30.8.06

சூரியன் 122

வங்கியின் தலைமையக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடைய சார்பில் வங்கியின் புது தலைவர் எம்.ஆர். மாதவனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்புக்கு செய்ய வேண்டியிருந்த இறுதி நேர ஏற்பாடுகளை தன்னுடைய எச்.ஆர் இலாக்கா அதிகாரிகளுடன் மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார் ஃபிலிப் மாதவன்.

இறுதியில் ஒருமுறை மேடையலங்காரத்தையும் மேடைக்கு பின்புறம் தொங்கவிடப்பட்டிருந்த திரையில் பொருத்தப்பட்டிருந்த வரவேற்பு எழுத்துக்களின் அமைப்பையும் சரிபார்த்துவிட்டு சுந்தரலிங்கத்தை தொலைப்பேசியில் அழைத்தார். ‘சார் சேர்மன அழைச்சிட்டு வந்தீங்கன்னா ஃபங்ஷன துவக்கிரலாம்.’

அடுத்த ஐந்து நிமிடத்தில் மாதவன் வந்து சேர ஹாலில் குழுமியிருந்த ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்க ஃபிலிப் சுந்தரத்தின் வரவேற்புரையுடன் துவங்கிய விழா துவங்கியது.

விழாவுக்கு முத்தாய்ப்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடைய தொழிற் சங்க தலைவர்களுடைய உரை துவங்க மேடையிலமர்ந்திருந்த சேதுமாதவன் பதற்றத்துடன் இந்த முரளி எங்கே போய் தொலைந்தான் என்று இங்கும் அங்கும் தேடிக்கொண்டிருந்தார்.

அவனிடம் ஏற்கனவே மாதவன் அலுவலகத்திற்குள் நுழையும்போது கல்கத்தா விவகாரத்தை மையமாக வைத்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். சரி என்று சம்மதித்திருந்தவன் அந்த பக்கம் தலையே காட்டாமல் இருந்துவிட சேதுமாதவன் மாதவனுக்கு லாபியில் வைத்து வரவேற்பளித்து முடித்து நேரே தன்னுடைய கேபினுக்குச் சென்று முரளியை தொலைபேசியில் அழைத்து சகட்டு மேனிக்கு ஏசிவிட்டு, ‘டேய் இன்னைக்கி சாயந்தரம் நம்ம எச்.ஓ ஸ்டாஃப் குடுக்கப்போற ரிசப்ஷன்லயாவது வந்து இந்த மேட்டர சொல்லி இத உடனே சேர்மன் தலையிட்டு தீர்த்து வைக்கலனா ஸ்ட்ரைக் பண்ணுவோம்னு நீ பேசணும். இல்லே நா என்னோட சுயரூபத்த காட்டிருவேன்.’ என்று மிரட்டியிருந்தார்.

‘விஷமிக்கேண்டா சாரே.. ஞான் நிச்சயமாயிட்டு வரேன்.. வந்து ஒரு பெகளம் இண்டாக்காண்டு விடுல்லா..’ என்றானே எங்கே போய் தொலைந்தான்.

அவருடைய இந்த பதற்றத்தை ஹாலின் கோடியிலிருந்து கவனித்த முரளியின் தலைமையில் செயலாற்றி வந்த சங்கத்தின் காரியதரிசி வாசகன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

***

அன்று காலையில் சங்க கூட்டத்தில சேதுமாதவன் அழைத்த விவரத்தை முரளி தெரிவித்ததும் ‘இங்க பார் முரளி. அந்த சேதுமாதவன இப்பத்திக்கு பகைச்சிக்காம இருக்கறதுதான் நல்லது. பேசாம நாம லஞ்ச் டைம்ல போயி எச்.ஓ முன்னால நின்னு ஒரு டெமோ செஞ்சிட்டு வந்துருவோம். புது சேர்மனுக்கும் நாம யாருன்னு காமிக்கறது நல்லதுதானே. என்ன சொல்றே?’ என்று வாசகன் கூற மற்றவர்கள் அதற்கு ஒத்து ஊதினர்.

முரளி பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். அவன் மனம் அன்று காலையில் நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை அசைபோட்டது..

***

அன்று காலையில் முரளி அலுவலகத்திற்குள் நுழையும்போதே, ‘முரளி சார் ஒங்களுக்கு ஒரு ஃபோன்.’ என்று பியூன் அழைக்க அவசரமாக சென்று, ‘யாருங்க?’ என்றான்.

‘முரளி நா நந்து பேசறேன்.’

‘என்ன நந்து? வந்தனா மேடத்த பார்த்தாச்சா? இப்ப எங்க இருக்கே?’

‘பார்த்தாச்சி. நான் அவங்க வீட்லருந்துதான் பேசறேன். இப்ப மேடத்துக்கு ஒரு ஃபோன் வந்துது. மேடத்துன சொகமில்லல்லே அதனால நாந்தான் ஆன்சர் செய்தது. யாரோ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ரிப்போர்ட்டராம். முக்கியமான விஷயமா மேடத்துக்கிட்ட பேசணும்னு சொன்னார். நான் அவங்களுக்கு ஒடம்பு சரியில்லை, எங்கிட்ட சொன்னீங்கன்னா நா அவங்ககிட்ட அப்புறமா சொல்றேன்னு சொன்னேன்.’

முரளியின் மொபைல் சிணுங்க யாரென்று பார்த்தான். சேதுமாதவன்!

‘நந்து என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு. அந்த சேதுமாதவன் லைன்லருக்கான்.’

நந்து கடகடவென்று எதிர்முனையில் இருந்து கூறிய செய்தி முரளியை அதிர்ச்சியடைய வைத்தது. ‘என்ன சொல்றே நந்து? நீ சொல்றது உண்மையா? யாரந்த அந்த ரிப்போர்ட்டர்? ஃபோன் நம்பர் ஏதும் குடுத்தாரா?’

‘இல்ல. ஆனா அவரோட பேர சொன்னார். எதுக்கு கேக்கறே?’

‘நீ பேரச் சொல்லு. எதுக்குன்னு அப்புறமா சொல்றேன்.’ என்று முரளி இணைப்பைத் துண்டித்துவிட்டு மொபைலில் காத்திருந்த சேதுமாதவனிடம் பேசினான்.

‘எந்தா சார்?’

எதிர்முனையிலிருந்து சேதுமாதவன் அன்று காலையில் முரளி எச். ஓ. வாசலில் கோஷம் எழுப்பவில்லை என்பதற்காக வசை மாரி பொழிய முரளி ஒரு கேலிப் புன்னகையுடன் பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘இங்க பார் முரளி. தன்டெ களி என்டெடுத்து வேண்டா கேட்டோ. தான் மாத்தரம் இன்னு வைகுன்னேரம் மாதவண்டெ ரிசப்ஷன் சமயத்து வந்து பிரஸ்னம் க்ரியேட்டெய்தில்லெங்கில் ஞான் தனிக்கி ஷ¤வராயிட்டு பிரஸ்னம் உண்டாக்கும். பரஞ்சேக்காம்.’

‘விஷமிக்கேண்டா சாரே.. ஞான் நிச்சயமாயிட்டு வரேன்.. வந்து ஒரு பெகளம் இண்டாக்காண்டு விடுல்லா..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு மேலாளர் அறைக்குள் நுழைந்து, ‘சார் நம்ம பிராஞ்சுல இந்தியன் எக்ஸ்பிரஸ் அக்கவுண்ட் இருக்குல்லே?’ என்றான்.

சாதாரணமாகவே அவனுடைய பெயரைக் கேட்டாலே கலக்கமடையும் மேலாளர் பதறிக்கொண்டு எழுந்து, ‘ஆமாம் முரளி சார்.’ என்றார்.

முரளிக்கு அவருடைய பதற்றத்தைப் பார்க்க தமாஷாக இருந்தது. இத்தனைக்கும் முரளி தான் பணி புரியும் கிளையில் எந்தவித தகராறும் செய்ய மாட்டான்.

மேலும் தன்னுடைய கிளை மேலாளர் சரியான பயந்தாங்குளி என்று அவனுக்கு தெரிந்திருந்ததால் எதற்கு பாவம் என்று அவர் இருந்த பக்கமே போகமாட்டான். அத்துடன் அவர் ஃபிலிப் சுந்தரத்தின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதும் அவனுக்கு தெரியும். இப்போதயை நிலையில் வங்கியின் அதிகாரிகளுக்குள் சுந்தரலிங்கத்தையடுத்து அவனுக்கு மிகவும் பிடித்த அதிகாரி ஃபிலிப் என்பதாலும் மேலாளரிடம் ஒரு சிறு மரியாதையுடன் நடந்துக்கொள்வான்.

‘சார் பதறாதீங்க. எனக்கு ராமகிருஷ்ணன்னு ஒரு ரிப்போர்ட்டர்கிட்ட பேசணும். அவரோட ·போன் நம்பர் மட்டும் நீங்க வாங்கி குடுத்தா நல்லாருக்கும். ஒரு முக்கியமான விஷயம்.’

இவன் காலங்கார்த்தால வந்து ஏதாவது பிரச்சினை செய்யப் போறானோ என்று நினைத்திருந்த மேலாளருக்கு, அப்பாடா இவ்வளவுதானா என்று இருந்தது. ‘அவ்வளவுதானே சார். நீங்க ஒங்க சீட்டுக்கு போங்க. நா அஞ்சு நிமிஷத்துல கேட்டு சொல்லிடறேன்.’

அடுத்த சில நிமிடங்களில் அவன் விரும்பிய தொலைப் பேசி எண் கிடைத்ததும் தன்னுடைய செல் ஃபோனில் அழைத்து தன்னை வந்தனா மேடத்தின் பி.ஏ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ‘ராமகிருஷ்ணந்தானே ஒங்க பேரு? மேடத்துக்கு ஃபோன் செஞ்சிருந்தீங்களாமே? அவங்கதான் என்னெ ஒங்கக்கிட்ட பேசி அந்த நியூஸ் பேப்பர்ல வராம பாத்துக்க சொன்னாங்க.’ என்றான்.

எதிர் முனையில் லேசான தயக்கம் தெரியவே முரளி, ‘இங்க பாருங்க ராமகிருஷ்ணன். இன்னைக்கித்தான் புது சேர்மன் சார்ஜ் எடுத்திருக்கார். இந்த நேரத்துல நீங்க பாட்டுக்கு யாரோ சொன்னாங்கன்னு இந்த மாதிரி ஒரு நியூச போட்டுட்டீங்கன்னா பிரச்சினையாயிரும்.’ என்றான் உறுதியான குரலில்.

‘அதெப்படி சார்? நாங்க போடலன்னாலும் மத்த பேப்பர்ங்கள்ல நிச்சயமா வரத்தான் போவுது. நாங்க முந்திக்கலாம்னு பார்த்தோம். இருந்தாலும் வந்தனா மேடத்துக்கிட்டருக்கற ஃப்ரெண்ட்ஷிப்புக்காக அவங்ககிட்ட சொல்லிரலாம்னுதான் கூப்ட்டேன். ஆனா அவங்க ரிலேட்டிவ் யாரோதான் ஃபோன் எடுத்தாங்க. அவர் மேடத்துக்கிட்ட சொல்லிருப்பார்னு நினைக்கிறேன். இதுக்கு மேல என்னெ பண்ண சொல்றீங்க?’

முரளி இவரை எப்படி சமாதானப்படுத்தி நான் நினைத்திருந்ததை சாதிப்பதென யோசித்தான்.

‘ஒங்க சங்கடம் புரியுது சார். நீங்க ஃபோன் செஞ்ச விஷயத்த மேடத்தோட ரிலேட்டிவ் எங்கிட்ட சொன்னாங்க. ஒங்கள நியூச போடாதீங்க சொன்னது தப்புத்தான். ஒத்துக்கறேன். ஆனா நீங்க போடப்போற மேட்டரால பேங்கோட பேருக்கு பெரிசா ஏதும் பாதிப்பு வராம பாத்துக்கிட்டா போறும்னுதான் மேடம் கேட்டாங்க. அதான் ஒங்கள கூப்ட்டேன்.’

எதிர்முனையில் ராமகிருஷணன் அவனுடைய கோரிக்கையை மறுக்கமுடியாமல் தயங்குவதை உணர்ந்த முரளி மேலும் தன்னுடைய கோரிக்கையை மெள்ள வலியுறுத்தினான். ‘ராமகிருஷ்ணன், நீங்க போடப்போற மேட்டரை ஒரு ஃபேக்ஸ் மூலமாவது அனுப்புங்களேன். நான் அஞ்சே நிமிஷத்துல எங்க சேர்மன்கிட்ட காட்டிட்டு சொல்றேன். பேப்பர்ல வர்றதுக்கு முன்னால அவருக்கு தெரிவிக்கறதுக்காகத்தான் கேக்கறேன். இல்லேன்னு சொல்லிராதீங்க.’

‘சார் நீங்க யாருன்னே எனக்கு தெரியல. நீங்கதான் மேடத்தோட பி.ஏன்னு சொல்லிக்கிறீங்க. ஆனா போன தடவ நா மேடத்த பாக்க வந்தப்போ ஒரு மேடம்தான் பி.ஏவா இருந்தாங்க. அதான் யோசிக்கறேன்.’

சட்! என்று உதட்டைக் கடித்துக்கொண்டான் முரளி. உடனே சமாளித்துக்கொண்டு, ‘சரிங்க ராமகிருஷ்ணன். ஒங்களுக்கு எம்மேல நம்பிக்கை இல்லேன்னா எங்க சேர்மனோட ஆஃபீஸ் ஃபேக்ஸ் நம்பர தரேன். அவரோட பி.ஏ. ரூம்லதான் இந்த ஃபேக்ஸ் இருக்கு. அந்த நம்பருக்கு நீங்க அனுப்பினா போறும். ஒரு நிமிஷம் ஃபோன் நம்பர் தரேன்’ என்றவாறு தன்னுடைய மேலாளர் அறைக்குள் நுழைந்து எதிர்முனையில் இருப்பவருக்கு கேட்கவேண்டும் என்பதற்காகவே, ‘சார் நம்ம சேர்மனோட பி.ஏவோட ஃபேக்ஸ் நம்பர கொஞ்சம் பாத்து சொல்லுங்க?’ என்றான் சற்று உரக்க.

அவர் பதறிக்கொண்டு எண்ணைத் தேடிப்பிடித்து கூற முரளி அதை எதிர்முனையிலிருந்த நிரூபரிடம் கூறிவிட்டு, ‘மறக்காம செஞ்சிருங்க சார்.’ என்றான்.

‘சரி சார். நா எங்க எடிட்டர்கிட்ட பேசிட்டு அனுப்பறேன். மேடத்துக்கிட்ட சொல்லிருங்க.’

முரளி மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு சுபோத் மிஷ்ராவை அழைத்து இன்னும் சற்று நேரத்தில் வரப்போகும் ஃபேக்சை உடனே சேர்மனிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ‘இங்க பார் சுபோத். இந்த விஷயத்துல நான் சம்பந்தப்பட்டிருக்கறது வெளிய வரக்கூடாது. எந்த சந்தர்ப்பத்துலயும். புரியுதா?’

‘Yes Murali Sir. I’ll not reveal your name under any circumstances.’

இணைப்பைத் துண்டித்துவிட்டு, ‘நன்றி சார்’ என்று மேலாளருக்கு நன்றி தெரிவித்தான். ‘சார். நா முக்கியமான விஷயமான விஷயமா யூனியன் ஆஃபீஸ் வரைக்கும் போரேன். தப்பா நினைச்சிக்காதீங்க.’

மேலாளர் 'ஐயா மேக்கொண்டு ஏதும் ஹெல்ப் கேக்காம நீ இங்கருந்து போனா போறும்' என்று தனக்குள் நினைத்தவாறு, ‘நீங்க போங்க முரளி சார். நோ ப்ராப்ளம்.’ என முரளி புன்னகைத்தவாறு அறையை விட்டு வெளியேறி தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

***

‘என்ன காம்ரேட்.. என்னமோ யோசிச்சிக்கிட்டிருக்காப்லருக்கு? என்ன யோசனை?’

முரளி திடுக்கிட்டு நிமிர்ந்து தன்னெதிரில் நின்ற தன்னுடைய சங்க காரியதரிசியையும் அவனைச் சுற்றி அமர்ந்திருந்த தன்னுடைய சங்க சகாக்களையும் பார்த்தான்.

‘இங்க பாருங்க. அந்த கல்கத்தா விஷயத்த நானே முன்னெ நின்னு தீர்த்துவச்சேன். இப்ப அத வச்சி என்னத்த டெமோ பண்றது? இது சேது சாருக்கும் நம்ம புது சேர்மனுக்கும் இடையில நடக்கற கோல்ட் வார். நமக்கு அதுல எந்த லாபமும் கிடைக்காது. அவங்கள்ல யார் ஜெயிச்சா நமக்கென்ன? இல்ல தோத்தாத்தான் நமக்கென்ன? நானும் நேத்து இப்படி ஒரு கலாட்டா செஞ்சி புது சேர்மனுக்கு நம்ம ஸ்ட்ரெங்க்த்த காமிச்சா என்னன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கி காலைல நாம அங்க போகலேன்னதும் நம்ம ஈ.டி சேது சார் என்னைய கேவலமா பேசிட்டார். அப்பவே தீர்மானிச்சிட்டேன். அந்தாளு சொன்ன பிறகாரம் செய்யறதில்லன்னு.. அதனால..’

‘அதனால.. என்ன சொல்லு..’

முரளி எழுந்து நின்றான். ‘நம்ம சேர்மனோட ரிசெப்ஷன்ல வந்து இந்த விஷயத்த பேசணும்னு சேது சார் சொன்னத நான் செய்யப்போறதில்ல. ஏன் அந்த ஃபங்ஷனுக்கே வரப்போறதில்ல. வாசகன், நீங்க நம்ம சங்கத்தோட சார்பா போய்ட்டு வாங்க. ஆனா மத்த அசோஷியன்காரங்க பேசறா மாதிரி ஃபார்மலா புது சேர்மனுக்கு எங்க ஒத்துழைப்பு உண்டுன்னு பேசிட்டு வந்துருங்க.’

சங்க அலுவலகத்திலிருந்த எல்லோரும் திகைத்து நிற்க அதை பொருட்படுத்தாமல் எல்லோரையும் நோக்கி கரங்களை குவித்துவிட்டு வெளியேறினான் முரளி.

****

‘அடுத்தபடியாக நம்முடைய ஏ.ஐ.பி.ஈ.எ ஊழியர் சங்க காரியதரிசி வாசகனை பேசுமாறு அழைக்கிறேன்.’

ஹாலின் மறுகோடியிலிருந்து வாசகன் சாவகாசமாக மேடையை நோக்கி நகர மேடையில் அமர்ந்திருந்த சேதுமாதவன் பற்களைக் கோபத்துடன் கடித்தவாறு எங்கே முரளியைக் காணோம் என்று தேடினார்.

தொடரும்..

3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

தொழ்ற்சங்கத்திலே இவ்வளவு உள்குத்து இருக்கா?

பிலிப் சுந்தரத்தெ பிலிப் மாதவனா
தட்டச்சிட்டிங்கனு நினைக்கிறேன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

தொழ்ற்சங்கத்திலே இவ்வளவு உள்குத்து இருக்கா?//

மேனேஜ்மெண்ட் தரப்புல எவ்வளவு உள்குத்து இருக்கோ அதுக்கும் மேல இருக்கும் தொழிற்சங்கத்துல.. இன்னும் இருக்கு.. அப்பப்போ சொல்றேன்..

பிலிப் சுந்தரத்தெ பிலிப் மாதவனா
தட்டச்சிட்டிங்கனு நினைக்கிறேன் //

பேராசிரியர் கண் ஆச்சே.. பேப்பர் கரெக்ஷன் மாதிரி இருக்கு.. கரெக்ட் பண்ணிடறேன் சார்:(

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க புதுவை,

I got angry with you for not giving the next episode of thirumbi parkiren.//

அப்படியா? இப்ப சரியாயிருச்சா? ஆனாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான்.. கொஞ்ச நாளைக்கு.