22.7.06

மு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)

(தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

கவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா?

செந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..

கவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு? டேய் நீ தேறிட்டடா..

செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..

கவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.

(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள்   ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)

மு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).

(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே? (பல்லைக் கடிக்கிறார்)

செந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)

கவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..

மு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க? நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ?

கவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..

செந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..

கவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..

(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)

கவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..

(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா?

மு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா?

கவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா? வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..?’ என்கிறார்)

(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)

மு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பார்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..

கவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா.  வாய்லயே நொளையமட்டேங்குது

மு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...

மு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..

கவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..

(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம்? (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)

மு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா? அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா? அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..

(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)

(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)

கவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா?

செந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)

(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே?

கவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா? செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)

(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சிரிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)

செந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா?

(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)

கவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)

(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)

மு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா? பிறகு என்ன எழுதுவீர்கள்?

கவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..

மு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம்? இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க?

கவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).

(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)

(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்த தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர்  இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து  மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)

நிறைவு.

21.7.06

மு.கவுடன் சந்திப்பு (நகைச்சுவை)

கவுண்டரும் செந்திலும் முதலமைச்சரை பேட்டி காண தயாரகிறார்கள்.

கவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)

செந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா?

கவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..

கவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி? டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா?

செந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..

கவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா? நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு  சொல்லு.. என்ன ரெடியா?

செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)

கவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா?

செந்: இருக்கு

கவு: மைக்?

செந்: இருக்கு

(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)

கவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா?

செந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க? அத மறப்பனா? இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்?

கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..

செந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது? அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..

கவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா? ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு  கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது? நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..

கவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது? ச்சை..  

(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)

கவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா? என்ன அதே ரிக்ஷவா?

செந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..

கவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல?

செந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.

கவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..

(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி  காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க?’ என்கிறார் அதிகாரத்துடன்.)

கவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க? நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)

கவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்..? கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..

செந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..

கவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது? எறங்குடா..

(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா?  கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..

செந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..

கவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல?

செந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல?

கவு: (முறைக்கிறார்) யாரு? நீயி? எல்லாம் என் நேரம்டா..

(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)

கவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின? இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது? ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க? இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

நாளை நிறைவு பெறும்..

13.7.06

ஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)

ஒரு லொட, லொட சைக்கிள் ரிக்ஷ¡வில் கவுண்டரும் செந்திலும்..

செந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.

கவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.

ரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.

கவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..  

(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)

கவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)

செந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டரை பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது?

கவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..

செந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..

கவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப?

செந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..

கவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா? ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க  கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )

கவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க?

செந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)

(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)

செந்: வாங்கண்ணே.. பாத்தீங்களா? நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..

கவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற?.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற?

செந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு?.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )

கவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..

செந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா?

கவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா? போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..

கவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்ல வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..

(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ?’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)

கவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..

ஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)

செந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...

கவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான?

ஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..

செந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு? அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)

பேட்டி தொடர்கிறது..

ஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..

கவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா? (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா?

(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்று தலையை அசைக்கிறார்.)

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)

ஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)

பேட்டி தொடர்கிறது..

(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)

பேட்டியின் இறுதியில்..

மேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க

கவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது? அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல?

செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....

(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )



நிறைவு..




********