15.7.09

முதல் பார்வையில்.... (தொடர்)

சில தினங்களுக்கு முன்பு 'At First Sight' என்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.

பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு கட்டுரையை கருவாக வைத்து உருவாக்கப்பட்ட கதை.

முழுக்கதையையும் இரண்டே வரிகளில் கூறிவிடலாம்.

ஒரு வயதில் பார்வையை முற்றிலுமாக இழந்த கதாநாயகன் தன்னுடைய முப்பதாவது வயதில் தன்னுடைய காதலியின் தூண்டுதலால் ஒரு அறுவை சிகிச்சையை செய்துக்கொண்டு அதை திரும்பப் பெறுகிறார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் ஒருசில மாதங்களிலேயே மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குறையால் அதை மீண்டும் இழந்துவிடுகிறார்.

பார்வை கிடைக்கப்பெற்ற அந்த குறுகிய காலத்தில் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பல இன்னல்கள் குறுக்கிட பார்வையே இல்லாமல் இருந்த காலத்தை எண்ணி ஏங்குகிறார்.  பார்வை கிடைப்பதற்கு காரணமாக இருந்த அவருடைய காதலியுடனான உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. ஆனால் பார்வை மீண்டும் மங்க ஆரம்பிக்கும்போது ஐயோ மீண்டும் பார்வை போகிறதே என்று கலங்குகிறார். இதை உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் வசனங்களாலும் அருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

இத்தகைய கதையை தமிழில் திரை உலகில் கனவிலும் நினைத்துப்ப்பார்க்க முடியவில்லை.  அப்படியே எடுத்தாலும் அதை தமிழ் சினிமாவுக்கே உரித்தான நகைச்சுவை காட்சிகள், பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாத, அதிகபட்சம் 90 நிமிடங்களே ஓடக்கூடிய படமாக எடுக்க முடியுமா?

எடுக்க முடியும் என்று நினைத்து கதையை சிதைக்காமல் நம்முடைய தமிழ் பண்பாட்டுக்கு! ஏற்றமுறையில் - அதாவது நாயகி ஏற்றிருந்த பாத்திரத்தை நாயகன் பாத்திரமாக - மாற்றியிருக்கிறேன். (ஒரு ஆண் பெண்களுக்கு மசாஜ் செய்யமுடியும் என்பதை நம்மால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை இல்லையா? இந்த திரைப்படத்தில் பார்வையிழந்த கதாநாயகன் ஒரு மசாஜ் ஊழியர். அவருடைய நேர்த்தியான மசாஜில் மயங்கித்தான் அவருக்கு தோழியாகிறார் நாயகி!!).

மேலும் கதாநாயகி இதில் ஒரு ஆர்க்கிடெக்டாக வருவார். அந்த துறையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் என்னுடைய தழுவலில்  கதாநாயகன் ஒரு வங்கி உயர் அதிகாரியாக மாறுகிறார்!

கதையை ஒரு திரைக்கதை பாணியில் சொன்னால் என்ன என்றும் தோன்றியது.  என்னுடைய மனக்கண்களில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வழங்க நினைத்ததன் விளைவே இந்த திரைக்கதை.

இது என்னுடைய கன்னிமுயற்சி என்பதால் காமரா கோணங்கள், காட்சி அமைப்புகள் ஆகியவற்றை விவரிக்கும்போது சில,பல தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றை அவ்வப்போது சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன். என்னுடைய அலவலக பணிக்கு இடையூறு ஏற்படாத விதத்தில், தினந்தோறும் என்றில்லாவிட்டாலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த தொடரை எழுதலாம் என்று நினைக்கிறேன்..

**********

முதல் பார்வையில்....

பாத்திரங்கள்

கதாநாயகன் பாஸ்கர் - ஒரு சிறிய வங்கியின் தலைமையகத்தில் பணியாற்றும் கணினி இலாக்கா தலைவர். வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட இருவார விடுப்பில் சென்னை வருகிறார் - அடையார் பெசண்ட் நகர் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த வங்கியின் வசதியான விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

கதாநாயகி நளினி - இருபாலாரும் செல்கிற ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் மசாஜ் பார்லர் நடத்துகிறார். ஸ்கேட்டிங் செய்வதில் வல்லவர். சென்னை அடையார் பெசண்ட் நகரில் ஸ்கேட்டிங் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

மல்லிகா  - நளினியின் மூத்த சகோதரி கணவனை விட்டு பிரிந்து இருப்பவள்.

இவர்களை சுற்றிலும் இவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள்  மற்றும் பலர்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சி மற்றும் காமரா கோணங்களைப் பற்றி ஒரு விளக்கம்:

உட்புறக் காட்சி - Indoor
வெளிப்புறக் காட்சி - Outdoor
இடுப்புக்கு மேலே தெரிகின்ற காட்சி - Mid shot (பெரும்பாலான காட்சிகள் இந்த கோணத்தில்தான்)
அருகாமை காட்சி - Close up shot (பெரும்பாலும் கதாபாத்திரங்களின் முகம்)
மிக அருகாமை காட்சி - Tight Close up shot
ஒருவரின் பார்வையில் - Point of view shot
பேச்சு ஒலி மட்டும் - Voice Over (அதாவது திரையில் இல்லாத ஒருவரின் குரல்)
பகல் காட்சி - Day Shot
இரவு காட்சி - Night Shot
****

வெளிப்புறக் காட்சி (Out door) - அதிகாலை நேரம் - பெசண்ட் நகர் கடற்கரை -

விருந்தினர் மாளிகை - முதல் மாடி பால்கணியில் நிற்கும் பாஸ்கரின் பார்வை கோணம் (POV - Long Shot- தொலைதூர காட்சி) - தொடுவானத்தில் கதிரவன் உதிக்கிறான் காட்சி - மஞ்சள் கலந்த நீல வாணம்.. ஆங்காங்கே மேகக் குவியல்கள் - ஓயாமல் கரையை வந்து மோதித் திரும்பும் கடலலைகள் - அதன் ஓசை மெல்லிதாக கேட்கிறது.

பாஸ்கரனின் பார்வை கோணம் - காமரா பின்வாங்கி கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள ஒரு ஸ்கேட்டிங் ரிங்க்கை (Skating Rink) காட்டுகிறது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வரையிலான இளைஞ, இளைஞிகள் ஸ்கேட்டிங் செய்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஒரு இளம், சிக் உருவத்தில் உடலை இறுக்கி அணைத்துக்கொண்டிருந்த ஆடையில் ஒரு பெண் மாஸ்டர் (நளினி)... (Tight Shot - மிக, மிக அருகில் காலிலிருந்து தலைவரை ஸ்லோ மோஷனில் அளக்கிறது)  நளினி ஒரே இடத்தில் நின்று மின்னல் வேகத்தில் சுழல்கிறார்.

வெளிப்புறக் காட்சி - தொலைதூர காட்சி - ஸ்கேட்டிங் ரிங்க்கிலிருந்து  -

ஸ்கேட்டிங் ரிங்கிற்கு எதிர்புறமுள்ள ஒரு இரண்டடுக்கு மாளிகையின் முதல் மாடி பால்கணி - காலை நடைபயிற்சிக்கு செல்லும் உடையிலிருந்த பாஸ்கரின் பார்வை காமராவில் நிலைத்திருக்கிறது - 'வாவ்' என்று அவனுடைய உதடுகள் குவிகின்றன. வலது கையை உயர்த்தி ஆட்டுகிறான்.

வெளிப்புறக் காட்சி - பாஸ்கரின் பார்வையில் - அருகாமை காட்சி - நளினியின் முகம்  -

பாஸ்கரின் கையசைவுக்கு நளினியின் முகத்தில் எவ்வித ரெஸ்பான்சும் இல்லை.

Midshot - நளினி - OK Boys, Time is up. Pack up. See you tomorrow.

Midshot - ஸ்கேட்டிங் செய்துக்கொண்டிருந்த அனைவரும் அப்படியே நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் தரையில் அமர்ந்து ஸ்கேட்டிங் காலணிகளை கழற்றுகின்றனர்  - வேறு சிலர் அப்படியே ரிங்கை விட்டு வெளியேறுகின்றனர்.

காமரா பின் நகர்ந்து நளினி தரையில் அமர்ந்து தன்னுடைய ஸ்கேட்டிங் காலணிகளை கழற்றுவதை காட்டுகிறது.

வெளிப்புறக் காட்சி - Close up அருகாமை காட்சி -

பாஸ்கரின் முகத்தில் லேசான கோபம் -  நளினி தன்னுடைய பாராட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் - 'திமிர்' என்று முனுமுனுக்கிறான். 'அழகாருக்கோம்கற திமிர்...' பால்கணியிலிருந்து திரும்பி அறைக்குள் நுழைகிறான்.

......

முதல் பார்வையில்....

டைட்டில் ஓடுகிறது
........

உட்புறக்காட்சி (Indoor Shot) - day/dull lighting -

காமரா அறையை சுற்றி வலம் வருகிறது - பணக்காரத்தனமான ஃபர்னிச்சர்கள் - சுவர்களில் பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் - விசாலமான படுக்கை - பாச்சிலர் அறை என்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாமல் எல்லாம் வைக்கப்பட வேண்டிய இடத்தில் - பாஸ்கர் படுக்கையை ஒட்டிய மேசையில் அமர்ந்து தன்னுடைய மடிக்கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். செல்ஃபோன் ஒலிக்கிறது. திரையை பார்க்கிறான்.

அருகாமை காட்சி - பாஸ்கரின் முகம் - உதடுகள் சலிப்புடன் வளைகின்றன

பாஸ்கர் - யாரு பாபுவா? ஒரு ரெண்டு நாள் லீவுல வந்தா பொறுக்கலையா? எதுக்கு இப்ப கூப்ட்டே?

எதிர்முனையில் சிரிப்பு ஒலி.

பாஸ்கர் - சரி, சிரிச்சது போதும் விஷயத்த சொல்லு - இடைவெளி - என்னது, அப்படியா? இரு பாத்து சொல்றேன் -

மிக அருகாமை காட்சி (Tight close up) பாஸ்கர் தன்னுடைய மேசையை துழாவுகிறான்.

பாஸ்கரின் பார்வையில் - ஒரு நீல நிற கோப்பு திறக்கப்படுகிறது - அதிலுள்ள காகிதங்கள் வேகமாக புரட்டப்படுகின்றன..

பாஸ்கர் - இரு ஒருநிமிஷம் -  இதோ.. இதான்..  நீ என்ன சொன்னே? - இடைவெளி - நம்ம RFP ல ரொம்ப தெளிவா சொல்லியிருக்கோமே - டெக்னிக்கல் ப்ரொப்போசல்ல கமர்ஷியல்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுன்னு - இடைவெளி - ஆமா - நம்ம டெண்டர்ல சொல்லியிருக்கா மாதிரி ரெண்டையும் தனித்தனி கவர்ல போட்டு சப்மிட் பண்ணணும்னு சொல்லு, இல்லன்னா ரிஜெக்ட் ஆயிரும்கறதையும் தெளிவா சொல்லு - இடைவெளி - ஆமா, ஆமா -  நா திரும்பி வர்றதுக்குள்ள டெண்டர் டேட் முடிஞ்சிரும் - அத கணக்கு பண்ணித்தான் ரெண்டுவாரம் லீவ் எடுத்தேன் - சேர்மன்கிட்டயும் நாம என்னல்லாம் செஞ்சிருக்கோம்னு சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன் - இடைவெளி -  கவர்ஸ் எல்லாமே சேர்மன் பேருக்குத்தான் வரும் - ஆனா வந்தவுடனே உங்கிட்ட குடுக்கச் சொல்லி நா அவரோட பிஏ கிட்ட சொல்லியிருக்கேன் -  இடைவெளி - யாரு அந்த பி.ஏ வா? - இடைவெளி - ஆமா அவ திமிர் புடிச்சவதான், அழகா சிக்குன்னு இருக்கால்லே, அப்படித்தான் இருப்பா அதுக்கு நீயும் நானும் ஒன்னும் பண்ண முடியாது - இடைவெளி - ஆமா இங்க கூட காலையில நம்ம வீட்டு எதுத்தாப்பல ஒரு ஃபிகர பார்த்தேன் - இடைவெளி - நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு எதுத்தாப்பல - இடைவெளி - பெருசா ஒன்னும் இல்ல - ஸ்கேட்டிங் மாஸ்டர் போலருக்கு, சும்மா நச்சுன்னு இருக்கா - சூப்பரா ஒரு ட்விஸ்ட் அடிச்சா - வாவ்னு சொல்லி கையை அசைச்சேன் - கண்டுக்கவே இல்ல - இடைவெளி - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - நம்ம பால்கணிக்கு போன எதுத்தாப்பலதான் இருக்கு அந்த ஸ்கேட்டிங் ரிங்க்  - அதுல ஒரு லேடி மாஸ்டர் அழகா, சிக்குன்னு - பாக்காம இருக்க முடியுதா? - இடைவெளி - சரி, சரி ரொம்ப சிரிக்காத - நீ நா சொல்றா மாதிரி டெண்டர் கவரையெல்லாம் வாங்கி ரிக்கார்ட் பண்ணி வை - நா வர்றதுக்குள்ள எல்லாரும் சப்மிட் பண்ணிட்டாங்கன்னா சேர்மன்கிட்ட சொல்லு - அவர் பிரிக்கலாம்னு சொன்னா அவர் முன்னாலயே பிரிச்சி ஒரு டீட்டெய்ல்ட் ஸ்டேண்ட்மெண்ட் ப்ரிப்பேர் பண்ணி வை - நா வந்ததுக்கப்புறம் மத்தத பாத்துக்கலாம் - இடைவெளி - யாரு அந்த ஃபிகரா? ஏதாச்சும் டெவலப்மெண்ட்ஸ் இருந்தா சொல்றேன் - இதுக்குன்னே காத்துக்கிட்டிருப்பீங்களே - இடைவெளி - வேணாம் நானே கூப்பிடறேன், பை....

......
தொடரும்..

No comments: