20.3.06

சூரியன் 44

தூய பேதுரு (St.Peter's)ஆலயம், வேப்பேரி. சென்னை

உபதேசியார் ஸ்தனிஸ்லாஸ் ஒன்பதரை மணி ஆங்கில திருப்பலிக்கான ஆயத்தங்களைச் செய்வதில் முனைப்பாயிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை என்றாலே காலையில் மூன்று திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம். மூன்று திருப்பலிகளுக்கும் வேண்டிய ஆயத்தங்களை செய்து முடிப்பதற்குள் போதும், போது மென்றாகிவிடும் அவருக்கு.

‘இந்த வயசான காலத்துல அதிகாலையில எழுந்து வர்றது கஷ்டமாயிருந்தா நின்னுக்குங்க ஸ்தனிஸ்..’ என்று அவருடைய பங்கு குரு பலமுறை கூறிவிட்டார்.

அப்போதெல்லாம், ‘என்ன பத்தி ஒங்களுக்கு தெரியாதா சாமி.. இந்த பங்களாவ விட்டா எனக்கு வேற போக்கெடம் ஏது சாமி.. நா பொணமாத்தான் சாமி இங்கருந்து போணும். அதுக்கு மின்னால என்ன போச்சொல்லிராதீங்க சாமி.. ஒங்க கால்ல விளுந்து கேட்டுக்கறேன் சாமி..’

அவருடைய பிள்ளைகளில் எவருமே அவருக்கு புகலிடம் கொடுக்காத நிலையில் தானும் அவரை வெளியே அனுப்பிவிட்டால் அந்த துக்கத்திலேய அவர் மரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்த பங்கு குரு தாமஸ் அடிகளார், ‘சரி ஸ்தனிஸ் நீங்க சொன்னா மாதிரி உங்க இறுதி நாள் வரை இங்கேயே இருந்துருங்க.. கர்த்தருடைய சித்தம் அதுவா இருந்தா அப்படியே நடக்கட்டும். உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு யாரையாவது நியமிக்கிறேன்.’ என்று அடுத்திருந்த கன்னியர் மடத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞனை ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும்  திருவிழா நாட்களில் வந்து ஸ்தனிஸ்லாசுக்கு உதவி செய்ய நியமித்தார்.

அறை மூலையிலிருந்த தொலைப்பேசி அடிப்பதைக் கேட்ட உபதேசியார் ஸ்தனிஸ்லாஸ் தன்னுடைய வயதான கால்களை தரையில் தடவித் தடவி மெதுவாக நடந்து சென்று எடுத்து நடுங்கும் குரலில் ‘ஹலோ யாருங்க? நா உபதேசியார் பேசறேன்.’ என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த குரல் அவருக்கு மிகவும் பரிச்சயமான மாணிக்க வேலுடையது என்பதை அறிந்த உபதேசியார், ‘என்னய்யா இந்த நேரத்துல. சாமி ரெண்டாவது பூசை வச்சிக்கிட்டிருக்காரே.. இன்னும் அரைமணியாவது ஆவும் போலருக்கே.’ என்றார்.

அவர் கூறியதைப் பொருட்படுத்தாமல் எதிர்முனையிலிருந்து ஒலித்த செய்தி அவரை நிலைகுலைய வைத்தது. ‘என்னய்யா சொல்றீங்க? கமலியா? நேத்து காலைல உங்க பேங்குக்கு சாமியாரோட வந்தப்போக்கூட ஒன்னும் சொல்லலையேய்யா.. திடீர்னு எப்படி..? அவஸ்தைக் கூட கொடுக்க முடியாம போயிருச்சேய்யா.. கவலைப்படாதீங்க மாணிக்கய்யா.. சம்மனசு மாதிரி புள்ளையாச்சே உங்க பொண்ணு.. இந்நேரம் கர்த்தரோட பக்கத்துல இருப்பாய்யா.. சம்மனசுகளோட சம்மனசா இருக்கும்யா நம்ம பாப்பா..’

பேச்சுக்கிடையில் எதிர்முனையிலிருந்து விசும்பும் ஒலி வரவே ‘யார்யா அது, சந்தோஷா? பாவம்யா புள்ள.. ஒரேயொரு தங்கச்சியாச்சே.. மனசு ஆறாதே.. எல்லாம் கடவுளோட சித்தம்னு சொல்லாம வேற என்னய்யா சொல்றது? நா சாமியார்க்கு ஒரு சீட்டுல எளுதி அனுப்பி விடறேன்யா.. மனச தேத்திக்குங்க.. பூச முடிஞ்சதும் சாமியாரோட வந்து செபம் பண்ணி மந்திரிச்சிரலாம்யா.. மனச தேத்திக்கிருங்க.. வச்சிடறேன்..’ என்று ஒலிவாங்கியை வைக்கச் சென்றவர் எதிர்முனையிலிருந்து குரல் கேட்கவே மீண்டும் , ‘என்னய்யா சொன்னீங்க? மதர் கிட்டயா? சொல்லிடறேன்யா.. யார்கிட்டயாவது உடனே சொல்லி அனுப்பறேன்.. என்னய்யா? அவுகள உடனே வரச்சொல்லவா? சரிய்யா.. அவங்க மடத்துல காலைலயே பூசை முடிஞ்சிருக்கும்.. ஒடனே புறப்பட்டு வந்துருவாங்க.. சவப்பெட்டிக்கெல்லாம் சொல்லிட்டீங்களாய்யா? என்னய்யா? ஆச்சா? சரிய்யா.. எனக்கும் நீங்க சொன்னத கேட்டதுலருந்து பட படன்னு வருதுய்யா.. கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு சாமிக்கு சீட்டெழுதி அனுப்பணும்.. வச்சிடறேன்.’ என்றவர் ஒலிவாங்கிய அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு துக்க மிகுதியால் தட்டுத்தடுமாறி அறையின் மறுகோடியிலிருந்த குடிநீர் பாத்திரத்திலிருந்து ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பிறகு மெள்ள எழுந்து ஒரு துண்டு காகிதத்தில் நடுங்கும் கரங்களால், ‘நம்ம மாணிக்கய்யா பொண்ணு கமலி மரிச்சிருச்சு சாமி. இப்பத்தான் ஃபோன் வந்துது..’ என்று கிறுக்கி பீடத்திற்கு பின்னாலிருந்த வாயிலில் நின்று பீட சிஷ்யர்களுள் ஒருவனைக் கைச்சாடைக் காட்டி அழைத்து தன் கையிலிருந்து சீட்டைக் கொடுத்து, ‘ஏய்யா. இந்த சீட்ட சாமி கிட்ட குடுத்துரு.. அவசரம்.’ என்றார். ‘நீ குடுத்துட்டு ஒடனே திரும்பி வாய்யா.. மடத்துலயும் போயி இந்த விஷயத்த மதர்கிட்ட சொலணும்.. சாமி ஒன்னும் சொல்ல மாட்டார். என்ன?’ என்றார்.

பீடச் சிறுவன் தன் கையிலிருந்த சீட்டைப் படித்துவிட்டு சட்டென்று முகம் இருண்டு போய் உபதேசியாரைப் பார்த்தான். ‘அய்யா இது சந்தோஷோட தங்கைதானே? நேத்து காலைலக் கூட நா அவங்க வீட்டுக்கு போயிருந்தேனேய்யா..?’ என்றான் கலங்கிய கண்களுடன்..

உபதேசியார் அவனை தட்டிக்கொடுத்தார். ‘எய்யா லாரன்ஸ்.. நீ அப்புறம் போய் பார்க்கலாம். நீ இப்போ போயி சீட்ட சாமிகிட்ட குடுத்துட்டு ஓடி வாய்யா.. மடத்துக்கு போயி சொல்லிட்டு நீ வேணும்னா சைக்கிள எடுத்துக்கிட்டு முன்னால போயிரு. நானும் சாமியும் ஒரு சைக்கிள் வேன்ல  வந்துக்கறோம்.. இப்ப போயி சீட்ட சாமிகிட்ட குடு.. போ..’

***

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்த மாணிக்க வேல் எதிரே கட்டிலில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தார். அவனுடைய வயதில் தன்னால் இப்படியொரு இழப்பைத் தாங்கியிருக்க முடியுமா என்று யோசித்தார்.

அடுத்த அறையில் தன்னுடைய மனைவி எழுப்பிக் கொண்டிருந்த ஓசை கேட்டது. அவளை என்ன செய்வது? நான் வரவேண்டாம் என்பதை வந்தனா மேடம் கேட்டிருப்பார்களா? கமலியின் மரண செய்தியைக் கேட்டதுமே மேடம் செல் ஃபோனை தவறவிட்டதை இங்கிருந்தே அவரால் உணர முடிந்தது. இவ்விழப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடிகிறதோ இல்லையோ.. மேடத்தால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது என்று நினைத்தார்.

Something has to be done. அவங்க பாட்டுக்கு புறப்பட்டு வந்துட்டா அப்புறம் ராணிய கண்ட்ரோல் பண்ணவே முடியாது. இன்னும் தலைனிந்து அமர்ந்திருக்கும் தன் மகனைப் பார்த்தார்.

‘சந்தோஷ்’ என்று அழைத்தார் மெல்லிய குரலில்.

மறு பதில் ஏதும் கூறாமல் தன்னைப் பார்த்த தன் மகனின் கண்களில் நிறைந்திருந்த சோகம் அவரை என்னவோ செய்தது.  

‘வந்தனா மேடம் நான் சொன்னத கேட்டாங்களோ தெரியலை சந்தோஷ். நான் ரெண்டு மூனு தடவை அவங்க் செல் ஃபோனுக்கு ட்ரை பண்ணி பார்த்துட்டேன். எங்கேஜ்டாவே இருக்கு. லேண்ட் லைனையும் எடுக்கவே மாட்டேங்கறாங்க. அவங்க சொல்லாம கொள்ளாம புறப்பட்டு இங்க வந்துட்டா வேற வினையே வேணாம். சொந்த காரங்க மத்தியில ராணி ஏதாவது பண்ணி அசிங்கமாயிரும். ஃபாதரும், மதரும் நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்கன்னே சொல்ல முடியாது. அத அவாய்ட் பண்றதுக்கு ஒரு வழிதான் இருக்கு.’

‘என்ன டாட்?’

‘நீ உடனே கார எடுத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு போணும்.’

‘நானா? எப்படி டாட். இந்த மூட்ல என்னால அவ்வளவு தூரத்துக்கு கார தனியா ஓட்ட முடியும்னு நினைக்கிறீங்களா டாட்?’

அதுவும் சரிதான். தாம்பரத்திலிருந்து பத்து, பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இவனை தனியாக அனுப்புவது ஆபத்துதான். வேறென்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிக்க தன் அருகில் இருந்த வீட்டு தொலைப்பேசி அடிக்கவே எடுத்து ‘ஹலோ’ என்றார்.

எதிர் முனையில் அவருடைய கிளை துணை மேலாளர்!

‘என்ன சார், நான் கேள்விப்பட்டது உண்மையா? என்ன சார் நீங்க.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? எங்கக்கிட்ட முதல்ல சொல்லணும்னு உங்களுக்கு எப்படி சார் தோனாம போச்சி?’

உண்மைதான்.. தன்னால் எப்படி இவரை மறக்க முடிந்தது?

‘சாரி ஜோ.. I just forgot.. என்னுடைய வேதனையில யாருக்கு சொல்லணும்னு கூட மறந்து போச்சி ஜோ.. நீங்க உடனே புறப்பட்டு வாங்க.. ஃபோன்ல பேசக்கூடிய சூழ்நிலையில நா இப்ப இல்ல.. வாங்க.. நீங்களே நம்ம மத்த ஆஃபீசர்சுக்கும் ஸ்டாஃபுக்கும் முக்கியமான கஸ்டமர்சுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வந்துருங்க..வச்சிடறேன்.. ’

‘டாட்.. நம்ம ஜோ அங்கிள்கிட்டயே இதயும் சொல்லியிருக்கலாமே.. அவர் நம்ம வீட்டுக்கு வர்ற வழியிலேயே அவங்க வந்தனா ஆண்ட்டி வீட்டுக்கு போய்ட்டு வந்திருப்பாரில்லே டாட்.’

மாணிக்க வேல் தன் மகனிடம் எப்படி விளக்குவதென தெரியாமல் யோசித்தார். ‘எப்படி சந்தோஷ்? வந்தனா மேடத்த இந்த நேரத்துல வீட்டுக்கு வரவேணாம்னு ஜோ வழியா எப்படி சொல்றது? அவர்கிட்ட நா என்னன்னு சொல்லுவேன்? ராணி அப்பாவையும் வந்தனா மேடத்தையும் சேர்த்து சந்தேகப்படறான்னா?’

சந்தோஷின் கண்கள் கலங்கி தலையைக் குனிந்துக்கொண்டான். அம்மாவுக்கு ஏந்தான் இப்படி புத்தி போவுதோ தெரியலையே..

சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்ற தன் தந்தையைப் பார்த்தான். ‘டாட் ஒரு ஐடியா.’

‘சொல்லு.’

‘நம்ம தாத்தா முளிச்சதும் அவர கொண்டு போய் வந்தனா மேடம் வீட்ல ரெண்டு நாளைக்கு விட்டுரலாம். அம்மா இப்ப இருக்கற முடுல அவங்க கோபம் முழுசும் தாத்தா மேலதான் பாயும். சித்தப்பா, சித்தி எல்லாம் இருக்கற நேரத்துல அம்மா தாத்தாவ ஏதாவும் மோசமா பேசி, அவங்க பதிலுக்கு ஏதாவது பேசிட்டாங்கன்னா எல்லார் முன்னாலயும் அசிங்கமாயிரும். அதனால ஜோ அங்கிள் கூட.. இல்லன்னா ஒரு கால் டாக்சிய கூப்டுங்கப்பா, நானே தாத்தாவ கூட்டிக்கிட்டு போயி ஆண்டிக்கிட்ட சொல்லி  விட்டுட்டு வந்துடறேன். நாம ஏன் தாத்தாவ அவங்க வீட்ல விடறோம்னு ஆண்டிக்கு சொன்னா புரிஞ்சுக்கும். என்ன டாட் சொல்றீங்க?’

மாணிக்க வேல் தன் மகனின் சமயோசிதத்தை நினைத்து வியந்தார். இந்த துக்ககரமான சூழ்நிலையிலும் இவனால் எப்படி இத்தனை சாமர்தியமாக சிந்திக்க முடிகிறது.

‘நல்ல ஐடியா சந்தோஷ். நான் உடனே எங்க பேங்க் டிராவல் ஏஜண்டுக்கு ஃபோன் பண்றேன். நமக்கு எப்படியும் இன்னைக்கி ஒரு ரெண்டு மூனு கார், வேன்லாம் வேணும். நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. குட் ஐடியா! நீ போய் தாத்தாவுக்கு ரெண்டு நாளைக்கு வேண்டிய வேட்டி, சட்டைன்னு எல்லாத்தையும் எடுத்து ஒரு சின்ன பேக்ல வை.. நான் டாக்சிய கூப்டறேன்.’

இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியே வரவும்  அவருக்கும் ராணிக்கும் திருமணம் செய்துவைத்த பாதிரியாரும், கன்னியர் மடத் தலைவியும் ஒரு வேனில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது..

தொடரும்



2 comments:

G.Ragavan said...

no comments again...... :-(

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
மன்னிக்கணும்..பொதுவா நான் தொடர்கதைகள் காத்திருந்து படிப்பதில்லை .உங்கள் இந்த கதையை முடிந்த பின் ஒன்றாக திரட்டி ,மொத்தமாக படிக்கலாமென்றிருக்கிறேன் ..ஜோ-ன்னு ஒரு பாத்திரம் கூட இருக்குது போல..கண்டிப்பா நான் மொத்தமா படிப்பேன் சார்!