வேல் முருகன் பொறியியல் கல்லூரி.
இதுதான் நம்முடைய தொடரின் களம். கதாநாயகன் என்றும் கூறலாம். சென்னை புறநகரில் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் கூடுதல் நிலத்தில் ( அரசியல்வாதிகள் சிலரின் 'தயவில்' சலுகை விலையில் ஆர்ஜிதம் செய்து, மன்னிக்கவும், ஆக்கிரமித்து ) எழுப்பப்பட்ட சாம்ராஜ்ஜியம். இதற்கு சகோதர, சகோதரி நிறுவனங்களும் உண்டு.
வேலன் தொழில்நுட்பக் கல்லூரி,
ரோகினி பாரா மெடிக்கல் கல்லூரி,
கற்பகம் கலைக் கல்லூரி இத்யாதி, இத்யாதிகள்..
அதாவது எல்.கேஜியில் ஒரு குழந்தையை சேர்த்து சுமார் இருபது வருடங்கள் கழித்து இளகலை பட்டதாரியாகவோ, பொறியாளராகவோ வெளியே கொண்டு வர 'சேவை' மனப்பான்மையோடு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த வெங்கடேஸ்வரலூ ரெட்டி & டாட்டர்ஸ் (அதாவது அவருடைய இரண்டு மகள்களும்) குடும்பத்தார் ஐந்தே வருடங்களில் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்..
இதன் உரிமையாளர் (அதாவது மேஜர் ஷேர் ஹோல்டர்) வெங்கடேஸ்வரலு... அவருடைய பொறியாளர் மனைவி (முதுகலைப் பட்டதாரி என்று கல்லூரியின் brochure கூறுகிறது.) கற்பகம் (தென்தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்று கேள்வி). இவரைப் பற்றி ஒரு துணுக்கு செய்தி. ஒரு பட்டமளிப்பு விழாவில் அவர் கடித்து குதறிய ஆங்கில பேச்சைக் கேட்டுவிட்டு விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர் ஒருவர் அடுத்த இருக்கையிலிருந்தவரிடம், 'இப்ப தெரியுதா சார் இவங்களோட எம்.டெக் எப்படி கிடைச்சிதுன்னு... எல்லாம் துட்டு குடுத்து வாங்குனது சார்... இதுங்கக் கிட்டல்லாம் பசங்க படிச்சி.. பட்டம் வாங்கி...' என்று பெருமூச்செறிந்ததாகவும் கேள்வி..
இவர்களுடைய இரு புதல்விகள் ரோகினி மற்றும் ரோஜா. இருவருமே பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாதவர்கள். 'தலையிலதான் மூளைக்கு பதிலாத்தான் திமிர் இருக்கே அது போறாது?' பணியாளர் ஒருவரின் கமெண்ட் இது. அவர்களும் அவர்கள் இருவரின் கணவன்மார்களும் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள்!
இருபாதாண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் பழைய பேப்பர் கடை வைத்திருந்தவர் வெங்கடேஸ்வரலு. இன்று சென்னைப் புறநகரில் அவர் நடத்தி வந்த சாம்ராஜ்யம் (திறந்தவெளி சிறைச்சாலை என்பது மாணவர்களின் ஒருமித்த கருத்து!) அவருடைய உழைப்பால் வந்தது இல்லை, அவர் வெறும் பினாமியே என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.
அடுத்தது இந்த கல்லூரியில் படிக்க நேர்ந்த தங்களுடைய தலைவிதியை நொந்துக்கொள்ளும் மாணவ, மாணவிகள், அவர்களுடைய பெற்றோர். கல்லூரியில் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு பணியாற்ற நேர்ந்த கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்... பணியாளர்கள்... இவருக்கு இருபத்திநாலு மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்டிருக்கும் குண்டர் கும்பல்!
இவர்களுள் முக்கியமானவர்கள்..
பேராசிரியர் ராஜசேகர், அவருடைய ஒரே மகன் பரத்குமார்.
ராம்குமார் - லதா தம்பதியர். மகன் ராஜ்குமார். மகள் ஜோதிகா... ராம்குமார் அரசு வங்கியொன்றில் காசாளர். லதா ஒரு மேல்நிலை பள்ளி ஆசிரியை.
லதா பணியாற்றும் பள்ளியில் பணியாற்றும் சகஆசிரியை ஸ்டெல்லா, அவருடைய ஆசிரியர்-கணவர் சூசைராஜ். மகன்கள் டேவிட் மற்றும் லாரன்ஸ். மகள் ஷாலினி.
கணவனுடனிடமிருந்து விவாகரத்து பெற்ற மாலதி மற்றும் அவருடைய ஒரே மகள் ப்ரியா.
அரபு நாடுகளில் ஒன்றில் பணியாற்றும் பொறியாளர் கிருஷ்ணன் நாயர், சென்னையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தயாரிப்பாளராக பணியாற்றும் ப்ரேமா. அவர்களுடைய இரு மகன்கள் சுந்தர், சுதாகர்.
மத்திய அரசு அலுவலர் பஞ்சாபகேசன், மனைவி பார்வதி இரட்டை மகன்கள் (twins)மூர்த்தி, வாசன் மற்றும் மகள் சாந்தி.
மற்றும் வேல் முருகன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜோதிகா, டேவிட், ப்ரியா, சுந்தர், மூர்த்தி,வாசன் ஆகியோரின் நண்பர்கள், நண்பிகள்..
இவர்களுடன் கல்லூரி உரிமையாளருடைய குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய, இவருக்கு முழு 'ஒத்துழைப்பு அளித்து'வந்த கட்சித் தலைவர் ஒருவர். அவருடைய முழு நேர அலுவல் எடுத்ததற்கெல்லாம் மறியல் நடத்துவது, போராட்டம் நடத்துவது. வருமானத்திற்கு மீறிய வசதிகளை சேர்த்துக்கொண்டவருக்கு எப்போதும் ஏழை எளியவர்களைக் குறித்து மட்டுமே சிந்தனை!
இது முழுக்க, முழுக்க இன்றைய இளைஞர்களைப் பற்றிய தொடர்..
இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைதான் என்றாலும் சித்தரிக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை... சமீபகாலமாக பத்திரிகைகள் மூலமாகவும் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த என்னுடைய நண்பர்களுடைய குழந்தைகள் மூலமாகவும் கேட்டறிந்த சம்பவங்களின் நிழல்களே..
அதாவது நிஜவாழ்வில் சில கல்லூரிகளில் பயிலும் மாணவர்களால் அனுபவிக்கப்பட்ட வேதனைகளின், நிராசைகளின் நிழல்கள்...
பெருத்த எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளில் நுழையும் நம்முடைய இளைஞர்கள் அவர்கள் வாழ்வில் நினைத்த நிலையை அடைய எத்தனை அவமானங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை என்னால் இயன்றவரை படம்பிடித்து காட்டவிருக்கிறேன்...
எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை...இடத்தின் பெயர்களையும், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் மட்டுமே மாற்றியுள்ளேன்.
ஆனால் அதே சமயம் இதில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் யாரையாவது நினைவுபடுத்தியிருந்தால் அது ஒரு தற்செயலே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..
யாரையும் குறைகூறும் நோக்கமோ அல்லது அவர்களுடைய மனதைப் புண்படுத்தும் நோக்கமோ நிச்சயம் இல்லை...
நாளை முதல் வாரம் மூன்று நாட்கள் இத்தொடர் வரும்....
********
4 comments:
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
மீனாஅருண்
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
--> i second.
போட்டுத் தாக்குங்க.
வாங்க மீனா, முகின் மற்று கொத்தனார்..
ஒங்க எதிர்பார்ப்புகளை முழுவதும் இல்லாவிட்டாலும் சிலவற்றையாவது நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்...
Post a Comment