30.4.13

நிஜமல்ல நிழல் - 2


மாலையில் சேகர் வீடு திரும்பியதும் உடனே ராஜி வந்து சென்ற விஷயத்தை கூறாமல் அவன் குளித்து முடித்து சோபாவில் வந்து அமர்ந்து அவள் நீட்டிய காப்பியை அருந்தி முடிக்கும் வரை காத்திருந்தாள்.

'கையில என்ன சுமதி, ஏதோ டைரி மாதிரி இருக்கு?' என்ற சேகரிடம் அதை நீட்டி காலையில் ராஜி வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்துவிட்டு அவன் டைரியை படித்து முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

சேகர் படித்து முடித்துவிட்டு சுமதியை பார்த்தான். 'இதுல நா என்ன முடியும்னு நினைக்கறே? இது ப்ளாக்மெய்ல் மாதிரில்ல தெரியுது? க்ரைம் பிராஞ்ச் விஷயமாச்சே? லோக்கல் போலீசுக்குத்தான் போகணும்.'

'என்னங்க நீங்க... அங்க போனா பேப்பர் அது இதுன்னு விஷயம் அசிங்கமாயிராதா?'

'ஆமா... ஆவத்தான் செய்யும். அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?'

'அப்படி அசால்டா சொல்லாதீங்க, ப்ளீஸ். அந்த அக்கா நாம இங்க வந்த புதுசுல எவ்வளவு ஹெல்ப் செஞ்சிருக்காங்க? பதிலுக்கு நாம இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கோம்? இந்த விஷயத்துல நீங்க ஏதாச்சும் செஞ்சிதான் ஆவணும்.'

சேகர் சிரித்தான். 'என்ன நீ, விவரம் தெரியாம பேசற? நா இருக்கறது சிசிபி. சென்னை, ஏன் தமிழ்நாட்டு முழுசுக்குமே கூட பொதுவான செல். சைபர் க்ரைமுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல எல்லாம் தலையிட முடியாது சுமி. வேணும்னா ஒன்னு செய்யிலாம்.'

'என்ன?'

'பாஸ்கர டீட்டெய்லா ஒரு கம்ப்ளெய்ன்ட் எழுதி லோக்கல் ஸ்டேஷன்ல குடுக்கச் சொல்லு. இங்க க்ரைம் பிராஞ்ச்ல இருக்கற எஸ்.ஐ என்னோட பேட்ச்மேட்தான். பெரிசா பப்ளிசிட்டி இல்லாம அந்த பொண்னெ கூப்ட்டு டீல் பண்ண சொல்றேன். இதுல பெரிய எடம்னு யாரும் சம்பந்தப்படாம இருந்தா சிம்பிளா ஒரு மிரட்டல் மிரட்டுனாலே சரியாயிரும்.'

தன்னுடைய பதிலில் திருப்தியடையாமல் அமர்ந்திருந்த சுமதியின் கரங்களை பற்றினான் சேகர். 'என்ன டல்லாயிட்டே? இதுக்கு மேல நா என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கே.'

'இல்லைங்க... இது போறாதுன்னு நினைக்கேன். நீங்களே அந்த பொண்னெ மீட் பண்ணி மிரட்டணும்னு சொல்றேன்.'

சேகர் தலையை அசைத்தான். 'அது முடியாது சுமி. இத லோக்கல் எஸ்.ஐக்கு தெரியாம, அதுவும் கம்ப்ளெய்ன்ட் இல்லாம எதுவும் செய்ய முடியாது. இதுல பெரிய ஆளுங்க யாரும் சம்பந்தப்பட்டிருந்தா நா அந்த லேடிய மிரட்டப் போயி எங்க மேலிடத்துக்கு என் மேல கம்ப்ளெய்ன்ட் போயிருச்சின்னா அப்புறம் நம்ம பாடு திண்டாட்டமாயிரும். இந்த போலீஸ் வேலையே வேணாம்னுதான எஞ்சினீயரிங் எடுத்தேன்? தாத்தாவும் அப்பாவும் சேர்ந்துக்கிட்டு சைபர் க்ரைம் டிப்ளமா கோர்ஸ் முடிடா நீ நினைக்கறா மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலையாவே இருக்கும்னு சொன்னதால சம்மதிச்சேன். இருந்தும்  சைபர் க்ரைம் செல்லுல சேர்றதுக்குக் கூட ஒரு ஆர்டினரி போலீஸ்காரன் மாதிரி கையிறுல ஏறு, ஹை ஜம்ப், லாங் ஜம்ப்லாம் பண்ணுன்னு டார்ச்சர் பண்ணித்தான இந்த எஸ்.ஐ போஸ்ட்ட குடுத்தாங்க?  போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல என்ன படிச்சிருந்தாலும் ஒரே ட்ரீட்மென்ட்தான் சுமி. இந்த லட்சணத்துல நமக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல, அதுவும் ஒரு ரிட்டன் கம்ப்ளெய்ன்ட் கூட இல்லாம, தலையிட்டு எசகுபிசகா ஏதாச்சும் ஆயிருச்சின்னா வேல போறது மட்டுமல்லாம நம்மளையே உள்ள தூக்கிப் போட்டுருவானுங்க..'

சுமதி சிறிது நேரம் அவனுடைய விளக்கத்தில் திருப்தியடையாமல் அமர்ந்திருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சுடன் பதில் பேசாமல் சமையலறையை நோக்கி நடக்க சேகரும் எழுந்து அவளை பின்தொடர்ந்து கிச்சனுக்குள் நுழைந்தான்.

'என்னடா... கோவமா?'

'பின்னே... ஏதோ தெரிஞ்சவங்களாச்சே நமக்கு எப்படியும் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சித்தானே நம்மள தேடி வந்துருப்பாங்க? அவங்களுக்கு தெரியாதா லோக்கல் போலீசுக்கு போகணும்னு? படிச்சிருந்தும் ஏதோ புத்தி பேதலிச்சிப் போயி பாஸ்கர் இப்படி பண்ணிட்டாரு... இத எடுத்துக்கிட்டு போலீசுக்கு போயி நின்னாருன்னா இவரையே போலீஸ் நக்கல் பண்ணி நீதான தப்பு பண்ணே அனுபவின்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிருவாங்க. உங்க போலீஸ் டிப்பார்ட்மென்ட பத்தி எனக்கு தெரியாதா என்ன? உள்ளாற ஆளுங்க தெரிஞ்சிருந்தாத்தான எதுவுமே நடக்கும்?'

சேகர் சிரித்தான். 'நீ சொல்றதும் சரிதான். நா இப்ப என்ன பண்ணா ஒனக்கு திருப்தியாருக்கும், சொல்லு, பண்றேன்.'

சுமதி கைவேலையை விட்டுவிட்டு அவனுடன் ஹாலுக்கு திரும்பி அவனையும் அமர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தாள். 'நீங்க ஒன்னும் பெரிசா பண்ண வேணாம். இப்ப அந்த பொண்ணு கேட்டுருக்கற பணத்த ரெடி பண்ணி வச்சிக்கிட்டு அந்த பொண்ணுக்கு அக்கா ஃபோன் போட்டு சொல்லட்டும். அதுக்கப்புறம் அவ வரச் சொல்ற எடத்துக்கு அக்கா மட்டும் போகட்டும். பை கைமார்றப்போ அந்த பொண்ண ஒங்க ஆளுங்க ரெட்ஹேன்டா புடிச்சிரணும். அப்புறம் ஸ்டேஷனுக்கு கொண்டு போயி விசாரிக்கற விதத்துல விசாரிச்சா அவ யாரு, அவளுக்கு பின்னால யார், யார் இருக்கான்னு தெரிஞ்சிரப் போவுது?'

சுமதி கூறி முடிக்கும்வரை அவளையே ஒரு புன்னகையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த சேகர் அவள் முடித்ததும் வாய் விட்டு சிரித்தான். 'பரவால்லையே நீ ஏதோ பட்டிக்காடுன்னுல்ல நினைச்சேன்? சிட்டிக்கு வந்து முழுசா ஒரு வருசம் கூட ஆவலை எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கே... அதென்ன விசாரிக்கற விதத்துல விசாரிக்கறது? போலீஸ் விசாரனைய பத்தி ஒனக்கென்ன தெரியும்?'

சுமதி வெட்கத்துடன் சிரித்தாள். 'அதான் எல்லா சீரியல்லையும் காட்றானே?'

'சரி நீ சொல்றாப்பலயே செஞ்சாலும் லோக்கல் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிதான ஆவணும்? நா வேணும்னா ஒரு ரிட்டன் கம்ப்ளெய்ன்ட் இல்லாமயே இதுல இன்வால்வ் ஆவலாம். அந்த பொண்ணெ ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போறதுக்கு அவங்க ஹெல்ப் வேணுமே?'

'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க ஒங்க க்ரைம் ப்ராஞ்ச் ஃப்ரென்டுக்கிட்ட சொல்லி கம்ப்ளெய்ன்ட் இல்லாம முடிக்கப் பாருங்க. நல்ல ஃபேமிலிலருந்து வந்தவங்க மாதிரி இருக்காங்க சேகர் அந்த அக்கா. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா அவங்களுக்கு மட்டுமில்லாம அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய சங்கடமா இருக்கும்? கொஞ்சம் யோசிச்சி பாருங்க ப்ளீஸ்.'

சேகர் சிரித்தான். 'பாஸ்கரும் இத யோசிச்சி பாத்துருக்கணும்ல? அந்த ராஜேஸ்வரிக்கு என்ன கொறச்சல், சும்மா கும்முன்னு.....' சுமதியின் முறைப்பு அவனை பாதியிலேயே நிறுத்தியது.

'அந்தக்கா கும்னு இருக்காங்களா? அப்ப நா எப்படி இருக்கேன்...?'

சேகர் அசடு வழிந்தான். 'சரி அத வுடு.. ஏதோ வாய் தவறி வந்துருச்சி... நீ சொன்னா மாதிரி  எஸ்.ஐ ஃப்ரெண்டுக்கிட்ட பேசி பாக்கறேன். நீ எதுக்கும் அந்த லேடியோட ஃபோட்டோ இருந்தா அதையும் அவ வீட்டு அட்றசையும் வாங்கி வை.  இப்ப நீ போயி சமையல முடி.'

'தாங்ஸ். அப்ப அந்த அக்காவ பணத்த ரெடி பண்ண சொல்லட்டா?'

'சேச்சே அதெல்லாம் வேணாம். விஜிலென்ஸ்காரங்க இந்த மாதிரி ஒரு செட்டப்பே பண்ணி வச்சிருப்பாங்க. அவங்க குடுக்கற பேக கொண்டு போனா கூட போறும். நா கேட்டுட்டு சொல்றேன். நீ அத மறந்துட்டு வேலைய பாரு. நா கொஞ்ச நேரம் ஐபிஎல் மேட்ச் பாக்கறேன். இன்னைக்கி சென்னையோட மேட்ச் இருக்கு.'

சுமதி சலிப்புடன் எழுந்தாள். 'ஆமா இந்த கிரிக்கெட்ட பாக்கறதுல அப்படி என்னதான் இருக்கோ..'

அவள் சமையலறையை நோக்கி செல்ல சேகர் சிரித்தவாறே டிவியை ஆன் செய்தான்.

*****

அடுத்த நாள் காலை சேகர் பைக்கை ஸ்டார்ட் செய்ததும் 'சேகர் நா நேத்து சொன்னது....' என்று இழுத்தாள்.

சேகர் புன்னகையுடன், 'எதுத்த வீட்டு சமாச்சாரம்தான? போற வழியில பாத்துட்டு போறேன். அதுக்குன்னு நா ஆஃபீசுக்கு போனதும் ஃபோன் போட்ராத, நா அப்புறமா ஃபோன் பண்றேன், என்ன?'

'சரிங்க... நா வெய்ட் பண்றேன்.'

சேகர் கிளம்பிச் சென்றதும் வாசலை பூட்டிவிட்டு ஹாலுக்கு திரும்பி கைப்பேசியை எடுத்து ராஜியை அழைத்தாள். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'அக்கா சேகர்கிட்ட டீட்டெய்லா சொல்லியிருக்கேன். கவலப்படாம இருங்க. அவர் ஃபோன் வந்ததும் ஃபோன் பண்றேன்.' என்றாள்.

'ரொம்ப தாங்ஸ் சுமி. நா இன்னைக்கி ஆஃபீசுக்கு போல. பாஸ்கர் என் ஜ்வெல்ஸ கொண்டுக்கிட்டு போயிருக்கார். பணத்த இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள ரெடி பண்னணும். அந்த பொண்ணு ரெண்டு நாளைக்குள்ள தந்தே தீரணும்னு சொன்னதால வேற வழி தெரியல..'

பண விஷயத்தை பத்தி சேகர் சொன்ன உத்தியை ராஜியிடம் தெரிவிக்க விரும்பவில்லை சுமதி. 'சரிக்கா நீங்க ரெடி பண்ணுங்க... ஆனா அதுக்கு அவசியமில்லாமயே இத சேகர் முடிச்சிருவார்னு நினைக்கறேன். நீங்க அந்த பொண்ணோட ஃபோட்டோவையும் அவ வீட்டு அட்றசையும் மட்டும் எங்கிட்ட குடுத்துருங்க..சேகர் கேட்டாரு.'

'ஃபோட்டாவா? எங்கிட்ட இல்லையே... பாஸ்கர் கிட்ட கேக்கறேன். அட்றஸ் அவர்கிட்ட கூட இருக்கான்னு தெரியலை. அவ ரொம்ப உஷார் பார்ட்டி சுமி... இவர் மொபைல்ல கூட அவ ஃபோன் நம்பர் இல்லன்னா பாரேன்.'

'பேராவது தெரியுமா, இல்லையா?'

'விஜி... அந்த டைரியிலதான் பாத்தேன். ஆனா அதுகூட டூப்பாருக்கும். யார் கண்டா?'

'இருக்கும்.... ப்ளாக்மெய்ல் பண்ணணும்னே ஆம்பிளைங்கள துறத்துறவளுங்க நெஜ பேர்லயா பண்ணுவாளுங்க?'

'சரி சுமி யாரோ வாசல்ல நிக்கறா மாதிரி தெரியுது.. நா அப்பறம் பண்றேன்.'

'சரிக்கா...' என்ற சுமதி கைப்பேசியுடன் ஹாலில் இருந்தவாறே எதிர் வீட்டு வாசலைப் பார்த்தாள். ஒரு இளம் பெண் நிற்பது தெரிந்தது. உள்நோக்கி திரும்பி நின்றிருந்ததால் முதுகு மட்டுமே தெரிந்தது.

யாராக இருக்கும் என்ற நினைப்புடன் வாசலை நெருங்கி பார்த்தாள். அந்தப் பெண் வாசற்கதவை திறந்து ராஜி வந்ததும் வராததுமாக அவளை நோக்கி ஏதோ கோபத்துடன் பேசுவது தெரிந்தது. ஆனால் தெளிவாக ஒன்றும் கேட்கவில்லை. சாலையில் சென்றவர்களில் சிலர் நின்று பார்த்துவிட்டு போவதை பார்த்த சுமதி அங்கு நிற்க விரும்பாமல் வீட்டிற்குள் திரும்பி தன் வேலையை பார்க்கலானாள். ஆனாலும் மனது எதிர் வீட்டு வாசலில் பார்த்த பெண் யாராக இருக்கும், ஏன் அவள் ராஜியை பார்த்து கோபத்துடன் இரைய வேண்டும் என்பதிலேயே லயித்திருந்தது.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் வாசல் வழியே எதிர் வீட்டைப் பார்த்தாள். அந்த பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை வீட்டிற்குள் இருப்பாளோ? கேட் இன்னும் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருக்கவில்லை. 'ராஜி அக்கா உள்ளேதான் இருக்க வேண்டும்.' மனம் இருப்புக் கொள்ளாமல் அலைபாயவே தலைமுடியை சரிசெய்துக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர் வீட்டை நெருங்கி அழைப்பு மணியை அழுத்தினாள்.

உள்ளிருந்து பதிலேதும் வராமல் போகவே கதவை லேசாக அழுத்தினாள். அது திறந்துக்கொள்ள உள்ளே நுழைந்து ஹாலில் நின்றவாறு ' அக்கா நாந்தான்.. உள்ள இருக்கீங்களா?' என்றாள்.

'பெட்ரூம்ல இருக்கேன்.. உள்ள வா'

ஹாலை ஒட்டியிருந்த படுக்கையறைக்குள் நுழைந்த சுமதி கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த ராஜியை பார்த்தாள். 'என்னக்கா யார் அந்த பொண்ணு? எதுக்கு உங்கள பாத்து அப்படி கத்திச்சி?'

'அவதாம்மா, நா சொன்னேனே... சரியான பத்திரக்காளி. எப்படி கத்தறா பாத்தியா? ஏதோ நா அவ புருஷன வச்சிக்கிட்டிருக்கா மாதிரி... எல்லாம் பாஸ்கரோட முட்டாத்தனம்தான் காரணம்.'

'எதுக்கு வீடு வரைக்கும் வந்தாளாம்? அதான் ரெண்டு நாளைல பணம் தர்றதா சொல்லிட்டீங்கல்லே?'

'இன்னைக்கி, இப்பவே அவ கேட்ட பணம் முழுசையும் குடுத்திறணுமாம். எங்க வரணும்னும் சொல்லிட்டு போயிருக்கா.'

சுமதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். சேகர் ஆக்‌ஷன் எடுக்கறதுக்குள்ள அவ பணத்த வாங்கிக்கிட்டு தப்பிச்சிருவாளோ? 'இன்னைக்கேவா? நீங்க என்ன சொன்னீங்க?'

'நா என்ன சொல்ல முடியும் சுமி? பணத்த தரலன்னா அவ கிட்ட இருக்கற வீடியோ, இந்த மனுசன் முட்டாத்தனமா எழுதுன லெட்டர்ஸ் எல்லாத்தையும் காப்பி எடுத்து பாஸ்கரோட பாஸ்சுக்கு அனுப்பிருவாளாம். அப்புறம் பாஸ்கர் பாடு அவ்வளவுதான். வேலையும் போயிரும்... அத்தோட எங்க மானமும் போயிரும்...' ராஜி தொடர முடியாமல் விசும்ப சுமதி அருகில் சென்று அவளுடைய தோள்களை தொட்டு சமாதானப்படுத்தினாள்.

'அழுவாதீங்கக்கா. இப்ப அழறத விட அடுத்து நாம என்ன செய்யணும்னு யோசிப்போம். பாஸ்கர் கிட்ட பேசினீங்களா? பணத்த ரெடி பண்ணிட்டாராம்மா?'

'எப்படி சுமி... அவ்வளவு தொகைய எப்படி ஒரே நாள்ல...? என் ஜ்வெல்ஸ வச்சி ஒரு மூனு லட்சம் பொறட்டிரலாம்னு பாஸ்கர் சொன்னார். ஆனா மீதி தொகைக்கு என்ன பண்றதுதான்னு தெரியல. இந்த வார கடைசிக்குள்ள மீதி அமவுன்டையும் பொறட்டிட்டு குடுத்துடறேன்னு சொன்னேன். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டா. பாஸ்கர்கிட்ட இதப்பத்தி இன்னும் சொல்லல.'

'என்னக்கா சொல்றீங்க? மூனு லட்சத்துக்கு மேல கொடுக்கணுமா?'

'ஆமா சுமி. இன்னும் ரெண்டு லட்சம் வேணும். மொத்தமா அஞ்சு லட்சம் வேணுமாம்.'

'என்னக்கா இது அநியாயமா இருக்கு?'

'என்ன பண்ண சொல்ற சுமி? வசமா மாட்டிக்கிட்டாச்சி. இதுல பேரம் பேசப் போயி அவ ஏதாச்சும் ஏடாகூடமா செஞ்சி வச்சிட்டா?'

சுமதி ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

'நா வேணும்னா என் ஜ்வெல்ஸ்லருந்து ஒரு பதினஞ்சி பவுன் தரேங்க்கா. நீங்க எங்கயாச்சும் அடகு வச்சி பணத்த பொறட்டிருங்க. எப்படியிருந்தாலும் சேகர் ஒங்கக்கிட்டருந்து அந்த லேடி பணத்த வாங்கறப்ப போலீச வச்சி புடிச்சிருவாரு. அப்புறம் என் நகைய மீட்டுக்கலாம்.'

'ஐயையோ அதெல்லாம் வேணாம் சுமி. சேகருக்கு தெரியாம... ஒருவேளை அவ பணத்தோட போலீசுக்கே டிமிக்கி குடுத்துட்டு ஓடிட்டாள்னா.... அப்புறம் ஒன் நகை? வேணாம் சுமி..நா பாஸ்கர் கிட்ட சொல்லி அதிக வட்டிக்கி எங்கன்னா கைமாத்தா வாங்க சொல்றேன். அவர் செஞ்ச வேலைதான? அவரும் கொஞ்சம் கஷ்டப்படட்டும்.'

'பரவால்லைக்கா. சேகருக்கு தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்லமாட்டார். நீங்க பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுங்க. நானும் சேகர்கிட்ட அந்த லேடி வந்து போன விஷயத்த சொல்லிட்டு ஜ்வெல்ஸ எடுத்துக்கிட்டு வரேன்.'

சுமதி எழுந்து சென்று தன்னுடைய அலமாரியில் வைத்திருந்த நகைகளில் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து ராஜேஸ்வரியிடம் கொடுத்தாள். 'நீங்க ஒன்னுக்கும் கவலைப்படாம மேக்கொண்டு ஆக வேண்டியதை பாருங்க அக்கா. நா சேகர்கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன். அவர் ஒரு மணி நேரம் கழிச்சி ஃபோன் பண்றேன்னு சொல்லியிருக்கார்.'

நகைகளை விருப்பமில்லாமல் பெற்றுக்கொண்ட ராஜேஸ்வரி சுமதியின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்கலங்கினாள். "இத என்னைக்கிம் மறக்க மாட்டேன் சுமி. சேகர் கிட்ட இத பத்தி சொல்லிட்டியா?'

'இல்லக்கா. இப்ப அவருக்கு இந்த விஷயம் தெரிய வேணாம். நீங்கதான் ரெண்டு, மூனு நாளைல திருப்பி தந்துருவீங்களே? வேணும்னா அப்புறம் சொல்லிக்கலாம். நா வரேன். அவரோட ஃபோன் வந்தாலும் வரும். நீங்க பணத்தையெல்லாம் பொறட்டிட்டு சொல்லுங்க.'

'சரி... சுமி...'

சுமதி தன் வீட்டுக்கு திரும்பி தன் அலுவல்களில் மூழ்கிப்போனாள்.

தொடரும்..

29.4.13

நிஜமல்ல நிழல்..(உண்மை சம்பவம்)


லையை வாரி முடித்த சுமதி நெற்றி பொட்டை சரி செய்துக்கொள்ள கண்ணாடியை நெருங்கினாள்.

வாசலில் நிழலாடுவது தெரிந்தது. யாரென்று பார்த்தாள்.

எதிர் வீட்டு அக்கா: ராஜி என்கிற ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரியை பார்க்கும்போதெல்லாம் சுமதிக்கு பொறாமையாக இருக்கும். ஒல்லியான ஆனால் வாளிப்பான  உடல்வாகு. எலுமிச்சை நிறம். இடுப்பிற்கு கீழ் இறங்கும் அழகான அடர்த்தியான தலைமுடி. எப்போதும் பளிச்சென்று
ஈறுகள் தெரிய சிரிக்கும் விதம்... ராஜியின் கணவர் பாஸ்கரும் பார்க்க அம்சமாக, இருவருக்கும் அபாரமான ஜோடிப் பொருத்தம்.

அவர்கள் இருவருடனும் ஒப்பிடும்போது சுமதி சற்று சுமார் ரகம்தான். ஆகவே சிறுவயது முதலே அவளுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதிகமாக யாருடனும் பேசமாட்டாள். அப்படி இருந்தவளை வலிய, வலிய வந்து பேசி ஆறே மாதத்தில் கலகலப்பாக்கியவள் இந்த ராஜிதான். அவளைப் பற்றி அக்கம்பக்கத்தில் அரசல்புரசலாக பேசிக்கொள்வதைக் கேட்டும் சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன சகஜமாக பேசிப் பழகினாள்.

'உருவத்துல என்ன இருக்கு சுமி? நீ நல்லா படிச்சிருக்கே. சேகரும் படிச்சிருக்கார். கவுரமான போலீஸ் வேலை. என்னெ விட சின்னவளா இருந்தாலும் எத்தனையோ விஷயங்கள் கத்து வச்சிருக்கே. நானும் பாஸ்கரும் கம்ப்யூட்டர் என்ஜினியர்ஸ்னுதான் பேரு அத தவிர எனக்கோ அவருக்கோ ஒன்னும் தெரியாது. அதுவுமில்லாம நாம வாழப் போறது கொஞ்ச நாள்தான். இதுல எதுக்கு வீணா ஈகோ பாத்துக்கிட்டு அக்கம்பக்கத்துல யார் கிட்டயும் பேசாம... என்னாலல்லாம் அப்படி இருக்க முடியாதும்மா... இங்க நிறைய பேருக்கு நா சிரிக்கிற ஸ்டைலே புடிக்காது தெரியுமா? வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போச்சுங்கறத முழுசா நம்பறவ நா..' என்பவளை எப்படி வெறுக்க முடிகிறது என்று நினைப்பாள் சுமதி.

ராஜி அழைப்பு மணியை அடிக்க முயல்வதைக் பார்த்தாள். 'வாங்கக்கா, திறந்துதான் இருக்கு.' என்றாள்.

'பிசியா இருக்கியா சுமி?'

'இல்லியே... என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க? ஆஃபீசுக்கு லீவா?'

பதிலேதும் கூறாமல் சோபா நுனியில் அமர்ந்த ராஜியின் கண்கள் கலங்கியிருந்ததை பார்க்க முடிந்தது.

'என்னாச்சிக்கா, இப்படி உங்கள நா பாத்ததேயில்லையே?'

ஆம். குடியேறிய முதல் நாளே புன்னகை நிறைந்த முகத்துடன் வாசலேறி வந்து 'வாங்க, நியூலி மேரிடா, குடிவந்த நேரம் சீக்கிரமே அழகா ஒரு குட்டி பொறக்கணும்னு விஷ் பண்றேன்' என்றவள் ராஜி. சுமதி திருமணம் முடிந்த கையோடு குடி வந்த வீடு அது. சென்னை சைபர் க்ரைமில் எஸ்.ஐ. ஆக போஸ்ட்டிங் ஆகி சென்னை வந்ததும் அவர்கள் பார்த்த முதல் வீடே பிடித்துப் போக வாடகை சற்று அதிகமாக இருந்தாலும் உடனே ஹவுஸ் ஓனர் கேட்ட
முன்தொகையை கொடுத்து அடுத்த வாரத்திலேயே குடியேறினர். பிறகுதான் தெரிந்தது ராஜிக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது.

பதிலேதும் கூறாமல் சோபாவில் அமர்ந்த ராஜி தன் கையில் வைத்திருந்ததை அவளிடம் நீட்டினாள்.

'என்னக்கா இது... டைரி மாதிரி இருக்கு?'

'ஆமாம் பாஸ்கரோடது... ஃபோல்ட் பண்ணி வச்சிருக்கற பேஜ கொஞ்சம் படியேன்?'

சுமதி தயங்கினாள். 'எப்படிக்கா... மத்தவங்க டைரிய.....'

'பரவால்லை... நாந்தான சொல்றேன்... படி..'

சுமதி தயக்கத்துடன் முனை மடிக்கப்பட்டிருந்த பக்கத்தை திறந்து பார்த்தாள்....

'என்னைக்கிம் போலவே பளிச்சின்னு... அவள பாக்கறப்பல்லாம் என் மனசுல ஏதோ ஒன்னு கிடந்து உருளுதே... ஏன்...?'

சுமதி திடுக்கிட்டு ராஜியை பார்த்தாள்.. 'என்னக்கா இது, யார பத்தி சொல்றார்?'

'அடுத்த பக்கத்த பாரு புரியும்..'

சுமதி அடுத்த பக்கத்தை பார்த்தாள்... அதிலும் அதே மாதிரியான வசனங்கள்.. அடுத்த பக்கம்.. அடுத்த பக்கம் என பாஸ்கருடைய கவனத்தை ஈர்த்த அந்த பெண்ணைப் பற்றிய வரிகள்... அநேகமாய் அனைத்துமே அந்த பெண்ணின் உடல் அழகைப் பற்றியதாகவே இருக்க... இத்தன அம்சமா வைஃப் இருக்கறப்ப இந்த மனுசனுக்கு ஏன் இப்படி புத்தி போவுது என்ற நினைப்புடன் மேலும் படித்தாள்....

'ஏப்ரல் 28 தேதிய பாரேன்...'

'இன்று அவளுடன் தனியாக.......' மேலே தொடர்வதை விடுத்து டைரியை மூடினாள் சுமதி. 'வேணாக்கா. மேல படிக்க முடியல....' டைரியை ராஜியிடம் நீட்டினாள். 'ஏன் சாருக்கு இப்படி புத்தி போவுது? ஒங்களுக்கு என்ன குறை?'

ராஜி கண்களை ஒத்திக்கொண்டு.... 'இன்னொரு பேஜில மார்க் வச்சிருக்கேன் பாரேன்.... செப்டம்பர் 8ம் தேதி.. அதயும்

படிச்சிட்டு சொல்லு...'

சுமதிக்கு இது தேவையா என்று தோன்றியது.  ராஜி சொன்ன பக்கத்தை புரட்டினாள். அதிர்ந்து போனாள்.

'எவ்வளவு பெரிய முட்டாள் நான்? எவ்வளவு ஈசியா அவ விரிச்ச வலையில மாட்டிக்கிட்டேன்.... ஏற்கனவே எவ்வளவோ

குடுத்தாச்சே... இப்ப கேக்கறத எப்படி புரட்டறது? பேசாம ராஜி கிட்ட சொல்லிரலாமா?'

'இது எல்லாமே ஒரு ப்ளான் போல இருக்கே ராஜிக்கா?' என்றாள் சுமதி அதிர்ச்சியுடன்.

ராஜி வேதனையுடன் புன்னகைத்தாள். 'பாஸ்கர் இன்னைக்கி காலையில இந்த டைரிய நா ஆஃபிசுக்கு போனப்பறம் படிச்சிப்பாருன்னு ஒரு கன்டிஷனோட குடுத்தப்ப என்னவாருக்குங்கற கன்ஃப்யூஷனோடத்தான் வாங்கினேன். ஆனா
இப்படி ஒரு ஷாக்கிங் விஷயம் இருக்கும்னு நா எதிர்பாக்கலே சுமி...'

'இது நம்ம வாசுதேவ மேனன் டைரக்‌ஷன்லு ஒரு படம் வந்துச்சே... பேர் கூட... ஆங்... பச்சக்கிளி முத்துச்சரம்னு... அதுல வர்ற மாதிரியே இருக்கு? பேசாம இத சேகர் கிட்ட குடுத்து டீல் பண்ண சொல்லலாமா?'

'அதுக்குத்தான் சுமி உங்கிட்ட கொண்டு வந்தேன். அந்த டைரியில இருக்கற பொண்ணு இத தனியா செஞ்சிருக்க சான்ஸே இல்ல.'

'எனக்கும் அப்படித்தான் தோனுதுக்கா... ? ஒருவேள அந்த படத்துல வர்ற மாதிரி இவ ஹஸ்பென்டே இதுக்கு பின்னால இருப்பானோ?'

'இருக்கும்... யார் கண்டா?'

'இந்த டைரிய நானே வச்சுக்கவா? சேகர் வந்ததும் குடுத்து ஏதாச்சும் பண்ண முடியுமான்னு கேக்கறேன். என்ன சொல்றீங்க?'

'சரி' என்றவாறு எழுந்து நின்றாள் ராஜி.'தப்பா நினைச்சிக்காத சுமி.. எனக்கு ஒன்னெ விட்டா வேற ஆள் இல்ல... அக்கம் பக்கத்துல தெரிஞ்சா இவளுக்கு வேணும்னு சந்தோசப்படுவாங்களே தவிர யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டாங்க... அதான்...

சேகர் நினைச்சா இத ஈசியா சால்வ் பண்ணிரலாம்னு நினைக்கறேன்... நா சேகர் வந்ததும் அந்த முட்டா மனுஷனையும் கூட்டிக்கிட்டு வரவா?'

'வேணாக்கா... நீங்க கவலப்படாம ஆஃபீசுக்கு போய்ட்டு வாங்க. நா முதல்ல சேகர் கிட்ட சொல்லி அவர் என்ன சொல்றார்னு பாக்கறேன். அதுக்கப்புறம் நா ஒங்களுக்கு ஃபோன் பண்றேன்.'

'சரி சுமி... அப்ப நா வரேன்... இது இப்போதைக்கு வேற யாருக்கும் தெரிய வேணாம்..'

'இல்லக்கா... நீங்க கவலப்படாம போங்க... நான் ஃபோன் பன்றேன்...'

ராஜி அரை மனதுடன் எழுந்து வாசலை நோக்கி நடக்க சுமதியும் அவளுடன் வாசல் வரை சென்றி வழியனுப்பி விட்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள்.

'ச்சே, எத்தன சந்தோஷமா இருந்த குடும்பம்? இந்த மனுசனுக்கு ஏன் இப்படி புத்தி போவணும்? இந்த ஆம்பளங்களே இப்படித்தான் போல இருக்கு... கண்ணுக்கு லட்சணமா இருக்கற வய்ஃப விட்டுப்போட்டு....' ஏதோ நினைத்துக்கொண்டு சட்டென்று எழுந்து சென்று ட்ரிஸ்சிங் டேபிளில் இருந்த முழு நீள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்... அத்தன அழகா இருந்துமே இவங்களுக்கு இந்த கதின்னா... நம்ம கதி? எல்லாத்துக்கும் ஒரு குழந்தை இல்லாததுதான் காரணமா இருக்கும்... சீக்கிரமே ஒன்னெ பெத்துறணும்... அப்பத்தான் சேகரையும் நம்ம கைக்குள்ள வச்சிக்க முடியும்.. 'ஒம்மேல
இருக்கற மோகம் தீர்றதுக்குள்ளயே ஒரு புள்ளய பெத்துக்கணும்டி இல்லன்னா ஆம்பள கண்ணு மத்தவளுங்க மேல மேய ஆரம்பிச்சிரும். அலைபாயற ஆம்பிளைய கட்டி போடறதுக்கு ஒரு குழந்தையாலதான் முடியும். சொல்லிட்டன்.' பாட்டி சென்னைக்கு வழியனுப்பும்போது கூறியது நினைவுக்கு வந்தது.

தொடரும்..