22.7.06

மு.கவுடன் ஒரு பேட்டி 2(நகைச்சுவை)

(தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

கவு: (செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இந்தாளுக்கு டெல்லியில வேற வேலையே இருக்காதாடா?

செந்: (சிரிக்கிறார்) சோனியாம்மா இந்தியாவுல இப்ப இல்ல போலருக்குண்ணே.. அதான்..

கவு: (வியப்புடன்) அட.. தோ பார்றா.. ஒனக்குக் கூட ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கு? டேய் நீ தேறிட்டடா..

செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..

கவு: (திரும்பி முறைக்கிறார்) டேய்.. அது பிம்பிள் இல்ல.. சிம்பிள்.. இதுக்குத்தான் சொல்றது ஒன்னெய மாதிரி ஆளுங்கள கொஞ்சம் தள்ளியே வச்சிருங்கணுங்கறது.. பொத்திக்கிட்டு வா.. அங்க அவருக்கு முன்னால வச்சிக்கிட்டு இந்த மாதிரி எதையாச்சும் ஒளறுனே மவனே அங்கயே பொலி போட்டுருவேன், சொல்லிட்டேன்.

(எதிரே தயாநிதி மாறன் அவர்களுக்காக முதலமைச்சரின் அறை வாசலில் காத்திருப்பது தெரிகிறது. கவுண்டர் அவசர, அவசரமாக அவரை நோக்கி செல்ல அவரை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்த செந்திலின் கையிலிருந்த மைக்கிலிருந்து நீளமாக தொங்கிய கேபிள்   ஹாலிலிருந்த பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்டு மலர்கொத்தை தாங்கி நின்ற பித்தளை பூச்செம்பில் சுற்றிக்கொள்ள அது அப்படியே சாய்ந்து அதிலிருந்த பூக்கொத்தும், தண்ணீரும் அறையெங்கும் சிதறுகிறது. பூச்செம்பு விழுந்த ஒலி வீடெங்கும் எதிரொலிக்க வாசலில் நின்ற கானா பூனா படை வீரர்கள் பதற்றத்துடன் செந்திலை நோக்கி விரைந்து நீட்டிய துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துக்கொள்ள சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாகிறது. தயாநிதி மாறனுடைய தோள்களைப் பற்றியவாறு அறையை விட்டு வெளியே வந்த முதலமைச்சர் கீழே விழுந்துகிடந்த பூச்செம்பையும் செந்திலை சுற்றி நின்ற வீரர்களையும் பார்த்து தனக்கே உரிய பாணியில் புன்னகை செய்கிறார்.)

மு.அ: என்னப்பா செந்தில்.. படத்துலன்னா இப்ப நீங்க செஞ்சத பார்த்து தியேட்டரே கைதட்டல்ல அதிர்ந்து போயிருக்கும்.. இது முதலமைச்சர் வீடாயிற்றே.. ஏதோ தற்கொலைப் படையோ என்று இவர்கள் பதறிப்போய்ட்டாங்க போலருக்கு.. (என்றவாறு சிரிக்க தயாநிதி மாறனும் அவருடன் ஹாலில் இருந்த மு.அவின் காரியதரிசி மற்றும் அதிகாரிகளும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர். வேறு வழியில்லாமல் கவுண்டரும், செந்திலும் சிரிக்க கானா பூனா படையினர் குழப்பத்துடன் வாசலை நோக்கி செல்கின்றனர்).

(மு.அ.வும் தயாநிதியும் திரும்பி அவருடைய அறைக்குள் திரும்ப கவுண்டர் செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. ஏண்டா நா போற எடத்துலல்லாம் வந்து மானத்த வாங்கறே? (பல்லைக் கடிக்கிறார்)

செந்: சரிண்ணே.. ஏதோ அவசரம்.. அதுக்காக போன வாரம் சொன்ன அதே டைலாக்கையே எடுத்துவிடாதீங்க.. போங்க.. அய்யா காத்துக்கிட்டிருக்காருல்லே.. (அவர் கவுண்டரை முந்திக்கொண்டு செல்ல முயல.. கவுண்டர் அவரை பிடித்து நிறுத்துகிறார்..)

கவு: டேய்.. நிதானமா போடா.. நீ பாட்டுக்கு அவர் மேலயே போய் விழுந்துருவ போலருக்கு..

மு.அ:(புன்னகையுடன் அவர்களை அமருமாறு பணிக்கிறார்) என்ன கவுண்டர் இவரோட ஜோடியா வந்துருக்கீங்க? நேத்து ஒங்க பேப்பர்லருந்து பேட்டிக்கு ரெண்டு பேர் வராங்கன்னுதான் சொன்னதா நினைவு.. ஆனா அது நீங்களாருப்பீங்கன்னு நான் நெனச்சுக்கூட பாக்கல.. பகுதி நேர பணியாக இதை செய்கிறீர்களோ?

கவு: (தனக்குள்) ஆம்மா.. முழு நேர பணியே இதுதான்னு இவருக்கு தெரியாது போலருக்கு.. (அசடு வழிகிறார்) இல்லீங்கய்யா.. இந்த மாதிரி நட்சத்திர பேட்டிங்களுக்கு மட்டுந்தான் போறது.. ஒங்க பேட்டிதான் எங்களுக்கு மொதல்..

செந்: (பதற்றத்துடன்) எண்ணே.. போன வாரம் மேடத்த புடிச்சோமே..

கவு: (அவரைப் பார்த்து பல்லை நறநறவென கடிக்கிறார்) அடிக்குரலில் டேய்.. சும்மா பொத்திக்கிட்டு இருன்னு சொன்னேன்லே..

(மு.அ. புன்னகையுடன் தன் பேரனை பார்க்கிறார். அவரும் சிரிக்கிறார்)

கவு: (அசடு வழிந்தவாறு) இந்த மாதிரிதாங்க. சமயா சமயம் தெரியாம ஒளறிக்கிட்டே இருப்பான்.. நீங்க கண்டுக்குறாதீங்க..

(மு.அ. சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல் தலையை அசைக்கிறார். பேட்டி துவங்கட்டும் என்பதுபோல் சைகை காட்டுகிறார். செந்தில் எழுந்து அவரையும் மாறனையும் சேர்த்து புகைப்படம் எடுக்க போஸ் தேட.. கவுண்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு துவங்குகிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா ஒங்களுக்கு நாங்க எந்த பேப்பர்லருந்து வரோம்னு தெரியும்லயா?

மு.அ: (ஆம் என்றவாறு தலையை அசைக்கிறார்) நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைதானே? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார். அதற்காக உங்களுடைய பத்திரிகையை மணக்கும் என்று சொல்ல மாட்டேன்.. அதனுடைய துர்நாற்றம்தான் தமிழகமெங்கும் வீசுகிறதே.. ஒரு நாளாவது என்னுடைய பேட்டி அதில் வந்து மணம் வீசட்டுமே என்றுதான் ஒத்துக்கொண்டேன். (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஒலிப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்துள்ளீர்களா?

கவு: ஆமாங்கய்யா.. டேய், அத அய்யாக்கிட்ட காண்பியேண்டா.. (செந்தில் தன் ஜோல்னா பையிலிருந்த பழைய காலத்து ரெக்கார்டரை எடுத்து தன் மடியில் வைத்து ஆன் செய்ய அதிலிருந்து கரமுரா சப்தத்துடன் முந்தைய வாரம் பதிவு செய்திருந்த ஜெ. மேடத்தின் குரல் கேட்கிறது. அதில் அவர் மு.க. வுக்கு எதிராக சற்றே கேவலமான வார்த்தைகளால் கூறியிருந்த ஒரு சில கருத்துகள் ஒலிக்க கவுண்டர் பாய்ந்து சென்று அதை நிறுத்திவிட்டு அடிக்குரலில் ‘டேய்.. --------------- தலையா.. என்னைய அடிவாங்க வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டியா? வர்றப்போதே இந்த சனியன மாத்திருக்கக் கூடாது..?’ என்கிறார்)

(ஜெ. மேடத்தின் வார்த்தைகளை கேட்டதும் கோபத்தில் சிவந்துபோன முதலமைச்சரின் முகம் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு வருகிறது. ஆனால் மாறனின் சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவக்க கவுண்டர் கதிகலங்கிப் போகிறார்.)

மு.க: (பெருந்தன்மையுடன் மாறனை பார்க்கிறார்) போகட்டும் விடு. இதைத்தான் நாற்றம் என்று சொன்னேன்.. எ.க தலைவி இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) கவுண்டரே.. நா புதுசா ஒரு பாக்கெட் டேப் ரெக்கார்டரை தரேன்.. அதுல ரெக்கார்ட் செஞ்சி ஒங்க எடிட்டர் கிட்ட குடுத்து அசத்துங்க.. (மாறனைப் பார்க்கிறார்) தம்பி சென்ற முறை டெல்லியிலிருந்து கொண்டுவந்தாயே அந்த கையடக்க ஒலிப்பதிவியை இவரிடம் கொண்டுவந்து கொடு..

கவு:(தனக்குள்) அதென்ன பதிவி.. கிதிவின்னுட்டு.. எல்லாத்துக்கும் ஒரு தமிழ் பேர் வச்சிருவாங்கய்யா.  வாய்லயே நொளையமட்டேங்குது

மு.அ: (சிரிக்கிறார்) அய்யா கவுண்டரே.. தமிழை செம்மொழியாக்க நாம் என்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியாது.. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் நம் தாரகை மந்திரம். ஆகவே டேப் ரெக்கார்டரை ஒலிப்பதிவி என்பதுதான் சரி.. நீங்கள் கேளுங்கள்.. (மாறன் தான் கொண்டுவந்த ரெக்கார்டரை குனிந்து மு.க. வின் வாய்க்கு சற்று முன்பு பிடித்துக்கொள்கிறார்)

கவு: (தயக்கத்துடன்) அய்யா.. நேத்தைக்கு நம்ம பேப்பர்ல ஒரு நியூஸ் பாத்தேங்க.. அதப்பத்தி ஒங்கக்கிட்ட ரெண்டு வார்த்தை...

மு.க: (புன்னகையுடன்) தயங்காமல் கேளுங்கள்..

கவு: ஒங்க உத்தரவின்பேர்ல அமைச்சரவை கூட்டம் நடத்தற எடத்த வாஸ்த்து காரணமா மாத்தனீங்கன்னு மேடம் குத்தம் சொல்லியிருக்காங்களே அதப்பத்தி..

(முதலமைச்சர் பதிலளிக்க முனைவதற்குள் மாறன் குறுக்கிட்டு): யார்யா மேடம்? (முதலமைச்சர் உடனே அவரை அமர்த்துகிறார்)

மு.க: (மாறனைக் காட்டி) இள ரத்தம் அல்லவா? அவர் கூறியதை எழுதிவிடாதீர்கள். இதற்கு நான் நேற்றே பதிலளித்துவிட்டேன்.. இன்றைய தினத்தாள்களிலும் வந்திருக்கின்றன.. இருந்தாலும் கூறுகிறேன். வாஸ்து என்பதெல்லாம் உங்கள் மேடத்திற்குத்தான் அத்துப்படி.. கற்புக்கரசி கண்ணகியின் சிலையையே அடியோடு பெயர்த்தெடுத்தவராயிற்றே.. நான் செய்ததெல்லாம் வெறும் இட வசதிக்காகவே என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்ற கொள்கையுடையவரல்லாவா? அவர் அப்படித்தான் பேசுவார். அடுத்த கேள்வி..

(கவுண்டர் தனக்கே உரிய பாணியில் நக்கலாக தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார். மாறன் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும் கோபத்துடன் அவரை முறைக்க முதலமைச்சர் பதற்றமடையாமல் அதே மாறாத புன்னகையுடன் பதிலளிக்கிறார். செந்தில் தலையிலடித்துக்கொண்டு கவுண்டரின் கேள்விகளையும் முதலமைச்சரின் பதில்களையும் தான் கொண்டுவந்திருந்த பேடில் (pad) அவருக்கே விளங்காதவகையில் கிறுக்கிவைக்கிறார்)

(இறுதியில் வழக்கம் போலவே கவுண்டர் செந்திலைப் பார்க்கிறார்.)

கவு: டேய்.. நீ ஏதாச்சும் கேக்கணுமாடா?

செந்: (வெளியே ஓடுவதற்கு தயாராக எழுந்து நின்றுகொள்கிறார்) அய்யா.. நான் கொஞ்சம் எடக்கு மடக்காத்தான் கேப்பேன்.. இவர நெனச்சாத்தான் பயமாருக்கு அதான்.. (மாறனை காட்டுகிறார்)

(முதலமைச்சர் புன்னகையுடன் மாறனை பார்த்து உள்ளே போ என்று சைகை காட்டுகிறார். ஆனால் அவர் நகர்வதாய் தெரியவில்லை. ஆகவே நிலமையை சமாளிக்க சாதுரியமாக முதலமைச்சர் செந்திலைப் பார்க்கிறார்): கேளுங்க செந்தில். ஆனா அதுக்கு முன்னால அந்த வாழப்பழ காட்சியை கொஞ்சம் நீங்க ரெண்டு பேரும் நடிச்சி காட்டணும்.. அதுக்கப்புறந்தான் ஒங்க கேள்விக்கு பதில்.. என்ன கவுண்டரே?

கவு: (தனக்குள்) ஆம்மா, ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் இவர் சொன்ன பதிலுங்கள கொண்டு கொடுத்தாலே எடிட்டர் என்ன பண்ணுவார்னு தெரியல.. இதுல இது வேறயா... (முதலமைச்சர் தன்னையே பார்ப்பது தெரிய.. சமாளித்துக்கொண்டு பல்லை காட்டுகிறார்) என்னய்யா.. அதுவா? செஞ்சிரலாங்கய்யா.. (செந்திலை பார்த்து முறைக்கிறார்) டேய்.. என்ன டைலாக்கெல்லாம் ஞாபகம் இருக்கா.. இங்க ப்ரம்டிங்லாம் கெடைக்காதுறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே.. அதான் கிட்னிய தட்டிவிட்டுக்கிட்டேருக்கேன்லே.. (தலையை தட்டிக்கொள்கிறார்)

(விவரம் புரியாமல் முதலமைச்சரும் மாறனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.. மாறன் புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.. பிறகு ‘’மூளை’ என்று வாயசைக்க முதலமைச்சரும் புரிந்துக்கொண்டு வாய்விட்டு சிரிக்கிறார். கவுண்டரின் முகம் அஷ்டகோணலாகிறது. செந்திலைப் பார்த்து முறைத்தவாறு தன் தலையில் அடித்துக்கொள்கிறார்)

செந்: என்னண்ணே.. ஒங்களுக்கும் கிட்னி ப்ராப்ளமா?

(முதலமைச்சர், மாறன் இருவரும் வாய்விட்டு உரக்க சிரிக்க வீட்டினுள் இருந்த தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரும், வாயிலிலிருந்த காரியதரிசியும் அதிகாரிகளும் ஓடிவந்து மு.க. மற்றும் மாறனின் சிரிப்பின் அர்த்தம் விளங்காமல் கவுண்டர் மற்றும் செந்தில் ஜோடியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து ஏதோ காமடி செய்திருக்கிறார்கள் என்பதுமட்டும் விளங்க அவர்களும் உரக்க சிரிக்க செந்தில் கேட்கவந்த கேள்வியை மறந்து போகிறார்.)

கவு: (தனக்குள்) அப்பாடா. எப்படியோ போன வாரம் மாதிரி இவன் எதையாச்சும் எடக்கு மடக்கா கேட்டு அடிவாங்காம தப்பிச்சோமே.. இத்தோட போயிருவோம். (செந்திலைப் பார்த்து வாடா போயிரலாம் என்பதுபோல் சைகைக் காட்டுகிறார். அவரும் புரிந்துக்கொண்டு தன்னுடன் கொண்டுவந்திருந்த சகலதையும் அள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்கிறார்)

(மாறன் தன் கையில் இருந்த ஒலிப்பதிவியை அணைத்து கவுண்டரிடம் நீட்டுகிறார். ஏதோ தீயை தொட்டதுபோல் பின்வாங்குகிறார் கவுண்டர்)

மு.அ: (புன் சிரிப்புடன்) என்ன கவுண்டரே. ஒலிப்பதிவி வேண்டாமா? பிறகு என்ன எழுதுவீர்கள்?

கவு: (கும்பிடுகிறார்) அய்யா.. வேணாம்யா.. நாங்களே எதையாச்சும் எங்க பாணியில எழுதிக்கறோம்.. நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லி வச்சிருக்கீங்க.. அத கொண்டு போனேன்னு வச்சிக்குங்க.. நம்ம கதி அதோகதிதான்.. ஆள விடுங்க.. டேய் வாடா.. போன வாரம் மாதிரி ஆகித்தொலையப் போவுது..

மு.அ: (புன்சிரிப்புடன்) அதென்ன கவுண்டரே போன வாரம்? இதுதான் முதல் நட்சத்திர பேட்டின்னீங்க?

கவு: (அவசரமாக நடையைக் கட்டுகிறார்) வாய் தவறி வந்திருச்சிய்யா.. ஆள விடுங்க.. நாங்க அம்பேல்.. (அவருடைய ஒட்டத்தைக் கண்டு வாசலில் நின்றிருந்த கானா பூனா படையினர் பதறியடித்து அவரை வழிமறிக்க மாறன் புன்சிரிப்புடன் அவர்களை விட்டுவிடுங்கள் என்று சைகை காட்டுகிறார்).

(இருவரும் தட்டு தடுமாறி அவர்களுடைய வாகனத்தில் ஏறி அமர வாகனம் வேகமெடுத்து பறக்கிறது. மாறனும் உடனிருந்தவர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கலைந்து செல்கின்றனர்)

(அடுத்த நாள் காலை நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியாயிருந்த தன்னுடைய பேட்டியை படித்து வாய்விட்டு சிரிக்கிறார் முதலமைச்சர். பத்திரிகையலுவலகத்திலோ போயஸ் கார்டனிலிருந்து சற்று முன் தொலைப்பேசியில் வந்த கோபக்கணைகளில் காயமுற்று நொந்துபோய் தலையை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் எடிட்டர் . சட்டசபையில் அ.இ.அ.தி.மு.கவினர்  இதை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சியினரின் பார்வையிலிருந்து  மறைக்கப்பட்ட இருக்கையில் இருக்க வேண்டிவந்த தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு மவுன சிலையாய் அமர்ந்திருக்கிறார் எ.க. தலைவி..)

நிறைவு.

6 comments:

கைப்புள்ள said...

//செந்: (பெருந்தன்மையுடன்) என்னண்ணே நீங்க.. கிட்னியில்லாத ஒங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கறப்போ.. எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..//

செந்தில் வழக்கமா பேசற மாதிரி இந்த டயலாக்கைப் பேசியிருந்தா எப்படி இருக்கும்னு நெனச்சிப் பாத்தேன். வாய் விட்டு சிரிச்சேன். நல்ல காமெடி. முதலமைச்சர் வீடா இல்லாம இருந்திருந்தா கண்டிப்பா கவுண்டர் ரெண்டு எத்து எத்தியிருப்பாரு இல்லீங்களா?
:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கைப்புள்ள,

எனக்கு.. இதெல்லாம் வெரி பிம்பிள்ணே..//

செந்தில் வழக்கமா பேசற மாதிரி இந்த டயலாக்கைப் பேசியிருந்தா எப்படி இருக்கும்னு நெனச்சிப் பாத்தேன்.//

ஆமாம் ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு தோள் ரெண்டையும் குலுக்கி ஒரு அசட்டு சிரிப்போட..

கவுண்டர் செந்தில் காமடியில நிறைய உடல் அசைவுகள் இருக்கும். அத கற்பனையில கொண்டு வந்து படிச்சாத்தான் நல்லாருக்கும்..

பார்த்தி வடிவேலு ஜோடின்னா வசனத்த படிச்சாலே சிரிப்பு வந்துரும்..

முதலமைச்சர் வீடா இல்லாம இருந்திருந்தா கண்டிப்பா கவுண்டர் ரெண்டு எத்து எத்தியிருப்பாரு இல்லீங்களா?//

பின்னே. செந்திலோட நல்ல நேரம்.. தப்பிச்சார்:)

கோவி.கண்ணன் said...

..ம் இதே முதலமைச்சர் பதவியில் ஜெ இருந்திருந்தால் கவுண்டரரின் எடக்கு மடக்குக்கு கேள்விகளுக்கு என்கவுன்டர் ஆகியிருப்பார் :)))

நல்ல காமடி :)))

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கண்ணன்,

இதே முதலமைச்சர் பதவியில் ஜெ இருந்திருந்தால் கவுண்டரரின் எடக்கு மடக்குக்கு கேள்விகளுக்கு என்கவுன்டர் ஆகியிருப்பார் :)))//

நிச்சயமா:)

siva gnanamji(#18100882083107547329) said...

அவரு அவர் கவுண்டருங்கோ;
எப்பிடி என் கவுண்டர் ஆகமுடியும்

G.Ragavan said...

ஆகா....கிட்னி சட்னியாகம வெளிய வந்தாங்களே....அதுக்குச் சந்தோசப் பட வேண்டியதுதான்.

பிம்பிள் ஜோக்கு சூப்பர். அதே மாதிரி தயாநிதியைச் செந்தில் கிண்டலடிக்கும் காட்சியும் சூப்பர்.

நன்றாக இருந்தது. முகவைக் கிண்டல் செய்யாமல் பதிவை முடித்து விட்டீர்கள். ம்ம்ம்ம்.