1.12.05

குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்! - 5

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. என்னுடைய ‘என்னுலகம்’ ப்ளாக்கை துவக்கி சரியாக ஒரு வாரம் கழித்து இந்த ப்ளாக்கை ஆரம்பித்தேன். இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசைதான். கற்பனை வறண்டு போகாமல் இருக்க வேண்டும்.

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடு: (கவுண்டமனியை பார்த்து) வாங்கய்யா..

கவு: (செந்திலை பார்த்து) டேய்.. நான் பேசறப்ப இடையில ஏதாச்சும் வம்பு தும்பு பண்ணே மவனே உன்ன பொலி போட்ருவேன். சொல்லிட்டேன்.

செந்: நீங்க தைரியமா போயி பேசுங்கண்ணே, நா இருக்கேன்ல..

கவு: போடாங்.. டகிள்பாஞ்சி தலையா.. நீ அப்படியே வந்து எடுத்து குடுத்திருவியாக்கும்.. போடா டேய்..

செந்: பாப்பம், பாப்பம். என்ன பேசி கிளிக்கிறீங்கன்னு..

கவு: பார்றா.. டுபாக்கூர் தலையா. எப்படி கலாய்க்கிறேன்னு பாரு

நடு: (சிரிக்கிறார்) வாங்கய்யா.. அங்க நின்னு பேசறத இங்கன வந்து பேசறது..

கவு: தோ வந்துட்டேன்யா, வந்துட்டேன் (மேடையிலேறி மைக்கை பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டுகிறார்.)

நடு: (மிரட்சியுடன்) எய்யா என்ன செய்யறீங்க? அத கழட்டி அடிக்கறதில்லைய்யா, பேசறது?

கவு: (தனக்குள்) அது தெரியலையாக்கும். பெரிசு சும்மாத்தான் லொள்ளு.. (மைக்கை விரலால் தட்டியவாறு) ஹலோ.. ஒன், டூ, த்ரீ

(வடிவேலு தலையைக் கவிழ்த்துக்கொண்டு சிரிக்கிறார். செந்தில் தலையில் கைவைத்துக்கொள்கிறார். அரங்கத்தில் உள்ள அனைவரும் பிற நடிகர்கள் உட்பட, கொல்லென்று சிரிக்கின்றனர்)

கவு: அய்ய எதுக்குய்யா சிரிக்கிறீங்க இப்ப? (செந்திலை பார்க்கிறார்) டேய் கேட்டு சொல்லேன்டா .. எதுக்கு எல்லாரும் சிரிக்கிறாங்க? ஏன்டா, மைக் சரியாயிருக்குதான்னு பாக்கறது ஒரு தப்பா? (நடுவரை பார்க்கிறார்) என்ன நடுவர் அவர்களே நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா? மைக்க டெஸ்ட் பண்றது ஒரு தப்பாங்க..

நடு: (சிரிக்க பயந்து) இல்லைங்கய்யா.. சினிமாவுல நீங்க பண்ண தமாசு சீன் ஒன்னை நினைச்சி சிரிச்சிருப்பாங்கன்னு நினைக்கறேன். நீங்க பேசுங்க..

கவு: அய்யா.. நமக்கு இந்த மாதிரி மீட்டிங்கல பேசியல்லாம் பழக்கமில்லீங்கோ.. நா சும்மா சினிமாவுல வசனகர்த்தா எழுதி குடுத்தா அத நம்ம ஸ்டைல்ல பேசிட்டு சம்பளத்த வாங்கிட்டு போயிரதுங்கோ.. அதனால.. (திரும்பி செந்திலை பார்க்கிறார்) ஏன்டா தலையில அடிச்சிக்கிற? நா என்னத்த இப்ப தப்பா பேசிட்டேன்? (நடுவரை பார்க்கிறார்) ஏன்யா நா எதாச்சும் தப்பா கிப்பா பேசிட்டேனாக்கும்.. இவன் இந்த சலிப்பு சலிச்சிக்குறான்? (செந்திலை பார்க்கிறார்) டேய் சொல்லுறா? எதுக்குடா இப்ப தலையில அடிச்சிக்கிட்டே?

நடு: (சிரிக்கிறார்) எய்யா.. அவரை பாக்காதீங்க.. நீங்க சொல்ல வந்தத சொல்லி முடிச்சீங்கன்னா.. அடுத்தது யாருன்னு பாக்கலாமில்லே.

கவு: (எரிச்சலுடன்) ஓ பாக்கலாமே..

நடு: நீங்க பேசுங்க..

கவு: (தனக்குள்) என்னத்த பேசறது? அங்க உக்காந்திருக்கும்போ என்னென்னவோ ஐடியால்லாம் வந்துது.. மைக் முன்னால நின்னதும் கால் கையெல்லாம் தந்தியடிக்குதேடா சாமி.. (செந்திலை பார்கிறார்) (தனக்குள் கருவுகிறார்) டேய் மவனே, நக்கலாவா சிரிக்கறே, பேசிட்டு வந்து பாத்துக்கறேன் உன்ன.. (குரலை கனைத்துக்கொள்கிறார்) ஐயா நடுவர் அவர்களே (குரல் நடுங்குகிறது.) நடுவர் அவர்களே.. (அரங்கத்தில் உள்ளவர் அனைவரும் சிரிக்கின்றனர்)

நடு: (சிரிக்கிறார்) நான் இங்கதானய்யா இருக்கேன்.. ஏலம் விடுறீங்க? பேசுங்கய்யா.. ரெண்டு வார்த்தை பேசிட்டீங்கன்னா அப்புறம் தானா வந்துரும்.. பேசுங்க..

கவு: (தனக்குள்)ஆமா.. நாக்கு உள்ற போய் ஒட்டிக்கிட்டு வார்த்தையே வரமாட்டேங்குது. இதுல என்னத்த பேசறது? (நடுவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் குடிக்க தண்ணி இருக்குங்களா?

(வடிவேலு வாயை மூடிக்கொண்டு சிரிக்க பார்த்திபன் முறைக்கிறார்)

பார்: டேய் சிரிக்காத.. அவராவது பரவாயில்லை. நடுவரே, நடுவரேன்னு ரெண்டு மூனுவாட்டி பேசிட்டார். உனக்கு அதுகூட வராது..

செந்: (தனக்குள்) ஐயோ, மானத்த வாங்கராறே..

(தங்கவேலுவும் பாலையாவும் ஒருவரையொருவரைப் பார்த்து நக்கலுடன் புன்னகை செய்கிறார்கள். ஜனகராஜ் கைக்குட்டையை வாயில் வைத்துக்கொண்டு சிரமப்பட்டு சிரிப்பை அடக்குகிறார்.)

கவு: (தண்ணீர் குடித்துவிட்டு குப்பியை கையிலேயே பிடித்துக்கொள்கிறார்) ஐயா நடுவர் அவர்களே.. அந்த குஷ்பு அம்மா எப்பவுமே வில்லங்கம் புடிச்சவங்க நடுவர் அவர்களே.. எந்த நேரத்துல சினிமாவுக்குள்ள வந்தாங்களோ நடுவர் அவர்களே அப்பத்துலருந்தே ஒரே குளப்பந்தாங்கோ நடுவர் அவர்களே.. குளப்பமோ குளப்பம். உங்க குளப்பம் எங்க குளப்பமில்லீங்க (தன்னை மறந்து கையை அகல விரித்து தலைக்கு மேல் கொண்டு செல்கிறார். கையிலிருந்த குப்பியிலிருந்த தண்ணீர் அவர்மேல் விழ அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது. சமாளித்துக்கொண்டு தொடர்கிறார்) பயங்கரமான குளப்பம்ங்கோ. நடுவர் அவர்களே, அந்தம்மா யாருங்க மத்தவங்க என்ன செய்யணும்னு சொல்றதுக்கு? நடுவர் அவர்களே, அவங்க சோலிய அவங்க பாத்துக்கிட்டு போவ வேண்டியதுதானே.. அத்த வுட்டுப்புட்டு.. நடுவர் அவர்களே, இப்ப பாருங்க, ரோட்டுல ஒளுங்கா நடந்துகூட போவ முடியல.. எவன பாத்தாலும் கையில வெளக்குமாறும் கையுமா அலியறான். தேவையா இது? இல்ல தேவையாயிதுன்னு கேக்கறேன்.. சொல்லுங்க நடுவர் அவர்களே.. தேவையா இது?

நடு: (தனக்குள்) இவரு ‘நடுவர் அவர்களே’, ‘நடுவர் அவர்களே’ன்னு நொடிக்கொருதரம் சொல்லி, சொல்லி, இப்ப என்கிட்டதான் கேக்கறாரான்னே தெரியலையே..

கவு: (எரிச்சலுடன்) என்ன நடுவர் அவர்களே.. நான் கேக்கறேன் சும்மா சிரிச்சிக்கிட்டே இருந்தா என்னங்க? (செந்திலை பார்க்கிறார்) டேய் நீயாச்சும் சொல்லேன்டா.. நா ஒருத்தன் இங்கருந்து நாயா கத்தறேன் நீ என்னாடா இளிச்சிக்கிட்டே பாக்கறே? சொல்லு இது தேவையாடா?

செந்: (தலையிலடித்துக் கொள்கிறார்) என்னண்ணே சொல்றீங்க? பேசி முடிங்கண்ணே..

நடு: எய்யா.. அவர விட்டுருங்க.. நான் சொல்றேன்.. நீங்க ரோட்டுல வெளக்குமாறு வச்சிக்கிட்டு நிக்கறவங்கள சொல்றீங்களா இல்ல அந்த அம்மான்னு சொன்னீங்களே அவங்க சொன்னத சொல்றீங்களா? தெளிவா பேசுங்கய்யா.. பாருங்க, எல்லாரும் பேந்த பேந்த முழிக்கறத?

(அரங்கத்தில் கொல்லென்ற சிரிப்பொலி எழுகிறது.)

கவு: (எரிச்சலுடன்) என்னய்யா இது, அநியாயமாயிருக்கு. எதுக்கெடுத்தாலும் சிரிப்புத்தானா.. சே.. என்ன பொளப்படா இது.. (தனக்குள்) பேசாம வீரப்பண்ணங்கிட்ட ஒரு செட் டையலாக்க எழுதி வாங்க்கிட்டு வந்திருக்கலாம்.. எல்லாம் இந்த கரிச்சட்டி தலையனால வந்த வினை.. உக்காந்திருக்கறத பாரு.. டேய் உன்னை வச்சிக்கறேன்டா..

நடு: (குழப்பத்துடன்) எய்யா.. உங்களுக்கு குழப்பமில்லையே..

கவு: (திடுக்கிட்டு நடுவரை பார்க்கிறார்) எ..எ.. என்னய்யா கேட்டீங்க? (அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது. இதுவரை சீரியசான முகபாவனையுடன் அமர்ந்திருந்த பார்த்திபனும் சிரித்துவிடுகிறார்)

நடு: (தனக்குள்) நாசமா போச்சு.. (சிரிக்கிறார்) ஒன்னுமில்லைய்யா நீங்க முடிவா என்ன சொல்ல வரீங்கய்யா? அத சொல்லுங்க..

கவு: நான் என்னத்தய்யா சொல்லப் போறேன்? நம்ம கேப்டன் சொன்னாமாதிரி அந்த அம்மா பேசியே இருக்கக்கூடாது.. பத்திரிகை நிரூபர் பேமானிங்க (நாக்கைக் கடித்துக்கொள்கிறார்) மன்னிச்சுக்குங்க நடுவர் அவர்களே.. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு.. (செந்திலை காட்டி) இந்த கருவாயன்கூட பேசி பேசியே பளகிருச்சா.. அதான்.. நடுவர் அவர்களே.. நிரூபர்ங்க கேட்டா இந்தம்மாவுக்கு எங்கய்யா போச்சி புத்தி? எத கேட்டாலும் கெத்தா ‘நோ கமென்ட்ஸ்’, ‘நோ கமென்ட்ஸ்’சுன்னு சொல்லியிருக்கலாமில்ல? அத்த வுட்டுட்டு கல்யாணத்துக்கு முன்னால செக்ஸ் வச்சுக்கோ, கல்யாணத்துக்கு பின்னால செக்ஸ் வச்சுக்கோன்னு சொல்றதுக்கு இந்தம்மா யாருங்க? அதுக்காக அவங்கள என்ன வேணும்னாலும் பண்ணலாம் நடுவர் அவர்களே.. நடுவர் அவர்களே.. சே! பழக்க தோஷத்துல வந்துருச்சுங்க.. வேற ஒன்னுமில்லீங்க.. அவ்வளவுதான்.. (அவசர அவசரமாக இறங்கி சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டு கைத்துவாலையை எடுத்து வியர்த்து ஒழுகும் முகத்தை துடைத்துக் கொள்ளும் சாக்கில் முகத்தை மூடிக்கொள்கிறார். அரங்கமே ஒரு நிமிடம் அமைதியில் ஆழ்ந்து போகிறது. அடுத்த நிமிடம் கரவொலி எழும்புகிறது. முகத்தை மூடியிருந்த கவுண்டமனி எழுந்து வாய் நிறைய சிரிப்புடன் பார்வையாளர்களைப் பார்த்து அரசியல்வாதி பாணியில் கைகூப்பி நன்றி தெரிவிக்க கரவொலி நிற்காமல் தொடர்கிறது. திரும்பி செந்திலை பார்க்கிறார்) பாத்தியாடா.. என்னமோ சொன்னியே.. பாரு.. பொறாமையில வெந்துருவியே..

செந்: (தலையிலடித்துக்கொள்கிறார்) ஐயோ அண்ணே, அண்ணே..

கவு: (எரிச்சலுடன்) என்னடா நொண்ணே..

செந்: அவுங்க உங்கள பாத்து நக்கலடிக்கிறாங்கண்ணே.. அது கூட புரியல உங்களுக்கு.. உங்கள போயி அண்ணே, அண்ணேன்னு கூப்பிடறேன் பாருங்க.. என்னைய..

கவு: என்னது செருப்பால அடிச்சிக்க போறியா.. அடிச்சிக்க.. (அமர்கிறார்)

(நடுவர் கையை உயர்த்த அரங்கத்தில் கரவொலி அடங்குகிறது.)

நடு: (வாயெல்லாம் சிரிப்புடன்) நல்ல காமெடிய்யா.. இப்பத்தான்யா புரியுது உங்கள் ஏன் காமடி கிங்குன்னு சொல்றங்கன்னு. பிச்சி உதறிட்டீங்கல்லா.. (ஜனகராஜை பார்க்கிறார்) வாங்கய்யா வந்து உங்க பங்குக்கு காமடி பண்ணுங்க.. (நாக்கை கடித்துக்கொள்கிறார்) மன்னிச்சிக்குங்கய்யா.. தப்பா சொல்லிட்டேன்.. வந்து உங்க கருத்த சொல்லுங்க..

தொடரும்

14 comments:

Anonymous said...

சார் இது பகுதி நம்பர் அஞ்சி தானே.. நாலுன்னு போட்ருக்கீங்க. சில பேர் படிக்காம விட்டுட்டாலும் விட்ருவாங்க. கரெக்ட் பண்ணுங்க.


மத்தபடி இன்னைய கவு. காமடி ரொம்ப நல்லா வந்திருக்கு சார். அடுத்தது யாரு செந்திலா? கலக்கறீங்க போங்க

டிபிஆர்.ஜோசப் said...

தாங்க்ஸ் அன்புமணி!

அடுத்தது சீனியாரிடி பிரகாரம் ஜனகராஜாத்தான் இருக்கணும். செந்தில் தனியா காமெடி பண்ணி பெருசா சக்சஸ் ஆகலையே.

Anonymous said...

Innaikum Super தாங்க.

நேத்தைக்கி லதா சொன்னாமாதிரி கவு-செந்தில் காம்பினேஷன் காமடிய ரொம்ப நல்லா பண்றீங்க.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சாப்ட போயிருந்தேன் சார். அதான் லேட்டாயிருச்சி.

உங்க பதிவ நாந்தான் முதல்ல படிச்சி பின்னூட்டம் போடணுங்கறது எனக்கு வேண்டுதல். அதான்.. ஹி, ஹி.

இன்னைக்கிம் கலக்கிட்டீங்க.

Anonymous said...

:-)))))))))))))
:-))))))))))))))))
:-))))))))))))))))))))

நேத்தைக்கி வராததற்கும் சேர்த்து பெரிசா போட்டுட்டேன். நேத்தைக்கி என்னடா சீரியாசா போகுதேன்னு பார்த்தேன். மறுபடியும் பழைய டிராக்குக்கே வந்து பின்னியெடுத்திட்டீங்க. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

என்ன நடுவர் அவர்களே..... ஸாரி...தப்பா வந்துருச்சு. என்ன ஜோசஃப் அவர்களெ அம்பதுஅம்பதா அடிச்சு தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க.

இது அஞ்சுதான். நாலாக்கி இப்படி குழம்பவச்சிட்டீங்களே.

டிபிஆர்.ஜோசப் said...

சாரிங்க துளசி.

காமடி பண்ணி, பண்ணி குழம்பி போயிருக்கேன். இந்த சீரியல முடிச்சாத்தான் பழைய டிபிஆர்ஜோ வா மாறுவேன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

ஐயா ஜோசப் ஐயா, ரொம்பத்தான் ரவுச பண்ணாதீங்க. நான் மேடையில பேசறதுல கிங்குங்க. என்ன போயி இப்படி கலாய்ச்சிட்டீங்க. வேணாம், சொல்லிட்டேன்.

Anonymous said...

யோவ், யாருய்யா நீ? நேத்தைக்கி பார்த்திபன், இன்னைக்கி கவுண்டமனியா? ஒழுங்கா பேர சொல்லிட்டு பின்னூட்டம் போடுய்யா? ஜோசப் சார் இந்த மாதிரி பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க. டைம்தான் வேஸ்ட்.

Anonymous said...

தோ பார்றா? இவரு பேரே தெரியல. இதுல என்ன சொல்ல வந்துட்டார்றோய். உம் பேரென்ன? அத்த சொல்லு, நாங்க சொல்றோம்.

டிபிஆர்.ஜோசப் said...

கவுண்டமனி சார் எங்கள் விட்டுருங்க. நாங்க ஏதோ பொழுது போகாம, டைம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மாதிரி ரவுசு விடறதுதான். இதையெல்லாம் நீங்க படிக்கணும்னா எழுதறோம். அந்த அநாமதேய நண்பர் ஏதாவது தப்பா பேசியிருந்தா மனசுல வச்சுக்காதீங்க, விட்டுருங்க.

புனைப்பெயரில் எழுதியவருக்கும் அவரை எதிர்த்து குரல் கொடுத்த அநாமதேய நண்பருக்கும் ஒரு ஹி, ஹி!!

டிபிஆர்.ஜோசப் said...

இதன் மூலம் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்வது நாளைய பதிவுடன் இத்தொடர் நிறைவு பெறும். தவறாமல் படியுங்கள்?!?!

G.Ragavan said...

// கவு: (எரிச்சலுடன்) ஓ பாக்கலாமே.. //

கவுண்டமணியே நேருல வந்து சொல்ற மாதிரி இருந்தது. அந்த மேனரிசம்...டயலாக் டெலிவரி......

பிரமாதம். பிரமாதம்.

G.Ragavan said...

என்னது....நாளைக்கு முடியுதா....அடடேஏஏஏஏஏஏஏஏஏஏஏ. சரி சரி. நாளைக்குப் பதிவிடுங்க...படிச்சிக்கிரோம்.