25.5.06

சூரியன் 84

‘என்ன இருந்தாலும் நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாதுய்யா.’

மாணிக்கவேல் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தார்.

சீராக மூச்சுவிட முடியாமல் கட்டிலில் படுத்திருந்த தன் தந்தை அந்த நிலையிலும் தன் மருமகளைப் பற்றி கவலைப்படுவதை நினைத்து 'அழுவதா, சிரிப்பதான்னு தெரியலையே' என்று நினைத்தார்.

தன்னைத் திருமணம் செய்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து ஒரு மாதம் நிறைவேறுவதற்குள் படுத்த படுக்கையாக இருந்த அவருடைய தாய் மரித்துப்போக அந்த இழப்பில் துளி அக்கறையும் காட்டாமல் இருந்தவள் ராணி.

‘நல்ல வேளைங்க.. இப்படியே இழுத்துக்கிட்டே இருந்து என் உயிர வாங்காம போய் சேர்ந்தாளே மகராசி..’ என்று சலிப்புடன் அக்கம்பக்கத்துக்காரர்களிடம் ராணி வாய்விட்டு கூறியதை கேட்டபோது தான் தவறு செய்துவிட்டோமோ என்று முதன்முதலாக உணர்ந்தார் அவர்.

அதன் பிறகு தன் மனைவியின் இழப்பைத் தாங்கிக்கொள்ள இயலாமல் உடலும் மனமும் சோர்ந்துபோயிருந்த தன் தந்தையை தான் வீட்டில் இல்லாத சமயங்களில் மனம் நோக ராணி பேசுகிறாள் என்று வேலையாட்கள் மூலமாக அறிந்தபோது வெகுண்டெழுந்தாலும் அவருடைய கோபத்தை சற்றும் பொருட்படுத்தாமல் அவள் அலட்சியப்படுத்தியபோது முன்பின் தெரியாத ஒரு பெண்ணை வெறும் அவள் சார்ந்திருந்த மதத்திற்காக திருமணம் செய்துக்கொண்டது எத்தனை முட்டாள்தனம் என்பதை முழுவதுமாக உணர்ந்தார்.

‘அதெல்லாம் ஒன்னுமில்லேடா.. எந்த வீட்லதான் இந்த பிரச்சினை இல்லே? ஏன், ஒங்கண்ணன்மார் ரெண்டு பேர்க்கும் தெரிஞ்ச எடம், சொந்த எடம்னுதான முடிச்சோம்? அவளுங்க மட்டும் ஒங்கம்மா படுக்கையில விழுந்தப்போ பார்த்தாளுங்களா என்ன? ராணி அவளுங்களவிட மோசமும்னு நா சொல்லமாட்டேன். படபடன்னு பேசினாலும் எனக்கு வேண்டியதையெல்லாம் செஞ்சிக்கிட்டுத்தானடா இருக்கா? நீ வீணா எதையாவது நினைச்சி கவலப்படாத.’

மாணிக்கவேல் வருத்தப்பட்டு அவரிடம் சென்று கேட்டபோதெல்லாம் இப்படி பேசியே தன்னுடைய  வாயை அடைத்துவிட்டதை நினைத்துப் பார்த்தார்.

ராணியின் நடவடிக்கை தான் சென்னையை விட்டு மாற்றலாகி சென்றவுடன் மிகவும் மோசமாகி தன்னுடைய தந்தை ஒரு பணியாளையும் விட கேவலமாக நடத்தப்படுகிறார் என்பதை தற்செயலாக கேள்விப்பட்டபோதுதான் ஆவேசமடைந்து நேரே புறப்பட்டு சென்று ராணி வளர்ந்த கன்னியர் மடத்தலைவியையும் அவருடைய திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியாரையும் சந்தித்து பேசினார்.

அவருடைய மனத்தாங்கலை உண்மையான பச்சாதபத்துடன் செவிமடுத்த இருவருமே உடனே புறப்பட்டு அவருடைய இல்லத்திற்கு வந்து ராணியைச் சந்தித்து அறிவுரைக் கூறினர். மாணிக்கவேலின் தந்தையையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆனால் அவர்கள் வந்துசென்ற சில வாரங்களிலேயே ராணி தன் போக்கிலேயே செல்லவாரம்பிக்க செய்வதறியாது திகைத்து நின்றார் மாணிக்கவேல்.

அப்போதும், ‘என்னப்பா ராணி ஒங்கள நல்லா பாத்துக்கறாளா?’ என்று கேட்டால், ‘ஆமாப்பா.. நல்லா பாத்துக்கறா. நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே..’ என்று எங்கே தான் வருத்தப்படப்போகிறேனோ என்பதை தன்னிடம் மறைத்தவர்தானே இவர் என்ற எண்ணத்துடன் தன் தந்தையையே பார்த்தார்.

‘நா இப்ப என்ன பண்ணணும்னு நீங்க சொல்றீங்கப்பா?’

‘சாவு வீட்ல வச்சி அவள அனுப்பியிருக்கக் கூடாதுன்னு சொல்றேன்.. கமலி அவளோடயும் குழந்தைதானடா? இப்படி எல்லார் முன்னாலயும் வச்சி அவள அவமானப்படுத்தறா மாதிரி வீட்ட விட்டு அனுப்பியிருக்கணுமான்னுதான் கேக்கறேன்..’

மாணிக்கவேல் சலிப்புடன் அறையிலிருந்த தன் மகன் சந்தோஷையும் ஊரிலிருந்து வந்திருந்த தன் சகோதரர்களையும் பார்த்தார்.  மூத்தவர்கள் இருவரும் ‘இதில் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள்’ என்ற முகபாவனையுடன் அமர்ந்திருக்க அவருக்கு நேர் இளையவனும் அவனுடைய மனைவியும் அவருடைய தந்தை கூறியதை ஆமோதிப்பதுபோல அவரைப் பார்த்தனர். அவர்கள் இருவருமே ராணிக்கு மிக நெருக்கமான தம்பதியர் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.

‘நீ என்னடா சொல்றே?’ என்றார் மாணிக்க வேல் தன் இளைய சகோதரனைப் பார்த்து.

‘அப்பா சொல்றது சரின்னுதான் தோனுதுண்ணே.. அண்ணியோட கொணம்தான் ஆதியிலிருந்தே நமக்கு தெரியுமே.. படபடன்னு பேசுவாங்களேயொழிய மனசுல ஒன்னும் வச்சிக்க மாட்டாங்கண்ணே.. என்னையும் இவளையும் பேசாத பேச்சா? ‘ஒங்க ரெண்டு பேருக்கும் இனியும் தண்ட சோறு போட என்னால முடியாது’ன்னு எங்க ஃபேக்டரி ஸ்ட்ரைக்குலருக்கும்போது விரட்டியடிச்சவங்கதானேண்ணே.. அப்புறம் ஒரே வாரத்துல நாங்க குடியிருந்த எடம் வரைக்கும் வந்து எங்களுக்கு உதவுனத எங்களால எப்படிண்ணே மறக்க முடியும்? அவங்க நினைச்சிருந்தா அப்பாவ என்னால வச்சி பாக்க முடியாது எங்கயாவது முதியோர் இல்லத்துல கொண்டு சேத்திருங்கன்னு ஒத்தக்கால்ல நின்னிருந்தா ஒங்களால என்ன செஞ்சிருக்க முடியும்? ஆனா அவங்க அப்படி சொல்லலேல்லே? திட்டிக்கிட்டேன்னாலும் அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் செஞ்சிக்கிட்டுத்தான இருந்தாங்க?’

மாணிக்க வேல் அதிசயத்துடன் தன் சகோதரனைப் பார்த்தார். அவளுக்கு அப்படியொரு எண்ணம் வேற இருந்துதா? இருக்கும்.. இவனே கூட அப்படியொரு யோசனைய சொல்லியிருப்பான். தையல் வேல செஞ்சி இவனையும் இவன் தம்பியையும் படிக்க வச்சி, ஆளாக்கி ஒரு வேலையையும் வாங்கிக்குடுத்த என்னையே எதுத்துக்கிட்டு போனவன்கதானடா நீயும் ஒன் தம்பியும்.. நீ 'எம் பொண்ணு மாதிரி நினைச்சிக்கிட்டிருக்கே'ன்னு சொன்னவ இறந்த செய்திய கேட்டு உள்ளூர்லயே இருந்தும் வீட்டுக்கு வராம ஒன் ட்யூட்டி முடிஞ்சி கோவிலுக்கு வந்தவன்தானே நீ.. ஒந்தம்பி ஊர்ல இருந்தும் வீட்டுக்கும் வரலே.. கல்லறைக்கும் வரல.. நீ என்னடான்னா ஒங்க அண்ணிக்கு பரிஞ்சிக்கிட்டு வரே..

‘என்னண்ணே பேசாம இருக்கீங்க? நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?’

மாணிக்க வேல் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தவாறு தலை குனிந்து நின்றிருந்த தன் மகனைப் பார்த்தார். அவனுடைய முகத்தில் கப்பி நின்ற சோகம் அவருக்கு புரிந்தது..

‘சந்தோஷ்.. நீ என்னப்பா சொல்றே?’

சந்தோஷ் தலையை நிமிர்ந்து அவரை பார்த்தான். ‘அம்மாவ மறுபடியும் கூப்டுக்கலாம்ப்பா.. ஃபாதர் கூட போகும்போது கூட எங்கிட்ட ‘அப்பாக்கிட்ட சொல்லுடா.. நான் இனி வாயே திறக்க மாட்டேண்டா.. என்னெ அனுப்ப வேணாம்னு சொல்லுடா’ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்கப்பா.. நீங்கதான்..’

மேலே தொடரமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுத தன் மகனைக் காணச் சகியாமல் எழுந்துச் சென்று அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு தன் தந்தையின் கட்டிலருகில் சென்று, ‘நான் போய் அவள திரும்ப கூட்டிக்கிட்டு வந்தா ஒங்களுக்கு சந்தோஷமாப்பா?’ என்றார்.

தூக்க மருந்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமலிருந்த றுமுகச்சாமி கண்களை லேசாகத் திறந்து தன் மகனைப் பார்த்து ‘ஆமாண்டா..’ என்று முனுமுனுத்தார்.

கண்களை மீண்டும் மூடி உறக்கத்திற்கு திரும்பிச்சென்ற தன் தந்தையையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கவேல் மெள்ள திரும்பி சந்தோஷைப் பார்த்தார்.. ‘சித்தப்பாவ கூட்டிக்கிட்டு போ.. மதர் அனுப்பினா கூட்டிக்கிட்டு வா.. போ..’

அறையிலிருந்த அனைவருமே வியப்புடன் அவரைப் பார்க்க அதை பொருட்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறி தன் படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டார் மாணிக்கவேல்..

****

‘எலேய் ராசேந்திரா நம்ம குடியே முளுகிப்போச்சி.. அங்க எவ கூட கொஞ்சிக்கிட்டிருக்கே?’

செவிப்பறையைக் கிழித்துக்கொண்டு ஒலித்த தன் தந்தையின் குரலைக் கேட்ட ராசேந்திரன் ஒலிவாங்கியை சற்று தள்ளிப் பிடித்தான்.

‘என்னப்பா சொல்றீங்க? என்னாச்சி?’

ரத்தினவேல் எதிர்மு¨னையில் பூகம்பமாய் வெடித்தார். ‘எலேய், ஒம் மாமனார் வந்துட்டு இப்பத்தாண்டா எறங்கி போறான்.. அந்த பேங்க் மேனேஜர்கிட்ட போயி நாம ரெண்ட் பேரும் கொடுத்த ஜாமீன விலக்குனா அவன் ஹோட்டல் கணக்க நிறுத்திருவான், செக்கெல்லாம் திரும்பிப்போகும், அதுக்கப்புறம் ஹோட்டலுக்கு ஒரு பயலும் சரக்கு சப்ளை பண்ண மாட்டான்னு சொன்னே. ஆனா அந்த பேங்கு மேனேசர் என்னடான்னா இவன்கிட்டவே போயி எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டான்.

அவன் கம்பெனி ஷேரையெல்லாம் அந்த சேட்டுப்பயகிட்ட வித்துருவோம். ஹோட்டல் கைமாறுனதும் மறுபடியும் நாம போய் சேர்ந்துக்கலாம்னு சொன்னே.. என்ன ஆச்சி? அந்த சேட்டு பய இவங்கிட்டயே போயி நீ வாங்கிக்கறியான்னு பேரம் பேசியிருக்கான்.. நீ என்னத்தடா ஒளுங்கா செஞ்சிருக்கே? தெனத்துக்கும் ஒரு பொம்பளன்னு அலைஞ்சிக்கிட்டிருக்கறத தவிர வேற என்னத்த செஞ்சிருக்கே?’

ராசேந்திரன் கையில் பிடித்திருந்த ஒலிவாங்கியையே ஒரு நொடி குழப்பத்துடன் பார்த்தான். என்ன சொல்றார் இவர்? நாம போட்ட ஒவ்வொரு திட்டத்தையும் படிக்காத முட்டாள் நம்ம மாமனார் எப்படி இவ்வளவு ஈசியா ஒடச்சி போடுறான்? எல்லாம் அந்த அதிபுத்திசாலி வக்கீலாத்தான் இருக்கும்.. அவனும் அந்த சுந்தரம் பயலும் சேர்ந்து செய்யற வேலைதான் எல்லாம்..

பற்களை கடித்துக்கொண்டு எதிர்முனையிலிருந்து வந்த வசவு வார்த்தைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு..

ராசாத்தியம்மா.. சை.. பேசாம அவள நம்ம கைக்குள்ளயே வச்சிருந்திருக்கலாம். ‘அவ எப்ப கோச்சிக்கிட்டு அவ அப்பன் வீட்டுக்கு போனாளோ அப்பவே நம்ம கையிலருந்த துருப்பு சீட்டு
போயிருச்சிறா முட்டாப் பயலே.. அவ அப்பனோட சொத்துக்குத்தானடா பாக்க சகிக்காம இருந்த அவ மூஞ்சியையும் மறந்துபோயி கட்டுனே.. அவ மூஞ்சி முக்கியமில்ல.. அவளுக்கு வரப்போற சொத்துதாண்டா முக்கியம் எத்தன தடவ சொல்லியிருப்பேன்.. பொறுத்து போடா.. சொத்து முழுசும் கைக்கு வரட்டும் அப்புறம் வச்சிக்கலாம்னு படிச்சி, படிச்சி சொன்னேனே’ன்னு அப்பா சொன்னப்பவே கேட்டிருக்கணும்..

புத்திக்கெட்டு போய் அவ வீட்ட விட்டு போறேன்னு பயமுறுத்தினப்போக்கூட இவ எங்க போப்போறான்னு நினைச்சேன். சரி.. போனவ.. என்னெ மன்னிச்சிருங்க ராசேந்திரன், இனி ஒங்க விஷயத்துல நா தலையிடமாட்டேன்னு எத்தன லெட்டர், எத்தன ஃபோன்.. எல்லாம் அந்த பம்பாய் மூதேவி பண்ண வேலை.. அவ அழகுல மயங்கிப்போயி.. சே.. எல்லாம் எம் புத்திய சொல்லணும்.. இப்ப அவளும் இருக்கறத சுருட்டிக்கிட்டு போயி..

‘லேய் என்ன நா பேசறது காதுல விழுதா இல்லையா? என்ன பேச்சையே காணோம்.. மேக்கொண்டு என்ன பண்றதா உத்தேசம்?’

ராசேந்திரன் என்ன பதிலளித்து சமாளிக்கலாம் என்று யோசித்தான். இப்போதைக்கு எதையாவது கூறி விஷயத்தை தள்ளி போடுவோம். பிறகு தன் சகாக்களுடன் கூடிப்பேசி ஒரு முடிவெடுப்போம் என்று நினைத்து, ‘அப்பா, பதட்டப்படாம இருங்க. நீங்க நெனக்கிறா மாதிரி அவர் அவ்வளவு ஈசியா தப்பிச்சிர முடியாது. நா நாளைக்கே நம்ம வக்கீல பார்த்து பேசிட்டு ஒங்களுக்கு ஃபோன் பண்றேன்..’ என்றான்.

எதிர்முனையிலிருந்து கேலிச் சிரிப்பு பதிலாக வந்தது.. ‘எலேய்.. நீ சின்னப் பொடிப்பயன்னு நிரூபிச்சிட்டே.. இனி ஒன்னெ நம்பி ஒன்னும் பலனில்லே.. நானே கோதாவுல இறங்கினாத்தான் சரிவரும்னு நெனக்கேன்.. இன்னைக்கே பொறப்பட்டு வரேன்.. காலைல எளுந்திரிச்சதும் எவ பின்னாலயாவது ஓடிராத.. வீட்டுலயே இரு.. என்ன? வந்து பேசிக்கலாம்.. நீ ஒன் வக்கீல் பயலுக்கு ஃபோன் போட்டு காலைல பத்து, பதினோரு மணிக்கு வரச்சொல்லி வை.. என்னலே வெளங்குதா?’

‘சரிப்பா.’ என்று இணைப்பைத் துண்டித்த ராசேந்திரன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவைக் கடந்திருந்தது. தன் எதிரில் குடிபோதையில் தள்ளாடியவாறு அமர்ந்திருந்த தன் சகாக்களைப் பார்த்தான். இவனுங்க இருக்கற நிலமையில என்னத்த டிஸ்கஸ் பண்றது.. விரட்டியடிச்சிட்டு போய் படுப்போம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

ஆகா...ராணி மறுபடியும் வரப்போறாளா...ம்ம்ம்ம்...என்னென்ன நடக்கப் போகுதோ...திருந்துனாச் சரி. ஆனா அப்படித் தெரியலையே...தன்னோட மகளுக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரிஞ்சிக்காம புருசன் மேல பழியப் போட்டு மாமனார வாழநாரு மாதிரி நடத்திய பெண்ணாச்சே...என்னாகுதுன்னு பாப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நம் இந்திய சூழ்நிலையில் குடும்பங்களில் கணவன் - மனைவி இடையில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் பிரிந்து செல்வதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதற்கு எடுத்துகாட்டுத்தான் இந்த குடும்பம். அத்துடன பிள்ளைகளுக்காவது வேற்றுமைகளை மன்னித்து, மறந்த வாழவேண்டிய நிர்பந்தத்தில் கணவன் மனைவி இருவருமே இருப்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது..

siva gnanamji(#18100882083107547329) said...

சுந்தரம்-ஒரு புதிய ந்பர் வருகின்றாரெ
ந்ல்லதுக்கா இல்லே கெட்டதுக்கா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

அந்த அதிபுத்திசாலி வக்கீலாத்தான் இருக்கும்.. அவனும் அந்த சுந்தரம் பயலும் சேர்ந்து செய்யற வேலைதான் எல்லாம்..//

அது சுந்தரம் இல்லை... செல்வம்.
பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

பயங்கர ஷஆர்ப்பாருக்கீங்க சார்:)