‘என்னப்பா விஷயம் சொல்லுங்க?’
சிலுவை மாணிக்கம் நாடார் தான் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை இடமும் வலமுமாக அசைத்தவாறு பேசினார்.
‘எல்லாம் அந்த டாக்டர் விஷயம்தாம்மா. இன்னைக்கி போர்ட்லருந்தே அவன் ராஜினாமா பண்ண வச்சிட்டேன்லே.’
சுந்தரமும் ராசம்மாளும் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தனர்.
‘என்னப்பா சொல்றீங்க? ரிசைன் பண்ண வச்சிட்டீங்களா? எப்படி?’
நாடார் நமட்டு சிரிப்புடன் இல்லையென்றவாறு தலையை அசைத்தார். ‘நான்னா.. நா இல்லேம்மா.’
செல்வம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். ‘என்ன மாமா சொல்றீங்க? புரியறாப்பல சொல்லுங்க.’
நாடார் இருக்கையிலிருந்து எழுந்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து மேசையின் விளிம்பில் அமர மேசை ஒரு பக்கமாக சாய்ந்தது. அதிலிருந்த கோப்புகள், தொலைப்பேசி எல்லாம் சரிய ராசம்மாளும் செல்வமும் பதற்றத்துடன் ஓடிப்போய் மேசையைப் பிடித்துக்கொள்ள நாடார் சிரித்தவாறே, ‘ஏய் விடுங்க.. விழுந்தா எடுத்து வச்சிக்கிர வேண்டியதுதானே. அதுக்குப் போயி எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பதறுரீங்க?’ என இருவரும் அவருடைய வார்த்தைகளில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்கிறதோ என்பதுபோல் பார்த்தனர்.
‘என்னப்பா ஏதோ பொடி வச்சி பேசறாப்பல இருக்கு. யார சொல்றீங்க? என்னையா இல்ல டாக்டர் அங்கிளையா?’ என்றாள் ராசம்மாள்.
அவளுடைய குரலிலிருந்த லேசான கோபத்தை ரசித்தார் நாடார். ‘என் பொண்ணு என்னைய மாதிரித்தானல? பாரு எப்படி சட்டுன்னு புடிச்சிக்கிட்டா?’
‘இருந்தாலும் ராசியொன்னும் விழுந்துரலையே?’ என்றான் செல்வம். ‘சரி அது இருக்கட்டும், நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க. அந்த டாக்டர் ஏன் போர்ட்லருந்து விலகுனார்?’
நாடார் அன்று காலையில் பாபு சுரேஷ் எச். ஆர். ஹெட்டாக நியமிக்கப்பட்டதில் துவங்கி இயக்குனர் கூட்டத்தில் நடந்ததுவரை எல்லாவற்றையும் சுருக்கமாக கூறினார். ‘அந்த ஃபேக்ஸ் எப்படி கரெக்டா அந்த நேரம் பார்த்து அங்க வந்துதுன்னுதான் எனக்கும் தெரியல செல்வம். ஆனா அத பார்த்ததும் ஆடிப் போய்ட்டான் அந்த டாக்டர். அவன் போட்டிருந்த திட்டமெல்லாம் பாளாப்போனதுமில்லாம போர்ட்லருந்தே விலக வேண்டியதாயிருச்சி. இதெல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு அந்த பயலுக்கு ஜால்ரா போடற மலையாள பயலுவளும், அந்த ரஜ்ஜத்தும் நினைச்சிட்டாங்க போலருக்கு. என்னெ அவனுக பார்த்த பார்வையில நா எரிஞ்சே போயிருப்பேன் போலருக்கு.’
ராசம்மாள் விளங்காமல் நாடாரைப் பார்த்தாள். ‘சரிப்பா. ஆனா அந்த ஃபைனான்ஸ் கம்பெனியிலருந்து ஒரு பாரோயர்ங்கற முறையிலதான சோமசுந்தரம் அங்கிள் கடன் வாங்கியிருக்கார். வட்டிக்கு வாங்குன கடந்தான? அதுக்காக ஏன் ரிசைன் பண்ணணும்?’
செல்வம் ராசம்மாளைப் பார்த்தான். ‘என்ன ராசி நீ? சோமசுந்தரம் அங்கிள் ஒரு சாதாரண பாரோயர் இல்லையே? அது மட்டுமில்ல. இதுல வேறொரு ஆங்கிளும் இருக்கு. அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில அவரோட ஆடிட்டரும் ஒரு டைரக்டர்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்த பேப்பர்ல எழுதியிருந்தா மாதிரி அந்த ஃபைனான்ஸ் கம்பெனி ஏற்கனவே அதுல பணம் போட்டவங்களுக்கு அசலக்கூட திருப்பிக் குடுக்க முடியாம திண்டாடிக்கிட்டிருக்கு. அந்த போர்ட்ல மெம்பரா இருந்த ஒருத்தரே வெளிய வந்து பத்திரிகைக்காரங்கள கூட்டி வச்சி அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில டைரக்டர்சா இருக்கறவங்களே அவங்க வாங்க லோன கட்டாம இழுத்தடிக்கறதுனாலத்தான் கம்பெனி இந்த நிலமைக்கு வந்திருச்சின்னு சொல்லும் போது இவரையும் குத்தம் சொல்றா மாதிரிதானே.. இவரே ஒரு பேங்க் போர்ட்ல இருக்கறவர். இவரே இப்படி செய்யலாமாங்கறா மாதிரி பேப்பர்காரன் எழுதறதுல என்ன தப்பு இருக்கு?’
நாடார் செல்வத்தை நெருங்கி அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தார். ‘பாத்தியா ராசி? எவ்வளவு கரெக்டா பேசறான் பார். நீ இவன் அளவுக்கு வரணும். அப்பத்தான் இந்த பிசினச மேனேஜ் பண்ண முடியும்.’
ராசம்மாள் உண்மைதான் என்பதுபோல் தலையை ஆட்டினாள். ‘ஆமாப்பா எனக்கு இது தோனலையே?’ என்றாள். ‘சரிப்பா. இதுல நீங்க சந்தோஷப்படறதுக்கு என்ன இருக்கு? சோமசுந்தரம் அங்கிள் போர்ட்ல இல்லாமருக்கறதுக்கு ஒங்களுக்கு எந்த வகையில லாபம்? எனக்கு புரியல.’
நாடார் செல்வத்தைப் பார்த்தார்.
‘என்ன ராசி நீ? சோமசுந்தரம் அங்கிள்தான் இப்போதைக்கு போர்ட்ல சீனியர் மோஸ்ட் மெம்பர். இன்னும் ஆறுமாசத்துல அவர் தானாவே ரிசைன் செஞ்சிருக்கணும். ஆனா அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிச்சிரணுங்கற ஐடியாவுலதான அந்த ஃப்ராடு பாபு சுரேஷ எச்.ஆர் ஹெட்டா போட்டு தேவையில்லாத ஒரு ரெக்ரூட்மெண்ட நடத்தி.. இப்ப அது முடியாதுல்லே. அதானே மாமா?’
நாடார் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘ஏற்கனவே நம்ம பேங்குல ஆஃபீசர்ங்க ஜாஸ்தி. டஇதுல இவன் கடன அடைக்கறதுக்கு பணம் வேணுங்கறதுக்காக தேவையில்லாம முன்னூறு பேருங்கள வேலைக்கு எடுத்து அவனுங்கக்கிட்டருந்து தலா ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு லஞ்சத்த வாங்கி.. என்னமா திட்டம் போட்டுருக்கான் பாத்தியா அந்த டாக்டர்? ஏண்டா செல்வம் அந்த ப்ளான நாம இப்ப அரங்கேத்துனா என்ன? நமக்கு மட்டும் காசு வேணாமா என்ன? என்னடே?’
ராசம்மாள் திடுக்கிட்டு எங்கே செல்வம் இதற்கு ஒத்து ஊதுவானோ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவள் தன்னைப் பார்த்த பார்வையை வைத்தே அவளுடைய உள் மனதை எடை போட்ட செல்வம் உடனே, ‘என்ன மாமா நீங்க? நீங்க எப்படி கேக்கலாம்? அப்புறம் நமக்கும் அந்த டாக்டருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ராசி நா சொல்றது சரிதான?’ என்றான்.
நாடார் உரக்க சிரித்தார். ‘எலேய்.. நீ எதுக்கு அவள சரிதானன்னு கேக்கே? ஒனக்கு ஒத்து ஊதவா?’
ராசம்மாள் கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘இங்க பாருங்கப்பா. நமக்கு இருக்கற பிரச்சினையில இந்த மாதிரியெல்லாம் யோசிக்காதீங்க. சொல்லிட்டேன். நான் இந்த கம்பெனிக்கு எம்.டி யா வரணும்னு உண்மையிலயே நீங்க நினைச்சீங்கன்னா இந்த மாதிரி தில்லுமுல்லுங்கல்லாம் இங்க நடக்கக்கூடாது, நடக்கவும் விடமாட்டேன். நியாயமா, நேர்மையா பிசினஸ் பண்ணி வர்ற லாபம் நமக்கு போறும்.’
நாடார் மேலும் உரக்க சிரித்தார். ‘டேய் இங்க பார்றா, இவள!’ என்றவர் படு சீரியசானார். ‘யம்மா ராசி.. இது சின்னப்பிள்ளைங்க விளையாட்டுல்லே.. இங்க நாம அடிபடாம இருக்கணும்னா நாம முதல்ல அடிக்கணும். நீ எம்.டியா இரு இல்லாம போ.. ஆனா எப்படி பிசினஸ் பண்ணணும்னு எனக்கோ இல்ல இந்த பயலுக்கோ சொல்லி தர்ற வேலைய மட்டும் விட்டுரு. என்னடா சொல்றே?’
செல்வம் தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தான். ‘மாமா, ராசி சொல்றதும் சரிதானே. நாம வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தாச்சி. இனி என்னத்தையாவது செஞ்சி நம்ம பிசினஸ மேல மேல வளக்கணுங்கறத தவிர அத ஸ்டெபிலைஸ் பண்றதுக்கு புது புது டெக்னாலஜியெல்லாம் கொண்டு வரணும் மாமா. அதுக்கு நம்ம ராசி மாதிரி படிச்சவங்கக் கிட்ட மேனேஜ்மெண்ட விடணும். ஹோட்டல் லைன்ல மட்டுமே இருந்தா போறாதுதானே.. யார் கூட எல்லாம் பார்ட்னர்ஷிப் வச்சிக்கிட்டா நல்லதுன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கணும். அந்த மாதிரி யோசிக்கிறதுக்கு ராசி மாதிரி படிச்சவங்களாலத்தான் முடியும்.’
‘சரிடா.. நீ சொல்றது சரியாத்தான் இருக்கு. ராசிதான் இன்னையிலருந்து இந்த கம்பெனிக்கு எம்.டி.’ என்றார் நாடார் புன்னகையுடன். ‘என்னம்மா எவ்வளவு சம்பளம் வேணும்?’
‘ஒரு லட்சம்’
நாடார் சிரிப்புடன், ‘வருசத்துக்குத்தானே.. கொஞ்சம் கொறச்சலாருக்கா மாதிரி தெரியுது. நம்ம கம்பெனிதானேன்னு நினைச்சியோ?’ என்றார்.
‘இல்ல மாமா, மாசத்துக்கு. என்ன ராசி?’ என்றான் செல்வம் கேலியுடன்.
ராசி அவனை முறைத்துப் பார்த்தாள். ‘எதுக்கு கேலி பண்ற மாதிரி கேக்கே?’
‘என்னது மாசத்துக்கா?’ என்றார் நாடார் அதிர்ச்சியுடன்.
‘அதுக்கு காரணம் இருக்குப்பா. சொல்றேன்.’ என்று ஆரம்பித்தாள் ராசம்மாள்.
அவள் சொல்ல சொல்ல அட! அப்படியா என்பதுபோல் வாயைப் பிளந்தார் நாடார்.
*******
‘சார்.. ஃப்ரீயா இருக்கீங்களா?’
தனக்கு முன்னாலிருந்த ஒரு கோப்பை கவனத்துடன் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்த சுந்தரலிங்கம் நிமிர்ந்து பார்த்தார். கோப்பில் தான் படித்துக்கொண்டிருந்த இடத்தில் ஒரு அடையாளத்தை வைத்துவிட்டு மூடி வைத்தார்.
‘வாங்க ஃபிலிப்.’
ஃபிலிப் சுந்தரம் உள்ளே நுழைந்து தன் கையிலிருந்த கோப்பு ஒன்றை மேசை விளிம்பில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.
‘சொல்லுங்க’ என்றார் சுந்தரலிங்கம்.
ஃபிலிப் சுந்தரம் அன்று காலையில் சேர்மன் மாதவனின் அறையில் பாபு சுரேஷை எச். ஆர் ஹெட்டாக நியமித்த சூழ்நிலையை முதலில் விவரித்தார்.
‘நா கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயம் சார். டாக்டர் சார் சேர்மனுக்கு முன்னால வச்சி பாபு சுரேஷ் எச்.ஆர் ஹெட் போஸ்ட்டுக்கு சரியான சாய்ஸ்தானேன்னு கேக்க என்னால என்ன செய்ய முடியும் சொல்லுங்க. சரின்னு தலையை ஆட்ட சேர்மன் ஒடனே it is settled thenனு சொல்லிட்டார். அந்த நேரத்துல நாடாரோட மொகத்த பாக்கணுமே.’
சுந்தரலிங்கம் பதிலளிக்காமல் அவரையே பார்த்தார். ‘இது எத்தன மணிக்கு நடந்தது ஃபிலிப்?’ என்றார்.
அவருடைய கேள்வியின் நோக்கம் விளங்காமல், ‘ஏன், எதுக்கு கேக்கீங்க? ஏசிபிக்கு முன்னால சார்.’ என்றார் ஃபிலிப் சுந்தரம்.
‘காரணம் இருக்கு சார். நீங்க சேர்மன் ரூமுக்கு போறதுக்கு முன்னால சோமசுந்தரம் சேதுமாதவன அவரோட கேபின்ல வச்சி மீட் பண்ணிருக்கார். எனக்கென்னமோ அவரோட ஐடியாதான் பாபு சுரேஷ எச்.ஓவுக்கு கொண்டு வர்றதுன்னு தோனுது. அவங்க ரெண்டு பேருக்கும் சுருட்டறதுன்னா கொள்ளை ஆசையாச்சே. நம்ம வந்தனா சிக்கானது இவங்களுக்கு நல்லதா போயிருச்சி. அத அவரோட ஐடியான்னா நாடார் எப்படியும் ஒத்துக்கமாட்டார்னு டாக்டருக்கு தெரியும். அதான் சும்மா பேச்சுக்கு ஒங்கள இடையில இழுத்து விட்டுட்டாங்கன்னு நா சொல்றேன்.’
இப்படியும் இருக்குமோ என்று ஓடியது ஃபிலிப் சுந்தரத்தின் சிந்தனை. எதையுமே மேலோட்டமா பாக்கக் கூடாது போல.
‘சரி ஃபிலிப். அதுபோட்டும். அந்த ஃபேக்ஸ் விஷயம் என்னவாம்? ஒங்கக்கிட்ட சொன்னாங்களா?’
‘ஆமாம் சார்’ என்றார் ஃபிலிப் சுந்தரம். பிறகு அந்த விஷயத்தையும் சுருக்கமாக கூறி முடித்தார்.
சுந்தரலிங்கத்தின் முகத்தில் தோன்றி மறைந்தது சந்தோஷமா, அதிர்ச்சியா என்பது விளங்காமல் ஒரு நொடி தடுமாறிப்போனார் ஃபிலிப்.
‘அப்போ இந்த விஷயம் சுமுகமா செட்டில் ஆவற வரைக்கும் டாக்டர் போர்ட்ல வரமுடியாது, அப்படித்தானே?’ என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார்.
‘ஆமா சார். இதுல ஒரு பிரச்சினை என்னன்னா, இந்த ஃபேக்ஸ் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆஃபீஸ்லருந்து எப்படி கரெக்டான நேரத்துல நம்ம ஆஃபீசுக்கு வந்ததுங்கறார் நம்ம சேர்மன். சோமசுந்தரம் இது நாடாரோட வேலையாத்தான் இருக்கும்னு உறுதியா சொல்றார். நீங்க இன்னும் ரெண்டு நாளைல கண்டுபிடிச்சி சொல்லணும்னு எனக்கு ஆர்டர் போட்டுட்டார் நம்ம சேர்மன். இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேற ஒரு தொல்லையா போயிருச்சி.’
‘ஏன் ஒங்களுக்குத்தான் மீடியாலருக்கற எல்லாரையும் தெரியும்லே.. யார் கிட்டயாவது சொல்லி கண்டுபிடிச்சிற வேண்டியதுதானே?’
ஃபிலிப் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். ‘என்ன சார் சொல்றீங்க? ஒருவேளை அது நாடார்தான்னு தெரிய வந்தா? அத போயி நா கண்டுபிடிச்சி சேர்மன் கிட்ட சொல்லிட்டேன்னு வச்சிக்குங்க. அப்புறம் இந்த நாடார் முகத்துல எப்படி முளிக்கறது?’
‘அதுவும் சரிதான்.’ என்றார் சுந்தரலிங்கம்.
தன் மனதிலிருந்ததை இறக்கி வைத்த நிம்மதியுடன் எழுந்து நின்றார் ஃபிலிப். ‘நா வரேன் சார். இன்னும் அரை மணியில நம்ம சேர்மனுக்கு அஃபிஷியல் ரிசப்ஷன் இருக்கு. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு கூப்பிடறேன். நீங்களும் நம்ம ஈ.டியும் நேர்ல போயி மாதவன் சார கூட்டிக்கிட்டு வந்துருங்க.’
தன்னுடைய அறையின் கதவை ஓசைப்படாமல் சாத்திவிட்டு சென்ற ஃபிலிப்பையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சுந்தரலிங்கம். இந்த விஷயத்த தெரிஞ்சிக்காமயே இருந்துருக்கலாம் போலருக்கே என்றிருந்தது அவருக்கு.
தொடரும்..
2 comments:
// இங்க நாம அடிப்டாம இருக்கணும்னா நாம மொதல்லே அடிக்கோணும்//
பயங்கரம்
வாங்க ஜி!
இங்க நாம அடிப்டாம இருக்கணும்னா நாம மொதல்லே அடிக்கோணும்//
இவ்வசனத்தின் உள் அர்த்தம் இதுதான்: நாம தோக்காம இருக்கணும்னா நாம நம்ம எதிரிங்கள தோக்கடிச்சிரணும். அடின்னா.. நம்ம நாயகன்ல வர்ற அடி இல்ல..
Post a Comment