30.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 14

பத்மா, மரகதம் இருவரும் அவரையே பதற்றத்துடன் பார்த்தனர். ‘அப்பா என்னப்பா, என்ன செய்யிதுப்பா..’ அடி வயிற்றிலிருந்து கதறிய பத்மாவின் குரல் கேட்டு அதுவரை விழித்தெழுந்து தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மதனும், தாழ்வார மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த மீனாவும் எழுந்து ஓடிவந்தனர்..

தன் அறையை விட்டு வெளியே வந்த மதன் தனக்கு முன்னால் சென்ற மீனாவை பிடித்து நிறுத்தினான். ‘ஏய், நீ டென்ஷனாகாம போய் உங்கம்மே உக்கார வச்ச எடத்துலயே உக்கார். நான் போய் என்னான்னு பார்க்கறேன்.’

கலங்கி நின்ற கண்களுடன் தன் தந்தையையே கலவரத்துடன் பார்த்தாள் மீனா. ‘வேணாம்பா. நீங்க இப்ப அங்க போனீங்கன்னா மாமாவுக்கு உங்க மேல இருக்கற கோபம் ஜாஸ்தியாயிரும். நீங்க உங்க ரூமுக்குள்ளவே கொஞ்ச நேரம் இருங்கப்பா.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்ல.. நான் போய் பார்த்துட்டு வந்து சொல்றேம்ப்பா.. ப்ளீஸ்ப்பா..’

கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீருடன் தன்னை கெஞ்சி நின்ற மகளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டான் மதன். தன் பேரிலேயே அவனுக்கு கோபம் வந்தது.. ‘சே, என்ன மனுஷன் நான்’ என்று தன்னையே நொந்துக்கொண்டான். பிறகு, திரும்பி தன் அறையை நோக்கி நடந்தான்.

‘நில்லுங்க அங்கேயே..’

தன் தந்தை தான் கேட்டுக்கொண்டதற்கிணங்கி அவனுடைய அறைக்கு திரும்பிச் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மீனா தன் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டு மிரண்டு போய் திரும்பி பார்த்தாள்.

மாணிக்கம் ஆத்திரத்துடன் தன் தந்தையையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டாள். அதற்குள் மாணிக்கத்தின் குரலைக் கேட்டு பத்மாவும், மரகதமும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

‘டேய் மாணிக்கம். உங்கப்பா அங்க மூச்சு விடக்கூட முடியாம தடுமாறிக்கிட்டிருக்கார். அவர பாக்கறத விட்டுட்டு மறுபடியும் தகராறு பண்லாம்னு இறங்கிட்டியா? போடா, போய் அவர் பக்கத்துல இரு.. போ..’ என்ற தாயை ஒரு கையால் விலக்கி விட்டு மதனை நோக்கி அடங்கா ஆத்திரத்துடன் முன்னேறிய மாணிக்கத்தை முன் வந்து அமைதியுடன் எதிர்கொண்டான் மதன்.

இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நிற்க பத்மா இருவர் நடுவில் புகுந்து, ‘அண்ணே, போறும்னே.. அப்பாவ போய் பாருங்க..’ என்று அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள். பிறகு தன் கணவனைப் பார்த்தாள்.. மதனின் முகத்தில் துளியேனும் வருத்தம் தெரிகிறதா என்று பார்த்தாள். அவனுடைய முகம் இறுகிப்போய் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் இருந்ததைக் கண்டாள். ஒன்றும் பேசாமல் தன் தந்தை இருந்த படுக்கையறைக்கு திரும்பினாள்.

மரகதமும் மாணிக்கமும் இருபக்கமும் அமர்ந்திருக்க பத்மாவின் தந்தைகட்டிலில் படுத்து விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ‘எப்படி இருக்காங்க அப்பா?’ என்பது போல் தன் தாயைப் பார்த்தாள்.

‘இப்ப ஒன்னுமில்லேடி.. இதுக்கு முன்னால ரெண்டு முறை அப்பாவுக்கு வந்திருக்கு.. மாத்திரை சாப்டதும் கொஞ்ச நேரத்துல சரியாயிரும்.. இப்பவும் அப்படி ஆயிரணும். ஊருக்கு போனதும் பழனிக்கு வரேண்டாப்பான்னு நேந்திருக்கேன்.. முருகன் பார்த்துப்பான். அவங்கள விடு.. ஒன்னும் ஆகாது. இப்ப ஆக வேண்டியத பாப்பம். மாப்பிள்ளை என்னதான் சொல்றாரு.. நா வேணா கேக்கட்டுமா?’

மாணிக்கம் கோபத்துடன் இடைமறிக்க.. ‘டேய் இப்பத்தான சொன்னேன்? அப்பா கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும். நீ போய் நான் லிஸ்ட் போட்டு வச்சிருக்கற ஜாமானையெல்லாம் வாங்கிக்கிட்டு வா.. போ..’ என்று தன் மூத்த மகனை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தாள் மரகதம்.

அவன் சென்றதும் தன் முன்னே நின்ற மகளைப் பார்த்தாள். ‘என்னடி சிலையாட்டம் நிக்கறே? நேத்தைக்கி மாப்பிள்ளை ஏன் உன்னை அடிச்சார்? நீ என்ன பண்ணே?’

பத்மா வெறுமனே நிற்க, மீனா தன் அம்மேயை பார்த்து ‘இங்க வாங்கம்மே நான் சொல்றேன்.’ என்று அழைத்தாள்.

மரகதம் அருகில் வந்து அமர்ந்ததும் நேற்று இரவு நடந்ததை முழுவதும் ஒன்றுவிடாமல் தன் தந்தைக்கு கேட்காவண்ணம் கூறினாள். ‘இதான் அம்மே நடந்திச்சி. அப்பாவுக்கு தெரியாம அம்மா உங்களுக்கு ஃபோன் பண்ணதுதான் இதுக்கெல்லாம் காரணம். நீங்க போயி சமாதானமா அப்பாக்கிட்ட பேசுங்கம்மே. அப்பா சம்மதிக்காம எனக்கு நீங்க எதுவும் செய்யவேணாம்.. எனக்கு பிடிக்கலே..’

மேலே பேச முடியாமல் தன் மடியில் தலைசாய்த்து விம்மிய தன் பேத்தியை தட்டிக்கொடுத்தபடியே தன் மகளை பார்த்தாள் மரகதம். ‘சரிடா கண்ணு.. அம்மே போய் பேசறேன். நீ கண்ண துடைச்சிக்கிட்டு நிமிர்ந்து உக்கார். அம்மே இப்ப வந்திர்றேன்.’

மீனா எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு அமர மரகதம் எழுந்து சென்று தன் மகளை இழுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். ‘ஏண்டி அறிவு கெட்டவளே. நீ எதுக்கு மாப்பிள்ளைக்கு தெரியாம அப்பாவுக்கு ஃபோன் பண்ணே? நீயாவே பிள்ளைய வீட்ல தனியா விட்டுட்டு வெளியே போய் பண்ணியா? அறிவு கெட்டவளே, நீ போயிருந்தப்போ குழந்தைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா.. சரி.. நீ செஞ்சது தப்புன்னு மாப்பிள்ளை கிட்ட ஒத்துக்கலாமில்ல.. அத விட்டுட்டு ஏறுக்குமாறா பதில் சொல்லியிருக்கே.. இல்லே?’

தாயின் சீற்றத்தை முற்றிலும் எதிர்பாராத பத்மா, ‘என்னம்மா நீங்க? நான் கேட்டிருந்தா மட்டும் ஃபோன் பண்ண விட்டுருவாங்களா அவங்க? எல்லாம் ஆம்பிளைங்கற திமிரு.. இனியும் நா இதுக்கு மசியமாட்டேன்..’

மரகதம் வீம்புக்கு வாக்குவாதம் செய்யும் தன் மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ‘ஏய், உனக்கென்ன உங்கண்ணன மாதிரி கிறுக்கு பிடிச்சிருக்கா? மாப்பிள்ளைக்கு மீனாவுக்கு சடங்கு செய்யறது பிடிக்கலேன்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குவம்? என்ன செய்யறதா உத்தேசம்?’

பத்மா குரோதத்துடன் தன் தாயைப் பார்த்தாள். ‘ஊம்? போய்யா சரிதான்னுட்டு என் பிள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டு உங்க கூடவே புறப்பட்டு வந்துருவேன்.’

மரகதம் அதிர்ந்துபோய் தன் மகளையே பார்த்தாள். ஆத்திரம் தாங்காமல் அவளை அடிக்க கை ஓங்கினாள். ‘என்னடி சொன்னே? அவ்வளவு ஆங்காரம் இருக்கா உன் மனசுல? பொட்டக்களுத.. கொளுப்பு ஜாஸ்தியாயிருச்சா? ஒரே பொண்ணாச்சே செல்லம் குடுத்தேன் பாரு.. என்ன சொல்லணும்.. சரி புறப்பட்டு வந்திட்டேன்னே வச்சுக்குவம்.. ஊர்ல வந்து எங்க தங்குவ? வீட்ல இருக்காளுகளே மூனு மவராசிங்க.. உன்ன நிம்மதியா தங்க விட்டுருவாளுகன்னா நினைக்கறே? மூளை கெட்ட சிறுக்கி.. புறப்பட்டு வந்துருவாளாம்.. இங்க பாருடி, ஒரு பொம்பள பிறந்த வீட்டுக்கு கவுரவமா வரணும்னா ஆம்பிளையோட வரணும்டி.. தனியா வந்தா வாழாவெட்டியாத்தான் வந்துருக்கா போலன்னு உன் மதனிமாருகளே கேலி பண்ணுவாளுங்க.. மறந்துராத..’

தன் தாயை இத்தனை கோபத்துடன் கண்டறியாத பத்மா.. 'ஆமா.. இந்த ஒரு சொல்லையே சொல்லி எங்கள மாதிரி ஆளுங்க வாய அடைச்சிருங்க.. அடிபட்டு உதைபட்டு கிடக்கறதே என்ன மாதிரி பொம்பளைங்களுக்கு விதி..’ என்று தனக்குள் முனகினாள்.

‘என்னடி முனகுறே? நான் சொன்னத அப்புறமா யோசிச்சி பாரு.. இப்ப வேலைய பாரு. காலைலருந்து காப்பி கூட குடிக்காம வாடி வதங்கி போயிருக்கு பாரு பிள்ளைங்க ரெண்டும்.. போ.. மாப்பிள்ளை வேற பாவம் காலைலருந்து ரூம்லயே அடைஞ்சி கிடக்குராறு.. ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மாவா லட்சணமா இருக்கப் பாரு. இன்னமும் சின்ன குழந்தைன்னு நினைச்சிக்கிட்டு அழும்பு பண்ணாத. போயி காப்பிய போட்டுக்கிட்டு மாப்பிள்ளைய போய் குளிக்க சொல்லு. அப்பா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்ததுக்கப்புறம் மாப்பிள்ளைக் கிட்ட பேசிக்கலாம். முறைக்காத, போடி.’

சிறிது நேரம் எரிச்சலுடன் தன் தாயையே பார்த்துக்கொண்டிருந்த பத்மா வேறு வழி தெரியாமல் அடுக்களைக்குள் நுழைந்து டிகாஷன் இறங்கியிருந்த காப்பியை மீண்டும் சுடவைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

‘ஏய் வீனா.. இங்க வா. இந்த காப்பிய கொண்டுபோய் உங்கப்பாக்கிட்ட குடு.’

வீனா தாத்தாவின் அருகிலேயே அமர்ந்துக்கொண்டு, ‘போங்கம்மா.. நா மாட்டேன். போனா அப்பா என்னையும் அடிச்சாலும் அடிப்பார். நீங்களே போய் குடுங்க.’ என்றாள்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற மகளையும் பிடிவாதத்துடன் சிணுங்கும் பேத்தியையும் மாறி, மாறி பார்த்த மரகதம், ‘இங்க கொண்டா.. நான் போய் கொடுக்கறேன்.’ என்ற கோப்பையை எடுத்துக்கொண்டு முன் அறைக்கு சென்றாள். மதனின் படுக்கையறைக் கதவு மூடப்பட்டிருக்கவே லேசாக தட்டினாள்.

அறையினுள் இருந்தவாறே வெளியில் நடப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மதன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று திறந்தான். ‘வாங்க அத்தை.’ என்றான் லேசான புன்னகையுடன்.

பதிலுக்கு புன்னகைத்த மரகதம் அவன் கையில் கோப்பையைக் கொடுத்துவிட்டு திரும்பினாள்.

‘மாமாவுக்கு இப்ப எப்படியிருக்கு?’ என்ற மதனைத் திரும்பி பார்த்தாள். ‘இப்ப பரவாயில்லை. நீங்க போய் குளிச்சிட்டு உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலருந்தா கொஞ்சம் வரச்சொல்ல முடியுமா.. அவங்களுக்கு பிரஷர் பார்த்துட்டா நிம்மதியா இருக்கலாம்.’

மதன் யோசித்தான். அவனுக்கு தேனாம்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகில் இருந்த ஒரு இருதயநோய் மருத்துவரைக் கடந்த சில மாதங்களுக்கு முன் போய் பார்த்த நினைவு வந்தது. அவர் கூப்பிட்டால் வீட்டுக்கு வருவாரோ என்னவோ. போய் பார்ப்போம் என்று தீர்மானித்தான்.

காப்பி கோப்பையைப் பார்த்தான்.. ஆடை படிந்து இருந்தது. அவனையுமறியாமல் முகத்தை சுளித்தான். அப்படியே மரகதத்திடம் திருப்பிக் கொடுத்தான்.

‘என்ன மாப்பிள்ளை? அப்படியே கொடுக்கறீங்க?’

அவளுடைய கேள்விக்கு அறைக்கு வெளியே இருந்து பதில் வந்தது. ‘அது ஒன்னுமில்லேம்மா.. அதுல ஆடை படிஞ்சிருக்கில்லே.. அதான்.. குடிக்கற காப்பி கூட அவங்க ரூல்படிதான் இருக்கணும்.. ஆனா அவங்க மட்டும் எந்த சட்டம், சம்பிரதாயத்தையும் கடைபிடிக்க மாட்டாங்க.’

மரகதம் அதிர்ந்துபோய் மதனைப் பார்த்தாள். அவனுடைய முகத்தில் கோபத்தின் சாயல் தெரியவே விரைந்து சென்று தன் மகளைப் பார்த்து முறைத்தாள். ‘ஏய் உன்னை கேட்டனா? போடி உள்ளே.. போய் மாப்பிள்ளைக்கு வேற காப்பிய போட்டுட்டு பலகாரத்தை எடுத்து வை.. போ..’

திரும்பி அறைக்குள் நின்றிருந்த மதனைப் பார்த்தாள். ‘அவளை தப்பா நினைச்சிக்காதீங்க மாப்பிள்ளை. விவரம் கெட்டவ.. நான் சொன்ன டாக்டர்..’

மதன் புன்னகையுடன் ‘சரி’ என்று தலையை அசைத்தான். ‘இருக்காருங்க அத்தை.. நான் குளிச்சிட்டு போய் பாக்கறேன். வீட்டுக்கு வருவாரான்னு தெரியலை.. கேட்டு பாக்கறேன். நீங்க போங்க.’

அறையிலிருந்து வெளியேறி மூலையில் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். மீனாவும் ‘அப்பாடா.. இனி அம்மே பார்த்துக்குவாங்க’ என்ற நிம்மதியில் தன் தந்தையைப் பார்த்து ஒரு அகண்ட புன்னகையை வீசினாள்.

மதனுக்கும் தன் மகளுடைய சிரிப்பு சந்தோஷத்தைத் தந்தது. தாழ்வாரத்தில் இருந்த வாளியை எடுத்து அடிபைப்பில் 'டபக்,டபக்' என்று தண்ணீர் நிரப்ப தொடங்கினான்.

தொடரும்..

2 comments:

G.Ragavan said...

அப்பாடி நல்ல வேளையா பத்மாவோட அம்மா கொஞ்சம் நிதானம் உள்ளவங்களா இருக்காங்க. பாப்பம். எல்லாம் சரியாப் போகும்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

எல்லாம் சரியாப் போகணும்னுதான் நானும் நினைக்கறேன்.

பாப்போம்.