9.11.07

நாளை நமதே 30

அன்றைய வகுப்புகள் முடிந்து மாணவர்கள் சிறு, சிறு குழுவாக வெளியேற பரத்தும் வாசனும் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கி நின்றாள்.

'நீ போ ஜோதிகா. நானும் வாசனும் கொஞ்ச நேரம் கழிச்சி வரோம்.' என்றான் பரத்.

'எதுக்கு? நீதான க்ளாஸ் முடிஞ்சதும் பிரின்சிய பாத்து பேசிட்டு போலாம்னு சொன்னே? இப்ப என்னாச்சி?'

பரத் வாசனை திரும்பிப் பார்த்தான். 'இல்ல ஜோதிகா. பரத் கம்ப்ளெய்ண்ட்லாம் குடுக்க வேணாம்னு ஃபீல் பண்றான்.' என்றான் வாசன்.

'அதான் ஏன்னு கேக்கேன். அவனெ இனியும் டிஃபெண்ட் பண்றது சரியில்லைன்னு எனக்கு தோனுது.'

பரத் பதிலளிக்காமல் பெஞ்சில் இருந்த தன்னுடைய புத்தகங்களை கைப்பையில் வைப்பதில் முனைப்பாயிருந்தான். பிறகு எழுந்து ஜோதிகாவை பார்த்தான். 'I think it is better to forget what happened in the morning. குமாருக்கு எதிரா கம்ப்ளெய்ண்ட் பண்ணா விஷயம் இன்னும் சீரியசா ஆகுமே தவிர குறையாது. அதனலதான் லஞ்ச் டைம்ல நானும் வாசனும் டேவிட்ட போயி பாத்து இதப்பத்தி பேசினோம். He also feels the same way.'

ஜோதிகாவுக்கும் அவன் சொல்ல வந்தது விளங்காமல் இல்லை. அவளுக்கும் குமாரும் அவனுடைய நண்பர்களும் நடந்துக்கொண்டவிதம் அதிர்ச்சியை அளித்தது என்னவோ உண்மைதான். ஆனால் வகுப்பில் இருந்த பலரும் குமாருக்கு எதிராக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தபோது அவளுக்கு அதில் தவறில்லையென்றே தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் அவனை கல்லூரிக்குள் அனுமதித்தலிருந்தே அவனுடைய நடவடிக்கையில் ஒருவித ஆணவம் தெரிந்ததை அவள் மட்டுமல்லாமல் சக மாணவர்களும் உணர்ந்திருந்தனர். பரத் அவர்களுடைய ஆலோசனைக்கு உடனே சம்மதிக்கவில்லையென்றாலும் முதல்வரின் அறையிலிருந்து திரும்பிய குமார் அன்று முழுவதும் ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் பரத்தை சீண்டிக்கொண்டிருக்கவே அவனுக்கெதிராக புகார் அளிப்பதில் தவறில்லையென்றே நினைத்திருந்தாள்.

ஆகவேதான் பரத் இப்படியொரு முடிவெடுத்ததில் அவளுக்கு அத்தனை உடன்பாடில்லை. இருப்பினும் பரத் எடுத்த முடிவுக்கு பிறகு கல்லூரி மாணவர் தலைவன் டேவிட்டின் அறிவுரையும் ஒரு காரணம் என்பதை நினைத்து அதை மறுப்பதில் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாள்.

'பரத் சொல்றது சரிதான் ஜோதிகா. நாம கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போயி அதனால குமார காலேஜ்லருந்தே டிஸ்மிஸ் பண்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு டேவிட் சொன்னதாலதான் நாங்க இந்த டிசிஷன் எடுத்தோம். So let us not discuss this anymore.' என்றவாறு வாசன் எழுந்து வாசலை நோக்கி நடக்க பரத்தும் ஜோதிகாவும் அவனை தொடர்ந்தனர்.

**********

ஜோதிகா பேருந்திற்குள் நுழைந்து அமர்வதற்கு ஏதாவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்தாள். மாணவர்கள் இடதுபுறமும் மாணவிகள் வலதுபுறமும் அமர வேண்டும் என்பது கல்லூரியின் நியதிகளுள் ஒன்று. 'நாம படிச்ச ஸ்கூல்லக் கூட இந்த மாதிரி கண்டிஷன் எதுவும் இல்ல, இல்லடா?' என்பான் மூர்த்தி அடிக்கடி. வாசன் கண்டுக்கொள்ள மாட்டான். 'உங்கிட்ட வந்து சொன்னன் பார்.' என்று சலித்துக்கொள்வான் மூர்த்தி. இதற்காகவே கல்லூரி பேருந்தில் மூர்த்தியுடன் அமர்வதை வாசன் தவிர்த்துவிடுவான்.

மாணவிகள் அமர்ந்திருந்த பகுதியில் ஒரேயொரு இருக்கை மட்டும் இருந்தது. ஆனால் அதில் அமர்வதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள் ஜோதிகா. ப்ரியா அந்த இருக்கையில் அமர்ந்திருந்ததுதான் காரணம். ப்ரியா வேண்டுமென்றே அவளை கவனியாதுபோல் பேருந்துக்கு வெளியில் பார்வையை செலுத்தியது தன்னை தவிர்ப்பதற்காக என்றே நினைத்தாள்.

'ஏய் இங்கதான் ஒரு சீட் இருக்கே?' என்றான் மூர்த்தி உரக்க.

'ஹல்லோ...' என்று எழும்பியது ஒரு குரல் பேருந்தின் பின் இருக்கைகளிலிருந்து, 'எல்லாம் அவங்களுக்கு தெரியும். ஒன் வேலைய பாரு. காலேஜ் ரூல்ஸ் தெரியுமில்ல?'

'யார்யா அது?' என்றவாறு திரும்பினான் மூர்த்தி. கல்லூரி ஊழியர்களுள் ஒருவர். அடியாள் வடிவில்.. கல்லூரி பேருந்துகள் எல்லாவற்றிலுமே இப்படி ஒருவர் இருப்பது வழக்கம். 'பஸ்ல பசங்க பொண்ணுங்கள கலாட்டா பண்றதா எந்த கம்ப்ளெய்ண்டும் வரக்கூடாது. அது ஒங்க ட்யூட்டி.' என்பது கல்லூரி நிர்வாகியின் கட்டளை.

ஆனால் மூர்த்தி இதற்கெல்லாம் கவலைப்படமாட்டான். 'யோவ் ஒன் வேலைய பாருய்யா... நீ என்ன போலீசா?' என்றான் எரிச்சலுடன். 'ஹல்லோ நீங்க போய் ஒக்காருங்க... இவனுங்களுக்கு வேற வேலையில்லை.'

மூர்த்தியின் இந்த பதிலை விரும்பாத கல்லூரி ஊழியன் எழுந்து அவனை நோக்கி நெருங்க இடை வழியிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வாசன் எழுந்து அவனை சமாதானப் படுத்துவதைக் கவனித்த ஜோதிகா தன்னால் மேலும் எந்த பிரச்சினையும் வரவேண்டாமே என்ற நினைப்புடன் விரைந்து சென்று ப்ரியாவின் அருகில் அமர்ந்துக்கொள்ள பேருந்து புறப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கைக் கூடுதலாக எந்த மாணவனோ, மாணவியோ ஏறக்கூடாது என்பதும் கல்லூரி நிர்வாகத்தின் நியதி.

பேருந்து கல்லூரி வளாகத்தைக் கடந்து விரைந்தது. ப்ரியா அப்போதும் தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்த ஜோதிகா தன் கையிலிருந்த சஞ்சிகையில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இருந்தும் மனம் அதில் செல்ல மறுக்கவே ஓரக்கண்ணால் ப்ரியாவைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளிர்த்த கண்ணீர் ஜோதிகாவை திடுக்கிட வைத்தது. 'ஏய் ப்ரியா... நீ எதையோ எங்கிட்டருந்து மறைக்கறதுக்குத்தான் என்னெ அவாய்ட் பண்றேன்னு நினைக்கேன்... சரியா?' என்றாள் சன்னமான குரலில்.

ப்ரியா வெளியில் பார்த்தவாறு பதிலளித்தாள். 'அதெல்லாம் ஒன்னுமில்லை.' ஆனால் இவகிட்ட கன்ஃபைட் பண்றதுனால உன் டென்ஷன் குறையுமேடி என்றது அவளுடைய உள்மனது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து அவள் விடுபடுமுன் அவள் இறங்கும் இடம் வந்தது. ஆனால் அவள் எழாமல் அமர்ந்திருக்க, 'என்னம்மா இங்க நீ எறங்கணுமே?' என்றவாறு ரியர்வ்யூ கண்ணாடியில் அவளைப் பார்த்தார்.

ப்ரியா திடுக்கிட்டு எழுந்து நின்றாள். 'நானும் ஒங்கூட எறங்கட்டுமா?' என்றாள் ஜோதிகா. 'If you don't mind.'

'சரி' என்று தலையை மட்டும் ஆட்டிய ப்ரியா கைப்பையுடன் வாசலை நோக்கி நகர ஜோதிகா எழுந்து அவளைத் தொடர்ந்து, 'என்னம்மா நீயும் இங்கவே எறங்கறயா?' என்ற ஓட்டுனரின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஜோதிகா பேருந்திலிருந்து இறங்கினாள்.

************

வாசனும் மூர்த்தியும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்தாலும் மூர்த்தி எப்போதுமே வாசனுடன் வீட்டுக்கு திரும்பியதில்லை. தெரு முனையிலிருந்த சகாக்களுடன் ஒரு சிகரெட்டை இழுத்து அரட்டையடித்துவிட்டு வரவில்லையென்றால் அவனுக்கு உறக்கம் வராது. அன்றும் அப்படித்தான் பேருந்திலிருந்து இறங்கி நடை தூரத்திலேயே இருந்த தங்களுடைய வீட்டை நோக்கி வாசன் நடக்க மூர்த்தி தெருமுனையில் காத்திருந்த தன் சகாக்களை நோக்கி சென்றான்.

வீட்டு வாசலிலேயே நின்ற தன் தாயைக் கண்டதும், 'என்னம்மா என்ன விஷயம் ஏன் இங்க நிக்கீங்க? உங்க முகத்த பார்த்தா ஏதோ டென்ஷன்ல இருக்கா மாதிரி தெரியுது?' என்றான் வாசன்.

'எங்கடா மூர்த்தி?'

வாசன் வியப்புடன் தன் தாயைப் பார்த்தான். 'ஏன்... அவந்தான் ஃப்ரெண்ட்சோட பேசாம வரமாட்டானே?'

'இன்னைக்குமா?' என்றாள் பார்வதி. 'என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இன்னைக்கும் அவன் ஃப்ரெண்ட்சோட அரட்டையடிக்க நின்னுருப்பான்.'

'ஏன்...இன்னைக்கி என்ன?'

பார்வதி எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தாள். 'என்னடா தெரியாத மாதிரி கேக்கே?'

வாசன் குழப்பத்துடன் திரும்பி தெருமுனையைப் பார்த்தான். அரட்டைக் கச்சேரி கனஜோராக துவங்கியிருந்தது அங்கிருந்தே தெரிந்தது. திரும்பி தன் தாயைப் பார்த்தான். 'எனக்கு வெளங்கலை. இன்னைக்கி என்னம்மா ஸ்பெஷல்?'

'உள்ள வா சொல்றேன்.' என்றவாறு பார்வதி வீட்டுக்குள் திரும்ப மீண்டும் ஒருமுறை தெருமுனையைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் வாசன்.

'இப்ப சொல்லுங்க... என்ன விஷயம்?'

'உண்மையிலயே ஒனக்கு தெரியாதா? இல்ல எங்கிட்டருந்து மறைக்கறியா?'

'இல்லம்மா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னே எனக்கு தெரியல....'

'மூர்த்தி காலேஜ்லருந்து ஃபோன் வந்துது... அவனெ ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்களாம். அப்பாவே நேரா வந்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி தந்தாத்தான் மறுபடியும் சேத்துப்பாங்களாம்.'

வாசன் அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தான். காலையில் கோபத்துடன் மூர்த்தி தன் கல்லூரியை நோக்கி சென்றது நினைவு வந்தது. செய்றதையும் செஞ்சிட்டு கல்லுளிமங்கன் மாதிரி சைலண்டா இருந்துருக்கானே. இந்த லட்சணத்துல பஸ்சுல வேற தகராறு செஞ்சான்? நாம மட்டும் இல்லன்னா அங்கயும் பெரிய தகராறாயிருக்கும்.

'இப்ப சொல்லு... ஒனக்கு தெரியுமா தெரியாதா? அப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொல்லப் போறேன்.' என்றாள் பார்வதி கண்டிப்புடன்.

'இல்லம்மா... நிச்சயமா நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும். என்னெ நம்புங்க, ப்ளீஸ்.''

அப்போதும் பார்வதி நம்பாமல் வாசனைப் பார்த்தாள். பிறகு, 'சரி நம்பறேன். அவன் வர்றதுக்குள்ள போய் ஒங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணு.'

வாசன் தயங்கினான். 'அவன் வந்துறட்டுமேம்மா... அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு சொல்வமே...'

'டேய். நான் சொல்றத செய்யி. இந்த வாரக் கடைசியில ஒருவாரம் இருக்கறா மாதிரி வரச்சொல்லு. அவன் வந்தா ஃபோன் பண்ண வுடமாட்டான்... போ சீக்கிரம்.'

வாசன் வேறு வழியில்லாமல் படுக்கையறையிலிருந்த தொலைபேசியை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்...

Technorati Tags:

2.11.07

நாளை நமதே 29

கல்லூரி நிர்வாகி நாகராஜுலு தன் எதிரில் நின்றிருந்த மாணவர் தலைவர் டேவிட்டையும் அவனுடன் நின்றிருந்த ஐந்தாறு வகுப்பு பிரதிநிதிகளையும் ஏளனமாக பார்த்தார். அவருடன் அவருடைய மனைவி அதாவது கல்லூரி கரஸ்பாண்டண்ட் வெங்கடேஸ்வரலுவின் மூத்த புதல்வி ரோகினி, அவளுடைய சகோதரி ரோஜா மற்றும் கல்லூரியின் துணை நிர்வாகியான அவளுடைய கணவர் பிரசாத் ஆகியோரும் மற்றும் கல்லூரி முதல்வர். அவர்களுக்கு பின்னால் கல்லூரியின் அடியாள் படைத் தலைவன், சில இலாக்கா தலைவர்கள் என....

'என்ன தம்பிகளா நிறைய தமிழ் சினிமா பாப்பீங்களோ?' என்றார் கல்லூரி நிர்வாகி நாகராஜுலு.

'என்ன சார் கிண்டலா?' என்றான் குமார் கோபமாக.

நிர்வாகி அவனை எரித்து விடுவது போலப் பார்த்தார். 'நீதானே ஒரு மாசத்துக்கு முன்னால சஸ்பெண்ட் ஆன பையன்? ஃபர்ஸ்ட் இயர்?'

'ஆமா சார். அதுக்கென்ன இப்போ?'

நிர்வாகி டேவிட்டைப் பார்த்தார். 'என்ன டேவிட் நீ இந்த விசயத்துக்கெல்லாம் இந்த மாதிரி பசங்க கூட சேந்துக்கிட்டு டைம வேஸ்ட் பண்ணலாமா? இந்த மாதிரி பசங்களுக்கு படிக்கறதே ஒரு பொழுதுபோக்கு. ஆனா நீ அப்படியில்லையே?'

டேவிட் சங்கடத்தில் நெளிந்தான். அவர் சொல்வதும் சரிதான். யூனிஃபார்ம்னு வந்துட்டா அவனுக்கும் நிம்மதிதான். இருக்கறதே அஞ்சாறு ட்ரெஸ். அத வச்சிக்கிட்டு டெய்லி ஒன்னுன்னு மாத்திக்கிட்டு வர்றதுலருக்கற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். 'தொரைக்கு டெய்லி ஒரு ட்ரெஸ் கேக்குதோ? ஒன் துணிய தொவைக்கறதுக்கே தனியா ரெண்டு கிலோ ரின் பவுடன் வாங்கணும் போலருக்கே?' நேத்து கூட அப்பா கேட்ட கேள்வி.

ஓரக்கண்ணால் தன் பக்கத்தில் நின்றிருந்த குமாரைப் பார்த்தான். பாக்கப்போனா இவன் க்ளாஸ் ரெப் கூட இல்லை. பணத் திமிர் பசங்கள கூட்டு சேத்துக்கிட்டு கலாட்டா பண்றான். போறாததுக்கு என் கூட பிரின்சி ரூமுக்கு நீ வந்துதான் ஆகணும்னு புடிவாதம் அவனையும் புடிச்சி இழுத்துக்கிட்டு வந்து இந்தாள் முன்னால கேவலப்படறது நமக்கு தேவைதானா... இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா வேற வெனையே வேணாம்.

'காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம எதுக்குடா இந்த லீடர் வேலை? இந்த ஒரு வருசத்தோட இந்த மாதிரி வேலையையெல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டு ஒழுங்கா படிச்சி டிஸ்டிங்ஷன் வாங்கப் பாரு. ஒன்னைய நம்பித்தான் குடும்பம் இருக்குங்கறத மறந்துராத.' அவன் கல்லூரி மாணவர் தலைவராக தேர்வு செய்த அன்று வீட்டில் அவனுக்கு கிடைத்த அர்ச்சனை.

'சார்.. அப்படியில்லை... இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு முன்னால எங்களோட கலந்து பேசியிருக்கலாம். என்ன இருந்தாலும் எங்கள இப்படி ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ட்ரீட் பண்றது.....'

'டேவிட் எதுக்கு இவர்கிட்ட போயி கெஞ்சறீங்க? நா பேசறேன்.' என்று இடைமறித்த குமார் நிர்வாகியை முறைத்தான். 'இங்க பாருங்க சார். இது எஞ்சினியரீங் காலேஜ். எலிமெண்டரி ஸ்கூல் இல்லை. நீங்க மட்டும் இந்த டிசிஷன ரிவோக் பண்ணலைன்னா நாளையிலருந்து ஸ்ட்ரைக் பண்ணுவோம். ஒங்களால ஆனத பாத்துக்குங்க. டேய் வாங்கடா.'

அவனை தடுத்து நிறுத்த முயன்ற டேவிட்டின் கைகளை உதறிவிட்டு குமார் அறையிலிருந்து வெளியேற அவனுடைய சகாக்கள் நிர்வாகிக்கு எதிரான கோஷங்களுடன் அவன் பின்னே சென்றனர்.

டேவிட் தயக்கத்துடன் நிர்வாகியைப் பார்த்தான். 'அவன் சொன்னத சீரியசா எடுத்துக்கிறாதீங்க சார். நா அவன் கிட்ட பேசறேன். இத இத்தோட விட்டுருங்க. நா எல்லா க்ளாஸ் ரெப்ஸ்ங்களோடயும் பேசிட்டு ஒங்களுக்கு சொல்றேன்.'

நிர்வாகி சிரித்தார். 'டேவிட் இதுல ஒனக்கு சம்மதமில்லேன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் வேற வழியில்லாம இவன் சொல்லி நீ இங்க வந்துருக்கே. நீ எந்த ரெப்புக்கிட்டயும் பேசி ஒன் டைம வேஸ்ட் பண்ண வேணாம். இந்த டிசிஷன் எடுத்தது கரஸ்பாண்டண்ட் மட்டுமில்லை. நம்ம காலேஜோட எண்டயர் போர்டும் சேந்து எடுத்தது. நம்ம காலேஜ் மட்டுமில்லாம நம்ம க்ரூப் காலேஜஸ் எல்லாத்துலயும் இண்ட்ரொட்யூஸ் பண்ற ஐடியா. யூனிவர்சிட்டி வி.சி கிட்டயும் பேசியாச்சு. அதனால இந்த டிசிஷன ரிவோக் பண்ணணுங்கற பேச்சுக்கே இடமில்லை. அதனால டோண்ட் வேஸ்ட் யுவர் டைம். கோ டு யுவர் க்ளாஸ்.'

டேவிட்டுக்கு அவர் பேசிய தோரனை அடியோடு பிடிக்கவில்லையென்றாலும் தன்னுடைய குடும்ப சூழலை மனதில் கொண்டு மறுபேச்சு பேசாமல் வாசலை நோக்கி நடந்தான்.

அவன் வாசலை கடந்ததும் நாகராஜுலு தன்னுடன் அமர்ந்திருந்த குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களை நோக்கி கண்ணசைத்தார். அடுத்த நொடியே மறுபேச்சில்லாமல் அனைவரும் எழுந்து வெளியேறினர். கதவு அடைக்கப்படும்வரை காத்திருந்த நாகராஜுலு தன் சகலையை பார்த்தார்.

'நாம இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்கலன்னா ராத்திரி மாமாகிட்ட பதில் சொல்ல முடியாது.'

பிரசாத் தன் மனைவியைப் பார்த்தான். தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் பேசக்கூடாது என்பது ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்.

'என்ன சகலை.. எப்பவும் போல பெர்மிஷன் வேணுமா?'

'அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க சொல்றது சரிதான். ஆனா எப்படி இத முடிக்கறதுன்னுதான் யோசிக்கறேன். அந்த பையன் கொஞ்சம் வசதியான எடம்னு கேள்விபட்டுருக்கேன். போனதடவை அந்த பையனை சஸ்பெண்ட் பண்ணப்பவே எங்கெங்க இருந்தோ ஃபோன் வந்துதே...'

உண்மைதான். குமாருடைய தந்தையே நேரில் வந்து தன்னுடைய மகனுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் அவருடைய மனைவி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி லோக்கல் எம்.எல்.ஏவை விட்டு நேரடியாக வெங்கடேஸ்வரலுவுக்கே ஃபோன் செய்து தன் மகனின் சஸ்பென்ஷனை ரத்து செய்யுமாறு கேட்க வைத்தாள். கல்லூரி நிர்வாக குழுவில் இருந்த 'அய்யா' கட்சியை சேர்ந்தவர் என்பதால் வெங்கடேஸ்வரலு, 'எதுக்குய்யா என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அந்த பையனை சஸ்பெண்ட் செஞ்சீங்க?' என்று தன்னுடைய மருமக்கள் மீது எரிந்து விழ அடுத்த நாளே சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டி வந்தது.

'பிரசாத் சொல்றது உண்மைதான். அப்பா அன்னைக்கி பயங்கர கடுப்பாய்ட்டாரில்ல? அதனால இதுல எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னால அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்றதுதான் நல்லதுன்னு நா நெனக்கேன்.' என்றாள் ரோஜா.

அந்த யோசனையை நிராகரிக்க யாருக்கும் தைரியமில்லை. ஆனால் அன்று இரவு உணவின்போதுதான் மாமாவுடன் ஆலோசிக்க முடியும் என்று 'எதுக்கும் நம்ம முருகுக்கிட்ட அந்த பையன் மேல ஒரு கண் வைக்கறதுக்கு சொல்லி வைப்போம். என்ன சொல்றீங்க?' என்றார்.

அனைவரும் ஒத்துக்கொள்ள நாகராஜுலு இண்டர்காமை எடுத்து, 'முருகேசன உள்ள வரச்சொல்லுங்க.' என்றார்.

அடுத்த சில நொடிகளில் செக்யூரிட்டிகளின் தலைவன் முருகு என்கிற முருகேசன் உள்ளே நுழைய அவன் மீது எரிந்து விழுந்தார். 'ஏன்யா இந்த பசங்கள்லாம் கோஷம் போட்டுக்கிட்டு காலேஜ் காம்பஸ்குள்ள சுத்தறதுக்கு நீங்க எப்படிய்யா பெர்மிட் பண்ணீங்க. ஏறக்குறைய அம்பது பேர வச்சிருக்கறது இதுக்குத்தானா? ஒங்களுக்கெல்லாம் வெக்கமாயில்ல? போய்யா போய் ஒன் ஆளுங்கக்கிட்ட சொல்லி வை. இதான் லாஸ்ட் வார்னிங்.

இனிமே இந்த மாதிரி ஏதாச்சும் நடந்துது கூண்டோட எல்லாத்தையும் வீட்டுக்கனுப்பிச்சிருவேன். என்ன வெளங்குதா?'

முருகேசன் பணிவுடன், 'வெளங்குது சார்.' என்றான். பிறகு தொடர்ந்து, 'அந்த பையன ரெண்டு தட்டு தட்டி வைக்கட்டுங்களா?' என்றான் குரலை இறக்கி.

நாகராஜுலு அவனை எரித்து விடுவது போல் பார்த்தார். 'ஏன்யா நா ஒன்கிட்ட அட்வைஸ் கேட்டனா? அதிகப்பிரசங்கித்தனமா எதையாவது செஞ்சி வைக்காத. அப்புறம் கரஸ்பாண்டண்ட் கிட்ட பேச்சு வாங்க முடியாது. போய் நா சொன்ன வேலைய மட்டும் பாரு, போ.'

'சரி சார்.' என்று பணிவுடன் கூறிவிட்டு சென்றாலும் தன்னை இப்படியொரு சிக்கலில் சிக்கவைத்த குமாரை சும்மா விடக்கூடாது என்ற முடிவுடன் வெளியேறினான் முருகேசன்.

'என்ன சார் ஐயா ஏதாச்சும் சூடா சொல்லிட்டாங்களா...?' என்று சூழ்ந்துக்கொண்ட சகாக்களைப் பார்த்தான். தனக்கு கிடைத்த ஏச்சையும் பேச்சையும் இவர்கள் மீது காட்டினால் என்ன என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்தான். அதனால் மோசமான விளைவுகளே ஏற்படும் என்பது அவனுக்கு தெரியும். இருப்பினும் இவர்களை சற்று தட்டி வைப்பதுதான் நல்லது என்று நினைத்தான்.

'பின்னெ என்ன தட்டி குடுப்பாரா? நாமல்லாம் இங்க வந்து சேர்ந்து ரெண்டு வருசம் ஆவுதில்ல? இதுக்கு முன்னால இப்படி ஏதாச்சும் நடந்துருக்கா? அந்த பொடிப்பய இன்னைக்கி நம்ம எல்லார் மூஞ்சிலயும் கரி பூசிட்டானில்ல? நீங்களும் பாத்துக்கிட்டுத்தானய்ய நின்னீங்க? நீங்க மட்டும் அசால்ட்டா இல்லாம இருந்துருந்தா இப்படி நடந்துருக்குமா? ஒழுங்கா டூட்டி பாக்கலே எல்லாரையும் கூண்டோட வேலைய வுட்ட தூக்கிருவேங்கார். என்ன சரியா?'

'சார் அந்த பையன் கொஞ்சம் வசதியான பையன்னு கேள்வி. அத்தோட நம்ம ---------- எம்.எல்.ஏ கனெக்ஷனும் இருக்கு போலருக்கு. அதனால....' என்றது ஒரு குரல் குழுவிலிருந்து.

அவனைப் பார்த்து முறைத்தார் முருகு. 'அதுக்காக? அவன் என்ன பண்ணாலும் பாத்துக்கிட்டு இருப்பீங்களா? போங்கய்யா... அவனவன் லொக்கேஷனுக்கு போங்க. மறுபடியும் இப்படியொரு பிரச்சினை வராம பாத்துக்குங்க. நம்ம காம்பஸுக்குள்ள எந்த பையனும், பொண்ணும் பிரச்சினை பண்ணக்கூடாது. அது ஒங்க பொறுப்பு. சொல்லிட்டேன். போங்க...'

மறுபேச்சு பேசாமல் கூட்டம் கலைந்து செல்ல முருகேசன் தன் அறையை நோக்கி நடந்தார் மனதுக்குள் எழுந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்ற எண்ணத்துடன். அந்த பையன இப்படியே விட்டா சரிவராது. தட்டி வைக்கணும். ஆனா தப்பு நம்ம மேல விழுந்துராம பாத்துக்கணும்.

தொடரும்...

1.11.07

நாளை நமதே 28

Technorati Tags:

அன்று கல்லூரி வளாகமே பதற்றத்துடன் இருந்தது.

கல்லூரி முகப்பு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பே இதற்குக் காரணம்.
வாசனும் மூர்த்தியும் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கியதுமே முகப்பில் குழுமியிருந்த கும்பலைக் கவனித்தனர். கூட்டத்தில் இருந்த பல
மாணவர்கள் தங்களுக்குள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

'வாடா என்னன்னு பாக்கலாம்.' என்றவாறு கூட்டத்தை நோக்கி நகர முயன்ற மூர்த்தியைப் பிடித்து நிறுத்தினான். 'வேணாம் மூர்த்தி, நீ ஒன் காலேஜுக்கு போ... இது ஒன் பிரச்சினையில்லை.'

'போடா தொடநடுங்கி. இன்னைக்கி இங்க பிரச்சினைன்னா நாளைக்கி என் காலேஜுல. எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள்ளதான இருக்கு?'

மூர்த்தியின் நடையே இது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கப் போகிறது என்பதை உணர்த்த வாசன் என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றான். அவனுடைய பேருந்தை தொடர்ந்து வந்து நின்ற பேருந்துகளிலிருந்து இறங்கிய மாணவர்களுள் பலர் அவனைப் போலவே தயங்கி நிற்பதைப் பார்த்தான். மூர்த்தியைப் போன்ற ஒரு சில மாணவர்கள் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை வாசிப்பதில் தீவிரம் காட்டுவதும் தெரிந்தது.

'என்ன வாசன், என்ன விஷயம் ஏன் இங்கயே நிக்கீங்க'

வாசன் திரும்பிப் பார்த்தான். சுந்தர். கடந்த இரு மாதங்களாக ஒரே வகுப்பில் இருந்தாலும் அதுவரை சுந்தர் அவனிடமோ அல்லது அவன் சுந்தரிடமோ பேசியதில்லை. சாதாரணமாக யாருடன் பேசாமல் அமைதியாக கல்லூரிக்கு வந்து சென்ற அவனை வாசன் பலமுறை கவனித்திருக்கிறான். பேசவும் முயன்றிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அதை அவன் தவிர்ப்பதை உணர்ந்து அவனுடைய போக்கிலேயே விட்டுவிட்டான்.

'தெரியல சுந்தர். மேனேஜ்மெண்ட் ஏதோ நோட்டீஸ் ஒட்டியிருக்காங்க. அதுலதான் பிரச்சினை போலருக்கு.' என்றான் வாசன்.

மூர்த்தி கூட்டத்திலிருந்து விலகி தங்களை நோக்கி வருவது தெரிந்தது. அவன் வருகிற தோரணையே வாசனை கதிகலங்க வைத்தது. 'சரி சுந்தர் நீங்க போங்க... நா என் பிரதர் கிட்ட பேசிட்டு வரேன்.'

சுந்தர் புரிந்துக்கொண்டு விலகிச் செல்ல தன்னை நோக்கி வந்த தன் சகோதரனை நெருங்கினான். 'மூர்த்தி ஒன்னும் சொல்லாத. ஒன் மூஞ்சியிலயே கோவம் தெரியுது. சுத்தி பசங்க நிக்கறாங்கங்கறத மறந்துட்டு எதையாவது வில்லங்கமா சொல்லிறாத ப்ளீஸ்.'

'என்னடா பேசாம போறது? இதென்ன காலேஜா, ஸ்கூலா? வர்ற ஒன்னாந் தேதியிலருந்து யூனிஃபார்ம் கொண்டு வரப்போறாங்களாம்! எப்படிறா சும்மாருக்கறது? ஒருவேளை இதே நோட்டீஸ் எங்க காலேஜ்லயும் ஒட்டியிருக்கோ என்னவோ. நீங்க ஏதும் பண்றீங்களோ இல்லையோ எங்க காலேஜ்ல நா இத சும்மா விடப்போறதில்லை.'

அவனுடைய கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் மூர்த்தி கோபத்துடன் கூறிவிட்டு அவனுடைய கல்லூரியை நோக்கி செல்ல வாசன் தன்னை பார்த்தவாறு நின்ற மாணவர்களின் பார்வையை சந்திக்க துணிவில்லாமல் தலையைக் குனிந்தவாறு முகப்பில் நின்ற கும்பலை தவிர்த்து தன் வகுப்பை நோக்கி நடந்தான்.

அவனுக்கென்னவோ கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

கல்லூரி துவக்க நாளிலிருந்தே சில மாணவர்களின் குறிப்பாக மாணவிகளின் உடையில் அவனுக்கு உடன்பாடில்லை. ஏதோ ஃபேஷன் பெரேடுக்கு செல்வதுபோன்ற உடையில் வருவது சற்றே முரண்பாடாக தெரிந்தது. முதல் நாளன்றே கல்லூரி தலைவர் மாணவ, மாணவியர் எத்தகைய உடையில் வர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை வேண்டுமென்றே சிலர் பொருட்படுத்தாமல் தங்கள் மனம் போன்றவாறு உடை உடுத்தி வந்ததை அவன் கவனித்திருக்கிறான்.

'டேய் மச்சி அவ ட்ரெஸ்ச பாத்தியா? குலுக்கு நடிகை கெட்டா போ. இதுங்கள பாக்கறதுக்கே டெய்லி வரலாம் போலருக்கு...' என்பதுபோன்ற சில மாணவர்களுடைய வெளிப்படையான கமெண்டும் அவன் காதுகளில் விழாமல் இல்லை.

அவன் வகுப்பறையில் நுழையும்போது ஏற்கனவே பரத் வந்துவிட்டிருந்தது தெரிந்தது.

'என்ன வாசன் மூர்த்தி பயங்கர டென்ஷனாய்ட்டார் போலருக்கு?' என்றான் பரத்.

'ஆமாம் பரத். அவங்க காலேஜ்ல போயி ஏதாச்சும் பெருசா கலாட்டா செஞ்சிருவானோன்னு பயமாருக்கு.'

பரத் சிரித்தான். 'எப்படி வாசன்... அவன் ஒன் ட்வின் ப்ரதரா? நம்பவே முடியலை.'

'டேய் எல்லாரும் க்ளாச விட்டு வெளியில வாங்கடா.' என்ற ஆர்ப்பாட்டமான குரல் வகுப்பறை வாசலில் இருந்து எழும்ப இருவரும் திடுக்கிட்டு வாசலைப் பார்த்தனர்.

கல்லூரிக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே எச்.ஓ.டியை கிண்டலடித்துவிட்டு ஒருவாரம் சஸ்பெண்ட் ஆகியிருந்த குமார் தன் சகாக்களுடன்!

வாசனும் பரத்தும் அவர்களைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க அறையிலிருந்த மாணவர்கள் சிலர் எழுந்து வாசலை நோக்கி நடந்தனர்.
மாணவியர்கள் பலரும் என்ன செய்வதென தெரியாமல் தயங்கியவாறு பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர்.

பரத் எழுந்து ஜோதிகாவை நெருங்கினான். 'We need not respond to them. Just sit tight. Madam might come now and handle him.'

ஜோதிகா சரி என்றவாறு தலையை அசைத்துவிட்டு திரும்பி பின் வரிசையில் அமர்ந்திருந்த ப்ரியாவைப் பார்த்தாள். பார்வைகள் சந்தித்தன. ஆனால் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் ப்ரியா தலையை திருப்பிக்கொள்ள 'என்ன இவ என்னமோ விரோதிய பாத்தா மாதிரி மூஞ்ச திருப்பிக்கிறா?' என்று நினைத்தாள்.

குமார் இப்படியொரு சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தான்? அவனுக்கு பரத்தின் மீதிருந்த கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இவனாலதான நம்மள சஸ்பெண்ட் பண்ணாங்க? அன்னைக்கி காலேஜ்லயும் வீட்லயும் பட்ட அவமானம் கொஞ்சமா? அவனுக்காக அப்பா வந்து பிரின்சிகிட்ட மன்னிப்பு கேக்கறாப்பலல்லே வச்சிட்டான்? இன்னைக்கி வச்சிக்கறேன்.

'டேய் பாத்தீங்களாடா நம்ம தல ஏதோ சம்பந்தம் இல்லாததுபோல பாக்கறத? இவனையெல்லாம் க்ளாஸ் ரெப்பா தேர்ந்தெடுத்தீங்களே ஒங்கள சொல்லணும். அன்னைக்கி மட்டும் நா இருந்தேன்னு வச்சிக்கோ இவனை மாதிரி பூணூல் கேசுங்களையெல்லாம் ரெப்பாக வுட்டுருக்க மாட்டேன்...'

பரத்தின் இனத்தைக் குறித்து குமாரின் தரக்குறைவான பேச்சு அவனைச் சூழ்ந்திருந்த சகாக்களையே முகம் சுழிக்க வைத்தது. 'டேய் அவனெ பெர்சனலா அட்டாக் பண்ணி ட்ராக்க மாத்திராத. நம்ம வந்த விஷயத்த பத்தி மட்டும் பேசு.' என்று கிசுகிசுத்தான் சகாக்களில் ஒருவன்.

அதுவும் சரிதான் என்று குமார் நினைத்தானோ என்னவோ பரத்தை தவிர்த்து மற்ற மாணவர்களைப் பார்த்தான். 'இங்க பாருங்கடா இன்னைக்கி யூனிஃபார்ம்னு சொல்வாய்ங்க.. நாளைக்கி சாமியார் ட்ரெஸ்லதான் வரணும்பாய்ங்க... இத இப்பவே எதுக்கணும். வாங்க எல்லாரும் ப்ரின்சி ரூமுக்கு போவோம். செக்கண்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் கூட அங்கதான் போயிருக்காங்க.'

வகுப்பில் இருந்தவர்களுள் சிலர் வேறுவழியின்றி எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தனர். அந்த கூட்டத்தில் சேர்வதா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் பலர் பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர். சிலர் பரத்தை நெருங்கி, 'பரத் ஏதாச்சும் பண்ணு. இல்லன்னா அவன் பின்னால போறத தவிர வேற வழி இல்லை.' என்றனர்.

பரத் அமைதியாக குமாரையும் வகுப்பில் இருந்தவர்களையும் பார்த்தான். 'எனக்கு காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் எடுத்த டிசிஷன்ல எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லை. குமார் கூட போகணும்னு நினைக்கறவங்க தாராளமா போலாம். ஆனா அதனோட consequences என்னவாருக்கும்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டு போங்க. அவ்வளவுதான் சொல்வேன்.'

குமார் கோபத்துடன் அவனை நெருங்கினான். 'அப்ப நீ என்னடா க்ளாஸ் ரெப்? ரிசைன் செஞ்சிரு. நா பாத்துக்கறேன்.'

பரத் அவனை பொருட்படுத்தாமல் தன் கையிலிருந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான்.

'டேய் என்ன திமிரா நா பாட்டுக்கு இங்க கத்திக்கிட்டு நிக்கேன். நீ பாட்டுக்கு என்னமோ ------- மாதிரி படிச்சிக்கிட்டுருக்கே...' கோபத்தில் நிதானமிழந்த குமார் பரத்தின் காலரை கொத்தாக பிடித்து இழுக்க அடுத்த சில நொடிகளில் அங்கே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.....


தொடரும்...