27.3.07

சூரியன் 186

மார்கழிக் குளிரிலும் விடியற்காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிடவேண்டும் சிலுவை மாணிக்கம் நாடாருக்கு.

'வாணம் பாத்த பூமியில பொறந்து வளந்த ஒடம்புடா இது. ஏசி ரூம்ல தூங்குனாலும் பளக்கம் விட்டுருமா என்ன? அன்னக்காவடியா இருந்தப்போ காலங்கார்த்தால எழுந்து ரோட்டுக் குளாவுலருந்து எப்பவாச்சும் அதிசயமா வர்ற தண்ணியில குளிச்சிப்போட்டு வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு கிளிஞ்ச துண்டால தலைய தொடச்சும் தொடைக்காம கரண்டிய தூக்கிக்கிட்டு அன்னைக்கி எங்க சமையலோ அங்க ஓடிக்கிட்டிருந்த ஒடம்புதான இது? வசதி வந்ததும் மறந்துபோகக்கூடிய விஷயமால்லே.' என்பார் மருமகன் செல்வத்திடம்.

வசதிகளும் செல்வாக்கும் பெருகி அவருடைய வாழ்க்கை முறையையே அடியோடு மாறிவிட்டபோதும் அதிகாலையில் எழுந்து குளிக்கும் பழக்கத்தை மட்டும் விடவில்லை.

சென்னையில் இருக்கும் நாட்களில் இரவு எத்தனை நேரம் கழித்து உறங்கச் சென்றாலும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஈர உடம்புடன் வேட்டியை சுற்றிக்கொண்டு வெறும் காலில் வீட்டைச் சுற்றி பத்துக்கும் குறையாமல் வேக வேகமாய் நடந்துவிடுவதும் வழக்கம்.

அந்த நேரத்தில்தான் தன்னுடைய எதிரிகளை எப்படி மடக்கலாம், எப்படி வீழ்த்தலாம் என்கிற சதியாலோசனைகளும் நடக்கும்.

அன்றும் அப்படித்தான். முந்தைய தினம் காலையில் செல்வத்தையழைத்து உரையாடியதிலிருந்து இறுதியில் மருத்துவர் சோமசுந்தரத்துடன் பேசிய பேச்சுகளை ஒன்றுவிடாமல் தன் மனத்திரையில் ஓட்டியவாறு வீட்டைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்தார்.

செல்வம் என்றவுடனே முந்தைய தினம் தன்னுடைய பாம்பே மேனேசர அனுப்பி சேர்மன் மாதவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தமே, பய பதிலே சொல்லலையே என்பது நினைவுக்கு வந்தது. காரணமில்லாம பய கூப்டாம இருக்க மாட்டானே. ஊர்ல ஏதும் பிரச்சினையாருக்குமோ? அந்த செல்வியோட அம்மா ஏதும் இடையில பூந்து குட்டைய குளப்பியிருப்பாளோ? இருக்கும்.. பேராச புடிச்ச பொம்பளையாச்சே அது? எரியற வீட்டுல கொள்ளிய புடுங்கறவளாச்சே? ஒருவேள அந்த பாம்பே பய கூப்டாம இருந்துருப்பானோ.. என்ன எளவோ.. நடைய முடிச்சதும் மொத வேலையா அந்த பயலோட பேசிப்புடணும்..

அப்புறம் அந்த ரத்தினவேல் பய. நேத்து பட்ட அடியில சுருண்டு போயிருப்பான். யார் கிட்ட மோதறம்னு நினைச்சிப் பாக்க வேணாம்? எப்படியிருந்தோம் இப்ப எப்படியிருக்கோம்னு கொஞ்சமாச்சும் நெனச்சி பாத்துருந்தா இப்படியொரு காரியத்த செஞ்சிருப்பானா.. 'ஐயா.. அந்த ராசேந்திரனுக்குத்தான் வயசு பத்தாது.. பொம்பள சோக்கு, குடின்னு புத்திகெட்டு அலையறான்? சரி போட்டும் சின்ன வயசு.. ராசி அவனெ வேண்டாம்னுட்டா ஒலகமே முடிஞ்சி போயிருச்சின்னு நினைக்கறதுல ச்சான்ஸ் இருக்கு? இவனுக்கென்ன? ஏளற களுத வயசு? ஒரு பிச்சாத்து சமையல் கரண்டியோட வாசல்ல வந்து நின்னு வேல கேட்ட பயதானடா நீ? இப்ப என்ன பெருசா வாள்வு வந்துருச்சின்னு வளத்துவுட்ட என் மேலய பாயறே.. சரிய்யா.. ஒனக்கு கைபாகம் இருக்கு.. ஒத்துக்கறேன்... நா வளந்ததுக்கு நீயும் ஒரு காரணம்தான்.. இல்லேங்கலே.. அதுக்காவத்தானலே = நா சம்பாதிச்சதுல பாதிக்கும் மேல ஒனக்கு அள்ளிக் குடுத்தேன்.. போறாததுக்கு எம் பொண்ணையே தார வார்த்தனே ஒம் மகனுக்கு? நா என்ன இஷ்டப்பட்டா செஞ்சேன்... ஏதோ எம் பொண்ணு ஆசப்பட்டுட்டாளேங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வச்சனே ஒம் மகனுக்குத்தான் அந்த அரும தெரியல.. சரி.. ஒனக்கு எங்கலே போச்சி புத்தி?'

என்னமோ நீ ஒன் ஷேர வித்துப்போட்டா கம்பெனிய மூடிருவமா? முட்டாப் பய.. வயசு பத்துமால்லே ஒனக்கும் ஒம் பையனுக்கும்? சின்னதுக விரும்பி கட்டிக்கிச்சுங்க.. இப்ப வேணாம்னு தோணுது பிரிஞ்சிப் போறதுன்னு முடிவு பண்ணிருச்சிங்க.. எனக்கும் இதுல சம்மதமில்லதான்.. ஆனா என்ன பண்றது.. அதுக்கும் நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலருக்கற ஒறவுக்கும் என்னலே சம்பந்தம்? சரிய்யா.. ஒனக்கும் நீயும் நானும் இனி ஒன்னாருக்க முடியாதுன்னு தோனியிருக்கும்.. அதுலயும் தப்பு இல்ல.. ஆனா நீ என்ன பண்ணியிருக்கணும்.. இந்தாய்யா என் பங்கு.. நீயே வச்சிக்க.. எனக்கு குடுக்க வேண்டியத குடுத்துரு.. கட்டுன ஒறவையே ஒம் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டப்போ நாம மட்டும் எப்படின்னு நினைக்கறதுலயும் தப்பில்லைய்யா.. ஆனா அதுக்காக நிழலுக்கு ஒதுங்கன மரத்தையே வெட்டிச் சாய்ச்சிரலாம்னு நினைச்சா உட்டுருவமா?

ஒழுங்கு மரியாதையா இத்தோட ஆட்டத்த நிறுத்திக்கிட்டா போனாப் போறான்னு அவனும் அவன் புள்ளயும் வித்த பங்குக்கு மேல ஒன்னோ ரெண்டோ போட்டுக் குடுத்துருவம். வீட்டுப் பிரச்சினைய வெளிய கொண்டு வந்து நாறடிக்கறது நல்லாவாருக்கு? ஆனா அத விட்டுப்போட்டு கோர்ட்டு கீர்ட்டுன்னு அலையறதுன்னோ இல்ல மேக்கொண்டு வில்லங்கத்துல எறங்கி ஏடாகூடமா ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சானுங்களோ.. நானும் எம் பங்குக்கு ஏதாச்சும் செய்ய வேண்டி வரும்.. பாப்பம்.. எதுவரைக்கிம் போறான்வன்னு பாப்பம்...

அந்த சேது பயலயும் சும்மா விடப்படாது... ஏற்கனவே அவன் மேல ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட் அரசல்புரசலா வந்துக்கிட்டேயிருக்கு. லஞ்சத்த வாங்கிக்கிட்டு லோன் குடுக்க வேண்டியது.. அப்புறம் இவனுங்களே அத என்.பி.ஏவா ஆக்க வேண்டியது. இவ்வளவு குடு.. வட்டிய குறைச்சித் தரேன்னு பேரம் பேச வேண்டியது.. இல்லன்னா அடகு வச்ச சொத்த நாங்களே வித்து தாரோம்.. கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சி கடைசில அடிமாட்டுக்கு வெலைக்கு பேங்குக்கு குடுக்கறத காட்டிலும் நா காமிக்கற ஆள்கிட்ட வித்தா ஒனக்கு நஷ்டம் வராம பாத்துக்கறேன்னு புரோக்கர் பயலுகள விட்டு மிரட்ட வேண்டியது. ஒத்துவரலையா, ரிக்கவரி பண்றேன்னு சொல்லி அடியாளுங்கள விட்டு கடத்திக்கிட்டு போயி அடிக்க வேண்டியது. படுபாவிப் பய.. பேருக்குத்தான் பேங்க் ஈ.டி.. பண்றது முழுசும் அடாவடித்தனம்.. இந்த லட்சணத்துல பேங்க் சேர்மன் போஸ்ட் மேல வேற ஒரு கண்ணு.. இவன மட்டும் அந்த போஸ்ட்ல ஒக்கார வச்சா.. நாளப்பொழுதுல பேங்கையே வெல பேசி வித்துப்போட்டாலும் போட்ருவான்..

அந்த லிங்கத்த கையில போட்டுக்கிட்டு இவன் அடிச்ச கொட்டம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கான் போல.. அந்த பயலுக்கு இந்த சோமசுந்தரம் வேற ஒத்து ஊதறான். இவனும் சேர்ந்துக்கிட்டு கூட்டுக் கொள்ள அடிச்சிருக்கானோ என்னவோ.. இதுவரைக்கும் அடிச்சது போறும்.. இன்னையோட அவன் விசயத்த முடிச்சிறணும்..

எடக்கு பண்ணாலும் ஃபிலிப் சுந்தரம்தான் அந்த போஸ்ட்டுக்கு லாயக்கு. கடவுள் பக்தி நிறைய இருக்கு. வாங்கற சம்பளத்துலயே பாதிய கோயிலுக்கு குடுத்துடற மனுசன்.. அவரால சேர்மன் போஸ்ட்டுக்கே ஒரு மரியாத வந்துரும்.. அதான்.. அதான் சரியான முடிவு..

அதுக்கு முன்னால மாதவன்கிட்ட எப்படியாவது போன்ல பேசிரணும்.. அங்க எப்படியிருக்குன்னு தெரியாம நாமளா எதையாச்சும் செஞ்சி போட்டுட்டு நடுக்கால அவரும் வந்து நின்னா நல்லாருக்காது.. அப்படியே நடந்தாலும் சேதுவ அந்த போஸ்டுல போட்டுட்டம்னா.. அதுல நிக்கறதுக்காகவே மாதவன இங்க வரமுடியாம செய்யவும் தயங்கமாட்டான்.. படுபாவிப்பய.. தெனக்கிம் குடிச்சிப்போட்டு கண்டதயும் திங்கற பயதானே..

'அப்பா.. என்ன என்னைக்கில்லாம நடந்துக்கிட்டே இருக்கீங்க.. அரை மணி நேரத்துக்கு மேல ஆயிருச்சி.. என்ன பயங்கரமான யோசன போலருக்கு.. நானும் பத்து நிமிசமா பாத்துக்கிட்டி நிக்கேன்.. ஒங்களுக்கு நீங்களே பேசிக்கறீங்க?'

அசரீரி போல கேட்ட குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்று நிமிர்ந்துப் பார்த்தார் நாடார். எதிரில் புன்னகையுடன் ராசம்மாள்.. 'ஒன்னுமில்ல தாயி.. ஏதோ யோசனை... தோ வந்துட்டேன்...ரொம்ப நேரம் நடந்துட்டேன் போலருக்கு.. வேர்த்துப் போச்சி.. மறுபடியும் குளிச்சாத்தான் சரியாருக்கும்.. நீ போயி பலாரத்த ரெடி பண்ணு.. இன்னைக்கி நெறய வேலையிருக்கு..' என்றவாறு ராசம்மாள் நீட்டிய டவலைப் பெற்றுக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தார்.

******

'எலேய்.. என்ன எங்கருந்து கூப்டறே? தாம்பரத்துலருந்துதான?'

'....'

'சரி அங்கனேயே நில்லு.. இன்னும் கா மணி நேரத்துல அங்க இருப்பேன்.. அப்புறம் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்துருக்க இல்ல?'

'...'

'சரி.. அது போறும்.. நா வர்றதுக்குள்ள சாப்ட்டு முடிங்கலே.. வந்ததும் என்ன செய்யணும்னு சொல்றேன்... வச்சிடறேன்..'

ரத்தினவேலு இணைப்பைத் துண்டித்துவிட்டு அவசர அவசரமாய் குளித்து முடித்தார். குளித்த முடித்த கையுடன் 'அப்பனே முருகா ஒன்ன நினைச்சித்தாம்பா இந்த காரியத்துல எறங்கறேன்.. நல்லபடியா முடிச்சிக் குடுத்துரு.. பளனியில வந்து மொட்ட போட்டுக்கறேன்...' என்று தான் செய்யவிருக்கும் படுபாதக செயலுக்கு கடவுளை துணைக்கு அழைத்தவாறு தயாராக எடுத்து வைத்திருந்த வெள்ளை வெளேர் வேட்டி சட்டைக்கு மாறினார்.

மறக்காமல் தான் எடுத்து வைத்திருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைப்பதற்கு முன் ஒருமுறை நிதானமாகப் பார்த்தார். 'ஒனக்கு இது தேவையால்லே.. யார்கிட்ட மோதறதுன்னு ஒரு வெவஸ்தை வேணாம்.. என்னெ வச்சி முன்னுக்கு வந்துட்டு என்னையே கவுக்க பாக்கறியா? நன்றிகெட்ட பயலே.....இன்னையோட முடிஞ்சிருதுல ஒன் ஆட்டமெல்லாம்.. கருவா பயலே.. இரு வச்சிக்கறேன்..'

ஹாலுக்குள் நுழைவதற்கு முன் ராசேந்திரனின் படுக்கையறையை எட்டிப்பார்த்தார்.. கைலி ஒருபுறம் கலைந்து கிடக்க விவஸ்தையில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை அருவருப்புடன் பார்த்தார். எருமை மாடு மாதிரி எந்த கவலையுமில்லாம தூங்கறத பார்.. கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிருப்பான் போலருக்கு.. நாலஞ்சி நாளா போடாததையெல்லாம் சேத்து போட்டுருப்பானோ என்னவோ.. இப்பத்தைக்கி எளுந்துருக்க மாட்டான். அதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான்.. நாம போற காரிய இவனுக்குக் கூட தெரியப்படாது.. குடிச்சிட்டா நெதானமே தெரியாத பயல நம்பி என்னத்த செய்யிறது? தெரிய வர்றப்ப பாத்துக்குவம்.. ரோட்ல எவனெவனோ போறான்.. கார்ல பஸ்சுல அடிபட்டு சாவறான்.. அதுக்கெல்லாம் நானாடா பொறுப்பு?

படிகளில் இறங்கி ஹாலுக்குள் நுழைந்து வாசலைக் கடந்து கதவை மெள்ள மூடிவிட்டு போர்ட்டிக்கோவில் நின்ற ராசேந்திரனின் நாற்சக்கர வாகனத்தத தவிர்த்து சாலையில் இறங்கி இருமருங்கிலும் பார்த்தார். கண்ணுக்கு எட்டியவரை ஆட்டோ எதையும் காணோம்... மெள்ள தெருக்கோடியை நோக்கி நடந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ கிடைக்க, 'சைதாப்பேட்டைக்கு போ.. ஸ்டேஷன் பக்கத்துல எறக்கி விட்டுரு..' என்றார்.. எதுக்கு இவங்கிட்ட தாம்பரம்னு சொல்லி.. நாளைக்கி ஏதும் பிரச்சினையானா.. வம்ப எதுக்கு வெல குடுத்து வாங்கறது.. சைதாப்பேட்டையிலருந்து ட்ரெயின புடிச்சி தாம்பரம் போயிருவோம்.. ஸ்டேசன் வாசல்லருந்துதான கூப்ட்டான்.. அதான் சரி...

ஆட்டோ சைதாப்பேட்டையை நோக்கி விரைய தான் நினைத்திருந்ததை சிக்கலில்லாமல் நிறைவேற்றுவதைக் குறித்து சிந்திக்கலானார்.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நாடார் யார் என்பதை இப்பதிவுதான்
தெளிவாக்கியது....தப்பாட்டம் ஆடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் அதிலும் சில நியதிகளை
மீறாதவர்;எடுத்தேன் கவிழ்த்தேன் பேர்வழி அல்ல என்பது புரிகின்றது

சிஜி

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஆஹா நாடாரோட குணாதிசயங்கள அப்படியே எடுத்து வச்சிட்டீங்க..

அவரோட பாஷையிலதான் முரட்டுத்தனம் இருக்கும்..

நல்லவர்க்கு நல்லவர் தீயவர்க்கு தீயவர்.

அவர் ஃபிலிப் மேல வச்சிருந்த மரியாதையும் இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்..