'ஏய் ஜோதி, என்ன டல்லாருக்கே?'
ஜோதிகா தன் தோழி விஜியைப் பார்த்தாள். 'பின்னெ என்னடி? நா எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா? ப்ளஸ் டூவுல என்னெ விட கம்மியா வாங்குனவளுங்களவிட எனக்கு என்ட்ரஸ்சுல கம்மியா போயிருச்சுடி.. அத நினைச்சாத்தான் மனசு ஆறல...'
'சரிடி... அதான் தெரியுதே.. எனக்குந்தா கம்மியாயிருச்சி.. அத விடு.. எந்த காலேஜ்னு டிசைட் பண்ணிட்டியா?'
ஜோதிகா பதிலளிக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிய நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டிருந்த படிவத்தை வாசிப்பதில் ஈடுபட்டாள்.
'என்னடி... நா கேட்டது காதுல விழுந்துச்சா இல்லையா... நீ பாட்டுக்கு அத படிச்சிக்கிட்டு இருக்கே?'
ஜோதிகா நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தாள் எரிச்சலுடன். அவர்கள் இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அவள் எப்போதுமே தன்னைவிடவும் சுமார்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் எதிர்ப்பார்த்திருந்ததை விடவும் குறைவாக வாங்க அவளும் இப்போது தனக்கு நிகராக ஆகிவிட்டாளே என்ற எரிச்சல். போறாததற்கு விஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள்... எங்கே அந்த அடிப்படையில் அவளுக்கு தனக்கும் முன்பாக கவுன்சிலிங் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது..
'ஏய் ஜோதி... இங்கதா இருக்கியா? இல்லே...'
விஜியின் குரலிலிருந்த கேலி ஜோதிகாவை மேலும் எரிச்சல்கொள்ள செய்தது. ஆயினும் கோபப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தாள். 'இல்லடி... Allocation of seatsனு போட்டிருக்குல்ல? அத படிச்சிக்கிட்டு இருந்தேன்....'
விஜி என்கிற விஜயாவுக்கு புரிந்தது. ஒனக்கு இது வேணும்டி.. ப்ளஸ் டூவுல ஒரு அம்பது மார்க் ஜாஸ்தி வாங்கிட்டேன்னு என்னமா அல்ட்டிக்கினே. எல்லாம் மக்கப் பண்ணி வாங்குனதுதானே.. எண்ட்ரன்ஸ்ல அது பலிக்கல... மவளே இரு... எனக்கு மட்டும் ஒனக்கு முன்னால கவுன்சிலிங் வரட்டும்... ஒன்னெ விட நல்ல காலேஜ்ல சீட் வாங்கி காட்டறேன்...
'எங்க ஒனக்கு முன்னால எனக்கு கவுன்சிலிங் வந்துருமோன்னு பயப்படறே? அதானே?'
ஜோதிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. 'ஆமாடி... அதான்.. இப்ப என்னங்கறே?' என்றாள் எரிச்சலுடன்.
இதான்.. இதான் வேணும்...மவள நீ வயிறெறியணும்... 'ஏய்.. எதுக்குடி கோபப்படறே? நீயும் என்னெ மாதிரி பேக்வர்ட் காஸ்ட்தான்னு நீயே சொல்லியிருக்கே... ஆனா ஸ்கூல் சேர்றப்ப என்ன கேஸ்ட்டுன்னு போட்டுக்காதது ஒங்கப்பா செஞ்ச தப்பு... அதுக்கு என்னைய எதுக்கு கோச்சிக்கறே?'
ச்சை... அப்பா செஞ்ச தப்புக்கு இவ கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குதே என்று மனதுக்குள் நொந்துப்போனாள்... அப்பா எப்பவுமே இப்படித்தான். கேட்டா பெருசா லெக்சர் அடிப்பார். 'சாதிய காட்டி முன்னுக்கு வரணும்னு நினைக்கறதே கேவலம். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி, மார்க் வாங்கி காலேஜ்ல சீட் புடிக்கணும். அத விட்டுட்டு நா கீழ்சாதிக்காரன்னு சொல்லிக்கிட்டு நிக்கக் கூடாது. அது நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல... ஏழைங்களுக்கு.. புரிஞ்சிதா?' என்று ஒருமுறை தன்னையும் தன் அண்ணாவையும் அப்பா எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
இதோ இருக்காளே விஜி, இவ மட்டும் என்ன ஏழையா? இவ போய் வர்றதுக்குன்னே தனியா ஒரு ஸ்கூட்டி.. குடும்பத்தோட போறதுக்கு ஒரு கார்.. அப்பா சம்பாதிக்கார், அண்ணா இவள மாதிரியே சாதிய காட்டி எஞ்சினியாராகி இப்ப வேலை பாக்கான்... வீட்டுல இவளுக்குன்னு ஒரு பி.சி.. இண்டெர் நெட்...
ஹூம்... நமக்குன்னு வந்து வாச்ச அப்பா இப்படி... நேர்மை திலகம்னு நினைப்பு... இப்ப அனுபவிக்கறது யாரு, நாந்தானே?
'ஏய் என்னடி ஜோதி... நா சொன்னது சரிதானே? பதிலையே காணம்?'
இனியும் மேற்கொண்டு இவளிடம் விவாதத்தை வளர்ப்பதில் பயனில்லை என்று நினைத்தாள் ஜோதிகா.. 'சாரிடி...' என்றாள். 'சரி... அத விடு... எந்த காலேஜ்ல சேர்றதுன்னு ஏதாச்சும் டிசைட் பண்ணியா? யூனிவர்சிட்டி சைட்டுல லிஸ்ட் இருக்காமே.. ஒங்க வீட்ல நெட் இருக்குல்ல... பாத்தியா?'
அப்படி வா வழிக்கி இன்றைக்கு இது போதும் என்ற நினைப்பில் விஜி லேசாக புன்னகைத்தாள்...'லிஸ்ட்ட பாத்தேன்... ஆனா நம்மள கவுன்சிலிங்கு கூப்டறதுக்குள்ள நல்ல காலேஜ் எல்லாம் போயிரும் போலருக்கு... ஃபர்ஸ்ட் அம்பது ராங்ல இருக்கற காலேஜ்ங்களோட வெப் சைட் அட்றஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.. அதுல எதுலயாச்சும் கிடைச்சிரணும்.. இல்லன்னா அவ்வளவுதான்..'
முதல் அம்பது ராங்குக்குள்ள கூட கிடைக்காதா என்று மனதுக்குள் நினைத்து சோர்ந்துப் போனாள் ஜோதிகா... விஜிக்கும் தனக்கும் ஒரே மதிப்பெண்கள் இருக்கின்ற நிலையில் அவள் எம்பிசி என்பதால் அவளுக்கு எப்படியும் தன்னைவிட இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்துவிடும் என்று நினைத்தாள். அப்படியானால் தன்னைவிடவும் நல்ல கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்துவிடுமோ என்று நினைத்தாள்.. 'அந்த லிஸ்ட்லருந்து நீ ஏதாச்சும் செலக்ட் பண்ணி வச்சிருப்பியே... சொல்லேன்...'
விஜி சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தாள். ஆனால் ஜோதிகாவும் அவள் சேரவிருக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தால் தனக்கும் நல்லதுதானே என்று நினைத்தாள்... எண்ட்ரன்ஸ்ல என்னளவுக்கே எடுத்திருந்தாலும் க்ளாஸ்ல நமக்கு முன்னால ரேங்க் எடுக்கறவளாச்சே... நாம செலக்ட் செஞ்சி வச்சிருக்கற ரெண்டு மூனு காலேஜஸ் பேர சொல்றதால நமக்கென்ன நஷ்டம்? அவளுக்கு கவுன்சிலிங் வர்ற வரைக்கும் சீட்
இருந்தா கெடச்சிட்டுப் போவுது?
'ஆமாடி அதுலருந்து மூனு காலேஜஸ் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்...' என்றவள் தான் குறித்து வைத்திருந்த கல்லூரிகளின் பெயர்களை நினைவிலிருந்து சொல்ல ஜோதிகா குறித்துக்கொண்டாள்...
'என்னடி எல்லாமே ஒரே பேரா இருக்கு?'
'ஆமாடி... எல்லாம் ஒரே க்ரூப்போடதுதானாம்... எங்கப்பா சொன்னார்...' என்றாள் விஜி புன்னகையுடன்...'வெப் சைட்டுங்கள பாத்ததோட எங்கப்பா நேர்லயே போய் பாத்துட்டு வந்தார். மூனு காலேஜும் பக்கத்து பக்கத்து காம்பவுண்ட்ல இருக்காம். எஞ்சினீயரிங்ல எல்லா ப்ராஞ்சஸ்லயும் நிறைய சீட்டுங்க இருக்குதாம்... அதோட மொத்த சீட்டுல எழுபது பர்செண்ட் கவுன்சிலிங் வழியாத்தான் செலக்ட் பண்றாங்களாம்... போன ரெண்டு வருசமும் எல்லா சீட்டும் ஃபில்லாயிருக்கு... அதுல ஃபர்ஸ்ட்ல இருக்குதே வேல் முருகன்... அந்த காலேஜ்ல பக்காவா கம்ப்யூட்டர் லேப் எல்லாம் இருக்காம். எங்கப்பாவோட ஃப்ரெண்ட் பையன் ஒருத்தன் படிக்கானாம்... மெட்றாஸ்ல எல்லா ரூட்டுக்கும் பஸ்சும் இருக்காம்... அந்த க்ரூப்லருக்கற எந்த காலேஜ்ல சீட் இருந்தாலும் எடுத்துரலாம்னு சொன்னார் எங்கப்பா... ஒங்கப்பாவையும் வேணும்னா போய் பாக்க சொல்லு...'
'பயங்கரமான ஆளுடி நீ... இவ்வளவு வேலையும் பாத்து வச்சிருக்கியா?' என்றாள் ஜோதிகா உண்மையான ஆச்சரியத்துடன்..
விஜி பெருமையுடன் புன்னகைத்தாள்... ஒனக்கு உருப்போடத்தாண்டி தெரியும்... நா அப்படியில்ல... 'சரிடி... நா வரேன்... லேட்டாயிருச்சி...' என்றாள் மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல். 'அப்ளிகேஷன நேர்ல கொண்டு வந்து குடுக்கப் போறியா இல்ல தபால்ல அனுப்பிருவியா?'
'நான் நேர்லதான் கொண்டு வந்து குடுப்பேன்... நீ?'
'நானுந்தான்... தபால்ல அனுப்பி கிடைக்கலன்னா?'
'சரி... என்னைக்கி வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்றேன்... ஒன்னாவே குடுக்கலாம்.. சரியா?'
'சரி... பை..' என்றவாறு விஜி தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்ப மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றுவிட்டு சாலையைக் கடந்து எதிர்புறத்திலிருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள் ஜோதிகா...
தொடரும்..
4 comments:
உரிமை வேறு;கொள்கை வேறு
இவையிரண்டையும் குழப்பிக்கொண்டார்,ஜோதியின் அப்பா-
பாதிக்கப்படுவது ஜோதி!
(காந்தியடிகளின் தலைமகன் நினைவுக்கு வருகின்றாரா?)
வாங்க ஜி!
காந்தியடிகளின் தலைமகன் நினைவுக்கு வருகின்றாரா?//
இதென்ன ஜி! சொல்லுங்களேன், கேப்போம்.
காந்தியடிகளின் முதல் மகன் (ஹரிலால் ?)அவருக்கு தமது ஆஸ்ரம்த்தில் வழங்கப்பட்ட கல்வியே வழங்கப்பட்டது.அங்கீகரிக்கப்பட்ட பள்ளிச் சான்றிதழ் இல்லை.சிலகாலத்திற்குப்பின் தந்தையுட முரண்பட்டு வெளியேறினார்
குடும்பவாழ்வும் சோபிக்கவில்லை.அவருக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்புமில்லை
என்று காந்தியடிகள் அறிவித்தார்(குற்றநடவடிக்கைகள் ?)
ஒருமுறை,காந்தியடிகளுக்கும் கஸ்தூர்பாவுக்கும் ரயில்நிலையமொன்றில் வரவேற்பு அளிக்கபட்டபொழுது,கூடியிருந்தோர் அனைவரும் 'பாபுவுக்கு ஜே' என்று
முழங்கியபொழுது,ஒற்றைக்குரல்
'பாவுக்கு ஜே'என்று(மகன்) எழும்பியதாம்.கசங்கிய உடையில் வந்த அவர் தன் தாய்க்கு, தன்னால் முடிந்தது என்று ஆரஞ்சுப்பழம் ஒன்றை அளித்தாராம்.
புறக்கணிக்கப்பட்டவராகவே அவர் இறந்தார்
(படிக்க:பரணிதரன்,"கஸ்தூரித்திலகம்"விகடன் பிரசுரம்)
புறக்கணிக்கப்பட்டவராகவே அவர் இறந்தார்//
மகாத்மாவின் வாழ்க்கையில் இவர் ஒரு கரும்புள்ளி போலும்...
Post a Comment