Technorati Tags: நாளை நமதே
அன்று கல்லூரி வளாகமே பதற்றத்துடன் இருந்தது.
கல்லூரி முகப்பு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பே இதற்குக் காரணம்.
வாசனும் மூர்த்தியும் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கியதுமே முகப்பில் குழுமியிருந்த கும்பலைக் கவனித்தனர். கூட்டத்தில் இருந்த பல
மாணவர்கள் தங்களுக்குள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.
'வாடா என்னன்னு பாக்கலாம்.' என்றவாறு கூட்டத்தை நோக்கி நகர முயன்ற மூர்த்தியைப் பிடித்து நிறுத்தினான். 'வேணாம் மூர்த்தி, நீ ஒன் காலேஜுக்கு போ... இது ஒன் பிரச்சினையில்லை.'
'போடா தொடநடுங்கி. இன்னைக்கி இங்க பிரச்சினைன்னா நாளைக்கி என் காலேஜுல. எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள்ளதான இருக்கு?'
மூர்த்தியின் நடையே இது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கப் போகிறது என்பதை உணர்த்த வாசன் என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றான். அவனுடைய பேருந்தை தொடர்ந்து வந்து நின்ற பேருந்துகளிலிருந்து இறங்கிய மாணவர்களுள் பலர் அவனைப் போலவே தயங்கி நிற்பதைப் பார்த்தான். மூர்த்தியைப் போன்ற ஒரு சில மாணவர்கள் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை வாசிப்பதில் தீவிரம் காட்டுவதும் தெரிந்தது.
'என்ன வாசன், என்ன விஷயம் ஏன் இங்கயே நிக்கீங்க'
வாசன் திரும்பிப் பார்த்தான். சுந்தர். கடந்த இரு மாதங்களாக ஒரே வகுப்பில் இருந்தாலும் அதுவரை சுந்தர் அவனிடமோ அல்லது அவன் சுந்தரிடமோ பேசியதில்லை. சாதாரணமாக யாருடன் பேசாமல் அமைதியாக கல்லூரிக்கு வந்து சென்ற அவனை வாசன் பலமுறை கவனித்திருக்கிறான். பேசவும் முயன்றிருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அதை அவன் தவிர்ப்பதை உணர்ந்து அவனுடைய போக்கிலேயே விட்டுவிட்டான்.
'தெரியல சுந்தர். மேனேஜ்மெண்ட் ஏதோ நோட்டீஸ் ஒட்டியிருக்காங்க. அதுலதான் பிரச்சினை போலருக்கு.' என்றான் வாசன்.
மூர்த்தி கூட்டத்திலிருந்து விலகி தங்களை நோக்கி வருவது தெரிந்தது. அவன் வருகிற தோரணையே வாசனை கதிகலங்க வைத்தது. 'சரி சுந்தர் நீங்க போங்க... நா என் பிரதர் கிட்ட பேசிட்டு வரேன்.'
சுந்தர் புரிந்துக்கொண்டு விலகிச் செல்ல தன்னை நோக்கி வந்த தன் சகோதரனை நெருங்கினான். 'மூர்த்தி ஒன்னும் சொல்லாத. ஒன் மூஞ்சியிலயே கோவம் தெரியுது. சுத்தி பசங்க நிக்கறாங்கங்கறத மறந்துட்டு எதையாவது வில்லங்கமா சொல்லிறாத ப்ளீஸ்.'
'என்னடா பேசாம போறது? இதென்ன காலேஜா, ஸ்கூலா? வர்ற ஒன்னாந் தேதியிலருந்து யூனிஃபார்ம் கொண்டு வரப்போறாங்களாம்! எப்படிறா சும்மாருக்கறது? ஒருவேளை இதே நோட்டீஸ் எங்க காலேஜ்லயும் ஒட்டியிருக்கோ என்னவோ. நீங்க ஏதும் பண்றீங்களோ இல்லையோ எங்க காலேஜ்ல நா இத சும்மா விடப்போறதில்லை.'
அவனுடைய கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் மூர்த்தி கோபத்துடன் கூறிவிட்டு அவனுடைய கல்லூரியை நோக்கி செல்ல வாசன் தன்னை பார்த்தவாறு நின்ற மாணவர்களின் பார்வையை சந்திக்க துணிவில்லாமல் தலையைக் குனிந்தவாறு முகப்பில் நின்ற கும்பலை தவிர்த்து தன் வகுப்பை நோக்கி நடந்தான்.
அவனுக்கென்னவோ கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.
கல்லூரி துவக்க நாளிலிருந்தே சில மாணவர்களின் குறிப்பாக மாணவிகளின் உடையில் அவனுக்கு உடன்பாடில்லை. ஏதோ ஃபேஷன் பெரேடுக்கு செல்வதுபோன்ற உடையில் வருவது சற்றே முரண்பாடாக தெரிந்தது. முதல் நாளன்றே கல்லூரி தலைவர் மாணவ, மாணவியர் எத்தகைய உடையில் வர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை வேண்டுமென்றே சிலர் பொருட்படுத்தாமல் தங்கள் மனம் போன்றவாறு உடை உடுத்தி வந்ததை அவன் கவனித்திருக்கிறான்.
'டேய் மச்சி அவ ட்ரெஸ்ச பாத்தியா? குலுக்கு நடிகை கெட்டா போ. இதுங்கள பாக்கறதுக்கே டெய்லி வரலாம் போலருக்கு...' என்பதுபோன்ற சில மாணவர்களுடைய வெளிப்படையான கமெண்டும் அவன் காதுகளில் விழாமல் இல்லை.
அவன் வகுப்பறையில் நுழையும்போது ஏற்கனவே பரத் வந்துவிட்டிருந்தது தெரிந்தது.
'என்ன வாசன் மூர்த்தி பயங்கர டென்ஷனாய்ட்டார் போலருக்கு?' என்றான் பரத்.
'ஆமாம் பரத். அவங்க காலேஜ்ல போயி ஏதாச்சும் பெருசா கலாட்டா செஞ்சிருவானோன்னு பயமாருக்கு.'
பரத் சிரித்தான். 'எப்படி வாசன்... அவன் ஒன் ட்வின் ப்ரதரா? நம்பவே முடியலை.'
'டேய் எல்லாரும் க்ளாச விட்டு வெளியில வாங்கடா.' என்ற ஆர்ப்பாட்டமான குரல் வகுப்பறை வாசலில் இருந்து எழும்ப இருவரும் திடுக்கிட்டு வாசலைப் பார்த்தனர்.
கல்லூரிக்கு சேர்ந்த முதல் மாதத்திலேயே எச்.ஓ.டியை கிண்டலடித்துவிட்டு ஒருவாரம் சஸ்பெண்ட் ஆகியிருந்த குமார் தன் சகாக்களுடன்!
வாசனும் பரத்தும் அவர்களைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க அறையிலிருந்த மாணவர்கள் சிலர் எழுந்து வாசலை நோக்கி நடந்தனர்.
மாணவியர்கள் பலரும் என்ன செய்வதென தெரியாமல் தயங்கியவாறு பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர்.
பரத் எழுந்து ஜோதிகாவை நெருங்கினான். 'We need not respond to them. Just sit tight. Madam might come now and handle him.'
ஜோதிகா சரி என்றவாறு தலையை அசைத்துவிட்டு திரும்பி பின் வரிசையில் அமர்ந்திருந்த ப்ரியாவைப் பார்த்தாள். பார்வைகள் சந்தித்தன. ஆனால் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் ப்ரியா தலையை திருப்பிக்கொள்ள 'என்ன இவ என்னமோ விரோதிய பாத்தா மாதிரி மூஞ்ச திருப்பிக்கிறா?' என்று நினைத்தாள்.
குமார் இப்படியொரு சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தான்? அவனுக்கு பரத்தின் மீதிருந்த கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இவனாலதான நம்மள சஸ்பெண்ட் பண்ணாங்க? அன்னைக்கி காலேஜ்லயும் வீட்லயும் பட்ட அவமானம் கொஞ்சமா? அவனுக்காக அப்பா வந்து பிரின்சிகிட்ட மன்னிப்பு கேக்கறாப்பலல்லே வச்சிட்டான்? இன்னைக்கி வச்சிக்கறேன்.
'டேய் பாத்தீங்களாடா நம்ம தல ஏதோ சம்பந்தம் இல்லாததுபோல பாக்கறத? இவனையெல்லாம் க்ளாஸ் ரெப்பா தேர்ந்தெடுத்தீங்களே ஒங்கள சொல்லணும். அன்னைக்கி மட்டும் நா இருந்தேன்னு வச்சிக்கோ இவனை மாதிரி பூணூல் கேசுங்களையெல்லாம் ரெப்பாக வுட்டுருக்க மாட்டேன்...'
பரத்தின் இனத்தைக் குறித்து குமாரின் தரக்குறைவான பேச்சு அவனைச் சூழ்ந்திருந்த சகாக்களையே முகம் சுழிக்க வைத்தது. 'டேய் அவனெ பெர்சனலா அட்டாக் பண்ணி ட்ராக்க மாத்திராத. நம்ம வந்த விஷயத்த பத்தி மட்டும் பேசு.' என்று கிசுகிசுத்தான் சகாக்களில் ஒருவன்.
அதுவும் சரிதான் என்று குமார் நினைத்தானோ என்னவோ பரத்தை தவிர்த்து மற்ற மாணவர்களைப் பார்த்தான். 'இங்க பாருங்கடா இன்னைக்கி யூனிஃபார்ம்னு சொல்வாய்ங்க.. நாளைக்கி சாமியார் ட்ரெஸ்லதான் வரணும்பாய்ங்க... இத இப்பவே எதுக்கணும். வாங்க எல்லாரும் ப்ரின்சி ரூமுக்கு போவோம். செக்கண்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் கூட அங்கதான் போயிருக்காங்க.'
வகுப்பில் இருந்தவர்களுள் சிலர் வேறுவழியின்றி எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தனர். அந்த கூட்டத்தில் சேர்வதா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் பலர் பரத்தையும் ஜோதிகாவையும் பார்த்தனர். சிலர் பரத்தை நெருங்கி, 'பரத் ஏதாச்சும் பண்ணு. இல்லன்னா அவன் பின்னால போறத தவிர வேற வழி இல்லை.' என்றனர்.
பரத் அமைதியாக குமாரையும் வகுப்பில் இருந்தவர்களையும் பார்த்தான். 'எனக்கு காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் எடுத்த டிசிஷன்ல எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லை. குமார் கூட போகணும்னு நினைக்கறவங்க தாராளமா போலாம். ஆனா அதனோட consequences என்னவாருக்கும்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டு போங்க. அவ்வளவுதான் சொல்வேன்.'
குமார் கோபத்துடன் அவனை நெருங்கினான். 'அப்ப நீ என்னடா க்ளாஸ் ரெப்? ரிசைன் செஞ்சிரு. நா பாத்துக்கறேன்.'
பரத் அவனை பொருட்படுத்தாமல் தன் கையிலிருந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான்.
'டேய் என்ன திமிரா நா பாட்டுக்கு இங்க கத்திக்கிட்டு நிக்கேன். நீ பாட்டுக்கு என்னமோ ------- மாதிரி படிச்சிக்கிட்டுருக்கே...' கோபத்தில் நிதானமிழந்த குமார் பரத்தின் காலரை கொத்தாக பிடித்து இழுக்க அடுத்த சில நொடிகளில் அங்கே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.....
தொடரும்...