Photo

DOCTYPE Upload Photo

Upload Your Photo



1.12.07

நாளை நம்தே 31

அண்ணாநகர் பூங்கா. இளம் மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

தன் எதிரில் அமர்ந்திருந்த ப்ரியாவை மவுனமாக பார்த்தாள் ஜோதிகா. கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் எங்கோ சூன்யத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்த அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவளோட கம்பேர் பண்றப்ப நம்ம அம்மா, அப்பா எவ்வளவு நல்லவங்க! அப்பா எடுத்ததுக்கொல்லாம் பயங்கரமா கோபப்படறவர்தான். நம்ம முன்னாலயே அம்மாவ கை நீட்டி அடிச்சிருக்கார். எத்தனையோ தரம்... ஆனாலும் அப்பாவுக்கு அம்மா மோல எத்தன பிரியம்னும் எத்தன தர தரம் அடிவாங்கினாலும் அம்மா அப்பாவை எந்த அளவுக்கு விரும்புறாங்கணும் நாமளே பாத்துருக்கமே. அப்பாவோட கோவம் அம்மாக்கிட்ட மாத்திரம் இல்லையே, நானும் ராஜும் கூட அவரோட கோபத்துக்கு எத்தன தரம் பலியாயிருக்கோம். ஆனாலும் அப்பாவோட கோவத்துக்கு பின்னால இருக்கற பாசத்தை எப்படி மறக்கறது?

'எனக்கு வீட்டுக்கு போறதுக்கே என்னவோ மாதிரி இருக்கு ஜோதி....'

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த ஜோதிகார் சட்டென்று நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள்.

'அதனால?'

'தனியா ஏதாச்சும் ஹாஸ்டல்ல இருந்துரலாம்னு தோனுது.'

'ஹாஸ்டல் ரூமுக்கு ரெண்ட், காலேஜ் ஃபீஸ், இதுகெல்லாம் பணத்துக்கு எங்க போவே?'

'எங்கயாச்சும் வேலைக்கு போலாம்னு....'

ஜோதிகா திடுக்கிட்டு ப்ரியாவைப் பார்த்தாள். 'அப்ப காலேஜ்?'

ப்ரியா விரக்தியுடன் புன்னகைத்தாள். 'I'll drop out. வேற வழி?'

'உங்கம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா?'

ப்ரியா எழுந்து நின்றாள். 'அவங்கக்கிட்ட சொன்னாத்தான?'

ஜோதிகாவும் தன் கைப்பையுடன் எழுந்தாள். 'நீ நல்லா யோசிச்சித்தான் இந்த டிசிஷனுக்கு வந்துருக்கியா ப்ரியா?'

'ஆமா.. இத விட எனக்கு வேற வழி தெரியல...'

ஜோதிகாவுக்கு தன் தோழியின் முடிவை எப்படி மாற்றுவது என தெரியாமல் குழம்பினாள். There should be some way to tackle this issue without droping out of the college... there should be... ஆனால் அது எப்படி என்பதுதான் விளங்கவில்லை.... இருவரும் மவுனமாக பூங்கா வாசலை நெருங்கினர்.

'நீ நினைக்கிற மாதிரி ஒங்க வீட்டுலருந்து வெளிய வராமயே இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு ப்ரியா.' என்றாள் ஜோதிகா சட்டென்று.

ப்ரியா நின்று அவளை நோக்கி திரும்பினாள். 'என்ன?'

'அந்த அங்கிள பாத்து பேசலாம் இல்லையா? I mean ஒங்கம்மாவுக்கு தெரியாம?'

ப்ரியா கேலியுடன் அவளைப் பார்த்தாள். 'அந்த அங்கிளோட ஏய்மே நாந்தானடி? எங்கம்மா ஒரு இண்டரிம்... நா ரெடின்னு சொல்ற வரைக்கும்.'

ஜோதிகா இதை எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் தாய் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதாக வாக்குறுதியளித்துவிட்டு மீண்டும் அவளுடைய பழைய பாதையிலேயே சென்றுக்கொண்டிருப்பதை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தபோது இதில் இப்படியொரு கோணம் இருக்கும் என்று நினைக்கவில்லை.

'இதவும் ஒங்கம்மாவுக்கு தெரியுமா?'

ப்ரியா படிலளிக்காமல் யோசனையில் ஆழ்ந்தாள். எதிர் திசையில் தன் வீட்டுக்கு செல்லும் பேருந்து வருவது தெரிந்தது. தன் மணிக்கட்டைப் பார்த்தாள். ஏழரை என்றது வாட்ச். திரும்பி ஜோதிகாவைப் பார்த்தாள். இவளுடன் பழகி மூன்று மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் இவளிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்று எப்படி தோன்றியது? தன்னுடைய வயதொத்த இவளால மட்டும் எப்படி பதறாமல் இந்த விஷயத்தை அணுக முடியுது? இந்த மூனு மாசத்துல காலேஜ்ல இவளுக்கு எவ்வளவெல்லாம் அவமானம் ஏற்பட்டுருக்கு. இருந்தாலும் அதுக்கெல்லாம் அசராம... அந்த ட்ரப்ள்சம் எச்.ஓ.டிய கூட டாக்ட்ஃபுல்லா ஹேண்டில் பண்ணி.... அதனாலதான் இவகிட்ட நம்ம பிரச்சினைய டிஸ்கஸ் பண்ணணும்னு தோனுச்சோ....

'தெரியல ஜோதி.... அப்படியே தெரிஞ்சாலும் அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு என்னால சொல்ல முடியல.'

ஜோதிகா ஒரு முடிவுக்கு வந்தாள். 'நா ஒன்னு சொல்லட்டுமா?' என்றாள்.

அவள் ஏற வேண்டிய பேருந்து பஸ் நிறுத்தத்திலிருந்து கிளம்புவது தெரிந்தது. ஆட்டோ புடிச்சித்தான் போணும் போலருக்கு. 'சொல்லு...'

'ஒன் ப்ளேஸ்ல நா இருந்தா இத கண்டுக்காம இருந்துரு....' ப்ரியாவின் முகத்தில் சட்டென்று தோன்றிய கோபம் ஜோதிகாவை மேலே தொடர விடாமல் தடுத்தது. ப்ரியா பதிலளிக்காமல் கிளம்பி சாலைய கடக்க முயல ஜோதிகா திடுக்கிட்டு அவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள். 'ஏய் மறுபடியும் கோச்சிக்கிட்டு போகாத... நா சொல்ல வந்தத முழுசா கேளு.'

ப்ரியா மனமில்லாமல் நின்று தன் தோழியைப் பார்த்தாள். 'சொல்லு...'

'நீ விட்ட விட்டு வர்றதுனால இந்த பிரச்சினை தீர்ந்துடப் போறதில்ல ப்ரியா. அதுவே ஒங்கம்மாவுக்கு அவங்க ரூட்ல போறதுக்கு ஈசியாயிரும்... அதனால நீ எந்த காரணத்த முன்னிட்டும் வீட்ட விட்டு வெளியேறக் கூடாது. காலேஜ்லருந்தும் ட்ராப் ஆகக் கூடாது.'

'எங்கம்மா குடுக்கற காசுல படிக்கச் சொல்றியா? அருவருப்பா இருக்குடி...' ப்ரியாவின் கண்கள் கலங்கி குரல் நடுங்கியது.

ஜோதிகாவுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்படியொரு தாய்க்கு இப்படியொரு மகளா? இருப்பினும் ப்ரியாவின் தற்போதைய தேவை கல்லூரி படிப்பை முடிப்பது. அதற்கு அவள் தொடர்ந்து வீட்டில் இருப்பது அவசியம். ' இங்க பார் ப்ரியா. You have to put up with this just for three more years... அதுக்குள்ள ஒங்கம்மாவும் சேஞ்ச் ஆயிருவாங்கன்னுதான் நா நெனக்கேன்... இல்லையா, இப்ப டிசைட் பண்ணாமாதிரி தனியா வந்துரு....'

'சொல்றது ஈசிடி... அனுபவிச்சி பாத்தாத்தான் தெரியும்... இப்பல்லாம் எங்கம்மாவ பாக்கறதுக்கே பிடிக்கல... இந்த லட்சணத்துல ஒரே வீட்ல....'

ஜோதிகா வாட்சைப் பார்த்தாள். திடுக்கிட்டாள். நேரம் போனதே தெரியாமல்.... இப்ப பொறப்பட்டா கூட வீடு போய் சேர ஒன்பது மணியாயிறும்.

'சாரி ப்ரியா.... இப்ப கெளம்புனாத்தான் ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு போய் சேர முடியும்.... நீ டிஸ்டர்ப் ஆகாம வீட்டுக்கு போ... நாளைக்கி பேசிக்கலாம்....'

தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஜோதிகா ஏறிக்கொள்ள ப்ரியா சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்...

தொடரும்....