16.8.06

சூரியன் 118

செல்வமும் ராசம்மாளூம் வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நேரே திநகரிலிருந்த தங்களுடைய தலைமையகத்திற்கு சென்றனர்.

‘இங்க பார் செல்வம். நேத்தைக்கி ராத்திரி அப்பா நீயே ஏம்மா ராசேந்திரன் இடத்துலருந்து கம்பெனிய மேனேஜ் பண்ணக் கூடாதுன்னு கேட்டப்போ என்னடா இது நம்மளால மேனேஜ் பண்ண முடியுமான்னு ஒரு நிமிசம் யோசிச்சேன். ஆனா அடுத்த நிமிசமே ராசேந்திரன் என்னைய படுத்துன பாடு கண் முன்னால வந்து போச்சி.. இத நாம ஏன் ஒரு சேலஞ்சா எடுத்துக்கிறக்கூடாதுன்னு தோனுச்சி.. அதான் ஒடனே சரின்னுட்டேன்.. இத அப்பாவே முதல்ல எதிர்பார்க்கல. சரியா யோசிச்சி சொல்லும்மான்னார்.’

செல்வம் உடனே பதில் கூறாமல் புன்னகையுடன் தன் மாமன் மகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன செல்வம் அப்படி பாக்கே..?’

செல்வம் புன்னகையுடன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தான்.

‘என்னடா இவ.. கொஞ்சம் தலையில வெய்ட் கூடிட்டா மாதிரி தெரியுதேன்னு யோசிக்கியோ?’

செல்வம் உரக்க சிரித்தான். ‘சேச்சே.. ஒன்னைய பத்தி அப்படி நினைப்பேனா? மாமாவுக்கேத்த பொண்ணுன்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்.. மாமாவும் இப்படித்தான். ஒரு விசயத்துல இறங்கறதுக்கு ரொம்ப யோசிக்கல்லாம் மாட்டார். சட்டுன்னு எறங்கிருவார். என்னடா இது இவ்வளவு பெரிய தொகைய கொண்டு போடறாரேன்னு தோணும்.. ஆனா மாமா இதுவரைக்கும் எடுத்த எந்த ஸ்டெப்பும் ஃபெயிலாவுல.. என்ன, சம்மந்திய தேர்ந்தெடுக்கற விசயத்துலதான் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாமோன்னு தோனுது.’

ராசம்மாள் பதில் பேசாமல் தன் கையிலிருந்த பேப்பர் வெய்ட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘அதுக்கு நாந்தான் காரணம் செல்வம். நான் பிடிச்ச பிடிவாதம் அப்படி. அன்னைக்கி என் கணவுகள் எல்லாமே சினிமா ஆக்ட்ர மாதிரி ஒரு புருசன புடிக்கணும். என்னெ கருப்பு, கருப்புன்னு சொல்லி கேலி செஞ்ச என் ஃப்ரெண்ட்ஸ் முன்னால அவர கொண்டு போயி நிறுத்தி பாருங்கடின்னு பெரும அடிச்சிக்கணும்.. இது ஒன்னுதான் என் நெனப்பு முழுசும்.. அம்மாவும் என் கூட கட்சிங்கறதுனால அப்பாவால ஒன்னும் செய்ய முடியல..’

ராசம்மாளின் குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்க செல்வம் மேசைக்கு குறுக்கே எம்பி அவளுடைய கரங்களைப் பிடித்து அழுத்தினான்.. ‘ஏய்.. இப்ப எதுக்கு அதெல்லாம்?’

ராசம்மாள் மெள்ள தன் கரங்களை விடுவித்துக்கொண்டு எழுந்து சாலையை நோக்கியிருந்த ஜன்னல் வழியாக வெளியே சாலையை பார்த்தாள்.

நான்கு மாடிகளுக்குக் கீழே திநகர் தியாகராய தெரு படு பிசியாக இருந்தது. திருமணம் முடிந்த புதிதில் இதே அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள்.. இந்த இரண்டு வருடங்களில் கடைகளின் எண்ணிக்கையில் பெரிதாய் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லையென்றாலும் வந்து சென்ற வாகனங்களின் எண்ணிக்கையில் பயங்கர மாறுதல் ஏற்பட்டிருந்ததை உணர முடிந்தது.

வார நாளில் நண்பகல் நேரத்திலும் எப்படி இத்தனை பேர் கடைகளில் ஏறி இறங்கி..

‘லஞ்ச் ப்ளேட் மட்டும் வார நாளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேல இருக்கும்மா.’ என்று கல்லா பெட்டியிலிருந்த மேனேசர் ஒருமுறை அவளிடம் கூறியபோது நம்ப முடியவில்லை அவளால்.

‘என்ன யோசிக்கே ராசி?’

செல்வத்தின் குரல் அவளை நிகழ்காலத்திற்கு கொண்டுவர திரும்பி பார்க்காமலே பேசினாள். ‘அன்னைக்கிருந்த ராசி இல்ல செல்வம் இந்த ராசி.. இந்த ரெண்டு வருசத்துல எனக்கு கிடைச்ச பாடம் இருக்கே.. அது எந்த பொண்ணுக்கு கிடைச்சிருந்தாலும் அவளும் என்னைய போலவே அடியோட மாறிப்போயிருப்பா.. அப்ப இருந்த ராசி வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத ஒரு பணக்கார அப்பாவோட ஒரே பொண்ணு.. ஆனா இப்பருக்கற ராசி.. தனக்கு நடந்த அக்கிரமங்களுக்கு பழிவாங்க துடிக்கற வெறும் ஒரு சராசரி பெண்ணா மட்டும் இல்ல. பொண்ணுன்னா சமையல்கட்டுக்குத்தான் லாயக்குன்னு அடக்கிவச்சிருக்கற ராசேந்திரன் மாதிரி ஆம்பிளைகளுக்கு எங்களாலயும் நீங்க சாதிச்ச அளவுக்கு மட்டுமில்ல அதுக்கு மேலயும் சாதிக்கமுடியும்னு செஞ்சிக்காட்ட துடிக்கற ஒரு...’

அவளுடைய குரலில் இருந்த உறுதியைப் பார்த்து செல்வம் பிரமித்துப் போனான். இது அவன் இதுவரை அறிந்திராத ராசம்மாள் என்பதை உணர்ந்தான்.. இதில் தன் பங்கு என்ன என்று சென்றது அவனுடைய சிந்தனை.

அதற்கு பதிலளிப்பது போல், ‘இப்ப சொல்லு.. உன்னால எனக்கு எந்த அளவுக்கு இதுக்கு ஹெல்ப் பண்ண முடியும்?’ என்றாள் ராசம்மாள் தன் இருக்கைக்கு திரும்பியவாறு..

‘ஒனக்கு என்ன வேணும்னாலும் செய்வேன் ராசி..’

ராசம்மாள் பதிலளிக்காமல் சலனமில்லா முகத்துடன் சில விநாடிகள் அவனையே பார்த்தாள்.
‘ஒன்னால எவ்வளவு நாளைக்கு சென்னையில தங்க முடியும்?’

‘அப்படீன்னா?’

‘ஊர்ல நீ இப்ப என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?’

செல்வம் சிரித்தான். ‘என்ன ராசி நீ ரொம்ப சீரியசா கேள்வி கேக்கே? ஒனக்கு இப்ப என்ன தெரியணும்?’

ராசம்மாள் முறைத்தாள். ‘இங்க பார் செல்வம். I am dead serious. புரிஞ்சிக்கோ. இப்ப நீ திருநெல்வேலியில செஞ்சிக்கிட்டிருக்கற பிசினஸ் என்ன? தெரியாமத்தான் கேக்கேன். நம்ம மாதிரியே ஹோட்டல் பிசினசா.. இல்ல வேற ஏதாச்சுமா?’

செல்வம் பிடிவாதமாக, ‘எதுக்கு கேக்கே.. ஒனக்கு எவ்வளவு நாளைக்கு நான் இங்க இருக்கணுமோ அவ்வளவு நாளைக்கு இருக்கேன் ராசி.. பெறவென்ன?’ என்றான்.

ராசம்மாள் அவனை தீர்க்கமாகப் பார்த்தாள். ‘அது போறாது.. நீ இங்க என் கூடவே இருக்கணும். நீதான் என்னோட ஸ்ட்றேட்டஜிஸ்ட்.. ஒன்னைய முன் வச்சித்தான் ராசேந்திரன் கூட கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்போறேன்.. சொல்லு..’

அடேங்கப்பா! என்று நினைத்தான் செல்வம். இவ மாமாவுக்கு மேல இருப்பா போலருக்கே என்று ஒரு நொடி வாயடைத்துப் போய் அவளையே பார்த்தான்.

‘நீ திருநெல்வேலியில ரன் பண்ணிக்கிட்டிருக்கற பிசினசோட டர்னோவர் எவ்வளவு இருக்கும்? எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணியிருப்பே?’

செல்வம் அவளுடைய வர்த்தக தொனியைக் கேட்டு உரக்க சிரித்தான். ‘ஏய்.. ஏய்.. என்ன பயங்கர பிசினஸ் உமனாருப்பே போலருக்கு?’

ராசம்மாள் சிடுசிடுத்தாள். ‘செல்வம் விளையாடாத.. சீரியசா கேக்கேன்.. உன் பிசினஸ் மொத்தத்தையும் நா வாங்கிக்கறேன்.. நீ ஏதோ ஸ்வீட் கடை வச்சிருக்கேன்னு அப்பா சொல்லியிருக்கார். அத அப்படியோ ஹோட்டலா கன்வர்ட் செஞ்சிரலாம். அது நம்ம ஹோட்டலோட பிராஞ்சாயிரட்டும்.. அத பாத்துக்கறதுக்கு நம்ம மத்த பிராஞ்ச் மாதிரி ஒரு மேனேஜர போட்டுரலாம். நீ இங்க பெர்மனெண்டா ஷிஃப்டாயிரு.. என்ன சொல்றே?’

செல்வம் ஊருக்கு கிளம்பி வந்தபோது எடக்கு மடக்காய் கேள்வி கேட்ட தன் மனைவி செல்வியை நினைத்துப் பார்த்தான். ராசி சொல்வதைக் கேட்டால் அவள் வேறு என்ன வீம்பு செய்வாளோ என்று நினைத்தான்.

‘என்ன ,செல்வி என்ன சொல்வாளோன்னு நினைக்கியாக்கும்?’

செல்வம் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். இல்லையென்று தலையை அசைத்தான்.

ராசம்மாள் சிரித்தாள். ‘ஏய் பொய் சொல்லாத. பாம்பின் கால் பாம்பறியுங்கறத கேட்டதில்ல? செல்விய பத்தி எனக்கு தெரியும். அவ வாயடிச்சாலும் புத்திசாலி. அதனாலயே எனக்கு அவள புடிக்கும். அவகிட்டருந்து எதயும் நீ மறைக்காத. அதுதான் முக்கியம். நீ ஊருக்கு வரும்போதுகூட அப்பா கூப்ட்டாருன்னுதான சொல்லியிருக்கே. ஆனா நா செல்விக்கிட்ட என்கூட வக்கீல் வீட்டுக்கு வரணும்னுதான் சொன்னேன்.. எப்பவுமே பொம்பளக்கிட்டருந்து ஒரு ஆம்பள மறைக்கிறப்பத்தான் சந்தேகமே வரும்.’

‘சரி.. நீ சொல்றது சரிதான். செல்விக்கு நம்ம ரெண்டு பேரையும் பத்தி லேசா சந்தேகம் இருக்கறது உண்மைதான். அதனால அவ அவ்வளவு ஈசியா சென்னைக்கு ஷிப்ட் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டா. ஆனா அதப்பத்தி நீ கவலப்படாத.. நா பாத்துக்கறேன்.. வந்தா ஆச்சி.. இல்லைன்னா நீ இங்கயே கெடன்னு நா பொறப்பட்டு வந்துருவேன்..’

ராசம்மாள் இல்லையென்பதுபோல் தலையை உறுதியுடன் அசைத்தாள்.

‘இல்ல செல்வம். நீயும் ராசேந்திரன மாதிரி பிஹேவ் பண்ணாத.. செல்வியும் நம்ம போராட்டத்துல முழுசா கலந்துக்கணும். அப்பத்தான் நம்மளால ராசேந்திரனையும் மாமாவையும் முழுசா ஜெயிக்க முடியும். செல்விக்கு இதுல ஈடுபாடு இல்லன்னு ராசேந்திரனுக்கோ மாமாவுக்கோ தெரிஞ்சா போறும் அவள ஒனக்கு எதிரா திருப்பி விட்டுருவாங்க.. அப்புறம் என்னைய மாதிரியே ஒன் வாழ்க்கையும் நாசமா போயிரும்.. வேணாம்.’

செல்வம் உண்மையிலேயே வியந்துபோய் அவளைப் பார்த்தான். எப்படி இவளுக்கு இரண்டு வருடங்களில் இத்தனை புத்திசாலித்தனம் வந்திருக்கும்?

‘நீ சொல்றதும் வாஸ்தவந்தான் ராசி.. இப்ப சொல்லு நான் என்ன செய்யணும்?’

ராசம்மாள் மீண்டும் எழுந்து அறையின் குறுக்கே நடந்துச் சென்று ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தாள். சிலுவை மாணிக்கம் நாடார் காரிலிருந்து இறங்குவது தெரிந்தது. அப்பா மேல ஏறி வர்றதுக்கு இன்னும் அஞ்சி நிமிஷம் ஆகும். திரும்பி செல்வத்தைப் பார்த்தாள்.

‘இங்க பார் செல்வம்.. அப்பா வந்துக்கிட்டிருக்கார். நாம இப்ப பேசிக்கிட்டிருந்தது நமக்குள்ளயே இருக்கட்டும். முக்கியமா செல்வி விஷயம். நான் சமயம் பார்த்து அப்பாக்கிட்ட சொல்லிக்கறேன்.. நீ இன்னும் ரெண்டு நாளைல வந்திடறேன்னு மட்டும் செல்விக்கு ஃபோன் போட்டு சொல்லு. அப்புறமா நானும் அவகிட்ட பேசறேன். என்ன, சரியா?’

அவள் பேசி முடித்து வாயிலைப் பார்க்கவும் சிலுவை மாணிக்கம் நாடார் அறைக்குள் புன்னகையுடன் நுழையவும் சரியாக இருந்தது.

ராசம்மாள் தன் தந்தையின் புன்னகைப் பூத்த முகத்தைப் பார்த்தாள். நாடார் தன் உணர்ச்சிகளை லேசில் வெளியே காட்ட மாட்டார் என்பது அவளுக்கு தெரியும். ஆகவே, ‘என்னப்பா ரொம்ப சந்தோசமாருக்கீங்க போலருக்கு?’ என்றாள் புன்னகையுடன்.

நாடார் உரக்க சிரித்தவாறே சற்றுமுன் ராசம்மாள் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.

'ஆமாம்மா... நா கொஞ்சமும் எதிர்பார்க்காத விசயம் ஒன்னு இன்னைக்கி நடந்திருச்சி.. அதான்..’ என்றவாறு தன் எதிரில் இருந்த் இருவரையும் மாறி, மாறி பார்த்தார்.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ராசி-செல்வி-செல்வம் முத்தரப்பு அட்டாக்லெ எதிர் தரப்பு என்ன ஆகப்போவுதோ....
பிரச்சினைகள் நிறைய ஏற்படுமெனினும் இறுதி வெற்றி
இவர்களுக்கே இருக்கும்
என்ன ஒண்ணு குழ்ந்தையை சாக்காக வைத்து ராஜேந்திரன் சரண்டெர் ஆகாமலிருக்கணும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இறுதி வெற்றி
இவர்களுக்கே இருக்கும்//

இருக்கும், இருக்கும்:)