30.9.05

போலி வாழ்க்கை (சிறுகதை)

திண்ணை சஞ்சிகை 14.ஜூலை இதழில் வெளியானது

“என்ன முடிவு பண்ணீங்க கோபி?”

கோபியிடமிருந்து பதில் வராமல் போகவே தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பக்கத்து மேசையில் தலை கவிழ்ந்து ஏதோ சிந்தனையிலிருந்த கோபியைப் பார்த்தாள் சரோஜா.

அவனை அந்த கோலத்தில் பார்ப்பது சங்கடமாயிருந்தது அவளுக்கு. அந்த அலுவலகத்திலிருந்தவர்களுள் அதிகம் படித்தவன் என்பதோடு எந்த விஷயத்திலும் சரியான முடிவெடுப்பதில் வல்லவன் என்று பெயரெடுத்தவன் கோபி.

‘கோபி மாதிரி இன்னும் ஒரு ள் இருந்தா போறும் இந்த செக்ஷனை பிரமாதமா நடத்தி காட்டுவேன்.’ என்று செக்ஷன் ·பீஸர் தர்மலிங்கம் அடிக்கடி பெருமையுடன் சொல்லிக்கொள்வது செக்ஷனிலிருந்த பலருக்கும் பிடிக்கவில்லையென்றாலும் சரோஜாவுக்கு மிகவும் பிடிக்கும். அப்போதெல்லாம் முகம் நிறைய சந்தோஷத்துடன் ‘கரெக்டா சொன்னீங்க சார்’ என்று சொல்லவேண்டும் என்று மனதில் தோன்றும். னால் மற்றவர்களுக்கு பயந்து அடக்கிக்கொள்வாள்.

னால் தன் திருமண விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் அவன் தவிப்பதைப் பார்க்கும்போது.. இதற்கு தானும் ஒரு காரணமாயிருந்துவிட்டோமே என்று மனம் நொந்தாள்.

அவள்தான் என்ன செய்வாள் பாவம். ஊரிலிருந்து அப்பா எழுதிய கடிதத்தை அவனிடம் காண்பிக்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு. ‘இங்கே ஒரு நல்ல வரன் வந்திருக்குமா. ஜாதகமெல்லாம் நல்லா பொருந்தியிருக்குன்னு நம்ம ஜோசியர் சொல்றார். அம்மாவுக்கும் இந்த இடம் நல்லா பிடிச்சிருக்கு. நீ ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்தீன்னா நல்லாயிருக்கும். இந்த கடிதம் கிடைச்சதும் டிக்கட்டை புக் பண்ணிட்டு எனக்கு ·போன் பண்ணு..’

இத்தகைய கடிதத்தை சென்ற முறை ஊருக்கு போய் வந்ததிலிருந்தே எதிர்பார்த்ததுதான். னால் இவ்வளவு விரைவில் வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

கடிதம் வந்து இரண்டு நாளாகிவிட்டது. இன்று இரவு அவள் கூப்பிடவில்லையென்றாலும் அவள் தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு அப்பா ·போன் செய்துவிடுவார். சந்தேகமேயில்லை. அதனால்தான் கோபியை முடிவெடுக்க அவசரப்படுத்தவேண்டிய கட்டாயம் அவளுக்கு.

அதே சமயம் கோபியின் குடும்ப சூழ்நிலையைப் பற்றியும் அவள் நன்றாக அறிந்திருந்ததால்தான் பிரச்சினையே.
திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே கணவனையிழந்து விதவையாய் நிற்கும் தமக்கை(‘பிறப்பிலேயே இதயத்தில் கோளாறு இருந்தும் மறைத்து திருமணம் செய்திருக்கிறார்கள். என்னத்தைச் சொல்ல? எல்லாம் எங்க தலையெழுத்து’ என்று கோபி சொன்னபோது ‘அவங்களை நீங்க சும்மா விட்டிருக்கக் கூடாது கோபி’ என்று தான் கோபித்துக் கொண்டதை நினைத்து பார்த்தாள் சரோஜா.), கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் இரண்டு தங்கைகள், தன்னுடைய ஒரே பிள்ளையையும் மருமகளையும் விபத்தில் பறிகொடுத்துவிட்டு தன் மகன் வயித்து பேரப்பிள்ளைகளுக்காகவே உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் எழுபது வயதைக் கடந்த பாட்டி.. இத்தனை சுமைகளையும் தாங்கிக்கொண்டு தன் குடும்பத்தினருக்காகவே வாழ்ந்துக்கொண்டிருந்தவனால் தன் திருமணத்தைப் பற்றி எப்படி முடிவெடுக்கமுடியும்?
இதையெல்லாம் தன்னிடமிருந்து அவன் மறைக்கவில்லையே! அவனை விரும்புதாக அவள் தெரிவித்த முதல் சந்தர்ப்பத்திலேயே தன்னைப் பற்றியும் தன் குடும்ப சூழ்நிலையைப் பற்றியும் மிகவும் தெளிவாக அவளிடம் எடுத்துரைத்து தான் காதலிக்கப்படத் தகுதியில்லாதவன் என்றானே. அவளால்தான் அவனை மறக்க முடியவில்லை. அவனையே சுற்றி சுற்றி வந்து அவன் மனதை முழுவதுமாக கரைத்தாள்.
இப்போது அவனில்லாமல் அவளும் அவளில்லாமல் அவனும் இருக்கவியலாது என்கின்ற அளவுக்கு வந்துவிட்டார்கள்.
தன் இருக்கையிலிருந்து எழுந்து கோபியின் மேசையருகே சென்றாள். எதிரே அமர்ந்தாள்.
“கோபி ப்ளீஸ், ஏதாச்சும் சொல்லுங்களேன்.”
மெதுவே நிமிர்ந்து தன்னைப் பார்த்த கோபியின் கண்கள் கலங்கியிருக்க உடைந்து போனாள் சரோஜா.
என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்த சரோஜா சுற்றிலும் பார்த்துவிட்டு மேசையின் குறுக்கே கையை நீட்டி கோபியின் கரங்களை தரவாய் பிடித்தாள்.
“ஐயாம் சாரி கோபி. இங்க வச்சி ஒன்றும் சொல்லாதீங்க. சாயந்திரம் மீட் பண்ணலாம். நான் சீட்டுக்கு போறேன்.”
அவள் எழுந்து அவளுடைய இருக்கைக்குப் போக கோபியும் எழுந்து அவளிடம் ஒன்றும் பேசாமல் வெளியேறுவதைப் பார்த்தாள். ‘எங்கே போகிறார்?’ என்று புரியாமல் திகைத்துப்போய் அவன் போன திசையையே நோக்கியவாறு அமர்ந்திருந்தாள்.
**
மாலை ஐந்து எப்போது அடிக்கும் என்று காத்திருந்ததுபோல் அந்த அலுவலகத்திலிருந்த பெண் ஊழியர் அனைவரும் எழுந்து பரபரப்புடன் வெளியேறினர்.
அவர்களோடு சேர்ந்து என்றும் புறப்பட்டுவிடும் சரோஜா இன்று தன் இருக்கையிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்த அவளுடைய நெருங்கிய தோழியான மாலா அவளை நெருங்கி வந்து நின்றாள். “என்ன சரோ உனக்கும் சாருக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா? அப்போ எழுந்து போனவர் இன்னமும் வரவேயில்லையே?”
சரோஜா தோழியின் முகத்தைப் பார்க்க துணிவில்லாமல் தன் முன்னாலிருந்த கோப்பிலிருந்து பார்வையை நகர்த்தாமல் பதிலளித்தாள்.
“அதான் மாலா எனக்கும் பயமாயிருக்கு. அவருக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். அவருடைய கைப்பை இங்கதான் இருக்கு. வருவார்னு நினைக்கறேன். நீ போ. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு வரேன்.”
“சரிடி. நான் போறேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.”
பரபரப்புடன் மாலா வெளியேற தலைமை எழுத்தரின் மேசையிலிருந்த தொலைப்பேசி சிணுங்கியது.
“சரோஜா மேடம் . உங்களுக்குத்தான் ·போன். சீக்கிரம் வாங்க. எஸ்.டி.டி. மாதிரியிருக்கு.”
திடுக்கிட்டு எழுந்து விரைந்து சென்று தலைமை எழுத்தரின் மேசையை நோக்கி விரைந்தாள் சரோஜா. ‘அப்பாவயிருந்தால் என்ன சொல்லி சமாளிப்பது’ என்று நினைத்தவாறே தொலைப்பேசியை எடுத்து, ‘ஹலோ’ என்றாள் தயக்கத்துடன்.
“ஹலோ. நான் தான் விஜயா. கோபியோட அக்கா பேசறேன்.” என்ற குரல் கேட்டு குழம்பினாள்.
“சொல்லுங்க.” என்றாள் குழப்பத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்.
“ஒரு அஞ்சு நிமிஷம் வீட்டு பக்கம் வந்து போக முடியுமாம்மா..? ஒரு முக்கியமான விஷயம். அதான்..”
எதிர்புறம் விஜயாவின் குரலிலிருந்த கெஞ்சல் அவளை, “சரிங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல புறப்படறேன்.” என சம்மதிக்க வைத்தது. வீட்டு விலாசத்தைக் கேட்டு குறித்துக்கொண்டாள். தன் இருக்கைக்குச் சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
கோபியின் வீட்டைத் தேடிப் பிடித்து அடைவதற்குள் இருட்ட ரம்பித்திருந்தது. வீட்டின் வாசலில் கோபியின் இரு சக்கர வாகனத்தைக் காணாததால் அவன் வீட்டிலில்லை என்பதை உணர்ந்து நிம்மதியடைந்தாள். னால் அதே சமயம் நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டவன் எங்கு போயிருப்பான் என்ற சிந்தனையும் எழுந்தது.
வீட்டு வாசற்படியில் அழைப்பு மணியின் அடையாளமே காணாமல் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள். வீட்டின் வாசற்கதவு திறந்திருந்தாலும் உள்ளே நுழைய மனமில்லாமல் அவள் ஒரு சில மணித்துளிகள் நின்றுவிட்டு தயக்கத்துடன் படியேறி வாசற்கதவை லேசாய் தட்டினாள்.
“வாங்க.. நீங்கதான் சரோஜான்னு நினைக்கறேன். சரிதானே. வாங்க உள்ளே வாங்க.. நான் கோபியோட அக்கா.. கோபி சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்.” உள்ளிருந்து படபடவென்று பேசிக்கொண்டே வெளியே வந்த அந்த இளம் பெண்ணை - தன்னை விட இரண்டொரு வயதே அதிகமிருக்கவேண்டும் - பார்த்தாள்... இந்த வயதிலேயே கணவனையிழந்து ... மனசு லேசாய் வலித்தது.
லேசான புன்னகையுடன் அவள் பின்னே வீட்டினுள் நுழைந்தாள். சின்னஞ்சிறு ஹாலின் நடுவே இருந்த மிகப்பழைய மர நாற்காலி ஒன்றில் அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏழ்மையின் அறிகுறிகள் எங்கும் படர்ந்திருக்க.. யாரோ நடந்து வரும் ஒலி கேட்டு திரும்பினாள்.
கோபியின் பாட்டி. பேரப்பிள்ளைகளுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் பாட்டி..
“தங்கச்சிங்க ரெண்டு பேரும் ட்யூஷன் போயிருக்காங்க.. வர்றதுக்கு ஒன்பது மணியாகும்.. பாட்டி இது நம்ம கோபியோட ·பீஸ்ல வேல செய்றவங்க..”
பாட்டி அவளைப் பார்த்து சிரித்த சிரிப்பில் பாசம் தெரிய சரோஜா அவளுடையக் கரங்களைப்பற்றிக்கொண்டு மெலிதாய் புன்னகைத்தாள். ‘ஐயோ, ஒன்றுமே வாங்கிக்கொண்டு வராமல் வந்துவிட்டோமே’ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.
வறுமையிலும் பளிச்சென்று தெரிந்த பாட்டியையும், கோபியின் தமக்கையும் அவளுக்கு மிகவும் பிடித்துபோனது.
“பாட்டி நீங்க உள்ளே போறீங்களா? எனக்கு இவங்களோட கொஞ்சம் தனியா..”
பாட்டி சரோஜாவைப் பார்த்து புன்னகைத்தாள். “இவ என்னத்தம்மா பேசப்போறா.. எல்லாம் கோபியைப் பத்தித்தான். நேத்தைக்கித்தான் உன்னைப் பத்தி எங்க கிட்ட சொன்னான். எனக்கும் உன்னை ஒரு தடவை பார்க்கணும்னு தோணிச்சிது. அதான் விஜயா கிட்ட சொல்லி உன்னை வரச்சொன்னேன்.. உன்னைப் பார்த்தா விகல்பமில்லாத பொண்ணா தெரியுது. கோபிக்கு நல்ல ஜோடியா இருப்பேன்னுதான் தோணுது.. என்ன செய்ய? கோபி பிடிவாதமாயிருக்கானே.. நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. நான் பின் கட்டுல இருக்கேன். நீ போகும்போது கூப்பிடும்மா.. வரேன்..”
பாட்டி சென்று மறையும் வரைக் காத்திருந்த விஜயா - கோபியின் தமக்கை - அவளைப் பார்த்து, “வீட்டுக்கு முதல் முதலா வந்திருக்கீங்க.. என்ன சாப்பிடறீங்க.. காபி?” என்றாள் புன்னகையுடன்.
“ரெடியா இருந்தா குடுங்க. எனக்காக போடவேண்டாம்.”
“ரெடியாத்தானிருக்கு. இருங்க கொண்டுவரேன்.”
சமையலறையை நோக்கிச் சென்றவளைத் தொடர்ந்து சென்ற சரோஜா மிகச்சிறியதாயிருந்த அந்த சமையலறையின் நேர்த்தியைக் கண்டு வியந்தாள். அவளுடைய சிந்தனை தன் தாயின் சமையலறையை நோக்கிச் சென்றது அவளையுமறியாமல்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி தகராறு வருமென்றால் அது அம்மா சமையலறையை வைத்திருக்கும் அலங்கோலத்தைப் பற்றித்தான். அப்பாவுக்கு எல்லாம் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். அது சமையலறையாயிருந்தாலும், படுக்கையறையாயிருந்தாலும் சரி.. அம்மாவோ அதற்கு நேரெதிர். ‘எங்க வைத்தாலென்ன சரோ? தேவைப்படும் போது எடுக்கணும்.. அவ்வளவுதான்.. இப்பிடியே இருபத்தஞ்சு குடுத்தனம் நடத்தியாச்சு. இப்போ போய் மாறுடின்னா எப்படி மாறுவேன்?’ என்பாள் அம்மா..
சரோவுக்கு தன் வீட்டிலிருக்கும்வரை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்படும் இதுபோன்ற சச்சரவுகளைத் தீர்த்து வைக்கவே நேரம் சரியாயிருக்கும்.. நல்ல வேளையாய் சென்னையில் இந்த வேலைக்கிடைக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து இரண்டு வருடங்களாகிறது.
“என்ன, ஏதோ யோசனையிலிருக்காப்ல இருக்கு? கிச்சன் ரொம்ப சின்னதாயிருக்கேன்னு பார்க்கறீங்களா? எங்க வீட்லருக்கற பாத்திரம் பண்டங்களுக்கு இது போறும்.. நான் வாக்கப்பட்டு போன இடத்துல இந்த மொத்த வீட்டு சைஸ்ல கிச்சன். இருந்து என்ன பிரயோசனம்? நான் ஒரு நாள் கூட சந்தோஷமாயிருந்ததில்லைங்க.. இங்க கஷ்டத்திலும் மூணு வேளை சோத்துக்கும் துணிமணிக்கும் கோபி எந்த குறையும் வச்சதில்லே.. சந்தோஷமாத்தானிருக்கேன். னா..”
விஜயா நீட்டிய காப்பியை வாங்கிக்கொண்ட சரோஜா அவள் பேச்சை நடுவில் நிறுத்திவிட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தன் கணவனின் புகைப்படத்தையே பார்ப்பதை கவனித்தாள். விஜயா முகத்தில் சட்டென்று வந்து நின்ற சோகம் சரோஜாவையும் பாதித்தது... இருவரும் மெளனமாய் கூடத்திலிருந்த இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.
“காபி ரொம்ப நல்லாயிருந்திச்சிங்க.. இப்படி ஒரு காப்பி குடிச்சி ரொம்ப நாளாச்சி..”
சரோஜாவை நோக்கித் திரும்பிய விஜயாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க.. “என்னங்க நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா..” என்று பதறினாள்.
“இல்லிங்க.. கல்யாண ன புதுசுல நான் என்ன சமையல் செய்தாலும் என் மாமியும் மாமனாரும் குத்தம் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க.. அப்பல்லாம் றுதலா என் கணவர் ‘அவங்க சொல்றதெல்லாம் வெறும் பொய் விஜி. இப்படியொரு சமையல எங்கப்பா சாப்பிட்டுருக்கவேமாட்டார்.. அம்மாவுக்கு பயந்துக்கிட்டு அப்படி சொல்றார். உன் காப்பி கூட எவ்வளவு ருசியாயிருக்கு தெரியுமா.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவார். அதை இப்போ நினைச்சுக்கிட்டேன்.. மனசு தாங்கலை.. குணத்துல அவரு தங்கம்ங்க.. அவர் வழியா எனக்கொரு குழந்தை மட்டும் பிறந்திருந்தா.. அத வச்சிக்கிட்டே கோபிக்கு பாரமாயில்லாம அங்கேயே இருந்திட்டிருப்பேன்..”
குரல் நடுங்க மேலே தொடர முடியாமல் தடுமாறியவளை நெருங்கி அவளுடைய கரங்களை தன் கரங்களில் பொதிந்துக்கொண்டு தரவாய் அவளைப் பார்த்து புன்னகைத்தாள் சரோஜா..
“இங்க பாருங்க விஜி. எதெது எப்படி, எப்போ நடக்கும்னு நமக்கு தெரியாது. நடந்தது, நடக்கப்போறது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.. நீங்க கோபிக்கு பாரமாயிருக்கீங்கன்னு அவர் என்கிட்ட ஒருமுறைக் கூட சொன்னது கிடையாது.. இந்த குடும்பம் தான் கோபியோட உயிர். இந்த குடும்பத்துக்காக எதையும் இழக்க கோபி தயாராயிருக்கார்..”
தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சரோஜாவைப் பார்த்து ‘நீ சொல்வது சரி’யென்பது போல் தலையை அசைத்தாள் விஜயா..
“நீங்க சொல்றது சரிதாங்க.. கோபிக்கு இந்த குடும்பத்துல அதுவும் தன் இரண்டு தங்கைகள் மேல அளவுகடந்த பிரியம்.. னா அதுவே அவனுடைய சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையாயிருச்சி.. அதான் எனக்கும் பாட்டிக்கும் ரொம்ப வருத்தம்.. நேத்து பாட்டி அழாதக் குறையா கெஞ்சியும் கோபி பிடிகுடுத்து பேசவேயில்லை.. ‘நம்ம குடும்பம் இருக்கற நிலையில அநியாயமா இன்னொரு பெண்ணோட வாழ்க்கையையும் நாம வீணடிச்சிரக்கூடாது பாட்டி’ன்னுட்டான்.”
சரோஜா என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனம் சாதிக்க விஜயா மேலே தொடர்ந்தாள்.
“உங்க மேல கோபி எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு எனக்கு நல்லாத் தெரியும்.. இப்போ உங்களுக்கு உங்க வீட்ல கல்யாண பேச்சு பேசறாங்கன்னு நேத்தைக்கித்தான் என்கிட்ட சொன்னான்.. பாட்டி உடனே, ‘என்னடா யோசிக்கறே..? அந்த பிள்ளையோட விலாசத்த கொண்டா நா போய் பேசறேன்’னு நின்னாங்க.. அண்ணா சம்மதிக்கவேயில்லை.. அவனுக்கு உங்களோட வாழ்க்கையை இந்த ஏழ்மை சூழ்நிலை வேஸ்டாக்கிருமோன்னுதான் கவலை..”
சரோஜாவின் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் அவளைப் பார்த்தாள் விஜயா..
“நீங்க என்ன நினைக்கறீங்க சரோஜா..?”
“எதைப் பத்தி?”
விஜயா என்ன சொல்வதென்று புரியாமல் அவளையே பார்த்தாள். சரோஜாவின் உணர்ச்சியற்ற குரல் அவளைக் குழப்பியது. ஒருவேளை கோபிதான் இவளைத் தவறாகப் புரிந்துக்கொண்டானோ? அல்லது வீட்டின் நிலையைப் பார்த்தப் பிறகு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாளோ..
“நீங்க கோபியை விரும்பறதைப் பத்தி...”
சரோஜா வியப்புடன் தன்னை நோக்கிப் பார்ப்பதை உணர்ந்த விஜயா குழப்பத்துடன் பார்வையத் தவிர்க்க பின் கட்டை நோக்கிப் பார்த்தாள்..
“நான் கோபியை விரும்பறேனா? யார் உங்களுக்கு சொன்னது? கோபியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவ்வளவுதான்.. ஆனா நீங்க நினைக்கற அர்த்தத்துல இல்ல..”
கண்களில் சட்டென்று துளித்து நின்ற கண்ணீரை மறைத்துக்கொண்டு அவளைப் பார்த்தாள் விஜயா..
“என்ன சொல்றீங்க..?”
சரோஜா எழுந்து நின்றாள். “சாரிங்க. இனிமேலும் இந்த பேச்சைத் தொடர்ந்தா சரியாயிருக்காதுன்னு நினக்கிறேன். பாட்டிக்கிட்ட சொல்லிருங்க. நான் வரேன்..”
திகைத்து நின்ற விஜயாவை சட்டைச் செய்யாமல் விறுவிறுவென்று வெளியேறி நடந்தாள் சரோஜா..
*******
“என்ன விஜி, என்ன நடந்தது? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு? அழுதியா? என்ன விஷயம் சொல்லு விஜி?”
“ஒண்ணுமில்லே. பழசெல்லாம் ஞாபகம் வந்தது.. அதான்.. அழுதிட்டேன்.. இப்போ பரவாயில்லை.. நீ போய் கை கால் கழுவிக்கிட்டு வந்து உக்காரு. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”

“அவ சும்மா சொல்றாடா.. அந்த சரோஜா வந்து போனதிலேருந்து இவ இப்படியேதான் உக்காந்திருக்கா..”
கோபி திரும்பி பாட்டியைப் பார்த்தான். “என்ன பாட்டி சொல்றீங்க? சரோஜா இங்க வந்தாங்களா? எப்ப? எதுக்கு?”
“எல்லாம் விஜயாவையே கேளு. இவ தான் அவளை ·போன்ல கூப்பிட்டு வரச்சொல்லியிருக்கா.. வந்தவ வர்றப்ப நல்லாத்தான்ப்பா பேசினா.. இவளுங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கட்டுமேன்னு நான் பின் கட்டுல போய் உக்காந்திருந்தேன். நீ போகும்போது சொல்லும்மான்னு சொன்னப்ப கூட சரின்னு சொன்ன பொண்ணு, சட்டுன்னு எங்கிட்ட சொல்லிக்காமயே போயிருக்கான்னா இங்க ஏதோ நடந்திருக்குது.. என்னன்னு கேட்டா சொல்லாம அப்பத்திலேருந்து அழுதுக்கிட்டேயிருக்காடா... நீயே கேளு.”
கோபி விஜயாவுக்கருகில் சென்று அமர்ந்தான். “என்ன விஜி நடந்தது? சரோஜா ஏதாவது கோபமா பேசிட்டாங்களா? நீ அவளை ஏன் நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டே..”
விஜயா கலங்கிய கண்களுடன் தன் சகோதரனை ஏறிட்டுப் பார்த்தாள். தன்னை விட இரண்டு வயது குறைந்தவன் குடும்ப பாரத்தை சுமந்து பாரம் தாளாமல் நாற்பது வயதைக்கடந்த தோற்றத்தில்... இவனுடைய இந்த கோலத்துக்கு தானும் ஒரு காரணம்தானே என்ற நினைக்கையில்.. பொங்கி வந்த துக்கத்தை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் இயலாமையை நினைத்து விம்மினாள்..
அவள் முகத்தைத் தன் பக்கமாய் திருப்பி அவளுடைய கண்ணீரைத் துடைத்தான் கோபி. “சரி விடுக்கா. சொல்ல முடியலைனா பரவாயில்லை. நாளைக்கு பார்க்கலாம். இப்போ போய் சாப்பிடு.. வயித்தைக் காயப் போடாதே.. போய் சாப்பாடு எடுத்து வை.. கை கால் கழுவிட்டு வரேன்..”
எழுந்திருக்க முயன்ற கோபியை கையைப் பிடித்து இருக்க வைத்தாள் விஜயா.. “கோபி நான் ஒண்ணு கேட்டா ஒளிக்காம பதில் சொல்வியா?”
கோபி அவள் கண்களைத் தவிர்க்க முகத்தைத் திருப்பிக்கொண்டான். “அது நீ கேக்கறத பொருத்திருக்கு..”
“நீ சரோஜாவை நேசிக்கறது அவளுக்கு தெரியுமா?”
கோபி வியப்புடன் தன் சகோதரியைப் பார்த்தான். “நான் அவங்களை நேசிக்கறேன்னு உனக்கு யார் சொன்னது?”
“என்ன சொல்றே கோபி? அப்ப நேத்து நீ சொன்னது?”
“நேத்து என்ன சொன்னேன்?”
விஜயா கோபியின் கரத்தைப் பிடித்து, “என் கைமேல கை வச்சி சொல்லு. நீ அவங்களை விரும்பலை?”
கோபி தன் கையை விஜயாவின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்து நின்றான். “விஜி இந்த பேச்சை இத்தோடு விட்டுடு. நீ இந்த விஷயத்தைக் கேட்கப் போய்தான் சரோஜா கோபத்தோட போயிருப்பாங்கன்னு நினக்கறேன். பாட்டி இதுல உங்களுக்கும் பங்குண்டா..”
பாட்டி அவர்களை நெருங்கி வந்தாள். “நீ நேத்து சொன்னதிலேருந்து நான்கூட அப்படித்தாண்டா நினைச்சிக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா..”
விஜயா பாட்டியைப் பார்த்தாள். “எனக்குத் தெரியும் பாட்டி. கோபியும் சரி, சரோஜாவும் சரி, ஒருத்தரையொருத்தர் மனசார விரும்புராங்க.. ஆனா ரெண்டுபேருமே நம்ம குடும்பத்துக்கு நல்லது செய்றதா நினைச்சி அவங்கள ஏமாத்திக்கிறாங்க.. உண்டா இல்லையான்னு நீங்களே கேளுங்க. நா இங்கருக்கறதுதான் இவங்க கல்யாணத்துக்கு தடையாயிருந்தா நா போயிடறேன் பாட்டி..”
பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு விம்மும் தன் தமக்கையை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் திகைத்து நின்றான் கோபி.
“என்னடா கோபி? இவ சொல்றது சரிதானா?”
“என்ன பாட்டி நீங்களும் இவளோட சேர்ந்துக்கிட்டு.. எனக்கு அப்படியெல்லாம் ஒரு எண்ணமுமில்லை.. சரோவுக்கும் இருக்காதுன்னு நினக்கறேன்..”
சரேலென்று பாட்டியின் மடியிலிருந்து நிமிர்ந்து இருவரையும் மாறி, மாறி பார்த்தாள் விஜயா.
“பாத்தீங்களா பாட்டி.. சரோவாம். அவ்வளவு நெருக்கம் இருக்குது இவங்களுக்குள்ள. நம்ம அம்மா அப்பாமேல சத்தியமா சொல்லு, கோபி. உங்களுக்குள்ள ஒண்ணுமில்லே..?”
கோபி என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாய் நின்றான். தங்களுக்குள் ஒன்றுமில்லையென்று சரோ சொல்லியிருக்கும் பட்சத்தில்.. அவளுடைய மனமாற்றதுக்கு காரணம் புரியாத நிலையில் தானும் அதே நிலையில் நிற்பதைத் தவிர வேறு வழியொன்றும் தெரியவைல்லை அவனுக்கு.. சரி.. சரோ ஏன் அப்படி சொன்னாள்? இன்று காலையில் கூட திருமணத்தைப் பற்றி ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று நிர்பந்தித்தாளே? ஒரு வேளை இந்த வீட்டின் அதிக பட்ச ஏழ்மை அவளையும் மாற்றிவிட்டதோ..! அவள் என்ன முடிவெடுத்திருந்தாலும் அவளை மீண்டும் சந்திக்கும்போது ஒன்றும் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தான்.
கோபி விஜயாவையும் பாட்டியையும் பார்த்தான். அவன் முகத்திலிருந்த இறுக்கமான உணர்ச்சி இந்த விஷயத்தை இனி இன்று பேசி பலனில்லை என்று உணர்ந்தாள் விஜயா.
“இங்க பாருங்க. சில விஷயங்களை விலாவாரியா பேச முடியாது. சரோஜா எப்ப அப்படியொரு எண்ணம் அவங்க மனசுல இல்லன்னு சொல்லிட்டாங்களோ நாமளும் இதை அத்தோட விட்டுரணும். இந்த விஷயத்தப் பத்தி இனியும் இந்த வீட்டுல பேசக்கூடாது. அக்கா நீ இப்படி அழுதுக்கிட்டிருந்தா படிக்கற பசங்களோட கவனம் திசை திரும்பிடும்.. இந்த விஷயத்தை இத்தோட விட்டுரு.. போய் சாப்பாடை எடுத்து வை.. போ.. பாட்டி நீங்க போய் படுங்க...”
அவர்களை மேலே பேச விடாமல் பின்கட்டு பக்கம் நடந்த கோபியைப் பார்த்து பெருமூச்சுவிட்டனர் விஜயாவும் பாட்டியும்.
“போடி. போய் சாப்பாட்டை எடுத்து வை.. இத்தோட இந்த விஷயத்தை விட்டுரு.. அவனா பேசினா பார்ப்போம்.. அந்த பொண்ணுக்கு உண்மையிலேயே இதுல விருப்பம் இல்லையோ என்னவோ...”
“இல்ல பாட்டி..” என வாதிட வந்தவளைப் பார்த்து முறைத்தாள் பாட்டி. “ஏய் போறும்டி.. அவன் தான் சொல்லிட்டானில்லே? விதின்னு இருந்தா நடக்கும்.. நீ போய் சாப்பாட்டைப் போடு..”
*****
ஆட்டோவில் ஏறி “ட்ரிப்ளிகேன் போங்க..” என்று அமர்ந்த சரோஜா அநாவசியமாய் ஒரு ஏழைக்குடும்பத்தை தவிக்க வைக்கிறோமோ என்று நினைத்து தன்னுடைய நடத்தைக்காக வெட்கப்பட்டாள்.
பாவம் விஜயா. என்ன நினைத்திருப்பாள்? னால் அவள்தான் கோபியின் தயக்கத்திற்கு காரணம் என்று அறிந்தால்..? பாவம் கோபி.. நேற்று அவன் காண்பித்த அந்த தயக்கம் வெகு நியாயமானதுதான் என்று விஜயாவை சந்தித்த பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.. இத்தனை இளம் வயதில் ஒரு தமக்கையை வைத்துக்கொண்டு தன்னுடைய திருமணத்தை எந்த ஒரு தம்பியாலும்.. அதுவும் கோபியைப் போன்ற ஒரு ணால் நினைத்துக்கூட பார்க்கவியலாது என்பது எத்தனைச் சரி!
அதைப் புரிந்துக்கொள்ளாமல் நேற்று அவனிடம் பூங்காவில் தான் நடந்துக்கொண்ட விதத்தை நினைத்து இப்போது வருந்தினாள்..
நேற்று அலுவலகம் முடிந்து கோபியும் அவளும் ஏற்கனவே எடுத்த முடிவின்படி அந்த பூங்காவில் சந்தித்தனர். அந்த பூங்கா அவர்களிருவருக்கும் பழக்கமானதுதான். அநேக முறை அவளுடைய வற்புறுத்தலுக்கு இசைந்து கோபி அவளுடன் வந்திருக்கிறான். னால் ஒருமு¨றைக் கூட இருவரும் சேர்ந்து வந்ததில்லை. அவள் அலுவலகத்திலிருந்து ட்டோவிலும் கோபி தன்னுடைய இருசக்கர வாகனத்திலும் தனித்தனியாய் கிளம்பி அந்த பூங்காவில் வந்து இணைவார்கள்.
அன்றும் அப்படித்தான்..
ஊரிலிருந்து வந்திருந்த தன் தந்தையின் கடிதத்தை அவனிடம் காண்பித்து அவனுடைய முடிவு என்னவென்பதை அறிந்துவிடவேண்டும் என்பதில் முனைப்பாயிருந்தாள் சரோஜா.
“கோபி. இனியும் என்னால காத்துக்கிட்டிருக்க முடியாதுன்னு உங்களுக்கு புரியணும்னுதான் அப்பாவோட லெட்டரை உங்களுக்கு காண்பிக்கிறேன். அப்பாவுக்கு நான் என்ன பதில் போடட்டும்?”
கோபி லெட்டரைப் படித்து முடித்துவிட்டு அவளிடம் திருப்பிக் கொடுத்தான். சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தான்.
“என்ன கோபி.. ஒண்ணும் பேசாம இருந்தா எப்படி?”
“நான் என்ன சொல்லணும்னு நீங்க நினைக்கறீங்க சரோ?”
“நம்ம கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லணும். அவ்வளவுதான். நான் நாளைக்கே ஊருக்கு போய் அம்மா,அப்பாக்கிட்ட விஷயத்தைச் சொல்லி தயார் பண்ணி வச்சிருவேன். நீங்களும் பாட்டியும் வந்து முறைப்படி பெண் கேட்கலாம். அப்புறம்..”
அவளை மேலே தொடரவிடாமல் கையை உயர்த்தி ‘போதும்’ என்பதுபோல் காண்பித்தான்.
“என்ன கோபி? உங்ககிட்ட வேற ஏதாவது ப்ளான் இருக்கா? சொல்லுங்க.. இதைவிட நல்லதா இருந்தா அதுபடியே செய்வோம்..”
“நீங்க ஒரு விஷயத்தை மறந்திட்டு பேசறீங்க, சரோ.”
“என்னது?”
“விஜயா வீட்ல இருக்கற விஷயம்..”
சரோஜா வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான் இவன்? திருமணத்தில் விருப்பமில்லையென்றா.. அல்லது இப்போது திருமணம் வேண்டாம் என்றா?..
“அது தெரிஞ்ச விஷயம்தானே கோபி. அத அப்பாகிட்ட பக்குவமா எடுத்து சொல்லிக்கறேன்.. நீங்க கவலைப்படாதீங்க..”
“அதுக்கில்ல சரோ...”
அவளுக்கு சட்டென்று எரிச்சல் வந்தது. என்ன ஆண்பிள்ளை இவன்? அலுவலக விஷயத்தில் அத்தனை தெளிவாய் இருக்கும் இவன் தன் சொந்த விஷயத்தில் முடிவெடுக்க இவ்வளவு தயங்குவதேன்!
“பின்னே? நீங்க சொல்ல வர்ற விஷயத்தைத் தெளிவா சொல்லுங்க கோபி. இன்னைக்கி ஒரு முடிவு தெரியாம நான் போகப் போறதில்லை.”
கோபிக்கும் எரிச்சலாய் வந்தது.. இந்த உறவின் அவசியத்தையே அவன் சந்தேகிக்கலானான். இவளிடம் எத்தனை முறை விஜயாவைப் பற்றி சொல்லியிருக்கிறான்? அவள் இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் அவனால் எப்படி தன் திருமணத்தைப் பற்றி சிந்திக்க முடியும்..? பாட்டியிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசத்தான் முடியுமா? பத்து வயதில் ஒன்றும், பதினெட்டு வயதில் ஒன்றுமாய் இரு தங்கைகள் வேறு.
இவளும் ஒரு பெண்தானே? ஏன் இவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை?
“நான் ஒண்ணு சொல்லட்டுமா சரோ?”
“என்ன சொல்லப் போறீங்க? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னுதானே? முடியாது கோபி. இனிமேலும் என்னால காத்துக்கிட்டிருக்க முடியும்னு தோணலை.. அப்பாவுக்கு நான் நாளைக்குள்ள லெட்டர் போடலைனா அவரே கிளம்பி வந்தாலும் வந்துருவாரு..”
“அதில்லை சரோ..”
“பின்னே? ஏன் தயங்குறீங்க, சொல்லுங்க?”
“நீங்க போயி உங்கப்பா பார்த்து வச்சிருக்கற பையனையே திருமணம் செஞ்சிக்கிட்டு...”
பீறி வந்த கோபத்தை அடக்க முடியாமல் தடுமாறினாள் சரோஜா.. “என்ன சொன்னீங்க? இன்னொரு ஒருதடவை சொல்லுங்க..?”
கோபி அவளுடைய கரங்களைப் பிடித்து மெள்ள அழுத்தினான். “கோபப்படாம சிந்திச்சிப் பாருங்க.. சின்ன வயசுல கணவனையிழந்து.. வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கற விஜயா இருக்கற எங்க வீட்டுல இன்னொரு கல்யாண மேள ஒலி கேட்கணும்னா அது அவளுடைய இரண்டாவது திருமணமாத்தானிருக்கணும் என்ற தீர்மானத்தோட இருக்கேன்.. னா நீங்க சொல்றது... அதை இப்போதைக்கு என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. ப்ளீஸ், தயவுசெய்து புரிஞ்சிக்குங்க..”
கோபியின் கைகளை உதறிவிட்டு சட்டென்று எழுந்து நின்றாள் சரோஜா..
குழப்பத்துடன் எழுந்து நின்ற கோபியை சட்டை செய்யாமல் பூங்கா வாயிலை நோக்கி நடக்கவாரம்பித்தாள்.
“சரோ. ப்ளீஸ்.. கோபிச்சிக்கிட்டு போறதினால இதுக்கு ஒரு முடிவு காண முடியாது. நில்லுங்க..”
தன் பின்னால் ஓடி வந்த கோபியை நோக்கி திரும்பாமல் “எனக்கு நீங்க நாளைக்குள்ள முடிவு சொல்லியாகணும்.. சொல்லிட்டேன்.” என்று கூறிவிட்டு அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் ஓட்டமும் நடையுமாய் விரைந்து வெளியேறினாள் சரோஜா.
***
நேற்று தான் நடந்துக்கொண்ட விதம் எத்தனை சுயநலமானது என்று இப்போது நினைத்தாலும் அவளுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.
அதே சமயம் கோபியுடனான இந்த உறவை வெறும் நட்பாக மட்டுமே இனியும் தன்னால் எடுத்துக்கொள்ளமுடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்த்தாள்.
‘எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம்ப்பா..’ என்றால் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்வார்களா? ‘ஏம்மா வேண்டாங்கறே..’ என்று கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாள்?
ஆனால்.. கோபியைத் தன்னால் மறக்க முடியுமா? காதலித்தவனை விட்டுவிட்டு இன்னொருவருடன் தன்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?
சரி.. அப்படியே முடிந்தாலும்.. கோபியும் அவளும் ஒரே அலுவலகத்தில் அதுவும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து.. தினமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு.. போலியான ஒரு வாழ்க்கையைத் தன்னால் வாழ முடியுமா?
சாலையின் இருமருங்கிலும் பின்னோக்கி வேகமாய் ஓடி மறைந்த வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் பார்த்த சரோஜா இதே போல் வாழ்க்கையில் நாம் சந்தித்த, பழகிய மனிதர்களும் வேண்டாம் என்று நினைக்கும்போது ஓடி மறைந்துவிட முடியுமென்றால்.. வாழ்க்கை எத்தனை எளிதாய் இருந்துவிடும் என்று நினைத்தாள்..!
“ட்ரிப்ளிகேன்ல எங்கம்மா போகணும்?” ஆட்டோ டிரைவரின் குரல் அவளுடைய நினைவுகளைக் கலைத்துவிட, “இங்கேயே இறங்கிக்கறேன்..” என்று ட்டோவிலிருந்து இறங்கி கால்போன போக்கில் நடந்து நிமிர்ந்து பார்த்தபோது நீண்டு விரிந்து கிடந்த கடற்கரை அவள் கண் முன்னே!
கோபியுடன் எத்தனையோ முறை வந்து காற்று வாங்கி சென்ற இடம் இது! இப்போது அவளுக்கு வேண்டாம் என்று தோன்றியது..
திரும்பி தன் ஹாஸ்டலை நோக்கி நடந்தாள்..
அடிவானத்தில் முழு வட்டமாய் விழுந்து கொண்டிருந்த சூரியனின் அழகைக் கண்டுகொள்ளாமல் நடைபாதைகளை அடைத்துக்கொண்டு கடை விரித்திருக்கும் சாலேயோர கடைகளினூடே இயந்திர மயமாக சென்ற சென்னைவாசிகளைக் காணும்போது அவளுக்கு வியப்பாய் இருந்தது.. என்ன மனிதர்கள் இவர்கள்?
பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள், மண்வாசனை நிறைந்த காற்று, மழைக்காலத்தில் இரு கரைகளையும் அணைத்துக்கொண்டு ஓடும் சிற்றாறு இவைகளுக்காக அவள் வெகுவாக இப்போது ஏங்கினாள்.. போதும் இந்த இயந்திர மயமான வாழ்க்கை..
தன்னால் இனியும் இந்த நகரத்தில் இருக்க முடியும் என்று தோணவில்லை..
‘நானும் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஊர் போய் சேர்ந்தாலென்ன?’ சட்டென்று தன் மனதில் தோன்றிய எண்ணம் அவளையே திடுக்கிட வைத்தது..!
அப்பா பார்த்துவச்சிருக்கற திருச்சி மாப்பிள்ளையையே கட்டிக்கிட்டு ஒரு போலியான வாழ்க்கையைத் துவங்கினாலென்ன? காலப்போக்கில் போலியையே நிஜமாக்கிக்கொள்ள முடியாதா?
முடியும்.. முடியவேண்டும்.. கோபிக்காக.. இத்தனை நாள் கிடைத்த அந்த புனிதமான நட்புக்காக... அந்த ஏழைக் குடும்பத்தின் நிம்மதிக்காக..
***
அன்று காலை கோபி அலுவலகத்திற்கு வரும் முன்னரே தான் சென்று ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடவேண்டுமென்ற முனைப்போடு சரியாய் காலை 9.00 மணிக்கெல்லாம் அலுவலகத்தையடைந்தாள்.
நல்ல வேளை அவள் சென்றடைந்தபோது தலைமை எழுத்தர் தர்மலிங்கம் சார் மட்டும்தான் இருக்கையிலிருந்தார். அலுவலகம் முழுவதும் வெறிச்சோடியிருந்தது. எல்லோரும் வர எப்படியும் 9.45 மணியாகிவிடும்.
“என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? இன்னைக்கி மழைதான். குடைக் கூட கொண்டுவரலை.” என்ற தர்மலிங்கத்தின் ஜோக்கை ரசிக்கக் கூடிய மனநிலையில் அவள் இல்லை. வெறுமனே ஒரு வரட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவர் மேசையின் முன்னாலிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தாள்.
தன்னுடன் கொண்டுவந்திருந்த ராஜிநாமா கடிதத்தைத் தயக்கத்துடன் அவர் முன் நீட்டினாள்.
“என்னம்மா இது? மறுபடியும் ஏதாவது லாங் லீவ் வேணுமா?” என்றவாறு கடிதத்தைத் திறந்து படித்தவர் ச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்.
“என்னம்மா ராஜிநாமா கடிதத்தோட வந்து நிக்கறீங்க? என்னாச்சி? ஏதாச்சும் ஊர்ல பிரச்சினையா?”
சரோஜா மெளனமாய் ‘இல்லை’ என்று தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்து நின்றாள்.
“சார் நான் கிளம்பறேன். என்னன்னு சொல்ல முடியாத சூழ்நிலை.. இன்னைக்கே ஊருக்கு கிளம்பறேன். என் வீட்டோட விலாசம் கடிதத்தில இருக்கு. எனக்கு சேர வேண்டிய சம்பளம், பி.எ·ப், எல்லாத்தையும் ஊருக்கே அனுப்பி வச்சிட்டா தேவலை.. ஊருக்கு போயிட்டு நான் ·போன்ல எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்.. நான் வரேன் சார்..”
தன்னுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் விடுவிடு வென்று சென்றவளை அவள் சென்று மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவர் ஒன்றும் புரியாமல் அவளுடைய ராஜிநாமா கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, ‘இந்த காலத்து பசங்களைப் புரிஞ்சிக்கவே முடியலை.. இவளுக்கும் அந்த கோபிக்கும் இடையில ஏதாவது மனஸ்தாபம்னு... என்னவோ நடந்திருக்குது.. அதான் இந்த பொண்ணு திடுதிடுப்புன்னு.. என்னத்தை சொல்ல..’ என்ற தனக்குத்தானே புலம்பிவிட்டு தன் வேலையைக் கவனிக்கலானார்.
*****
“கோபி..” என்ற தலைமை எழுத்தர் தர்மலிங்கத்தின் குரல் கேட்டு அலுவலகத்தில் தன் இருக்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோபி சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.
“என்ன சார்?”
“இங்க ஒரு நிமிஷம் வாங்க.. ஒரு முக்கியமான விஷயம்..”
கையிலிருந்த உணவு பையை தன் இருக்கையில் வைத்துவிட்டு தர்மலிங்கத்தின் இருக்கையருகில் சென்று அமராமல் நின்றான். அவனிருந்த மனநிலையில் யாருடனும் அநாவசியமாய் பேச விரும்பவில்லை..
தன் எதிரில் வந்து நின்ற கோபியை ஏறெடுத்துப் பார்த்த தர்மலிங்கம் இவனிடம் எப்படி சொல்வதென்று தயங்கினார். கோபிக்கும் சரோஜாவுக்கும் இடையிலிருந்த நெருக்கத்தை அந்த செக்ஷனில் எல்லோருமே அறிந்திருந்த ரகசியம். அப்படியிருக்க..
தன் மேசையிலிருந்த சரோஜாவின் ராஜிநாமா கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினார் ஒன்றும் பேசாமல்..
கடிதத்தை வாங்கிய கோபி முகத்தில் ஒரு சலனமுமில்லாமல் படித்து முடித்துவிட்டு திருப்பிக் கொடுத்தான். தன் இருக்கையில் சென்றமர்ந்தான். என்னாச்சி இவளுக்கு? வேலையை ஏன் ராஜிநாமா செய்யணும்? இப்போ அவளை எப்படி காண்டாக்ட் செய்யறது என்று அவனுடைய மனதின் ஒரு மூலையில் கேள்வி எழுந்தது.
அதே சமயம் எதுக்கு கோபி அவளை மறுபடியும் சந்திக்கணும்னு நினக்கிறே? அவளைத் திருமணம் பண்றதுனால உன் குடும்பத்துல பிரச்சினை வரும்னுதானே நேற்று வரை இந்த திருமணம் நடக்கக்கூடாதுன்னு நினைச்சே? ஒரு வேளை சரோவும் அதையேத்தான் நினைக்கிறாளோ என்னவோ.. அதுவும் நேற்று வீட்டுக்கு வந்து அங்கேயிருந்த சூழ்நிலையை முழுசும் பார்த்ததுக்கப்புறம் நான் சொன்னது சரிதான்னு புரிஞ்சிக்கிட்டிருப்பா. ஆனா ஒருத்தரை மனசார விரும்பிவிட்டு திருமணம் செஞ்சுக்க முடியாம எப்படி இனியும் ஒரே ·ஆபீஸ்ல வேலை செய்யறதுன்னு நினைச்சு ராஜிநாமா பண்ணிட்டாளோ என்னவோ.
அதுவுமில்லாம ·ஆபீஸ் துவங்கறதுக்கு முன்னாலேயே வந்து லெட்டரைக் குடுத்துட்டு போயிருக்கான்னா அலுவலகத்திலிருக்கற யாரையும் முக்கியமா என்னை சந்திக்க விருப்பமில்லைன்னுதானே அர்த்தம்? அப்புறம் எதுக்கு நாம அவளைச் சந்திக்கவேணும்? வேண்டாம்.. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கிட்டு சும்மா இருந்திருவோம். விஜயா இருக்கற கோலத்துல இந்த திருமணம் நடக்கறது நல்லதுக்கில்ல.. இதுதான் தெய்வ சங்கல்ப்பம்னு நினைச்சிக்கிட்டு இந்த பந்தத்தை விட்டுருவோம்.’
மனம் என்னதான் சமாதானம் சொன்னாலும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறினான் கோபி. ஒவ்வொரு முறையும் தொலைப்பேசி ஒலிக்கும்போதெல்லாம் அது அவளுடையதாக இருக்கக்கூடாதா என்று எதிர்பார்க்கவாரம்பித்தான்... னால் அன்று அலுவலகம் நேரம் முடியும் வரை அவளுடைய அழைப்பு வரவேயில்லை..
***
சரோஜா பயணம் செய்துக்கொண்டிருந்த பேருந்து தாம்பரத்தைக் கடந்து அவளுடைய சொந்த ஊர் நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது.
பயணச்சீட்டை நடத்துனர் சரிபார்த்தவுடன் சீட்டில் சாய்ந்து கண்களை மூடினாள்.
உங்க வீட்ல உங்கள நான் நேசிக்கலைன்னு பொய் சொன்னதுக்குக் காரணம் என்னங்கறதை உங்க கிட்ட சொல்லணும்னுதான் நான் சைப்பட்டேன் கோபி.. ஆனா.. உங்களைப் பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கில்லை ...
அதான்.. ஒரு கோழை மாதிரி.. ஒரு போலியான நிம்மதியோட.. ஒரு போலியான வாழ்க்கையை நோக்கி ஓடறேன்..
என்னை மன்னிச்சிருங்க கோபி...
அவளையுமறியாமல் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தாள்..
***
















No comments: