1.8.06

சூரியன் 114

சீனிவாசனின் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல புறப்பட்ட மைதிலி மனம் போன போக்கில் டாக்சியில் கொஞ்ச தூரம், ஆட்டோவில் கொஞ்ச தூரம், மின்சார ரயிலில் கொஞ்ச தூரம் என பயணித்துவிட்டு... இறுதியில்..

தூரத்தில் தொடுவானத்திலிருந்து ஒன்றையொன்று துரத்திக்கொண்டு வந்த அலைகள் ஓய்வில்லாமல் கரையை முத்தமிட்டு, களைத்து,  நுரைதள்ளி, தோற்றுப்போன பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டிருந்தன..

உச்சி வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் சுடும் மணலில் அமர்ந்திருந்தாள் மைதிலி.

எவ்வளவு எளிதாக கூறிவிட்டான்.. ‘என்னை மறந்துட்டு ஒங்க அப்பாவுக்கு நல்ல பொண்ணா..’ எப்படிறா சீனி.. உன்னால அவ்வளவு ஈசியா..

**

‘என்ன சொல்ற சீனி?’

சீனிவாசன் 'நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இனி நீதான் சொல்லணும்' என்பதுபோல் எழுந்து நிற்க மைதிலி மட்டும் அப்படியே சோபாவில் அமர்ந்திருந்தாள்.

கண்களில் நிறைந்து நின்ற கண்ணீரீனூடே மங்கலாக தெரிந்த சீனியையே பார்த்தவாறு...

‘இனியும் நமக்குள்ள ஏதோ இருக்குன்னு நினைச்சிக்கிட்டு என்னை நானே ஏமாத்திக்க.. No My.. I don’t want to make a fool of myself anymore.. I am sorry.. I think it has gone too far.. It has to stop.. Now.. Here..’

‘இப்படி சொல்றதுக்கு என் அப்பா கேட்டுண்டாரா?’

சீனிவாசன் திரும்பி அவளைப் பார்த்தான்.

குனிந்திருந்த அந்த தலையை தொட்டு தரவாக தடவி விட கை குறுகுறுத்தது..ஆனால்..

‘இல்ல..’

‘அப்ப ஏன் சீனி திடீர்னு இந்த முடிவு? நீ சென்னைக்கு போப்போறேங்கறதுனாலயா?’

‘அதுவும் இல்ல.. ஆனா...’

தலை குனிந்து அமர்ந்திருந்த மைதிலி சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

‘ஏன் நிறுத்திட்டே.. சொல்லேன்..’

சீனிவாசன் தன் மனதிலிருந்ததைக் கேட்பதா வேண்டாமா என்று தயங்கினான். ‘ஒன்னெ பொண் பாக்க வருவான்னியே.. என்னாச்சி?’

மைதிலி பதில் பேசாமல் தலையை குனிந்துக்கொண்டாள். இவனிடம் என்ன சொல்ல முடியும்? உன்னையும் என்னையும் சேர்த்து பார்த்த மாப்பிள்ளை வீட்டார் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள் என்றா? அது ஒன்றே இவனை நம்மிடம் நிரந்தரமாக பிரித்துவிடுமே..

சற்றே நீண்ட நேரம் நின்றதால் கால்கள் வலியெடுக்கவே தான் சற்று முன் வரை அமர்ந்திருந்த சோபாவில் சென்றமர்ந்த சீனிவாசன் சாய்ந்தமர்ந்து கண்களை மூடினான்.

மைதிலியுடனான தன்னுடைய காதல் இன்றுவரை ஒருதலைப் பட்சமானதுதான் என்பது அவன் அறிந்திருந்ததுதான். தனக்கு அவள் மேல் இருந்த காதல் அவளுக்கு வெறும் நட்பாகவே இருந்ததால்தானே தன்னை வேறொருவர் வந்து பெண் பார்க்க சம்மதித்தாள்?

இப்போது அவளுடைய மவுனமே அந்த பெண் பார்க்கும் படலம் தோல்வியில் முடிந்திருந்தது என்பதை அவனுக்கு உணர்த்தினாலும் வேண்டுமென்றே ‘என்ன மைதிலி? மாப்பிள்ளை வீட்டுல சம்மதிச்சிட்டாங்களா?’ என்றான் அவளுடைய மனம் அவனுடைய கேள்வியினால் புண்படும் என்று தெரிந்தும்.

அவன் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே அவனுடைய கேள்வி அவளைப் பாதித்தது. கண்களில் பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

சமையலறையிலிருந்து சிவகாமி தங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சீனிவாசன் அவளுக்கு கேட்க வேண்டுமென்றேதான் தேவைக்கும் மீறிய உரத்தக் குரலில் அந்த கேள்வியைக் கேட்டான் என்பதும் மைதிலிக்கு புரிந்தது.

‘என்ன மாமி பார்த்துண்டிருக்கேள்? என்னெ வந்து காப்பாத்துங்களேன்’ என்பதுபோல் அவளைப் பார்த்தாள் மைதிலி .

டெலிபதி என்பார்களே அது இதுதானோ என்பதுபோல் அவளுடைய பார்வையை தூரத்திலிருந்தே உணர்ந்த சிவகாமி மாமி பரபரவென ஹாலுக்குள் நுழைந்து, ‘என்னடாச்சி நோக்கு? இப்படி போட்டு அந்த பொண்ண வறுத்தெடுக்கற? அவாத்துல இவளுக்கு பொண்ணு பாக்க ஏற்பாடு செஞ்சா இவோ என்னடா பண்ணுவா? சரி அவாளுக்கு இவள புடிச்சிருந்திருச்சின்னே வச்சிக்குவம்.. அதுக்கென்ன இப்போ.. நீதான் நோக்கு வேணாம்னுட்டியோன்னா?’ என்றாள் படபடப்புடன்.

‘என்ன மாமி இது நீங்களுமா?’ என்பதுபோல் தன்னை மைதிலி பார்ப்பதை உணர்ந்த சிவகாமி ‘ச்சும்மா ஒரு பேச்சுக்குடி’ என்பதுபோல் உதடுகளை அசைத்தாள் அவளைப் பார்த்து.

சீனிவாசன் அதை கவனித்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாததுபோல் எழுந்து நின்றான்.

‘எனக்கு ஒன்னுமில்லை மாமி.. மைதிலி யாரையாச்சும் மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமாருக்கட்டும்.. அவளோட அப்பாவும் அதத்தான மாமி கேட்டா..’ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகளை திருப்பியெடுக்க முடியாமல் உதடுகளைக் கடித்துக்கொண்டு சீனிவாசன் ‘சாரி மைதிலி’ என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

மைதிலிக்கு அவன் சொல்ல வந்தது புரிந்தது. ஓ! அதான் இவனோட இந்த பிஹேவியருக்கு காரணமா? இத தங்கிட்டருந்து மறைக்கறதுக்குத்தான் இவ்வளவு நேரம் ட்ரை பண்ணிக்கிட்டிருந்தானா?

அவளுக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது. ச்சே.. அப்பாவுக்கு இப்படியெல்லாம் இவன்கிட்ட பேசறதுக்கு எப்படி மனசு வந்தது? ஒருவேளை இவன் மயக்கம் போட்டு விழுந்து அடிப்பட்டதுக்கு இதுதான் காரணமோ? இருக்கும்..

சட்டென்று பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் எழுந்து முகத்தை மூடிக்கொண்டு வாசலை நோக்கி ஓடி சாலையை அடைந்து வழியே போன டாக்சியில் ஏறி ‘கிதர் ஜானேக்கா மேம் சாப்?’ என்றவனிடம்.. ‘மாலும் நஹி பையா..’ என்று பதிலிறுக்க வியப்புடன் தன்னைப் பார்த்த டிரைவருடைய பார்வையை சந்திக்க தைரியமில்லாமல் சீட்டில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டு விசும்ப, கண்களின் ஓரத்தில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட டிரைவர் மவுனமாக வண்டியை நகர்த்த..

மனம் போன போக்கில்..

டாக்சியில் கொஞ்ச தூரம், ஆட்டோவில் கொஞ்ச தூரம், மின்சார ரயிலில் கொஞ்ச தூரம் என பயணித்துவிட்டு... இறுதியில்.. இதோ இந்த சுடு மணலில்.. அமைதியுடன் இருந்த கடலை வெறித்து பார்த்தவாறு..

அப்பா ஏன் இப்படி செஞ்சார்?

சீனியின் உடல் காயத்துக்கு மருத்துவம் செஞ்ச நான் அவனோட மனசுல பட்டுருக்கற காயத்த எப்படி ஆற்றப்போறேன்?

மடக்கி வைத்திருந்த கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்தவாறு நேரம் போவதே தெரியாமல் கடல் மணலில் அமர்ந்திருந்தாள்..

****

மருத்துவமனை வாகனத்திலேயே வீடு வந்து சேர்ந்த வந்தனாவை கைத்தாங்கலாக வாகனத்திலிருந்து இறக்கி அவளுடைய குடியிருப்புக்கு அழைத்துச் சென்றாள் நளினி.

தன்னுடைய குடியிருப்புக்குள் நுழைந்ததுமே போன மூச்சு திரும்பி வந்ததுபோல் உணர்ந்தாள் வந்தனா.

உடலில் இருந்த சோர்வு அவளை பலஹீனப்படுத்தியிருந்தாலும் மருத்துவமனையின் சூழ்நிலையிலிருந்து வெளிப்பட்டதுமே  மீண்டும் ஒரு பலம் வந்துவிட்டது போலிருந்தது.

‘தாங்யூ சோ மச் நளினி. நீங்க ரெண்டு பேரும் வந்தது எனக்கு போன உயிர் திரும்பி வந்தாப்பல இருக்கு.. Thanks to both of you.’

நளினி ஒரு போலியான குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தாள். ‘என்ன மேடம் நீங்க? பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி எங்கள அன்னியமாக்கிட்டீங்க?’

அவளுடைய கோபம் போலியானது என்பதை உணர்ந்த வந்தனா பலஹீனத்துடன் புன்னகைத்தாள். ‘சாரி நளினி.. I did not mean it that way.’

நளினி நந்துவைப் பார்த்தாள். ‘எந்தா நந்து? நோக்கி நிக்கனே.. மேடத்தின எந்தெங்கிலும் குடிக்கான் கொடுக்கேண்டே?’

நந்தக்குமார் தன் தவறை உணர்ந்தவாறு ஹாலுக்கு மறுகோடியில் திறந்திருந்த சமையலறையை நோக்கி நடந்தான்.

அவனை நிறுத்தும்படி சைகை காட்டிய வந்தனா நளினியை பார்த்தாள். ‘என்ன நளினி அவரைப் போயி.. பாவம்..’ என்றாள்.

நளினி உதடுகளில் கைவைத்து ‘உஷ்’ என்றாள். ‘மேடம் நீங்க பேசப்படாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அந்த கண்டிஷன்லதான் எங்கக் கூட வீட்டுக்கு அனுப்பியிருக்கார். மறந்துராதீங்க. நந்து சமையல்ல எக்ஸ்பர்ட்.. அதுவும் டீ சூப்பரா போடுவார். ஆனா ஒங்களுக்கு காப்பி, டீ ஏதும் இன்னும் ஒரு வாரத்துக்கு குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். ஹார்லிக்ஸ் இருக்கு இல்ல வீட்ல? இல்லன்னா நந்து போய் வாங்கி வருவார்.’

பதில் பேச முயன்ற வந்தனா களைப்பு மிகுதியால் பேச முடியாமல் அப்படியே சோர்வுடன் கண்களை மூட நளினி அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் சமையலறையை நோக்கி நடந்தாள்..

தொடரும்..


1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

31/7 பதிவு சூரியன் 133 னு இருக்கு. மாற்றுங்க