29.9.07

நாளை நமதே - 24

அன்று வொர்க் ஷாப் வகுப்பு இருந்ததால் அதற்கென கல்லூரி நிர்வாகம் வழங்கியிருந்த சீருடையில் செல்ல வேண்டியிருந்தது.

கரு நீல கலரில் சட்டையும் பேண்டும். காலில் கருப்பு நிற ஷூ. என்.சி.சி ஸ்டைலில்! தலையில் கேடட் தொப்பி சகிதம் சீருடையில் ப்ரியா படு ஸ்மார்ட்டாக இருந்ததை வொர்க் ஷாப்பில் குழுமியிருந்த அத்தனன கண்களும் மொய்த்தன.

'ஏய் ப்ரியா யூ லுக் ரியலி க்யூட்.' என்றாள் ஜோதிகா புன்னகையுடன்.

'ஏன் நீயுந்தான்' என்றாள் ப்ரியா.. 'ஆனா என்ன, மூச்சு விட முடியாத மாதிரி டைட்டா இருக்கு. கால்ல வேற ஷூ டன் கணக்குல..'

ப்ரியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவன், 'என்ன காலேஜ்டா மச்சான்... பொண்ணுங்கக் கிட்ட பேசக்கூடாதுன்னு... ச்சை... நச்சுருக்கீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லணும்னு கிடந்து மனசு அடிச்சிக்குது... ஆனா முடியலையே...' என்று தனக்கு அடுத்திருந்த மாணவனிடம் கிசு கிசுத்தான். ' அந்த எச்.ஓ.டி மட்டும் எப்படி சைட் அடிக்கிறான் பார். அவனும் அவன் தலையும்... சதுர மண்டைன்னு பேர் வச்சிரலாமாடா?'

அடுத்திருந்தவன் முறைத்தான். 'டேய் வாய வச்சிக்கினு சும்மாரு... அந்த எச்.ஓ.டி. இந்த பக்கம் பாக்கறான் பார்... கழுகு பார்வைடா அவனுக்கு. அப்புறம் இண்டர்னல்ல கைய வச்சிருவான்.. சொல்லிட்டேன்.'

அவர்களுக்கு அருகில் நின்றிருந்த சுந்தர் தன்னையுமறியாமல் ப்ரியாவை பார்த்தான். ஆனால் அடுத்த கணமே அவளுடைய பார்வை தன்மேல் படிவதைக் கண்டு கண்களை தாழ்த்திக்கொண்டான்.

ப்ரியாவின் உதடுகள் அவளையுமறியாமல் புன்னகையால் விரிந்தன.

'என்ன ப்ரியா... அப்பப்ப அந்த சுந்தர் பக்கம் உன் பார்வை போகுது...' என்று விளையாட்டாக அவளுடைய விலாவில் இடித்தாள் ஜோதிகா... 'ஒரு வாரம் கூட முழுசா ஆவலை...'

ப்ரியா பொய்க் கோபத்துடன் அவளை முறைத்தாள். 'ஏய் என்ன ஒவரா இமாஜின் பண்றே? அதெல்லாம் இல்லை...' என்றவள் தொடர்ந்து, 'ஆனா பார்க்கறதுக்கு ஸ்மார்ட்டா இருக்கான் இல்லே.' என்றாள்.

ஜோதிகா ஓரக்கண்ணால் சுந்தர் இருந்த திசையைப் பார்த்தாள். அவன் லெக்சர் அடித்துக்கொண்டிருந்த எச்.ஓ.டியையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்...

'ஹல்லோ... வைஸ் ரெப்..' என்ற கேலி குரல் அவளுடைய கவனத்தை கலைத்தது. திடுக்கிட்டு திரும்பி எச்.ஓ.டியை பார்த்தாள். 'இவன் அன்னைக்கி முதல் நாள் பேசுனத மனசுல வச்சிக்கிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்கானே.'

'என்ன முறைக்கிறீங்க? நா இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டிருந்தது காதுல விழுந்துச்சா இல்லையா?'

ஜோதிகா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். மாணவிகளில் சிலர் சிரித்தனர்.

'அதான பார்த்தேன். காலேஜுக்கு நீங்கல்லாம் படிக்கவா வரீங்க... டைம் பாஸ் பண்ணத்தானே...'

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு 'சாரி சார்.' என்றாள்.

'இந்த வார்த்தைய மட்டும் மறக்காம சொல்லிருங்க.' என்று வேண்டுமென்றே எரிந்து விழுந்த எச்.ஓ.டி மாணவர்கள் பக்கம் திரும்பினார். 'Look Boys. You can form teams of four each. Boys and Girls should not mix. I will give you five minutes. If you don't form the teams yourselves I will do it. Right?'

அடுத்த சில நிமிடங்களில் மாணவ, மாணவியர் தங்களுக்குள் குழுக்களை பிரித்துக்கொண்டனர்.

'என்ன மனுசண்டா இவன்.. ரெண்டு பொண்ணுங்களை நம்ம க்ரூப்புல சேத்துக்கினா என்னா சோக்கா இருக்கும்.' என்று குரல் எழும்ப

'டேய் நீ இன்னைக்கி அடிப்படப் போறே... வாய பொத்திக்கினு இரு..' என்று பதில் எழுந்தது.

'No talking please...' என்றது எச்.ஓ.டி குரல்.

'இவன் ஒருத்தண்டா, அசரீரி கணக்கா.' என்ற குரல் சற்றே ஓங்கி ஒலிக்க மொத்த குழுவும் கொல்லென்று சிரித்தது.

'யார் மேன் அது? I want to see that face... Come out. Otherwise no workshop today... I will not award any marks to any of you.'

அதிர்ச்சியில் அமைதியாகிப் போனது மாணவ, மாணவியர் குழு. அடுத்த சில நிமிடங்கள் சங்கடமான அமைதி நிலவ அடுத்த பகுதியில் மாணவர் குழு மும்முரமாக தங்களுடைய பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெளிவாக கேட்டது.

'பரத்' என்றார் எச்.ஓ.டி.  உரக்க. 'Could you identify the person who made that comment?'

பரத் தன் அருகில் நின்ற வாசனைப் பார்த்தான். இருவருக்குமே கமெண்ட் அடித்த மாணவனை தெரியும். ஆனாலும் மவுனம் காத்தனர்.

'Ok then... You can go back to your class room. I will report this to the Principal.' என்றவாறு எச்.ஓ.டி. வாசலை நோக்கி நடந்தார்.

'டேய்... போய் ஒத்துக்கடா... இல்லன்னா இந்த செமஸ்டர்ல எல்லாரோட இண்டர்னல் மார்க்லயும் கைய வச்சிருவான்.' என்றவனைப் பார்த்து முறைத்தான் எச்.ஓ.டிக்கு எதிராக கமெண்ட் அடித்தவன்.

ஒட்டுமொத்த மாணவர் குழுவும் அவனை முறைப்பதைப் பார்த்த பரத் எச்.ஓ.டி. வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு தன் சக மாணவர்களைப் பார்த்தான்.  'இங்க பாருங்க. இவர் செஞ்சது தப்புன்னாலும் இவர காட்டிக் குடுத்து நமக்கு கிடைக்கற மார்க் வேணாம்... After all five marks. பிரின்சிப்பால் கேட்டாலும் யாரும் சொல்லக் கூடாது. Let us take that decision. What do you say?'

மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சிலருக்கு பரத் கூறியதில் ஒப்புதல் இல்லையென்றாலும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர்.

'தாங்ஸ்...' என்ற பரத் கமெண்ட் அடித்த மாணவனைப் பார்த்தான். 'ஆனா let this be the last time. என்ன?' என்றான்.

'டேய் நீ என்ன பெரிய ஹீரோவா... வார்னிங் குடுக்கறே?' என்று மனதுக்குள் கருவினாலும், 'ஓக்கெ பிரதர்' என்று பதிலளிக்க மாணவர் குழு தங்களுடைய வகுப்பை நோக்கி நகர்ந்தது.

'இதுக்கா காலையிலருந்து இந்த ட்ரெஸ்சை போட்டுக்கிட்டு அவஸ்தை பட்டோம்.' என்ற மாணவியை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

தொடரும்...

22.9.07

நாளை நமதே 23

'என்னடி சொல்றே? இதென்ன ஸ்கூலா மொபைல புடுங்கிக்கிட்டு பேரண்ட்ச வர சொல்றதுக்கு?'

'ஆமாம்மா' என்றாள் ஜோதிகா அழுகையினூடே 'எனக்கு அந்த காலேஜுக்கு போறதுக்கே புடிக்கலம்மா....'

லதாவுக்கு சிரிப்பு வந்தது. 'ச்சீ... இதுக்கா அழுவறே... நா மன்னிப்பு லெட்டர் எழுதி தரேண்டி... அப்படியும் மொபைல குடுக்க மாட்டேன்னு சொன்னா வர்ற சனிக்கிழமை நானே வந்து ஒங்க பிரின்சிக்கிட்ட பேசறேன்.... அதுக்கெதுக்கு காலேஜுக்கு போமாட்டேங்கறே?'

ஜோதிகா முகத்தைத் துடைத்துக்கொண்டு தன் தாயைப் பார்த்தாள். இவங்கக்கிட்ட காலேஜ்ல நடந்ததா சொல்லணுமா, வேணாமா? ஃபர்ஸ்ட டெர்ம் ஃபீச கட்டிட்டு திடீர்னு இந்த காலேஜ் வேணான்னு சொன்னா அம்மா என்ன சொல்றாங்களோ ஆனா அப்பா நிச்சயம் வயலண்டா ரியாக்ட் பண்ணுவாங்க... வேணாம்... நமக்குள்ளவே வச்சுக்குவம்.... அதான் பரத் நல்லா திருப்பிக் குடுத்தானே....

அன்று காலை வகுப்பு பிரதிநிதி தேர்தலில் அவள் வைஸ் ரெப்பாக தெரிவு செய்யப்பட்டதுமே வகுப்பிலிருந்த ஒரு மாணவன் அடித்த கமெண்ட்டில் நொந்துப்போனாள் ஜோதிகா. ஆனால் வந்தனா உடனே தலையிட்டு அவனை கடிந்துக்கொண்டதும் பரத் உடனே முன்வந்து அவன் சார்பில் மன்னிப்பு கேட்டதும் அவளை ஒருவிதத்தில் சமாதானமடையச் செய்தன.

வந்தனா மேடம் அளித்த படிவங்களை நிரப்பி அவரிடமே சமர்ப்பித்தாள்.

அவளுடைய படிவத்தை மேலோட்டமாக படித்த வந்தனா அவளை நோக்கி புன்னகைத்தாள். 'You have a beautiful handwriting... I think you would be good in studies too.'

ஜோதிகா வெட்கத்துடன், 'தாங்க்ஸ் மேம்..' என்றாள்.

மொத்த வகுப்பும் ஒருவித பொறாமையுடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் மெள்ள தன் இருக்கைக்கு திரும்பினாள்.

'One Second Jothika...'

ஜோதிகா திரும்பிப் பார்த்தாள். 'Yes Mam?'

வந்தனா அவளுடைய படிவத்தையும் சற்று முன் பரத் சமர்ப்பித்திருந்த படிவத்தையும் எடுத்துக்கொண்டு, 'Both of you come with me. I will introduce you to our HOD.' என்றவாறு வாசலை நோக்கி நடக்க பரத்தும் அவரைப் பின் தொடர்ந்தான். சற்றே தயங்கி நின்ற ஜோதிகா அவர்களை தொடர்ந்து அதே தளத்தின் கோடியில் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.

எச் ஓ டி யின் அறையில் வேறு எவரும் இல்லை என்பதை கண்டுக்கொண்ட வந்தனா நுழைய பரத்தும் ஜோதிகாவும் தயங்கி வெளியில் நின்றனர்.

பரத் தயக்கத்துடன் ஜோதிகாவைப் பார்த்தான். 'ரொம்ப நெர்வசா இருக்கீங்க போலருக்கு?'

'ஆமாங்க.... வீட்ல என்ன சொல்வாங்களோன்னுதான் பயமாருக்கு..'

பரத் புன்னகைத்தான். 'வீட்லயா? ஏன்? அப்பா டெரறா?'

ஜோதிகா மறுப்பதற்குள் வந்தனா எச்.ஓ.டியின் காபின் வாசலில் நின்று அழைப்பதைப் பார்த்தாள். பரத்தை தொடர்ந்து அவளும் காபினுக்குள் நுழைய அறையின் நடுநாயகமாக அமர்ந்திருந்த எச்.ஓ.டி. தன்னைப் பார்த்த பார்வையிலேயே நொந்துப் போனாள். 'இந்தாளுக்கு நம்மள புடிக்கலை.'

'I am Bharath' என்றவாறு பரத் நீட்டிய கையை பொருட்படுத்தாமல் எச்.ஓ.டி. வந்தனாவைப் பார்த்தார்.

'இந்த பொண்ணு கோட்டாவுல வந்தது போலருக்கே... வைஸ் ரெப்புக்கு ஒங்களுக்கு வேற ஆள் கெடைக்கலையா மேடம்?'

எச்.ஓ.டியின் குரலில் இருந்த நையாண்டி அவளை மட்டுமல்லாமல் வந்தனாவையே துணுக்குற வைத்ததை ஜோதிகாவால் உணர முடிந்தது.

அதுவரை பார்த்திராத பரத்தின் மறு பக்கத்தையும் அவளால் பார்க்க முடிந்தது.

'என்ன சார் இண்டீசண்டா பேசறீங்க? கோட்டாவுல வந்தா? What do you mean by that?'

எச்.ஓ.டி அலட்சியத்துடன் அவனைப் பார்த்தார். 'என்ன தம்பி, நாக்கு நீளுது... ஜாக்கிரதை, ஒட்ட அறுத்துருவேன்... ஒங்கப்பா என்ன பண்றார்? கலெக்டரா? இந்த துள்ளு துள்றீங்க?'

பரத்தின் கோபம் அவனுடைய அடுத்த பதிலில் தெரிந்தது. 'அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம் சார்... இருந்தாலும் சொல்றேன். அவர் பேர் ராஜசேகர்.... நம்ம யூனிவர்சிட்டி வைஸ் சான்சலரோட க்ளாஸ்மேட்... போறுமா?'

எச்.ஓ.டியின் பார்வையில் கலக்கம் தெரிந்தது. 'எந்த ராஜசேகர்? CDMல ஹெட்டா இருக்காரே அவரா?'

'வைஸ் ஹெட்...'

எச்.ஓ.டி. எழுந்து வந்து பரத்தை அணைத்துக்கொண்டார். 'சாரி தம்பி... ஒங்கப்பாவ பத்தி கேள்வி பட்டுருக்கேன்... ரொம்ப நல்ல மனுஷன்... அறிவுஜீவி... நீங்க போங்க... ஆல் தி பெஸ்ட்'

பரத் அவருடைய பிடியிலிருந்து விலகி வாசலை நோக்கி நடந்தான் கோபம் தணியாமல்... ஜோதிகா தயக்கத்துடன் அவனைப் பிந்தொடர.. 'ஏய் நில்லு...' என்றார் எச்.ஓ.டி.

பரத் வாசலில் நின்று திரும்பி பார்த்தான்.

'நீங்க போங்க தம்பி....'

பரத் வேறு வழியின்றி வந்தனாவையும் ஜோதிகாவையும் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினான்...

'சார் என்ன இருந்தாலும் நீங்க...' என்று துவக்கிய வந்தனாவை இடைமறித்த எச்.ஓ.டி. ஜோதிகாவை பார்த்தார். 'ஏய்... நீ எந்த கோட்டாவுல வந்துருக்கே... எஸ்.டியா எம்.பி.சியா?'

ஜோதிகாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. என்னை ஆணவம் இவனுக்கு? ராஸ்க்கல்... அப்பா சொன்னது எவ்வளவு சரி? நாம ஒப்பன் கேட்டகரியில ஃபீஸ் கட்டி வந்துமே இவன் இப்படி கேக்கறான்னா நாம எம்பிசி கோட்டாவுல வந்திருந்தா என்னாவறது? இருந்தாலும் நாம இன்சல்ட்டாய்ட்டோம்னு காட்டிக்கக் கூடாது. பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். எச்.ஓ.டியை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தாள்.
'ரெண்டுலயும் இல்லை... ஓப்பன் கேட்டகரி..' என்றாள்.

வந்தனாவுக்கு சிரிப்பு வந்தது. நல்லா குடுத்தேம்மா என்று நினைத்துக்கொண்டாள். 'பொண்ணு நாம நெனச்சா மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை... வேணும் இந்தாளுக்கு.. கருப்பு தோலாருந்தாவே ஒரு எளக்காரம்.'

எச்.ஓ.டி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. இருப்பினும் தன்னை நோக்கிய அவருடைய பார்வையில் சந்தேகம் தெரிந்ததை பார்த்தாள். தன்னுடைய பேட்ஜில் இருந்த அட்மிஷன் எண்ணை சொன்னாள்.

'எனக்கெதுக்கு ஒன் நம்பர்?'

'என் அப்ளிகேஷன ஒங்களுக்கு வெரிஃபை பண்ணணும் தோனிச்சின்னா... அதுக்குத்தான்.'

எரித்துவிடுவதுபோல் பார்த்த எச்.ஓ.டியின் பார்வையில் தயங்காமல் சந்தித்தாள் ஜோதிகா.

'ஏய் என்ன நக்கலா? தொலைச்சிருவேன்... ஒன் க்ளாசுக்கு போ...'

எச்.ஓ.டியின் குரலில் இருந்த மிரட்டல் ஜோதிகா உண்மையிலேயே பாதித்தது. விட்டால் போதும் என்று தலையை குனிந்தவாறு வெளியேறியவள் கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ என்று நினைத்தாள்...

'என்ன ஜோதிகா வேற எதுவும் இன்சல்ட்டிங்கா சொன்னாரா?'

பரத்தின் மிருதுவான குரல் அவளை நிறுத்தியது. திடுக்கிட்டு நிமிர்ந்தாள். சட்டென்று பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இல்லையென்று தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் வகுப்பறைக்கு விரைந்தாள்...

******

'இப்ப புரியுதா அப்பா எதுக்கு நம்ம ஜாதி பேர சர்டிப்பிகேட்ல போடலைன்னு?'

லதா எரிச்சலுடன் தன் கணவரைப் பார்த்தார். 'என்னங்க நீங்க, இப்ப அதுவா முக்கியம்? என்ன தைரியம் இருந்தா அந்த எச்.ஓ.டி இவள இப்படி கேவலமா ட்ரீட் பண்ணியிருப்பான். அவனெ சும்மா விடக்கூடாதுங்க.'

ராம்குமார் சிரித்தார். 'பின்னே? போயி சண்டை போடலாங்கறியா? போடி பைத்தியக்காரி.'

'என்ன சொல்ல வரீங்க? இப்படியே விட்டுரலாம்னா?' என்றாள் லதா கோபத்துடன்.

'அப்பா சொல்றது சரிதாம்மா..' என்றாள் ஜோதிகா முகத்தை துடைத்தவாறு... 'நீங்களோ அப்பாவோ வந்து கேக்கறதுனால பிரச்சினை பெரிசாத்தான் ஆவுமே ஒழிய குறையாது... அந்தாள பாத்தாலே ஒரு வில்லன் மாதிரி இருக்கான்... ஏதோ தைரியத்துல அந்தாள் மொகத்த பாத்து பேசிட்டு வந்துட்டேன்... அதான் பயமாருக்கு...'

லதா தன் கணவனைப் பார்த்தாள். 'பாருங்க, மொதல் நாளே எப்படி பயப்படறான்னு.. பேசாம வேற காலேஜ்ல சேத்துருவோம்..சுமாரான காலேஜாருந்தாக் கூட பரவால்லை.'

ராம்குமார் மீண்டும் சிரித்தார். 'ஏய் லதா.. ஒவரா ரியாக்ட் பண்ணாதே... இந்த மாதிரி நிறைய சிக்கல்லாம் வரும்... ஒவ்வொன்னுக்கும் வேற காலேஜ் பாக்க முடியுமா? பேசாம அவளெ அவ போக்குல விடு... அவளே மேனேஜ் பண்ணிக்குவா...மொபைலுக்கு மாத்திரம் ஒரு லெட்டர் எழுதிக் குடு...' என்றவர் தன் மகளை நெருங்கி அவளுடைய தலையை வருடிக்கொடுத்தார். 'இதெல்லாம் சகஜம் ஜோதி.... நாளைக்கி அந்தாள பாத்தா ஒன்னும் நடக்காத மாதிரி குட்மார்னிங் சொல்லிரு... மனசுல வச்சிக்கிட்டு டென்ஷனாகாத... எல்லாம் போகப் போக சரியாயிரும்...என்ன சொல்றே?'

'யெஸ்ப்பா...' என்றாள் ஜோதிகா மெதுவாக...

'சரி... அப்படியே கொஞ்சம் படுத்துக்கிட்டுரு...' என்ற ராம்குமார் தன் மனைவியைப் பார்த்தார். 'அவளெ டிஸ்டர்ப் பண்ணாம போய் கிச்சன் வேலைய பார்...'

ஆனாலும் லதா வெளியேறாமல் தன் அருகில் அமர்ந்திருந்த மகளை சாய்த்து தன் மடியில் படுக்க வைத்து தடவிக்கொடுத்தாள்... 'நீயே மானேஜ் பண்ணிக்குவியா ஜோதி?' என்றாள் மிருதுவாக... 'இல்ல அம்மா வந்து பேசட்டுமா?'

'வேணாம்மா... நானே பாத்துக்கறேன்....' என்றவாறு ஜோதிகா கண்களை மூடினாள்... ஒரத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவாறு...

தொடரும்...

21.9.07

நாளை நமதே 22

ராம்குமார் குடியிருப்புக்குள் நுழைந்ததும் அமைதியாக இருந்த டி.வி. பெட்டியை பார்த்தார்.

'ஜோதி இன்னும் வரலையா?' என்றார்.

'இல்லைங்க.' சமையலறையிலிருந்து வந்தது லதாவின் குரல்.

'எட்டு மணிக்கு மேல ஆவுதே?'

லதா படபடப்புடன் வெளியில் வந்தார். 'ஏன் சொல்ல மாட்டீங்க? அவ அன்னைக்கி காலேஜ் பஸ்சுக்கு பணம் கட்டிருங்கப்பான்னு கெஞ்சுனப்போ என்ன சொன்னீங்க?'

கடுகடுவென்றிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்ததுமே, 'சரி, சரி.... கத்தாதே... எதுக்கு வீணா மாசம் ஆயிரம் ரூபாவ கட்டணும்னு பார்த்தேன்.'

'என்ன சொல்றீங்க நீங்க? இங்கருந்து ஒரு பஸ் ஸ்டேஷன் வரைக்கும். அங்கருந்து செண்ட்ரல் வரை ஒரு ட்ரெய்ன், அப்புறம் பார்க் வரைக்கும் போயி வேறொரு ட்ரெய்ன். மறுபடியும் ஸ்டேஷன்லருந்து பஸ்... டெய்லி எப்படியும் அம்பதுக்கு மேல ஆவும். இதுல ஏதாவது ஒரு பஸ்ச மிஸ் பண்ணா போறும். காலேஜுக்கு லீவ் போட வேண்டியதுதான். டெய்லி அம்பதுன்னாலும் மாசம் ஆயிரம் ஆயிரும். நீங்களும் ஒங்க கணக்கும்...' லதாவின் குரலில் கோபத்தை விட சலிப்பே மேலோங்கியிருந்தது. இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு நாம அனுபவிக்கறது போறாதுன்னு இப்ப பிள்ளைங்களும்... ச்சே...

'சரி... நாளைக்கே காலேஜ் பஸ்சுக்கு கட்டிறலாம்.' என்று இறங்கி வந்த ராம்குமார் தன் மனைவியை பார்த்தார். 'இவ கிட்டதான் மொபைல் இருக்குல்லே... லேட்டாயிருச்சின்னு போன் பண்ணலாம் இல்ல?'

'அதான் எனக்கும் புரியலீங்க. காலேஜ் போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணுடின்னு சொல்லி விட்டேன். அதுகூட பண்ணல...' என்றார் லதா கவலையுடன்.

'நான் வேணும்னா ஸ்டேஷன் வரைக்கும் போய் பார்க்கவா?'

'வேணாங்க... அப்புறம் ஒங்கள வேற நா தேடிக்கிட்டுருக்கணும்...ராஜ் இப்ப வந்துருவான். அவனெ வேணும்னா போய் பார்த்துட்டு வாடான்னு அனுப்புவம்.'

வாசலில் மணி அடித்தது.

'ஜோதிதானோ என்னவோ... கதவ திறங்க.'

ராம் கதவை திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்த ஜோதிகா காலிலிருந்து காலனிகளை மட்டும் உதறியெறிந்துவிட்டு தன்னுடைய அறைக்குள் ஓடிப்போய் கட்டிலில் விழுந்து அழுவதைப் பார்த்த ராம்குமார் திகைப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். போய் என்னன்னு கேளு... என்பதுபோல் கண்சாடை செய்தார்.

*********

'என்ன நடந்தது பரத். நிதானமா பதட்டப்படாம சொல்லு.' என்றார் ராஜசேகர்.

பரத் அன்று காலையில் கல்லூரியில் நடந்தவற்றை விவரித்தான்.

***

அன்று காலை வரவேற்பு கூட்டத்தின் இறுதியில் 'காலேஜுக்கு மோட்டர் சைக்கிள்ல வந்தவங்கள தவிர மத்த ஸ்டூடன்ஸ் அவங்கவங்க பேட்ஜில போட்டுருக்கற ரூமுக்கு போலாம்.' என்ற அறிவுப்பு விடுக்கப்பட்டதும் பரத் திரும்பி தன் நண்பன் வாசனைப் பார்த்தான்.

'எதுக்கு வாசன் எங்கள நிக்க சொல்றாங்க?'

'ஒருவேளை ஒங்க வண்டி நம்பர குறிச்சிக்கிறதுக்காக இருக்குமோ என்னவோ? நீ குடுத்துட்டு வா.. நா க்ளாசுக்கு போறேன்.'

ஹாலிலிருந்த மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு செல்ல சுமார் ஐம்பது மாணவ, மாணவியர் மேடையில் நின்றிருந்தவரைப் பார்த்தனர். அவர் மேடையிலிருந்து இறங்கி வந்து, 'எல்லாரும் பக்கத்துல வாங்க.' என்றார் அதிகாரத்துடன்.

அடுத்த சில நொடிகளில் ஹாலில் இருந்த மாணவ, மாணவியர்கள் அவரை நெருங்கினர்.

'ஒங்க வண்டி சாவிய அந்த பெட்டியில போட்டுட்டு க்ளாசுக்கு போங்க.' என்றவாறு அவர் அருகிலிருந்த மேசையிலிருந்த ஒரு பெட்டியைக் காட்ட குழுமியிருந்த மாணவ கும்பல் திகைப்புடன் ஒவ்வொருவரையும் பார்த்தனர்.

'எதுக்கு?' என்ற குரல் வந்த திசையை நோக்கி, 'யார் மேன் அது எதிர் கேள்வி கேக்கறது?' என்று அறிவிப்பு விடுத்தவர் கோபத்துடன் திரும்ப மாணவர் கும்பல் அச்சத்துடன் அவரையே பார்த்தது. 'அவங்கவங்க வண்டி நம்பர ஒரு பேப்பர்ல எழுதி சாவியோட சேர்த்து கட்டிட்டு போட்டுட்டு க்ளாசுக்கு போயிரணும். நாளைக்கி ஒங்க பேரண்ட்ஸ்கிட்டருந்து இனிமே காலேஜுக்கு எங்க பசங்க வண்டியில வரமாட்டாங்கன்னு ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வந்து பிரின்ஸ்பால் கிட்ட குடுத்துட்டு ஒங்க வண்டிய எடுத்துக்கிட்டு போலாம்.'

என்னது பேரண்ட்ஸ் கிட்டருந்து லெட்டரா, எதுக்கு? என்ன சொல்றாங்க? என்று அருகில் இருந்து கிசுகிசுத்த மாணவனை பார்த்தான் பரத். பேசாம இருங்க என்பதுபோல் சைகை காட்டிவிட்டு தன்னுடைய வாகனத்தின் எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதி அதை சாவி வளையத்துடன் இணைத்து மேசை மீதிருந்த பெட்டியில் இட்டுவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான்.

அவனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிற மாணவர்களும் செய்துவிட்டு வெளியேற பரத்தை நோக்கி ஓடி வந்தான் ஒரு மாணவன். 'என்ன பிரதர் என்ன ஏதுன்னு கேக்கலாம்னா நீங்க முந்திக்கிட்டு சாவிய போட்டுட்டீங்க, இதென்ன காலேஜா ஸ்கூலா?'

பரத் திரும்பாமலே பதிலளித்தான். 'நீங்கதானே எதுக்குன்னு கேட்டீங்க? அவர் சத்தம் போட்டதும் சைலண்டாய்ட்டீங்க. சரிதானே?'

'ஆமாம் பிரதர். அவனெ பார்த்தாலே ரவுடியாட்டம் இருக்கான். மொதல் நாளே நாம எதையாவது பேசிட்டு... அப்புறம் வில்லங்கமாகி...'

பரத் புன்னகையுடன் அவனை திரும்பி பார்த்தான். 'அதான்... அதுக்குத்தான் நானும் சாவிய போட்டுட்டு வெளியே வந்தேன்.... When you realise that there is no use in objecting..... வாதம் பண்ணி பலன் இல்லேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சைலண்டா இருந்துரணும்...'

'ஒங்க வீட்ல பிரச்சினை ஒன்னும் வராதா... ஒங்க வீட்டுக்கு தெரிஞ்சிதான் வண்டியில வந்தீங்களா?'

பரத் வியப்புடன் தன் அருகில் நின்றவனைப் பார்த்தான். 'ஏன்... நீங்க வீட்டுக்கு தெரியாம வண்டியில வந்தீங்களா?'

'வேற வழி? எங்கப்பா அட்மிஷன் அன்றைக்கே காலேஜ் பஸ்சுலதான் போணும், வரணும்னு ஃபீசோட சேர்த்து பஸ்சுக்கும் கட்டிட்டார். நாந்தான் ஃபர்ஸ்ட் டேதானேன்னு அவர் குளிச்சிக்கிட்டிருக்கறப்ப சாவிய எடுத்துக்கிட்டு வந்துட்டேன்... இப்ப வண்டியில்லாம எப்படி போறதுன்னுதான் யோசனையா இருக்கு...'

பரத் அமைதியாகிப் போனான்.... டாடியும் காலையில வீட்லருந்து கெளம்பறப்பவே சொன்னாங்களே... வண்டி வேணுமான்னு... How am I going to explain to him.....

****

'இவ்வளவுதானே பரத்? ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டா போறது... இதுக்கா இவ்வளவு டென்ஷனாருக்கே....' என்றவாறு தன் மகனைப் பார்த்தார் ராஜசேகர். 'If I am not mistaken... there is something else? Am I correct பரத்?'

பரத் தலையை அசைத்தான். 'Yes Dad...'

thodarum..

14.9.07

நாளை நமதே - 21

ப்ரியா தன்னுடைய பேட்ஜில் இருந்த அறை எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நுழைந்தபோது முதல் வரிசையைத் தவிர ஏறக்குறைய வகுப்பிலிருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன.

முதல் வரிசையை விட்டால் அறையின் இறுதி வரிசையில்தான் இடம் இருந்தது... அதுவும் இரு மாணவர்களுக்கு இடையில்...

அறைக்குள் இருந்த மாணவ, மாணவியருடைய கண்கள் அனைத்தும் தன் மீது படிந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.

'டேய்... சூப்பராருக்கால்லே...' என்று கிசுகிசுத்தவனை பார்த்து முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான் சுந்தர். இதிலெல்லாம் கவனத்தை சிதறவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தான். தன்னுடைய ப்ரையாரிட்டி இந்த நாலு வருசத்தையும் எப்படியாவது சக்சஸ்ஃபுல்லா முடிச்சி ஒரு வேலைய வாங்கிரணும்... அதுவரைக்கும் வேற எதுலயும் கவனத்த சிதறவிடக்கூடாது...

'என்னடா இவன்.. .சுத்த கண்ட்றியாருப்பான் போலருக்கு.... ஒரு ஃபிகர பார்த்துட்டு ரசிக்க தெரியாத சுத்த லூசாருக்கான்....' என்றான் சற்று முன் கமெண்ட் அடித்தவன். பிறகு எழுந்து, 'ஹை.... இங்க வாங்க.. இங்க சீட் இருக்கு...' என்றவாறு ப்ரியாவைப் பார்த்து கை அசைக்க அவளோ அவனைப் பொருட்படுத்தாமல் அவனுக்கருகில் முகம் கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்த சுந்தரை ஒருமுறை பார்த்துவிட்டு முன் வரிசையில் காலியாயிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

'மொத நாளே பல்பா... மவனே வேணும் ஒனக்கு..' என்று அறையிலிருந்து ஒரு அனாமதேய குரல் எழும்ப ஒட்டுமொத்த வகுப்பும் சிரித்தது வாசலில் அப்போதுதான் வந்து நின்ற ஆசிரியையை கவனியாமல்.

'வெல்கம் ஸ்டூடன்ஸ்...' என்று உரக்க கூறியவாறு அவர் உள்ளே நுழைய சட்டென்று அமைதியாகிப் போனது மாணவ, மாணவியர் குழு..

வகுப்பில் இருந்த சிறிய மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த மேசையின் மீது கையோடு கொண்டு வந்திருந்த புத்தகங்களை வைத்த ஆசிரியை இருக்கையில் அமராமல் மேசையின் விளிம்பில் அமர்ந்தவாறு வகுப்பறையை ஒரு நோட்டம் விட்டார்.

'I am Vandana... I will be you class lecturer for the first year...'

'மார்னிங் Mam...' என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் எழும்பின..

இன்னைக்கி முதல் நாள்ங்கறதால நம்ம காலேஜ் கஸ்டம் (custom) படி இன்னைக்கி நம்ம க்ளாஸ் ஸ்டூண்ட் ரெப் Rep ரெண்டு பேர எலக்ட் பண்ணிருவோம்... ஒரு ரெப்பும் ஒரு வைஸ் ரெப்பும்.... வைஸ் ரெப் லேடீ ஸ்டூடண்டாருக்கணும்கறது நம்ம காலேஜ் கஸ்டம்...'

'அதென்ன மேடம் ஒன்லி வைஸ் ரெப் போஸ்ட்தான் எங்களுக்கு?'

இப்படியொரு கேள்வி எழும் என்பதை எதிர்பார்த்தோ என்னவோ கேள்விக்கு சொந்தமான மாணவியை உடனே கண்டுக்கொண்டு அந்த மாணவியை பார்த்து புன்னகைத்தார் வந்தனா. 'இந்த ப்ராக்டிஸ்தாம்மா இதுவரைக்கும் இங்க... நீங்க மாத்தணும்னு நினைச்சா கரஸ்பாண்டண்டதான் போய் பாக்கணும்... பாக்கறீங்களா? How many are there to support her demand?'

சொல்லி வைத்தாற்போல் அனைத்து மாணவியரும் தலையைக் குனிந்துக்கொள்ள மாணவர்கள் சிரித்தனர்.

'So, that's settled.... நான் ஆஃபீஸ் ரூம் வரைக்கும் போய்ட்டு ஆஃபனவர்ல வருவேன்... அதுக்குள்ள யாரெல்லாம் இந்த எலக்ஷன்ல நிக்கறதுன்னு டிசைட் பண்ணிருங்க.. யூனானிமசா எலக்ட் பண்ணா நல்லாருக்கும்... இதுவரைக்கும் இங்க அப்படித்தான்...' என்றவர், 'Please remember one thing... this is not a college election.... We are only going to select our own class leader... காலேஜ் ஸ்டூண்ட் லீடர் எலக்ஷன் கூட மத்த காலேஜஸ்ல நடக்கறா மாதிரி இங்க நடக்காது.... Don't confuse yourself with what you see in the movies or hear from other colleges... இங்கல்லாம் அதுமாதிரி நடக்காது.... ஞாபகத்துல வச்சிக்குங்க... And one more thing... Don't create too much of a nosie....அடுத்த ரூம்ல செக்கண்ட் இயர் ஸ்டூடன்ஸ்ங்கறதால அங்க சீரியசா லெக்சர் போய்க்கிட்டிருக்கும்... So keep your voices down... I'll be back in few minutes...' எச்சரித்துவிட்டு வந்தனா வெளியேற வகுப்பிலிருந்த அனைவரும் ஒருசில நிமிடங்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்துக்கொண்டனர்.

பிறகு மாணவர், மாணவியர் இருவரும் தனித்தனி குழுக்களாக பிரிந்து தங்களை பிறருக்கு அறிமுகப் படுத்திக்கொள்ளும் படலம் துவங்கியது. கடைசியாக வந்து இதில் பட்டும் படாமல் அமர்ந்திருந்த ப்ரியாவைப் பார்த்த சில மாணவிகள். 'என்னடீ இவ ரொம்பத்தான் அல்ட்டிக்கறா?' என்று கிசுகிசுக்க ஜோதிகா எழுந்து சென்று ப்ரியாவின் அருகில் அமர்ந்தாள்.

'ஹை... ஐ ஆம் ஜோதிகா... ஜோதின்னு ஷார்ட்டா..'

ப்ரியா புன்னகையுடன் அவளைப் பார்த்தாள். 'ஐ ஆம் ப்ரியா.'

'எதுக்கு இப்படி பட்டும்படாதமாதிரி ஒக்காந்துருக்கே... எழுந்து வா... டிஸ்கஸ் பண்ணி யார் வைஸ் ரெப்பா இருக்கறதுன்னு டிசைட் பண்லாம்.'

'சாரிங்க.... நா கொஞ்சம் ஆஃப் மூட்ல இருந்துட்டேன்... தோ வர்றேன்.'

'இந்த 'ங்க' எல்லாம் வேணாம்... நீ ப்ரியா, நா ஜோதி... ஓக்கேவா?'

ப்ரியா புன்னகையுடன் எழுந்து நின்றாள். 'ஓக்கே....'

அடுத்த சில நிமிடங்கள் இரு குழுக்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டன.

பத்து, பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தனா திரும்பி வந்ததும், 'என்ன பேர் ரெடியா? கண்டெஸ்ட் இருக்கா, இல்லையா அத முதல்ல சொல்லுங்க.' என்றார்.

'எங்கள்ல இல்ல மேம்...' என்றான் மாணவர்களுள் ஒருவன்.

'குட்.. யார நாமிநேட் பண்றீங்க?'

'தோ இவர்தான்..' என்றனர் மாணவர்கள் கோரசாக. பரத் தயக்கத்துடன் எழுந்து நின்றான். 'I am Bharath Mam...'

ஒரு ஆண் மாடலைப் போன்று இருந்த பரத்தை அனைத்து மாணவியரும் பார்த்தனர்.

'பெரிய எடம் போலருக்கு? இவன் எப்படி இங்க வந்து சேர்ந்தான்.' என்றாள் ஒருத்தி...

'யாருக்கு தெரியும்... இவனே இந்த காலேஜூக்கு ஓனர் புள்ளையோ என்னவோ...' என்றாள் இன்னொருத்தி.

'ஓக்கே... என்ன கேர்ள்ஸ்... ஒங்க சைட்லருந்து யாரை நாமிநேட் பண்றீங்க?' என்றவாறு மாணவியரை நோக்கி வந்தனாவின் பார்வை திரும்பியது.

'சாரி மேம்... No one has offered to stand... So....'

வந்தனா, 'Don't worry... There is nothing to feel sorry about.... இது எல்லா வருசமும் நடக்கறதுதான்.... வாய்ப்பு தரலேன்னா ஏன் தரலேன்னு கேப்போம்.. குடுத்தா யாரும் ஏத்துக்க முன் வரமாட்டோம்.... சரி அது இருக்கட்டும்... எதுக்கு ஒன்லி வைஸ் ரெப்பு மட்டும் எங்களுக்குன்னு கேட்ட ஆளே நிக்க வேண்டியதுதானே...?'

'இல்ல மேம்... சாரி மேம்...' என்ற குரல் தயக்கத்துடன் வர மாணவர்கள் சிரித்தனர்.

வந்தனா மாணவர்கள் திசையில் திரும்பி கையை உயர்த்தினார். 'It is not fair to laugh at your colleagues.. வரப்போற நாலு வருசமும் சேர்ந்து படிக்கப் போறவங்க நீங்க எல்லாம். இந்த காலேஜ் கேம்பஸ்சுக்குள்ள எப்படி நடந்துக்கணும்னு மேனேஜ்மெண்ட் நிறைய கண்டிஷன்ஸ் போட்டுருக்காங்க... அத நீங்களோ இல்ல இங்கருக்கற டீச்சிங் ஸ்டாஃபோ ஏத்துக்கறமா இல்லையாங்கற கேள்விக்கே இங்க இடம் இல்லை... இந்த காலேஜ பொருத்தவரைக்கும் இது ஒரு க்ளோரிஃபைட் ஸ்கூல் அவ்வளவுதான்... சொல்லப் போனா ஒங்க ஸ்கூல் லைஃப்ல நீங்க அனுபவிச்ச ஃப்ரீடம் கூட இங்க இருக்காது....எங்க காலேஜ் மோட்டோவ படிச்சால தெரிஞ்சிருக்கும்... This is a place for study... No more, no less... காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டுமில்லாம காலேஜ் பஸ்ல ட்ராவல் பண்றப்பவும் எந்த ஓரு Male ஸ்டூடண்டும் ஒரு Female ஸ்டூடண்டோட அனாவசியமா பேசவோ அரட்டையடிக்கவோ கூடாது... This is the first condition. இத மீறுறவங்களுக்கு முதல்ல மானிடரி பனிஷ்மெண்ட்... ரூ.100லருந்து ரூ.500 வரைக்கும் ஃபைன்... அத தீர்மானிக்கறதுக்கு ஒரு கமிட்டி இருக்கு... அதுக்கப்புறமும் மாட்டிக்கிட்டா ஒரு நாள் சஸ்பென்ஷன்... அத்தோட ஒங்க பேரண்ட்சையும் கூட்டிக்கிட்டு வந்து இனி இப்படி நடக்காதுன்னு அண்டர்டேக்கிங் குடுக்க வேண்டியிருக்கும்.'

சற்று நிருத்திவிட்டு நிசப்தமாகிப் போன வகுப்பறையைப் பார்த்து புன்னகைத்தார் வந்தனா. 'என்ன ஷாக்காய்ட்டீங்க போலருக்கு?'

'That's an understatement Mam' என்றாள் ஜோதிகா தன்னையுமறியாமல்.

மொத்த வகுப்பறையும் அவளை நோக்கி திரும்பியது.

வந்தனா புன்னகையுடன் அவளைப் பார்த்தார். 'Yes.. I agree...' பிறகு 'I think you are the right person to be our vice rep. What do you say?'

ஜோதிகா திடுக்கிட்டு, 'என்ன மேடம், நானா?' என்றாள்.

'Yes you are ... What do you say girls?' என்றார் வந்தனா மற்ற மாணவிகளை பார்த்து.

யாரும் உடனே பதிலளிக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ப்ரியா உடனே எழுந்து, 'Yes Mam... we nominate her as the vice rep.' என்றாள்.

'ஐயே இதுவா... கருப்பா...' என்று அடிக்குரலில் கூறிய மாணவனுடைய குரல் நிசப்தமான அறை முழுவதும் கேட்க வந்தனாவின் முகம் கடுப்பானது.

'Whoever it is... let this be the last time....' என்றார் உரக்க.

பரத் அமைதியுடன் எழுந்து நின்றான். 'On his behalf I sincerely appologise Mam.... This will never happen again. I think she should be the vice rep.'

'That's good... I appreciate that Bharath...' என்ற வந்தனா, 'So Bharath will be the class rep and Jothika will be the vice rep for one year from today....' மேசை மீது கிடந்த சில படிவங்களை எடுத்து பரத்திடம் நீட்டினார். 'Fill up this form. One for you and the other for Jothika. You should also obtain signatures from any two in the class. One to propose you and the other to second the proposal. Similarly for Jothika too.'

பரத் படிவங்களுடன் ஜோதிகாவை நெருங்கி, 'ஆல் தி பெஸ்ட் ஜோதிகா.' என்றவாறு படிவத்தை அவளிடம் நீட்ட அவள் தயக்கத்துடன் வந்தனாவைப் பார்த்தாள்.

'Go ahead Jothika...' என்றார் வந்தனா.

வேறு வழியில்லாமல் படிவத்தைப் பெற்றுக்கொண்ட ஜோதிகா அமர்ந்து அதை நிரப்ப ஆரம்பித்தாள்....

தொடரும்..