23.5.06

சூரியன் 82

ரவி குளித்துமுடித்த தலையுடன் குளியலறையிலிருந்து படுக்கையறைக்குள் நுழைந்தான்.

மஞ்சு படுக்கையில்  படுத்துக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தது மெல்லிய ஒளியில் தெரிந்தது.

படுக்கையறைக்கு தெற்கே திறந்திருந்த பால்கணி வழியாக குளிர்ந்த காற்றுடன் பத்து மாடிகளுக்குக் கீழே சாலையில் அந்த நேரத்திலும் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஒலி லேசாய் கேட்டது.

ரவியின் கண்களுக்கு வெளியே பால்கணி வாசல் வழியாக வானம் மேகங்கள் ஏதும் இல்லாமல் நீலமாக, நட்சத்திரக் குவியலுடன் சட்டம் இடப்பட்ட சித்திரத்தைப் போல, அழகாகத் தெரிந்தது.

நேற்று இதே நேரத்தில் எதிர்காலத்தில் முற்றிலுமாக நம்பிக்கையிழந்து தவித்துக்கொண்டிருந்த தனக்கு இருபத்திநான்கு மணிநேரத்தில் மீண்டும் ஒரு புது வாழ்வு, ஒரு புது அத்தியாயம், ஒரு புது வாசல் திறக்கப்பட்டிருந்ததை நினைத்துப்பார்த்தான்..

தலையைத் துவட்டிக்கொண்டே படுக்கையறையிலிருந்து குட்டி மேசைக்கருகே சென்று நேரத்தைப் பார்த்தான்.  நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

அன்று மாலை கமலியின் இறுதி யாத்திரையில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ‘மனமும் உடம்பும் சோர்ந்துபோயிருக்குங்க. இப்படியே மைலாப்பூர் பீச்சு பக்கம் போங்க.  மெரீனா வேணாம். கூட்டமாருக்கும்.. இப்படியே பீச்சு மணல்ல இருட்டற வரைக்கும் படுத்திருக்கணும் போலருக்கு..’ என்று மஞ்சு கூற அதுவும் நல்லதுக்குத்தான் என்று வண்டியை கடற்கரை நோக்கி திருப்பினான் ரவி.

மஞ்சு நினைத்தது போலவே சாந்தோம் தேவாலயத்திற்கு பின்னாலிருந்த கடற்கரையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அன்று மாதத்தில் முதல் ஞாயிறானதால் இங்கிருந்து பார்த்தாலே மெரீனா விளக்குகளால் ஜொலிப்பது தெரிந்தது..

நேரம் ஏழு மணியைக் கடந்திருந்ததால் சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வருவோரைத் தவிர கடற்கரையிலும் அதனையொட்டியிருந்த சாலையிலும் கூட்டம் அவ்வளவாக இல்லாத அந்த அமைதி அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.

என்றைக்குமில்லாமல் மஞ்சு அவனுடைய கரங்களை வலிய வந்து பற்றிக்கொண்டு கடல் மணலில் நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்தான். நினைத்தபோதே இவளை நான் எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வும் தலைதூக்கியது.

கடற்கரை மணலில் கால்கள் புதையுற தொலைதூரத்தில் நடுக்கடலில் பிம்பமாய் தெரிந்த கப்பல்களைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்தோம் என்ற நினைவேயில்லாமல், மவுனமாய் நடந்தது அவர்களுடைய இருவருடைய மனப்பாரத்தையுமே வெகுவாய் குறைத்ததாக உணர்ந்தனர்.

‘சாவற வயசாங்க அது? அந்த பொண்ணோட மொகத்த பார்த்தீங்களா? எவ்வளவு அமைதி, சாந்தம்.. அந்த உதடுகள்ல லேசான ஒரு புன்சிரிப்பு.. எத்தன அழகான கொழந்தைங்க அது? மூளையில ரத்த நாளங்கள் வெடிச்சிருந்தா அந்த கொழந்தை என்ன வேதனைய அனுபவிச்சிருக்கும்? அம்மா தூக்க மாத்திரைய போட்டுக்கிட்டு ஒரு ரூம்ல.. பெஞ்சாதியோட படுக்க போற நேரத்துல சண்டைய போட்டுக்கிட்டு அப்பா ஒரு ரூம்ல.. யாருக்கும் வேண்டாம வயசான தாத்தா ஒரு ரூம்ல.. தங்கச்சியோட வேதனைய தலைவலின்னு நெனச்சிக்கிட்டு காப்பிய போட்டு குடுத்துட்டு திரும்பிப் போன அண்ணன்.. வீட்டுக்குள்ள எல்லாரும் இருந்தும்.. அவசரத் தேவைன்னு வந்தப்போ யாரும் இல்லாத அனாதையா.. என்ன கொடுமைங்க.. ஆனாலும் அந்த மொகத்துல எத்தனை அமைதி.. எப்படீங்க?’

ரவி அவள் தன் மனதிலிருந்த வேதனைகளையெல்லாம் கொட்டி தீர்த்துவிடட்டும் என்று அமைதியாய் அவளுடைய உள்ளங்கையை அழுத்திக்கொடுத்தான் பதில் பேசாமல்..

மஞ்சு அமைதியாய் முகம் மறைக்கும் அந்த மெல்லிருட்டில் விசும்புவது தெரிந்தும் ரவி மவுனமாகவே இருந்தான்.

மஞ்சுவை மாதிரி எங்களுக்கு இடையிலும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால்.. ஒருவேளை நான் வேலை, வேலையென்று ஓடிக்கொண்டிருக்க மாட்டேனோ.. எதிர்பாராமல் வந்த அந்த எண்ணம் அவனையே திடுக்கிட வைத்தது.

‘ரவி.. நமக்கு கமலிய மாதிரி ஒரு குழந்தையிருந்திருந்தா..?

அவன் நினைத்ததையே மஞ்சுவும் வாய்விட்டு கூற திடுக்கிட்டு அவளைப்பார்த்தான்.. அவள் கூறியதை ஆமோதிப்பதுபோல அவளுடைய கரத்தை லேசாக அழுத்தினான்.

‘நான் சாயந்திரம் சொன்னதப் பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா ரவி?’

மேசைக்கு சற்று மேலே சுவரில் பொருத்தப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரவி திடுக்கிட்டு மஞ்சுவை திரும்பிப்பார்த்தான்.

‘எதப்பத்தி மஞ்சு?’

மஞ்சு படுக்கையில் படுத்தவாறே திரும்பி அவனைப் பார்த்தாள். ‘முதல்ல இங்க வந்து படுங்க. சொல்றேன்.’

ரவி புன்னகையுடன் தன் கையிலிருந்த துவாலையை இருக்கையில் போட்டுவிட்டு படுக்கையில் ஏறி அவளருகில் படுத்தான்.

இருவரும் அருகருகே ஒரே படுக்கையில் படுத்து எத்தனை வருடங்களாகிவிட்டன என்று நினைத்தான் .

ரவியுடனான தன்னுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதிலிருந்தே அவனுடன் ஒரே படுக்கையில் படுப்பதை நிறுத்திவிட்டாள் மஞ்சு. அவர்களுடைய குடியிருப்பில் ஒரேமாதிரியான இரண்டு படுக்கையறைகளை அமைத்தது இதற்காகத்தானோ என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாகவே தனித்தனி அறையில் உறங்கினர்.

அந்த ஏற்பாடு ரவிக்கும் சாதகமாகவே இருந்தது. அவன் தனக்கு தோன்றிய நேரத்தில் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவள் செய்து வைத்திருந்த இரவு உணவையும் அவன் புறக்கணிக்கவே அவள் அவனுக்கென சமைத்துவைத்து காத்திருப்பதையும் நிறுத்திவிட்டு அவள் உண்டு முடிந்ததும் அடுத்த குடியிருப்பிலிருந்த மாமியுடன் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கமாகிப் போனது..

நாளடைவில் அவன் வீட்டுக்கு வருவதும் வாரத்தில் இரண்டோ மூன்றோ நாட்கள் என்ற நிலையையடைந்தபோதுதான் இனியும் தான் இந்த வீட்டில் இருந்து பயனில்லை என்று அவள் வெளியேறினாள்.

‘சாயந்திரம் நீ ஏதோ ஒரு மூடுல என்னவெல்லாமோ பேசினீயே.. சரி உன் மனப்பாரம் கொஞ்சம் கொறயட்டும்னுதான்  நானும் பேசாம இருந்தேன். இப்ப சொல்லு.. நீ எத நினைச்சிப் பார்த்தீங்களான்னு கேக்கறே?’

மஞ்சு திரும்பி அவனைப் பார்த்தாள். ‘கமலி மாதிரி நமக்கு ஒரு கொழந்தை இருந்தா எப்படியிருக்கும்னு கேட்டேனே?’

ரவிக்கும் அப்படியொரு சிந்தனை அன்று மாலை கமலியின் உடலைப் பார்த்ததுமே ஏற்பட்டதென்னவோ உண்மைதான். தங்களுக்கிடையில் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தை வேண்டுமென்பதை மஞ்சு அவனை விட்டு பிரிந்ததுமே அவனுக்கு தோன்றியது..

ஆனால் இப்போது.. தன்னுடைய அலுவலக வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்திலா?

‘இப்ப ஆஃபீஸ்லருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததும் இதப் பத்தி யோசிக்கலாமே மஞ்சு..’
மஞ்சு பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்  ரவி. அவனுடைய பதில் அவளுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

‘நா எதுக்கு சொல்றேன்னா...’

மஞ்சு திரும்பி அவனுடைய வாயைப் பொத்தினாள். ‘புரியுதுங்க.. ஒங்க வேதனை புரியுது.. நீங்க என்னோட யோசனை ஒதுக்கித் தள்ளாம.. சரிங்கறா மாதிரி பேசினதே போறுங்க.. நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். இப்ப இருக்கற பிரச்சினையெல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் இதப்பத்தி யோசிக்கலாம்கறது சரிதான். இவ்வளவு காலம் காத்திருந்திட்டோம்.. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே..’

கொஞ்ச நாளா? இந்த என்க்வயரி முடிஞ்சி.. அதுக்கப்புறம் என்ன டிசிஷன் ஆவுதோ.. இதுல புது சேர்மன் வேற.. அவர் எப்படி பட்டவரோ.. பழைய சேர்மனே கண்டினியூ பண்ணியிருந்தா அவன் பிசினஸ் பண்றதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கறது தெரியும். அவார்ட் கொடுத்த அவர் கையாலயே நிச்சயம் பனிஷ்மெண்ட் குடுத்திருக்க மாட்டார்..

இந்த புது சேர்மனும் அவனுடைய வங்கியிலேயே முன்பு பணிபுரிந்தவர்தான் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவன் வங்கியில் சேர்ந்து ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தபோது அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருந்ததால் அவருடன் பணிபுரிந்த அனுபவம் அவனுக்கில்லை..

எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது..

‘நீங்க எதையாவது நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதேள் ரவி.. நீங்க செஞ்சிருக்கிறது வெறும் ப்ரொசீஜரல் மிஸ்டேக்ஸ்தான். சாதாரணமா ஒரு மேனேஜர் பிசினஸ் பண்றப்போ எடுக்கக்கூடிய நியாயமான ரிஸ்க்கதான் நீங்க எடுத்துருக்கேள். சில முட்டாள்தனமான காரியங்களும் செஞ்சிருக்கேள் இல்லேன்னு சொல்லலே.. ஆனா அதற்கான வேலிட் ரீசன்சும் இருக்கறதாத்தான் நான் ஃபீல் பண்றேன். அதனால ஒங்கள என்க்வயரிலருந்து கம்ப்ளீட்டா விடுவிக்க முடியலைன்னாலும்.. நிச்சயமா பெரிய பாதகம் ஏற்படாமல் பாத்துக்க முடியும்னு நா நம்பறேன்.. ஒங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும். அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்..’

வழக்கறிஞர் நாராயணசாமிக்கு இதிலிருந்த நம்பிக்கை தனக்கும் இன்னமும் ஏற்படாமலிருப்பதை ரவி நினைத்துப் பார்த்தான். இதற்குக் காரணம் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லாதிருந்ததுதான்.

‘நமக்கு இறைவன் தந்திருக்கற அதிகாரத்தை நமக்கு நண்பர்களை ஏற்படுத்திக்கறதுக்கு யூஸ் பண்ணிக்கணும் ரவி.. நீங்க அப்படி செஞ்சிருந்தீங்கன்னா நீங்க மேனேஜரா இருந்த ப்ராஞ்சுக்குள்ளவே போறதுக்கு  இப்ப தயங்குவீங்களா?’

அவனுடைய துன்பநேரத்தில் தரவாக வந்த ஃபிலிப் சுந்தரத்தின் அறிவுரை எத்தனை உண்மையானது? அவன் நண்பர்களை சம்பாதிக்காதது மட்டுமல்ல.. விரோதிகளையுமல்லவா சம்பாதித்திருந்தான்?

‘என்ன ரவி யோசிக்கிறீங்க? இந்த என்க்வயரிய எப்படி ஃபேஸ் பண்றதுன்னா? நா இருக்கேன் ரவி.. நாம ரெண்டு பேருமா சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்.. கவலைய தூர தூக்கி வச்சிட்டு தூங்குங்க..’ என்றவாறு மஞ்சு அவனை இறுக அணைத்துக்கொள்ள அதை முற்றிலும் எதிர்பார்க்காத ரவியின் கண்கள் கலங்கி தலையணையை நனைத்தது..

தொடரும்..






5 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ரவிமஞ்சு விற்கு இனி நடப்பவை யாவும் நல்லவையாகவே இருக்கட்டும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ரவிமஞ்சு விற்கு இனி நடப்பவை யாவும் நல்லவையாகவே இருக்கட்டும்//

அதே, அதே :)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை//

கரெக்ட்.

siva gnanamji(#18100882083107547329) said...

எப்படி உங்க உத்தியை மாற்றினீங்க?
பொதுவா ஒவ்வொரு இடுகையிலும்
ரெண்டு குடும்பம்-ஒரு குடும்பத்தில் நல்லது; இன்னொன்றில் 'திக்.. திக்'
என்றுதானெ முடிப்பீங்க?

டிபிஆர்.ஜோசப் said...

ஒவ்வொரு இடுகையிலும்
ரெண்டு குடும்பம்-ஒரு குடும்பத்தில் நல்லது; இன்னொன்றில் 'திக்.. திக்'
என்றுதானெ முடிப்பீங்க?//

ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னுதான்:))