22.3.06

சூரியன் 45

‘சார் அவனுங்க ரெண்டு பேரும் கேரளாவ சேர்ந்தவங்க..’

எஸ்.பி தனபால் சாமிக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘ஏன்யா.. அதான் அவனுங்க மூஞ்ச பார்த்தால தெரியுதே. நீ என்னமோ இன்வெஸ்டிகேட் பண்ணி கண்டுபிடிச்சா மாதிரி சொல்றே? அவனுங்கக் கிட்டருந்து வேற ஒன்னும் கிடைக்கலையா?’

எதிர் முனையிலிருந்து வந்த மவுனம் அவரை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியது. ‘என்னய்யா சத்தத்தையே காணோம்?’

‘சார் அவனுங்க ஸ்டேஷனுக்கு வர்றதுக்குள்ளயே செல்ஃபோன்லருந்த நம்பர் எல்லாத்தையும் எரேஸ் பண்ணிட்டானுங்க போலருக்கு சார்.. அதனால அவனுங்கள யார் இந்த வேலைக்கு அனுப்பனான்னு இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியலை.. ரெண்டு பேரும் சரியான கல்லுளிமங்கங்கனா இருக்கான்க..’

எஸ்.பி. தனபாலுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ‘ஏன்யா இப்படி சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லை.. உன்னை என்னவோ டிப்பார்ட்மெண்ட்ல அப்படி இப்படின்னு பேசிக்கறானுங்க? ரெண்டு போக்கத்த பசங்கக்கிட்டருந்து இதக்கூட உன்னால வரவைக்க முடியலே?’

‘அப்படி இல்ல சார். மேல கைவைக்கறதுக்கு போதுமான காரணம் இல்லையே சார்.’

தனபால் எரிந்து விழுந்தார். ‘ஒரு பொண்ணோட ஃபோட்டோவ வச்சிக்கிட்டு ஸ்டேஷன்ல போற வர பொம்பளைங்கள வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கான்க.. இதவிட உனக்கு வேற என்ன காரணம் வேணும்? அந்த பொண்ணு யாரு, இவன்களுக்கு அந்த பொண்ணு என்ன வேணும்? இல்லன்னா இவன்கள அனுப்புனது யாரு? இதெல்லாம தெரிஞ்சிக்க வேணாமா? இங்க பாருங்க. என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு வேண்டிய விஷயம் வந்து சேர்ந்துரணும். பேசமாட்டேன்னு அடம்புடிச்சா கடத்தல் கேசுன்னு புக் பண்ணிருவேன்னு மிரட்டுங்க. படியலைன்னா நீங்க எதுக்கு டிபார்ட்மெண்ட்ல ஃபேமசோ அத செஞ்சி பதில வரவைங்க.. புரியுதா.. பத்தே நிமிஷம்.. உங்க ஃபோன பார்த்துக்கிட்டிருப்பேன்..’

செல் ஃபோனை கட்டிலில் வீசிவிட்டு குளித்து முடித்த தலையை துவட்டி முடித்ததும் அலுவலக உடைகளை அணிந்துக்கொண்டார். உடை மாற்றி முடித்து அறையை விட்டு வெளியேற கட்டிலில் இருந்த செல் ஃபோன் ஒலி கேட்டு திரும்பிச் சென்று எடுத்தார்.

‘சொல்லுங்க, ஏதாச்சும் தெரிஞ்சிதா?’ என்றார்.

‘ஆமா சார். யாரோ மாதவனாம்.. ------------------ பேங்க்லருக்காராம். ஃபோட்டோவுலருந்த பொண்ணு அவரோட நண்பரோட பொண்ணாம். அவரும் அதே பேங்க்லதானாம். ஏதோ கல்யாணப் பிரச்சினைன்னு தோனுதுசார். நேத்தைக்கி காலைல வீட்லருந்து போன பொண்ணாம். இன்னும் வரலைன்னு...’

‘அது சரிய்யா.. இவனுங்க யாரு?’

‘இவனுங்க.. அடியாள் மாதிரின்னு தெரியுது சார்.’

தனபால் எரிச்சல் மேலிட குரலை உயர்த்தி சிடுசிடுத்தார். ‘என்ன ஆச்சிங்க உங்களுக்கு? அடியாள்னா.. அதா அவன்கள பார்த்தாலே தெரியுதே.. இவனுங்களுக்கு யாரோ அந்த மாதவன்னு சொன்னீங்களே அவருக்கும் என்ன தொடர்பு.. இவனுங்களுக்கு நம்ம டிபார்ட்மெண்ட்ல ப்ரொஃபைல் ஏதும் இருக்கா.. கண்ட்ரோல் ரூமுக்கு மெசேஜ் கொடுத்து சிஸ்டத்துல இவனுங்களப்பத்தி ஏதாச்சும் இருக்குதான்னு தேட சொல்ல வேண்டியதுதானே.. இதெல்லாத்தையும் நானா சொல்லணும்? இதப்பாருங்க.. பேங்க்ல பெரிய எக்சிகியூட்டிவ்னா இது பெரிய எடத்து விஷயமாத்தான் இருக்கும்.. அசால்டா இருந்தது போறும்.. அவனுங்க மேல ஏதாச்சும் கேஸ் புக் பண்ணி ரிமாண்ட்ல வச்சாத்தான் இவனுங்கள அனுப்பிச்ச ஆளு தானா வருவார்.. புரியுதா..? கண்ட்ரோல் ரூம்ல ஏதாச்சும் கிடைக்குதான்னு பாருங்க.. நம்ம கமிஷனரப்பத்தி தெரியுமில்லே.. ஏதாச்சும் பிரச்சினையில என்ன மாட்டி விட்டுராதீங்க.. எனக்கு கமிஷனர்கிட்ட நாலு மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு.. அதுக்குள்ள மேல ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க. ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணாதீங்க. என் செல் ஃபோனுக்கு பண்ணுங்க. அப்பத்தான் நான் ஏதாச்சும் மீட்டிங்ல இருந்தாக்கூட நீங்க கூப்டது தெரியும். புரியுதா.. அவன்கள அதுவரைக்கும் உங்க கஸ்டடியிலயே வச்சிருங்க..’

‘சரி சார்.’ என்ற எதிர்முனையிலிருந்த குரலைக் கேட்டவர், ‘குரல்ல மட்டும் விறைப்பு இருந்தா போறாது மேன். ஆக்ஷன்லயும் இருக்கணும்..’ என்று உறுமினார். பிறகு செல் ஃபோனை கையில் பிடித்தவாறு உணவு மேசையை நோக்கி நடந்தார்.

***

‘இங்க பார் ரம்யா. அப்பா ஏதாச்சும் கேட்டா நான் பேசிக்கறேன். தயவு செஞ்சி இனியும் மேல மேல பொய்ய சொல்லி காரியத்த சீரியசாக்கிறாதே.. அப்பாவோட குரல்லருந்தே நான் கண்டுபிடிச்சிருவேன் அவர் நாம சொல்றத நம்பறாரா இல்லையான்னு.. சரியா?’ என்றாள் புவனா தன் தோழியைப் பார்த்து.

‘சரி ரம்யா.. ஆனா..’

‘ஆனா வன்னான்னு எதையாச்சும் சொல்லிக்கிட்டிருக்காம நா சொல்றத கேளு.. அதாவது இந்த விஷயத்துல என்னோட உதவி இனியும் உனக்கு வேணும்னா.. இல்ல நானே பார்த்துக்கறேன்னு நீ சொன்னா அப்புறம் உன் இஷ்டம்..’

புவனாவின் குரலில் இருந்த கோபமும், உறுதியும் ரம்யாவை சிந்திக்க வைத்தன. இவளும் ஒரு போலீஸ்காரரோட பொண்ணுதானே.. இவள நம்பி வந்ததுதான் நாம பண்ண பெரிய தப்பு என்று நினைத்தாள்..

‘ஏய் என்ன சைலண்டாயிட்டே.. பேசாம வா.. அப்பா டேபிள்ல வந்து உக்காந்துட்டார்..’ சிலையாய் நின்றிருந்த ரம்யாவின் தோளைத் தொட்டு திருப்பி அவளுடைய கைகளில் ஒரு பாத்திரத்தை திணித்து, ‘வா.. டேபிளுக்கு போலாம். அப்பா சாப்டற நேரத்துல பேச மாட்டார்.. நீயும் ஒன்னும் பேசாதே.. என்ன?’ என்றவாறு உணவு மேசையை நோக்கி நடக்க ரம்யா அவளைப் பின் தொடர்ந்தாள்.

கையில் பாத்திரங்களுடன் தன்னை நோக்கி வந்த இருவரையும் நிமிர்ந்து பார்த்த தனபால் சாமியின் சந்தேகக் கண்கள் ரம்யாவின் கண்களிலிருந்த கலவரத்தை படம்பிடித்தது. இருப்பினும் உணவு உண்ணும் நேரத்தில் பேசுவதில்லை என்ற தன்னுடைய நியதியை மீற விரும்பாமல் கடகடவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து வாஷ் பேசினில் கைகளைக் கழுவி துடைத்தவாறே மீண்டும் மேசைக்கு திரும்பினார்.

அவருடைய செயல்கள் ஒவ்வொன்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த புவனா.. ‘சோ அப்பா பேசறதுக்கு ரெடியாவுறார்.. ஃபோன்ல யாரோ ஏதோ சொல்லிருக்காங்க.. அது ரம்யாவோட விஷயமா இல்லையான்னு இன்னும் ரெண்டு நிமிஷத்துல தெரிஞ்சிரப் போவுது.....’ என்றாள் தனக்குள்..

தலைகுனிந்தவாறு தட்டில் இருந்த இட்லியை சுழற்றிக்கொண்டிருந்த தன் தோழியின் காலை மேசைக்கடியில் உதைத்தாள் புவனா..

‘என்ன ரம்யா? பசியில்லையா.. இல்ல சாப்டற மூட்ல இல்லையா?’ என்றார் தனபால்..

திடுக்கிட்டு நிமிர்ந்த ரம்யா தன் எதிரில் இருந்த தனபாலையும் அருகில் அமர்ந்திருந்த தன் தோழியையும் மாறி, மாறி பார்த்தாள். ‘என்ன அங்கிள் கேட்டீங்க?’

‘ஏய், நீ சாப்டாம விளையாடிகிட்டிருக்கே.. அதான் பசிக்கலையான்னு அப்பா கேக்கறார்..’

‘அப்படியெல்லாம் இல்ல அங்கிள்.. ஊருக்கு போயிருக்கற அம்மாவ நினைச்சிக்கிட்டேன்.. அதான்..’ என்று இழுத்தவள் புவனாவின் கால்கள் மேசைக்கடியில் அழுத்தவே அவளையுமறியாமல் வலியால் முகத்தைச் சுளித்தாள்.

‘எம்மா.. நீ பாட்டுக்கு உதச்சி கல்யாணப் பொண்ணோட கால உடச்சிராத.. அப்புறம் அவங்க அப்பா அம்மா ஊர்லருந்து வந்ததும் கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போறாங்க.’ என்று சிரித்தார் தனபால் சாமி. ‘என்ன ரம்யா நா சொல்றது சரிதானே..’

ரம்யாவும் புவனாவும் சங்கடத்துடன் நெளிவதை உணர்ந்த தனபால் பேசுவதற்கு வாயெடுப்பதற்கு முன் அவருடைய செல் ஃபோன் ஒலிக்கவே எடுத்து யாரென பார்த்தார்.

‘சொல்லுங்க. அதுக்குள்ள தெரிஞ்சிட்டுதா?’

‘ஆமா சார்.. போன வாரம் ஆவடியில ஒரு ஃபேக்டரி ஓனர கடத்திக்கிட்டு போயி கடன கட்டச் சொல்லி சித்திரவதை செஞ்சதா ஒரு கேஸ் வந்துதுல்லே சார். அதுல பாஸ்கரங்கறவனுக்கு சம்மதம் இருக்கு சார்..’

தனபாலின் முகத்தில் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சி பரவ ரம்யா திகைப்புடன் தன் தோழியைப் பார்த்தாள்.

‘வெரி குட்.. நான் நினைச்சேன். அவனுங்க அந்த பொண்ணோட போட்டோவ பார்த்துக்கிட்டு முளிச்ச முளியிலயே அவனுங்க லேசுபட்டவனுங்க இல்லேன்னு எழுதி வச்சிருந்ததே.. சரி அந்த இன்னொருத்தன்? அவன் பேர்லயும் ஏதாச்சும் இருக்கும் பாருங்க.’

‘இருக்கு சார்.. பாஸ்கரனும் அந்த இன்னொருத்தனும் சேர்ந்துதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறானுங்க. நா சொன்னேனே சார் ----------------- பேங்க்லருக்கற மாதவன்.. அவர் சொல்லித்தான் இதெல்லாம் நடக்குதுன்னு.. ஒரு ஊகம்.. இவனுங்க சொல்ல மாட்டேங்கறானுங்க..’

தனபாலின் முகத்தில் சட்டென்று கோபத்தின் ரேகை படர எரிந்து விழுந்தார். ‘இங்க பாருங்க.. அது ரொம்ப பெரிய எடம்.. நீங்களா எதையாச்சும் ஃபோன்ல சொல்லிக்கிட்டிருக்காதீங்க. அத அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பேக்டரி ஓனரோட கம்ப்ளெய்ண்ட் எந்த ஸ்டேஷன்ல பதிவாயிருக்குன்னு பார்த்து இவனுங்கள அங்க அனுப்பிச்சிருங்க. இந்த பொண்ணோட விஷயம் ரெக்கார்ட்ல வர வேணாம்.. புரியுதா? இவனுங்கள பெய்ல்ல எடுக்க யாராச்சும் வந்தா என் பெர்மிஷன் இல்லாம ஒன்னும் செய்யக்கூடாதுன்னு அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ கிட்ட சொல்லிருங்க.. நீங்க மேல்கொண்டு இவனுங்க மேல ஏதாச்சும் பெண்டிங் கேஸ் இருக்கான்னு பாருங்க.. ஏதாச்சும் இருந்தா மூனு, மூனரைக்குள்ள எனக்கு ஃபோன் பண்ணுங்க..’

புவனாவுக்கு ஒருவாறு விஷயம் புரிந்தாலும் உள்ளூர நடுங்கியவாறு தன்னுடைய தந்தையின் அடுத்த அஸ்திரத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

தொடரும்..







2 comments:

G.Ragavan said...

பேசாம மொதல்லயே உண்மையச் சொல்லி உதவி கேட்டிருக்கலாம். போலீசுக்காரருக்குத் தெரியாததா...என்ன நடக்குமோ.....

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

மொதல்லயே உண்மையச் சொல்லி உதவி கேட்டிருக்கலாம். //

கேட்டிருக்கலாம்தான்.ரம்யாவுக்கு தோணலையே.. இப்ப இந்த சிக்கல்லருந்து எப்படித்தான் வெளிய வரப்போறாளோ? நானும் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.