மதனுக்கும் தன் மகளுடைய சிரிப்பு சந்தோஷத்தைத் தந்தது. தாழ்வாரத்தில் இருந்த வாளியை எடுத்து அடிபைப்பில் 'டபக், டபக்'கென்று தண்ணீர் நிரப்ப தொடங்கினான்.
***
‘மிஸ்டர் மதன். இவருக்கு ப்ரஷர் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கு. அதர்வைஸ் ஹி ஈஸ் ஓகே. ரெண்டு மூனு நாள் ரெஸ்ட் எடுத்தா போறும். இவர் இப்போ எடுத்திக்கிட்டிருக்கற டாப்லெட்சே போறும்னு நினைக்கிறேன். ஊருக்கு போனதும் ப்ளட் சுகர் லெவல் செக் பண்ணிடறது நல்லது. டென்ஷனாகாம இருக்கணும். அதான் முக்கியம்.’
மதனின் மாமனாரை பரிசோதித்த மருத்துவர் அவரை சற்று நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். ‘அய்யா நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கலாங்களா? எழுந்திருக்காமயே பதில் சொல்லுங்க போதும்.
‘கேளுங்க தம்பி.’
‘நீங்க தங்கபாண்டி நாடார் மளிகைக் கடை ஓனர் தானுங்களே.’
‘ஆமாம் தம்பி. நீங்க யாருன்னு தெரியலையே!’
மருத்துவர் அறையிலிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்து புன்னகையுடன் பார்த்தார்.
‘என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலீங்களாய்யா? அம்மா உங்களுக்கும் தெரியலையா?’
மரகதம் தன் கணவனைப் பார்த்தாள். பிறகு மீண்டும் மருத்துவரைப் பார்த்து சட்டென்று நினைவுக்கு வந்தவளைப் போல் வியப்புடன், ‘தம்பி நீங்க நம்ம ராஜம்மாவோட பிள்ளை.... உங்க பேருதான் தம்பி மறந்துபோச்சி..’ என்றாள்.
‘அட! நம்ம வீட்டுக்கு தெனம் வந்து என் தம்பி கூட வம்பு பண்ணிக்கிட்டு இருப்பீங்களே அந்த சவுந்தரா நீங்க?’ என்ற பத்மாவைப் பார்த்தார் மருத்துவர்.
‘ஆமாங்க.. நானேதான்.’ திரும்பி பத்மாவின் தந்தை தங்கபாண்டியைப் பார்த்த மருத்துவர் ‘ஐயா, சமயத்துல அன்னைக்கி நீங்க செய்த உதவிதாங்க என்னை இன்னைக்கி ஒரு டாக்டாரா இந்த நிலைமைக்கு ஒசத்தியிருக்கு. மதன் சார் உங்க மருமகன்னு தெரியாம போயிருச்சி. இல்லன்னா முன்னாலயே வந்து பார்த்திருப்பேன். இவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டும் முன்னே பின்னே தெரியாதவங்க மாதிரி இருந்திருக்கோம் பாருங்க. அதாங்கய்யா நம்ம ஊருக்கும் பட்டணத்துக்கும் இருக்கற வித்தியாசம்.’
தங்கபாண்டி ஒன்றும் சொல்லாமல் தன் மனைவியையே பார்த்தார். பிறகு, ‘தம்பி நீங்களே உங்கள அறிமுகப்படுத்திக்கிட்டதால கேக்கறேன். உங்கம்மா ராஜம்மா இப்ப எங்க இருக்காங்க?’
மருத்துவருடைய முகம் சட்டென்று மாறிப்போனது.
‘ஐயா அவங்க...’ என்று தடுமாறினார்.
‘தெரியும் தம்பி. நான் செஞ்சதா சொன்னீங்களே அந்த உதவி.. அதுக்கு உங்களுக்காக செஞ்சது இல்லே. எங்கப்பாரு காலத்துலருந்து எங்க வீட்டுல விசுவாசமா வேல செஞ்ச உங்கம்மா ராஜம்மாவுக்காக. நீங்களே சொன்னீங்க.. நீங்க இப்ப நல்ல நிலைமைல இருக்கறதுக்கு நான் காரணம்னு.. இல்ல தம்பி.. உங்கம்மாத்தான் காரணம். ஆனா.. இப்ப உங்கம்மா இருக்கற நிலைக்கு யார் காரணம் தம்பி? நீங்களா இல்ல ஒங்க பெஞ்சாதியா?’
பதில் பேசமுடியாமல் மருத்துவர் மவுனமாயிருக்க தங்கபாண்டி தொடர்ந்தார். ‘இதோ நிக்கறாளே என் மக பத்மா. இவள கல்யாணம் ஆன புதுசுல என் சம்மந்தியம்மா வீட்டு வேல செய்யச் சொன்னதுக்காக கோச்சிக்கிட்டு கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் வந்தாங்க மாப்பிள்ளை. இப்ப குழந்தைகளுக்கு ஒரு நல்லது, கெட்டதுக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும்னு சொல்றதுக்குக்கூட இவங்களுக்கு யாருமில்ல.. பெரியவங்கன்னு ஒருத்தர், ரெண்டுபேர் கூட இருந்தா இந்த அவலம் இருக்குமா தம்பி?’ என்றவர் மருத்துவருக்கு அருகில் தலைகுனிந்து நின்ற தன் மருமகனைப் பார்த்தார்.
‘ஐயோ, போதும் சும்மாயிருங்க’ என்று சாடையால் தன்னை எச்சரித்த தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். ‘நீங்க தப்பா நினைச்சிக்கிட்டாலும் இத நான் சொல்லாம இருக்க முடியல மாப்பிள்ளை.. உங்களமாதிரியும் இதோ நிக்கற டாக்டர் மாதிரியுமான படிச்ச பிள்ளைங்களே பெத்தவங்களையும் பெரியவங்களையும் மதிக்காம உதாசீனப் படுத்தனா அது நல்லாவா இருக்கு? இப்ப பாருங்க.. மீனாக்குட்டியோட விஷயத்துக்கு ஊர்லருக்கற எங்கள கூப்பிட்ட எம்பொண்ணுக்கு இந்த ஊர்லயே இருக்கற தன் மாமியார கூப்பிட தோணலையே..’
மதன் பத்மாவைப் பார்த்து, ‘எல்லாம் உன்னால் வந்த வினை’ என்பதுபோல் பார்த்தான்.
மருத்தவர் சங்கடத்துடன் நெளிந்தார். பிறகு, ‘ஐயா.. நீங்க சொல்றது தப்புன்னு நான் சொல்லலைய்யா. எங்க குடும்பத்துல இப்படி நடந்ததுக்கு சில காரணங்கள் இருக்கு.. ஆனா அத விவாதிக்கறதுக்கு ஏத்த இடமும் நேரமும் இது இல்லன்னு நினைக்கிறேன். நீங்க உங்க உடம்ப பார்த்துக்குங்க.. நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னால என் பெஞ்சாதியையும் கூட்டிக்கிட்டு வரேன்.. நீங்களே அவகிட்டருந்து கேட்டுக்கலாம். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் அதுபோலவே செய்யறேன்.. நான் வரேன் பத்மா, நான் வரேம்மா.. மிஸ்டர் மதன், ப்ளீஸ் கம் வித் மி..’ என்றவாறு அறையை விட்டு வெளியேறிய மருத்துவரைப் பின்தொடர்ந்து மதனும் வெளியேற மரகதம் தன் கணவனைப் பார்த்தார்.
‘ஏங்க இது உங்களுக்கு தேவையா? அதுவும் இந்த நேரத்துல. நம்ம வீட்லருக்கற பிரச்சினைய பார்ப்பீங்களா? மருமகனைக் குத்தம் சொல்ற நேரமா இது? பேசாம படுத்து ஓய்வெடுங்க. மாணிக்கம் நான் சொன்ன ஜாமான்களையெல்லாம் வாங்கிட்டியா.. ஏய் பத்மா, இங்க என் கூட வா. பகல் சமையல் வேலையைப் பார்க்கலாம்.’ என்று இருவரும் அடுக்களைக்குள் நுழைய மாணிக்கம் நான் வாங்கி வந்திருந்த பைகளை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான்.
‘ஏய் வீனாக்குட்டி.. இந்த கலாட்டாவுல ஸ்கூலுக்கு நீ மட்டம் போட்டுட்டே இல்ல?’ என்றவாறு தன் செல்ல பேத்தியை அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தார் தங்கபாண்டி..
***
‘ஏய் பத்மா. அப்பா சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. எங்க உங்க மாமியார காணோம். நீ சொன்னியா இல்லையா?’
‘இல்லம்மா.. நீங்க வந்ததும் உங்கள் என்ன பண்ணலாம்னு கேட்டுக்கிட்டு கூப்பிடலாம்னு இருந்தேன்.’ என்றாள் பத்மா.
‘அவங்கள எதுக்கும்மா கூப்பிடணும்?’ என்றான் மாணிக்கம்.
மரகதம் தன் மகனையும் மகளையும் மாறி, மாறி பார்த்தாள்.
‘நீ சும்மா இரு மாணிக்கம். உனக்கு ஒன்னும் தெரியாது. இது உங்க மாமியார் வீடு மாதிரி இல்லே. நீ சொல்லுடி. இதுல எங்கள என்னடி கேக்க வேண்டியிருக்கு? இப்ப நீ கூப்பிட்டு அவங்க உடனே புறப்பட்டு வந்தாங்கன்னா, நாங்க இங்க இருக்கறத பார்த்துட்டு என்ன நினைப்பாங்க? அநாவசியமா பிரச்சினைதான் வரும். என்ன பொம்பளையோ நீ.’
‘இல்லம்மா. மீனா அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.’
மரகதம் எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி தெரியாது? எதுக்கெடுத்தாலும் மாப்பிள்ளைய சாக்கா வச்சி நீ தப்பிச்சிக்க. ஒரு ஆம்பிளைய கைக்குள்ள போட்டுக்க தெரியாத பொம்பள என்ன பொம்பளடி? கல்யாணம் ஆயி பதினஞ்சு வருஷமாவுது. இப்பவும் ஆம்பளைக்கு பயந்து செத்தா அப்புறம் குடுத்தனம் எப்படி நடத்தறது? கூறு கெட்டவளே.’
‘ஆமா.. என்னையே குத்தம் சொல்லுங்க. அவர் கூட வேலை செய்யற ஆளுங்க அவருக்கு என்ன பேரு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு?’
மரகதத்திற்கு தன் மகள் மீது எரிச்சல் கூடியது. ‘என்னடி சொல்றே?’
‘அண்ணே நீங்களும் கேளுங்க. அவர்கூட வேலை செய்யறவரோட வீட்டு விசேஷத்து ஒரு நா கூட்டிக்கிட்டு போயிருந்தார். அங்க ரெண்டு பேர் எங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?’
மாணிக்கம் ஆவலுடன் தன் தங்கையைப் பார்த்தான். ‘என்ன சொல்லு?’
‘ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொல்றார். பார்த்தீங்களா நம்ம ஹிட்லரோட வொய்ஃப.. பாவம். என்ன சாதுவா இருக்காங்க? எப்படிதான் இவர் கூட இத்தனை வருஷமா எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ..' அப்படீன்னு. அப்புறமா நான் அவங்க பின்னால நின்னுக்கிட்டிருந்தத ரெண்டு பேரும் பார்த்துட்டு எங்கிட்ட ‘மேடம், மேடம்..சார்கிட்ட சொல்லிறாதீங்க.. அப்புறம் எங்க கதி அதோகதிதான் மேடம்.. ப்ளீஸ் மேடம்னு அவங்க கெஞ்சினத நீங்க பார்க்கணுமே..’ அபிநயத்துடன் பத்மா கூற விழுந்து விழுந்து சிரித்தான் மாணிக்கம்.
மரகதம் ஒன்றும் புரியாமல் தன் மக்கள் இருவரையும் கோபத்துடன் பார்த்தாள். ‘டேய் மாணிக்கம், அவ தான் சொல்றான்னா நீயும் என்னடா சின்ன பிள்ளையாட்டம் சிரிச்சிக்கிட்டு? ஏய் பத்மா, போ போய் மாப்பிள்ளை வந்துட்டாரான்னு பார்.. டேய் மாணிக்கம், போறுண்டா சிரிச்சது.. ஹிட்லராம்.. யார்ரா அது?’
மாணிக்கம் குழப்பத்துடன் தன்னைப் பார்க்கும் தன் தாயைப் பார்த்து மீண்டும் சிரித்தான். பத்மா தலைநிமிர்ந்து அடுக்களைவாசலில் தங்களையே பார்த்துக்கொண்டு நின்ற மதனைப் பார்த்து வெளிறிப்போய் சிரித்துக்கொண்டிருக்கும் தன் அண்ணனைப் பார்த்து கையால் சைகை செய்ய.. மரகதம் பத்மாவின் பார்வை போன திசையை நோக்கினாள்.
கோபத்துடன் நின்ற மதனைப் பார்த்தவள் எழுந்து நின்றாள். ‘டேய் மாணிக்கம்.. சிரிச்சது போறும். எழுந்து சித்த வெளிய போ.. மாப்பிள்ளை வந்துட்டார்.’
சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு திரும்பி வாசலைப் பார்த்த மாணிக்கம் எந்தவித பதற்றமும் இல்லாமல் எழுந்து மதனை முறைத்து பார்த்தவாறே வெளியேறி தன் மருமகள் மீனாவின் அருகில் சென்றமர்ந்தான். ‘என்ன மாமா?’ என்று பார்வையால் கேட்ட மீனாவைப் பார்த்து ரகசியமாய் கண்ணடித்தான். ‘ஆமா உங்கப்பாவுக்கு அவரோட ஆஃபீஸ்ல ஹிட்லர்னு பேர் வச்சிருக்காங்களாம்மே.. உண்மையா.. கரெக்டான பேர்தான்.. அத பத்மா சொன்னதும் சிரிப்பு தாங்கல..’ என்றான் ரகசிய குரலில்.
மீனா சிரிப்பதற்கு பதில் கோபப்பட்டாள். ‘என்ன மாமா நீங்க? அப்பா ஏற்கனவே கோபமா இருக்காங்க. இப்ப எதுக்கு இதப் போயி அம்மா உங்க கிட்ட சொல்லணும்?’ என்றாள்.
மாணிக்கம் சிரிப்பை சட்டென்று நிறுத்திவிட்டு தன் மருமகளை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘பாரேன்.. ஏய் என்ன பெரிய மனுஷியாயிட்டியா?’ மீனா அவனைப் பார்த்து முறைக்க, ‘சரி, சரி. சிரிக்கலை.. உனக்கு ஏதாச்சும் சாப்பிட வேணாம்? இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கப்பா வெடிக்கப் போறார். உங்கம்மா சமையல் எங்க பண்ணப்போறா? மாமா வீனாவுக்கு வெளிய போயி சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரப்போறேன்.. உனக்கும் வாங்கிட்டு வாரேன். உனக்கு என்ன பிடிக்கும்? சொல்லு, மாமா வாங்கி வாரேன்.’
மீனா முகத்தை முறுக்கிக் கொண்டு, ‘எனக்கு ஒன்னும் வேணாம்.’ என்றாள்.
மாணிக்கம் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையை பாசத்துடன் தடவி விட்டான். ‘சாரிடா கண்ணா.. மாமா சும்மா தமாஷ்தான் பண்ணேன். சத்தியமா உங்கப்பா கூட சண்டை போட மாட்டேன். அதனாலதானே இப்ப வெளியவே போறேன். மாமா இங்க இருந்தா நிச்சயமா சண்டை போடுவேன். நான் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சி வாரேன், என்ன?’
அவன் தடதடவென படியிறங்கி போவதைப் பார்த்த மீனா, ‘அப்பாடா.. இப்பவாவது மாமாவுக்கு புத்தி வந்துச்சே..’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
***
‘நம்ம பேசிக்கிட்டிருந்தத கேட்டிருப்பாங்களோ...’ எதிர்பாராமல் வந்து நின்ற மதனின் முகத்திலிருந்த கோபத்தை பார்த்து தனக்குள் நினைத்தாள் பத்மா. ‘கேட்டா கேக்கட்டுமே.. நா கேட்டதைத் தானே சொன்னேன். எனக்கொன்னும் பயமில்லே.. இந்தம்மா வேற.. ஒரேயடியா மாப்பிள்ளைய தலையில தூக்கி வச்சிட்டு ஆடறதுனாலதான் இவர் ரொம்பவும் முறுக்கிக்கிராறு..’
மரகதம் பதற்றத்துடன் மதனை நெருங்கினாள். ‘நீங்க ஒன்னும் மனசுல வச்சிக்காதீங்க மாப்பிள்ளை. பத்மாவ பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே.. கூறு கெட்டவ.. நீங்க போய் முன் ரூம்புல இருங்க.. நான் மாமாவ கூப்பிட்டுக்கிட்டு வாரன்.’
மதன் நொடியில் முகம் மாறி சகஜ நிலைக்கு வந்தான். தன் மாமியாரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். ‘மாமாவை எதுக்கு சிரமப்படுத்தணும்? எனக்கும் உங்க கூட கொஞ்சம் பேசணும். பத்மா இங்கயே இருக்கட்டும். நீங்க வாங்க.. தேவைப்பட்டா மாமாகிட்ட பேசலாம்.’ என்றவன் அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தன் அறைக்குச் சென்றான்.
‘எதுக்கு என்ன வேணாம் சொல்றாருன்னு கேளுங்கம்மா. அவரு பேசப்போறது என் பொண்ணப்பத்தி. நா இல்லாம எப்படி? நானுந்தான் வருவேன்.’ என்று முரண்டு பிடித்த தன் மகளைப் பார்த்தாள் மரகதம்.
‘ஏய் என்ன நீ அவரு, இவருன்னு மாப்பிள்ளைய மரியாதையில்லாம பேசற? இரு, அவங்ககிட்ட பேசிட்டு வந்து பேசிக்கறேன். நீ வந்தா ஏட்டிக்கு போட்டியா பேசி வம்புதான் வளரும்.. நீ இங்கயே இரு.. இல்லன்னா அப்பாக்கிட்ட பேசிக்கிட்டிரு. நான் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு வாரேன்..’
மரகதம் பத்மாவின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அடுத்திருந்த பிள்ளைகளுடைய அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்திருந்த தன் கணவரிடம் குசுகுசுத்தாள். ‘ஏங்க.. மாப்பிள்ளை ஒருவேளை இந்த சடங்கெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்னா என்னங்க பண்றது?’
சிறிது நேரம் ஒன்றும் பதில் பேசாமல் தன் பேத்தியை பார்த்த தங்கபாண்டி, ‘வீனா, நீ போய் அக்காகிட்ட பேசிட்டிரு போ. தாத்தா கூப்பிடற வரைக்கும் வரக்கூடாது.. என்ன?’ என்றார்.
வீனா விருப்பமில்லாமல் கட்டிலைவிட்டு இறங்கி வெளியேற.. அவர் தன் மனைவியைப் பார்த்தார். ‘இங்க பார் மரகதம். நமக்கு இந்த சடங்க விட மாப்பிள்ளைக்கும் பத்மாவுக்கும் இடையிலருக்கற இந்த பிணக்க தீக்கறதுதான் இப்ப முக்கியம். முதல்ல அவர் என்ன சொல்றார்னு கேளு. அதுக்கப்புறம் நாம் என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம். போய் பேசிட்டு வா..’
‘சரிங்க.. நீங்க சொல்றதுதான் சரி.’ என்ற மரகதம் தாழ்வாரத்தில் வாளியிலிருந்த தண்ணீரை அள்ளி முகத்தை கழுவி துடைத்துக்கொண்டு ‘பழனி ஆண்டவா ஒரு குளப்பமுமில்லாம முடியணும்பா..’ என்று முனகியவாறு மூலையில் அமர்ந்திருந்த பேத்தியிடம் சென்று அவளுடைய தலையைப் பாசத்துடன் தடவி, முகத்தாடையில் விளையாட்டாய் தட்டினாள். ‘அம்மே அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு பிடிச்சத ஆக்கிப்போடறேண்டா செல்லம்..’என்று கொஞ்சினாள்.
மரகதத்தின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்கலங்கினாள் மீனா.. ‘எனக்கு ஒன்னும் வேணாம்மே.. நீங்க அப்பாவையும் அம்மாவையும் மறுபடியும் ஒன்னாக்கிருங்கம்மே.. அது போதும்..’
கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் தன் கரங்களைப் பற்றிக்கொண்டு விம்மும் மீனாவை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள் மரகதம். ‘வேணாம்டி செல்லம். இந்த நேரத்துல நீ அழக்கூடாது. குதிர்ந்து நிக்கற நேரத்துல குமரிப் பொண்ணு கண்கலங்குனா குடும்பத்துக்கு ஆவாதுடீம்மா.. கண்ண துடைச்சிக்கிட்டு சாமி கிட்ட வேண்டிக்கோ.. எல்லாம் நல்ல படியா முடியும்..’ மீனாவின் கண்களைத் துடைத்துவிட்டாள். ‘இப்படியே சுவத்துல சாஞ்சி உக்காந்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டே இரு.. அம்மே வந்துட்டேன்.’
முன் அறையில் தன் இருக்கையிலமர்ந்து மீனாவின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த மதன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ‘சொல்லுங்க மாப்பிள்ளை.’ என்று தன் எதிரில் வந்து நின்ற மரகதத்தை நோக்கினான்.
பத்மா அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்து தன் மகளைப் பார்த்தாள். மீனா, ‘நீங்க போங்கம்மா. ப்ளீஸ்..’ என்று சாடையால் கெஞ்ச... ‘நீ பேசாம இரு’ என்று சாடையால் பதிலளித்துவிட்டு முன் அறையை நோக்கி ஓசைபடாமல் முன்னேறினாள்.
தன் முன் யோசனையுடன் அமர்ந்திருந்த மதனைப் பார்த்த மரகதத்தின் மனம் வேதனையடைந்தது. ‘சொல்லுங்க மாப்பிள்ளை.. என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அத தயங்காம சொல்லுங்க..’
மதன் அவளைப் பார்க்காமல் பேசினான். ‘நேராவே சொல்லிடறேன் மாமி. எனக்கு இந்த சடங்கு சாஸ்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லங்கறது உங்களுக்கும் மாமாவுக்கும் தெரியும். முக்கியமா மீனாவுக்கு நடத்தணும்னு நினைக்கற இந்த சடங்குல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லே.. அதனாலதான் நான் எங்கம்மாவுக்கே சொல்லலை. ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னால வேணும்னா இந்த மாதிரியான சடங்கெல்லாம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனா இப்ப, அதுவும் மெட்றாஸ் மாதிரி பட்டணத்துலல்லாம் இது தேவையே இல்ல. அதுவுமில்லாம மீனாவுக்கு இன்னும் மூனு வாரத்துல முக்கியமான பரீட்சை வருது.. இந்த நேரத்துல அவளுடைய கவனத்த சிதற விடறாமாதிரியான இந்த மாதிரி விஷயங்கள நடத்துறதுல எனக்கு துளிகூட இஷ்டமில்ல.. மாமா, டாக்டர் முன்னால சொன்ன விஷயங்கள்ல கூட எனக்கு சம்மதமில்ல.. நான் என் அம்மாமேல இன்னமும் பாசத்தோடத்தான் இருக்கேன். டாக்டர் விஷயத்துல என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரியாது.. ஆனா என் அம்மாவுக்கு நான் இன்னும் நல்ல பிள்ளையாத்தான் இருக்கேன். ஆனா அதே நேரத்துல எனக்கு என் மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம். என் மனைவிய நானா இஷ்டப்பட்டுத்தான் கட்டிக்கிட்டேன். அவ கிட்ட எந்த குறை இருந்தாலும் எனக்கு ஒரு நல்ல மனைவியா, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்கா.. நான் என் பிள்ளைங்கள விட்டுட்டு ஊருக்கு தைரியமா போயிட்டு வரமுடியுதுன்னா அதுக்கு காரணம் பத்மா மாதிரி ஒரு அடக்க ஒடுக்கமான பெஞ்சாதி கிடைச்சதுதான்.. எனக்கு அவ இன்னமும் ஒரு சின்ன பிள்ளையாத்தான் தெரியறா.. மீனா, வீனாவோட சேர்த்து எனக்கு அவளும் ஒரு குழந்தை மாதிரி.. அவ தப்பு பண்ணும்போது தலையைல் குட்டுறதுக்கும் புத்திசாலித்தனமா பண்ணும்போது தட்டிக் குடுத்தறதுக்கும் எனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு. அவள யார்கிட்டயும்.. அது எங்க அம்மாவும் இருந்தாலும் சரி, விட்டுக்கொடுக்க நான் தயாரா இல்ல. அதனாலதான் அவளை வேலைக்காரி மாதிரி நடத்துன எங்கம்மாகிட்டருந்தும் என் மதனிமார்ங்க கிட்டருந்தும் பிரிச்சி கூட்டிக்கிட்டு வந்தேன். இவ்வளவு ஏன், உங்ககிட்ட கூட பத்மாவ காட்டிக்குடுக்க நான் தயாராயில்லை.. இன்னைக்கி நீங்க அவளை கண்டபடி திட்டினதக்கூட என்னால தாங்கிக்க முடியல மாமி.. அவ இத வேணும்னு செய்யலை.. உங்க ஊர் பழக்கம் மட்டும்தான் இப்ப அவளுக்கு இப்ப கண் முன்னால நிக்குது.. ஐயோ, எம்பொண்ணுக்கு சடங்கு பண்ணலன்னா ஊர்ல சாதிசனம் என்ன சொல்லுமோ.. அதனால எம்பொண்ணுக்கு ஏதாச்சும் போல்லாப்பு வந்திருமோங்கற ஒரு மூட எண்ணத்துனாலதான் என்னையும் எதுத்துக்கிட்டு இத நடத்தியே தீரணும், அதனால என்ன வந்தாலும் பரவாயில்லைங்கற பிடிவாதத்துல இருக்கறா. அந்த குணம்தான் எனக்கு அவகிட்ட பிடிச்சது.. நானும் கோபப்பட்டு காரியத்த சிக்கலாக்கிட்டேன். கோபப்படாம நிதானமா எடுத்து சொன்னா என் பத்மாவுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்.. அவள நான் பாத்துக்கறேன்.. நீங்க ரெண்டுபேரும் வந்ததுக்கு அவளுக்கு என்ன செய்யணுமோ அத செஞ்சிட்டு போயிருங்க.. மத்தபடி இந்த சடங்கெல்லாம் வேணாம்..’
தாழ்வாரத்தில் நின்று மதன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த பத்மா கண்கள் கலங்கி அறைக்குள் நுழைந்து மதனைப் பார்த்தாள். காலடியோசை கேட்டு திரும்பிய மதன் அழுத கோலத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்தான். அவனுக்குத் தெரியும் பத்மாவின் குழந்தை குணம்.. திரும்பி மரகதத்தைப் பார்த்தான். ‘பாத்தீங்களா மாமி, நான் சொன்னேனே.. பத்மா ஒரு குழந்தைன்னு.. இந்த பத்மாதான் என் மனைவி.. இவளால மட்டுந்தான் இந்த ஹிட்லரோட குப்ப கொட்ட முடியும்..’
பத்மா இந்த வார்த்தைகளால் மேலும் உணர்ச்சிவசப்பட்டு மதனின் கால்களில் விழப்போனாள். அவளை தடுத்து நிறுத்தியவனின் தோள்களில் சாய்ந்துக்கொண்டு குரலெடுத்து அழ.. மரகதம் ஒரு நாண புன்னகையுடன் வெளியேறி தன் பேத்தியினருகில் சென்று அமர்ந்தாள். ‘பார்த்தியா கண்ணு.. நீ சாமிகிட்ட வேண்டனது கிடைச்சிருச்சி பாத்தியா? உங்கம்மாவ சரியா புரிஞ்சி வச்சிருக்கறது உங்கப்பா தான்.. சரி.. உனக்கு என்ன வேணும்? அம்மே செஞ்சி போடறேன்.’
***
மாணிக்கம் நம்ப முடியாமல் தன் தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான். ‘என்னம்மா சொல்றீங்க? நாம வந்த விஷயத்த மறந்துட்டு என்ன பேசறீங்க? நாம இப்ப ஊருக்கு திரும்பிப் போயி நாங்களே மீனாவுக்கு வேண்டியத செஞ்சிட்டு வந்துட்டோம்னு சொன்னா ஊர்ல காறித் துப்புவாங்க. அவருக்கு இங்க வச்சி செய்ய இஷ்டமில்லன்னா மீனா ஒரு வாரத்துக்கப்புறம் ஊருக்கு கூட்டிக்கிட்டு போயி அங்க வச்சி செய்வோம். அத விட்டுட்டு சடங்கே வேணாம்னா? இங்க பாருங்கம்மா.. நீங்களும் பத்மா மாதிரி பயந்துக்கிட்டு மாப்பிள்ளை சொல்றதுக்கு சரின்னு சொல்லீட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் பேசறேன்.’
‘டேய் மாணிக்கம். என்ன உங்கம்மா இவ்வளவுதூரம் சொன்னதுக்கப்புறமும் நீ பாட்டுக்கு முட்டாளாட்டம் பேசிக்கிட்டிருக்கே.. நீ முதல்ல பெட்டிய எடுத்துக்கிட்டு ஊர் போய் சேரு..’ தான் இதுவரை கண்டிராத கோபத்துடன் தன் முன் நின்ற தன் தந்தையைப் பார்த்து திடுக்கிட்டான் மாணிக்கம்.
கோபத்தால் சிவந்து நின்ற தன் கணவனின் கண்களைப் பார்த்த மரகதம் பதற்றத்துடன் எழுந்து அவருடைய தோள்களைப் பற்றினாள். ‘ஐயோ நீங்க என்னங்க? டாக்டர் சொன்னத மறந்துட்டீங்களா? பேசாம உக்காருங்க. டேய் மாணிக்கம். ஒன்னும் பேசாம, கிளம்பு. இப்பவே போனீனா ராத்திரிக்குள்ள ஊர் போய் சேர்ந்துரலாம். இப்போதைக்கு ஊர்ல யார்கிட்டயும் ஒன்னும் சொல்ல வேணாம். ரெண்டு நாள்ல நாங்க ரெண்டு பேரும் வந்தப்புறம் என்ன சொல்லலாம், எப்படி சொல்லலாம்னு யோசிக்கலாம். அப்பாவ வீணா கோபப்படுத்தி ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிராத. போ.. குளிச்சிட்டு கிளம்பு..’
‘ஆமா.. அப்பாவுக்கு ஏதாவது வந்துரும்னு சொல்லியே மாப்பிள்ளை சொல்ற எல்லாத்துக்கு பணிஞ்சி போயிருங்க.. அது அவருக்கும் தெரியனுமில்லே.. அவர் பாட்டுக்கு தான் புடிச்ச முயலுக்கு மூனே காலும்பாரு.. நீங்களும் தலைய தலைய ஆட்டிக்கிட்டு நிப்பீங்க.. எப்படியோ போங்க.. அங்க போனா எம்பொண்டாட்டி என்ன குதி குதிக்க போறாளோ, தெரியல..’
பத்மா கோபத்துடன் முனகும் தன் சகோதரனைப் பார்த்தாள். ‘அண்ணே, அவர் கோபம் அடங்கட்டும். மீனாவுக்கு பரீட்சை முடிஞ்சதும் அவர்கிட்ட சமாதானமா பேசி ஊருக்கு கூட்டிக்கிட்டு வரேன். அங்க வச்சி என்ன செய்யணுமோ செஞ்சிரலாம்.. நீங்க இப்ப போங்க.. அப்பாவுக்காகவாவது பொறுத்துக்கிட்டு போங்கண்ணே..’
மாணிக்கம் திரும்பி அவளைக் கேலியுடன் பார்த்தான். ‘ஆமா.. எங்க கிட்ட புத்திசாலித்தனமா பேசு.. அவரப் பார்த்ததும் கோட்ட விட்டுரு.. நல்ல புருஷன்.. நல்ல பொஞ்சாதி.. எப்படியோ போ..’
மரகதம் குறுக்கிட்டு.. ‘ஏய் பத்மா.. அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். நீயா ஏதாச்சும் சொல்லிட்டு இவன் போய் அங்க அதே மாதிரி சொல்லி வைக்கப் போறான். போய் மதிய சமையலுக்கு என்ன வேணும் பார்.. நான் போய் வாங்கிட்டு வாரேன். ரெண்டு நாளைக்கு இருந்து பிள்ளைக்கு வாய்க்கு ருசியா செஞ்சி போட்டுட்டு போறேன். மத்தத அப்புறம் பாத்துக்கலாம். மாப்பிள்ளைக்கு பிடிக்காத எதையும் செய்ய வேணாம். சாதி சனங்க கிட்ட என்ன சொல்லணுங்கறது அப்பாவுக்கு தெரியும். டேய் மாணிக்கம்! நீ சும்மா பேசிக்கிட்டிருக்காம கிளம்புறா..’ என மாணிக்கம் வேண்டா வெறுப்புடன் குளியலறைக்குள் நுழைய கிளம்ப பத்மா அடுக்களைக்குள் புகுந்தாள்.
***
'மதறாசிலிருந்து அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் வங்காள வளைகுடாவில் மையம் கொண்டிருந்த சூறாவளி காற்று இன்று பகல் மதராஸ் நகர் அருகே கரையை கடக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென இன்று அதிகாலை நேரப்படி அது முழுவதும் வலுவிழந்ததென மதறாஸ் வானிலை நிலையம் அறிவிக்கிறது. ஆகவே கடந்த இரண்டு நட்களாக நம் நகரத்துக்கு வருவதாகவிருந்த பேராபத்து நீங்கியது."
அடுக்களையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி வழியாக ஒலித்த வானிலையறிக்கையைக் கேட்ட வீனா ஒரு குறும்புப் புன்னகையுடன் தன் தாத்தாவைப் பார்த்தாள். ‘தாத்தா, நம்ம வீட்டையும் பயமுறுத்திக்கிட்டிருந்த புயல் ஒன்னுமில்லாம போயிருச்சில்ல?’
‘சீ போக்கிரி. உங்கப்பா கேட்டா கொன்னுருவாரு.’ என்று தன் தலையில் குட்ட வந்த தாத்தாவின் கையில் அகப்படாமல் கட்டிலிலிருந்து இறங்கி ஓடிய வீனா அறை வாசலில் நின்ற மதன்மேல் மோதி நின்றாள்.
‘ஐயோ.. அப்பா..’ என்றவள் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். ‘புயல்னு நா உங்கள சொல்லைப்பா. மாமாவைத்தான் சொன்னேன். அவங்க ஊருக்கு திரும்பி போயிட்டாங்கள்ள? அதத்தான் அப்படி சொன்னேம்பா’ என்றாள்.
மதன் சிரித்தான். ‘ஏய் ரவுடி.. நீ யார சொன்னேன்னு புரிஞ்சிக்காத அளவுக்கு நா முட்டாள் இல்லே..’ என்றவாறே வீனாவின் காதைப் பிடித்து செல்லமாக திருகினான். ‘எப்படியோ இந்த கலாட்டாவுக்கு நடுவுல நீ ஸ்கூலுக்கு போகாம மட்டம் போட்டுட்டே.. சரி.. கொட்டம் அடிச்சது போறும்.. வா வந்து புஸ்தகத்த எடு..’
வீனா அவனைக் கட்டிப் பிடித்து.. ‘அப்பா.. நீங்க செல்லம்லே.. இன்னைக்கி மட்டும் படிப்பிலருந்து லீவு தாங்கப்பா.. ப்ளீஸ்.’ என்று கெஞ்ச மதன் சிரித்தவாறே அவளுடைய தலையில் லேசாக குட்டினான். ‘திருடி.. அப்பாவை எப்படி சமாளிக்கறதுன்னு நல்லா படிச்சி வச்சிருக்கே.. சரி நீ கேட்டா மாதிரி இன்னைக்கி முழுசும் லீவ் சாங்க்ஷண்டு.. போ.. போயி அக்காகிட்ட உக்கார்ந்து பேசிக்கிட்டிரு..’
துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடிய வீனா தன் அக்காவைப் பார்த்து .. ‘அப்பா ஹிட்லர்தான்.. ஆனா நல்ல ஹிட்லர்.' என்றாள் உரத்த குரலில் அடுக்களையிலும் படுக்கையறையிலும் இருந்த அனைவருக்கும் கேட்கும்வண்ணம்.
அடுக்களையிலிருந்த பத்மா ஒருவித அச்சத்துடன் எட்டி படுக்கறை வாசலில் நின்ற மதனைப் பார்த்தாள். அதே நேரத்தில் திரும்பி தன் மனைவியைப் பார்த்த மதன், ‘உன்னை மாதிரி இல்லடி உன் பிள்ளைங்க.. ரெண்டும் ஊரையே வித்துறும்..’ என்றான் சிரித்தபடி..
படுக்கையறை கட்டிலில் அமர்ந்திருந்த தங்கபாண்டி தன் மனைவியைப் பார்த்தார். மரகதம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறு மதனைப் பார்க்க மூவர் முகத்திலும் புன்னகை விரிந்தது!
முற்றும்
5 comments:
அப்பாடியோவ். எல்லாம் நல்லபடி முடிஞ்சது. புத்தாண்டு அன்னைக்கு சந்தோசமா கதைய முடிச்சதுக்கு நன்றி ஜோசப் சார். ரொம்ப நல்ல கதை. எல்லா பாத்திரங்களும் நல்ல இயல்பா அமைஞ்சு வந்துருக்கு. இது போல இன்னும் பல கத எழுதி எங்களுக்குக் கொடுத்து மகிழ்விக்கனுமுன்னு கேட்டுக்கிர்ரேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
வாங்க ராகவன்.. புத்தாண்டு வாழ்த்துக்களோடு கதையையும் நல்லபடியா முடிச்சிரணும்னு மனசுல நினைச்சேன். மனசு நினைச்சத கை எழுதிருச்சி.
மதனுடைய முற்போக்கான எண்ணங்களுக்கு தங்கபாண்டியும் அவருடைய மனைவியும் இணங்கினதா சொன்னப்போ த.நாவிலிருக்கற ஒட்டுமொத்த கிராமவாசிகளையும் சேர்த்து சொன்னதா நினைச்சிக்கணும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் சமுதாயத்திலிருந்து அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. இந் நாவலை வாசிப்பவர் மனதில் இந்த எண்ணம் வித்தாக அமைந்தால் என் எண்ணம் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வேன்.
ஒரு விஷயம், ராகவன். கடந்த இரண்டு மூன்று தினங்களாக தொடர்ந்து பின்னூட்டம் இட்ட துளசியைக் காணவில்லை. கோபமாயிருக்குமோ..
ஹூம்.. மிகவும் கவலையாக இருக்கிறது..
உங்களுக்கு கேக்குதுங்களா துளசி.. இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டீங்களே.. இது நியாயமா?
ஜோசப் சார், உங்களுடைய இந்த வலைப்பதிவு தமிழ் மணத்துல வரல. நாந்தான் தேடிப் பிடிச்சு. நீங்க ஏதாவது போட்டிருக்கீங்களான்னு வந்தேன். அதுனாலதான் துளசி டீச்சர் வரலைன்னு நினைக்கிறேன்.
நல்ல கதை. தமிழ்மணத்தால் ஏனோ திரட்டப்படவில்லை. நானாக தேடி படித்தேன்.
கதையின் முடிவில் மதனைப்பற்றி பத்மா தெரிந்துகொண்ட விதம் ரொம்ப சினிமாத்தனமாப்போயிருச்சே ஜோசப் சார்.. இந்த கதையின் இயல்பான நடையினாலதான் இவ்ளோ நாளானாலும் தேடி கண்டுபிடிச்சு படிக்குறேன் , அதுனால முடிஞ்ச விதத்துல கொஞ்சம் அதிருப்திதான் :-(
மத்தபடி மதன்,பத்மா,வீணா.... இப்படி அந்த குடும்பத்தை பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி இருக்கு... அந்த வகையில் எழுத்தாளரா உங்களுக்கு வெற்றினு நினைக்குறேன்.. :-)
-
செந்தில்/Senthil
Post a Comment