19.10.07

நாளை நமதே - 27

அன்று ஜோதிகா வகுப்பு முடிந்து தனியாக கல்லூரி கேண்டீனை நோக்கி நடந்தாள்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் அவசரத்தில் டிபன் பாக்ஸை எடுக்க மறந்ததன் விளைவு...

கல்லூரி கேண்டீனில் சாப்பிடுவது இதுதான் முதல்...

தினமம் கேண்டீனில் சாப்பிடும் மாணவர்கள் வகுப்பில் புலம்புவதை கேட்டிருந்தாலும் சரி பரீட்சித்துத்தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் கிளம்பினாள்.

அவள் எதிர்பார்த்ததையும் விட கேண்டின் விசாலமாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஒரு கோடியில் இருந்த 'எச்' ப்ளாக்கின் தரை தளத்தில் நீள் வடிவத்தில் சுமார் நூறடி நீளத்தில்.. ரயில்வே ப்ளாட்பாரம் போல்... நீண்டு கிடந்தது. வலதுபுறத்தில் சுவரையொட்டி நீண்ட கவுண்டர். அதில் பல மாணவர்கள் நின்றவாறு உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.

'செல்ஃ சர்விங்மா... டோக்கன் வாங்கிட்டு அந்த கோடியிலருக்கற டெலிவிரி கவுண்டர்ல வாங்கிட்டு எங்க வேணும்னாலும் ஒக்காந்துக்கலாம்.' வாசலையொட்டி அமர்ந்திருந்த க்ளார்க் அவளை தடுத்து நிறுத்த, அவர் நீட்டிய மெனுவைப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. வாயில் நுழையாத அயிட்டங்கள்...

'ஒரு லைம் ரைஸ், ஒரு கர்ட் ரைஸ்'

இரண்டு அலுமினிய டோக்கன்களும் மீதி சில்லறையும் கிடைக்க 'அட! பரவால்லையே சீப்பாத்தான் இருக்கு..'

'சாப்பாடும் சீப்பாத்தான் இருக்கும் கவலைப்படாதீங்க...'

ஜோதிகா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். புன்னகையுடன் ஒரு அறிமுகமில்லாத மாணவன். அதெப்படி நாம மனசுல நினைச்சத இவ்வளவு கரெக்டா சொல்றான்?

'ஒங்க மனசுல நினைச்சத எப்படி கரெக்டா சொல்றான்னு பாக்கறீங்களா?'

ஜோதிகா பதறிப்போனாள்... நடையை வேகப்படுத்தி டெலிவிரி என்ற பலகை தொங்கிய கவுண்டரை நோக்கி நடந்தாள்...

இரண்டு கைகளிலும் பேப்பர் ப்ளேட்டுடன் காலியாக இருக்கையை தேடி கண்களை ஓடவிட்டாள். சற்று தொலைவில் ப்ரியா வேறு சில மாணவிகளுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சற்று தயங்கி நின்றாள்.

ஒருவாரமாகவே அவளுடைய போக்கை புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தது. தன்னை தவிர்க்க நினைப்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஏன் என்பதுதான் புரியாத புதிராக.... இப்ப நாமளா போயி எதுக்கு... ப்ரியா அமர்ந்திருந்த திசைக்கு நேர் எதிர் திசையில் திரும்பி கண்களை ஓடவிட்டாள். எல்லா மேசைகளிலும் மாணவ, மாணவியர்கள்.....

சரி நின்னுக்கிட்டுத்தான் சாப்டணும் போலருக்கு...

'ஹலோ மேடம்... இங்க வந்து ஒக்காருங்க...' சட்டென்று திரும்பி பார்த்தாள். சற்று முன்பு அவள் மனதிலிருந்ததை படம் பிடித்த அதே மாணவன்...

எந்த ஒரு மேசையிலும் மாணவர்களும் மாணவியரும் சேர்ந்து அமராதிருக்க இவன் மட்டும் எப்படி இவ்வளவு தைரியமாக தன்னுடன் வந்து அமருமாறு அழைக்கிறான் என்று நினைத்தாள். இந்த பதினைந்து நாட்களில் கல்லூரியின் சட்டதிட்டங்கள் அவளுக்கு நன்றாக தெரிந்திருந்தன.

கல்லூரி வளாகத்தில் எந்த மாணவியும் மாணவனும் பேசிக்கொள்ளவே அனுமதியில்லாதபோது இவனுக்கு ரொம்பத்தான் துணிச்சல் என்று நினைத்தவாறு அவனுடைய அழைப்பை புறக்கணித்து திரும்பி 'நின்னடிச்சான் கவுண்டரை' நோக்கி நடந்தாள்.

அவள் நெருங்குவதை கண்ட வேறொரு மாணவி சற்று நகர்ந்து நின்று அவளை பார்த்து புன்னகைத்தாள். ஜோதிகா 'தாங்ஸ்' என்று பதிலுக்கு புன்னகைத்துவிட்டு கையிலிருந்தவற்றை கவுண்டர் மேடையில் வைத்துவிட்டு சற்று தள்ளியிருந்த குடிநீர் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

'அவன் பேர் டேவிட்...' என்றாள் அவளுக்கு இடமளித்த மாணவி...

'யார சொல்றீங்க?'

'ஒங்கள இன்வைட் பண்ணானே.. அவந்தான்... செக்கண்ட் இயர்... இந்த வருச காலேஜ் ஸ்டூடண்ட் ப்ரெஸ்... கொஞ்சம் நக்கல் புடிச்சவன்... ஆனால் ரொம்ப நல்லவன்...'

'ஓ!' என்று நினைத்தவாறு ஓரக்கண்ணால் டேவிட் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள்...

'என்னங்க... நம்மள பத்தி தப்பா சொல்றாங்களா? நம்பாதீங்க...' என்று அவளைப் பார்த்து அந்த மாணவன் கண்ணடிக்க பதறிப்போய் பார்வையை திருப்பிக்கொண்டு அவசர, அவசரமாக எலுமிச்சை சாதத்தை அள்ளி சாப்பிடலானாள் ஜோதிகா...

'எப்படிங்க அவர் நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றாரு?' என்றாள் ரகசிய குரலில்...

'அவன் அப்படித்தான்... சும்மா குத்து மதிப்பா சொல்வான்... சில சமயங்கள்ல கரெக்டாருக்கும்... கேட்டா நா ஃபேஸ் ரீடிங் படிச்சிருக்கேம்பான்... கண்டுக்காதீங்க...' என்ற அந்த பெண் ஜோதிகாவைப் பார்த்தாள்... 'நீங்க ஃபர்ஸ்ட் இயரா? எந்த க்ரூப்? ஐட்டியா?'

'இல்ல சிஎஸ்சி'

'ஓ! ஒங்க பேர்?'

'ஜோதிகா...'

'I am இந்த்ரா... இந்துன்னு கூப்டலாம்... ஐட்டி... செகண்ட் இயர்.. டேவிடோட க்ளாஸ்தான்...'

'என்னங்க என் பேர் அடிபடறா மாதிரி இருக்கு...' என்றவாறே டேவிட் என்ற அந்த மாணவன் எழுந்து அவர்களை நெருங்க... 'அய்யா ப்ரெஸ்சு...... இது இங்க கூடாதுன்னு தெரியாதா?' என்ற குரல் வந்தது அடுத்த மேசையிலிருந்து. கல்லூரி ஊழியர்களுள் ஒருவன் என்பது அவனுடைய சீருடையிலிருந்தே தெரிந்தது.

டேவிட் அலட்சியமாக திரும்பி பார்த்தான். 'எது?'

'லேடி ஸ்டூடண்ட்ஸ் கிட்ட தேவையில்லாம பேசக் கூடாதுன்னு.'

'தெரியாம என்ன? எல்லாம் தெரிஞ்சிதான் இருக்கு...' என்றவாறு அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி அவர்களைக் கடந்து சென்று கையிலிருந்தவற்றை அதற்குரிய தொட்டியில் எறிந்துவிட்டு கைகளை கழுவியவாறு கல்லூரி ஊழியனை நோக்கி நடந்தான். 'பேசாம கேண்டீன் நடுவுல ஒரு வால எழுப்பு பிரிச்சிடறதுதான... லேடீஸ், ஜெண்ட்ஸ் டாய்லெட் இருக்கறாப்பல ரெண்டு கேண்டீனாக்கிருங்க. அப்ப இந்த பிரச்சினையே இருக்காது... பிரின்சிக்கிட்ட போயி நான் சொன்னேன்னு சொல்லு'

கல்லூரி ஊழியன் கோபத்துடன் எழுந்து டேவிட்டை முறைக்க அவன் அதை பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்....

கேண்டீனில் இருந்த அனைத்து மாணவர்களுடைய பார்வையும் தங்களை நோக்கி திரும்பியதத கண்ட ஜோதிகா நிச்சயம் இது பிரச்சினையில்தான் முடியப் போகிறது என்று நினைத்தாள். திரும்பி தன் அருகில் நின்றிருந்த இந்துவைப் பார்த்தாள். 'நாம போயிரலாமா?'

இந்து சிரித்தாள். 'பயப்படாதீங்க... சாப்ட்டு முடிங்க... பாதி சாப்பாட்ட தொட்டியில போட்டாலும் காலேஜ் ஹேண்ட் எவனாவது புடிச்சிக்குவான்... இங்க நாம வாங்குன சாப்பாட்ட கூட தூக்கி போட முடியாது... உடனே நம்ம எச். ஓ.டிகிட்ட கம்ப்ளெய்ன் பண்ணிருவாங்க...'

ஜோதிகா அவசர, அவசரமாக ப்ளேட்டில் இருந்ததை உண்டு முடித்து கைகளை கழுவிக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்... 'நா வரேங்க... '

'வாங்க... நீங்கதான் ஜோதிகாவா.. லலிதா டீச்சர் பொண்ணுதான?' என்றவாறு டேவிட் வாசலுக்கருகில் அவளைப் பார்த்து புன்னகைக்க ஜோதிகா பதற்றத்துடன் திரும்பி சற்று முன் கல்லூரி ஊழியன் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள். காலியாக இருந்தது.

'ஆமா... ஆனா அது....'

டேவிட் சிரித்தான். 'லலிதா டீச்சர் ஃப்ரெண்ட் ஸ்டெல்லா டீச்சரோட சன்... சொல்லியிருப்பாங்களே?'

ஓ! நீதானா அது.... அம்மா சொன்னது சரிதான்.. சரியான அதிகப்பிரசங்கிதான் நீ..... 'சொல்லியிருக்காங்க...' என்ற ஜோதிகா சற்று தொலைவில் தங்கள் இருவரையும் பார்த்தவாறே தன்னுடைய எச்.ஓ.டி. வருவதைப் பார்த்தாள். 'சரிங்க நா வரேன்... அப்புறம் பாக்கலாம்.'

'என்ன இவ்வளவு பயந்தாங்கொள்ளியாருக்கீங்க?' என்றவன் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தான்.... 'ஓ சதுர மண்டையா? இவனுக்கெல்லாம் பயந்தா வேலைக்காகாதுங்க...'

ஜோதிகா அவனைப் பொருட்படுத்தாமல் தலையைக் குணிந்தவாறு தன் வகுப்பை நோக்கி விரைந்தாள்..

'என்ன சார்... ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்சையெல்லாம் டெரரைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போலருக்கு?' என்று கேலியுடன் டேவிட் எச்.ஓ.டியை கேட்பது அவளுக்கு கேட்டது...

'யாரு... இந்த பொண்ணா...? நீ வேற டேவிட்... இது பயங்கரமான கேடி....பாத்து ஆப்ட்டுக்காத..நல்ல வீட்டு பையன் மாதிரி இருக்கே...' என்ற பதிலளித்தவாறு எச்.ஓ.டி. அதிர்ந்து நின்ற டேவிட்டை கடந்து செல்ல ...

எச்.ஓ.டியின் குரூரமான பதில் அவளுடைய காதுகளை தீயாய் சுட பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் தன் வகுப்பறையை நோக்கி விரைந்தாள் ஜோதிகா...

'அடப்பாவி... என்ன மோசமா பேசறான்.. இவனெல்லாம் ஒரு காலேஜ் ப்ரொஃபசர்... பொறுக்கி...' என்று முனுமுனுத்தவாறு ஜோதிகா ஓடி மறைந்த திசையைப் பார்த்தவாறு நின்றான் டேவிட்..

தொடரும்...

Technorati Tags:

12.10.07

நாளை நமதே 26

Technorati Tags:

அன்று வகுப்பில் நடந்த அசம்பாவிதத்தை அசை போட்டவாறு கல்லூரி வளாக வாசலில் பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தனர் பரத்தும் வாசனும்.

'என்ன ப்ரதர் அந்த சதுர மண்ட  ஒங்களையும் போட்டு கலாய்ச்சுட்டானா?'

பரத் சட்டென்று நின்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்.

'ஐ ஆம் டேவிட், ஐ.டி. செக்கண்ட் இயர்.' வாயெல்லாம் பல்லாக அகண்ட புன்னகையுடன வலக்கையை நீட்டியவாறு தன் எதிரில் வந்து நின்றவனைப் பார்த்த பரத் ஒரு நொடி தயங்கி அவனுடைய கரத்தைப் பற்றி பேருக்கு குலுக்கினான்.

ஆள பாத்தா வில்லங்கம் புடிச்ச ஆளா தெரியுதே என்று நினைத்தவாறு திரும்பி வாசனைப் பார்த்தான். டெலிபதி போல பரத் நினைத்ததை புரிந்துக்கொண்ட வாசன் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான், லேசாக.

'என்ன பிரதர், நா கேட்ட கேள்விக்கு பதில காணம்?'

பரத் தயங்கியவாறு சுற்றிலும் நோக்கினான். அவனுடைய சக மாணவ, மாணவியர் பலரும் சற்று தொலைவில் பேருந்துகளுக்கு காத்து நிற்பது தெரிந்தது. டேவிட்டின் குரல் நிச்சயம் அவர்களுக்கு கேட்டிருக்கும் என்று நினைத்தான். அவன் 'சதுர மண்டை' என்று யாரை குறிப்பிடுகிறான் என்பது தெளிவாக இல்லை என்றாலும் இன்று வொர்க் ஷாப்பிலும் வகுப்பிலும் நடந்தவைகளை தொடர்புப் படுத்தி பார்க்கும் எவருக்கும் டேவிட் குறிப்பிட்டது எச்.ஓ.டியைத்தான் இருக்கும் என்று அவன் மட்டுமல்லாமல் அவனுடைய சக மாணவர்களாலும் புரிந்துக்கொள்ள முடியும் என்று நினைத்தான். நாம் வேறு எதையாவது சொல்லப் போக அது அவனுடைய வகுப்பபச் சேர்ந்த மாணவர்கள் காதில் விழுந்து.... வேற வினையே வேண்டாம்.

'சாரி... டேவிட் நீங்க கேட்டது சரியா காதுல விழலை.' என்றான் பட்டும் படாமல்.

டேவிட் உரக்க சிரித்தான். 'புரியுது பிரதர்.' கைகளை அட்டகாசமாக விரித்து 'இவனுங்க யார் காதுலயாவது விழுந்து அது அந்த சதுர மண்டைக்கு போயிரும்னுதான நினைக்கீங்க?'

இதென்னடா ரோதனையா போச்சி என்பதுபோல் பரத் வாசனைப் பார்த்தான். 'நீ பேசிட்டு வா பரத் நா பஸ் கிட்ட காத்துக்கிட்டிருக்கேன்.' என்று வாசன் கழண்டுக்கொள்ள பரத் டேவிட்டை நெருங்கி, 'நீங்க எந்த பஸ்சுல போகணும்? வாங்களேன், பேசிக்கிட்டே போகலாம்.' என்றவாறு அவனுடைய பேருந்தை நோக்கி நடந்தான்.

டேவிட் சிரித்தவாறு, 'வேணாம் பிரதர் நீங்க போங்க... இன்னொரு நாள் பேசிக்கலாம்.' என்று பதிலளித்துவிட்டு திரும்பி தன் பேருந்தை நோக்கி நடந்தான்.

****

ப்ரியா பேருந்தில் ஏறியதிலிருந்து ஏதோ நினைவாக இருப்பதைப் பார்த்த ஜோதிகா, 'ஏய் என்ன, ஏதோ கோட்டைய புடிக்க ப்ளான் பண்றாப்பல இருக்கு?' என்றவாறு விலாவில் இடித்தாள்.

ப்ரியா திரும்பாமல் சாலையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

ஜோதிகாவுக்கு சுருக்கென்றிருந்தது. இந்த ஒரு வார காலத்தில் ப்ரியா ஒருமுறை கூட இப்படி நடந்துக்கொண்டதில்லை.

'சாரி ப்ரியா.' என்று கூறிவிட்டு தன்னுடைய புத்தகப் பையை திறந்து அந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்ட்டை திறந்து வாசிக்கலானாள். அவளுடைய வீடு இருந்த பகுதியை சென்றடைய இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். ப்ரியா இன்னும் இரண்டு ஸ்டாப்பில் இறங்கிவிடுவாள் என்பதால் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அவளுடைய ஸ்டாப் வந்தும் இறங்காமல் ப்ரியா அமர்ந்திருக்கவே, 'ஏய் ஒன் ஸ்டாப் வந்தாச்சி. என்ன ட்ரீம் பண்றியா?' என்றவாறு அவளுடைய தோளை தொட்டாள்.

பேருந்து ஓட்டுனர் கதவை திறந்து பிடித்தவாறு காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

'நா இன்னைக்கி பாரீஸ் கார்னர்ல இறங்கிக்கட்டுமா?' என்றாள் ப்ரியா தயக்கத்துடன்.

ஓட்டுனர் பிடிவாதமாக தலையை அசைத்தான். 'முடியாதும்மா... நீங்க கட்டியிருக்கற ஃபீசுக்கு இதுவரைக்கிம்தான் காலேஜ் பஸ்ல ட்ராவல் பண்ண முடியும். எறங்கிருங்க... டைம் ஆவுது.'

பேருந்து முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. 'என்னங்க இது அநியாயம்? என்னைக்காவது ஒரு நாளைக்கு கூட கொஞ்சம் தூரம் போமுடியாதுன்னா எப்படி? இது என்ன கவர்ன்மெண்ட் காலேஜா?'

ஆளாளுக்கு குரலெழுப்ப அவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர்களுள் ஒருவர் எழுந்து கைகளை உயர்த்தினார். 'ஸ்டூடன்ஸ் till you get down from this bus you are bound to obey the regulations of the College. Don't forget that. If the conductor says you can't travel, then you can't. Is that clear?'

'போய்யா... நீயும் ஒன் ரெகுலேஷன்சும்' என்று சற்று உரக்கவே முனுமுனுத்தான் மூர்த்தி. அவனும் வாசனும் படித்தது வெவ்வேறு கல்லூரி என்றாலும் இரண்டும் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தது என்பதால் இரு கல்லூரிகளுக்கு பொதுவான பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.

அவனுடைய குரல் பேருந்தில் பயணித்த அனைவர் காதிலும் விழ அனைவரும், சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் சேர்த்து, காதிலும் விழவே எல்லா தலைகளும் அவன் இருந்த திசையை நோக்கி திரும்பின. ஆனாலும் ஆசிரியர்கள் பெரிதுபடுத்தாமல் அமர்ந்திருந்தனர்.

ப்ரியா தன்னால்தானே பிரச்சினை என்று நினைத்தவாறு மெள்ள எழுந்து வாசலை நோக்கி  நகர்ந்தாள்.

மூர்த்தி விடவில்லல. 'ஹல்லோ மேடம்... ஒங்களுக்காகத்தான நாங்கல்லாம் பேசிக்கிட்டிருக்கோம்... நீங்க பாட்டுக்கு எறங்கறீங்க..? போய் ஒங்க சீட்ல ஒக்காருங்க. என்ன பண்றாங்கன்னு பாத்துருவோம்.'

வாசன் எரிச்சலுடன் திரும்பி பின் இருக்கையில் அமர்ந்திருந்த தன் சகோதரனைப் பார்த்தான்.

'டேய் என்ன மொறைக்கறே... நானும் ஒருவாரமா பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... இவனுங்க டார்ச்சர் தாங்க முடியல... நாம என்ன ஜெயில் பிரிசனர்ஸா... காலேஜ் ஸ்டூடண்ஸ்.. நம்ம மைட்ட (might) இவனுங்களுக்கு காட்டணும்டா...'

ப்ரியா அவனைப் பொருட்படுத்தாமல் வாசலை நெருங்கி 'சாரிங்க. இங்கயே இறங்கிக்கறேன்.' என்று ஓட்டுனரிடம் பதிலளித்துவிட்டு இறங்க ஜோதிகாவும் சட்டென்று எடுத்த முடிவில் 'நானும் இங்கயே இறங்கிக்கறேன்..' என்றவாறு தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினாள்.

ஒட்டுனர் மூர்த்தியை முறைத்தவாறு கதவை அடைக்க பேருந்து நகர்ந்தது. மாணவ, மாணவியர் சற்று முன் நடந்தவற்றை மறந்துபோய் அவரவர் நினைவுகளில் மூழ்கினர்.

'முதுகெலும்பு இல்லாத பயல்க.... இவனுங்களுக்கு இந்த மாதிரி ட்ரீட்மெண்ட்தான் கிடைக்கும்..' என்றான் மூர்த்தி சற்றே உரக்க.

பேருந்தில் இருந்த யாருமே அவனைக் கண்டுக்கொள்ளவில்லை.... நமக்கேன் வம்பு என்று நினைத்தார்கள் போலும்...

******

'எதுக்குடி நீயும் இங்கயே எறங்குனே?'

' நீ பாரீஸ் கார்னர் வரைக்கும்தானே போறே? நானும் ஒங்கூட வரேன். எனக்கு அங்க பீச் ஸ்டேஷன்லருந்து ட்ரெய்ன் இருக்கு...'

'அதான் ஏன்னு கேக்கேன்... ஒன் வீடு வரைக்கும் காலேஜ் பஸ் போகுதில்ல? நீ பாட்டுக்கு போக வேண்டியதுதான?'

ப்ரியாவின் குரலில் தொனித்த எரிச்சல் ஜோதிகாவை திடுக்கிட வைத்தது. ஒருவேளை நா அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கறேன்னு நினைக்காளோ... சட்டென்று பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு வேண்டுமென்றே அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்ற ப்ரியாவைப் பார்த்தாள். 'சாரிடி.... I thought.....' வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினாள்....

ப்ரியா அப்போதும் அவளை திரும்பி பார்க்காமல் பேசினாள். 'If I had hurt you... I am sorry... But I need to be alone... நா வரேன்... நீ வீட்டுக்கு போ... நாளைக்கி பேசிக்கலாம்.'

ப்ரியா சாலையைக் கடந்து வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொள்ள விக்கித்து நின்றாள் ஜோதிகா.... என்னாச்சி இவளுக்கு?

********

டேவிட் பேருந்தில் ஏறி இருக்கை ஏதும் காலியாய் இருக்கிறதா என்று பார்த்தான். மாணவியர் அமர்ந்திருந்த பகுதியில் ஒரேயொரு இருக்கை மட்டும் இருந்ததைப் பார்த்துவிட்டு அங்கு அவன் அமர அனுமதியில்லை என்று தெரிந்தும் அதை நோக்கி நகர்ந்தான்.

'ஹலோ... அது லேடி ஸ்டூடண்ட்ஸ் செக்ஷன்னு தெரியுமில்ல...?' ஓட்டுனர் கீழிருந்து குரல் கொடுத்தார்.

'தெரியாமயா கெடக்கு?' என்றான் டேவிட் நக்கலுடன். 'ஒக்காந்தா கேளு.'

ஒட்டுனர் அவனை முறைக்க பேருந்தில் இருந்த அனைவரும் ஆசிரியர்களை தவிர்த்து, சிரித்தனர்.

'வச்சடா மச்சான் ஆப்பு.' என்றான் ஒரு மாணவன் சற்று உரக்க...

'டேய்... இன்னும் அஞ்சி நிமிசத்துல.. வைக்கறேன் இருங்க ஒங்க எல்லாருக்கும்... ஆப்பு...' என்று ஓட்டுனர் பதில் குரல் கொடுக்க சட்டென்று அமைதியானது பேருந்து.

'டேய்... கரஸ்சோட டாட்டர் வருது.... பாரா உஷார்' என்றான் வேறொருவன்.

டேவிட் குனிந்து பார்த்தான்.... நிர்வாகியின் இளைய மகள் ரோஜா படு ஸ்டைலாக வருவது தெரிந்தது... 'இருடா டேய் டிரைவர். யார் யாருக்கு ஆப்பு வைக்கறான்னு பாப்பம்.' என்று நினைத்தவாறு டேவிட் பேருந்தில் இருந்து இறங்கி நின்றான்.

'என்ன மேடத்துக்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போறியா.... போ... பண்ணு...' என்று ஓட்டுனரை உசுப்பி விட்டான்...

அடுத்த சில நொடிகளில்  ரோஜா டேவிட்டின் பேருந்தை நெருங்க ஓட்டுனர் அவளை சற்றே நெருங்கி, 'மேடம்...' என்றான் தயக்கத்துடன்..

ரோஜாவின் முகம் உடனே கடுப்பானது. 'என்ன தைரியம் இருந்தா இவ்வளவு பக்கத்துல வந்து நின்னு பேசுவ, ராஸ்க்கல். தொலைச்சிருவேன்..' என்றவாறு ஓங்கி ஒட்டுனரின் கன்னத்தில் அறைந்துவிட்டு கடந்து சென்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத பேருந்தில் அமர்ந்திருந்த முதலாமாண்டு மாணவர் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

டேவிட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இது ஒன்னுமே இல்லை.... கட்டுன புருசனையே எல்லார் முன்னாலயும் செருப்ப கழட்டி அடிச்சவங்களாச்சே.... டிரைவர் என்ன பிரமாதம்...' என்றவாறு கன்னத்தை தடவியாவாறு தன்னை முறைத்த ஓட்டுனரை பார்த்தான்... 'வாய்யா வந்து வண்டிய எடு.' என்றவாறு பேருந்துக்குள் நுழைந்து 'இங்க வந்து ஒக்கார்டா' என்று அழைத்த நண்பனை நோக்கி சென்றான்..

தொடரும்...

6.10.07

நாளை நமதே - 25

வந்தனா வகுப்புக்குள் நுழைந்து கொண்டு வந்திருந்த புத்தகங்களை மேசை மீது வைத்துவிட்டு ஒரு நிமிடம் வகுப்பறையைச் சுற்றி பார்த்தார்.

மாணவர்களுள் பலரும் அமைதியாக தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தனர்.

அன்றைய ஒர்க் ஷாப் வகுப்பில் நடந்து முடிந்திருந்த சம்பவம் நிச்சயம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்துதானிருந்தது. கடந்த ஒரு வார கால அனுபவத்தில் எச்.ஓ.டி. ஒரு ஈகோ பிடித்த, வறட்டு கவுரவம் பார்க்கும் மனிதர் என்பதும் தெரிந்திருந்தது. ஆகவே அவர் இதை லேசில் விடப்போவதில்லை என்று நினைத்தனர்.

'You must know that you have upset our HOD very much.'

'அதான் அந்தாள் மொறச்சிக்கிட்டு போனதிலருந்தே தெரியுதே.'

வந்தனாவின் முகம் சட்டென்று கடுப்பானது.

குரல் வந்த திசையைப் பார்த்தார்.

'இந்த மாதிரியான unwanted and anonymous commentsதான் பிரச்சினை. Either you should have guts to stand up and make such comments or keep your mouths shut. This is not a market place where you can say anything you want and get away with it.' வந்தனாவின் குரலில் இருந்த கோபத்தை மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களுடைய மெளனத்திலிருந்தே தெரிந்தது.

அடுத்த நொடியே சகஜ நிலைக்கு திரும்பிய வந்தனா தொடர்ந்தாள். 'வொர்க் ஷாப்புல எச்.ஓ.டிக்கு எதிரா கமெண்ட் அடிச்ச ஸ்டூடண்ட் யாராருந்தாலும் நேரா அவர் ரூமுக்கு மன்னிப்பு கேட்டுக்கறது பெட்டர். இல்லன்னா ஒட்டுமொத்தமா எல்லார் இண்டர்னல் மார்க்லயும் கை வச்சிருவார்.  என்ன பெரிய மார்க்குன்னு நீங்க யாராவது நினைச்சீங்கன்னா இப்ப நா சொல்லப் போறத தெளிவா கேட்டுக்குங்க.'

வந்தனா சற்றே நிறுத்திவிட்டு வகுப்பறையை நோட்டம் விட்டார். எல்லாருடைய கண்களும் தன்னையே பார்ப்பது தெரிந்ததும் தொடர்ந்தார்.

'ஒவ்வொரு பேப்பர்க்கும் இண்டர்னல் மார்க்ஸ் உண்டு. நிறைய காலேஜஸ்ல இருபதுக்கு இருபதுன்னு குடுத்துடறது வழக்கம். நம்ம காலேஜ்லயும் சில எச்.ஓ.டிங்க அப்படித்தான் செய்யறாங்க. அதாவது பிரச்சினை பண்ணாத ஸ்டூடண்ட்ஸ தவிர. நம்ம எச்.ஓ.டி அப்படியில்லை. நல்ல பிரில்லியண்ட் ஸ்டூடண்டுக்கே அவர் இதுவரைக்கும் பதினஞ்சு, பதினாறு மார்க்குக்கு மேல குடுத்தது இல்லை. பிரச்சினை பண்ணிட்டா கேக்கவே வேணாம். பத்துக்கு மேல தாண்டாது. இதோட சிக்னிஃபிக்கன்ஸ் இப்ப உங்களுக்கு புரியாது. ஆனா கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்டுன்னு வரும்போது நீங்க வாங்கப் போற பெர்சண்டேஜ்தான் ஒங்களுக்கு எந்த கம்பெனியில வேல கிடைக்கப் போகுதுங்கறத டிசைட் பண்ணும். அரை மார்க், ஒரு மார்க்ல கூட

Technorati Tags:

ரெப்யூட்டட் கம்பெனி ஜாப மிஸ் பண்ண நிறைய ஸ்டூடண்ட்ஸ நா பாத்துருக்கேன். என்ன நா சொல்றது வெளங்குதா?'

இங்கும் அங்குமாக பல தலைகள் புரியுது என்பதுபோல் அசைந்தன.

'எச்.ஓ.டிக்கு எதிரா கமெண்ட் அடிச்ச ஸ்டூடண்ட் தானாவே போய் அப்பாலஜி பண்ணா ஒருவேளை அத அவர் ஏத்துக்க மறுத்து ஏதாச்சும் பனிஷ்மெண்ட் குடுக்கலாம். மேக்ஸ்மிமம் ஒரு நாள் சஸ்பென்ஷன் இருக்கும்.  இல்லன்னா ஒட்டுமொத்த க்ளாசுக்கும் இந்த செமஸ்டர் இண்டெர்னல் மார்க் போயிரும். பரவால்லையா?'

ப்ரியா தன்னையுமறியாமல் சற்று முன் வொர்க் ஷாப்பில் கமெண்ட் அடித்த மாணவன் இருந்த திசையை நோக்கி திரும்பினாள். தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்த அவனுக்கருகில் அமர்ந்திருந்த சுந்தரும் அதே நேரத்தில் அவளை நோக்கி திரும்ப இருவர் கண்களும் ஒரு நொடி சந்தித்தன. சுந்தர் உடனே தலையைக் குனிந்துக்கொண்டான். இதைக் கவனித்த ஜோதிகாவின் உதடுகளில் புன்னகை விரிந்தது.

'என்ன ஜோதிகா உங்களுக்கு யாருன்னு தெரியுமா?'

ஜோதிகா திடுக்கிட்டு வந்தனாவைப் பார்த்தாள். உண்மையிலேயே அவளுக்கு அந்த மாணவனின் பெயர் தெரிந்திருக்கவில்லை. 'No Madam...I don't know'

'பரத்?' என்றவாறு அவனைப் பார்த்தாள் வந்தனா.

பரத்தும் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு, 'Whoever it is I'll go and apologize on his behalf madam.' என்றான்.

வந்தனா புன்னகைத்தவாறு தலையை அசைத்தார். 'எச்.ஓ.டிக்கு நீங்க இல்லேங்கறது நல்லாவே தெரியும். அதனால it won't server any purpose...'

அடுத்து தொடர்ந்த மவுனம் அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. 'So you have decided to protect him. Is that right?' என்றார் எரிச்சலுடன்.

'எனக்கு அந்த ஸ்டூடன்ட் யார்னு தெரியும் மேடம்..' என்ற குரல் வகுப்பின் ஒரு மூலையிலிருந்து வர அனைத்து கண்களும் அந்த திசையை நோக்கி திரும்பின.

வந்தனா எழுந்து நின்ற மாணவனைப் பார்த்தார். 'சொல்லுங்க..'

அவன் சுந்தரை நோக்கி கையை காட்ட அவன் திடுக்கிட்டு, 'மேடம் நிச்சயமா நான் இல்லை.' என்று மறுத்தான். 

பரத்தும் உடனே எழுந்து, 'He is not the person madam. I know.' என்றான் தன்னையுமறியாமல். அடுத்த நொடியே தன்னுடைய தவறை உணர்ந்தான்.

'So, you must know who had made that comment.' என்றாள் வந்தனா புன்னகையுடன். 'OK.  You need not tell me.. As the class rep லஞ்ச் டைம்ல அந்த ஸ்டூடன்டோட எச்.ஓ.டி ரூமுக்கு போயி அப்பாலஜி கேட்ருங்க. If you go with him HOD might accept it and forget the whole issue. என்ன சொல்றீங்க?'

'Yes mam..' என்றவாறு பரத் அமர சுந்தரின் அருகில் அமர்ந்திருந்த மாணவன் நிதானமிழந்து, 'இவனோட தயவு ஒன்னும் எனக்கு தேவையில்லை...' என்றவாறு எழுந்து நிற்க வந்தனாவின் முகம் கடுப்பானது.

'So you are the person.' என்றாள் கோபத்துடன். I will see that you are suspended for a week.'

அதே கோபத்துடன் மேசையிலிருந்த புத்தகங்களுடன் வந்தனா வெளியேற அனைத்து மாணவ, மாணவியரும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர்.

 

தொடரும்...