2.5.13

நிஜமல்ல நிழல் - உண்மையில் நடந்தது என்ன?


நேற்றைய தினம் நான் கூறியதுபோன்று இந்த சிறுகதை ஒரு உண்மை நிகழ்வு என்பதால் அதன் முடிவு நான் எழுதியது போல் சுமுகமாக இருக்கவில்லை. 

உண்மையில் முடிவில் என்ன நடந்தது என்பது இதோ....

சுமதி தன்னுடைய நகைகளில் சிலவற்றை ராஜியிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபிறகு சேகர் தன்னிடம் தொலைபேசியில் கூறியவற்றை ராஜியிடம் கூறிவிட்டு...

கிச்சனுக்குள் நுழைந்து சாமி படங்களை பார்த்து 'சாமி ஒரு சிக்கலும் இல்லாம முடியணுமே' என்று முனுமுனுத்தாள். 'இது ஒனக்கு தேவையா?' என்று புலம்பிய உள்மனதை பொருட்படுத்தாமல் படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலுள் விழுந்தாள். அசதியாய் நேரம் போவது தெரியாமல் உறங்கிப் போனாள்.

*******

'கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' அழைப்பு மணியின் தொடர்ந்து அலறும் ஓசை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த  சுமதி வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து மணியை பார்த்தாள். 

மணி எட்டு!

நாலு மணி நேரமா தூங்கிட்டேன் என்று நினைத்தவாறே வாசலுக்கு விரைந்தாள். வெளியில் சேகர்!

அவள் வாசற்கதவை முழுவதுமாய் திறப்பதற்குள் அவளை தள்ளிக்கொண்டு நுழைந்த சேகர் சோபாவில் விழுந்து தலையை கரங்களில் பற்றிக்கொண்டு அமர்ந்ததை பார்த்த சுமதி  'இவர் சொன்னா மாதிரியே என்னமோ ப்ராப்ளம் ஆயிருச்சி போலருக்கே' என்று நினைத்தாள்.

'என்னங்க ஆச்சி?'

'ஹூம்' என்ற உருமலுடன் சுமதியை நிமிர்ந்து பார்த்த சேகரின் கண்களிரண்டும் ரத்தமாய் சிவந்திருக்க அப்படியொரு கோபத்தை கண்டிராத அவள் அச்சத்தில் உறைந்துபோனாள்.

'ஏதாச்சும் பிரச்சினையாயிருச்சா?'

அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருந்த சேகர் 'முட்டாள்... முட்டாள்....' என்றான் அடிக்குரலில்.

'யார, என்னையா சொல்றீங்க?' என்றாள்  சுமதி நடுங்கும் குரலில்.

'இல்ல என்னைய சொல்றேன். ஒன் பேச்ச நம்பி இந்த விஷயத்துல இறங்குனேன் பாரு... என்னெ சொல்லணும்... நாந்தான் முட்டாள்...'

சுமதி விழித்தாள். 'என்னங்க சொல்றீங்க? புரியும்படியாத்தான் சொல்லுங்களேன். 

சொல்றேன்... கேட்டுட்டு அழறியா சிரிக்கிறியான்னு பாக்கறேன்... இங்க வந்து ஒக்கார்.'

சுமதி பதில் பேசாமல் அவன் எதிரில் அமர்ந்தாள்.

*******

அன்று மாலை சரியாக ஐந்தரை  மணிக்கு ராஜேஸ்வரி வாடகை வண்டியின் கமிஷனர் அலுவலகத்தை அடைந்தாள். அலுவலக வாசலிலேயே ஒரு சுமோ வண்டியில்  இரண்டு கான்ஸ்டபிள்களுடன் காத்திருந்த சேகர் அவளை நெருங்கினான். டாக்சி ஓட்டுனரைப் பார்த்து. 'நீ கொஞ்சம் வெளியில நில்லுய்யா' என்று கூறிவிட்டு தன் வசமிருந்த கைப்பையை அவளிடம் கொடுத்தான். 

'மேடம் நீங்க எதுக்கு டாக்சியில வந்துருக்கீங்கன்னு அந்த டிரைவருக்கு தெரியக் கூடாது, சரீங்களா?'

'சரிங்க.. அவருக்கு எதுவும் தெரியாது. எக்மோர் போய்ட்டு ரிட்டர்ன் வரணும்னுதான் சொல்லியிருக்கேன்.'

'குட். இந்த பேக்ல மேல் வரிசையில மட்டும் பணம் இருக்கும். நீங்க குடுக்கறப்ப அவங்க தொறந்து பாத்தாலும் கீழ இருக்கறது வெத்து பேப்பர்ஸ்னு தெரியாது. நீங்க இந்த பேக்கை கலெக்ட் பண்ண வர்றவங்கக்கிட்டு குடுத்துட்டு  போய்க்கிட்டே இருங்க.... மத்தத எங்க ஆளுங்க பாத்துப்பாங்க. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்தா போறும்...'

ராஜேஸ்வரி தயங்கினாள். 'இதுல ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கு சார்.'

சேகருக்கு எரிச்சல் வந்தது. அடக்கிக்கொண்டு, 'இதுல என்ன ப்ராப்ளம்?' என்றான்.

'இல்ல... அந்த பொன்னுகிட்ட நா பணத்த குடுத்ததும் பாஸ்கர் கூட அவ எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோ ஒரிஜினல்ஸ் எல்லாத்தையும் ஒரு பேக்ல வச்சி கொண்டு வரணும்னு சொல்லியிருக்கேன். அந்த பேக நா வாங்காம போயி பேக்ல இருக்கறது போலின்னு தெரிஞ்சி ஏதாச்சும் பிரச்சினையாயிருமோன்னுதான்.....'

சேகர் எரிச்சலுடன் குறுக்கிட்டான். 'இங்க பாருங்க மேடம்... நீங்க பேக குடுத்துட்டு ஒரு நிமிசம் கூட அங்க நிக்கக் கூடாது. ஒங்கக் கிட்டருந்து பேக வாங்கிக்கிட்டு அவங்க எங்கயும் போயிர முடியாது. நீங்க அவங்கள மீட் பண்ற ஸ்பாட்லருந்து நூறு அடிக்குள்ள எங்க சுமோ நிக்கும். நாங்க யாருமே யூனிஃபார்ம்ல இல்லங்கறதால எங்கள அவங்களோ இல்ல அவங்களோட வேற யாராச்சும் இருந்தாலோ கண்டுபிடிக்க முடியாது. யார் இருந்தாலும் அத்தனை பேரையும் ரவுண்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துருவோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒங்க திங்ஸ வாங்கிக்கலாம். இதான் ப்ளான். இதுக்கு நீங்க ஒத்துக்கலைன்னா இப்படியே நாங்க போயிருவோம்... என்ன சொல்றீங்க?'

ராஜேஸ்வரி ஒரு நோடி யோசித்தாள். இறுதியில் 'சரிங்க... நீங்க சொல்றாப்பலவே செஞ்சிரலாம்.'

'குட்... இப்ப மணி அஞ்சி நாப்பது... இன்னும் இருபது நிமிஷம் இருக்கு... டிரைவர் கிட்ட நீங்க ஒரு காப்பி குடிக்கணும்னு சொல்லி ஸ்டேஷன் வாசல்லருக்கற ஹோட்டல் முன்னால நிறுத்த சொல்லுங்க. அங்க சரவணா பவன்ல காப்பி பார்சல் தருவான். டிரைவர அனுப்பி வாங்கி வரச் சொல்லிட்டு நீங்க மீட் பண்ண வேண்டிய லேடி வந்துருக்காங்களான்னு பாருங்க. அவங்கள நீங்க பாத்ததும் இந்த நம்பருக்கு ஒரு SMS அனுப்புங்க. எங்கள திரும்பி பாக்கறதோ சிக்னல் காட்றதோ ஒன்னும் கூடாது. புரிஞ்சிதுங்களா?'

'சரிங்க...ஆனா... ஒரு சந்தேகம்.''

'சொல்லுங்க..'

'பாஸ்கரோட ஃபோட்டோஸ், வீடியோஸ் மட்டும் வேற யார் கண்ணுலயும்....

'அதுக்கு நான் கியாரன்டி... நீங்க கெளம்புங்க.'

'இதுவரைக்கும் நீங்க செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி சேகர்...'

சேகர் என்ற தன்னுடைய பெயரை ஒரு கொஞ்சலுடன் அவள் உச்சரித்த விதம் அவனை ஒரு நொடி திடுக்கிட வைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் திரும்பி சாலையை கடந்து தன் வாகனத்தை அடைந்தான். 

ராஜேஸ்வரியின் வாகனம் சென்று பத்து நிமிடங்கள் கழித்து சேகர் தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து எக்மோர் ஸ்டேஷனை அடைந்தான். சரவணா பவன் வாசலில் அவளுடைய வாகனத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து சற்று தள்ளி தன்னுடைய வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் காத்திருந்தான்.

சரியாக ஆறு மணிக்கு அவனுடைய கைப்பேசியில் வந்த ராஜியின் SMS 'தனியாத்தான் சார் வந்துருக்கா' என்றது. தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபிள்களை பார்த்தான். 'அந்த லேடி பேக குடுத்துட்டு போன அடுத்த ஒரு நிமிஷத்துக்குள்ள அத வாங்குன லேடிய அங்கருந்து நகர விடாம நின்னுக்குங்க... நா வண்டியோட ஒரு செக்கன்ட்ல வந்துருவேன். சரியா?'

இருவரும் வாகனத்திலிருந்து 'யெஸ் சார்' என்றனர். பிறகு ராஜி அமர்ந்திருந்த வாகனத்தை நோக்கி நகர்ந்தனர்.

சேகர் ஏற்கனவே கூறியிருந்தபடி ராஜேஸ்வரி அவன் கொடுத்திருந்த பேகை அவளை சந்திக்க வந்த இளம் பெண்ணிடம் கொடுப்பதை பார்த்தான்.... ஆனால் அடுத்த நொடியே அந்த பெண்ணிடம் இருந்த பேகை ராஜி பெற்றுக்கொள்ள அவள் அமர்ந்திருந்த வாகனம் விருட்டென்று புறப்பட்டு சென்றது. அந்த பெண் பேகை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர முயல்வதற்குள் அவன் அனுப்பிய கான்ஸ்டபிள்கள் அவளை இருபுறமும் நெருங்கி நிற்பதை பார்த்ததும் வாகனத்துடன் அவர்களை அவன் நெருங்க சுற்றிலுமிருந்த கூட்டம் கவனிப்பதற்குள் அந்த பெண்ணுடன் இருவரும் வாகனத்தில் ஏறினார்கள். 

சேகர் வண்டியை கிளப்புவதற்குள் அந்த பெண்.. 'யாருங்க நீங்க போலீசா?' என்றாள் அதிர்ச்சியுடன்.

'பாத்தா தெரியுதுல்ல... பேசாம வா... ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம்.' 

''சார்... எங்கிட்டருந்து பணத்த வாங்கிக்கிட்டு போறவள வுட்டுட்டு என்னெ புடிச்சிக்கிட்டு போயி என்ன பண்ண போறீங்க?'

சேகர் அதிர்ச்சியுடன் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு திரும்பி அந்த பெண்ணை பார்த்தான்....

*****

சுமதி திகைப்புடன் சேகரை பார்த்தாள். 'என்னங்க நிறுத்திட்டீங்க? அந்த பொண்ணு பணம் குடுத்தாளா? அப்படீன்னா?'

சேகர் அவளுடைய அதிர்ச்சியை பார்த்து எரிந்து விழுந்தான். 'ஷாக்கா இருக்கா? அப்ப எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா? அந்த பொண்ணு சொன்னத கேட்டதும் என் கூட வந்திருந்த  கான்ஸ்டபிள்ங்க ரெண்டு பேரும் நக்கலா சிரிச்சப்ப அப்படியே எறங்கி ஓடிரலாமான்னு இருந்தது.'

'ஐயோ தெளிவா சொல்லுங்களேன்..'

'என்னத்த சொல்றது? ஒன் ஃப்ரெண்டு ராஜேஸ்வரி சரியான ஃப்ராடு. அவதான் அந்த பொண்ணோட புருஷன வளைச்சி போட்டு ப்ளாக்மெய்ல் பண்ணி இருக்கா. அவ கொண்டு வந்த அஞ்சி லட்சத்த வாங்கிக்கிட்டு நாங்க குடுத்த பைய அவக்கிட்ட குடுத்துட்டு கம்பிய நீட்டிட்டா அந்த ராஜி. அந்த பேக்ல தன்  புருஷனோட ஃபோட்டோவும், வீடியோ ஒரிஜினல்சும் இருக்குன்னு  அந்த பொண்ணும் நினைச்சி அத வாங்கிக்கிட்டு தன் கையிலருந்த பணத்த குடுத்துரிச்சி.. இதான் நடந்தது. உன் பேச்ச கேட்டு இதுல நா மூக்க நுழைச்சி இப்ப இது எங்க போயி முடிய போவுதோ தெரியல.'

'ஐயோ அப்ப நம்ம நகை?' என்று அலறியவாறே மூர்ச்சையாகி விழுந்தாள் சுமதி..

******

பி.கு: சுமதி மூர்ச்சையாகி விழுந்ததில் அவளுடைய பின்தலையில் பலமாக அடிபட கோமாவில் சென்று ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகும் நினைவு திரும்பாமலேயே மரித்துவிடுகிறாள்.

இந்த ஆறு மாத காலத்தில் சேகர் மீது அதிகார துஷ்பிரயோகம், அதிகார எல்லை மீறி செயல்பட்டது, அலுவலக வாகனத்தை அனுமதியின்றி தன் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியது என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி பணியிட நீக்கம் செய்யப்பட்டார். பிறகு இலாக்கா ரீதியான ஒழுங்குமுறை விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டடார். விசாரனையில் அவருடன் விருப்பமில்லாமல் துணைக்கு சென்ற இரு காவலர்களின் சாட்சியம் முற்றிலுமாக அவருக்கு எதிராக இருந்ததுதான் இதற்குக் காரணம்! தங்களை விட வயதில் இளைய அதிகாரிகள் மீது அதிகம் படிக்காத, வயதில் முதிர்ந்த காவலர்களுக்கு இருக்கும் துவேஷம்தான் இதற்கு காரணமாம்.

இதற்கிடையில் ஐந்து லட்சத்தை ராஜியிடம் கொடுத்து ஏமாந்த அந்த பெண் சேகர் தன்னை எந்த புகாரும் இல்லாமல் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதால்தான் ராஜி தப்பிக்க முடிந்தது எனவும் ஆகவே சேகரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்று தான் நம்புவதாக புகார் அளிக்க சேகர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருடைய தந்தை காவல்துறை ஆய்வாளராக (Inspector of Police) சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதால் அவருடைய பழைய மேலிடத்து தொடர்புகளை பயன்படுத்தி மிகுந்த சிரமத்துக்குப் பிறகு வெளியில் கொண்டு வருகிறார். 

சேகர் இப்போதும் தன் பணி மற்றும் மனைவியை இழந்த சோகத்தில்..... 

இதுதான் நடந்தது. 

அதிகார துஷ்பிரயோகத்திற்கு பெயர்போன காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை  அதிகாரிகளுக்கு  (junior officers) மட்டும் தனியாக ஒரு விதி உள்ளது. அதுவும் பணியில் சேர்ந்து ஒரு வருடம் கூட முழுவதும் பூர்த்தியாகாத நிலையில் சேகர் தன் அதிகார எல்லையை மீறி நடந்துக்கொண்டதால் அது மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதப்பட்டது.   

சமீபத்தில் உதயம் NH4 என்ற திரைப்படத்தில் அரசியல் தலைவர் ஒருவருடைய மகளை மீட்க எவ்வித எழுத்து பூர்வ புகாரும் இல்லாமல் ஒரு துணை ஆய்வாளர் அலைவதாக சித்தரிக்கப்படுவதைக் கண்ட பிறகுதான் இந்த கதையை எழுத வேண்டும் என்று தோன்றியது. சினிமாவும் நிஜ வாழ்க்கையும் எவ்வளவு மாறுபடுகிறது! சினிமாவில் ஹீரோயிசம் என போற்றப்படும் நிஜ வாழ்க்கையில் அதிகப்பிரசங்கித்தனம் என்று கருதப்படுகிறது! இதுதான் நிதர்சனம்.

1.5.13

நிஜமல்ல நிழல் (உண்மைச் சம்பவம் - நிறைவுப் பகுதி)


அடுத்த ஒரு மணி நேரத்தில் அழைப்பதாக கூறியிருந்த சேகர் பிற்பகல் மூன்று மணிக்குத்தான் அழைத்தான்.

'என்னங்க அப்பவே கூப்டறேன்னு சொன்னீங்க?'

'என்னை என்ன பண்ண சொல்ற சுமீ? ரிட்டன் கம்ப்ளெய்ன்ட் இல்லாம இதுல ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார் ஸ்டேஷன் எஸ்.ஐ. என்னதான் பேட்ச்மேட்டுன்னாலும் இது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாச்சே? அப்புறம் பேசி, பேசி ஒரு வழியா ரெண்டு கான்ஸ்டபிள மட்டும் வேணும்னா அனுப்பறேன். மத்ததையெல்லாம் நீதான் பாத்துக்கணும்னு சொல்லிட்டார். அப்புறம் கேஷ் பேக் அரேஞ் பண்றதுல வேற சிக்கல். ஒரு வழியா எல்லாத்தையும் அரேஞ் பண்ணி முடிக்கறதுக்கு இவ்வளவு நேரம் ஆயிரிச்சி.'

'சரி இப்ப என்ன பண்ணணும்?'

'அந்த லேடி எந்த எடத்துக்கு, எத்தன மணிக்கு பணத்தோட வரச்சொல்லியிருக்காங்கன்னு கேட்டு சொல்லு.'

'சரி'

'பணத்த யார் கொண்டு போகப் போறாங்களோ அவங்கள ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால நா சொல்ற எடத்துக்கு வரச்சொல்லு.'

'சரி'

'மத்தத நாங்க பாத்துக்கறோம்.'

'ராஜிக்கா மட்டுந்தான் வருவாங்கன்னு நினைக்கறேன். பாஸ்கர் மேல அவங்களுக்கு நம்பிக்கையில்ல போல.'

'சரி பரவால்லை.. ஆனா நடந்து வராம ஒரு கால் டாக்சியில வரச்சொல்லு. அப்பத்தான் ஏதாச்சும் ப்ராப்ளம் ஆயிருச்சின்னா ட்ரேஸ் பண்றதுக்கு வசதியா இருக்கும்.'

'ப்ராப்ளமா? என்ன ப்ராப்ளம்?'

'பதறாதே... இந்த மாதிரி விஷயத்துல எந்த நேரத்துலயும் எது வேணும்னாலும் நடக்கலாம். நாங்க மறைஞ்சி நிக்கறத அந்த லேடியோ இல்ல அவங்கள சேந்த ஆளுங்களோ பாத்துக்கிட்டாங்கன்னா....  இல்லன்னா பணத்த வாங்கிக்கிட்டு ஓடற பார்ட்டிய புடிக்க முடியாம போயிருச்சின்னா? இந்த மாதிரி எந்த ப்ராப்ளம் வேணும்னாலும் வரலாம். அதுக்கு கால் டாக்சிதான் சரி. நீ பதட்டப்படாம நா சொன்னத மட்டும் தெளிவா எதுத்த வீட்டு லேடிக்கிட்ட சொல்லிரு. அவங்களுக்கு ஏதாவது டவுட்டுன்னா நீ கேட்டு கூப்டு. என் ஃபோன் நம்பர அவங்கக்கிட்டு குடுக்காத.'

'ஏன்?'

'ஒரு முன்னெச்சரிக்கையாத்தான் சொல்றேன். ஏன், எதுக்குன்னு கேக்காம நா சொன்னத செய்.'

சுமதி மறுபேச்சு பேசுமுன் சேகர் இணைப்பை துண்டிக்க அவள் வீட்டை பூட்டிக்கொண்டு எதிர் வீட்டிற்கு சென்று அவன் கூறிய அனைத்தையும் சென்று ராஜியிடம் கூறினாள்.

'நீங்க பணத்த கொண்டு வர வேணாம்னு சேகர் சொல்றாருக்கா. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே போலியா கரன்சி நோட்டுங்கள ஒரு பேக்ல ரெடி பண்ணி வச்சிருப்பாங்களாம். நீங்க அந்த பேக எடுத்துக்கிட்டு ஒரு ஆஃபனவர் முனால அவங்க சொல்ற ஸ்பாட்டுக்கு போனா போறுமாம். ஒரு டாக்சி எடுத்துக்கிட்டு போனீங்கன்னா போலீஸ்காரங்க குடுக்கற பேக்க வாங்கிக்கிட்டு அந்த லேடி சொன்ன எடத்துக்கு போயிரலாம். என்ன சொல்றீங்க?'

'ஐயையோ நீ போன ஒடனேயே  ஒன் நகையை எல்லாம் பாஸ்கர் கிட்ட குடுத்தனுப்பிச்சேட்டேனே? அவர் அத ப்ளெட்ஜ் பண்ணி எல்லா பணத்தையும் பொறட்டிட்டு திரும்பி வந்துக்கிட்டு இருக்காராமே? ஒரு ஒன் அவர்க்கு முன்னால சொல்லியிருந்தாக்கூட ஒன் நகையையாவது ப்ளெட்ஜ் பண்ணாம இருந்துருக்கலாம் போலருக்கே?'

'அது பரவால்லைக்கா. பாஸ்கர் பணத்த கொண்டு வந்தாலும் நீங்க அத கொண்டு போக வேணாம்.'

'இல்ல சுமி.. அது பாட்டுக்கு டாக்சியில இருக்கட்டும். போலீஸ்ல தர பேக்கை நா குடுத்ததும் அவ தொறந்து பாத்து எல்லாம் வெறும் பேப்பர்னு கண்டு பிடிச்சிட்டான்னா பிரச்சினையானாலும் ஆயிரும். அப்புறம் பத்து லட்சம் குடுத்தாலும் பாஸ்கரோட எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோ எதையும் திருப்பி வாங்க முடியாது. பணம் போனாலும் பரவால்லை சுமி... ஒன் நகைய அப்படியே ரிடீம் பண்ணி திருப்பி தர்றது என் பொறுப்பு.'

'நா அதுக்காக சொல்லலக்கா. எதுக்கு வீணா அவ்வளவு பணத்த எடுத்துக்கிட்டு போகணும்னுதான் சொன்னேன். 

'நீ நல்லதுக்குத்தான் சொல்றேன்னு புரியுது சுமி. இருந்தாலும் எதுக்கு ரிஸ்க்? எப்படியும் பணத்த பொறட்டியாச்சு. போலீசுக்கு தெரியாம அதையும் கொண்டு போறேன். அவ மட்டும் தனியா சேகரோட திங்ஸ் எல்லாத்தையும் ஒரு பேக்ல எடுத்துக்கிட்டு வரணும்னு சொல்லியிருக்கேன். பணம் வச்சிருக்கற பேகை நா குடுக்கறப்போ அவ கையில இருக்கற பேகை என்கிட்ட குடுத்துறணும்னு காலையில வந்தவக்கிட்ட சொல்லியிருக்கேன். அவ கையில பேக் எதுவும் இல்லன்னா நானும் என் பேகை குடுக்க மாட்டேன். சரிதானே?'

'ஆமாக்கா... அப்படியே செஞ்சிரலாம். நா சேகருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.'

சுமதி வீட்டுக்கு திரும்பவும் அவளுடைய கைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது. 

'சொல்லுங்க சேகர். நீங்க சொன்னதையெல்லாம் அவங்ககிட்ட சொல்லிட்டு இப்பத்தான் வரேன். அந்தக்கா மட்டுந்தான் வராங்களாம். எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க. நா சொல்லிடறேன்.'

'அதுக்குத்தான் கூப்ட்டேன். எத்தனை மணிக்கி பணத்தோட வரச்சொன்னாங்கன்னு கேட்டியா?'

'ஈவ்னின் ஆறு மணிக்காம் எக்மோர் ஸ்டேஷன் முன்னால வரச் சொல்லியிருக்காங்களாம்.'

'என்னது எக்மோர் ஸ்டேஷன் முன்னாலயா? அதுவும் ஆறு மணிக்கா? அந்த லேடி பயங்கர ஆளா இருப்பா போலருக்கே.. எனக்கென்னவோ அவளுக்கு பின்னால ஒரு ரவுடி கேங் இருக்கும்னுதான் தோனுது. சரி இதுவரைக்கும் வந்தாச்சி. என்னதான் நடக்குதுன்னு பாத்துரலாம். நீ எதுத்த வீட்டு லேடிய சரியா அஞ்சரை மணிக்கி எக்மோர் கமிஷனர் ஆஃபீஸ் முன்னால டாக்சிய பார்க் பண்ணிட்டு காத்திருக்க சொல்லு. மீதிய நாங்களே நேரடியா அந்த லேடிக்கிட்ட சொல்லிக்கறோம். உன் வேல முடிஞ்சிருச்சி. இனி என்ன ஆனாலும் நீ இதுல தலையிட கூடாது. சரியா?'

சுமதி ஒரு நிமிடம் யோசித்தாள்.

'என்ன பதிலையே காணம்?'

'சரிங்க...' என்றாள் மெல்லிய குரலில். தன்னுடைய நகைகளை கொடுத்ததை கூறிவிடலாமா என்று நினைத்தாள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

'என்ன ரொம்ப டல்லா குரல் வருது.'

'இல்லையே... நீங்க இவ்வளவு தூரம் செஞ்சதே போறும்னு தோனுது.'

'எல்லாம் உனக்காகத்தான். இதுல எதுவும் ப்ராப்ளம் வராம இருக்கணும். வச்சிடறேன்.'

நகைகளை கொடுத்த விவரத்தை சேகரிடமிருந்து மறைத்தது அவளை என்னவோ செய்தது. திருமணம் முடிந்த இந்த ஓராண்டு காலத்தில் எந்த விஷயத்தையும் அவனிடமிருந்து அவள் மறைத்ததே இல்லை. 

அப்போதிருந்த மனநிலையில் மீண்டும் ராஜியின் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் சேகர்  தெரிவித்த விவரத்தை ஒன்றுவிடாமல் அவளிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு  சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நான்கு. இன்னும் சரியாக இரண்டு மணி நேரம். அப்படியே திரும்பி எதிர்த்த வீட்டை பார்த்தாள். வெள்ளை நிற கால் டாக்சி ஒன்று வாசலில் நிற்பது தெரிந்தது. 

கிச்சனுக்குள் நுழைந்து சாமி படங்களை பார்த்து 'சாமி ஒரு சிக்கலும் இல்லாம முடியணுமே' என்று முனுமுனுத்தாள். 'இது ஒனக்கு தேவையா?' என்று புலம்பிய உள்மனதை பொருட்படுத்தாமல் படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தாள். அசதியாய் நேரம் போவது தெரியாமல் உறங்கிப் போனாள்.

*******கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' அழைப்பு மணியின் தொடர்ந்து அலறும் ஓசை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த  சுமதி வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து மணியை பார்த்தாள். 

மணி எட்டு!

நாலு மணி நேரமா தூங்கிட்டேன் என்று நினைத்தவாறே வாசலுக்கு விரைந்தாள். வெளியில் சேகர்!

அவன் வீட்டிற்குள் நுழைவதற்குக் கூட காத்திராமல் 'என்னங்க ஆச்சி? அந்த லேடிய புடிச்சீட்டீங்களா?' என்றாள்.

சேகர் புன்னகையுடன், 'ஆமா. அதுக்கு முன்னால நா கேக்கறதுக்கு பதில சொல்லு.' என்றான் சோபாவில் அமர்ந்தவாறு.

'என்ன கேள்வி?' என்றாள் சுமதி குழப்பத்துடன்.

'நீ போயி உன் நகையை எல்லாம் கொண்டா... நா செக் பண்ணணும்.'

சுமதி அதிர்ச்சியுடன் மவுனமாக அவனைப்பார்த்தாள். ஐயையோ இவருக்கு விஷயம் தெரிஞ்சிரிச்சி போலருக்குதே!

'என்ன பதில காணோம்?'

'எதுக்கு கேக்கறீங்க?' என்றாள் சமாளித்துக்கொண்டு.

'இல்ல நீ அந்த ராஜேஸ்வரிகிட்ட குடுத்தியே அந்த நெக்லசும், நாலு வட செயினும்.. அது இங்க இருக்கான்னு பாக்கணும். கொண்டு வரியா?'

சுமதி வேறு வழியில்லாமல் அவற்றை ராஜியிடம் கொடுத்ததை ஒப்புக்கொண்டாள். 'அந்தக்கா கண்கலங்கி நின்னப்போ எனக்கு வேற ஒன்னும் செய்ய தோனலைங்க. அதான்.... அதோட நீங்க எப்படியும் அந்த பொம்பளைய புடிச்சிருவீங்கன்னு தெரியும்... நகைங்க திருப்பி கிடைச்சதுக்கப்புறம் சொல்லிக்கலாம்னு.....' 

சேகர் சிரித்தவாறு தான் கொண்டு வந்த பையிலிருந்த நகைகளை எடுத்து காண்பித்தான். 'இது உன் நகைதானே?'

சுமதி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அந்த அக்கா நகைங்கள அடகு வச்சிட்டேன்னு சொன்னாங்களே? அதுக்குள்ள எப்படி இவர் கிட்ட வந்திச்சி? 

'என் கையில எப்படி வந்துதுன்னு பாக்கறியா?' என்றான் சேகர் புன்னகையுடன்.

ஆமாம் என்று தலையை அசைத்தாள் சுமதி குழப்பத்துடன்.

'முதல்ல இங்க வந்து ஒக்கார் சொல்றேன்.' என்று சுமதியை அழைத்து தன் அருகில் அமர்த்தி அவளிடம் அவளுடைய நகைகளை கொடுத்துவிட்டு அன்று மாலை நடந்தவற்றை விவரிக்க ஆரம்பித்தான். 


********


அன்று மாலை சரியாக ஐந்தரை  மணிக்கு ராஜேஸ்வரி வாடகை வண்டியில் கமிஷனர் அலுவலகத்தை அடைந்தாள். அலுவலக வாசலிலேயே ஒரு சுமோ வண்டியில்  இரண்டு கான்ஸ்டபிள்களுடன் காத்திருந்த சேகர் அவளை நெருங்கினான். டாக்சி ஓட்டுனரைப் பார்த்து. 'நீ கொஞ்சம் வெளியில நில்லுய்யா' என்று கூறிவிட்டு தன் வசமிருந்த கைப்பையை அவளிடம் கொடுத்தான். 

'மேடம் நீங்க எதுக்கு டாக்சியில வந்துருக்கீங்கன்னு அந்த டிரைவருக்கு தெரியாதுல்ல?'

'ஆமாங்க. எக்மோர் ஸேஷன் ட்ராப்புன்னுதான் சொல்லியிருக்கேன்.'

'குட். இந்த பேக்ல மேல் வரிசையில மட்டும் பணம் இருக்கும். நீங்க குடுக்கறப்ப அவங்க தொறந்து பாத்தாலும் கீழ இருக்கறது வெத்து பேப்பர்ஸ்னு தெரியாது. நீங்க இந்த பேக்கை கலெக்ட் பண்ண வர்றவங்கக்கிட்டு குடுத்துட்டு  போய்க்கிட்டே இருங்க.... மத்தத எங்க ஆளுங்க பாத்துப்பாங்க. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்தா போறும்...'

ராஜேஸ்வரி தயங்கினாள். 'இதுல ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கு சார்.'

சேகருக்கு எரிச்சல் வந்தது. அடக்கிக்கொண்டு, 'இதுல என்ன ப்ராப்ளம்?' என்றான்.

'இல்ல... அந்த பொன்னுகிட்ட நா பணத்த குடுத்ததும் பாஸ்கர் கூட அவ எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோ ஒரிஜினல்ஸ் எல்லாத்தையும் ஒரு பேக்ல வச்சி கொண்டு வரணும்னு சொல்லியிருக்கேன். அந்த பேக நா வாங்காம போயி பேக்ல இருக்கறது போலின்னு தெரிஞ்சி ஏதாச்சும் பிரச்சினையாயிருமோன்னுதான்.....'

சேகர் எரிச்சலுடன் குறுக்கிட்டான். 'இங்க பாருங்க மேடம்... நீங்க பேக குடுத்துட்டு ஒரு நிமிசம் கூட அங்க நிக்கக் கூடாது. ஒங்கக் கிட்டருந்து பேக வாங்கிக்கிட்டு அவங்க எங்கயும் போயிர முடியாது. நீங்க அவங்கள மீட் பண்ற ஸ்பாட்லருந்து நூறு அடிக்குள்ள எங்க சுமோ நிக்கும். நாங்க யாருமே யூனிஃபார்ம்ல இல்லங்கறதால எங்கள அவங்களோ இல்ல அவங்களோட வேற யாராச்சும் இருந்தாலோ கண்டுபிடிக்க முடியாது. யார் இருந்தாலும் அத்தனை பேரையும் ரவுண்ட் பண்ணி பக்கத்துலருக்கற ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துருவோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒங்க திங்ஸ வாங்கிக்கலாம். இதான் ப்ளான். இதுக்கு நீங்க ஒத்துக்கலைன்னா இப்படியே நாங்க போயிருவோம்... என்ன சொல்றீங்க?'

ராஜேஸ்வரி ஒரு நோடி யோசித்தாள். இறுதியில் 'சரிங்க... நீங்க சொல்றாப்பலவே செஞ்சிரலாம்.'

'குட்... இப்ப மணி அஞ்சி நாப்பது... இன்னும் இருபது நிமிஷம் இருக்கு... டிரைவர் கிட்ட நீங்க ஒரு காப்பி குடிக்கணும்னு சொல்லி ஸ்டேஷன் வாசல்லருக்கற ஹோட்டல் முன்னால நிறுத்த சொல்லுங்க. அங்க சரவணா பவன்ல காப்பி பார்சல் தருவான். டிரைவர அனுப்பி வாங்கி வரச் சொல்லிட்டு நீங்க மீட் பண்ண வேண்டிய லேடி வந்துருக்காங்களான்னு பாருங்க. அவங்கள நீங்க பாத்ததும் இந்த நம்பருக்கு ஒரு SMS அனுப்புங்க. எங்கள திரும்பி பாக்கறதோ சிக்னல் காட்றதோ ஒன்னும் கூடாது. புரிஞ்சிதுங்களா?'

'சரிங்க...ஆனா... ஒரு சந்தேகம்.''

'மறுபடியுமா?'

'பாஸ்கரோட ஃபோட்டோஸ், வீடியோஸ் மட்டும் வேற யார் கண்ணுலயும்....

'அதுக்கு நான் கியாரன்டி... நீங்க கெளம்புங்க.'

'இதுவரைக்கும் நீங்க செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி சேகர்...'

சேகர் என்ற தன்னுடைய பெயரை ஒரு கொஞ்சலுடன் அவள் உச்சரித்த விதம் அவனை ஒரு நொடி திடுக்கிட வைத்தது. ஒரு சில நொடிகள் காரில் அமர்ந்திருந்த அவளையே பார்த்தான். பிறகு சுதாரித்துக்கொண்டு திரும்பி சாலையை கடந்து தன் வாகனத்தை அடைந்தான். 

ராஜேஸ்வரியின் வாகனம் சென்று பத்து நிமிடங்கள் கழித்து சேகர் தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து எக்மோர் ஸ்டேஷனை அடைந்தான். சரவணா பவன் வாசலில் அவளுடைய வாகனத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து சற்று தள்ளி தன்னுடைய வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் காத்திருந்தான்.

சரியாக ஆறு மணிக்கு அவனுடைய கைப்பேசியில் வந்த ராஜியின் SMS 'தனியாத்தான் சார் வந்துருக்கா' என்றது. தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபிள்களை பார்த்தான். 'அந்த லேடி பேக குடுத்துட்டு போன அடுத்த ஒரு நிமிஷத்துக்குள்ள அத வாங்குன லேடிய அங்கருந்து நகர விடாம நின்னுக்குங்க... நா வண்டியோட ஒரு செக்கன்ட்ல வந்துருவேன். சரியா?'

இருவரும் வாகனத்திலிருந்து 'யெஸ் சார்' என்றனர். பிறகு ராஜி அமர்ந்திருந்த வாகனத்தை நோக்கி நகர்ந்தனர்.

சேகர் ஏற்கனவே கூறியிருந்தபடி ராஜேஸ்வரி அவன் கொடுத்திருந்த பேகை அவளை சந்திக்க வந்த இளம் பெண்ணிடம் கொடுப்பதை பார்த்தான்.... ஆனால் அடுத்த நொடியே அந்த பெண்ணிடம் இருந்த வேறொரு பையை ராஜி பெற்றுக்கொள்ள அவள் அமர்ந்திருந்த வாகனம் விருட்டென்று புறப்பட்டு சென்றது. அவளை சந்திக்க வந்த பெண் பேகை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர முயல்வதற்குள் அவன் அனுப்பிய கான்ஸ்டபிள்கள் அவளை இருபுறமும் நெருங்கி நிற்பதை பார்த்ததும் வாகனத்துடன் அவர்களை அவன் நெருங்க சுற்றிலுமிருந்த கூட்டம் கவனிப்பதற்குள் அந்த பெண்ணுடன் இருவரும் வாகனத்தில் ஏறினார்கள். 

சேகர் வண்டியை கிளப்புவதற்குள் அந்த பெண்.. 'யாருங்க நீங்க போலீசா?' என்றாள் அதிர்ச்சியுடன்.

'பாத்தா தெரியுதுல்ல... பேசாம வா... ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம்.' 

'சார்.. நா சொல்றத கேளுங்க... நீங்க புடிக்க வேண்டியத என்ன இல்ல சார்...' என்று அந்த பெண் தொடர்ந்து புலம்பியும் சேகர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக செலுத்தினான்.

அவன் காவல் நிலையத்தை அடையவும் எதிர்த்திசையில் இருந்து வேறொரு காவல்துறை வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

*****

'அந்த ரெண்டாவது கார்லருந்த அந்த லேடி யார் தெரியுமா?' என்றான் சேகர் புன்னகையுடன்.

'எதுக்கு கேக்கறீங்க? ராஜி அக்காதானே? அவங்களும் ஸ்டேஷனுக்கு வரணும்னுதான ஏற்கனவே சொல்லியிருந்தீங்க?' என்றாள்.

சேகர் சிரித்தான். 'அவங்களா வரலை... எங்க ஆளுங்க புடிச்சிக்கிட்டு வந்தாங்க.'

சுமதி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். 'என்ன சொல்றீங்க? புடிச்சிக்கிட்டு வந்தீங்களா?'

'ஆமாம். அவங்க பணத்த குடுத்துட்டு போகல. பணத்த வாங்கிக்கிட்டு ஓட பாத்தாங்க.'

சுமதியின் குழப்பம் அதிகமானது. 'அப்படீன்னா?'

'சொல்றேன்..'

'இல்லைங்க.... சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லுங்க... எனக்கு தலையே சுத்துது.'

'நீ நல்லவ, நல்லவன்னு நினைச்சிக்கிட்டிருந்த அந்த ராஜேஸ்வரி நல்லவ இல்ல. அவளுக்கு இதுவேதான் வேலை. கல்யாணமான நடுத்தர வயசு ஆளுங்கள வளைச்சிப் போடறது. அப்புறமா அவங்கள ப்ளாக்மெய்ல் பண்ணி பணத்த புடுங்கறது... இத கொஞ்ச வருசமாவே அவ செஞ்சிக்கிட்டிருந்துருக்கா...'

'அப்படியா? அப்ப அந்த பாஸ்கர்? அவர் எழுதினதா சொல்லி எங்கிட்ட காமிச்ச டைரி?'

சேகர் சிரித்தான். 'அந்த பாஸ்கர்தான் அவள ஆட்டி வைக்கறதே. உண்மையில அவ அந்த லேடியோட புருசனே இல்ல... பச்சையா சொல்லப் போனா அவன் ஒரு பிம்ப் (pimp).'

'அப்படீன்னா?'

'அத வுடு. ஒனக்கு அதெல்லாம் தெரிய வேணாம்.'

'சரிங்க... அதுதான் அந்த அக்காவோட தொழில்னா நீங்க போலீசுன்னு தெரிஞ்சும் ஏன் என் கிட்ட ஹெல்ப் கேக்க வந்தாங்க?'

'நான் போலீசாருந்தாலும் நா எந்த டிப்பார்ட்மென்ட்ல இருக்கேன்னும் அவங்களுக்கு தெரியும். சிசிபில இருக்கற ஒரு போலீசால க்ரைம் சம்மந்தப்பட்ட விஷயத்துல இன்டிப்பென்டன்டா ஒன்னும் செஞ்சிர முடியாதுன்னு நினைச்சிருப்பாங்க. அதுமட்டுமில்ல.... இதுல வேறொரு விஷயமும் இருக்கு.'

'அதென்ன விஷயம்?'

'நீ ஒரு வெகுளின்னு நாம இங்க வந்தவுடனே அந்த லேடிக்கி தெரிஞ்சிருக்கும். அதோட நாம வெளிய போறப்பல்லாம் நீ இருக்கற நகைங்கள எல்லாம் மாட்டிக்கிட்டு வருவியே அத பாத்து இதுல கொஞ்சம் அடிச்சிக்கிட்டா என்னன்னு தோனியிருக்கும். அத நேரடியா ஒங்கிட்ட கேட்டு வாங்க முடியாது. அதான் இப்படி ஒரு ப்ளான். உன் வெகுளித்தனத்த எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்னு ப்ளான் பண்ணி பாஸ்கர் எழுதுன டைரின்னு ஒன்ன ஒன்கிட்ட குடுத்து படிக்க வச்சி ஒன்னோட சிம்பத்திய சம்பாதிச்சி.... நீ ஒரு லூசு. அவங்க விரிச்ச வலையில ஈசியா விழுந்துட்ட.'

'ஏன் நீங்கக் கூடத்தான் அந்த டைரிய படிச்சி பாத்துட்டு நம்பிட்டீங்க?' என்றாள் சுமதி எரிச்சலுடன். அவளுக்கு இத்தனை எளிதாகவா ஏமாந்தோம் என்ற கோபம் தன் மீது.

'உண்மைதான்... ஆனா எனக்கு அந்த லேடி மேல சந்தேகம் லேசா இருக்கத்தான் செஞ்சிது. அது கமிஷனர் ஆஃபீஸ் முன்னால வச்சி அவங்க எங்கூட பேசின ஸ்டைல், கவர்ச்சியா டிர்ஸ் பண்ணிக்கிட்டிருந்த விதம், பணப்பைய குடுக்கறத விட அந்த இன்னொரு லேடிக்கிட்டருந்து பேக வாங்கறதுல காட்டுன இன்ட்ரெஸ்ட் இதெல்லாம் என் சஸ்பிஷன கன்ஃபர்ம் செஞ்சிது. இருந்தாலும் அத வெளியில காட்டிக்காம அவங்கள போகச் சொல்லிட்டு அவங்க வந்திருந்த கார் நம்பர நோட் பண்ணி  கமிஷனர் ஆஃபீஸ்லருக்கற எங்க செல்லருந்த (சிசிபி Cell) என்னோட எஸ்.ஐ. ஃப்ரெண்ட கூப்ட்டு விஷயத்த சொல்லி ஒடனே ஒரு வண்டிய எடுத்துக்கிட்டு எக்மோர் ஸ்டேஷன் வாசலுக்கு வரச் சொன்னேன். நா சந்தேகப்பட்டா மாதிரியேதான் நடந்திச்சி. ஒங்க ராஜி அக்கா நாங்க குடுத்த பையை குடுத்துட்டு போகாம அந்த லேடிக் கிட்டருந்து பைய வாங்கிட்டு அந்த ஸ்பாட்டுலருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் நம்ம ஃப்ரெண்டோட போலீஸ் கார் மடக்கி புடிச்சிருச்சி....'

'இதெல்லாம் சரிங்க.... நீங்க இந்த விஷயத்துல நேரடியா தலையிட முடியாதுன்னுதான சொன்னீங்க? அப்புறம் எப்படி அரெஸ்ட் பண்ணீங்க?'

'நாங்க எங்க பண்ணோம்? எக்மோர் ஏரியா போலீஸ் ஸ்டேஷன் ஆளுங்கக்கிட்ட அந்த ரெண்டு லேடீசையும் ஒப்படைச்சதோட எங்க வேல முடிஞ்சிருச்சி. முதல்ல அந்த ராஜி கிட்ட பணத்த குடுத்த அந்த லேடி இது வெளியில தெரிஞ்சா எங்க மானம் போயிரும் அதனால அந்த லேடிக்கிட்டருக்கற எங்க ஹஸ்பென்டோட ஃபோட்டோஸ், வீடியோஸ மட்டும் வாங்கி தந்துருங்க சார், ரிட்டன் கம்ப்ளெய்ன்ட் எதுவும் வேணாம்னு முரண்டு புடிச்சாங்க. ஆனா ஸ்டேஷன் எஸ்.ஐ ஒத்துக்கவே இல்ல. ரெண்டு மிரட்டு மிரட்டி கம்ப்ளெய்ன்ட வாங்கிக்கிட்டு ராஜிய மிரட்டுனதும் அது எல்லாத்தையும் ஒத்துக்கிச்சி.'

'என்னோட நகைங்கள வாங்கினதையும் ஒத்துக்கிட்டாங்களா?'

சேகர் சிரித்தான். 'அது எங்க சொல்லிச்சி?'

'பின்னே?'

'அந்த லேடிய ரிமான்ட் பண்றப்போ அது போட்டுக்கிட்டுருந்த நகையை எல்லாம் கழட்ட சொல்வாங்க இல்ல? அப்பத்தான் அதுல ஒன் நெக்லசும் செயினும் இருந்தத  பாத்தேன். நா ஒடனே ஸ்டேஷன் எஸ்.ஐ.கிட்ட இது ரெண்டும் எப்படி இவங்கக் கிட்ட வந்துதுன்னு கேளுங்க சார்னு சொன்னேன். அப்புறம் வேற வழியில்லாம ஒத்துக்கிச்சி. நல்ல வேளையா நா உடனே அங்கருந்து போயிராம ரிமான்ட் பண்றவரைக்கும் இருந்தேன். இல்லன்னா போலீஸ் நம்ம நகைங்களையும் சேத்து இன்வென்டரி போட்டுருப்பாங்க. அப்புறம் கேஸ் முடியவரைக்கும் நம்ம நகை நம்ம கைக்கு வந்தே இருக்காது.  ஒங்கப்பா ரொம்பத்தான் ஒழைச்சி சம்பாதிச்சிருப்பாரு போலருக்கு... அதான் நீ ஏமாந்தாலும் நா போகமாட்டேன்னு திரும்பி ஒங்கிட்டயே வந்துருச்சி... எடுத்துக்கிட்டு போயி உள்ள வையி....'

சுமதி அதிர்ச்சியில் சேகர் அடித்த கிண்டலையும் ரசிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

**********

இந்த கதை ஒரு உண்மை சம்பவம் என்று குறிப்பிட்டிருந்தேன். 

உண்மை இவ்வளவு சுமுகமாக முடிவதில்லையே. இதிலும் அப்படித்தான். உண்மையில் இது வேறு விதமாகத்தான் முடிந்தது. 

அதை நாளை சொல்கிறேன்.

டிபிஆர்.