27.7.07

நாளை நமதே - 20

பரத் அன்று காலை கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த தன் தாயின் புகைப்படத்தின் முன் கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றான். Be with me Mom throughout these four years... என்று அவனுடைய உதடுகள் முனுமுனுத்தன.

'என்ன பரத் கிளம்பிட்டியா?' என்றவாறு வந்து நின்ற தன் தந்தை ராஜசேகரை திரும்பிப் பார்த்தான்.

'Yes dad...'

அவனுடைய குரலில் இருந்த சோகத்தை புரிந்துக்கொண்ட ராஜசேகர் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனுடைய தோளைச் சுற்றி தன் கரத்தை இட்டு வாசலை நோக்கி அழைத்துச் சென்றார். 'I know how you feel Bharath... உன்னுடைய நண்பர்களுக்காகத்தான் யூனிவர்சிட்டியிலயே சீட் கிடைச்சும் இந்த செல்ஃப் ஃபைனான்ஸ் காலேஜ ஆப்ட் பண்ணே.. But நீ நினைச்சது நடக்கல... These things happen... Man proposes God disposes...நாம நெனைக்கறதெல்லாம் நடந்துட்டா லைஃப்ல ஒரு த்ரில் இல்லாம போயிரும் பரத்... சோ, லைஃப் ஹேஸ் டு கோ ஆன்.'

'I know dad... இருந்தாலும் மனசுல லேசா ஒரு வலி... தேவையில்லாம அவனுங்க மனசுல ஒரு ஆசைய ஏற்படுத்தி அத நிறைவேத்தி வைக்க முடியாம போயிருச்சேங்கற ஒரு சின்ன ஏமாற்றம்...'

ராஜசேகர் தன் மகனை பெருமையுடன் பார்த்தார். 'I am really proud of my son... நான் ஒங்கம்மாவுக்கு குடுத்த வாக்க நல்லாவே ஃபுல்ஃபில் பண்ணிருக்கேன் போலருக்கு... ஆல் தி பெஸ்ட்' என்றவாறு பரத்தின் கையிலிருந்த சாவியைப் பார்த்தார். 'பைக்கிலயா போகப்போறே பரத்? இங்கருந்து முப்பது கிலோமீட்டர் இருக்கும் போலருக்கே? காலேஜ் பஸ் இல்ல?'

'இருக்கு டாட்.. ஆனா நாந்தான் பைக்லயே போய்ட்டு வந்துரலாமேன்னு கட்டலை...'

'என்ன பரத்... டெய்லி அப் அண்ட் டவுன் சிக்ஸ்ட்டி கிலோ மீட்டர். தேவையா இது? பேசாம இன்னைக்கே பஸ் ஃபீச கட்டிரு... பணம் தரவா?'

வேண்டாம் என்று தலையை அசைத்தான் பரத். 'வேணாம் டாட்... ஒரு வாரம் போய் பாக்கறேன்... முடியலன்னா கட்டிடறேன்... என்ன சொல்றீங்க?'

ராஜசேகர் விருப்பமில்லாமல் தலையை அசைத்தார். 'உன் இஷ்டம் பரத். ஆனா திங்க் அபவுட் வாட் ஐ செட்...'

பரத் குடியிருப்பின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முடுக்கி தன் தந்தையைப் பார்த்து கையசைத்துவிட்டு புறப்பட்டு ஒரே சீரான வேகத்தில் கல்லூரி வளாகத்தை அடைந்ததும் ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தான்... இருபத்தெட்டு கிலோ மீட்டர் என்றது... நாம நினைச்சத விட தூரம்தான்... இந்த டிராஃபிக்ல டெய்லி ஓட்டிக்கிட்டு வர்றதுனா கஷ்டம்தான் போலருக்கு... திரும்பிப் போகும்போது எப்படி இருக்குன்னு பார்ப்பம்... சரி வரலைன்னா பஸ் ஃபீச கட்டிறவேண்டியதுதான் என்று நினைத்தவாறு கண் முன் தெரிந்த கல்லூரி வளாகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

ஏற்கனவே இணையதளத்தில் பார்த்ததுதான் என்றாலும் கண் முன் விரிந்த கல்லூரியின் பிரம்மாண்டம் அவனை கவர்ந்தது. It must be a good place to be in for the next four years.... Let's hope for the best....

வாசலில் நின்ற இரும்பு கேட்டுக்கு அருகில் வரிசையாக மாணவ, மாணவியர் நிற்பதையும் அவர்களிடமிருந்து செல்ஃபோன்களை வாங்குவதையும் கவனித்தான். பரத்துக்கு செல் ஃபோன் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை. ஆகவே அதைப் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்கள் சில நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தன்னுடைய வாகனத்தையும் நிறுத்திவிட்டு வரிசையில் கலந்துக்கொண்டு தன் முறை வந்ததும் தன்னிடம் செல் ஃபோன் இல்லை என்றான்.

'தெரியும் தம்பி. எதுக்கும் உங்க ஹேண்ட் பேக காட்டிருங்க.' என்ற பணியாளரை பார்த்து புன்னகைத்தவாறு தன் கைப்பையை திறந்து காட்டினான்.

இந்த காலத்துல செல்ஃபோன் இல்லாத மாணவனா என்பதுபோல் அவனை நம்பிக்கையில்லாமல் பார்த்த பணியாளரிடம், 'நம்பிக்கையில்லன்னா இந்தாங்க பேண்ட் பாக்கெட்டையும் பாத்துக்குங்க..' என்றான் புன்னகையுடன்.

'இல்ல தம்பி... நீங்க போங்க...'

'தாங்ஸ்...' என்றவாறு கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்தான்... Please be with me mummy... என்று முனுமுனுத்தவாறு..

'உண்மையிலேயே ஒங்கக்கிட்ட செல்ஃபோன் இல்லையா, இவங்க கலெக்ட் பண்றத பார்த்துட்டு பைக்ல வச்சிட்டீங்களா?'

குரல் வந்த திசையில் திரும்பிய பரத் தன் எதிரில் புன்னகையுடன் நின்ற மாணவனைப் பார்த்தான். 'சேச்சே.. எனக்கு செல்ஃபோன் வச்சிக்கற பழக்கம் இல்லை.'

'நானும் அப்படித்தான்...' என்றவாறு தன்னை நோக்கி நீட்டிய கையை புன்னகையுடன் பற்றினான் பரத்.

'I am Bharath'

'I am vasan... சீனிவாசன்னு பேரு.. .வாசன்னு கூப்டுவாங்க.' என்ற வாசன். 'நான் சிஎஸ்சி... நீங்க?'

'மெக்கானிக்கல்.. ஆனா ஃபர்ஸ்ட் இயர்ல எல்லாருமே ஒன்னுதானே?'

இருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து 'Welcome to First year Students... Please go to the Madam Karpagam auditorium. H Block..' என்ற அறிவிப்பு பலகையை படித்துவிட்டு வளாகத்தின் அடுத்த கோடியிலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தனர்.

*****

கற்பகம் ஹால் நினைத்ததற்கும் மேலாக பிரம்மாண்டமாகவும் ஒரே சமயத்தில் ஆயிரம் மாணவ, மாணவியர் அமரும் அளவுக்கு விசாலமாகவும் இருந்தது.

ஹாலுக்கு ஏற்றாற்போல் விசாலமான மேடையும் நவீன விளக்கு வசதிகளுடன் பிரகாசித்தது. அத்தனை பெரிய மேடையில் இரண்டே இரண்டு நாற்காலிகள் இடப்பட்டிருந்தன.

முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் பலரும் முன் வரிசைகளில் உள்ளே அமர்ந்திருக்க அவர்களுடன் கல்லூரிக்கு வந்திருந்த பெற்றோர்கள் ஹாலின் கடைசி இறுதி வரிசைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பரத்தும் வாசனும் வாசலில் ஒரு சிறிய மேசையுடன் அமர்ந்திருந்த பணியாளர் ஒருவரை அணுகினர்.

'ஒங்க அட்மிஷன் நம்பரை சொல்லுங்க. அன்னைக்கி ஃபீஸ் கட்டும்போது குடுத்த அட்மிஷன் கார்ட்ல இருக்கும், பாருங்க.'

பரத்தும் வாசனும் தங்கள் எண்ணைக் கூற இருவருக்கும் அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் தெரிவு செய்திருந்த க்ரூப், மற்றும் அவர்களுடைய வகுப்பு அறையின் எண் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்த பேட்ஜ் வழங்கப்பட்டன. 'இத சட்டையில குத்திக்கிருங்க... ஒங்க பேட்ச் ஸ்டூடன்ஸ் ஒக்காந்துருக்கற ரோவுலதான் நீங்களும் ஒக்காரணும்...சீக்கிரம் போங்க... சாரும் மேடமும் வந்துக்கிட்டிருக்காங்க...'

பரத் தன்னுடைய பேட்ஜை பெற்றுக்கொண்டதும், 'ஒங்களுக்கு எந்த க்ளாஸ் ரூம் பாருங்க வாசன்.' என்றான்.

வாசன் பரத்தின் பேட்ஜை பார்த்தான். 'ரெண்டு பேருக்கும் ஒரே க்ளாஸ்தான்... வெல்கம் அபோர்ட்.' என்றான் புன்னகையுடன்... 'அட்லீஸ்ட் ஃபார் தி ஃபர்ஸ்ட் இயர்...'

'சந்திச்ச முதல் ஆளே ஒரே க்ளாஸ்ல வர்றது சந்தோஷமாருக்கு... ஆனா இந்த போங்க, வாங்கல்லாம் போறும்... என்ன வாசன்?' என்றான் பரத் உண்மையான மகிழ்ச்சியுடன். ஏனோ அவனுக்கு வாசனைப் பார்த்தவுடன் பிடித்துப் போனது. 'கம்... சேர்ந்தே ஒக்காரலாம்..'

அடுத்த சில நிமிடங்களில் மேடைமீது ஒரு சிறிய கும்பல் நுழைய நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் இருவர் அமர உடன் வந்தவர்கள் அனைவரும் மேடையின் இருமருங்கிலும் சென்று நிற்பதைப் பார்க்க முடிந்தது. 'I think நாம ஃபீஸ் கட்டும்போது பார்த்தவங்கதான் இவங்க... மிஸ்டர் அண்ட் மிசஸ் வெங்கடேஸ்வரலு...' என்று கிசுகிசுத்த வாசனை திரும்பிப் பார்த்தான் பரத். 'I think so... He is the correspondent of this College... அவங்கதான் மிசஸ் கற்பகம் போலருக்கு....'

மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் நின்றிருந்த ஒருவர், 'As the Principal of this college I extend a warm welcom to our correspondent Mr.Venkatesh and Madam Karpagam.' என்றவாறு தன் உரையை துவக்க.. அதற்கடுத்து தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் வெங்கடேஷும் அவரைத் தொடர்ந்து தங்லீஷில் மேடம் கற்பகமும் ஆற்றிய உரையைக் கேட்டு சில மாணவியர்கள் தங்களையும் அறியாமல் சிரித்துவிட ஹாலின் இரு மருங்கிலும் நின்றிருந்த கல்லூரி பணியாளர்கள் (அடியாட்கள் என்பதுதான் சரி) முறைத்த முறைப்பைக் கண்டு வாயை மூடிக்கொண்டனர்.

'Thank you so much for your enlightened speech Madam.' என்று ஐஸ் வைத்த கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியரைப் பார்த்து, 'ஆல் தி பெஸ்ட் அண்ட் வெல்கம் டு அவர் கேம்பஸ்' என்றார் புன்னகையுடன்.

அவர் முடிப்பதற்குள் அவரை அகலுமாறு கையை அசைத்தார் வெங்கடேஷ்... பிறகு மேடையின் ஓரத்தில் நின்றிருந்த தன் மூத்த மருமகன் நாகராஜுலுவைப் பார்த்தார்.

அவர் பதறியடித்துக்கொண்டு மைக்கை நெருங்கி அவசர, அவசரமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கல்லூரி நிர்வாகி என்ற முறையில் மாணவர்களிடமிருந்து நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை தட்டுத்தடுமாறி எடுத்துரைக்க மாணவர்கள் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.

அவரையடுத்து அடியாட்கள் தலைவர் போலிருந்த ஒருவர் கரகரத்த குரலில், 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்றார்.

பரத் சட்டென்று திரும்பி வாசனைப் பார்த்தான்... 'நீ எதுல வந்தே?'

'காலேஜ் பஸ்ல, ஏன்?'

'நான் பைக்கில வந்துருக்கேன்... எதுக்கு நிக்க சொல்றாங்க வாசன்?'

வாசன் உதட்டை பிதுக்கினான். 'ஒருவேளை ஒங்க ரிஜிஸ்திரேஷன் நம்பரை நோட் பண்ணிக்கறதுக்காருக்கும்... க்ளாஸ்ல வச்சி பாக்கலாம்... பை..'

தொடரும்..

26.7.07

நாளை நமதே - 19

ஜோதிகா கல்லூரிக்கு முதல் நாள் கிளம்பிச் செல்லும்போது ராம்குமாரும் கூடவே செல்வதாக ஏற்பாடு.

முந்தைய நாள் இதைக் குறித்து பெருத்த விவாதமே நடந்தது.

'எதுக்கு ஜோதி அப்பாவ வேணாங்கறே... first day.. காலேஜ் பஸ்சுக்கும் பணம் கட்டலே... இவ்வளவு தூரம் நீயே ஒத்தையா போயிருவியா?' என்றாள் லலிதா.

'போயிருவேம்மா... நா என்ன சின்ன குழந்தையா?'

'இங்கருந்து ஸ்டேஷன் வரைக்கும்னா சரி. அங்கருந்து பீச் வரைக்கும் ஒரு ட்ரெய்ன். அப்புறம் அங்கருந்து இன்னொரு ட்ரெய்ன். அந்த ஸ்டேஷன்லருந்து மறுபடியும் டவுண் பஸ். ஒன்னால தனியா முடியுமா?'

'முடியும். நா போய்க்குவேன்.' என்றாள் ஜோதிகா பிடிவாதமாக உள்ளுக்குள் பயம் இருந்தாலும். பிடிவாதமாக காலேஜ் பஸ் கட்டணத்தை செலுத்த மறுத்த தந்தைக்கு தண்டனையளிப்பதாக நினைத்துக்கொண்டு இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று உள்மனது அவளை எச்சரித்தாலும் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.

'அப்பா காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னுதான இப்படி பிடிவாதம் பிடிக்கே?' என்றார் ராம்குமார்.

ஆமாம், என்ன இப்போ என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் காலேஜுக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் விவாதம் எதற்கு என்றது உள்மனது. 'அதெல்லாம் இல்லை...'

'பின்னே ஏன் வேண்டாங்கறே? நா பாட்டுக்கு ஒன்னைய கொண்டு வந்து விட்டுட்டு திரும்பிட்டுப் போறேன். அதுக்குன்னுதான லீவும் எடுத்துருக்கேன்?'

ஜோதிகா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'அப்ப எங்கூட வந்தா தனியா வர்ற பசங்கல்லாம் ஒருமாதிரி கேலியா பார்ப்பாங்கம்மா? முதல் நாளே ஒரு சிஸ்சின்னு பேர் வாங்க புடிக்கலை... அதான் சொல்றேன்...'

ராம்குமார் கேள்விக்குறியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'சிஸ்சியா... என்னடி சொல்றா இவ?'

ராஜ் முந்திக்கொண்டு, 'சின்னப் பாப்பான்னு அர்த்தம்ப்பா... ஜோதி சொல்றது சரிதான். காலேஜுக்கு அப்பா, அம்மாவோட வர்ற பசங்கள மத்த பசங்க அப்படித்தான் கூப்டுவாங்க..' என்றான் சிரித்தவாறு.

அப்பாடா, மொத முறையா எனக்கு பரிஞ்சிக்கிட்டு வந்தியே என்றவாறு அவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள் ஜோதிகா.

ராம்குமார் தலையில் அடித்துக்கொண்டார். 'சரி எப்படியோ போ...' என்றவாறு அவர் குளியலறையை நோக்கி செல்ல லலிதா மகளுடன் குடியிருப்பின் வாசல்வரை வந்து வழியனுப்பினாள்.

'ஒரு வாரம் இப்படியே போய்ட்டு வா ஜோதி... முடியலன்னா நான் அப்பாவ கம்பெல் பண்ணி காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்ட சொல்றேன்...'

'ஆமா கிழிச்சீங்க.' என்றாள் ஜோதிகா எரிச்சலுடன். 'ஏம்மா அப்பா இப்படி இருக்காங்க.. அன்னைக்கி ஃபீஸ் கட்டப் போன எடத்துல எல்லார் முன்னாலயும் வச்சிக்கிட்டு பஸ்சுக்கெல்லாம் என்னால தண்டம் அழ முடியாதுன்னு சொல்லி மானத்த வாங்கிட்டாங்க... அங்க இருந்த பசங்கல்லாம் என்னெ எல்லாரும் எப்படி பாத்தாங்க தெரியுமா? அதுல யாராச்சும் என் க்ரூப்பையே எடுத்து என்னோட க்ளாஸ்லயே இருந்தா என்ன செய்யிறது? இந்த லட்சணத்துல அப்பாவும் கூட வந்தா வேற வெனையே வேணாம். இன்னைக்கிம் எதையாச்சும் சொல்லி மானத்த வாங்கிருவாங்க. அப்புறம் நா அந்த காலேஜுக்கே போமுடியாது. ...'

லலிதாவுக்கு மகளுடைய ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்ய? வேதாளத்துடன் வாழ்க்கை நடத்தினால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்? ஆனால் பிள்ளைகளும் சேர்ந்து அவதிப்படுவதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை. இருந்தாலும் கணவருக்கு பரிந்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 'இங்க பார் ஜோதி. அப்பா வளர்ந்து வந்த விதம் அப்படிடீ. அப்பா கோபத்துல பேசறதையெல்லாம் பெரிசு பண்ணாதன்னு எத்தனை தடவ ஒங்கிட்ட சொல்லியிருக்கேன்.. ராஜ பாரு.. அவன் கேக்காத பேச்சா? அதயெல்லாம் நினைச்சிக்கிட்டு டென்ஷனாகாத... முதல் தடவையா போறப்போ சங்கடத்தோட போகாம சிரிச்சிக்கிட்டே போ... அன்னைக்கி நடந்தத அந்த பசங்க அப்பவே மறந்துப் போயிருப்பாங்க... அவங்கள்ல யாரையாச்சும் பாத்தாக்கூட அன்னைக்கி நடந்ததயே நினைச்சிக்கிட்டு ஒதுங்கி போகாத... என்ன புரியுதா... பத்திரமா போய்ட்டு வா... முடிஞ்சா கேம்பஸ்லருந்து ஃபோன் பண்ணு.'

ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவள் இரண்டு மின்வண்டிகள் பிடித்து கல்லூரி வளாகத்தை வந்தடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்ததையும் விடவும் வளாகம் பிரம்மாண்டமாக இருந்ததைப் பார்த்து வியந்து நின்றாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஒரே மாதிரியான கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஐந்து மாடிகள். ஒவ்வொன்றின் முகப்பிலும் ஏ,பி,சி,டி எழுதப்பட்டு 'எச்' வரையிலும் என எட்டு கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளையின் பெயரையும் தாங்கியிருந்தன. அதனையடுத்து பிரம்மாண்டமான லாப், வொர்க்ஷாப் கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு பின்புறம் வின்னை முட்டும் டவர் ஒன்று. இண்டர்நெட் வசதிக்காக என்று நினைத்தாள்.

வாசலில் இருந்த பிரம்மாண்ட இரும்பு கேட்டுகளையொட்டி வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகளை தன்னையுமறியாமல் கணக்கிட்டாள். இருபதுக்கும் மேல் இருந்தன. ஒவ்வொன்றின் முகப்பிலும் அதற்குரிய எண்ணும் அது செல்லும் வழித்தடங்களும் எழுதப்பட்டிருந்தன. அவளுடைய குடியிருப்பு இருந்த இடத்திற்கான பேருந்தும் அங்கு நிற்பதைப் பார்த்த ஜோதி இதுல வந்துருந்தா எப்படியும் ஆஃபனவர் சேவ் பண்ணிருக்கலாம். இப்படி வேத்து விறுவிறுத்து வந்துருக்க வேணாம். இந்த வேர்வை நாத்தத்தோட மொதல் நாளே க்ளாசுக்குள்ள போயி இது சரியான கச்சறா கேசுடான்னு நினைச்சிருவானுங்களோ....

அவளையுமறியாமல் அவளுடைய பார்வை கேட்டிற்கு முன்பு வரிசையில் நின்ற மாணவர்கள் மீது படிந்தது. 'பசங்க அட்டகாசமாத்தான் இருக்கானுங்க...' உதடுகள் முனுமுனுத்தன. அவர்களை தொடர்ந்து எதிர்புறத்தில் நின்ற பெண்களின் வரிசையை நோட்டம் விட்டாள்... ஹூம் என்ற பெருமூச்சுடன் குனிந்து தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ச்சே... பேசாம ஸ்கூல் மாதிரியே காலேஜுக்குன்னு யூனிஃபார்ம் இருந்தாக்கூட நல்லது போலருக்கு... நாம போட்டுட்டுருக்கறது இருக்கறதுலயே நல்லதுன்னு நினைச்சி போட்டுக்கிட்டிருக்கோம். இதுங்களோட கம்பேர் பண்றப்ப இதுவே அசிங்கமா இருக்கு... இந்த லட்சணத்துல டெய்லி ஒன்னுன்னு வாரத்துல ஆறு நாளைக்கு.... எங்க போறது? பேசாம ஆர்ட்ஸ் காலேஜுக்கே போயிருக்கலாம் போலருக்கு... ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்குன்னு சும்மாவ சொன்னாங்க... நம்ம லட்சணத்துக்கு எஞ்சினியரிங் காலேஜ்லாம் ரொம்ப ஜாஸ்தி போலருக்கு... நல்லவேளை விஜி இங்க வரலை.. இல்லன்னா அவளே இதுங்ககிட்ட நம்ம வண்டவாளத்த எடுத்து விட்டுருப்பா.

ஒரு பெருமூச்சுடன் சென்று மாணவிகள் வரிசையில் நின்றாள்.

'என்னடா இது.. மொபைல வாங்கிக்கிறானுங்க?'

குரல் வந்த திசையை பார்த்தாள்.

'கோட்டாவில வந்தவனுங்கன்னு பாத்தால தெரியுது.. அவனுங்களும் அவனுங்க மூஞ்சியும்...இதுங்களுக்கு மொபைல் ஒன்னுதான் கேடு..'' தனக்கு பின்னாலிருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரிகளை திரும்பிப் பார்க்க ஆசை...அடக்கிக் கொண்டாள்...

'அதான் பாக்கறியே பெறவென்ன கேள்வி வேண்டிக் கிடக்கு. வாங்க்கினு போறப்போ குடுத்துருவானுங்களோ என்னவோ... இந்த காலேஜ்லருக்கறவனுங்கள பத்திதான் போன வருசமே பேப்பர்ல நாறுச்சே மாமு... சொன்னா கேட்டத்தான... என்னமோ ஊர்லல்லாத காலேஜ்ல சேத்துவுட்டா மாதிரி பீத்தறாரு எங்கப்பா... இன்னும் நாலு வருசம்... நினைச்சாலே கபீருங்குது...'

'பேசாம இப்பவே சிம் கார்ட எடுத்துரலாமாடா? அப்பால அவனுங்க செல்ஃபோன திருப்பிதரமாட்டோம்னுட்டா?'

எதிர் வரிசையில் இருந்து வந்த ஐடியா அவளையும் ஈர்க்கவே உடனே தன்னுடைய கைப்பையிலிருந்த செல்ஃபோனை எடுத்து சிம் கார்டை உருவுவதில் முனைந்தாள்.

தொடரும்...

20.7.07

நாளை நமதே - இதுவரை

இதுவரை...

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் துவங்கி மளமளவென்று இடங்கள் நிரப்பப்பட்டன.

நம்முடைய கதைக்களத்தின் நாயகனான வேல் முருகன் பொறியியல் கல்லூரி அரசு கவுன்சிலிங்குக்கு விட்டுக் கொடுத்த அனைத்து கூடுதல் கட்டணம் இல்லாத இலவச இடங்களும் கவுன்சிலிங் துவங்கி இரண்டு வாரங்களுக்குள்ளேயே நிரம்பிவிட பரத்தின் நண்பர்கள் பலருக்கும் அவன் தெரிந்தெடுத்திருந்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது. கவுன்சிலிங் சென்ற அன்று கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே இடம் இருந்தும் வேல் முருகன் கல்லூரியில் பேமெண்ட் இடத்தை தெரிவு செய்ய அவனை வினோதத்துடன் பார்த்தவர்களை பொருட்படுத்தாமல் இருந்த பரத் தன்னுடைய நெருங்கிய நண்பன் கணேசனுக்கும் எந்த கல்லூரியிலும் இலவச இடம் கிடைக்காமல் போனதும் சோர்ந்துப்போனான். 'சாரி பரத்... அப்பாவும் இப்படியாவும்னு நினைக்கல... Ask them to join in any of the arts colleges. அட்மிஷன்ல ஏதாச்சும் ப்ராப்ளம் இருந்தா சொல்லு... நா ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.' என்றார் ராஜசேகரன்.

வாசனுக்கு வேல் முருகனில் ஃப்ரீ சீட் கிடைத்தது. ஆனால் மூர்த்திக்கு அந்த கல்லூரியில் பேமெண்ட் சீட்டும் கிடைக்கவில்லை. பிறகு பஞ்சாபகேசன் தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் அதே க்ரூப்பைச் சார்ந்த அடுத்த வளாகத்திலிருந்த வேலன் தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்வாகிகள் கோட்டாவில் பெருமளவு பணம் செலுத்தி இடம் பிடித்துக்கொடுத்தார். 'அப்பாவுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்துக்கு ஒன்னோட சுயநலம்தாண்டா காரணம்.' என்று பஞ்சாபகேசன் வாசனை சாடியபோது அவரை எதிர்த்து வாதாடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து மவுனமாய் நின்றான். எப்படியோ இனியாவது தன் சகோதரனுடைய தொல்லையிலிருந்து விடுதலை கிடைத்ததே என்று நினைத்தான்.

ஜோதிகாவுக்கும் பேமெண்ட் சீட்டே கிடைத்தது. 'ஒரு பொட்ட பொண்ணுக்கு இவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்கணுமான்னு கேக்கறாங்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம். அம்மாவோட கட்டாயத்துக்காகத்தான் அப்பா சம்மதிச்சேன். இனியாவது டி.வியே கதின்னு கிடைக்காம நல்லா படிச்சி கேம்பஸ்லயே ஒரு வேலையா வாங்கிக்க வேண்டியது உன் பொறுப்பு, சொல்லிட்டேன்..' ஜோதிகாவுக்கு 'பொட்ட பொண்ணுதானே' என்ற அப்பாவின் சுடுசொல் அவமானமாக இருந்தாலும் இதற்கு தானும் ஒரு காரணம்தானே என்று நினைத்து பொறுத்துக்கொண்டாள். 'அப்பா கடனாயிருச்சேங்கற ஒரு ஆதங்கத்துல பேசறாங்கடி. அத பெருசா எடுத்துக்காத.' என்றாள் லதா. 'வருசம் எழுபத்தஞ்சின்னு இவ படிச்சி முடிக்கறதுக்குள்ள காலேஜுக்கே மூனு லட்சம் ஆயிரும் போல... அதுக்கப்புறம் டவுரி வேற... அதுக்கப்புறம் மிச்சம் மீதி இருந்தாத்தான் எனக்கு... அப்படித்தானேம்மா?' என்ற மகன் ராஜ்குமாரிடம், 'டேய் பொறாமைப் படாதே. படிக்கற வயசுல வாழ்க்கைய அனுபவிக்கணும்னு நினைச்சா இந்த கதிதான்.. இனியாவது ஒழுங்கா படிச்சி ப்ளஸ் டூவ முடிக்கப் பாரு. ஈவ்னிங் காலேஜ்லயாவது சேரலாம்.' என்றாள்.

ப்ரியாவுக்கு வேல் முருகனில் பேமெண்ட் சீட் கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் அலாட்மெண்ட் கடிதம் கிடைத்ததுமே மாலதி அவளுடைய தோழியின் உதவியுடன் வங்கியை அணுக அதிக சிரமமில்லாமல் கடனும் கிடைத்தது. 'ரொம்ப தாங்ஸ்மா....' என்று தன்னை இறுக அணைத்த மகளின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள் மாலதி... எப்படி அடைக்கப் போறேன்.... அசலும் வட்டியும் சேர்த்து நாலு லட்சத்த கடந்துரும் போலருக்கே.... மாசா மாசம் சம்பளத்துல இருந்தே அடைக்கணும்னு நினைச்சா நடக்கற காரியமா இது.... அதுக்கப்புறம் இவளுக்கு நகைகள சேக்கணும், வரதட்சணை... கல்யாணச் செலவு... இந்த கடன அடைச்சி இவள கல்யாணம் பண்ணி அனுப்புனதுக்கப்புறமும் பணத்தேவை இருக்குமே... என்ன செய்யப்போறேன்? ஏய் ஒம் பொண்ணுக்கு ப்ராமிஸ் செஞ்சி குடுத்துருக்கே... என்று இடித்த உள்மனதை அடக்கினாள் மாலதி... எம் புருசனுந்தான் ப்ராமிஸ் பண்ணான், அக்னி சாட்சியா.. கடைசி வரைக்கும் கண் கலங்காம வச்சிக்கிறேன்னுட்டு... செய்யலையே... Yes.... என் வழி தனி வழிங்கறாப்பல .... இதுவரைக்கும் நான் travel பண்ண பாதைதான் இதுக்கு ஒரே சொலுஷன்... சுவர் இருக்கும்போதுதான சித்திரம் வரைய முடியும்... ....ஆனா அதே சமயம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவ நம்மள சந்தேகப்படாதபடி நடந்துக்கணும்....

சுந்தருக்கும் அதே கல்லூரியில் பேமெண்ட் சீட்... அவளுடைய தாயின் கருணையில். 'டேய்.. என்னவோ பெரிய ஆள்மாதிரி குதிச்சே.. அம்மாவ எவ்வளவு கேவலாம நடத்தினே... இப்பவாவது புரிஞ்சிக்கோ. என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான். அப்பா அப்பாதான்... ' என்று ப்ரேமா கேலியுடன் பேசியபோது அவமானத்தில் தலைகுனிந்து நின்றான் சுந்தர். 'என்னம்மா நீ... நீ எப்பவாச்சும்தான வரே... நீயும் இல்லாதப்போ அண்ணாதான என்னெ பாத்துக்கிட்டான்.' என்றான் சுதாகர். 'பரவால்லையே ஒன்னையும் எனக்கு எதிரா திருப்பிட்டானா ஒங்கண்ணன்?' என்ற ப்ரேமா, 'இங்க பாருங்கடா ஒங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக்கறேன்.... நா தொடர்ந்து அடுத்த வருசமும் ஒங்களுக்கு ஃபீஸ் கட்டணும்னா ஒங்கப்பாவ ஒதறிட்டு ஒழுங்கு மரியாதையா எங்கூட இருங்க... இல்ல இதான் நா இந்த வீட்டுக்கு வர்ற கடைசி நாள்.. என்ன சொல்றீங்க?' என்று மிரட்ட சுதாகர் சுந்தரைப் பார்த்தான். 'ஒத்துக்கயேன்...' என்பதுபோல... 'சரி' என்று தலையாட்டினான் சுந்தர், வேறு வழியில்லாமல். மாசா மாசம் அஞ்சாயிரத்த அனுப்புனா போறும்னு நினைக்கற அப்பாவ நம்பி என்ன பிரயோசனம்? நாலே வருசம்... பல்ல கடிச்சிக்கிட்டு இருந்துருவோம்... அதுக்கப்புறம்... இவங்க யாரும் வேணாம்... சுதாகர் மட்டுந்தான் என் வாழ்க்கைன்னு முடிச்சிக்குவோம் என்ற நினைத்தான்...

*******

நாளை கல்லூரிகள் திறக்கும் நாள்....

பலருடைய கனவுகள் நனவாகும் காலம் துவங்கப் போகும் நாள்... பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க விருக்கும் காலத்தின் ஆரம்ப நாள்...

கடந்த இரண்டாண்டு கால பள்ளி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு, உறங்காமல் விழித்திருந்து செலவழித்த இரவுகளுக்கு விடியல் நாளைதான்...

எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்...

நாளைய உலகின் பிரதிநிதிகள் இவர்கள்...

நாளைய உலகம் இவர்களை கையில்தானே...

எத்தனை, எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள்....

இத்தனை கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளில் நுழையும் இவர்களுடைய எண்ணங்கள், அபிலாஷைகள், ஆசைகள், கனவுகள்...

நிறைவேறுமா?

நாளை முதல்... இவர்களுடைய அடுத்த நான்காண்டு கல்லூரி அனுபவங்கள்...

தொடர்கிறது....

நாளை நமதே...

19.7.07

நாளை நமதே - 17

சென்னையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் வசிக்கும் பகுதியான அடையாறில் ஓரு சொகுசு பங்களா..

பங்களாவின் முகப்பில் சுமார் ஒரு கால்பந்தாட்ட களத்திற்கு நிகரான புல்வெளி... பச்சைப் பசேலென.. நடுவில் இருபத்திநாலு மணி நேரமும் பூமழை பொழியும் ஃபவுண்டன்.

பங்களாவின் முகப்பை சாலையிலிருந்து முற்றிலும் மறைத்தவாறு ஏழடி உயர காம்பவுண்ட் சுவரையொட்டி வளர்க்கப்பட்ட விசிறி வாழை மரங்கள் வரிசையாக..

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் காலத்து பாணியிலிருந்த அந்த பங்களாவை அடிமாட்டு விலைக்கு வாங்கி - அபகரித்து என்பதுதான் சரி - ஒரு புது பங்களாவை கட்டுவதற்கு தேவையான... ஏன் அதற்கும் கூடுதலாகவே, பணத்தை வாரியிறைத்து புதுப்பித்து வெளிப்புறத்தை அதே பழைய பாணியிலும் உட்புறத்தை அல்ட்றா மாடர்ன் வசதிகளுடனும் மாற்றியமைத்திருந்தார் வெங்கடேஷ் என்கிற வெங்கடேஸ்வரலு.. வேல்முருகன் க்ரூப் ஆஃப் எஜுகேஷன்ஸ் உரிமையாளர்.

வெங்கடேஷ் பங்களாவில் நடுநாயகமாக இருந்த அலுவலக அறையில் ஒரூ நீஈஈஈஈள மேசைக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கத்தில் அவருக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக பக்கபலமாக இருந்துவரும் 'அப்பா' என்று தொண்டர்கள் அன்புடன் அழைக்கும் அரசியல்தலைவர். அதாங்க, தமிழக அரசியல்ல.... எந்த பதவியும் வகிக்காம கடந்த பத்து வருசமா எந்த கட்சி ஆட்சிய புடிச்சாலும் அந்த கூட்டணியில இருக்கற நம்ம தலைவர்தாங்க...

அவருடைய பார்வை நீண்டு, பரந்துக் கிடந்த, பணக்காரத்தனமான ஹாலை ஒரு வலம் வந்தது.

'நாம மட்டும் இல்லன்னா இந்த கொல்ட்டிக்கி இந்த அந்தஸ்த்து கெடச்சிருக்குமாடே?' அன்று காலையில் வரும் வழியில் தன் அந்தரங்க காரியதரிசியிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.

'அய்யாவுக்கு வேணும்னு சொன்னா முடியாதுன்னு சொல்றதுக்கு யாருக்குய்யா தைரியம் இருக்கு? ஒரு வார்த்த சொல்லுங்கய்யா... அடுத்த வாரமே பங்களா நம்ம கையில...'

'அடேய்... அடேய்... நா என்ன சொல்ல வரேன்... நீ என்ன சொல்லுதே... அந்த பங்களா எதுக்குடா நமக்கு...?'

காரியதரிசி சட்டென்று பின்வாங்கினார். இந்தாளு என்ன சொல்ல வரார்னு நமக்கே சில சமயத்துல வெளங்கமாட்டேங்குதே.. 'சரிங்கய்யா... நமக்கு வேண்டியது நமக்கு அவருக்கு வேண்டியது அவருக்கு....'

தலைவர் சிரித்தார். 'அதாண்டே... நமக்கு என்ன வேணும்... அது கிடைச்சிக்கிட்டே இருக்கணும்...'

வெத்துப் பயலாருந்தவனுக்கு வந்த வாழ்வு... ஹூம் என்று பெருமூச்செறிந்தார்.... இவனுக்கு பின்னால எவனெவன் இருக்கானோ... ஆந்திராவுல நம்மளவிட பெரும்புள்ளிங்கல்லாம் இருக்கானுங்களே.. மிளகா, புகையலன்னு தங்கச் சுரங்கத்தையல்ல வச்சிருக்கானுங்க... போறாததுக்கு சாராயம் வேற... காசுக்கென்ன... இல்லன்னா ஒரு பழைய பேப்பர் வித்துக்கிட்டிருந்த பயலுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்திருக்க முடியும்? லட்டு மாதிரி ஒரு பொஞ்சாதி.. இவள காட்டியே எங்கங்க பணம் பண்ணானோ?

அவருடைய நெருங்கிய நண்பரான ஒரு ஆந்திர அரசியல்வாதியின் 'இந்தாளு நம்ம பினாமி தலைவரே. நீங்க இருக்கீங்கன்னுதான் இவனெ ஒங்க ஊருக்கு அனுப்பறேன். இவனுக்கு செய்யிறது எனக்கே செஞ்சா மாதிரி... நம்ம '... ...' கூட இதுல ஒரு இன்வெஸ்டர். அத மறுந்துராதீங்க.' என்ற பரிந்துரையோடு சென்னை வந்தவர்தான் இந்த வெங்கடேஸ்வரலு.

இன்றைய வேல் முருகன் குரூப் சேர்மன் வெங்கடேஷ்..... அப்பப்போ படியளக்கற மொதலாளின்னும் சொல்லிக்கலாம்...

வெங்கடேஷுக்கு இடப்பக்கத்தில் அவருடைய அன்பு மனைவி கற்பகம். அவருக்கு அடுத்து வெங்கடேஷ்-கற்பகம் தம்பதியரின் இரு புதல்விகள்: ரோகினி மற்றும் ரோஜா. அவர்களையடுத்து அவர்களுடைய கணவன்மார்கள் நாகராஜுலு மற்றும் பிரசாத், அதாவது வேல் முருகன் க்ரூப்பில் இருந்த இரண்டு கல்லூரிகளின் நிர்வாகிகள்.

வெங்கடேஷ் ஒரு மகிழ்ச்சி புன்னகையுடன் தலைவரைப் பார்த்தார். 'மீட்டிங்க தொடங்கிரலாங்களா?' என்றா பவ்யமாக.

'தொடங்கித் தொலைடா கொல்ட்டி' என்று உள்மனதில் கறுவிய 'அப்பா' புன்னகையுடன், 'தொடங்கிரலாங்க....' என்றார் பெருந்தன்மையுடன். 'சீக்கிரம் முடிச்சிட்டா நல்லது. எனக்கு ஒரு மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கணும்.'

'போய்யா நீயும் ஒன் மறியலும்.. அதான் தெனம் ஒரு மறியல் நடத்தி ஊரையே நாறடிக்கறியே' என்று மனதுக்குள் முனகினார் வெங்கடேஷ்.. 'செஞ்சிரலாங்க...' என்று பதிலளித்தார் தன் மூத்த மருமகனைப் பார்த்தவாறு.

வெங்கடேஷின் பார்வையைப் புரிந்துக்கொண்ட மூத்த மருமகன் நாகராஜுலு தன் முன்னிருந்த அறிக்கையிலிருந்து வாசிக்கத் துவங்கினார். 'இந்த வருசமும் நாம கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருந்த எல்லா சீட்டுங்களூம் ஃபில் அப் ஆயிருக்கு. தமிழ்நாட்டுலருக்கற மொத்த காலேஜ்லயுமா சேர்த்து சுமார் இருபதாயிரம் சீட் வேக்கண்டா இருக்கறப்ப நம்ம க்ரூப் காலேஜஸ் மூனுலயுமே எல்லா சீட்டும் ஃபில்லப் ஆயிருக்கறது ஒரு ஹிஸ்டரி.'

'போறுண்டா டேய் ஒங்க பிலாக்கணம். சிட்டிங் ஃபீசோட குடுக்க வேண்டியத சேர்த்து குடுத்தா நா போய்க்கிட்டே இருப்பேன்ல?' என்று நினைத்தார் 'அப்பா'

ஆனாலும் 'அப்படியா...' என்றார் வாயெல்லாம் பல்லாக. 'அஞ்சு வருசத்துல ரொம்பவே சாதிச்சிருக்கீங்க..'

'எல்லாம் ஒங்க தயவுய்யா...' என்றார் வெங்கடேஷ்... 'அப்பப்போ கறந்துட்டாலும்...' இது அவர் மனதில் நினைத்தது.

தொடர்ந்து தன்னுடைய நிர்வாகத்தில் இருந்த கல்லூரியின் அருமை பெருமைகளை நாகராஜுலு படிக்க ஆரம்பிக்க 'தலைவர்' பொறுமையிழந்து எழுந்து நின்றார்.

'நீங்க தொடர்ந்து போட் மீட்டிங்க நடத்திக்குங்க.. எனக்கு அவசரம்...'

வெங்கடேஷுக்கு புரிந்தது. தன்னுடைய இளைய மருமகன் பிரசாதைப் பார்த்தார். அவன் உடனே தன் காலடியில் வைத்திருந்த கைப்பெட்டியை எடுத்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து தன் மாமனாரிடம் நீட்ட அவர் அதை சம்பிரதாயமாக தலைவரிடம் நீட்ட, அவர் பெயருக்கு அதை தொட்டுவிட்டு விலகிக்கொண்டார். இது வழக்கமாய் நடக்கும் சடங்குதான். நாடு போற்றும் ஒரு தலைவர் கைப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஒரு 'கஸ்டமரின்' அலுவலகத்திலிருந்து வருவதை ஏதாவது பத்திரிகையாளர் பார்த்துவிட்டால் என்னாவது!

தலைவர் தன்னுடைய வாகனத்தை நெருங்குவதற்குள் பெட்டி டிக்கியில் வைக்கப்பட்டுவிடும் என்பது அவருக்கு தெரியும் என்பதால் புன்னகையுடன் மேசையை சுற்றிலும் இருந்தவர்களிடம் கரம் குவித்து விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். வெங்கடேஷ் அவர் பின்னால் இரண்டடி தள்ளி ஒரு நாடகத்தனமான பவ்யத்துடன் நடந்தார்.

கஞ்சியில் தோய்த்து தேய்த்த வேட்டி சட்டையில் விசுக், விசுக்கென்று நடந்து வாகனத்தில் ஏறி கேட்டைக் கடந்து தலைவர்' மறையும் வரை பவ்யமாய் நின்றிருந்த வெங்கடேஷ் காறித் துப்பினார்... 'ராஸ்கோல், ராஸ்கோல்... எந்துக்குறா? எந்துக்கு... குடுத்ததெல்லாம் பத்தாதா.... கொஞ்சமா நஞ்சமா.... சொளையா ---------- லட்சம்... எவன் அப்பன் வீட்டுக்காசு... குடுத்து வச்சா மாதிரி வாங்கிட்டுப் போறே..?'

மாமனாரின் வாயிலிருந்து தொடர்ந்து வந்த வசவுகள் இளைய மருமகனை சிறிதளவும் பாதிக்கவில்லை. இது 'அவர்' வந்து போகும்போதெல்லாம் கேட்பதுதானே. ஆனாலும் சாமியறையிலிருந்து வெளியில் வந்து பத்து நிமிடம் கூட ஆகாத நிலையில்.... இன்று சற்று அதிகம்தானோ என்று தோன்றியது.

எங்கே மாமனாரின் கோபம் தன் மீது பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் விடுவிடுவென்று ஹாலை நோக்கி விரைந்தான் பிரசாத்.

சில நிமிடங்கள் கழித்து ஹாலுக்குள் மீண்டும் நுழைந்த வெங்கடேஷ் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தன் குடும்பத்தினரைப் பார்த்தார்.

'என்னங்க அந்த மனுசனுக்கு மறுபடியும் குடுத்தீங்களா?' என்றார் கற்பகம்.

'பின்னே... வேறென்ன செய்யிறது... இனி மூனு, நாலு மாசத்துக்கு இந்த பக்கம் தலைய வைக்காம இருக்கற அளவுக்கு குடுத்துருக்கேன்.... சாமிக்கு குடுத்தோம்னு நினைச்சிக்குவம்... சரி.. அது தொலையட்டும்... நாளையிலருந்து அட்மிஷன் தொடங்கணுமே... அதப்பத்தி பேசுவோம்.'

அவருடைய பார்வை தன் மீது படுவதை உணர்ந்த நாகராஜுலு, 'எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சி... இங்கயே வச்சி செஞ்சிரலாம்னு....'

வெங்கடேஷ் எரிந்து விழுந்தார். 'அதென்ன செஞ்சிரலாம்னு இளூக்கீங்க... பின்னே காலேஜ்ல வச்சா செய்ய முடியும்? சரி.. அந்த நோட் கவுண்டிங் மெஷின ரிப்பேர் பண்ண சொன்னேனே செஞ்சாச்சா...?'

நாகராஜுலு தன் அருகில் அமர்ந்திருந்த பிரசாதைப் பார்க்க அவன் என்னெ ஏன் பாக்கறே என்பதுபோல் திருப்பிப் பார்த்தான்.

'என்னய்யா ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பாக்கீங்க... என்னம்மா ரோகினி, இதான் நீ சொல்லிக் குடுக்கற லட்சணமா?' என்றார் கற்பகம் புன்னகையுடன். பிறகு தன் கணவரைப் பார்த்தார். 'நீங்க டென்ஷனாகாம போங்க... ஏற்கனவே சிஸ்டாலிக் ப்ரஷர் லிமிட்டுக்கு மேல இருக்கு... இத நா பாத்துக்கறேன்... ஃபோன் பண்ணா ஒரு மணி நேரத்துல வந்துருவான். நாம மொதல்ல யூனிவர்சிட்டி ஃபிக்ஸ் பண்ணதுக்கு மேல எவ்வளவு வாங்கணும்னு டிசைட் பண்ணிருவோம்.'

கற்பகத்தின் வார்த்தைகள் வெங்கடேஷ பணிய வைத்தன. தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து இளைய மகள் ரோஜா தன் முன்னாலிருந்த கோப்பிலிருந்து முந்தைய தினம் விவாதத்தின் முடிவில் தயாரித்திருந்த தொகைகளை ஒவ்வொன்றாக வாசிக்க வெங்கடேஷ் கண்களை மூடிக்கொண்டு வருகின்ற வாரத்தின் முடிவில் தன் கஜானாவில் எத்தனை லட்சங்கள் சேரும் என்பதை கணக்கிடலானார்.

தொடரும்..

18.7.07

நாளை நமதே - 16

மாலதி அன்று வீடு திரும்பியபோது இருட்டிவிட்டிருந்தது.

சாதாரணமாகவே அலுவலகம் முடிந்தவுடனேயே புறப்பட்டுவிடும் பெண்கள் குழுவினருடன் அவளும் புறப்பட்டுவிடுவாள். பாரீஸ் கார்னரிலிருந்து பஸ் பிடித்து வீடு திரும்பும்போது ஆறு மணியாகிவிடும்.

மாலதி அழைப்பு மணியில் கைவைத்ததுமே காத்திருந்ததுபோல் ப்ரியா வாசற்கதவைத் திறந்துவிடுவது வழக்கம்.

ஆனால் அன்று குடியிருப்பின் வாசலிலிருந்த அழைப்பு மணியை பலமுறை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை.

தன் கைவசமிருந்த சாவியைக் கொண்டு திறக்க முயன்றாள். திறந்துக்கொண்டது. ப்ரியா வீட்டில் இல்லை என்பது தெளிவானது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு!

எங்கே போயிருப்பாள்? அவளுடைய செல்பேசிக்கு டயல் செய்தால் என்ன என்று நினைத்தாள். ரிங் சென்றுக்கொண்டே இருந்தது. திரையில் தன்னுடைய எண்ணைப் பார்த்துவிட்டு எடுக்காமல் இருப்பாளோ என்று நினைத்தாள்.

கைப்பையை சோபாவில் எரிந்துவிட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.

எதுக்கு என்னெ புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா? ரெண்டு நாளாவே அவ போக்கே சரியில்லையே? இப்ப எங்க போயிருப்பா?

குடியிருப்பில் இருந்த லிஃப்ட் அவளுடைய குடியிருப்பு இருந்த தளத்தில் நின்று கதவு திறக்கப்படுவது கேட்டது. அவளாகத்தான் இருக்கும். வந்ததும் என்ன ஏதுன்னு கேட்டு தொந்தரவு பண்ண வேணாம். அவளா சொல்றாளான்னு பார்ப்போம்.

எழுந்து தலையை முடிந்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். காலையில் அவள் சிங்க்கில் போட்டுவைத்த பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே கிடந்தன.

சாதாரணமாக, ப்ரியா பள்ளியிலிருந்து வந்ததும் சமையலறை சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களையெல்லாம் கழுவி அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, மேடையை கழுவி ஒரு சிறிய கோலமும் போட்டுவிடுவதுடன் மாலதிக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காப்பியையும் போட்டு வைத்துவிட்டு முன் அறையில் அமர்ந்து தன்னுடைய வகுப்பு பாடத்தில் மூழ்கிப் போயிருப்பாள்.

மிக இளம் வயதிலேயே கணவனிடமிருந்து பிரிந்து சென்னையில் தன்னுடைய வாழ்க்கையை துவக்கிய மாலதி ப்ரியாவுக்கு வீட்டு வேலைகளை அவளுடன் பகிர்ந்துக்கொள்ள பழக்கியிருந்தாள்.

தாயைப் போல பிள்ளை என்பார்களே அந்த ரகம்தான் ப்ரியா. அழகிலும், நிறத்திலும், உடல்வாகிலும் தாயைக் கொண்டிருந்த ப்ரியா அறிவிலும் திறனிலும், அவளையும் விட மிஞ்சியிருந்தாள். வீட்டு வேலைகளை செய்யும் பாங்கும் அவளிடம் அபிரிதமாகவே இருந்தது.

அவர்களுடைய குடியிருப்பில் குடியிருந்த பணிக்கு செல்லும் மற்றம் இளம் தாய்மார்கள் ப்ரியாவுடன் அவள் வயதொத்த தங்களுடைய மகள்களை ஒப்பிட்டுப் பார்த்து குறை கூறும் அளவுக்கு திறனுள்ளவளாக இருந்தாள் ப்ரியா.

தாய்க்கும் மகளுக்கும் இடையில் இத்தனை ஒற்றுமை இருந்தும் மாலதி ஏனோ ப்ரியாவின் மனதை முழுவதுமாக புரிந்துக்கொண்டதே இல்லை. தன்னுடைய போக்கு மகளுக்கு முற்றிலுமாக விருப்பமில்லை என்று தெரிந்திருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை.. அல்லது வேண்டுமென்றே அறியாததுபோல் நடித்துக்கொண்டிருந்தாள்.

ஒருவேளை தன்னுடைய போக்கில் தவறேதும் இல்லை என்று நினைத்தாளோ என்னவோ. தன்னுடைய அழகில் ஆண்களை கிறங்கடிப்பது பள்ளி வயதுமுதலே அவளுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதையே நாளடைவில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை பெருக்கும் ஒரு வழியாக மாற்றிக்கொள்ளவும் அவள் தயங்கவில்லை. ஆடம்பரமில்லாவிட்டாலும் தன்னுடைய வருமானத்திற்கு மிஞ்சிய செலவினங்களை ஈடுகட்ட அது உதவுகிறதே என்ற எண்ணம் அவளுக்கு. தன்னை தேவையில்லாமல் சந்தேகித்து தன்னை ஒரு வேசியாகவே கற்பித்துவிட்டு ஒதுங்கிய கணவன் மீது இருந்த துவேஷம் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே பழிவாங்க அவளுக்கு கிடைத்த ஆயுதம்தான் கடவுள் தனக்கு அளித்துள்ள உடலழகு என்ற சால்ஜாப்பு வேறு. ஆனால் ஆண்களை ஒரு எல்லைக்கு மீறி தன்னிடம் நெருங்க விடுவதில்லை என்றும் எந்த ஒரு சூழலிலும் தன்னை எவனுக்கும் இனி இழந்துவிடுவதில்லை என்ற வைராக்கியமும் அவளிடம் இருந்தது. ஆசைக்காட்டி முடிந்தவரை பணத்தை கறந்துவிடுவதிலேயே அவள் குறியாயிருந்தாள்... எப்பாடு பட்டாவது தன்னுடைய ஒரே மகளை நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கிவிடவேண்டும் என்ற உறுதி அதை அடையும் நோக்கத்தில் அவள் பயணித்த பாதை சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்க முனைந்ததில்லை. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை.... நாயகன் வசனங்கள்... தன் மகளுக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை என்பது அவளுடைய எண்ணம்.

ப்ரியா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு நுழைவது கேட்டும் அடுக்களைக்குள் இருந்து வெளியே வராமல் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவுவதில் முனைப்பாயிருந்தாள். அவளுடைய செவிகள் மட்டும் ப்ரியாவின் காலடி ஓசைக்கு காத்திருந்தன. நேரே சமையலறைக்குள் வருவாள் என்று அவள் நினைத்திருக்க ப்ரியா தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்வது கேட்டது.

இருப்பினும் சட்டை செய்யாமல் பாத்திரங்களை கழுவி முடித்து ஸ்டவ்வைப் பற்ற வைத்து இருவருக்குமாக சேர்த்து காப்பியை கலந்து எடுத்துக்கொண்டு உணவு மேசையில் வைத்துவிட்டு ப்ரியாவின் அறைக்கதவை தட்டினாள். பதிலில்லை.

'ஏய் உள்ள என்ன பண்றே? காப்பி கலந்து வச்சிருக்கேன்.' என்றாள்.

'எனக்கு வேணாம். டயர்டாருக்கு. பஸ்ல பயங்கர கூட்டம், தலைய பயங்கரமா வலிக்கறது. செத்த நேரம் தூங்கப் போறேன்.'

மாலதி பதிலளிக்காமல் உணவு மேசைக்கு திரும்பி காப்பியை குடித்து முடித்துவிட்டு ப்ரியாவின் காப்பியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு காப்பித் தம்ளர்கள் இரண்டையும் கழுவினாள்.

எதுக்கு பஸ்ல வரணும்? எப்பவும் போல ஆட்டோவுல வரவேண்டியதுதானே? எங்கதான் போயிருப்பா? கேள்விகள் அவளுடைய தலையை குடைந்தெடுக்க தம்ளர்களை சமையலறை மேடையில் வைத்துவிட்டு மீண்டும் சென்று அறைக்கதவைத் தட்டினாள், சற்று வேகமாக.

'ஏய் ப்ரியா, எங்க போயிருந்தே? எப்பவும் போல ஆட்டோவுல வராம ஏன் பஸ்ல வந்த?'

உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை.

ப்ரியா விடவில்லை. அவள் எதையோ தன்னிடம் இருந்து மறைக்கிறாள் என்பதுமட்டும் விளங்கியது. இதுவரை அவளிடம் சொல்லாமல் அவள் வெளியில் சென்றதில்லை என்பதுடன் சென்னைப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்ததும் இல்லை. 'எப்படா ஒரு பொண்ணு ஏறலாம் இடிக்கலாம்னு பாத்துக்கிட்டுருக்கானுங்கம்மா... பஸ்சுல போறதுக்கே அருவருப்பா இருக்கு.' என்பவள் இன்று எதற்கு பஸ்சில்?

'ஏய் ப்ரியா இப்ப வெளியில வரப்போறியா இல்லையா? டென்ஷன் பண்ணாம வெளிய வா, ப்ளீஸ்... அம்மா மேல ஏதோ கோவமாருக்கேன்னு மட்டும் தெரியுது. அது ஏன்னுதான் தெரியல. வெளிய வா.'

அடுத்த சில நொடிகளில் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்த ப்ரியா சிடுசிடுப்புடன் தன் தாயைப் பார்த்தாள், 'என்ன தெரியணும் நோக்கு? நா எங்க போயிருந்தேன்னு... அவ்வளவுதான? இங்கதான் போயிருந்தேன்.'

ப்ரியா நீட்டிய சென்னை எத்திராஜ் கல்லூரியின் நாட்காட்டியை (college diary) வியப்புடன் வாங்கி பிரித்தாள். முதல் பக்கத்திலேயே ப்ரியா பி.எஸ்.சி (கம்ப்) முதலாம் ஆண்டு என்று எழுதியிருந்ததைப் பார்த்தாள். அவளையுமறியாமல் கோபம் தலைவரை ஏறியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு உணவு மேசையில் அமர்ந்து காப்பியைப் பருகிக்கொண்டிருந்த மகளைப் பார்த்தாள்.

'இதுக்கென்னடி அர்த்தம்?'

ப்ரியா காப்பியை குடித்து முடித்துவிட்டு எழுந்து வாஷ் பேசனில் வாயை அலம்பிக்கொண்டு திரும்பி வந்து தன் தாயை சலனமில்லாமல் பார்த்தாள். 'நான் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டேன். ரெண்டு நாளாச்சி காலேஜ் ஸ்டார்ட் பண்ணி. இன்னைக்கி ஃப்ரெண்ட்சோட புக்ஸ் வாங்க போயிருந்தேன். அதான் லேட். போறுமா, இல்ல இன்னும் ஏதாச்சும் தெரியணுமா?'

தன் செவிகளையே நம்பமுடியாமல் தன் மகளைப் பார்த்தாள். 'ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டியா? யார கேட்டு சேர்ந்தே? இதுக்கு ஏது பணம்?'

ப்ரியா பதிலளிக்காமல் வரவேற்பறைக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை முடுக்கிவிட மாலதி விரைந்து வந்து ப்ரியாவின் கையில் இருந்த ரிமோட்டை பறித்து டிவியை அணைத்தாள். கோபத்தில் வார்த்தைகள் வராமல் தடுமாறியவாறு சலனமில்லாமல் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தாள்.

அவள் திருப்பி தன்னைப் பார்த்த பார்வையில் தன்னையே பார்ப்பதுபோலிருந்தது மாலதிக்கு. 'நீயும் என் வயசுல இப்படித்தானே இருந்தே? தாத்தா சொல்றத கேட்டு நடக்கல இல்லே... அதத்தான் நானும் இப்ப செய்றேன்... எதுக்கு கோபிக்கறே?' என சொல்லாமல் அவள் சொல்வது அவளுடைய உள் மனதில் கேட்டது. வாய் மூடி மவுனியாய் போனாள்.

சில நொடிகள் மவுனத்தில் கரைய தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தாள் ப்ரியா. அவளுடைய கரங்களை ஆதரவாய் தொட்டாள். 'I am sorryமா... நேக்கு வேற வழி தெரியலை... எனக்கு எஞ்சினியரிங்ல சேரணும்னு ஆசைதான். ஆனா அது நம்மோட பணத்துல முடியணும். எனக்கு எப்படியும் ஃப்ரீ சீட் கிடைக்க சான்ஸ் இல்லேன்னு தெரியும். அதான் ஆர்ட்ஸ் காலேஜ்... ஏழைக்கேத்த எள்ளுருண்டை...'

கண்களில் நிறைந்து நின்ற கண்ணீருடன் தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'அம்மாவ பார்த்தா வெறுப்பாருக்கு நோக்கு, இல்ல? இவ ஒடம்ப வித்து கிடைக்கற காசு நமக்கெதுக்குன்னு நினைக்கறே... அப்படித்தானே?' மேலே தொடர முடியாமல் முகத்தை கரங்களில் மூடிக்கொண்டு விசும்ப அவளை தடைசெய்ய மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ப்ரியா.

சில நிமிட மவுனத்திற்குப் பிறகு முகத்தை துடைத்துக்கொண்டு தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'சரிடி... நீ நினைக்கறதும் சரிதான். ஆனா அதுக்கு இது முடிவில்லை... நீ வாங்கியிருக்கற மார்க்குக்கு நீ நிச்சயம் எஞ்சினியரிங்லதான் சேரணும்... அதுக்கு ஒரு வழியிருக்கு.'

ப்ரியா என்ன என்பதுபோல் தன் தாயைப் பார்த்தாள்.

'எதாச்சும் பேங்க்ல எஜுகேஷன் லோன் போடலாம். என்ன சொல்றே?'

'நமக்கு யார் லோன் தருவா? ஜாமீன், செக்யூரிட்டின்னு கேப்பாளே?'

மாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'அதப்பத்தி நீ கவலைப் படாத... என்னோட சாலரி அக்கவுண்ட் இருக்கற பேங்க்லயே கேப்போம். நாலு லட்சம் வரைக்கும் ஜாமீன் கேக்கமாட்டாளாம். செக்யூரிட்டின்னு கூட எதுவும் பெருசா கேக்கமாட்டாளாம். என் ஃப்ரெண்டு ஒருத்தி அவன் பையனுக்கு போன வருசம் எஜுகேஷன் லோந்தான் எடுத்ததா சொன்னா. அவ வழியாவே எங்க பேங்க்ல கேட்டா நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கேன். மாசா மாசம் என் சாலரியிலருந்தே கட்றேன்னு அண்டர்டேக்கிங் குடுத்துருவோம்... நீ சரின்னு சொல்லு... மத்தத நா பாத்துக்கறேன். நிச்சயமா நீ நினைக்கற எடத்துலருந்து பணத்த பொரட்ட மாட்டேன்... என்னெ நம்புடி..'

ப்ரியா தன் தாயை அணைத்துக்கொண்டாள். 'இன்னொரு கண்டிஷன்.'

'தெரியும்.... அதுக்கும் ஒத்துக்கறேன்... இனி எனக்கு நீ, ஒனக்கு நான்... போறுமா?'

ப்ரியா தன் தாயின் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்தாள். 'ப்ராமிஸ்?'

மாலதி தன் முகத்தை விடுவித்துக்கொண்டு ப்ரியாவின் கரங்களைப் பற்றினாள். 'ப்ராமிஸ்.' என்றாள் புன்னகையுடன்..

'அப்ப சரி... எனக்கு கவுன்சிலிங் வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுவரைக்கும் இந்த காலேஜுக்கு போய்ட்டு வந்துட்டு நின்னுடறேன். I need that changeமா... வீட்டுல அடைஞ்சி கிடந்து போரடிக்குது... மனசு தேவையில்லாம எதையெல்லாமோ நினைச்சி... I feel totally caged...'

இதுவரைக்கும் இறங்கி வந்தாளே என்று நினைத்தவாறு கைகளை விடுவித்துக்கொண்டு எழுந்து நின்றாள் மாலதி. 'ஓக்கே... ஆனா இந்த பஸ்ல எல்லாம் போய் அவஸ்தை பட வேணாம்... ஆட்டோவுல போய்ட்டு வந்துரு...' என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாய், 'ஏய் இதுக்கு ஏது பணம்?' என்றாள்.

'எல்லாம் நீ அப்பப்போ குடுத்ததுதான் சாலரியிலருந்து... அத சேத்து வச்சிருந்தேன், எதுக்காச்சும் ஒதவுமேன்னு... ஆனா இப்ப கட்டுன பணம் திருப்பி கிடைக்காது போலருக்கு.'

'ஏன்... ரீஃபண்ட் கிடைக்காதா என்ன? கேட்டுப் பாரேன்.'

ப்ரியாவின் கண்களுக்கு முன் அவளுடைய கல்லூரி ப்ரின்சியின் முகம் வந்துபோனது. 'அட்மிஷன் குடுக்கறப்பவே நீ எஞ்சினியரிங் காலேஜ்ல கிடைச்சதும் போமாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க... அவங்கக்கிட்ட போயி டி.சி கேக்கவே பயமாருக்கு... இந்த லட்சணத்துல கட்டுன ஃபீசையும் திருப்பி கேட்டேன்னு வையி... அவ்வளவுதான் டி.சி கூட தரமாட்டேன்னு சொன்னாலும் சொல்லிருவாங்க... நா மாட்டேன்...'

மாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'இது தேவையாடி நோக்கு... எவ்வளவு கட்டுனே?'

'வேணாம் கேக்காத... அப்புறம் டென்ஷனாயிருவே...' என்றாள் ப்ரியா பதிலுக்கு...

'எப்படியோ... போ... தெண்டம் அழுவணும்னு இருந்துது போலருக்கு... போட்டும் விடு....' என்றவாறு மாலதி சமையலறையை நோக்கி நடக்க ப்ரியா மீண்டும் தொலைக்காட்சியை முடுக்கி விட்டாள்..

தொடரும்...

12.7.07

நாளை நமதே 15

பஞ்சாபகேசன் தன் எதிரில் அமர்ந்திருந்த இரு புதல்வர்களையும் பார்த்தார்.

வாசனுடைய முகம் சோகத்தில்.... மூர்த்தியின் முகத்தில் முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சியா, இளக்காரமா என்பது அவருக்கு புரியவில்லை.

இருவரும் அதிகபட்சம் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள் என்றாலும் இவர்களுக்குள்தான் எத்தனை வேற்றுமை என்று நினைத்தார். உணவு மேசையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தார். 'நீ என்ன சொல்றே?' என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார். 'நீங்களே சொல்லுங்க.' என்பதுபோல் பார்வதி தோள்களைக் குலுக்க தொண்டையை கனைத்துக்கொண்டு தன் புதல்வர்களைப் பார்த்தார்.

'என்னங்கடா, ரெண்டு பேரும் சும்மாவே எவ்வளவு நேரம் ஒக்காந்துருப்பீங்க? என் ஐடியா புடிச்சிருக்கா இல்லையா?'

வாசன் தன் தாயைப் பார்த்தான். 'என்னம்மா நீயும் பேசாம ஒக்காந்துருக்கே?' என்பதுபோலிருந்தது அவனுடைய பார்வை.

'இப்ப எதுக்குடா அம்மாவ பாக்கே... நான் சொன்ன ஐடியாவுல ஒனக்கு சம்மதமில்லேங்கறியா?'

'இல்லப்பா...' என்றான் வாசன் மிருதுவாக. அவனுக்கு எப்போதுமே அதிர்ந்து பேச வராது. மூர்த்தி அவனுக்கு நேர் எதிர்... சாதாரணமாகவே அவன் குரல் கணீர் என்று இருக்கும். கோபம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்... நல்லவேளை அவர்களுடையது தனி வீடு... அடுத்த வீடு என்பதே ஐந்நூறடி தள்ளித்தான்....

'என்னடா சுடுகாடு மாதிரி இருக்கு? இங்க போயி வீடு கட்டப் போறேங்கறே?' என்ற அவருடைய தந்தையின் மறுப்பையும் மீறி அப்போது குக்கிராமமாயிருந்த புறநகர் பகுதியில் மலிவாய் கிடைக்கிறதென்று பத்து செண்டு நிலத்தில் வசதியாக கட்டிய வீடு. கடந்த ஐந்தாண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் முளைக்க, மண்சாலை தார் பூசிக்கொண்டது. தெரு விளக்குகளும் முளைத்தன... கார்ப்பரேஷன் குடிநீரும், கழிவுநீர் வசதியும்தான் இன்னும் வரவேண்டும். 'அது ரெண்டு வந்துரட்டும் பாரு செண்ட் விலைய...' என்பார் பஞ்சாபகேசன் அடிக்கடி... 'ஆமா... இப்படியே சொல்லிக்கிட்டிருங்க... நாமளும் வந்து பத்து வருசம் ஆகப்போகுது... இன்னும் பெருசா ஒன்னும் ஏறக்காணம்..' என்பார் பார்வதி அடிக்குரலில்.

'அப்படீன்னா? உன் மனசுல என்னதான் இருக்கு? அப்பா சொன்னதெல்லாம் மறந்துப்போச்சா?' என்றார் பஞ்சாபகேசன் எரிச்சலுடன். வாசனின் அமைதியான குணமும் அவனுடைய படிப்புத் திறனும் அவருக்கு பிடித்ததுதான்... ஆனால் அவனுடைய சுயநலம்... யார் எப்படி போனால் எனக்கென்ன என்ற அவனுடைய குணம்... 'இவனா நம்மள கடைசி காலத்துல வச்சி பாக்கப் போறான்.. மூர்த்திய வேணும்னா நம்பலாம், இவனெ நம்பவே கூடாதுடி' என்பார் தன் மனைவியிடம்.. 'படிச்சி முடிச்சி ஒரு வேலை மட்டும் கிடைச்சிரட்டும்... டாட்டா காமிச்சிட்டு போய்கிட்டே இருப்பான்.. நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு..'

பார்வதிக்கு தன் கணவனைப் பற்றியும் தெரியும், அதைவிட தன் இரு மகன்களை பற்றியும் நன்றாகவே தெரியும். ஆகவே தன் கணவனுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தவே மாட்டார். 'நீங்க ஒங்க புள்ளைங்களப் பத்தி தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்.' என்பார் சுருக்கமாக.

'எதுக்குங்க வாசன போட்டு டார்ச்சர் பண்றீங்க? அவனுக்கு புடிச்ச காலேஜில அவன் சேந்துக்கட்டும்.. மூர்த்திக்கி புடிச்ச காலேஜில அவனெ சேத்து விடுங்க... எதுக்கு இன்னும் ரெண்டு பேரும் ஒரே காலேஜில ஒரே கோர்ஸ்ல சேரணும்னு பிடிவாதம் பண்றீங்க?'

பஞ்சாபகேசன் எரிச்சலுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'இங்க பார் பார்வதி, ஒனக்கு ஒன்னும் தெரியாது... நீ இதுல தலையிடாத... நா டிசைட் பண்ணா மாதிரி வாசன் கவுன்சிலிங்கில நா சொல்ற இந்த மூனு காலேஜஸ்ல ஒன்னுலதான் சேரணும்... மூர்த்திக்கி கவுன்சிலிங் வர்றப்ப இந்த க்ரூப் காலேஜ்லதான் சீட் இருக்கும்னு ஒரு யூகம்... அதனாலத்தான் சொல்றேன்.'

'எதுக்குப்பா? எனக்கு கவுன்சிலிங் வர்றப்ப யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருமே... அப்படியே இல்லன்னாலும் வேற ஏதாச்சும் ஆர்.ஈ.சியில கிடைக்கும்...' என்றான் வாசன்...

அவனுடைய குரலில் எரிச்சல் லேசாக எட்டிப்பார்ப்பதை உணர்ந்த பஞ்சாபகேசன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார். பாத்தியாடி ஒம் புள்ளையோட லட்சணத்த என்றது அவருடைய பார்வை... பார்வதி வாசனைப் பார்த்தார்.. அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவனை தான் ஆதரித்தால் தன் கணவருடைய கோபம் அதிகமாகும் என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. 'அவன் சொல்றதுல என்னங்க தப்பு? அவன் நல்ல காலேஜில சேர்றது நமக்கும் நல்லதுதானே?' என்றார்.

அவர் நினைத்ததுபோலவே பஞ்சாபகேசனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. தன் மனைவியை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'இங்க பார்வதி.. மறுபடியும் சொல்றேன்... நீ இதுல தலையிடாத... ஒன்னு நீ சும்மா வாய மூடிக்கிட்டு இரு... இல்லையா கிச்சன்ல போய் வேலையிருந்தா பாரு...'

இனியும் அங்கு அமர்ந்திருந்தால் அவருடைய கோபம் அதிகமாகும் என்பதை உணர்ந்த பார்வதி, 'எப்படியோ போங்க...'என்று முனுமுனுத்துவிட்டு அப்பா சொல்றத கேளுப்பா என்பது போல் வாசனை நோக்கி பார்த்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார். ஆனாலும் அவருடைய கவனமெல்லாம் ஹாலிலேயே இருந்தது..

பஞ்சாபகேசன் வாசனைப் பார்த்தார். 'இங்க பார் வாசன்... கடைசியா சொல்றேன்... நீ நா சொல்ற காலேஜ ஆப்ட் பண்ணிட்டு வந்தா நா ஃபீஸ் கட்டுவேன்... இல்லன்னா..... அப்புறம் ஒன் இஷ்டம்...'

வாசன் பதில் பேசாமல் எழுந்து நின்றான். கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை அடக்க அவன் சிரமப்படுவது தெரிந்தது... 'அப்படீன்னா எனக்கு ஃபீஸ் கட்ட மாட்டேன்னு சொல்றீங்களாப்பா?'

'அப்படித்தான் வச்சிக்கோ...'

'ஏம்ப்பா...' நடுங்கும் குரலை சிரமப்பட்டு சீர்படுத்திக்கொண்டு பேசினான். 'எதுக்குப்பா... நா நல்ல மார்க் வாங்குனது என் தப்பா? Why do you treat me like this? நானும் ஒங்க புள்ளதானப்பா?'

பஞ்சாபகேசன் அப்போதும் கல்மனதுடன் அமர்ந்திருக்க வாசன் சமையலறையைப் பார்த்தான். 'என்னம்மா நீ? நீயும் சும்மாவே இருந்தா என்ன அர்த்தம்? அப்பா சொல்றதுல ஒனக்கும் சம்மதமா?'

தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் மகன் கண்கலங்கி நிற்பதை காணச் சகியாமல் பார்வதி அவனை நெருங்கி தோளில் கைவைத்தார். 'அப்பா கட்டாட்டி என்னடா நா கட்டறேன்... நா இருக்கேன்டா...' என்றார் தன்னையுமறியாமல்...

பஞ்சாபகேசன் அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'ஏய் ஒனக்கென்ன பைத்தியமா? அவந்தான் டிராமா போடறான்னா நீயும் அத நம்பிட்டியா? இப்பிடி அழுது, அழுதே ஒவ்வொரு காரியத்தையும் நடத்திக்குறான்.... இவனெ நம்பாதே... விஷம்... அவ்வளவும் விஷம்.... நல்ல மார்க் வாங்கிட்டானாம்... நா நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்த்ததாலதானடா மார்க் வாங்க முடிஞ்சது? நாம மட்டும் படிச்சா போறும்னு நினைக்காம கூடப் பொறந்தவனையும் கோச் பண்ணணும்னு தோனலையே... சுயநலம்.. ஆரம்பத்துலருந்தே நீ இப்படித்தான்னு எனக்கு தெரியாதா என்ன? Selfish fellow... இது தெரியாம இவ ஒருத்தி...' என்று இறைந்தவர் எழுந்து தன் மனைவியை நெருங்கினார். 'ஏய்... என்ன சவால் விடறியா? இவனுக்கு எவ்வளவு கட்டணும்னு கூட ஒனக்கு தெரியாது... தற்குறி, தற்குறி...'

பதினாறு வருடங்களாக சுமுகமாக நடந்து வந்திருந்த தாம்பத்தியத்தில் முதன் முதலாக விரிசல் ஏற்படும் சூழலை உணர்ந்தார் பார்வதி... ஆயினும் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.... வருவது வரட்டும் என்ற வீம்புதான் மேலோங்கி நின்றது... 'ஆமாங்க நா தற்குறிதான்... ஆனா நீங்க செய்யற அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா? நல்லா படிக்கற புள்ளைய வீணுக்குன்னா ஏசறது... அவனெ கோச் பண்ணலேன்னுட்டு இவனெ சொல்றீங்களே... அவன் என்ன செஞ்சான்னு ஒங்களுக்கு தெரியுமா... ஃப்ரெண்ட்சோட சேர்ந்த்து படிக்கறேன் பேர்வழின்னு இவன் புத்தகத்தையும் புடுங்கிக்கிட்டு போயி கூத்தடிச்சிட்டு ராத்திரியானதும் வருவான்... அவன் தூங்கனதுக்கப்புறம் அந்த புத்தகத்த எடுத்து வச்சிக்கிட்டு விடிய, விடிய இவன் படிப்பான்... இவன் செஞ்சது சுயநலம்னா... அவன் செஞ்சது போக்கிரித்தனம்... அவனெ எதுக்கு எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க?'

பஞ்சாபகேசனுக்கு தன்னுடைய செயலிலிருந்த தவறு தெரிந்தும் அவருடைய மூத்த மகன் மீது இருந்த கண்மூடித்தனமான பாசம் அவருடைய கண்களை மறைத்தது. மூர்த்தியின் பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அவருடைய குணத்தை ஒத்திருந்ததும் இதற்கு ஒரு காரணம். தன்னையே அவனில் பார்த்தார் பஞ்சாபகேசன்.... யாருடனும் ஒத்துப்போக முடியாமல் ஊர் ஊராக மாற்றலாகி அவர் பட்டிருந்த அவதி அவரை ஒரு மூர்க்கனாகவே மாற்றியிருந்தது. மேலும் தன்னைவிடவும் புத்திசாலிகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வக்கிர குனமும் அவருக்கு நாளடைவில் உருவாகிப் போனது. ஆகவேதான் வாசனுடைய புத்திசாலித்தனமும் அறிவுத்திறனும் பிடித்திருந்தும் அந்த இரண்டுமே அவரையுமறியாமல் அவனிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

'முடிவா சொல்றேன்... நீ இதுல தலையிட்டு கிறுக்குத்தனமா ஏதாச்சும் செய்ய நினைச்சே... அப்புறம் ஏற்படற விளைவுகளை நீதான் ஃபேஸ் பண்ணணும்.. சொல்லிட்டேன்... மூர்த்தி சேர்ற காலேஜ்லதான் வாசனும் சேரணும்... அதுக்கு சம்மதிக்கறவங்க மட்டும் இந்த வீட்ல இருந்தா போறும்... இல்லன்னா அவங்கவங்க லைஃப பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்....'

தன்னுடைய தந்தையில் குரலில் இருந்த உறுதி வாசனை அதிர்ச்சியடையச் செய்தது... 'எதுக்குடா... ஒனக்கு மேலருக்கறவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனா இந்த மாதிரி லோல் படவேணாமில்ல?' என்று அறிவுறுத்திய வயதான தன் தந்தையையே, 'ஒங்க பொண்ணுக்கூட போயி இருங்க...அப்பத்தான் புத்தி வரும்' என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றியவராயிற்றே தன் தந்தை என்று நினைத்த வாசன் சட்டென்று எடுத்த முடிவுடன் தன் தந்தையை நெருங்கி அவருடைய கரத்தைப் பற்றினான். 'சாரி டாட்... அம்மா ஏதோ எமோஷன்ல அப்படி பேசிட்டாங்க... ஒங்க டிசிஷன் படியே செஞ்சிடறேன்... I am sorry..' என்றான்..

இதை பஞ்சாபகேசன் எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மூர்த்தியைப் பார்த்தார். 'நீ என்னடா சொல்றே?'

மூர்த்தி தோள்களை அலட்சியத்துடன் குலுக்கியவாறு எழுந்து நின்றான். 'டாட், இவன் படிக்கற காலேஜ்லயோ இல்ல இவன் எடுக்கற கோர்ஸ்லயோ நான் சேரமாட்டேன்...That's final.' என்றவாறு அதிர்ந்து நின்ற மூவரையும் பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்..

தொடரும்.

11.7.07

நாளை நமதே - 14

'எனக்கு நாளைக்கு கவுன்சிலிங்டா. நாம எந்த காலேஜ்ல சேரணுங்கறத இன்னைக்கி டிசைட் பண்ணிறணும்... அதுக்குத்தான் ஒங்கள மறுபடியும் வரச்சொன்னேன்.' என்றான் பரத்.

அவனுடைய நண்பர்கள் பலரும் கவுன்சிலிங் துவங்கி ஒரு வாரத்திற்குப் பிறகுதான் செல்ல முடியும் என்பதால் அவர்கள் சேரவிருக்கும் கல்லூரியையே எப்படி அவனும் தெரிவு செய்வது என்பதை தீர்மானிக்க மீண்டும் என்ற எண்ணத்துடன் அவனுடைய நண்பர்கள் குழுவுடன் அமர்ந்து விவாதத்தில் ஈடுபட்டான்.

'அதெப்படிறா இப்பவே டிசைட் பண்றது? நீ போற டைம்ல சீட் இருக்கற காலேஜுங்கள்ல நாங்க போறப்போ சீட் இல்லன்னா?' என்றான் பரத்தின் நெருங்கிய சிநேகிதனான கணேஷ்.

பரத் சிரித்தான். 'டேய் டென்ஷனாகாத.. அதுக்குத்தான் நேத்தைக்கி நானும் அப்பாவும் ஒக்காந்து ராத்திரி முழுசும் நெட்டுல தேடி ஒரு நாலஞ்சி காலேஜ் செலக்ட் பண்ணிருக்கோம்... இந்த காலேஜஸ்ங்கதான் போன வருசம் அவங்கக்கிட்டருக்கற சீட்டுங்கள்ல எழுபத்தஞ்சி பெர்சண்ட் அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருக்காங்க.. அதனால நீங்க போறப்போ இங்கல்லாம் நிச்சயமா சீட் இருக்கும்... எல்லாமே சபர்ப்லதான் இருக்கு... ஒவ்வொரு காலேஜ்லருக்கற ஃபெசிலிட்டீஸ், போன ரெண்டு வருசத்தோட ரிசல்ட் எல்லாத்தையும் நானும் அப்பாவும் ஒக்காந்து அனலைஸ் பண்ணி ஒரு குட்டி ரிப்போர்ட்டே ரெடி பண்ணிருக்கேன்... மொதல்ல அத வாசிக்கறேன்... அப்புறமா டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்லாம். ஓக்கேவா?'

நண்பர்கள் குழு ஒருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது... பிறகு ஒருவன், 'சரிடா, நீ வாசி, கேப்போம்... நீ எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்.. அப்புறமா தேவைப்பட்டா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்...' என்றான்.

பரத் புன்னகையுடன் தன் கையில் இருந்த அறிக்கையைப் பார்த்தான்...'அதுக்கு முதல்ல நாம என்ன கோர்ஸ் எடுக்கணும்னு ஒரு டிசிஷன் எடுத்துருப்போம் இல்லே அதச் சொல்லுங்க, கேப்போம்... முதல்ல நா சொல்லிடறேன்.. எனக்கு மெக்கானிக்கல்... கணேசன் சி.எஸ்.சிதான்னு ஏற்கனவே சொல்லியிருக்கான்... மத்தவங்க என்ன எடுக்க போறீங்க?'

ஒரு நொடி மவுனத்திற்குப் பிறகு ஒவ்வொரு திசையிலிருந்து ஒவ்வொரு பிரிவின் பெயர்கள் ஒலிக்க பரத் தன் கையை உயர்த்தி, 'டேய்... டேய்... இப்படி சொன்னா ஒன்னும் புரியாது...' என்றான்... 'நா ஒவ்வொரு கோர்சா படிக்கேன்... வேணுங்கறவன் கைய தூக்குங்க.'

அதுவும் சரிதான் என்று கூட்டம் ஆமோதித்தது...

சி.எஸ்.சி - ஏறக்குறைய எழுபது சதவிகிதம் கைகள் உயர்ந்தன...

பரத் சிரித்தான்... 'என்னடா எல்லாருமே சாஃப்ட்வேர் எஞ்சினியராப் போகப் போறீங்களா?'

'என்ன பண்றது பாஸ்? அதுக்குத்தான ஃப்யூச்சரே இருக்குன்னு சொல்றாங்க... அத்தோட எடுத்தவுடனேயே டீசண்டான சாலரியும் கிடைக்குதாமே..' என்றான் எப்போதுமே கிண்டலடிக்கும் ஒருவன்.

'ஆமா பரத்... மிட்ல் க்ளாஸ் ஃபேமிலிலருந்து வர்ற எங்கள மாதிரி பசங்களுக்கு படிச்சி முடிச்சவுடனெயே வேல கிடைக்கணும்னா இந்த மாதிரி கோர்ஸ்தாண்டா சரியாருக்கும்...' என்றான் கணேசன்...

குடும்பத்திற்கு மூத்தவனான அவனுடைய ஊதியத்தை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருப்பது பரத்துக்கு தெரிந்திருந்தது. 'எனக்கு தெரியும்டா... நா சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்... ஆனா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு நிறைய கோர்ஸ் இருக்கேடா... அதுலயும் சாஃப்ட்வேர் எஞ்சினீயரிங் மாதிரியே ஸ்கோப் இருக்குமே... Why can't some of you try that?'

'ட்ரை பண்ணி பாக்கறதுல தப்பில்ல பரத்... ஆனா படிச்சி முடிச்சதுமே கேம்பஸ்ல வேலை கிடைக்கலன்னு வச்சிக்கோ அப்புறம் யாரு வீட்ல திட்டு வாங்கறது? ஒங்கப்பா மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்பா இல்லையேடா எங்கப்பா... இப்பவே தெண்ட சோறுன்னு திட்டறாரு... இதுல படிச்சி முடிச்ச வருசமே வேல கிடைக்கலன்னு வச்சிக்கோ... அவ்வளவுதான் வீட்டுக்குள்ளவே விடமாட்டார்...'

'ஆமாடா... இவன் சொல்றது சரிதான்.. எங்க வீட்லயும் இதே கதைதான்...' என்று அறை எங்கும் குரல்கள் எழும்ப பரத்தின் கண்கள் அவனையுமறியாமல் கலங்கின... எத்தன குடுத்து வச்சவன் நான்... அப்பா என்னைக்காவது ஒரு வார்த்த கடிஞ்சி சொல்லிருப்பாரா? நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் பரத்... You don't need my permission... நீ என்ன செஞ்சா ஒனக்கு நல்லதுன்னு நீயே முடிவு எடுக்க பழகிக்கணும்... அம்மாவும் அப்படித்தான்... எனக்குக் கூட அம்மாவ குடும்பத்த விட்டு பிரிச்சி கல்யாணம் பண்ணிக்கணும்னான்னு ஒரு டயலமா இருந்திச்சி... ஆனா அம்மா ரொம்ப தெளிவா இருந்தா... என்னோட வாழ்க்கை எனக்குத்தாங்கற ஒரு தெளிவு... ஒரு கொழந்த பொறந்தா நம்ம உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும் ஒரு கொழந்தைய பெத்துக்கணும்கற தெளிவு... அத எந்த ஒரு காரணத்துக்கும் அந்த பிரச்சினைய தன் கணவன்கிட்டக் கூட பகிர்ந்துக்கறதில்லங்கற ஒரு தெளிவு... அவ எடுத்த முடிவு எனக்கு தப்புன்னுதான் தோனுது... ஆனா அம்மாவுக்கு? She felt that her decision was absolutely right... So, she stood by that.. பிரவசத்துலயே நம்ம உயிர் போறதுக்கு சான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் அப்படியொரு டிசிஷன் எடுக்கறதுக்கு எவ்வளவு மனதைரியம் வேணும்...? She had that.... கன்னு போட்டதுமே செத்துப்போற வாழ மரம் மாதிரி... நா இல்லன்னாலும் பரத்துக்கு ஒங்களால ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சிக் குடுக்கமுடியும்னு எனக்கு தெரியும் சேகர் அந்த தைரியம்தான் இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு எனக்கு ஒரு ஸ்டிமுலெண்டா இருந்ததுன்னு அம்மா டெத் பெட்ல சொன்னத என்னால மறக்கவே முடியல பரத்... அத எந்த அளவுக்கு நான் செஞ்சிருக்கேன்னு தெரியல.. ஆனால் ஒன்னெ ஒரு செல்ஃப் ரிலையண்ட் பையனா வளத்துருக்கேன்னு நினைக்கேன்... So try to take decisions on your own... I am always available for consultation... not advice...'

'டேய்... பரத்... என்ன திடீர்னு சைலண்டாய்ட்டே....'

நண்பர்களின் குரல் அவனை நினைவுகளிலிருந்து மீட்டு வந்தது... 'சாரி... ஃப்ரெண்ட்ஸ்... அப்பா எப்பவோ சொன்னது.... நீங்க ஒங்கப்பாவப் பத்தி சொன்னதும்.... சரி... மேல பாக்கலாம்...' என்றவன் மீண்டும் தன் கையிலிருந்ததைப் பார்த்தான்... 'நா என்ன சொல்ல வரேன்னா சி.எஸ்.சி மாதிரியே நான் சொன்ன கோர்ஸ்சுலயும் ஜாப் அப்பர்சூனிட்டி இருக்கு... அப்பா சொல்லிருக்கார்... அதனாலத்தான் சொன்னேன்...'

'நீ சொல்றதும் சரிதாண்டா... ஆனா அத ட்ரைப் பண்ணி பாக்கறதுக்கு எங்களுக்கு தைரியம் இல்லேன்னு வச்சிக்கயேன்...' என்றான் கணேசன்...

'சரி அத விடு பரத்.. ஏதோ காலேஜஸ் செலக்ட் பண்ணிருக்கேன்னு சொன்னியே... அந்த லிஸ்ட்ட படியேன்...'

பரத் முந்தைய தினம் வலைத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்த கல்லூரிகளின் பெயர்களை வாசித்தான்..

'நா கடைசியா சொன்னா மூனு காலேஜஸ் எல்லாம் ஒரே க்ரூப்ப சேர்ந்ததுன்னு நினைக்கேன்... காலேஜ் கேம்பஸ்சும் பக்கத்துல, பக்கத்துல இருக்கு... மூனு காலேஜசும் சேர்த்து கவுன்சிலிங்குக்கே ஏறக்குறைய ஐநூறு சீட்டுங்க அலாட் பண்ணிருக்காங்க... போன ரெண்டு வருசத்துல அவங்க காலேஜஸ்ல ஏறக்குறைய எல்லா சீட்டுங்களுமே, அதாவது கவுன்சிலிங்குக்கு சரண்டர் பண்ண சீட்டுங்க, ஃபில்லாயிருக்கு.... நா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேனே அந்த கோர்ஸ் எல்லாமே இந்த காலேஜஸ்ல இருக்கு... அத்தோட ட்ரிப்பிள் ஈ, இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஐ.டில பி.டெக் கோர்ஸ்சல்லாம் கூட இருக்காம்...'

'சரிடா... அவங்க infrastructure எப்படி? லேப் எல்லாம் இருக்குமா... போன வருசம் என் ஃப்ரெண்ட் சேந்த காலேஜ்ல லேப்னு பேருக்குத்தான் இருக்காம்.. மொத்தமா இருபது பி.சி கூட லேப்ல இல்லையாம்.. ஒவ்வொருத்தனும் அத யூஸ் பண்றதுக்கே க்யூவுல மணிக் கணக்கா நிக்கணுமாம்...' என்றான் கணேசன்..

பரத் புன்னகயுடன் அவனைப் பார்த்தான்... 'நீ சொல்றது உண்மைதாண்டா... ஆனா சைட்டுல பாத்த வரைக்கும் இந்த காலேஜ் லேப்ல நூறு பிசி இருக்காம்... இண்டெர்நெட்டுக்குன்னு அவங்க காலேஜ் காம்பஸ்லருந்து வி.எஸ்.என்.எல் வரைக்கும் ரெண்டு எம்பிபிஸ் லைன் எடுத்துருக்காங்களாம்.. மொத்த காம்பசும் சேத்து அம்பது ஏக்கருக்கு மேல இருக்காம்டா... எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. ஆளுக்கு ஒரு காப்பி கூட எடுத்து வச்சிருக்கேன்.. போறப்ப தரேன்... அதனால இந்த காலேஜஸ்ல எதுலயாவது ஒன்னுல பேமெண்ட் சீட் எடுக்கலாம்னு அப்பாக் கிட்ட சொன்னேன்... ஒன் இஷ்டம்னு சொல்லிட்டார்...'

கணேசன் வியப்புடன் தன் நண்பனைப் பார்த்தான். 'பேமெண்ட் சீட்டா? எதுக்குடா... அதான் ஒன் மார்க்குக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்குமே?'

'அதானே...' என்றது நண்பர்கள் குழு கோரசாக...

பரத் இல்லையென்று தலையை அசைத்தான்... 'இல்லடா.... அப்பாக்கிட்ட நா பேமெண்ட் சீட்தான் எடுக்கப் போறேன்னு சொன்னதும் I presumed that... we should not grab free seats...that's for those who are in need..னு ஒரே வார்த்தைல சரின்னு சொல்லிட்டார்....'

அடுத்த ஒருசில நொடிகள் நண்பர்கள் குழு அமைதியாகிப் போனது....

'டேய் பரத்... ஒன்னோட ஃப்ரெண்ட்சுன்னு சொல்லிக்கறதுக்கு எங்களுக்கு ரொம்ப பெருமையாருக்குடா...' என்றான் கணேசன் குரல் தழுதழுக்க....

'ஆமாடா பரத்... நீயும் சரி... ஒங்கப்பாவும் சரி... யூ ஆர் சிம்ப்ளி க்ரேட்..' என்றது நண்பர் குழு ஒருமித்த குரலில்...

தொடரும்...

6.7.07

நாளை நமதே - 13

அண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க் பட்டியலையும் வெவ்வேறு நிலைக்கான கவுன்சிலிங் தேதிகளையும் இணையதளத்தில் பார்த்த சுந்தர் எப்படியிருந்தாலும் தன்னுடைய கவுன்சிலிங் தேதி வரும் சமயத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளிலுள்ள ஃப்ரீ சீட்டுகளில் தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான். கவுன்சிலிங் துவங்கி சுமார் இரண்டு வாரங்கள் கழித்தே அவனுடைய மதிப்பெண்களூக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

போன தடவ ஃபோன் பண்ணப்பவே அப்பா க்ளியரா சொல்லிட்டாங்க, என்னால பணம் கட்டி படிக்க வைக்க முடியாதுன்னு... இப்பவும் அதயேத்தான் சொல்லப் போறாங்க... எண்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருக்கும்னு அப்பாவுக்கு தெரியாமயா இருக்கும்? ஏறக்குறைய ரெண்டு வாரமாகியும் அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி கேக்கணும்னு கூட தோனலையே... வேணும்னா நீயே கூப்டுன்னு இருக்கற அப்பாக்கிட்டா சாரிப்பா எனக்கு பேமெண்ட் சீட்தான் கிடைக்கும் போலருக்குன்னு எப்படி சொல்ல?

அம்மாவும் எப்படியும் நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதில்ல. எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்ததுமே ஏதாச்சும் ஒரு ஆர்ட்ஸ் காலேஜுக்கு அப்ளை செஞ்சிருக்கலாம்...

இந்த அம்மா பண்ற அட்டூழியத்துல எதுலயுமே மனசு போமாட்டேங்குது.... அவங்க வீட்டுக்கு வந்தே ஒருவாரமாகப் போகுது...

'என்னடா அண்ணா சாப்டாம அப்படியே ஒக்காந்துருக்கே... பசி இல்லையா? நா ஒன்னத எடுத்துக்கட்டுமா?'

சுந்தர் வேதனையுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த தன் சகோதரன் சுதாகரைப் பார்த்தான். அவனும் சரியாக சாப்பிட்டு ஒரு வாரமாகிறது... தன்னால் என்ன முடியுமோ அதை சமைத்துப் போடத்தான் செய்தான்... ஆனால் உப்புசப்பில்லாத அந்த சாப்பாட்டை அவனாலேயே சாப்பிடமுடியாதபோது பாவம் சுதாகர் என்ன பண்ணுவான்...

'சாரிடா சுதாகர்... எனக்கு சாப்பிடற மூடே இல்லடா..' என்றவாறு தன் ப்ளேட்டிலிருந்த இரண்டு ரொட்டித் துண்டுகளையும் சுதாகரின் ப்ளேட்டில் வைத்துவிட்டு எழுந்து சென்று ஃப்ரிட்ஜை திறந்து பாத்திரத்திலிருந்த குளிர்ந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி கொண்டு வந்தான்.. 'இதயும் குடிச்சிட்டு நீ போய் ஹோம் ஒர்க் ஏதாச்சும் இருந்தா பண்ணு.. இல்லையா டிவி பாரு... நா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி பாக்கேன்...'

கிருஷ்ணன் துபாய் கிளம்பிச் சென்ற நாள் முதலே அவனை விடவும் நான்கு வயது இளையவனான சுதாகரை அவனால் இயன்றவரை பராமரிக்கத்தான் செய்தான். ப்ரேமா கடந்த சில ஆண்டுகளாகவே தன் மனம் போக்கில் சென்றுக் கொண்டிருந்ததால் கிருஷ்ணனுடைய மேற்பார்வையில் சில்லறை சமையல் வேலைகளை படித்து வைத்திருந்தான் சுந்தர்.

கிருஷ்ணன் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிடும் ப்ரேமா இரவு வெகு நேரம் கழித்து திரும்பவது வழக்கம். அதை தடுக்க முயன்று தோற்றுப்போன கிருஷ்ணனும் அலுவலகம் முடிந்ததும் நேரே வீடு திரும்பும் பழக்கத்தை கைவிட்டுவிட பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் சுந்தர் தனக்கும் சுதாகருக்கும் தேவையானவற்றை சமைத்துக்கொள்ள பழகிக்கொண்டான். இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்கும் ஏன் ப்ரேமாவுக்கும் கூட வசதியாகிப் போனது.

நாளடைவில் காலையுணவைத் தவிர வீட்டில் உணவருந்தும் பழக்கத்தையே கிருஷ்ணனும் ப்ரேமாவும் விட்டுவிட சுந்தரும் சுதாகரும் தங்களுடைய தேவைகளை தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆகவே கிருஷ்ணன் துபாய் புறப்பட்டுச் சென்றதோ அல்லது ப்ரேமா வாரத்தில் நான்கைந்து நாள் இரவு வீட்டிற்கு திரும்பாமல் இருப்பதோ சுந்தரை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் கடைக்குட்டியான சுதாகரை அது வெகுவாகப் பாதித்ததை அவனால் உணர முடிந்தது. குறிப்பாக அவனுடைய படிப்பு. 'இங்க பார் சுதாகர். அப்பாவும் இப்போதைக்கு திரும்பி வரப்போறதில்லை... அம்மாவும் அவங்க போக்கை மாத்திக்கப் போறதில்லை... ஒனக்கு நான், எனக்கு நீ... இதான் நம்ம லைஃப். அத நீ மொதல்ல புரிஞ்சிக்கணும்... அப்பா வரலைன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டுத்தானடா இருக்கார்... அத வச்சி நம்மால எந்த அளவுக்கு வசதியா லைஃப ஸ்பெண்ட் பண்ண முடியுமோ அப்படி ஸ்பெண்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.. கிடைச்சத சாப்ட்டுட்டு படிக்கணும்... ஒனக்கு அதுதான் முக்கியம்...' என்பான் சுதாகர் சோர்வடையும் போதெல்லாம்.

ரிங் போய்க் கொண்டேயிருந்தது..... அம்மா வேணும்னே எடுக்காம இருப்பாளோ என்று நினைத்து இணைப்பைத் துண்டிக்க முனைந்தான்...அந்த நேரத்தில் எதிர்முனையிலிருந்து, 'எதுக்குடா இப்ப போன் பண்றே... அம்மா இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்கவா?' என்று குரல் வந்தது.

சுந்தர் ஒரு நொடி எப்படி பதிலளிப்பதென தெரியாமல் திகைத்து நின்றான்... பிறகு செல்ஃபோனை வரவேற்பறையிலிருந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சுதாகரிடம் நீட்டினான். 'டேய்... அம்மா... பேசறியா?'

சுதாகர் ஆவலுடன் செல்ஃபோனை வாங்கிக்கொண்டான். 'என்னம்மா நீ வீட்டுக்கே வரமாட்டேங்கறியே?' என்றான்...

சுந்தர் அவனருகில் அமர்ந்து டிவி பெட்டியை அணைத்துவிட்டு காத்திருந்தான். சுதாகர் கேட்டால் அம்மா வருவாள் என்று தெரியும். அவள் வீட்டுக்கு வந்தால் வெட்கத்தை விட்டு அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தான்...

'இல்லம்மா சுந்தர் அப்படியெல்லாம் சொல்லமாட்டான்... நீ வாம்மா...' சுந்தருக்கு... சுதாகரைப் பார்க்க பாவமாக இருந்தது.. 'அம்மா என்ன சொல்றாடா?' என்று வாயசைத்தான்... 'இரு... சொல்றேன்.' என்று சைகைக் காட்டிய சுதாகர்,, 'இன்னைக்கி வரியா... தாங்ஸ்மா... நா தூங்காம காத்துக்கிட்டிருப்பேன்..' என்றவாறு இணைப்பைத் துண்டித்து சுந்தரிடம் நீட்டினான்..

'என்னடா.. வராங்களாமா?'

'ஆமாடா...'

'வேற ஏதாச்சும் சொன்னாங்களா?'

'வர்றப்போ நாம சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வராங்களாம்... சமைக்க வேணாம்னு சொன்னாங்க...'

'ரொம்ப முக்கியம்' என்று தனக்குள் முணகியவாறு எழுந்து வீட்டையும் சமையலறையையும் ஒழுங்குப் படுத்த முயன்றான்...

'டேய் அண்ணா...' என்றவாறு அவனைப் பின்தொடர்ந்து வந்தான் சுதாகர், 'நான் வேணும்னா ஒன் எஞ்சினீயரிங் சீட்ட பத்தி அம்மா கிட்ட பேசட்டா?'

'என்ன பேசப் போறே?' என்றான் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவியவாறு... ப்ரேமாவுக்கு எது எப்படியோ வீடு அதிலும் சமையலறை, சுத்தமாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் சாமியாடுவாள் என்பது இருவருக்குமே தெரிந்துதானிருந்தது... ஆனால் சுதாகர் என்ன சொன்னாலும் தன் போக்கிலேயேதான் செல்வான்.. அவன் பின்னாலேயே சென்று அவன் வீசி எறிந்த துணிமணிகளை தேடிப்பிடித்து மடித்து வைப்பதிலேயே சுந்தரின் நேரம் வீணாகிவிடும். ஆனாலும் ஒரு தந்தையின் பாசத்தோடு சுதாகரை கடிந்துக்கொள்ளவே மாட்டான்...

'நீ தான சொன்னே.. ஒனக்கு ஃப்ரீ சீட் கிடைக்கறதுக்கு சான்ஸ் இல்லேன்னு....'

'அதுக்கு? அம்மாட்ட பேமெண்ட் சீட்டுக்கு காசு தாங்கன்னு கேக்கப் போறியா?' என்றவாறு சிரித்தான் சுந்தர்.. 'வந்தவுடனே இப்படி கேளு... வந்ததே தப்புன்னு போயிரப் போறாங்க..'

'ச்சீச்சி.. அப்படியெல்லாம் பண்ண மாட்டங்கடா... நீதான் அம்மாவ தப்பா நினைச்சிருக்கே... நான் கேட்டா நிச்சயமா தருவாங்க..'

சுந்தருக்கும் அந்த யோசனை பிடித்திருக்கவே சரி என்பதுபோல் தலையை அசைத்தான். இருந்தாலும் இந்த அம்மா பணத்துல படிக்கணுமா? என்றும் நினைத்தான்....அத சொல்லிக்காட்டியே அவங்க போக்குக்கு தன்னையும் இழுப்பாங்களே...

'என்னண்ணா.. கேக்க வேணாம்னா கேக்கலை... ஆனா எனக்கென்னவோ கேட்டுத்தான் பாப்பமேன்னு தோனுது..'

பதிலளிக்காமல் தன் சகோதரனைப் பார்த்தான் சுந்தர்... 'சரிடா.. கேளூ... உன் ஆசையைக் கெடுப்பானேன்.... ஆனா எனக்கென்னவோ அம்மா தருவாங்கற ஹோப் இல்லை...என்னோட எண்ட்ரன்ஸ் எக்ஸாம் மார்க் குறையறதுக்கே அவங்கதானடா காரணம்... அவங்க மட்டும் அன்னைக்கி அப்படி வந்து அசிங்கம் பண்ணலன்னா நாம இங்க காலி பண்ணி வந்துருக்கவே வேணாம்... என் ப்ரிப்பரேஷனே அதனாலதான ஸ்பாய்லாயிருச்சி...?'

சுதாகருக்கு தன் சகோதரனைப் பார்க்க பாவமாக இருந்தது. ப்ளஸ் டூவில் 90 சதவிகித மதிப்பெண்கள் வாங்கியவன் எண்ட்ரன்சிலயும் நிச்சயம் அதே பெர்சண்ட் வாங்கியிருப்பான்... எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம்... அதனால அம்மாதான் இதுக்கு வழி சொல்லணும். அதனால அம்மா வர்றதுக்குள்ள ஹோம் ஒர்க்க முடிச்சிட்டு ரெடியா இருக்கணும்... என்று நினைத்தவாறு தன்னுடைய ஸ்டடி மேசையை நோக்கி நகர்ந்தான்....

தொடரும்...