30.6.06

சூரியன் 100!

இதுவரை..


மும்பையில் ஒரு தனியார் வங்கியில் உயர் பதவியிலிருந்த எம்.ஆர். மாதவன் சென்னையில் தலைமயகத்துடன் இயங்கிவரும் வேறொரு தனியார் வங்கிக்கு முதல்வராக பதவியேற்க குடும்பத்துடன் சென்னை வருகிறார்.

அவருடைய மகன் சீனிவாசன் தந்தையின் அனுமதியுடன் மும்பையில் தங்கிவிடுகிறார். அவருடைய காதலி மைதிலியைக் காணச் செல்லும் வழியில் அவருடைய தந்தையுடன் தொலைபேசியில் உரையாட அவர் தன்னுடைய மகளை மறந்துவிடச் சொல்கிறார். அதிர்ச்சியில் சாலையி மயங்கி விழுந்து காயப்படும் சீனிவாசனை மைதிலி தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கிறாள்.

மைதிலியை பெண் பார்க்க வந்த குடும்பத்தார் அவரையும் சீனிவாசனையும் சேர்த்து மருத்துவமனை வாசலில் பார்க்க அவளுடைய திருமணம் தடைபட்டு போகிறது..

வங்கியின் நிர்வாக இயக்குனர் சேது மாதவனுக்கு தன்னுடன் ஒரே பதவியில் பணிபுரிந்த மாதவன் சேர்மன் ஆவதா என்ற ஈகோ பிரச்சினை. அவரை அந்த பதவியில் நியமிக்காமலிருக்க தன்னால் ஆன மட்டும் முயற்சித்து தோற்றுப்போய் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற சூழ்ச்சியில் இறங்குகிறார்.

ஆக்டிங் சேர்மன் பதவியிலிருக்கும் சுந்தரலிங்கம், சிஜிஎம். பிலிப் சுந்தரம் இவர்களுக்கு மாதவன் மற்றும் சேதுமாதவனுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை..

வங்கியின் H.R Head ஜி.எம். வந்தனாவுக்கு தனிமைதான் பெரிய பிரச்சினை. இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்துக்கொள்ளாமல் தனிமரமாய் நின்ற நேரத்தில் தன் வாழ்வில் வசந்த தென்றலாய் நுழைந்த அவருடைய நண்பர் மாணிக்க வேலுவின் மகள் கமலியின் மேல் அளவுக்கடந்த பாசத்தை வைத்துவிட்டு அவர் இறந்த செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ மனையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய முன்னாள் காதலரின் நினைவு வர எதற்கு இந்த நினைவு என்று குழம்பிப் போகிறார்..

மற்றொரு ஜி.எம் பாபு சுரேஷ¤க்கு அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் முரளியால் பிரச்சினையென்றால்  வீட்டில அவருடைய மகளால் பிரச்சினை. தன் தந்தைக்கு  பாடம் புகட்ட நினைத்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறி தன் தோழி புவனா வீட்டில் தஞ்சம் புகுகிறாள்.
இதையறியாத பாபு சுரேஷ் சேது மாதவனின் உதவியை நாட அவர் தன்னுடைய அடியாட்களை ஏவி விடுகிறார். அடியாட்கள் புவனாவின் புகைப்படத்துடன் எஸ்.பி.தனபால் சாமியின் கையில் சிக்க விஷயம் சிக்கலாகிவிடுகிறது.

தன் வீடு  திரும்பும் தனபால் சாமி ரம்யாவை தன் வீட்டில் கண்டு அதிர்ச்சியடைந்து அறிவுரை கூறி அவளுடைய வீட்டில்  சேர்க்கிறார். சேது மாதவனைக் குறித்த தனபால் சாமியின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் சமாளிக்கிறார் பாபு சுரேஷ்.

தன்னுடைய அடியாட்கள் போலீசில் சிக்கிய விவரத்தைக் கேள்விப்பட்ட சேதுமாதவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை வெளியில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட இதைக் கேள்விப்படும் தனபால் சாமி கொதித்துப் போகிறார்.

வங்கியின் பல்லாவர கிளை மேலாளர் சி.எம் மாணிக்க வேல் தன் செல்ல மகள் கமலியை எதிர்பாராமல் இழந்து தவிக்கிறார். இதற்கு மூல காரணம் தன் மனைவி ராணிதான் என்று முடிவு செய்து அவளை வீட்டை விட்டு அனுப்புகிறார். பிறகு தன்னுடைய தந்தை மற்றும் மகனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அவள் திரும்பி வர சம்மதிக்கிறார்.

வங்கியின் கேரள கிளைகளில் பணி புரியும் நந்தக்குமார் மற்றும் நளினி தம்பதியர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையை அடைகின்றனர். கமலியின் மரணச் செய்தியையும் வந்தனாவின் மருத்துவமனை சேர்க்கையையும் தன் நண்பன் முரளியின் மூலமாக கேள்விப்படும் நந்தக்குமார் தான் சென்னை செல்லவிருப்பதாகவும் தன்னுடன் நளினி வர தயாரா என்று கேட்கிறான். கமலியைப் பற்றி லேசாக கேள்விப்பட்டிருக்கும் நளினி வந்தனாவின் சுகவீனத்தைக் கேள்விப்பட்டதும் தானும் வருகிறேன் என்று அவனுடன் புறப்படுகிறாள். அத்துடன் இந்த சென்னைப் பயணம் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்ற ஏக்கமும் அவளுக்கு இருக்கிறது.

வங்கியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ரவி பிரபாகர் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு தற்காலிக பதவியிழப்புக்குள்ளாகிறார். அவருடைய மனைவி மஞ்சு ரவியுடனான தாம்பத்திய வாழ்வில் வெறுப்படைந்து வேறு வழிதெரியாமல் வீட்டைவிட்டு சென்று தன்னுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுகிறார்.

தனக்கெதிராக நடக்கவிருக்கும் விசாரனையை எதிர்கொள்ள அவருடயை குடியிருப்பில் வசிக்கும் ஒரு வழக்கறிஞ நண்பருடைய உதவியை நாடுகிறார் ரவி. அவர்களுடைய ஆலோசனையின்படி வீடு திரும்ப விரும்பும் மஞ்சுவை சந்தோஷத்துடன் வரவேற்கிறார். இருவர் உறவிலும் மீண்டும் மகிழ்ச்சி திரும்புகிறது. மஞ்சு ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று யோசனை கூற தனக்கெதிரான விசாரனை முடியட்டும் பிறகு செய்யலாம் என்கிறார்.

வங்கியின் இயக்குனர் குழுவில் (Directors’ Board ) இருந்த அனைத்து இயக்குனர்களுமே தங்களுடைய பரிந்துரைப்படி நடக்காமல் ரிசர்வ் வங்கி புது சேர்மனை நான்கு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டதை நினைத்து கோபம் கொள்கின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர்.

இயக்குனர்களில் மூத்தவரான மருத்துவர் சேதுமாதவனுக்கு பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தனக்கு அடுத்து தன்னுடைய பதவியில் யாரை நியமிக்கலாம் என்ற லோசனையில் இறங்க அவருடைய பிரதிநிதியை போர்டில் நுழையவிடுவதில்லை என்று கங்கணம் கட்டுகிறார் இன்னொரு இயக்குனர் சிலுவை மாணிக்கம் நாடார்.

சேது மாதவன் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கியிருந்த கடனை அடைக்க தேவையான தொகையை திரட்ட வங்கிக்கு 300 அதிகாரிகளை நியமிக்கும் ரகசிய திட்டத்தை தயாரிக்கிறார்.

சிறிய அளவில் ஒரு உணவகத்தை தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் துவங்கி அதை தன்னுடைய அயரா உழைப்பினாலும் சாதுரியத்தாலும் மிகப் பெரிய அளவில் வளர்க்கும் சிலுவை மாணிக்கம் நாடார் தன்னுடைய கூட்டாளியும் சம்பந்தியுமான ரத்தினவேலின் துரோகத்தை அறிந்து அதை முறியடிக்கிறார்.

தன்னுடைய தந்தையின் அறிவுரையை மதிக்காமல் வெறும் அழகுக்கு மயங்கி தன்னுடைய முறை மாப்பிள்ளை செல்வத்தை மணமுடிக்க மறுத்து ராசேந்திரனை மணம்புரியும் நாடாரின் மகள் ராசம்மாள் அவனுடைய நடவடிக்கையில் காயப்பட்டு தன் தந்தை வீட்டுக்கே திரும்புகிறாள்.

கூட்டாளி ரத்தினவேலின் துரோகத்துக்கு பழிவாங்கத் துடிக்கும் நாடார் தன்னுடைய மருமகன் ராசேந்திரனை தன்னுடைய நிறுவனத்திலிருந்து விரட்டிவிட்டு அப்பதவியில் தன்னுடைய மகள் ராசம்மாளை நியமிக்க தீர்மானிக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் ராசம்மள் தான் ராசேந்திரனை விவாகரத்து செய்துவிட உத்தேசிப்பதாக தன் பெற்றோரிடம் கூற நாடாருக்கு அது மகிழ்ச்சியை அளித்தாலும் அவளுடைய தாய் ராசாத்தியம்மாள் கவலையடைகிறாள்.

தன் தந்தையின் நிறுவனத்தில் நுழைவதற்கு ஏதுவாக தன்னுடைய தந்தையுடன் சென்னை திரும்ப தீர்மானிக்கும் ராசம்மாள் தன்னை துன்புறுத்திய ராசேந்திரனை பழிவாங்க தீர்மானிக்கிறாள். அவனுடனான இந்த போராட்டத்தில் செல்வத்தின் துணை தனக்கு தேவைப்படும் என்று கருதி அவனையும் சென்னைக்கு கிளம்பி வர கோருகிறாள்.

ராசம்மாள், ராசேந்திரன் திருமணத்தை ஆரம்ப முதலே விரும்பாத செல்வம் ராசேந்திரனின் துர்போதனைக்கு பணிந்து அவள் தன்னை தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நின்ற நிறுவனத்திலிருந்தே வெளியேற்றியதையும் மறந்து அவளுக்கு துணைபோக தீர்மானித்து தன்னுடைய மனைவியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னைக்கு விரைகிறான்.

ராசம்மாள் ராசேந்திரனுடனான திருமண உறவை முறித்துக்கொள்ள எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் செல்வம் அவள் ராசேந்திரனை பழிவாங்க எடுத்த தீர்மானத்தால் கவலையடைகிறான்..

வங்கியின் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்த டி.ஜி.எம். சேவியர் பர்னாந்து தனக்கும் தன்னுடைய உழைப்புக்கும் அதுவரை கிடைக்காத அங்கீகாரம் ஆரம்ப காலத்தில் தனக்கு கிளை மேலாளராக பணி புரிந்து தற்போது சேர்மனாக பதவியேற்கவிருக்கும் மாதவனின் வரவு தனக்கு ஒரு விடிவை ஏற்படுத்தாதா என்று நினைக்கிறார்..

இனி...

மாதவனின் பதவியேற்பு வங்கியினுடைய தலையெழுத்தை மாற்றுமா அல்லது அவருடைய தலையெழுத்தே மாறிப்போகுமா?

சீனிவாசன், மைதிலி காதல் வெற்றியடையுமா? ஆண்களையே அடியோடு வெறுக்கும் வத்ஸலாவின் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத்துக்கும் இடம் இருக்கிறதா?

சென்னை மாற்றம் தங்களுடைய குடும்பத்தில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்று ஏங்கும் மாதவனின் மனைவி சரோஜாவின் எண்ணம் ஈடேறுமா?

மாதவனை அவமானப்படுத்தி, பதவியிறக்கி, அவருடைய பதவியை அடைய சூழ்ச்சியில் இறங்கும் சேதுமாதவனின் கனவு பலிக்குமா அல்லது அந்த சூழ்ச்சிக்கு அவரே பலியாவாரா?

மாதவன், சேது மாதவன் இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சுந்தரலிங்கம், பிலிப் சுந்தரம் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பார்களா?

வந்தனாவால் கமலியை மறந்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை தொடர முடியுமா? மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவளுக்கு தன்னுடைய முன்னாள் காதலருடைய நினைவு வருகிறதே... அதன் பொருள் என்ன? அது மீண்டும் மலருமா?

பாபு சுரேஷின் மகளுடைய திருமணம்.. தலைமையகத்துக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்கப் போக சோமசுந்தரத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளும் அவர் அதிலிருந்து மீள்வாரா?

தான் கைது செய்த சேது மாதவனின் அடியாட்கள் மீதான வழக்கு  கைவிடப்பட்டதை கேள்வியுறும் தனபால் சாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?

மாணிக்க வேலின் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்படுமா? அவருடைய தந்தையின் கதி என்னவாயிருக்கும்? ராணி திருந்துவாளா?

நந்தக்குமார் நளினி இவர்களின் சென்னைப் பயணம் அவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளை விளைவிக்குமா?

ரவி பிரபாகருக்கு எதிரான விசாரனையில் அவர் வெற்றி பெறுவாரா? ரவி மஞ்சுவின் வாழ்க்கையில் வசந்தம் மீண்டும் வருமா?

குழந்தை செல்வத்துக்காக ஏங்கி நிற்கும் இவ்விரு தம்பதியரின் எண்ணம் நடக்குமா?

சேதுமாதவனின் ஒரு கோடி ரூபாய் கையூட்டு திட்டம் நிறைவேறுமா? அவருக்கு பிறகு அவருடைய பதவியில் அமரப்போவது யாராக இருக்கும்? அவருடைய நண்பர் வேணுகோபாலனா, அல்லது அவருடைய ஒரே மகள் பூர்ணிமாவா?

தன் சம்பந்தி ரத்தினவேலுவின் சதியை முறியடித்த மாணிக்கம் நாடார் அவரை பழிவாங்கும் முயற்சியில் வெற்றியடைவாரா?

ராசம்மாள், ராசேந்திரன் விவாகரத்து அவள் நினைத்தபடி நிறைவேறுமா? ராசேந்திரனை பழிவாங்க துடிக்கும் அவளுடைய திட்டம் வெற்றி பெறுமா?

இப்போராட்டத்தில் ராசம்மாளுக்கு துணைபோகும் செல்வத்தின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமா?

தன்னை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று மருகும் சேவியர் பர்னாந்துவின் அலுவலக வாழ்வில் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் புது சேர்மனின் வரவால் கிடைக்குமா?

சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷனின் எதிர்காலம் என்ன? சட்ட விரோத கையாடலில் ஈடுபட்ட அதனுடைய சேர்மன் முத்தையா, அவருடைய மகன் நேத்தாஜி, மருமகன் இவர்களுடைய கதி என்னவாகும்?

அந்த நிறுவனத்தில் தன்னுடைய ஓய்வூதியம் முழுவதையும் முதலீடு செய்துவிட்டு தவித்து நிற்கும் ரத்னசாமியின் கதி என்ன?

இனி வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்..

தொடர்ந்து படியுங்கள்.. உங்களுடைய விமர்சனத்தை தவறாமல் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்..

ஜோசஃப்

29.6.06

சூரியன் 99

ஆங்கிலத்தில் Madras Credit Corporation Ltd., அல்லது MCC என்று சுருக்கமாக அழைக்கப்பட்டு சென்னையில் இயங்கிவந்த அந்த தனியார் நிதிநிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல கிளைகளைக் கொண்டிருந்தது.

சென்னை அண்ணாசாலையிலிருந்த அதன் தலைமையகத்தில் அதன் இயக்குனர்களின் அவசர கூட்டம் (Emergency Board Meeting) நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கூட்டத்தை தலைமையேற்று நடத்திய நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்த முத்தையா செட்டியாருடைய முகத்தில் கவலையின் ரேகைகள் நன்றாகவே தெரிந்தன. ஏறத்தாழ நூறாண்டு காலமாக அவருடைய மூதாதையர் நடத்திவந்த நிறுவனத்தை அவர் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்த கடந்த இருபதாண்டு காலத்தில் இப்படியொரு நெருக்கடியை அவர் சந்தித்ததேயில்லை.

தனக்கு முன்னே நீள் வட்ட வடிவ மேசையில் அமர்ந்திருந்த தன்னுடைய இயக்குனர்களை ஒருமுறை பார்த்தார். இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய வலதுகரம் என அழைக்கப்பட்ட சென்னையில் மிக பிரபலமான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவனத்தின் தலைமை பாகஸ்தரான வேணுகோபாலைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பதற்றத்துடன் அவரையே பார்ப்பது தெரிந்தது.

அவர்களுள் ஒருவர் தனக்கு முன்னாலிருந்த நிறுவனத்தின் நிதியறிக்கையை எடுத்து மேசையில் கோபத்துடன் வீசியெறிந்தார். ‘இதென்ன சார் அக்கிரமமா இருக்கு. எல்லா மாசமும் போர்ட் மீட்டிங்குன்னு பேருக்கு நடத்திக்கிட்டிருக்கீங்க. ஒரு மீட்டிங்குல கூட நம்ம கம்பெனி இவ்வளவு மோசமான நிலமையிலருக்குன்னு டிஸ்கஸ் பண்ணவேயில்லை. இப்ப திடுதிடுப்புன்னு வந்து நம்மளால ஜனங்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட்டக் கூட திருப்பித் தராத நிலமையிலருக்கோம்னு சொன்னா என்ன அர்த்தம் சார்? நீங்க கம்பெனிய நடத்துன லட்சணத்துல எங்களால வெளியில தலகாட்ட முடியல.. இன்னைக்கி கம்பெனி நிலவரத்தப்பத்தி முழுசையும் தெரிஞ்சிக்காம இந்த மீட்டிங்லருந்து போகப்போறதில்லை சார். எவ்வளவு நேரமானாலும் சரி.’

முத்தையா தன்னருகில் அமர்ந்திருந்த நிறுவனத்தின் பொது மேலாளரை பார்த்தார். அவர் தனக்கு முன்னாலிருந்த கோப்பை விரித்து தன்னுடைய வெள்ளெழுத்து கண்ணாடியை அணிந்துக்கொண்டு படித்துவிட்டு தன் முன் அமர்ந்தவர்களை பார்த்தார். பிறகு கோப்பிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.

‘நம்ம கம்பெனியில பொது மக்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட் ரூ.175 கோடி இருக்கு. அதுல இந்த வருசம் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.32 கோடி. இதுல ஓவ்வொரு மாசமும் திருப்பிக் கொடுக்க வேண்டியது ஆவரேஜா ரெண்டுலருந்து ரெண்டரை கோடி இருக்கும்.. போன வருசம் செப்டம்பர் மாதத்துலருந்து ரீப்பே பண்றத சஸ்பெண்ட் பண்ணியிருக்கோம்.’

‘சஸ்பெண்ட் செஞ்சிருக்கீங்களா? யார கேட்டுக்கிட்டு செஞ்சீங்க? இத எப்படி எங்கக்கிட்ட கேக்காம செஞ்சீங்க, சேர்மன்?’

சேர்மன் முத்தையா குறுக்கிட்டு பேசிய இயக்குனரைப் பார்த்தார். அவர் ஒருத்தர்தான் இந்த நிறுவனத்திலிருந்து எந்த சலுகையையோ கடனையோ பெறாத நபர். அரசு பதவியில் நாற்பதாண்டுகாலம் பணிபுரிந்திருந்தாலும் எந்த சிக்கலிலும் சிக்காமல் ஓய்வு பெற்றிருந்தவர். அவருடைய பெயர் தனது நிறுவனத்திற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்குமே என்ற எண்ணத்தில்தான் அவரை தானே முன்மொழிந்து இயக்குனராக்கியதை நினைத்துப் பார்த்தார்.

‘நீங்க அந்த மீட்டிங்குக்கு வரலை சார். மகள பாக்கணும்னு ஊருக்கு போயிருந்தீங்க.’ என்றார் பொறுமையாக.

‘சரி சார். ஒத்துக்கறேன். ஆனாலும் அந்த போர்ட் மீட்டிங்கோட மினிட்ஸ எனக்கு அனுப்பியிருப்பீங்க இல்லே.. ஆனா அப்படியொரு மினிட்ஸ வாசிச்ச ஞாபகமே எனக்கு இல்லையே?’

உண்மைதான். அப்படியொரு டிஸ்கஷன் இயக்குனர் கூட்டத்தில் நடந்திருந்தால்தானே மினிட்சில் வருவதற்கு? ஆனால் இதை எப்படி அவருக்கு கூறி புரியவைப்பதென தெரியாமல் ‘சார் உங்களுக்கு அந்த மினிட்ஸ தரச்சொல்றேன். இப்ப மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்.’ என்று சொல்லி சமாளித்தார்.

அவர் சம்மதம் என்பதுபோல் வாளாவிருக்கவே முத்தையா தன் முன்னாலிருந்த குறிப்பேட்டில் எதையோ கிறுக்கி தன்னுடைய பொது மேலாளரை முன் வைத்தார்.

‘Don’t elaborate. Be brief’ என்ற அந்த கிறுக்கலை வாசித்த பொது மேலாளர் சங்கடத்துடன் தன்னுடைய முதல்வரைப் பார்த்தார். பிறகு, ‘பிரின்சிபல் தொகைய திருப்பிக்கொடுக்க ஆறு மாத கால கெடு வேண்டும் வட்டியை அடுத்த இரண்டு மாதங்களில் முழுவதுமாக கொடுத்துவிடுகிறோம் என்று கூறி எல்லா வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட கடிதம் எழுதியிருக்கிறோம்.. ஆனால்..’ என்று தொடர்ந்தார்

‘அதையும் இப்ப குடுக்க முடியலைன்னு சொல்ல போறீங்களாக்கும். I am sorry Chairman.. I don’t want to continue in this Board. Please allow me to resign.. I am ashamed of this post..’ என்றவாறு சற்று முன் ஆட்சேபம் தெரிவித்த இயக்குனர் தன் இருக்கையை பின்னுக்கு தள்ளிக்கொண்டு எழுந்து நிற்க அவரை ஏளனத்துடன் பார்த்தார் ஆடிட்டர் வேணுகோபாலன்..

போய்யா.. என்னமோ நீ போய்ட்டா கம்பெனிய மூடிறப்போறா மாதிரி..

மேசையில் அமர்ந்திருந்த யாருமே அவரை தடுக்காத நிலையில் அவர் சில நிமிடங்கள் நேரம் காத்திருந்துவிட்டு அறையை விட்டு வெளியேற சேர்மன் எழுந்து அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்.

‘சார்.. அவசரப்பட்டு ரிசைன் செஞ்சிராதீங்க, ப்ளீஸ்.’ என்றார்.

‘இதுக்கப்புறமும் இந்த கம்பெனியில நான் தொடர்ந்து இருந்தா என் பெயர் கெட்டுப்போயிரும் சார். நாப்பது வருசமா இந்த பேருக்குத்தான அரசியல்வாதிங்களோட அவமானத்தையெல்லாம் பொருட்படுத்தாம என் வழியிலயே நான் போய்க்கிட்டிருந்தேன்.. இந்த வயசான காலத்துல எனக்கு இப்படியொரு நிலமை வேணுமா சார்.. என்னெ விட்டுருங்க..ஆனா போறதுக்கு முன்னால ஒன்னு சொல்றேன்.. இதுக்கு ஒங்க மகன் நேத்தாஜியும் ஒங்க மருமகனுந்தான் காரணம்.. ஹார்வர்ட்ல படிச்சிட்டு வந்தா போறுமா சார்.. அங்க பார்த்ததையெல்லாம் இங்கயும் வந்து செய்யணும்னு நினைச்சா அது நடக்குமா..எத்தன மீட்டிங்குல தலபாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்.. நீங்களுந்தான சார் அந்த ரெண்டு பசங்களோடயும் சேர்ந்துக்கிட்டு என்னெ அவாய்ட் செஞ்சீங்க? I am sorry.. My decision is final.. Goodbye..’

அவருடைய பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென சென்றவரையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூட்டம் நடந்த அறைக்கு திரும்பினார் முத்தையா..

‘என்ன சார்.. அந்தாள் போய்ட்டானா.. அந்தாள் சரியான பயந்தாங்கொள்ளி சார்.. பிரச்சினைன்னு வந்ததும் நழுவிட்டான்.. அவன் கெடக்கறான்..’ என்றார் வேணுகோபாலன்.

முத்தையா தன் இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.. ‘அவர் கோபப்பட்டதுல எந்த தப்பும் இல்ல.. இப்படியொரு தீர்மானம் எடுக்கறதுக்கு முன்னால நிச்சயமா போர்ட் மீட்டிங்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கணும்.. செய்யலை.. அதுக்கு யார் காரணம்னு இப்ப பேசறதவிட இதுக்கப்புறம் என்ன செய்யணும்னு பேசறதுதான் சரி..’

‘சொல்லுங்க சார். அதுக்குத்தான இந்த மீட்டிங்க அவசரமா கூட்டுனீங்க..?’ என்றார் ஒரு இயக்குனர். அவர் நகரத்தில் இருந்த பெரிய நகைக்கடையின் முதலாளி. தன்னுடைய இயக்குனர் பதவியை பயன்படுத்தி சுமார் நான்கு கோடி கடனாக பெற்றுவிட்டு திருப்பி தராமல் காலந்தாழ்த்திக்கொண்டிருப்பவர்.

‘நமக்கு வரவேண்டிய மொத்த கடன் தொகையில போன ஆறுமாசமா காலாவதியாகி நிக்கற தொகையில பாதிய ரிக்கவர் செஞ்சாலே டிப்பாசிட்டர்சுக்கு அவங்க பணத்த திருப்பி குடுத்துற முடியும்.. அதுல நம்ம போர்ட் மெம்பர்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்ட்டருந்தே சுமார் பதினாறு கோடி நிலுவையில் நிற்கிறது.'

அறையிலிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ‘என்ன இவர் அடிமடியிலயே கை வைக்க பாக்காரு..’ என்றார் நகைக்கடை முதலாளி தன்னருகில் இருந்தவரிடம்.. ‘அதானே..’ என்றார் இரண்டு கோடியை திருப்பி தர வேண்டியிருந்த இரும்பு வியாபாரி..

‘சார்.. நீங்க நம்ம க்ரூப் கம்பெனிக்கு டைவர்ட் பணத்த முதல்ல திருப்பி கொண்டுவர பாருங்க.. அதுசரி.. எங்க ஒங்க மகனையும் மருமகனையும் காணோம்..?’ என்றார் வேணுகோபாலன்..

சேர்மன் சங்கடத்துடன் நெளிந்தார்.. ‘அவங்க ரெண்டு பேரையும் ரிக்கவரிக்கு அனுப்பியிருக்கேன்..’

‘அதுக்கு எதுக்கு சார் வெளியில போணும்.. ஒங்க ஃபெர்ட்டிலைசர் கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சீங்களே.. எவ்வளவு ஜி.எம் சார்..?’ என்றார் வேணுகோபாலன் விடாமல். அவருக்கு அவருடைய நண்பர் மருத்துவர் சோமசுந்தரத்திற்கு அவர் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்த கடனை உடனே திருப்பி அடைக்க வேண்டியிருக்குமோ என்ற பயம்..

பொது மேலாளர் தன் முதல்வரைப் பார்த்தார். அவர் ‘சொல்லுங்க.. எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..’ என்றார்.

‘கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.225 கோடி’ என்றார் சுருக்கமாக.. யாரும் அவருக்கு முன்பிருந்த நிதியறிக்கையை பறித்து படிக்கமாட்டார்கள் என்ற தைரியம்.. அதனால்தான் ரூ.400 கோடியை ரூ.225 கோடி என்று படித்தார்..

ஆடிட்டர் வேணுகோபாலுக்கு அவர் கூறிய பொய் தெரிந்துதானிருந்தது. இருந்தாலும் மவுனமாக இருந்தார். இதை வைத்தே தன்னுடைய காரியத்தை நடத்திக்கொள்ள முடியுமே என்ற எண்ணம் அவருக்கு.

‘என்ன சார்.. இவ்வளவு பெரிய தொகைய டைவர்ட் பண்ணிட்டு எங்களோட சில்லறைக் கடன வசூலிக்கறதுல குறியாருக்கீங்க? மொதல்ல நீங்க ஒங்க கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சிருக்கற தொகையில அடுத்த ஒரு மாசத்துல இருபத்தஞ்சு பர்செண்ட்... ரூ.225 கோடியில இருபத்தஞ்சு பெர்சண்ட்னா சுமார் ரூ.50 கோடி. இப்போதைக்கு அத ரிக்கவர் செய்யணும்னு ரிச்லூஷன் பாஸ்  செய்யறோம்.. அடுத்த மீட்டிங்குகுள்ள ரிக்கவர் செஞ்சிருக்கணும்.. அத வச்சி அசல கொஞ்சம், வட்டிய கொஞ்சம் எவ்வளவு பேருக்கு  கொடுக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கொடுத்துருங்க.. அடுத்த மாசத்துலருந்து ஒரு வருசத்துக்குள்ள நீங்க டைவர்ட் செஞ்சிருக்கற முழு தொகையையும் நம்ம  கம்பெனிக்கு திருப்பி கொண்டுவந்திரணும்.. அதுக்கு நீங்க, ஒங்க மகன், மருமகன் மூனு பேரும் பொறுப்பு.. இது இந்த மீட்டிங்கோட ஒட்டு மொத்த கருத்து.. என்னய்யா சொல்றீங்க?’ என்றவாறு தன் சகாக்களைப் பார்த்தார் நகைக்கடை முதலாளி கே.ஆர்.தங்கவேலு..

இதுதான் சமயம் என்று சேர்மன் முத்தையாவைத் தவிர எல்லோரும் தலையை அசைக்க அதுவே அன்றைய கூட்டத்தின் முடிவானது..

இந்த முடிவு தன்னை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல் அந்நிறுவனத்தின் சென்னை கிளைகளில் ஒன்றில் இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக கால்கடுக்க நின்றிருந்தார் ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த தொகையை முழுவதும் முதலீடு செய்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரத்னசாமி.

தொடரும்..

பூர்ணிமா ராவ், சேவியர் பர்னாந்து, ரத்னசாமி, ஆடிட்டர் வேணுகோபாலன் மற்றும் MCC நிறுவனம் என்ற புது கதாபாத்திரங்களுடைய  அறிமுகத்துடன் இத்தொடரின் முதல் பகுதி நிறைவுறுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புதிய தலைவருடைய பதவியேற்புடன் அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடைய அலுவலக வாழ்க்கை மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் கூட பாதிக்கப்படுவது சகஜம்.

இத்தொடரிலும் அப்படித்தான் நடக்கப்போகிறது.

சிலருடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் சிலருடைய வாழ்க்கையில் பின்னடைவும், சிலருக்கு வெற்றிகளும், சிலருக்கு தோல்விகளும், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி சிலருக்கு, துக்கம் சிலருக்கு..

பிரிந்திருந்தவர்கள் சேருவதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் இருக்கும்..

கதையின் ஓட்டத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் கூட சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது..

இத்தொடரை இதுவரை சுமார் 14000 வாசக நண்பர்கள் படித்திருக்கிறார்கள். அதாவது ஒரு எப்பிசோடுக்கு 140 வாசகர்கள் வீதம்..

கடந்த வாரத்தில் நான் எழுதி முடித்திருக்கும் கதை சுருக்கத்தின்படி இன்னும் சுமார் நூறு அத்தியாயங்கள் வரும் என்று நினைக்கிறேன்..

தொடர்ந்து ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.

அடுத்த பதிவில் இதுவரை நடந்ததை சுருக்கமாக தருகிறேன்..

அன்புடன்,
ஜோசஃப்

27.6.06

Soorian 98

வங்கியின் போர்ட் மீட்டிங் நாட்களில் மருத்துவர். சோமசுந்தரம் தன்னுடைய மருத்துவமனை அலுவல்களையெல்லாம் தன்னுடைய மூத்த மகளிடம் ஒப்படைத்துவிடுவார்.

சென்னையிலும் அவருடைய சொந்த மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்திலுமிருந்த மருத்துவமனைகள் அவற்றை சார்ந்திருந்த மூன்று நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் சென்னையை முழுவதும் இயங்கிவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து விற்பனைக் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செண்டர்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பு மருத்துவத்துறையில் எம்.சி.எச் மற்றும் நிர்வாகத்துறையில் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றிருந்த அவருடைய ஒரே மகள் பூர்னிமா ராவ்தான்.

அவருடைய பார்வையில் அவருடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் பூர்னிமா ஒரு மகனைப் போலத்தான் தென்பட்டாள்.

பூர்னிமாவும் தன்னை அதுபோல்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவளுடைய தந்தைக்கு இருந்த எந்தஒரு குறுக்கு புத்தியும் அவளுக்கு இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசாக இருந்தும் அவளுடைய மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடைய பார்வையில் அவள் மிகவும் எளிமையானவள். ஆனால் அதே சமயம் கண்டிப்பானவள்.

சோமசுந்தரத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவ பகுதியை துவக்கியதுடன் நின்றுவிடாமல் சென்னையிலிருந்த பல தொண்டு நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை இடைவிடாமல் நடத்துவதிலும் குறியாயிருந்தாள்..

‘இது அம்மாவோட கடைசி ஆசைப்பா.. இதுல நீங்க தலையிடாதீங்க.. நீங்க பணம் பண்றதுக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க.. அதுக்கு ஒரு பிராயச்சித்தம்னு கூட நினைச்சிக்குங்களேன்..’

பூர்னிமாவின் இந்த மறைமுகத் தாக்குதல் அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுடன் எந்தவித வாக்குவாதமும் செய்யமாட்டார். அவள் எது செய்தாலும் அது நன்மையில்தான் சென்று முடியும் என்பது அவருக்குத் தெரியும்..

‘இன்னைக்கி நம்ம பேங்குல புது சேர்மன் சார்ஜ் எடுக்கறார் பூர்னி.. அதனால் இன்னைக்கிம் நாளைக்கிம் அப்பா கொஞ்சம் பிசியா இருப்பேன்.. நீதான் இங்க பாத்துக்கணும்..’

பூர்னிமா காப்பி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஒங்களோட அட்ஜஸ்ட் பண்ண முடியாம பழைய சேர்மன் போனா மாதிரி இவரையும் ஓட வச்சிருவீங்களே..’

தன் மகள் மறைமுகமாக தன்னை தாக்குவது தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், ‘நாளைக்கும் அடுத்த நாளும் நான் செய்யறதாருந்த சர்ஜரியையெல்லாம் நம்ம சந்திரபோஸ் அப்புறம் மாதவ ராவ் டாக்டர்ஸ்ச பாத்துக்க சொல்லியிருக்கேன்.. ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான் ஒங்கிட்ட சொல்றேன்.. போஸ் ஆப்பரேட்டிவ் வார்ட்ல நீயும் அப்பப்போ போய் பார்த்துக்கிட்டா நல்லது..’ என்றார்.

‘லீவ் தட் ல் டு மி டாட்.. சொல்லுங்க.. எத்தன வருச காண்ட் ராக்ட்ல வரார் இந்த சேர்மன்..’

சோமசுந்தரம் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.. இவளையே நமக்கப்புறம் போர்ட்ல போட்டுரலாமா? எம்.பி.ஏ செஞ்சிருக்காளே?

சேச்சே.. இவள அப்படியே தூக்கி சாப்பிட்டுருவான் அந்த நாடார்.. மொதல்ல மாதவன வளைச்சிப் போட்டு நம்ம டேர்ம் முடியறதுக்குள்ள அந்த ரெக்ரூட்மெண்ட் ப்ராஜக்ட முடிச்சிரணும்.. அதுக்கப்புறம் போர்ட்ல யார நாமிநேட் பண்லாம்னு யோசிக்கலாம்..

‘என்ன டாட்.. சத்தத்தையே காணோம்.. என்னடா ஹாஸ்ப்பிடல், ஹோட்டல், மெடிக்கல் ஷாப்.. எல்லாம் போறாதுன்னு பேங்குல மூக்க நொழைக்கறாளேன்னு பாக்கறீங்களா?’

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார்.. ‘சேச்சே.. அப்படியே நீ நொழைஞ்சாலும் தப்பில்ல பூர்னி.. If you are interested.. I will do something.’

பூர்னிமா இல்லையென்று தலையை அசைத்தாள். ‘ இல்ல டாட்.. சும்மாத்தான் கேட்டேன்..’

‘ரெண்டு வருசத்துக்குத்தான் போர்ட்லருந்து ரெக்கமெண்ட் பண்ணோம்.. ஆனா ரிசர்வ் பேங்கலருந்து நாலு வருசத்துக்குன்னு அப்பாய்ண்ட்மெண்ட் வந்திருக்கு.. முதல்ல அப்போஸ் பண்ணா என்னன்னு நினைச்சோம்.. அப்புறம் இப்போதைக்கு வேணாம்னு விட்டுட்டோம்.. பாப்போம்..ஆள் முன்னாலருந்த சேர்மன்மாதிரி ஒத்துவராத ஆளாருந்தா இருக்கவே இருக்கு ரிசிக்னேஷன் ரூட்.. போடான்னா போய்ட்டு போறார்...’

பூர்னிமா கலகலவென சிரித்தவாறே எழுந்து நின்றாள்.. ‘அதான பார்த்தேன்.. சோமசுந்தரமா கொக்கா.. ஓக்கே டாட்.. யூ கேர்ரி ஆன்.. பை..’

முழங்காலை தொடும் நெருக்கமாக ப்ளீட் வைத்து தைக்கப்பட்ட ஸ்கர்ட்.. அதற்கு ஜோடியாக அரைக்கை சட்டை.. ஹீல்ஸ் இல்லாத வெள்ளை நிற காலனி.. தோள்வரை குலுங்கும் பாப் தலை.. லிப்ஸ்ட்டிக், மேக்கப் இல்லாத பளிச் முகம்..

தன்னுடைய மகளின் ஆடம்பரமில்லாத அமைதியான இந்த தோற்றத்தைக் கண்டு சோமசுந்தரமே பிரமித்துபோயிருக்கிறார் தனக்கு இப்படியொரு மகளா என்று.. 'கல்யாணம் செஞ்சிக்கம்மா' என்று எத்தனைமுறையோ கெஞ்சி பார்த்துவிட்டார். மிரட்டியும் பார்த்தார். ஊஹும்.. ஒன்றுக்கும் மசியவில்லை.. 'என்னெ என் போக்குல விட்டுருங்கப்பா.. எப்ப எனக்கே தோணுதோ.. அப்ப செஞ்சிக்கறேன்..' வயது முப்பத்தஞ்சாகிறது... இனி எப்போதுதான் தோன்றுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.

சென்னையிலிருந்த அனைத்து குடிகார க்ளப்பிலும் அவர் அங்கத்தினர் என்றால் நகரத்திலிருந்த அனைத்து சேவை சங்கங்களிலும் பூர்னிமா உறுப்பினராக இருந்தாள்.. அவர் சென்னை நகரின் ஷெரீஃபாக இருந்தார் என்றால் பூர்னிமா சென்னை மத்திய ரவுண்ட் டேபிளின் கவர்னராக இருந்தவள்..

எந்த வழியானாலும் பரவாயில்லை.. இறுதியில் பணம், சொத்து, புகழ் கிடைந்தால் போறும் என்று அவர் நினைத்தால்.. எத்தனை லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை தனக்கு மனதிருப்தி கிடைத்தால் போறும் என்று பூர்னிமா நினைத்தாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்..

‘அவ நம்ம மாதிரி இல்லைய்யா.. அப்படியே அவ அம்மா மாதிரி..’ என்பார் நண்பர்களிடம்..

பூர்னிமா புறப்பட்டுச் சென்றதும் சோமசுந்தரம் பரபரப்பானார்.. அவருடைய பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்தன. அதற்குள் அவர் நிறைவேற்றி முடிக்க வேண்டியவை ஒன்றிரண்டு இருந்தன..

தில்லி, மும்பை நகரங்களில் கிளை மருத்துவமனைகள் அதற்குத் தேவையான உபகரணங்களை சிலவற்றை ஜெர்மனியிலிருந்து தருவிக்க குறைந்தபட்சம் பதினைந்து கோடிகள் வேண்டியிருந்தது.

‘Why do you worry Dad.. we can borrow at a very competitive rate from a consortium of Banks.. I’ll manage it..’ என்று மகள் பொறுப்பேற்றுக்கொண்டாலும் பதினைந்து கோடி கடன் பெறவேண்டுமானால் அவருடயை பங்குக்கு மூன்று கோடி முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மூன்று மாத காலத்திற்கு சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனாக பெற்றிருந்தார். கெடு முடிந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனம் இனியும் பொறுத்திருக்கும் என்று அவருக்கு தோன்றவில்லை. அவருடைய சி.ஏ வேணுகோபாலின் பரிந்துரையால்தான் அந்த நிறுவனம் இதுவரை பொறுத்திருந்தது என்பதும் அவருக்குத் தெரியும். நண்பர்கள், உறவினர்கள் என இரண்டு கோடியை திரட்டி அடைத்திருந்தார். இன்னும் ஒரு கோடி ரூபாய்.. அதற்கு அவர் தீட்டிய திட்டம்தான் வங்கிக்கு புதிய கடைநிலை அதிகாரிகளை ரெக்ரூட் செய்ய வகுத்த திட்டம்..

அதற்கு புதிய சேர்மனை சரிகட்டினால் போறாது அந்த நாடாரையும் சரிகட்டவேண்டும் என்று அவருக்கு தெரியும்.. அது எப்படி என்பதை இனிமேல் யோசித்து செயல்படுத்தவேண்டும் என்று நினைத்தவாறே தன் செல்ஃபோனை எடுத்து பாபு சுரேஷின் நம்பரை டயல் செய்தார்..

****

சென்னை கடற்கரைச் சாலையிலிருந்த வங்கியின் பயிற்சிக்கல்லூரி திறக்கப்பட்டு அன்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகிறது.

அன்று காலை வங்கிக்கு பொறுப்பேற்றதும் புதிய சேர்மனுடைய முதல் பொது அலுவல் இந்த வெள்ளி விழாவில் பங்கு கொள்வதுதான்.

கவே அன்று காலை முதலே பயிற்சிக் கல்லூரி பரபரப்பாக இருந்தது. கல்லூரி முதல்வர் சேவியர் ஃபெர்னாண்டோவின் நேரடி பொறுப்பில் அவருடைய துனை முதல்வரும், கல்லூரியில் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு டஜன் அதிகாரிகளும் விழாவிற்கான கடைசி நிமிட தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.

‘சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் சேர்மனுக்கு எச்.ஓ லாபியில வச்சி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் குடுக்காங்களாம் சார்.. அது முடிஞ்சதும் சேர்மன் அவரோட சேம்பருக்கு போய் ஃபார்மலா சார்ஜ் எடுத்துட்டு நேரா இங்க வருவாராம்.. நம்ம ஆக்டிங் சேர்மன் ஃபோன்ல கூப்ட்டுருந்தார்.. நீங்க ஹால்ல இருந்ததால மிஸ்டர் ஃபெர்னாண்டோக்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டார்..’

அவரை ஃபெர்னாண்டோ என்றுதான் வங்கியில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கே சேவியர் என்ற பெயர் மறந்துபோகும் அளவுக்கு அவருடைய குலப்பெயர் அவ்வளவு பிரசித்தம்...

அந்த பெயரால் வங்கியில் அவருக்கு நியாயமாக கிடைக்கவிருந்த பதவி உயர்வும் அங்கீகாரமும் கூட கிடைக்காமல் போனதை நினைத்து பலமுறை நொந்துபோயிருக்கிறார்..

அவருடைய நேரடி தலைவர் சி.ஜி.எம் பிலிப் சுந்தரத்தைத் தவிர வேறு எந்த அதிகாரியும் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..

எல்லாம் இந்த கேடுகெட்ட சாதி துவேஷந்தான் காரணம் என்று நினைத்தபோது பேசாமல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு போனால் என்ன என்றும் பல சமயங்களிலும் அவருக்கு தோன்றியிருக்கிறது.

அப்போதெல்லாம் அவருக்கு ஆறுதலளிப்பது அவருடைய மனைவியும் மகள்களும்தான்..

அவருக்கு வாழ்க்கையில் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான பரிசு அவருடைய மனைவியும் அவருடைய இரு மகள்களும்..

அவருடைய எந்த மனநிலைக்கும் ஈடுகொடுத்து செல்லும் அவருடைய மனைவியால்தான் அவர் அலுவலகத்தில் சந்தித்த எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிந்தது..

‘புது சேர்மனுக்கு ஒங்களப்பத்தி நல்லா தெரியுமில்லீங்க.. அவர்கிட்ட நீங்க வேல செஞ்சிருக்கீங்கல்ல.. கவலைப்படாம இருங்க.. அவராலதான் ஒங்களுக்கு மறுபடியும் ஒரு புதுவாழ்வு வரப்போவுது.. பாத்துக்கிட்டே இருங்க..’

நேற்று இரவு அவருடைய மனைவி கூறிய ஆறுதலான பேச்சு நினைவுக்கு வர.. மனம் தெளிவடைந்து சேர்மனை வரவேற்று அவர் ஆற்றவிருந்த உரையாடல் நேரத்தில் காட்ட அவர் தயாரித்திருந்த பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆரம்பித்தார். பிறகு எழுந்து விழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த அரங்கத்திற்கு விரைந்தார்..

தொடரும்..

23.6.06

சூரியன் 97

தூக்க மாத்திரை போட்டால்தான் உறக்கம் வரும் என்பதே வந்தனாவின் சரித்திரத்தில் கிடையாது..

அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீடு திரும்பியதும் காலையில் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்திருப்பதை வெளியில் எடுத்து வைத்துவிட்டு குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு திரும்பும் போதே அவளுக்கு உறக்கம் கண்களை அழுத்தும்.

பேருக்கு உண்டு முடித்துவிட்டு பத்துமணி செய்தியை பார்த்து முடித்ததுமே விளக்குகளை அணைத்துவிட்டு படுத்துவிடுவாள்..

இந்த ரொட்டீன் வாரத்தின் எல்லா நாட்களிலும்.. சனிக்கிழமை தவிர..

அப்படிப் பழகிப்போன அவளுக்கு மருத்துவமனை சூழலில் ஒன்றுக்கு இரண்டுக்கு மாத்திரைகளை போட்டுக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூங்க முடிந்தது..

தூக்க மாத்திரைகளின் தாக்கம் விடுபட்டு விடியற்காலையிலேயே முழிப்பு வந்துவிட தான் படுத்திருந்த ICU வின் மெல்லிய நீல நிற விளக்கொளியில் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள்.

கொசுவலையினூடே அடுத்த கட்டிலில் படுத்திருந்தவரின் உருவம் நிழலாக தெரிந்தது..

நேற்றிரவு உறங்கச் செல்வதற்கு சற்று முன்னர் கொண்டுவந்து கிடத்தப்பட்டது நினைவுக்கு வந்தது..

‘What is this Sister, you call this five star facility? My Dad deserves better than this. He is after all the Chairman of the....’ என்று கோபப்பட்ட இளம் பெண்ணின் குரல் இப்போதும் அவளுடைய செவிகளில் கேட்டது. அவர் எந்த நிறுவனத்தின் முதல்வராயிருந்தால் எனக்கென்ன என்பதுபோல் நர்ஸ் அப்பெண்ணைப் பார்த்ததை நினைக்கும்போதே வந்தனாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது..

அத்தனை சிறிய பெண்ணுக்கு தந்தையா? இவரா?

‘This is not uncommon for a person of this age. How old is he, Eighty?’ என்ற சீஃப் மருத்துவரின் கேள்விக்கு, ‘Yes Doctor.. He is eighty plus.’ என்று அந்த இளம் பெண் பதிலளித்தது நினைவுக்கு வந்தது.

‘I thought so. His breathlessness is more due to his age and fatigue than anything less.. Don’t worry.. he should be ok in the morning. I will just give him a sedative so that he can sleep peacefully..’

சீஃப் டாக்டரின் அமைதியான அதே சமயம் உறுதியான பேச்சு அந்த பெண்ணை சமாதானப்படுத்த சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு அந்த பெண் புறப்பட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது..

கட்டிலின் அருகிலிருந்த குறு மேசையில் இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.

மணி 3.30!

நேற்று காலை படுக்கைக்கு சென்ற நேரம்..!

யார் நினைத்தார்கள் அடுத்த நாள் காலை மருத்துவமனையில் கண் விழிப்பேன் என்று..

இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் என்னவெல்லாம் நடந்துவிட்டது..?

நினைத்த மாத்திரத்திலேயே கண்கள் கலங்க  கன்னங்களில் வடிந்தோடிய கண்ணீரை தன்னையுமறியாமலே துடைத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..

முடிந்தால்தானே..

மனதும், உடம்பும் சோர்ந்திருந்தபோதெல்லாம் கமலியை செல் ஃபோனில் அழைத்து அவள் பேசுவதுண்டு..

‘என்ன ஆண்ட்டி நீங்க? You are the head of H.R. in your Bank.. A person in charge hundreds of employees.. நீங்களே இதுக்கெல்லாம் சோர்ந்து போனா எப்படி.. சீயர் அப்..’ என்பாள் கமலி சிரிப்புடன்.

இந்த சின்ன வயசுல இப்படியொரு மனப்பக்குவமா என்று எத்தனை முறை வியந்து போயிருக்கிறாள்..

ராணிக்கு தெரியாமல் கமலி பலமுறை அவளுடைய ஃபாளாட்டுக்கு வந்திருக்கிறாள்.. வரும்போதெல்லாம் மறக்காமல் அவள் கொண்டுவரும் ஒரு கருவி அவளுடைய வயலின்..

‘நீங்க அப்படியே சாஞ்சி ஒக்காருங்க.. நா எங்க சர்ச்சில வாசிக்கற ரெண்டு ட்யூன வாசிக்கறேன்.. You will forget what you are and who you are.. Surrender yourself totally to me..’ என்ற வார்த்தைகளுடன் வந்தனாவை அடுத்த பத்து பதினைந்து நிமிடங்கள் அவள் கேட்டறியாத தன்னுடைய இசை உலகிற்கு அவளை அழைத்துச் சென்றுவிடுவாள் கமலி..

அந்த நளினமான பிஞ்சு விரல்கள் கம்பிகளில் ஆடும் நர்த்தனத்தைக் கண்டு பெருமிதமும், மகிழ்ச்சியும் பொங்க அப்படியே கண்களை மூடிக்கொண்டு உறங்கிப்போவாள் வந்தனா..

எத்தனை இனிமையான நாட்கள் அவை..

அவை மீண்டும் வருமா என்ன?

‘ஐயோ கமலி.. I am going to miss you a lot.. a lot Kamali.. a lot..’

நெஞ்சு லேசாக வலிப்பதுபோல தோன்றவே தடவிக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..

முடியவில்லை..

தனித்து விடப்பட்டது போல.. எனக்குன்னு இருந்த ஒரே உயிரும் போயிருச்சே என்று அவள் மனம் கிடந்து அலைபாய்கிறது.. அரற்றுகிறது..

அவளையுமறியாமல் மோகனை நினைத்துக்கொண்டாள்..

இத்தன வருசம் கழிச்சி ஏன் திடீர்னு அவரப் பத்திய இந்த நினைவு எனக்கு வருது..?

ஏன்னு தெரியலையே..

கண்கள் கலங்கி நிறைய வழிந்தோடிய கண்ணீரை பொருட்படுத்தாமல் படுத்துக் கிடந்தாள் வந்தனா..

****

செல்வத்தின் வாகனம் நாடாரின் வீட்டு வாசலை அடைந்து ஓய்ந்தது..

‘மகா.. நீ பின்பக்கமா போய் குளிச்சிட்டு கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரி.. பத்துமணிக்கு மேல நம்ம மோகன் சார் வீட்டுக்கு போவேண்டியிருக்கும்.. என்ன?’

மகாதேவன் வாகனத்தை அணைத்துவிட்டு இறங்கி ஓடிச்சென்று செல்வம் இறங்குவதற்காக கதவை திறக்க அதற்கு முன்பே செல்வம் இறங்கி அவனை முறைத்தான்..

‘எலெ.. இந்த வேலையெல்லாம் வேணாம்னு ஒங்கிட்ட எத்தனெ தடவ சொல்லியிருக்கேன்.. எனக்கு இறங்க தெரியாதா? போய் குளிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கத்த போடு.. போ.. நா பெரிய மொதலாளி, இவர் வந்து கார் கதவ தெறந்து விடறாரு..’

மகாதேவன் சிரித்துக்கொண்டே டிக்கியிலிருந்த செல்வத்தின் பெட்டியை இறக்கி வாசலில் வைத்துவிட்டு கதவில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அடித்தான்.

‘யார் செல்வந்தானே.. கதவு தெறந்துதான் இருக்கு.. வா.. மகா’

‘அக்கா பயங்கரமான ஆளுங்கய்யா.. நாமதான் வரோம்னு உள்ளருந்துக்கிட்டே கொரல் கொடுக்காங்க பாருங்க..’

செல்வம் சிரித்தான். ‘எலேய்.. போ.. போ.. உள்ளாற கொண்டு பெட்டிய வச்சிட்டு ஓடு.. ரொம்ப ஐஸ் வைக்காத.. அதுல மயங்குறதுக்கு ராசம்மா ஒன்னும் பழைய ராசம்மா இல்லல்லே..’

மகாதேவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு தன்னுடைய வாகன ஓட்டுனர்களுக்கென நாடார் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்த இருப்பிடம் நோக்கி விரைய செல்வம் ஹாலிலிருந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து அறையை சுற்றி நோட்டம் விட்டான்.

அவன் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றபிறகு இன்றுதான் முதல் முறையாக இந்த வீட்டிற்குள் நுழைகிறான்..

ஏறத்தாழ ஒன்னரை வருடம்!

ராசம்மா - ராசேந்திரனுடைய திருமணம் இவ்வளவு காலம் நீடித்ததே பெரிய விஷயம் என்று நினைத்தான்..

‘என்ன செல்வம்.. எப்படியிருக்கே.. ஒன்னெ பாத்ததுந்தான் எனக்கு தெம்பே வந்திருக்கு.. சொல்லு, வீட்ல செல்வி செளக்கியந்தானே..’

கையோடு கொண்டு வந்திருந்த காப்பி தம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு எதிரில் சென்றமர்ந்த தன் மாமன் மகளை தலையிலிருந்து கால்வரை பார்த்தான் செல்வம்..

எப்படி இருக்க வேண்டியவ இப்படி இளைச்சி, கறுத்து..

‘என்ன செல்வம் அப்படி பாக்கே? பாக்க பரிதாபமாருக்கேனா?’

செல்வம் புன்னகையுடன் தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்..

‘பெறவென்ன? காப்பிய குடிச்சிட்டு குளி.. வேணும்னா ஒரு குட்டி தூக்கம் போடு.. பத்து பத்தரைக்கு மோகன் சார போயி பாக்கணும்.. அநேகமா இன்னைக்கி முழுசும் அங்கனதான் இருக்கணும்னு நினைக்கேன்..’

செல்வம் சுடச் சுட இருந்த காப்பியை குடித்துவிட்டு எழுந்தான்.. கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தான்..

‘மாமா எங்க?’

‘குளிக்க போயிருக்காக.. இன்னைக்கி நம்ம பேங்க்ல புது சேர்மன் சார்ஜ் எடுக்காராம்.. அதனால அப்பா இன்னைக்கி முழுசும் ஃப்ரீ இல்லையாம்.. சாயந்தரத்துக்கு மேல பாக்கலாம்னுட்டாக..’

செல்வம் அவளைப் பார்த்து புன்னகைத்தான். ‘சரி அதுவும் நல்லதுக்குத்தான்.’

ராசம்மாள் வியப்புடன் அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.

‘நாம ரெண்டு பேரும் ஃப்ரீயா மோகன் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம் இல்ல?’

ராசம்மாள் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

‘நீ மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கேன்னு ஒரு மாதிரியா ஊகம் செஞ்சி வச்சிருக்கேன்.. ஒன்னோட முடிவுக்கு மாமா எப்படியோ நிச்சயமா அத்தை ஒத்துக்கிட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கேன்.. சரிதானே?’

ராசம்மாள் அதற்கும் சரி என்று தலையை அசைத்தாள்..

‘நீ சொல்றது சரிதான் செல்வம்.. அம்மாவால இத ஜீரணிக்க முடியல.. ஆனா நா முடிவெடுத்தாச்சி.. ராசேந்திரன டிவோர்ஸ் பண்றது மட்டுமில்ல செல்வம்.. அவர் என்னைய போன ஒரு வருசமா ட்ரீட் பண்ணதுக்கு என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு திருப்பியடிக்கப் போறேன்.. எங்க அடிச்சா எப்படி வலிக்கும்னு எனக்கு தெரியும் செல்வம்.. அங்க பாத்து அடிக்கற அடியில...’

அவளுடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று தன்னுடைய மனதை பிசைவதை உணர்ந்த செல்வம் சன்னல் வழியாக போர்ட்டிக்கோவை பார்த்துக்கொண்டிருந்த அவளையே பார்த்தான்..

வேதனையுடன்..

தொடரும்..
22.6.06

சூரியன் 96

பொழுது விடியும் முன்பே எழுந்து தன் தந்தைக்கு சுடச்சுட ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துவிட்டு நாற்பத்தைந்து நிமிட நடை சென்றுவிட்டு வருவதுதான் மாணிக்க வேலின் அன்றாட பழக்கம். நேற்று வரை அவருடய இந்த பழக்கத்தில் மாற்றம் இருந்ததில்லை..

படுக்கையில் விழுந்தவுடனே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும் மிகச்சில புண்ணியாவான்களில் அவரும் ஒருவர்.

‘அதானே.. ஒலகமே இடிஞ்சி விழுந்தாலும் ஒங்கள தூக்கத்துலருந்து எழுப்பிர முடியாதே.. ஒங்கப்பாதான ஒங்க ஒலகமே.. ராத்திரி பத்து மணிக்கு ஒரு தம்ளர் பால அவருக்கு கொண்டு குடுத்துட்டா ஒங்களுக்கு தூக்கம் வந்துரும்.. பொஞ்சாதி, புள்ளைங்கள பத்தி கவலைப்பட ஒங்களுக்கு எங்க நேரமிருக்குது?’ என்று அண்டை வீடுகளில் இருப்பவர்களெல்லாரும் கேட்கும் வண்ணம்  அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் அவருடைய மனைவி ராணியின் குரல் அவருடைய உறக்கத்திற்கு எந்த அளவிலும் பங்கம் விளைவித்ததே இல்லை.

இரவு பத்து, பத்தரை மணிக்கு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டால் அவருடைய நாள் முடிவுக்கு வந்துவிடும்.. ராணி எத்தனை முறை கோபத்துடன் அறைக்கதவை தட்டி ஓசை எழுப்பினாலும் அவர் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்..

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நடக்கும் எந்த பிரச்சினையும் அவருடைய உறக்கத்தை இன்றுவரை தடைசெய்ததே இல்லை.

ஆனால், நேற்று இரவு அவருக்கேற்பட்ட அந்த பேரிழப்பு..

அவருடைய தந்தைக்கு தினமும் கொடுக்கும் தூக்க மாத்திரையில் இரண்டை இட்டுக்கொண்டும் உறக்கம் வராமல் இரவு முழுவதும்..

‘சித்தப்பாவ கூட்டிக்கிட்டு போ.. மதர் அனுப்பினா கூட்டிக்கிட்டு வா.. ’

நேற்று இரவு படுக்கைக்கு திரும்பும் முன் தன் மகனை அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது..

தன்னுடைய அந்த முடிவு தன்னுடைய வாழ்க்கையில் தான் எதிர்நோக்கியிருந்த நிம்மதியை குலைத்துவிடுமோ என்று இப்போது நினைத்துப் பார்த்தார்.

‘ஆனா ஒன்னோட இந்த முடிவு நம்ம சந்தோஷ¤க்கு சந்தோஷத்த குடுக்கும்னா அதனால வர எல்லா பிரச்சினைகளையும் தாங்கிக்கற சக்திய கடவுள் ஒனக்கு கொடுப்பாரு மாணிக்கம்.. கவலைப்படாம போய் தூங்கு போ.. மடத்துலருந்து திரும்பி வரும்போது நிச்சயமா ராணி பழைய ராணியா இருக்க மாட்டா.. நீ வேணா பாரு..’

அப்பா எவ்வளவு நல்லவர்? இந்த வயசுலயும் இத்தனை எதிர்பார்ப்புகளோட எப்படி அவரால இருக்க முடியுது?

படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து மேசையிலிருந்த சிறிய ரேடியம் டைம் பீசைப் பார்த்தார்.

மணி 4.45!

அப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க வேண்டும் என்பது நினைவுக்கு வர எழுந்து அறையை விட்டு வெளியேறி சமையலறையை நோக்கி நடந்தார்.

வழியில் இருந்த ராணியின் அறையை எட்டிப்பார்த்தார். அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. சந்தோஷ் சென்று அழைத்ததுமே புறப்பட்டு வந்துவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தவாறே அந்த அறைக்கு நேர் எதிரிலிருந்த தன்னுடைய மகனின் அறையை பார்த்தார்.

கதவுக்கடியிலிருந்து வந்த மெல்லிய ஒளி அவனும் விழித்துக்கொண்டிருந்தான் என்பதை உணர்த்தியது. நிமிர்ந்து மாடியைப் பார்த்தார். மாடியிலிருந்த இரண்டு படுக்கையறைக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன.

முந்தைய நாள் இரவு தன்னுடைய சகோதரர்கள் நடந்துக்கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்து அடுத்த சில நிமிடங்களில் தயாரித்த ஹார்லிக்சுடன் தன் தந்தையின் படுக்கையறைக்குள் நுழைந்து குழல் விளக்கின் ஸ்விட்சை தேடிப்பிடித்தார்..

‘லைட்ட போடாதப்பா.. இங்க வா.. வந்து ஒக்கார்..’

திடுக்கிட்டு படுக்கையை நோக்கிய மாணிக்க வேல்.. ‘என்னப்பா முளிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்களா?’ என்றார்.

‘ஆமா..’

மாணிக்கம் கையிலிருந்த ஃப்ளாஸ்க்கை படுக்கையையொட்டியிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு அருகே இருந்த இருக்கையிலமர்ந்தார். ஆறுமுகச்சாமி உறக்கம் வராத சமயங்களில் அவராகவே எழுந்து அமர்ந்துக்கொள்ள ஏதுவாக ஒரு இருக்கை அவருடைய படுக்கைக்கு அருகிலேயே இடப்பட்டிருந்தது.

‘என்னப்பா ராத்திரி தூங்கினீங்களா?’

‘எங்கப்பா?’

‘ஏம்ப்பா.. கமலியவே நினைச்சிக்கிட்டீருந்தீங்களா?’

‘எப்படா சாவு வரும், எப்படா சாவு வரும்னு இங்க ஒருத்தன் காத்திருக்கிட்டிருக்கேன்.. என்னைய விட்டுட்டு அநியாயமா அந்த பிஞ்ச கொண்டு போனத நினைக்கும்போது தூக்கம் எங்கப்பா வருது?’

படுக்கையறை விளக்கின் மெல்லிய ஒளியில் நிழலாக படுக்கையில் கிடந்த தன் தந்தையைப் பார்த்தார் மாணிக்க வேல். நெஞ்சு வலித்தது..

இந்த வயதில் இவருக்கு இப்படியொரு தண்டனை தேவைதானா என்று தோன்றியது..

‘சாவு இன்னைக்கு வருமா நாளைக்கு வருமான்னு காத்துக்கிட்டிருக்கறத விட ஒரு தண்டன வேற இருக்காப்பா மாணிக்கம்? நான் என்ன பாவம் செஞ்சேனோ இப்படி மாசக் கணக்கா, வருச கணக்கா காத்துக்கிட்டிருக்கேன்.. வாழ்க்கைய போலத்தான் மரணம்னு சொல்றது எவ்வளவு சரியா இருக்குப்பா.’

‘எதுக்குப்பா இப்படி சொல்றீங்க? ஒங்க வாழ்க்கையில அப்படி என்னத்தப்பா செஞ்சிருக்க போறீங்க, தண்டனை அனுபவிக்கறதுக்கு?’

‘இல்லடா.. ஒங்கம்மாவ எடுத்துக்கோ.. ஒன்னா ரெண்டா.. மூனு வருசம்.. படுக்கையில படுத்து.. படாத பாடெல்லாம் பட்டு.. மூனு மருமகள்ங்க இருந்தும்.. அவ என்ன பாவம் பண்ணா அந்த அளவுக்கு அவஸ்த பட்டுட்டு போறதுக்கு.. அதே மாதிரி நிலமை எனக்கும் வந்துருமோன்னுதாண்டா நா பயப்படறேன்..’

இருட்டில் தட்டுத் தடவி தன் கைகளைப் பற்றிய தன்னுடைய தந்தையின் கரத்தை தன்னுடைய கைகளில் பொதிந்துக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தார் மாணிக்கவேல்..

*******

முந்தைய நாள் இரவில் ஏற்றிக்கொண்ட போதை கலைவேனா என்று அடம்பிடிக்க விடியற்காலையிலேயே வாசலில் இருந்த அழைப்பு மணி அலற எழுந்து நிற்கமுடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழுந்தான் ராசேந்திரன்.

வாசலில் மணி விடாமல் அலறவே எழுந்து இடுப்பில் நிற்க மறுத்த லுங்கியை ஒரு கையில் பிடித்தவாறே தட்டுத்தடுமாறி படிகளில் இறங்கி வாசற்கதவைத் திறக்க எதிரில் கோபத்துடன் நின்றிருந்த ரத்தினவேல் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தார்.

எதிரே டீப்பாயை சுற்றிலும் சிதறிக்கிடந்த காலி மதுக்குப்பிகள் அவருடைய ஆத்திரத்தைக் கிளற.. ‘எலேய் குடிகாரப் பய மவனே.. நீ குடிச்சிக்கிட்டே இரு.. ஒரு காரியத்தையும் உருப்படியா செய்யாத..’ என்று இரைந்தார்.

வாசலில் போர்ட்டிக்கோவில் நின்ற தூசி படிந்த அம்பாசிடர் காரை அருவெறுப்புடன் பார்த்த ராசேந்திரன், ‘சே.. எத்தன தடவை சொன்னாலும் இந்த டப்பா வண்டிய விடமாட்டாரே.. இவரும்.. இவர் வண்டியும்.. இவருக்குன்னு ஏத்தா மாதிர் ஒரு ஹைதர் காலத்து வண்டி, ஒரு வயசான டிரைவர்.. திருந்தவே மாட்டார்..’ என்று முனுமுனுத்தவாறே வாசற்கதவை மூடிவிட்டு திரும்பி தன் தந்தையைப் பார்த்தான்.

‘என்னப்பா சொன்னீங்க?’

‘ஊம்.. கேள்வியாலே கேக்கே.. ராத்திரி முழுசும் அந்த லொட லொட வண்டியில தூக்கம் இல்லாம வந்து வாசல்ல நின்னு பெல்ல அடிச்சா தொரைக்கு மேலருந்து எறங்கி வந்து கதவ திறக்க எவ்வளவு நேரம்லே.. நிதானத்துல இருந்தாத்தானே.. வெளக்கு வச்சாப் போறும்.. கூட்டாளிப் பயல்வளோட சேர்ந்து பாட்டில் பாட்டிலா ஊத்திக்கறது.. அப்புறம் எங்கலே நிதானத்தோடருக்கறது?’

ராசேந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் கோபப்படுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்து மவுனமாக தன் அறைக்கு திரும்ப படிகளில் காலை வைத்தான்..

‘எலே என்ன நா பேசிக்கிட்டேருக்கேன்.. நீம்பாட்டுக்கு படியில ஏறுறே?’

ராசேந்திரன் நின்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘இப்ப என்ன மணி தெரியுமில்லே.. நா தூங்கணும்.. நீங்களும் போய் படுங்க.. பத்து மணிக்கு மேல பேசிக்கலாம்..’

அவன் மீண்டும் படிகளில் ஏற ரத்தினவேல் தன் மேல் துண்டை எடுத்து அவனை நோக்கி வீசினார்.

‘எலேய் என்ன கொளுப்புருந்தா இப்படி பேசுவே.. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ப்ளசர போட்டுக்கிட்டு ஓடியாந்துருக்கேன்.. தொரைக்கு தூங்கணுமாமில்லே.. இது வரைக்கும் இப்படி குடிச்சிப்பிட்டு பொளுது விடிஞ்சது கூட தெரியாம தூங்கி, தூங்கித்தானம்லே.. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிக்கே.. இனியும் தூங்கணுமாக்கும்?’

தன் தந்தையின் கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் காலடியில் வந்து விழுந்த துண்டை கையில் பிடித்துக்கொண்டு படிகளில் ஏறிய ராசேந்திரன் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொள்ள செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்..

தொடரும்..
  

16.6.06

வாடகைக்கு வீடு - 2

வாடகைக்கு வீடு –
நகைச்சுவை கலாட்டா

காட்சி 2

(வடிவேலு சாலையில் சிதறி ஓடியவைகளை பொறுக்கி எடுக்க முடியாதபடிக்கு சாலையில் போவோரும் வருவோரும் தடை செய்ய வெறுத்துப் போய் கையிலிருந்த பையையும் வீசி எறிகிறார்.)

வடி: (எரிச்சலுடன்) போங்கய்யா.. போங்க.. இதையும் எடுத்துக்குங்க..

பார்: (வடிவேலுவின் தோளில் கைவைத்து தன் பக்கம் திருப்புகிறார்) டேய்.. என்ன என்னமோ பாரிவள்ளல் தேர குடுத்தா மாதிரி ஆக்ட் குடுக்கறெ? பிச்சாத்து பேக்.. என்னா ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால வாங்கிருப்பியா?

வடி: (பார்த்திபனின் கையை உதறிவிட்டு க.மனியை பார்க்கிறார்) அண்ணே நீங்க வாங்க.. ஒங்களுக்கு வீடுதானே வேணும்? இன்னக்கே பாத்துரலாம். இந்தாள்கிட்ட பேசிக்கிட்டிருந்தா பைத்தியம் புடிச்சிரும்.. நீங்க வாங்கண்ணே.. (அவர் முன்னே நடக்க.. க.மனி பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

பார்: போங்க சார். அவர்தான் முடிச்சிடறேன்னுட்டாருல்ல.. (கழுத்தை அறுப்பதுபோல் சைகை செய்கிறார்)

(க.மனி அதை பொருட்படுத்தாமல் வடிவேலுவின் பின்னால் செல்கிறார். பார்த்திபன் சற்று தள்ளி அவர்களை பின் தொடர்கிறார்.)

வடி: (சாலையில் போவோர் ஒருவரிடம்) சார் இங்க 111 வன்னியர் தெரு எதுய்யா?

ஒருவர்: (நின்று கேலியுடன் வடிவேலுவையும் அவருடன் நின்ற க.மனியையும் மேலும் கீழும் பார்க்கிறார்) இன்னா கேட்டே.. யோவ்.. ஒன்னு வீட்ட கேளு.. இல்லாங்காட்டி ரோட்ட கேளு.. அதென்னா 111 வன்னியர் தெரு..? என்னமோ நூறு வன்னியர் தெரு இருக்கறா மாதிரி.. இன்னா ஊருக்கு புச்சா?

வடி: தப்புத்தான்யா.. தப்புத்தான்.. சரி.. வன்னியர் தெருங்கறது இதுதானய்யா..

ஒரு: ஆமாய்யா.. தோ இங்கருந்து சூளை மேடு கடோசி வரைக்கும் வன்னியர் தெருதான்.. ஒனக்கு எங்க போணும் அத்த சொல்லு.. (இருகைகளையும் முடிந்தமட்டும் விரித்து காட்டுகிறார்)

வடி: என்னய்யா இவ்வளவு விரிச்சி காட்றே.. அவ்வளவு பெரிய தெருவா.. இதுல நூத்தி பதினொன்ன நா எங்க போய் தேடறது? என்னடாது ரோதனையா போயிருச்சி.. ஏன்னே பாத்தீங்கல்லே.. போற காரியம் உருப்படாதுன்னு அந்த கெளவி சும்மாவா சொல்லிச்சு..?

க.மனி: யோவ்.. ஒனக்கு வீடே தெரியாதா? அப்ப இது வரைக்கும் ஜன்னலெ தொறந்தா தலைய பிச்சிக்கிறா மாதிரி காத்து வரும்.. (முடியை பிய்த்து எடுப்பதுபோல் ஆக்ஷன் கொடுக்கிறார்) பைப்ப திறந்தா இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி அருவியா (காலை மடக்கியவாறு குதித்துக் காட்டுகிறார்) கொட்டும்னுல்லாம் சொன்னியே அதெல்லாம் கப்ஸாவா?

வடி: (க.மனியின் தோளில் செல்லமாக குத்துகிறார்) போங்கண்ணே.. ஒங்களுக்கு எப்பவுமே குறும்புதான்.. அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னா.. நம்ம தொளில்ல இதல்லாம் இருக்கறதுதானெண்ணே..?

க.மனி: (தோளை தடவிக் கொண்டே) எது.. வீட்ட பாக்காமயே புருடா விடறதா? இதெல்லாம் ஒரு தொளிலாய்யா..?

(அவர்களை நெருங்கிய பார்த்திபன்) என்ன சார் மறுபடியும் பிரச்சினை பண்றானா?

க.மனி: (சலிப்புடன்) ஆம்மா சார்.. இவன் கூட படா ரோதனை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்து மூஞ்சிய பிச்சிக்கிட்டு போவும்.. தண்ணி இருபத்துநாலு மணி நேரம் கொட்டும்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா வீட்டையே தேடிக்கிட்டு அலையறான் சார்.. நீங்களே கேளுங்க..

வடி: அண்ணே.. என்னண்ணே.. நீங்க.. அதுக்கு இந்தாள் எதுக்கு...? நீங்க வாங்கண்ணே நா கூட்டிக்கிட்டு போறேன். (க.மனியின் கைகளைப் பிடித்து இழுக்கிறார்)

பார்: டேய்.. சார் சொல்றத பாத்தா ஒனக்கே வீடு சரியா தெரியலை.. இதுல இவர எப்படி கூட்டிக்கிட்டு போயி காமிக்க போற? சரி.. இப்ப சொல்லு வீட்டு விலாசமாவது கைல வச்சிருக்கியா? இல்ல அது அந்த பிஞ்சிப்போன பையோட போயிருச்சா?

வடி: யோவ் வேணாம்.. நீ ஒஞ்சோலிய பாத்துக்கிட்டு போ.. எங்களுக்கு தெரியும்.. நாங்க போய்க்குவோம்..

பார்: டேய்.. எஞ்சோலியே நீ என்ன பித்தலாட்டம்லாம் பண்றேன்னு பாக்கறதுதானடா.. அதான ஒவ்வொரு தடவையும் எங்கிட்டயே வந்து மாட்டிக்கறே.. சரி.. எந்த வீட்டுக்கு இவர கூட்டிக்கிட்டு போறே.. எனக்கு தெரியுதான்னு பாப்பம்.. ஏன்னா நானும் இங்கதாண்டா இருக்கேன்.. சொல்லு தெரு பேர் என்ன..

வடி: ஹ¥ம்? வன்னியர் தெரு..

பார்: அது இதுதான்.. வீட்டு நம்பர்?

வடி: 111

பார்: (திடுக்கிடுகிறார்) புதுசா, பழசா?

வடி: அப்படீன்னா?

பார்: அதாண்டா.. புது நம்பரா, பழைய நம்பரா?

வடி: (குழம்புகிறார்) இது வேறயா? சரி பழசுன்னே வச்சுக்குவோம்.. எங்கருக்கு?

பார்: (க.மனியைப் பார்க்கிறார்) பாத்தீங்களா சார்.. பழசா புதுசான்னு கேட்டா வச்சுக்குவோங்கான்.. (வடிவேலுவிடம்) டேய் இதென்ன சின்ன வீடா? வச்சிக்கலாங்கறே..

வடி: யோவ் தெரியும்னா தெரியும்னு சொல்லு.. இல்லன்னா ஆள விடு.. இப்படி இடக்கு மடக்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் நிறுத்திக்கொண்டு தனக்குள்) ‘ஆஹா வேணாம்யா.. இந்த விளையாட்டு வேணாம்யா..’

பார்: டேய் என்னமோ சொல்ல வந்துட்டு முழுங்கறே.. சொல்லு என்னன்னுதான் கேப்பமே.. (க.மனியிடம்) என்ன சார்..

க.மனி: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னெ ஏன் சார் இழுக்கறீங்க? புதுசோ.. பழசோ எங்கருக்குன்னு சொல்லிருங்க சார்.. நேரம் போய்க்கிட்டேருக்குல்ல? இதுக்கு அந்த சட்டித்தலையன் கூடவே போயிருக்கலாம்.. எல்லாம் என் நேரம்..

வடி: அது ஒங்க நேரம் இல்லேண்ணே.. என் நேரம்.. அந்த கெளவி தலைய தடவுனீங்களே.. அப்ப ஆரம்பிச்சது..

பார்: (க.மனியிடம்) சார் நா கூட்டிக்கிட்டு போறேன்.. வாங்க (வடிவேலுவிடம்) டேய் நீ வேணாம்.. சார்க்கு நானே வீட்ட முடிச்சி குடுத்துடறேன்.. (இருவரும் செல்கின்றனர்)

வடி: (அவர்கள் பிறகு ஓடுகிறார்) யோவ்.. யோவ்.. இது அடுக்காதுய்யா.. எம் பொளப்புல மண்ணெ போட்றாத.. அண்ணே, அண்ணே நீங்களாச்சும் கேளுங்க.. இவன்கூட போகாதீங்க.. ஒங்கள பேசிய கவுத்துறுவான்..

பார்: (திரும்பி பார்க்காமலே) டேய்.. பின்னால வராத.. இவர்கிட்டருந்து  தரகர் ஃபீஸ் கிடைக்கும்னு மட்டும் கனவு கானாத..

க.மனி: அதான? வீடே தெரியாத ஆளு எனக்கெப்படி புடிச்சி குடுக்கறது? இதுல காத்து வரும் தண்ணி வரும்னு புருடா வேற.. நீங்க வாங்க சார்.. வந்து காமிங்க சார்.. (பார்த்திபனின் காதில் ரகசியமாக) சார் ஒங்களுக்கு கமிஷன் இருக்கா?

வடி: அண்ணே வேணாம்னே.. இவன் கூட போயிராதீங்க. வீட்டுக்காரனயும் பேசியே கொன்னுருவான்.. பெறவு வீடு கெடைக்காது ஒததான் கெடக்கும்.. இப்பவே  சொல்லிட்டன்..

க.மனி: (தனக்கே உரிய பாணியில்) போட்டே.. வீடு கெடச்சா வீடு ஒத கெடச்சா ஒத.. என்ன சார்?

பார்: அதெல்லாம் ஒங்கள மாதிரி டீசெண்டான ஆளுங்களுக்கில்ல சார்.. இவனெ மாதிரி டுபாக்கூர்ங்களுக்குத்தான்.. நீங்க வாங்க.. (வீடு வந்துவிடுகிறது) இதோ இந்த வீடுதான்.. வாங்க.. (திரும்பி வடிவேலுவை பார்க்கிறார்) டேய்.. உள்ள கிள்ள வந்த? மவனே?

வடி: (முறைக்கிறார்) யோவ்.. இப்ப என்ன சொன்னே?

பார்: யாரு.. நானா? ஏன் காதும் பொட்டையாயிருச்சா? (க.மனியிடம்) சார் நா இவன வராதேன்னு சொன்னது ஒங்களுக்கு கேட்டுதில்லே?

வடி: யோவ் பேச்ச மாத்தாத.. இப்ப நீ எங்க வராதேன்னு சொன்னே.. அத்த சொல்லு..

பார்: ஏன்? வீட்டுக்குள்ள வராதேன்னு சொன்னேன்..

வடி: இல்ல.. இல்ல.. நீ பேச்ச மாத்தற.. அப்படியா சொன்னே..? உள்ள, கிள்ள வராதேன்னு சொல்லலே? என்னெ சொல்லிட்டு நீ மட்டும் கிங்கன மங்கனன்னு பேசலாமாக்கும்? என்னண்ணே நீங்களே சொல்லுங்க.. உள்ள சரி.. அதென்ன கிள்ள? இவரு கேக்கும்போது நா மட்டும் கேக்க கூடாதாக்கும்.. இதென்னண்ணே நியாயம்? கேளுங்கண்ணே.. கேளுங்கண்ணே..

க.மனி (மாட்டிக்கிட்டியாடா என்பதுபோல் ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்) சார்.. இது ஒங்களுக்கு தேவையா?

பார்: (சமாளித்துக்கொண்டு) டேய்.. ஞான சூன்யம்.. உள்ள, கிள்ள வராதேன்னா.. வீட்டுக்குள்ள வந்து ஒன் தொணதொண பேச்சால உள்ள இருக்குறவங்கள கிள்ளாதேன்னு அர்த்தம்.. அதாவது டார்ச்சர் பண்ணாதேன்னு அர்த்தம்.. புரியுதா? (க.மனியிடம்) நீங்க வாங்க சார்.. இந்த அரையணா பயகிட்ட பேசிக்கிட்டு..

வடி: ஆஹ்ஹா.. என்னமா பிலிம் காட்டறான்யா.. (தனக்குள்) சரீஈஈ.. இவனுக்கு இந்த வீட்டுக்காரனெ உண்மையிலயே தெரிஞ்சிருக்குமோ.. ரொம்ப வெரசால்லே போறான்.. எதுக்கும் பின்னாலயே பூனை மாதிரி போய் பாப்போம்.. (அக்கம் பக்கம் பார்த்துவிட்டு காவியேறிய வேட்டியை அண்டர்வேருக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு காலணியை வாசலில் கழற்றி வைத்துவிட்டு உள்ளே பதுங்கி, பதுங்கி நுழைகிறார்)

வீட்டுக்குள்..

க.மனி (ஒரு மர நாற்காலியில் அமர்ந்தவாறு) என்னடாயிது.. தோ வீட்டுக்காரனோட வரேன்னு போன இந்த ஆளையும் காணம்..? அவன் என்னைக்கி வந்து என்னைக்கி வீட்ட் பாத்து.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ.. அந்த ஓல்ட் லேடி சொன்னது சரியாத்தான் இருக்கும் போலருக்கே..

வடி: (கதவு மறைவிலிருந்து) பின்னே.. நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னப்பவே போயிர வேண்டியதானே..

க.மனி (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்..) என்ன இது.. அந்த தரகர் கொரல் மாதிரி இருக்கு.. அந்தாளு ஆவியாருக்குமோ..

(வீட்டுக்குள் இருந்து பார்த்திபன் உடை மாற்றிக்கொண்டு கெத்தாக ஒரு அகண்ட புன்னகையுடன் வருகிறார்)

க.மனி: (எரிச்சலுடன்) என்ன சார் நீங்க மட்டும் வரீங்க? வீட்டுக்காரர கூப்டுங்க சார்.. பேசிட்டு போவேணாமா..? (வீட்டுக்குள் எட்டிப்பார்த்து) சார்.. சார்.. வாங்க சார்.. வந்து வீட்ட காமிங்ங்ங்க சார்.. (அழுத்தி குரலெழுப்புகிறார்)

பார்: சார்.. (அவர் வாயை பொத்துகிறார்) நீங்க மொதல்ல வீட்ட சுத்தி பாருங்க.. பிடிச்சிருந்தா வீட்டுக்காரர கூப்டறேன்..

க.மனி: (பார்த்திபனை மேலும் கீழும் பார்க்கிறார்) சரீஈஈஈ.. நீங்க எப்படி டிரஸ்ஸையெல்லாம்.. ஏன் சார் இது ஒங்க வீடுதானே?

பார்: (விஷமத்துடன் சிரிக்கிறார். பிறகு ரகசியமாக) ஆமா சார்.. அந்த புரோக்கர் பயலுக்கு நீங்களும் கமிசன் குடுக்க வேணாம், நானும் குடுக்க வேணாம் பாருங்க.. அதான் சும்மா அப்படி நடிச்சேன்.. இப்ப பாருங்க.. நான் வீட்டுக்காரன்.. நீங்க வாடகைக்கு வர போறவர்.. இதுல மூனாம் மனுசன் அவன் எதுக்கு? நீங்க வாங்க வந்து வீட்ட பாருங்க.. பிடிச்சிருந்தா முடிச்சிருவோம்..

(வடிவேலு மறைவிலிருந்து) அட பாவிப் பயலுவளா.. இதுக்குத்தான் இந்த அளவுக்கு பம்முனானுவளா? சை.. நாசமா போக.. நாள் பூரா சுத்துனதுக்கு இதுதான் கூலியா.. வீட்டு நம்பர் 111னு இருந்தப்பவே நினைச்சேன்.. ஆனா அது இப்படி முடியும்னு தெரியாம போயிருச்சே.. (சலிப்புடன் வந்த வழியே வெளியேறுகிறார்)


நிறைவு..

15.6.06

வாடகைக்கு வீடு - நகைச்சுவை

இன்று சூரியன் தொடருக்கு இடையில் ஒரு மாறுதலுக்காக..

வாடைகைக்கு வீடு

நகைச்சுவை கலாட்டா..

பாத்திரங்கள்

பார்த்திபன் -– வீட்டு உரிமையாளர்
தரகர் - வடிவேலு
வாடிக்கையாளர் - கவுண்டமனி.

**

(வீட்டுத் தரகர் வடிவேலு வெள்ளை ஆனால் காவியேறிய வேட்டி, அதே கலரில் சட்டை.., கக்கத்தில் ஜிப் வைத்த, நைந்து போயிருந்த ஹைதர் காலத்து ரெக்ஸின் பை சகிதம் சரக் சரக் என்று ஏற்கனவே பாதி தேய்ந்து போயிருந்த காலணிகளுடன் சற்றே தெனாவட்டான நடையில் சாலையின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை பார்த்தவாறே வருகிறார். அவருடன் முட்டிக்கு மேல் மடித்து கட்டிய சங்கு மார்க் லுங்கி, உள்புறம் அணிந்திருந்த ஜன்னல் பனியன் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய கலர் ஜிப்பா..  இரண்டு கைகளும் கக்கம் வரை பிரிமணைபோல் சுருட்டப்பட்டிருக்க.. ஒரு சுருட்டலுக்குள்ளே துருத்திக்கொண்டு நின்ற சங்கு மார்க் கைக்குட்டை.. வாயின் ஓரத்தில் பாதி காய்ந்துபோயிருந்த பீடி.. வீடு தேடி அலையும் தரகரின் வாடிக்கையாளர்..’)

க.மனி: யோவ் தரகரே.. தோ.. வீடு வருது, வீடு வருதுன்னு ஊர விட்டே வந்தாச்சு போலருக்கு.. வீட்ட காணம்?

வடி:(சிரிப்புடன்) ‘போங்கண்ணே.. ஒங்களுக்கும் எப்பவும் நக்கல்தான்’ (க.மனியின் தோளில் குத்துகிறார்.)

க.மனி:யோவ் பாத்துய்யா.. ( எட்டி குதிக்க அவருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒரு அறுபது வயது மூதாட்டியின் மேல் மோதுகிறார் அவர் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.)

பாட்டி:களவானிப்பயலுக.. பொம்பளைங்கள மோதுறதுக்குன்னே கெளம்பி வந்துடுருவானுவ..(முனுமுனுத்தவாறே செல்கிறார். க.மனி எட்டி மூதாட்டியின் சேலைத் தலைப்பை பிடிக்கிறார்..)

க.மனி: ஏய் ஓல்ட் லேடி ஸ்டாப்..

பாட்டி: (விருட்டென்று திரும்பி..) ‘என்னடே எப்படியிருக்கு ஒடம்பு.. ஓல்ட் லேடியாம்லே.. ஓல்ட் லேடி? (சலித்துக்கொள்கிறார்)

க.மனி: (வியப்புடன்) பார்றா? நீயென்ன ஓல்ட் லேடியில்லாம நியூ லேடியா? (மூதாட்டியின் மொட்டைத் தலையை தடவி விடுகிறார்) தரகர் சார், தரகர் சார்.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. இது ஓல்ட் லேடியா இல்ல பால்ட் லேடியா?

வடி: (விளங்காமல் தாடையை சொரிந்தவாறு) என்னண்ணே சொல்றீய.. ஓல்ட் லேடின்னா வயசான லேடி.. வெளங்குது.. அதென்ன பால்ட் லேடி.. எளவு ஒன்னும் விளங்கலையே..

க.மனி: ஆம்பள மாதிரி முழுசா சொட்டெ.. அப்புறம் பால்ட் லேடிதானெ.. (மூதாட்டி தலையை விடுவித்துக்கொண்டு) நாசமா போறவனே.. போய் ஒங்கம்மா தலைய போய் தடவுறா.. நீ இன்னைக்கி  செருப்பால அடிபட போற. போற காரியம் ஒன்னுமே வெளங்காது. போடா போ..’ (செல்கிறார்)

வடி: அண்ணே.. இது ஒங்களுக்கு தேவையா? சும்மா போற கெளவிய புடிச்சி, வம்பு பண்ணி.. வாங்கி கட்டிக்கிறணுமா.. ஏண்ணே.. பாருங்க அந்த கெளவி சபிச்சிட்டு போறத.. இன்னைக்கி போற காரியம் வெளங்குனாப்பலத்தான்.. போய்ட்டு இன்னொரு நாளைக்கு வருவோமாண்ணே.. (வந்த வழியே செல்ல திரும்புகிறார். எதிரில் சற்று தொலைவில் பார்த்திபன் வருவது தெரிகிறது. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறார். கவுண்டமனி ஒன்றும் விளங்காமல் அவர் பின்னே ஓடுகிறார்.)

க.மனி: யோவ் தரகர்.. என்ன இது ஏதோ பேய கண்டா மாதிரி ஓடறீரூ?

வடி: (திரும்பி பார்க்காமல்) அண்ணே.. போன காரியம் வெளங்காதுன்னு அந்த கெளவி சொன்னப்பவே நெனச்சேன்.. அது இப்ப நடக்கப்போவுது..

க.மனி: யோவ்.. நில்லுய்யா.. நின்னு பதில் சொல்லிட்டு போய்யா.. வீடு காட்டுறேன்னு நீ கூப்ட்டுத்தானய்யா வந்தேன்.. இப்ப நீ பாட்டுக்கு நாளைக்கு பாத்துக்கலாம்னா எப்படிய்யா?

வடி: அண்ணே.. இப்ப அது முடியும்னு தோனலண்ணே.. நாளைக்கு பாத்துக்கலாம்..

க.மனி: என்னது நாளக்கா? யோவ் என்ன வெளையாடறியா? நாம்பாட்டுக்கு அந்த முள்ளம்பன்றி தலையன்கூடவாவது போயிருப்பேன்.. அவன் அளும்பு பண்ணாலும் எப்பவும் கைவசம் நாலஞ்சி வீடு வச்சிருப்பான்.. அதுவும் வேணாம்னுட்டு ஒங்கூட வந்தா என்னா வெள்ளாடறியா? நில்லுய்யா.. (எட்டி வடிவேலுவின் சட்டையைப் பிடிக்கிறார்) நின்னு பதில் சொல்லிட்டுப் போ.. எதுக்கு இப்ப வேணாங்கற?

வடிவேலு: (நின்று ஓரக்கண்ணால் திரும்பி பார்க்கிறார். பார்த்திபன் அங்கிருந்தே ஒதைப்பேன் என்று சைகைக் காட்டுகிறார்..) ஐயைய்யோ.. பாத்துட்டானே.. பாத்துட்டானே.. இப்ப இவன்கிட்டருந்து தப்பிக்கறதே பெரும்பாடாருக்கறப்ப அவன் வேற வந்து நிக்கிறானே.. நா இப்ப என்ன பண்ணுவேன்.. என்ன பண்ணுவேன்.. பேசியே கொன்னுருவானே..

க.மனி: யோவ் என்னத்தய்யா வாய் குள்ளவே மொனகுற? சத்தமா பேசினா நானும் சேந்து பொலம்புவேன்லே..

வடிவேலு: எண்ணே.. ஒங்களுக்கு சொன்னா வெளங்காதுண்ணே.. என்னைய விட்டுருங்க.. நாளைக்கு நானே வந்து இத விட நல்ல வீடா ஒன்னு பாத்துக்குடுக்கறேண்ணே.. நீங்க தரகர் ஃபீஸ் கூட தரவேணாம்.. போறுமா? (கெஞ்சுகிறார்)

க.மனி: என்னது தரகர் ஃபீஸ் கூட வேணாமா.. அப்ப சரி.. யூ.. கோ.. டுமாரோ.. கம்..

(வடிவேலு ஒலிம்பிக்கில் ஸ்பீட் வாக் செய்பவரைப் போல வேகமாக நடக்க கக்கத்திலிருந்த பை விழுந்து வாய் பிளந்து உள்ளே இருந்த முடியில்லாத பேனா, கிழிந்துபோன கைக்குட்டை, பொடி மட்டை.. இத்யாதிகள் சாலை முழுவதும் சிதறி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உருண்டு ஓட.. வடிவேலு நாலு காலில் பரபரத்து எல்லாவற்றையும் சேகரித்து நிமிரவும் பார்த்திபன் அவருடைய முதுகில் ஓங்கியடிக்கவும் சரியாக இருக்கிறது. வடிவேலு பதறிக்கொண்டு திரும்பி பார்க்க.. பார்த்திபன் விஷமத்துடன் புன்னகை செய்தவாறே கவுண்டமனியைப் பார்க்கிறார்.)

பார்: (கவுண்ட மனியிடம்) சார்.. இவன் ஒங்க கூடத்தான வந்துக்கிட்டுருந்தான்?

க.மனி: (சலிப்புடன் கைகளைத் தட்டியவாறு) ஆமா சார்.. சும்மாருந்த என்னைய வீடு காட்டறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப நேரம் சரியில்ல நாளக்கு காட்டறேன்னு ஓடறான் சார்.. இவனெ நம்பி நா வந்தேன் பாருங்க.. என்னைய..

பார்: என்ன செருப்பால அடிச்சிக்கணும் போல இருக்கா?

க.மனி: ஆமா சார்.. பின்னே ஒங்களையா அடிக்க முடியும்?

பார்: என்னெ எதுக்கு சார் அடிக்கறீங்க? இதோ இவனெ அடிங்க. இவந்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்தான்? இவனெத்தான் அடிக்கணும்.. (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்)

வடி: (கோபத்துடன் அவருடைய கையைப் பிடித்து தள்ளுகிறார்) யோவ்.. வேணாம்.. பேசிக்கிட்டிருக்கறப்ப ஏன்யா அடிக்கறே? என்ன இது சின்னப்புள்ளதனமாருக்கு?

பார்: டேய்.. டேய்.. இந்த டைலாக்க எத்தனதடவடா சொல்வே.. வேற டைலாக்கே இல்லையா?

வடி: என்னது டைலாக்கா.. யோவ் இது என்ன சினிமாவா, சீரியலா.. டைலாக்கு..கிய்லாக்குன்னுட்டு..

பார்: மாட்டினியா.. மவனே. அதென்னடா கிய்லாக்கு..

வடி: (புரியாததுபோல் பார்க்கிறார்) என்னய்யா சொல்ற? கிய்லாக்கா.. அப்படீன்னா?

பார்: டேய் பேச்ச மாத்தாத.. நீ தான இப்ப சொன்ன?

வடிவேலு: நானா.. இப்பவா? என்னய்யா சொன்னேன்?

பார்: நீதானடா சொன்னே.. டைலாக்கு கிய்லாக்குன்னு.. டைலாக்கு சரி.. தமிழ்ல வசனம்னு மொழிபெயர்ப்பு பண்லாம்.. அதென்ன கிய்லாக்கு.. சைனா பாஷையா.. ஒனக்கு அதெல்லாம் கூட தெரியுமா? துபாய் மாதிரி அந்த ஊர் கக்கூசெல்லாம் கூட கழுவிருக்கியா?

வடி: யோவ்.. யோவ்.. ஒரு பேச்சுக்குச் சொன்னா.. ஏன்யா எங்க போனாலும் இப்படி தொரத்தி தொரத்தி வந்து அழும்பு பண்றே.. (அழுகிறார்)

பார்: டேய், டேய்.. நிறுத்துரா.. எதுக்கெடுத்தாலும் சின்ன பப்பாமாதிரி அழுவறே.. அதென்ன பேச்சுக்கு.. பேசாம கூட சொல்வியா?

வடி: (கவுண்ட மனியிடம்) அண்ணே.. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணே.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்னு சொல்றதில்லையாண்ணே..

க.மனி: எப்பா. நம்மள விட்டுருங்க.. நமக்கு அந்த கடாரத்தலையந்தான் லாயக்கு.. நீங்க ரெண்டு பேசறது ஒரு எளவும் நமக்கு புரியமாட்டேங்குது.. நா அம்பேல்.. நாளைக்கி பாக்கலாம்.. (நழுவுகிறார். ஆனால் வடிவேல் அவரைத் தாவிப் பிடித்துக்கொள்கிறார்)

வடி: அண்ணே.. நீங்களும் போய்ட்டீங்கன்னா என்னெ இவரு பேசியே கொன்னுருவாருன்னே.. ஒரேயொரு நிமிஷம் நில்லுங்கன்னே.. நானும் ஒங்களோடவே வந்துடறேன்.. .

பார்: சார்.. நீங்க ஏன் சார்.. போறீங்க? இவன் ஒங்கள எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தானோ அந்த காரியத்த முடிச்சி குடுத்தானா?

க.மனி: இல்லே.. அதுக்கென்ன இப்போ?

பார்: அதுக்கில்ல சார்.. ஒங்க காரியத்த இவன் முடிச்சி குடுத்துருந்தா நீங்க இவனுக்கு ஏதாச்சும் குடுப்பீங்க இல்லே.. அதான் சார் தரகர் ஃபீஸ்..

க.மனி: ஆமா.. அதான மொற..

பார்: சரி சார்.. ஆனா இவன் ஒங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டு வேலைய முடிக்கல்லேல்ல?

க.மனி: ஆமா.. அதுவும் சரிதான்..

பார்: அப்போ ஒங்களுக்கு இவன் ஏதாச்சும் குடுக்கணுமா இல்லையா?

வடி: (பதறிக்கொண்டு) யோவ்.. யோவ்.. என்னய்யா இது.. அக்கிரமமாருக்கு.. நாம்பாட்டுக்கு செவனேன்னு அண்ணனுக்கு ஒரு வீட்ட புடிச்சி குடுக்கலாம்னு போய்ட்டிருந்தா இப்படி இடையில வந்து வம்பு பண்றியே.. இது ஒனக்கே நல்லாருக்கா?

பார்: டேய்  நீ சும்மாரு.. ஒன்னைய கேட்டனா? நீங்க சொல்லுங்க சார்.. இவன் ஏதாச்சும் ஒங்களுக்கு குடுக்கணுமா, இல்லையா?

க.மனி: (சந்தேகத்துடன் பார்த்திபனைப் பார்க்கிறார்) நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. (வடிவேலுவைப் பார்க்கிறார்.. அவர் இருவருக்கும் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்)

பார்: பாத்தீங்களா.. நா சொன்னா எப்பவுமே சரியாத்தான் இருக்கும்.. இவன் ஒளியறத பாருங்க. டேய் திரும்புடா (வடிவேலுவைப் பிடித்து திருப்புகிறார்)

வடி: என்னய்யா.. சொல்லு.. இப்ப நா என்ன பண்ணனுங்கற?

க.மனி: சார் சொன்னத கேட்டீல்லே.. சீக்கிரம் குடுத்துரு.. நா போட்டும்..

வடி: என்னண்ணே நீங்களுமா? இது நல்லால்லேண்ணே.. சொல்லிட்டேன்.. ஆம்மா..

பார்: (குறுக்கிட்டு) டேய்.. எதுடா நல்லால்லே.. நீ இவர கூட்டிக்கிட்டு வந்துட்டு நேரம் நல்லால்லேன்னு சொல்லி  திருப்பி அனுப்பறதா.. இல்லே அதுக்கு நஷ்ட ஈடு கேக்கறதா.. எதுடா நல்லால்லே.. சொல்லிரு.. நானும் போயிருவேன்.. சாரும் போயிருவார்.. என்ன சார்?

க.மனி: நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. யோவ் தரகரே சொல்லிரு..

(வடிவேலு பதிலளிக்க முடியாமல் பம்முகிறார்.. பார்த்திபன் அடிக்க கை ஓங்குகிறார்)

வடி: யோவ் மறுபடியும் சொல்றேன்.. பேசிக்கிட்டிருக்கும்போதே கைய ஓங்காத.. அப்புறம் நானும் ஓங்கிருவேன்.. (கையை ஓங்குகிறார்.. கக்கத்திலிருந்த பை மீண்டும் கீழே விழ.. உள்ளிருந்த யாவும் சிதறி ஓடுகின்றன.. போவோர் வருவோர் ஒவ்வொன்றையும் பந்தாட வடிவேலு ஒவ்வொருவர் காலையும் பிடிக்க ஓடுகிறார்)

நாளை நிறைவு பெறும்..

14.6.06

சூரியன் 95

சென்னை செண்ட்ரலில் இறங்கியதுமே இப்படியொரு பிரச்சினை காத்திருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நளினி.

‘அவனெ வரச்சொல்லியிருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்ல வேணாம் இந்த மனுஷன்? ஒரு ஸ்டேஷனுக்கு முன்னாலயே எறங்கியிருப்பேனே?’ என்று நினைத்தவாறு வாசலை நோக்கி எரிச்சலுடன் நடந்தாள்..

கூட்ட நெரிசலில் வேகமாய் நடப்பதும் சிரமமாயிருந்தது. போறாததற்கு முந்தைய வண்டிகளில் வந்திறங்கியிருந்த பார்சல்களும் ப்ளாட்பாரத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தால் கரணம் தப்பினால் மரணம் என்பதுபோலிருந்தது.

தனக்குப் பின்னால் நந்து ஓடிவருவதை ஓரக்கண்ணால் பார்த்த நளினி ரயில் நிலையத்தின் தெற்கு வாயிலிலிருந்த சரவணபவன் உணவகத்தை அடைந்ததும் நின்று அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்.

அவளையடைந்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது நளினிக்கு. அவனுக்கு பின்னால் அந்த தாடிக்கார முகம் தெரிகிறதா என்று பார்த்தாள்.. காணவில்லை..

‘எந்துனா.. அவனெ இங்கோட்டு வராம் பறஞ்சது..?’ என்றாள் எரிச்சலுடன்..

நந்து எப்படி இவளுக்கு சொல்லி விளக்குவதென நினைத்துக்கொண்டிருந்தபோதே அவனுடைய செல் ஃபோன் ஒலிக்க எடுத்து, ‘எந்தாடோ.. நீ எவ்விடயா?’ என்றான்.

எதிர் முனையில் முரளி, ‘நந்து, நீ நளினிய கூட்டிக்கிட்டு கோடம்பாக்கம் போ.. ப்ரீ பெய்ட் ஆட்டோவில லிபர்ட்டின்னு சொல்லு.. ஒரு சீட்டு எழுதி தருவான்.. லிபர்ட்டிங்கறது ஒரு தியேட்டர். அதுக்கு பக்கத்துலதான் ஒங்களுக்கு புக் பண்ண ஹோட்டல் இருக்கு. லிபர்ட்டி பார்க்குன்னு பேரு.. நீங்க ரெண்டு பேரும் போய் செக் இன் செய்துட்டு ஒரு ஒன்பது மணிக்கு மேல என்னெ கூப்டு.. அப்போ பேசலாம்..’ என்று கூறிவிட்டு இனைப்பை துண்டித்தான்.

‘யாரு.. அவந்தானே?’ என்ற நளினியைப் பார்த்தான் நந்து..

அவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘அதே.. பட்செ அவன் போயி.. நாம ரெண்டு பேரும் போய் செக் இன் பண்லாம் வா..’ என்று இரண்டு பெட்டிகளையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.

நளினி அவனுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடினாள். ‘நந்து.. நிக்கு.. அயாளு ஃபிக்ஸ் செஞ்ச ரூமுக்கு ஞான் வருனில்லா.’ என்றாள்.

நந்து நின்று திரும்பி அவளைப் பார்த்தான். கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும்.. இந்த பயணம் இருவர் இடையிலும் இருந்த பிணக்கை தீர்க்க உதவுமே என்றுதானே அவளையும் அழைத்து வந்தான்..?

‘நளினி.. பி ரீசனபிள்.. இந்த நேரத்துல வேற எங்க போயி ரூம தேடறது? அவன் ஏற்பாடு செஞ்சாங்கறதுனால எதுக்கு ரூம் வேணாங்கற? போய் பார்ப்போம்.. பிடிக்கலையா? ஒரு நாள் தங்கிட்டு வேற ரூம பார்த்து போலாமே..?’

நளினிக்கு தான் செய்வது சரியில்லை என்று தெரிந்துதானிருந்தது. இருப்பினும் அந்த முரளிதரனுடைய தொடர்பு நந்துவை மீண்டும் பாதிக்குமே என்றுதான் அவள் அப்படி நடந்துக்கொண்டாள்..

சரி.. நந்து சொல்றதும் சரிதான்.. இப்ப பெட்டியையும் தூக்கிக்கிட்டு எங்க போய் தேடறது?

எதிரில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த நந்துவைப் பார்த்தாள். எதுக்கு பாவம் இவர போயி டார்ச்சர் பண்ணிக்கிட்டு..

‘சரி வாங்க.. அயாள கண்டதும் எண்டெ மூடே போயி.. சாரி நந்து’ என்றவாறு அவனிடமிருந்த ஒரு பெட்டியை வாங்க முயற்சித்தாள்..

‘வேணாம்.. இந்த கூட்டத்துல ஒன்னால பெட்டிய தூக்கிக்கிட்டு நடக்க முடியாது. வாசல்லருக்கற ப்ரீ பெய்ட் ஆட்டோவிலயே போயிரலாம்.. இங்கருந்து பக்கத்துலதானாம்..’ என்றவாறு நந்தக்குமார் வேகமாக முன்னே நடக்க நளினி அவனைப் பிந்தொடர்ந்தாள்..

அடுத்த அரைமணியில் அவர்களுக்கென முன்பதிவு செய்திருந்த அறைக்குள் நுழைந்து, ‘கொழப்பல்லல்லோ.. இது மதி நந்து.. வேற எங்கயும் ஷிப்ட் பண்ண வேணாம்..’ என்றவாறு அவனைப் பார்த்து நளினி வீசிய புன்னகையில் ஒரு கணம் தன்னை மறந்து நின்றான் நந்து..

***

ராசம்மாள் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய சூடான மதுரை காப்பி தயாராக இருந்ததை பார்த்தாள்.. 'என்னம்மா வரும்போதே நம்ம ஊர் காப்பித்தூளையும் எடுத்துக்கிட்டே வந்துட்டியா?'

‘பின்ன? இந்த ஊர் காப்பிய மனுசன் குடிப்பானா? இந்தா.. நீ குடிச்சிட்டு ஒங்கப்பாவுக்கு கொண்டு கொடு..’ என்ற ராசாத்தியம்மாள்.. ‘ஆமா, வீட்ல ஒன்னுமே இல்லையே.. குடும்பம் நடத்திக்கிட்டிருந்த வீடுதானே இது..?’ என்றாள் ராசம்மாள் மகளைப் பார்த்து.

குடும்பமா?

தான் ராசேந்திரனுடன் நடத்தியது குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அவளுக்கு திருமணம் முடிந்து சென்னைக்கு வந்த நேரத்திலேயே அவளுடைய அவளுக்கென வாங்கி வைத்திருந்த வீட்டில்தான் குடியேறினாள். ஆரம்பத்திலிருந்தே ராசேந்திரனுடைய போக்கில் அவள் மீதிருந்த சொத்து பத்துகளைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கி இருந்ததை அவள் உணர்ந்தாள்.

‘இங்க பார் ராசி.. நீ குடும்பத்துல ஒரே பொண்ணு.. ஒங்கப்பாவுக்கு இருக்கற பிசினச பத்தி ஒனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு தெரியல.. ஆனா எங்கப்பா சொல்றத வச்சி பாக்கும்போது அத இப்ப நடத்திக்கிட்டிருக்கறா மாதிரி நடத்தாம பெரிய அளவில நடத்துனா நல்லதுன்னு நெனக்கேன். ஒங்கப்பாவுக்கும் சரி அந்த செல்வத்துக்கும் சரி படிப்பறிவு போறாது.. வெறும் வொர்க் எக்ஸ்பிரீயன்ஸ வச்சிக்கிட்டு இத நடத்த முடியாது.. அதனால பேசாம ஒங்கப்பா கிட்ட சொல்லி என்னை கம்பெனிக்கு எம்.டி யா ஆக்கிரச் சொல்லு.. மத்தத நா பாத்துக்கறேன்.’ என்றான் முதல் வாரத்திலேயே..

ராசம்மாளோ, ‘ஏய்.. ஒனக்கு இப்படியொரு ராசா மாதிரி மாப்பிள்ளையாடி.. கொடுத்து வச்சவடி நீ.. சும்மா சிவக்குமாராட்டம் இருக்கார்..’ என்று அவளுடைய கல்லூரி தோழிகள் புகழ்ந்துரைத்த ராசேந்திரனின் உருவத்திலும் நிறத்திலும் மனதைப் பறிகொடுத்திருந்தாள்.

ஆகவே அவன் கேட்டதை அப்படியே அவளுடைய தந்தையிடம் சென்று கூறியதுடன் நின்றுவிடாமல், ‘அவர் கேக்கறா மாதிரி நீங்க செஞ்சிதான் ஆவணும்..’ என்று பிடிவாதம் பிடித்தாள்..

‘பாத்தியாலே.. இந்த அக்கிரமத்த.. வீட்டுக்குள்ளாற நொளஞ்சி முளுசா.. முப்பது நாள் ஆவலே.. அவன் கேக்கறதா பாத்தியாலே.. எம்.டி. போஸ்ட்டுல்ல வேணுமாம்? வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம்னாப்ல.. இந்த மூதிய என்னத்த சொல்றது..? அவன் தோல் கலர் இல்லேல்லே அவளுக்கு தெரியுது..?’ என்று நாடார் செல்வத்திடம் சொல்லி முறையிடுவதை நேரிலேயே கேட்டுவிட்ட ராசேந்திரன் செல்வத்தை ஒழித்துக்கட்டினால்தான் தன்னால் தன் மாமனாருடைய நிறுவனத்தை வளைத்துப் போட முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.

ராசம்மாளின் நிர்பந்தத்தை தவிர்க்க முடியாமல் நாடார் தன் மருமகனை தன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்க அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தின் மீது வீண் பழி சுமத்தி அவனை நிறுவனத்திலிருந்தே விலக்கினான் ராசேந்திரன்.

‘பாத்தியாம்மா ஒன் புருசன் லக்ஷணத்த? இதுக்குத்தான் படிச்சி, படிச்சி சொன்னேன்.. நீ கேக்கல.. இப்ப பார்.. நம்ம செல்வத்த கம்பெனியிலருந்து வெளியேத்தறதுக்கு ஒம் மாப்பிள்ளையே வேலைக்கு கொண்டு வந்து வச்ச பசங்களோட சேர்ந்து நாடகமாடியிருக்கார்ம்மா.. செல்வம் யாரு? அவன் இந்த கம்பெனிக்கு ஒளச்சது கொஞ்சமா நஞ்சமா? யாரு, யாரம்மா வேலைய விட்டு அனுப்பறது?’ என்று தன் முன்வந்து அங்கலாய்த்த தன் தந்தையுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளும் சேர்ந்துக்கொண்டு செல்வத்தை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியதை நினைத்துப் பார்த்தாள்.

நாசமாகிப்போன தன்னுடைய வாழ்க்கையை இதோ இப்போது மீட்கப்போவதும் செல்வந்தானே..  

‘ஏய் என்னத்த யோசிச்சிக்கிட்டு நிக்கே.. காப்பிய கொண்டு குடு..’

திடுக்கிட்டு நினைவுகளிலிருந்து மீண்ட ராசம்மாள், ‘தோ.. போறேம்மா.. நம்ம மந்திரண்ணாவ அனுப்பி வீட்டுக்கு வேண்டியத வாங்க சொல்லும்மா.. இங்க ரெடிமேட் தோசை மாவு கிடைக்கும்.. வாங்கி அப்படியே தோசை சுட்டுறலாம்.. நான் வாங்கி வரச் சொல்றேன்.. நீ போயி குளிச்சிட்டு வா..’ என்றவாறு ஹாலில் அமர்ந்து தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்த தன் தந்தையை நோக்கி நகர்ந்தாள்..

‘ஆமாய்யா... அந்த டாக்டர் பய எம்டன்னா நா அதுக்கு மேலன்னு ஒங்களுக்கு தெரியாதா என்ன? நீங்க பாட்டுக்கு வந்து சேருங்க..’

‘அப்பா காப்பி.. வந்ததுலருந்து அப்படி யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க?’

தொலைப்பேசியின் ஒலிவாங்கியை மூடியவாறு, ‘என்னம்மா?’ என்று கேட்ட நாடாரை பார்த்து, ‘காப்பி’ என்று கோப்பையை சுட்டிக்காட்டினாள்.

‘சரிய்யா.. நீரு ஆடிட் கமிட்டியில இருக்கீருல்ல? அங்க வச்சி பாப்போம்..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த தந்தையைப் பார்த்தாள்.

‘என்னப்பா நீங்க வக்கீல் வீட்டுக்கு வரலையா?’

காப்பியை உறிஞ்சியவாறே தன் மகளைப் பார்த்தார் நாடார். ‘இல்லம்மா.. இன்னைக்கித்தான் நம்ம பேங்க்ல புது சேர்மன வராறே? இன்னிக்கி முழுசும் அங்கனதான்.. ராத்திரியாயிரும்னு நெனக்கேன்.. நீ நம்ம செல்வத்துக்கூட போயிரு.. அவன் ஊருக்குள்ள வந்துட்டானாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துருவான்.. நா குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான்.. நா போய்ட்டு கார அனுப்பறேன்.. நீ அவனோட போயி வக்கீல பார்த்துட்டு அப்படியே நம்ம தி.நகர் ஆஃபீசுக்கும் போய்ட்டு வந்துரு.. சாயந்தரம் மேக்கொண்டு என்ன செய்யணும் பேசலாம்.. என்னம்மா..?’

‘சரிப்பா.. அப்ப நீங்க கெளம்புங்க.. நாம் மந்திரண்ணாவ கொஞ்சம் வீட்டுக்கு வேண்டியத வாங்கறதுக்கு அனுப்பலாம்னு பாக்கேன்..’

காப்பியை குடித்து முடித்து எழுந்து நின்றார் நாடார். ‘சரி.. அப்படியே எனக்கு வெத்தல சீவலையும் வாங்கி வரச்சொல்லு.. வாய் நமநமங்குது..’

‘ஆமா.. இப்ப அதுதான் முக்கியம்..’ என்று முனுமுனுத்தவாறு வாசலை நோக்கி சென்ற தன் மகளைப் பார்த்து புன்னகை செய்தவாறே மாடிப்படிகளில் ஏறி தன் அறையை நோக்கிச் சென்றார்..

தொடரும்..

13.6.06

சூரியன் 94

ரம்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக நாட்கள் இருந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுப்பு எடுத்தால் என்ன என்று ஆலோசித்தார் பாபு சுரேஷ்.

ஆனால் சனிக்கிழமை மாலை வங்கியின் இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய காட் ஃபாதராக இருந்தவருமான டாக்டர் சோமசுந்தரம் தன்னிடம் இன்று தலைமையலுவலகத்திற்கு வரச்சொல்லி பணித்திருந்தது நினைவுக்கு வர விடுப்பு எடுக்கும் எண்ணத்தை ஒரு நாளைக்கு தள்ளி வைத்தார்.

ஏற்கனவே திருமண மண்டபம், திருமண ஜவுளி, நகை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்துவிட்டிருந்த நிலையில் இன்னும் திருமணத்திற்கு பரிசாக அளிக்க வேண்டிய மற்ற சீதனப் பொருட்களை சேகரிக்கும் வேலை மட்டுமே மீதமிருந்தது. அதற்கு அதிகபட்சம் நான்கைந்து நாட்கள் போதும் என்று தோன்றியது.

ஆனால் முந்தைய நாள் இரவு தன்னுடைய மனைவி மற்றும் மகளிடம் இன்று ஷாப்பிங் போகலாம் என்று கூறியிருந்தது நினைவுக்கு வரவே காலையில் எழுந்ததும் தன் மனைவியை தேடிக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.

அவருக்கு காலையில் டீ, காப்பி குடிக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாகவே இருந்ததில்லை. காலையில் எழுந்ததும் அன்றைய தினசரிகளை வாசித்து முடிக்கவே எட்டு மணியாகிவிடும். உடற்பயிற்சி செய்வதோ நடக்க செல்வதோ தேவையில்லாத சமாச்சாரம் என்பது அவருடைய முடிவு.

‘என்ன மிஸ்டர் பாபு? Just look at your senior colleagues. அவங்களோட கம்பேர் பண்ணா you look over weight. நீங்க காரியர் லேடர்ல இன்னும் மேல போகணும்னா ஒங்க பாடிய
ட்ரிம்மா வச்சிக்க முயற்சி செய்யணும்.’ என்பார் முந்தைய சேர்மன் அவரை காணும்போதெல்லாம்.

அப்போதெல்லாம் அடுத்த சில வாரங்கள் படுசிரத்தையுடன் உடற்பயிற்சி செய்வார், பேருக்கு ஒரு பத்து நிமிடம் அவருடைய வீட்டைச் சுற்றி நடப்பார். அதற்குள்ளாகவே களைத்துப்போய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து மூச்சு விடமுடியாமல் திணறுவார்.

அவர் படும்பாட்டை மறைவில் நின்று அவருடைய மனைவி சுசீந்தரா பார்ப்பாளே தவிர அருகில் சென்று என்ன ஏது என்று விசாரிக்க மாட்டாள். அவராகவே அடுத்த சில நிமிடங்களில் ஆசுவாசமடைந்து எழுந்து குளிக்கச் செல்வார்.

‘சாப்பிடறதிலயும் ஒரு கட்டுப்பாடு இல்ல.. குடிக்கறதயும் விடமாட்டார். அப்புறம் எப்படி ஒடம்பு குறையும்?’ என்று முனுமுனுத்தவாறு சுசீந்தரா தன்னுடைய வேலையைக் கவனிக்கச் செல்வாள்.

இது அதிக பட்சம் ஒரு வாரம் நடக்கும். பிறகு மறுபடியும் பழைய குருடி கதவத் திறடி என்பதுபோல் உடற்பயிற்சியும், நடப்பதும் அவருக்கு மறந்து போய்விடும். மீண்டும் சேர்மனை சந்திக்க நேரும்போது ‘ஒடம்பு கொஞ்சம் சரியில்லை சார். அதான் நடக்க போறதில்லை.’ என்று சமாளிப்பார்.

‘Exercise பண்றதிலயும் walking போறதிலயும் ஒரு passion வேணும் மிஸ்டர் பாபு. Then only you would enjoy that. Otherwise it would look like a big burden. In my estimate you should be overweight at least by twenty kilos. That should be knocked off. The earlier the better..’ என்று சேர்மன் அடிக்கும் லெக்சர் அவர் மண்டைக்குள் ஏறாது. ஆனால் அறுபத்திரண்டு வயதிலும் நாற்பது வயது இளைஞரைப் போன்று தோற்றமளித்த அவரைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.

ஆனாலும் சேர்மன் அறையிலிருந்து வெளியேறியதுமே அவருடைய அறிவுரைய மறந்துவிடுவார். தன் போக்கிலேயே செல்ல ஆரம்பித்துவிடுவார்.

அதற்கு வேறு ஒரு காரணத்தையும் தனக்குத்தானே கற்பித்துக்கொள்வார். ‘என்னுடைய குடும்ப வாழ்க்கையிலருக்கற கசப்புத்தான் சார் நா இப்படி இருக்கறதுக்கு காரணம்.. I have a miserable wife who can’t understand what I want. My daughter is worse. She won’t bother about me at all. இப்படியிருக்கற சூழ்நிலையில what can I do?  I seek relief in food and liquor. அதான் சார் காரணம்..’ என்பார் தன்னுடைய சக அதிகாரிகளிடம்.

ஏதோ நினைவில் ஹாலைக் கடந்து வாசல்வரை வந்துவிட்டதை உணர்ந்த பாபு சுரேஷ் திரும்பி மனைவியைத் தேடிக்கொண்டு சென்றார்.

சமையலறையில் மனைவியைக் காணாமல் பின்புற வாசலை நோக்கி நடந்தவர், ‘டாட்.’ என்ற மகளின் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.

‘டாட் அம்மா என் ரூம்லருக்காங்க. நீங்க நேத்து சொன்னீங்களே.. அதான் காலைல எழுந்ததுமே அம்மாவும் நானுமா ஒக்காந்து லிஸ்ட் ப்ரிப்பேர் செஞ்சிக்கிட்டிருக்கோம்.’

பாபு, ‘அது விஷயமாத்தான் அம்மாக் கிட்ட பேசணும்னு தேடிக்கிட்டிருக்கேன். இதோ வரேன்.’ என்றவாறு மாடியை நோக்கி விரைந்தார்.

‘என்னங்க.. ஒங்க ப்ளான்ல ஏதாச்சும் சேஞ்சா..? நினைச்சேன்..’ என்ற மனைவியை புன்னகையுடன் பார்த்தார்.

‘ஆமா சுசீ.. இன்னைக்கி நம்ம புது சேர்மர் ஜாய்ன் பண்றத மறந்தே போய்ட்டேன். இன்னைக்கி எச்.ஓவுக்கு கண்டிப்பா போயாவணும். எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங் இருக்கும்னு சனிக்கிழமையே டாக்டர் சொல்லியிருந்தார். அதனால...’

ரம்யா இடைமறித்தாள். ‘It’s ok டாட். நீங்க ஆஃபீஸ்க்கு போய்ட்டு கார திருப்பி அனுப்புங்க. நானும் அம்மாவும் போய் புவனாவ அழைச்சிக்கிட்டு பாண்டி பஜார், டி.நகர்ல பர்ச்சேஸ் பண்ண வேண்டியத பண்ணிட்டு சாயந்திரம் மூனு மணிக்குள்ள கார திருப்பி அனுப்பிச்சிடறோம். அப்புறம் நீங்க வந்ததும் மறுபடியும் போலாம்.’

பாபுவுக்கு அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது. ‘சரிம்மா.. அப்படியே செய்ங்க.. ஆனா கார திருப்பியனுப்ப வேணாம்.. நா என் வேல முடிஞ்சதும் பாங்க் கார்ல வந்துடறேன். யூ கேர்ரி ஆன் வித் யுவர் ஷாப்பிங். நான் வீட்டுக்கு வந்ததும் ஒங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு ஒங்களோட வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன். என்ன சொல்றீங்க?’

சுசீந்தரா வியப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். இதே பழைய கணவராயிருந்தால், ‘என்னெ எதுக்குடி இந்த சில்லறை விஷயத்துக்கெல்லாம் டிஸ்டர்ப் பண்றீங்க? ஒரு கால் டாக்சிய கூப்ட்டுக்கிட்டு போய் தொலைய வேண்டியதுதானெ? ஒரு பேங்க்ல ஜி.எம் பொசிஷன்ல இருக்கறவன் ஒங்க பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி சுத்திக்கிட்டிருக்கணுமா?’ என்று எரிந்து விழுந்திருப்பாரே..

‘என்ன சூசி அப்படி பாக்கறே? பழைய ஞாபகமா?’

சுசீந்தரா திடுக்கிட்டு அவரை பார்த்தாள். பிறகு அவருடைய கேள்வியின் பொருள் புரிந்து தலையைக் குனிந்துக்கொண்டு புன்னகை செய்தவாறு தலையை அசைத்தாள் ‘ஆமாம்’ என்று.

ரம்யா இருவரையும் மாறி, மாறி பார்த்து புன்னகைத்தாள். இந்த மாதிரியே இவங்க ரெண்டு பேரும் இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும் என்று நினைத்தாள்.

‘ஓக்கே டாட்.. நீங்க கிளம்புங்க.. ஒங்க கார் வர்றதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ரெடியாயிடறோம்.’

‘கேஷ் வேணுமா இல்ல க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணிக்கறயா?’ என்றார் பாபு மகளைப் பார்த்து.

‘க்ரெடிட் கார்டே யூஸ் பண்ணிக்கறேம்பா.. ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்குமே..’ என்றாள் ரம்யா புன்னகையுடன்.

‘அதுவும் சரிதான். ஸ்பெண்ட் பண்றதுக்கு ஃப்ரீயா ஒரு டீட்டெய்ல்ட் லிஸ்ட்டும் கிடைக்குமே..’ என்ற பாபு சுரேஷ்.. இதற்காகவே லஞ்சமாகவும், அன்பளிப்பாகவும் கடந்த சில வருடங்களாக திரட்டியதை ரொக்கமாகவே லாக்கரில் சேர்த்துவைத்திருந்தது நினைவுக்கு வர
‘கணக்குல வராத கையிலருக்கற இந்த கேஷ எப்படி டிஸ்போஸ் பண்றது?’ என்று மனதுக்குள் நினைத்தவாறு மகளுடைய அறையையொட்டியிருந்த தன்னுடைய அறைக்குள் நுழைந்தார். அதை மகளிடமோ மனைவியிடமோ கூறவா முடியும்?

குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்படும் நேரத்தில் அவருடைய செல் ஃபோன் ஒலிக்க பதறிக்கொண்டு எடுத்து, ‘குட்மார்னிங் டாக்டர்’ என்றார்.

‘குட் மார்னிங் மிஸ்டர் பாபு.. நான் சனிக்கிழமை சொன்னது ஞாபகத்தில் இருக்குல்ல?’ என்று எதிர்முனையிலிருந்த வந்த டாக்டர் சோமசுந்தரத்தின் அதிகார குரல் அவரை கதிகலங்க வைத்தது.

இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘இருக்கு சார். நான் ஹெட் ஆஃபீசுக்கு புறப்பட்டுக்கிட்டு இருக்கேன்.’ என்றார்.

‘குட்.. I am told that senior executives at HO are arranging a private reception to Chairman in the lobby. I want you to be there..’

‘Yes Sir.’

‘நீங்க எங்க இங்கன்னு சி.ஜி.எம் மோ இல்ல யாராவதோ கேட்டா நான் சொன்னேன்னு சொல்லுங்க.. ஒங்க ரிக்வெஸ்ட்ட பத்தி நான் ஏற்கனவே எம்.டி கிட்ட டிஸ்கஸ் பண்ணியாச்சு. அவரும் சரின்னு சொல்லிட்டார். அவர் வாய்ஸ்ல கொஞ்சமா லேசா ஒரு ரிலக்டன்ஸ் தெரிஞ்சது. ஏன்னு தெரியலை. நீங்க இன்னைக்கி நேரம் கிடைக்கறப்போ அவர மீட் பண்ணி கன்வின்ஸ் பண்ணணும். நா சொல்றது ஒங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நா சனிக்கிழமை சொன்ன ரிக்ரூட்மெண்ட் விஷயம் அவருக்குக் கூட தெரியக்கூடாது. Keep it to yourself. ஒங்கள மிஸ். வந்தனாவோட போஸ்ட்ல நியமிக்கப் போறோம்னு மட்டுந்தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.’ என்ற சோமசுந்தரம்  ‘ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?’ என்று வினவ, ‘என்ன சொல்லுங்க சார்.’ என்றார்  பாபு சுரேஷ்.

‘நாம போட்டிருக்கற ப்ளானுக்கு சாதகமா நேத்து மிஸ் வந்தனா திடீர்னு சீரியசாகி ஆஸ்பட்ல அட்மிட் ஆயிருக்காங்க. ஒங்க கிட்ட யாரும் சொல்லலையா?’

அப்படியா என்று பாபு சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.

‘ஒங்களுக்குத்தான் எந்த லெவல்லயும் ஃப்ரெண்ட்ஸ் இல்லையே.. ஒங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்க போவுது? ஆனா இனிமேலும் இந்த மாதிரி இருந்தா சரிவராது மிஸ்டர் பாபு. You should change your attitude. If you want to succeed at HO you should start making friends.. Do you understand what I am trying to say?’

‘Yes Sir. I understand.’

‘Good.. We will meet later in the day. இன்னைக்கி நடக்க இருக்கற மேனேஜ்மெண்ட் கமிட்டியிலயே ஒங்க போஸ்ட்டிங் முடிவாயிரும்னு நினைக்கிறேன்.. ஆல் தி பெஸ்ட்’

அவருடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட சிறிது நேரம் செல் ஃபோனையே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தார் பாபு சுரேஷ்..

இரண்டு தினங்களுக்கு முன்பு கிளை மேலாளராக இருந்தது போதும், தலைமையலுவலகத்துக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து சோமசுந்தரத்தை தொடர்புகொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் இப்போது இந்த மாற்றம் தேவைதானா என்று அவருக்கு தோன்றியது..

அந்த ரெக்ரூட்மெண்ட் விவகாரம் தன்னை சிக்கலில் மாட்டிவிடுமோ என்ற அச்சமும் அவருள் எழுந்தது..


தொடரும்..