15.3.06

சூரியன் 41

ரம்யா குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்துக்கொண்டாள். ‘சாரிடி.. நா ஏதோ.. முன்னபின்ன யோசிக்காம...’

புவனா உடனே தன் சிரிப்பை நிறுத்தி குனிந்திருந்த தன் தோழியின் முகத்தைப் பற்றி நிமிர்த்தினாள்.

‘ஏய்.. என்ன இது? எதுக்கு இப்ப அழறே?’ தன் தோழியின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவள் அவளுடைய தோள்களைப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள். ‘இங்க பார் ரம்யா.. நடந்தது நடந்துருச்சு. நீ வேற அப்பாக்கிட்ட இத சொல்ல வேணாம்னு சொல்லிட்ட.. சரி.. ஆனா இப்படி அழுத மூஞ்சோட நீ நிக்கறத பார்த்தா அப்பாவுக்கு நிச்சயம் சந்தேகம் வரும். அதனால இந்த நிமிஷத்துலருந்து நீ எப்பவும் போல கலகலப்பா இருக்கற..என்ன சரியா?’

‘சரிடி.. ஆனா..’

புவனா முடியாது என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நிமிர்ந்தாள். ‘ஆனாவும் இல்ல பேனாவும் இல்ல. உன்னால கலகலப்பா இருக்க முடியாதுன்னு நீ நெனச்சா.. அப்பாக்கிட்ட உண்மைய சொல்லிடறதத் தவிர வேற வழியில்லை.. அவரோட எஸ்.பி பார்வை சாதாரணம் இல்ல. அவர் கண்ணுலர்ந்து ஒன்னும் அவ்வளவு ஈசியா எதுவும் தப்பாது. என்ன சொல்றே?’

ரம்யா தன் தோழியைப் பார்த்தாள். ‘புவி.. நா ஒன்னு சொல்லட்டுமா?’ என்றாள் தயக்கத்துடன்.

‘என்ன? சொல்லு.’

‘நா எங்கம்மாவ மட்டும் கூப்டு நா இங்கதான் இருக்கேன்னு சொல்லிரட்டுமா? அம்மா பாவம்டி, அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடறாளோ.. அவள நினைச்சாத்தான்...’

புவனா அவளையே பார்த்தாள். ‘ஏண்டி, உனக்கென்ன பைத்தியமா? உங்கம்மா பாவம்கறது சரிதான்.. ஆனா அவங்கக் கிட்ட இத சொன்னா அவங்களால அத உங்கப்பாக்கிட்டருந்து மறைக்க முடியுமா? அவங்களே ஒரு குழந்தை மாதிரி.. நீ போன்ல நா புவனா வீட்லதாம்மா இருக்கேன். ஆனா நீ அத தெரிஞ்சா மாதிரி காட்டிக்காதேன்னு சொன்னா.. அந்த மாதிரி ஒரு பேச்சுக்குக் கூட உங்கம்மாவுக்கு நடிக்கத் தெரியாதேடி.. அதுக்கு நீ பேசாம உடனே புறப்பட்டு வீட்டுக்கு போயிரலாம்.’

‘இல்லடி... நா எதுக்குச் சொல்றேன்னா...’ என்று இழுத்த ரம்யாவை தடுத்து நிறுத்தினாள் புவனா.

‘இங்க பார் ரம்யா.. இது ஒன்னோட லைஃப்.. ஏற்கனவே நீ எடுத்த முடிவுனால தேவையில்லாத ஒரு கன்ஃப்யூஷன கிரியேட் பண்ணிட்டே.. இப்ப அத எப்படி பெரிய டேமேஜ் எதுவும் இல்லாம சால்வ் பண்றதுன்னு யோசிக்கணும்.. தேவையில்லாம இதுல உங்கம்மாவையும் இழுத்துவிட்டு உங்கப்பா, அம்மா உறவுல பிரச்சினைய கிளைப்பி விட்டுறாத.. அவ்வளவுதான் நான் சொல்வேன். நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போக வேண்டியவ.. அதுக்கப்புறம் உங்கப்பாவ நம்பி இருக்க வேண்டிய உங்கம்மாவ நினைச்சிப் பார்..’

ரம்யாவுக்கு புவனா கூறுவது சரிதான் என்று தோன்றியது. நாம இத அம்மாவுக்கு ஃபோன்ல சொன்னா அப்பாக்கிட்டருந்த அத மறைக்கக் கூடிய சாமர்த்தியம் அவங்களுக்கு இல்லைங்கறது சரிதான். புவனா சொல்றா மாதிரி அப்பா ஒரேயடியா அம்மாவ தலை முழுகறதுக்கு இதையே ஒரு எக்ஸ்க்யூசா யூஸ் பண்ணாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே.. சோ.. அம்மா இன்னும் கொஞ்சம் நாளைக்கு அவஸ்தைப்படவேண்டியதுதான்.. வேற வழியில்லை..

‘சரிடி.. நீ சொல்றதும் சரிதான்.’

புவனா தன் தோழியின் தோளை ஆதரவுடன் தொட்டு, ‘ஏய்.. everything will workout fine. நீ போய் பல் தேய்ச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வந்துரு.. அப்பா வந்ததும் என்ன சொல்லணும்னு நான் யோசிச்சி வச்சிருக்கேன். நீயா எதையாச்சும் உளறி கொட்டாம இருந்தா சரி..’ என்று கூறிவிட்டு மறுபேச்சு பேசாமல் அறையை விட்டு வெளியேற ரம்யா அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சுடன் எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள்.

*****

புவனாவின் தந்தை எஸ்.பி. தனபால் சாமி தன்னுடைய அலுவலகப் பயணம் முடிந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே அவருடைய போலீஸ் கண்களில்பட்டது திருட்டு முழியுடன் கையில் சிறியதாய் எதையோ வைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குள் போவோரையும் வருவோரையும் பார்த்துக்கொண்டு நின்ற பத்மநாபனும் அவனுடைய சகா பாஸ்கரனும்தான்.

சந்தேகத்துடன், தன்னை வரவேற்க வந்திருந்த கான்ஸ்டபிளிடம், ‘யோவ் நான் காருக்கு போறேன். அதோ ரெட் ஷர்ட் போட்டுக்கிட்டு ஒருத்தன்.. மலையாளின்னு நினைக்கறேன்.. கூட ஒருத்தனோட நிக்கறான் பார்.. அவன்க என்ன பண்றான்கன்னு பார்த்துட்டு நீ நேரா காருக்கு வந்துரு.. நீ வாட்ச் பண்றது அவன்களுக்கு தெரியக் கூடாது. புரியுதா? சொதப்பிட்டு வந்து தலைய சொறியாத.. போ.’ என்றார்.

தயங்கி, தயங்கி, சென்ற கான்ஸபிடளையும் அவர் வருவதைப் பார்க்காமல் தங்கள் காரியத்திலேயே போவோர், வருவோர் முகங்களைக் கவனிப்பதிலேயே கண்ணாய் இருந்த அவ்விருவரையும் பார்த்தவாறே தன் வாகனத்தை நோக்கி நடந்தார் சென்னையிலேயே மிகக் கண்டிப்பான அதே சமயம் தைரியசாலியென பெயரெடுத்த எஸ்.பி. தனபால் சாமி..

அவர் வாகனத்தையடைந்து ஏறி அமராமல் வாகனத்தில் மேல் சாய்ந்துக்கொண்டு தன் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தவுடன் வாகனத்தின் அருகில் விறைப்புடன் நின்றுக்கொண்டிருந்த ஓட்டுனர் ஓடி வந்து பற்ற வைத்தான்.

‘இத மட்டும் ஒழுங்கா செஞ்சிருங்க.’ என்று எரிந்து விழுந்தார். ‘நம்ம ஆளுகிட்ட ஒரு வேலை கொடுத்திருந்தேன். ப்ளாட்ஃபார்ம்ல அந்தாளு என்ன பண்றான் பார்த்துட்டு வா..’ அவர் உடனே, ‘சரி.. சார்..’ என்று நகர, ‘யோவ்.. நீ அவன பாக்கறது அவனுக்கு தெரிய கூடாது. புரிஞ்சிதா?’ என்று இரைந்தார்.

‘யெஸ் சார்.’ என்ற ஓட்டுனர் ஓட்டமும் நடையுமாக ரயில் நிலைய வாயிலை அடையவும் அவர் முதலில் அனுப்பிய கான்ஸ்டபிள் வெளியே வரவும் சரியாக இருந்தது.. அவர்களுக்குப் பின்னால் தலையைக் குனிந்துக் கொண்டு அவர் சற்று முன் பார்த்த இரு நபர்கள்..

இக்காட்சியை வாகனத்தின் அருகில் நின்றுக்கொண்டிருந்த எஸ்.பி பார்த்ததும் பொங்கி வந்த கோபத்தில் வாயிலிருந்த சிகரெட்டை கீழே துப்பிவிட்டு வாயில் வந்த வசவு வார்த்தைகளால் கான்ஸ்டபிளை மனதுக்குள் திட்டித் தீர்த்தார்.

‘இடியட்.. சும்மா, அவனுங்களுக்கு தெரியாம பார்த்துட்டு வாய்யான்னா.. அவன்களையும் கையோட இழுத்துக்கிட்டு வரானே.. இவன என்ன பண்றது?’

மூவர் அடங்கிய அச்சிறுக் கும்பல் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பயணிகள் கூட்டத்திலிருந்த சிலர் நின்று அவரையும் அம்மூவரையும் கவனிப்பதைப் பார்த்த எஸ்.பியின் முகம் கோபத்தால் மேலும் சிவந்தது.

தன் அருகில் நெருங்கிய கான்ஸ்டபிளை நோக்கிப் பற்களைக் கடித்தார். பிறகு கான்ஸ்டபிள் பின்னால் வந்த இருவரையும், ‘டேய் அங்கேயே நில்லுங்க.’ என்றார்.

பிறகு கான்ஸ்டபிளை மட்டும் தன் அருகில் அழைத்து, ‘யோவ், நான் என்ன சொன்னேன்.. நீ என்ன பண்ணிட்டு வந்து நிக்கறே.. சும்மா அவன்கள வாட்ச் பண்ணிட்டு வாய்யான்னா அவன்கள புடிச்சிக்கிட்டு வந்து நிக்கறே. அவன்க என்ன செய்யணும்னு நினைச்சான்களோ அத செய்றதுக்கு முன்னாலயே இழுத்துக்கிட்டு வந்து நிக்கறயே உன்னை என்ன பண்ணா தகும்? இடியட்.’ என்றார் அடிக்குரலில்..

கான்ஸ்டபிள் பதறிப்போய் தன் கையிலிருந்த புகைப்படம் ஒன்றை நீட்டினார். ‘சார் இவன்க இந்த ஃபோட்டோவ கையில வச்சிக்கிட்டு இந்த பொண்ணு ஸ்டேஷனுக்குள்ள நிக்குதான்னு பார்த்துக்கிட்டிருந்தான்களாம் சார். யாரோ உறவுக்காரப் பொண்ணாம். வீட்ல சொல்லிக்காம வந்துருச்சாம்..’

அந்த புகைப்படத்தை வெடுக்கென்று பிடுங்கி பார்த்த எஸ்.பியின் முகம் அதிர்ச்சியில் உறைந்துபோக ஏன், எதற்கு என்று புரியாமல் விழித்தார் கான்ஸ்டபிள்..

இது நம்ம புவுனாவோட ஃப்ரெண்டாட்டம் இருக்கு? பேர்... பேர்... சரி அத அப்புறம் பாத்துக்கலாம்..

நிமிர்ந்து சற்று தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த இருவரையும் பார்த்தார். டேய் இந்த பொண்ணு ஒங்க உறவா? இருங்கடா வந்து கவனிச்சிக்கறேன். பிறகு, தன்னுடைய கான்ஸ்டபிளைப் பார்த்தார்

‘யோவ், ரெண்டு பேரையும் சந்தேகத்தின் பேர்ல பக்கத்துலருக்கற புக் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போ. எஸ்.ஐ கிட்ட சொல்லி இந்த பொண்ணு யாரு, இவன்களுக்கு இந்த பொண்ணு என்ன உறவு, இவன்க வீட்டு விலாசமென்ன, இந்த பொண்ணோட விலாசம் என்னன்னு வரவழைச்சி எனக்கு ஃபோன் போடச் சொல்லு.. போ.. நீ இழுத்துக்கிட்டு வந்ததும் நல்லதான் போச்சி.. போ..’ என்றார்.

‘சார்..’ என்று தயங்கி நின்ற கான்ஸ்டபிளைப் பார்த்து எரிந்து விழுந்தார் எஸ்.பி. ‘என்னய்யா?’

‘சார் நம்ம எழும்பூர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ஒரு மாதிரியான ஆளுன்னு ஐயாவுக்கு தெரியுங்களே.. அந்தாளு இவனுங்கள எசக்கு பிசக்கா அடிச்சி.. ஏதாச்சும்..’

‘யோவ், நீ நான் சொன்னத செய்.. அந்தாளு எசக்கு, பிசக்கா நடந்தா அதுக்கு அவந்தான் பொறுப்பு.. வளவளன்னு பேசிக்கிட்டிருக்காம நீ இவன்கள் ஸ்டேஷன்ல ஒப்படைச்சதும் கெளம்பி வீட்டுக்கு வந்து சேரு.. நா அந்த எஸ்.ஐ கிட்ட பேசிக்கறேன். நீ என் டைம வேஸ்ட் பண்ணாம சொன்னத செய்.. போய்யா.. யோவ் கான்ஸ்டபிள் நீ வண்டிய எடு..’ என்றவாறு வாகனத்தில் ஏறி அமற வாகனம் புறப்பட்டு வேகமெடுத்தது..

****

‘டேய்.. யார்றா நீங்க ரெண்டு பேரும்? ஊர் கேரளாவா?’ என்ற கான்ஸ்டபிளைப் பார்த்து முறைத்தனர் பாஸ்கரனும், பத்மநாபனும்.

‘சார், நாங்க யாராயிருந்தா ஒங்களுக்கு என்ன வந்துது? அந்த ஃபோட்டோவ கொடுங்க.. நாங்க எங்கள அனுப்பிச்ச ஆளுக்கு என்ன பதில் சொல்றது? வீட்ட விட்டு வந்த பொண்ண இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண்டுபிடிச்சாவணும்னு உத்தரவு.. அத குடுங்க சார்..’ என்று தன்னை நோக்கி கை நீட்டிய பத்மநாபனின் கையை தன்னுடைய கைத்தடியால் ஓங்கி தட்டினார் கான்ஸ்டபிள் ஏகாம்பரம்..

‘சார்.. என்னா சார்.. பேசிக்கிட்டிருக்கறப்பவே அடிக்கறீங்க..’ என்று பத்மநாபன் கையை உதற.. ‘பின்னே ஒங்கள கொஞ்ச சொல்றீங்களா? ஊர் விட்டு ஊர் வந்து பொண்ண கடத்தப் பாக்கறீங்களாடா... ஒங்க ரெண்டு பேரையும் சந்தேக கேஸ்ல புக் பண்ண சொல்லிட்டார் எஸ்.பி.. நடங்கடா ஸ்டேஷனுக்கு..’ என்றவாறு தப்பித்து ஓட முயன்ற அவர்கள் இருவரையும் எட்டிப்பிடித்து தள்ளிக்கொண்டு சென்றார் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த காவல்துறை பட்றோல் (Patrol) வாகனத்தை நோக்கி..

தொடரும்..  









1 comment:

G.Ragavan said...

அடடா! இப்பவே தெரிஞ்சி போச்சா.....வீட்டுக்குப் போனப்புறம் கண்டு பிடிப்பார்னு நெனச்சேன்...ம்ம்ம்...இன்னும் என்ன நடக்கப் போகுதோ.........