15.8.06

சூரியன் 117

தன்னுடைய அடுத்த நான்காண்டு கால வங்கி முதல்வர் வாழ்க்கையை அன்று காலையில் துவக்கியிருந்த எம்.ஆர். மாதவன் தன்னுடைய முதல் இயக்குனர் கூட்டத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேர்ந்த இயக்குனர்களைப் பார்த்தவாறு மேசையின் தலைமை இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவருக்கு வலப்புறத்தில் இ.டி. சேதுமாதவன், அவரையடுத்து வங்கியின் இரு முதன்மை பொது மேலாளர்களான சுந்தரலிங்கம், ஃபிலிப் சுந்தரம் அமர்ந்திருக்க அவரையடுத்து வங்கி தலைமையகத்தின் மற்ற உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.

இயக்குனர்கள் கோபால் மேனன், ரஜ்ஜத் கபூர், சிவசுப்பிரமணி நாடார், ராஜகோபாலன் நாயர், என ஒவ்வொருவராக வந்து சேர சற்று நேரம் கழித்து ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியான இயக்குனர் சாம்பசிவம் வந்தமர்ந்தார்.

சிலுவை மாணிக்கம் நாடாரையும் சோமசுந்தரத்தையும் காணாததால் கூட்டத்தை துவக்க முடியாமல் எல்லோரும் ஒருவித தவிப்புடன் காத்திருக்க சற்று நேரத்தில் நாடார் மட்டும் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து மாதவனைப் பார்த்தார்.

‘மன்னிச்சிருங்கய்யா, கொஞ்சம் நேரமாயிருச்சி.. அவசரமா ஒரு வேலை.. கூட்டத்த துவக்கலாம்யா..’

மாதவன் தயக்கத்துடன் கம்பெனி செக்கரட்டரியைப் பார்த்தார். அவர் நாடாரைப் பார்த்தார். ‘சார்.. டாக்டர் இன்னும் வரல.. லீவாருந்தா ஃபோன் செஞ்சிருப்பார். அதான் இன்னும் கொஞ்சம் நேரம் வெய்ட் பண்லாம்னு...’

நாடார் அப்போதுதான் பார்ப்பதுபோல் மேசையில் அமர்ந்திருந்தவர்களை ஒருமுறை பார்த்தார்.

டேய்.. டாக்டரே.. கடைசியா ஒருதரம் வருவே உன்னை அவமானப்படுத்தலாம்னு காத்துக்கிட்டிருந்தேன்.. தப்பிச்சிட்டே..

‘ஓ.. அவர் வரலையா? சரி அதுக்கெதுக்குய்யா காத்துக்கிட்டிருக்கணும்.. ஃபோன் போட்டு கேட்டுறவேண்டியதுதானே.. என்ன செக்கரட்டரி ஐய்யா.. கூப்டுங்க.. அவருக்கேதாச்சும் ஆப்பரேஷன் இருக்கோ என்னமோ?’ என்றார் கேலியுடன்.

அதே நிமிடம் மாதவனுடைய செல் ஃபோன் ஒலிக்க மாதவன் எடுத்து, ‘Yes Madhavan here.’ என்றார்.

எதிர் முனையிலிருந்து வந்த சோமசுந்தரத்தின் குரல் அவரை வியப்பில் ஆழ்த்த, ‘டாக்டர் we are waiting for you .’ என்றார் சற்றே உரக்க.

அடுத்த சில நிமிடங்கள் அவர் எதிர்முனையிலிருந்து வந்த குரலுக்கு அவ்வப்போது தலையை அசைக்க மேசையை சுற்றிலுமிருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘Yes Doctor.. I regret your decision to quit.. that too on my first day.. I am really sorry..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு எல்லோரையும் ஒருமுறை பார்த்தார் மாதவன்.

‘என்னய்யா சொல்றாரு? வராராமா இல்லையா?’ என்றார் நாடார்.

சரியான ஞான சூன்யம் என்று தனக்குள் முனுமுனுத்த சேதுமாதவன் ‘டாக்டர், போர்ட்லருந்து ராஜிநாமா செஞ்சிட்டாராம் நாட்டார்.’ என்றார்..

நாடார் இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததுதான். இருப்பினும், ‘என்னய்யா.. இவர் சொல்றது உண்மையா?’ என்றார் மாதவனிடம்.

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்த மாதவன்.. தன் இடப்பக்கம் அமர்ந்திருந்த இயக்குனர்களைப் பார்த்து சோமசுந்தரம் சற்று முன் தன்னிடம் தொலைப்பேசியில் கூறியதை சுருக்கமாக கூறிவிட்டு, ‘I propose that a resolution be passed appreciating his services to the Board during this tenure as a Director’ என்றார்.

இயக்குனர்களில் ஒருவரான ரஜ்ஜத் கபூர் எழுந்து, ‘Yes Sir.. I second the resolution.. He has been a tower of strength for the entire Board..’ என்றவாறு நாடாரை கேலியுடன் பார்த்தார்.

டேய், வடநாட்டுலருந்து வந்துட்டு என்னையே நக்கலா பாக்கியா? அந்த பயலோட நாமினிதான நீயி.. அடுத்தது ஒனக்குத்தான்.. வச்சிக்கறேன்..

‘ஐயா நீங்க என்ன சொன்னீய.. இந்த கப்பூர் சாப் என்ன சொல்லுறாருன்னு தமிள்ல சொன்னீங்கன்னா நல்லாருக்கும்’ என்றார் நாடார் மாதவனிடம்.

அன்று காலையில் அவருடைய காரியதரிசி சுபோத், ‘Sir Nadar can’t understand English.. So the entire proceedings of the Board would normally be held in Tamil only’ என்று தன்னிடம் கூறியிருந்தது நினைவுக்கு வர, ‘மன்னிச்சிருங்க நாடார்.. காலையிலயே சுபோத் சொல்லியிருந்தார்.’ என்றவர் தொடர்ந்து சோமசுந்தரம் தன்னுடைய இயக்குனர் பதவியை ராஜிநாமா செய்திருந்த விபரத்தை தமிழில் கூறினார்.

‘எதுக்காம்யா? அந்த ஃபேக்ஸ் சமாச்சாரமா?’

ஆமாம் என்பதுபோல் மாதவன் தலையை அசைக்க அறையிலிருந்த மற்ற இயக்குனர்கள் என்ன ஃபேக்ஸ்.. என்பதுபோல் மாதவனைப் பார்க்க அவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த நகலை எடுத்து ஒருமுறை பார்த்துவிட்டு இயக்குனர் ரஜ்ஜத் கபூரிடம் கொடுக்க அவர் வாசித்துவிட்டு மற்ற இயக்குனர்களிடம் கொடுத்தார்.

இயக்குனர்கள் ஒவ்வொருவராக அதை வாசித்து முடித்துவிட்டு திருப்பித்தர அதை வாங்கி தன் முன்னர் வைத்த மாதவன், ‘நாம கூட்டத்த தொடரலாமா? இல்ல அட்ஜார்ன் பண்ணணுமா? What do you think Sir?’ என்றார் சாம்பசிவத்தைப் பார்த்து.

அவர் புன்னகையுடன் எழுந்து நின்று எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.

‘இது ஒங்களுக்கு முதல் மீட்டிங் மிஸ்டர் மாதவன். உங்கள மற்ற இயக்குனர்கள் சார்பா qபார்மலா இன்வைட் பண்ண வேண்டிய நேரத்துல போர்ட்ல சீனியர் மோஸ்ட் மெம்பர் ரிசைன் செஞ்சிருக்கறது ஒரு அன்ஃபார்ச்சுனேட் விஷயம். But I think he has taken the right decision.. அவர் எடுத்த முடிவு சரியான முடிவுன்னுதான் நான் நினைக்கறேன்.. அவர் அந்த தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியிலருந்து எடுத்த லோன் நியாயமான காரணத்துக்காக இருந்திருக்கலாம். ஆனா அவர் சரியான சமயத்துல திருப்பிக் கட்டாததுனால அவரோட இண்டெக்ரிட்டியவே சந்தேகிக்கறா மாதிரி ஒரு நியூஸ் பேப்பர்ஸ்ல வந்துருச்சி.. அதுக்கு அந்த கம்பெனியோட இப்போதைய மோசமான நிதி நிலமையும் ஒரு காரணமாருக்கும்னு நான் நினைக்கிறேன். ஆனா அதுக்கு முழுப் பொறுப்பு எடுத்துக்கிட்டு டாக்டர் சோமசுந்தரம் நம்ம பேங்கோட பேர் டார்னிஷ் ஆயிரக்கூடாதேங்கற ஒரே காரணத்துக்காக போர்ட்லருந்து ரிசைன் செஞ்சது உண்மையாகவே பெரிய விஷயம்தான்.. ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்.. அவர் ரிசைன் செய்த விஷயம் வருத்தப்படக்கூடிய விஷயம்தான்னாலும் அதுக்காக நம்ம மீட்டிங்க அட்ஜர்ன் பண்ணணுங்கற அவசியம் இல்லை.. நாம தொடர்ந்து கண்டினியூ பண்ணலாம்.’

பார்யா.. செய்யற களவாணித்தனத்தையும் செஞ்சிட்டு நல்ல பேர் எடுத்துக்கறத? யோவ் டாக்டர்.. எங்க களுத்த புடிச்சி தள்ளப் போறாங்களோன்னு பயந்துக்கிட்டு நீயா ரிசைன் பண்ணி இந்த முட்டாப்பய சாம்பசிவம் முன்னால ஹீரோ ஆய்ட்டே.. ஊம்.. எல்லாம் நேரம்..

‘நீங்க சொல்றது சரிதான்யா.. டாக்டர் ரொம்ப தெறமசாலி.. எனக்கு போர்ட்ல பக்கபலமா இருந்தாரு.. அவர் இல்லாதது ஒரு பெரிய கொறையாத்தான் படுது.. இருந்தும் என்ன செய்ய? பேங்க நடத்தணுமால்லையா? அவர் எப்படி இருந்தாலும் இன்னும் ஆறேழு மாசத்துல போயிருக்க வேண்டியவர் தானய்யா.. கொஞ்சம் முன்னாலயே போய்ட்டாரு.. அவரோட டர்ம் முடிஞ்சி போயிருந்தா நல்லாருந்துருக்கும்.. என்னவோ போறாத காலம்..’

கேரள மாநிலத்தைச் சார்ந்த இயக்குனர்களான கோபால மேனனுக்கும், ராஜகோபாலன் நாயருக்கும் நாடாரைக் கட்டோடு பிடிக்காது. ரஜ்ஜத் கபூருக்கும் அப்படித்தான். அவர்கள் மூவருமே சோமசுந்தரத்தின் ஆட்கள் என்பது நாடாருக்கும் தெரியும். அதற்காகவேதான் தன்னுடைய சக வியாபாரியான சிவசுப்பிரமணியத்தைக் குழுவிற்குள் கொண்டு வந்தார். இனி சோமசுந்தரத்திற்குப் பிறகு அவருடைய இடத்தில் யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தன்னுடைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்று காத்திருந்தார்.

முடிஞ்சா அந்த பய சீட்டுல நம்ம வக்கீலையே கொண்டுவந்திரணும் என்றும் நினைத்திருந்தார். ஆனால் சோமசுந்தரத்திற்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் வங்கியின் பங்குகளில் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் இருந்ததால் அவரை அவ்வளவு எளிதாக ஒரங்கட்டிவிட முடியாதென்பதும் அவருக்குத் தெரியும்.

வங்கியின் முதல்வராக சேர்வதென முடிவெடுத்தவுடனே வங்கியின் பங்குதாரர்களைப் பற்றி நன்கு ஆய்ந்து வைத்திருந்த மாதவனுக்கும் சோமசுந்தரம் மற்றும் நாடாரின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது.

‘என்ன மிஸ்டர் நாடார்.. அஜெண்டாவ அய்ட்டங்கள எடுத்துக்கலாமா?’ என்ற மாதனவைப் பார்த்தார்.

‘எடுத்துக்கலாம்யா. அதுக்கு முன்னால நம்ம டாக்டர பாராட்டி ஒரு ரிசலூஷன பாஸ் பண்ணிருவம்.. அப்புறம் தொடர்ந்து நடத்தலாம் என்னய்யா ரஜ்ஜத், நாயர்.. மேனன் சார்.. என்ன நா சொல்றது சரிதான..’ என்றவாறு நாடார் தன் சக இயக்குனர்களை ஒருமுறை பார்த்தார்.

யாருமே அவரை சட்டை செய்யாமல் சாம்பசிவத்தைப் பார்த்தனர். அவர் கம்பெனி செக்கரட்டரியைப் பார்த்தார். ‘ரிசலூஷன டிராஃப்ட் செஞ்சி கொண்டு வரச் சொல்லுங்க சார்.. இப்போ அடுத்த அஜண்டா ஐட்டத்த எடுங்க.. என்ன சேர்மன் சார்?’

மாதவன் சரி என்று தலையை அசைக்க கூட்டம் அன்று பட்டியலிடப்பட்டிருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக அலச துவங்கி அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இடைவெளியில்லாமல் நடந்தது..

*********

சோமசுந்தரம் தன் எதிரில் அமர்ந்திருந்த ஆடிட்டர் வேணுகோபாலை பார்த்தார்.

இடியட், இவன நம்பியிருந்ததுதான் நான் செய்த பெரிய தப்பு. இப்படியொரு சூழ்நிலையில அந்த டைரக்டர அவமானப்படுத்தி அனுப்புனது தப்புன்னு இன்னமும் புரிஞ்சிக்காம ஆர்க்யூ பண்ற இவன என்ன பண்ணா தகும்?

இவனப் போயி நம்ம சீட்ல போர்ட்ல ஒக்கார வைக்கலாம்னு இருந்தேனே..

‘I am really sorry Doctor. அந்த முட்டாள் மனுசன் இப்படிப் போய் திடுதிடுப்னு press meet நடத்திருவார்னு எதிர்பார்க்கலை..’ என்றார் வேணுகோபால் தலையை தொங்கப் போட்டவாறு..

ஆமா.. இப்ப வருத்தப்படு.. இடியட்.. இத முன்னமே யோசிச்சிருந்தா இந்த பிரச்சினை இல்லேல்லே.. இன்னும் மீதி இருக்கற ஆறு மாசத்துல என்னவெல்லாம் செய்ய ப்ளான் செஞ்சிருந்தேன்.. எல்லாத்தையும் ஸ்பாய்ல் பண்ணிட்டியேடா முட்டாள்..

‘சரி.. அதையே சொல்லிக்கிட்டிருக்காம இப்ப என்ன செய்யலாம் அதச் சொல்லுங்க. அந்த கம்பெனிக்கு கட்ட வேண்டிய பணத்த பொரட்டி கட்றத தவிர வேற வழியில்ல. What are we going to do? Do you have any ideas?’ என்றார் சோமசுந்தரம் எரிச்சலுடன்.

வேணுகோபால் தயக்கத்துடன், ‘சார் நம்ம பாபு சுரேஷ் நினைச்சா...?’ என்று இழுக்க எரிந்து விழுந்தார் சோமசுந்தரம்.

‘என்னாச்சி உங்களுக்கு வேணு? இவ்வளவு பெரிய தொகைய அவரால சாங்ஷன் பண்ண முடியுமா? அதுவுமில்லாம இன்னைக்கு காலைலதான் நானே அவர நம்ம ரெக்ரூட்மெண்ட் ப்ளான இம்ப்ளமெண்ட் பண்ற ஐடியாவுல எச்.ஆர் ஹெட் போஸ்டுக்கு ப்ரொப்போஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். முழுசா ஒரு மணி நேரம் ஆவறதுக்குள்ள இப்படியொரு டெவலப்மெண்ட்.. அதனால அவர அப்ரோச் பண்ண முடியாது. அப்படி செஞ்சாலும் அந்த நாடாருக்கு தெரியாம ஒன்னும் செய்ய முடியாது. So that’s not possible.. Think about something else..’

வேணுகோபால் இதென்னடா பெரிய ரோதனையா போச்சி என்று நினைத்தார்.. போய்யா நீயும் வேணாம் ஒன் வேலையும் வேணாம்னு போய்ட்டா என்ன என்றும் தோன்றியது. அவர் சென்னையில் அலுவலகத்தை துவங்கிய நேரத்தில் சோமசுந்தரத்தின் தொடர்பு அத்தியாவசிய தேவையாக இருந்தது. ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களில் சோமசுந்தரத்தைப் போன்றே சென்னையிலிருந்த பல பெரிய தலைகளுடைய தொடர்பும் கிடைத்துவிடவே அவருடைய ஆடிட்டர் தொழில் நன்றாகவே விரிவடைந்திருந்தது.

இனிமேல் சோமசுந்தரத்தின் தயவு தனக்கு தேவையில்லை.. அத்துடன் அந்த நிதி நிறுவனத்தில் இனியும் இயக்குனராக தொடர்ந்து இருந்தால் தனக்கே பிரச்சினையாகிவிடும் என்பதும் உண்மை.. வெறும் சோமசுந்தரத்தின் பினாமியாகத்தான் நான் அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருந்தேன் என்றால் யார் நம்பப்போகிறார்கள்? அந்த பதவியால் சென்னையிலிருந்த செல்வந்தர்களுடன் தனக்கிருந்த தொடர்புகளும் இல்லாமல் போய்விடுமோ என்றும் அஞ்சினார். ஆனால் சோமசுந்தரத்துடனான தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்வதும் அத்தனை எளிதல்ல என்பதும் அவருக்கு தெரியும்..

‘சரி சார்.. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க.. எனக்கு தெரிஞ்ச இடத்துல ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.’ என்று லாவகமாய் கழண்டுக்கொள்ள பார்த்தார்.

சோமசுந்தரம் சந்தேக கண்ணோடு தன் முன் அமர்ந்திருந்தவரைப் பார்த்தார். ‘ரெண்டு நாள் என்ன.. ஒரு வாரம் எடுத்துக்குங்க.. ஆனா ஒன்னு.. இந்த ப்ராப்ளத்துக்கு காரணம் நீங்கதான்.. அதனால நீங்கதான் இதுக்கு ஒரு சொலுஷனும் கண்டுபிடிக்கணும்.. அதில்லாம இந்த பிரச்சினையிலருந்து எப்படி விலகிக்கலாம்னு நீங்க நினைக்கறாமாதிரி எனக்கு தெரிஞ்சிது.. அப்புறம் ஒங்களுக்குத்தான் பிரச்சினை.. சொல்லிட்டேன்.. நீங்க போலாம்..’

சோமசுந்தரத்தின் குரலில் தொனித்த மிரட்டல் வேணுகோபாலை உண்மையிலேயே பயமுறுத்தியது..

மறு பேச்சு பேசாமல் எழுந்து அறையை விட்டு வெளியேற சோமசுந்தரம் அவர் வெளியேறி பலநிமிடங்கள் வரை தன்னுடைய இருக்கையிலேயே அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்..

தொடரும்..

1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

ஆஹா!பிற்பகல் விளையாட்டுகளின்
ஆரம்பம் நன்றாகவே உள்ளது