18.1.07

சூரியன் 166

சிவகாமி மாமி அழுகையினூடே பேசியதை நம்பமுடியாமல், ‘என்ன மாமி சொல்றேள், எதுக்காக அழறேள்?’ என்றாள் மைதிலி.

சாதாரணமாகவே பரபரப்புடன் இயங்கிவரும் மும்பை அன்று பகல் பல இடங்களில் குண்டுகள் வெடிக்க நகரம் முழுவதையுமே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டதை உணரமுடிந்தது அவளால்.

செம்பூரில் மருத்துவர் ராஜகோபாலனை சந்தித்துவிட்டு தன்னுடைய அலுவலகம் செல்ல உத்தேசித்திருந்த மைதிலி சயான் சதுக்கத்தையே அடைய முடியாமல் வாகன நெரிசல் நெட்டித்தள்ளியது.

இது போறாதென்று செம்பூர் நாக்காவிலிருந்து ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் காவல்துறையினரின் குழு கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்குள்ளும் தலையை புகுத்தி வாகனத்திலிருந்தவர்களை கேள்வி கேட்பதும் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறியவர்களை சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று  துருவித் துருவி விசாரிப்பதும்.. அதன் விளைவாக நீண்ட சர்ப்பமென வளைந்து காத்திருந்த வாகனங்களும்.. திரும்பி தன்னுடைய ஃப்ளாட்டுக்கே சென்றாலென்ன என்று அவள் யோசித்த நேரத்தில்தான் அவளுடைய செல் ஃபோன் சினுங்கியது.

ஏற்கனவே அவளைச் சுற்றிலும் நிறைந்திருந்த வாகனங்களில் அமர்ந்திருந்தவர்களின் பொறுமையற்ற ஹார்ன் ஒலி அவளுடைய காதுகளை கிழித்துவிடுவதுபோல் அலறிய வண்ணமிருந்தன. இதில் சிவகாமி எதிர்முனையில் அழுதவாறே பேச சீனிக்கு என்னவோ ஏதோ என்று பதறிப்போனாள் மைதிலி. மீண்டும் எங்காவது விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பானோ என்ற நினைப்பில், ‘என்ன சொல்றேள் மாமி, சீனிக்கு என்ன? அழுகைய நிறுத்திட்டு நிதானமா சொல்லுங்களேன்.’ என்றாள் சலிப்புடன்.

எதிர்முனையில் மாமி சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதை அவளால் உணரமுடிந்தது. அவளுடைய இரு சக்கர வாகனத்தை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு சாலையோரத்திலிருந்த கடையொன்றை அணுகி ஒரு காதை மூடிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாரானாள்.

‘செத்த நேரம் முன்னால போலீஸ் வந்து சீனிய கூட்டிக்கிட்டு போய்ட்டாடி.. என்ன ஏதுன்னு கேட்ட என்னை மிரட்டிட்டு போய்ட்டா.. நீ ஒடனே பொறப்பட்டு வாயேன்..’ மேற்கொண்டு பேச முடியாமல் சிவகாமி எதிர்முனையில் அழ ஆரம்பிக்க ஃபோனில் கேட்டதை நம்பமுடியாமல் திகைத்து நின்றாள் மைதிலி..

சீனியையா? போலீஸ் வந்து கூட்டிக்கிட்டு போய்ட்டாளா? எதுக்கு? என்னடாயிது புதுப் பிரச்சினை? ஒருவேளை இன்னைக்கி நடந்த பாம்ப் ப்ளாஸ்ட் காரணமாயிருக்குமோ? இந்த போலீசே ஒரு விவஸ்தையில்லாத ஜடங்களாச்சே... ஒன்னு நடந்துட்டாப் போறும்.. Panic reactionல என்ன செய்யறோம் ஏது செய்யறோம்கற விவஸ்தையே இல்லாம.. சந்தேகங்கற பேர்ல என்ன வேணும்னாலும் செய்யலாம் நினைப்பாளே.. இப்ப என்ன பண்ணப் போறேன்.. சீனிய எந்த ஸ்டேஷனுக்கு அழைச்சிண்டு போயிருப்பாளோ தெரியலையே.. அவனே கால ஒடச்சிண்டு நிக்கறான்.. இந்த நேரத்துல அவன் என்ன செஞ்சிருப்பான்னு நினைச்சிண்டு இந்த போலீஸ் அவனெ அழைச்சிண்டு போயி.. ச்சே! இப்ப என்ன செய்யலாம்.. நம்ம ப்ராஜக்ட் ஹெட்ட கூப்ட்டு அட்வைஸ் கேட்டா என்ன? சீச்சீ.. நாமளா போயி என் ஃப்ரெண்ட போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்குன்னு சொல்லி விளம்பரப்படுத்தணுமா என்ன?

ராஜகோபாலன் அங்கிள்?

Yes! அதான் சரி.. அவரையே கேப்போம்.. அவருக்கு டிபார்ட்மெண்ட்ல யாரையாச்சும் தெரிஞ்சிருக்கும். அத்தோட அவர்தானே சீனியையும் ட்ரீட் பண்ண டாக்டர்? போன ரெண்டு நாளா சீனி கால ஒடச்சிக்கிட்டு ஆத்துலயே இருந்த சமாச்சாரம் அவருக்கும்தானே தெரியும்? அத்தோட ஒரு நா முழுக்க அவரோட டிஸ்பென்சரியில இருந்துருக்கானே.. சீனிக்கும் இந்த ப்ளாஸ்டுக்கும் சம்பந்தமிருக்க சான்ஸ் இல்லேன்னுட்டு அவர் சொன்னா போலீஸ் ஒத்துக்குமே..

Yes.. that’s the only option available to me now.. ‘மாமி கவலைப்படாதேள்.. தோ.. நா இப்பவே சீனிய ட்ரீட் பண்ண டாக்டர் மூலமா ஏதாச்சும் செய்யறேன்.. சீனிய என்க்வயரிக்கு மட்டுந்தான் கூட்டிண்டு போயிருப்பா.. இன்னும் அரை மணி நேரத்துல ஒங்கள மறுபடியும் கூப்பிடறேன்.. நீங்க ஆத்துல ஃபோன் பக்கத்துலயே இருங்கோ.. சென்னையிலருந்து யாராச்சும் ஃபோன் பண்ண இந்த விஷயத்த சொல்லிராதேங்கோ.. அவா வேற தேவையில்லாம டென்ஷனாயிருவா.. என்ன நா சொல்றது புரிஞ்சிதா மாமி..?’

‘சாரிடிம்மா.. நா ஒனக்குத்தாண்டியம்மா மொதல்ல ஃபோன் பண்ணேன்.. ஆனா நீ எடுக்கவேயில்லையா அதான் செத்த நேரத்துக்கு முன்னாடி சரோஜா சீனிய கேட்டு போன் செஞ்சிருந்தா.. நா வேற வழியில்லாம அவகிட்ட எல்லாத்தையும் சொல்ல வேண்டியதா போச்சி.. அவா மூனு பேரும் இன்னைக்கே பொறப்பட்டு வந்துருவான்னு நினைக்கறேன்.. நீ ஒன்னால முடிஞ்சத செய்டீம்மா.. பாவம் கொழந்த.. ஏற்கனவே கால் வேதனை தாங்க முடியல மாமி ராத்திரியெல்லாம் தூங்காம அழுதுண்டிருந்தான்.. காலைல ஊர் முழுக்க வெடிகுண்டுன்னு கேட்டதும் ஐயோ மாமி மைதிலி எங்கருக்கான்னு தெரியலையேன்னு சொல்லிண்டிருந்தான்.. சொல்லி வாய மூடலை ஒரு பெரிய போலீஸ் கூட்டமே ஆத்துக்குள்ள நொழஞ்சி என்ன ஏதுன்னு கேக்கறதுக்குள்ளயே கோழிக் குஞ்ச அமுக்குனா மாதிரி அள்ளிக்கிட்டு போய்ட்டாடி..’ சிவகாமி மாமி மீண்டும் அழுகையைத் துவங்க.. ‘அழாதேள் மாமி.. நான் வச்சிடறேன்.. அரை மணி நேரத்துல கூப்பிடறேன்.’ என்றவாறு துண்டித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் மைதிலி.

ஹ¥ஹ¤ம்.. வாகனங்கள் நகரக்கூடிய அடையாளமே தென்படவில்லை. வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய வாகனத்தை எடுக்க வழியேயில்லை என்பதை உணர்ந்த மைதிலி அது எப்படியோ போகட்டும் என்ற நினைப்புடன் வாகனங்களுக்கிடையில் புகுந்து தான் வந்த வழியிலேயே விரைந்தாள்.

******

மாதவன் ஓட்டல் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், சரோஜா தன்னுடைய புகாரை அழுகையுடன் துவக்கிவிட அவளை சமாதானப்படுத்துவதற்குள் அவருக்கு போதும், போதும் என்றாகிவிட்டது.

‘நா எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேம்ப்பா.. அம்மா அழுகைய நிறுத்தவே மாட்டேங்குறாங்க.. நா மட்டும் மும்பையிலயே இருந்திருந்தா இது நடந்திருக்குமான்னு அப்பத்துலருந்து ஒரே கேள்விதான்.. I am fed up.. நீங்களே பேசிக்குங்க.. நா கீழ போயி கொஞ்ச நேரம் லாபியில இருந்துட்டு வரேன்.’ என்றவாறு வத்ஸ்லா கதவைத் திறந்துக்கொண்டு வெளியேற மாதவன் தன்னுடைய கைப்ப¨யை படுக்கையில் எறிந்துவிட்டு தன்னுடைய மனைவியை நெருங்கினார்.

சரோஜா அவருடைய கரங்களை தள்ளிவிட்டு, ‘எல்லாம் ஒங்களாலதான்.. நா அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்டேன் நானும் சீனியோட நிக்கறேன்னு.. நீங்க கேக்கலை.. சரி அவன மட்டும் அங்க விட்டுட்டு வரவேண்டாம்னு சொன்னேன்.. அதயும் கேக்கல.. இப்ப பாருங்க.. அவனே ஒரு குழந்த மாதிரி.. மகாராஷ்டிரா போலீச பத்தி நமக்கு தெரியாதாங்க.. எத்தன வருசந்தா நாம அங்க இருந்திருக்கட்டுமே இப்பவும் நம்மள மதராசின்னுதானே பிரிச்சி பாக்கறானுங்க? அவனெ என்ன செய்யறாங்களோ தெரியலையே.. படுபாவிப் பசங்க.. சந்தேகம்னு என்னென்ன கேள்விய கேட்டு அவன படுத்தறானுங்களோ.. அவனே சின்னதுக்கெல்லாம் டென்ஷனாயிருவான்.. அவனுக்குன்னு அங்க யாருங்க இருக்கா? இப்படி அனாதையா நிக்கறானே எம்புள்ள.. எல்லாம் எம்புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. நானும் ஒங்க பேச்ச கேட்டு ஒங்கக்கூட வந்தேன் பாருங்க.. என்னெ சொல்லணும்..’ என்று புலம்ப மாதவன் என்ன சொல்லி இவளை சமாதானப்படுத்துவேன் என்று கலங்கிப்போனார்.

இந்த களேபரத்தில் அவருடைய செல்·போன் சினுங்க யாரென்று பார்த்தார். சுபோத்!

‘என்னாச்சி சுபோத்.. Could you get the tickets?’ என்றார்.

‘.....’

‘Good.. send the tickets to the hotel immediately.. I’ll call you later.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.

‘இங்க பார். நம்ம மூனு பேருக்கும் எட்டு மணி ஃப்ளைட்டுல டிக்கட் கிடைச்சிருக்கு. நான் ஆஃபீஸ்லருந்து கெளம்பும்போதே நம்ம முகர்ஜி சாருக்கு ஃபோன் போட்டு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவருக்கு மினிஸ்டர் லெவல்ல ஆள் இருக்கு.. சீனிக்கு ஒன்னும் ஆகாம பாத்துக்குவார். நீ இங்கருந்து கவலைப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை.. ஏற்கனவே ஒனக்கு சிஸ்டாலிக் லெவல் ஜாஸ்தி.. அழுதுக்கிட்டேயிருந்தே.. அப்புறம் ஃப்ளைட்டுல ஏறுனதும் மயக்கம் வந்துரும்.. சொல்லிட்டேன்.. பேசாம நா ராத்திரியில போட்டுக்கற ஸ்லீப்பிங் டாப்ளட்ல ஒன்னெ போட்டுக்கிட்டு தூங்கப் பார்.. இன்னும் நாலு மணி நேரம் இருக்கு ஃப்ளைட்டுக்கு.. கொஞ்ச தூங்குனா ஒன் ப்ரஷர் லெவல் நார்மலுக்கு வந்துரும்.. Please take my advice.. சீனிக்கு ஒன்னும் ஆயிருக்காது..’ என்றவர் வத்ஸ்லா அந்த பொண்ணுக்கு ஃபோன் செஞ்சாளா?’ என்றார் நினைவுக்கு வந்தவராய்.

சரோஜா எரிச்சலுடன் அவரைப் பார்த்தாள். ‘ஒங்களுக்கு என்ன பைத்தியமா? அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி என்ன ஆவப் போவுது? அவ அப்பாவுக்கு ஏற்கனவே சீனிய கண்டா ஆகாது. இந்த லட்சணத்துல அவன் போலீஸ்ல அரெஸ்டாயிருக்கான்னு தெரிஞ்சா கேக்கவே வேணாம்.. நல்லா அட்வைஸ் பண்றீங்க.. நாந்தான் வத்ஸ்லா கிட்ட அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.’

ச்சே.. நமக்கு இது தோனலையே என்று நினைத்தார் மாதவன். நமக்கு ஆஃபீஸ்லதான் உருப்படியான ஐடியாஸ் வரும்போலருக்கு. வீட்டு விஷயத்துக்கு பொம்பளைங்கதான் லாயக்கு.. Let them handle the issue.. நாம பொறப்படறதுக்கு தேவையானத பார்ப்போம்..

மும்பையில் எத்தனை நாள் இருக்க வேண்டி வருமோ? அதுவரைக்கும் இந்த ரூம வச்சிக்கிட்டிருக்க முடியாது.. ஒருவேள சரோ அங்கயே நிக்கறேன்னு அடம் பிடிச்சாலும் பிடிப்பா.. வத்ஸ மட்டும் கூட்டிக்கிட்டு வர்றதுலயும் அர்த்தமில்லை..

சோ.. இந்த ரூம வெக்கேட் பண்றதுதான் சரி.. உடனே சுபோத்தை அழைத்து கூறினாலென்ன என்று நினைத்தவர் வேண்டாம்.. ஏர்போர்ட்டிலிருந்து அவனை அழைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தவராய் தன்னுடைய மகளை செல்ஃபோனில் அழைத்தார். ‘ஏய் வத்ஸ்.. என்ன நீ பாட்டுக்கு அங்க போய் ஒக்காந்துட்டே.. பேக் பண்ண வேணாமா.. அப்பா ரூம வெக்கேட் பண்ணிட்டு போயிரலாம்னு நினைக்கேன்.. மும்பையில எப்படி இருக்கோ நிலமை.. மேல வா.. வந்து பேக் பண்ண ஹெல்ப் பண்ணு.. அம்மாவா? She is alright now.. Come.. We have only about two hours time.. என்னது? டிக்கெட்ஸா.. ஆமா எய்ட்டோக்ளாக் ஃப்ளைட்டுக்கு கிடைச்சிருக்கு.. இன்னும் அரை மணி நேரத்துல டிக்கெட்ஸ் வந்துரும்.. நீ சீக்கிரம் வந்து சேர்.’

இணைப்பைத் துண்டித்து படுக்கைக்கு அருகிலிருந்த குறு மேசையில் ஃபோனை வைத்துவிட்டு அறையெங்கும் கிடந்த துணிகளை அடுக்கி அவரவர் பெட்டியில் வைப்பதில் தீவிரமானார் மாதவன்.


தொடரும்..