18.11.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம் ) - 15

காட்சி-20

பாத்திரங்கள்: அம்புஜம், பங்கஜம், பிந்து, விஷால், சிந்து

(பிந்து அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறாள்.)

அம்புஜம்: (அவசர அவசரமாய் சமையற்கட்டிலிருந்து வருகிறாள். கையில் பிந்துவின் டிபன் டப்பா.) ஏய், ஏய் பிந்து.. எங்கடி கிளம்புற.. சாப்பாடு வேண்டாம்?

பிந்து: (நின்று, திரும்பி தன் தாயை பார்க்கிறாள்) வேண்டாம்மா.. நான் லஞ்ச் டைம்ல வெளிய இருப்பேன்.. எங்கயாவது ஒட்டல்லதான் டிபன் பண்ணிக்கணும்.

அம்புஜம்: (ரகசியக்குரலில்) ஏன்டி.. உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?

பிந்து: (குழப்பத்துடன்) என்னம்மா சொல்றே? எதுவாருந்தாலும் சாயந்திரம் ஆஃபீஸ்லருந்து வந்தப்புறம் பேசிக்கலாம். எனக்கிப்போ ஆபீசுக்கு லேட்டாவுது..

அம்புஜம்: (மாடியை பார்த்துவிட்டு) விஷால் ரொம்பவும் டல்லாருக்கா மாதிரி தெரியுதுடி.. பாவம்டி அவன்.. இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் வச்சிருக்கோம்.. இப்பவும் நீ ஆஃபீஸ், கீபீஸ்னு ஓடின்டிருக்கே.. டில்லிக்கு போக வேண்டியவதானடி நீ.. எதுக்கு இப்பவும் காலணா பொறாத இந்த வேலைக்கி ஓடின்டிருக்கே? விஷால் இருக்கற வரைக்குமாவது வீட்ல இரேன்..

பிந்து: (எரிச்சலுடன்) அம்மா இத சொல்றதுக்கு இதுவா நேரம்? சாயந்திரமா பேசிக்கலாம்.. நான் வரேன்.. (கதவைத் திறந்துக்கொண்டு போகிறாள்)

அம்புஜம்: (தனக்குள்) ஈஸ்வரா.. இவளுக்கு நீதான் நல்ல புத்திய குடுக்கணும்.. இந்த மனுஷனாவது கண்டிச்சி சொல்லி புரிய வைக்கிறாரா? எல்லாத்தையும் என் தலையிலயே போட்டுட்டு அவர் பாட்டுக்கு சின்ன குழந்தையாட்டமா..

(பங்கஜமும் விஷாலும் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். அம்புஜம் தனக்குள் முனகுவதைப் பார்த்து கேலியுடன் புன்னகை செய்கிறாள் பங்கஜம்.. விஷால் இதை பார்த்தும் பாராததுபோல் நேரே போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து தன் கையில் இருந்த புத்தகத்தை திறந்து படிக்கிறான்)

பங்கஜம்: டேய் என்ன சோபாவுல போய் உக்காந்துட்டே? புத்தகத்த திறந்துட்டேனா அதுலய மூழ்கி போயிருவே.. அப்புறம் இடியே இடிச்சாலும் உன்ன எழுப்ப முடியாது.. வா, வந்து சாப்டுட்டு போ.. (அம்புஜத்திடம்) என்ன அம்புஜம் உனக்குள்ளேயே பேசிக்கற போலருக்குது.. என்ன விஷயம்?

அம்புஜம்: நா என்னத்த புலம்பப் போறேன்? எல்லாம் இந்த பிந்துவை பத்தித்தான்.. விஷால் இருக்கற வரைக்கும் வீட்ல இரேன்டின்னேன். கேட்டாத்தானே.. இவ ரெண்டு நாள் இல்லாட்டி ஆஃபீசே மூடிடுவாங்கறா மாதிரி கால்ல ரெக்கைய கட்டிண்டு ஓடறா. இந்த நந்து என்னடான்னா நிச்சயம் யாருக்கோங்கறா மாதிரி விட்டேத்தியா இருக்கான்.. எப்படித்தான் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயத்துக்கு வேண்டியத எல்லாம் செஞ்சி முடிக்க போறேனோ தெரியல.. அதான் புலம்பின்டே இருக்கேன்.

(பங்கஜம் தன் முகத்தை சுளிப்பதைப் பார்த்துவிடுகிறாள் அம்புஜம்)

அம்புஜம்: என்ன மன்னி நான் சொல்றத பிடிக்காத மாதிரி முகத்த வச்சிண்டிருக்கேள்? என்ன நினைக்கறேள்? எதுவாருந்தாலும் சொல்லிருங்கோ..

பங்கஜம்: அம்புஜம், நா ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே?

அம்புஜம்: (குழப்பத்துடன்) என்ன மன்னி புதிர் போடறேள்? சொல்லுங்கோ.

பங்கஜம்: எனக்கென்னமோ பிந்துவுக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லேன்னுதான் தோன்றது.. (விஷாலை திரும்பி பார்க்கிறாள். விஷால் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து இருவரையும் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து மாடிக்கு போகிறான். சமையற்கட்டில் வேலையாயிருந்த சிந்து வேலையை நிறுத்திவிட்டு ஹாலில் பேசுவதை கேட்க முயல்கிறாள்).

அம்புஜம்: (அதிர்ச்சியுடன் எழுந்து செல்லும் விஷாலைப் பார்த்தவாறு பங்கஜத்தை நெருங்கி ரகசிய குரலில்) என்ன மன்னி நீங்கள்? பாருங்கோ விஷால் முகத்துல சட்டுன்னு ஒரு ஏமாத்தம் வந்து கப்பிண்டுருச்சு.. அதுசரி.. நீங்க எத வச்சி பிந்துக்கு இதுல இஷ்டம் இல்லேன்னு கண்டுபிடிச்சேள்?

பங்கஜம்: அவ முகத்துலதான் சந்தோஷத்தையே காணோமே.. விஷால பாத்தாலே மூஞ்ச திருப்பிண்டு போயிடறாளே.. உங்கண்ணாவும் நானும் நேத்து பெட்ரூம்ல இதத்தான் பேசிண்டிருந்தோம்.. உங்கண்ணா இப்ப அவசரப்பட்டு இந்த நிச்சயத்த நடத்தணுமாங்கறார்..

அம்புஜம்: (பதட்டத்துடன்) ஐயையோ.. அண்ணாவா இப்படி சொன்னார்? நீங்க ரெண்டு பேரும் நினைக்கறா மாதிரி இருக்காது.. பகவானே.. அவ வரட்டும். இன்னைக்கி..

பங்கஜம்: இங்க பாரு அம்புஜம்.. இந்த காலத்து பசங்க மனசுல என்ன இருக்குன்னு நம்மளால சொல்ல முடியாது.. அதத்தான நா ஆரம்பத்துலருந்தே சொல்லிண்டிருக்கேன்? நீதான் அதெல்லாம் வேண்டாம்னுட்டே.

அம்புஜம்: ஆமாம் மன்னி.. நீங்க சொல்றது சரிதான்னு தோண்றது.. ரெண்டு, மூனு நாளாவே பிந்து என்னவோ மாதிரிதான் இருக்கா.. இன்னைக்கி வந்ததும் கேட்டுடறேன். பாவம் விஷால நினைச்சாத்தான் பாவமாயிருக்கு.. (பங்கஜத்தை பார்க்கிறாள்) மன்னி.. நான் ஒன்னு சொல்லட்டுமா?

பங்கஜம்: என்ன சொல்லு?

அம்புஜம்: (ரகசிய குரலில்) இப்போதைக்கு இது நமக்குள்ளயே இருக்கட்டும். முக்கியமா அவருக்கு தெரியவேண்டாம்..

பங்கஜம்: நீ சொல்றதும் சரிதான். நமக்குள்ளயே இருக்கட்டும்..

காட்சி முடிவு.


காட்சி - 21

பாத்திரங்கள் பிந்து, விஷால்

(பிந்து தன் அலுவலகத்தை அடைந்து வண்டியிலிருந்து இறங்குகிறாள். கைத்தொலைபேசி அடிக்கிறது.. எடுத்து யார் என்று பார்க்கிறாள். அவளுக்கு அறிமுகமில்லாத தொலைப்பேசி எண்.)

பிந்து: (தயக்கத்துடன்) ஹலோ..

(தொலைப்பேசி குரல்) பிந்து நான் விஷால் பேசறேன்.

பிந்து: (வியப்புடன்) ஹாய் விஷால். என்ன ஃபோன்ல கூப்டறே.. எங்க இருக்கே?

விஷால்: ஹாய் பிந்து.. எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணுமே.. இப்பவே.. எங்க வந்தா பாக்கலாம்?

பிந்து: ஒன் செக்கன்ட் விஷால். (குழப்பத்துடன் வண்டியை ஸ்டான்டில் பார்க் செய்கிறாள். அலுவலகத்தினுள் செல்லாமல் வெளி வாசலை நோக்கி செல்கிறாள்)

விஷால்: பிந்து?

பிந்து: சொல்லு விஷால்.. சாயந்திரம் பேசினா போறாதா? எனக்கு ஆஃபீசுக்கு டைம் ஆயிருச்சு விஷால்.

விஷால்: நோ பிந்து.. இட் இஸ் அர்ஜன்ட்.. ஒரு ஹாஃப் எ டே லீவ் போடேன்.. ஐ வான்ட் டு சீ யூ.. ஐ நீட் டு டாக் டு யூ. ப்ளீஸ் பிந்து..

பிந்து: (ஒரு முடிவுடன்) ஓகே.. விஷால்.. நான் ஆஃபீஸ்ல போய் சொல்லிட்டு பக்கத்துலருக்கற ரெஸ்டரண்ட் வாசல்ல நிக்கறேன். உனக்கு என் ஆஃபீஸ் தெரியுமா?

விஷால்: சரியா தெரியாது.. அட்ரஸ் குடேன். நான் கண்டுபிடிச்சிக்கறேன்.

பிந்து: (அலுவலக விலாசத்தை கூறுகிறாள்) எழுதிக்கிட்டியா? நான் வாசல்லத்தான் நிக்கறேன்.. கண்டுபிடிக்க முடியலைனா கிட்ட வந்ததும் மொபைல்ல கூப்பிடு.. வச்சிடறேன்.

விஷால்: தாங்க் யூ பிந்து.. ஐ வில் பி தேர் இன் அபவுட் டென் மினிட்ஸ்.. அவ்வளவு தானே எடுக்கும்?

பிந்து: ஆமா..

விஷால்: ஓகே.. பை.. ஐ வில் பி தேர்.

பிந்து: பை.. (தனக்குள்) இவன் ஏதாவது குழப்புவானா? கம் வாட் மே.. ஐ வில் டெல் ஹிம் தி ஹோல் திங்.. (அலுவலகத்திற்குள் நுழைகிறாள்)

காட்சி முடிவு

(சாரிங்க.. அடுத்த பதிவில கண்டிப்பா முடிஞ்சிரும்..)

No comments: