்கொண்டிருந்த ரம்யாவை கையைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டாள்.

பாபு சுரேஷ் சுதாரித்துக்கொண்டு ‘வாங்க சார், வாம்மா.’ என்று இருவரையும் அழைத்தார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் ஹாலில் இருந்த சோபாவிற்கு அழைத்துச் சென்று அவர்கள் அமர்ந்ததும் அவரும் அமர்ந்து தன்னுடைய மகளையும் மனைவியையும் பார்த்தார்.

ரம்யா அப்போதும் தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்து தன் தாயை அணைத்தவாறே சமையலறையை நோக்கி நகர்வதைப் பார்த்துவிட்டு ஒரு லேசான புன்னகையுடன் திரும்பி தன் முன் அமர்ந்திருந்த புவனாவைப் பார்த்தார்.

‘நான் ஒனக்குத்தாம்மா தாங்ஸ் சொல்லணும். ஒன்ன தேடி வந்தவள வேற எங்கயும் விட்டுராம பிடிச்சி வச்சியே.. அதுக்கு உண்மையிலேயே ஒனக்கு தாங்ஸ்..’

புவனா கூச்சத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்ன அங்கிள் நீங்க. இதுக்குப் போயி... ரம்யா வந்து நின்ன மூடுல நானும் அவள வந்த வழியே திருப்பிப் போடின்னு சொல்லியிருந்தா.. அத நினைச்சிக் கூட பாக்க முடியல அங்கிள். நீங்க அப்பா கூட பேசிக்கிட்டிருங்க நான் ஆண்டிக்கிட்ட பேசிட்டு வரேன்.’ என்றவாறு தன் தந்தையைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள்.

அவள் சென்று சில நிமிடங்கள் ஆகியும் சோபாவில் அமர்ந்திருந்த தனபால் சாமியும் பாபு சுரேஷ¤ம் ஒன்றும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு தனபால் சாமி, ‘சோ.. எப்படி இருக்கீங்க பாபு?’ என்றார்.

‘ஃபைன் தாங்க்யூ.’ என்று சற்று தயக்கத்துடன் பதிலளித்த பாபு அவர் இத்துடன் எழுந்து போய்விட மாட்டாரா என்று நினைத்தார்.

ஆனால் தனபால் சாமி அவ்வளவு விரைவில் சென்றுவிட தயாராக இல்லை என்பது அவர் சோபாவில் சாய்ந்து அமர்ந்ததிலிருந்தே தெரிந்தது..

காலையில் வந்த ஆளிடம் தன்னுடைய மகளுடைய புகைப்படத்தைக் கொடுத்தனுப்பியதிலிருந்தே பதற்றத்துடன் இருந்த பாபு அதுவிஷயமாக இவர் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டால் எப்படி சமாளிப்பதென்று யோசித்தார்.

‘உங்க பேங்க் எப்படி போய்க்கிட்டிருக்கு?’

நல்ல வேளையாய் பேச்சின் திசையை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததே என்று நினைத்து அவ்வருடத்தில் தன்னுடைய வங்கி வணிக சந்தையில் நிகழ்த்திய சாதனைகளை வெகு சிரத்தையாக பட்டியலிட்டதுடன் தன்னுடைய கிளையில் தன்னால் என்னவெல்லாம் சாதிக்க முடிந்தது என்று விலாவாரியாக எடுத்து கூறலானார்.

அவர் கூறிய ஒன்றையும் செவிமடுக்காத தனபால் தன்னுடைய குடும்பத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை மறந்ததுபோல் தன்  எதிரே அமர்ந்து எத்தனை சாதுரியமாக இவரால் பேச முடிகிறது என்ற வியப்புடன் இவர் எதையோ தன்னிடமிருந்து மறைப்பதற்குத்தான் இந்த உத்தியைக் கையாள்கிறார் என்ற சந்தேகமும் அவருடைய மனதில் எழவே சட்டென்று பாபு சுரேஷ் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை வீசினார். ‘உங்க பேங்க்ல மாதவன்னு யாராச்சும் சீனியர் எக்ஸ்க்யூட்டிவ் இருக்காங்களா மிஸ்டர் பாபு?’

சட்டென்று வந்து விழுந்த கேள்வியில் திகைத்துப்போன பாபு சிறிது நேரம் பதிலளிக்காமல் யோசிப்பதுபோல் பாவனை செய்தார்.

ஆனால் முப்பது வருடங்களாக கள்வர்களையும், கயவர்களையுமே அன்றாடம் சந்தித்துப் பழகிப்போன தனபால் சாமி எஸ்.பியிடம் அவருடைய தந்திரம் செல்லுபடியாகவில்லை.

‘உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே.. அவர் உங்க எச்.ஓவில சீனியர் லெவல்ல இருக்கறவர்னு நினைக்கிறேன்..’ என்றார்.

அவருடைய குரலில் சற்றே போலீஸ்தனம் தொனித்ததை கவனித்தார் பாபு சுரேஷ். பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை  என்பதை உணர்ந்தார். ‘ஆமாம் இருக்கார். எங்க சேர்மன். ஆனா அவர் நாளைக்குத்தான் ஜாய்ன் பண்றார். ஏன் கேக்கறீங்க?’

தனபால் சாமியின் அடர்ந்த புருவங்கள் உயர்ந்தன, ‘என்னது சேர்மனா?’

‘Yes Mr.Dhanapal.. but he is coming to Chennai only today!’

தனபால் சாமியின் புருவங்கள் முடிச்சுடன் சுருங்கி நிமிர்ந்தன. ‘இருக்காதே.. அவர் பெயர நான் இன்னைக்கி காலைல ரெண்டு ரவுடி பசங்க வாய்லருந்து கேட்டனே..’

பாபு சுரேஷ¤க்கு பகீர் என்றது. அந்த சேது மாதவனத்தான் இவரு வெறும் மாதவன்னு சொல்றாரா? இப்ப என்ன பண்றது? நாமளா எதையாச்சும் ஒளறி வைக்காம இருக்கணும்..

‘அப்படியா? தெரியலையே சார்.’

தனபால் சாமியின் போலீஸ் கண்கள் தன்னையே ஊடுருவதை உணர்ந்த பாபு சுரேஷ் சங்கடத்துடன் சமையலறையை பார்த்தார். அங்கே அவருடைய மனைவியும் புவனாவும் படு சீரியசாக பேசிக்கொண்டிருப்பதையும் அருகில் ரம்யா தலைகுனிந்து நிற்பதையும் பார்த்தார்.

‘நீங்க எதையோ எங்கிட்டருந்து மறைக்கறீங்கன்னு நினைக்கறேன். எதுவாருந்தாலும் எங்கிட்ட மறைக்காம சொன்னீங்கன்னா இந்த கேஸ்ல உங்களுக்கு என்னால உதவ முடியும்.’

பாபு சுரேஷ் திடுக்கிட்டு திரும்பி தன் எதிரில் இருந்தவரைப் பார்த்தார். ‘என்ன சார் கேசா? நீங்க என்ன சொல்றீங்க?’

தனபால் சாமி தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். ‘இது ரம்யாவோட ஃபோட்டோ.. இத அந்த ரவுடிப்பசங்கக்கிட்டருந்து எங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க கைப்பற்றினது. இப்ப சொல்லுங்க. இதெப்படி அவன்கக்கிட்ட போச்சின்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

பாபு சுரேஷ் அதை கையில் வாங்காமல் எழுந்து நின்று சமையலறையைப் பார்த்தார். ‘சூசீ.. காப்பி ரெடியாச்சின்னா கொண்டு வா.. சார் சீக்கிரம் போணுமாம்.’ என்றவர் தனபால் சாமியைப் பார்த்தார். ‘Don’t mistake me. I’ve got some urgent phone call to make. I’ll return in another five minutes.’ என்றவாறு மாடியிலிருந்த தன்னுடைய அறையை நோக்கி விரைந்தார்.

அவர் தனக்கு பதிலளிக்காமல் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த தனபால் சாமி புகைப்படத்தை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எழுந்து சமையலறையை நோக்கி சென்றார்.

அவருடைய காலடியோசையைக் கேட்ட புவனா, ரம்யா மற்றும் சுசீந்தரா திரும்பி அவரைப் பார்த்தனர். சுசீந்தரா உடனே முன்னால் வந்து கைகூப்பினாள். ‘நீங்களும் புவனாவும் செஞ்ச உதவிய எங்களால மறக்கவே முடியாது சார். ரம்யா செஞ்ச முட்டாள்தனத்தினால ரெண்டு நாளா நாங்க பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லீங்க. எங்க சம்மந்திங்க வீட்டுக்கு தெரிஞ்சி கல்யாணம் நின்னுறக்கூடாதேன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லீங்க..’

அவளுடைய கண்கள் கலங்கி குரல் தடுமாறுவதைக் கவனித்த தனபால் சாமி, ‘அப்படியெல்லாம் சொல்லி எங்கள வேத்து மனுஷாளாக்கிராதீங்க. புவனாவ மாதிரித்தான் ரம்யாவும். ஒன்னுத்துக்கும் கவலைப்படாம கல்யாண வேலைய பாருங்க. என்னோட உதவி தேவைப்பட்டா தயங்காம கேளுங்க. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. நா போய்ட்டு கார அனுப்பறேன். அதுவரைக்கும் புவனா இங்கயே இருக்கட்டும்.’ என்றவாறு, ‘ஒரு காப்பியாச்சும் குடிச்சிட்டு போங்க அங்கிள்’ என்ற ரம்யாவிடம், ‘அதெல்லாம் முடியாதும்மா.. கல்யாண சாப்பாடு போட்டாத்தான் ஆச்சி..’ என்றார் புன்னகையுடன். பிறகு தன் மகளைப் பார்த்து, ‘அப்பா ஆவடி வரைக்கும் போறேம்மா. ஒரு ஆஃபனவர்ல கார திருப்பி அனுப்பறேன். நீ கார் வந்ததும் வீட்டுல போயி எறங்கிட்டு டிரைவர என்னை வந்து பிக்கப் பண்ணச் சொல்லு.’ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

********

தன் மனைவியுடன் தொலைப்பேசியில் பேசி முடித்தவுடன் மாடியிலிருந்த தன்னுடைய அறைக்குத்திரும்பி தன்னுடைய பிர்த்தியேகக் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினார் சேது மாதவன்.

அடுத்த அரை மணியில் சவரம் செய்து, குளித்து முடித்து இடுப்பில் மணக்கும் துவாலையுடன் வெளியே வந்தவர் கட்டிலில் கிடந்த செல் ஃபோனின் ஒலியைக் கேட்டு எடுக்காமலே யாரென குனிந்து திரைய¨ப் பார்த்தார்.

வேண்டா வெறுப்பாக எடுத்து, ‘இப்ப என்ன? ஒங்களுக்கு ஒதவ போயி நம்மாளுங்க மாட்டிக்கிட்டாங்க தெரியுமில்லே.’ என்றார் எரிச்சலுடன்.

எதிர்முனையிலிருந்து ‘அதுக்காகத்தான் சார் கூப்டேன்.’ என்று பதில் வந்ததும் மீண்டும் கோபத்துடன் ‘அதான் என்னன்னு கேட்டேனே?’ என்றார்.

எதிர் முனையிலிருந்து அடுத்து வந்த செய்தி அவரை திகைப்பில் ஆழ்த்தியது. ‘என்ன பேரு சொன்னீங்க?’ என்றார்.

‘தனபால் சாமி சார். அவர் ரொம்பவும் கண்டிப்பான எஸ்.பி. இதுக்கு முன்னால கூட மதுரையில சுப்பிரமணி சாமி எம்.பிக்கூட பப்ளிக் ப்ளேஸ்ல ஆர்க்யூமெண்ட்ல எறங்கி பிரபலமானவர். அவர் என்  டாட்டர் ரம்யாவோட காலேஜ்மேட்டோட அப்பா. அவர் வீட்லதான் என் டாட்டர் ரெண்டு நாளா இருந்திருக்கா!’

சேது மாதவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ‘ஏன் மிஸ்டர், உங்க டாட்டரப் பத்தி சரியா விசாரிக்காம எங்கிட்ட வந்து.. நான் ஒங்களுக்கு ஒதவ போயி.. இவ்வளவு வயசாச்சே தவிர ஒங்களுக்கு ஒரு... சரி.. சொல்லிட்டீங்கல்லே வைங்க..’ என்றவர் மீண்டும். ‘But let me tell you one thing Mr.Suresh. No one should know about what S.P. told you.’ என்றார் கண்டிப்புடன்.

‘Yes Sir.’ என்று எதிர் முனையிலிருந்து பதில் வந்ததும் சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிட்டு ஹாலின் குறுக்கும் நெடுக்கும் வேக வேகமாக சில நிமிடங்கள் நடந்தார்.

பிறகு சமையலறையிலிருந்து தன்னையே கவனித்துக்கொண்டிருந்த திருவை அழைத்தார்.

‘எடோ தான் போயி மோள்லயுள்ள  கறுத்த புக்குல Finance Ministerனு பறஞ்சி ஒரு நம்பர் எழுதி வச்சிட்டுண்டாவும். அவ்விடருந்தென்னே டயல் செய்து கொடுக்கு. ஞான் இவ்விட எடுத்தோளாம்.’

திரு தடதடவென்று மாடிப்படிகளில் ஏறி ஓட அவர் என்ன சொல்ல வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை மனதுக்குள் ஒத்திகைப் பார்த்தார்.
18.4.06

சூரியன் 61

மும்பை உள்ளூர் விமானநிலைய வாசலிலேயே இருந்த தனியார் விமான நிறுவனத்தின் செக் இன் கவுண்டரில் தங்களுடைய பயணச்சீட்டைக் காண்பித்து தங்களுக்கு  பிடித்த இருக்கைகளை தேர்வு செய்து போர்டிங் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாதவன் திரும்பி தன்னுடைய மனைவி மற்றும் மகளைப் பார்த்து புன்னகைத்தார்.

‘At last goodbye to Mumbai. எத்தனை வருஷ பழக்கம்? விட்டுட்டு போறதுக்கு என்னவோ போலருக்கு, என்ன வத்ஸ்?’

வத்ஸலா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். சே..  How attractive she is? இவங்களோட நின்னா நாந்தான் அக்கா மாதிரி இருக்கேன் என்று நினைத்தவாறு தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். Hip is spreading bothways. Unless I take serious note of this bulging waist line I am going to be in trouble.

‘என்ன வத்ஸ்.. நீ என்ன நினைக்கறேன்னு நான் சொல்லவா?’ என்றார் கேலியுடன் மாதவன்.

வத்ஸலா கோபத்துடன் அவரை முறைத்தாள். ‘தேவையில்லை. எனக்கு தெரியும்.’

சரோஜா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். என்னாச்சி இந்த மனுஷனுக்கு? அப்படியே டோட்டலா மாறிட்டார்.. அதுவும் ரெண்டே நாள்ல.. பழைய சிடுசிடுப்பும், கோபமும் போய் ஜாலியான ஆளா மாறிட்டாரே. எல்லாம் அந்த சனியன் பிடிச்ச பேங்க் வேலையாலத்தான்னு நினைக்கிறேன். எப்ப பார்த்தாலும் போட்டி, பொறாமைன்னு.. போறுண்டாப்பா இந்த பம்பாய் பரபரப்பும் வேகமும். நிம்மதியா கொஞ்ச நாளைக்கு மெட்றாஸ் லைஃப அனுபவிக்கலாம். அந்த ஸ்லோ லைஃப் ஒருவேளை என்னையும் மாத்தினாலும் மாத்திரும்..ஆமா, இவர் மாறினா மாதிரியே நாமளும் மாறித்தான் பார்ப்போமே.. வத்ஸ¤க்கும் வயசாய்ட்டே போவுது.. சீனிக்கும் இதுவரை லைஃப்லே ஒரு பிடிப்பும் வரலை.. போறும் இந்த லேடீஸ் க்ளப்ங்கற போலித்தனமான வாழ்க்கை. மெட்றாஸ்ல போயி கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு இவளுக்கு ஒரு மாப்ளைய பார்த்து முடிக்கணும்.. சீனிய ஒரு வழிக்கு கொண்டு வரணும். அவன தனியா ரொம்ப நாளைக்கு பம்பாய்ல விட்டு வைக்கக் கூடாது. மெட்றாஸ்ல இறங்கனதுமே அவன கூப்டு பேசணும்.

‘என்ன சரோ ஏதோ பலமான யோசனைல இருக்கா போலருக்கு. Shall we go to the departure lounge? I think the flight is on time.’

சரோஜா நினைவுகள் கலைந்து தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். ‘சரிங்க.. போலாம். எல்லாம் இந்த சீனிய நினைச்சித்தான். அவந்தான் கேட்டான்னா நீங்க அதுக்கு ஒத்துக்குவீங்கன்னு நா எதிர்பார்க்கவே இல்லே.. தனியா அவன் என்ன பண்ணிக்கிட்டிருக்கானோ.. அந்த மைதிலியோட அப்பாவுக்கு இவன் பேர கேட்டால பிடிக்காது..’

மாதவன் ஆதரவுடன் அவளுடைய தோளில் கைவைக்கவே அவருடைய செயலை எதிர்பார்க்காத சரோஜா தன்னையுமறியாமல் பின்வாங்கினாள்.  அவளுடைய செய்கையைப் பார்த்த வத்ஸலா புன்னகையுடன் தன் தந்தையைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்தாள்.

‘Don’t Worry Saro. He should be all right. அவன நம்பலைன்னாலும் அந்த மைதிலிய நம்பலாம். She will take care of him.’ என்ற கணவனைப் பார்த்தாள் சரோஜா. அந்த பொண்ண பத்தியும் தெரிஞ்சி வச்சிருக்கார் போலருக்கு?

‘என்ன பாக்கறே சரோ? அந்த பொண்ண எப்படிறா இவனுக்கு தெரியும்னுதானே.. அந்த பொண்ண ஒருதரம்தான் சீனியோட பாத்திருக்கேன்னாலும் அந்த ஒரு பார்வையிலயே என்னை Impress பண்ணிட்டா.. I think she would be a good match for Seeni. ஆனா நம்ம சீனிக்கிட்ட என்னத்த பார்த்துட்டு அந்த பொண்ணு...’

சரோஜா சுர்ரென்று எழுந்து வந்த கோபத்துடன் தன் கணவனைப் பார்த்தாள். ‘எதுக்கு அப்படி சொல்றீங்க? நம்ம சீனிக்கு என்ன?’

மாதவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘Ok.Ok. I take back. Don’t get upset. நான் அந்த அர்த்தத்துல சொல்லலே..’

சரோஜா சமாதனமடைந்து, ‘சரி அதையெல்லாம் நாம் மட்றாஸ்ல போயி பேசிக்கலாம். வாங்க செக்யூரிட்டி செக் இன் சைன் வந்திருச்சி.. வா வத்ஸ்..’ என்றவாறு அவர்களுக்கு முன்னால் நடந்தாள்.

மூவரும் பாதுகாப்பு பரிசோதனை முடிந்து புறப்பாடு லவுஞ்சிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

‘Will anybody come to receive us Dad?’ என்றாள் வத்ஸலா.

தூரத்தில் ஓசையில்லாமல் வந்து இறங்கிக்கொண்டிருந்த விமானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாதவன் அதிலிருந்து கண்ணெடுக்காமலே, ‘Yes. I think the acting Chairman Mr.Sundaralingam will be at the airport.’ என்றார்.

பிறகு, ‘நமக்கு ஏதாச்சும் flat அரேஞ் பண்ணியிருக்காளாங்க?’ என்ற மனைவியைப் பார்த்தார்.

'ஆமாம்னு நினைக்கிறேன். பெசண்ட் நகர்லருக்கற ஒரு ட்யூப்ளெக்ஸ் அபார்ட்மெண்ட் அரேஞ் பண்ணியிருக்காங்களாம். நமக்கு அது பிடிச்சிருந்தா I think the Bank will buy that for us. பிடிக்கலேன்னா நாம வேற ஏதாச்சும் பாக்கலாம்.’

‘அது வரைக்கும் டாட்..?’

மாதவன் அவளுடைய ஜீன்ஸ் கால் முட்டியில் செல்லமாக தட்டினார். ‘அதுவரைக்கும் ரோட்லதான்.’ என்றார் கேலியுடன்.

‘விளையாடாதீங்க.’ என்ற தன் மனைவியைப் பார்த்தார்.

‘ஒரு வாரத்துக்கு தாஜ்ல ஒரு எக்ஸ்யூட்டிவ் சூட் புக் பண்ணியிருக்கேன்னு என்னு பி.ஏ. பொண்ணு சொன்னா.. போய் பாக்கலாம். வீட்ட ஃபிக்ஸ் பண்ணிட்டுத்தான் நம்ம திங்க்ஸ மும்பையிலருந்து கொண்டு வர முடியும். அதுவரைக்கும் தாஜ்ல தங்கலாம்னு நினைக்கிறேன். Getting an accommodation should not be a problem in Chennai. நாம ஏற்கனவே இருந்த ஊர்தானே..?’

சரோஜாவுக்கும் அப்படித்தான் தோன்றியது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு தான் பல வருடங்கள் வசித்திருந்த இடம்தானே..

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் தன் கணவனைப் பார்த்தாள். ‘ஏங்க நாம கடைசியா இருந்த காலனியில நம்மளோட ஒரு மலையாளி ஃபேமிலி இருந்தாங்களே.. நாங்கூட லேடீஸ் க்ளப் பிரசிடெண்ட் எலக்ஷன்ல...’

மாதவன் சிரித்தார். ‘யாரு சேது மாதவனும் அவனோட வொய்ஃபும்தானே? அவங்கள அவ்வளவு ஈசியா மறந்துர முடியுமா என்ன? அவர் இப்ப யார் தெரியுமா?’

சரோஜா வலுடன் தன் கணவனைப் பார்த்தாள், ‘அவர் இப்ப என்னவா இருக்கார்?’ என்றாள்.

‘அவர்தான் இப்ப எம்.டி. ஆனாலும் ஏனோ அவர ஆக்டிங் சேர்மனா ஆக்காம சி.ஜி.எம்மா  இருக்கற சுந்தரலிங்கத்த ஆக்கியிருக்காங்க. ஆக, இப்பவும் அவர் மாறலைன்னு நினைக்கறேன்.’

சரோஜா முகத்தை சுளுக்கினாள். ‘அதெப்படிங்க மாறும்..? வயசாச்சிங்கறதுக்காக சிறுத்தைக்கு புள்ளி போயிருமா என்ன?’

வத்ஸ்லா உரக்க சிரித்தாள். ‘இந்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் பேசி எவ்வளவு நாளாச்சிம்மா.. Dad our Chennai shift is really going to do wonders in our family.’

சரோஜா தன் கணவனைப் பார்த்தாள். ‘அவரால உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமாங்க? What do you think?’

மாதவன் யோசனையுடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘இருக்கலாம்.. யார் கண்டா? ஆனா ஒன்னு.. Now I am not prepared to play cat and mouse with him anymore. I want to do something constructive. ஆனா அவர் பழையபடி ஏதாச்சும் வில்லங்கம் பண்ணலாம்னு வந்தா நிச்சயம் விடமாட்டேன்.. பாக்கலாம்.. Maybe he would have changed.. Let us see.. I have an open mind.. So long he keeps his place.. I think he will..’

வத்ஸலா தன்னுடைய தந்தையின் மனநிலையை உணர்ந்து, ‘போறும்பா இந்த போரிங் டாப்பிக். வேற ஏதாச்சும் பேசலாம்..’ என்று பேச்சை மாற்றினாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் மூவருமே சென்னையை மறந்து கலகலப்பானார்கள்..

***

‘ஃப்யூனரல் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு போறதுக்கு டைம் இருக்குமா பிலிப்?’ என்ற தன்னுடைய நண்பரைத் திரும்பி பார்த்தார் பிலிப் சுந்தரம்.

‘நாம் சர்ச்சுக்குத்தான போறோம்.. ஃப்யூனரல் க்ரவுண்டுக்கு போனாத்தான் அப்படியே ஏர்போர்ட்டுக்கு போறது நல்லாருக்காது. ஆனா இதுல நீங்க என்ன நினைக்கறீங்களோ அப்படியே பண்ணலாம். எனக்கு இதிலெல்லாம் அவ்வளவா நம்பிக்கையில்லை.’

சுந்தரலிங்கம் லேசான புன்னகையுடன் தன் நண்பரைப் பார்த்தார். நியாயம்தான். இதிலெல்லாம் எனக்கும் நம்பிக்கையில்லைதான். ஆனாலும் வீட்டு பெண்களுக்காகவாவது இதை பார்க்க வேண்டியிருக்கிறதே. ‘என்ன நீங்க ?மொத தடவையா ஒருத்தர வரவேற்கறதுக்கு அப்படியே சாவு வீட்லருந்து போனா நல்லாவா இருக்கும்? நாள பின்ன அவருக்கு தெரியவந்தா தப்பா நினைப்பாருங்க.. பேசாம சிரமத்த பாக்காம வந்து குளிச்சிட்டு போங்க. அவரயும் நம்ம வீட்லயே குளிச்சிட்டு போச்சொல்லுங்க.’ என்று பலமுறை வற்புறுத்தி கூறிய தன் மனைவியை நினைத்துக்கொண்டார்.

‘நீங்க சொல்றது சரிதான் பிலிப். இருந்தாலும் வீட்லருக்கறவங்களோட நம்பிக்கைக்கும் மதிப்பு குடுக்கணுமே..’

‘கரெக்ட் சார். அப்புறம் நாளைக்கு ஏதாச்சும் அசம்பாவிதமா நடந்திருச்சின்னா நா அப்பவே சொன்னேன்னு ஒருவேளை உங்க மேலயே பழிய தூக்கி போட்டாலும் போட்ருவாங்க..’

பிலிப் சுந்தரத்தின் குரலிலிருந்த கேலியை உணர்ந்து சுந்தரம் லிங்கம் சிரித்தார். முன் இருக்கையிலிருந்த ராஜியும் புன்னகையுடன் திரும்பி ஓட்டுனரைப் பார்த்தாள்.

வாகனம் தாம்பரம் லெவல் க்ராசிங்கை நெருங்குவதை உணர்ந்த ஓட்டுனர் திரும்பி, ‘ஐயா கோவில் வந்திருச்சிங்க..’ என்றான்.

தொடரும்

12.4.06

சூரியன் 60

காவல் நிலையத்திலிருந்து தொலைப் பேசி வந்ததிலிருந்தே தன்னுடைய முதலாளியின் மனநிலை முற்றிலும் மாறிப்போயிருந்ததை உணர்ந்துக்கொண்ட திருநாவுக்கரசு அவர் இருந்த முதல் மாடி அறை இருந்த திசைக்கே செல்லாமல் சமையலறையிலேயே இருந்தான்.

அன்று மாலை கொச்சியிலிருந்து விமானம் மூலம் வரவிருந்த சேது மாதவனின் மனைவியை அழைத்து வருவதற்கு வேறு செல்ல வேண்டுமே இந்த மனுஷனிடம் எப்படி போய் சொல்வது? என்று நினைத்தவாறு விரல் நகத்தைக் கடித்துக்கொண்டு யோசித்தான் திரு.

அவனுக்கு உதவி செய்ய நினைத்தாற்போல் ஹாலிலிருந்த தொலைப் பேசி அலற ஓடிச் சென்று எடுத்தான். கொச்சியிலிருந்து மேடம்தான். ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவாறு மாடியைப் பார்த்தான்.

அவன் நினைத்தாற்போலவே மாடியிலிருந்த கைப்பிடி கிராதியைப் பிடித்தவாறு குனிந்து தன்னை நோக்கிய சேது மாதவனிடம் 'மேடம்' என்று வாயை அசைத்தான். 'நீயே பேசு என்று அவரிடமிருந்து சிக்னல் வரவே ஒலிவாங்கியை செவியில் வைத்து பேச வாய் திறக்கும் முன்பே எதிர்முனையில், ‘எடோ திரு.. நீயல்லே..? எந்தா ஃபோன் எடுத்ததும் சம்சாரிக்காஞே..?’ என்று எரிச்சலுடன் மேடம் கூவ தன்னிச்சையாக ஒலிவாங்கியை செவியிலிருந்து சற்றே தள்ளிப் பிடித்தான்.

‘மேடம், மாடியிலிருந்த ஐயாவை கூப்பிடலாம்னு பார்த்தேன்.’

‘எந்து ஐயா? ஃபோன் எடுத்து ஹலோன்னு பறஞ்சிட்டு அயாள்டத்து ச்சோய்ச்சா போறே..?’

மேடத்தின் குணம் அவனுக்கு நன்றாகத் தெரியும். சட்டென்று மன்னிப்பு கேட்டுவிட்டால் அமைதியாகி விடுவார். எதிர்த்து ஏதாவது சாக்குபோக்கு சொன்னால் அவ்வளவுதான்... ஆகவே, ‘சாரி மேடம். மன்னிச்சிருங்க.’ என்றான் உடனே..

அவன் எதிர்பார்த்திருந்ததுபோலவே எதிர்முனையில் குரல் சற்றே இரங்கி ஒலித்தது. ‘சரி அது போட்டே. ஏர்ப்போர்ட்டுக்கு நீ மட்டும் வந்தா போறும் சேது வராண்டா.’

ஐயையோ இதென்ன தலைவலி? ஐயாக்கிட்ட போயி உங்கள மேடம் வரவேணாம்னு சொல்லிட்டாங்கன்னு எப்படி சொல்றது? மேடம் கொச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு புறப்பட்டுச் சென்றபோது கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைத்துப் பார்த்தான் திரு. அதன் கோபம் மேடத்துக்கு இன்னமும் தீரலைப் போலருக்கு..

‘மேடம் நா எப்படி ஐயாக்கிட்ட போயி நீங்க வரவேண்டாம்னு சொல்றது..?’ என்றவாறு மாடியை மீண்டும் பார்த்தான்.

‘அதெந்தா? அயாள விளிக்கி. ஞான் பறஞ்சோளாம்.’

அதற்கு முன்பே சேது மாதவன் படிகளில் இறங்கி வருவது தெரியவே அவன் ஒன்றும் பதில் பேசாமல் தன்னருகில் வந்த மாதவனிடத்தில் ஒலிவாங்கியைக் கொடுத்தான்.

எடுத்த மாத்திரத்திலேயே, ‘எந்தாடி..?  தான் ஏது ஃப்ளைட்ல வருநேன்னு ஞான் விளிச்சி தன்னோடு ச்சோய்க்கணோ?’ என்று எரிச்சலுடன் பேசிய முதலாளியைப் பார்த்துவிட்டு சரிதான் அடுத்த வாக்குவாதம் தொடங்கிருச்சி என்று நினைத்தான்.

எதிர் முனையிலிருந்து என்ன பதில் வந்ததோ சேது மாதவன் கையிலிருந்த ஒலிவாங்கியை நெறித்துவிடுவதுபோல் பார்ப்பதைப் பார்த்தும் பார்க்காததுபோல் சமையலறையை நோக்கி நடந்தான்.

அவன் பதவிசாக ஹாலைவிட்டு ஒதுங்கி செல்வதைக் கவனித்த சேது மாதவனின் உதடுகளில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அதுதான் திரு.. சமயம் அறிந்து நடந்துக்கொள்வதில் அவனுக்கு நிகர் அவன் தான்.

எதிர் முனையில் எஜமானியம்மா பயங்கர மூடில் இருக்கிறார் என்பது அவனுக்கு தெரிந்திருக்கும். அதை சரி செய்ய முதலாளி இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துத்தான் அந்த நேரத்தில் தான் அருகில் இருப்பது சரியாயிருக்காது என்று நினைத்து அவன் விலகிச் சென்றது அவருக்கு புரிந்தது.

‘எந்தா மாயே..  தான் இதுவரை மறந்திட்டில்லே..? ஷெமிக்கிடி.. ஞான் எத்தற பிராவிஷம் மாப்பு ச்சோய்க்கணும்? ஷரி.. மீண்டும் ச்சோய்க்காம். மாப்பு, மாப்பு, மாப்பு. மதியோ..’ என்றார் ஒரு போலி மரியாதையுடன். ஆனால் மனதுக்குள், ‘எடி பட்டி (பெண் நாய்). எனிக்கும் சமயம் வருவல்லோ? அப்போ  திரிச்சி தராது விடில்லேடி.. ஈ சேது.. விடில்லா..’ என்று மனைவியைக் கறுவினார். இப்போது அவருக்கு அவருடைய மனைவியின் தயவு தேவையிருந்தது. அவளை வைத்து இன்று மாலை ஒரு கேம் களிக்க வேண்டும். அதனால்தான் மனமில்லாவிட்டாலும் இறங்கிப் போய் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்.

அவர் எதிர்பார்த்தது நடந்தது. ‘ஷரி.. ஷரி.. ஷெமிச்சிருக்கின்னு.. ஞான் அஞ்சரை ஃப்ளைட்ல வருவா.. சேட்டன் ஏர்ப்போர்ட்லேக்கி வருந்நுண்டா?’ என்று இறங்கி வந்தாள் அவருடைய மனைவி மாயா தேவி.

‘அங்ஙண எறங்கி வாடி மோளே.. எறங்கி வா..’ என்று மனதுக்குள் மீண்டும் கறுவிய சேது, ‘அதே.. வராம்.’ என்ற ஒலிவாங்கியில் கூறியவர் குரலை இறக்கி, ‘மாயே இன்னைக்கி நம்ம புது சேர்மன் பம்பாயிலிருந்து அவரோட ஃபேமிலியோட வரார். அயாள்டெ ஒய்ஃப் ஒனக்கு பரிச்சயம்தானே..?’ என்றார்.

‘யாரு அந்த மேனா மினுக்கிதான? பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால பார்த்தது..அவளுக்கு என்னெ மறந்திருக்கும்.. ஆனா எனிக்கி அவள நன்னாய்ட்டு ஓர்மயிண்டு.. என்னெ லேடீஸ் க்ளப்புல தோல்ப்பிச்சவளாச்சே அவளு.. எங்ஙனெ மறக்கான் கழியும்?’

சேதுவின் உதடுகளில் ஒரு குரூரப் புன்னகை தவழ்ந்தது. அன்றைய தினத்தை மறக்க முடியுமா? தி க்ரேட் மாயா தேவியே அவமானப்பட்டு நின்ற தினமாயிற்றே! அப்போது சேது மாதவனும், மாதவனும் துணைப் பொது மேலாளர் நிலையில் இருந்தவர்கள். சென்னையில் அடையாறு லேக் ஏரியாவில் ஒரே காலனியில் குடியிருந்தவர்கள். அலுவலகத்தில் சேதுவுக்கும் மாதவனுக்கும் போட்டியென்றால் குடியிருப்பிலிருந்த லேடீஸ் சங்கத்தில் அவருடைய மனைவிமார்கள் இருவருக்கும் இடையில் போட்டி..

இந்த இரு ஜோடிகளுக்குமிடையில் இருந்த போட்டியில் இறுதியில் வெற்றி பெற்றது மாதவன் - சரோஜா ஜோடிதான்.. அலுவலகத்திலும் மற்றும் குடியிருப்பிலும். மாதவன் அப்போது நடந்த பதவி உயர்வு நேர் காணலில் வெற்றி பெற்று டெபுடி பொது மேலாளரானார். லேடீஸ் க்ளப்பில் இரண்டே ஓட்டு வித்தியாசத்தில் சரோஜா மாதவன் தலைவர் பதவியைப் பிடித்தார்.

அலுவலகத்தில் தனக்கு கிடைத்த தோல்வியின் துக்கத்தை தன் மனைவிக்குக் கிடைத்த தோல்வியின் சந்தோஷத்தில் கரைத்தார் சேது.. அத்தனை ஒற்றுமை கணவன் மனைவியருக்கு இடையே!

அவரவர்கு ஏற்பட்ட தோல்விக்கு வஞ்சம் தீர்க்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில்தான் திடீரென்று தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வேறொரு வங்கியில் வைஸ் பிரசிடெண்டாக மும்பை சென்றார் மாதவன்.

பதினைந்து வருடங்கள்...

அன்று துணைப் பொது மேலாளராகவிருந்த சேது இன்று அதே வங்கியில் எம்.டி.. அதே வங்கிக்கு சேர்மனாக நாளை முதல் மாதவன்...

சேது- மாயா தேவி ஜோடிக்கு தங்களுடைய கசப்பான தோல்விகளுக்கு வஞ்சம் தீர்க்க இன்னமும் வலுவான காரணம் இருந்தது..

வஞ்சம் தீர்க்க அவர்கள் நடத்தவிருந்த திட்டத்தின் முதல் எப்பிசோடுதான் மாதவனை வரவேற்க கணவன் – மனைவி ஜோடியாய் போய் நிற்பதென தீர்மானித்தது..

‘ஷெரி மாயே.. சேர்மன் வரும்போ நம்மளு ரெண்டு பேரும் ரிசீவ் செய்யாம். தான் ஒரு காரியம் ச்செய்யி. உன்னோட ஃப்ளைட் சீக்கிரம் வந்நாலும் ஏர்போர்ட் லவுஞ்சிலே வெய்ட் ச்செய்யி. ஞான் வந்நதும் வெளியில வந்நா மதி.. ஞான் வந்திட்டு தண்டெ செல்லுல விளிக்காம்.’  என்று இணைப்பைத் துண்டிக்க முயன்றார்.

‘ஏய்.. வைக்கான் வரட்டே..’ என்ற மனைவியின் குரலைக் கேட்டு நிதானித்து, ‘எந்தா மாயே?’ என்றார்.

‘பாக்கி எக்ஸ்சிக்யூடிவ்சா.. அவரு வருன்னில்லே?’

‘யாரு  ரெண்டு சுந்தரன் மாரா?’ என்றார் கேலியுடன். அவர் குறிப்பிட்டது பிலிப் சுந்தரம் மற்றும் சுந்தரலிங்கம். சேதுவும், மாயாவும் அவர்கள் இருவரையும் கேலியுடன் இவ்வாறு அழைப்பதுதான் வழக்கம். சுந்தரன் என்றால் மலையாளத்தில் அழகன் என்று பொருள். அவர்களுடைய நகைச்சுவை உணர்வை பாராட்டி இருவரும் உரக்க சிரித்தனர்.

‘அதே..’ என்றார் மாயா தேவி..

‘நான் கூப்டாத்தானே..?’ என்றவாறு மீண்டும் சிரித்தார் சேது.

சமையலறையிலிருந்து ‘நல்ல ஜோடிங்கடா நீங்க ரெண்டு பேரும்.. விஷப் பாம்புங்க..’ என்று முனுமுனுத்தான் திருநாவுக்கரசு..

*******

பிலிப் சுந்தரம் தன்னுடைய நண்பர் சுந்தரலிங்கத்தின் வீட்டையடைந்ததும் காரை சாலையில் நிறுத்திவிட்டு நண்பரை செல் ஃபோனில் அழைத்தார். அனாவசியமாக வீட்டுக்குள் நுழைந்து நேரத்தை வீணாக்க வேண்டாமே என்ற நினைப்பில். தூரத்தில் தெரு முனையில் அவருடைய காரியதரிசியின் வாகனம் வருவது தெரிந்தது.

‘என்ன பிலிப், எங்க இருக்கீங்க?’ என்ற மறுமுனையிலிருந்து குரல் வர, ‘இங்கதான் சார் உங்க வீட்டுக்கு முன்னால நிக்கறேன்.’ என்றார்.

‘நான் வர்ற வழியிலதான் இருக்கேன். அப்போல்லோ வரைக்கும் போயிருந்தேன்.’

பிலிப் திகைப்புடன், ‘அப்போல்லோவா, என்ன சார்? யாருக்காவது ஒடம்பு சரியில்லையா?’ என்றார்.

‘ஆமாம் பிலிப். நம்ம வந்தனாவுக்குத்தான்.’

‘வந்தனாவுக்கா? என்னாச்சி சார். ஏதாச்சும் சீரியசாவா?’

‘இல்லை, இல்லை. பிரஷர்தான் ஜாஸ்தியாயிருச்சின்னு நினைக்கிறேன். இன்னமும் ஐ.சி.யூவுலதான் வச்சிருக்காங்க. ட்வெண்டி ஃபோர் ஹவர் கழிச்சி பாக்கலாம்னு சொல்லிட்டார் டாக்டர். நமக்கு தெரிஞ்சவர்தான். ஒன்னும் பிரச்சினையிருக்காது. ஈ.சி.ஜி நார்மலாத்தான் இருக்குன்னு சொன்னார். அதான் ஒடனே திரும்பி வந்துட்டேன். ராத்திரி ஒருதரம் போய் பாக்கணும்.’

‘எப்படியாச்சி சார்? கூட யாரும் இருந்தாங்களா?’

‘இல்லை பிலிப். நான் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க மேல வீட்ல போய் ஒக்காருங்க. நான் வீட்டுக்கு வர்றதுக்கு இன்னும் பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆகும்னு நினைக்கிறேன். நா வந்ததும் தாம்பரத்துக்கு போலாம்.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனை தான் அணிந்திருந்த சஃபாரி சூட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி தன்னருகில் வந்து நின்ற தன்னுடைய காரியதரிசியின் காரை நெருங்கினார்.

அதிலிருந்து முதலில் இறங்கிய ஓட்டுனர் அவரைக் கண்டு சல்யூட் அடிக்க, ‘ஏகாம்பரம். நீங்க ஒன்னு பண்ணுங்க. என்னோட கார வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு சுந்தரம் சார் கார் பக்கத்துலயே பார்க் பண்ணிருங்க. நானும் அவரும் தாம்பரம் வரை போணும். ஆஃபீஸ் கார்லயே போயிரலாம்.’ என்றார். பிறகு தன்னுடைய காரியதரிசியை பார்த்தார், ‘ராஜி, நீங்களும் தாம்பரம் வரைக்கும் வந்துட்டு போங்க. ஏன்னா எனக்கு மாணிக்கத்தோட வீடு சரியா தெரியாது. அங்கருந்து நீங்க ஒரு வண்டி பிடிச்சிக்கிட்டு வீட்டுக்கு போயிரலாம்.'

அவருடைய காரியதரிசி சரியென்று தலையை அசைக்க இருவரும் குடியிருப்புக்குள் நுழைந்து சுந்தரலிங்கத்தின் குடியிருப்பு இருந்த ஏழாவது மாடிக்கு சென்றனர்..

தொடரும்..


11.4.06

சூரியன் 59

மருத்துவரின் அறையை நோக்கி நடந்த மைதிலி சற்று முன் சீனிவாசன் கூறியதை யோசித்துக்கொண்டே சென்றாள்.

தனக்கும் சீனிக்கும் இடையே உள்ளது வெறும் நட்பா அல்லது அதற்கும் மேலா என்று தன்னுடைய உள்மனதையே கேட்டாள். You can only say that என்றது மனது.

அவளை விட மூன்று வயது இளையவன் சீனி. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாதவன். ‘இப்படியே இருக்கியே சீனி. வயசு இருபத்தஞ்சாறதே?’ என்று அவள் கேட்டபோதெல்லாம் ‘Why are you so much worried about material things My? You need food three times a day. A top and bottom to wear. A room to live in. What else you need? I think I can easily earn that much for both of us.’ என்பான்.

அவனால் மட்டும் எப்படி வாழ்க்கையை இத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறது என்று வியந்துபோவாள். அவள் மனித மனத்தை ஆராய்ச்சி செய்து எடுத்த டாக்டர் பட்டம் அவனுடைய இந்த பதிலில் முற்றிலும் அடிபட்டுப் போகும்.

அவனை முதன் முதலாக சந்தித்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுடைய எச்.ஆர். துறையிலான ஆராய்ச்சி தீசீஸ்சுக்காக மும்பை மத்திய நூலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவள் முதல் முதலாக நூலகத்திற்கு சென்றபோது தாடியும் மீசையுமாய், தோள்வரை வளர்ந்திருந்த முடியுடன் இருக்கையில் சாய்ந்து காலைநீட்டி அமர்ந்துக்கொண்டு படுசீரியசாய் விட்டத்தில் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியையே பார்த்தவாறு அமர்ந்திருந்த அந்த இளைஞனை பார்த்தமாத்திரத்திலேயே அவனிடம் இருந்த ஏதோ ஒன்றால் கவரப்பட்டு அவனையணுகி ‘Excuse me?’ என்றாள்.

அப்போதும் எதிரே நின்ற தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞனுடைய நீலக் கண்கள்தான் தன்னை கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள் மைதிலி. அவளுக்குத் தெரிந்தவரை அத்தனை கவர்ச்சியான கண்களைக்கொண்ட ஆணை அவள் சந்தித்ததே இல்லை.

சரி அவனுடைய ஆழ்ந்த மோனத்தைக் கலைக்க வேண்டாம் என்ற நினைப்புடன் அவள் அங்கிருந்த நகர, ‘என்ன மேடம் எக்ஸ்க்யூஸ்மின்னீங்க. ஒன்னும் சொல்லாம போறீங்க?’ என்ற அவனுடைய குரல் அவளை சுண்டியிழுக்க ஆச்சரியத்துடன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

சுற்றிலும் அமைதியாயிருந்த அந்த நூலகத்தில் அவனுடைய குரல் ஐந்தாறு தலைகளை அவள் இருந்த திசையில் திரும்ப வைத்தன. அவன் மீண்டும் எங்கே குரல் எழுப்பிவிடுவானோ என்ற பயத்தில் அவனை நெருங்கி சென்று, ‘Nothing. I just wanted to ask some clarification about a book I wanted. I thought you worked here.’ என்றாள் அடிக்குரலில்.

‘Now you don’t?’ என்றான் சீனி விட்டத்திலிருந்து கண்ணை எடுக்காமலே..

அவளுக்கு எரிச்சலாக வந்தது. அதென்ன? அடிப்படை நாகரீகம் இல்லாமல்... பேசிக்கொண்டிருப்பவரின் முகத்தைக் கூட பார்க்காமல்... பதிலளிப்பது? சரியான திமிர் பிடித்தவனாய் இருப்பான் போலருக்கே என்று அவனுடைய பதிலைச் சட்டை செய்யாமல் நூலகத்தின் பணியாளர்களுள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிக்கொண்டு சென்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கு தேவையாயிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மேசையில் பரப்பிவைத்துக்கொண்டு தான் கொண்டு வந்திருந்த குறிப்பேட்டில் தன்னுடைய தீசிஸுக்கானவற்றைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

நேரம் போனதே தெரியாமல் தன்னுடைய அலுவலில் மூழ்கிப்போன மைதிலி தன்னுடைய குறிப்பெடுக்கும் பணி முடிந்ததும் அத்தனை புத்தகங்களையும் வாரி எடுத்துக்கொண்டு தான் அவற்றை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வரலாம் என்ற நினைப்புடன் எழுந்தாள்.

‘Don’t worry, you can leave it there. We will do that.’ என்ற குரல் கேட்டு திரும்பியவள் சற்று முன் கண்ட அதே நீலக் கண்களைச் சந்தித்தாள்.

குழப்பத்துடன், ‘You work here?’ என்றாள்.

‘Yeah. Part time.’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அவள் மீண்டும் மேசையின் மேல் வைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஹாலின் வேறொரு மூலையிலிருந்த மேசையின் மேல் பரப்பி அருகிலிருந்த கணினியில் ஒவ்வொரு புத்தகத்தின் எண்களையும் குறித்துக் கொண்டதை அவள் நின்ற இடத்திலிருந்தே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நூலக வாசலை நோக்கி நடந்தாள் மைதிலி.

அடுத்த ஒரு வாரகாலமும் அவள் அதே புத்தகங்களை அதன் இருப்பிடத்திலிருந்து எடுப்பதும் குறிப்பெடுத்துக்கொள்வதும் தொடர்ந்தது. ஆனால் அவளைக் கவர்ந்த அந்த நீலக்கண்ணனைக் காணாமல் போனதில் அவளுக்கு லேசான வருத்தம்தான்.

அன்று அப்படித்தான், அவளுடைய குறிப்பெடுக்கும் வேலை முடிந்தவுடன் நூலகத்திலிருந்து வெளியே வந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் வி.டி. ஸ்டேஷன்வரை நடக்க வேண்டுமே நூலக தோட்டத்தில் சற்று அமர்ந்துவிட்டு சென்றால் என்ன எண்ணத்தில் அருகில் இருந்த மரத்தின் கீழ் புல்தரையில் அமர்ந்து கையிலிருந்த குறிப்பேட்டில் தான் குறித்திருந்ததை நோட்டம் விட்டாள்.

‘It is difficult to understand the human mind. It’s deeper than the deepest ocean.’ என்ற வரிகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. சற்றே அதை வாய்விட்டு படித்தாள்.

‘Yeah, that’s why you should know swimming!’

சட்டென்று கேலியுடன் ஒலித்த அந்த குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணாமல் குழம்பிப் போய் கைகளை புல்வெளியில் ஊன்றி எம்பி பின்னாலிருந்த புதருக்கு அப்பால் பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.

‘ஏய் மிஸ்டர். என்ன கிண்டலா?’ என்றாள் கோபத்துடன் ஹிந்தியில்.

‘No, why should I? Do I know you?’ முகத்திலிருந்த துணியை விலக்காமலே பேசியவனைப் பார்க்கப் பிடிக்காமல்... அவனும் அவனுடைய ட்ரெஸ்சும்.. துவைத்து ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று நினைத்தாள்.

புல்வெளியில் வைத்திருந்த அவளுடைய கைப்பையையும் குறிப்பேட்டையும் எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள். வாசலை நெருங்கியதும் திரும்பி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவன் எழுந்து நூலகத்தை நோக்கி நடப்பது தெரிந்ததும் அவன் ஒருவேளை நூலக ஊழியனாயிருந்தால் அவனுடயை நடத்தையைக் குறித்து நூலக அதிகாரிகளிடம் முறையிட்டால் என்ன என்று யோசித்தாள். அதற்கு அவன் யாரென்று அடையாளம் தெரிய வேண்டுமே? அவன் உள்ளே செல்வதற்குள் அவனுடைய முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்து வேகமாக அவன் பின்னே ஓடினாள்.

அவள் நூலக அலுவலக அறையை நெருங்கவும் அவளுடைய காலடி ஓசை கேட்டு அவன் திரும்பி அவளைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அதே நீலக் கண்ணன்!

‘Yes madam? You forgot something?’ என்ற அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.

அவன் தன்னுடைய தோள்களைக் குலுக்கிக்கொண்டு உள்ளே செல்ல அவள் வரவேற்பு கவுண்டரில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ‘Does he work here?’ என்றாள்.

அவள் ஒருவித அருவெறுப்புடன் சென்று மறைந்த அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு, ‘Yes Mam. He is Srinivasan, a Madrassi. He is a volunteer. Works here part time . In fact, he is a research student.’ என அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

‘Is it? What does he research? He doesn’t look like one!’

அந்தப் பெண் அலட்சியத்துடன், ‘I really don’t know. That’s what he tells us. Why can’t you ask the Reader? She is there!’ என்று அந்த அறையின் கோடியிலிருந்த ஒரு சிறு கேபினை கைகாட்ட மைதிலி இது நமக்குத் தேவையா என்று ஒரு விநாடி யோசித்தாள். பிறகு என்ன தோன்றியதோ அந்த கேபினை நோக்கி நடந்தாள்.

இடுப்பு வரையே அமைந்திருந்த அந்த கேபினின் தடுப்பின் முன் பக்கத்திலிருந்த கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணை - நிச்சயம் மராத்திக்காரிதான்.. மூக்கிலிருந்த வளையமே சொல்கிறதே - அணுகி, ‘Excuse me’ என்றாள்.

‘க்யா ஹை?’ என்று தன்னை நிமிர்ந்து நோக்கிய பெண்ணின் முகத்திலிருந்த அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல், ‘நான் ஒரு ஆராய்ச்சிக்காக இந்த நூலகத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.. இங்கு மிஸ்டர் சீனிவாசன் என்பவர் என்னுடைய பிரிவிலேயே ஆராய்ச்சி செய்வதாக கேள்விப்பட்டேன். அவரை சந்திக்க முடியுமா என்று கேட்கத்தான்..’

அவளுடைய கேள்வியைக் கேட்டதுமே குலுங்கி குலுங்கி அந்த பெண் சிரிக்க மைதிலி என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்துடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

‘கோன்.. ஓ பத்மாஷ்? யாரு, அந்த சோம்பேறியா? அவன் ஒரு யூஸ்லெஸ்.. உங்களுக்கு வேற வேலையிருந்தா பாருங்க. அவனோட அம்மாவுக்காக அவன இங்க அலவ் பண்றோம். Otherwise he would have been thrown out long back.’

மைதிலி நின்ற இடத்திலேயே நிற்கவே அந்த பெண் கேள்வியுடன் அவளைப் பார்த்தாள். ‘நான் சொன்னது கேக்கலையா? உங்க நேரத்த வீணாக்காதீங்க. போங்க.’

‘It is OK. Please call him. I just want to talk to him for a minute.’ என்று அவள் நிர்பந்திக்க மைதிலியை  ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ‘ஒக்கே, ஓக்கே. இன்னைக்கு நீங்க முளிச்ச மூஞ்சி சரியில்லை போலருக்கு. அங்க போய் உக்காருங்க. அவன வரச்சொல்றேன். ஆனா ஒன்னு, அவனுக்கு எப்ப வரணும்னு தோனுதோ அப்பத்தான் வருவான். It could take an hour or even more than that.’ என்றாள்.

அவள் ஒருவேளை அதிகப்படியாய் பேசுகிறாளோ என்று நினைத்த மைதிலி அவளுடைய எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டு அவள் கைகாட்டிய இருக்கையில் சென்று அமர்ந்தாள்..

ஆனால் ஒரு மணி நேரமாகியும் அவன் வராததால் வெறுப்புற்று தன்னுடைய மடத்தனத்தை நொந்துக்கொண்டு எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்..

அவள் வாசலை நெருங்கியிருப்பாள்..

‘You wanted me?’ என்ற குரல் தன் பின்னால் கேட்கவே கோபத்துடன் திரும்பி, ‘who said?’ என்றாள்.

இருப்பினும் தன்னையே குறும்புடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த நீலக்கண்களிலிருந்து கண்களை விலக்க இயலாமல் தடுமாறியதை இப்போதும் நினைத்துப் பார்த்தாள்..

அந்த சந்திப்பிற்குப் பிறகு அவனை அன்றும் அதற்கடுத்த நாளும்.. ஏன், ஏறக்குறைய அடுத்த இரண்டு மாதங்களில் தினமும்..

அவனை நெருங்கி சென்று பழகியபோதுதான் புரிந்தது அவனுடைய உளமனதிலிருந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் மேலிருந்த அசாத்திய ஆனால் அவசியமில்லாத கோபம்..

இலக்கியம் படிக்க விரும்பிய அவனுடைய விருப்பத்தை புறக்கணித்துவிட்டு பொறியாளனாக தன்னை கட்டாயப்படுத்திய தன் தந்தையின் மேலிருந்த கோபம் எப்படி அவனை பொறியாளர் படிப்பின் இறுதியாண்டு தேர்வை வேண்டுமென்றே எழுதாமலிருக்க வைத்தது,... அதற்காக தன்னை கண்டித்த தந்தையை எதிர்த்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மும்பை தெருக்களில் றுமாத காலம் சுற்றித் திரிந்தது,.... போதை பொருளுக்கு அடிமையாகிப் போனது,... தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது,... பிறகு போதைப் பொருளின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு அப்போது மும்பை மேயரின் துணைவியின் நெருங்கிய தோழியாகவிருந்த அவனுடைய தாயின் பரிந்துரையின் பேரில் மும்பை பல்கலைக்கழக மனித வள மேம்பாடு துறையில் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.. அதனைத் தொடர்ந்து அந்த அரசு நூலகத்தில் பகுதி நேர வாலண்டியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது..

அவனுடைய அந்த நோக்கமில்லாத வாழ்க்கைப் பாதை அவளை சந்தித்தப்பிறகும் பெரிதாய் எந்தவித மாற்றமுமில்லாமால் போனாலும் அவனுடனான அவளுடைய நட்பு மைதிலியை அவளுடைய சீரான பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்ல வைத்துவிட்டது என்றால் மிகையாகாது ..

இந்த இரண்டாண்டு நட்பை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் அவள் படும்பாடு..

‘என்ன மைதிலி.. என்னையா பார்க்க வந்தே..? ஏன் இங்க ஒக்காந்திருக்கே..? நேரா ரூமுக்கு வர வேண்டியதுதானே..?’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த மைதிலி தன்னெதிரில் புன்னகையுடன் நின்ற தன்னுடைய குடும்ப நண்பர் மருத்துவர் ராஜகோபாலனை பார்த்தாள்..

தொடரும்..


10.4.06

சூரியன் 58

பாபு சுரேஷின் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே போனது.

விடியற்காலையில் வந்து ரம்யாவின் போட்டோவை பெற்றுக்கொண்டு சென்ற ளிடமிருந்து பிறகு ஃபோன் ஏதும் வராததால் படு டென்ஷனாகிப் போனார் பாபு.

சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். பகல் இரண்டு மணி. காலையிலிருந்து அவரும் அவருடைய மனைவியும் ஒன்றும் சாப்பிடவில்லை.

அவருடைய கோபத்தின் விளைவை ஏற்கனவே பல சமயங்களில் சந்தித்திருந்த அவருடைய மனைவி சுசீந்தரா அன்று காலையிலிருந்தே பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தாள். எதற்கு கோபத்தின் உச்சியில் இருக்கும் கணவன் முன் சென்று நின்று அவதிப்படவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம். என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் முருகா என்று பூஜை அறையில் கண்ணீர்விட்டு அழுதாலாவது தன்னுடைய மகளை தன்னிடம் கொண்டு சேர்க்க மாட்டாரா என்ற ஆதங்கம் ஒருபுறம்.

கையில் செல் ஃபோனுடன் ஹாலின் குறுக்கும் நெடுக்குமாய் கோபத்துடன் நடந்துக்கொண்டிருந்த முதலாளியிடம் நெருங்கி, ‘ஐயா ஒரு வா காப்பியாவது குடிங்கய்யா. நீங்க ஒன்னும் சாப்பிடலேன்னதும் அம்மாவும் காலைலருந்து பழியா பட்டினி கிடக்கறாங்கய்யா.’ என்று சற்று முன் கூறிய தங்களில் வயதில் மூத்த வேலையாளுக்கு நேர்ந்த கதியை நினைத்து அவர் வீட்டில் வேலைக்கு இருந்த எவரும் அவர் முன் மீண்டும் போய் நிற்க துணிவில்லாமல் சமையலறைக்குள் இருந்தவாறே அவரை கவனித்தனர்.

கையிலிருந்த செல் ஃபோன் சிணுங்கவே யாரென்று பார்த்தார் பாபு. அவருக்கு முன் பின் பரிச்சயமில்லாத அதுவும் லேண்ட் லைன் எண்ணைக் கண்டவர் தயக்கத்துடன், ‘யெஸ்?’ என்றார்.

‘சார் நான் தனபால் சாமி எஸ்.பி பேசறேன்.’

எதிர் முனையிலிருந்து வந்த அதிகாரத்துடனான கம்பீரமான குரலை அவருக்கு எங்கோ கேட்டிருந்ததுபோல் தோன்றினாலும் சட்டென்று நினைவுக்கு வராமல், ‘யெஸ் சொல்லுங்க சார். நாந்தான் பாபு சுரேஷ் பேசறேன்.’ என்றார்.

எதிர் முனையில் சிரிப்பு சப்தம். ‘என்ன மிஸ்டர் பாபு என்னைத் தெரியலையா? நான் உங்க பொண் ரம்யாவோட ஃப்ரெண்ட் புவனாவோட ஃபாதர். ரெண்டு மூனுதரம் மீட் பண்ணியிருக்கோம். உங்கக் கிட்ட கடைசியா பேசி ரொம்ப நாளாச்சி. அதான் மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் ஒரு முக்கியமான விஷயமா உங்கக்கிட்ட பேசலாம்னுதான் கூப்டேன். Are you free?’

இது நிச்சயம் ரம்யா விஷயம்தான். கடைசியில போலீஸ்ல போய் மாட்டிக்கிட்டாளா? கர்மம். மானத்த வாங்கறதுக்குன்னே பொண்ணா பொறந்து வந்திருக்கு.

‘சொல்லுங்க சார், என்ன விஷயம்?’

‘உங்க டாட்டர் எங்கயும் போகலை. நேத்து சாயந்திரத்திலருந்து என் வீட்லதான் இருக்கா. நான் வெளியூர் போய்ட்டு இன்னைக்கி காலைலதான் வந்தேன். சோ, டென்ஷனாகாம இருங்க. இன்னும் அரைமணி நேரத்துல உங்க டாட்டர கூட்டிக்கிட்டு அங்க வரேன். நீங்க ரம்யா வந்ததும் ஏதாவது எமோஷனலா பேசிறக்கூடாதுன்னுதான் நா இப்ப ஃபோன் பண்றேன். அவளோட அம்மாக்கிட்டயும் விஷயத்த சொல்லிருங்க. Please relax. I’ll be there in another half an hour. Bye.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே ஒரிரண்டு வினாடிகள் பார்த்துக்கொண்டிருந்த பாபு சுரேஷ் அதை சோபாவில் கோபத்துடன் வீசியெறிந்துவிட்டு பூஜையறையை நோக்கி நடந்தார்.

பூஜையறையில் கண்களை மூடியவாறு முருகா, முருகா என்று பிரார்த்திக்கொண்டிருந்தவள் வேகமாக நெருங்கிய காலடியோசைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து திரும்பி வாசலைப் பார்த்தாள்.

அவளுடைய கணவர் கோபத்தில் கண்கள் சிவக்க நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ‘என்னங்க?’ என்றாள் நடுங்கும் குரலில்.

‘ஒம் பொண்ணு என்ன செஞ்சு வச்சிருக்கா தெரியுமா?’

அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. ரம்யா எங்கருக்கான்னாச்சும் தெரிஞ்சுதே. முட்டாள் தனமாக  தன்னுடைய மகள் ஒன்றும் செய்திருக்கமாட்டாள் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரியும். தன்னைப் போல அத்தனை கோழையல்ல அவள் என்பதையும் அவள் அறிந்துதான் வைத்திருந்தாள்.

‘என்னங்க? ரம்யா எங்க இருக்கா? அத முதல்ல சொல்லுங்க?’

‘அவ அந்த எஸ்.பி இருக்காரே.. அதான் அந்த தனபால் சாமி. அவர் வீட்லதான் நேத்துலருந்து இருந்திருக்கா.’

சுசீந்தரா பூஜையறையிலிருந்த தெய்வங்களின் படங்களை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எழுந்தாள். ‘வயித்துல பால வார்த்தீங்க சாமி. எம்பொண்ணு வந்ததும் அவளையும் கூட்டிக்கிட்டு வந்து நான் சொன்னா மாதிரி நூத்தியோரு தேங்காய இன்னைக்கே ஒடச்சிடறேன் புள்ளையாரப்பா.’

பாபுவுக்கு அவருடைய மனைவியின் இந்த செயல் அதீத கோபத்தை ஊட்ட எட்டி அவருடைய தலைமுடியைப் பிடித்து உலுக்கினார். ‘ஏண்டி பைத்தியமே. நா இங்க அவ பண்ணியிருக்கற காரியத்துல அவமானப்பட்டு நிக்கறேன். நீ தேங்காய ஒடச்சி சாமி கும்பிடப் போறியா?’

சமையலறைக்குள் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்களில் வயதில் பெரியவர் ஓடிச்சென்று, ‘ஐயா வேணாம்யா. அம்மாவ ஒன்னும் பண்ணிராதீங்கய்யா.’ என்றவாறு அவருடைய காலில் விழ இதை எதிர்பார்க்காத பாபு தன் மனைவியின் தலையிலிருந்த கையை விலக்கிக்கொண்டு பின்வாங்கினார். ‘என்ன ராமாசாமி இது? எழுந்திருங்க. ஒங்கக் கிட்ட எத்தன தரம் சொல்லியிருக்கேன்? எங்க விஷயத்துல தலையிடாதீங்கன்னு. போங்க தள்ளி.’

‘ஐயா இல்லைய்யா. உங்களுக்கு இந்த அளவு கோபம் ஆகாதுய்யா.. பாப்பா கல்யாணத்த வேற வச்சிக்கிட்டு ஒங்களுக்கு ஒடம்புக்கு ஏதாச்சும் ஆயிரக்கூடாதுன்னுதான்யா ஓடியாந்த்தேன். பாப்பா தப்பா ஒன்னும் செஞ்சிருக்காதுய்யா.’ என்று கண்ணீருடன் தன் முன்னால் நின்ற வேலையாளை சில விநாடிகள் பார்த்த பாபு தன்னுடைய தவறை உணர்ந்து விலகிப் போய் சோபாவில் அமர்ந்தார்.

‘நீங்க போங்கண்ணே. இவரு கோபப்படுறது ஒன்னும் புதுசில்லையே. நீங்க போய் ரம்யாவுக்கு புடிச்சத சமைச்சி வைங்க. எம்பொண்ணு எங்கருக்கான்னு தெரிஞ்சிருச்சி. நானே போயி கூட்டியாறேன். நீங்க போய் வேலைய பாருங்க.’ என்றவாறு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்த தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.

‘நீ போவேணாம். அவரே ரம்யாவ கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணியில வராராம். இப்பத்தான் ஃபோன் பண்ணார். நீ முதல்ல போயி குளிச்சிட்டு சேலைய மாத்து.’ என்றார்.

அவருடைய குரலில் சட்டென்று ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த சுசீந்தரா நின்ற இடத்திலேயே நின்று திரும்பி அவரைப் பார்த்தாள்.

பிறகு, ‘சரிங்க. என்ன சொல்லிட்டு நீங்க மட்டும் அப்படியே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?’ என்றாள்.

பாபு வியப்புடன் அவளைப் பார்த்தார். என்ன ஜென்மம் இவள்? நான் எத்தனைக் கோபப்பட்டு மிருகமாக நடந்துக்கொண்டாலும் இவளால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு மாறிவிட முடிகிறது? இந்த இருபத்தி மூன்று ஆண்டுகளில் இவளை நான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தியிருக்கிறேன்?

ஒரு நாள், இருப்பத்தி நாலு மணி நேரமாவது, என்னிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்திருப்பாளா? எத்தனை ராத்திரிகளில் அவளை அடித்து அவமானப்படுத்தியிருப்போம். அடுத்த நாள் காலையிலேயே ஒன்றும் நடவாததுபோல், ‘என்னங்க இன்னைக்கி மதியத்துக்கு என்ன  பண்ணட்டும்?’ என்று வந்து நிற்பாளே. அவளுடைய இந்த அடிமைக் குணத்தினால் தானோ என்னவோ நானும் இவளிடம் அத்துமீறி நடந்துக்கொண்டிருக்கிறேன் போலும்.

ரம்யா வளர்ந்த பிறகு அவர் காதுபடவே, ‘ஏம்மா நீ இப்படி இருக்கே? நீ அவர்கிட்ட மழுங்கி, மழுங்கி போறதுனாலத்தான் அவர் மேல, மேல போறாரு. நீ மட்டும் ஒரு தடவை, ஒரேயொரு தடவை அவர் அடிக்க வர்றப்போ அவர் கைய எட்டிப் பிடிச்சி இந்த அடிக்கற வேலையெல்லாம் இனிமே வச்சிக்காதீங்கன்னு சொல்லிப் பாரேன். மனுஷன் அப்படியே அடங்கிப் போயிருவாரு.’ என்பாள்.

ஆனால் அப்போதும், ‘சீ கழுத. இதுக்குப் பேருதாண்டி தாம்பத்தியம். புருஷன் பொஞ்சாதின்னா இப்படி அடிச்சிக்கறதும் புடிச்சிக்கறதும் இருக்கத்தான் செய்யும். ஏன் எம்மேலயும் தப்பு இருக்குல்லே? ஒன்ன மாதிரி பதவிசா ஒரு காரியமும் எனக்கு பண்ண வரலையேடி. அவருக்கு ஈக்வலா இருக்கற ஆஃபீசர்ங்களோட பெஞ்சாதீங்கல்லாம் ஸ்டைலா நுனி நாக்குல இங்கீலீஷ்ல பேசிக்கிட்டிருக்கறா மாதிரி தன் பெஞ்சாதியும் இல்லையேங்கற ஒரு தாழ்வு மனப்பான்மைதாண்டி ஒங்கப்பாவுக்கு கோபமா என் மேல வெடிக்குது.’ என்பதைக் கேட்டிருக்கிறார்.

அப்போதெல்லாம் ரம்யா இல்லாத நேரத்தில், ‘ஏண்டி ஒனக்கு என்ன கொழுப்புருந்தா தப்பையெல்லாம் ஒம்பேர்ல வச்சிக்கிட்டு எனக்கு தாழ்வு மனப்பான்மைம்பே?’ என்று அவளை அடிக்க மீண்டும் கை ஓங்குவார்.

‘என்னங்க என்ன நீங்க, என்ன சொல்லிட்டு நீங்க அப்படியே ஒக்காந்திட்டிருக்கீங்க? போய் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் போட்டுக்கிட்டு வாங்க. அந்த மனுஷன் கண்ணுதான் ஒங்களுக்குத் தெரியுமே. நீங்க இருக்கற கோலத்துல ரம்யா வீட்ட விட்டு போனதுக்கு ஏதும் பெருசா விஷயமிருக்கு போலருக்குன்னு அவர் பாட்டுக்கு நெனச்சிக்கிரப் போறாரு. போலீஸ் புத்தி.. எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கும்.’ என்ற தன்னுடைய மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தார் பாபு சுரேஷ்.

இடுப்பில் கைவைத்துக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து அவருக்கு சிரிப்பதா அழுவதா என தெரியாமல் விழித்தார். பிறகு எழுந்து அவளை நெருங்கி அவளுடைய தலையில் லேசாக ஒரு குட்டு வைத்தார். ‘ஏய் லூசு. நீ என்னைய சொல்றீயா? ஒம் மூஞ்ச போயி கண்ணாடியில பாரு. நான் குளிச்சி முடிக்க அஞ்சி நிமிஷம் கூட ஆவாது. நீ மொதல்ல போயி குளி.’ என்றவாறு அவளைக் கடந்து மாடியிலிருந்த தன்னுடைய படுக்கையறைக்கு படியேறலானார்.

‘என்னங்க?’ என்ற தன்னுடைய மனைவியின் குரல் பின்னாலிருந்த கேட்கவே, ‘இப்ப என்ன?’ என்று சற்றே எரிச்சலுடன் திரும்பி பார்த்தார்.

‘ரம்யா வந்ததும் தயவு செஞ்சி கோபப்படாம பேசுங்க. அவங்க முன்னால நீங்க எதையாச்சும் சொல்லப் போயி மறுபடியும் அவ முறுக்கிக்கப் போறா?’

பாபு சுரேஷின் முகத்தில் அவரையுமறியாமல் ஒரு புன்னகைப் படர, ‘இல்ல.. மாட்டேன். நீ போய் குளி.’ என்றார்.

சுசீந்தராவுக்கு கணவரின் அந்த புன்னகையே போறும் என்றிருந்தது. மனுஷன் இனிமேலாவது திருந்தினா சரிதான் என்று மனதுக்குள் நினைத்தவாறு சமையலறையை நோக்கி ஓடினாள்.

‘ராமசாமின்னே. ரம்யா அவளோட ஃப்ரெண்ட் வீட்லதான் நேத்திலேருந்து இருந்திருக்கா. அதான் அந்த எஸ்.பியோட பொண்ணு இருக்காளே புவனா, அவ வீட்ல. இன்னும் அரைமணி நேரத்துல இங்க அவரும் ரம்யாவோட வராராம். சூடா காப்பியும் கூட முடிஞ்சா ஏதாச்சும் டிபனும் பண்ணி வைங்க. நா குளிச்சிட்டு வந்துடறேன்.’ என்றவாறு தன்னுடைய அறையை நோக்கி ஓடிய எஜமானியைக் கண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார் அந்த வீட்டில் கடந்த இருபதாண்டு காலமாய் வேலைபார்த்த சமையற்கார ராமசாமி.

தொடரும்..